உள்ளடக்கத்துக்குச் செல்

சோழர் வரலாறு/சோழரது இருண்ட காலம்

விக்கிமூலம் இலிருந்து

பாகம் 2
1. சோழரது இருண்ட காலம்

பல்லவர்-களப்பிரர்: சங்கத்து இறுதிக் காலத்தில் வேங்கடத்திற்கு அப்பாற்பட்ட நிலப்பகுதியைக் கங்கையாறுவரை சாதவாஹனர் என்னும் ஆந்திர நாட்டு மன்னர் ஆண்டு வந்தனர். அவர்கட்கடங்கித் தென் பகுதியை ஆண்ட மரபினர் பல்லவர் என்பவர். இப்பல்லவர் சாதவாஹனப் பேரரசு வீழ்ச்சியுற்றதும் கிருஷ்ணையாறு முதல் பெண்ணையாறு வரைப்பட்ட நாட்டிற்குத் தாமே உரிமையாளர் ஆயினர்; ஆகித் தெற்கே இருந்த அருவா வடதலைநாடு, அருவா நாடுகளைக் கைப்பற்ற முனைந்தனர். அப்பொழுது அருவா வடதலை நாட்டில் கடப்பைவரை இருந்த பெருங்காட்டுப்பகுதிகளில் வாழ்ந்து வந்த களவர் என்னும் வீரமரபினர் பல்லவர் படையெடுப்பால் நெருக்குண்டனர்; நெருக்குண்டு தம் நாட்டில் இருக்க முடியாராய் அருவா நாட்டினுட் புகுந்தனர். இங்ஙனம் இக்குழப்பம் ஏற்பட்ட காலம் ஏறத்தாழக் கி.பி.300 என்னலாம். களவரை விரட்டி அருவாவடதலை நாட்டைக் கைப்பற்றிய பல்லவர், மேலும் அவருடன் பொருது பாலாற்றுக்குத் தெற்கே அவரை விரட்டி; ஏறத்தாழக் கி.பி. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தைக் கோநகராகக் கொண்டு தொண்டை நாட்டின் வடபகுதியை ஆளலாயினர். இங்ஙனம் ஆண்ட முதற்பல்லவ வேந்தன் சிவ ஸ்கந்தவர்மன் என்பவன்.[1]

களப்பிரர்-சோழர்-பாண்டியர்: சிவ ஸ்கந்தவர்மனால் தோற்கடிக்கப்பட்ட களப்பிரர் வேறு வழியின்றிப் பாலாற்றின் தெற்குமுதல் காவிரியாறு வரை பரவினர்; பின்னர்ச் சோணாட்டின் உட்பகுதியிலும் புகுந்தனர்; சோழர் அரசு நிலைகுலைந்தது. களப்பிரர்  சோணாட்டுடன் நின்று விடாது, பாண்டிய நாட்டிலும் புகுந்து பாண்டியனை ஒடச் செய்தனர். இங்ஙனம் சோழ பாண்டியர் தம் அரசிழந்தகாலம் ஏறத்தாழக் கி.பி. 350-450 எனக் கொள்ளலாம். இங்ஙனம் முடியிழந்த பாண்டிய நாடு, ஏறத்தாழ கி.மு. 590-இல் பாண்டிய அரசனான கடுங்கோனால் நிலைபெற்றது. அதுமுதல் வன்மைமிக்க பாண்டிய மன்னர் பல்லவப் பேரரசரையே எதிர்க்கத் தக்க பேராற்றல் பெற்றனர். ஆதலின், களப்பிரர் வன்மை குன்றிப் பாண்டியரிடம் சிற்றரசராயினர்.

சோணாட்டில் இருந்த களப்பிரர் ஏறத்தாழக் கி.பி. 575 வரை பேரரசராக இருந்தனர்; பின்னர் சிம்மவிஷ்ணு என்ற பல்லவனால் முற்றிலும் முறியடிக்கப்பட்டனர்; சோழ அரசை இழந்தனர்; தஞ்சை, வல்லம், செந்தலை, புதுக்கோட்டை முதலிய இடங்களில் சிற்றரசர் ஆயினர். வலுத்தவர் பக்கம் சேர்ந்து காலத்திற்கு ஏற்றாற்போல நடந்து வந்தனர்.

களப்பிரர் ஆட்சியினின்றும் பாண்டியர் விடுதலை பெற்றாற்போலச் சோழர் கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் விடுதலை பெறக்கூடவில்லை. ஏன் எனில், அக்களப்பிரரினும் வன்மை மிக்க பல்லவர் களப்பிரரை அடக்கி நாட்டைக் கவர்ந்து கொண்டமையின் என்க. இங்ஙனம் நாட்டைக் கவர்ந்த பல்லவர் கி.பி. 875 வரை சோழ நாட்டை விட்டிலர். ஆதலின், சோழர் ஏறத்தாழக் கி.பி. 350 முதல் முடி இழந்து வாழ வேண்டியவர் ஆயினர் என்பது கவனித்தற்கு உரியது.[2] இனி, இந்த இருண்டகாலத்தில் சோழரைப் பற்றிய செய்திகள் குறிக்கும் சான்றுகளைக் காண்போம்.

புத்ததத்தா: இவர் ஒரு பெளத்த சமயப் பெரியார். இவர் 'அபிதர்மாவதாரம்’ என்னும் நூலைச் சோழநாட்டில் இருந்து எழுதியவர். இவர், “காவிரிப்பூம்பட்டினம் செல்வ வணிகரைக் கொண்டது; மாட மாளிகைகள் நிரம்பியது; இனிய பல பூஞ்சோலைகளை உடையது; அரண்மனைகளை உடையது; கண்டதாசன் கட்டிய புத்த விஹாரத்தில் நான் இருந்து, என் மாணவி சுமதியின் வேண்டுகோளால் இந்நூலை எழுதினேன்[3]” என்று மேற்சொன்ன தமது நூலின் ஈற்றிற் குறித்துள்ளார். அவரே தமது ‘விநயவிநிச்சியம்' என்னும் நூலின் இறுதியில், “இந்நூல் புத்த சீடர்களால் வரையப்பட்டது. நான் சோணாட்டில் உள்ள பூதமங்கலத்தில்[4] வேணுதாச விஹாரத்தில் தங்கி இருந்தபொழுது இதனை எழுதினேன். அச்சுத விக்கந்தன் என்னும் களப்பிர மரபரசன் உலகத்தை ஆண்ட பொழுது இந்நூலைத் தொடங்கி எழுதி முடித்தேன்[5]” என்று கூறியுள்ளார். இவர் காலம் ஏறத்தாழக் கி.பி. 450 ஆகும்.[6]

