தந்தை பெரியார், கருணானந்தம்/009-021

விக்கிமூலம் இலிருந்து

 
7. விழித்தார்
“குடி அரசு” துவக்கமே சுயமரியாதைத் தோற்றம் - தீவிரப் பிரச்சாரம் - காந்தியாருடன் இறுதி முடிவு - சைமன் கமிஷன் வரவேற்பு - சுயமரியாதை மாநாடு - நீதிக்கட்சி ஆதரவு - 1926 முதல் 1929 வரை.

“குடி அரசு” என்னும் மிகச் சிறியதொரு வார இதழைக் கொண்டு தமிழகத்தில் ஈ.வெ.ரா. விளைத்த அறிவுப் புரட்சிக்கு ஒத்ததாக உலகில் வேரு யாரும் எங்கும் நிகழ்த்தியதாக வரலாறு கிடையாது. பிரான்ஸ் நாட்டில் ரூசோவும் வால்டேரும் எழுத்தின் மூலம் மாற்றத்தினை உருவாக்கினர் என்பது உண்மையே ஆயினும், சுயமரியாதை இயக்கத்தின் ஒரே அதிகார பூர்வமான ஏடாகிய இதில் வெளிவந்த கருத்துகள், அது வரையில் தமிழில் யாருமே சொல்லத் துணியாத, புதிய, முரண்பட்ட, முரட்டுத்தனமான கருத்துகளாகும். பெரியாருக்கு முன்பு மறைந்த இராமலிங்கர் வெள்ளாடைத் துறவியாயிருந்து, இந்து சமயத்தில் அறிவுக்குப் பொருத்தமான சில மாற்றங்களை, அறிவித்தார் எனினும், அவரது முடிவைப் பார்க்கும்போது, அவரும் பார்ப்பன சூழ்ச்சிக்குப் பலியானதாகவே தோன்றுகிறது.

சுயமரியாதைக் கொள்கைகளின் ஒரே பிரச்சாரப் பத்திரிகையான “குடி அரசு”-புராணம், சாஸ்திரம், இதிகாசம், மனுதர்மம் ஆகியவற்றைக் கடுமையாகச் சாடியது. பார்ப்பன சூழ்ச்சியைப் படம் பிடித்துக் காட்டியது. மதம், சாதி, கல்வி, தொழில், அரசியல் ஆகிய துறைகளில் ஆதிக்கம் செலுத்துவோரின் ஆணவத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை மக்களின் கேடயமாய்ப் பாதுகாத்தது. கொடுமை களைந்திடும்போது கடுமையான, கூர்மையான வாளாய்ப் பாய்ந்தது.

ஈ.வெ.ரா. 1925-ஆம் ஆண்டு காங்கிரசிலிருந்து வெளியேறினாலுங்கூட, காந்தியாரின் நிர்மாணத்திட்டங்களை அடுத்த இரண்டாண்டுகள் வரை ஆதரித்தே வந்தார். கதர் அணிதலையும், கதர்ப் பிரச்சாரத்தையும் கைவிடவில்லை. “குடி அரசு” இதழிலும் கதரை ஆதரித்தே எழுதி வந்தார். ஆனால் சுயமரியாதை மேடைகளில் காந்தியாரின் சமுதாயக் கொள்கைகளை மட்டும் கடுமையாகக் கண்டித்து வந்தார். ஏன்?

