உள்ளடக்கத்துக்குச் செல்

டால்ஸ்டாய் கதைகள்/003-003

விக்கிமூலம் இலிருந்து

3.

குற்றமும் தண்டனையும்


விளாடிமிர் என்னும் நகரத்தில் வாலிப வியாபாரி ஒருவன் வசித்து வந்தான். ஐவான் டிமிட்ரிச் அக்ஸனோவ் என்பது அவன் பெயர். அவனுக்கு இரண்டு கடைகள் இருந்தன. சொந்த வீடு ஒன்றும் உண்டு.

அக்ஸனோவ் அழகன். மினுமினுக்கும் சுருட்டை முடி அவன் தலையை அழகு படுத்தியது. வேடிக்கை நிறைந்தவன் அவன். பாட்டுப் பாடுவதில் அவனுக்கு அதிக ஆர்வம் இருந்தது. சின்னஞ் சிறு வயதிலேயே அவன் குடிக்கப் பழகி விட்டான். குடி அளவுக்கு அதிகமாகி விடும்போது அவன் அமர்க்களப் படுத்திவிடுவான். ஆனால் அவன் கல்யாணம் செய்து கொண்ட பிறகு குடிப்பதை நிறுத்தி விட்டான். எனினும் சமயா சமயங்களில் குடியை நாடுவதும் உண்டு.

அப்பொழுது கோடை காலம். நிஷ்னி நகரத்துச் சந்தைக்குப் போவதற்காக அக்ஸனோவ் கிளம்பிக்கொண்டிருந்தான். அவன் தனது குடும்பத்தினரிடம் விடை பெற்ற போது, “ஐவான் டிமிட்ரிச் நீங்கள் இன்றைக்குப் போகவேண்டாம். நான் உங்களைப் பற்றி கெட்ட கனவு ஒன்று கண்டேன்” என்று அவன் மனைவி சொன்னாள்.

அக்ஸனோவ் சிரித்தான். “நான் சந்தையை அடைந்த உடனேயே தலைகால் தெரியாமல் குடித்துப் போட்டு ஆடுவேன் என்றுதானே நீ பயப்படுகிறாய்?” என்றான். 

“என்ன பயமோ, அது எனக்கே புரியவில்லை. நான் கெட்ட சொப்பனம் கண்டேன். அதுதான் எனக்குத் தெரியும். நீங்கள் நகரத்திலிருந்து திரும்பி வந்ததாகக் கனவிலே கண்டேன். ஆனால் நீங்கள் உங்கள் தலையிலிருந்த குல்லாயை எடுத்ததும், உங்கள் தலைமுடி பூராவும் ஒரேயடியாக நரைத்துப் போயிருந்தது” என்று அவள் சொன்னாள்.

அக்ஸனோவ் சிரித்தான். “அப்படியானால் அதிர்ஷ்டம் என்று தான் அர்த்தம். நான் கொண்டு போகிற சரக்குகள் எல்லாவற்றையும் விற்பனை செய்து விட்டு, உனக்கு அன்பளிப்பாக ஏதாவது வாங்கி வருகிறேனா இல்லையா என்று பாரேன்!” என்றான். அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு அவன் பயணமானான்.

அவன் கொஞ்ச தூரம் சென்ற பிறகு, தனக்கு அறிமுகமான வியாபாரி ஒருவனை வழியிலே சந்திக்க நேர்ந்தது. இரண்டு பேரும் அன்றைய இராத்திரிப் பொழுதைக் கழிப்பதற்காக ஒரே விடுதியில் தங்கினார்கள். இருவரும் ஒன்றாகத் தேநீர் பருகிவிட்டு அருகருகே இருந்த தனித்தனி அறைகளில் படுத்துறங்கச் சென்றார்கள்.

வெகு நேரம் வரை தூங்கும் வழக்கம் அக்ஸனோவிடம் கிடையாது. மேலும், குளுகுளு என்றிருக்கும் வேளையில் பிரயாணம் செய்வது நல்லது என்று அவன் எண்ணினான். அதனால், பொழுது விடிவதற்கு முன்னரே அவன் வண்டிக்காரனை எழுப்பி, வண்டியில் குதிரைகளைப் பூட்டும்படி கட்டளை யிட்டான்.

பிறகு, பின் பக்கத்தில் குடியிருந்த விடுதிச் சொந்தக்காரனைத் தேடிப் போனான் அவன். கணக்குப்படி கொடுக்கவேண்டிய பணத்தைச் செலுத்திவிட்டு, அவன் தனது யாத்திரையைத் தொடர்ந்தான்.

சுமார் இருபத்து ஐந்து மைல்களைக் கடந்த பிறகு, குதிரைகளுக்குத் தீனி கொடுப்பதற்காக அவன் வண்டியை நிறுத்தினான். அங்கிருந்த விடுதிக்குப் போகும் பாதையில் சற்றே ஓய்வு எடுத்துக் கொண்ட பிறகு அக்ஸனோவ் உள்ளே சென்றான். ‘ஸ்மோவா’ருக்குச் சூடேற்றும்படி சொல்லிவிட்டு, அவன் தனது இசைக்கருவியை எடுத்துப் பாட ஆரம்பித்தான்.

