சொன்னால் நம்பமாட்டீர்கள்/ஆயிரம் ரூபாய் பரிசு

விக்கிமூலம் இலிருந்து
ஆயிரம் ரூபாய் பரிசு

தமிழிசை இயக்கம் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். தேவகோட்டையில் ஒரு கல்யாண வீட்டில் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

வெகு நேரம் அரியக்குடி தெலுங்கிலே பாடிக் கொண்டிருந்தார். நான் தமிழிசை இயக்கத்தின் காரியதரிசி. ஆகவே அரியக் குடியிடம், “தயவு செய்து தமிழில் பாடவும்,” என்று சீட்டு எழுதிக் கொடுத்தேன்.

அரியக்குடி சீட்டை வாங்கிப் பார்த்து விட்டுப் புன்முறுவல் பூத்தார். பாடுவதாகச் சைகை செய்தார். நான் வெற்றிப் பெருமிதத்துடன் அவர் பாடப்போகும் தமிழ்ப்பாட்டை எதிர்பார்த்திருந்தேன். பாட ஆரம்பித்தார் அரியக்குடி அதுவும் என்னைப் பார்த்தே பாட ஆரம்பித்தார்.

“யாரடா குரங்கு நீ-இங்கே வந்த
யாரடா குரங்கு நீ”

அருணாசலக் கவிராயர் கீர்த்தனைதான். நான் அரியக்குடியை முறைத்துப் பார்த்தேன். இதுதமிழ் பாட்டுதானே? என்று சொல்லிவிட்டு அதைப் பாடி முடித்தார்.

அந்தப் பாட்டு முடிந்ததும் என்னை அருகில் வரும்படி அரியக்குடி கூப்பிட்டார். சென்றேன். கோபப்படாதீர்கள் சும்மா தமாஷ் செய்தேன். இனி பூராவும் தமிழ்ப் பாட்டுத்தான் என்று சொல்லி சுமார் இரண்டு மணி நேரம் தமிழிசையை முழக்கிச் சபையை மெய்மறக்கச் செய்தார்.

கச்சேரி முடிந்ததும் நான் அவர் அருகில் சென்று நன்றி சொன்னேன். அரியக்குடி என்னைப் பார்த்து, “இசைக்கு மொழி அவசியமா?” என்று கேட்டார் “அவசியம்தான்,” என்றேன்.

“எதனால்?” என்றார்.

நம் முன்னோர்கள் இசையில் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களே, என்றேன். “எப்படி” என்றார். இசைதான் முக்கியம் என்றால் நம் முன்னோர்கள் வாய்ப்பாட்டுக்காரர்களை நடுவில் வைப்பார்களா? ஒரு சாதாரண வித்வான் பாடினாலும் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, பாலக்காடு மணி போன்ற பெரியவர்கள் பக்க வாத்திய மாகத்தானே உட்காருகிறார்கள்? இசைதான் முக்கியம்; மொழி முக்கியம் இல்லை என்றால் ராஜமாணிக்கம் பிள்ளையைத் தானே நடுவில் வைக்க வேண்டும். இதிலிருந்தே மொழி முக்கியமென்று தெரியவில்லையா என்றேன்.

அரியக்குடி அன்றிலிருந்து தமிழ்ப்பாட்டு நிறையப் பாட ஆரம்பித்தார். இந்தச் சம்பவத்தை ஒரு சபையில் ராஜா சர் அண்ணாலை செட்டியார் அவர்களிடம் அரியக்குடியே சொன்னார். உடனே ராஜா சர் அகமகிழ்ந்து அப்போதே எனக்கு ஆயிரம் ரூபாய் பரிசளித்தார்.