சோழர் வரலாறு/இரண்டாம் இராசாதிராசன்
(கி.பி. 1163 - 1179)
பட்டம் பெற்ற வரலாறு : இராசாதிராசன் விக்கிரம சோழனது மகன் வயிற்றுப் பெயரன். இவனது இயற்பெயர் எதிரிலிப்பெருமான் என்பது. இவனுக்கு இளையவன் ஒருவன் இருந்தான். இந்த இருவரும் கங்கை கொண்ட சோழ புரத்திலிருந்து ஆயிரத்தளி அரண்மனைக்குக் கொண்டுவரப் பெற்றனர். அங்கு இரண்டு பிள்ளைகளும் வளர்ந்து வந்தனர். இராச ராசன் இறக்கும் அன்று எதிரிலிப் பெருமாளுக்கு முடிசூட்டி இறந்தான். அப்பொழுது இவன் வயது இரண்டு. அதனால் அரசன் இறந்தவுடன் சோணாட்டில் கலவரம் மிகுந்தது. உடனே பல்லவராயன் என்னும் முதல் அமைச்சர் இப்பிள்ளைகளையும் இராச மாதேவி யாரையும் இராசராசபுரத்திற்குக் கொண்டு சென்று தக்கார் பாதுகாவலில் விட்டுச் சோழப் பெருநாட்டு அரசியலை இரண்டு வருடகாலம் தானே கவனித்து வந்தான்; எதிரிலிப் பெருமாள் நான்கு வயதினன் ஆனதும், அவனுக்கு ‘இராசாதிராசன்’ என்ற பெயருடன் முடி சூட்டிச் சிறப்புச் செய்தான்; இக்குறிப்புகள் அனைத்தும் ‘பல்லவராயன் பேட்டைச் சாசன’த்தில் நன்கறியக் கிடக்கின்றன[1]. ஆனால் இதே பல்லவராயன் பேட்டைச் சாசனத்தையும் இராசராசன் ஆட்சி ஆண்டுகளையும் சோதித்த பிறர், ‘இராசாதிராசன் கி.பி. 1153-இல் இளவரசன் ஆனான்; இராசராசன் கி.பி.117 3-இல் இறந்தான். எனவே 8 முதல் 10 ஆண்டுகள் பேரரசனுடன் சிற்றரசன் பயிற்சி பெற்றான்’ எனக் கூறுகின்றனர்[2]. இஃது எங்ஙனமாயினும், இரண்டாம் இராசராசனுக்குப்பிறகு பட்டம்பெற்றவன் இரண்டாம் இராசாதிராசன் என்பதுமட்டும் அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மை ஆகும். இவனுக்கு கரிகாலன் என்ற பெயரும் உண்டு[3].
பாண்டி நாட்டுக் குழப்பம்: இராசாதிராசன் பட்டம் பெற்ற நான்கு ஐந்து ஆண்டுகளில், பாண்டிய நாட்டில் அரச மரபினர் இருவர்க்குள் பூசல் உண்டானது. ஒருவன் பராக்கிரம பாண்டியன் என்பவன்; மற்றவன் குலசேகர பாண்டியன் என்பவன். பராக்கிரம பாண்டியன் அப்பொழுது இலங்கையை ஆண்டு வந்த பராக்கிரம பாகு (கி.பி.1153-1186) என்பவனைத்துணை வேண்டினான். உடனே இலங்கைப் படைவீரர் இலங்காபுரி என்பவன் தலைமையிற் சென்றனர். அவன் பாண்டிய நாட்டை அடைவதற்குள், குலசேகரன் பராக்கிரமனை ஒரு நகரத்தில் அகப்படுத்தி, அதனைமுற்றுகை இட்டான்; அப்பொழுது நடந்த போரில் பராக்கிரமன் கொல்லப்பட்டான். அவன் மகனான வீரபாண்டியன் மலை நாட்டுக்கு ஓடி ஒளிந்தான். குலசேகரன் பாண்டிய மன்னன் ஆனான்.