திடீரென்று, மணிகள் ‘ஜனஜன’ என்று ஒலிக்க, மூன்று குதிரைகள் பூட்டிய வண்டி ஒன்று அங்கே வந்து நின்றது. அதிலிருந்து பெரிய அதிகாரி ஒருவர் இறங்கினார். அவருக்குப் பின்னால் இரண்டு வீரர்கள் வந்தார்கள்.

அவர் அக்ஸனோவை அணுகி விசாரணை செய்யத் தொடங்கினார். அவன் யார், எங்கிருந்து வந்தான் என்றெல்லாம் கேட்டார். அவனும் விவரமாகப் பதில் அளித்தான். பிறகு, “என்னோடு சேர்ந்து டீ சாப்பிடுங்களேன்” என்று உபசரித்தான்.

ஆனால் அந்த அதிகாரி விசாரணையைத் தொடர்ந்து நடத்தலானார், “நேற்று ராத்திரி நீ எங்கே தங்கியிருந்தாய்? நீ தனியாக இருந்தாயா; இன்னொரு வியாபாரியுடன் தங்கினாயா? அந்த வியாபாரியை இன்று காலையில் நீ பார்த்தாயா? விடிவதற்கு முன்பே நீ ஏன் விடுதியை விட்டுப் புறப்பட்டு வந்தாய்?” என்று விசாரித்தார்.

இவ்வாறெல்லாம் தான் ஏன் விசாரிக்கப்பட வேண்டும் என்ற வியப்பு அவனுக்கு ஏற்பட்டது. என்றாலும் அக்ஸனோவ் நடந்த விஷயத்தை விரிவாக எடுத்துக் கூறினான். “நான் என்ன திருடனா, கொள்ளைக்காரனா? என்னை ஏன் இப்படிக் குறுக்கு விசாரணை செய்கிறீர்கள்? எனது சொந்தத் தொழில் காரணமாக நான் பிரயாணம் செய்கிறேன். என்னைக் கேள்வி கேட்க வேண்டிய அவசியமே கிடையாது” என்றும் சொன்னான்.

உடனே அந்த அதிகாரி இரண்டு வீரர்களையும் அருகே அழைத்தார். நான் இந்த வட்டாரத்தின் போலீஸ் அதிகாரி. நேற்று இரவு உன் கூடத் தங்கியிருந்த வியாபாரி கழுத்தறுபட்டுக் கிடந்தான். அதனால் தான் நான் உன்னை விசாரிக்கிறேன். இப்போது உன் சாமான்களை சோதனை போட வேண்டும்” என்று அவர் விளக்கினார்.

அவ் வீரர்களும் போலீஸ் அதிகாரியும் அக்ஸனோவின் சாமான்களை எல்லாம் பரிசோதித்தார்கள். திடீரென்று ஒரு பையிலிருந்து கத்தி ஒன்றைக் கண்டெடுத்த அதிகாரி “இது யார் கத்தி?” என்று கூவினார்.

அக்ஸனோவ் பார்த்தான். ரத்தம் தோய்ந்த கத்தியைக் கண்டதும் அவன் திடுக்கிட்டான்.

“இந்தக் கத்தியில் ரத்தம் எப்படி வந்தது?”

அக்ஸனோவ் பதில் சொல்ல முயற்சித்தான். அவனுக்கு சரியாகப் பேச வரவில்லை. “நான் வந்து.... எனக்குத் தெரியாது....என்னுடைய தில்லை” என்று அவன் குளறினான்.

“வியாபாரி கழுத்து அறுபட்டு படுக்கையில் கிடந்தது இன்று காலையில் தெரிந்தது. நீ ஒருவன்தான் அந்த மாதிரி வேலை செய்திருக்க முடியும். வீடு உள்ளே தாழிட்டுப் பூட்டப்பட்டிருந்தது. அங்கே வேறு ஆளே கிடையாது. இதோ ரத்தக்கறை படிந்த கத்தி உன் பையிலிருந்து கிடைத்தது. உன் முகமும் உனது நடத்தையும் உன்னைக்காட்டிக் கொடுக்கின்றன. உண்மையைச் சொல்லிவிடு. நீ அவனை எப்படிக் கொலை செய்தாய்? எவ்வளவு பணம் திருடினாய்?” என்று கேட்டார் அந்த அதிகாரி.

தான் கொலை செய்யவில்லை; இரண்டுபேரும் சேர்ந்து டீ குடித்துவிட்டுப் பிரிந்த பிறகு தான் அவ் வியாபாரியைப் பார்க்கவே இல்லை; தனது சொந்தப் பணமான எட்டாயிரம் ரூபிள்களைத் தவிர தன்னிடம் வேறு பணமே கிடையாது; அந்தக் கத்தி தன்னுடையது அல்ல என்று அக்ஸனோவ் சத்தியம் செய்தான். ஆனாலும், அவன் குரல் கம்மியது. அவன் முகம் வெளிறித் தோன்றியது. அவனே குற்றம் செய்து விட்டவனைப்போல் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான்.

அவனைக் கட்டி வண்டியில் ஏற்றும்படி அதிகாரி உத்திரவிட்டார். வீரர்கள் அவன் கால்களை இறுகப் பிணைத்து அவனை வண்டியினுள் தள்ளியபோது, அக்ஸனோவ் சிலுவை அடையாளம் செய்து கண்ணீர் வடித்தான். அவனது பணமும் சரக்குகளும் அவனிடமிருந்து பறிக்கப்பட்டன. அருகில் உள்ள நகரின் சிறைக்கூடத்துக்கு கைதியாக அனுப்பப்பட்டான் அவன்.

