உள்ளடக்கத்துக்குச் செல்

சோலைமலை இளவரசி/சின்னஞ்சிறு நட்சத்திரம்

விக்கிமூலம் இலிருந்து


  1. REDIRECT [
  2. REDIRECT [[[குறித்த பக்கம]]

</gallery> ்]] == # தலைப்பு

  1. தலைப்பு எழுத்துக்கள் ==

'சரித்திரப் புகழ் பெற்ற வருஷம்' என்று பண்டித ஜவஹர்லால் நேரு முதலிய மாபெருந் தலைவர்களால் கொண்டாடப் பெற்ற 1942-ஆம் வருஷத்து ஆகஸ்டு மாதத்தில் மேற்கூறிய சம்பவம் நடந்தது. சில காலமாகவே இந்திய மக்களின் உள்ளத்தில் குமுறிக்கொண்டிருந்த கோபாக்கினிமலை மேற்படி 1942 ஆகஸ்டில் படீரென்று வெடித்தது. புரட்சித்தீ தேசமெங்கும் அதிவேகமாகப் பரவியது. அந்தப் புரட்சித்தீயை நாடெங்கும் பரப்புவதற்குக் கருவியாக ஏற்பட்ட தேசபக்த வீரத்தியாகிகளில் நம் கதாநாயகன் குமாரலிங்கமும் ஒருவன். அந்த அதிசயமான 1942 ஆகஸ்டில் அதுவரையில் தேசத்தைப் பற்றியோ தேச விடுதலையைப் பற்றியோ அதிகமாகக் கவலைப்பட்டறியாத அநேகம் பேரைத் திடீரென்று தேசபக்தி வேகமும் சுதந்திர ஆவேசமும் புரட்சி வெறியும் பிடித்துக் கொண்டன. ஆனால் குமாரலிங்கமோ வெகுகாலமாகவே தேசபக்தியும் தேசசுதந்திரத்தில் ஆர்வமும் கொண்டிருந்தவன். அந்த ஆர்வத்தைக் காரியத்திலே காட்டுவதற்கு ஒரு தக்க சந்தர்ப்பத்தைத்தான் எதிர் நோக்கிக் கொண்டிருந்தான். அந்தச் சந்தர்ப்பம் இப்போது வந்துவிட்டதென்றும் பாரதத்தாயின் அடிமை விலங்கை முறித்தெறிவதற்கு இதுவே சரியான தருணம் என்றும் அவன் பரிபூரணமாக நம்பினான்.

காந்தி மகாத்மாவையும் மற்றும் தேசத்தின் ஒப்பற்ற மாபெருந் தலைவர்களையும் அந்நிய அதிகாரவர்க்க சர்க்கார் இரவுக்கிரவே சிறைப்படுத்தி யாரும் அறியாத இரகசிய இடத்துக்குக் கொண்டு போனார்கள் என்ற செய்தி அவனுடைய உள்ளத்தில் மூண்டிருந்த ஆத்திரத்தீயில் எண்ணெயை ஊற்றிப் பொங்கி எழச் செய்தது. ஸ்ரீ சுபாஷ் சந்திர போஸ் பெர்லின் ரேடியோ மூலமாகச் செய்த வீராவேசப் பிரசங்கங்கள் தேச விடுதலைக்காக எத்தகைய தியாகத்துக்கும் அவன் ஆயத்தமாகும்படி செய்திருந்தன. உலகமெங்கும் அந்தச் சமயம் நடந்துகொண்டிருந்த சம்பவங்களும் தேசத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த காரியங்களும் அவனுடைய நவயௌவன தேகத்தில் ஓடிக் கொண்டிருந்த சுத்த இரத்தத்தைக் கொதிக்கும்படி செய்திருந்தன. தேச விடுதலைக்காக ஏதேனும் செய்தேயாக வேண்டும் என்று அவனுடைய நரம்புகள் துடித்துக் கொண்டிருந்தன. அவனுடைய உடம்பின் ஒவ்வோர் அணுவும் குமுறி மோதி அல்லோல கல்லோலம் செய்து கொண்டிருந்தது. பாரத நாட்டின் இறுதியான சுதந்திரப் போரில் அவசியமானால் தன்னுடைய உயிரையே அர்ப்பணம் செய்துவிடுவதென்று அவன் திடசங்கல்பம் செய்து கொண்டான். இந்த நிலையில் அவனுடைய மனோ திடத்தையும் தீவிரத்தையும் உபயோகப் படுத்துவதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் வாய்த்தது. வடநாட்டிலிருந்து புரட்சித் தலைவர் ஒருவர் சென்னைக்கு வந்தார்.

