சோழர் வரலாறு/முதலாம் இராசராசன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

5. முதலாம் இராசராசன்
(கி.பி. 985 - 1014)

இராசராசன் பிறந்த நாள்: சுந்தரசோழனாகிய இரண்டாம் பராந்தகனுக்கும் வானவன் மாதேவிக்கும் பிறந்தவன் இராச கேசரி முதலாம் இராசராசன். இவன் கி.பி. 985 சூன் திங்கள் 25-ஆம் நாள் அரசு கட்டில் ஏறினான்,[1] தஞ்சை இராசராசேச்சரத்தில் ‘உடையார் இராசராச தேவர் திருச்சதயத் திருவிழா’ எனவும், திருவையாற்று உலோகமாதேவீச்சரத்தில் ‘உடையார் திங்கள் சதய விழா’ எனவும், செங்கற்பட்டுத் திருவிடந்தை வராகப் பெருமான் கோவிலில், யாண்டுதோறும் ஆவணித் திங்கள் சதயநாள் தொட்டு, ‘இராசராசன் திருவிழா’ என ஏழுநாள் நடந்தது எனவும், வரும் கல்வெட்டுகளை நோக்க, இவன் பிறந்த நாள் சதயநாள் என்பது தெரிகிறது. சேரநாட்டுத் திருநந்திக் கரை என்னும் ஊரில் உள்ள சிவன் கோவிலுக்குத் தன் பிறந்த நாளாகிய ஐப்பசி மாதச் சதயநாளில் திருவிழா நடத்தற்காக ‘முட்டம்’ என்னும் ஊரை அளித்தனன் என்பதை அங்குள்ள கல்வெட்டு அறிவித்தலால், இராசராசன் ஐப்பசித் திங்கள் சதயநாளிற் பிறந்தவன் என்பது தெளிவாகிது.இப்பெருமான் பிறப்பைத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் அழகாகச் சிறப்பித்துள்ளன.

இவனது சிறப்பு:விசயாலயற்குப் பின் வந்த சோழர்களிற் சோழப் பேரரசை நன்கனம் அமைத்து நிலைபெறச் செய்த பேரரசன் இராசராசனே ஆவன். இவன் உண்டாக்கிய பேரரசு ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள் நிலையுற்றிருந்தது எனின், இவன் இட்ட அடிப்படை எவ்வளவு உறுதி வாய்ந்ததாக இருந்திருத்தல் வேண்டும்! இராசராசன் தன் தந்தையிடத்தும் பிறகு சிற்றப்பனிடத்தும் இருந்து அரசியல் அமைப்புகளை அழகுற அறிந்திருந்தான்; தான் பட்டம் ஏற்ற பிறகு இன்னின்ன வேலைகளைச் செய்து சோழப் பேரரசை உண்டாக்குதல் வேண்டும் என்று முன்னமே திட்டம் செய்திருந்தான்; பட்டம் பெற்ற பின்னர் அத்திட்டத்தைச் செவ்வனே நிறைவேற்றி வெற்றி கண்டவன். இவனது ஆட்சிக் காலத்திலேயே இவன் தன் மைந்தனான இராசேந்திரனைப் பெரு வீரனாக்கிவிட்டமை பாராட்டற்பாலது. அதனாலன்றோ, அப்பெருமான் கடற்படை செலுத்திக் கடாரம் கைக்கொண்டான்! இராசராசன் ஆண்ட காலமே சோழர் வரலாற்றில் ‘பொற்காலம்’ என்னலாம். இவனது ஆட்சியில் ஒவியம், சிற்பம், நாடகம், நடனம், இசை, இலக்கியம் இன்ன பிறவும்நன்குவளரத் தலைப்பட்டன, இவன் காலத்திற்றான் தேவாரத் திருமுறைகள் நாடெங்கும் பரவின, சைவ சமய வெள்ளம் நாடெங்கும் பரந்து மக்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. சோழப் பேரரசை உண்டாக்கப் பெரும்படை திரட்டியவன் இராசராசனே ஆவன்; அப்படை இவன் நினைத்தன யாவும் தடையின்றிச் செய்துவந்தது பாராட்டற்பாலது. அரசியல் அமைப்பைத் திடமாக அமைத்தவனும் இராசராசனே ஆவன். நாகரிகம் மிகுந்த இக்கால அரசியல் அமைப்பிற்கும் இராசராசன் அரசியல் அமைப்பிற்கும் எள்ளளவும் வேறுபாடில்லை. இராட்டிரகூடர் படையெடுப்பால் துன்புற்ற சோழநாடு இராசராசன் காலத்தில் கிருஷ்ணையாறுவரை பரவியது; மேற்கே அரபிக்கடல் வரை பரவியது; தெற்கே இலங்கை வரை பரவியது எனின் இராசராசன் போர்த்திறனை என்னெனப் புகழ்வது! இப்பெருவேலையைச் செய்ய இவனுக்கு இருந்த சாதனங்களைவிடப் பெருமை பெற்றது இவனது திருவுருவமே என்னல் மிகையாமோ? இவனது திருவுருவம் கண்டவர் உள்ளத்தை ஆர்க்கத்தக்கதாக இருந்திருத்தல் வேண்டும். இவனுடைய திருவுருவமும் கோப்பெருந்தேவியின் திருவுருவமும் சிலை வடிவில் திருவிசலூர்க்கோவிலில் இருக்கின்றன. சுருங்கக் கூறின், இராசராசன் அரசியலிற் பண்பட்ட அறிவுடையவன்; சிறந்த போர்த்தொழிலில் வல்லவன்; சிறந்த சமயப்பற்று உடையவன்; பேரரசை உண்டாக்கும் தகுதி முற்றும் பொருந்தப் பெற்றவன் எனலாம். சோழர் வரலாற்றை இன்று நாம் அறிந்து இன்புற வழிவகுத்தவன் இப்பேரறிஞனே ஆவன். எப்படி?

மெய்க்கீர்த்தி : ‘இச்சோழற்கு முற்பட்ட பல்லவர், பாண்டியர் பட்டயங்களும் கல்வெட்டுகளும் பல கிடைத்துள்ளன. அவற்றில் அரசமரபு கூறப்பட்டிருக்கும். அந்தந்த அரசன் சிறப்புச் சிறிதளவே கூறப்பட்டிருக்கும்; முற்றும் கூறப்பட்டிராது: விளக்கமாகவும் குறிக்கப்பட்டிராது. இம்முறையையே விசயாலயன் வழி வந்தவரும் பின்பற்றி வந்தனர். ஆனால், இராசாசன் இந்த முறையை அடியோடு மாற்றிவிட்டான்; தனது ஆட்சியாண்டுகளில் முறையே நடைபெற்ற போர்ச் செயல்களை முறையே வெளிவந்த கல்வெட்டுகளில் முறைப்படி குறித்து வரலானான். சான்றாக ஒன்று கூறுவோம்: இராசராசன் முதலில் காந்தளூர்ச் சாலையில் கலம் அறுத்தான். இந்த வெற்றியே இவன் கல்வெட்டுகளில் முதல் இடம் பெற்றது. இதன் பின்னர்ச் செய்த போர் இரண்டாம் இடம்பெற்றது. இப்படியே ஒன்றன்பின் ஒன்றாக முறைப்படி குறிக்கப் பட்டன. இங்ஙணம் இப்பெரியோன் ஒழுங்குபெறக் குறித்தவையே பிற்கால அரசராலும் பின்பற்றப்பட்டன. அக்குறிப்புகளே இன்று சோழர் வரலாற்றுக்கு உறுதுணை செய்கின்றன. பட்டயம் அல்லது கல்வெட்டுக்குத் தொடக்கமாக ஒரு தொடரை அழகாக அமைத்தவனும் இராசராசனே ஆவன். ‘இஃது இவனது பட்டயம் அல்லது கல்வெட்டு’ என்று எளிதில் கூறிவிடத் தக்கவாறு அத் தொடக்கம் இருக்கிறது. அது ‘திருமகள் போல...’ என்பதாகும். இவனது வீரமகனான இராசேந்திரன் கல்வெட்டும் பட்டயமும் வேறு தொடக்கம் உடையவை. இங்ஙனமே பின்வந்தார் பட்டயங்களும் கல்வெட்டுகளும் வேறுவேறு தொடக்கம் கொண்டவை. இத்தகைய ஒழுங்கு முறையை அமைத்த இப்பேரரசனின் அறிவாற்றலை என்னெனப் பாராட்டுவது!

சுற்றுப்புற நாடுகள்: இராசராசன் பட்டம் பெற்ற காலத்தில் சோழ அரசு வடக்கில் தொண்டைநாடுவரையும் தெற்கில் பாண்டியநாட்டு வட எல்லை வரையுமே பரவி இருந்தது. எனவே, வடக்கே கீழைச் சாளுக்கியர் ஆட்சி நெல்லூர் வரை பரவியிருந்தது; தெற்கே பாண்டியநாடு தனித்து இருந்தது; மேற்கே சேர நாடு கங்கநாடு, குடகு, நுளம்பபாடி, தடிகைபாடி, மேல் கடற்கரை நாடு முதலியன தனித்தனிச்சிற்றரசுகளாக இருந்தன. வடமேற்கே இராட்டிரகூடரை அழித்துப் புதிய பேரரசை இரட்டபாடியில் அமைத்த மேலைச் சாளுக்கியர் ஆண்டு வந்தனர். இலங்கையில் ஐந்தாம் மகிந்தன் ஆண்டுவந்தான்.

சேர பாண்டியருடன் போர் : இராசராசன் பட்டம் பெற்ற ஆண்டு கி.பி. 985, இவன் சேர நாட்டிற் படையெடுத்த ஆண்டு கி.பி.989.எனவே இவன் ஏறத்தாழ நான்காண்டுகள், தன் படையைப் பெருக்குவதிற் செலவழித்தான் எனலாம். சேர நாட்டின்மீது சென்ற படைக்குத் தலைமை பூண்டவன், பஞ்சவன்மாராயன் என்னும் பெயர்கொண்ட இராசேந்திர சோழனே ஆவன். மலைநாடு, அடைதற்கு அரியதாய் மலையும் கடலும் குழ்தரப் பரசுராமனால் அமைக்கப்பட்டதென்று திருவாலங்காட்டுச் செப்பேடு செப்புகிறது. இம்மலை நாட்டுத் துறைமுகப் பட்டினமான காந்தளூர்ச் சாலையில் போர் நடந்தது. அப்போரில் சேரனும் பாண்டியனும் சேர்ந்து சோழரை எதிர்த்தனர். பாண்டியன் அமரபுசங்கன் என்பவன்;[2] சேரன் பாஸ்கர ரவிவர்மன் திருவடி (கி.பி. 978-1036) என்பவன்.[3] போரில் சோழர்படை வெற்றி பெற்றது. இராசராசனது 4ஆம் ஆண்டுக் கல்வெட்டு ‘காந்தளூர்ச் சாலையில் கலம் அறுத்தருளி’ எனக் குறிப்பதால்,[4] இராசராசன் காந்தளூரில் இருந்த சேரர் மரக்கலங்களை அழித்தவன் என்பது புலனாகிறது. ஆயினும், கி.பி 993 முதலே இராசராசன் கல்வெட்டுகள் சேர நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் காணக் கிடைத்தலால், இரண்டு நாடுகளையும் வென்று சோழர் ஆட்சியை அங்கு உண்டாக்கி அரசியல் அமைதியை நிறுவ நான்காண்டுகள் ஆகி இருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. சேர நாட்டை வென்ற இராசராசன் அந்நாட்டில், தான் பிறந்தநாளைக் கொண்டாட ஏற்பாடு செய்தான் என்பது முன்னமே கூறப்பட்டதன்றோ? பஞ்சவன் மாராயன் பாண்டியனை ஒடச்செய்தான்; விழிஞம் என்னும் துறைமுகத்தைக் கைக்கொண்டான்.இராசராசனுக்குத்தென்ன பராக்கிரமன் என்னும் விருதுப்பெயர் இருத்தலாலும், பாண்டி நாட்டிற் பற்பல இடத்தும் இவன் கல்வெட்டுகள் இருத்தலாலும், பாண்டிய மண்டலம் 'இராசராச மண்டலம் என வழங்கப் பெற்றமையாலும், இராசராசன் பாண்டிய நாட்டை முழுவதும் வென்று அடக்கி ஆண்டான் என்பது வெள்ளிடை மலைபோல் விளங்குகிறதன்றோ?