தான் பெற்ற மகனைத் தாயார் தோள் மீதும் மார்மீதும் தூக்கியணைத்துப், பாலூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அவனைக் கண்ணேபோல் காத்து ஆளாக்கி வருகையில்; வளர்ந்த பின்னர் அதே மகன், தாயாரை மானபங்கம் செய்து, அவள் சொல்லைத் துச்சமாய் வெறுத்தொதுக்கினால் அந்தத் தாயாரின் நெஞ்சம் படும்பாடு சொல்லத் தரமா? அஃதே போன்று, தமது சொந்த நலன்களை - வருவாயைத் - துறந்து, தமது மாளிகையிலேயே காங்கிரஸ் கட்சிக்கும் கதர் வஸ்திராலயத்துக்கும் இலவசமாய் இடந்தந்து, தமது தனிப்பட்ட பொருளைச் செலவு செய்து, குடும்பத்தாரோடு சிறை சென்று, அனைத்திந்திய மாநாடு ஒன்று தவறாமல் தாம் சென்றதோடன்றிக், காங்கிரசுக்கே வழிகாட்டியாய்த், தம் துணைவியார் நாகம்மையாரையும் அழைத்துச் சென்று. (அப்போதெல்லாம் பெண்டிரை மாநாடுகட்கு அழைத்துச் செல்லும் வழக்கம் நம் நாட்டில் இல்லை!) காங்கிரஸ் வேறு தாம் வேறல்ல என இரண்டறக் கலந்து நின்ற அதே நிறுவனம் - தமது சுயநலத்திற்காக அல்ல; இன நலத்திற்காக; வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முன் வரவில்லை என்ற துரோகச் செயலை ஈ.வெ. ராமசாமியால் எளிதில் சீரணித்துக் கொள்ள முடியவில்லை பார்ப்பனரல்லாத குடியில் பிறந்தவராதலால், தம்மால் தனி அன்புடன் ஆதரிக்கப்பெற்ற காந்தியடிகள், நிச்சயம் தம்மைக் கைவிட மாட்டாரென்று முழு நம்பிக்கையோடிருந்தார். அதுவும் தூள்தூளாய்த் தகர்ந்து தரைமட்டமான செய்தி அவருக்குத் தக்க சான்றுகளுடன் கிடைத்தது! என்ன அது?

வைக்கம் போராட்டம் நடந்தபோது, 1925 மார்ச்சில் திருவனந்தபுரம் வந்த காந்தியார், திருவாங்கூர் மகாராணியுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டுதான் போராட்டத்தைக் கைவிடச் சொன்னார் என்பதும்; வேண்டுமென்றே தமது பத்திரிகையில் எந்த ஓரிடத்திலும், ஈ.வெ. ராமசாமியின் பெயரைக் குறிப்பிடாமலே வைக்கம் சத்தியாக்கிரக வரலாறு எழுதிவத்தார் என்பதும்; மனுதர்ம அடிப்படையில் அமைந்துள்ள வருணாசிரம தர்மத்தை காந்தியார் ஆதரித்திருக்கிறார் - அங்ஙனமாயின், தீண்டாமை ஒழிப்புத் திட்டம் போலியாகத்தான் சொல்கிறார் என்பதும், அனைத்துக்கும் மேலாக, அவர் பார்ப்பனர் கைப்பாவையாகத்தான் செயல்படுகிறார் என்பதும் 1927 -ஆம் ஆண்டில் இராமசாமிக்குத் தெள்ளத் தெளிவாக விளங்கின.

இருப்பினும், காந்தியாருடன் நேராக உரையாடினால் ஏதாவது நன்மை கிடைக்கலாம் என்று கருதி, 1927-ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்களில் பெங்களூருக்கு வந்திருந்த காந்தியடிகளைக் கண்டு, கலந்து, விவாதம் செய்தார். இராஜாஜியும், தேவதாஸ்காந்தியும் பெங்களூரில் காந்தியடிகள் தங்கியிருந்த இடத்திலேயே உரையாடலுக்கு ஏற்பாடு செய்து, முன்வாயில் நின்று, வரவேற்று, காந்தியாரிடம் ஈ.வெ. ராமசாமியை அழைத்துச் சென்றனர். நாயக்கருக்குக் காங்கிரஸ்மீது என்ன கோபம் என்று காந்தியார் விசாரித்தார். இந்தியா விடுதலை பெறவேண்டுமானால் முதலில் காங்கிரசை ஒழிக்க வேண்டும்; இரண்டாவதாகச் சாதியை ஒழிப்பதற்கு, அதன் மூலகாரணமாக உள்ள இந்து மதத்தை ஒழிக்க வேண்டும்; மூன்றாவதாகப் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் - என்று ஈ. வெ. ரா. வலியுறுத்திப் பேசினார்.

