சொன்னால் நம்பமாட்டீர்கள்/கல்கி தந்த கார்

விக்கிமூலம் இலிருந்து
கல்கி தந்த கார்

கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சென்னையில் அடையாறு பங்களாவில் வசித்து வந்தார். நான் தினமும் மாலை 4 மணிக்கு அவரைப் பார்க்கப் போவேன். இருவரும் பல விஷயங்களைப் பற்றிப் பேசுவோம். பின்னர் விடை பெற்றுக்கொண்டு நான் வீட்டிற்கு செல்வது வழக்கம். சில சமயம் இரவு 8 மணி கூட ஆகும்.

ஒரு நாள் இரவு 10 மணி ஆகிவிட்டது. கல்கியிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன். மாடியிலிருந்தபடியே அவர் நான் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தார். கேட்அருகில் நான் சென்றதும், என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, “கார் எங்கே?” என்று கேட்டார்.

“காரா? கார் ஏது” என்றேன்.

“சரி இங்கே வாங்கோ,” என்றார். மீண்டும் மாடிக்குப் போனேன்.

“தினமும் மாம்பலத்திலிருந்து எப்படி வருகிறீர்கள்?” என்றார்.

“பஸ் மூலம்தான். லஸ் வந்து பஸ் மாறி அடையாறு வருவேன்” என்றேன்.

“ஓகோ அப்படியா?” என்று கேட்டுவிட்டுத் தன் மைத்துனனைக் கூப்பிட்டு என்னைக் காரில் வீட்டுக்குக் கொண்டுபோய் விடும்படி சொன்னார். மறுநாள் வழக்கம் போல் நான் கல்கி அவர்கள் வீட்டுக்குப் போனேன். போனதும் கல்கி என்னைப் பார்த்து, “உங்களுக்கு கார் ஒட்டத் தெரியுமா?” என்றார்.

“ஓட்டுவேன்” என்றேன்.

“சரி கீழே வாங்கோ” என்று என்னைக் கூட்டிக் கொண்டு கீழே வந்தார். அங்கு ஒரு போர்டு ஆங்கிலியா கார் நின்று கொண்டிருந்தது.

“இதை ஒட்டுங்கள் பார்க்கலாம்,” என்று கூறி அவரும் முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டார். நான்காரை ஒட்டினேன். பீச்ரோடு வழியாக கார் சென்றது.

“பேஷ் பேஷ் பிரமாதமாக ஒட்டுகிறீர்களே” என்று கூறி ராயப்பேட்டை கபாலி பெட்ரோல் பங்கில் நிறையப் பெட்ரோல் போடச் சொல்லி அவர் கணக்கில் கையெழுத்துப் போட்டார். பிறகு அவர் வீட்டுக்குப் போனோம். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு நான் விடைபெற்றேன்.

சொன்னால் நம்பமாட்டீர்கள். கல்கி என் கையில் மேற்படி கார் சாவியையும், ஆர்.சி. புத்தகத்தையும் கொடுத்து “இந்தக் காரை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், உங்களுக்குத்தான் வாங்கியிருக்கிறது” என்றார்.

எனக்கு எதுக்குக் கார், மேலும் இதற்குக் கொடுக்கக்கூடிய பணமும் என்னிடம் இல்லையே, என்றேன்.

கல்கி சிரித்துக் கொண்டே, பணத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். காருக்குக் கொடுக்க வேண்டிய பணம் பூராவும் கொடுத்தாயிற்று. நீங்கள் தினமும் என்னைப் பார்க்க வரவேண்டியிருக்கிறது. எனக்கும் அன்றாடம் உங்களைப் பார்க்காவிட்டால் என்னவோ போலிருக்கிறது.

“என் ஆப்த நண்பராகிய நீங்கள் பஸ்ஸிலும் நடையிலும் என்னைப் பார்க்க வருவதை நான் தெரிந்துகொண்டும் கம்மா இருந்தால் அந்த நட்பு உண்மை நட்பு ஆகாது. ஆகவேதான் இந்த ஏற்பாடு. நம் நட்பின் அடையாளமாக இந்தக் கார் உங்களையும் என்னையும் தினமும் சேர்த்து வைக்கும்,” என்று சொன்னார்.

சொல்லும்போதே அவர் கண்களில் நீர் பனித்தது. என் கண்களோ குளமாயின.

கல்கியின் நட்பு எனக்கு அவரது கடைசிக்காலம் வரையில் சிரஞ்சீவியாக இருந்து வந்தது. என்றைக்கும் என்னிடம் ஒரே மாதிரியாக ‘தாயன்பு’ காட்டி வந்த பேரறிவாளர் அவர்.

என் தாய் இறந்தபோது கூட எனக்கு அழுகை பொங்கி வரவில்லை. ஆனால் காந்திஜி இறந்த போதும் கல்கி இறந்தபோதும்தான் நான் விக்கி, விக்கி அழுதேன். ஏனெனில் காந்திஜிதான் என்னைத் தேசபக்தனாக்கினார், கல்கி என்னை உயர்த்தி உலகுக்குக் காட்டினார்.