மலை நாட்டுப் போர் : குடமலை நாடு என்பது குடகு நாடாகும். அந்நாட்டில் உதகை என்பது அரண் மிகுந்த இடமாக இருந்தது. இராசராசன் தன் தூதனைக் குடமலை நாட்டிற்கு அனுப்பினான். அவனைக் குடமலை நாட்டரசன் சிறை செய்தனனோ, அல்லது கொன்றனனோ புலப்படவில்லை. இராசராசன் அங்குப் படையெடுத்துச் சென்றான், உதகையை அடைய 18 காடுகள் தாண்டினான்; காவல்மிகுந்த உதகையை அழித்தான் குடமலைநாட்டைக் கைப்பற்றினான். இச்செயல் கி.பி. 1008 - க்குச் சிறிது முன் நடைபெற்றதாகும். இப்போரைப் பற்றிய குறிப்புகள் கலிங்கத்துப் பரணியிலும் மூவர் உலாவிலும் காணலாம். இப்படையெடுப்பில் தலைமை பூண்ட தானைத்தலைவன் இராசேந்திரன் போலும்![5] இப்படையெடுப்பின்போது குடமலை நாட்டை ஆண்டவன் மீனிசா என்பவன். போர் நடந்த இடம் பனசோகே என்பது. மீனிசா, போரில் திறம்பட நடந்துகொண்டதால், அவன் வீரத்தைப் பாராட்டிய இராசராசன், அவனுக்குச் சத்திரிய சிகாமணி கொங்காள்வான் என்ற பட்டம் சூட்டி, மாளவி என்னும் ஊரை நன்கொடையாகக் கொடுத்தான்.[6]

கொல்லம், மேற்கரை நாடுகள் : இராசேந்திரன் பிறகு கொல்லத்தின்மீது சென்று, கொல்லம், கொல்ல நாடு, கொடுங்கோளுர் முதலிய பகுதிகளில் இருந்த சிற்றரசரை வென்று மேலைக் கடற்கரை நாட்டையும் கைப்பற்றி, எங்கும் பெருவெற்றி பின்தொடர மீண்டான். இவ்வெற்றிகட்குப் பின் இராசராசன் ‘கீர்த்தி பராக்கிரம சோழன்’ என்னும் விருதுப்பெயர் பெற்றான்.

கங்கபாடி : கங்கபாடி என்பது மைசூரின் பெரும் பகுதியாகும். தலைநகரம் தலைக்காடு என்பது. இவர்கள் சோழர் பேரரசை எதிர்த்து நின்றவர்; பல்லவர் கால முதலே பல நூற்றாண்டுகளாகக் கங்கபாடியை ஆண்டு வந்தவர். நுளம்பர் என்பவர் இவர்கட்கு அடங்கியவர். இராசராசன் கொங்கு நாட்டிலிருந்து காவிரியைத் தாண்டிக் கங்கபாடியில் நுழைந்தான்; முதலில் தடிகைபாடியைக் கைக்கொண்டான்; கங்கபாடியையும் கைப்பற்றினான்.[7]

நுளம்பபாடி : நுளம்பபாடி என்பது மைசூரைச்சேர்ந்த தும்கூர், சித்தல் துர்க்கம் கோட்டங்களும், பெங்களுர் கோலார், பெல்லாரிக் கோட்டங்களும் சேர்ந்த நிலப்பரப்பாகும். இதனை ஆண்டவர் நுளம்பப் பல்லவர் என்பவர். இவராட்சியில் சேலம், வட ஆர்க்காடு கோட்டங்களின் வடபகுதியும் சேர்ந்திருந்தது.[8] இந்நிலப் பகுதி இராசராசன் பேரரசிற் கலந்துவிட்ட பிறகு, நுளம்பப் பல்லவர் சிற்றரசராகவும் சோழ அரசியல் அலுவலாளராகவும் இருக்கலாயினர். ஐயப்பன் மகனான கன்னராசன் என்பவன் தடிகைபாடியின் ஒரு பகுதியை இராசராசற்கு அடங்கிய சிற்றரசனாக இருந்து ஆண்டு வந்தான் : ‘நொளம்பாதி ராசன்’ என்பவன் இராச ராசன் தானைத் தலைவனாக இருந்தான். ‘நொளம்பாதி ராசன் சொரபையன்’ என்னும் சிற்றரசன் ஒருவன் இருந்தான்.

தெலுங்க நாடு : தொண்டை நாட்டிற்கு வடக்கே கீழைச்சாளுக்கியர் ஆட்சி நெல்லூர் வரை பரவியிருந்தது. கிருஷ்ணையாறு முதல் வடபெண்ணையாறு வரை இருந்த நாடு சீட்புலிநாடு, பாகிநாடு என்று பெயர் பெற்றிருந்தது. இராசராசன் காருகுடியைச் சேர்ந்த பரமன் மழபாடியார் என்னும் மும்முடிச்சோழன் என்ற சேனைத் தலைவனைப் பெரும்படையோடு அங்கு அனுப்பினன். அத்தலைவன் பீமன் என்னும் அரசனை வென்று அந்நாடுகளைச் சோழப் பேரரசில் சேர்த்தான் மந்தை மந்தையாக ஆடுகளையும் பிற பொருள்களையும் கைக் கொண்டு மீண்டான் என்று காஞ்சிபுரக் கல்வெட்டொன்று கூறுகிறது.[9] நெல்லூர்க் கோட்டத்தைச் சேர்ந்த ரெட்டி பாளையத்துக் கல்வெட்டில் இராசராசனது 8ஆம் ஆட்சி ஆண்டைக் குறிப்பிட்டு அவனது சிற்றரசன் அல்லது அரசியல் அலுவலாளனான மும்முடி வைதும்ப மகாராசன் ஆன துரை அரசன் என்பவன் தானம் செய்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.[10]

கீழைச் சாளுக்கிய நாடு : இராசராசன் காலத்தில் கீழைச் சாளுக்கிய நாடு பெருங்குழப்பத்தில் இருந்தது. அந்நாடு கிருஷ்ணை, கோதாவரியாறுகட்கு இடைப்பட்டது. அந்நாட்டு அரசமரபினருள் இரண்டு கிளையினர் தோன்றி ஒருவரை ஒருவர் நாட்டைவிட்டு விரட்ட முயன்றனர்.நாடு கலகத்திற்கு உட்பட்டது. சக்திவர்மன் என்பவன் ஒரு கட்சியினன். அவனை மற்றொரு கட்சியினர் நாட்டைவிட்டு விரட்டி விட்டனர். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சக்திவர்மன் மரபினர் நாட்டை ஆள இடமின்றித் தவித்தனர். இப்போராட்டம் கி.பி. 925-லிருந்து நடந்துவந்ததெனினும், உச்சநிலை பெற்றது இராசராசன் காலத்திலே ஆகும். சக்திவர்மன் மரபினர் அரசுக்குரிய மூத்த குடியினர். இளங்குடியினர் நாட்டைக் கவர்ந்து ஆண்டனர். சக்திவர்மன் இராசராசனைச் சரண் அடைந்தான். ஏறத்தாழக் கி.பி. 999-இல் இராசராசன் வேங்கி நாட்டைக் கைப்பற்றிச் சக்திவர்மனை அரசனாக்கினன். சக்திவர்மன் சோழனுக்கு அடங்கிய சிற்றரசனாக- ஆனால் தனி அரசனாக இருந்து வேங்கி நாட்டை ஆண்டுவந்தான். இவன் இளவலான விமலாதித்தனுக்கு இராசராசன் தன் மகளான குந்தவ்வையை மணம் செய்து கொடுத்தான்.[11] இவ்விரண்டு செயல்களாலும் கீழைச் சாளுக்கிய நாடு சோழப் பேரரசின் சிறந்த உறுப்பாக விளங்கியது. கீழைச் சாளுக்கிய மரபு சோழமரபுடன் ஒன்றுபட்டுவிட்டது; சோழப் பேரரசிற்கும் வடக்கில் அச்சம் இல்லாதொழிந்தது. இராசராசன் மருமகனான விமலாதித்தன் திருவையாற்றில் தம் மாமியார் கட்டிய கோவிலுக்குத்தானம் செய்துள்ளான்.[12]

கலிங்கநாடு : இராசராசன் தான் கலிங்கத்தை வென்றதாகக் கூறியுள்ளான். மகேந்திர மலையில் இரண்டு கல்வெட்டுகள்[13] கிடைத்தன. அவற்றில், ‘விமலாதித்தன் என்னும் குலூத நாட்டு அரசனை இராசேந்திரன் வென்றான்; வென்று மகேந்திரமலை உச்சியில் வெற்றித்துரண் ஒன்றை நாட்டினான்’ என்னும் செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. ஆயின், இச் செய்தியை இராசேந்திரன் ஆட்சியில் நடந்ததாக அவனுடைய கல்வெட்டுகள் கூறவில்லை. ஆதலின், இப் படையெடுப்பும் வெற்றியும் இராசராசன் காலத்திற்றான் நடந்திருத்தல் வேண்டும். குலுரத நாடு என்பது மகேந்திர மலையைத் தன் அகத்தே கொண்ட கலிங்கநாடு போலும்! இங்குக் குறிப்பிட்ட விமலாதித்தன் சாளுக்கிய (முன் சொன்ன) விமலாதித்தன் எனத் தவறாகக் கொண்டு வரலாறு எழுதினோரும் உண்டு.

