தந்தை பெரியார், கருணானந்தம்/008-021
காந்தியடிகளின் ஒத்துழையாமைக் கொள்கையினை மொத்தமாக வரவேற்று அத்தனை பதவிகளையும் சித்தங்குலையாமல் உதறிய ஈ.வெ.ரா., காந்தியாரின் நிர்மாணத் திட்டங்களான கதராடை அணிதல், மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு ஆகிய முப்பெரும் கோட்பாடுகளை முழு மூச்சுடன் ஆதரித்தார். அவற்றை மும்முரமாய்ப் பிரச்சாரம் செய்திடவும் முனைந்து முடிவெடுத்தார். ஒத்துழையாமைக் கொள்கை வெற்றிகரமாய் நடத்தப்பெறத் தாமே முன்னுதாரணமாய் விளங்கிட எண்ணினார். நீதிமன்றங்களைப் புறக்கணித்தலே அதன் செயற்பாடாகும். தமது குடும்பத்துக்கு வரவேண்டிய பல்லாயிரக்கணக்கான ரூபாய்க் கடன் தொகைகளைக் கோர்ட் மூலம் வசூலிக்க மறுத்ததால், அவ்வளவு பெருந்தொகை இழக்க நேர்ந்தபோதும் ஈ.வெ.ரா. உள்ளத் தளர்ச்சி கொள்ளவில்லை. சேலம் பிரபல வழக்கறிஞர் விஜயராகவாச்சாரியார் அந்தக் கடன் பத்திரங்களைத் தனக்கு மாற்றித் தருமாறும், தான் எப்படியும் வரவழைத்துவிட இயலுமென்றும் பேசியபோது, அது தமது கொள்கைக்கு முரணாகும் என மறுத்துரைத்தார் இந்த மாபெருந் தியாகி! விஜயராகவாச்சாரியார் இதைப் பலரிடத்தும் வியந்து போற்றினார்.
மாளிகை வாசமும், சாரட்டுச் சவாரியும், பட்டுச் சொக்காயும், பகட்டான உடைகளும், அறுசுவை உண்டியும், அரசர்போல் வாழ்வும் ஒரே நொடியில் ஒதுக்கித் தள்ளினார். எளிய வாழ்க்கையை வலிய மேற்கொண்டார். வீட்டைத் திருத்தி நாட்டையும் திருத்த விழைந்தார். நேர்மையான நன்னடத்தை, கூர்மையான பகுத்தறிவு, வாய்மையான நல்லொழுக்கம்; தூய்மையான பொது வாழ்வு; பரம்பரைப் பணக்காரரான சீமான்களிடையே காண இயலாத இந்தப் பெருந்தன்மையான மனப்பக்குவம்; முன்பே ஒரு முறை வீட்டைத் துறந்து வெளியேறி, நாட்டில் வலம் வந்ததால் பெறப்பட்ட உரமான அனுபவம்; ஏறத்தாழ நாற்பது வயது நெருங்கி விட்டதால் ஏற்பட்ட தெளிந்த முதிர்ச்சி; ஏதாவது புதுமையினைச் செய்து நாட்டோரின் அவல வாழ்வை மேம்படுத்திட வேண்டுமெனும் நாட்டம் - அனைத்துக்கும் இருப்பிடமாக நினைத்ததை முடித்திடுவோம் என்ற உறுதியின் பிறப்பிடமாக இருந்த ஈ.வெ. இராமசாமியைக் காந்தியடிகளின் அறவழிப் போர் முறைகள் ஈர்த்ததில் வியப்பில்லை யன்றோ?
அந்நியத்துணிகளை அறவே விலக்கினார்; பட்டுப் பீதாம்பரங்களை எட்ட எறிந்தார்; முரட்டுக் கதராடைகளையே எளிமையாக உடுத்தினார். வழக்கம்போல் தமது கொள்கைகளைத் துணைவியாரும், தாயாரும், தங்கையாரும், மற்றுமுள்ள சுற்றத்தாரும், கெழுதகை நண்பர்களும், உழுவலன்பர்களும் பின்பற்ற வேண்டுமென அன்புக் கட்டளை பிறப்பித்தார். 80 வயது நெருங்கிய, சீமான் வெங்கட்ட நாயக்கரின் பார்யை, சின்னத்தாயம்மையாரும் சாமான்யக் கதர்ப் புடவை உடுத்தத் தொடங்கினார் எனில் பிறரைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ? தக்ளியும் ராட்டையும் கைகளில் சுழலத் தொடங்கின. இராமசாமியாரின் கால்களும் தமிழ்நாடு முழுதும் சுழலத் தொடங்கின.
கட்டித் தங்கத்தைத் தட்டிக் தகடாக்கி மெருகேற்றினாற் போன்ற ஆடகப் பசும்பொன்னிற மேனி, செல்வத்திரட்சியால் வளர்ச்சி பெற்ற உருட்சியான உடல், செழுமையின் வளமைகாட்ட முன்னோக்கி எழுந்த இளந்தொந்தி, பரம்பரையாய் இளமையிலேயே கருமை மறைய, வெண்பஞ்சுப் பொதிபோல் வெளுத்துச் சுருண்டு அடர்ந்த தலைமுடி, தருக்கினைச் சுருக்கென உணர்த்திடும் முறுக்கிய பெருமீசை, அறிவுமிகுதியின் வரைவு காட்டிடும் அகன்றுயர்ந்த நெற்றி, நீண்டு அகன்ற பெரிய மூக்கு, மயிரடர்ந்து அறுகம்புல் வரிசையென அழகூட்டும் புருவங்கள், ஆழ்ந்து ஒளிரும் அருள் சூழ்ந்த இருபெருங் கருவிழிகள், அழகான, மென்மையான சிவந்த உதடுகள், செயற்கைப் பற்கள், கட்டை விரல் நீண்டு சிறிது வளைந்தும் பிறவிரல்கள் நீண்டும் தொங்கிடும் கரங்கள்! மேதாவிலாசத்தை விளக்கிடும் கவர்ச்சியும் எழுச்சியும் உணர்ச்சியும் மிகுந்த தோற்றத்தையுடைய ஈ.வெ.ரா. மேடையேறிவிட்டால் அங்கே சிங்கத்தின் கர்ச்சனைதான் கேட்கும்!
