சேதுபதி மன்னர் வரலாறு/இயல் IX சேதுநாட்டில் ஜமீன்தார் ஆட்சிமுறை

விக்கிமூலம் இலிருந்து

இயல் - IX
சேதுநாட்டில் ஜமீன்தார் ஆட்சிமுறை

ஜமீன்தாரி முறை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல. இந்திய நாட்டிற்கே புதுமையானது. இங்கிலாந்துப் பேரரசி எலிசபெத் ராணியாரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று வந்த சர் தாமஸ் மன்ரோ என்பவர் இந்தியாவில் தங்களது ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரது வணிகத்தை நடத்துவதற்காக முகலாய மன்னர் ஜஹாங்கீரிடம் கி.பி. 16oo-இல் அனுமதி பெற்றார். குஜராத்திலும், வங்காளத்திலும் சேமிப்புக் கிடங்குகளை ஏற்படுத்தி வியாபாரம் செய்து வந்தனர். காலப்போக்கில் வங்காளத்தின் அதிபராய் இருந்த சிராஜ் உத் தெளலாவிற்கு எதிரிகளான மீர்காசிமுக்கு உதவிகள் செய்து வங்காளத்தில் காசிம் பஜார் போன்ற இடங்களை அன்பளிப்பாகப் பெற்றனர். அந்தப் பகுதியில் இருந்த குடிகளிடமிருந்து நேரிடையாக அரசிறைகளை வசூலிப்பதற்குப் பதிலாக இந்த ஜமீன்தாரி முறையினை முதன் முதலில் கம்பெனியின் கவர்னர் ஜெனரலாய் இருந்த கார்ன்வாலீஸ் அங்கு அறிமுகப்படுத்தினார்.

இந்தக் காலகட்டத்தில் ஆற்காட்டு நவாப் முகமது அலியின் கூலிப்படையாக அமைந்து, பாண்டிய நாட்டுப் பாளையக்காரர்களிடமிருந்தும், தஞ்சாவூர் மன்னரிடமிருந்தும் கப்பத் தொகையை வசூலிப்பதற்காகச் சென்னையில் உள்ள கிழக்கிந்தியக் கம்பெனியாரது படையணிகள் பயன்பட்டன என்பதை முன்னர் பார்த்தோம். இந்தப் படை அணிகளின் போர்ச்செலவுகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையினைச் சில பகுதிகளில் கிழக்கிந்தியக் கம்பெனியார் அவர்களே வசூலித்துக் கொள்ளும் உரிமையை ஆற்காடு நவாப் வழங்கி இருந்தார். குறிப்பாக நெல்லூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலும், பின்னர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலிச் சீமைகளிலும் வரிவசூல் செய்துகொள்ளும் உரிமையை ஆங்கிலேயர் பெற்றனர்.

கி.பி. 1790 முதல் கி.பி. 1801 வரை சிவகங்கைச் சீமையின் பிரதானிகளான மருது சேர்வைக்காரர்கள் ஆங்கிலேயருடன் முரண்பட்டு சிவகங்கைச் சீமை மக்களைத் திரட்டி கி.பி. 1800 - 1801ல் ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்ச்சியை முடுக்கி விட்டனர். இந்த சூழ்நிலையைச் சமாளிப்பதற்காகச் சென்னைக் கோட்டையில் இருந்த கும்பெனிக் கவர்னர், தளபதி அக்னியூ என்பவரைச் சிவகங்கைச் சீமைக்கு அனுப்பி வைத்தார். மருது சேர்வைக்காரருடன் மோதலை ஏற்படுத்தி வெற்றி கொள்வதற்கு முன்னர் புதிய திட்டம் ஒன்றைத் தளபதி அக்கினியூ நிறைவேற்றினார்.

மக்களிடையே மருது சேர்வைக்காரர்களுக்கு உள்ள பிடிப்பினை அகற்றுவதற்கும், சிவகங்கைச் சீமை மன்னரது வாரிசு ஒருவரை அரசு அங்கீகரிப்பதன் வழி எதிர் அணிகளிலிருந்து இராஜ விசுவாசிகளான மக்களைத் திரட்டுவது என்பது அக்னியூவின் திட்டமாகும். இந்தத் திட்டம் சரியாக நிறைவேற்றப்பட்டது.