ஈழ மண்டலம் : கி.பி. 993-இல் வெளிவந்த கல்வெட்டுகளிலேயே இராசராசன் ஈழ மண்டலத்தை வென்றமை குறிப்பிடப்பட்டுள்ளது. “இராமன் குரங்குகளின் துணையைக் கொண்டு பாலம் கட்டி அரும்பாடுபட்டு இராவணனைக் கொன்றான். ஆயின், இராசராசன் பாலம் கட்டாமலே படைகளைக் கப்பல் மூலமாகக் கொண்டுசென்று இலங்கை இறைவனை எரிக்கு இரையாக்கினான். இதனால் இவன் இராமனினும் சிறந்தவனே ஆவன்” என்று திருவலாங்காட்டுப்பட்டயம் பகர்கின்றது. இராசராசன் காலத்தில் இலங்கையில் குழப்பம் மிகுதியாக இருந்தது. இலங்கை அரசனான ஐந்தாம் மகிந்தன் தென்கிழக்கில் இருந்த மலை அரணையுடைய ‘ரோஹணம்’ என்னும் இடத்திற்குச் சென்று விட்டான். அச்சந்தர்ப்பத்தில் இராசராசன் வட இலங்கையைக் கைப்பற்றி, அதற்கு[14] மும்முடிச் சோழ மண்டலம் என்னும் பெயரிட்டான்.

இப்படையெடுப்பினால் அநுராதபுரம் அழிவுற்றது. பொலநருவா சோழர் தலைநகரம் ஆனது; அது ‘ஜனநாத மங்கலம்’ என்று பெயர் பெற்றது; இராசராசன் அத்தலை நகரில் சிவன் கோவில் ஒன்றைக் கட்டினான். இக்கோவில் சுதை, செங்கல் முதலியன கொண்டு அழுத்தமாகவும் அழகாகவும் கட்டப்பட்டது. சுற்றிலும் மதிலையுடைய கோநகரத்தில் இக்கோவில் அழகுற அமைந்துள்ளது. இஃது இன்றும் தன் எழில் குன்றாது இருத்தல் வியப்புக்குரியது.[15] தாழி குமரன் என்னும் சோழ அரசியற் பணியாளன் ஒருவன் மாதோட்டத்தில் (இராசராச புரத்தில்), அழகிய கோவில் ஒன்றைக் கட்டி ‘இராசரா சேச்சரம்’ எனப் பெயரிட்டான்; அதற்குப் பல தானங்கள் செய்துள்ளான்.[16] இராசராசன் தான் தஞ்சாவூரிற்கட்டிய பெரிய கோவிலுக்கு ஈழத்திலிருந்து பணமும் இலுப்பைப் பாலும் அனுப்ப ஏற்பாடு செய்திருந்தான்.[17]

மேலைச் சாளுக்கியர் : இரட்டபாடி என்பது இராட்டிரகூடர் அரசாண்ட நிலப்பகுதி. இதுவே பல்லவர் காலத்தில் மேலைச்சாளுக்கியர் ஆண்ட நாடு. கி.பி. 975-இல் இரட்டரை வலிதொலைத்து மீட்டும் மேலைச் சாளுக்கியர் தம் பண்டைப் பேரரசை நிலைநிறுத்தினர். அவருள் முதல்வன் இரண்டாம் தைலபன் எனப்பட்ட ஆகவமல்லன் ஆவன். இப்பேரரசன் கி.பி. 992-இல் இராசராசனை வென்றதாகக் கல்வெட்டு ஒன்றில் கூறிக்கொண்டான்.[18] ஆனால், இதைப் பற்றி விளக்கம் இதுகாறும் கிடைத்திலது. கி.பி. 992-க்கும் பிறகு அரசனான சத்தியாஸ்ரயன் இராசராசனுடன் போரிட்டான் போலும் இராசராசன் சத்யாஸ்ரயனுடன் போரிட்டு அவனது செல்வத்தைத் தஞ்சைப் பெரிய கோவில் கட்டச் செலவழித்தான் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன.[19] “சத்யாஸ்ரயன் போர்க்களத்திலிருந்து புறங்காட்டிஓடிவிட்டான். அவன் ‘கஷ்டாஸ்ரயன்’ ஆனான்’ என்று திருவாலங்காட்டுப் பட்டயம் பகர்கின்றது. சத்யாஸ்ரயனுடைய தார்வார் (ஹொட்டுர்) கல்வெட்டு, (கி.பி.1005) “சோழர் மரபுக்கணியான இராசராச நித்தியவிநோதனது மகனான சோழ இராசேந்திர வித்யாதரன் தோணூர் (பீசப்பூர்க் கோட்டத்தில் உள்ளது) வரை வந்தான்; அவன் 9 லக்கம் துருப்புகளுடன் வந்தான்; நாடு முழுவதையும் கொள்ளை அடித்தான்; பெண்கள் குழந்தைகள் முதலியவர்களைக் கொன்றான். தமிழரை ஒழிக்கும் சத்யாஸ்ரயன் இராசேந்திரனைப் புறங்காட்டி ஒடச்செய்தான்” என்று கூறுகிறது.[20]

இக்குறிப்புகளால், முதலில் சத்யாஸ்ரயன் தோற்றனன் என்பதும், பிறகு சோழர் அந்நாட்டை ஆள முடியாமல் திரும்பிவிட்டனர் என்பதும் சத்யாஸ்ரயன் படைவலி மிக்கவன் என்பதும் தெரிகின்றன. இதுகாறும் கூறிவந்த செய்திகளால், இராசராசன் வடக்கே கிருஷ்ணையாறு முதல், வடமேற்கே துங்கபத்திரையாறு முதல் தெற்கே குமரிமுனை வரை, கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லைகளாகக் கொண்டதென்இந்தியா முழுவதையும் பிடித்து ஆண்டவன் என்பது நன்கு விளங்குமன்றோ? இவற்கு முன் இங்ஙனம் சோழப் பேரரசை உண்டாக்கினோர் ஒருவரும் இலர் இலர்! இராசராசன் கங்கபாடி, வேங்கி மண்டலம் இரண்டிற்கும் தன் மகனான பேராற்றல் படைத்த இராசேந்திரனையே மகா தண்டநாயகனாக வைத்திருந்தான். இங்ஙனம்செய்துவைத்த பாதுகாவலால், மேலைச் சாளுக்கியர் சோழநாட்டின் மீது படையெடுக்கக் கூடவில்லை. மேலும், மேலை சாளுக்கியர் வடக்கே பரமாரர் என்னும் மாளுவநாட்டு அரசரால் அடிக்கடி துன்பத்திற்கு உள்ளாயினர். வடக்கே பரமாரராலும் தெற்கே சோழராலும் சாளுக்கியர் அடைந்த இன்னல்கள் பலவாகும்.

பழந்திவு பன்னிராயிரம்: இராசராசன் அலைகடல் நடுவிற் பலகலம் செலுத்தி, முந்நீர்ப் பழந்தீவு பன்னிராயிரமும்[21] கைப்பற்றினன். இங்ஙனம் சென்ற இடம் எல்லாம் வெற்றிச் சிறப்பெய்திய இராசராசன் சயங்கொண்ட சோழன் எனப்பட்டான். அதுமுதல் தொண்டை மண்டலம் ‘சயங்கொண்ட சோழ மண்டலம்’ எனப்பட்டது. இராசராசன் உய்யக் கொண்டான் மலை (திருக்கற்குடி) நாயனார்க்குப் பொற்பட்டம் ஒன்றை அளித்தனன். அதன் பெயர் 'சயங்கொண்டசோழன்’ என்பது[22]. கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகில் உள்ள ஊரும் ‘சயங்கொண்ட சோழபுரம்’ எனப்பட்டது.

சிற்றரசர் : பழுவேட்டரையர் கந்தன் மறவன் என்பவன் ஒரு சிற்றரசன். இப்பழுவேட்டரையர் கீழ்ப் பழுவூர். மேலப்பழுவூர்களை ஆண்டுவந்தவர். இவர் மரபிற்றான் முதற்பராந்தகன் பெண் எடுத்தான். அதுமுதல் இம்மரபினர் சோழர்க்குப் பெண் கொடுக்கும் உரிமைபெற்றிருந்தனர். இவர்கள் இராசராசனுக்குக் கீழ்த் தம்மாட்சி நடத்தினோர் ஆவர்.[23] கந்தன் மறவன் மேலப்பழுவூரில் திருத்தோட்டம் உடையார்க்குக் கோவில் கட்டினவன்; நந்தி புரத்தில் இருந்த வரிமுறையைத் தன் ஊரிலும் ஏற்படுத்தியவன்.[24] வட ஆர்க்காடு கோட்டத்தில் இலாடராயர் என்னும் சிற்றரச மரபினர் ஆண்டுவந்தனர். இவர்கள் பஞ்சபாண்டவர் மலை என்னும் இடத்தில் ஆட்சி புரிந்தோர் ஆவர். இவருள் உடையார் இலாடராயர் புகழ்விப்பவர் கண்டன் ஒருவன். அவன் மகன் உடையார் வீரசோழர் என்பவன் ஒருவன். இவனே இராசராசன் காலத்தவன்; தன் மனைவி வேண்டுகோளுக்கு இணங்க ஒரு சமணப் பள்ளிக்குத் தானம் செய்தவன்.[25] கடப்பைக் கோட்டத்தில் மகாராசப் பாடியை ஆண்டு வந்த துக்கரை என்னும் பெயருடைய வைதும்பராயன் மகன் நன்னமராயர் என்பவன் திருவல்லம் (வடஆர்க்காடு) கோவிலுக்குத் தானம் செய்துள்ளான்[26].கி.பி. 993-இல் மும்முடி வைதும்ப மகாராசன் என்பவன் ரெட்டிபானையம் கோவிலுக்குத் தானம் செய்தான். சளுக்கிவீமன் என்பவன் ஒரு சிற்றரசன். அவன் மனைவி ‘விமயன் வம்பவை’ திருவையாற்றுக் கோவிலில் விளக்குவைக்கப் பொருள் உதவி செய்தாள். அச் சிற்றரசன் எந்தப் பகுதியை ஆண்டவன் என்பது விளங்கவில்லை[27] இங்ஙனம் சிற்றரசர் பலர் சோழர் பேரரசில் இருந்தனர். மறவன் நரசிம்மவர்மன் என்னும் பாண அரசன் தென் ஆர்க்காடு கோட்டத்தில் ‘சம்பை’ என்னுமிடத்தருகில் இருந்தவன் ஆவன். இவன் அந்த இடத்தில் ஓர் ஏரியை வெட்டுவித்தான்.[28]

