சொக்கநாதப் புலவர் தனிப்பாடல்கள்
Appearance
பாடல் 43
பக்கம் 93 முதல் 99
தனிப்பாடல் திரட்டு நூலில் இவரது பாடல்கள் பக்கம் 93 முதல் 99 வரை
பாடல்களுக்கான செய்திக் குறிப்பு - செங்கைப் பொதுவன்
1-3
[தொகு]விருத்தம்
- சீர்கறுத்த முகில் கரத்தான் கஸ்தூரி பூபன் அருள் சேயா என்று
- மோர் கறுப்பும் இல்லாத தொண்டைவள நாட்டிருக்கு முசிதவேளே
- ஆர் கறுப்பன் என்று சொல்லி அழைத்தாலு நாமுன்னை அன்பினாலே
- பேர் கறுப்பன் நிறம் சிவப்பன் கீர்த்தியினால் வெளுப்பன் எனப் பேசுவோமே. (1)
- தொண்டை நாட்டு வள்ளலாகத் திகழ்ந்த கறுப்பன் இப் புலவரைப் போற்றிய வள்ளல்.
- கறுப்பனின் தந்தை கஸ்தூரி பூபன்.
- அவன் பெயர்தான் கறுப்பன். அன்பினாலை சிவப்பன் (செம்மையானவன்). இவன் புகழினாலே வெளுப்பன். (மாசற்ற புகழை வெள்ளை என்பது தமிழ்மரபு)
- பிள்ளை வயதினில் கல்வி கற்றோம் பின்பு
- பெரிய நரவாகனமும் பெற்றோம் பூமி
- உள்ளளவும் கீர்த்தி நிலை நிறுத்திக் கொண்டோம்
- ஒருகுறையும் இல்லையினி உரைப்பக் கேண்மோ
- தெள்ளிலகு சிதம்பரத்தைத் தெரிசித்தோம் பின்
- சேற்கருங் கட்ட வளநகைத் தெய்வயானை
- வள்ளி புணர் சிவப்பனையும் துதித்தோம் எங்கள்
- மாவை வளர் கறுப்ப உன்னை வாழ்த்தினோமே. (2)
- பிள்ளை வயதில் கல்வி கற்றோம். பின்பு பெரியவர்கள் என்னைச் சுமந்து சென்றனர். நிலம் உள்ள அளவும் வாழ்த்தக்கூடிய புகழையும் நிலைநிறுத்திக்கொண்டோம். நமக்கு ஒரு குறையும் இல்லை. சிதம்பரம் சென்று வணங்கினோம். வள்ளி புணர் சிவப்பனை(சேயோனை)ப் போற்றினோம். அத்துடன்
- மாவை என்னும் ஊரில் வாழும் கறுப்பன் என்பவனை வாழ்த்துகின்றோம். - தன்னை இவ்வாறு புலவர் கூறிக்ககொள்கிறார்.
- எல்லப்பன் அம்மையப்பன் றருதிரு வேங்கடராமன் எழிற்சீராமன்
- வல்லக்கொண் டமனுடனே மாதை வெங்கடேசனைப் போல் வரிசை தந்தான்
- செல்லத் தம்பியருடனே மாவையில் வாழ் கறுப்பண்ணன் தெருவீதிக்கே
- பல்லக்குத் தான் சுமந்தான் அதுநமக்கு ஓராயிரம் பொன் பரிசுதானே. (3)
- வேங்கடராமன் என்பவன் புலவரைப் போற்றிய மற்றொரு வள்ளல். இவனது தந்தை அம்மமையப்பன். பாட்டன் பெயர் ஒல்லப்பன். வல்லக்கோட்டை என்னும் மாதை இவனது ஊர். இவன் வள்ளல் கறுப்பண்ணன் வழங்கியது போல் கொடை வழங்கியதோடு மட்டுமல்லாமல் தன் தம்பியருடன் சேர்ந்து என்னை மாவை நகரில் வாழும் கறுப்பண்ணன் வீடு வரையில் பல்லாக்கில் சுமந்துகொண்டு வந்தான். அது எனக்கு ஓராயிரம் பொன் கொடுத்ததற்குச் சமம்.