அவனுடைய நடத்தையைக் குறித்து விளாடிமிர் நகரத்தில் விசாரணை செய்யப்பட்டது. முன்பெல்லாம் அவன் குடித்து வீண்பொழுது போக்கி வந்தான்; என்றாலும் அவன் நல்ல மனிதன்தான் என்றே அந்நகரத்தின் வியாபாரிகளும் மற்றவர்களும் அறிவித்தார்கள். பிறகு வழக்கு விசாரணைக்கு வந்தது. ரியஜான் நகரிலிருந்து வந்த வியாபாரியைக் கொலை செய்து, அவனிடமிருந்த இருபதினாயிரம் ரூபிள்களை அக்ஸனோவ் அபகரித்துக் கொண்டான் என்று குற்றம் சாட்டப்பட்டது.

அவன் மனைவி குழப்பத்தில் ஆழ்ந்தாள். எதை நம்புவது என்றே அவளுக்குப் புரியவில்லை. அவளது குழந்தைகள் அனைவரும் சின்னஞ் சிறுசுகள். பால்குடி மறக்காத சிறுபிள்ளை ஒன்றும் இருந்தது. எல்லாக் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவள் கணவன் ஜெயிலில் கிடந்த நகரை நோக்கிச் சென்றாள். முதலில் அவனைச் சந்திப்பதற்கு அவளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. பிறகு, எவ்வளவோ அழுது கெஞ்சியதன் பயனாக அதிகாரிகளிடமிருந்து அவள் அனுமதி பெற முடிந்தது. அவள் கணவனிடம் அவளைக் கூட்டிச் சென்றார்கள்.

ஜெயில் உடுப்பு அணிந்து, விலங்குகள் மாட்டப்பெற்று, திருடர்களோடும் கொடிய குற்றவாளிகளுடனும் அடைத்து வைக்கப்பட்டிருந்த கணவனைப் பார்த்த உடனேயே அவள் தலைசுற்றி கீழே விழுந்து விட்டாள். வெகு நேரம் வரையில் அவள் விழிப்பு அடையவே இல்லை.

பிறகு தனது குழந்தைகளைச் சேர்த்து அணைத்துக் கொண்டு அவள் அவனுக்கு அருகே அமர்ந்தாள். வீட்டு விஷயங்களைப்பற்றி அவனிடம் பேசினாள். அவனுக்கு என்ன நேர்ந்தது என விசாரித்தாள். அவன் நடந்தது முழுவதையும் அவளிடம் சொன்னான். “இனிமேல் நாம் என்ன செய்யலாம்?” என்று அவள் கேட்டாள்.

“குற்றம் எதுவும் செய்யாத ஒருவன் அழிந்து போகாதபடி காப்பாற்ற வேணும் என்று கோரி ஜார் மன்னனுக்கு மனுச் செய்யவேண்டும்.” தான் அவ்விதம் ஒரு மனு தயாரித்து ஜாருக்கு அனுப்பியதாகவும், அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும் அவள் அறிவித்தாள்.

அக்ஸனோவ் மறுபேச்சு பேசவில்லை. அவன் முகம் வாட்டத்துடன் தாழ்ந்தது.

அவன் மனைவி சொன்னாள்: “உங்கள் தலைமுடி நரைத்துப் போனதாக நான் சொப்பனம் கண்டேனே, ஞாபகம் இருக்கிறதா? அதில் அர்த்தம் இல்லாமல் இல்லை, நீங்கள் அன்றைக்கு பயணம் தொடங்கி இருக்கக்கூடாது.” பிறகு அவனது தலைமயிரினூடே தன் விரல்களை ஓடவிட்டவாறே அவள் கேட்டாள் “எனது அருமை வான்யா, உங்கள் மனைவியிடம் உண்மையைச் சொல்லுங்கள். அந்தக் காரியம் செய்தது நீங்கள் இல்லையே?” என்று.

"அப்படியானால், நீ கூட என்னைச் சந்தேகிக்கிறாயா!” என்றான் அக்ஸனோவ். அவன் முகத்தைத் தனது கைகளால் மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தான். மனைவியும் மக்களும் அங்கிருந்து போய்விட வேண்டும் என்று காவல்காரன் வந்து தெரிவிக்கவே, அக்ஸனோவ் தனது குடும்பத்திற்குப் பிரிவு வணக்கம் அறிவித்தான். அவனுடைய இறுதி உபசாரம் அதுதான்.

அவர்கள் போய்ச் சேர்ந்ததும், மனைவி பேசியதை எல்லாம் எண்ணிப் பார்த்தான் அக்ஸனோவ். தனது மனைவிகூடத் தன்மீது சந்தேகப்படுகிறாள் என்ற நினைப்பு எழவும், “கடவுள் ஒருவருக்குத்தான் உண்மை தெரியும் போலிருக்கிறது. அவருக்குத்தான் நாம் மனுச் செய்து கொள்ளவேண்டும். அவரிடமிருந்துதான் நாம் கருணையை எதிர்பார்க்கவேண்டும்” என்று அக்ஸனோவ் தன்னைத்தானே தேற்றிக் கொண்டான்.

ஆகவே அக்ஸனோவ் அதற்குப் பிறகு எந்த விதமான மனுவும் எழுதவில்லை. தனக்கு விடுதலை கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அவன் துறந்து விட்டான். ஆண்டவனை நினைத்துப் பிரார்த்தனை மட்டும் புரிந்து வந்தான்.

