சொன்னால் நம்பமாட்டீர்கள்/தமிழ்ப்பண்ணை

விக்கிமூலம் இலிருந்து
தமிழ்ப்பண்ணை

சென்னைக்கு வந்துவிட்டேன். ‘என்ன செய்வது’ என்று திகைத்திருக்கையில் திரு. ஏ. கே.செட்டியார் அவர்கள் என்னைத் தன் வீட்டில் கூட்டிக் கொண்டு போய் வைத்துக் கொண்டார்.

திரு. ஏ. கே. செட்டியார் அவர்கள் ‘உலகம் சுற்றும் தமிழன்’ என்று புகழ் பெற்றவர், பிரயாணக்கட்டுரைகளை மிகவும் சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர். ‘குமரி மலர்’ என்ற அற்புதமான மாத இதழ் நடத்திக் கொண்டிருந்தார்.

அவருடன் கூடவே அவர் செல்லுமிடமெல்லாம் கூட்டிச் சென்று என்னை அறிமுகம் செய்து வைப்பார். அடிக்கடி சக்தி காரியாலயத்திற்குச் செல்வோம். சக்தி வை. கோவிந்தன் அவர்கள் எனக்கு ஏற்கனவே பழக்கமானவர். தமிழ்ப் புத்தகங்களை அழகிய முறையில் போடுவதற்கு முன்னோடி அவர்தான். ஏராளமான தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டவர். திரு. ஏ. கே. செட்டியார். சக்தி வை. கோவிந்தன் இவர்களுடன் எப்பொழுதும் கூட இருக்கும் நண்பர் சத்ருக்கனன் அச்சுத் தொழிலில் பெரிய திறமைசாலி. இந்த மூவரும் இணை பிரியாத நண்பர்கள், இவர்கள் மூவரும் ஏனோ என்னிடம் மிகுந்த பாசம் காட்டினார்கள். தங்களின் ‘செல்லப்பிள்ளை’யாக என்னைக் கட்டிக் காத்தார்கள்.

இவர்கள் அடிக்கடி போகும் இடம் தியாகராய நகரில் உஸ்மான் ரோடில் இருந்த திரு. வெ. சாமிநாத சர்மா அவர்களின் இல்லத்திற்குத்தான்! இவர்களுடன் நானும் செல்வேன். ஒரு நாள் நாங்கள் பஸ்ஸில் திரு. சாமிநாதசர்மா அவர்களின் இல்லத்திற்குப் போகும்போது தியாகராய நகர் பனகல்பார்க் நாகேஸ்வரராவ் தெருவில் ஒரு சிறு அழகிய கட்டிடம் பூட்டிக் கிடந்தது. அதைப் பார்த்த மூவரும் என்னைக் கூட்டிக் கொண்டு பஸ்ஸை விட்டு இறங்கினார்கள்.

அந்தக் கட்டிடம் காலியாக இருப்பதை விசாரித்து தெரிந்துகொண்டு, இதில் நம் அண்ணாமலைக்கு ‘தமிழ்ப் பண்ணை புத்தக நிலையம்’ வைத்துக் கொடுக்கலாம் என்று அவர்களுக்குள் பேசி முடிவு செய்தார்கள். என்னிடம் விஷயத்தைச் சொன்னபோது, நான், “என்னிடம் போதியபணம் இல்லையே, என்ன செய்வது?” என்று கையைப் பிசைந்தேன்.

அவர்கள் மூவரும் சிரித்துவிட்டு “நாங்கள் உனக்கு வேண்டிய உதவி செய்கிறோம் தைரியமாகத் தொழிலை ஆரம்பி” என்றார்கள்.

இடத்தைப் பிடித்துக் கொடுத்தார்கள். பல புத்தகக் கம்பெனிகளில் புத்தகங்களை ஏராளமாக வாங்கிக் கொடுத்தார்கள். புத்தகம் போட பேப்பர் தந்தார்கள். அடடா அவர்கள் செய்த உதவியை நினைத்தால் இப்பொழுதுகூட என் மெய்சிலிர்க்கிறது.

‘தமிழ்ப்பண்ணை'யை ராஜாஜி துவக்கி வைத்தார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை விளக்கேற்றி வைத்தார். சக்தி வை. கோவிந்தன் புதுக்கணக்கு எழுதினார்.

எழுத்தாளர்கள் அனைவரும் விழாவிற்கு வந்தனர்.

தமிழ்ப்பண்ணையின் முதல் புத்தகமான ‘தமிழன் இதயம்’ என்ற நூலைப் பார்த்து அனைவரும் பிரமிப்படைந்தனர். அப்புத்தகத்தை மிகஅழகாகப் போட்டுக் கொடுத்தவர் சக்தி வை. கோவிந்தன் அவர்கள்.

அதன்மேல் அட்டையை கண் கவரும் வண்ணம் அச்சடித்துக் கொடுத்தவர் திரு. சத்ருக்கனன் அவர்கள்.

தமிழ்ப்பண்ணை எழுத்தாளர்களுக்கும், தேச பக்தர்களுக்கும் நிழல் கொடுத்து வந்தது. தமிழ்ப்பண்ணையின் மூலம் அரிய பெரிய காரியங்களைச் சாதிக்க முடிந்தது.

