சோழர் வரலாறு/மூன்றாம் இராசராசன்
(கி.பி. 1216-1246)
கல்வெட்டுகள் : மூன்றாம் இராசராசன் மூன்றாம் குலோத்துங்கனுக்கு என்ன உறவினன் என்பது தெரியவில்லை. இளவரசன் அல்லது பின்வந்த முடியரசன் தனக்கு முற்பட்ட அரசனைக்கூறிவந்த முறைப்படியே ‘பெரியதேவர்’ என்று இவனும் குலோத்துங்கனைக் குறித்துள்ளான். இதைக் கொண்டு முறை வைப்பை உணரக் கூடவில்லை. இவன் பட்டம் பெற்ற பின்னும் குலோத்துங்கன் உயிருடன் இருந்தான். அதனால் அவன் பெயரிலும் கல்வெட்டுகள் வெளியாயின. இந்த மூன்றாம் இராசராசன் கல்வெட்டுகள் ‘சீர்மன்னு இருநான்கு திசை’ என்னும் தொடக்கத்தையும், ‘சீர்மன்னு மலர்மகள்’ என்னும் முதலையும் உடையன. இவற்றுள் வரலாற்றுக் குறிப்புகள் காண்டல் அருமை, அரசன் உயர் குணங்கள் முதலியன இயற்கைக்கு மாறாகப் புலமை முறையிற் கூறப்பட்டுள்ளன. எனினும் இவனுடைய பிற கல்வெட்டுகளும் சிற்றரசர் கல்வெட்டுகளும் ஹொய்சள்ர் - பாண்டிய கல்வெட்டுகளும் சில நூல் குறிப்புக்களும் கொண்டு இவன் வரலாற்றை ஒருவாறு உணர்தல் கூடும்.
நாட்டு நிலைமை : இவன் கி.பி. 1216-இல் அரசன் ஆனான். அன்று முதலே இவன் அரசியலில் துன்பம் தொடர்ந்தது. தெற்கே பாண்டியர் பெருவலி படைத்தவராய்த் தம்மாட்சி நிறுவவும் சோழர்மீது பழிக்குப்பழி வாங்கவும் சமயம் பார்த்துக்கொண்டு இருந்தனர். மேற்கே ஹொய்சளர் பேரரசைத் தாபித்துக் கொண்டு இருந்தனர்; இக்காலத்தில் ஹொய்சள இரண்டாம் வல்லாளன் ஆண்டு வந்தான். வடக்கே தெலுங்குச் சோடர் சோழப் பேரரசின் வடபகுதியைத் தமதாக்கிக் கொண்டும் சமயம்வரின் சுயேச்சை பெறவும் காத்திருந்தனர். அவர்க்கு வடக்கே காகதீய மரபினர் வலுப்பெற்றிருந்தனர். மேலைச் சாளுக்கியர் இருந்த இடத்தில் ‘சேவுணர்’ என்ற புதிய மரபினர் வன்மை பெற்றவராக இருந்தனர். சோழ நாட்டிற்குள் நடுநாட்டை ஆண்டுவந்த கூடலூர்க் காடவராயர் மறைமுகமாகத் தம் படைவலியைப் பெருக்கிக் கொண்டு சோனாட்டையே விழுங்கித் தமது பழைய பல்லவப் பேரரசை நிலைநாட்டக் காலம் பார்த்து வந்தனர். அவருட் கூடலூர், சேந்தமங்கலங்களை ஆண்டுவந்த கோப் பெருஞ் சிங்கன் தலைமை பெற்றவன் ஆவன்.
