சோழர் வரலாறு/பிற சோழ அரசர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

11. பிற சோழ அரசர்

முன்னுரை: புறநானூற்றுப் பாடல்களில் சோழ மரபினர் பலர் குறிக்கப் பெற்றுளர். அவர்களைப் பற்றி ஒன்று முதல் நான்கு, ஐந்து பாடல்கள் அந்நூலுட் காண்கின்றன. சிலர் பேரரசராகவும் பலர் சிற்றரசராகவும் இருந்திருத்தல் கூடியதே ஆகும். இவர் தம் குறிப்புகள் அனைத்தும் இப்பகுதியிற் காண்க.

1. இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி

முன்னுரை: இவன் பெயரைக்கான, இவன் பேரரசனாக இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. இராயசூய வேள்வி செய்பவன் பேரரசனாக இருத்தல் வேண்டும். எனவே, இவன் பல நாடுகளை வென்று அடக்கியவனாதல் வேண்டும் என்பதுதானே போதரும், புறம் 16-ஆம் செய்யுள் இவனது போர்த் திறத்தைப் பாராட்டியுள்ளது. அதனைப் பாடியவர் பாண்டரங்கண்ணனார் என்பவர். இவனைப் பற்றிய பாடல்கள் கிடைக்காமை வருந்தற்குரியதே.

போர்ச் செயல்கள்: “இவன் எல்லை இல்லாத படையினையும் துணைப்படை வேண்டாத போர் வெற்றியினையும் உடையவன்; புலால் நாறும் வாளினையும் பூசிப் புலர்ந்த சாந்தினையும் உடையவன்; பகைவரது நெல்விளை கழனியைக் கொள்ளையூட்டி காவற் பொய்கைகளிற் களிறுகளைப் படிவித்து நாடு முழுவதும் செந்நிறமாகச் செய்த பெருவீரன். இவன் எண்ணப்படியே இவனுடைய களிறுகள் போர் செய்ய வல்லன.”[1] இங்ஙனம் இவன் போர் செய்த இடங்கள் எவை என்பது விளங்கவில்லை.

சேரனுடன் போர்: இப்பேரரசன் சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்பவனுடன் போர் செய்தவன். அப்போரில் இவனுக்கு உதவி செய்தவன் திருக்கோவிலுரை ஆண்ட மலையமான் ஆவன். அவனைப் பாட்டி வடம வண்ணக்கன் பெருஞ் சாத்தனார் பாடியுள்ளார்; “மலையன் இல்லாவிடில் நாம் வெல்லுதல் அரிதென்று சோழனும் நின்னைப் புகழ்கின்றான்; மலையன் இல்லாவிடில் நாம் தோற்பதரிது’ என்றுசேரனும் நின்னைப் பாராட்டுகின்றான். வள்ளன்மையிற் சிறந்த பெரியோனே, நண்பரும் பகைவரும் பாராட்டத்தக்க நினது வீரம் புகழ்தற்குரியதே ஆகும்”[2]

சேர பாண்டியர்க்கு நண்பன்: இப்பெருநற்கிள்ளி தன் காலத்துச் சேர பாண்டிய மன்னர்க்கு நெருங்கிய நண்பனாக இருந்தான். இவன் காலத்துச் சேரப் பேரரசன் மாரி வெண்கோ என்பவன்; பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி என்பவன். இவ்விருவரும் சோழனுடன் சில நாள் அளவளாவித் தங்கி இருந்தனர். அவ்வமயம் ஒளவையார் இம்மூவரையும் பாராட்டிப் பாடியுள்ளார்;

“தேவலோகத்தை ஒத்த சிறப்புடைய நாடாயினும் அது நம்முடன் வருதல் இல்லை; அது தவஞ் செய்தோர்க்கே உரியதாகும்; என்றும், இரந்த பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து பல ஊர்களைத் தானமளித்தீர்;[குறிப்பு 1] பசிய இழைகளை அணிந்த மகளிர் பொற்கிண்ணங்களில் ஏந்திய தேனை உண்டு மகிழ்ந்தீர், இரவலர்க்குப் பல நகைகளை அளித்தீர்; இநத நல்வினையே நும்மை வாழச் செய்யும். நீவிர் மூவரும் விண்மீன்களிலும் பல வாழ்நாட்களைப் பெற்று வாழ்வீராக![3]

சிறந்த வள்ளல்: இவனது வள்ளன்மையை உலோச்சனார் என்ற புலவர் அழகாக விளக்கியுள்ளார்: “மலை பயந்த மணியும் காடு பயந்த பொன்னும் கடல் பயந்த கதிர் முத்தமும் வேறுபட்ட உடையும் மதுக்குடமும் கனவிற் கண்டாற் போல (மிகுதியாக) வழங்குகின்ற வள்ளலே, நின் கொற்றம் வாழ்வதாக!”[4]

புரவலன்: இப்பெருந்தகை ஒளவையார், பாண்டரங் கண்ணனார், உலோச்சனார் என்ற பைந்தமிழ்ப் புலவரை ஆதரித்தவன் என்பது இப்பாக்களால் நன்கு தெரிகிறது. இவன் வரையாது வழங்கிய பெருவள்ளல் என்பதும், பார்ப்பார்க்குப் பிரம்மதேயங்களைத் தாரைவார்த்துக் கொடுத்தவன் என்பதும், அவர்கள் துணைகொண்டு இராயசூயம் செய்து புகழ்பெற்றவன் என்பதும் விளங்குகின்றன.

