சொன்னால் நம்பமாட்டீர்கள்/திரு.ம.பொ.சி

விக்கிமூலம் இலிருந்து

திரு ம. பொ. சி

சென்னையில் நான் தமிழ்ப்பண்ணை நூல் நிலையம் ஆரம்பித்த சில மாதங்கள் கழித்து ஒரு நாள்-மதிக்கத்தக்க ஒருவர்-மெலிந்த உடல்-சிவந்த முகம்-கூரிய கண்கள் அடர்த்தியான மீசை - கதராடை அணிந்து வறுமைச் சாயல் வீச பண்ணைக்குள் நுழைந்தார்.

வந்தவர் திரு. ம. பொ. சிவஞானம் என்பதை அறிந்து அன்புடன் வரவேற்றேன். அவர் அப்போதுதான் சிறையிலிருந்து பரோலில் விடுதலை ஆகி வந்திருந்தார். 1942 புரட்சிப் போராட்டத்தில் ஈடுபட்ட அவரை ஆங்கில அரசாங்கம் மத்திய மாகாணத்திலுள்ள அமரோட்டி சிறையில் நம் தலைவர்களுடன் வைத்திருந்தது. அந்த சீதோஷ்ண நிலை திரு. ம.பொ.சி. அவர்களை மிகவும் பாதித்துக் கொடிய வயிற்று வலியை ஏற்படுத்தி விட்டது.

அவரது நோய் முற்றியது கண்டு பயந்து அவரை தஞ்சைச் சிறைக்கு மாற்றினார்கள். அச்சிறையில் அவர் அடைந்த துன்பம் பல முறை எமலோகம் எட்டிப் பார்க்க நேர்ந்தது. இனி பிழைக்க மாட்டார் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் தீர்மானித்து ம.பொ.சி. அவர்களை விடுதலை செய்தது.

அந்நிலையில்தான் அவர் தமிழ்ப்பண்ணைக்கு என்னைப் பார்க்க வந்தார். நான் ரொம்பப் பெரிய மனிதன் என்பதற்காக என்னைப் பார்க்க வரவில்லை. தமிழ் உணர்ச்சி அவரை அங்கு இழுத்து வந்தது. “தமிழ்ப் பண்ணை” வைத்து தமிழ் வளர்க்கும் ஒரு நிலையம் சென்னையில் இருப்பதைச் சிறையிலிருக்கும் போதே அவர் அறிந்திருக்கிறார்.

சிறையிலிருந்து விடுதலையாகி; சென்னைக்கு வரும் ஒவ்வொரு தேச பக்தரும் அப்போது தமிழ்ப்பண்ணைக்கு வராமல் ஊருக்குப் போவதில்லை. அதுவும் திரு. ம.பொ.சி. அவர்களுக்குத் தெரியும். ஆகவேதான் அவர் தமிழ்பண்ணைக்கு வந்தார்.

அதற்கு முன் நான் அவரைப் பார்த்ததில்லை. பிரமாதமாகக் கேள்விப்பட்டதுமில்லை. அப்போது அவர் பெயர் சென்னை நகரத்தில் அதுவும் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுந்தான் தெரிந்திருந்தது. ஆயினும் அவரைப் பார்த்ததும் என்மனதில் ஒரு பெரிய எண்ணம் உருவானது. அவரும் நானும் முதன் முதலில் விழித்துக் கொண்ட வேளை-என்னைப் பொறுத்தவரையில் ‘மிக நல்ல வேளை’ என்பது என் அபிப்பிராயம்.

திரு. ம.பொ.சி.அவர்கள் தமிழ்ப்பண்ணை மூலம் வெளிவந்த நூல்களை எல்லாம் பார்த்தார். அதன் அழகிய தோற்றம் அவரைக் கவர்ந்தது. தமிழ்ப் புத்தகத்தையும் இவ்வளவு அழகாக வெளியிட முடியுமா என்று ஆச்சரியப்பட்டுப் பரவசமடைந்தார்.

பின்னர், தான் கொண்டு வந்திருந்த ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். திரு.ம.பொ.சி.

அது ஒரு சிறு புத்தகம். சாணி நிறத் தாளில் அச்சிடப் பட்டிருந்தது. விலை எட்டணா போட்டிருந்தது. புத்தகத்தின் தலைப்பு “வ.உ.சிதம்பரம் வாழ்க்கை வரலாறு” என்பதாகும்.

மேற்படி புத்தகத்தை திரு. ம.பொ.சி. மிகவும் சிரமப்பட்டு வெளியிட்டாராம். விற்பனைசெய்து அது சம்பந்தமாகப் பணம் கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுக்கலாம் என்று நினைத்தாராம். ஆனால் அவர் நினைத்தப்டி புத்தகங்கள் விற்கவில்லை. என்ன செய்யலாம் என்று கேட்டார்.

கையிருப்பு இருக்கும் புத்தகம் பூராவும் கொண்டு வரச் சொன்னேன்-விற்பனைக் கமிஷன் கழித்து மிச்ச ரூபாயை கணக்குச் செய்து திரு. ம.பொ.சி. அவர்களிடம் கொடுத்து விட்டேன்.

