தந்தை பெரியார், கருணானந்தம்/007-021

விக்கிமூலம் இலிருந்து

 
5. எழுந்தார்

தந்தை மகனை முந்தி அமர்த்துதல் - நாயக்கர் பெருமகன்

நல் அடக்கம் - நகரத் தந்தையின் புகழ் தரும் பணிகள் 1907 - ல் முதல் மன முதிர்ச்சி - 1920 - ல் மன எழுச்சி.


"ஈ."வெ. இராமசாமி நாயக்கர் மண்டி”யில் வாணிபம் நாளுக்கு நாள் விரைவாக முன்னேறி, வெகுவாக மேலோங்கி வளர்ந்து வந்தது. கண்ணும் கருத்தும் கவனமாய்ச் செலுத்தி, எண்ணம் மொழி செயல் யாவும் அத்துறையில் ஈடுபடுத்தி, வணிகச் சமுதாயத்தின் வழிகாட்டியாய் விளங்கினார் இராமசாமி. பொறுப்பினை ஏற்ற பின்னர் இளைய மகனின் திருப்பத்தை உணர்ந்த வெங்கட்ட நாயக்கர், தாம் மெல்லமெல்ல ஒதுங்கி, ஓய்வாக இருந்து, மகனை முன்னுக்கு உந்தினார். பள்ளிப் படிப்புக் குறைவாயினும் பொது அறிவில் நினைவாற்றலில் மிதமிஞ்சிய வன்மை கொண்டதால் கணக்கு விவரங்கள், எண்சுவடி, வாய்ப்பாடு, சிட்டை குறிப்பு பேரேடு எழுதல், சிக்கலான விவகாரங்களைத் தீர்த்து வைத்தல், தகராறு எழுந்தால் தாமே வலிந்து சென்று வழக்கு விசாரணை நடத்தித் தீர்ப்பு வழங்கல் இவ்வாறாக இராமசாமியிடம் உள்ளுணர்வில் அரியதொரு மாற்றம் நிகழ்ந்தது.

தன் பெற்றோர், தன் சுற்றம், தன் பெண்டு, உடன்பிறந்தோர், தன் வீடு, தன் சொத்து என்பதான தன்னலக் குறுநோக்கு தேய்ந்து மாய்ந்து, ஊர்நலம் பொது நன்மை, சமுக மேம்பாடு, பிறர்முன்னேற்றம் என்பதான பொதுநோக்கு மெதுவாக விரிந்து பரந்து நிறைந்து வரலாயிற்று. வரவேற்கத்தக்க இந்த மாறுதல்களால், அப்போது கோவை மாவட்டத்தையே கொடுமைக்குள்ளாக்கிய பிளேக் நோயினால் பெரும் பரபரப்பும் பீதியும் ஆட்கொள்ள, மக்கள் நகரங்களையெல்லாம் காலிசெய்து, வசதிப்படி வெளியேறினார்களாகையால், ஏழை மக்கள் என்ன செய்வோம் என ஏங்கித் தவித்தபோது, பாங்குடன் மனமுவந்து தாமே முன்வந்து, அஞ்சாமல் அயராமல் அவர்களைக் காப்பாற்றினார். மகத்தான சேவை செய்ததாக மக்களால் மிக்க பெருமையோடு பாராட்டப் பெற்றார் இராமசாமி!

மகனின் மனம் விசாலமடைந்ததைத் தந்தை நேரிடையாக அறிந்து, மட்டில்லா மகிழ்ச்சி பூண்டார். கெட்ட நடத்தையுள்ள இரண்டொரு நண்பர்களும், எட்ட விலகிச் சென்று விட்டனர். இராமசாமி எவ்வளவோ தீயவர்களுடன் கலந்து உறவாடியிருப்பினும், மது அருந்துதல் எனுந் தீயொழுக்கம் பற்றியதே கிடையாது. எப்போதோ வெற்றிலைபாக்கு போடுவது உண்டு; புகை பிடித்தலும் வழக்கமாக இருந்ததுண்டு. தமது நாற்பதாவது வயதில் இவற்றையும் அறவே நிறுத்திக் கொண்டார். நல்ல பண்பாளர்கள் அறிவாளிகள் உறவு மிகுந்தது, பா.வே. மாணிக்க நாயகர் இவருக்கு மிகச் சிறந்த நண்பர். கரூர்ப் பெரும் புலவர் மருதையாபிள்ளை புராணப் புரட்டுகளைக் கண்டிப்பதில் வல்லவர். இவரது நட்பு இராமசாமியாரின் கொள்கைக்கு அரணாக அமைந்தது. இக்காலத்தில் வாழ்ந்த இன்னொரு மாபெரும் தர்க்க நிபுணரான கைவல்ய சாமியாரின் கூட்டுறவும் பெரியாரின் பகுத்தறிவு வாதங்களுக்கு உறுதுணை புரிவதாக அமைந்தது.

