சொன்னால் நம்பமாட்டீர்கள்/காந்தி தரிசனம்
காரைக்குடியில் எனது சிறியதாயார் உமையாள் ஆச்சி அவர்கள் வீட்டில் தங்கிப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு வயது 10 இருக்கலாம்.
எனது சிறிய தாயார் அவர்கள், தேசபக்தர் திரு. சா. கணேசன் அவர்களின் சிறிய தகப்பனார் அவர்களின் மனைவி ஆவார். அதனால் அவர்கள் எல்லோரும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள்.
அந்த வீடு எப்போதும் ‘ஜே ஜே’ என்றிருக்கும். தேசத் தொண்டர்கள் வருவதும் போவதும் திரு. சா. கணேசனைக் கண்டு பேசுவதுமாக இருப்பார்கள். எப்போதும் என் காதில் ‘காங்கிரஸ்’ என்றும் காந்திஜி என்றும் கேட்டுக்கொண்டேயிருக்கும். என் கண்கள் தேசபக்தர்களையும், கொடியையும் கதரையும் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டேயிருக்கும்.
என்னையறியாமலே நான் ஒரு காந்தி பக்தனாகவும், காங்கிரஸ் தொண்டனாகவும் மாறிக்கொண்டே வந்தேன். இந்த நிலையில் மகாத்மா காந்தி காரைக்குடிக்கு வருவதாக ஒரே பரபரப்பாக இருந்தது.
என் சிறிய தாயார் வீட்டின் முன் ஒரு திறந்த (டாப் இல்லாத) கார் ஒன்று அலங்காரம் செய்யப்பட்டு நின்றது. அதில்தான் மகாத்மாவை வைத்து ஊர்வலம் நடத்தப்போவதாகச் சொன்னார்கள்.
எனக்கு ஒரே துடிப்பு, காந்திஜியை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற ஆர்வம். என் சிறிய தாயார் பல முறை சாப்பிடக்கூப்பிட்டும் நான் போகவில்லை. வைத்த கண் வாங்காமல் காரையே பார்த்துக் கொண்டு நின்றேன். ‘ஜே’ கோஷம் காதைப் பிளந்தது; எங்கும் பரபரப்பு.
காந்தி மகாத்மா வந்துவிட்டார். காரிலும் ஏறி உட்கார்ந்து விட்டார். எனக்கோ ஒரே பதட்டம். நெருக்கியடித்து காரின் பின்பக்கம் சென்று விட்டேன். காந்திஜியின் முகம் தெரியவில்லை. முதுகு மட்டும் தெரிந்தது. சடக்கென்று காரின் பின்புறமுள்ள ‘காரியரில்’ தாவி ஏறி காந்திஜியின் முதுகைத் தொட்டேன். அவர் திரும்பிப்பார்த்து சிரித்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் நான் ஏதோ பெரிய குற்றம் செய்து விட்டதுபோல் நினைத்து என்மீது பாய்ந்து என்னைப் பிடித்துத் தூக்கினார்கள். காந்தியடிகள் , அவர்களை அடக்கி விட்டு என்னை தன் அருகில் வரும்படி அழைத்தார். நான் பயந்து கொண்டே அவரிடம் போனேன். அவர் ஒரு மோகனச் சிரிப்புச் சிரித்துவிட்டு என்னிடம் ஒரு ஆப்பிளைக் கொடுத்து கன்னத்தில் செல்லமாகத் தட்டினார்.
பிறகு மாலை போட வந்த கூட்டம் என்னை நெருக்கிப் பின்னுக்குத்தள்ளிவிட்டது. ஊர்வலம் புறப்பட்டுப் போயிற்று நானும் ‘காந்திஜிக்கு ஜே ஜே’ என்று கத்திக்கொண்டு பின்னே சென்றேன்.
ஊர்வலத்தில் போகும்போதே அந்த காந்தி ஆப்பிளை சுவைத்துச் சுவைத்துச் சாப்பிட்டேன். அந்த ஆப்பிள் என் ரத்தத்துடன் கலந்ததோ இல்லையோ ‘காந்தி நாமம்’ என் ரத்தத்துடன் அன்றே கலந்து விட்டது.
அன்றிலிருந்து இன்றுவரை நான் காந்தியடிகளைப் பின்பற்றி வருகிறேன். உண்ணும்போதும், உறங்கும்போதும்கூட காந்திஜியின் நினைப்பு என்னை விட்டு அகலுவதில்லை.