பாண்டியன் முதற் படையெடுப்பு : பாண்டிய நாட்டைக் குலோத்துங்கன் உதவியால் ஆண்டுவந்த சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1215-இல் இறந்தான். உடனே அவன் தம்பியான மாறவர்மன் சுந்தர பாண்டியன் அரசன் ஆனான். இவன் கி.பி. 1216 முதல் கி.பி.1238 முடிய அரசாண்டான். இவன் பட்டம் பெற்றவுடன் சோழரைப் பழிக்குப் பழி வாங்கத் துணிந்தான், சோழன் செய்த அனைத்தையும் அவனது பெரு நாட்டிற் செய்து பழி தீர்த்துக் கொள்ள விழைந்தான்; தன் நாட்டில் கொடுமை பல செய்த குலோத்துங்கன் உயிரோடு இருக்கும் பொழுதே பழி தீர்க்க விரும்பினான். அதனால் அவ்வீர அரசன் பாண்டிய நாட்டிற்கே சிறப்பாக அமைந்த ஏழகப் படைகளையும் மறப்படைகளையும் கொண்டு சோழப் பெருநாட்டின் மீது படையெடுத்தான். அப்பொழுது மூன்றாம் குலோத்துங்கன் முதுமைப் பருவத்தினால் அரசியலிலிருந்து விலகி மூன்றாம் இராசராசன் அரசனாக இருந்த தொடக்க காலம் ஆகும். மூன்றாம் இராசராசன் ஆண்மை இல்லாதவன்; அரசர்க்குரிய உயர் பண்புகள் அறவே அற்றவன்; அரசியல் சூழ்ச்சி அறியாதவன். ‘அரசன் எவ்வழி, அவ்வழிக் குடிகள்’ ஆதலின், மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்த அதே படை வீரர் இருந்தும் இல்லாதவர் போல் மடிந்து இருந்துவந்தனர். அதனால், சோணாடு எளிதிற் படையெடுப்புக்கு இலக்காயது.
படையெடுத்த சுந்தர பாண்டியன் சோழ நாட்டை எளிதில் வென்றான்; உறையூரும் தஞ்சையும் நெருப்புக்கு இரை ஆயின. பல மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் ஆடரங்குகளும் மண்டபங்களும் அழிக்கப்பட்டன. சோழ அரசன் எங்கோ ஒடி ஒளித்தான். சோணாட்டுப் பெண்களும் பிள்ளைகளும் தவித்தனர். பாண்டியன் இடித்த இடங்களில் கழுதை ஏர் பூட்டி உழுது வெண்கடுகு விதைத்தான்: பைம்பொன் முடி பறித்துப் பாணர்க்குக் கொடுத்தான், ஆடகப்புரிசை ஆயிரத்தளியை அடைந்து சோழவளவன் அபிடேக மண்டபத்து வீராபிடேகம் செய்து கொண்டான், பின்னர்த் தில்லை நகரை அடைந்து பொன்னம்பலப் பெருமானைக் கண் களிப்பக் கண்டு மகிழ்ந்தான்; பின்னர்ப் பொன் அமராவதி சென்று தங்கி இருந்தான்.
அப்பொழுது, ஒடி ஒளிந்த இராசராசன் தன் மனைவி மக்களோடு அங்குச் சென்று தன் நாட்டை அளிக்குமாறு குறையிரந்து நின்றான். பாண்டியன் அருள் கூர்ந்து அங்ஙனம் சோணாட்டை அளித்து மகிழ்ந்தனன். இக்காரணம் பற்றியே இவன் ‘சோணாடு வழங்கி அருளிய சுந்தர பாண்டியன்’ எனக் கல்வெட்டுகளில் குறிக்கப் பெற்றுளன்.
