உள்ளடக்கத்துக்குச் செல்

சொன்னால் நம்பமாட்டீர்கள்/வேலைக்காரி

விக்கிமூலம் இலிருந்து
வேலைக்காரி

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு நான் சென்னையில் நிதி அளிப்பு விழா நடத்தியதை அறிஞர் அண்ணா அவர்கள் மிகவும் பாராட்டினார். அதிலிருந்து என்னிடம் அவருக்குத் தனியான அன்பு ஏற்பட்டிருந்தது.

அண்ணா அவர்களின் வேலைக்காரி என்ற திரைப்படம் வெளிவந்து தமிழகத்தில் ஒரு புதிய புரட்சியைச் செய்தது. அதன் நூறாவது நாள் விழா கோவை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. ஜூப்பிடர் பிக்சர்ஸ் சோமு அவர்களும் மொகைதீன் அவர்களும் மேற்படி நூறாவது நாள் விழாவிற்கு யாரைக் கூப்பிடலாம் என்று அண்ணாவிடம் கேட்டார்களாம்.

அண்ணா அவர்கள் விழாவிற்கு நாமக்கல் கவிஞர் தலைமை வகிக்கட்டும். சின்ன அண்ணாமலை பாராட்டிப் பேசட்டும் என்று சொன்னாராம். அதன்படி நானும் நாமக்கல் கவிஞர்.அவர்களும் விழாவிற்கு கோவை சென்றோம்.

அப்பொழுதெல்லாம் அண்ணா அவர்களை காங்கிரஸ் காரர்களாகிய நாங்கள் மிகச் சாதாரணமாக நினைத்து, துச்சமாகப் பேசுவோம்.

ஆனால் அதைப் பற்றி எல்லாம் அவர் கவலைப்பட்டுக்கொள்ளுவதில்லை. கோபப்படுவதுமில்லை. அன்று வேலைக்காரி விழாவில் நான் பேசும்போது, “நான் அண்ணாமலை-அவர் அண்ணாதுரை.

நானோ மலை அவரோ துரை. மலையிலிருந்து தான் நீர் வீழ்ச்சி வருகிறது. அது துறையில்தான் தங்குகிறது. இந்தத் துறையில் ர. தவறிக் கிடக்கிறது. இதைப் போல அண்ணாவின் கொள்கைகள் தவறிக் கிடக்கின்றன. ‘திராவிடநாடு’ என்று அவர் சொல்வதெல்லாம் ஒரு நாளும் நடக்காத காரியம்.

அதற்காக அவர் செய்யும் முயற்சி, செலவிடும் நேரம் எல்லாம் வீண். அவரது சமுதாய சீர்திருத்தக் கொள்கைகளில் பல எனக்கு உடன்பாடுடையவை. ஆனால் அவரது அரசியல், அபத்தம் என்பது எனது உறுதியான கருத்து. நல்ல வேளை, இந்த வேலைக்காரி படத்தில் அவரது சமுதாய சீர்திருத்த எண்ணங்களை மட்டுமே புகுத்தி இருக்கிறார்.

அரசியல் வாடை இல்லை. நமது சமூகத்தை சீர்திருத்தச் செய்யவேண்டுமென்றால் நூறு வேலைக்காரி படம் வந்தாலும் சிரமம்தான். சட்டத்தின் மூலமே நமது சமூகத்தை சீர்திருத்த முடியும்.

ஜனநாயக யுகத்தில் சமூகப் பழக்க வழக்கங்களுக்கு மாறாகச் சட்டம் செய்தால் தேர்தலில் வெற்றி பெறுவது சிரமமே! அதனால் வேலைக்காரி போன்ற படங்கள் மக்களின் மனோநிலையைப் பக்குவப்படுத்தும் கைங்கரியத்தைச் செய்யும்.

சிறிது சிறிதாகத்தான் ஜனநாயகத்தில் சமூக சீர்திருத்தச் சட்டங்களைக் கொண்டுவர முடியும். ஆகவே அண்ணாவின் வேலைக்காரி நூறு நாள் ஓடியதை நான் வரவேற்கிறேன். அண்ணாவை மனதாரப் பாராட்டுகிறேன,” என்று பேசினேன்.

பின்னர் அண்ணா பதில் கூறும்போது சிறிதும் முகம் சுளிக்காமல், சின்ன அண்ணாமலை பல தியாகங்கள் செய்தவர். புரட்சி செய்து சிறைக் கதவுகளை மக்கள் உடைக்க விடுதலையானவர்.

தமிழ் வளர்க்கத் தமிழ்ப்பண்ணை நடத்துகிறார். அவரது கருத்துக்க்ளை அலட்சியப்படுத்திவிட முடியாது.

அவர் நகைச்சுவையாகவே பேசிவிடுவதால் அவர் எங்களைத் தாக்கினாலும் நாங்கள் சிரித்து மகிழ்வோம்” என்று இந்த விதமாக என்னைப் பாராட்டிப் பேசினார்.