தர்க்கத்தில் வல்லவர்; குதர்க்கத்திலுந்தான்! வாதத்தில் தேர்ந்தவர்; பிடிவாதத்திலும், தேவைப்பட்டால் விதண்டாவாதத்திலுந்தான்! சொல்லடுக்கில் சோர்விலாதவர்; கல்லெடுக்க நினைத்தால் மூக்குடைப்பார் - மற்போரால் அல்ல சொற்போரால்! சமுதாயத்தின் அடித்தளத்து மக்கள்; அடிமைப்பட்டு மாக்களாக மாறினாற்போல் ஊக்கமின்றி உட்கார்ந்து உறங்கிச் சாகும் தேவாங்கு போன்றோர்; பஞ்சை பராரிகள், பாமரர்கள், எத்தர், ஏமாற்றுவோர் யார் எனப் புரிந்து கொள்ளுந் திராணியற்றோர்; ஒளி தெரிய வழியுண்டா எனத் தலையுயர்த்திப் பார்க்கவும் தென்பு அற்றோர்; பொதி சுமக்கும் மாடுபோல் அந்நியரின் வரி சுமக்கும் வக்கற்றோர், வகையற்றோர், திக்கற்றோர் இவர்களின் நாடிநரம்பெலாம் தடவிப் பார்த்து, இருதயத்தில் சுருதி மீட்டி, இன்னிசை எழுப்பிடும் தன்னிகரில்லா வன்மை படைத்தவரானார் இராமசாமி. மேடையிலே ஏறி, அவர்கள் மொழியிலே, அவர்களுக்காக, அவர்களது பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து, அவர்களுடைய உயர் வாழ்விற்காக அவர் பேசத் தொடங்கினால்... ஆவென வாய் பிளந்து, ஓய்வெடுக்க மறந்து, உண்டி மறந்து, உறக்கம் துறந்து, அலுப்பின்றிக் களைப்பின்றி, நான்கு மணி நேரம் ஐந்து மணி நேரம் தமது செவிக்குணவு பெறுவர் தமிழ்நாட்டு மாந்தர். கூட்டம் முடிந்ததும் சீமைத் துணிகளைத் தீயிட்டுக் கொளுத்திடும் துணிவு பிறக்கும்! கதராடை புனையும் தெளிவு பிறக்கும். கையில் ராட்டினம் ஏந்திட அறிவு பிறக்கும். அத்தனை பேரும் ஈ.வெ. ராமசாமியின் அன்புத் தொண்டராய் மாறுவர். கதர் அணிவதையே காங்கிரஸ் கட்சியின் திட்டமாய்க் கொள்கையாய் மாற்றியவர் ஈ.வெ.ரா. கதர்த்துணி மூட்டைகளைத் தோளிலும், கைராட்டையைக் கரங்களிலும் சுமந்து திரிந்து அலைந்து தமிழ்நாட்டில் அவர் பாதங்கள் படாத கிராமிய மண்ணே இல்லை எனலாம்! காங்கிரசில் இல்லாதவர்கூடக் கதராடை அணிந்து வருவதை இன்றுந் தமிழ்நாட்டில் காணலாம். இது ஈ.வெ. ராமசாமியின் கைங்கர்யம் எனில் மிகையன்று! தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கதர்த்துணி அங்காடிகள் அவரால் திறக்கப்பட்டவையேயாம். கல்கி ஆசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தி, ஈ.வெ. ராமசாமியிடம்தான் திருச்செங்கோடு “கதர்” அங்காடியில் வேலைக்கு அமர்ந்தார் முதலில். கதர்த்திட்டம் இராமசாமிக்குப் புதியதென்றாலும், காந்தியடிகளின் மீது கொண்ட கரைகாணாப் பற்றினால், கொண்ட கொள்கை மீது வைக்கும் நம்பிக்கையால், அதன் வெற்றியில் கொள்கின்ற வற்றாத அக்கறையால், நன்றி எதிர்பாராத நல்லுழைப்பால் தமிழ்நாட்டில் கதர்த்திட்டம் வெற்றிகரமாய் வேரூன்றி விட்டது!
காலையில் எழுந்தவுடன் சாதாரண ஃபிரேமுக்குள் அடங்கிய வெள்ளெழுத்துக் கண்ணாடியை எடுத்து மூக்கின்மீது வைத்து இழுத்துக் காதில் மாட்டிக்கொண்டு, கையில் இந்து, சுதேசமித்திரன், நவசக்தி ஆகிய பத்திரிகைகளை வரிவிடாமல் படித்து முடித்திடுவார். அப்போதே அன்றைய மேடைச் சொற்பொழிவுக்கான கருத்துகள் மூளையில் பதிவாகி விடும். அற்புதமான நினைவாற்றலால், அவை கற்பனையும் கதையுமாய்ப் பழமொழி உவமைகளுடன் கூடிக்கலவையாகிச் சுவை மிக்க தின்பண்டமாய்க் கேட்போர் செவிப் புலனில் தேன்மாரியாய்ச் சென்று விழும். யாரேனும் கேள்வி கேட்டுவிட்டால்தான் சுறுசுறுப்பும் சூடும் அதிகமாகும் அவருக்குப் பேச்சு மேடையில்!
நாள்தோறும் பல்துலக்குதலோ, குளித்தலோ, ஆடைமாற்றுதலோ அவசியமான கடமைகள் என அவர் கருதுவதில்லை. அவற்றுக்கு முக்கியத்துவமும் தருவதில்லை. அதேபோலக், கிடைத்த உணவை வயிறுநிரம்பச் சாப்பிட்டுவிடுவார்; அதனால் தொல்லைகள் ஏற்படினும் பொருட்படுத்துவதில்லை! மிகச் சாமான்ய மக்களும் தம் கருத்தைப் புரிந்து கொள்ளுமாறு, கடினமான விஷயங்களையும், உடைத்து நொறுக்கி நுட்பமாய் எளிமையாய் உண்ணத் தருவதுபோல், விளக்குவார். அவர்கள் மூளையில் பல்லாண்டுகளாக அடிமை மிடிமைகளால் ஏறியிருக்கும் பழமைத் தூசியைத் துடைத்துக் கருத்துகளைக் குடியேற்றுவார். படிக்காதவர் விளங்கிக் கொள்ளுமாறும், படித்தவர் சிந்திக்குமாறும் பேசுவார். இப்படிப் பேச்சு வன்மையில் வெற்றி கண்டவர் இந்திய வரலாற்றில் இவர் ஒருவரே ஆவர்! உலகின் நெடிய வரலாற்றிலோ சாக்ரடீஸ், ஏசுகிறிஸ்து - ஆகிய மிகச் சிலரையே கூறமுடியும்!
