சொன்னால் நம்பமாட்டீர்கள்/பகத்சிங் பாட்ஜ்

விக்கிமூலம் இலிருந்து
பகத்சிங் பாட்ஜ்

‘காந்தி’ என்றும் ‘காங்கிரஸ்’ என்றும் சொல்லிக்கொண்டு படிக்காமல் திரு. சா. கணேசன் அவர்களையே சுற்றித் திரிந்த என்னை என் தாய் மாமன் தம்முடன் மலேயாவிற்குக் கூட்டிச் சென்றார்கள். அவர்களுக்கு மலேயாவில் டெலுக்கான்சன் என்ற ஊரில் வட்டிக்கடை இருந்தது. அந்த ஊரிலிருந்த ஆங்கிலோ சைனீஸ் ஸ்கூலில் என்னைப் படிக்க வைத்தார்கள். நான்கு ஆண்டுகள் அந்தப் பள்ளியில் படித்தேன்

அந்தப் பள்ளிக்கூடத்தில் நிறைய சீன மாணவர்கள் படித்தார்கள். அச்சமயம் ஜப்பான் நாடு சீனாமீது அக்கிரமமாகப் படையெடுத்தது. ஜப்பானை எதிர்த்து சீன மாணவர்கள் எல்லோரும் ஊர்வலம் நடத்தினார்கள்.

என் உள்ளத்தில் அமுங்கிக் கிடந்த கிளர்ச்சி எண்ணம் வீரிட்டெழுந்தது. நானும் ஊர்வலத்தில் கலந்து கொண்டேன். ஜப்பான் சாமான்களையெல்லாம் தெருவில் போட்டுக் கொளுத்தினோம். கடைகளுக்குள் புகுந்து ஜப்பான் துணி மணிகளை எல்லாம் எடுத்துத் தெருவில் எறிந்தோம்.

போலீஸ் எங்களை அடித்து வளைத்துப் பிடித்தது. கூட்டத்தில் நானும் போலீஸ் மத்தியில் அகப்பட்டுக்கொண்டேன்.

மலேயாவில் அப்போது நிறைய பஞ்சாபி சீக்கியர்கள் போலீஸ்காரர்களாக இருந்தார்கள், அதிகாரிகள் மட்டும் ஆங்கிலேயர்கள்தான். ஒரு சீக்கியப் போலீஸ்காரர், சீன மாணவர்களுக்கு மத்தியில் ஒரு இந்திய மாணவனான நான் நிற்பதைக் கவனித்து விட்டார்.

மாணவர்களை போலீஸ் வேனில் ஏற்றினார்கள். என்னைக் கவனித்த சீக்கிய போலீஸ்காரர் ஒவ்வொரு மாணவராக போலீஸ் வேனில் ஏற்றிக் கொண்டிருந்தார் நான் வேன் அருகில் வந்ததும் அதிகாரிக்குத் தெரியாமல் சடக்கென்று என்னை வெளியே இழுத்து வேறு பக்கம் தள்ளி விட்டார்.

நான் வெகு தூரம் போய் விழுந்தேன். அதனால் நான் போலீசாரிடமிருந்து தப்பி விட்டேன். ஆனால் என் தாய் மாமனிடம் தப்ப முடியவில்லை. போலீஸ் அடியைவிடபலமான அடி அன்று கிடைத்தது.

சொன்னால் நம்பமாட்டீர்கள், அன்று மாலை மேற்படி சீக்கியபோலீஸ்காரர் என்னைத் தேடி வந்தார். எனக்கு ஒரே திகிலாக இருந்தது.

அவர் என்னைக் கூட்டிக் கொண்டு போய் ஒரு டீ கடையில் டீ வாங்கிக் கொடுத்து ‘பகத்சிங்’ படம் போட்ட பாட்ஜ் ஒன்றை என் சட்டையில் மாட்டி விட்டு பகத்சிங்கின் வீரம் தீரம் தியாகம் இவைகளைப் பற்றி எனக்குச் சொல்லி நானும் பகத்சிங் போல இந்திய நாட்டின் விடுதலைக்குப் பாடுபட வேண்டும் என்று கூறி விடைபெற்றுக்கொண்டு சென்றார்.

அன்றிலிருந்து பகத்சிங் போல புரட்சி வீரனாக வேண்டுமென்ற எண்ணம் மனதில் புயலடிக்க ஆரம்பித்தது. சிறு வயதில் நெஞ்சில் ஏற்பட்ட அந்த வேகம்தான் 1942-ல் பெரும்புயலாக மாறி தேவகோட்டை திருவாடானை பகுதிகளில் புரட்சியாக வெடித்தது.