மகனது பெரும் புகழ் கண்ட தந்தை அகங்குளிர்ந்து இறும்பூது எய்தினார்; மிகுந்த நிம்மதி கொண்டார். நம்பிக்கை அதிகமானதால், தம்மைப்போல் திருவிழா, உற்சவம், கோயில், மத சம்பந்தமான பண்டிகைகளில் ஈடுபாடு ஏற்படட்டும் என்று, தேவஸ்தானக் குழுவில் இடம் பெறச் செய்தார். ஏற்ற பணியினை இனிது நிறைவேற்றுங் கொள்கை கொண்டவராதலால் இராமசாமி, தமக்கு நம்பிக்கையில்லாவிடினும், மிகச் சிக்கனமாகவும் சிறப்பாகவும் அறப்பணிகளைச் செய்து காட்டினார். கோயில் சொத்துகள் கொள்ளை போகாமல் தடுத்தும், கோயில் பழம் பெருச்சாளிகள் சுரண்டலைக் கண்டு பிடித்தும் செவ்வனே நிர்வாகம் நடத்திக் காட்டினார். மகன் கடவுள் பற்றுதல் பெறாவிடினும் கடமையுணர்ச்சி மிக்காராய் விளங்கக்கண்டு, வெங்கட்ட நாயக்கர் பேருவகையடைந்தார்.

உழைப்பால் உயர்ந்த அந்த உத்தமர் வெங்கட்ட நாயக்கர் செழிப்பான பல அறச்செல்வங்களை உருவாக்கினார். அந்தப் பேரறிவாளருடைய திரு, ஊருணி நீர்போல் நிறைந்த பலனைத் தந்தது. தமது மக்களின் நற்செய்கைகளால் தாம் தக்காராய் மேம்பாடடைந்த பெருமையினால், நிரம்பிய நெஞ்சுடன் அவர் இறுதி நாட்களை எய்தினார். நோய்ப் படுக்கையில் இருந்தபோது, தாம் சமாதியில் அடக்கம் செய்யப்பட விழைந்தார். மூத்த பிள்ளையான கிருஷ்ணசாமி, வைணவர்களைப் புதைக்கக் கூடாது, எரிக்கத்தான் வேண்டும் என வாதிட்டார். இரு பிள்ளைகளுக்கும் தனித்தனியே எண்ணற்ற சொத்துகளை ஒதுக்கிவைத்து, மீதமுள்ள செல்வத்தை அறக்கட்டளை நிறுவிடத் தந்தை விரும்பியபோதும், பெரியவர் மறுத்துப் பார்த்தார்; இளையவர்தாம் அப்போதும் தந்தையை ஆதரித்தார். எனவேதான், ஏராளமான செல்வம், இன்றும் அறச் செயல்களுக்காகப் பெரிதும் உதவிவருகின்றது. அண்ணன் கருத்தை ஏற்காமல், தந்தை விருப்பத்தை நிறைவேற்றிட, அதாவது சமாதிக் குழியில் இறக்கி அடக்கம் செய்திட, மரணப் படுக்கையிலிருந்த வெங்கட்ட நாயக்கருக்குச், சாத்திரப்படிச் சந்நியாசம் வழங்க இராமசாமி ஏற்பாடு செய்தார். (சந்நியாசிகளைச் சமாதி வைத்திட, யாரும் எதிர்ப்புக்காட்ட முடியாதே!) அதற்குப் பிறகும் ஊருக்குள் சமாதி எழுப்பிட நகர சபையோர் ஆட்சேபம் தெரிவித்தனர். மேலதிகாரிகள் சம்மதம் பெற்று இராமசாமி, தம் தந்தையார் இறப்பதற்கு முன்பே, ஈரோடு பழைய புகைவண்டி நிலையத்திற்கு அருகே, கண்ணுக்கெட்டிய தூரம் தெரியக்கூடிய நாயக்கரின் கட்டடங்கள் தொகுதியின் இறுதியாக உள்ள இடத்தில், சமாதி ஒன்றினை எழுப்பினார். இறந்த பின்னர் வெங்கட்ட நாயக்கரின் உடல் அங்கே புதைக்கப்பட்டது. அவரது உருவச்சிலை ஒன்று. கருங்கல்லில், சிறிய அளவில் வடிக்கப்பட்டு, அங்கே நிறுவப்பட்டுள்ளது.