களப்பிரரும் பெளத்தரும்: அச்சுதன் என்னும் களப்பிர அரசன் மூவேந்தரையும் விலங்கிட்டு வைத்ததாக 'தமிழ் நாவலர் சரிதை’ கூறுகின்றது. கி.பி. 10-ஆம் நூற்றாண்டினரான அமிதசாகரர் என்னும் பெளத்தர் இந்த அச்சதனைப்பற்றிய சில பாக்களைக் குறித்துள்ளார். இக்குறிப்பாலும், புத்த தத்தர் இவனைக் குறித்திருப்பதாலும் இவன் பெளத்தனாக இருந்திருக்கலாம் எனக் கோடலில் தவறில்லை. இவன் ‘உலகத்தை ஆண்டான்’ எனப் புத்ததத்தர் கூறலால், அச்சுதன் சோழ-பாண்டிய நாடுகளை ஆண்டனன் என்று கொள்ளலாம். இவன் காலத்தவரே பெரிய புராணம் கூறும் மூர்த்தி நாயனார். இவன் பெளத்தனாக இருந்ததாற்றான் சைவத்திற்குப் பெரும் பகைவனாக இருந்தான் போலும்!

“களப்பிரர் இடையீடு. அப்பொழுது பேரரசரும் சார்வபெளமரும் ஆண்டு மறைந்தனர். பின்னர்க் கடுங்கோன் களப்பிரரை விரட்டிப் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான்” என்று வேள்விக்குடிப்பட்டயம் எடுத்து இயம்புகின்றது. இக்களப்பிரர், வழிவழியாக வந்த பிரம்மதேயத்தை அழித்தனர். அதனைக் கோச்சடையன் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் புதுப்பித்தான். இச்செயலைக் கொண்டும் களப்பிரர் தொடக்கத்தில் பெளத்தராகவும் சமணராகவும் இருந்தனர் எனக் கோடலில் தவறில்லை.

மணிமேகலை காலத்தில் சோழ நாட்டில் பூதமங்கலம் பெளத்தர்க்குரிய இடமாகக் குறிக்கப்பட்டிலது. ஆனால், களப்பிரர் காலத்தில் புத்ததத்தரால் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஏறத்தாழக் கி.பி. 660-இல் புத்தர்கள் இருந்தனர்; சம்பந்தரோடு வாதிட்டுத் தோற்றனர் என்பதை நோக்க. கி.பி. 575-இல் களப்பிரர் வலியை அடக்கிப் பல்லவர் சோழ நாட்டை ஆண்டு வந்த பொழுதும் பூதமங்கலம் சம்பந்தர் காலம் வரை பெளத்த இடமாக விளங்கிவந்தது என்பதை அறியலாம். எனவே பூதமங்கல விஹாரம் களப்பிரர் காலத்தே தோன்றியதென்னல் தவறாகாது.

களப்பிரரும் சமணரும்: கி.பி. 470-இல் மதுரையில் திகம்பர சமணர் அனைவரும் கூடிச் சங்கம் ஒன்றை நிறுவினர். அதன் தலைவர் வச்சிரநந்தி ஆவர் என்று 'திகம்பர தரிசனம்' என்னும் சமணநூல் செப்புகின்றது. இக்காலத்திற் பாண்டிய நாட்டு அரசராக இருந்தவர் களப்பிரரே ஆவர். அவர்கள் காலத்தில் 'திகம்பர சங்கம்’ மதுரையிற் கூடியதெனின், அத்திகம்பர சமணரே சம்பந்தர் காலம் (கி.பி. 670) வரை பாண்டிய நாட்டில் பாண்டிய அரசனையும் தம் வயப்படுத்தி இருந்தனர் எனின், அச்செல்வாக்குப் பிற்கால (கி.பி. 5-ஆம் நூற்றாண்டு)க் களப்பிர அரசராற்றான் உண்டாகி இருத்தல் வேண்டும் என்பது பெறப்படுகின்றன்றோ?

எனவே, இதுகாறும் கூறியவற்றால், களப்பிர அரசருள் முற்பகுதியினர் பெளத்த சமயத்தையும், பிற்பகுதியினர் சமண சமயத்தையும் வளர்த்தவர் என்பதும், அவற்றுள் சம்பந்தர் காலத்தில் சோழநாட்டில் பெளத்தமும் பாண்டிய நாட்டில் சமணமும் இருந்தது என்பதும் அறியத்தக்கன.

களப்பிரர்: சிம்மவிஷ்ணு முதலிய பிற்காலப் பல்லவர் பட்டயங்களிலும் மேலைச் சாளுக்கியர் பட்டயங்களிலும் பிறவற்றிலும் களப்பிரர் பெயர் காணப்படுகின்றது. எனவே, இப்புதிய மரபினர் தமிழ் நாட்டில் பேரரசர்களாகவும் சிற்றரசர்களாகவும் இருந்தனர் என்பது நன்கு தெரிகிறது.

சோழரைப்பற்றிய குறிப்புகள்: சோணாட்டு வரலாற்றில் இருண்ட பகுதியாகிய (கி.பி. 300 - கி.பி. 875) ஏறத்தாழ 6 நூற்றாண்டுகள் கொண்ட காலத்தில் சோழரைப் பற்றிப் பட்டயங்களும் இலக்கியங்களும் கூறுவன காண்போம்:

கி.பி. 400 முதல் 600 வரை கோச்செங்கணான்

இவன் சங்க காலத்தவனா?: இவன் சங்க காலத்தவன் என்பதற்குக் காட்டப்படும் காரணங்கள் இரண்டு: (1) 74ஆம் புறப்பாட்டின் அடிக்குறிப்பில் 'சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு போர்ப் புறத்துப் பொருது பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து ‘தண்ணிர் தா’ என்று, பெறாது, பெயர்த்துப் பெற்றுக் கைகொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு எனவரும் செய்தி, (2) பொய்கையார் சோழன் மீது களவழிப்பாடிச் சிறைப்பட்ட அரசனை மீட்டார் என்பது களவழி ஏடுகளின் ஈற்றில் எழுதப்பட்டுள்ள செய்தி. இவ்விரு கூற்றுகளையும் ஆராய்வோம்.