புரட்சித் திட்டத்தை மாகாணமெங்கும் அதிவிரைவாகப் பரப்புவதற்கு அவர் தக்கஆசாமிகளைத் தேடிக் கொண்டிருந்தார். மேற்படித் தொண்டில் ஈடுபடுவதற்குக் குமாரலிங்கம் முன்வந்தான். அவனுடன் பேசிப்பார்த்துத் தகுந்த ஆசாமிதான் என்று தெரிந்துகொண்ட தலைவர் தெற்கே பாண்டிய நாட்டுக்குப் போகும்படி அவனைப் பணித்தார். குமாரலிங்கம் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவன் என்பதோடு அந்தநாட்டில் பிரயாணம் செய்து பழக்கம் உள்ளவன். எனவே மேற்படி தொண்டை மேற்கொள்ள அவன் உற்சாகத்துடன் முன்வந்தான். 'சைக்ளோ ஸ்டைல்' இயந்திரத்தில் அச்சடித்த துண்டுப் பிரசுரங்களுடன் குமாரலிங்கம் பாண்டிய நாட்டுக்குச் சென்றான். அந்தநாட்டில் ஒவ்வோர் ஊரிலும் முக்கியமான தேசபக்த வீரர்களின் ஜாபிதா அவனிடம் இருந்தது. அவர்களைக் கண்டுபிடித்துத் துண்டுப் பிரசுரங்களை அவர்களிடம் கொடுத்தான். தேசசுதந்திரத்தில் அவன் அச்சமயம் கொண்டிருந்த ஆவேசவெறியில் துண்டுப் பிரசுரத்தில் கண்டிருந்ததைக் காட்டிலும் சில அதிகப்படியான காரியங்களையும் சொன்னான். தந்தி அறுத்தல் தண்டவாளம் பெயர்த்தல் முதலிய திட்டங்களோடு ரயில்வே ஸ்டேஷன்களையும் கோர்ட்டுகளையும் தீவைத்துக் கொளுத்துதல் சிறைகளைத் திறந்து கைதிகளை விடுதலை செய்தல் சர்க்கார் கஜானாக்களைக் கைப்பற்றுதல் முதலிய புரட்சித் திட்டங்களையும் அவன் சொல்லிக்கொண்டு போனான். இவ்வளவும் சொல்லிவிட்டு மகாத்மாவின் அஹிம்சா தர்மத்துக்கு மாறாக எந்தக் காரியமும் செய்யக்கூடாதென்று எச்சரித்துக் கொண்டும் சென்றான்.