இலங்காபுரி : இதனை உணர்ந்த இலங்காபுரி குலசேகரனை வென்று பாண்டிய நாட்டை இறந்தவன் உறவினர்க்கு உரிமையாக்கத் துணிந்து, நாட்டினுள் நுழைந்தான், இராமேசுவரத்தைக் கைப்பற்றி அங்கிருந்த கோவிலை அழித்தான்; ‘குந்துகாலம்’ என்ற இடத்தைக் கைப்பற்றிக் கோட்டை ஒன்று கட்டி, அதற்குப் ‘பராக்கிரமபுரம்’ என்று தன் அரசன் பெயரிட்டான்; இச்செயல்களை அறிந்த குலசேகரன் இரண்டு படைத்தலைவரைப் பெரும் படையுடன் ஏவினன். அப்படைகள் தோல்வியுற்றன. அடுத்துப் பல இடங்களில் போர் நடந்தது. இலங்காபுரியே வெற்றி பெற்றான். இறுதியிற் குலசேகரன் கொங்கு நாட்டுப் படைகளையும் இறந்த பராக்கிரம பாண்டியனுடைய சிதைந்த படையையும் தன் படைகளையும் ஒருங்கு திரட்டிக் கொண்டு தானே போரிட முந்தினன்; ஆயினும், பாவம்’ அவன் படுதோல்வி அடைந்தான். இலங்காபுரி தென்பாண்டி நாட்டைக் கைப்பற்றிப் பலப்படுத்தினான்; மலை நாடு புக்க வீரபாண்டியனை வரவழைத்து, இலங்கை அரசன் தந்த பரிசுகளை அளித்துப் பாண்டிய அரசனாக்கி வைத்தான்.வீரபாண்டியன் இலங்காபுரியின் உதவி பெற்றே நாட்டை ஆண்டு வந்தான். இலங்காபுரி பிற இடங்களை வென்று ‘கண்ட தேவன் மழவராயன்’ என்பவனையும், ‘மானவ சக்கரவர்த்தி’ என்பவனையும் ஆளுமாறு விடுத்தான்.
தன் நாடு பாழாவதைக் கண்டு வெகுண்ட குலசேகரன் மீட்டும் தன் படைகளைத் திரட்டிப் போருக்குப் புறப்பட்டான். இலங்காபுரியால் நாடாள விடப்பட்ட சிற்றரசரும் அவனுடன் சேர்ந்து கொண்டனர். உடனே வீரபாண்டியன் அரசு கட்டில் விட்டு ஓடிவிட்டான். இலங்காபுரி தன் அரசனுக்குச் செய்தி அனுப்பிப் புதிய படைகளை வருவித்தான். அப்புதிய படைகளைச் சகத் விசய ன் என்பான் தலைமை தாங்கி நடத்தி வந்தான். இரண்டு வீரரும் தம் படைகளை அணிவகுத்துக் குலசேகரனை முற்றிலும் முறியடித்தனர். வீரபாண்டியன் மீண்டும் அரசன் ஆக்கப்பட்டான். பின்னர் இலங்காபுரி குறும்பராயன் என்பவனைத் தோற்கடித்துத் திருப்புத்துரைக் கைப்பற்றினான். பொன் அமராவதி புகுந்து அங்கிருந்த மூன்று மாளிகை கொண்ட அரண்மனை முதலிய கட்டடங்களை இடித்து மதுரைக்குத் திரும்பினான்.
குலசேகரன் மீட்டும் இலங்காபுரியைச் சீவில்லிபுத் துரில் தாக்கினான். போர் கடுமையாகவே நடந்தது.ஆயினும், குலசேகரனே தோல்வியுற்றான்; ‘சாத்தனேரி’ என்னும் இடத்திற்கு ஓடிவிட்டான். இலங்காபுரி அதனை அறிந்து அங்குச் சென்றான். அவன் வருவதை அறிந்த குலசேகரன் ஏரிக்கரையை உடைத்து அவன் வரவைத் தடுக்க முயன்றான்; பயனில்லை. உடனே அவன் பாளையங்கோட்டைக்குப் போய்த் தங்கினான்; சோழ அரசனுக்கு ‘உதவி வேண்டும்’ என்னும் வேண்டுகோளை விடுத்தான்.