4-6
[தொகு]- மெய்யிலே யொருபாதி உமக்களித்த செங்காட்டு விமலனாரே
- மையிலே தோய்ந்தவிழிச் சந்தனமான் தலைக்கரியை வளமாயாவி
- நெய்யிலே தான் சமைத்துக் கொடுத்திருந்தும் படைத்ததிருந்து நீர்தானின்று
- கையிலே மழுவெடுத்தாற் பொய்யாமோ பிள்ளைகொன்ற களவுதானே. (4)
- திருச்செங்காடு என்னும் ஊரில் குடிகொண்டுள்ள சிவனே! நீ உன் கையில் மழு என்னும் சூலத்தை ஏந்திக்கொண்டு ஒன்றும் அறியாதவர் போல் நின்றால் அன்று சிறுத்தொண்ட நாயனாரைப் பிள்ளைக் கறி தரச்சொன்ன திருட்டுத்தனம் பொய்யாகிவிடுமா?
- துப்பரையு மரகதத்தின் கொழுந்தரையும் ஒன்றாகத் துலங்கு மெய்யா
- செப்பரிய புலியதளைத் தரிக்கும் உத்தரா பதியில் சிவனே நீதான்
- அப்பரையும் விழுங்கியொரு பிள்ளையுந்தின்று ஆற்றா மலையோ இன்னுங்
- கப்பரையும் கையுமாய்ப் புறப்பட்டாய் நல்ல திருக் காடசிதானே. (5)
- உத்தரபதி என்னும் ஊரில் குடிகொண்டுள்ள சிவனே! துப்பு என்னும் பவளம் போன்ற மேனியை உடையவன் நீ. நீ உன் உடம்பில் சேர்த்து வைத்திருக்கும் திருமால் மரகதம் போன்ற பசுமை நிறம் கொண்டவன். அப்பர் என்னும் திருநாவுக்கரசரை (அப்பர் பாடலை) விழுங்கியது போதாதென்று பிள்ளை என்னும் சம்பந்தரையும் (சம்பந்தர் பாடலையும்) தின்றாய். இவை போதவிலை என்று கையில் கப்பரை (மழுவை) ஏந்திக்ககொண்டு யாரை விழுங்க உலா வருகிறாய்?
- அடிபட்டீர் கல்லாலும் எறிபட்டீர் அத்தனைக்கும் ஆளாயந்தப்
- படிபட்டும் போதாமல் உதைபட்டீர் இப்படியும் படுவாருண்டோ
- முடிபட்ட சடையுடையீர் கழுக்குன்றீர் முதற்கோணன் முட்டக்கோண
- இடிபட்டும் பொறுத்து இருந்தீர் சிவசிவா உமைத் தெய்வம் என்னலாமே. (6)
- சாக்கிய நாயனாரின் கல்லால் அடி பட்டீர். ஒருவன் உன்னைத் தூக்கி எறிந்தான் (கதை விளங்கவில்லை). கண்ணப்பரால் காலால் உதைக்கப்பட்டீர். இப்படியும் படுவார் உண்டா? திருக்கழுக் குன்றிலே சடைமுடியுடன் காட்சி தருகின்றீர்.
- இப்படிப் பொறுத்துக்கொள்ளும் உன்னை,
- சிவ சிவா
- தெய்வம் எனக் கூறலாம்.
7-9
[தொகு]- செல்லாரும் பொழில் புடைசூழ் புலியூர் அம்பலவாண தேவாவும்மைக்
- கல்லாலும் வில்லாலும் செருப்பாலும் பிரம்பாலும் கடிந்து சாடும்
- எல்லாரும் நல்லவர் என்றெண்ணி அருளீந்த தென்ன விகழ்ச்சி யொன்றும்
- சொல்லாமன் மலரால் விட்டு எறிந்தவனைக் காய்ந்ததென்ன சொல்லுவீரே. (7)
- நல்லாளை யிடமருவும் தியாகையா உமதிடத்தில் நியாயம் காணோம்
- கல்லாலே எறிந்தோர்க்கும் செருப்படியால் உதைத்தோர்க்கும் கடிந்து போரில்
- வில்லாலே அடித்தோர்க்கும் கொடுத்தீரே அல்லாமல் விழிநீர்சோர
- எல்லாமுன் செயலென்றே இருப்போர்க்கி யாதேனும் ஈகிலீரே. (8)
- பண்காணும் தமிழ்ப் புலவீர் இனத்தோடே இனம்சேரும் பரிசே போலத்
- தண்காவி மலர்த் தடஞ்சூழ் காவிரிநாட் டொருபுதுமை சாற்றக் கேளீர்