இப்படி அவன் புயல்காற்றின் வேகத்தில் ஊர்ஊராகப் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது ஓர்ஊரில் அவனைக் கைதுசெய்யும்படி போலீஸ் உத்தியோகஸ்தர்களுக்குச் சென்னையிலிருந்து உத்தரவு வந்திருந்தது என்பதைத் தெரிந்து கொண்டான். கைதியாவதற்கு முன்னால் தேச விடுதலைக்காகப் பிரமாதமான காரியம் ஒன்று செய்ய வேண்டும் என்று அவன் தீர்மானித்தான். பொதுக்கூட்டம் போடக்கூடா தென்னும் தடைஉத்தரவு அந்த ஊரில் அமுலில் இருந்தது. அந்தஉத்தரவை மீறிப் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தான். அந்தக் கூட்டத்தில் தேசபக்தி ஆவேசமும் சுதந்திர வெறியும் ததும்பிய பிரசங்கம் ஒன்று செய்தான்: "பாரத் தாயின் அடிமை விலங்கைத் தகர்க்கும் காலம் வந்துவிட்டது. இதுதான் சமயம் ஆறிலும் சாவு நூறிலும் சாவு. கிளம்புங்கள் உடனே இந்த ஊர்ச் சிறையில் சில தேசபக்தர்கள் இருப்பதாகக் கேள்விப் படுகிறேன். சிறைக் கதவை உடைத்து அவர்களை விடுதலை செய்யுங்கள் தாலுக்கா கச்சேரியையும் கஜானாவையும் கைப்பற்றுங்கள். வெளியூர்களிலிருந்து போலீஸார் வராதபடி தந்திக் கம்பிகளை அறுத்துவிடுங்கள் ரயில் தண்டவாளங்களைப் பெயர்த்து விடுங்கள். பூரண சுதந்திரக் கொடியை வானளாவ உயர்த்துங்கள் நமதே ராஜ்யம் அடைந்தே தீருவோம்" என்று வீர கர்ஜனை புரிந்தான். அவனுடைய ஆவேசப் பிரசங்கத்தைக் கேட்ட ஜனங்கள் அந்த க்ஷணமே "வந்தே மாதரம் மகாத்மா காந்திக்கு ஜே புரட்சி வாழ்க" என்ற கோஷங்களை இட்டுக்கொண்டு தாலுக்கா கச்சேரியை நோக்கிக் கிளம்பினார்கள். போகப் போக ஜனக்கூட்டம் பெருகியது. அந்தப் பெருங்கூட்டத்தின் மத்தியில் குமாரலிங்கம் ஆண் சிங்கத்தைப் போல கர்ஜித்துக் கொண்டு நடந்தான்.

இதற்குள்ளாக அதிகாரிகளுக்கு விஷயம் எட்டி விட்டது. பொதுக் கூட்டத்திலேயே குமாரலிங்கத்தைக் கைது செய்யும் நோக்கத்துடன் புறப்பட்டு வந்த போலீஸ் ஸப்-இன்ஸ்பெக்டரும் சேவகர்களும் பாதி வழியிலேயே எதிரிலே வந்த ஜனக் கூட்டத்தைப் பார்த்துவிட்டு வேகமாகத் திரும்பிச் சென்றார்கள். ஜனங்கள் அவர்களைத் துரத்திக் கொண்டு ஓடினார்கள். போலீஸ்காரர்கள் விரைந்தோடித் தாலுக்கா கச்சேரிக்குள் போய் ஒளிந்து கொண்டார்கள். ஆவேச வெறியில் மூழ்கியிருந்த ஜனங்கள் தாலுக்கா கச்சேரியை வளைத்துக் கொண்டார்கள். கச்சேரியின் காம்பவுண்டுக்குள் இருந்த ஸப்ஜெயிலின் கதவுகளை உடைத்துத் திருடர்கள் குறவர்கள் உள்பட எல்லாரையும் விடுதலை செய்தார்கள். சரமாரியாகக் கற்கள் தாலுக்கா கச்சேரியின் மேல் விழுந்தன. உள்ளேயிருந்த போலீஸார் துப்பாக்கியை எடுத்து வெளியே குருட்டாம் போக்காகச் சுட்டார்கள். இரண்டொருவர் காயமடைந்து விழவும் ஜனங்களின் கோபாவேச வெறி அதிகமாயிற்று. தாலுக்கா கச்சேரிக் கட்டிடத்தில் தீ வைப்பதற்கு முயன்றார்கள். மண்ணெண்ணெய் பெட்ரோல் வைக்கோல் நெருப்புப் பெட்டி முதலியவை எல்லாம் அதிசீக்கிரத்தில் வந்து சேர்ந்தன.