ஈழத்துடன் செய்த முதற்போர் : சோழநாட்டை ஆண்டு வந்தவன் இராசாதிராசன் ஆவன். அவனுக்குப் பேருதவியாக இருந்தவன் திருச்சிற்றம்பலம் உடையானான பெருமான் நம்பிப் பல்லவராயன் என்பவன். அப் பெருந்தகை திரண்ட படைகளுடன் பாண்டியன் நாட்டை அடைந்தான். அவனுக்கு உதவியாகச் சென்ற மற்றொரு தலைவன் நரசிங்க வர்ம ராயன் என்பவன். பாண்டியன் படை, கொங்குப் படை, சோழர் படை யாவும் ஒன்று கூடின, அதுகாறும் பாண்டிய நாட்டுக் கோவில்களை இடித்துக் கொள்ளை-கொலைகளால் குடிகளைத் துன்புறுத்திவந்த ஈழப்படைகளைத் தாக்கின. அதனால் திருக்கானப்பேர், தொண்டி, பாசிபொன் அமராவதி, மணமேற்குடி, மஞ்சக்குடி, என்னும் இடங்களில் போர் நடந்தது, இறுதியில் ஈழப்படை தோற்று ஒழிந்தது. குலசேகரன் அரியணை ஏறி அரசாளத் தொடங்கினான்.[4]
இலங்காபுரி செய்த கொடுமைகளை அறிந்த எதிரிலி சோழச் சாம்புவராயன் என்னும் சிற்றரசன் ஒருவன் உமாபதி தேவர் என்ற ஞானசிவ தேவர் என்னும் பெரியார் ஒருவரிடம் முறையிட்டான். அவர் ‘ஈழப்படை விரைவில் அழிந்து ஒழியும் கவலற்க’ என்று அருளி 28 நாள் அகோர பூசை செய்தனர். முடிவில் ஈழப்படை தோற்ற செய்தி எட்டியது. உடனே அத்தலைவன் அச்சுவாமி தேவர்க்குக் காஞ்சியை அடுத்த ஆர்ப்பாக்கம் என்னும் சிற்றுரைத் திருப்பாத பூசையாக அளித்தான். இச்செய்தி இராசராசனது 5-ஆம் ஆட்சி ஆண்டில் நடைபெற்றதாகும்.[5] எனவே, இலங்காபுரியின் தோல்வி கி.பி.167 அல்லது 1168-இல் நிகழ்ந்ததாதல் வேண்டும்.
ஈழத்துடன் செய்த இரண்டாம்போர் : இராசராசன் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பனும் முதல் அமைச்சனும் சிறந்த வீரனும் ஆகிய பல்லவராயன் மேற்சொன்ன போருக்குப் பின் நோய்வாய்ப்பட்டுக் காலமானான். உடனே அந்தப் பதவிக்கு ‘வேதவனம் உடையான் அம்மையப்பன்’ ஆன அண்ணன் பல்லவராயன் என்பவன் வந்தான். இவன் ஆற்றலும் போர்ப் பயிற்சியும் மிக்கவன். இவன் அரசனது நன்மதிப்புப் பெற்றவன். இவன், முதலில் பல்லவராயனிடம் தோற்றதற்கு வருந்திய ஈழத்தரசன் சோணாட்டைத் தாக்கப் படைகளைப் பலப்படுத்துவதையும், ஊரத்துறை, புலைச்சேரி,மாதோட்டம்,வல்லிகாமம்,மட்டிவால் என்னும் இடங்களிற் கப்பல்களைக் கட்டுவதையும் கேள்வியுற்றான்; உடனே பராக்கிரம பாகுவுடன் பூசலிட்டுத் திரிந்து கொண்டிருந்த அவன்மருமகனான சீவல்லபன் என்பவனைப் படையுடன் அனுப்பி ஈழத்தைத் தாக்கத் துண்டினான். சீவல்லபன் சோழர் படையுடன் சென்று மேற்சொன்ன இடங்களிற் பலவற்றை அழித்தான் போரில் யானைகளைக் கைப்பற்றினான்; கிழக்கு மேற்கில் இருபது காதவழியும் தெற்கு வடக்கில் எழுபது காதவழியும் தீ மூட்டி ஊர்களை அழித்தான்; பல தலைவரைக் கொன்றான்; பலரைச் சிறைப்பிடித்தான்.