இப்பாண்டியன் படையெடுப்பைப் பற்றி இராச ராசன் கல்வெட்டுகளில் குறிப்பில்லை. ஆனால் பாண்டியன் மெய்ப்புகழ் இதனைச் சிறந்த தமிழ் நடையில் குறித்துள்ளது. அது படித்து இன்புறத்தக்க பகுதியாகும் :
“பனிமலர்த் தாமரை திசைமுகன் படைத்த
மனுநெறி தழைப்ப மணிமுடி சூடிப்
பொன்னிசூழ் நாட்டிற் புலியாணை போயகலக்
கன்னிசூழ் நாட்டிற் கயலாணை கைவளர
வெஞ்சின இவுளியும் வேழமும் பரப்பித்
தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்திக்
காவியும் நீலமும் நின்று கவினிழப்ப
வாவியும் ஆறும் அணிநீர் நலனழித்து
மடமும் மாமதிலும் கோபுரமும் ஆடரங்கும்
மாடமும் மாளிகையும் மண்டபமும் பலஇடித்துத்
தொழுதுவந் தடையா நிருபர்தம் தோகையர்
அழுத கண்ணிர் ஆறு பரப்பிக்
கழுதை கொண்டுழுது கவடி வித்திச் செம்பியனைச் சினமிரியப் பொருதுகரம்
புகவோட்டிப்
பைம்பொன் முடிபறித்துப் பாணருக்குக் கொடுத்தருளிப்
பாடரும் சிறப்பிற் பரிதி வான்தோய்
ஆடகப் புரிசை ஆயிரத் தளியிற்
சோழவளவன் அபிஷேக மண்டபத்து
வீராபி ஷேகம் செய்து புகழ்விரித்து
நாளும் பரராசர் நாமத் தலைபிடுங்கி
மீளும் தறுகண் மதயானை மேற்கொண்டு
நீராழி வையம் முழுதும் பொதுவொழித்துக்
கூராழி யும்செய்ய தோளுமே கொண்டுபோய்
ஐயப் படாத அருமறைதேர் அந்தணர்வாழ்
தெய்வப் புலியூர்த் திருஎல்லை யுட்புக்கு,
பொன்னம் பலம்பொலிய ஆடுவார் பூவையுடன்
மன்னும் திருமேனி கண்டு மனங்களித்துக்
கோல மலர்மேல் அயனும் குளிர்துழாய்
மாலும் அறியா மலர்ச்சே வடிவணங்கி
வாங்குசிறை அன்னம் துயிலொழிய வண்டெழுப்பும்
பூங்கமல வாவிசூழ் பொன்னம ராவதியில்
ஒத்துலகம் தாங்கும் உயர்மேரு வைக்கொணர்ந்து
வைத்தனைய சோதி மணிமண்டபத் திருந்து
சோலை மலிபழனச் சோணாடும் தானிழந்த
மாலை முடியும் தரவருக என்றழைப்ப
மான நிலைகுலைய வாழ்நகரிக் கப்புறத்துப்
போன வளவன் உரிமையோ டும்புகுந்து
பெற்ற புதல்வனைநின் பேர்என்று முன்காட்டி
வெற்றி அரியணைக்கீழ் விருந்து தொழுதிரப்பத்
தன்னோடி முன்இகழ்ந்த தன்மையெலாம் கையகலத்
தானோ தகம்பண்ணித் தண்டார் முடியுடனே
விட்ட புகலிடம்தன் மாளிகைக் குத்திரிய
விட்ட படிக்கென்றும் இதுபிடிபா டாகஎனப்
பொங்குதிரை ஞாலத்துப் பூபாலர் தோள்விளங்கும்
செங்கயல்கொண் டூன்றும் திருமுகமும் பண்டிழந்த
சோழபதி என்னும் நாமமும் தொன்னகரும்
மீள வழங்கி விடைகொடுத்து விட்டருணி”
ஹொய்சளர் உதவி : இக் கல்வெட்டுச் செய்தியால், பாண்டியன் பழிக்குப்பழி வாங்கினான் என்பதும், இராசராசன் நாட்டை மீளப் பெற்று ஆண்டான் என்பதும் நன்கு தெரிகின்றன. ஆயின், ஹொய்சள மன்னர் கல்வெட்டுகள் வேறு செய்தி ஒன்றைக் கூறுகின்றன. ஹொய்சள அரசனான இரண்டாம் வல்லாளன் தன்னைச் ‘சோழ ராச்சியப் பிரதிஷ்டாசாரியன்’ என்றும், ‘பாண்டிய யானைக்குச் சிங்கம்’ என்றும் கூறிக்கொள்கிறான். அதனுடன் அவன் மகனான நரசிம்மன் ‘சோழகுலக் காப்பாளன்’ என்று கூறப்பெறுகிறான். இக்கூற்றுகள் கி.பி. 1218-க்கு முற்பட்ட கல்வெட்டுகளில் காண்கின்றன. வேறொரு கல்வெட்டு, “பகைவர் இடையில் மறைந்து கிடந்த சோழனைக் காத்து நரசிம்மன் சோழ ஸ்தாபனன் என்னும் பெயரையும், ‘பாண்டிய கண்டனன்’ என்னும் பெயரையும் பெற்றான்” என்று கூறுகிறது. கன்னட நூலாகிய சம்பு ‘வல்லாளனால் இராசராசன் காக்கப்பட்டான்’ என்றே கூறுகிறது.