ஈ.வெ. கிருஷ்ணசாமியாரின் இறுதிக்காலம் வரையில் அந்தச் சமாதிக் கட்டடத்துக்குச் சென்று தந்தையார் சிலையை வணங்கி வருவது அடிக்கடி நிகழும். தந்தை பெரியாரும், சில நேரங்களில் அங்கு சென்று கல்லறைக் கட்டடம் சரியாகப் பராமரிக்கப்பட்டு வருகிறதா என ஆராய்வார்.

இளமையிலேயே மதக் கட்டுப்பாடுகள் சாதிச் சம்பிரதாயங்கள் ஆகிய தளைகளின் கட்டறுத்துச், சுய இச்சைப்படி, அனைவருடனும் சமரச நோக்குடன் பழகியதால், இராமசாமியை எல்லாத் தரப்பினரும் மனங்கனிய நேசித்தனர். அநேக நண்பர்கள் எந்த நேரமும் அவரைச் சூழ்ந்து நிரம்பிக்கிடப்பர். யாருக்கு என்ன தீங்கு நேரினும் வலியச் சென்று, அது நீங்கும் வரையில் நிற்பார். யார் வீட்டு நிகழ்ச்சியிலும், தம் வீட்டு நிகழ்ச்சிபோல் பங்கேற்று, முடித்து வைப்பார். இவ்வுயரிய குணங்களால், இராமசாமியின் புகழ் ஒளிவீசத் தொடங்கிற்று. ஈரோட்டின் கவுரவ நீதிபதியாய் நியமனம் பெற்றுப் பன்னிரண்டாண்டு பணிபுரிந்தார். ஈரோடு வட்ட தேவஸ்தானக் குழுவின் தலைவராகப் பல்லாண்டுகள் தொண்டாற்றி, எல்லாராலும் போற்றப்பட்டார். ஈரோடு தாலுக்கா போர்டு துணைத் தலைவராகவும், ஜில்லா போர்டு மெம்பராகவும் வீற்றிருந்தார். இவற்றிலெல்லாம் இராமசாமி தமது திறமை முத்திரைகளை, நாணயத்தின் சின்னங்களை, நன்கு பொறித்து வந்துள்ளார். அனைத்துக்கும் மேலாக, இன்றைக்கும் அன்னாரின் புகழைப் பறைசாற்றி வருவன, அவர் ஈரோடு நகராட்சித் தலைவராயிருந்து ஆற்றியுள்ள அருஞ்செயல்கள்தாம்!

அப்போது ஈரோட்டுக் கடைவீதி மிகக் குறுகலாக இருந்தது. பொது நலன் கருதி அதனை அகலப்படுத்திட வேண்டும். அதற்கு இடையூறாகப் பெருஞ்செல்வந்தர்களான வணிக வேந்தர்களுக்குச் சொந்தமான மாளிகைக் கட்டடங்களின் முன்புறங்களை இடித்துத் தள்ள வேண்டும். தாமே செல்வக்குடியிற் பிறந்தாலும், பெரும்பான்மை மக்களின் பொது நன்மை கருதிச், சிறுபான்மைப் பணக்காரர்களின் எதிர்ப்பினைத் துச்சமாய் ஒதுக்கிய ஈ.வெ.ரா. தமது நகரசபைத் தலைவர் பதவி தந்த அதிகாரத்தாலும், தமது இயற்கையான துணிவாலும், சட்ட விரோதமான ஆக்கிரமிப்பு என்று கூறித் தாமே அருகில் நின்று தேவையான அளவுக்குக் கட்டடங்களின் முகப்புகளை இடித்துத் தள்ளச் செய்தார். அப்போது, மேட்டுக்குடியினர் எதிர்த்த போதிலும், அவர் செய்த அருஞ்சாதனையின் பயனை இன்று பலரும் பாராட்டி, அனுபவித்து வருகின்றனர்.