இந்நிலையில், பராக்கிரமபாகு ஒரு சூழ்ச்சி செய்தான். அவன் உடனே குலசேகரனுக்குத் துது விடுத்தான்; நீண்ட காலமாகப் பாண்டியர்க்கும் ஈழ அரசர்க்கும் சோழர்க்கு எதிராக இருந்து வந்த ஒற்றுமையை உணர்த்தித் தன்பால் நட்புக் கொள்ளுமாறும் சோழர்பால் பகைமை கொள்ளுமாறும் செய்தான். சோழர் தயவால் பட்டம் பெற்ற குலசேகரன் நன்றி கெட்டவனாய்ச் சோழர் மீது பகைமை கொண்டான், ஈழத்தரசன் பேச்சைக் கேட்டுச் சோணாட்டின்மீது படையெடுத்தான்; சோழர்பால் என்றும் அன்பு கொண்டிருந்த ஏழகத்தார்[6] (ஏடகத்தார். மதுரை தாலுக்காவில் உள்ள ஊர்) என்பவரையும் சோழருடைய மறவ சாமந்தரும் குலசேகரன் ஆட்சியில் இருந்தவருமான ‘இராசராச கற்குடி மாராயன்’ இராச கம்பீர ஐந்து கோட்டை நாடாள்வான்’ என்பாரையும் நாட்டைவிட்டு விலக்கினான்; சோழ அரசன் ஆணைப்படி மதுரைவாயிலில் அறையப்பட்டிருந்த ஈழத்துத் தானைத் தலைவர் தலைகளை அப்புறப்படுத்தினான். பராக்கிரம பாகு குலசேகரன் தானைத் தலைவர்கட்கு அனுப்பிய கடிதங்களும் பரிசுகளும் சோழ சேனைத் தலைவர்களிடம் அகப்பட்டன. இவை அனைத்தையும் கேள்வியுற்ற இராசாதிராசன் அண்ணன் பல்லவராயனுக்கு ஆணை விடுத்தான்.அஃதாவது, குலசேகரனை விரட்டிப்பராக்கிரம பாண்டியன் மகனான வீரபாண்டியனை அரசனாக்க வேண்டும் என்பது. உடனே அண்ணன் பல்லவராயன் பெரும் படை அனுப்பிக் குலசேகரனை ஒழித்து, வீரபாண்டியனை அரியணை ஏற்றினான். இச்செயற்காக இப் பெரு வீரன் பழையனூரில் பத்து வேலி நிலம் இறையிலியாகப் பெற்றான்.[7]
இங்ஙனம் இராசாதிராசன் ஆட்சியில் சோழர்க்கும் ஈழ அரசர்க்கும் இரண்டு முறை போர் நடத்தது. இருமுறையும் பாண்டிநாடு சம்பந்தமாகவே நடந்தது. முதற்போரில் வெற்றி பெற்ற சோழர் படைத்தலைவன் பல்லவராயன், இரண்டாம் போரில் வெற்றிபெற்ற பெருவீரன் அண்ணன் பல்லவராயன், இந்த இருபோர்களிலும் ஈழத்தரசன் காலாட்படையையும் கப்பற்படையையும் இழந்தான். இரு போர்கட்கும் பிறகு இராசாதிராசன், ‘மதுரையும் ஈழமும் கொண்டருளிய தேவர்[8], ‘என்னும் விருதுப் பெயர் பூண்டான். இங்கு ‘ஈழம் கொண்டது’ என்பது, ‘சீவல்லபனை ஏவி ஈழத்தரசன் வலிதொலைத்தது’ என்னும் பொருள் கொண்டதே ஆகும். இந்த இரண்டு போர்களும் நடைபெற்ற காலம் கி.பி.1169 முதல் 1177 வரை என்னலாம்.
