சொன்னார்கள்/பக்கம் 111-120

விக்கிமூலம் இலிருந்து

கடவுள் ஒருவனைப் பணக்காரனாகவோ, ஏழையாகவோ படைக்கவில்லை. எல்லோரையும் ஒரே கோலத்தில்தான் கடவுள் படைக்கிறான். மனிதன் பணக்காரனாவதும் ஏழையாவதும் புத்திசாலித்தனத்தையோ, திறமையையோ தான் பொறுத்தது. சிலர் அதிர்ஷ்டம் என்றும் அதைச் சொல்லுவார்கள்.

—நடிகை செளகார் ஜானகி

அண்ணா நகரில் உள்ள கந்தசாமிக் கல்லூரியில் நான் துணைப் பேராசிரியர்தான். சிலர் என் பெயருடன் பேராசிரியர் எனப் போட்டு விளம்பரம் செய்துவிடுகிறார்கள். நான் பலமுறை வேண்டாம் கூறியிருக்கிறேன். பட்டதாரி கதை எழுதுகிறான் என்று தெரியப்படுத்திக் கொள்வதை அவர்கள் பெருமையாக நினைக்கும்பொழுது நான் தடுக்க முடியுமா?

— ஏ. எஸ். பிரகாசம்

(கதாசிரியர்-டைரக்டர்)


நான் பதவி மீது ஆசை வைத்ததில்லை. ஆசையிருந்திருக்குமானால் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே மததிரிப் பதவியை வகித்திருக்கக் கூடும். எர்ஸ்கின் பிரபு சென்னை கவர்னராக இருந்தபோது எனக்கு அழைப்பு அனுப்பி மந்தரிப் பதவியை ஏற்குமாறு வேண்டிக் கொண்டார். இரண்டு மணி நேரத்தில் பதில் அளிப்பதாகச் சொல்லிவிட்டு வந்து முக்கியமான ஒருவரிடம் கலந்தாலோசித்து மீண்டும் கவர்னரைப் பார்த்து மற்ற மந்திரிகளையும் நியமிக்கும் அதிகாரம் எனக்களித்தால் நான் மந்திரி பதவி ஏற்றுக் கொள்ளுவதாகச் சொன்னேன். அதை அவர்னர் ஒப்புக் கொள்ள மறுக்கவே நானும் மறுத்துவிட்டேன். எனக்கு வெறும் பதவிதான் குறிக்கோள் என்றால் நான் அப்படிச் சொல்லியிருக்கத் தேவை இல்லை.

—டாக்டர் P. வரதராஜூலு நாயுடு (1-6-1947)

(தமது 60-ஆம் ஆண்டு விழாவில்)

இந்தியக் காங்கிரஸ் ஐக்கிய இந்தியாவின் காங்கிரஸ், இந்துக்களும், முகம்மதியர்களும், கிறிஸ்தவர்களும், பார்சிகளும், சீக்கர்களும், சமூக வாழ்க்கையின் ஆசார சீர்திருத்தம் செய்வோரும், செய்யாதாரும் இதில் கலந்திருக்கிரறோம். நம் யாவருக்கும் பொதுவான சுதந்தரங்களும் கஷ்டங்களும் இருக்கின்றனவென்பதை அறிந்து கொள்வதற்கே நாம் இங்குக் கூடியிருக்கிறோம். நம் சுதந்தரங்களை விர்த்தி செய்வதற்கும் இடுக்கண்களைக் குறைப்பதற்கும் காங்கிரசை நாம் கூட்டியிருக்கிரறோம்.

—சுரேந்திரநாத் பானர்ஜி

(1885ல் புனாவில் நடைபெற்ற 11-வது காங்கிரஸ் மாநாட்டில்)

சமையல் ஒரு கலை. நான் மிகக்குறுகிய காலத்தில் சமையல் செய்யத் தெரிந்து கொண்டேன். மற்றவர்கள் சமைத்த சாப்பாட்டைவிட நானே சமைக்கும் சாப்பாடு எனக்கு மிகவும் பிடிக்கும்.

—பக்தவத்சலம் (8-12-1962)


கலை, மழையைப் போன்றது. வானத்தில் இருந்து நிலத்தில் விழும்வரை அதில் பேதம் இல்லை. ஆனால் அது எந்த நிலத்தில் விழுகிறதோ அதைப் பொறுத்து அதன் தன்மை மாறுகிறது. அது போலத்தான் கலையும்.