இந்த ஏற்பாடுகளைப் பார்த்ததும் உள்ளேயிருந்த போலீஸார் வெளியேறிச் செல்ல முயன்றார்கள். துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே வெளியில் வந்தார்கள். துரதிருஷ்டவசமாக அவர்களிடம் துப்பாக்கிகள் இரண்டே இரண்டுதான் இருந்தன. தோட்டாக்களும் குறைவாக இருந்தன. இரண்டு மூன்று தடவை சுட்டதும் தோட்டாக்கள் தீர்ந்து போயின. சுட ஆரம்பித்ததும் சற்று விலகிப்போன ஜனக்கூட்டம் தோட்டா தீர்ந்து விட்டது என்பதை அறிந்ததும் திரும்பி வந்து போலீஸாரைச் சூழ்ந்து கொண்டு தாக்கியது. இன்னது செய்கிறோம் அதனுடைய பலன் இன்னது என்று தெரியாமல் ஜனக்கூட்டம் மூர்க்கமாகத் தாக்கியதன் பலனாக இரண்டு போலீஸார் உயிரிழந்து விழுந்தனர். இதற்குள்ளே பெரிய உத்தியோகஸ்தர்களுக்குத் தகவல் கிடைத்தது. போலீஸ் டெபுடி சூபரின்டெண்டெண்டும் பல போலீஸ் ஜவான்களும் பயங்கரமான ஹ¤ங்கார சத்தங்களை இட்டுக் கொண்டு விரைந்து வந்தார்கள். அவ்வளவுதான் "ஓடு ஓடு" என்று ஒரு குரல் கேட்டது. ஜனங்கள் நாலா பக்கமும் விழுந்தடித்து ஓடினார்கள். புதிதாக வந்த போலீஸார் அவர்களைத் துரத்தி அடித்தார்கள். ஒரே அல்லோல கல்லோலமாய்ப் போய்விட்டது.

வெகு துரிதமாக நடந்த இவ்வளவு காரியங்களையும் குமாரலிங்கம் பார்த்துக் கொண்டிருந்தான். போலீஸ்காரர் இருவர் உயிர் இழந்து விழுவதையும் பார்த்தான். தூரத்திலே பெரிய போலீஸ் படை வருவதையும் ஜனங்கள் சிதறி ஓடுவதையும் கவனித்தான். சற்று நேரம் திகைத்து நின்றான். பிறகு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு மற்ற எல்லாரையும் போல் அவனும் ஓட்டம் பிடித்தான். தான் அங்கு நின்றால் கட்டாயம் தன்னைக் கைது செய்துவிடுவார்கள்; போலீஸார் இருவர் இறந்ததற்காகத் தன் மீது கொலைக் குற்றம் சாட்டினாலும் சாட்டுவார்கள். ஸப் ஜெயிலில் வைத்துக் கொடுமை செய்வார்கள். போலீஸாரிடம் சிக்கிக் கொள்ளுவதற்கு முன்னால் தேசத்துக்காக எவ்வளவு காரியம் செய்யலாமோ அவ்வளவும் செய்துவிட வேண்டும். இன்னும் சில நாள் தலைமறைவாக இருந்து வேலை செய்தால் ஒரு வேளை தேசமெல்லாம் நடக்கும் மகத்தான புரட்சி இயக்கம் வெற்றி பெற்றுத் தேசம் சுதந்திரம் அடைந்தாலும் அடைந்துவிடும். அதைக் கண்ணால் பார்க்காமல் அவசரப்பட்டுத் தூக்கு மேடைக்குப் போவதால் என்ன லாபம் எப்படியும் இந்தச் சமயம் ஓடித் தப்பித்துக் கொள்வதுதான் சரி. மின்னல் மின்னுகிற நேரத்தில் இவ்வளவு யோசனைகளும் குமாரலிங்கத்தின் மனத்தில் தோன்றி மறைந்தன. முடிவாக அவன் உள்ளம் செய்த தீர்மானத்தைக் கால்கள் உடனே நிறைவேற்றி வைக்க ஆரம்பித்தன. சந்து பொந்துகளில் புகுந்து விரைந்து ஓடினான். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அந்தப் பட்டணத்தின் எல்லையைக் கடந்து பட்டணத்தைச் சுற்றியிருந்த புன்செய்க் காடுகளில் புகுந்தான்.