மதுவிலக்குக் கொள்கையும் அப்போது ஈ.வெ. ராமசாமிக்கு மிகவும் உடன்பாடான ஒன்றாகும். இந்தக் கொள்கையின் வெற்றிகரமான நடைமுறைப்பாட்டிற்காக ஈ.வெ.ரா. கையாண்ட யுக்திகள், செயல்கள் உலகில் யாரும் எண்ணிப் பார்க்கக்கூட இயலாத அளவு சிந்தனை செல்வது மகத்தானவை. வேறு யாருக்கும் இந்த வழியில் சிந்தனை சொல்வது அரிதாகும். கள் குடிக்க வேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொண்டு கள்ளுக் கடைகளின் முன் அமைதியாக மறியல் செய்ய வேண்டுமென்பதே காந்தியடிகளாரின் ஆணை. மதுவினால் ஏற்படுங் கேடுகளைப் பொதுமேடைகளின் வாயிலாய் விளங்கிப். பிரச்சாரம் செய்திடவும் வேண்டும்; அவ்வளவுதான் திட்டம்! ஆனால் எதிலும் தீரமும் வீரமும் தீவிரமும் புதுமையும் மிதந்திட வேண்டுமென்பதில் தணியா ஆர்வமுடைய ஈ.வெ.ரா. தமது தோட்டங்களில் இருந்த சமார் அய்ந்நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களை ஒரே நாளில் அடியோடு வெட்டி வீழ்த்தினார்! மலேரியா நோயைத் தடுக்கக் கொசு உற்பத்தியாகும் நீர்த் தேக்கங்களைத் தூர்த்துவிட வேண்டும் என்பதுபோல் தென்னங்கள் அருந்துவதைத் தடுக்கத் தென்னை மரங்களையே அழித்திட வேண்டும் என்பது வாதப்படி சரிதானே? வெறித்தனமான பின்பற்றும் போக்கினால் அங்கே அறிவுக்கு முதலிடம் தரவில்லை ஈ.வெ.ரா! தலைவன் கட்டளையைக் கண்மூடித்தனமாகத் தாம் பின்பற்றியதால், தமது தொண்டர்களும் தமது ஆணையை அவ்வாறே நிறைவேற்றிட வேண்டுமென அவர் எதிர்பார்த்ததில் தவறேது? இளநீரும் தேங்காயும் நாரும் மட்டையும் கீற்றுப் பாளையும் கூட இல்லாமல் போகுமே, என்ற அடுத்த கட்டச் சிந்தனைக்கு அங்கே வேலையில்லை!
மதுவிலக்குத் திட்டத்தை எவ்வாறு அமுல் படுத்துவது என்பதை ஆலோசித்துக் கலத்துரையாடி முடிவு செய்யக் காந்தியடிகள் தேர்ந்தெடுத்த ஊர் ஈரோடுதான் ஈவெ. ராமசாமியின் மாளிகையில்தான் காங்கிரஸ் தலைவர்கள் கூடிக் கள்ளுக்கடைகளின் முன் மறியல் செய்வது என்பதைத் தீர்மானித்தனர். ஈ.வெ.ரா மதுவிலக்குக் கொள்கையின்பால் காட்டி வந்த பேராதரவே, காந்தியாரும் பிறதலைவர்களும் ஈரோட்டில் வந்து போராட்ட வழிவகுக்கக் காரணமாயிருந்தது. மேலும் தென்னகத்தில் தோன்றி வளர்ந்து வந்த நீதிக் கட்சியினை முறியடிக்கக் காங்கிரஸ்காரர்களின் மறைமுகமான தூண்டுதலால் திவான்பகதூர் கேசவப் பிள்ளை போன்றவர்களால் துவக்கப்பட்ட சென்னை மாகாணச் சங்கத்தின் மாநாட்டை ஈரோட்டில் 1919-ஆம் ஆண்டு ஈ.வெ.ரா. வெற்றிகரமாய் நடத்தியிருந்தார். அதனால் அவரது திறமையில் நம்பிக்கை மிகக் கொண்ட காங்கிரசார் ஈரோட்டிலேயே கள்ளுக்கடை மறியல் போராட்டத்தைத் துவக்கிட நினைத்தனர்.
1921-ஆம் ஆண்டு இந்தியத் துணைக்கண்டமே ஈரோடு நகரம் நோக்கித் தன் விழிகளை அகலத் திறந்து பார்த்து நின்றது. இந்தியக் காங்கிரசின் சரித்திரத்தில் பொன்வரிகளால் பொறிக்கப்படத் தக்க புகழ் மிக்க அந்தப் போரின் தளநாயகர் ஈ.வெ.ரா என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்வதோடு நின்றுவிட முடியாது! காரணம், இராமசாமியாரின் வாழ்க்கைத் துணைநலமாம் நாகம்மையாரும், அன்பு உடன்பிறப்பாம் கண்ணம்மாளும் பெரும் வீராங்கனைகளாய் உயர்ந்தோங்கி நின்று களம் புகுந்து வாகை சூடினர். ஈரோட்டில் 144 தடையுத்தரவு நடைமுறைக்குக் கொணரப்பட்டது. தாம் பிறந்து வளர்ந்து, பெருமகனாய் உலவி, நகர முன்னேற்றத்தில் எந்நேரமும் பாடுபட்டுப் புகழீட்டிய அதே மண்ணில், தமது மண்ணின் மைந்தர்கள் எண்ணிலாத் துயரம் தென்னங்கள்ளினால் எய்தி வருந்துவதைத் தடுக்க மறியல் களம் புகுந்தார் ஈ.வெ.ரா! நூற்றுவர் பின்தொடரக் கைதாகித் தண்டனை பெற்றுச் சிறை புகுந்தார்; நாடெங்கும் அமளி! ஆயிரக்கணக்கில் ஆண் பெண் தொண்டர்கள் அணிவகுத்து வந்தனர். அன்னையார் நாகம்மையாரும் அருமைத்தங்கையார் கண்ணம்மாளும் போராட்டத்துக்குத் தலைமையேற்று வீரகாவியம் படைத்தனர். தீரரெல்லாம் வேகமாகச் சேர வந்தது கண்டு பிரிட்டிஷ் அரசு விதிர் விதிர்த்தது பல்லாயிரம் பேரை அடைத்து வைக்க இல்லையே இங்கு சிறைச்சாலை எனத் திகைத்துத் தவித்து, 144 தடையுத்தரவைத் தவிர்த்திட, அரசு முன் வந்தது!
இந்தச் சூழ்நிலையில்தான் செந்தமிழ் நாட்டின் புறநானூற்று வீரத்தாய்மார் போல் செம்மாந்து நின்ற நாகம்மையார் - கண்ணம்மாள் இருவரின் மாப்புகழ் இந்தியா எங்கும் எதிரொலித்த செய்தி ஒன்று நிகழ்ந்தது. 1922-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 19-ஆம் நாளிட்ட “இந்து” பத்திரிகையில் இப்பேருண்மை வெளியாகி ஒளிபரப்பியுள்ளது. அதாவது, காந்தியடிகளின் ஒத்துழையாமைக் கிளர்ச்சிகளை நிறுத்திக் கொள்ளுமாறு சமாதானப் பேச்சு வார்த்தைகள் பம்பாயில் நடைபெற்றன. அரசு, ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வந்ததால், பண்டித மாளவியா, சர். சங்கரன் நாயர் இருவரின் முயற்சியால் ஒரு மாநாடு கூட்டப்பெற்றது அதில் அவர்களிருவரும், கள்ளுக்கடை மறியலை நிறுத்தி விடுங்கள்; வேறு நடவடிக்கை துவக்கலாம் என்று கேட்டபோது, காந்தியடிகள், மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை; அது ஈரோட்டிலுள்ள இரு பெண்மணிகளிடம் உள்ளது; அவர்களைத்தான் கேட்க வேண்டும் என்று பெருமிதத்துடன் பதிலுரைத்தார்!