—எம். ஜி. ஆர் (10-3-1962)


ஒரு பேராசின் துணையைப் பெற்றுப் போர் புரிதல், அல்லது தேசம் முழுவதும் ஒரே காலத்தில் புரட்சி செய்தல், சுய அரசாட்சிக்குச் செல்லும் வழி என்று சிலர் கூறுகின்றனர். அவ்வழிகள் தேசமக்கட்கும். பொருளுக்கும் அழிவும் கேடும் விளைவிப்பவை. நம் காங்கிரஸ் கோட்பாட்டுக்கு மாறுபட்டவை. நாம் கைக்கொள்ள முடியாதவை. ஆதலால், அவ்வழிகள் தாம் விரும்பும் சுய அரசாட்சியை அடைவதற்கும் நம் தேசத்தின் நிலைமைக்கும் பொருத்தமற்றவை என நாம் தள்ளி விடுவோமாக.

—வ. உ. சி.

ஆங்கிலேயர் சுமார் 300 வருஷங்களுக்குமுன் இந்தியாவுக்கு வந்தபொழுது நம் கைத்தொழில் முன் போலவே சிறப்பாக நடந்து வந்தது. 1602 - ஆம் வருஷம் காப்டன் லங்காஸ்டர் துரை 20 கஜமுள்ள டாக்கா மஸ்லின் துணியைக் கைக்குட்டை போல் மடித்துத் தம் மகாராணி எலிசபெத் அம்மைக்குக் காணிக்கையாக அனுப்பியிருக்கிறார். இன்னமும் ஆங்கிலேயர்களுக்கு இது ஞாபகத்திலிருக்கிறது. ஏனெனில் நான் லண்டனிலிருந்தபோது, என்னிடம் ஆங்கில நண்பர்கள் ‘அழகான டாக்கா மஸ்லின் உன்னிடம் இருக்க வேண்டுமே அதைக் காட்டு’ என்றார்கள். என்னுடைய அறியாமைக்காக விசனப்பட்டேன்.

—டாக்டர் திருமதி அருள்மணி பிச்சமுத்து

(1930-ல், தூத்துக்குடி கதர்க் காட்சியைத் திறந்து வைத்த போது பேசியது.)

நான் முதலில் நாடகத்தில்தான் நடிக்க வந்தேன். என்றாலும், அப்பொழுது அதை நான் தொழிலாக மேற்கொள்ளவில்லை. மேலும் என் தகப்பனாருக்கு நாடகம் என்றாலே பிடிக்காது. நாடகம் சம்பந்தமாக நோட்டிசுகளைக் கையில் கண்டாலும் அவருக்குக் கோபம் வந்துவிடும். அப்படியிருந்தும் நான் அவருடைய செல்லப்பிள்ளை என்ற காரணத்தால் சிலசமயம் விட்டுக் கொடுப்பார்.

—தியாகராஜ பாகவதர் (14 - 1 - 1950)


பள்ளி நேரம் தவிர்த்த நேரங்களில் நான் எங்கள் வீட்டிற்குப் பக்கத்திலிருந்த ஒரு புத்தக பைண்டர் வீட்டில் போய் அவர் செய்யும் வேலைகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பேன். கூடமாட உதவி செய்வேன்; பைண்டிங் செய்ய கற்றுக்கொண்டு நானே பைண்ட் செய்யவும் ஆரம்பித்தேன். முதன்முதலாக ஒரு புத்தகத்தை பைண்ட் செய்த அன்று நான் அடைந்த மகிழ்ச்சிச்கு ஈடுகிடையாது.

—நா.மகாலிங்கம் (1 - 1 - 1975)

8

(தொழிலதிபர்)

