சொன்னால் நம்பமாட்டீர்கள்/பாட்டியின் சாபம்

விக்கிமூலம் இலிருந்து
பாட்டியின் சாபம்

நான்கு ஆண்டுகள் டெலுக்கான்சனில் (மலேசியா) படித்துவிட்டு பிறகு, என் சொந்த ஊருக்கு-சிறுவயலுக்கு-வந்து சேர்ந்தேன். என்னை தேவகோட்டைக்கு சுவீகாரம் விடுவதென்று என் பெற்றோரால் முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவு என் பாட்டியாரை (என் தந்தையைப் பெற்றவர்) பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவர் என் தந்தையைப் பார்த்து ஆவேசமாக டேய் நாச்சியப்பா, நம்ம குடும்பத்திலிருந்து நான் கண்போல காத்து வளர்த்த பிள்ளையையா சுவீகாரம் விடுறே, என் பேச்சைக் கேளுடா பிள்ளையை விடாதே. இல்லே மீறிவிட்டே உன் குடும்பத்துக்கு ஆண் வாரிசே இல்லாமல் போகும் என்று சாபம் கொடுத்துவிட்டு என்னை மட்டும் வாழ்த்தி நீ நல்லா இருப்பே; போயிட்டு வா என்று விக்கி விக்கி அழுது விடை கொடுத்தார்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். நான் பிறந்த வீட்டில் அதன் பிறகு ஆண் வாரிசு உண்டாகவில்லை,

பாட்டி சாபம் பலித்துத்தான் விட்டது.

ஆம் என் மூத்த சகோதரர் சுப்பையாசெட்டியார் அவர்கள் காலமாகிவிட்டார்கள். அவர்களுக்கு ஒருபுதல்விதான் உண்டு. திருமணம் செய்து கொடுத்தாகிவிட்டது. என் சகோதரருக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை. என் அண்ணியாரும் காலஞ் சென்று விட்டார்கள்.

என் இரண்டாவது சகோதரர் திரு. அழகப்பன் திருமணமாகிச் சில நாட்களில் இறந்துபோனார். அவர் இறந்து சில நாட்களில் அவரது மனைவியும் இறந்து போனாள். என் தம்பி இராமநாதனுக்கு ஒரு புதல்வி பிறந்தாள். அத்துடன் அவனும் இறந்து போனான்.

பாட்டியின் சாபம் பலித்ததென்று சொல்லாமல் இதற்கு வேறு என்ன காரணம் சொல்லமுடியும்?

நான்கு சகோதரர் பிறந்த வீட்டில் நான் சுவீகாரம் சென்றேன். மற்ற மூன்று சகோதரர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். அந்த வீட்டிற்கு ஆண் வாரிசு வேண்டுமென்று எனது பெரிய சகோதரர் திரு. சுப்பையா செட்டியார் அவர்களுக்கு மட்டும் இப்போது ஒரு பையனை சுவீகாரம் செய்திருக்கிறது.