உள்ளடக்கத்துக்குச் செல்

சொன்னால் நம்பமாட்டீர்கள்/விளம்பர வெற்றி

விக்கிமூலம் இலிருந்து



விளம்பர வெற்றி

கிங்காங்-தாராசிங் என்ற மல்யுத்த வீரர்களை மறந்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். 1952-53-ல் தமிழகத்தில் மிகப் பரபரப்பாக அவர்களின் மல்யுத்தப்போட்டி நடைபெற்றது.

உலகத்தின் பல பாகங்களிலிருந்து மல்யுத்த வீரர்கள் வந்து ஒருவரோடு ஒருவர் மோதியிருக்கிறார்கள். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர், பெங்களுர் முதலிய இடங்களில் மல்யுத்தம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அந்தச் சிறப்பில் எனக்கும் சிறப்பான பங்குண்டு. மல்யுத்தப் போட்டிக்கு விளம்பரம் செய்வதில் பல, புதுமைகளைப் புகுத்தினேன். மக்களின் ஆர்வத்தை மிகவும் தூண்டியதினால் தினம் தினம் பார்க்கப் பெருங்கூட்டமாக மக்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

இதையெல்லாம் கவனித்த கிங்காங் என்னுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். என்னுடைய விளம்பரத் தோரணைகளும், மல்யுத்தம் பற்றி அரங்கத்தில் நகைச்சுவையாக ஒலி பெருக்கியில் விமர்சனம் செய்யும் விதமும் அவருக்கு ரொம்பவும் பிடித்தது.

கிங்காங் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர். சிங்கப்பூரில் வசித்து வந்தார். அதனால் அவரும் நானும் மலாய் மொழியில் சரளமாய் பேசிக் கொள்வோம்.

“தமிழ்நாட்டில் மல்யுத்தப்போட்டி முடிந்ததும் பம்பாயில் நடைபெறப்போகிறது. கண்டிப்பாக அங்குவரவேண்டும்” என்று கிங்காங் சொன்னார். அதன்படி இரண்டு மாதம் கழித்து பம்பாய் போய்ச் சேர்ந்தேன்.

பம்பாயில் மலபார் ஹில்ஸ் ‘நாஸ் ஓட்டல்’ வைத்திருக்கும் ஒரு பெரிய செல்வந்தர் மல்யுத்தப் போட்டி காண்டராக்ட் எடுத்து நடத்திக் கொண்டிருந்தார்.

அவரிடம் கிங்காங் என்னை அறிமுகப்படுத்தி “இவரை சாமான்யமாக நினைக்க வேண்டாம். நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே அவர்தான் இவர். பெரிய விளம்பர மாக்னெட்” என்று சொன்னார்.

“உங்கள் திறமையைச் சோதிக்க விரும்புகிறேன்” என்று கூறிய நாஸ் “பம்பாய் இந்தியாவிலேயே மிகப் பெரிய நகரம். செல்வம் புரளும் நகரம். படேல் ஸ்டேடியத்தில் மக்கள் முக்கால்வாசி நிறைந்தால் கூட நாள் ஒன்றுக்கு 5 லட்சம் வசூல் ஆகும்.

இதுவரை ஒருநாள் கூட வசூல் 2 லட்சத்தை எட்டவில்லை. வரும் ஞாயிறு அன்று கிங்காங் தாராசிங் மல்யுத்தம் நடைபெறப்போகிறது. இதுதான் போட்டியிலே பெரிய போட்டி.

இதில் வசூல் ஆகும் பணத்தின் அளவைப் பொறுத்துத்தான் தொடர்ந்து மல்யுத்தப்போட்டி நடத்துவதா இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும்.

ஆகவே அன்று பெரிய வசூலுக்கு ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா?’ என்று கேட்டார் நாஸ்.

“எவ்வளவு வசூல் ஆக வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்“ என்று கேட்டேன். “குறைந்தது மூன்று லட்சம் ரூபாயாவது வசூல் ஆக வேண்டும்” என்றார் முயற்சிக்கிறேன். எனது வழி கொஞ்சம் மாறுபட்டது.

அதற்கு ஆகும் செலவைத் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றேன். சரி என்றார் நாஸ்.

நானும் கிங்காங்கும் கலந்து பேசினோம். எனது யோசனையை கிங்காங் ஒப்புக் கொண்டார். அதன்படி அந்தச் சனிக்கிழமை காலை 11 மணி அளவில் பம்பாயில் உள்ள பெரிய கடைத்தெரு ஒன்றுக்கு நானும் கிங்காங்கும் சென்றோம்.

பெரிய கடை ஒன்றுக்குள் நுழைந்தோம். கிங்காங் சில கண்ணாடி டம்ளர்கள் மற்றும் வேறுசில சாமான்கள் வாங்கினார்.

அச்சமயம் பார்த்து தாராசிங் அக்கடைக்குள் நுழைந்தார். தாராசிங்கைப் பார்த்ததும் கிங்காங் தாவிக் குதித்து, ‘இந்திய நாயே, என்னைத் தொலைத்து விடுவதாகச் சொன்னாயாமே’ என்று தாராசிங்கைத் தூக்கி எறிந்தார். சாமான்கள் உருண்டன. பறந்தன.