இன்னும் இரண்டு மூன்று முறை நாம் சந்திப்போம் என்றாரே தவிர, இவற்றை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையில் காந்தியார் இல்லை. ஏனெனில் அந்த அளவு ‘இராமசாமி ஒரு பிராமணத்துவேஷி; இனி அவரால் தமிழ் நாட்டில் காங்கிரஸ் வளராது’ என அவரிடம் கோள் மூட்டியிருந்தனர். எனவே தாம் அன்றுவரை மிகுந்த மதிப்பு வைத்திருந்த காந்தியாரிடமும் விடைபெற்று, வேதனையோடு ஈ.வெ.ரா. வெளியே வந்துவிட்டார். விவரங்களைக் கீழேயிருந்த இராஜாஜியிடம் தெரிவித்துவிட்டுப் புறப்பட்டார்.

பெரியார் காந்தியடிகளிடம் பிரிந்து வந்த செய்தியை அவர் மொழியிலேயே கேட்பது நலமாயிருக்குமே! “இது விஷயமாய் நடந்த தர்க்கங்கள் முன் சொன்ன காரணத்தால் வெளியிடக் கூடியதல்ல. ஆதலால், இனி இதைப்பற்றி மகாத்மாவிடம் மறுபடியும் கலந்து பேசித் தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்றும் இல்லை என்பதையும், மகாத்மாவிடம் நேரிலேயே இம்மூன்று விஷயங்களைப் பற்றியும் மகாத்மா சொன்ன சமாதானங்கள் எம்முடைய அபிப்பிராயத்தை மாற்றக்கூடியதாயில்லை என்றும் சொல்லி, மகாத்மாவினிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு வந்துவிட்டோம். மகாத்மாவும், தான் சொன்ன சமாதானத்தால் நாம் திருப்தி அடையவில்லை என்பதைத் தெரிந்து கொண்டதாகவும், இன்னும் இரண்டொரு தடவை இதைப் பற்றிப் பேசவேண்டும் என்றும் சொன்னார். எமது நண்பர் ஸ்ரீமான் இராமதாதன் அவர்கள்கூட, மகாத்மா சொன்னதுபோலவே மறுபடியும் இரண்டொரு தடவை மகாத்மாவிடம் பேசலாம் என்றுகூடச் சொன்னார். இதற்கு உடனே நாம் ‘மகாத்மா நம்முடைய அபிப்பிராயத்தை மாற்றும்படித் திருப்தி செய்வார்கள் என்று நம்புகிறீர்களா? அல்லது மகாத்மா அபிப்பிராயத்தை நாம் மாற்றக்கூடும் என்பதாகக் கருதுகிறீர்களா?’ என்று கேட்டதில், ‘மகாத்மா சொல்வதைக் கொண்டு நம்முடைய அபிப்பிராயங்களை மாற்றிக்கொள்ளக் கூடியதாய் ஏற்படாது என்றும், ஒருகால் நமது அபிப்பிராயத்துக்கு மகாத்மா இணங்கக் கூடியதானால், நமது பிரச்சாரத்திற்கு இன்னும் உதவியாக இருக்காதா?’ என்றும் சொன்னார். உடனே நாம் ‘அந்தப்படி எதிர்பார்ப்பது தப்பு என்றும், மகாத்மாவைத் திருத்தும்படியாக நாம் சொல்லிச் சரிசெய்ய முடியாது என்றும், நம் அபிப்பிராயத்தை நாம் வெளிப்படுத்த வேண்டியதுதான் நமது கடமை!’ என்றும் சொல்லி விட்டோம். இன்ன இன்ன விஷயங்களைப் பற்றி மகாத்மா அவர்களுடன் சம்பாஷித்ததாகத் திரு. சி. இராஜகோபாலாச்சாரியார் அவர்களிடம் தெரிவித்துவிட்டே உத்திரவு பெற்றுக்கொண்டு வந்து விட்டோம்!” (குடி அரசு தலையங்கம் 28-8-1927)

அதன் பின்னர் காந்தியாரின் நிர்மாணத் திட்டங்களையும் வன்மையாக எதிர்க்க ஆரம்பித்தார். மேலும், கதர்விற்பனை நிலையங்கள் ஈ. வெ. ராமசாமியால்தான் துவங்கப் பெற்றவை எனினும், இந்தக் காலகட்டத்தில் அனைத்தும் பார்ப்பனரின் வேட்டைக்களங்களாக மாறியிருந்தன! தீண்டாமை ஒழிப்பின் லட்சணமும் தெரிந்து போய்விட்டது! கள்ளுக்கடை மறியல் அல்லது ஒழிப்பு என்பதும், சிறிது காலத்துக்குப் பின்னர் வெட்டவெளிச்சமாகி விட்டது.