பாறைப் பகுதியான ஈரோட்டில் குடிநீர்ப் பஞ்சம் தலை விரித்தாடியது. காவிரியாற்றிலிருந்து குடி தண்ணீரை எடுத்து, வடிகட்டிப், பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் குழாய் வழியாக ஊராருக்கு வழங்கிட, முதன் முதலில் திட்டம் தொடங்கி வழிகாட்டியவர் ஈ.வெ.ரா.ஆவார். பெரியாரின் இந்தச் செயலை ஊர் மக்களெல்லாம் போற்றினார்கள். ஆனால் பெரியாரின் தாயார் சின்னத்தாயம்மையார் மட்டிலும் குழாய்த் தண்ணீர் கூடாது என்றார்கள். காரணம் என்ன? குழாய்த் தண்ணீரை யார் யாரோ பிடித்து விடுகிறார்கள் - அதில் தீட்டு ஒட்டியிருக்கும் என்பதற்காக.

அதேபோலப், பெரியாரின் வீட்டுமுன் உள்ள குழாயில் நல்லதொரு வேடிக்கை. அதில் தண்ணீர் பிடிக்க ஒரு பார்ப்பன அம்மையார் வரும்போது, ஒரு சுண்டைக்காய் பிரமாணம் புளியும், பஞ்ச பாத்திரத்தில் தண்ணீரும் கொண்டுவந்து குழாயைப் புளியால் விளக்கிக் கழுவிப் பின்பு தண்ணீர் பிடித்துக் கொண்டுபோக ஆரம்பித்தார்கள். இதைப் பார்த்த பார்ப்பனரல்லாத மாதர்களும் நெல்லிக்காய் அளவு புளியும் ஒரு தோண்டி தண்ணீரும் கொண்டு வந்து, புளியால் விளக்கிக் குழாயைக் கழுவித் தண்ணீர் எடுத்துக் கொண்டு போனார்கள். இதைக் கண்ணுற்ற முஸ்லீம் சகோதரிகள் எலுமிச்சங்காய் அளவு புளியும் முக்கால் குடம் தண்ணீரும் கொண்டு வந்து புளியால் குழாயை விளக்கிக் கழுவித் தண்ணீர் பிடித்து எடுத்துக் கொண்டுபோகப் பழகினார்கள்.

முஸ்லீம் சகோதரிகளைப் பார்த்து உங்கள் மார்க்கத்தில்தான் வித்தியாசம் கிடையாதே; நீங்கள்கூட ஏன் இப்படிக் கழுவித் தண்ணீர் பிடிக்கிறீர்கள் என்று பெரியார் கேட்கச் செய்தபோது, எங்களுக்கு என்ன தெரியும், இப்படித்தான் தண்ணீர் பிடிப்பது வழக்கமோ என்னமோ, என்று கருதி நாங்கள் இப்படிச் செய்து வருகிறோம் என்றார்கள், இவ்வளவுக்கும் பார்ப்பனர் உண்டாக்கிய பழக்க வழக்கந்தானே காரணம் என்று பெரியார் குறிப்பிட்டுள்ளார்.

ஈரோட்டிலுள்ள எழில் தவழும் வ.உ.சி. பூங்காவின் மேல்நிலைக் குடிநீர்த் தொட்டியில் ஈ.வெ. ராமசாமியின் பெயர்தான் பொலிகின்றது! இவ்வளவு நன்மைகள் செய்தும் ஈரோட்டுப் பார்ப்பன மாந்தர், இவர் இப்பதவிக்குத் தகுதியில்லாதவர்; இவரை நீக்கிடல் வேண்டும் என அரசுக்கு விண்ணப்பம் விடுத்தனர். பாதிக்கப்பட்ட சில பாதிரியார்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். மேலிடத்தார் நேரில் வந்து விசாரணை நடத்தியபோது, ஈரோடு நகரத்தில் பொதுநலன் பேணும் கவுரவப் பதவிகள் அனைத்தும் ஈ. வே. ராமசாமியைத் தாமே தேடிவந்து தஞ்சம் புகுந்ததில், அவர் அப்போது வகித்துவந்த பதவிகளின் எண்ணிக்கை இருபத்தொன்பது என்பது தெரியவந்தது. அதனால், மிக உறுதியுடன் இராமசாமியே தலைவராயிருக்கத் தக்கவர் என்று கூறிப் பழி கூறியோர் முகத்தில் கரிபூசிச் சென்றனர்.