முடிவு : இக் கூற்றுகளையும் பாண்டியன் மெய்ப்புகழையும் நோக்க, சுந்தரபாண்டியன் படையெடுப் பால் சோழநாடு சீரழிந்தது, இராசராசன் ஒடி ஒளிந்தான், சுந்தரபாண்டியன் பழிக்குப்பழி வாங்கினான் என்பதை உணர்ந்த ஹொய்சள அரசனான வல்லாளன் தன் மகனான நரசிம்மனைச் சோனாட்டிற்கு அனுப்பியிருத்தல் வேண்டும்; அவன் தன் படையோடு வந்து பாண்டியனைப் பொருது வென்றிருத்தல் வேண்டும்; அல்லது அவன் வந்தவுடன் பாண்டியனே சமாதானம் செய்துகொண்டு சோணாட்டை இராசராசற்கு அளித்திருத்தல் வேண்டும் என்னும் முடிபுக்குத்தான் வருதல் கூடும்.
உள்நாட்டுக் குழப்பம் : பாண்டியன் முதல் படையெடுப்புக்குப் பின்னர்ச் சோழப் பெருநாட்டில் அங்கங்குக் குழப்பங்கள் இருந்தன என்பது சில கல்வெட்டுகளால் தெரிய வருகிறது. ஒரு கோவில் பண்டாரம், திருமேனிகள் முதலியன பாதுகாப்புள்ள இடங்கட்கு மாற்றப்பட்டன. இரண்டு சிற்றுார்கள் சம்பந்தமான பத்திரங்கள் அழிக்கப்பட்டன.[1] இங்கனம் பொதுவுடைமைக்கும் பொதுமக்களுக்குமே துன்பம் விளைத்த செயல் யாதாக இருத்தல் கூடும்? சிற்றரசருள் ஒருவர்க்கொருவர் பூசல் இட்டுக்கொண்டு இருந்தனர். உரத்தியை ஆண்ட காடவராயற்கும் வீர நரசிங்க யாதவ ராயற்கும் கி.பி. 1228-இல் போர் நடந்தது.[2] காடவராயர் ஹொய்சள நரசிம்மனுடனும் சண்டையிட்டனர். பின்னவன் முன்னவரிடமிருந்து காஞ்சியைக் கைப்பற்றி னான். இந் நிகழ்ச்சி பாண்டியன் முதற் படையெடுப்பின் பொழுதோ அல்லது அதன் பின்னரோ நடந்திருத்தல் வேண்டும். என்னை? நரசிம்மன் கி.பி. 1230-இல் காஞ்சியை ஆண்டு கொண்டிருந்தான். அவன் படைகள் காஞ்சியில் வைக்கப்பட்டிருந்தன ஆதலின் என்க.[3] இந்நிகழ்ச்சிகளால் சோழ அரசனது வலியற்ற நிலையும் அரசாங்க ஊழலும் ஹொய்சளர் உறவும் ஆதிக்கமும் நன்கு விளங்குகின்றன அல்லவா?
பாண்டியன் இரண்டாம் படையெடுப்பு
பாண்டியப் படை எடுப்பு : ஏறத்தாழக் கி.பி. 1234.5-இல் இராசராசன் சுந்தர பாண்டியன் வெறுப்புக்கு ஆளானான். சோழ அரசன் பாண்டியற்குக்கப்பம் கட்டவில்லை; அதைப் பற்றிப் பாண்டியன் கேட்டபொழுது பெரும்படைகொண்டு பாண்டிய நாட்டின்மீது படையெடுத்தான். முதலில் வந்த சோழனது தூசிப்படை படுதோல்வியுற்றது; வீரர் மாண்டனர்; யானைகள் இறந்தன. பெரும் சேனையும் தோல்வியே அடைந்தது. சோனாட்டில் பல ஊர்கள் எரிக்கப்பட்டன; கவடி விதைக்கப்பட்டன. சோழமாதேவி உட்படப் பெண்டிர் பலர் சிறைப்பட்டனர்; சுந்தரபாண்டியன் முடிகொண்ட சோழ புரத்தில் நுழைந்த பொழுது மங்கலநீரையும் வரவேற்புக்குரிய பொருள் களையும் ஏந்திநின்று அவனை வரவேற்குமாறு ஏவப்பட்டனர். பாண்டியன் அங்கிருந்த அரண்மனையில் விசய அபிடேகம் செய்துகொண்டான்.[4]
கோப்பெருஞ் சிங்கன் : பாண்டியனிடம் தோற்ற இராசராசன் நாட்டை விட்டுத் தன் பரிவாரத்துடன் ஹொய்சள நாடு நோக்கி ஒட முயன்றுவந்து கொண்டிருந்தான். இராசராசனது சிற்றரசனும் காடவமரபினனும் ஈழ வீரரையும் தன் வீரரையும் காடுகளிற் பதுங்க வைத்திருந்தவனுமான கோப்பெருஞ் சிங்கன் அரசனை வழிமறித்துப் போரிட்டான் இறுதியில் தன் பேரரசனைச் சிறைப்படுத்திக் கொண்டு சென்றான், சேந்தமங்கலத்தில் அவனைச் சிறை வைத்தான்[5]; தன் வீரரை ஏவிச் சோணாட்டு விஷ்ணு கோவில்களை அழித்தான்.