காந்தியார் தமது பிடிவாதமான வர்ணாசிரம தர்ம ஆதரவை, அடுத்த திங்கள் சென்னை வந்தபோதும் காட்டிக் கொண்டார். அங்கு நீதிக்கட்சியின் சார்பில் தம்மைச் சந்தித்துத், தமிழகப்பார்ப்பனரின் ஆதிக்க நிலையினை எடுத்துக் காட்டிய சர். ஏ.டி, பன்னீர் செல்வம், தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் ஆகியோரின் நியாயவாதங்களையும் காந்தியார் புறக்கணித்து விட்டார்!

1926-ஆம் ஆண்டினிலே நடைபெற்ற சென்னை மாகாணச் சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சியும், சுயராஜ்யக் கட்சியும் போட்டியிட்டதில், எக்கட்சியும் அறுதிப்பெரும்பான்மை பெறவில்லை. ஆனால் நீதிக்கட்சி சார்பில் வென்ற குமாரமங்கலம் ஜமீன்தார் டாக்டர் பி. சுப்பராயன், கட்சிமாறி, சுயராஜ்யக் கட்சி ஆதரவுடன் முதல் மந்திரியானார். அடுத்த ஆண்டிலேயே அந்த ஆதரவு திரும்பப் பெறப்பட்டதால், நீதிக் கட்சி ஆதரவுடன் நிலைத்துக்கொண்டார்.

1926-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஈ.வெ.ரா. எந்தக் கட்சியையும் வெளிப்படையாக ஆதரிக்காமல், பார்ப்பனரல்லாதார் நன்மைக்குப் பாடுபடுவோர் வெற்றிக்கே தமது ஒத்துழைப்பை நல்கினார். இதில் காங்கிரஸ் கட்சி ஈடுபடவில்லை. ஆனால் காங்கிரஸ்காரரான ராஜாஜி, நீதிக்கட்சியினராகிய பார்ப்பனரல்லாதார் வென்றுவிடக் கூடாதே என்ற உள்நோக்கத்தோடு, மறைமுகமாக சுயராஜ்யக்கட்சியை ஆதரித்த போக்கு, ஈ. வெ. ராமசாமியின் அகக் கண்களை இன்னும் அகலத் திறந்துவிட்டது!