பொழுது விடிவதற்குள்ளே ஒரு பத்திரமான இடத்தை அடைந்துவிட வேண்டுமென்று தீர்மானித்து விரைவாகச் சென்றான். இரவு வேளையில் வழி கண்டு பிடிக்க முடியாமலும் திக்கு திசை தெரியாமலும் போய்க் கொண்டிருந்தபோது அதிர்ஷ்டவசமாக ரயில்பாதை அகப்பட்டது. ரயில்பாதையோடு அவன் கொஞ்ச தூரம் நடந்து சென்ற பிறகு நாம் ஆரம்பத்தில் பார்த்தபடி மொட்டைப் பாறையின் வளைவை அடைந்தான். அச்சமயம் ரயில் வருவதைப் பார்த்ததும் தேசத்தின் சுதந்திரத்துக்காக இன்னும் ஒரு பிரமாதமான காரியம் ஏன் செய்யக்கூடாது என்ற எண்ணம் மின்னலைப் போல் உதித்தது. உடனே அதை நிறைவேற்ற ஆரம்பித்தான். ஆனால் அவனுடைய வேலை வெற்றி அடையாமல் போனதையும் அதன் பலனாக அவன் உள்ளத்தில் ஏற்பட்ட அதிருப்தியையும் மேலே பார்த்தோம். இரவில் செல்லும் ரயிலின் அழகிய தீப அலங்காரக் காட்சி மறைந்ததும் மறுபடியும் நாலாபுறமும் காரிருள் வந்து மூடிக் கொண்டது. குமாரலிங்கம் அப்போது நின்ற இடத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் தெரியாதபடி கரிய பாறை மறைத்துக் கொண்டிருந்தது. எனவே நாலாபக்கமும் ஒரே அந்தகாரந்தான். வெளியில் இருந்தது போலவே குமாரலிங்கத்தின் உள்ளத்தையும் இருள் மூடியிருந்தது. திக்குத்திசை தெரியாத இருட்டிலே என்ன செய்வது எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் அவன் மிகவும் திகைத்தது. அவனுடைய வருங்கால வாழ்க்கை அப்படி இருள் சூழ்ந்ததாயிருக்குமோ என்ற எண்ணம் ஒரு கணம் அவன் மனத்தில் தோன்றியபோது அதுவரையில் எத்தனையோ ஆபத்தான நிலைமைகளிலும் அவன் உணர்ந்தறியாத ஒரு விதத் திகில் அவன் நெஞ்சில் உண்டாயிற்று. இருதயம் 'படபட'வென்று அடித்துக் கொண்டது. நின்று கொண்டிருக்கும் போதே அவன் கால்கள் 'வெடவெட' வென்று நடுங்கின.