ஈ.வெ. ராமசாமியாரின் துணைவியும், தங்கையும் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதலிடம் பெற்றிருந்தார்கள் என்பதும், முதன்முதலில் காங்கிரஸ் இயக்கத்திற்காகச் சிறை செல்லத் துணிந்தவர்கள் அவர்களே என்பதும் எத்தகைய புகழைத் தமிழர்க்குத் தேடித் தரவல்லன! வாழிய நாகம்மையார் கண்ணம்மாள் புகழ் வண்டமிழ் நாடும் தண்டமிழ் மொழியும் வாழும் வரை! ஆடவரும் வெட்கித் தலைகுனிய, அனைத்து இந்தியாவும் வியந்து மெச்சி நிற்க, மறக்குல மகளிர் திலகங்கள் நிகழ்த்திய அம்மாபெரும் மறியல் போர், மானமுள்ள தமிழ் மக்கள் நெஞ்செல்லாம் நிறைத்திடுக! இவ்வாறு நாடே வாழ்த்திற்று.
1922-ஆம் ஆண்டு ஈரோட்டுக்கு வந்த பண்டித மோதிலால் நேரு, வித்தல்பாய் படேல், டாக்டர் அன்சாரி ஆகிய பெருந்தலைவர்கள் தம் இல்லத்தில் தங்கியிருந்த நினைவாக அப்போது தமது பழைய ரயில்வே நிலைய மாளிகையில் 30 பிள்ளைகள் அடங்கிய இந்தி கற்பிக்கும் பள்ளி ஒன்றினைத் தமது செலவில் துவக்கி, 2 ஆண்டுகள் வரை நடத்தி வந்தார் ஈ.வெ.ரா. அதில் 15 பிள்ளைகளுக்கு உணவு முதலியவை இவர் பொறுப்பு.
காந்தியடிகளின் உயிர் மூச்சாய் விளங்கிய தீண்டாமை ஒழிப்பின் ஒரு கட்டமாகத், தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசம் எனும் திட்டம் தீட்டப்பட்டிருந்தது. தீண்டாமை, ஒழிப்பிலும் தாமே ஆழ்ந்து மூழ்கி, எதிர் நீச்சலிட்டு, எதிர்த்துப் போராடி, முதல் வெற்றிகாணும் முழு வாய்ப்பும் ஈ.வெ. ராமசாமிக்கே கிட்டிற்று. யதேச்சையாக இந்த வாய்ப்பு இவரை நாடி வந்தது; இவர் தேடிப் போகவில்லை.
1924-ஆம் ஆண்டு ஈ.வெ.ரா. குளித்தலையில் ஒரு காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு, அங்கிருந்தவாறே, மதுரை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் போய்விட்டார். அங்கே வயிற்று நோய் அதிகம் துன்புறுத்தவே, இடையே தடைபட்டு, ஈரோட்டுக்கு மீண்டார். அங்கு வந்து படுக்கையில் ஓய்வாக இருந்த போதே, அவருக்கு ஓர் இரகசியக் கடிதம் வந்தது. அதைக் கண்டதும், நாகம்மையாரிடம் தமக்கு உடல்நலிவு குணமடைந்து விட்டதாகப் பொய்யுரைத்து, அதாவது “புரை தீர்ந்த நன்மை பயக்குமானால் பொய்யும் மெய்யோடு சேர்த்துக் கொள்ளப்படும்” என்ற குறள் மொழிப்படித் தமது பெட்டி படுக்கை துணி மணி சகிதம் புறப்பட்டுப் போய்விட்டார்.
என்ன அந்த மர்மக்கடிதம்? எங்கே போனார்? கேரள ராஜ்யத்திலுள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் என்று ஒரு பேரூர். அங்கே கோவிலுக்கு அருகிலுள்ள தெரு ஒன்றில் தாழ்த்தப்பட்டோர் நடக்கக்கூடாது என நீண்ட நாளாகத் தடையிருந்து வந்தது. அதாவது ஆரியசமாஜத் தீயர்களையும், மதம் மாறிய கிறிஸ்துவப் புலையர்களையும், தெருவில் நடக்க விடவில்லை; இஸ்லாமானவரை அனுமதித்தார்கள்! மக்களின் மான உணர்ச்சிக்கு விடப்பட்ட இந்த அறைகூவலை எதிர்த்துப் போராடக் கேரளக் காங்கிரஸ் தலைவர்கள் முடிவெடுத்தனர். வைக்கம் நகரில் தடைமீறும் போராட்டம் துவங்கியது. நாளுக்கு ஒருவராய்த் தலைவர்கள் அரசினரால் கைது செய்யப்பட்டு வந்தனர். 19-ம் நாள் ஆனதும் மேலும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திவரத் தலைவர்கள் இல்லை. சிறையிலிருந்த ஜார்ஜ் ஜோசஃப், கேசவமேனன் ஆகிய தலைவர்கள் ஆழ்ந்து யோசித்து, இனி இந்தக் கிளர்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வெற்றி தேடித்தரத்தக்க தலைவர் ஈரோட்டு இராமசாமி ஒருவர்தாம் எனத் தேர்ந்து, அன்னாருக்குச் சிறையிலிருந்தவாறே, அபாயம் என்ற அபயக் கடிதம் ஒன்றினை அனுப்பி அழைத்தனர். கேரளத்தாரின் மானம் தங்கள் கையில்தான் உள்ளது என அகமுருக எழுதியிருந்தனர். இது போதாதா ஈ.வெ. ராமசாமிக்கு?