அரசியல் மேடையில் எவ்வளவோ காரசாரமாக அண்ணாவை நான் தாக்கிப் பேசியிருக்கிறேன். ஆயினும் அண்ணா நேரில் சந்திக்கும்போது அதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டார். கோபப்படமாட்டார். அதற்கு மாறாக எங்கு என்னைச் சந்தித்தாலும் மகிழ்ச்சி பொங்கப் பேசுவார்.

ஒருமுறை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற பம்மல் சம்பந்த முதலியார் விழாவில் அண்ணா அவர்கள் தலைமையில் நான் பேச வேண்டி வந்தது. அப்பொழுது அண்ணா அவர்கள், “எனது அன்பிற்குரிய நண்பரும், மக்களை மகிழ்விப்பதற்காகவே சொற்பொழிவாற்றுபவருமான திரு சின்னஅண்ணாமலை இப்பொழுது பேசுவார்” என்று அறிவித்தார்.

இந்த மாதிரி, மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும் தன் வயப்படுத்தக் கூடிய ஆற்றல் அண்ணா அவர்களுக்கு இருந்தது. யாரிடம் திறமை இருந்தாலும் அதை அனுபவிக்கும் அறிவு அவருக்கு இருந்தது.

வேலைக்காரி நூறாவது நாள் விழாவில், அண்ணா அவர்கள் பேசும் பொழுது, “நாமக்கல் கவிஞரின் ஆற்றலை நாடறியச் செய்தவர், என் நானறியச் செய்தவர் சின்ன அண்ணாமலை. எனது ‘வேலைக்காரி’ நாடகம் சிறப்பான திரைப்படமாக உருவெடுத்து நூறு நாள் ஒடியிருக்கிறது. அதற்காக நான் அகந்தை அடையவில்லை. என்னைவிட மிகச்சிறந்த கதை எழுதக்கூடியவர் நாமக்கல் கவிஞர்.

அவர் எழுதிய “மலைக்கள்ளன்” என்ற நாவலைப் படித்து நான் பிரமிப்படைந்தேன். ஆங்கிலத்தில் உள்ளதுபோல் தமிழில் அழகாக நாவல் எழுத முடியுமா? என்று பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வேன். “மலைக்கள்ளனை” ஒரு முறை படித்துப் பாருங்கள் என்று

இந்த மலைக்கள்ளன் நாவல் கவிஞரால் எழுதப்பட்டு பல ஆண்டுகளாக, கேட்பாராற்றுக் கையெழுத்துப் பிரதியாகக் கிடந்திருக்கிறது.

கவிஞரின் ஆற்றலை அறிந்த சின்ன அண்ணாமலை, இந்த அரிய கருவூலத்தைத்தேடி எடுத்து.கண்கவரும் அழகிய நூலாகத் தமிழ்ப்பண்ணை மூலம் வெளியிட்டிருக்கிறார்.

வேலைக்காரியை விடப் பலமடங்கு சிறப்பான கதை மலைக்கள்ளன். அதை யாராவது நல்ல முறையில் திரைப்படமாக்கினால் நிச்சயம். தமிழ் திரைப்படத் துறைக்கு ஒரு வெற்றிகரமான தமிழ்ப்படம் கிடைக்கும்.

ஆற்றல் மிக்கவர் நாமக்கல் கவிஞர். அவரது ஆற்றலை உலகறியச் செய்தவர் சின்ன அண்ணாமலை, ஆகவேதான் இவ்விருவரையும் இந்த விழாவிற்கு அழைக்கச் சொன்னேன்” என்று அண்ணா அவர்கள் அன்று மிக அருமையாகப் பேசினார்கள்.

சொன்னால் நம்பமாட்டீர்கள், அன்று மாலையே நாராயணன் கம்பெனி திரு நாராயண அய்யங்கார் அவர்கள் என்னைப் பட்சிராஜாஸ்டுடியோவிற்குக் கூட்டிக்கொண்டு போய் ஸ்ரீராமலு நாயுடு அவர்களிடம் “மலைக்கள்ளன்” கதையைச் சொல்லச் சொன்னார்கள். சொன்னேன். கதை பிடித்தது. படமாக எடுத்தார்கள்.

திரு எம்.ஜி.ஆர். பானுமதி நடித்தார்கள். படம் பிரமாதமான வெற்றியடைந்தது.

எம்.ஜி.ஆருக்கும் சினிமாத் துறையில் அப்படத்தின் மூலம் புதிய திருப்பம் ஏற்பட்டது. மலைக்கள்ளன், தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம், இந்தி, மற்றும் பல மொழிகளிலும் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அத்தனையும் வெற்றிதான்!

மலைக்கள்ளன் திரைப்படமாவதற்குக் காரணமாக இருத்த அண்ணா அவர்களை, நானும் நாமக்கல் கவிஞரும் சந்தித்து அவருக்குப் பொன்னாடை போர்த்தி, மாலை மரியாதை செய்து மகிழ்ந்து எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம்.