- கண்காண நரையான்மேல் வெண்காடை வற்றிருக்கக் கண்டோம் அந்த
- வெண்காடை இடப்புறத்தே பச்சையன்னம் கலந்திருக்கும் விதம் கண்டோமே. (9)
10-12
[தொகு]- இந்திரன் கலையா யென்மருங்கு இருந்தான் அக்கினி உதரம் விட்டகலான்
- இயமன் எனைக் கருதான் அரனெனக் கருதி நிருதி வந்தென்னை யென்செய்வான்
- அந்தமாம் வருணன் இருகண் விட்டகலான் அகத்தினின் மக்களும் யானும்
- அநிலமதாகும் அமுதினைக் கொள்வோம் யாரெதிர் எமக்குளர் ஈருலகில்
- சந்தமிந்த வரிசையைப் பெற்றுத் தரித்திர ராஜனை வணங்கித்
- தலைசெயும் எம்மை நிலைசெய் சற்கீர்த்திச் சாளுவ கோப்பையன் உதவும்
- மந்தர புயத்தான் இப்பையராயன் மகிழ்வொடு விலையிலா வன்னோன்
- வாக்கினால் குபேரன் ஆக்கினவனே மாசிலீசான பூபதியே. (10)
- வண்டு கிண்டிய தொங்கல் ஓதி குணக்கெழுந்திடு மனிலமோ
- மன்னு நூபுரமோ பயோதரம் ஊருவானவர் கணிகையோ
- அண்டர் பூபதி வனிதையோ முகம் அமுத வாயிதழ் தும்பியோ
- அரிகை ஆயுதமோ பிறந்திட மன்னமென்ன உலாவுவீர்
- கொண்ட நண்பும் உதாரமும் தவறாத கோகன கானனன்
- குத்தி பல்லவராய மேருகுணாள திப்பையன் வரையின் மேல்
- துண்ட வெண்பிறை வேணி கைச்சிலை நாணெனப் புகலாவிடின்
- தூரமோ அதிபாரமோ உயர் சேரனுக்கு ஒரு தொங்கலே. (11)
- சந்திரனுக்கு உடலூனம் தனதனுக்கோர் கண்ணூனம் தருவினீழல்
- இந்திரற்கோ பகக்குறியாம் இயமனுக்கோ புழுக்காலாம் இரவியீன்ற
- மைந்தனுக்கோ கால் முடமாம் வனசனுக்கோர் தலை குறையாய் வாழ்வாராயின்
- பந்தமுள மானிடரை விதி விடுமோ ஆலவாய்ப் பதியுளானே. (12)
==13-15 கட்டளைக் கலித்துறை
- அட்டாவதானமும் தொலகாப்பியமும் அகப்பொருளும்
- தொட்டாதி தொட்டப்ர பந்தம் எல்லா நம்மைச் சொல்லிச் சொல்லி
- ஒட்டாரங் கட்டி நம் பல்லக்குக் கொம்பை ஒடித்தெறிந்த
- தட்டாரப் பையல் அரிகர புத்ரனைச் சண்ணினனே. (13
- பண்டனைப் பண்டனை யோது பெம்மானைப் பனி வரைக்கோ
- தண்டனைத் தண்டனை செய்யுமுத் தண்டனைத் தண்டனைமூ
- தண்டனை யண்டர் தொழும் திருமாற் பேறமர்ந்த மணி
- கண்டனைக் கண்டனையாயின் நெஞ்சே முத்தி கண்டனையே. (14)
- துளைபடு மராமரமோர் ஏழும் எயதவன் தூதுகவி
- உளைபடு வாரிதி யொன்றே கடந்த தொளிர் தரள
- வளைபடு வாவி மணவை மன் கூத்தன் வகுத்த கவி
- தளைபடு காலுடனே கடல் ஏழையும் தாண்டினதே. (15)
16-18
[தொகு]- துங்காதரா தலமெங்கும் ஒருமிக்கத் துய்த்தநர
- சிங்காதரா தலந்தான் அறிந்தே னல்கச் சேலம் வந்த
- கெங்காதரா நின்புகழ் கேட்டு அசைப்பன் கீரிடம் என்றே
- வெங்காதரா வுக்குச் செய்தானிலை மலர் வேதத்தனே. (16)
- புரசை வடமலை யப்பாவிருட் கயம் பூண்டு கொண்டு
- முரசை வடமலை யப்பாலும் செல்ல முழக்கம் செய்தோய்
- சிரசை வடமலை யப்பாம்பின் வைத்துத் திருக்கணசார்
- இரசை வடமலை யப்பாவிப் பாருக்கோர் இந்திரனே. (17)
- சோதிச் சவரி விழிக்கோ கரவில்லை தூயகுழல்