மணவிழா மடல் கிடைக்கப் பெற்றாற்போல் மகிழ்வு பூண்டவராய் மறுநாளே படகில் ஏறி, வைக்கத்தில் வந்து குதித்தார். கிளர்ச்சியில் ஈ.வெ. ராமசாமி ஈடுபடப் போகிறார் என்ற செய்தி திருவாங்கூர் மன்னரின் செவிகளை எட்டியதும், தமது உயர் அதிகாரிகளை அனுப்பி மன்னர் சில ஆணைகளை நிறைவேற்றச் சொன்னார். என்ன அவை? மன்னர் டெல்லிக்குச் செல்லும் போதெல்லாம் தமது பரிவாரங்களுடன் ஈரோட்டில் இறங்குவார். அரச வாழ்வு நடத்திவந்த இராமசாமியாரின் ரயில்வே ஸ்டேஷன் பங்களாவில் அரசரும், அடுத்துள்ள நாயக்கர் சத்திரத்தில் ஆள்அம்புகளும் தங்குவர்; அறுசுவை விருந்து அருந்துவர்; அன்பான உபச்சாரத்தை ஏற்பர். இது அநேகமுறை நடந்து வந்த வாடிக்கை. இதற்கெல்லாம் பதிலாகத் தாம் எப்போது இராமசாமியார்க்கு உபசரிப்புகள் செய்ய முடியுமோ என ஏங்கியிருந்தார் மன்னர். வந்திருப்பது கிளர்ச்சிக்குத் தலைமை ஏற்கத்தான் என்றாலும் தமது அரச மரியாதைகளையும் ஏற்கத்தான் வேண்டும் எனத் திருவாங்கூர் மன்னர் வேண்டியிருந்தார். வேண்டாமென மறுத்து மன்னிப்பு வேண்டினார் ஈ.வெ.ரா. அரசப் பிரதிநிதிகள் எவ்வளவோ எடுத்து மொழிந்தும் ஈ.வெ.ரா. இணங்கவில்லை. வணங்கி வாழ்த்தித் திருப்பி அனுப்பிவிட்டார். கேரளத்து வைக்கம் வாழ் மக்களுக்கு இராமசாமியாரின் மகத்துவம் புரியவந்தது.
ஈ.வெ.ரா. தலைமையில் மீண்டும் புத்துயிர் பெற்றது தீண்டாமை ஒழிப்புப்போர். பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வேடிக்கை பார்த்தனர், வைக்கம் நகரத்திலே. போராட்டத்தில் குதிக்கவும் அனுமதி கேட்டனர். ஈ.வெ. ராமசாமி தம் வழக்கம்போல் - மறக்குலப் பண்டைத் தமிழ் மன்னர் மரபுபோல் - தாமே தலைமை பூண்டு, முதல் தளபதியாய்க் களத்தில் இறங்கிக் கைதானார். அடுத்து, கோவை அய்யாமுத்து, மாயூரம் இராமநாதன், அன்னை நாகம்மையார், தங்கை கண்ணம்மாள் தலைமை தொடர்ந்தது. ஒரு மாதக் தண்டனை பெற்று விடுதலையான ஈ.வெ. ராமசாமிக்குத் திருவாங்கூரிலிருந்து நாடு கடத்தல் உத்தரவு வழங்கப்பட்டது. அதையும் மீறி, ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை ஏற்றார். திருவனந்தபுரம், அருவிக்குத்தி என்ற, தீவுச் சிறையில் அடைக்கப்பட்டார். அருவிக்குத்தி தீவுக்குப் படகில் செல்லும்போது புயலால் தாக்குண்டு படகு வேறு பக்கம் ஒதுங்கியது. சட்டத்துக்குக் கட்டுப்படும் ஈ.வெ.ரா. தாமே முனைந்து, படகில் வந்த காவலர்க்கும் பாதுகாப்புத்தந்து, உதவி பெற்றுத், தாமே சிறைக்குள்ளும் சேர்ந்தார். அன்னை நாகம்மையார் முன்னிலும் மேலோங்கிய உணர்வுடன், மும்முரமாய்த் திருவாங்கூர் முற்றிலும் சுற்றிப் பயணம் செய்து, நாடுதழுவிய கிளர்ச்சியை உருவாக்கினார். காந்தியடிகளே நேரில் வந்து பெரியாரைச் சந்தித்துத் திருவாங்கூர் ராணியின் நல்ல முடிவு பற்றிக் கூறி அவரை இசையச் செய்தார். அதன் பிறகுதான் அரசு இறுதியாகப் பணிந்தது! தாழ்த்தப்பட்ட மக்கள், தெருவில் நடக்கும் உரிமை பெற்றனர். 1925 நவம்பர் 29-ல் வெற்றிவிழாக் கூட்டத்தில் ஈ.வெ.ரா. கலந்து கொண்டார். “வைக்கம் வீரர்” என்ற சிறப்புப் பட்டம் சூட்டி இராமசாமியை இந்தியமக்கள் கொண்டாடினர். வைக்கம் வெற்றியை அடுத்துத்தான் சுசீந்திரத்தில் அரிசனங்கள் ஆலயப் பிரவேசக்கிளர்ச்சி என ஒன்று உருவாக்கப்பட்டு, அதன் பின்விளைவாய் ஆலயங்கள் அனைவர்க்கும் திறந்து விடப்பட்ட சூழ்நிலை பிறந்தது. 1926-ல் சுசீந்திரம் சத்தியாக்கிரகத்தை ஆதரித்துக் “குடி அரசு” 31-1-26-ல் ஈ.வெ.ரா. தலையங்கம் எழுதினார்.
ஆறுமாதச் சிறைத் தண்டனையைத் திருவனந்தபுரத்தில் அனுபவித்து வந்தபோது, நான்கு மாதங்கள் ஆகிய பின்னர், திருவாங்கூர் மன்னர் மறைந்து விட்டதையொட்டி ஈ.வெ.ரா. விடுதலை செய்யப்பட்டார். நேரே ஈரோடு சென்று நோய் வாய்ப்பட்டிருந்த தமது அன்னையார் சின்னத்தாயம்மையாரைக் காண விழைந்தார். 1924-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 11-ஆம் நாள் ஈரோட்டில் அடிவைத்ததும், சென்னை மாகாண அரசால் கைது செய்யப்பட்டுச் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 124-A, 153-A பிரிவுகளின்மீது அவர்மேல் அரசு வழக்குத் தொடர்ந்தது. ஏழெட்டு மாதங்களுக்கு முன்னர் அவர் ஆற்றிய ஒரு சொற்பொழிவில் ராஜத்துவேஷ, வகுப்புத் துவேஷ வெறியிருந்ததாம். அதில் என்ன புதுமை? அவர் தொழிலே அதுதானே! பின்னர் என்ன காரணமோ, அந்த வழக்கில் அடிப்படையான ஆதாரம் இல்லையென அரசே திரும்பப் பெற்றுக்கொண்டது! ஈ.வெ. ராமசாமியை விடுவித்தது! அப்போதைய அரசியல் நோக்கர்கள் இதற்கு வேறொரு வியாக்கியானமும் தந்தனர். திருவாங்கூர் சமஸ்தானத்தில் மீண்டும் நுழைந்து ஈ.வெ.ரா. போராடாமல் தடுக்கவே, திவான் மாதவையா கேட்டுக் கொள்ளச், சென்னை அரசின் சட்டமந்திரி சர் சி.பி. இராமசாமி அய்யர் இந்த வழக்கைப் போட்டார். பின்னர், வைக்கத்தில் தெருவைப் பொதுவாக்கும் நெருக்கடி நேர்ந்ததால்,
ஈ.வே.ரா.வை விடுதலை செய்யுமாறு நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்பதே அது! யாருக்குத் தெரியும் சாணக்கியர்கள் சூழ்ச்சி?
காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கங்கள் நல்ல வண்ணம் வெற்றி சூடி வந்தன. தென்னாட்டில் நூற்றுக்கு நூறு அந்தப் பணியின் பெரும் வெற்றி, ஈ.வெ. ராமசாமியால் நிகழ்ந்தது. இந்நிலையில் காங்கிரசில் ஒரு கருத்து மாறுபாடு முளைவிட்டது. சித்தரஞ்சனதாசர் தலைமையில் சிலர் கூடி, இனி அரசுடன் ஒத்துழைத்துச், சட்டமன்றங்களைக் கைப்பற்றி, ஆட்சி அமைக்க வேண்டும் என வாதிட்டனர். அதற்கென சுயராஜ்யக் கட்சி என்றொரு அரசியல் அமைப்பினையும் தொடங்கினர். இதன் கிளை தென்னகத்தில் தோற்றுவிக்கப்பட்டு, அதனைப் பார்ப்பனர்களே முழுமையாய் ஆக்கிரமித்துக் கொண்டனர். காந்தியடிகளை அப்போதும் இராஜாஜியும் இராமசாமியாரும் பின்பற்றி நின்றனர். சென்னை மாகாண சுயராஜ்யக் கட்சியின் பிறப்பு நோக்கம் குறித்து ஈ.வெ.ரா. ஓர் அய்யுறவு கொண்டார். அதுதான் உண்மையுங்கூட. அதாவது -
இனாம்தார் என்று வெள்ளையருக்கு விசுவாசம் தெரிவிக்க எராளமான சிற்றரசுகள் இருந்தன. தலைநகரம் சென்னை மாநகரந்தான்.
1909-ஆம் ஆண்டு மிண்டோ-மார்லி சீர்திருத்தத்தின் விளைவாய் இந்தியர்களையும் உயர் உத்தியோகங்களில் ஆங்கிலேயர் நியமித்தனர். தென்னகத்தில் இவை அத்தனையும் பார்ப்பனர்களுக்கே கிடைத்து வந்தன. எடுத்துக்காட்டாக 1898 முதல் 1930 வரை நியமிக்கப்பெற்ற ஹைகோர்ட் ஜட்ஜ்கள் ஒன்பது இந்தியரில், எண்மர் பார்ப்பனர், ஒருவர் நாயர். உதவி கலெக்டர் 140 பேரில் 77 பேர் பார்ப்பனர். 128 மாவட்ட நீதிபதிகளில் 93 பேர் பார்ப்பனர்கள்.
1916-ல் இதனால் வெகுண்டெழுந்த டாக்டர் டி.எம். நாயர், சர்.பி.தியாகராயர் இருவரும் சென்னையில் தென்னிந்திய நல உரிமைச்சங்கம் எனும் நீதிக் கட்சியைத் துவக்கினர். பனகல் அரசர் ராமராய நிங்கவார், டாக்டர் நடேச முதலியார் ஆகியோர் ஒத்துழைத்தனர். அப்போது காங்கிரஸ் மாயை மூடுபனிபோல் கவிந்திருந்ததால் தமிழினத் தலைவர்கள் பலர் அந்த முகாமில்தான் இருந்தனர்!
1919-ல் நிகழ்ந்த மாண்டெகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் அடிப்படையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் நீதிக்கட்சி 1920-ஆம் ஆண்டிலும் 1923-ஆம் ஆண்டிலும் பெருவெற்றி பெற்று மந்திரி சபைகளை அமைத்தது. நீதிக்கட்சியின் வெற்றியில் பொறாமை கொண்ட பார்ப்பனர், சுயராஜ்யக் கட்சி அமைத்து, 1926-ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டனர். நீதிக்கட்சிக்கும், சுயராஜ்யக் கட்சிக்குமே பெரும்பான்மை கிட்டவில்லை அப்போது!பார்ப்பனரல்லாதார் ஆட்சி நடத்துவதைப் பார்ப்பனர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்ற அப்பட்டமான உண்மையினை அப்போதுதான் ஈ.வெ.ரா முதன் முறையாக உணர்ந்தார். அதற்கேற்ப, நாட்டிலிருந்த செய்தி ஏடுகளெல்லாம் பார்ப்பன ஆதரவு ஏடுகளாகவே இருந்து வந்தன. காங்கிரஸ் இயக்கத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்ட அத்தகைய, ஏடுகளும், ஈ.வெ. ராமசாமியின் வைக்கம் போராட்டம், ஈரோடு மறியல் போன்ற வரலாறு படைத்த செய்திகளைக்கூட இருட்டடிப்புச் செய்தன; ஈ.வெ. ராமசாமிக்குப் பெருமை சேரக்கூடாதென்ற உள்நோக்கத்தால்! நீதிக் கட்சியினரால் நடத்தப்பட்டு வந்த தமிழ் ஏடு “திராவிடன்” ஆங்கில ஏடு “ஜஸ்டிஸ்” ஆகியவற்றுக்கும் போதிய செல்வாக்கில்லை. ஆகையால் தாமே ஒரு பத்திரிகை துவங்கிட ஈ.வெ.ரா துணிவு கொண்டார்.
1925-ஆம் ஆண்டு மே திங்கள் 2-ஆம் நாள் ஈரோட்டில் உண்மைவிளக்கம் பிரசில் அச்சாகிக் “குடி அரசு” என்னும் வார இதழ், திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகளால் தொடங்கி வைக்கப்பெற்றது. நாட்டிலுள்ள உயர்வு தாழ்வு மனப்பான்மை ஒழிந்து, சமத்துவ உணர்வு பரவி, சமயத் துறையிலுள்ள கேடுகள் ஒழிய, நாயக்கரின் “குடி அரசு” பாடுபட்டால் தனக்கு மிக்க மகிழ்ச்சி என அந்தத் தமிழ்த் துறவி பேசினார். மனச்சாட்சிக்கு உண்மை என்று பட்டதைத் தெரிவிக்க அஞ்சக்கூடாது; மக்களுக்குள் சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஓங்கி வளர வேண்டும்; உயர்வு தாழ்வு உணர்ச்சி நாட்டிலுள்ள சாதிச்சண்டைக்குக் காரணமாயிருத்தலால் அது ஒழிக்கப்பட வேண்டும்; தேசத்தையே முன்னிறுத்தி வைக்காமல், ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும் - என்று தமது புதிய ஏட்டின் நோக்கத்தை அன்றே வெளியிட்டார் ஈ.வெ.ரா. பச்சை மேலட்டையுடன் கூடிய “குடி அரசு” வார ஏடு, அன்றைய ஆதிக்கக் கோட்டையினைத் தகர்த்திடும் வெடிகுண்டாகக் கருதப்பட்டது. தமிழ் மக்கள் இதனைத் தம் கைக்குழந்தை போல் சீராட்டி வளர்க்கத் தலைப்பட்டனர்.
தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக ஈ.வெ.ரா சில ஆண்டுகள் வீற்றிருந்தார். பின்னர், டாக்டர் வரதராஜலு நாயுடு தலைவராகவும் ஈ.வெ.ரா. காரியதரிசியாகவும் பணியாற்றினர். சென்னையிலிருந்த காங்கிரஸ் கமிட்டியை ஈரோட்டில் தம் வீட்டுக்கே மாற்றிக் கொண்டார். அப்போது நிகழ்ந்த ஒரு சம்பவமே தமிழகத்து அரசியலில் மாபெரும் புரட்சிகரமான திருப்பத்துக்கு அடிகோலியது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவியில் தமிழ்நாட்டுக் குருகுலம் என்ற பெயரால் சிறுவர்களுக்கான விடுதி ஒன்றினை வ. வே. சுப்பிரமணிய அய்யர் பொறுப்பேற்று நடத்தி வந்தார். இது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொருளுதவியில் நடந்தது. கட்சியிலிருந்து பணம் அவ்வப்போது தரப்பட்டு வந்தது. மேலும் தமிழ்நாட்டு வள்ளல் பெருமக்களிடமிருந்து ஈ.வெ.ரா., திரு.வி.க., டாக்டர் நாயுடு போன்றோர் நிறையப் பொருள் திரட்டி வழங்கி வந்தனர். மெத்தப் படித்த தேசியவாதியான வ.வே.சு. அய்யர் குருகுலத்து மாணவர்களிடையே வேற்றுமையை விளைத்து வந்தார். பார்ப்பனப் பிள்ளைகளுக்குத் தனி இடம், தனித் தண்ணீர், தனி உணவு, (உப்புமா) தனிப்பயிற்சி; பார்ப்பனரல்லாத சிறார்களுக்கு வேறு இடம், வேறு உணவு, (பழைய சோறு) வேறு தண்ணீர், வேறான பயிற்சி; இதனால் அங்கே சாதிப் பிரிவினை ஆக்கம் பெற்று வந்தது. குருகுலத்தின் நோக்கத்துக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் இது முரணானது எனப் பலமுறை எடுத்துக்காட்டியும், வ.வே.சு. அய்யர் ஒருப்படவில்லை; காங்கிரஸ் கட்சியின் உதவிப் பணத்தை ஈ.வெ.ரா. தரச்சம்மதிக்காத போது, வேறொரு பார்ப்பனக் காரியதரிசி (டி.எஸ்.எஸ். ராஜன்) வாயிலாய், அய்யர் அந்தத் தொகையைப் பெற்றுக் கொண்டார்!
பின்னாளில், 1948-ல் சென்னை மாகாண முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியாரின் மகன் சேர்மாதேவி குருகுலத்தில் பயிலும்போது, பார்ப்பனர் தண்ணீர்ப் பானையில் நீர் எடுத்துக் குடித்து, அவ்வாறு சாதிப் பிரிவால் பாதிக்கப்பட்டவர். இவரை அழைத்து வந்து ரெட்டியார், பெரியார்முன் நிற்க வைத்து, ‘அங்கு நடைபெறும் அட்டூழியங்களை நாயினாவிடம் செப்பு’ என்றாராம்.
பச்சைப் பார்ப்பனியம் தலை விரித்தாடும் போக்கினைக் கண்டித்து ஈ.வெ.ரா. வெளிப்படையாகப் போர் தொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு உந்தப்பட்டார். காங்கிரசில் இருந்த பார்ப்பனரல்லாத தலைவர்களான திரு.வி.க., டாக்டர் நாயுடு, எஸ். ராமநாதன், தண்டபாணிப் பிள்ளை, வயி.சு. சண்முகம் செட்டியார், ஓமந்தூர் ரெட்டியார், தங்கப் பெருமாள் பிள்ளை ஆகியோர் இந்தக் குருகுலத்தையே ஒழித்துவிட முடிவெடுத்தனர். அய்யர் இணங்கவில்லை. காந்தியடிகளிடம் தலையிடுமாறு கேட்டனர். அவரும் குருகுலத்தில் சமபந்தி உணவே அளிக்கப்படல் வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கும் வ.வே.சு. அய்யர் மறுத்து விட்டார்.
ஈ.வெ. ராமசாமியின் கோட்பாட்டுக்கு இப்போது ஒரு புதிய பொருள் கிடைத்தது. பார்ப்பனர் பேசுகின்ற தேசியம் போலி; தீண்டாமை ஒழிப்பு மாய்மாலம்; ஒற்றுமை ஒருமைப்பாடு கொள்கை யாவும் ஏமாற்று வேலை - என்று தமிழ் நாடு முழுவதும் பறையறைந்தார். காங்கிரசில் இருந்தபோது பிரச்சாரத்துக்காக திண்டுக்கல்லில் ஒரு பார்ப்பனர் வீட்டில் உணவு கொள்ளச் சென்றபோது, எஸ். சீனிவாச அய்யங்காருக்கு உள்ளேயும், இவருக்கு வெளியேயும் சாப்பாடு படைத்தனர். காலையில் சாப்பிட்டுவிட்டுத் தாம் விட்டுச் சென்ற எச்சில் இலைக்குப் பக்கத்திலேயே, அமர்ந்து மதியமும், இரவும் ஈ.வெ.ரா. உணவு அருந்த நேரிட்டது.