அவனுக்குக் கசைஅடி கொடுக்கவேண்டும்; அப்புறம் சுரங்க வேலைக்கு அவனை அனுப்பிவிட வேண்டும் என்று தண்டனை விதிக்கப்பட்டது. அவ்வாறே அக்ஸனோவ் கசையினால் அடிக்கப்பட்டான். அதனால் ஏற்பட்ட காயங்கள் ஆறிய பிறகு, இதர குற்றவாளிகளுடன் அவனும் சைபீரியாவுக்கு அனுப்பப்பட்டான்.

இருபத்தாறு வருட காலம் அக்ஸனோவ் சைபீரியாவில் குற்றவாளியாகத் தண்டனை அனுபவித்து வாழ்ந்தான். அவனுடைய தலைமயிர் பனி மாதிரி வெளுத்துப் போயிற்று. அவனது தாடி நீண்டு, மெல்லியதாய், நரை ஓடி வளர்ந்தது. அவனது உற்சாகம் ஒழிந்து போய்விட்டது. அவன் கூனிக்குறுகிப் போனான். அவன் நடையிலே தளர்ச்சி காணப்பட்டது. அவன் அதிகமாகப் பேசுவதில்லை. ஒருபோதும் சிரிப்பதில்லை, ஆனால் அடிக்கடி பிரார்த்தனை செய்தான் அவன்.  சிறையில் செருப்பு தைக்கும் தொழிலைக் கற்றுத்தேர்ந்தான் அக்ஸனோவ். அதன்மூலம் அவனுக்குக் கொஞ்சம் பணம் கிடைத்தது. அதைக்கொண்டு அவன் ‘ஞானிகளின் வாழ்க்கை’ என்ற புத்தகத்தை வாங்கினான். சிறையினுள் வெளிச்சம் நிலவுகிற வரையில் அவன் அந்த நூலைப் படிப்பான். ஞாயிற்றுக்கிழமைகளில், சிறையில் உள்ள மாதா கோயிலில் பிரார்த்தனை நேரத்தின்போது, புதிய ஏற்பாட்டில் உள்ள திருமுகத்தை அவன்தான் வாசிப்பான். தேவகீதம் பாடுவதிலும் அவன் கலந்து கொள்வான். அவனுடைய குரல் மட்டும் இன்னும் நன்றாகவே இருந்தது.

அவனது சாந்த குணத்திற்காக அக்ஸனோவை சிறை அதிகாரிகள் பெரிதும் விரும்பினார்கள் அவனுடன் வசித்த இதர கைதிகள் அவனிடம் மரியாதை காட்டினார்கள். அவர்கள் அவனை ‘தாத்தா’ என்றும் ‘ஞானி’ என்றும் அழைத்து வந்தனர், எதையாவது குறித்துச் சிறை அதிகாரிகளுக்கு மனுச் செய்து கொள்ள நேர்ந்தால், அவர்கள் அக்ஸனோவையே தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுப்பது வழக்கம். கைதிகளுக்குள் ஏதாவது தகராறு ஏற்பட்டுவிட்டால், விஷயத்தை விசாரித்து விவகாரத்தைத் தீர்த்து ஒழுங்கு படுத்துவதற்காக அவர்கள் அவனையே நாடினார்கள்.

அக்ஸனோவின் வீட்டிலிருந்து எவ்விதத்தகவலும் எட்டவில்லை. அவனது மனைவியும் மக்களும் உயிரோடு இருந்தார்களா, இறந்து போனார்களா எனும் விஷயமே அவனுக்குத் தெரியாமல் போய்விட்டது.

ஒருநாள், அந்த ஜெயிலுக்கு புதிதாகக் கைதிகளின் கூட்டம் ஒன்று வந்து சேர்ந்தது. மாலைவேளையில் பழைய கைதிகள் புதிய ஆசாமிகளைச் சூழ்ந்து கொண்டு, யார் யார் எந்த எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறார்கள், என்ன காரணத்திற்காகத் தண்டனை பெற்றுள்ளார்கள் என்றெல்லாம் விசாரித்தார்கள். மற்றவர்களோடுகூடி அக்ஸனோவும் புதிதாக வந்தவர்களுக்கு அருகே உட்கார்ந்திருந்தான். அவன் உற்சாகமற்ற முறையிலேயே அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தான்.

புதிய குற்றவாளிகளில், திடகாத்திரமான நெட்டையன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அறுபது வயது இருக்கும். ஒட்ட வெட்டி விடப்பட்ட தாடி வைத்திருந்தான் அவன். தான் எதற்காகக் கைது செய்யப்பட்டான் என்பதைப்பற்றி அவன் பேசிக் கொண்டிருந்தான்.