2. போர்வைக் கோப் பெருநற்கிள்ளி[குறிப்பு 2]

முன்னுரை: இவன் தித்தன் என்ற சோழனது மகன்; தந்தையுடன் வேறுபட்டு நாடிழந்து வறுமையுற்றுப் புல்லரிசிக் கூழை உண்டிருந்தவன், முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது கொன்றவன் இவனைப் பாடியவர் சாத்தந்தையார் (சாத்தன் தந்தையார்?)[5] பெருங்கோழி நாய்கன் மகள் தக்கண்ணையார்[6] என்போராவர்.

போர்: இவனது ஊரைக் கொள்ள ஆவூர் மல்லன் வந்தனன் போலும்! அவனுடன் இவன் விரைந்து போர் செய்தான். அப்போர் பொழுது போன பிறகு கட்டிலைப் பிணிக்கும் புலைமகன் கையதாகிய வாரைச் செலுத்தும் ஊசியினும் விரைந்து நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.[7]

நக்கண்ணையார் காதல்: இவர் புலவர் பெண்மணி ஆவர்; பெருங்கோழி (உறையூர்?) நாய்கன் மகளாவர். இவர் கிள்ளிமீது காதல் கொண்டவர்போலப் பாராட்டும் பாக்கள் நயமுடையன;

“வீரக் கழலையும் மைபோன்ற மீசையையும் உடைய இளையோன் பொருட்டு எனது வளை என்னைக் கைவிடுகிறது. அவனைத் தழுவ உள்ளம் உந்துகிறது. ஆயின், யாய்க்கும் அவையோர்க்கும் அஞ்சுகிறேன்.[8] என் சோழன் உப்பு விற்பார் அஞ்சத்தக்க ஏற்றிழிவுடைய துறையைப் போல பகைவர்க்குக் காணப்படுவன். அவன் போரிற் சிறந்தவன்.[9] என் தலைவன் சிறந்த வெற்றி கண்டவன் என்று எல்லாரும் புகழ்தலைக் கேட்டு யான் மகிழ்கின்றேன். என் உள்ளம் கவர்ந்த ஆண்மையுடைய வளவன் வாழ்வானாக!”[10]

3. வேல்பல் தடக்கைப் பெருநற்கிள்ளி

முன்னுரை: இவன் கழாத் தலையார், பரணர் என்பவ ரால் பாடப்பெற்றவன்; குடக்கோ நெடுஞ் சேரலாத னுடன் போர் செய்து இறந்தவன். இரண்டு அரசரும் போர்க்களத்தில் இறந்தமை கண்டு கழாத் தலையாரும் பாணரும் பாடி வருந்தினர். அப்பாடல்களாற் சில செய்திகள் அறியக் கிடக்கின்றன. அவையாவன:

பாடற் செய்திகள்: படைவீரர் பதினெண்பாடை மாக்கள் ஆவர். இறந்த அரசருடன் அவர் தம் மனைவியர் உடன்கட்டை ஏறினர். தேவர்கள் நாற்றமாகிய உணவைப் (போரில் பலர் இறந்தமையின்) பெற்றனர்.[11] யானை குதிரை யாவும் களத்தில் இறந்தன; கரிவீரர் அனைவரும் மாண்டனர்; தேரைச் செலுத்தினவர் எல்லாரும் இறந்தனர். மயிர் சீவாது போர்த்தப்பட்ட கண்ணையுடைய முரசங்கள் அடிப்பாரின்றிக் கிடந்தன. கழனிக் கண் ஆம்பல் தண்டால் செய்த வளையலைப் பெண்கள் அணிதல் மரபு.[12]

4. முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி

இவனைப்பற்றி உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்பவர் பாடிய பாட்டு ஒன்றே கிடைத்துள்ளது. இவன் ஒருநாள் தன் யானை இவர்ந்து செல்கையில், அது மதங் கொண்டு கருவூர்ப் பக்கம் விரைந்து சென்றது. அவனைக் கண்டு கருவூரை ஆண்ட சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறை என்பவன் தன்னுடன் இருந்து முடமோசியார் என்ற புலவரை, ‘இவன் யாவன்?’ எனக்கேட்டான். அப்போது புலவர் இவனது சிறப்பையும் யானை மதங்கொண்டு வழி கடந்து போதலையும் விளங்க உரைத்தார்.[13] இவன் வரலாறு தெரிந்திலது.