தோழர்களே! ”தீண்டாமை விலக்கு” என்று வெறும் கூச்சலிட வேண்டாம். ஒவ்வொரு சேரியிலும் நுழையுங்கள்; மூடபக்தியால் வரும் கேட்டைத் தெரிவியுங்கள். சேரியிலுள்ள அழுக்கு, மலம், சேறு, பள்ளம், மேடு முதலிய அசுத்தங்களைப் போக்குங்கள். சேரிக் குழந்தைகளைக் கழுவிச் சுத்தமாக்குங்கள், தெருக்களைப் பெருக்குங்கள். ”குடியரசு” ”தமிழன்” ”சண்டமாருதம்” முதலிய பத்திரிகைகளைக் கிராமத்தில் வகிக்கச் சொல்லுங்கள். மந்திர தந்திரங்கள், பூஜை, நைவேத்தியங்கள் இவைகள் பாமர மக்களை மயக்கி ஆளச் செய்துவரும் உபாயங்கள், நீங்கள் அவர்கள் கண்களைத் திறகச் செய்யுங்கள். ஒலி பெருக்கிகளையும், இன்பக் காட்சிகளையும் சேரியில் அனுதினமும் கேட்கவும் செய்யுங்கள். இதைவிட மேலான வேலைகள் உலகில் உள்ளனவா?

—மா. சிங்காரவேலு பி.ஏ. பி. எல்;

(1932-ல் சென்னையில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில்)

நான் எப்போதும் எதிலும் அவசரப்படாதவன். நான் பிறக்கும்போதுகூட அவசரப்படாதவன் என்று என் பெற்றோர்கள் சொல்லுவார்கள். என் தாயாருக்கு இடுப்பு வலி மூன்று நாட்களாக இருந்தும், மூன்று நாட்களுக்குப் பிறகு தான் நான் பிறந்தேன்.

—அறிஞர் அண்ணா (11-1-1967)


என்னிடம் நிறைந்த நினைவாற்றல் இருப்பது கண்டு அட்டாவதானி இராமலிங்கம செட்டியார் அவர்கள் அட்டாவதானப் பயிற்சியும், அதன் முறைகளும் சொல்லி வைத்தார்கள். 1953-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந்தேதி என்னுடைய ஊராகிய சாலிச் சந்தைக்கு 5 மைல் தொலைவிலுள்ள அத்திப்பட்டி என்னும் ஊரில் எனது அட்டாவதான நிகழ்ச்சி முதன் முதல் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

—திருக்குறள் தசாவதானி பெ.இராமையா(30-1-1976)

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்னும் பழமொழி சங்கீதத்திற்கும் பொருந்தும். சிவாலயத்திற்கு முன்னல் இருந்து நந்தனார் கைகூப்பித் தொழும்போது பக்தி வெள்ளத்தினால் இயற்கையாகவே பண்ணும் பாட்டும் ஊற்றெடுத்துப் பெருகுவதுபோலப் பெருகும். அவ்விடத்தில் பக்திரசமான பாட்டுக்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பாடக்கூடும். அதைவிட்டு நந்தனார் வேதியரிடத்தில் உத்தரவு கேட்பதும், வேதியர் அவருக்கு விடை கொடுப்பதும் பாட்டாகப் பாடினல் நாமும், நம் நாட்டு நாடகதிலே இன்னும் இப்படி இருக்கிறதே என்று ஒப்பாரிப் பாடிப் புலம்பவேண்டியிருக்கிறது. நந்தனர் சரித்திரம் மட்டும் இப்படி நடிப்பதாக நான் சொல்லவில்லை. அநேக நாடக சபைகளில் ’எல்லப்பச் செட்டி லெக்க ஏகலெக்க’ என்றபடி எல்லா நாடகங்களும் இவ்விதமாகத்தான் நடிக்கப்படுகின்றன. ’தருக்கம்’ ‘ஸ்பெஷல்’ என்று விளம்பரம் செய்யும் நாடக சபைகள் எத்தனையோ இருக்கின்றன. இவ்விதமான குறைகளை நீக்குவதற்கு தனலட்சுமி விலாச சபையாரைப் போன்ற சில கெளரவ சபையார் முன் வந்திருப்பது நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு நற்குறியாகும்.

—எஸ். எஸ். அருணகிரிநாத முதலியார் (1919)

(சென்னை புரசைத் தனலட்சுமி விலாச சமாஜத்தில்)


சினிமா என்றால் இப்போது பேச்சும் பாட்டும் கலந்த திரைப்படத்தைத்தான் குறிக்கும். நம் நாட்டில் அது ஒரு காலத்தில் பேசாத படமாக, வெறும் நிழலாட்டம் போல இருந்து பேசும் சக்தியைப் பெற்ற வருடம் 1931. அந்த வருடத்திலேதான் முதன் முதலில் இந்தி பேசும் ”ஆலம் ஆரா” என்னும் படமும், தமிழ் பேசும் ”காளிதாஸ்” என்ற படமும் வெளியாயின. அந்த முதல் தமிழ்ப்படமான ”காளிதாஸ்” கதையில் நடிக்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பற்றி நான் பெருமைப்படுகிறேன்.