(1) மேற்சொன்ன 74-ஆம் செய்யுளில் கோச்செங்கணான் என்ற பெயர் இல்லை. அடிக்குறிப்பு, பாடிய புலவன் எழுதியதும் அன்று என்பது ‘உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு’ என்பதால் அறியப்படும். புறநானூற்றுப் பாடலின் கீழ் உள்ள (பிற்காலத்தார்) எழுதிய அடிக்குறிப்புகள் பல இடங்களில் பொருத்த மற்றவை என்பது அறிஞர் நன்கறிந்ததே. சான்றுக்காக ஒர் இடம் குறித்துக் காட்டுதும்; புறம் 389ஆம் செய்யுளில் ‘ஆயுதங்களைப் போல நீ கொடுப்பாயாக’ என வரும் தொடரைக் கண்டதும், அஃது உவமையாகக் கூறப்பட்டது என்பதையும் கவனியாமல், ‘இஃது ஆதனுங்கனைப் பாடிய பாட்டு’ என்று அடிக்குறிப்பு வரையப்பட்டுள்ளது. இங்ஙனம் பிழைபட்ட இடங்கள் பல பொருத்தமற்ற அடிக்குறிப்புகள் பல - இத்தகைய அடிக்குறிப்புகளில் செங்கணானைக் குறிக்கும் அடிக் குறிப்பும் ஒன்றாகலாம். களவழிப்பாக்களைக் காண, கொச்செங்கணான் பேரரசன் என்பதும், வீரம் வாய்ந்த பகைவரைக் கொன்றவன்[7] என்பதும் போரில் கொங்கரையும் வஞ்சிக் கோவையும் கொன்றவன்[8] என்பதும் தெரிகின்றன. பாக்களால், இச்சோழனை எதிர்த்த வஞ்சிக்கோ (சேர அரசன்) போரில் கொல்லப் பட்டான் என்பது விளக்கமாகிறது. கணைக்கால் இரும்பொறை பற்றிய பேச்சே களவழியிற் காணப்பட வில்லை.

(2) முன்சொன்ன 74-ஆம் பாடல் தமிழ் நாவலர் சரிதையில், “சேரமான் கேைணக்கால் இரும்பொறை செங்கணானாற் குடவாயிற் கோட்டத்துத் தளைப்பட்ட போது பொய்கையார்க்கு எழுதி விடுத்த பாட்டு” என்ற தலைப்பின் கீழ்க் காணப்படுகிறது. புறநானூற்று அடிக்குறிப்பும் இதுவும் வேறுபடக் காரணம் என்ன?

(3) புறநானூறு 74-ஆம் செய்யுள் அடிக்குறிப்பு. கனைக்கால் இரும்பொறை சிறைக்கண்ணே இறந்தான் என்பதைக் குறிக்கிறது. ஆயின், தமிழ் நாவலர் சரிதையில் உள்ள செய்யுள் அடியில்,

“இது கேட்டுப் பொய்கையார் களவழிநாற்பது பாடச் செங்கணான் சிறைவிட்டு அரசளித்தால்” என்பது குறிக்கப்பட்டுள்ளது. இவ்விரு கூற்றுகளும் தம்முள் மாறுபடுவதைக் கண்ட நாவலர்-பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள், “துஞ்சினான் கணைக்கால் இரும்பொறையாகச் சிறைவீடு செய்து அரசளிக்கப்பட்டான் பிறனொரு சேரனாவன் என்று கொள்ளவேண்டும்” என்று கூறி அமைந்தனர்.[9] இங்ஙனம் பேரறிஞரையும் குழப்பத்திற்கு உட்படுத்தும் பொருத்தமற்ற அடிக்குறிப்புகளைக் கொண்டு கோச்செங்கணான் போன்ற பேரரசர் காலத்தை வரையறுத்தல் வலியுடைத்தாகாது.

2. கோச் செங்கணான் எழுபது சிவன் கோவில்கள் கட்டினான் எனத் திருமங்கையாழ்வார் குறித்துள்ளார்.[10] சங்க காலத்தில் எந்த அரசனும் சிவன் கோவிலோ, திருமால் கோவிலோ கட்டியதற்குச் சான்றில்லை. சிவன் கோவில்கள் பலவாக ஒரே அரசனால் கட்டப்பட்ட காலம் சைவ உணர்ச்சி வேகம் மிகுதிப்பட்ட காலமாதல் வேண்டும். சங்க காலத்தில் அத்தகைய உணர்ச்சி வேகம் மிக்கிருந்ததாகக் கூறச் சான்றில்லை. சங்க காலத் தமிழகத்தில் பல சமயங்களும் அமைதியாக இருந்தன என்பதே அறியக் கிடக்கிறது. அவ்வமைதியான நிலையில் ஒர் அரசன் 70 கோவில்கள் கட்டுதல் அசம்பாவிதம். ஆயின், சங்க காலத்திற்குப் பின்னும் அப்பர்க்கு முன்னும்  களப்பிரர்-பல்லவர் போன்ற வேற்றரசர் இடையீட்டால் பெளத்தமும் சமணமும் தமிழகத்தில் மிகுதியாகப் பரவலாயின. சங்க காலப் பாண்டியன் அளித்த பிரம்மதேயவுரிமையையே அழிக்கக்கூடிய நிலையில் களப்பிரர் சமயக் கொடுமை இருந்தது என்பது வேள்விக் குடிப்பட்டயத்தால் தெரிகிறது. அக்களப்பிரர் காலத்திற் நான் மதுரையில் மூர்த்தி நாயனார் துன்புற்றார். சோழ நாட்டில் தண்டியடிகள், நமி நந்தியடிகள் போன்ற சிவனடியார்க்கும் சமணர்க்கும் வாதங்கள் நடந்தன. இத்தகைய சமயப்பூசல்கள் நடந்து, சைவசமய வுணர்ச்சி மிகுந்து தோன்றிய பிற்காலத்தேதான் கோச்செங்கணான் போன்ற அரசர் பல கோவில்கள் கட்டிச் சைவத்தை வளர்க்க முற்பட்டிருத்தல் வேண்டும்.