“சறுக்கு வண்டியில் கட்டியிருந்த ஒரு குதிரையை நான் ஓட்டிச் சென்றேன். அதற்காக என்னைப் பிடித்துக் கொண்டார்கள். திருட்டுப் பட்டமும் கட்டி விட்டார்கள். நான் சொன்னேன்—வீட்டுக்கு விரைவாகப் போய்ச் சேர வேண்டுமே என்றுதான் நான் இந்தக் குதிரையை அவிழ்த்தேன். அப்புறம் இதை அதன் போக்கிலே விட்டுவிட எண்ணியிருந்தேன். மேலும், அந்த வண்டிக்காரன் எனது நெருங்கிய நண்பன் ஆவான். ஆகையினாலே, இதில் தவறு ஒன்றும் கிடையாது என்றேன். ‘இல்லை, நீ திருடத்தான் செய்தாய்’ என்கிறார்கள் மற்றவர்கள். ஆனால், நான் எங்கே திருடினேன், எப்படித் திருடினேன் என்பது எதையும் அவர்களால் சொல்ல முடியவில்லை. ஒருசமயம் உண்மையாகவே நான் தவறான ஒரு காரியத்தைச் செய்தேன். நியாயமாகப் பார்த்தால் ரொம்ப காலத்துக்கு முன்னாலேயே நான் இங்கே வந்திருக்க வேண்டும். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்பொழுதோ, ஒன்றுமில்லாததற்காக என்னை இங்கே அனுப்பி விட்டார்கள். ....அஹ, நான் இப்ப சொல்வது பொய்தான். முன்னாலேகூட நான் சைபீரியாவுக்கு வந்திருக்கிறேன். ஆனால் ரொம்பநாள் தங்கியிருக்கவில்லை.”

“நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று ஒருவன் கேட்டான்.

“விளாடிமிரிலிருந்து, எனது குடும்பத்தாருக்கு அந்த ஊர்தான். மகார் என்பது என் பெயர். செமினிச் என்றும் என்னைக் கூப்பிடுவார்கள்” என்றான் அவன்.

அக்ஸனோவ் தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தான். “செமினிச், விளாடிமிர் நகரில் உள்ள அக்ஸனோவ் குடும்பத்தாரைப்பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா?” என்று கேட்டான்.

“தெரியாமல் என்ன! ரொம்ப நன்றாகத் தெரியும். அக்ஸனோவ் குடும்பத்தினர் நல்ல பணத்தோடு வாழ்கிறார்கள். அவர்களுடைய தகப்பனார்தான் சைபீரியாவில் வசிக்கிறார். அவரும் நம்மைப்போல் பாபம் செய்தவர் போலிருக்கிறது! அது... சரி,.. தாத்தா, நீ எப்படி இங்கே வந்து சேர்ந்தாய்?” என்றான் மற்றவன்.

தனது துரதிர்ஷ்டம் பற்றிப் பேச அக்ஸனோவுக்கு இஷ்டமில்லை. அவன் வெறுமனே பெருமூச்செறிந்தான் "எனது பாபங்களுக்காக நான் இருபத்தாறு வருடகாலம், சிறையில் கிடக்கிறேன்” என்றான். 

“என்ன பாபம்?” என்று மகார் செமினிச் கேட்டான்.

ஆனால் அக்ஸனோவிச், “ஊம், ஊம்......எனக்கு ஏற்ற தண்டனையாகத்தான் இருக்கும்” என்று மட்டுமே சொன்னான். அவன் அதற்குமேல் எதுவும் பேசியிருக்க மாட்டான். ஆனால் அவனுடைய சகாக்கள் விஷயத்தை எடுத்துச் சொன்னார்கள். எவனோ ஒருவன் யாரோ ஒரு வியாபாரியைக் கொலை செய்துவிட்டு கத்தியை அக்ஸனோவின் சரக்குகளுக்கிடையே பதுக்கி வைத்துவிடவே, அவன் அநியாயமாகத் தண்டிக்கப்பட்டு சைபீரியா வந்து சேர்ந்த விவரத்தை அறிவித்தார்கள்.

இதைக் கேள்வியுற்றதும் மகார் செமினிச் அக்ஸனோவைக் கூர்ந்து நோக்கினான். தனது முழங்கால் மீது ஓங்கித் தட்டிக்கொண்டு அவன் உற்சாகமாகக் கத்தினான். “அட, இது ஆச்சர்யம்தான். ஆனால், தாத்தா, நீ எவ்வளவு முதியவனாக வளர்ந்துவிட்டாய்!” என்றான்.

அவனுக்கு ஏன் அவ்வளவு ஆச்சர்யம் ஏற்பட்டது என்றும், அதற்குமுன் அக்ஸனோவை அவன் எங்கே பார்த்திருக்கிறான் என்றும் மற்றவர்கள் அவனைக் கேட்டார்கள். ஆனால் மகார் சரியாகப் பதில் சொல்லவில்லை. “நாங்கள் இங்கே சந்திக்க நேர்ந்தது ஆச்சர்யமே” என்றுதான் சொன்னான்.

இவ் வார்த்தைகள் அக்ஸனோவை சிந்திக்கத்தூண்டின. அந்த வியாபாரியைக் கொலை செய்தது யார் என்கிற விவரம் இவனுக்குத் தெரிந்திருக்குமோ என்று நினைத்தான் அவன். ஆகவே, “செமினிச், ஒருவேளை நீ அந்தச் சம்பவம்பற்றி முன்பே கேள்விப் பட்டிருந்தாயோ? அல்லது நீ என்னை இதற்கு முந்தி பார்த்தது உண்டோ?” என்று கேட்டான்.

“கேள்விப்படாமல் இருக்க முடியுமா என்ன! உலகம் பூராவும், வதந்திகள் பறந்து திரிகின்றன. ஆனால் இது ரொம்ப காலத்துக்கு முந்திய சங்கதி. நான் என்ன கேள்விப்பட்டேன் என்பதே எனக்கு மறந்து போய்விட்டது.”