—டி. பி. ராஜலட்சுமி (1-1-1957)

இசையமைப்புக்குப் பாடல் எழுதுவதா? எழுதிய பாடலுக்கு இசை அமைப்பதா? என்று கேட்டால், இசையமைப்பு சிறப்பாக இருந்தால், அதற்குப் பாடல் அமைப்பதும், பாடல் சிறந்து விளங்கினால், அதற்கு இசை அமைப்பதும் நல்லது.

—கவிஞர் சுரதா (10-3-1958)


எனது முதுமைப் பருவம் வரை அவருடன் நான் வாழ்ந்திருக்கமுடியும் என்றும், அவருடனேயே எங்கள் குழந்தைகளும் பெரியவர்களாக வளருவதைப் பார்க்கமுடியும் என்றும் நான் கனவு காண்பது அளவுக்குமீறிய ஆசை என்பதை நான் உணராமல் போய்விட்டேன்.

—ஜாக்குலின் கென்னடி (22-11-1964)

(அமெரிக்க ஜனதிபதியும், தனது கணவருமான கென்னடியின் முதலாவது நினைவு நாள் கூட்டத்தில்.)

தவனை முறையை நாங்கள் கொண்டுவர முதலில் எங்களைத் தூண்டியது ஒரு கடிகார விற்பனைதான். செக்கோஸ்லேவிய கடிகாரமான அதை 16 ரூபாய்க்குகூட, எங்களிடமிருந்து மக்களால் வாங்க முடியவில்லை. பிறகு முதலில் நாலு ரூபாய் கொடுத்து, மீதியைத் தவணையில் கொடுக்கும்படி செய்தோம். தவணை முறை வேலை ஆரம்பமான கதை இதுதான்.

—வி. ஜி. சந்தோஷம் (15-1-1975)

(தொழிலதிபர்)


எனக்கு வாழ்க்கை நான் எதிர்பார்த்தபடியே நன்றாக அமைந்திருக்கிறது. எனக்கு வீடு, ஒரு மகன், கணவர், என் தொழில் எல்லாமே மனசுக்குப் பிடித்தபடி அமைந்திருக்கிறது. நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். நான் ஆசைப்பட்டது கிடைத்திருக்கிறது.

—சர்மிளா டாகூர் (15-12-1974)

(பிரபல இந்தி நடிகை)

ஒருவன் இறக்கும்போது கூறுவது எல்லாம் உண்மையாகவே இருக்கும். அதனால்தான் மரணவாக்கு மூலம் என்று வாங்குகிறார்கள்.

—பெரியார் (13-7-1961)

புதியவர்களுக்குப் பாடல் எழுதும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தவேண்டும். பாட்டெழுதும் திறமை நம் நாட்டுப்பெண்களில் பலருக்கு இருப்பதால், அவர்களையும் இத்துறையில் ஈடுபடச் செய்ய வேண்டும். குறிப்பாக, மதுரை தியாகராயா கல்லூரி, மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம். அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சென்னைத் தமிழ் மாணவர் மன்றம் போன்ற இடங்களில் இருந்து, திரைப்பாடல் எழுதுவதற்குத் தமிழ் மாணவர்களைத் தேர்ந்தெடுத்துப் பாடலுக்கும், நம் நாட்டுக்கும் புதிய சக்தியை ஊட்டவேண்டும்.

—கவிஞர் சுரதா (10-3-1958)


நாடகத்தின் பல்வேறு துறைகளிலும் பயிற்சி கொடுக்கும் வகையில் கல்லூரிப் பாடத்திட்டம் அமையவேண்டும். அனைத்துலகிலும் தமிழ் நாடகத்திற்கு ஈடில்லை என்று தமிழன் தலைநிமிர்ந்து நிற்கும் நிலை வருவதற்கான வழி வகைகளை அரசும் கலைஞர்களும் இணைந்து காண வேண்டும். இதுவே எனது ஆவல்.