ஹொய்சள நரசிம்மன் : சோணாட்டுத் துன்ப நிலையைக் கேள்வியுற்ற நரசிம்மன் தன் தலைநகரமான துவா சமுத்திரத்தை விட்டுப்பெரும்படையுடன் புறப்பட்டான். வழியில் மகதை நாடான நடுநாட்டரசனைப்போரில் தோற்கடித்துக்காவிரிக் கரையை அடைந்தான்; அங்குத் தன் படையை இரண்டாகப் பிரித்து, ஒன்றைத்தான் வைத்துக்கொண்டான்; மற்றொன்றைத் தன் தண்ட நாயகனான அப்பண்ணன், சமுத்திர கொப்பையன் என்பவரிடம் ஒப்படைத்துச் சோழ அரசனை மீட்டு வருமாறு ஏவினன்.[6]
அரசன் விடுதலை : நரசிம்மனுடைய தண்டநாயகர் கோப்பெருஞ்சிங்கன் நாட்டைச் சேர்ந்த என்னேரி, கல்லியூர் மூலை முதலிய ஊர்களைக் கொள்ளை அடித்தனர்; அவனது தலைவனான சோழர்கோன் என்பானது தொழுதகை யூரையும் கொள்ளையடித்தனர்; இராசராசனுக்கு மாறாக இருந்த முதலிகளைக்கொன்றனர்,கோப்பெருஞ்சிங்கனுடன் சேர்ந்திருந்த ஈழநாட்டு இளவரசன் ஒருவனைக்கொன்றனர்; பிறகு தில்லை நகரில் கூத்தப்பெருமானை வணங்கினர்; மேலும் சென்று தொண்டைமான் நல்லூர், திருவதிகை, திருவக்கரை முதலிய ஊர்களை அழித்துச் சேந்தமங்கலம் சேர்ந்தனர்; அங்குப் பயிர்களுக்குத் தீ இட்டனர்; பெண்களைக் கைப்பற்றினர்; குடிகளைக் கொள்ளை யடித்தனர். குடிகள் பட்ட கொடுமைகளையும் கண்ட கோப்பெருஞ்சிங்கன்,சோழ அரசனை விடுதலை செய்வதாக நரசிங்கற்குச் செய்தி சொல்லி அனுப்பினான். நரசிங்கன் கட்டளைப்படி தண்டநாயகர், விடுதலை அடைந்த இராசராசனை மகிழ்ச்சியோடு வரவேற்றுச் சோழநாடு கொண்டு சென்றனர்.