அரசியல் அலுவலாளர் : கல்வெட்டுகளிற் கண்ட குறிப்பிடத்தக்க அரசியல் அலுவலாளர் இவராவர் - மகா தண்ட நாயகன் பிஞ்சவன் மாராயன் என்பவன் இராசராசன் மகனான இராசேந்திரன் என்பர் ஆராய்ச்சியாளர். வேறு சிலர் அவன் இராசேந்திரன் அல்லன் என்பர். உத்தம சோழன் (மதுராந்தகன்) மகனான கண்டராதித்தன்[29] நாடு முழுவதும் சுற்றிக் கோவிற் பணிகளைப் பார்வை யிட்டுவந்த பேரதிகாரி ஆவன். இவனே திருவிசைப்பாப் பாடிய கண்டராதித்தர் என்று சிலர் தவறாகக் கொண்டனர். பரமன்மழபாடியார் என்னும் மும்முடிச் சோழன் சீட்புலி நாடு, பாகிநாடு என்பவற்றை வென்ற தானைத் தலைவன் ஆவன். சேனாதிபதி ஸ்ரீ கிருஷ்ணன் இராமன் என்பவன் ஒருவன். இவன் அமண்குடியைச் சேர்ந்தவன். இவன் பெரிய கோவிலில் திருச்சுற்றாலையையும் மண்டபத்தையும் கட்டியவன் ஆவன்[30]. சேனாதிபதி குரவன் உலகளந்தான் என்பவன் ஒருவன். இவன் ‘இராசராச மகாராசன்’ எனப்பட்டான். இவன் சோழப் பேரரசு முழுவதும் அளந்து வரிவிதிக்கப் பொறுப் பாளியாக் இருந்த பெரும் அரசியல் அறிஞன் ஆவன்[31], உலகளவித்த திருவடிகள் சாத்தன் என்பவன் ஒருவன். இவனும் மேற்சொன்ன பணியில் ஈடுபட்டிருந்தனன்[32]. ஈராயிரவன் பல்லவரையன் - மும்முடிச் சோழன் என்பவன் அரசியல் வருவாயைக் கவனித்த பெருந்தரக்காரன் ஆவன்[33], கோலாரை ஆண்ட கங்கர் மரபினனான திருவையன் சங்கரதேவன் என்பவன் ஒர் உயர்தர அலுவலாளனாக இருந்தான். அவன் தன் தந்தை பெயரால் திருவல்லத்தில் ‘திருவைய ஈச்சரம்’ என்னும் கோவிலைக் கட்டினான்[34]. இவருள் கிருஷ்ணன் இராமன், ஈராயிரவன், பருத்திக்குடையான் வேளான் உத்தம சோழன், மதுராந்தக மூவேந்த வேளான் என்பவர் அமைச்சராக இருந்தனர் என்பர்[35]. ‘அதிகாரி இராசேந்திர சிங்க மூவேந்த வேளார்’, ‘அதிகாரி காஞ்சி வாயிலுடையார் உதயதிவாகரன் தில்லையாளியாரான இராசராச மூவேந்த வேளார்’ முதலியோர் உடன் கூட்டத்து அதிகாரிகளாக இருந்தனர்[36]. அரசியல் அலுவலைக் கவனிக்க ஆரூரன் அரவணையனான பராக்கிரம சோழ மூவேந்த வேளான். தத்தன் சேந்தனான செம்பியன் மூவேந்த வேளான், அருங்குன்றம் உடையான் பொற்காரி, மீனவன் மூவேந்த வேளான் முதலியோர் இருந்தனர் என்று ஆனைமங்கலச் செப்பேடு செப்புகிறது[37]. வரியைக் கணக்கில் பதிவு செய்யும் வரியிலார், ‘வரியை இன்னவாறு செலவிடுக’ எனப்பாகுபாடு செய்யும் வரிக்குக் கூறுசெய்வார், காரியக் குறிப்பெழுதும் பட்டோலைப் பெருமான், வந்த ஒலைகளைப் பார்வையிட்டு விடை வரையும் விடை அதிகாரி, நாட்டை வகைப்படுத்துவோர், நாட்டைக் கண்காணிப்பவர், நாட்டைச் சுற்றிப்பார்த்து நன்மைதீமைகளை ஆராய்பவர், நீதிமன்றத்தார், நாணய அதிகாரிகள் முதலிய பல திறப்பட்ட அரசியல் அலுவலாளர் இராசராசன் ஆட்சியில் இடம்பெற்று இருந்தனர் என்பது எண்ணிறந்த கல்வெட்டுகளால் அறியக்கிடத்தல் காண்க. ‘சோழர் அரசியல்’ என்னும் பகுதியில் விரிவு காண்க. பாண்டிய நாட்டுப் பழைய வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இராசராசன் காலத்தில் புதிய தமிழில் மாற்றி எழுதப்பட்டன என்பது இங்குக் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.[38]

இராசராசன் அரசியல் இன்றைய நாகரிக அரசியல் போன்றது. இவன் நாடு முழுவதும் அளப்பித்தான்; இறையிலி நிலங்களைப் பிரித்தான் பிற நிலங்கட்குத் தரம் வாரியாக வரிவிதிக்க ஏற்பாடு செய்தான்; வரியை வசூலிக்கப் பல அதிகாரிகளை ஏற்படுத்தினான்; எல்லா வகை வரிகளும் கவனிக்க உயர்தர அலுவலாளர் குழுவை வைத்தான். தனித்தனி மண்டல காரியங்களைக் கவனிக்கும் தனித்தனி அலுவலாளர் ஒருபால், எல்லா மண்டலங்களைக் கவனிக்கப் பேரலுவலாளர் ஒருபால் ஆக, அரசியல் அமைப்பு வியத்தகு வண்ணம் அமைந்திருந்தது. ஊர் அவைகள் ஊராட்சியைக் குறைவற நடத்தின. ஒவ்வொரு மண்டலத்தும் திறம்பட்ட படைகள் நிறுத்தப்பட்டன; எல்லைப் புறங்களில் காவற்படைகள் இருந்தன. புகழ்பெற்ற கப்பற் படை இணையின்றி இலங்கியது. சுருங்கக் கூறின், தென் இந்தியாவில் பேரரசை ஏற்படுத்திய பேரரசர்களில் இராசராசனே சிறந்தவன் என்னல் மிகையாகாது.

சமயக்கொள்கை : இராசராசன் சிறந்த சிவ பக்தன். இவன் கட்டிய பெரிய கோவிலே இதற்குப் போதிய சான்றாகும். எனினும், இவன், இந்தியப் பேரரசைப் போலவே தன்பெருநாட்டில் இருந்த எல்லாச் சமயங்களையும் சமமாகவே மதித்து நடந்தவன். பெரிய கோவிற்கவர்களில் உள்ள சிற்பங்கள், மைசூரில் இவன் கட்டிய விஷ்ணு கோவில்களும், விஷ்ணு கோவில்கட்கு இவன் செய்துள்ள தானங்களும் இவனது சமரசப்பட்ட மனப்போக்கை விளக்குவதாகும். நாகப்பட்டினத்தில் புத்த விகாரம் கட்டப் பொருள் உதவி புரிந்த உத்தமன் இவன் இவனது ஆட்சியில் இருந்த சிற்றரசர் சிலர், சமணர் கோவில்கட்குத் தருமம் செய்துள்ளனர் என்பதையும் நோக்க, இப்பேரரசன், தன் சிற்றரசரையும் குடிகளையும் தத்தமது விருப்பத்துக்கியைந்த சமயத்தைப் பின்பற்ற உரிமை அளித்திருந்தனன் என்பது நன்கு புலனாகின்றது. இவனது ஆட்சிக் காலத்திற்றான் பாடல் பெற்ற பல கோவில்கள் கற்றளிகளாக மாறின, புதிய பல சிவன் கோவில்கள் கட்டப்பட்டன. பல கோவில்கள் பலரால் ஆதரிக்கப்பெற்றன. கோவிற் பணிகள் வியத்தகு முறையிற் பெருகின. அவற்றின் விவரமெல்லாம் ‘சோழர் கோவிற் பணிகள்’ என்னும் பகுதியிற் பரக்கக் காண்க.

பெரிய கோவில் : சோழ மன்னரது ஆட்சிக்குப் பெரிய அறிகுறியாகவும் சிறப்பாகத் தமிழகத்தின் கலை அறிவை உணர்த்தவல்லதாகவும் இருப்பது தஞ்சைப் பெரிய கோவிலே ஆகும். இத்தகைய புதிய அமைப்புடைய கோவிலை முதன் முதல் கட்டி முடித்தவன் இராசராச சோழனே ஆவன். இக்கோவில் கோபுரம் சிறியது. உள்ளறைமீது கட்டப்பட்டுள்ள தூபி பெரியது. கோவிலின் அளவு, அமைப்பு முதலியன பொருத்தமாக அமைந்துள்ளன. இக்கோயிலின் பெயர் இராச ராசேச்சரம் என்பது. எனவே, இவன் பெயர் இராசராசன் என்பதும் பெற்றோம். இவன் கி.பி. 1004-இல் தில்லைச் சிற்றம்பலத்திற்கு நிபந்தங்கள் பல இயற்றி வழிபட்டதன் பயனாகத் தில்லைவாழ் அந்தணரால் ‘இராசராசன்’ என்பது வழங்கப்பட்டதாகும். இப்பெயர் இவனது 19-ஆம் ஆண்டுக் கல்வெட்டிற் காணப்படுகிறது. எனவே, இக்கோவில் கி.பி. 1005-இல் தொடங்கப்பெற்றது என்று கோடல் பொருந்தும். இராசரானுடைய 23ஆம் ஆண்டு முதல் 29-ஆம் ஆண்டுவரை இக்கோவிலுக்கு வேண்டிய நிபந்தங்கள் பல கொடுக்கப்பட்டன. ஆதலின், இப்பெரிய கோவில் இவனது 20-ஆம் ஆண்டு முதல் 23 வரை கட்டப்பட்டதாகலாம்; அஃதாவது இக்கோவில் கட்டி முடிக்க ஏறத்தாழ 4 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். “யாண்டு இருபத்தைந்தாவது நாள் 275-இல் உடையார் ஸ்ரீ இராசராச தேவர் ஸ்ரீ ராசேச்சுரமுடையார், ஸ்ரீ விமானத்துச் செம்பின் தூபித் தறியில் வைக்கக் கொடுத்த செப்புக் குடம் ஒன்று. நிறை 3083 பலத்தில் சுருக்கின தகடு பலபொன் ஆடவல்லான் என்னும் கல்லால் நிறை 2926 கழஞ்சு” என்ற கல்வெட்டுப் பகுதியால், இராசராசன் 25ஆம் ஆண்டிற்றான் திருப்பணி முடிவுற்றுக் கும்பாபிடேகம் முடிவுற்றதெனக் கூறலாம்.