— -தி. க. சண்முகம் (18-4-1972)

(நாடகக் கலைஞர்)


என்னைக் காந்தி என்று நான் உங்களில் யாரையும் அழைக்கச் சொல்லவில்லை! என்னை அறிஞனாக உங்களை ஏற்றுக் கொள்ளச் சொல்லவுமில்லை! அன்பு மிகுதியால் தம்பிமார்கள் அவரவர் இஷ்டம் போல் என்னை அழைக்கின்ற அன்பு மொழியாகவே இவற்றை எல்லாம் நான் கருதுகிறேன்.

—அறிஞர் அண்ணா (1967)

(திருச்சி பொதுக்கூட்டத்தில்)

இளமையில் கோழி வளர்ப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வமிருந்தது. என் தாய் பலரகமான கோழிகளை வாங்கியளித்துப் பராமரிக்கக் கற்பித்து உற்சாக மூட்டி வந்தார்கள். மாதத் தொடக்கத்தில் தாயுடன் கடை வீதிக்குச் சென்று கோழிகளுக்கு வேண்டிய இரை வாங்கி வருவேன். முட்டைகளை விற்றுக் கணக்கு வைத்திருப்பேன். ஒவ்வொரு மாதக் கடைசியிலும் இதன் லாப நஷ்டக் கணக்கைத் தாய்க்கு அறிவிப்பேன். லாபத் தொகை தனியாக வைக்கப்பட்டு ஏதேனும் நல்ல காரியக்கிற்காகச் செலவிடப்படும். ஏழைப் பையன் ஒருவனின் பள்ளிச் சம்பளமாகவும் இது பயன்படுவதுண்டு.

—டாக்டர் ஜே. சி. குமரப்பா

நான் மேல் நாடுகள் சொல்லுவதற்கு முன் அங்கெல்லாம் நம்முடைய நாகரிகத்தைப் பற்றிக் கேவலமாகச் பேசுவார்கள், நம் நடனத்தைப் பற்றி இழிவாகப் பேசுவார்கள் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அங்குச் சென்ற எனக்கு என் எண்ணம் தவறானது என்று தெரிந்தது. பதினாறு முழம் சேலையும், நீண்ட கூந்தலும் அவர்களுக்கு வெறுப்பை உண்டு பண்ணும் என்று எண்ணிய என்னை அவர்கள் ஏமாற்றி விட்டனர். சேலைகளையம், நீண்ட கூந்தலையும் வரவேற்றனர். அவர்கள் சேலைமீது கொண்ட மோகத்தினால் என் சேலைகள் சிலவற்றைப் பரிசாக வாங்கிச் சென்றனர். நீண்ட கூந்தலிலிருந்த கொஞ்சம் சாம்பிள் கத்தரித்துக் கொண்டு போனார்கள்.

—நடிகை வசுந்தராதேவி (1950)

கவிஞர் பாடும் பாட்டை ரசிகர்கள் கேட்டு கை தட்டுவதோடு மட்டும் நிற்காமல், விருப்பமான காசுகளைப் போட வேண்டும். கவிதை வளர்ச்சிக்கு இது ஒரு தூண்டு கோலாக இருப்பதோடு, மக்களுக்குக் கவிதையின் மேல் காதல் ஏற்படும். இது வேடிக்கையல்ல. இனி வாடிக்கையாக இம்முறையை மேற்கொள்ள வேண்டும்.

—கவிஞர் சுரதா (9-7-1971)

எனக்கு எதாவது பொதுநிகழ்ச்சிகள் நினைவுக்கு வருமானால், புத்தர் இரவோடு மனைவியையும் பதவியையும் துறந்து வீட்டை விட்டுச் சென்றதும், ஏசுநாதர் தோளில் சிலுவை சுமந்து போனதும்தான் நினைவுக்கு வரும். இதை நான் கூற காரணம், பலர் எனக்கு மார்க்கத்தில் பற்று இல்லை என்று எண்ணுகிறார்கள். இந்தச் சம்பவங்களில் பற்று வைப்பவன் மார்க்கவாதி என்றால் நானும் மார்க்கவாதிதான்.

— அறிஞர் அண்ணா


ஒரு படம் வெளி வந்தால், உடனே அந்தப் படத்தின் பாடல்களைப் பற்றித் தமிழ் பயிலும் மாணவர்களும், முதிர்ந்த புலவர்களும், அப்பாடல்களைப் பற்றி விளக்கம் எழுதிச் சிறுசிறு புத்தகமாக வெளியிடும் பணியில் ஈடுபடு வார்களானல், அதன் மூலம் மக்களுக்கு விமரிசன வளர்ச்சி ஏற்படும்.