ஈ.வெ. ராமசாமி ஈரோடு நகர்த்தலைவராயிருந்தபோது, இவரை விட ஒரு வயது மூத்தவரும், வழக்கறிஞருமான சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் சேலத்தில் தலைவராக வீற்றிருந்தார். பக்கத்திலுள்ள பெரிய நகரமாதலால், இருவரும் அடிக்கடி சந்தித்து, அளவளாவி, நட்புப் பூண்டனர். ஈ.வெ. ராமசாமியின் ஆட்சித்திறன் இராசகோபாலாச்சாரியைக் கவர்ந்தது. அவரும், அவரது நெருங்கிய சகாக்களான டாக்டர் பி. வரதராசலு நாயுடுவும் திருவாரூர் தமிழ்த் தென்றல் வி. கல்யாண சுந்தர முதலியாரும், கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளையும் அப்போது காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இங்கிலாந்தில் நிறுவப்பட்ட கிழக்கு இந்தியக் கம்பெனி கி.பி. 1600-ல் இந்தியாவுக்கு வாணிபம் செய்வதாக வந்து, நுழைந்து, படிப்படியாக உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலை யிட்டு, நாடுகளைக் கைப்பற்றி வந்தது. கி.பி. 1784-ல் இந்தப் பகுதிகளை இங்கிலாந்து அரசே நேரடியாக ஆளத் தொடங்கியது. ஆங்கில ஏகாதிபத்தியத்தை அவ்வப்போது இந்தியாவில் எதிர்த்துச் சில கிளர்ச்சிகள் நடைபெற்று வந்தன. 1885-ஆம் ஆண்டு பம்பாயில் இந்திய தேசியக் காங்கிரஸ் என்னும் அமைப்பை ஹியூம் என்ற ஆங்கிலேயர் தோற்றுவித்தார். இந்தியன் நேஷனல் காங்கிரஸ் - அதாவது இந்தியச் சாதியாரின் சபை என்று வைக்கப்பட்ட பெயர், பிறகுதான் இந்திய தேசிய மகாசபை என மாற்றிக் கொள்ளப்பட்டது. படிப்படியே இந்தியர்களுக்கும் உத்தியோகங்கள் தரப்பட வேண்டும் என்பதே இதன் கோரிக்கை. 1929-ல் தான் சுயராஜ்யக் கோரிக்கை முதன் முதலாக உருவாகியது. காங்கிரஸ் இயக்கம் வளரவே. 1909-ல் மிண்டோமார்லி சீர்திருத்தம், 1919-ல் மாண்டெகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தம் ஆகியவை ஆங்கிலேயரால் கொண்டு வரப்பட்டது.

1916-ல் பார்ப்பனரல்லாதார் நலன்களைப் பாதுகாக்க, நீதிக்கட்சி துவக்கப்பட்டது. காங்கிரஸ் இயக்கத்திலேயே டாக்டர் அருண்டேல், டாக்டர் அன்னிபெசண்ட் அம்மையார் ஆகியோர் ஈடுபட்டு, ஸ்மார்த்தப் பார்ப்பனர் சிலர் உதவியுடன் ஹோம்ரூல் என்ற பெயரால் மிதவாதக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்து வந்தனர்.

காந்தியார் தென்னாப்பிரிக்காவிலிருந்து அப்போதுதான் இந்தியா திரும்பினார். ஹோம்ரூல் இயக்கத்தினை முறியடித்து, ஒத்துழையாமை இயக்கத்தை வலியுறுத்தி வந்தார். அவருக்கு ஆதரவாக வைணவப் பார்ப்பனர்கள் திரண்டனர். இராசகோபாலாச்சாரியார்தான் பிரதம தளபதி!

ஈ.வெ. ராமசாமியின் தீவிரமான முற்போக்கு எண்ணங்களை நன்கு உணர்ந்திருந்ததால், இராசகோபாலாச்சாரியாரின் குழுவினர், அடிக்கடி அவரை ஈரோட்டில் வந்து சந்தித்துக் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபடத் தூண்டினர். நகரசபைத் தலைவராக நற்பணி ஆற்றியதற்காக, ராவ் பகதூர் பட்டம் வழங்கிடப் போவதாய், அரசின் சார்பில் ஒருபுறம் ஆசைவார்த்தைகள் பேசப்பட்டன. சபலத்துக்கு ஆளாகும் ஈனபுத்தியா ஈ.வெ. இராமசாமிக்கு?

அவரே என்ன சொல்கிறார்:- "பொது மக்களின் சுயமரியாதைக்கும் உரிமைக்கும் விடுதலைக்கும் ஆபத்தான இயக்கம் என்று எதையாவது நான் கருதினால் அதை அடியோடு அழிக்க நான் பின்வாங்கமாட்டேன். எவ்விதப் பழியோ அபகீர்த்தியோ ஆபத்தோ வருவதானாலும் அவற்றைக் கொஞ்சமும் இலட்சியம் செய்யாமல் என்னால் கூடியதைச் செய்துதான் தீருவேன்.