5. தித்தன்

சிறப்பு: இவன் உறையூரில் இருந்து அரசாண்ட பழைய வேந்தன். இவன் மகனே முன் கூறப்பெற்ற போர்வைக் கோப் பெருநற்கிள்ளி என்பவன். இத்தித்தன் பெருங்கொடையாளி என்பது,

“இழையணி பணைத்தோள் ஐயை தந்தை
மழைவளம் தரூஉ மாவண் தித்தன்

என்னும் பரணர் அடிகளால் விளங்குதல் காணலாம். இவன் மகள் ஐயை என்ற கற்புடைப் பெண் ஆவள்.

உறையூர்: இவன் உறையூரைச் சிறந்த மதில் அரனும் காட்டரணும் உடையதாகச் செய்து பகைவென்று குடிகளை நன்கு புரந்த காவலன் என்பது பரணர், நக்கீரர் இவர்தம் பாடல்களால் அறியக் கிடக்கிறது.

போரில் பகைவன் ஒட்டம்: வடுக வேந்தனாகிய கட்டி என்பவன் இத் தித்தனுடன் போர் செய்ய வந்தான். அவனுக்கு உதவியாகப் பாண அரசன் (Bana King) ஒருவனும் வந்து உறையூரை முற்றுகை இட்டான். ஒருநாள் சோழன் அவைக்களத்தில் ஒலித்த கிளை ஒசை கேட்டு அச்சமுற்று இருவேந்தரும் ஒடிவிட்டனராம். இது,

“வலிமிகு முன்பிற் பாணனொடு மலிதார்த்
தித்தன் வெளியன் உறந்தை நாளவைப்

பாடின் றெண்கிளைப் பாடுகேட் டஞ்சிப்
போரடு தானைக் கட்டி
பொராஅ தோடிய ஆர்ப்பினும் பெரிதே”[14]

என அகப்பாட்டிற் கூறப்பட்டுள்ளது.

சிறந்த புலவன்: இத்தித்தன் சிறந்த புலவன் என்பது தெரிகிறது. இவன் பாடிய பாட்டொன்று அகநானூற்றில் இருக்கிறது. அஃது இனிமை மிக்க பாடலாகும்.[15]

6. சோழன் நல் உருத்திரன்

புலவன்: இவனது வரலாறு ஒன்றும் தெரிந்திலது. இவன் பாடிய ஒர் அழகிய புறப்பாட்டே இன்று இருப்பது. அதைக் காணின், இவன் விரிந்த உள்ளமுடையாருடன் நட்புச் செய்தலில் மிக்க விருப்பம் உடையவன் என்பதும் செய்யுள் செய்தலில் வல்லவன் என்பதும் தெரிகின்றன. அச்செய்யுளின் பொருள் இதுவாகும்:

“தான் பெற்ற சிறிய கதிரைத் தன் வளையில் வைக்கும் எலிபோலும் சிறு முயற்சியினராகித் தம் செல்வத்தை இறுகப் பிடிக்கும் உள்ள மிகுதி இல்லாதாருடன் பொருந்திய நட்பு எனக்கு இல்லையாகுக; தறுகண்மையுடைய ஆண்பன்றி இடப்பக்கத்தே வீழ்ந்ததாகலின், அதனை உண்ணுதல் இழிவென்று கருதி அன்று அதனை உண்ணாதிருந்து, அடுத்த நாள் மலைக்குகையிலிருந்து புறப்பட்டுச் சென்று பெரிய ஆண் யானையை வலப்பக்கத்தே வீழச் செய்து உண்ணும் புலி பசித்தாற்போலும் மெலிவில்லாத உள்ளமுடைய உரவோர் நட்புடன் பொருந்திய நாள்கள் உளவாகுக”[16]

முல்லைக்கலி: இச்சோழ மன்னன் முல்லைக்கலி பாடிய பெரும் புலவன் ஆவன். எனின், இவனது புலமைச் சிறப்பை யாரால் அளவிட்டுரைக்கலாகும்?


 1. புறம், 16.
 2. புறம், 125.
 3. புறம், 367.
 4. புறம் 377.
 5. புறம், 80-82.
 6. புறம், 83-85.
 7. புறம், 82
 8. புறம், 83.
 9. புறம், 84
 10. புறம், 35.
 11. புறம், 62.
 12. புறம், 63.
 13. புறம், 13. 595-7
 14. அகம்.
 15. அகம்.
 16. புறம், 190.
 1. மறையவர்க்கு ஊர்களைத் தானமளித்தல் சங்ககாலத்திலேயே ஏற்பட்ட பழக்கம் என்பதை இக்குறிப்பு உணர்த்துகிறது. இதனைப் பல்லவர் மிகுதியாகக் கையாண்டனர்.
 2. ‘போரவை’ என்பதே ஏற்புடையதென்பர் - Vide R. Raghava Iyengar’s ‘Tamil Varalaru’ p.60.