- கோதிச் சவரி முடிக்க அறியாள் கொண்ட கோலம் என்னோ
- நீதிச் சவரிப் பெருமாள் என்றோதி நினைந்து உருகப்
- போதிச் சவரி வட்காரோ அறிகிலன் பூங்கொடியே. (18)
19-21
[தொகு]- சொல்லுக் கினிய கழுக்குன்றரே உமைச் சொல்ல வென்றால்
- அல்லற் பிழைப்புப் பிழைத்து விட்டீர் முப்புராதியர் மேல்
- வில்லைக் குனித்து எய்ய மாட்டாமல் நீரந்த வேளை தனில்
- பல்லைத் திறந்து விட்டீர் இதுவோ நும் படைத் தொழிலே. (19)
- துயிலையிலே இடர் துன்னையிலே தெவ்வர் சூழையிலே
- பயிலையிலே இருள் பாதியிலே பசும் பாலனத்தை
- அயிலையிலே வயதாகையிலே நமக்கார் துணை தான்
- மயிலையிலே வளர் சிங்கார வேலர் மயிலையிலே. (20)
- போதா சிவகுரு நாதா கலவை புழுகொடு சவ்
- வாதார்ந்த கொங்கைக் குறமாது வள்ளிக்கு வாய்த்திடுமின்
- பாதாரு கற்செற்ற வேல் விடுத்தால் என்பகையை அறுக்
- காதா மனம் இரங்காதா சிவகிரிக் காங்கேயனே. (21)
22-24
[தொகு]- காப்பிட்ட பிள்ளைக் கறிக்கிச்சைப் வையைக் கரைமேன்
- மாப்பிட்டு வந்த மயிலேசனே மலையான நின்னைக்
- கூப்பிட்டு நின்று குனிந்தொரு கோலக் கொம்பால் தடவிப்
- பூப்பட்ட கண்ணிச் சயமாக்கினான் மைப்புயல் வண்ணனே. (22)
- உம்பரை வாழ்வித்த நஞ்சம் கொண்டோ மொண்புரம் எரித்த
- அம்பரை யேற்றிய சூலம் கண்டோ மருளுங் குறைவில்
- நம்பரை பாகமும் கண்டோமவர் திருநாமஞ் சொல்லா
- வம்பரையும் கண்ணில் கண்டோம் வெண்காடனை வாழ்த்துங்களே. (23)
- மாடேறு தாளும் மதியேறு சென்னியு மாமலரோன்
- ஓடேறு கையும் உடையார் தமக்கிடம் ஓங்கிய நெற்
- சூடேறு சங்கம் சொரி முத்தை முட்டை யென்றே கமலக்
- காடேறு மன்னன் சிறகால் அணைக்கும் கழுக்குன்றமே. (24)
25-27
[தொகு]- நெருப்புக் கறுக்கச் சிவப்புள்ள மேனியர் நீள்கனகப்
- பொருப்பைக் குனித்துப் புரமெரித்தார்க் கிடம் போர்க் களிற்றின்
- மருப்புக் கண்முத்தும் வளர் கழைமுத்தும் வளைக்கண் முத்தும்:
- கருப்புக் கண்முத்து மதிக்குலம் காட்டும் கழுக்குன்றமே. (25)
- ஆலங்கிடக்கு மனத்தார்க் கொரு நன்றி இயம்பிலிட்ட
- கோலம் கிடக்கும் கண்டாய் குறையாத குணமுடைய
- சீலம் கிடக்கும் மனத்தார்க் கொரு நன்றி செய்யில்வெகு
- காலம் கிடக்கும் கண்டாய் வணிகா செந்தில் காத்தவனே. (26)
வெண்பா
- வேளுக்கு வாம்பரியும் வில்லுக்கு நீலமுஞ் சேல்
- வாளொக்கும் கண் மடவார் வாய்க்காடும்- நாளும்
- மருதப்பனையே வளர்த்து விட்டதாலே
- மருதப்பனை வணங்கு வார். (27)
28-30
[தொகு]- சிந்தாமணி சங்கு தேனுமலர்த் தாமரைசீர்
- ஐந்தருவு நின்னவே யாயிருக்க- வந்தேதான்
- கச்ச விடமே யுண்ட கண்டா கடைதோறும்
- பிச்சை இரந்து உண்ட தென்ன பேசு. (28)
- அந்திக்கார் வந்து மயல் ஆற்றுவார் அன்னையிடு
- வந்திக்கார் வந்து வழக்குரைப்பார் – நந்திக்கார்
- கச்சிக் காளத்திக்கார் காதல் உரைப்பார் கனகக்
- கச்சிக் காளத்திக் கார்காண். (29)