“அந்த வியாபாரியைக் கொன்றவன் யார் என்பதை நீ கேள்விப்பட்டது உண்டோ?” என்று வினவினான் அக்ஸனோவ்.

மகார் செமினிச் சிரித்துவிட்டுச் சொன்னான்; எவனுடைய பையில் கத்தி கண்டெடுக்கப்பட்டதோ அவனேதான் கொலை செய்திருக்க வேண்டும். வேறு எவனாவது அந்தக் கத்தியை அங்கே பதுக்கி வைத்திருக்கக் கூடுமே என்றால்—‘அகப்படாமல் இருக்கிற வரையில் அவன் திருடன் இல்லை’ என்பது வசனம். உன்னுடைய பைக்குள், அது உன் தலைக்குக் கீழே இருந்தபொழுது, வேறொருவன் கத்தியை எப்படித் திணித்திருக்க முடியும்? அப்படிச் செய்யும் பொழுது உன் தூக்கம் கலைந்து போயிருக்காதா?”

இந்தப் பேச்சைக் கேட்டதுமே, வியாபாரியைக் கொன்ற ஆள் இவன்தான் என்ற உறுதி அக்ஸனோவுக்கு ஏற்பட்டது. அவன் எழுந்து அங்கிருந்து போய்விட்டான்.

அன்று இரவு முழுவதும் அக்ஸனோவ் தூங்கவே இல்லை. கடுமையான துயரம் அனுபவித்துக் கிடந்தான் அவன். பலரகமான நிழல்களும் அவனது மனஅரங்கிலே ஊசலிட்டன. அவனுடைய மனைவியின் உருவம், அவன் சந்தைக்குப் புறப்பட்ட சமயத்தில் விட்டுப் பிரிந்தபோது காட்சி தந்து நின்ற நிலையில், இப்பொழுதும் தோன்றியது. கண் முன்னால் அவளே நிற்பதுபோல் தோன்றியது அவனுக்கு. அவள் முகமும், அவளுடைய கண்களும் மிகத் தெளிவாகப் புலனாயின. அவள் பேசுவதையும் சிரிப்பதையும் அவன் கேட்டான். அப்புறம், அவன் தனது குழந்தைகளைக் கண்டான். அந்தக் காலத்தில் இருந்தது போல், சின்னஞ் சிறுசுகளாய் கண்டான். ஒன்று சிறு சட்டை அணிந்திருந்தது. மற்றொன்று அம்மாவின் மார்பில் முகம் புதைந்திருந்தது. அதற்குப் பிறகு அவன் தன்னையே, முன்பு தான் இருந்தது போல வாலிபமும் உற்சாகமும் நிறைந்த தோற்றத்தில் கண்டான். கைது செய்யப்படுவதற்கு முன்பு விடுதியின் முற்றத்தில் அமர்ந்து இசைக் கருவியை மீட்டிக் கொண்டு தான் பாடியிருந்த நிலையை எண்ணிப் பார்த்தான் அவன். அக்காலத்தில் எப்படி வாழ்ந்தான் அவன், கவலை என்பதையே அறியாதவனாக! தான் கசையடி பட்ட விதத்தையும், தண்டனை கொடுத்தவனையும், சுற்றி நின்று வேடிக்கை பார்த்த ஜனத்திரளையும் அவன் மனத்திரையிலே கண்டான். விலங்குகளையும், குற்றவாளிகளையும், இருபத்தாறு வருடச் சிறை வாழ்க்கையையும், அகாலத்திலேயே வந்துவிட்ட மூப்பையும் பற்றி நினைத்தான் அவன். அந்த எண்ணமெல்லாம் அவனுக்கு வேதனையே தந்தது. தன்னைத் தானே அழித்துவிடலாமா என்று யோசிக்கிற அளவுக்கு வெறுப்பு ஏற்படுத்தியது. 

“எல்லாம் இந்தக் கயவனின் செயலால்தான்” என்று நினைத்தான் அக்ஸனோவ். மகார்செமினிச் மீது மாபெரும் ஆத்திரம் உண்டாயிற்று அவனுக்கு, அவன் பேரில் வஞ்சம் தீர்த்துக் கொள்ள வேண்டும்; அம் முயற்சியில் தானே அழிந்து பட்டாலும் சரிதான் என்ற அவா எழுந்தது. ராத்திரி பூராவும் அவன் பிரார்த்தனை பண்ணியும் பயன் இல்லை. மனம் அமைதி காண முடியாமல் தவித்தது. பகல் வேளையில் அவன் மகார் செமினிச்சின் அருகில் செல்லவே இல்லை; அவன் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை.

இந்த விதமாக இரண்டு வாரங்கள் கழிந்தன. இரவு நேரங்களில் அவன் தூங்குவதே இல்லை. என்ன செய்வது என்று புரியாமல் குழம்பித் திண்டாடினான் அவன்.