கோவில் அமைப்பு : இக்கோவில் சிவகங்கைச் சிறு கோட்டைக்குள் உள்ளது. முதற்கோபுரம் கடந்ததும் இராச ராசன் கட்டிய மற்றோர் அகன்ற கோபுரம் உண்டு. உள் நுழைந்ததும், கருங்கல், செங்கற்களால் பரப்பப் பெற்ற சுமார் 500 அடி நீளமுள்ள 250 அடி அகலமும் உள்ள ஒரு பரந்த போர்வைபோன்ற வெளிமுன் மேடை இருக்கின்றது. அதன் மீது ஒரே கல்லாலான நந்தியும் அதனைப் பாதுகாக்கக் கட்டிய நாயக்கர் மண்டபமும் உள்ளன. எதிரில் இறைவன் கோவில் விமானமும் அடுத்து அம்மன் திருக்கோவிலும் உள. உட்கோயில் இறையறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், தியாகராசர் சந்நிதியுள்ள தாபன மண்டபம், நர்த்தன மண்டபம், வாத்திய மண்டபம் என்ற ஆறு பகுதிகளை உடையது. கோவிலிலுள்ள ஏழு வாயில்களிலும் 7 மீ உயரமும் 3 மீ. அகலமும் உள்ள 14 வாயிற்காவலர் சிலைகள் உள.

முதற் கோபுரவாயில், ‘கேரளாந்தகன் திருவாயில்’ என்பது: மற்றது ‘இராசராசன் திருவாசல்’ என்பது; கோவில் உள்வாயில் 'திரு அணுக்கன் திருவாசல் என்பது. விமானத்தின் தெற்கிலும் வடக்கிலும் வாயில்கள் உள்ளன, அவை படிகளை உடையது. தெற்குவாசல் விக்கிரமன் திருவாசல் எனப்படும். (இப்பெயர் விக்கிரம சோழன் பெயரால் பிற்காலத்தில் வழங்கப் பெற்றது போலும்) இவ்வாயிலின் கீழ்ப்பாகத்துத் திருமகள் வடிவமும் வடக்கு வாயிலின் கீழ்ப்பாகத்து நாமகள் வடிவமும் வனப்புறத் திகழ்கின்றன. திரு அணுக்கன் திருவாயில் இருபுறமும் அமைந்த படிகளாலேயே முன்னாளில் சந்நிதியை அடைவது வழக்கம். இப்படிகளே கோவில் எடுப்பித்த போது உடன் உண்டானவை. இக்காரணம் கொண்டும் நிலப் பரப்புக்குமேல் உயர்ந்த மேடையில் நிறுவப் பெற்ற தன்மையினாலும் இக்கோவில் மாடக்கோவில் என்பதற்கேற்ற இலக்கணம் பெற்றதென்னலாம். திரு அணுக்கன் திருவாயிலுக்கு எதிரே இப்போதுள்ள நேரான படிகள் பிற்காலத்தில் சரபோசி மன்னன் காலத்தன ஆகலாம். கோவிலின் நீட்டளவு 265 மீ) குறுக்களவு 132.மீ[39].

சிவலிங்கம் : உள்ளறையில் உள்ள சிவலிங்கம் மிகப் பெரியது. அதற்கு ஆதிசைவரைக் கொண்டு மருந்து சாத்திப் பந்தனம் செய்வித்தபொழுது, ஆவுடையார் வடிவம் பெரியதாதலின், மருந்து இளகிப் பந்தனமாகவில்லை. இராசராசன் மனம் கவன்றான். அக்கவலையை நீக்கக் கருவூர்த் தேவர் என்னும் சைவமுனிவர் எழுந்தருளிச் சிவலிங்கத்தை ஆவுடையாருடன் சேர்த்துச் செவ்வனே நிறுத்திப் பந்தனம் செய்வித்தார் என்று கருவூர்ப் புராணம் கூறுகிறது. இக் கருவூரார் தஞ்சை இராசராசேந்திரன் மீது பதிகம் பாடியுள்ளார். அப்பதிகம் ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

இப்பெரியார் இக்கோவிலிற்றானே சமாதி ஆயினர். இராசராசேச்சரத்து மேலைத் திருச்சுற்றில் கிழக்கு நோக்கிய மேடை ஒன்று இருக்கிறது. அதன் அருகில் வேப்பமரமும் வில்வமரமும் நிற்கின்றன. பிற்காலத்தார் அம்மேடையிற் சிறு கோவில் எடுத்து, யோகியாரது உருவச்சிலை ஒன்றை அமைத்தனர். இன்றும் இக்கோவில் பலர் தொழும் இடமாக இருந்து வருகிறது.

கோபுர வாயில்கள் : இப்பெரிய கோவிலில் பண்டைக் கால வழக்குப்படியே மூன்றுவாயில்கள் உண்டு.பண்டைக் கோவில் வாயில்கள் மூன்றும் முறையே தோரண வாயில், திருமாளிகை வாயில், திரு அணுக்கன் வாயில் எனப்பட்டன என்று பெரிய புராணம் கூறும். ஆனால், இராசராசன் அவற்றுக்கு முறையே கேரளாந்தகன், இராசராசன், அணுக்கன் எனப் பெயரிட்டான்.

விமானம்-தளம்-தூபிக்குடம் : கோவில் விமானம் 75 மீ உயரமுடையது; அடி பருத்து நுனி சிறுத்த அமைப்புடையது. இதன் உச்சியில் போடப்பட்டுள்ள தளம் ஒரே கருங்கல் ஆகும். இதன் நிறை 80 டன்[40]. விமானத்தின் மேல் தூபித்தறியில் வைக்கப்பட்டுள்ள செப்புக்குடம் நிறை 3083 பலம் ஆகும். அதன்மேல் போர்த்துள்ள பொற்றகடு 2926.5 கழஞ்சு நிறையுள்ளது.

இராச ராசேச்சரத்து விமானம் ‘தக்கண மேரு’ எனப்படும். வராகமிஹிரர் இயற்றிய பிருகத் சம்ஹிதையில் கூறப்பட்டுள்ள மேரு மந்தரம், கயிலாயம், குஞ்சரம், ரிஷபம், சிம்மம் முதலிய 20 வகைப்பட்ட விமானங்களுள் இது மேரு அமைப்புடையது; தென்னாட்டில் இருப்பது; ஆதலின் ‘தக்கன மேரு’ எனப்பட்டது. இறைவன் பெயர் விடங்கர் என்பது, ‘உளியாற் செய்யப்படாதவர்’ என்பது பொருள். விமானம் சதுரமானது; 13 கோபுரமாடிகள் கொண்டது. விமான தளக்கல் நிறை 80 டன். இது தஞ்சைக்கு 20 கி.மீ. தொலைவிலுள்ள சாரப்பள்ளம் என்ற சிற்றுாரிலிருந்து ‘சாரம்’ போட்டு இவ்வுச்சிக்கு ஏற்றப்பட்டதாம். சதுரக்கல்லின் நான்கு மூலைகளிலும் முறையே இரண்டு நந்திகள் உள்ளன. அவை தனித்தனி 2மீ. நீளமும் 2 மீ. அகலமும் கொண்டவை.

திருச்சுற்று மாளிகை : இதன் பெரும்பகுதி எடுத்தவன் சேனாதிபதி கிருஷ்ணன் இராமனான மும்முடி சோழப் பிரமராயன் ஆவன். இவன் இராசராசன் ஆணைப்படியே இதனைச் செய்து முடித்தான்[41]. திருச்சுற்றாலையில் எட்டுப் புறத்திலும் திக்குப்பாலர் எண்மர்க்கும் கோவில்கள் சமைக்கப்பட்டன. அவற்றுள் கல்லில் செதுக்கிய திசை காப்பாளர் அழகைக் கண்டு களிக்கலாம். ஒவ்வொரு கோவிலுக்கும் பொன் தகடு சுருக்கின. செப்புக் குடங்கள் இராசரானின் குருக்களான ஈசான சிவபண்டிதர் கொடுத்தனர்[42]. ஆயின், இன்று இருப்பவை கற்கலசங்களே ஆகும். இன்றுள்ள பிள்ளையார் கோவில் மராட்டிய மன்னர் கட்டியதாகும். முருகர் கோவிலும் பிற்காலத்ததே ஆகும். திருச்சுற்றில் சண்டேசர் ஒருவர்க்கே கோவில் எடுத்தல் பண்டை மரபாகும். அவரே கோவில் கண்காணிப்பாளர் என்பது முன்னோர் கொள்கை. அதனால் கோவிற்செயல்கள் யாவும் அவர் பெயரால் நடைபெற்று வந்தன. இம்முறையே இராசராசேச்சரத்தும் காணப்பட்டது. இன்றும் கோவிலுக்குச் சென்று மீள்பவர் சண்டேசர் கோவிலை அடைந்து, ‘சிவசொத்துகளில் ஒன்றையும் கொண்டு செல்வோமில்லை; எம் கரங்களைப் பார்த்தருளும்’ என்பார் போலத் தம் கையோடு கையைத் தட்டிக் காட்டிச் செல்லும் வழக்கு இருத்தல் காண்க.

அம்மன் கோவில் : அம்மன் கோவில், இன்றுள்ள பெரிய கோவிற்கு வடபுறத்தில் உள்ள சிவகெங்கைத் தோட்டத்தில் இருந்திருத்தல் வேண்டும். அது நாயக்க மன்னர் காலத்தில் அழிக்கப்பட்டதாம். இன்றுள்ள அம்மன்கோவில் பிற்காலத்தது. இதனை நோக்க, இன்றுள்ள பெரிய கோவில் வடபால் அகன்றிருத்தல் வேண்டும் என்பது தெரிகிறதன்றோ?

பெரிய நந்தி : பெரிய கோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லிற் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ நீளம் 7 மீ; அகலம் 3 மீ; இப்பொழுதுள்ள நந்தி மண்டபம் நாயக்க மன்னர் காலத்தது.

திருமேனிகள் : இக்கோவிலில் இராசராசனும் அவன் அரசமாதேவியாரும் பிறரும் எடுப்பித்த திருமேனிகள் பல. அவற்றுள் சிலவே ஈண்டுக் கூறுதும் : ஒர் இலிங்கம் - அதிணின்று நான்கு கரங்களுடன் தோன்றிய சிவவடிவம் - அதனை அடுத்துப் பிரமனும் பன்றிமுகமுடைய திருமாலும் நிற்கும் இலிங்கபுராண தேவர் திருமேனி ஒன்றாகும்.பிரமன் இருந்து சடங்கு செய்யத் திருமால் நின்று நீர்வார்க்கப் பிராட்டியோடு நான்கு கைகளுடன் எழுந்தருளி நின்ற கலியான சுந்தரர் திருமேனி ஒன்று; இருடிகள் நால்வர் பக்கத்தில் இருப்பப் புலியும் பாம்பும் கிடக்கும் இரண்டு சிகரங்களையுடைய ஒருமலை உச்சியில் ஒன்பது பனையும் நாற்பத்திரண்டு கிளைகளும் போக்கிப் பொக்கணம் ஒன்று தூங்க நின்ற ஒர் ஆலமரத்தடியில் முயலகனைத் திருவடியிற் கிடத்தி நான்கு கைகளுடன் வீற்றிருக்கும் தக்கிணாமூர்த்தி திருமேனி ஒன்றாகும். சண்டேசர்க்குப் பிராட்டியோடு எழுந்தருளித் தமது திருக்கரத்தால் மலர் மாலை நல்கும் சண்டேசப் பிரசாததேவர் திருமேனி ஒன்றாகும். சதாசிவத்தினின்றும் பிரமன், திருமால், உருத்திரன், மகேச்சுரன் என்பார் தோன்றிய நிலையை விளக்கும் பஞ்ச தேக மூர்த்திகள் திருமேனி ஒன்றாகும். இனி, நாயன்மார் படிவங்களில் மலாடுடையார் படிமம் (மெய்ப்பொருள் நாயனார்) ஒன்றாகும். இவர் காலத்தால் மிக முற்பட்டவர். காடவர்கோன் கழற்சிங்கனான (மூன்றாம் நந்திவர்ம பல்லவன் கி.பி.840-865) காலத்திலேயே திருநாகேசுவரத்தைச் சேர்ந்த குமார மார்த்தாண்டபுரத்தில் இவர்க்கு ஒருகோவில் இருந்தது.[43] அப்பர், சம்பந்தர், சுந்தரர், சிறுத்தொண்டர், சண்டேசுவரர் முதலியோர் படிமங்கள் வைக்கப்பட்டி ருந்தன. ஆயின், திருவாதவூர ர் (மாணிக்க வாசகர்) படிமம் வைக்கப்பட்டிலது. இதனால், இராச ராசன் காலத்தில் திருவாசகம் எடுக்கப்படவில்லை-திருமுறைகளிற் சேர்க்கப் படவில்லை என்பது உண்மையாதல் காண்க. இதற்கு மாறாகக் கூறும் திருமுறை கண்ட புராணக் கூற்றுத் தவறாகும். பெரிய கோவில்கள் கல்வெட்டுகளை ஆராயின் அக்காலத்தில் வாகனங்கள் செய்யப்பட்டில என்பதை நன்கு அறியலாம்.