பாண்டியன் தோல்வி : தன் தானைத்தலைவர் அரசனை மீட்கச்சென்றவுடன் நரசிம்மன்,தன்னிடமிருந்த படையுடன் பாண்டியனைத் தாக்கினான்; மகேந்திர மங்கலத்தில் போர் கடுமையாக நடந்தது. சுந்தர பாண்டியன் போரில் தோல்வியுற்றான். நரசிம்மன் இராமேசுவரம் வரை சென்றுமீண்டான். பாண்டியன் நரசிம்மனுக்குக் கப்பம் கட்டுவதாக ஒப்புக் கொண்டான் என்று ஹொய்சளர் கல்வெட்டுக் கூறுகிறது. பாண்டியன் மெய்ப்புகழ், அவன் விசய அபிடேகம் செய்து கொண்டவரைதான் கூறியுள்ளது. இராசராசன் மீட்சி, அவன் மீட்டும் சோணாட்டு அரசன் ஆனது, இவைபற்றிய செய்தி பாண்டியன் கல்வெட்டில் இராததாலும், பாண்டி நாட்டுக்குச் சோணாடு உட்படவில்லை ஆதலாலும், நரசிம்மனிடம் சுந்தர பாண்டியன் தோல்வியுற்றது உண்மை என்றே தெரிகிறது.[7]
முடிவு : ஹொய்சள நரசிம்மனது இடையீட்டால் இராசராசன் இரண்டாம் முறையும் அரசன் ஆக்கப்பட்டான். சுந்தரபாண்டியனும் தன் செருக்கு அழிந்து ஒடுங்கினான். ஆயின், ஹொய்சளர் செல்வாக்குச் சோழ - பாண்டிய நாடுகளில் பரவிவேரூன்றியது.இரு நாடுகளிலும் ஹொய்சள உயர் அலுவலாளரும் தண்டநாயகரும் ஆங்காங்கு இருந்து வரலாயினர். காஞ்சிபுரத்தில் நிலையாகவே ஹொய்சளப் படை இருந்து வந்தது.
சீரழிந்த அரசாட்சி :
அரசத் துரோகம் : மேற் கூறப்பெற்ற குழப்பங்களிற் சம்பந்தப்பட்டதாலோ, பிறகு எஞ்சிய ஆட்சிக்காலத்தில் அரசனுக்கு மாறான வேலைகளில் ஈடுபட்டதாலோ - பல இடங்களில் பலர் விசாரிக்கப் பெற்றுத் தண்டனை அடைந்தனர்; அவர்தம் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏலம் போடப்பட்டன. இத்தகைய பறிமுதல் வேலைகள் சீகாழி, வலிவலம், திருவெண்காடு முதலிய இடங்களில் நடைபெற்றன. கோவில் திருமாளம் என்னும் இடத்தில் 15 ஆயிரம் காசுகள் பெறத்தக்க 5 வேலி 4 மா நிலம் கைப்பற்றப்பட்டது.[8]
கீழ்ப்படியாமை : அரசாங்க ஆணைக்குக் கீழ்ப்படி யாமையும் நாட்டில் தாண்டவம் ஆடியது. சான்றாக ஒன்றுகாண்க. தஞ்சைக் கோட்டத்துச் சிவபுரம் கோவில் சிவப்பிராமணர் இருவர் அம்மனுடைய நகைகளைத் தாங்கள் வைத்திருந்த பரத்தை ஒருத்திக்குக் கொடுத்து விட்டனர்; தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கோவிற் பணத்தைக் கையாடினர்; தம் நிலவரியைக் கொடுக்க மறுத்தனர்; பிறவழிகளிலும் தவறாக நடந்துகொண்டனர்; அரசனது ஆணை மீறியதோடு, வரிவசூலிக்கவந்த அரசாங்க அலுவலாளரை அடித்துத்துன்புறுத்தினர்; கன்னடியருடன் (அரசனை மீட்கச் சென்ற பொழுது சோணாட்டுர்களைக் கொள்ளையடித்துச் சென்ற ஹொய்சளப் படைவீரர்?) சேர்ந்து மக்களைத் துன்புறுத்தி 50 ஆயிரம் காசுகள் வசூலித்தனர். இத்துணைக் குற்றங்களைச் செய்த அப்பிராமணர் மகேசுவரராலும்(கோவில் அதிகாரிகள்) ஊர் அவையினராலும் விசாரிக்கப்பட்டுத்தண்டனை பெற்றனர்.[9]