தாராசிங் எழுந்து நின்று, ‘ஹங்கேரிப் பன்றியே!’ எங்கள் நாட்டில் வந்து என்னைக் கேவலப்படுத்துகிறாயா?

உன்னைப் பாரத மண்ணிலேயே சமாதி வைக்காமல் விடமாட்டேன்!’ என்று கிங்காங் மேல்பாய, கிங்காங் தாராசிங் மேல்பாய, பெரிய மோதல் உண்டாகிவிட்டது.

இதைப் பார்க்க லட்சக்கணக்கில் மக்கள் கூடிவிட்டார்கள். அதற்குள் மற்ற மல்யுத்த வீரர்களை நாஸ் அவர்கள் காரில் கூட்டிக்கொண்டு வந்தார்.

அவர்கள் கிங்காங் தாராசிங்கைப் பிரிக்க மிகவும் சிரமப்பட்டார்கள்.

ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த ஜீப் ஒன்றில் தாராசிங் ஏறி நின்று கொண்டு கூடியிருந்த மக்களிடம் ‘பாரத நாட்டு மக்களே ஹங்கேரியிலிருந்து வந்திருக்கும் ஒரு மாமிசப் பிண்டம் என்னை மல்யுத்தப் போட்டியில் ஜெயித்து என் ரத்தத்தைக் குடிப்பேன் என்று சபதம் செய்திருக்கிறான்.

நான் அவனை டார் டாராகக் கிழித்து பாரத மண்ணிலே புதைப்பேன். இந்தியாவை கேவலப்படுத்தியவனைச் சும்மாவிடமாட்டேன். நாளை ஞாயிறு அன்று எனக்கும் அவனுக்கும் மல்யுத்தம் நடக்கப்போகிறது.

அதில் அவனை ஒரே அடியில் வீழ்த்தி அவன் பிணத்தின் மீது நின்று வெற்றி வாகை சூடுவேன், ஜெய்ஹிந்த் என்று ஆவேசமாகப் பேசிவிட்டு ஜீப்பில் சென்று விட்டார்.

வேறு ஒரு ஜீப்பில் வந்த கிங்காங்கைப் பார்த்து மக்கள் கை கொட்டிச் சிரித்தார்கள். உடனே கிங்காங் மக்களைப் பார்த்து காரித்துப்பி, ‘மானங்கெட்ட இந்தியர்களே! யாரைப் பார்த்துச் சிரிக்கிறீர்கள்.

உங்கள் தாராசிங் குடலை உருவி நாளைக்கு நான் மாலையாகப் போட்டுக் கொண்டு ஹங்கேரி நடனம் ஆடுவேன்’ என்று சொல்லி மற்றும் மக்களுக்குக்கோபம் வருவது போல சில வார்த்தைகளைச் சொல்லித் திட்டி, அடிக்கடி மக்கள் மீது எச்சிலைத் துப்பி கலாட்டா செய்து மக்கள் அவரை அடிக்க ஓடிவர ஜீப்பில் வேகமாகச் சென்றுவிட்டார்.

அதன் பின்னர் நானும் திரு.நாஸ் அவர்களும் கடைக்காரரிடம் உடைந்த சாமான்களுக்கு பில் போடச் சொன்னோம். பில் ரூ.17000/- வந்தது. பணத்தைக் கட்டி விட்டுச் சென்றோம்.

சனிக்கிழமை அன்று பம்பாய் முழுவதும் இதே பேச்சு. கிங்காங் தாராசிங் எதிர்பாராமல் ஒரு கடையில் சந்தித்து விட்டதாகவும் பெரிய ரகளை ஆகிவிட்டதாகவும் ஞாயிறு மல்யுத்தப் போட்டியில் கண்டிப்பாகக் கொலைதான் விழும் என்றும் இன்னும் கற்பனையாகப் பல கதைகளும் பேசப்பட்டன.

ஞாயிறு அன்று டிக்கட் வாங்க படேல் ஸ்டேடியத்தில் காலை 6 மணியிலிருந்து கியூ நிற்க ஆரம்பித்தது. கூட்டம் அலை அலையாக மோதிற்று. டிக்கட் கிடைக்காமல் ஏராளமான மக்கள் வெளியிலே நின்றார்கள்.

மல்யுத்தம் விறுவிறுப்பாக இருந்தது. எல்லோரும் தாராசிங் பக்கமே இருந்தார்கள். கிங்காங்கை அடி, கொல்லு, குத்து என்று சப்தம் போட்டார்கள். தாராசிங் கிங்காங் நெற்றியில் பட்பட் என்று பல அடிகொடுத்தார். நெற்றியிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.

மக்கள் ஆவேசமாகக் கொல்லு, கொல்லு என்று கத்தினார்கள். கடைசியில் கிங்காங் மயக்கமாக விழுந்தார். மக்கள் ஒரே ஆரவாரம் செய்தார்கள். கிங்காங்கை ஸ்டச்சரில் வைத்துத் தூக்கிக் கொண்டு போனார்கள். மல்யுத்தப் போட்டி முடிந்து மக்கள் கலைந்து செல்ல, சுமார் 6 மணி நேரம் பிடித்தது.

அன்றைய வசூல் என்னவென்று நினைக்கிறீர்கள்? சொன்னால் நம்பமாட்டீர்கள் ரூ.ஏழு லட்சத்தி அறுபத்து மூவாயிரம் ஆகும்.