3. கோச்செங்கணானைப் பற்றித் திருமங்கை யாழ்வார் வெளியிடும் கருத்துகள் இவையாகும்[11];

(1) உலகமாண்ட தென்னாடன்[12] குடகொங்கன் சோழன்.

(2) தென் தமிழன் வடபுலக்கோன்.

(3) கழல் மன்னர் மணிமுடிமேல் காகம் ஏறத் தெய்வ வாள் வலங்கொண்ட சோழன்.

(4) விறல் மன்னர் திறல் அறிய வெம்மாவுய்த்த செங்கணான் கோச் சோழன்.

(5) படைமன்னர் உடல் துணியப் பரிநாவுய்த்த தேராளன் கோச்சோழன்.

இக்குறிப்புகளால் இவன் (1) வலிபொருந்திய அரசர் பலரைப் போரில் கொன்றவன்-வென்றவன் என்பதும், (2) கொங்குநாடு வென்றவன் என்பதும், (3) சோழ நாட்டிற்கு வடக்கிருந்த நிலப்பகுதியை (தொண்டை நாட்டை) வென்றவன் என்பதும், (4) சிறந்த யானைப்படை, குதிரைப்படைகளை உடையவன் என்பதும் தெரிகின்றன.

'கழல் மன்னர், விறல் மன்னர், படை மன்னர்’ என்றதால் சோழனை எதிர்த்தவர் மிக்க வலிமையுடைய பகையரசர் என்பது பெறப்படும். அவர்களைச் செங்கணான் 'தெய்வ வாள்' கொண்டு வென்றான் என்பதாலும் பகைவரது பெருவலி உய்த்துணரப்படும். சங்க காலத்தில் இத்தகைய மன்னர் பலருடன் செங்கணான் போரிட்டது உண்மையாயின், அப்போரைப்பற்றிய சில செய்யுட்களேனும் அக்கால நூல்களில் இருந்திருக்க வேண்டும். இல்லையாயின் அவர்கள் இன்னவர் என்ற குறிப்பாவது இருத்தல் வேண்டும். கோச்செங்கணான் செங்குட்டுவனுக்குப் பிற்பட்டவன் (கி.பி. 200 - 250) என்பது வரலாற்று ஆசிரியர் கருத்து. அங்ஙனமாயின், அக்காலத்தில் அவனுடன் போரிட்ட கழல்-விறல்-படை மன்னர்’ யாவர்? சங்க காலத்தில் தொண்டை நாடும் சோழர் ஆட்சியில் இருந்தமை மணிமேகலையால் அறியலாம். அதற்கும் அப்பாற்பட்ட வடபுலத்தை இவன் வென்றான் எனக் கொள்ளின், அப்பகையரசர் யாவர் எனக் கூறுவது? சுருங்கக் கூறின், (1) இவன் அரசன் பலரை வென்றான் என்பதற்குச் சங்க நூல்களிற் சான்றில்லை; (2) இவன் அரசர் பலரை வென்றவனாகக் காண்கிறான்; (3) சங்க இறுதிக்காலத்திலேனும் இங்ஙணம் ஒர் அரசன் இருந்தான் என்று கூறத்தக்க சான்றுகள் இல்லை; (4) இவன் சிவன் கோவில்கள் பல கட்டினவன். இந்நான்கு காரணங்களால் கோச்செங்கணான் சங்க காலத்திற்குப் பிற்பட்டவனாக இருத்தல் கூடும் என்ற எண்ணமே பலப்படும்.

4. கோச்செங்கணான் தில்லையில் சமயத் தொண்டு செய்தவன் என்பது சேக்கிழார் கூற்று. 'தில்லை ஒரு  சிவத்தலமாகச் சங்கச் செய்யுட்களில் கூறப்படாமை நோக்கத்தக்கது. அது கோச்செங்கணான் காலத்திற் சிறப்புப் பெற்றது. அவன் அங்கு மறையவரைக் குடியேற்றி மாளிகைகள் பல அமைத்தான்[13]. இங்ஙனம் தில்லை சிவத்தலமாகச் சிறப்புற்றமை சங்க காலத்திற்குப் பிறகே என்பது தவறாகாது.

5. கோச்செங்கணானது தந்தை பெயர் சுபதேவன் என்பது. தாய் பெயர் கமலவதி என்பது[14]. இப்பெயர் களைச் சோழப் பேரரசின் முதல் அமைச்சரான சேக்கிழார் தக்க சான்று கொண்டே கூறினராதல் வேண்டும். இப்பெயர்கள் தூய வடமொழிப் பெயர்கள். இவ்வாறு சங்க காலத்து அரச குடும்பத்தினர் வடமொழிப் பெயர்களை வைத்துக் கொண்டனர் என்பதற்குப் போதிய சான்றில்லை. சம்பந்தர் காலத்திற்கு முற்பட்ட சுமார் 6 அல்லது 5-ஆம் நூற்றாண்டினர் என்று கருதத்தக்க காரைக்கால் அம்மையார்க்குப் புனிதவதி என்பது பெயர். அப்பெயருடன் மேற்சொன்ன கமலவதி” என்ற பெயர் ஒப்பு நோக்கத்தக்கது.

இத்தகைய பல காரணங்களால் கோச்செங்கணான் சங்க காலத்தவன் ஆகான் எனக் கொள்ளலாம். ஆயின், அவன் அப்பர் சம்பந்தராற் பாடப்பட்டவன். ஆதலின், அவன் காலம் மேற்சொன்ன சங்க காலத்திற்குப் பிறகும் அப்பர் சம்பந்தர் காலத்திற்கு முன்னும் ஆதல் வேண்டும்; அஃதாவது, அவன் காலம் ஏறத்தாழ கி.பி. 300 - 600 - க்கு உட்பட்டது எனக்கூறலாம். இப்பரந்துபட்ட காலத்துள் அவன் வாழ்ந்திருக்கத் தக்க பொருத்தமான காலம் யாதெனக் காண்போம்.