‘நாமக்கல் கவிஞருக்குப் பண முடிப்பு அளிக்க முடிந்தது. அதைப் பார்த்த திரு. சி. என். அண்ணாதுரை அவர்கள் என்னை நேரில் வந்து பாராட்டி விட்டு, தானும் பாரதிதாசனுக்கு அப்படி ஒரு நிதி அளிக்க வேண்டும். அதற்கும் கூடவே இருந்து உதவ வேண்டும்’ என்றும் கேட்டுக் கொண்டார்.

பின்னர் பலமுறை திரு. அண்ணாதுரை அவர்கள் சார்பில், திரு. என். வி. நடராஜன் என்னைப் பலமுறை வந்து சந்தித்து பாரதிதாசன் நிதி அளிப்பு விழாவைச் சிறப்பாக நடத்தினார்கள்.

ராஜாஜியின் நூல்கள், கல்கி கிருஷ்ணமூர்த்தி, வ.ரா., டி. எஸ். சொக்கலிங்கம், பொ. திருகூடசுந்தரம் பிள்ளை, நாடோடி, தி.ஜ.ர. இப்படி ஏராளமானவர்களின் நூல்களை வெளியிட்டு, பெரிய விழாக்கள் நடத்தி எழுத்தாளர்களுக்குக் கெளரவம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தியது தமிழ்ப் பண்ணையே!

ஆண்டுதோறும் பாரதிவிழா, பாரதி பாட்டுப்போட்டி, பேச்சுப் போட்டிநடத்தப்பட்டன. திரு.வி.க. மணிவிழாவை மிகச் சிறப்பாக நடத்தியது தமிழ்ப் பண்ணையே காந்தியடிகளின் ‘ஹரிஜன்’ பத்திரிகையைத் தமிழில் நடத்தியதும் தமிழ்ப் பண்ணையே!

தமிழ்ப்பண்ணைக்கு அடிக்கடி புத்தகம் வாங்க வருவார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள். அவருடன் நெருங்கிய பழக்கம் எனக்கு அப்பொழுதுதான் ஏற்பட்டது.

தமிழ்ப்பண்ணை புத்தகப் பதிப்பகத்திற்கு எல்லாத் தமிழ் எழுத்தாளர்களும் வருவார்கள். தவறாமல் வ.ரா., புதுமைப் பித்தன், தி.ஜ.ர. முதலியவர்கள் வருவார்கள். வ.ரா. சத்தம் போட்டுத்தான் பேசுவார். யாரும் அவருக்கு நிகரில்லை. புதுமைப் பித்தனோ ரொம்பக் கிண்டலாகப் பேசுவார். தி.ஜ.ர. எதுவும் பேசமாட்டார். அப்படிப் பேசினாலும் ரொம்ப மெதுவாகப் பேசுவார்.

ஒருநாள் நான் ஏதோ எழுதிக் கொண்டிருக்கும் போது வ.ரா. வந்தார். “என்னடா எழுதுகிறாய்” என்று கேட்டார். “ஒரு பிரயாணக் கட்டுரை எழுதுகிறேன்” என்றேன். “கொடு பார்ககலாம்” என்றார். கொடுத்தேன். “டேய்!” நீ பெரிய ஆளுடா, என்னமா எழுதியிருக்கிறாய்” என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தபோது தி.ஜ.ர. வந்து விட்டார். “பார்த்தியா, இதைப் பார்த்தியா” என்று தி.ஜ.ர.விடம் நான் எழுதியதைக் காட்டி வ.ரா.புகழ ஆரம்பித்தார்.

தி.ஜ.ர. அதைப் படித்துப் பார்த்து, “நன்றாகத்தான் இருக்கிறது” என்றார். “சும்மா சொல்லி விட்டுப் போகாதே. ‘சக்தி’ பத்திரிகையில் இவனிடம் கட்டுரை வாங்கிப் போடு” என்று வ.ரா. சொன்னார். எனக்கு மெய் சிலிர்த்தது. அவர் பெரிய எழுத்தாளர் மட்டுமல்ல, பெரிய மனது உடையவர், நான் எழுதிய அந்தக் கட்டுரையின் ஆரம்பம் இது தான்.

“கட்டுரையாகட்டும் கதையாகட்டும்” வேகமாகவும்

விறுவிறுப்பாகவும் இருக்க வேண்டுமென்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அதனால் இக்கட்டுரையைத்

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் ஆரம்பிக்கிறேன்”

அவர் சொற்படி பின்னர் ‘சக்தி’ பத்திரிகையில் எனது கட்டுரையை தி.ஜ.ர. நிறைய வெளியிட்டார். அதன் பின்னர் கல்கி பத்திரிகையில் எனது கதைகளும் கட்டுரைகளும் வெளி வந்தன. எனது முதல் புத்தகத்தின் பெயர் “சீனத்துச் சிங்காரி”

சொன்னால் நம்பமாட்டீர்கள் அந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதியவர் பேராசிரியர் சீநிவாசராகவன் அவர்கள் அவர் என்னை ஒரு “சிறுகதை மன்னன்” என்று நிரூபிப்பதற்கு பெரிய ஆராய்ச்சி செய்து ஒரு அருமையான கட்டுரையை முன்னுரையாக அதில் எழுதியிருக்கிறார்.