இந்தச் சமயத்தில், 1926-ல் மதுரையிலும், 1927-ல் கோவையிலும் இரு பார்ப்பனரல்லாதார் மாநாடுகள் சிறப்பாக நடைபெற்றன. சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்து வந்த ஈ.வெ.ரா. இவ்விரு மாநாடுகளிலும் பங்கேற்றார். வ.உ. சிதம்பரனார், திரு.வி.க., டாக்டர் வரதராசுலு, ஆர்.கே. சண்முகம், ஏ. இராமசாமி, ஏ.பி. பாத்ரோ, குமாரசாமி ரெட்டியார், சுப்பிரமணிய முதலியார் ஆகியோர் கலந்து கொண்டனர். நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆறாண்டுகாலம் ஆட்சி செய்து, கிராமப்புறங்களில் பல்லாயிரம் துவக்கப்பள்ளிகளை நிறுவியும், அங்கே கட்டாயமாக ஆதித்திராவிடப் பிள்ளைகளை அனுமதிக்குமாறு சட்டங்கள் இயற்றியும், வகுப்புவாரி உரிமையை அரசின் கொள்கையாக்கி, மூன்று முறை 1921, 1922, 1924-ஆம் ஆண்டுகளில் அரசாணைகள் பிறப்பித்தும், இந்து அறநிலையப் பாதுகாப்புச்சட்டம் 1924-ல் நிறைவேற்றியும்; இனஇழிவை ஒழிக்கும் முறையில் தேவதாசிகள் ஒழிப்புக்குப் பாடுபட்டும் - திராவிட இனமக்களின் மேம்பாட்டுக்கு உழைத்துங்கூட, 1926-ல் பெருந்தோல்வியைத் தழுவிட நேர்ந்ததால் எதிர்கால வேலைத்திட்டத்துக்கு ஈ. வெ. ராமசாமியாரின் மேலான ஆலோசனைகளை வேண்டினர்; அவரும் நீதிக் கட்சியினர் மனந்தளர வேண்டாம் எனத் தெம்பளித்தனர். காங்கிரசில் அனைவரும் சேர்ந்து அதைக் கைப்பற்றிப் பார்ப்பனரல்லாதார் வசமாக்குவோம் என்றும் சிலர் யோசனை தெரிவித்தனர். அதனால் பயன் விளையாது என ஈ.வெ.ரா. மறுத்ததோடு முதலில் நம்மிடமுள்ள மூட நம்பிக்கை, அறிவீனம் இவற்றை நீக்கி, நமது மக்களுக்குச் சுயமரியாதை உணர்வினை உண்டாக்குவோம். பிராமணன் உயர்ந்த ஜாதி என ஒப்புக்கொள்வதாலேயே நாம் சூத்திர ஜாதி; பிராமணனது வைப்பாட்டி மக்கள் என நாமே ஒப்புக்கொள்கிறோம். முதலில் சுயமரியாதை பெறுவோம். அஃதில்லாமல் நமக்கு ஆட்சி எதற்கு? கட்சிகள் எதற்கு? என விளக்கமுரைத்தார். வீழ்ந்துவிட்ட இனத்துக்குப் புத்துணர்வும், புதிய எழுச்சியும் ஊட்டிட ஒரு ஈ.வெ.ரா. பிறந்தாரே எனத் தென்னகத்துப் பெருங்குடிமக்களின் அருங்குணத் தலைமையாளர்கள் பூரிப்பு எய்தினர். இந்தி தேசிய மொழி என்ற காங்கிரஸ் கொள்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் அதைப் பரப்பிடக் காங்கிரஸ்காரர்கள் முனைவதைச் சுட்டிக்காட்டி இந்த மாநாடுகளில், இந்தி பொதுமொழி என்ற வாதத்தினை எதிர்க்கும் கொள்கையை ஈ.வெ.ரா. முதன் முதலாக அறிவித்தார்!

கள்ளுக்கடை மறியலுக்காக ஒருமுறை, கதர்ப் பிரசாரத்துக்காக ஒருமுறை, தீண்டாமை ஒழிப்புக்காக இருமுறை சிறை சென்ற ஈ.வெ.ரா. 1927-ஆம் ஆண்டில் தொழிலாளர்க்காக ஒருமுறை சிறை செல்லும் வாய்ப்பு நேரிட்டது. நாகைப்பட்டினத்தில் அது வரை இயங்கிவந்த தென்னிந்திய இருப்புப்பாதையின் பெரிய பணிமனை (ஓர்க்ஷாப்) திருச்சியை அடுத்த பொன்மலைக்கு மாற்றப்படுவதால் எழுந்த நடைமுறைச் சிக்கலில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் துவங்கிவிட்டது. 1926-ம் ஆண்டு நாகை சென்று, தொழிற்சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஈ.வெ.ரா. தொழிற்சங்கத் தலைவர்களாக வெளியாரை அனுமதிப்பதால், வருந்தீமைகளை எடுத்துக்காட்டி எச்சரிக்கை செய்தார். ரயில்வேத் தொழிலாளரில் சில காங்கிரஸ்காரர்கள் இருப்பினும், அநேகர் ஈ.வெ. ராமசாமியிடம் பெருமதிப்புக் கொண்ட அன்புத் தொண்டர்களாவர். அப்போது நீதிக்கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. ஈ.வெ.ரா. நாகைப்பட்டினம் சென்று, தொழிலாளரை அமைதிப்படுத்தித், தமிழர் அரசுக்குத் தொல்லை தரவேண்டாம் என்றும், பார்ப்பனக் காங்கிரசார் சூழ்ச்சி வலையில் விழவேண்டாம் என்றும் அன்பான அறிவுரை புகன்றார். ஆனால் அவர் அஞ்சியது போலவே, அரசுக்குச் சங்கடம் தந்து குழப்பம் உண்டாக்கிட மாற்றார் திட்டமிட்டவாறே, தொழிலாளர்கள் கிளர்ச்சிகளை மும்முரமாக்கினர். வேலை நிறுத்தத்துடன் நில்லாது, பலாத்கார வன்செயல்களும் தலை காட்டின; தண்டவாளம் பெயர்த்தல், தந்திகளை அறுத்தல் ஆகியவை நடைபெற்றன! இந்தக் கட்டத்தில், வழக்கம் போல், வன்முறை தூண்டியவர்கள் மெதுவாக ஒதுங்கிக் கொண்டார்கள். அதுவரை தொழிலாளர் பக்கம் போராடிவந்த ஏடுகள் திரும்பிக்கொண்டன. “குடி அரசு” வார இதழும், “திராவிடன்” தினசரி ஏடும் கடைசிவரை தொழிலாளர்க்காக உதவிவந்தன. ஈ.வெ.ரா. ஆதரவும், பொருளுதவியும் திரட்டித் தந்தார். கூட்டம் நடத்தத் தடை விதித்திருந்த நேரத்தில் தடையினை மீறிப் பொதுக்கூட்டத்தில் ரயில்வே நிர்வாகத்தையும், அரசையும் கண்டித்துப் பேசினார்; ஈரோட்டில் 1928-ஆகஸ்டு 5-ஆம் நாள் சிறைபிடிக்கப்பட்டார்! ஜாமீனில் வெளிவர மறுத்ததோடு, எதிர் வழக்காடுவதில்லை எனவும், முடிவு செய்தார். மிகக் கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ், அரசு வழக்குத் தொடர்ந்து, நீதி மன்றத்தில் நிறுத்தியது. தண்டனையை எதிர்நோக்கியிருந்த நேரத்தில் ஈ.வெ.ரா. மீது தொடுத்த வழக்கினை அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது! ஏனோ?