இதற்காகக் கும்பெனிக் கவர்னர் ஜூலை 1801-ல் ஒரு பொது விளம்பரம் ஒன்றைச் சிவகங்கைச் சீமை மக்களிடையே பிரசித்தம் செய்தார். சிவகங்கைச் சீமை நிர்வாகத்தை இயக்கி வந்த மருது சேர்வைக்காரர்கள் சிவகங்கை அரசவழியினர் அல்லர் என்றும், அப்பொழுது சிவகங்கை மன்னராக இருந்த வேங்கன் பெரிய உடையாத் தேவர் சிவகங்கை சேர்வைக்காரர்களுக்குப் பயந்து அடங்கிச் செயல்படுகிறார் என்றும் ஆற்காட்டு நவாப்பின் அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள் ஆங்கிலேயர் என்றும், அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் சிவகங்கைச் சீமை மக்களைத் தவறான வழியில் விட்டுச் சென்று கொண்டிருக்கும் மருது சேர்வைக்காரரைப் பின்பற்றாமல் கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கு மக்கள் விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், தவறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்றும், அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விளம்பரத்துடன் அமைந்துவிடாமல் தளபதி அக்னியூ புதுக்கோட்டை தொண்டைமானது உதவியுடன் அறந்தாங்கிக் காடுகளில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த சிவகங்கை மன்னரது வழியினரான படைமாத்துர் கெளரி வல்லப பெரிய உடையாத் தேவர் என்பவரைத் தேடிப்பிடித்து வந்து, சிவகங்கையை அடுத்த சோழபுரம் கிராமத்தில் 12.09.1801-ல் அவருக்குச் சிவகங்கை ஜமீன்தார் என்ற பட்டத்தினையும், கிழக்கிந்தியக் கம்பெனியார் வழங்கினர். தமிழகத்தில் முதன்முறையாக ஜமீன்தாரி முறையினை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட முதல் ஜமீன்தார் சிவகங்கை கெளரி வல்லப உடையாத் தேவர் ஆவார்.

இராமநாதபுரம் ஜமீந்தாரி:

இராமநாதபுரம் சீமையைப் பொறுத்தவரை மன்னர் முத்து ராமலிங்க சேதுபதி 08.02.1795-இல் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். கும்பெனியார் அவரது தமக்கையார் ராணி மங்களேஸ்வரி நாச்சியாரது உரிமையினை ஏற்றுக்கொண்டனரேயொழிய அவருக்கு இராமநாதபுரம் சீமையை ஆளும் உரிமையை வழங்கவில்லை. மாறாகக் கும்பெனியார் இராமநாதபுரம் சீமை நிர்வாகத்தைத் தமது கலெக்டர்கள் லாண்டன், பவுனி, ஜாக்சன், லூசிங்டன் ஆகியோர் மூலமாக கி.பி. 1803 வரை நடத்தி வந்தனர்.

ஆனால் மன்னரது இராஜ விசுவாசியான சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரரது கிளர்ச்சிகளின் காரணமாக கும்பெனியாருக்கு மிகுந்த இடையூறுகளும், இழப்புகளும் கி.பி. 1802 வரை ஏற்பட்டு வந்தது. மேலும் மேலும் அத்தகைய இழப்புகள் தொடர்வதைத் தவிர்க்க இராமநாதபுரம் சீமையில் ஒரு பாரம்பரிய ஆட்சிமுறையை அமுல் நடத்த வேண்டுமென அப்பொழுதைய கலெக்டர் லூசிங்டன் கும்பெனித் தலைமையை வற்புறுத்தி வந்தார்.[1]

கும்பெனித் தலைமையும் கலெக்டர் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு அன்றைய கும்பெனியாரது நடைமுறைகளின்படி இராமநாதபுரம் சீமையை ஜமீன்தாரியாக மாற்றி உத்திரவிட்டதுடன் முதல் ஜமீன்தாரினியாக மங்களேஸ்வரி நாச்சியாரை நியமனம் செய்தது.


  1. Raja Ram Rao. T-Manual of Ramnad Samasthanam. 1891. Page-269