- இருப்போம் என்றாலும் இராதுளம் ஆனேயிக்
- கருப்போம் என்றாலும் கசக்கும்- விருப்பாரும்
- காசண்முகனைக் கடல் புடைசூழ் கோவளம் வாழ்
- மாசண் முகனை மறந்து. (30)
31-33
[தொகு]- பாரவிளநீர் சுமக்கப் பண்டே பொறாத விடை
- ஆரவடம் சுமக்க ஆற்றுமோ- நேரே
- புடைக்கனத்த கொங்கையின் மேல் பூங்களபம் சாத்தி
- இடைக்கனத்தம் வைத்தவர் ஆரின்று. (31)
- வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
- இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை- மங்காத
- சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
- ஏரகத்துச் செட்டி யாரே. (32)
- என்னெஞ்சு கல்லாகும் என்றறிந்தக் கல்லுமையாள்
- பொன்னஞ் சரணம் பொறாதென்றே- முன்னாள்
- இடத்தாளே அம்மியின் மேலேற்றுக் களக்காடா
- இடத்தாளே அஞ்சாதே யின்று. (33)
34-36
[தொகு]- முன்னே யிரண்டு முலை முற்றிய பின்னாலு முலை
- எந்நேர மென்மதலைக் கெட்டுமுலை- எந்நாளும்
- பைந்நாகம் சூழ்மதுரைப் பாணாநின் பாகனுக்கிங்
- கென்னாக மென்னாம் இனி. (34(
- நங்கை யொருத்தியையும் நாமிருவர் மூவரையும்
- பொங்கும் அமளி பொறுக்குமோ- சங்கம்
- குழைய வரால் பாயும் குருநாடர் கோவே
- பழையவரால் என்ன பயன். (35)
- நங்கை பயண நமக்கென்று உரைத்தளவில்
- அங்கம் பசலை நிறமானதே- செங்கை
- வளைநெகிழப் பாதி மறுத்தேன் என்றோத
- உளநெகிழப் பாதி யுடைந்து. (36)
37-39
[தொகு]- உன்னுயிரும் என்னுயிரும் ஒன்றென்பது இன்றறிந்தேன்
- மன்னுபுகழ் மச்சத்தார் மன்னவா- உன்னுடைய
- பொன்னாகத் தெங்கையர் தம் போகநகச் சின்னங்கண்
- டென்னாகத்தே யெரிகை யால். (37)
- ஒருவர்க்கு இடமாய் உகந்திருந்த பாயல்
- இருவர்க்கு இடமாய தென்னோ- மருவலரைக்
- கன்னாட்ட வின்னாட்டுங் கண்டன் கரிகாலன்
- தன்னாட்டிது புதுமை தான். (38)
- அம்பலவாவின் ஒருகால் ஆடினால் ஆகாதோ
- உம்பரெலாம் கண்டதெனக் கொப்பாமோ- சம்புவே
- வெற்றிப் பதஞ்சலிக்கும் வெம்புலிக்கும் தித்தியென
- ஒற்றிப் பதஞ்சலிக்கும் ஊர். (39)
40-43
[தொகு]- மாதா உடல்சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
- வேதாவும் கைசலித்து விட்டானே- நாதா
- இருப்பையிலே வாழ்சிவனே இன்னமோர் அன்னை
- கருப்பையிலே வாராமல் கா. (40)
- இந்தவிடை நிற்பதறிது என்னாணையும் மாணை
- சந்தேகம் ஆகச் சமைத்தானே- அந்தவயன்
- பாரதி ராமன் வரையில் பைந்தொடியீர் கொங்கையின்
- நீரதி ராமன்னட மின்னீர். (41)
- காளத்தீ கண்டத்தே காளத்தீ நெற்றியிலே
- காளத்தீ உன்றன் கரத்திலே- காளத்தீ
- அங்கமெங்கும் வெவ்வழலை யாற்றிணாண் ஞானப்பூங்
- கங்கையென்னும் பெண்ணொருத்தி கண்டு. (42)
- மேவில் உடனே விடியும் விடியாது
- கோவை மணிமார்பன் கூடாநாள்- தேவர்
- திரண்டு ஆதரிக்கின்ற தென்னரங்க மாலே
- இரண்டாலும் பொல்லாது இரா. (43)