கோச்செங்கணான் காலம்: வேள்விக்குடிப் பட்டயப் படி, சங்க காலத்திற்குப் பிறகு பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் இருந்தது. அக்களப்பிரர் கையிலிருந்தே கடுங்கோன் தன் நாட்டைக் கைப்பற்றினான் என்பது தெரிகிறது. ஆயின், சோழநாடு எவ்வளவு காலம் களப்பிரர் கையில் இருந்தது? கி.பி. 5ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் புத்ததத்தர் குறித்த அச்சுதனுக்கும் பிறகு சோழநாட்டை ஆண்ட களப்பிரர் இன்னவர் என்பது தெரியவில்லை. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இடையில், 'குமார விஷ்ணு' என்ற பல்லவன் காஞ்சியை மீளவும் கைப்பற்றினான். அவன் மகனான புத்தவர்மன் கடல் போன்ற சோழர் சேனைக்கு 'வடவைத்தீப் போன்றவன்' என்று வேலூர்ப் பாளையப் பட்டயம் பகர்கின்றது. கி.பி. 6-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவனாகக் கருதப்படும் முதலாம் நந்தி வர்மன் என்பவன் காஞ்சிபுரத்திலிருந்து பட்டயம் விடுத்துள்ளான்[15]. ஏறத்தாழ கி.பி. 575-இல் சிம்மவிஷ்ணு என்ற பல்லவன் மீண்டும் காஞ்சியைக் கைப்பற்றினான்; சோழர், மழவர், களப்பிரர் முதலியோரை வென்று காவிரிக்கரை வரை பல்லவ நாட்டை விரிவாக்கினான் என்பது வேள்விக் குடிப்பட்டயமும் கசாக்குடி பட்டயமும் குறிக்கும் செய்தியாகும்[16]. இக்குறிப்புகளால் முன்சொன்ன குமாரவிஷ்ணுவுக்குப் பிறகும் சிம்மவிஷ்ணுவுக்கு முன்பும் காஞ்சி பல்லவர் வசம் இல்லாது அடிக்கடி கை மாறியதாக நினைக்க இடமுண்டு. அச்சுதவிக்கந்தர்க்குப் பிறகு, சிம்ம விஷ்ணு சோணாட்டை வெல்லும் வரை களப்பிரரே சோணாட்டை ஆண்டனர் என்பதற்குரிய சான்றும் இல்லை. மேற்குறித்த பல்லவர் செய்திகளைக் காண்கையில், சிம்மவிஷ்ணுவுக்கு முற்பட்டவர் நிலையாகக் காஞ்சியில் தங்கித் தொண்டை மண்டலத்தை ஆண்டனர் என்பது கூறப்படவில்லை. கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இடையில் புத்தவர்மன் கடல்போன்ற சோழர் சேனையோடு போரிட வேண்டியவன் ஆனான்; 6ஆம் நூற்றாண்டின் இறுதியில்  சிம்ம விஷ்ணு சோழரை வென்றான். இவற்றுடன் புத்தவர்மன் போரைக் காணின் அச்சுதக்களப்பிரனுக்குப் பிறகு (கி.பி. 5ஆம் நூற்றாண்டில்) சோழர் கடல் போன்ற சேனையை வைத்திருந்தனர்; அவர் பல்லவருடன் போரிட்டனர் என்பன தெரிகின்றன. இங்ஙனம் கடல் போன்ற சேனையை வைத்துக் கொண்டிருந்த சோழன் சங்ககாலத்திற்கும் பிற்பட்டவனாகக் கருதத்தக்க கோச்சோழன் ஆகலாம். அவன் அரசர் பலரை முறியடித்தவன்; பெரிய யானைப்படை, குதிரைப் படைகளை உடையவன் என்பன களவழியாலும் திருமங்கையாழ்வார் பாசுரங்களாலும் தெரிகின்றன. அச்சோழன், தன் நாட்டைக் கைப்பற்றிக் கொண்ட களப்பிரரை அடக்கிப்பின் வடபுலத்திருந்த புத்தவர்மனுடன் போரிட்டு வெற்றி கொண்டனன் போலும்! அவனை ‘வடபுலக்கோன்’ என்று திருமங்கையாழ்வார் குறித்தமை இதுபற்றிப் போலும்! இங்ஙனம் கொள்ளின், கோச்செங்கணான் காலம் புத்தவர்மன் காலமாகிய கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதி எனலாம். கோச்செங்கணான் மீது பாடப்பெற்ற களவழியின் காலம் ஏறத்தாழக் கி.பி. 450-600 என்ற இராவ் சாஹிப் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் கருத்தும்[17] இந்த முடிவிற்கு அரண் செய்தல் இங்குக் கருதத்தகும்.

புகழ்ச்சோழர் காலம்: நடுவுநிலையினின்றும் மேற்சொன்ன காரணங்கள் பலவற்றையும் ஆராய்ந்தும் இம்முடிவு கொள்ளப்படின், இக்கோச்சோழனை அடுத்து, மேற்சொன்ன இடைக்காலத்தில் இருந்தவராகப் (பெரிய புராணம் கூறும்) புகழ்ச்சோழரை எடுத்துக் கொள்ளலாம். இவர் பெயர் சங்க நூல்களில் இல்லாததாலும் சிம்ம விஷ்ணுவுக்குப் பிறகு பல்லவர் காலத்தில் இத்தகைய சோழப் பேரரசர் இருக்க முடியாமையாலும், இந்த இடைக்காலமே புகழ்ச் சோழர் வாழ்ந்த காலம் எனக்கோடல் பொருத்தமே ஆகும்[18]. அச்சுதன் போன்ற களப்பிரப் பேரரசனும் கோச்செங்கணான், புகழ்ச்சோழர் போன்ற சோழப் பேரரசரும் கி.பி. 5, 6-ஆம் நூற்றாண்டுகளில் இருந்தமையாற் போலும் பல்லவர் சோழநாட்டைக் கைப்பற்றக் கூடவில்லை!

