சொன்னால் நம்பமாட்டீர்கள்/நாடோடியாக நடித்தேன்

விக்கிமூலம் இலிருந்து

நாடோடியாக நடித்தேன்

பிரபல எழுத்தாளர் ‘நாடோடி’ அவர்களை பெங்களுரில் பாரதி மண்டப நிதி அளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிதியைப் பெற்று வருவதற்கு கல்கி ஆசிரியர் திரு. கிருஷ்ண மூர்த்தி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

புறப்பட வேண்டிய கடைசி நிமிஷத்தில் நாடோடி அவர்களால் புறப்பட இயலவில்ல்ை: ஆனால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் தடுமாறிவிடக் கூடாதே என்று கல்கி என்னைப் பெங்களுருக்குப் போகும்படி கேட்டுக் கெண்டார்.

நாடோடி பெயரால் ரிசர்வ் செய்யப்பட்ட டிக்கட்டிலே நான் பிரயாணம் செய்ய நேர்ந்தது. பெங்களுர் கண்டோன்மென்ட் ரயில்வே ஸ்டேசன் வந்ததும் சிலர் மாலையும் கையுமாக ஓடிவந்தனர்.

‘நாடோடி’ என்ற பெயர் எழுதியிருந்த ரயில் பெட்டியைக் கண்டுபிடித்து அதன் அருகில் ஓடி வந்தார்கள். வண்டியிலிருந்து இறங்கிய என்னைக் கண்டதும், “நாடோடி வாழ்க” “வாழ்க” என்று கோஷம் போட்டு வரவேற்று மாலை அணிவித்தார்கள். நானும் புன்னகையுடன் மாலை மரியாதைகளைப் பெற்றுக் கொண்டேன்.

நான் யார் என்பதை அவர்களிடம் அப்போது சொல்லிக் கொள்ளவில்லை. அப்படியே எல்லோரும் என்னை ‘நாடோடி’ என்றே நினைக்கும்படி மாலைவரை சமாளித்துக் கூட்டத்தில் விஷயத்தை உடைத்துச் சபையைத் திகைக்க வைக்க வேண்டு மென்பது என் திட்டம்.

என்னை வரவேற்று கூட்டிக்கொண்டு போனவர்கள் பெங்களூர் காந்தி நகரில் ஒரு வீட்டில் இறக்கினார்கள். அந்த வீடு திரு. சாமி என்பவருடையது. திரு. சாமி அவர்களின் புதல்வர்கள் மூன்றுபேர், புதல்வியவர் ஐந்து பேர். எல்லோரும் உயர்ந்த படிப்பு படித்தவர்கள். ‘கல்கி'யின் விசிறிகள்.

என்னை நாடோடி என்று நினைத்துக் கொண்டு போட்டி போட்டுக் கொண்டு பிரமாதமாக உபசாரம் செய்தார்கள். என்னுடைய நகைச்சுவை வெடிகளைக் கேட்டு, சிரி சிரி என்று சிரித்தார்கள். ‘நாடோடி’ எழுதிய பல விஷயங்களைக் குறிப்பிட்டுப் பேசினார்கள்.

எனக்கு அவைகள் எங்கே ஞாபகத்திலிருக்கும்? ஆனால் நான் சமாளித்து, மழுப்பி ஒரு வழியாக கூட்டத்திற்குப் போகும்வரை ‘நாடோடி'யாகவே நன்றாக நடித்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.

மாலையில் கூட்டம் துவங்கியது. எல்லோரும் என்னை ‘நாடோடி’ என்று நினைத்தே பலவாறாகப் பேசினர். பேசினர், அப்படிப் புகழ்ந்து பேசினர். எட்டயபுரம் பாரதி மண்டப நிதிக்கு ரூ.2000/- கொடுத்தார்கள். நிதியைப் பத்திரப்படுத்திக் கொண்டேன்.

கடைசியில் என் முறை வந்தது. சுமார் ஒரு மணிநேரம் நகைச்சுவை வெள்ளத்தில் கூடியிருந்தவர்களை மிதக்க வைத்து இப்போது சபை என் கைக்குள் வந்துவிட்டதை உணர்ந்தேன்.

நான் இன்னும் நாடோடியாகவே பேசிக்கொண்டிருந்தேன். கடைசியாக சபையோரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். “நான் இப்போது என் பேச்சை முடிக்க விரும்புகிறேன்” முடிக்கு முன்பு ஒரு உண்மையச் சொல்ல விரும்புகிறேன். அந்த உண்மையை நீங்கள் கேட்டால் திடுக்கிட்டுப் போவீர்கள். ஆகா என்று ஆச்சரியப்படுவீர்கள்.

ஆனால் அந்த உண்மையை நான் இலவசமாகச் சொல்ல விரும்பவில்லை. நீங்கள் அனைவரும் பாரதி மண்ட்ப நிதிக்கு ஆளுக்கு நான்கணா தருவதாகச் சொன்னால், சொல்கிறேன். என்ற கூறினேன்.

“பேஷாகத் தருகிறோம், ஆனால் நீங்கள் சொல்லப் போகும் உண்மை எங்களுக்குத் தெரிந்ததாக இருந்தால் என்ன செய்வது” என்று கூட்டத்திலிருந்த ஒருவர் கேட்டார்.

“ஒருக்காலும் உங்களுக்குத் தெரிந்திருக்க முடியாது.” என்றேன்.

“தெரியும்” என்று பல குரல்கள் கேட்டன.

“என்ன தெரியும்?” என்று நான் கேட்டேன்.

“நீங்கள் நாடோடி அல்ல, சின்ன அண்ணாமலை என்பது தெரியும். இதைத் தவிர வேறு ஏதாவது உண்மை உண்டா?” என்று கேட்டார்களே பார்க்கலாம். நான் அப்படியே அசந்து போனேன், பின்னர் விசாரித்ததில் கூட்டத்தின் செயலாளருக்கு, “நாடோடிவர இயலவில்லை, சின்ன அண்ணாமலை வருகிறார்” என்று கல்கி தந்தி கொடுத்திருக்கிறார் என்று தெரிய வந்தது.

அதை வேண்டுமென்றே செயலாளர் மறைத்து விட்டுக் கடைசியில் நான் பேசிக் கொண்டிருக்கும்போது சிலரிடம் பிரஸ்தாபித்திருக்கிறார். அது சபை பூராவும் பரவி விட்டது. ஆக நான் நடித்ததைவிட சபையோர் சிறப்பாக நடித்து விட்டார்கள். ஆயினும் சபையோர் என்னைக் கெளரவிக்கத் தயங்கவில்லை. என் சொற்பொழிவு அவர்களை எல்லாம் மிகவும் கவர்ந்து விட்டது போலும்,

சொன்னால் நம்ப மாட்டீர்கள், கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் அப்போது தனித்தனியாக வந்து கொடுத்த காசுகளைக் கூட்டிப் பார்த்ததில் ரூ.650/- இருந்தது.