அரசு : நெல்லூர், காளத்தி, நந்தலூர்[9], கங்கபாடி[10] முதலிய இடங்களிற் கிடைத்த சிற்றரசர் கல்வெட்டுகளில் இராசாதிராசன் பேரரசனாகக் குறிக்கப்படலாம், இராசாதிராசன் காலத்திற் சோழப்பெரு நாடு இராசராசன் காலத்தில் இருந்த நிலையிலே இருந்ததென்று கூறலாம்.
சிற்றரசர் : 1. சிற்றரசர் பலருள் முதலிற் குறிப்பிடத் தக்கவன் ‘காரிகைக் குளத்துர் திருச்சிற்றம்பலம் உடையான் பெருமான் ‘நம்பி பல்லவராயன்’ ஆவன். இவன் இராசராசன் உள்ளங் கவர்ந்தவன்; அவனது பேரன்பிற்குப் பாத்திரன் ஆனவன்; அங்ஙனமே இராசாதிராசன் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவனாக இருந்தான். (2) இவனுக்கு அடுத்து அப்பதவியில் இருந்து அருந்தொண்டாற்றிய சிற்றரசன் ‘வேதவனம் உடையான் அம்மையப்பன் என்ற அண்ணன் பல்லவராயன்’ என்பவன். ஈழ வெற்றிகட்கு இவ்விருவரே பொறுப்பாளிகள்.இவர்கள் இன்றேல் சோழப் பேரரசு பல துண்டுகளாகப் பிரிந்து ஒழிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அண்ணன் பல்லவராயன் திருவாரூர், திருவாலங்காடு முதலிய இடங்களில் உள்ள சிவன் கோவில்களில் நிபந்தங்கள் விடுத்துள்ளான்.இவனது சொந்த ஊர் பழையனூர் (3) தென் ஆர்க்காடு கோட்டத்திலும் வட ஆர்க்காடு கோட்டத்திலும் சாம்புவராயரும் காடவராயரும் வன்மையுற்று இருந்தனர். செங்கேணி அம்மையப்பன் சாம்புவராயன் என்பவன் சில இடங்களில் வந்த வருவாயைத் திருப்புலிவனம் சிவன் கோவில் திருப்பனிகட்குச் செலவிட்டதாகக் கல்வெட்டுக் கூறுகிறது. (4) கண்டர் சூரியன் என்பவன் ஒருவன். இவன் ‘பாண்டி நாடு கொண்டான்’ எனப்பட்டான். இவன் திருவக் கரையில் கோவில் கோபுரம் ஒன்றைக் கட்டித் தன் பெயரிட்டான்; சிற்றாமூரில் நிலங்களைப் பள்ளிச்சந்தமாக விட்டான்[11]. (5) ‘செங்கேணி அம்மையப்பன் சீயன் பல்லவாண்டான்’ என்பவன் ஒருவன். இவன்திலவரியும் பிறவரியும் முன்னூரில் உள்ள கோவிலைப் புதுப்பிக்கவோ அல்லது கட்டவோ செலவழித்தவன்[12]. (6) சாம்புவராயர் பலராதல் போலவே மலையமான் சிற்றரசரும் பலராவர்; இவருள் அருளாளப் பெருமாள் என்ற இராசராச மலையமான் ஒருவன். இவன் ‘கண்ணப்பன் மலையமான்’ என்பவன் புதல்வன். இவன் திரிசூலம் கோவிலில் விளக்கிட்டான்[13]. (7) சேதிராயர் என்பவர் சிலர், கோவல ராயர் சிலராவர். இவர்கள் கீழுர், அத்தி (கேரளாந்தக நல்லூர்) முதலிய இடங்களில் உள்ள கோவில்கட்கு நிபந்தங்கள் விடுத்தனர். (8) திருவரங்கம் உடையான் என்ற இராசாதிராசமலையராயன் திருப்பாசூர்க் கோவிலுக்குப் பல தானங்கள் செய்துள்ளான்[14], (9) கோலன் திருக்கொடுங்குன்றம் உடையான் ஆன பொன்னமராவதி நிஷதராசன் என்பவன் ஒருவன். (10) குணமாலைப் பாடி உடையான் ஆட்கொண்டான் கங்கை கொண்டான் என்ற பொத்தப்பிச் சோழன் ஒருவன். (1) நெல்லூரை ஆண்ட சிற்றரசன் ஒருவன், (12) திட்ட குடியில் உள்ள கோவிலுக்கு ஐந்து வேலி நிலதானம் செய்த இராசராச வங்கார முத்தரையன் ஒருவன். இவருள் பலர் இராசராசன் ஆட்சிக்காலத்திலும் இருந்தவராவர்.