கோச்செங்கணான், புகழ்ச்சோழர், களப்பிர அரசர்களாகிய கூற்றுவ நாயனார்[19] (அச்சுத விக்கந்தன்?) இவர்களை இவ்விடைப்பட்ட காலத்தவராகக் (சுமார் கி.பி.450-550) கொள்ளின், தென் இந்திய வரலாற்றில் இருண்டபாகம் எனப்பட்ட காலத்தின் ஒருபகுதி வெளிச்சமாயிற்றெனக் கொள்ளலாம். 'இவ்விருண்ட காலம்-பல்லவர் காஞ்சியைத் துறந்து தெலுங்கு நாட்டில் வாழ்ந்த காலம்- சோழர் இடையீட்டுக் காலமாக இருத்தல் வேண்டும்' என்று வெங்கையா போன்ற கல்வெட்டறிஞர் கொண்ட கருத்தில்[20] பேரளவு உண்மையுண்டு என்பதும் இதனால் உறுதிப்படும்.

கி.பி. 600 முதல் 850 வரை: (1) ‘பல்லவன் சிம்ம விஷ்ணு (கி.பி. 575-615) காவிரி பாயப் பெற்ற வளமிக்க சோழநாட்டைக் கைப்பற்றினான். அவன் இம்முயற்சியில் தன்னை எதிர்த்த களப்பிரர், சோழர், பாண்டியர் முதலிய தென்னாட்டரசரை வென்றான்’ என்று வேலூர் பாளையச் செப்பேடுகள் செப்புகின்றன[21].

(2) சோழரை வென்றதாகச் சாளுக்கியர் பட்டயம் கூறுகிறது. இவர்கள் ரேனாண்டுச் சோழராக இருத்தல் வேண்டும்[22]

(3) சிம்மவிஷ்ணு மகனான மஹேந்திரவர்மன் சோணாட்டின் பேரழகைக் கண்டுகளிக்கச் சிவனார்க்குத் திருச்சிராப்பள்ளி மலைமீது குகைக்கோவில் அமைத்ததாகக் கல்வெட்டிற் கூறியுள்ளான். அம்மலை சோணாட்டின் தலைமுடி என்று கூறப்பட்டுள்ளது[23]. (4) இரண்டாம் புலிகேசி பல்லவரைக் கச்சிநகர்க் கோட்டைக்குள் புகவிட்டுச் சோழர், பாண்டியர், சேரர்க்கு நன்மைவரச் செய்தான் என்று அய்ஹோளே கல்வெட்டுக் கூறுகிறது. அதன் காலம் கி.பி. 634 ஆகும்[24].

(5) மஹேந்திரன் மகனான முதலாம் நரசிம்மவர்மன் சோழர் உள்ளிட்ட பல தென்னாட்டு அரசரை வென்றதாகப் பட்டயம் பகர்கின்றது.

(6) முதலாம் பரமேசுவரவர்மன் சோழநாட்டை வென்றதாகக் கூரம் பட்டயம் கூறுகின்றது[25].

(7) பரமேசுவரவர்மனை முதலில் தோற்கடித்த முதலாம் விக்கிரமாதித்தன் சோணாட்டு உறையூரில் தங்கியிருந்தான். அப்பொழுது 'கத்வல்' பட்டயம் விடுத்தான். அதன் காலம் கி.பி. 674. அவன் அதனில், தான் சோழ நாட்டை வென்றதாகக் குறித்துள்ளான்[26]. பல்லவரும் தமிழ் அரசரும் அவனைத் தாக்கி வென்றனர் என்று அவன் மகன் கூறியுள்ளான்.

(8) இரண்டாம் நந்திவர்மனை நந்திபுரத்தில் முற்றுகையிட்டவர் தமிழ் அரசர் என்று உதயேந்திரப் பட்டயம் உரைக்கின்றது[27].

(9) இவன் பெயரனான மூன்றாம் நந்திவர்மன் சோழ, பாண்டியரைத் தெள்ளாற்றுப் போரில் முறியடித்தான்[28].

(10) பாண்டியன் கோச்சடையன் தணதீரன் சோழன் செம்பியன் என்று கூறிக்கொள்கிறான் என்று வேள்விக்குடிப் பட்டயம் விளம்புகிறது[29].

(11) முதலாம் வரகுண பாண்டியன் (மாறன் சடையன் - கி.பி. 765-816) தன்னைச் சோழ பாண்டியர் மரபில் வந்தவன் எனத் திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டிற் குறித்துள்ளான்[30].

ரேனாண்டு-சோழர்: கடப்பை-கர்நூல் கோட்டங்களைத் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் ஆண்டிருந்த நான்கு அரசர்கள் பெயர்களைக் கொண்ட பட்டயமும் சில கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. அவர் தம்மை 'ரேனாண்டுச் சோழர்' என்றும் 'கரிகாலன் மரபினர்’ என்றும் கூறிக்கொண்டனர். அவர்கள் ஆண்ட பகுதியில் ஏழாயிரம் சிற்றூர்கள்[குறிப்பு 1] இருந்தன. அவர்கள் நாட்டைக் கி.பி. 639-640-இல் பார்வையிட்ட ஹியூன்-ஸங் தன் குறிப்புப் புத்தகத்தில், தான் சோழ நாட்டைப் பார்த்ததாகக் குறித்துள்ளான்[31]. அவர்கள் எந்தக் காலத்தில் அந்த வடபகுதிக்குச் சென்றனர் - கரிகாலன் காலத்திலா? அல்லது சிம்ம விஷ்ணு சோணாட்டைக் கைப்பற்றிச் சோழ மரபினரைத் தன் வடபகுதி நாட்டைத் தனக்கடங்கி நடக்க ஆளனுப்பினானா?- என்பன விளங்கவில்லை. அவர்களை வென்றதாகப் புலிகேசி கூறுவதால், அச்சோழர் பல்லவர்க்கு அடங்கி - ஆனால் தம் உரிமையோடு ஆண்டவராவர் எனக் கோடலே பொருத்தமாகும். அந்தச் சோழர் இலச்சினை சிங்கம் ஆகும். அவர் பரம்பரை இதுவாகும்.[32]

                                 நந்திவர்மன்
                                      │
             ┌────────────────────────┼─────────────────────────┐
             │                        │                         │
       சிம்மவிஷ்ணு        சுந்தரானந்தன்             தனஞ்சயவர்மன் 
                                                        சோழமகாராசன் 
                                              மகேந்திர விக்கிரமவர்மன் 
  (முதித சிலாகூடிரன்,         நவராமன்,       சேர-சோழ-பாண்டியர்
                                                        │தலைவன்)
              ┌─────────────────────────────────────────┴──────────┐
              │                                                    │
         குணமுதிதன்                        புண்யகுமாரன், போர்முகராமன்,
                                               மார்தவசித்தன், மதனவிலாசன், 
                                                   பிருதிவி வல்லவன் முதலிய
                                                        பெயர்கள் உடையவன்.