ஹொய்சளர் செல்வாக்கு : இராசராசனுக்கு அடங்கிய வரும் ஆனால் கொடிய பகைவருமாக இருந்தவர் காடவராயரே ஆனார். இவருள் ஒருவனே சிறப்புற்ற கோப்பெருஞ்சிங்கன்.இவர்கள் மாயூரம் முதல் காஞ்சிவரை அங்கங்கே பல சிறு நாடுகளை ஆண்டுவந்தனர்; காஞ்சியும் இவர்கள் கையில் இருந்தது. மூன்றாம் குலோத்துங்கன் இதனைத் தெலுங்குச் சோழரிடமிருந்து மீட்டான். அவன் இறந்தவுடன் அது காடவர் கைப்பட்டது. அதனை நரசிம்ம ஹொய்சளன் கைப்பற்றினான். அதனால் ஹொய்சளர் நிலைப்படை அங்கு இருக்க வேண்டியதாயிற்று. நரசிம்மவர்மன் செல்வாக்கினால் ஹொய்சளர் பலர் காஞ்சி முதல் திருநெல்வேலிவரை பரவி இருந்தனர். விருத்தாசலம் கூற்றத்துத் திருவடத்துறைக் கோவில் திருமேனிகள் சில நரசிம்ம தேவன் கொண்டு சென்றனன் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.[10] பூததேய நாயகன், மகாப்பிரதானி அம்மண்ண தண்ட நாயகன், என்போர் காஞ்சியில் இருந்த படைத் தலைவர் ஆவர். இவர்கள் காஞ்சியில் உள்ள அத்திகிரி முதலிய கோவில்கட்குப் பல நிபந்தங்கள் விடுத்துள்ளனர்.[11] நரசிம்மனது மற்றொரு தண்ட நாயகன் வல்லயன் என்பான் திருமழப்பாடிக் கோவிலுக்குப் பல நிபந்தங்கள் விடுத்தான்.[12] நரசிம்மன் மனைவியான சோமளதேவியின் பரிவாரப் பெண்களில் ஒருத்தி திருக்கோகர்ணம் கோவிலுக்கு நிபந்தம் விடுத்தாள்.[13] இங்ஙனமே ஹொய்சள தண்டநாயகரும் பிறரும் பாண்டிய நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்தனர்; அரசியலிலும் தொடர்பு கொண்டிருந்தனர்.[14]
சோழப் பெருநாடு : இராசராசன் கல்வெட்டுகள் (130-ம் ஆண்டுவரை) சித்துார், நெல்லூர், கடப்பைக் கோட்டங்களிற் கிடைக்கின்றன. ஆதலின், சோழப் பெருநாடு கடப்பைவரை வடக்கே பரவி இருந்தது என்னலாம்.சேலத்தில் இவனுடைய கல்வெட்டுகள் இருக்கின்றன. ஆதலின் கொங்கு நாடும் பெருநாட்டிற்கலந்து இருந்தது என்னலாம். இவனது ஆட்சியில் பாண்டியநாடு தனிப்பட்டுவிட்டது. எனவே மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியில் இருந்த பரப்பு இவன் காலத்தில் இல்லை என்பது விளங்குகிறது.
சிற்றரசர் : குலோத்துங்கன் ஆட்சிக் காலத்துச் சிற்றரச மரபினர் வழிவந்தவரே இராசராசன் காலத்தில் சிற்றரசராக இருந்தனர். இவருள் குறிப்பிடத்தக்கவர் சிலராவர். அவருள் முதல்வன் கோப்பெருஞ்சிங்கன். இவன் முதலில் திரு நீடுரைச் சுற்றியுள்ள நாட்டுக்குத் தலைவனாக இருந்தான்; பிறகு சேந்தமங்கலம், கூடலூர், விருத்தாசலம், திருவெண்ணெய் நல்லூர் முதலிய ஊர்களைத் தன் அகத்தே கொண்ட நாட்டை ஆண்டுவரலானான். இவன் பழைய பல்லவர் மரபினன், வீரம் மிக்கவன்; சிறந்தபோர்வீரன், அரசியல் தந்திரி, பேரரசனையே சிறைப்பிடித்த செம்மல். இவனைப்பற்றிய கல்வெட்டுகள் பலவாகும். இவன் ஹொய்சளர், காகதியர் முதலிய பலருடனும் போர் இட்டவன், சோழப் பேரரசிற்கு அடங்கியதாகக் கல்வெட்டுகளிற் காட்டிக் கொண்டு தன்னாட்சி நடத்தி வந்தவன். இவன் கி.பி. 1243 முதல் தன் ஆட்சி ஆண்டைக் கணக்கிட்டு வந்தவன்; அது முதல் கி.பி. 1279 வரை(36 ஆண்டுகள்) தன்னாட்சி பெற்றுப் பெருநாட்டை ஆண்டவன், தெற்கே சடாவர்மன் சுந்தர பாண்டியனுடன் போரிட்டவன். இப்பெரு வீரன் வடக்கே திராக்ஷராமம் முதல் தெற்கே தஞ்சாவூர் வரை கோவில் திருப்பணிகள் பல செய்தவன். இவன் சிறந்த சிவபக்தனாக இருந்தான். இவன் தென்னாட்டுப் பெருவீரருள் ஒருவனாக மதிப்பிடத் தக்கவன் ஆவன்[குறிப்பு 1].
