சொன்னால் நம்பமாட்டீர்கள்/தம்பி தயங்காதே
நாகர்கோவிலில் பெரிய இலக்கிய விழா நடைபெற்றது. பசும்பொன் திரு. முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் கடல்மடை திறந்ததெனச் சொல்மாரி பொழிந்தார். அவர் பேசும்போது, “ஆயிரத்தெட்டு நரம்புகளுள்ள இந்த உடம்பிலே முப்பத்து மூவாயிரம் தடவை மூச்சுவிடும் மனித சரீரத்திலே, நாளொன்றுக்கு நாலாயிரம் தடவை இமைக்கும் கண்களிலே... என்று இந்த மாதிரி புள்ளி விபரங்களை அடுக்கி, சபையோரைத் திணற அடித்துவிட்டார். ..
அடுத்தபடியாகப் பேசவேண்டியவன் நான் தேவருக்காக எழுந்தகரகோஷம் இன்னும் அடங்கவில்லை. அவருடையபேச்சே எல்லோருடைய காதிலும் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நான் மைக்கின் முன்வந்து நின்றேன். “தலைவர் அவர்களே, சபையோர்களே” என்று எதுவும் சொல்லவில்லை.
“ஆயிரத்து ஐநூத்தி ஐம்பத்து ஐந்து கால்கள் உள்ள இந்தப் பந்தலிலே, மூவாயிரத்து முன்னூற்று முப்பத்தி மூன்று தென்னங்கீத்து வேய்ந்துள்ள இக்கொட்டகையில் பதினாராயிரத்துப் பதினைந்து பேரே உள்ள இந்தக் கூட்டத்தில்...” என்று ஆரம்பித்தேனோ இல்லையோ, கலகல வென்று சிரிப்பொலியும் கரகோஷமும் என்னை மேற்கொண்டு பேச முடியாமல் செய்து விட்டன. தேவர் கோபப்படுகிறாரோ என்று அச்சத்துடன் அவரைத் திரும்பிப் பார்த்தேன். தேவர் சட்டென்று எழுந்தார். “தம்பி தயங்காதே. பேசு வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. நீ நம்ம ஜில்லா என்பதில் எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது,” என்று கூறி, தான் மேலே போர்த்தியிருந்த கதர் சால்வையை எடுத்து எனக்குப் போர்த்தினார்.