1928-ஆம் ஆண்டு நவம்பரில் பாஞ்சால சிங்கம் லாலா லஜபதிராயும், டிசம்பரில் பனகல் அரசர் ராமராய நிங்கவாரும் மறைந்தபோது, பெரியார் கண்ணீர் உகுத்து இரங்கல் கட்டுரைகள் தீட்டினார், “குடி அரசு” இதழில்.

1909-ல் மிண்டோ - மார்லி சீர்திருத்தமும், 1919-ல் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தமும் கொண்டுவந்த லண்டன் அரசு, 1927-ஆம் ஆண்டில், இந்தியாவுக்கு மேலும் என்னென்ன உரிமைகள் வழங்கலாம் என்பதை நேரில் ஆராய்ந்து வருமாறு, சைமன் கமிஷன் என்ற ஒரு ராயல் சுமிஷனை நியமித்தது. இதில் இந்தியர்களில் யாருமே உறுப்பினராக நியமிக்கப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி, இதனுடன் ஒத்துழைக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி புறக்கணிக்க விரும்பியது. நீதிக் கட்சி என்ன முடிவு மேற்கொள்வது என்ற திகைப்பில் ஆழ்ந்திருந்தது. அதே போல, இங்கிருந்த பிற அரசியல் கட்சிகளும் சைமன் கமிஷனை வரவேற்பதா, மறுப்பதா எனக் குழம்பிக் கிடந்தன. சென்னை மாகாண முதன் மந்திரியான டாக்டர் சுப்பராயனும் அவரது சுயராஜ்யக் கட்சி அமைச்சர்களிருவரும் செய்வதறியாது தயங்கியிருந்தனர். இந்நிலையில் மிகத் துணிவாகவும், தெளிவாகவும், இங்கு ஆராய்ச்சி செய்து அரசியல் நிலவரம் அறிந்து கொள்ள வருகின்ற சைமன் கமிஷனை வரவேற்று ஆதரித்தலே நமது கடமையென விளக்கி, ஈ.வெ.ரா. கட்டுரைகளும், துண்டு அறிக்கைகளும் வெளியிட்டு, மேடைகளிலும் முழங்கினார். காங்கிரஸ் தலைவர்கள் போல் சுயநலத்துக்குப் பாடுபடாமல், பார்ப்பனரல்லாத மக்களின் தலைவர்கள் பெரும்பான்மையாய், அடங்கி, ஒடுங்கி, ஆமையாய், ஊமையாய்க் கிடக்கின்ற இந்நாட்டு ஏழைப் பாமரனின் நலன்களைப் பாதுகாக்க முன்வாருங்கள்; என ஈ.வெ.ரா உருக்கமாக வேண்டினார்.