அடுத்த கணத்தில் அடியோடு பலமிழந்து நினைவிழந்து அவன் கீழே விழுந்திருப்பான். நல்ல வேளையாக அச்சமயம் குபீரென்று வீசிய குளிர்ந்த காற்றினால் அவன் உடம்பெல்லாம் சிலிர்த்தது. ஒரு பெரும் பிரயத்தனம் செய்து 'இம் மாதிரிக் கோழைத்தனத்துக்குச் சற்றும் இடங் கொடுக்கக் கூடாது' என்று மனத்தில் திடசங்கல்பம் செய்து கொண்டான். இருதயத்தின் படபடப்பும் கால்களின் நடுக்கமும் ஏக காலத்தில் நின்றன. மறுபடியும் ஒரு தடவை நாலாபக்கமும் கூர்ந்து கவனமாக பார்த்தான். எந்தப் பக்கம் போகலாம் என்ற எண்ணத்துடனேதான். சிறிது நேரம் அப்படி உற்றுப் பார்த்த பிறகு மேற்கே வெகு தூரத்தில் அடிவானத்துக்கருகில் ஒரு சின்னஞ்சிறு நட்சத்திரம் அவன் கண்ணுக்குத் தெரிந்தது. மினுக்கு மினுக்கு என்று மின்னிய அந்த நட்சத்திரத்தில் ஏதோ கவர்ச்சி இருந்தது. அதையே வெகு நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். சற்று முன்னால் ரயில்வே ஸ்டேஷன் கைகாட்டி விளக்கை நட்சத்திரமோ என்று எண்ணி ஏமாந்தது அவன் நினைவுக்கு வந்தது. இதுவும் அம்மாதிரி ஏமாற்றந்தானா இல்லை இல்லை அந்தக் கை காட்டியின் சிவப்பு விளக்கு அவனைப் பயமுறுத்தித் தடுத்து நிறுத்தியது. இந்தக் கோமேதக வர்ண நட்சத்திரமோ அவனைக் கைகாட்டி அழைத்தது. ஆம்; இதுவும் உண்மையில் நட்சத்திரமில்லைதான் சோலைமலை மீதுள்ள முருகன் கோயிலில் ஏற்றி வைத்து இரவு பகல் அணையாமல் காப்பாற்றப்படும் தீபம் அது அந்த அமரதீபந்தான் தன்னைப் பரிவுடன் அழைக்கிறது என்று அறிந்து கொண்டான்.

சோலைமலைக்கும் அந்த மலைமீதிருக்கும் முருகன் கோயிலுக்கும் ஏற்கெனவே குமாரலிங்கம் போயிருக்கிறான். அந்த மலையின் அடிவாரத்திலுள்ள பாழடைந்த கோட்டையையும் பார்த்திருக்கிறான். சோலைமலைக் காட்டிலும் அதன் அடிவாரத்துக் கோட்டையிலும் மலைக்கு அப்பாலுள்ள பள்ளத்தாக்கிலும் ஒளிந்து கொண்டிருக்க வசதியான பல இடங்கள் இருக்கின்றன. இன்னும் சில காலத்துக்கு அந்த மலைப் பிரதேசந்தான். தனக்குச் சரியான இடம். முருகப் பெருமானுக்குத் தன்னிடமுள்ள கருணைதான் அந்த அமரதீபமாக ஒளிர்ந்து தன்னை அவ்விடம் வரும்படி அழைக்கிறது தேச விடுதலைத் தொண்டில் ஈடுபட்ட தன்னைப் பிரிட்டிஷ் போலீஸாரிடம் காட்டிக் கொடுப்பதற்குக் கடவுளே இஷ்டப்படவில்லை போலும் அதனாலேதான் உள்ளம் சோர்ந்து உடல் தளர்ந்து போய் நின்ற தன் கண் முன்னால் அந்தச் சோலைமலை முருகன் கோயில் தீபம் தெரிந்திருக்கிறது. தான் வேறு வழியாக அந்தக் கரிய செங்குத்தான பாறைக்குப் பின்புறமாகச் சென்றிருந்தால் அந்தச் சோலைமலைத் தீபத்தைப் பார்த்திருக்க முடியாதல்லவா சிலகாலம் அந்த மலைப் பிரதேசத்தில் நாம் மறைந்திருக்க வேண்டுமென்பது முருகனுடைய சித்தமாக இருக்க வேண்டும் இவ்விதம் முடிவு கட்டிய குமாரலிங்கம் சோலை மலை அமர தீபத்தைக் குறியாக வைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான். அவனுடைய நெஞ்சிலே ஏற்பட்ட உறுதியும் திடமும் அவனுடைய கால்களுக்கு அதிசயமான பலத்தை அளித்தன.