திருமஞ்சனமும் திருவிளக்கும் : விடங்கப் பெருமானுக்கு மூன்று கால பூசனை நடைபெற்றது. சண்பக மொட்டு, ஏல அரிசி, இலாமச்சவேர் கலந்த நன்னீரால் திருமஞ்சனம் நடைபெற்றது. நாள் தோறும் எண்ணிறந்த நெய்விளக்குகள் ஏற்றப்பட்டன. நாடோறும் ஒரு விளக்குக்கு ஒர் உழக்கு வீதம் நெய் அளக்கப் பசு, பருமை, ஆடு என்ற மூவினமும் இடையர் பெற்றிருந்தனர். ஆடாயின் 96-ம், பசுவாயின் 8-ம், எருமை எனிற் 16-ம் பெற்றனர்.

திரு அமுது : பழ அரிசியாற் சமைத்த அமுது, கறிய முது, பருப்பமுது, நெய்யமுது, தயிர் அமுது, அடைக்காய் அமுது, வெள்ளிலை அமுது என்பன நாள் தோறும் மூன்று பொழுதிலும் திருவமுது செய்விக்கப்பட்டன.

திருவிழாநாளில் திருவமுது : திங்கள் தோறும் திருவிழா எழுந்தருளும் திருமேனிகட்குப்பழ அரிசியாற் சமைத்த அமுதும் அப்பக் காய்க்கறி யமுதும் புளியங்கறி அமுதும், காய்கறி அமுதும், பொறிக்கறி அமுதும் பிறவும் படைக்கப்பட்டன.

விழாக்கள் : இராசராசன் பிறந்த நாளான திருச்சதயத் திருவிழா திங்கள் தோறும் நடைபெற்றது. கார்த்திகை விழா நடைபெற்றது. இம்மாத விழாக்கள் அன்றி, ஆண்டு விழா ஒன்பது நாள் நடைபெற்றது. உடையார் உலாவிற் பின்வரும் சிவயோகியர் பதின்மர் உடையார் சாலையில் உணவு பெற்றனர். ஆண்டுவிழா வைகாசித் திங்களில் நடைபெற்றது. அப்பொழுது, பெரிய கோவிலில் இராச ராசேசுவர நாடகம் நடைபெறுதல் வழக்கம். நடிகன் ஆண்டு தோறும் 120 கல நெல் பெற்று வந்தான். இக்காலத்திற் குறவஞ்சி நாடகம் நடந்து வருகிறது.

சின்னங்கள் : இராசராசன் தான் வென்ற நாடுகளிலிருந்து கொணர்ந்த பொன்னால் காளங்கள் பல செய்தான்; அவற்றுக்குச் சிவபாத சேகரன், இராசராசன் எனப் பெயரிட்டான் அவற்றைப் பெரிய கோவிலுக்குத் தானமாக அளித்தான்.

அணிகள் : பொன்னால் அமைந்த திருப்பள்ளித் தொங்கல் மகுடம், முத்து மகுடம், திருக்கொற்றக் குடை மகுடம் முதலியனவும்; பொன்னிற் செய்து நவமணி பதித்த அணிகலன்கள் பலவும் இராசராசன் மனமகிழ்ச்சியோடு ஆடவல்லார்க்கு அளித்தான். இவனுடைய தமக்கையான குந்தவ்வையார் பல அணிகளும் பாத்திரங்களும் கொடுத்தனர்; அரசமாதேவியார் செய்த அறப்பணிகள் சில. அணிகலங்களை எவரும் மாற்றிடா வண்ணம் அரக்கு, செப்பாணி, சரடுகளை நீக்கிப் பொன்னை மட்டும் நிறுத்து விலை கண்டிருக்கிறது; அவற்றில் நவமணிகள் இருப்பின், அவை இத்துணைய, அவற்றின் நிறை இவ்வளவு, இன்னின்ன தன்மையன என்று குறிக்கப்பட்டு விலையும் கண்டிருத்தல் வியத்தற்குரியதே.

கோவிற் பணியாளர் : இராசராசேச்சரத்தில் கோவிற் பணியாளர் தலைவனாக இருந்தவன் பொய்கை நாட்டுக் கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் என்பவன். கோவிற்பணியைக் கண்காணி நாயகமாக இருந்து செய்தவன் பாண்டி நாடான இராசராச மண்டலத்துத் திருக்கானப் போர்க் கூற்றத்துப் பாளுர் கிழவன் அரவணையான் மாலரிகேவன் என்பவன். அருச்சகர் சிவாசாரியன் பவன பிடாரன் ஆவர். திருப்பதிகம் விண்ணப்பம் செய்பவர் 48 பேர்; இவரே பிற்காலத்தில் ‘ஒதுவார்’ எனப்பட்டனர். உடுக்கை வாசிப்பவன் ஒருவன்; கொட்டிமத்தளம் வாசிப்பான் ஒருவன். இவரன்றிக் கானபாடி, ஆரியம் பாடுவார், தமிழிசை பாடுவார் எனச் சிலரும் இருந்தனர். கோவிற்பணிகளைக் குறைவறச் செய்யப் பல இடங்களிலிருந்து 400 தேவரடியார் குடியேற்றம் பெற்றிருந்தனர். கோவிலை அடுத்து வடக்கிலும் தெற்கிலும் இவர்க்கு மனைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு வேலி நிபந்தம் கொடுக்கப்பட்டது. இப்பெண்மணிகள் பெயர்கட்குமுன்னர் நக்கன் எடுத்த பாதம், நக்கன்ராசராசகேசரி, நக்கன் சோழகுல சுந்தரி என்றாற்போல ‘நக்கன்’ என்னும் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. இசையில் வல்ல பெண்கள் காந்தர்விகள் எனப்பட்டனர். இசை வல்ல ஆடவர் காந்தர்வர் எனப்பட்டனர். காந்தர்வர் 75 பேர் இருந்தனர். கொட்டி மத்தளக்காரர், பக்கவாத்தியர், வீணை வாசிப்பவர், வங்கியம்பாடவியம்-மொரலியம்-உடுக்கை முதலியன முழக்குவோர் பலர் இருந்தனர். கரடிகை, சகடை உவச்சுப்பறை முதலிய பறைகளை அடிப்பவர் பலர் இருந்தனர். கோவில் பண்டாரிகள் (பொக்கிஷத்தார்), கணக்கர், மெய்காப்பார், பரிசாரகம் செய்பவர், திருவிளக்கிடுவார், மாலைகட்டுவோர், வண்ணமிடுவோர் (கோலம் போடுவோர்), சோதிடர், தச்சர், தட்டர், கன்னார், குடியர், தய்யார் (தையற்காரர்), நாவிதர், வண்ணார் முதலியவரும் நியமனம் பெற்றிருந்தனர்.இவர்க்கு வழிவழி வேலை கொடுக்கப்பட்டு வந்தது. அவரனைவரும் பெற்றுவந்த சம்பளம் நெல்லாகும். பெரிய கோவில் மூல பண்டாரம் ‘தஞ்சை விடங்கன்’ எனப் பெயர் பெற்றிருந்தது. கோவில் மரக்கால் ‘ஆடவல்லான்’ எனப் பட்டது.

பெரிய கோவில் கல்வெட்டுகள் : இராசராசன் காலத்துக் கல்வெட்டுகளே மிகப் பல. அவை அக்காலத்துப் பலரும் எழுந்தருளுவித்த திருமேனிகள், அவற்றுக்காக அவர்கள் கொடுத்த விளைநிலங்கள், பாத்திரங்கள், சின்னங்கள், நகைகள் முதலியவற்றுக்கு விவரமும், உப்பு முதல் கற்பூரம் வரை உள்ள எல்லாப் பண்டங்கட்கும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளும் குறிப்பனவாகும். இராசராசன் கல்வெட்டுகளும் இவன் தமக்கையார் குந்தவ்வையார் கல்வெட்டுகளும் விமான நடுவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இராசராசன் மனைவியர், மக்களுடைய கல்வெட்டுகள் திருச்சுற்று மாளிகையில் வெட்டப்பட்டுள்ளன. இராசராசன் மனைவியர், மக்களுடைய கல்வெட்டுகள் திருச்சுற்று மாளிகையில் வெட்டப் பட்டுள்ளன. இக்குறிப்பால், இவன் தன் தமக்கையாரிடம் வைத்த பெருமதிப்பு நன்கு விளங்குகிறது. இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் இராசராசன் காலத்தவை 64; இராசேந்திரன் காலத்தவை 29; முதல் குலோத்துங்கன் காலத்தது 1; விக்கிரம் சோழனது 1; கோனேரின்மை கொண்டான் காலத்தவை 3; பிற்கால நாயக்கர், மராட்டியர் கல்வெட்டுகள் சில ஆகும்.

தேவதானச் சிற்றூர்கள் 35 : இராசராசன் பெரிய கோவில் வேலைகள் குறைவின்றி நடைபெற 35 சிற்றூர்களை விட்டதாகக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. பெரிய சிற்றூர் 1000 ஏக்கர்க்கு மேற்பட்டது. நான்கு சிற்றூர்கள் 500 முதல் 1000 ஏக்கர் பரப்புள்ளவை; மூன்று 300 முதல் 400 ஏக்கர் பரப்புள்ளவை ஏழு 200 முதல் 300 ஏக்கர் பரப்புள்ளவை: ஆறு 100 முதல்200 ஏக்கர் பரப்புள்ளவை மூன்று 50 முதல் 100 ஏக்கர் பரப்புள்ளவை; ஆறு 5 முதல் 50 ஏக்கர் பரப்புடையவை; 25 ஏக்கர்க்கும் குறைந்த பரப்புடையவை இரண்டு[44].