  1. கிராமங்கள் என்பர் சிலர், 'மக்கள்' என்பர் சிலர்.
  1. Vide Author's Pallavar Varalaru for more details.
  2. Vide the Author's History of the Pallavas' chap 4.
  3. K.A.N. Sastry’s cholas’ Vol. I, pp. 120-121.
  4. இப்பூதமங்கலமே பெரியபுராணம் கூறும் போதி மங்கை; சம்பந்தர் புத்தரோடு வாதிட்டு வென்ற இடம்.
  5. K.A.N. Sasiry’s cholas, 1, p. 121.
  6. B.C. Law’s History of Pali Literature, vol.2. pp. 984, 385&389. புத்ததத்தர் வரைந்த நூல்களிற் காணப்படும் குறிப்புகளைப்பற்றி J.O.R. Vol. 2. பார்க்க.
  7. செ.6-16.
  8. செ. 14 & 39.
  9. அவர் பதிப்பு, முகவுரை, பக்.5 (கழகப் பதிப்பு)
  10. திருநறையூர்ப் பதிகம், 8.
  11. திருநாறையூர்ப் பதிகம், 3,4,5,6,9.
  12. ‘தென்னவனாய் உலகாண்ட செங்கணான்’ என்ற சுந்தரர் தொடர் இதனுடன் ஒப்புநோக்கத் தக்கது.
  13. கோச்செங்கட் சோழர் புராணம், 15,16.
  14. கோச்செங்கட் சோழர் புராணம், 7.
  15. Ep. Indica, III. y. 145.
  16. Ibid. Heras's ‘Studies in Pallava History,’ p. 20
  17. பல்கலைக்கழகப் பதிப்பு - திரிகடுகமும் சிறுபஞ்சமூலமும், பக்.10-11, 75
  18. C.V.N. Aiyar’s origin and Development of Saivism in S. India.’ p.183.
  19. Ibid pp. 180-181.
  20. Ind Ant. 1908. p. 284.
  21. S.H. I. II. p.208.
  22. Ibid pp. 180-181.
  23. S,I.I. Vol.I. pp. 33-34.
  24. Ep. Indica, Vol. 6, p.6.
  25. S.I.I. Vol. I. p. 151.
  26. Ep. Ind. Vol. 10, p. 103.
  27. S.I.I. Vol. II, p.365.
  28. Ibid, II.p.508.
  29. Ep. Ind. Vol. 17, p. 291-293
  30. A.S. of India. 1903-4, p.275.
  31. Watters, 2, pp. 225 and 341.
  32. Ep, Ind. Vol. 11 p.345.

இப்பெயர்களுள் பல பல்லவ மன்னர்கள் பெயர்கள் அல்லவா? நந்திவர்மன், முதல் நந்திவர்மனைக் குறிப்பது. சிம்ம விஷ்ணு, மகேந்திர வர்மன் என்பன பல்லவர் பெயர்கள். எனவே, இச்சோழர் தம் பேரரசர் பெயர்களைத் தாமும் வைத்துக் கொண்டனர் போலும்! மகேந்திர விக்ரமவர்மன் என்பவன் தன்னை 'முத்தமிழ் வேந்தன் தலைவன்’ என்று கூறியதை நோக்க, அவன் பல்லவர் பொருட்டு முத்தமிழ் மன்னரைப் பொருதனன் போலும் என்பது எண்ண வேண்டுவதாக இருக்கிறது. இறுதி அரசனான புண்ணிய குமரன் பிருதிவி வல்லபன் என்னும் பெயர் கொண்டிருத்தலால், சாளுக்கியர்பால் சார்பு கொண்டவன் போலும்! அவன் மனைவி பெயர் 'வசந்த போற்றிச் சோழ மாதேவி என்பது. இப்பெயரும் சாளுக்கியர் தொடர்பையே உணர்த்துகிறது.

இப்பட்டியலிற் கண்ட அரசர் அன்றி, சோழ மகா ராசாதி ராசன் விக்கிரமாதித்த சத்தியாதித்யன் என்பவன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி இளஞ்சோழமாதேவி என்பவள். அவன் பேரரசன் என்பது அவனது பட்டத்தால் விளங்குகின்றது. அவன் ரேனாண்டு ஏழாயிரத்துடன் சித்தவுட்[1] ஆயிரமும் சேர்த்து ஆண்டவன். இங்ஙனமே தெலுங்கு, கன்னடப் பகுதிகளிலும் பலர் தம்மைக் கரிகாலன் மரபினர் என்று கூறிக்கொண்டு ஆண்டனர். இவற்றை நோக்கச் சங்ககாலச் சோழர் மரபு அழியாது தொடர்ந்து வந்தமை நன்கறியலாம்[2].

சோழரும் பெரிய புராணமும்: இந்த இருண்டகாலச் சோழரைப் பற்றிய குறிப்புகள் கூறத்தக்க சிறப்புடைய நூல்கள் பெரிய புராணமும் திருமுறைகளுமே ஆகும். தேவாரக் குறிப்புகளும் வழி வழியாகச் சோணாட்டில் பேசப்பட்ட குறிப்புகளும் அக்காலத்திலிருந்து இன்று கிட்டாமற் போன வரலாற்றுக் குறிப்புகளும் கொண்டே சேக்கிழார் பெருமான் பெரிய புராணம் பாடி இருத்தலால், நாம், தாராளமாக அந்நூற் குறிப்புகளை இவ்விருண்டகாலத்தனவே எனக் கோடலில் தவறில்லை.

