உள்ளடக்கத்துக்குச் செல்

சேச யோகியார் ஞான ஏற்றம்

விக்கிமூலம் இலிருந்து

சித்தர் பாடல்கள்

வரிசை எண் 13

சேஷ யோகியார்

ஞான ஏற்றம்

(ஏற்றப் பாட்டு)

நூல் பக்கம் 275

ஞான ஏற்றம்

[தொகு]
பிள்ளையாரும் வாரி
பிள்ளையாரும் அங்கே
பெருத்த மூலாதாரம்
சிறுத்த இதழ் நாலாம்
உரைத்த கம்பம் ஆகி – 5
ஓங்கி உச்சி தொட்டுத்
தாங்கியதன் கீழாய்த்
தான் இரண்டதாகித்
தங்கி வாயு ஆனால்
அங்குமே கடந்து - 10
சங்கிலி பிளந்து
சமத்த வாயு ஆனால்
இங்கிது உரைத்தே
இரண்டுடனே வாரி
இன்னம் அதன் மேலே – 15
வன்னம் அதைச் சொல்வேன்
அன்னத்துக்கு ராசன்
அயன் சரஸ்வதி யாம்
நயந்த இதழ் ஆறாம்
நல்ல நிலம் பொன்னாம் – 20
நகரமே எழுத்தாம்
உகரம் கந்தமாகும்
முத்தி தந்த நாதா
மூன்றுடனே வாரி
மோசம் பண்ண மாயன் – 25
வாசமணி பூரம்
நேசம் லட்சுமியாம்
வீசம்பத் திகழும்
ஓசை மவ்வெழுத்தாம்
தேசமே வெளுப்பாம் - 30
ஆறு சுவை யாலே
நடுவே தேயு வீடாம்
நாலுடனே வாரி
நாலும் எட்டிதழும்
நல்ல செம்பு மேனி – 35
எல்லை ருத்திரனாம்
தொல்லை விழிப் பார்வை
செல்லுமே சிகாரம்
அல்லல் உண்டே இன்னம்
அஞ்சுடனே வாரி – 40
நெஞ்சில் அவ்வெழுத்தாம்
கொஞ்சிய மகேசன்
மிஞ்சுமறு கோணம்
மேனி கருப்பாமே
தன்னிதழைப் பார்க்கில் - 45
தனியே பதினாறாம்
முந்த வேலை ஓடல்
அந்தரங்கம் சொல்வேன்
ஆறுடனே வாரி
கூறுவேனே நானும் – 50
குருவிருந்த நேர்மை
அருகிருந்த பூசம்
அமைச்சல்லவோ அத்தான்
என்னவென்று சொல்வேன்
ஏழுடனே வாரி – 55
தாழச் சொன்ன பேச்சுச்
சத்தியங்காண் அத்தான்
ஏ.ழை சொன்ன பேச்சு
எட்டுடனே வாரி
எட்டுச்சாண் உடம்பு – 60
கட்டையை நம்பாதே
ஒன்றல்லவோ தெய்வம்
ஒருபதியாம் எட்டாம்
ஊமை எழுத்தாலே
ஓங்காரம் உண்டாச்சு – 65
ஓங்காரத்தினாலே
உண்டாச்சுதே லோகம்
இதுவும் குருவாலே
இருபதியா எட்டாம்
இறைக்கிறாண் ஏற்றம் – 70
சுரக்கு ஏழை நாலாம்
முந்தி குரு பாதம்
முப்பத்தியா எட்டாம்
முப்பாழும் கடந்து
அப்பாலே நடந்தால் – 75
அதிசயம் பார் அத்தான்
நல்ல குரு பாதம்
நாற்பதியா எட்டாம்
நாலு மூலைக் குண்டம்
நடுவெழுந்த தூணாம் – 80
படுமுதல் இரண்டாம்
படுமுதல் பிடுங்கி
பருத்த மரம் ஏறிக்
குருத்தில் கள் இறக்கிக்
கூசாமல் குடித்தாற் – 85
பேசாதே பிறகு
அஞ்சாதே நீ அத்தான்
ஐம்பதியா எட்டாம்
அஞ்சல்லவோ பூதம்
பஞ்சல்லோ எழுத்து – 90

91-100

[தொகு]
அஞ்சொடுங்கும் போது
நெஞ்சடங்கும் அத்தான்
ஆறுமுகம் அல்லோ
அறுபதியா எட்டாம்
ஆறல்லவோ தாரம் – 95
வேறல்லோ சொரூபம்
வேறறிந்த பேர்க்குத்
தூரமில்லை அத்தான்
என்னவென்று சொல்வேன்
எழுபதியா எட்டாம் – 100

101-120

[தொகு]
ஏழல்லவோ நாடி
வாழின் பத்து நாடி
பாழல்லோ நானும்
பாழ்கடந்த பேர்க்கும்
பத்துக் கோடி தெண்டம் – 105
என்னவென்று சொல்வேன்
எண்பதியா எட்டாம்
எண்ணிக்கை அறிந்து
கண்ணப்பனைக் கண்டு
திண்ணப்பா பழத்தை – 110

111-120

[தொகு]
குண்ணப்பா வறுமை
விண்ணப்பம் உரைத்துச்
சண்ணப்பா குருவே
சொன்னது அபசாரம்
தொண்ணூறுடன் எட்டாம் – 115
மண்ணால் வெகு தூரம்
குண்ணறிந்த பேரை
எண்ணறிந்தே வாடி
ஏக மனமாகிப்
பாரமும் அறிந்து – 120

121-130

[தொகு]
நாகத்தை எழுப்பிப்
பீசத்தைத் துறந்து
யோகத்தை நடத்திப்
போகத்தைக் கடந்தால்
தாகத்தை நிறுத்தும் – 125
சோதி அறிந்தோர்க்குத்
தூரமில்லை அத்தான்
சாதிகுலம் இல்லை
சற்குரு அறிந்தால்
நித்தியம் இதுவே – 130

131-139

[தொகு]
பத்தியாப் பணிந்தால்
முத்தி தரும் அத்தான்
வாமநெறி சீவன்
ராமயோகி தந்த
ராசயோகி சேடன் – 135
தாசன் அருளாலே
பாசமறச் சொன்னேன்
பிரியாமலே அத்தான்
பிள்ளையாரும் வாரி – 139

ஞான ஏற்றம் முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=சேச_யோகியார்_ஞான_ஏற்றம்&oldid=969499" இலிருந்து மீள்விக்கப்பட்டது