உள்ளறை ஒவியங்களும் சிற்பங்களும் : பெரியகோவில் உள்ளறைத் திருச்சுற்றுச் சுவர் மீது இருவகைப் படைகள் இருக்கின்றன. மேற்புறப் படை மீது நாயக்க மன்னர் கால ஒவியம் காணப்படுகிறது. அதன் உட்புறம் இராசராசன் காலத்து ஒவியங்கள் காண்கின்றன. அவற்றின் விரிவை இரண்டாம் பகுதியிற் காண்க

இராசராசனது அளவு கடந்த சைவப் பற்றும் விரிந்த சமயநோக்கும் இப்பெரிய கோவில் விமானத்திலும் மற்றும் பல பகுதிகளிலும் மலிந்து கிடக்கும் சைவ வைணவ புராண சம்பந்தமான சிலைகள், சிற்பங்கள் ஆகியவற்றால் அறிவுறுத்தப் பெறுகின்றன. கோவிலின் நாற்புறமும் உயர்ந்த மதில்களின் மேலிருந்து விழுந்தும் பிறர் எடுத்துப் போனவையும்போக, எஞ்சிநிற்கும் 343 நந்தி உருவங்களும் இதனையே வலியுறுத்துவன. கோவில் விமானத்தின் தென்புற மதில் பக்கத்தில் சோழவீரர்தம் உருவங்களும், பிள்ளையார், திருமால், பிச்சாடனர், சூலதேவர், தென்முகக் கடவுள், மார்க்கண்டேயர், நடராசர் சிலைகளும் . மேல் பக்கத்தில் லிங்கோற்பவர், அர்த்த நாரீசுவரர் சிலைகளும்; வட பக்கத்தில் கங்காதரர், கலியாணசுந்தரர், மகிடாசுர மர்த்தினி படிமங்களும் வனப்புடன் உள்ளன. மற்றும், திருச்சுற்று மாளிகையின் நாககன்னியர், சமயக்குரவர் படிமங்கள் முதலியன நிலைபெறச் செய்துள்ளமை காணலாம்.

கோவில் எடுப்பித்த காரணம் : உலகளந்த ஈசுவரர் என்கிற சிவலிங்கசாமி, சிவகங்கைக் கோட்டை, சிவகங்கைத் திருக்குளத்துக்குள் தென்புறத்துள்ள ஒரு மேடைமீதுள்ள சிவலிங்க பொருபமாக அமைந்துள்ளது. இதுவே அப்பர் சுவாமிகள் ‘தஞ்சைத் தனிக்குளத்தார்’ என்று அழைத்த சிவபெருமானாக இருக்கலாம். அல்லது அம்முற்காலத்திலிருந்தே இத்தலத்தில் ஒரு கற்கோவில் இருந்து, பின்பு அதனை இராசராசன் பரந்த சைவப் பற்றிற்கு இலக்காக இப்போது இருக்கும் நிலையில் கட்டியிருக்கலாம்.[குறிப்பு 1] அறுமுகன் கோவில் முதலியன : இது நாயக்க மன்னர் காலத்தது. இது யானை குதிரைகள் பூட்டிய இரதம்போல அமைந்திருத்தல் காணத்தக்கது. கணபதி கோவில் சரபோசி மன்னன் காலத்தது. நடராசர் சந்நிதியும் பிற்காலத்ததே.

வேளைக்காரப்படை : இப்படையைப் பற்றி விவரங்கள் அறிதல் இன்றியமையாதது. இப்படைவீரர் உற்ற விடத்து உயிர் வழங்கும் தன்மையோர். இவர் படைகள் 14 இருந்தன. இவர் ‘இன்னவாறு செய்வேன், செய்யா தொழியின் இன்ன கேடுறுவேன்’ என வஞ்சினம் மொழிந்து, சொன்னவாறு நடப்பவர், தம் சோர்வால் அரசர்க்கு ஊறுநேரின், தாமும் தன் உயிரை மாய்ப்பர். தம் அடியார்க்கும் கேடு உண்டாகாது காத்தலின் முருகனை வேளைக்காரன் என்பர் திருவகுப்பு நூலுடையார் எனின், இவர் தம் சிறப்பினை என்னென்பது![45] ‘வேல’ என்னும் வடசொல் ‘ஒப்பந்தம்’ முதலிய பொருள்களைத் தருவது. அது தமிழில் வேளை என வரும். அரசனிடத்தில் உண்டு உடுத்து அவனைக் காக்கவும் சமயம் நேரின் அவனுக்காக உயிர் விடுவதாகவும் ஒப்பந்தம் செய்து கொண்டு உடனுறைபவரே வேளைக்காரர் எனப்படுவர். இங்ஙனம் அமைந்த வேளைக்காரர் பல படைகளாக அமைந்திருப்பர்[46].

சீனர் உறவு : இராசராசன் கடல் வாணிகத்தைப் பெருக்கினான்; கி.பி.1015-இல் முத்துகள் முதலிய பல உயர்ந்த பொருள்களைக் கையுறையாகத் தந்து தூதுக் குழு ஒன்றைச் சீனத்துக்கு அனுப்பினான். அக்குழுவினர்பேச்சை அரசனுக்கு நடுவர் மொழி பெயர்த்தனர். அரசன் அவர்களைத் தன் அரண்மனைக்கு அடுத்திருந்த விடுதியில் தங்கவிட்டான். அவர்கள் சென்ற காலத்தில் சீன அரசனது பிறந்தநாள் விழா நடந்தது. அரசன் அவர்கட்குப் பல பல பரிசுகள் அளித்துப் பெருமைப் படுத்தினான். இக்குறிப்புச் சீனர் நூல்களிற் காணப்படுகிறது.

விருதுப்பெயர்கள் : இராசராசன் கொண்ட விருதுப் பெயர்கள் மிகப் பலவாகும். இராசராசன், மும்முடிச் சோழன்[குறிப்பு 2], மும்முடிச் சோழன்[47], சயங்கொண்ட சோழன்[48] என்னும் பெயர்கள் மண்டலப் பெயர்களாகவும் வளநாடுகளின் பெயர்களாகவும் வழங்கின. இவையன்றி, இராசராசற்குச் சோழேந்திர சிம்மன், சிவபாதசேகரன், க்ஷத்திரிய சிகாமணி, ஜனநாதன், நிகரிலி சோழன், இராசேந்திர சிம்மன், சோழ மார்த்தாண்டன், இராசாச்ரயன், இராச மார்த்தாண்டன், நித்திய விநோதன், பாண்டிய குலாசனி[49], கேரளாந்தகன், சிங்களாந்தகன், இரவிகுல மாணிக்கம், தெலுங்க குல காலன் முதலியனவும் வழக்கில் இருந்தன. இப்பெயர்கள் பல சேரிகட்கு[50] இடப்பட்டிருந்தன என்பதைக் கல்வெட்டுகளால் நன்கறிவோம். சான்றாகத் தஞ்சாவூர்க் கோட்டத்தில் உள்ள திருக்களித்திட்டையில் பின்வரும் பெயர்கொண்ட சேரிகள் இருந்தன; அருள்மொழிதேவச் சேரி, ஜனநாதச் சேரி, நித்தவிநோதச் சேரி, இராசகேசரிச் சேரி, நிகரிலி சோழச் சேரி, அழகிய சோழச் சேரி, சிங்களாந்தகச் சேரி, குந்தவ்வை சேரி, சோழகுல சுந்தரச் சேரி, இராசமார்த்தாண்டச் சேரி, இராசராசச் சேரி என்பன[51].

குடும்பம் : இராசராசனுக்கு மனைவிமார் பலராவர். கல்வெட்டுகளில் மட்டும் 15 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர் உலகமகா தேவியார், திட்டைப்பிரான் மகள் சோழ மாதேவியார், அபிமானவல்லியார், திரைலோக்கிய மாதேவியார், பஞ்சவன் மாதேவியார், பிருதிவி மாதேவியார், இலாட மாதேவியார், மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொங்கியார், கூத்தன் வீராணியார், இளங்கோன் பிச்சியார் முதலியோர் ஆவர். இவர்களை இராசராசன் ‘நம் பெண்டுகள்’ என்று கல்வெட்டில் குறித்தனன். இவருள் உலகமாதேவியார் பெயரே கல்வெட்டுகளில் முதலில் குறிக்கப்பட்டுள்ளது. திருவிசலூரில் இராச ராசன் துலாபாரம் புக்கபோது பட்டத்தரசியான தந்திசக்தி விடங்கியார் இரணியகருப்பம் புக்கனர்; திருவிச நல்லூர்ப் பெருமானுக்குச் சர்க்கரைப் பொங்கல் செய்ய 45 பொற் காசுகள் தானமளித்தார்[52]. இந்த அம்மையாரே திருவையாற்றில் கற்றளி ஒன்று எடுத்து அதற்கு ‘உலகமாதேவீச்சரம்’ எனத் தம் பெயரிட்டார். இதனைக் குறிக்கும் கல்வெட்டில், உடையார் இராசராச தேவர் நம்பிராட்டியார் தந்திசக்தி விடங்கியாரான பூர் உலக மகா தேவியார்...[53] என்பது காணப்படலால், இரணியகருப்பம் புக்கவர் உலக மகாதேவியாரே என்பது வெளிப்படை தஞ்சைப் பெரிய கோவிலில் இராசராசன் பிரதிமமும் உலகமகாதேவியார் பிரதிமமுமே எழுந்தருளப் பெற்றன[54]. இவற்றால், இவரே இராசராசன் முதற் பெருந்தேவியார் என்பது விளங்கும்.

வானவன் மாதேவியார் எனப்பட்ட திரிபுவனமா தேவியார் மகனே இராசேந்திர சோழன்[55]. இளங்கோன் பிச்சியார் என்பவர் வல்லவரையன் மகளார். வல்லவரையார் வாண்டிய தேவர் என்பவன் இராசராசன் தமக்கையாரான குந்தவியைார் கணவன். எனவே, பிச்சியார் என்பவர் இராசராசன் அத்தை மகளார் ஆவர். இராசராசனுக்குப் பெண்மக்கள் மூவர் இருந்தனர். ஒருத்தி சாளுக்கிய விமலாதித்தனை மணந்து கொண்ட குந்தவ்வை என்பவள். மற்றொருத்திமாதேவடிகள் என்பவள். இவள் நடுவிற்பெண் என்று திருவலஞ்சுழிக் கல்வெட்டுக் கூறுகிறது.[56] மூன்றாம் மகள் பெயர் தெரியவில்லை.