சாதி வேற்றுமை வளர்த்த குருகுலத்துக்கு நிதி திரட்டி வழங்குவதை அறவே நிறுத்திக் கொண்டதால், அது இயங்குவது இயலாமற்போய்த், தானே மரணத்தைத் தழுவியது. தமிழ் மக்களின் அகக் கண்களைத் திறக்க இந்தக் குருகுலப் போராட்டம் அருமையாக உதவியது. காங்கிரஸ் காரியக் கமிட்டியிலிருந்த பார்ப்பனர்களான சி. ராசகோபாலாச்சாரியார், என்.எஸ். வரதாச்சாரியார், கிருஷ்ணமாச்சாரி, ஆலாசியம், கே. சந்தானம், டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் (இவர் ராஜாஜி அமைச்சரவையில் சுகாதார மந்திரியாக இருந்தபோது, 2000 மூட்டை நெல்லைப் பதுக்கி வைத்திருந்தாராம் 1937-39-ல்) மற்றும் டாக்டர் சாமிநாத சாஸ்திரி ஆகியோர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் பார்ப்பன துவேஷப் பிரச்சாரம் செய்வதாய்ப் பழி கூறிக் கமிட்டியைவிட்டு விலகிச் சென்றனர். இவர்களை “இந்து” கஸ்தூரி ரங்க அய்யங்காரும், “சுதேசமித்திரன்” ரெங்கசாமி அய்யங்காரும், எஸ். சீனிவாச அய்யங்காரும், எஸ். சத்தியமூர்த்தி அய்யரும் பச்சையாக ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு நிகழ்ச்சியிலும் பார்ப்பனத் தலைவர்கள் தமது தனித்த நிலையினை வெளிப்படுத்தி, வெறுப்பினைத் தேடினார்கள். பனகல் அரசர் முதலமைச்சராயிருந்தபோது 1924-ஆம் ஆண்டில் இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தார். இதனால் கோவில் மடாலயச் சொத்துகள்மீது கட்டுப்பாடும் ஒழுங்கு முறையும் புகுத்தப்பட்டது. சுரண்டல் பெருச்சாளிகளுக்கு இது தீமையாகத் தென்பட்டது. எனவே பார்ப்பன வழக்கறிஞர்கள், காங்கிரஸ்காரர்கள் ஆகியோர் மடாதிபதிகள், கோயில் அறங்காவலர் இவர்களின் பின்னணியிலிருந்து தூண்டிவிட்டு, மதத்தில் அரசு தலையிடுகிறது; இது தவறு என எதிர்ப்புக் காட்டினர். காங்கிரசில் இருந்துகொண்டே ஈ.வெ.ரா., தமது நண்பர்களின் துணையோடு, நீதிக் கட்சியின் அந்த நேர்மையான சட்டத்தை வரவேற்றார். அறநிலையங்களுக்கு ஆபத்தில்லை; கோயில் சொத்துகள் கொள்ளை போகாமல் தடுக்கலாம்; கள்வர்களுக்குதான் ஆபத்து என அறிக்கை விடுத்தார் ஈ.வெ. ராமசாமி!
அனைத்துக்கும் சிகரமாய், மகுடம் வைத்தாற்போல் அமைந்தது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்! பார்ப்பனர் ஆதிக்கத்தைத் தவிர்ப்பதற்காகப் பார்ப்பனரல்லாதாருக்கு அரசுப் பணிகளில் தக்க பாதுகாப்பளிக்க வேண்டும்; வகுப்பு எண்ணிக்கைக்கு ஏற்ற வீதாச்சாரத்தில் உத்தியோகங்களை வழங்கிட வேண்டும். இவைதாம் நீதிக்கட்சி தோன்றியதற்கான மூல காரணங்கள். ஈ.வெ.ரா இதிலுள்ள நியாயத்தை உணர்ந்திருந்ததால் துவக்க முதலே இக்கொள்கையை ஆதரித்து வந்தார். நீதிக்கட்சி இக்கொள்கை கொண்டிருப்பதால்தானே வலுவடைகிறது; அவன் வலிமையைக் குறைக்க வேண்டுமானால் நாமே காங்கிரசில் வகுப்புவாரி உரிமைக் கொள்கையினை ஏற்றுக் கொள்ள வேண்டும் - என ஈ.வெ.ரா. வாதாடிப் போராடி வந்தார்.
1920-ம் ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரஸ் மாகாண மாநாட்டில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானம் கொணர்ந்து, பெரும்பான்மை பெற்று நிறைவேற்றியும், தலைவர் எஸ். சீனிவாச அய்யங்கார் அனுமதிக்க மறுத்துவிட்டார்.
1921-ல் தஞ்சாவூர் மாகாண மாநாட்டில் - இதைக் கொள்கையாக வைத்துக் கொள்ளலாம்; தீர்மான வடிவம் வேண்டாம் என்று தலைவர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் தந்திரமாகத் தடுத்து விட்டார்.
1922-ல் திருப்பூர் மாகாண மாநாட்டில் கொண்டுவர முயன்று, விவாதத்தால் கோபம் மேலிட்டு, மனுதர்ம சாஸ்திரத்தையும் இராமாயணத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டுமென முழங்கினார் ஈ.வெ.ரா! சேலம் விஜயராகவாச்சாரியார் அமைதிப்படுத்தி விட்டார்.
1923-ல் சேலம் மாகாண மாநாட்டிலும் தீர்மானத்தை முன் மொழிந்தபோது, கலவரம் மூளுவதாக அறிந்து, டாக்டர் நாயுடுவும், ஜார்ஜ் ஜோசஃபும் தலையிட்டுச் சமாதானம் செய்துவிட்டனர்.
1924-ல் திருவண்ணாமலை மாநில மாநாட்டுக்குத் தலைவரே ஈ.வெ. ராமசாமி தாம்! அங்கு தலைமையுரையிலும் இப்பிரச்னையைக் குறிப்பிட்டுப் பார்ப்பனர்களை எச்சரித்தார். ஆனால் வகுப்புவாரி உரிமைத் தீர்மானத்தை, எஸ். சீனிவாச அய்யங்கார் ஆள்திரட்டி வந்து, தடுத்து நிறுத்திவிட்டார்!
1925-ல் காஞ்சிபுரத்தில் மாநில மாநாடு; திரு.வி.க. தலைவர். இறுதி முயற்சியாக இங்கேயும் தீர்மானம் கொணர்ந்தார் ஈ.வெ.ரா. தலைவர் நிராகரித்தார். அங்கேயே - எரிமலையின் குமுறல், கடலின் கொந்தளிப்பு, சூறாவளியின் சீற்றம், இடியோசை வெடிமுழக்கம் ஈ.வெ.ரா. எழுந்து நின்று தமது ஆரஞ்சுநிறச் சால்வையை மார்பின் குறுக்கே இழுத்துப் போர்த்தி, கைவசம் எப்போதும் இருக்கும் சிறு தோல் பெட்டியை விரைவாகக் கையில் எடுத்துக்கொண்டு, எந்நேரமும் தம் வலது கையிலிருக்கும் தடித்த கைப்பிரம்பைத் தரையில் ஓங்கித் தட்டி, உரத்த குரலில் “கல்யாணசுந்தர முதலியார் அவர்களே! நான் வெளியேறுகிறேன். காங்கிரசால் பார்ப்பனரல்லாதார் நன்மை பெற முடியாது! காங்கிரசை ஒழிப்பதே இனி எனது வேலை!” என்று வீரகர்ச்சனை புரிந்து, வீறு நடைபோட்டு, அடல் ஏறு போல், அஞ்சாநெஞ்சுடன், காஞ்சியில் வெளிவந்து, திரும்பிப் பார்த்தார்! ஆகா! தன்மான உணர்வால் உந்தித் தள்ளப்பட்ட தமிழ் இனக் காங்கிரஸ்காரர் நூற்றுக் கணக்கில் எழுந்திருந்து, அவரைப் பின்பற்றித் தொடர்ந்து, அவரது அணிவகுப்பில் வந்து நின்றிடக் கண்டு, என்றுங் காணாத பேரின்பங் கண்டார் ஈ.வெ. ராமசாமியார்!
காங்கிரஸ் ஒழிந்ததைக் கண்ணால் கண்டுவிட்டுத்தானே மறைந்தார் - பெரியார்!