இச்சிற்றரசருள் அண்மையில் இருப்பவர் இருவரோ பலரோ தமக்குள் உடன்படிக்கை செய்து கொண்டு உறவாடல் மரபு. இருவர் ஒருவர்க்கொருவர் உற்றுழி உதவி புரிவதென்று வாக்களித்துக் கொண்டனர். பலர் ஒன்று கூடி உறவாடுவதாக ஒப்பந்தம் செய்து கொண்டனர். இவ்வொப்பந்தங்கள் பேரரசின் சம்மதம் பெறாமலே செய்து கொள்ளப் பட்டவை. அதனால், தேவை உண்டாயின், இச் சிற்றரசர் பேரரசரையே ஆட்டிப் படைக்கலாம் அன்றோ?
இளவரசன் : இராசாதிராசன், விக்கிரம சோழ தேவன் பெயரனான ‘நெறியுடைப்பெருமாள்’ மகன். சங்கர சோழன் உலாவிற் குறிக்கப்பட்ட ‘சங்கமராசன்’ என்பவனே நெறியுடைப்பெருமாள்; உலாவிற் குறிக்கப் பெற்ற ‘நல்லமன்’ என்பவனே எதிரிலிப் பெருமாள் என்ற இராசாதிராசன், இரண்டாம் மகனான குமாரமகிதரன் என்பவனே குமார குலோத்துங்கன் என்ற மூன்றாம் குலோத்துங்கன்; மூன்றாம் மகன் சங்கர ராசன். இவனே சங்கர சோழன் என்பவன். இம்மூவரும் ஒரே தந்தையின் மக்களாவர்.[15] ஆதலின், மூன்றாம் குலோத்துங்கனே இளவரசனாக இருந்தான்.
- ↑ 433 of 1924, of R. Dikshitar’s Kulothunga chola III, p. 21-23, 152-163
- ↑ K.A.N. Sastry’s ‘Cholas; Vol. II, p. 87,96
- ↑ 129 of 1927, 263 of 1913.
- ↑ இவ்வரலாறு மகாவம்சம், சோழர் கல்வெட்டுகள், பல்லவராயன் பேட்டைச் சாசனம் இவற்றைக் கொண்டு வரையப்பட்டது.20 of1899,433 of1924,465 of 1905.
- ↑ S.I.I. Vol 6. No. 456.
- ↑ S.I.I.I. Vol. 3, p.212.
- ↑ 465 of 1905
- ↑ 36 of 1906, 731 of 1909, 474 of 1995, etc.
- ↑ Nellore Ins. edited by Butterworth and Venugopala Chetty, Nos. 105, 108 of 1922; 571 of 1907
- ↑ 48 of 1893
- ↑ 195 of 1904, 202 of 1902
- ↑ 71 of 1919
- ↑ 321 of 1901
- ↑ 150 of 1930
- ↑ Vide V.R. Dikshitar's ‘Kulothunka III. pp. 160-163. லால்குடிக்கு நேர்கிழக்கே 5 கல் தொலைவில் ‘சங்கரராசபுரம்’ என்னும் பெயர்கொண்ட சிற்றுார் இருக்கிறது. இவ்வூரில் உள்ள கோவில் கல்வெட்டுகள் சோதித்தற்குரியவை. V.R. Dikshitar's K-III.