ஓர் இரவில் அவன் சிறையினுள் சுற்றி வந்து கொண்டிருந்தான். ஓர் இடத்தில், கைதிகள் படுத்து உறங்குவதற்குரிய பகுதியின் ஒரு பக்கத்திலிருந்து, மண் உருண்டுபுரண்டு வெளியேவருவதை அவன் கவனித்தான். அது என்ன என்று ஆராய்வதற்காக அவன் அங்கேயே நின்றான். திடீரென்று உள்ளேயிருந்து மகார் செமினிச் வெளியே ஊர்ந்து வந்தான். அக்ஸனோவைக் கண்டதும் பயத்தினால் அவன் முகம் வெளிறியது. அக்ஸனோவ் அவனைப் பாராததுபோல் அப்பால் செல்ல முயன்றான். ஆனால் மகார் அவன் கையைப் பற்றி நிறுத்தினான். தான் சுவருக்கு அடியில் ஒரு துவாரம் தோண்டி விட்டதாகவும், தோண்டி எடுத்த மண்ணை கொஞ்சம் கொஞ்சமாக பூட்ஸில் வைத்து ஒவ்வொருநாளும் வெளியே எடுத்துச் சென்று, கைதிகள் வேலைக்குப் போகிற வழியில் ரஸ்தாவில் கொட்டி அப்புறப்படுத்தி விட்டதாகவும் மகார் சொன்னான்.

“நீ சும்மா வாயை மூடிக் கொண்டிரு, கிழவா. நீயும் வெளியேறி விடலாம். நீ உளறி விட்டாயானால், என் தோலை உரித்து உயிரை எடுத்து விடுவார்கள். ஆனால் அதற்கு முந்தி நான் உன்னை ஒழித்துக்கட்டிவிடுவேன்” என்று அவன் எச்சரித்தான்.

தனது பகைவனைப் பார்க்கப் பார்க்க அக்ஸனோவுக்குக் கோபம் பொங்கியது. அதனால் அவன் தேகம் பதறியது. அவன் தனது கையை இழுத்துக் கொண்டான். “தப்பி ஓடவேணும் என்கிற ஆசை எனக்கு இல்லை. நீ என்னைக் கொல்லவேண்டும் என்கிற தேவையுமில்லை. ரொம்ப காலத்துக்கு முந்தியே நீ என்னைக் கொன்றுவிட்டாய். உன்னைக் காட்டிக் கொடுக்கிற விஷயத்தில்—நான் உள்ளதைச் சொல்லி விடலாம்; சொல்லாமலுமிருக்கலாம். அது கடவுள் திருவுள்ளப்படி நடக்கும்” என்று சொல்லிவிட்டான்.

மறுநாள், குற்றவாளிகளை வேலைக்கு இட்டுச் சென்றபோது, கைதிகளில் எவனோ ஒருவன் பூட்ஸில் மண்ணை எடுத்து வந்து வெளியே கொட்டுவதாகக் காவல் வீரர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். சிறை முழுவதும் சோதனை போடப்பட்டதில், கள்ள வழி அம்பலமாகி விட்டது. அவ் விஷயம் அறிந்த கவர்னர் வந்தார். அப்படி வழி தோண்டியவன் யார் என்று கண்டு பிடிப்பதற்காக அவர் எல்லாக் கைதிகளையும் விசாரித்தார். தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று எல்லோரும் சாதித்தார்கள். தெரிந்து வைத்திருந்தவர்கள் மகார் செமினிச்சைக் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை. அவ்வாறு செய்தால், கசைஅடி கொடுத்து அவனைச் சாகடித்து விடுவார்கள் என்பதை அனைவரும் அறிவர். கடைசியாக, கவர்னர் அக்ஸனோவ் பக்கம் திரும்பினார். அவன் நீதி தவறாத மனிதன் என்பது அவருக்குத் தெரியும். ஆகவே, அவர் கேட்டார் “உண்மையே பேசும் முதியவன் நீ. கடவுளுக்குப் பொதுவாகச் சொல்லு, இப்படிக் குழி பறித்தவன் எவன்?” என்று.

மகார் செமினிச், தனக்கு எதுவுமே சம்பந்தம் இல்லாதது போல, கவர்னரையே பார்த்தபடி நின்றான். அவன் அக்ஸனோவ் மீது சிறு பார்வை கூடச் செலுத்தினானில்லை.

அக்ஸனோவின் உதடுகளும் கரங்களும் துடித்தன. வெகுநேரம் வரை அவனால் ஒரு வார்த்தை கூடப் பேசமுடியவில்லை. “என் வாழ்க்கையைப் பாழ்படுத்தியவனை நான் ஏன் மூடி மறைக்கவேண்டும்? நான் அனுபவித்த கொடுமைகளுக்கு ஈடாக அவன் துயரப்பட வேண்டியதுதான். ஆனால், நான் சொல்லி விட்டால், இவர்கள் அவனை சவுக்கால் அடித்துக் கொன்றுவிடுவார்களே. நான் அவனைச் சந்தேகிப்பது தவறாகவும் இருந்து விடலாம். பார்க்கப் போனால் இதனால் இனி எனக்கு என்ன நன்மை வந்துவிடப் போகிறது?” என்றெல்லாம் யோசித்தான் அவன்.

“உம்... உண்மையைச் சொல்லு, கிழவா.. சுவருக்குக் கீழே வழி தோண்டியது யார்?” என்று கவர்னர் மறுபடியும் கேட்டார்.

அக்ஸனோவ் மகார் செமினிச்சைப் பார்த்தான். “என்னால் சொல்ல முடியாது, எஜமான். நான் சொல்லியே தீர வேண்டும் என்பது கடவுளின் விருப்பம் அல்ல. என்னை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். நான் உங்கள் ஆதிக்கத்தில் இருப்பவன்” என்றான் அவன்.