சித்தூர், நெல்லூர், கடப்பை இவற்றை ஆண்ட தெலுங்கச் சோடர் அடுத்துக் குறிப்பிடத் தக்கவர் ஆவர். சாளுக்கிய நாராயணன் என்ற மதும சித்தரசன் ஒருவன். மதுராந்தக பொத்தப்பிச் சோழ எர்ர சித்தரசன் ஒருவன். இவர்கள் காஞ்சி நகரத்துக் கோவில்களில் பல பணிகள் செய்துள்ளனர். மலமாதேவரசன் என்பவன் சித்துரை ஆண்ட சிற்றரசன். தெலுங்கச் சோடருட் சிறந்தவனும் பேரரசனுமான முதல் திக்கன் என்ற கண்ட கோபாலன் பல கல்வெட்டுகளிற் குறிக்கப்பட்டுளன். வானர், வைதும்பர், கங்கர், யாதவராயர், சாம்புவராயர், சேதியராயர் மரபினரும் வழக்கம்போலப் பல கல்வெட்டுகளிற் குறிக்கப்பட்டுள்ளனர். எனவே, பெருங்காயம் இருந்த பாண்டம் மணம் வீசுதலைப் போல வலியற்ற இராசராசன் பெரு நாட்டில் சோழரது பழம் பெருமையை நினைத்தும் ஹொய்சளர்க்கு அஞ்சியும் இச்சிற்றரசர் தம்மைச் சோழருடைய சிற்றரசர் எனக் கூறிக்கொண்டனர்.
அரச குடும்பம் : இராசராசன் காலத்திற் சிறப்பாகக் குறிக்கப்பெற்ற அரண்மனை ஆயிரத்தளியே ஆகும். தஞ்சை, உறையூர்களில் இருந்த அரண்மனைகள் சுந்தர பாண்டியனால் அழிவுண்டன. ஆயிரத்தளியும் ஒரளவு பாதிக்கப்பட்டது. இவனுக்கு இரு மனைவியர் இருந்தனர். அவருள் ஒருத்தி கோப்பெருந்தேவி வாணகோவரையன் மகள் ஆவள். இளையவள் ‘புவனம் முழுதுடையாள்’ எனப்பட்டாள். இராசராசன் 30 ஆண்டுகள் அரசாண்டான். இதற்குப் பின் கி.பி. 1246-இல் மூன்றாம் இராசேந்திரன் அரசு கட்டில் ஏறினான். இராசராசன் கல்வெட்டுகள் ‘சீர்மன்னி இருநான்கு திசை, சீர்மன்னு மலர்மகள்’ என்ற தொடக்கங்களை உடையன.
- ↑ 41 of 1926, 213 of 1925, 309 of 1927
- ↑ 271 of 1904
- ↑ K.A.N. Sastry's Cholas', Vol.2. p. 178
- ↑ 142 of 1902.
- ↑ M.R. Kavi in Thirumalai Sri Venkatesvara’ VI pp, 677-678.
- ↑ 142 of 1902
- ↑ K.A.N. Sastry's ‘Cholas’, II, p.185
- ↑ 244 of 1917
- ↑ 279 of 1927; A.E.R. 1927. 11.30.
- ↑ 228 of 1929
- ↑ 349,369, 404, 408 of 1919
- ↑ 89 of 1920
- ↑ 183 of p. Ins. 5.
- ↑ K.A.N. Sastry’s Pandyan Kingdom. pp. 158-159
- ↑ இவனது வரலாறு விரைவில் வெளியிடப்படும்.