பின்னர் அந்தப் புத்தகத்தின் மேல் அட்டையை அகற்றிவிட்டு, புதிதாக மேலட்டை, ஒன்று தயார் செய்து அழகிய முறையில் கப்பலோட்டிய தமிழன் என்று பெயர்கொடுத்து, அந்த மேலட்டையைப் புத்தகத்திற்குப் போட்டு அதே எட்டனா புத்தகத்தை ஒரு ரூபாய் விலை போட்டு, தகுந்த விளம்பரம் செய்து மேற்படிப் புத்தகங்கள் அனைத்தையும் விற்றேன். பின்னர் அந்த நூலையே திரு. ம.பொ.சி. அவர்களை விரிவாக எழுதச் சொல்லி, மேலும் அழகு சேர்த்து வெளியிட்டு மூன்று ரூபாய் விலைக்கு விற்க ஏற்பாடு செய்தேன்.

அதே “கப்பலோட்டிய தமிழன்” என்ற நூல் பின்னர் பல பதிப்புகள் வெளிவந்து தமிழகம் முழுவதும் வ.உ.சியின் புகழைப் பரப்பியதோடு ம.பொ.சியின் புகழையும் பரப்பியது.

தமிழ் உணர்ச்சி என்னையும் திரு. ம.பொ.சி. அவர்களையும் ஒன்றாக இணைத்தது. அரசியலில் நானும் திரு. ம.பொ.சி. அவர்களும் மிக நெருக்கமாக இணையக் காரணமாக இருந்தவர் ராஜாஜி.

“காங்கிரசிற்கு ராஜாஜி வேண்டாம்” என்று திரு காமராஜ் அவர்களும் மற்றும் சிலரும் வாதாடினார்கள். “ராஜாஜி வேண்டும்” என்று தமிழகம் முழுவதும் சுற்றிப் பிரசாரம் செய்வதில் ம.பொ.சியும் நானும் ஒன்றாக இணைந்தோம். அப்போது அவருடன் இணைந்த நான், அவருடன் பல ஆண்டுகள் ஒன்றாகவே சேவை செய்தேன்.

இன்று திருத்தணி தமிழ் நாட்டோடு இருக்கிறது. அது தமிழகத்தின் வடக்கெல்லை. கன்யாகுமரி தமிழகத்தில் இருக்கிறது. அது தெற்கெல்லை. சென்னை தமிழகத்தின் தலை நகராக இருக்கிறது. தமிழ்மொழி தமிழ் நாட்டில் ஆட்சி மொழியாக இருக்கிறது.

இத்தனையும் திரு ம.பொ.சியின் உழைப்பால் வந்தது. அவருக்கு உறுதுணையாக நின்று உழைத்த பல தொண்டர்களில் நான் கொஞ்சம் நெருங்கிய தொண்டன் என்பதில் எனக்கு என்றைக்கும் பெருமை உண்டு.

அன்று திரு ம.பொ.சி."வேங்கடத்தை விட மாட்டோம்” என்று முழங்கியிரா விட்டால் இன்று திருத்தணி ஆந்திர மாநிலத்தில் இருந்திருக்கும்.

அதே போல் “குமரியை கொள்ளை கொடோம்’ என்று கர்ஜனை செய்திரா விட்டால் இன்று கன்யாகுமரி கேரளத்தில் இருந்திருக்கும்.

“தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்ற ம.பொ.சியின் தமிழ் முழக்கம் ஏற்பட்டிராவிட்டால் இன்று சென்னை இரண்டாகக் கூறு போடப்பட்டு ஆந்திராவிற்குப் பாதி, தமிழகத்திற்குப் பாதி என்றல்லவா இருந்திருக்கும்?

தமிழை ஆட்சி மொழியாக்க ம.பொ.சி.பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. இத்தனை சிறந்த சேவையில் நானும் சம்பந்தப் பட்டிருந்தேன் என்று நினைக்கும்போது தமிழ் இனத்திற்கு என் கடமையைச் செய்த பெருமிதம் எனக்கு ஏற்படுகிறது.

ஆனால் இவ்வளவு அரும் பெரும் காரியங்கள் செய்த திரு ம.பொ.சி. அவர்களுக்குத் தமிழ்இனம் தகுந்த பெருமை செய்ய வில்லையே என்று இன்னும் நினைத்து மிகவும் மனம் வருந்துகிறேன்.

“கப்பலோட்டிய தமிழன்” புத்தகம் வெளி வந்ததும் திரு ம.பொ.சி. அவர்களின் புத்தகத்திற்குத் தமிழகத்தில் நல்ல வரவேற்பு ஏற்பட்டது. அவர் எழுதிய ‘கட்டபொம்மன்’ என்ற நூல் பலபதிப்புகள் வெளி வந்திருக்கிறது. சிலப்பதிகாரத்தைப் பற்றிய ம.பொ.சி. அவர்களின் ஆராய்ச்சிக்குப் புலவர்கள் மத்தியில் பெரிய மரியாதை ஏற்பட்டிருக்கிறது.

சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் 71வது பிறந்த நாள் நடைபெற்றபோது அவர் எழுதிய “வந்தே மாதரம்” என்ற நூலை வெளியிட்டு அதன் முதல் பிரதியை என்னிடம் கொடுத்தார்கள். அதைப் பற்றி ம.பொ.சி. அவர்கள் கூறும்போது, “எனது முதல் நூலை வெளியிட்டவர் சின்ன அண்ணாமலை. சிறந்த தேசபக்தர்.” அதனால் இந்த ‘வந்தே மாதரம்’ என்ற நூலின் முதல் பிரதியை அவருக்கு அளிக்கச் சொன்னேன்” என்றார்.

திரு ம.பொ.சி.அவர்களின் அன்பை நினைத்துப் பெருமிதம் கொண்டேன்.