தந்தையும் மகளும்/178

விக்கிமூலம் இலிருந்து


178அப்பா! குரங்குகள் மற்ற மிருகங்கள் மாதிரி அழகாக நடக்க முடியவில்லையே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நமக்கு இரண்டு கைகளும் இரண்டு கால்களும் இருக்கின்றன. மிருகங்களுக்குக் கைகள் கிடையா. நான்கும் கால்கள் தான். ஆனால் குரங்குக்கோ கால்கள் கிடையா. நான்கும் கைகள் தான். அது எப்படி என்று கேட்பாய், சொல்லுகிறேன், கேள்.

காலுக்கும் கைக்குமுள்ள வித்தியாசம் யாது? நம்முடைய பாதத்தைப் பார். அதன் விரல்கள் அனைத்தும் நீளமாயிராமல் குட்டையாகவே இருக்கின்றன. அதனால் அவற்றைக் கொண்டு எதையும் பிடித்து வைத்துக்கொள்ள முடியாது. நம்முடைய கையைப்பார்.அதிலுள்ள விரல்கள் பாதத்து விரல்களைவிட நீளமாக உள. பெரு விரலும் இருக்கிறது. அத்துடன் ஒவ்வொரு விரலிலும் மூன்று கணுக்கள் இருப்பதால் அவற்றைப் பலவிதமாக மடக்கவும் வளைக்கவும் முடிகிறது. கையை இறுக்கிப் பொத்திக் கொள்ளக்கூடச் சாத்தியமாகிறது.

மிருகங்களுடைய கால்களைப் பார், அவற்றின் நான்கு பாதங்களும் நம்முடைய பாதங்கள் மாதிரியே தான் இருக்கின்றன. ஆனால் குரங்கின் பாதங்களோ நான்கு பாதங்களும் நம்முடைய கைகள் மாதிரியேதான் வளையக் கூடிய நீண்ட விரல்கள் உடையதாக இருக்கின்றன. நமக்கு இருப்பது போலப் பெரு விரல்களும் இருக்கின்றன. அதனால் தான் குரங்குகள் மரக்கிளைகளை நன்றாக இறுக்கிப் பிடித்துக் கொண்டு எளிதாகத் தாவிச் செல்ல முடிகிறது. ஆனால் அதே காரணத்தினால் தான் அவை தரையில் அழகாக நடக்கமுடியவில்லை. அம்மா! நீ கையைத் தரையில் ஊன்றி நடந்து பார். கஷ்டமாயும் இருக்கிறது. அழகாயுமில்லை. அதே மாதிரிதான் குரங்குகளுக்கும் தரையில் நடப்பது கஷ்டமான காரியம். ஆகவே அவை பெரும்பாலும் மரங்களிலேயே வசித்து வருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/178&oldid=1538633" இலிருந்து மீள்விக்கப்பட்டது