கவர்னர் எவ்வளவோ முயன்றும் முடியாது போயிற்று. அக்ஸனோவ் அதிகப்படியாக எதுவும் பேசவேயில்லை. ஆகையினால் அந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிட நேர்ந்தது.

அன்று இரவில் அக்ஸனோவ் படுக்கையில் கிடந்து கண் அயரும் சமயத்தில் யாரோ மெதுவாக வந்து படுக்கை மீது உட்காருவதை உணர முடிந்தது. இருளினூடு உற்று நோக்கிய போது, அப்படி வந்தவன் மகார் தான் என்பதை அவன் புரிந்து கொண்டான்.

“இன்னும் உனக்கு என்னதான் வேண்டும்? நீ ஏன் இங்கு வந்தாய்?” என்று அக்ஸனோவ் கேட்டான்.

மகார் செமினிச் மெளனமாக இருந்தான். ஆகவே அக்ஸனோவ் எழுந்து உட்கார்ந்து பேசினான். “உனக்கு என்ன வேண்டும்? இங்கிருந்து போய் விடு. இல்லாவிடில் காவல்காரனைக் கூப்பிடுவேன்” என்றான்.

அக்ஸனோவை நெருங்கிக் குனிந்தவாறு மகார் முணுமுணுத்தான் “ஐவான் டிமிட்ரிச், என்னை மன்னித்து விடு” என்று.

“எதற்காக?” என்று கேட்டான் அக்ஸனோவ்.

“அந்த வியாபாரியைக் கொன்று, கத்தியை உன் பைக்குள் மறைத்து வைத்தவன் நான்தான். நான் உன்னையும் ஒழித்துவிட எண்ணினேன். ஆனால் வெளியே ஏதோ சத்தம் கேட்கவும், கத்தியை உன் பைக்குள் திணித்து விட்டு, ஜன்னல் வழியாக நான் தப்பி ஓடிவிட்டேன்.”

அக்ஸனோவ் பேசவில்லை. என்ன சொல்வது என்றே தோன்றவில்லை அவனுக்கு.

மகார் செமினிச் படுக்கையிலிருந்து கீழிறங்கி, தரை மீது மண்டியிட்டபடி பேசினான்: “ஐவான் டிமிட்ரிச், என்னை மன்னித்துவிடு. கடவுளின் மீது கொண்டுள்ள அன்பு காரணமாக நீ என்னை மன்னித்துவிடு. அந்த வியாபாரியைக் கொலை செய்தவன் நான்தான் என்பதை நான் ஒப்புக்கொண்டு விடுகிறேன். நீ உன் வீடு போய்ச் சேரலாம்.”

“இப்படிப் பேசுவது உனக்கு எளிதாக இருக்கலாம். ஆனால் உனக்காக நான் இந்த இருபத்தாறு வருடகாலம் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. இனிமேல் நான் எங்கே போக முடியும்? என் மனைவி செத்துப் போனாள். என் மக்கள் என்னை மறந்து விட்டார்கள். எனக்குப் போக்கிடம் எதுவுமே இல்லை” என்று சொன்னான் அக்ஸனோவ்.

மகார் செமினிச் எழுந்திருக்கவே இல்லை. அவன் தரைமீது தன் தலையை மோதிக்கொண்டு அழுதான். “ஐவான் டிமிட்ரிச், என்னை மன்னித்துவிடு. அவர்கள் என்னை கசையினால் அடித்து நொறுக்கிய போது கூட எனக்கு இவ்வளவு கஷ்டமாக இல்லை. இப்போதைய நிலையில் உன்னைப் பார்க்கும் போதுதான் என்னால் சகிக்கமுடியவில்லை. என்றாலும் நீ எனக்காக இரக்கப்பட்டாய். என்னை நீ காட்டிக் கொடுக்கவே இல்லை. நான் ஒரு அதமன். கிறிஸ்து பேரால் கெஞ்சுகிறேன். என்னை மன்னித்து விடு” என்றான்.

அவன் அழுது புலம்புவதைக் கேட்டதும் அக்ஸனோவுக்கும் அழுகை பொங்கி வந்தது. அவன் சொன்னான்: “கடவுள் உன்னை மன்னிப்பார். பார்க்கப்போனால் நான் உன்னைக் காட்டிலும் நூறு மடங்கு மோசமானவனாக இருக்கலாம்.”

இவ் வார்த்தைகளைச் சொன்னதும் அவன் உள்ளத்தின் சுமை கரைந்தே போயிற்று. வீட்டுக்குப் போகவேணும் எனும் ஆசை கூட அவனை விட்டுப்போய்விட்டது. சிறையை விட்டு வெளியேற வேண்டும் என்கிற ஆசை இப்பொழுது அவனுக்கு இல்லவே இல்லை. தனக்கு மரணம் விரைவில் விடுதலை அளிக்கும் என்றுதான் நம்பினான் அவன்.

அக்ஸனோவ் எவ்வளவோ எடுத்துச் சொல்லிய போதிலும், மகார் தான்செய்த குற்றம் பற்றிய உண்மையை ஒப்புக்கொண்டு விட்டான். ஆனாலும், விடுதலை உத்திரவு வந்து சேர்வதற்குள் அக்ஸனோவ் இறந்து போனான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=டால்ஸ்டாய்_கதைகள்/003-003&oldid=1304514" இலிருந்து மீள்விக்கப்பட்டது