— கவிஞர் சுரதா (10.3-1958)


இன்று கச்சேரி செய்வது பெருமையாகக் கருதப்படுகிறது. ஆனல் நாங்கள் ஆரம்பித்த காலத்தில், உயர்குலப் பெண்கள் எல்லாம் செய்யக்கூடாத காரியம் இது என்றே கருதப்பட்டது. இந்த கலைக்கு உள்ள இந்தப் பெயரை மாற்றவேண்டும் என்ற எண்ணத்தோடேயே நாங்கள் முழுதாகப் பாடுபட்டோம்.

— டி. கே. பட்டம்மாள்


நம் நாட்டிலே படித்துப் பட்டம் பெற்றவர்களின் தொகை அதிகமாக இருக்கிறது. அவர்களினால் எந்தப் பயனும் இல்லை பட்டம் பெறுவோர்க்குத் தங்களுடைய தொழிற்சாகைளில் தாங்களே நேரடியாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை. படித்துவிட்டுப் பட்டம் பெற்ற பெருமையோடு வேலையில்லாமல் இருப்பவர்களே தவிர, தொழிற்சாலைகளில் உழைக்கும் உளளம் அவர்களுக்கு உண்டாவதில்லை.

— தொழிலதிபர் நா. மகாலிங்கம்

நான் சீர்திருத்தக்காரனல்ல. தற்போது உலகில் சீர்திருத்தஞ் செய்வதிலும், சீர்திருத்தக்காரர்களின் வேலையிலும் அதிக கவனஞ் செலுக்கப்பட்டு வருகிறது. சீர்திருத்தக்காரரில் இருவகை வர்க்கம் இருக்கிறது. இரண்டு பேரும் பெரிய உபத்திரவம்தான். சீர்த்திருத்தஞ் செய்வதாக வெளி கிளம்புகின்றவர்கள் எல்லாவற்றையும் தகர்க்க வேண்டு மென்கிறார்கள். வீட்டின் படி சிறியதாயிருக்கிறதென்று வீட்டையே இடித்துத் தள்ள வேண்டுமென்று இவர்கள் சொல்லுவார்கள். படியை மட்டும் பெரிதாகச் செய்யலாமென்ற யோசனையே இவர்கள் மூளைக்கு எட்டாது. இவர்களுக்குத் தாங்கள் என்ன செய்கிரறோம் என்பதே புலப்படுகிறதில்லே. அனுபவம் என்பதே இவர்களுக்குக்கிடையாது. அனுபவத்தில் தென்படும் உண்மைகள் இவர்களுடைய கண்களுக்குத்தெரியாது.

— தொழிலதிபர் ஹென்றி போர்டு


எனக்கு மிகவும் பிடித்தமான பொருள் புத்தகம். புத்தகத்திற்காகப் பணம் செலவழிப்பதில் நான் ஊதாரி என்ற பட்டத்தையும் பெறத் தயார்.

— நேரு


இந்தியாவிலுள்ள தாழ்ந்த வகுப்பார்களெல்லாம் எனது குடும்பத்தினரே. கடந்த ஆறு ஆண்டுகளாக எனது மனைவி மக்களையோ, உறவினர்களையோ முற்றிலும் மறந்து விட்டேனென்பதை நீங்கள் அறியவேண்டும். ஒரு தினத்தில் ஒருமணி நேரமாவது நான் அவர்களோடு சகவாசமாய் இருந்தது கிடையாது. இதிலிருந்து எனது குடும்ப வாழ்க்கையைப் பற்றி ஒருவாறு நீங்கள் ஊகிக்கலாம். இது முற்றிலும் உண்மை என்பதையும், குடும்ப பராமரிப்பை உத்தேசித்துக் கட்டாயம் நடத்தவேண்டிய தொழிலையல்லாது. நான் ஆற்றவேண்டிய கடமைகள் பல உளவென்பதையும் நீங்கள் அறிய வேண்டும்.

—டாக்டர் அம்பேத்கார் (4-3-1932)

"https://ta.wikisource.org/w/index.php?title=சொன்னார்கள்/பக்கம்_111-120&oldid=1009834" இலிருந்து மீள்விக்கப்பட்டது