நான் பொது வாழ்வில் உழைக்க ஆரம்பித்த பிறகு இக்கொள்கையையே என்னால் கூடியவரை அனுசரித்து வந்திருக்கிறேன். உதாரணமாக ஹோம்ரூல் கிளர்ச்சியின்போதும், ஈரோட்டில் நடந்த கொடித்தகராறில் நானே முன்னணியில் இருந்ததும், என் வீட்டில் கொடி கட்டினதும்; ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பித்த காலத்தில், அது தேசத்துரோகமான கட்சி என்று நமது பார்ப்பனர்கள் செய்த பிரச்சாரத்தில் ஏமாந்துபோய், அதற்கு எதிராக (Madras Presidency Association) சென்னை மாகாணச்சங்கம் ஏற்படுத்துவதற்காகக் கூட்டிய முதல் கூட்டத்திற்கு என்னுடைய முழு ஆதரவையும் கொடுப்பதாக வாக்களித்து 1000 ரூபாய் தந்தியில் அனுப்பியதும், அக்கூட்டத்திற்கு முன்னணியில் இருந்து மாநாடுகள் முதலியன நடத்தியதும், திவான்பகதூர் கேசவப் பிள்ளை தலைமையில் நான் உப தலைவராக இருந்ததும்; பிறகு ஹோம்ரூல் கிளர்ச்சியில் உள்ள சில புரட்டுகள் வெளியானதும், அதை ஒழிப்பதற்குச் சட்டவரம்புக்கு உட்பட்ட கிளர்ச்சி செய்ய வேண்டும். ஆனால், வெள்ளைக்காரர்களை எதிர்க்கக்கூடாது என்பதனால் தகராறு ஏற்பட்ட நிலையில், அதிதீவிரவாதிகள் எல்லாம் சேர்ந்து, (Nationalist Association) அதிதீவிரவாதிகள் சங்கம் ஏற்படுத்தி, சேலம் விஜயராகவாச்சாரியார் தலைவராகவும், ராஜாஜி செக்ரட்டரியாகவும் நான் வைஸ் பிரசிடெண்ட் ஆகவும் இருந்திருக்கிறேன்.

காந்தியார் தலைமையில் வீறுநடை போடத்துவங்கிய காங்கிரஸ் மகாசபையின் ஒத்துழையாமை இயக்கம் ஈ.வெ.ரா.வை மெத்தவும் கவர்ந்திழுத்தது. தமக்கு எப்போதும் மிகப்பிடித்தமான கொள்கைகளாகிய தீண்டாமை விலக்கு, சாதிபேத ஒழிப்பு, மதுவிலக்கு, நீதிமன்றப் புறக்கணிப்பு, பள்ளிக்கூட பகிஷ்காரம், உத்தியோக விலகல் ஆகிய திட்டங்களில் அவர் மனம் பறிகொடுத்தார். பஞ்சாப் படுகொலையைக் கண்டித்து, நாடெங்கும் பிரச்சாரத்திற்காகத் தாமும் கிளர்ந்தெழுந்தார். ஒத்துழையாமை இயக்கத்திற்கு உயிர் கொடுக்க, உயர் பதவிகள் இருபத்தொன்பதை ஒரே நாளில் விட்டொழித்தார். பரம்பரைத் தொழிலான மண்டி வாணிபத்தை, வருமானம் தரும் கருவூலத்தை, பஞ்சாலையை, யோசிக்காமல் மூடிவிட்டார். சொத்துசுகம் அத்தனையும் பித்தம் வளர்க்கும் வித்தெனமதித்துப், பதறாமல் சிதறாமல், கதறாமல் கலங்காமல், துறந்து வெளியேறினார்.

தமிழ்நாட்டில், காங்கிரஸ் இயக்கம் என்ற தரு வளர்வதற்கான மூல விதையைக் கரத்தினில் ஏந்தி, மண்ணில் விதைத்துத், தண்ணீர் வார்த்து, அது முளைவிட்டு இலைவிட்டுக் கிளைவிட்டு, ஆணிவேர் சல்லிவேர் பரப்பி, ஆல விருட்சமாய் விழுதுகள் இறக்கித், தழைத்துச் செழித்துக் கொழுத்துப் படர ஒரே காரண கர்த்தாவான ஈ.வெ. ராமசாமி புறப்பட்டார் 1920-ல்!