சொன்னால் நம்பமாட்டீர்கள்/அன்னையின் பிரிவு
1945ஆம் ஆண்டு சென்னை தியாகராயநகர் நானா ராவ் நாயுடு தெருவில் 6-ம் எண் இல்லத்தில் நான் குடியிருந்த சமயம். எனக்கு மிகவும் வேண்டியவர்களான பெங்களூர் சுவாமி அவர்களின் மூத்த புதல்வன் வேலுவிற்குத் திருமணம் செய்யப்பெண் பார்க்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்கள்.
நானும் பல இடங்களில் பெண் பார்த்து. கடைசியில் அடையாறு ஒளவை இல்லம் சென்று திருமதி முத்துலட்சுமி ரெட்டி அவர்களிடம் விஷயத்தைச் சொன்னேன்.
திருமதி முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் என்னிடம் மிகவும் பிரியமுடையவர்கள். அடிக்கடி என்னை ஒளவை இல்லத்திற்கு அழைத்து சொற்பொழிவு ஆற்றும்படி செய்வார்கள்.
என் நகைச்சுவைப் பேச்சுகளைக் கேட்டு மாணவிகள் கலகலவென்று சிரிப்பதை மிகவும் விரும்புவார்கள். வாழ்க்கையில் துன்பத்தையே கண்ட மேற்படி மாணவிகள் ஒரு மணி நேரம் அம்மாதிரி சிரித்துக் குதூகலமாக இருப்பது திருமதி ரெட்டி அவர்களுக்கு பெருத்த ஆறுதலாக இருந்தது. அதனால் என்னை அவர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.
ஆகவே அவர்கள் எனக்காக சிரத்தை எடுத்து ஒளவை இல்லத்தில் படித்துக் கொண்டிருந்த ஒரு நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுத்துச் சொன்னார்கள். அதன் பின்னர் மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்த்தார்கள். பரஸ்பரம் சம்மதம் தெரிவித்ததும் என் வீட்டில் மறுநாள் நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்வது என்று முடிவாயிற்று.
மறுநாள் காலை 11மணி- நிச்சயதார்த்தத்திற்கு அனைவரும் வந்துவிட்டனர். திருமதி முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் உட்பட பல பிரமுகர்கள் வந்திருந்தார்கள்.
நிச்சயதார்த்தம் நடக்கும் சமயத்தில் எனக்கு ஒரு தந்தி வந்தது. நான் வெளியில் வந்து தந்தியை வாங்கினேன். வாங்கிப் படித்தேன். பலர் என்ன தந்தி? என்று விசாரித்தார்கள். ‘நிச்சயதார்த்தத்தை வாழ்த்தி தந்தி வந்திருக்கிறது’ என்று அனைவருக்கும் கூறினேன்.
நிச்சயதார்த்தம் முடிந்து விருந்து அமர்க்களமாக நடந்தது. எல்லோரையும் முகமலர்ச்சியுடன் திருப்தியாகவிசாரித்து விழாவைச் சிறப்பாகமுடித்தோம்.
எனது நெருங்கிய குடும்ப நண்பர்களான பெங்களூர் சுவாமி குடும்பத்தாரைத் தவிர மற்ற அனைவரும் சென்று விட்டனர். அவர்கள் அன்று இரவு இரயிலில் புறப்படுவதாக இருந்தார்கள்.
நான் அவர்களிடம், ‘நீங்கள் அனைவரும் இரவு ஊருக்குப் புறப்படுங்கள். நான் இப்போதே காரில் எனது ஊருக்குப் புறப்பட வேண்டியிருக்கிறது’ என்றேன்.
“ஏன் என்ன, தந்தி வந்த விஷயமாகவா” என்றெல்லாம் அவர்கள் கேட்டார்கள்.
“ஆம் என் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை என்று தந்தி வந்திருக்கிறது” என்றேன்.
‘சரி, அப்படி என்றால் உடனே புறப்படுங்கள். என்று வேகமாக என்னைப் பயணம் செய்ய வைத்தார்கள்.
நானும் காரில் புறப்பட்டு சைதாப்பேட்டை தாண்டியதும் ‘ஓ’ வென்று வாய்விட்டுக்கதறி அழுதேன்.
டிரைவர் பயந்து போய் வண்டியைநிறுத்திவிட்டு என்ன என்னவென்று கேட்டான். அவனிடம் தந்தியைக் காட்டினேன்.
சொன்னால் நம்பமாட்டீர்கள் அந்தத் தந்தியில் ‘என் அன்னை இறந்து விட்டாள். உடனே புறப்படு’ என்று இருந்தது.
“இதை ஏன் அப்போதே சொல்லவில்லை” என்றான் டிரைவர்.
கல்யாண நிச்சயதார்த்தம் நடக்கும் சமயத்தில் நமது துக்கத்தை வெளிக்காட்டக்கூடாதல்லவா? சரிசரி எடுகாரை என்று சொல்லி பிரயாணத்தைத் தொடங்கினேன்.