இராசராசன் தன் முன்னோர்பால் மிக்க மதிப்பு வைத்திருந்தான். அருங்குணங்கள் ஒருங்கே அமையப் பெற்ற அவ்வண்ணல் தம் முன்னோனான (பாட்டனான) அரிஞ்சயன் என்பானுக்கு மேல்பாடியில்[குறிப்பு 3] கோவில் கட்டி 'அரிஞ்சிகை ஈச்சுரம் எனப்பெயரிட்டான்[57];திருமுக்கூடவில் ஒரு மண்டபம் கட்டி அதற்குத் தன் பாட்டியான செம்பியன் மாதேவியின் பெயரிட்டு அழைத்தான்[58].

திருமுறை வகுத்தது : நாயன்மார் வரலாறுகளும் திருப்பதிகங்களைக் கோவில்களில் ஒதலும் பல்லவர் காலத்திலேயே பரவிவிட்டன; விசயாலயன் முதலிய சோழர் பாடல் பெற்ற கோவில்களைக் கற்கோவில்களாக மாற்றினர். அவர் காலக் குடிகள் அக் கோவில்கட்குப் பலவகை நிபந்தங்கள் விடுத்தனர்; திருப்பதிகங்கள் கோவில்களில் விண்ணப்பம் செய்யப் பெற்றன[59]. இங்ஙணம் நாயன்மார் வரலாறுகளும் தேவாரம் ஒதுதலும் பரவியுள்ளதை அறிந்த இராசராசன் தேவாரப் பாக்களைத் திரட்டி முறைப்படுத்த உளங்கொண்டான். அதற்கு உதவிசெய்யத் தக்கவர் திரு நாரையூரில் வாழ்ந்த சைவ அந்தணப் பெரியாரான நம்பியாண்டார் நம்பி என்பவரே ஆவர் என்பதை வல்லார் கூறக்கேட்ட அரசன் திருநாரையூர் சென்றான்; அவரிடம்தன் கருத்தை அறிவித்தான். அவர் பொல்லாப்பிள்ளையார் பக்தர் ஆதலின், ஏடுகள் சிதம்பரத்தில் பொன்னம்பலத்தின் மேற்றிசையில் மூவர் கையிலச்சினை பெற்ற காப்பினையுடைய அறையில் இருத்தலை உணர்த்தினார்.உடனே அரசர் அவருடன் பொன்னம்பலம் சென்று, தில்லைவாழ் அந்தணர் கூறியபடி அப்பர், சம்பந்தர், சுந்தரர் படிமங்களை ஊர்வலமாக வரச்செய்து, அரண்மிக்க அறையில் இருந்த தேவார ஏடுகளை எடுத்தான். சில ஏடுகள் புற்றினால் அழிந்து கிடந்தன. எஞ்சியவற்றை நம்பிகள் முறைப்படுத்தினார்; திருஞான சம்பந்தர் பாடிய பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் பதிகங்களை 4,5,6ஆம் திருமுறைகளாகவும், சுந்தரர் பதிகங்களை 7-ஆம் திருமுறையாகவும் வகுத்தனர்[60]. இத்திரு முறைகளைக் கோவில் தோறும் ஒத ஒதுவார்கள் நியமனம் பெற்றனர். தஞ்சைப் பெரிய கோவிலில் திருப்பதிகம் ஒத 48-பேர் அமர்த்தப்பட்டனர் என்பது கொண்டு,தேவாரப்பாடல்கள் நாடெங்கும் பரவச் சிவபாத சேகரனான இராசராசன் பெருமுயற்சி எடுத்துக் கொண்டான் என்பது நன்கு விளங்குகிறதன்றோ? தேவாரம் ஒத 48 பேரை நியமித்த இவன் காலத்திற்குள் திருமுறைகள் முறைப்படுத்தப்பட்டன என்பது ஐயமற விளங்குதல் காண்க. ‘இம்முறை வைப்பு இவன் காலத்தில் ஏற்பட்டிலது. பிற்காலத்தே தான் ஏற்பட்டதாதல் வேண்டும்’ எனக் கூறும் அறிஞரும் உளர். அவர் கூற்று மறுக்கற்பால தென்பதை அறிஞர் உலகநாத பிள்ளை அவர்கள் ஆய்வுரைகொண்டு தெளிக[61].

இராசராசன் சைவ உலகில் அழியாப் புகழினைப் பெற்றான். தேவாரத் திருமுறைகள் இவ்வுலகில் உள்ளளவும் இவன் பெயர் அழியாது நிற்கும் என்பதில் ஐயமில்லை. தமிழ் அரசர் ஆற்றலை தகூழின அரசர்க்கும் பிறர்க்கும் உணர்த்திச் சமயப்பற்றோடு சிறந்த அரசியல் அறிவும் பெற்று வாழ்ந்த இப்பெருமான் பெயர் என்றும் வரலாற்றுலகிலும் சைவவுலகிலும் சிறப்பிடம் பெற்றுள்ள தென்பதை அறியாதார் யாவர்!


 1. Ep Ind. Vol. 9. p. 217.
 2. Thiruvalangadu plates.
 3. Travancore Archaeological States Vol.2, p. 31-32
 4. T.A.S. II. p.4.
 5. Ep. Carnataka. Vol. 8, 125.
 6. 623 of (Appendix B).
 7. Ind Ant, VII. 30, p. 109.
 8. Ep. Ind. VII. 10, p.87.
 9. 79 of 1921.
 10. Nellore Ins. No 239.
 11. Ind. Ant. Vol. 14.p.52
 12. 215 of 1894
 13. 396,397, of 1896; Archaeological Survey of India, 1911-12, pp. 171-172.
 14. S.I.I. Vol. No. 92.
 15. Archaeological Survey of Ceylon, 1906 pp. 17-27.
 16. S.I.I. Vol 4, 616 of 1912
 17. 618 of 1912
 18. Ind Ant. Vol. S. p 17.
 19. S.I.I. Vol. II. No. 1. 1.
 20. Ep. Indica, Vol, 6, p.74
 21. மால்டிவ் தீவுகளின் அரசன் தன்னைப் ‘பன்னிராயிரம் தீவுகட்கு அரசன்’ என்று கூறல் மரபு.
 22. S.I.I. Vol. 2. p. 312
 23. 115 of 1895
 24. 365, 367, 394 of 1924
 25. 4, 19 of 1890
 26. S.I.I. Vol. 3. No. 52
 27. 227 of 1894
 28. 84, 86 of 1906
 29. S.I.I. Vol. 3. No. 49; M.E.R. 1904, Para 2.
 30. S.H.I. Vol. 2. No 31
 31. S.I.I. Vol. 2. p.459
 32. 199 of 1917.
 33. S.I.I. Vol.2, No.55
 34. 11 of 1890.
 35. I. Ulagnatha Pillai’s Rajaraja I, p.59
 36. Ibid. p. 59
 37. Ibid. p. 69
 38. 455 of 1917.
 39. I.M.S. Pillai’s Solar Koyir Panikal' pp. 20-21.
 40. Tanjore Dt. Gazetteer.
 41. S.I.I. 2. Part II. Nos 31, 33, 45
 42. Ibid, part IV. No. 90
 43. 222 of 1911
 44. S.I.I. Vol. II. Nos. 4.5; Altaker’s ‘Rashtra kutas and their times,’ p.148. 1939
 45. J.M.S. Pillai’s ‘Solar Koyil Panikal’, p.31.
 46. Pandit, L. Ulaganatha Pillai’s ‘Rajaraja’ pp.39,40Vol. 14 Part II, pp. 97-111-இல் இவர்களைப்பற்றிய முழு விவரங்கள் காண்க.
 47. சேர, சோழ, பாண்டியர் முடிகளை ஒன்றாக அணிந்த பேரரசன்.
 48. இப்பெயர் கொண்ட ஊர் திருச்சிக் கோட்டத்தில் இன்றும் இருக்கிறது.
 49. பாண்டிய மரபிற்கு இடியேறு போன்றவன்.
 50. Wards
 51. 292 of 1908.
 52. 42 of 1907
 53. 635 of 1902
 54. S.I.I. Vol. 2. part 2. p. 155
 55. 448 of 1918
 56. 633 of 1902
 57. S.I.I. Vol. 3, Part, I.p.23
 58. 178 of 1915
 59. 373 of 1903, 349 of 1918, 129 of 1914, 99 of 1929 and 139 of 1925.
 60. திருநாவுக்கரசர் பதிகம் பாடியதில் காலத்தால் சில ஆண்டுகளேனும் முற்பட்டவர். அங்ஙணம் இருந்தும் சம்பந்தர் பாடல்கள் முன் வைக்கப்பட்டமைக்குத் தக்க காரணம் புலப்படவில்லை. இராசராசன் காலத்தில் மூவர்க்கும் படிமங்கள் செய்யப்பட்டன. மணிவாசகர்க்குச் செய்யப்பட வில்லை என்பதை நோக்கத்திருவாசகம் இராசராசற்குப்பிறகே கண்டு பிடிக்கப்பட்டது எனத் தெரிகிறது. அதற்குப் பிறகுள்ள நூல்களும் பின் முறையிற் சேர்க்கப்பட்டிருத்தலால் அவை யாவும் பிற் காலத்தாராற் சேர்க்கப்பட்டிருத்தல் வேண்டும் எனக் கோடல் அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமாக இருத்தல் காண்க.
 61. Vide “Rajarajan I” pp. 100-105. திருமுறை கண்ட புராணம் முதலியன சந்தான குரவராகிய உமாபதி சிவனார் செய்ததன்று. யாரோ ஒருவர் செய்து அப்பெரியார் பெயரை வைத்து விட்டனர் என்பது அவற்றை நன்கு வாசித்தார் உணர்ந்திருப்பர். ‘திருத்தொண்டர் புராண வரலாறு’ பாடியவர் பெரிய புராணத்தை நன்கு படியாதவர் என்பது ஐயமற விளங்குகிறது. ஆதலின் இத்தகையோர் பாடல்களைக் கொண்டு வரலாறு கூறல் பெருந்தவறாகும் உண்மை வரலாறாகிய பாலமிழ்தில் நஞ்சு கலப்பதொப்பாகும்.
 1. செப்டம்பரில் நான் இவற்றை நேரே பார்வையிட்டேன். எனக்கு உடனிருந்து உதவி புரிந்தவர் அக்கோவில் அதிகாரியான திரு. J.M. சோமசுந்தரம் பிள்ளை, பி.ஏ. பி.எல், அவர்கள். இவற்றை முதன் முதல் கண்டறிந்தவர் S.K. கோவிந்தசாமி பிள்ளை, எம்.ஏ., ஆவர்.
 2. மும்மடங்கு பலமுடையவன்; அஃதாவது தன் முன்னோர் பெற்றிருந்த அரசியல் வன்மைபோல மும்மடங்கு வன்மை பெற்றவன் என்பது பொருள்.
 3. மேல்பாடி என்பது வட ஆர்க்காட்டில் உள்ளதிருவல்லத்துக்கு வடக்கே 6 கல் தொலைவில் உள்ள நகரமாகும். இஃது ‘இராசாச்ரயபுரம்’ என இராசராசன் காலத்தில் வழங்கியது.