சொன்னால் நம்பமாட்டீர்கள்/தமிழிசை மகாநாடு

விக்கிமூலம் இலிருந்து
தமிழிசை மகாநாடு

தமிழிசை இயக்கம் தோன்றிய நேரம் சிதம்பரத்தில் முதல் தமிழிசை மாநாடு நடைபெற்று பத்திரிகைகளில் பரபரப்பாகச் செய்திகள் வந்து கொண்டிருந்தன. இயற்கையாகவே தமிழ் உணர்ச்சி அதிகமுள்ள எனக்கு, அச்செய்திகள் எனது உள்ளத்தில் ஒரு பெரிய கிளர்ச்சியை உண்டாக்கிற்று.

சிதம்பரத்தில் நடந்தது போல ஒரு பெரிய மாநாடு சொந்த ஊரான தேவகோட்டையில் நடத்த வேண்டுமென்ற ஆவல் உண்டாயிற்று இரவு பகல் அதே கனவு கண்டவர்களிடமெல்லாம் தமிழ் இசை மாநாட்டைப் பற்றியே பேச்சு. இதில் எனக்கு மிகுந்த உற்சாக மூட்டியவர் என் அருமை நண்பர் திரு டி.ஆர். அருணாசலம் அவர்கள்.

ஆகவே அவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். இருவரும் கையிலிருந்து செலவு செய்து சில நோட்டீஸ்கள் அச்சடித்து தமிழிசை மாநாடு நடைபெறப் போவதாக விளம்பரம் செய்தோம். ஊரில் பரவலாகக் கொஞ்சம் ஆதரவு கிடைக்கும் போலிருந்தது. சங்கீத வித்வான்கள் அனைவருக்கும் கடிதம் போட்டோம்.

இலக்கியப் புலவர்களுக்கும் அழைப்புகள் அனுப்பினோம். அனைவரின் பதில்களும் உற்சாக மூட்டக் கூடிய வகைகளாக இருந்தன. அடுத்தது மாநாட்டிற்காக நிதி வசூல் தொடங்கினோம். வீடு வீடாகச் செல்லும்போதுதான் தமிழிசையைப் பற்றி பலருக்கு புரியவில்லை என்று தெரிந்தது. இத்தனைக்கும் அந்த ஊரில் மாதம் தவறாமல் நடைபெறும் பல கல்யாணங்களில் சங்கீத கச்சேரிகள் நடைபெற்றுகொண்டிருந்தன.

“எதுக்குத் தமிழில் பாடவேண்டும்?” “இதற்கு ஏன் மாநாடு?” “தமிழில் பாட முடியுமா?” “தமிழில் பாட பாட்டுக்கு எங்கே போவது?” “இசையில் ஏன் பாஷை விவகாரம்?” என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டுப் பலர் எங்களை அதைரியப்படுத்தினார்கள். ஆனால் எங்களுடைய தமிழுணர்ச்சி அதை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்க விடவில்லை.

திட்டங்கள் பிரமாண்டமானதாகப் போடப்பட்டன. ஆனால் நிதி வசூல் எப்படி செய்வதென்று தெரியவில்லை. பல பேர் மாநாட்டை கைவிடும்படி உபதேசம் வேறு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். என்ன வந்தாலும் சரி, எடுத்தகாரியத்தை முடிக்காமல் விடுவதில்லை என்று உறுதி பூண்டோம். சுமார் பத்தாயிரம் ரூபாய் வசூலானால் மாநாடு சிறப்பாக நடைபெறும் என்று திட்டம் போடப்பட்டது.

ரூபாய் பத்தாயிரத்துக்கு எங்கே போவது? இந்நிலையில் மாநாட்டுக் காரியங்களில் தானாக வந்து உற்சாகமாகப் பங்கெடுத்துக் கொண்டு அல்லும் பகலும் எங்களுடன் பணிபுரிந்து வந்த அன்பர் ஒருவர், இராஜா, சர். அண்ணாமலை செட்டியார் அவர்களிடம் சென்று முயற்சிக்கலாமே என்றார்.

நானும் திரு டி.ஆர்.அருணாசலம் அவர்களும் தீவிர காங்கிரஸ்காரர்கள். பலமுறை ராஜாசர் அண்ணாமலை செட்டியார் அவர்களை மேடையில் தாக்கி பேசி இருக்கிறோம். ஆகவே காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள் ராஜா சர் அவர்கள் வாசற்படி ஏறுவதே தவறு என்பதாக நினைப்பவர்கள். அப்படியிருக்க, அவரிடம் எப்படிப் போவது? ஆயினும் அந்த அன்பர் விடவில்லை.

இது காங்கிரஸ் விஷயம் இல்லையே; தமிழ் சம்பந்தப்பட்டதுதானே. தமிழுக்காகச் செல்ல்லாமே என்றொல்லாம் நியாயங்களை எடுத்துரைத்து, எங்களை ராஜாசர் அண்ணாமலை செட்டியார் அவர்களிடம் கூட்டிச் சென்றார்.

ராஜா சர் அவர்கள் எங்கள் இருவரையும் வெகு அன்பாக வரவேற்று, எங்கள் தோள்மேல் கைபோட்டு மாநாட்டைப் பற்றிய விவரமெல்லாம் கேட்டார். நாங்கள் நிதி வேண்டுமென்று கேட்க வில்லை. ஏனோ கேட்பதற்கு எங்கள் மனம் துணியவில்லை.

காபி சாப்பிட்டதும் நாங்கள் போய் வருகிறோம் என்று கிளம்பினோம். ராஜா சர் எங்களிடம் ஒரு கவரைக் கொடுத்து “இதில் எனது அன்பளிப்பு இருக்கிறது மாநாட்டைச் சிறப்பாக நடத்துங்கள்” என்று சொன்னார்கள். விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தோம்.

கவரைப் பிரித்துப் பார்த்தோம். அப்படியே திகைத்துக் கல்லாய் சமைந்து நின்றோம்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள் அதில் இருந்தது ரூபாய் பத்தாயிரம்.