(1) களப்பிர அரசருள் ஒருவரான கூற்றுவ நாயனார் அப்பர்க்கு முற்பட்டவர்[3]. அவர் பல நாடுகளை வென்று, தமக்கு முடிசூட்டுமாறு தில்லைவாழ் அந்தணரை வேண்ட, அவர்கள் 'பழைமையான சோழற்கே முடி புனைவோம் - புதியவர்க்கு முடி புனையோம்' எனக்கூறி மறுத்து, அவர் சீற்றத்துக்கு அஞ்சிச் சேரநாடு சென்றனர்.[4]

(2) ஏறத்தாழக் கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் தண்டி அடிகள் நாயனார் திருவாரூரில் சமணருடன் வாதிட்ட பொழுது நடுவனாக இருந்தவன் சோழ அரசன், ஆவன். அவன் திருவாரூரில் இருந்தான். அவன் தண்டியடிகட்குத் தோற்ற சமணரை அவர் சொற்படியே திருவாரூரை விட்டுப் போகச் செய்தான்.[5]

(3) பழையாறை என்பது கும்பகோணத்திற்கு அண்மையில் இருப்பது. அங்குச் சோழவேந்தன் அரண்மனை இராசேந்திரன் காலத்திலும் இருந்தது. திருநாவுக்கரசர் காலத்தில் அந்நகரில் சோழன் இருந்தான். அவனுக்கு அமைச்சர் இருந்தனர். அவன் அப்பரது உண்ணாவிரதத்தை அறிந்து, சமணரை விரட்டி, அவர்கள் மறைத்திருந்த சிவலிங்கத்தை அப்பர் கண்டு தரிசிக்குமாறு செய்தான்.[6]

(4) அப்பர் காலத்தவரான குங்கிலியக் கலய நாயனார் திருப்பனந்தாளுக்குச் சென்றார். அங்குள்ள சிவலிங்கம் ஒரு பால் சாய்ந்திருந்தது. சோழ மன்னன் யானைகளைப் பூட்டி லிங்கத்தை நேரே நிறுத்த முயன்றும் பயன்படாமையைக் கண்டார்; தாம் முயன்று அதை நிறுத்தினார். அது கேட்ட சோழன் அப்பெரியவரைப் பணிந்து மகிழ்ந்தான்.[7]

(5) பெரும்பாலும் இந்தச் சோழ அரசன் மகளாகவே நெடுமாறன் மனைவியாரான மங்கையர்க்கரசியார் இருத்தல் வேண்டும். என்னை? இந்நிகழ்ச்சி அப்பர் காலத்தே நடந்ததாகலின் என்க.

(6) ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்பவர் காவிரியின் வடகரையில் உள்ள திருப்பெரு மங்கலத்தவர். அவர் முன்னோரும் அவரும் தொன்று தொட்டுச் சோழ அரசன் படைத் தலைவராக இருந்தவர். அவர் சுந்தரர் காலத்தவர்.[8]

(7) சுந்தரர் காலத்திலே கோட்புலியார் என்னும் வேளாளர் இருந்தார். அவரும் சோழர் சேனைத் தலைவரே ஆவர். அவர் தம் அரசனுக்காகப் பெருஞ் சேனையுடன் சென்று போரிட்டார் என்று பெரிய புராணம் புகல்கின்றது.[9]

(8) சுந்தரர் சேரமான் பெருமாள் நாயனாருடன் பாண்டியனிடம் சென்றார். அங்கு அவன் மருமகனான சோழன் இருந்தான். நால்வரும் பல தளிகளைத் தரிசித்தனர்.[10]

சோழரும் வைணவ நூல்களும்

(1) தொண்டர் அடிப்பொடியாழ்வார் திருமங்கையாழ்வார் காலத்தவர். அவர் உறையூருக்கு வந்திருந்தார். அவரைத் தேவ தேவி என்பவர் தாம் உறையூரில் சோழர் அரண்மனையிலிருந்து வெளிவந்தபோது தான் முதல் முதலிற் கண்டதாகத் திவ்விய சூரி சரிதம் கூறுகிறது.

(2) திருமாலை அன்றி வேறு எவரையும் மணக்க இசையாதிருந்த உறையூர் நாச்சியார் 'தரும வருமன்' என்னும் சோழ அரசன் மகளார் ஆவர்.

(3) திருமங்கை என்பது சோழநாட்டின் கண்ணதோர் ஊர். திருமங்கை ஆழ்வார் கள்ளர் மரபினர். அவர் முதலில் சோழன் சேனைத் தலைவராகவே இருந்தனர்.[11]

முடிபு: இதுகாறும் பட்டயங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள் என்பவற்றிலிருந்து கூறிவந்த குறிப்பு களால், சோழர் சிற்றரசராக உறையூர், பழையாறை, திருவாரூர் முதலிய இடங்களில் அரண்மனைகளை அமைத்துக் கொண்டிருந்தனர்; சிறந்த சமயத் தொண்டு செய்து வந்தனர்; அமைச்சர், படைத் தலைவர்களைப் பெற்றிருந்தனர்; பாண்டியர்க்குப் பெண் கொடுத்துப் பெண்பெற்று வந்தனர்; இந்த இருண்ட காலத்தில் வலியிழந்து சிற்றரசராக இருந்தும் கோவிற் பணிகளைக் குறைவின்றிச் செய்து வந்தனர் என்பன போன்ற பல செய்திகளை நன்கு அறியலாம் அன்றோ?


  1. இதன் ஒரு பகுதியே இன்று சித்தவட்டம் என்பது
  2. K.A.N. Sastry’s Cholas ‘Vol.1, pp. 124, 125.
  3. C.V.N. Iyer's Saivism in S. India', p.181.
  4. கூற்றுவர் புராணம், 4.
  5. தண்டியடிகள் புராணம், செ. 13-24.
  6. அப்பர் புராணம், செ. 296-299.
  7. குங்கிலியக்கலயர் புராணம், செ, 23-31
  8. ஏயர்கோன் புராணம், செ. 5.
  9. கோட்புலி நாயனார் புராணம், செ. 1.4.
  10. கழறிற்றறிவார் புராணம், செ. 92-95.
  11. K.A.N. Sastry's Cholas, “Vol.I.p.121.