சுயராஜ்யக் கட்சித் தலைவரான பண்டித மோதிலால் நேரு சைமன் கமிஷனில் இந்தியர்களை நியமிக்காததே நல்லதென்றார். டாக்டர் அன்னிபெசண்ட் இந்தியாவின் சுயமரியாதையைக் காப்பாற்ற சைமன் கமிஷனைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்றார். இந்த அம்மையார் பஞ்சாப் படுகொலையை ஆதரித்தார். 1920-ஆம் ஆண்டு பிரிட்டிஷார் செய்த சீர்திருத்தத்தையும் ஆதரித்தவர். வெள்ளையர் ஏற்படுத்திய சட்டசபையிலும் உத்தியோகங்களிலும் இருப்பது சுயமரியாதையா என்று உசாவினார் ஈ.வெ.ரா.!

சென்னைக்கு சைமன் கமிஷன் வந்தபோது, மாபெரும் மாற்றங்கள் ஈ.வெ. ராமசாமியால் விளைவித்துக் காட்டப்பெற்றன. காங்கிரஸ் கட்சி பெயரளவுக்குத்தான் எதிர்ப்பினைக் காட்டிற்றே தவிரக் காங்கிரஸ் பிரமுகர்கள் வெவ்வேறு பெயர்களில் சைமன் கமிஷனை வரவேற்றனர். தமது சக அமைச்சர்களின் ஒத்துழைப்பு இல்லாமலே முதன் மந்திரி டாக்டர் சுப்பராயன் வரவேற்றார். நீதிக்கட்சியினர் துணிந்து வரவேற்றனர். பழைமைப் போக்கினர், மதவாதிகள், சநாதனிகள், வழக்கறிஞர்கள் ஆகிய பார்ப்பனர் பிரதிநிதிகளும் வரவேற்றனர். சென்னையில் சைமன் கமிஷன் தனது பணிகளைச் செவ்வனே முடிப்பதற்கு ஈ. வெ. ராமசாமியின் துணிச்சலான பிரச்சாரமே காரணம்! துள்ளிக் குதித்த பார்ப்பன ஏடுகளின் துடுக்கினை அடக்கினார் வெற்றியுடன்! இதன் விளைவாக டாக்டர் சுப்பராயன் சுயராஜ்யக் கட்சியின் ஆதரவினை இழக்க நேர்ந்தது. மாறாக நீதிக்கட்சியினர் ஒத்துழைக்க முன்வந்தனர். சேதுரத்தினம் அய்யரும். 1927-ல் காங்கிரசிலிருந்து விலகி வந்த எஸ். முத்தையாமுதலியாரும் அமைச்சர்களாயினர். 1928-ஆம் ஆண்டில் எஸ். முத்தையா முதலியாரின் பெரு முயற்சியால் வகுப்பு வாரி உரிமை நடைமுறைக்குக் கொணரப்பட்டது. மட்டற்ற மகிழ்ச்சியில் பூரித்துத், திளைத்துத், களித்துத் தமிழர் வீட்டுப் பிள்ளைகளுக்கு முத்தையா எனப் பெயரிடுங்கள் என்று கூறி வெகுவாகப் பாராட்டினார் ஈ.வெ.ரா.!

சுயமரியாதை இயக்கம் இதுவரை அமைப்புமுறை பெறாமல், மேடைகளிலும் ஏடுகளிலும் முழங்கப்பட்டுவந்த கொள்கைப் பிரச்சார இயக்கமாகவே இயங்கி வந்தது. இதற்கு, மேலும் வலியும் வளர்ச்சியும் ஏற்றிவிடும் வண்ணம், 1929-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 17, 18 நாட்களில் முதலாவது சென்னை மாகாணச் சுயமரியாதை மாநாடு செங்கற்பட்டில் நடைபெற்றது. பட்டிவீரன் பட்டிப் பெருமகனார் ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். முதல்மந்திரி டாக்டர் சுப்பராயன் திறந்து வைத்தார். சர்.பி.டி. இராசன் என்னும் பொன்னம்பலம் தியாகராஜன் கொடி ஏற்றினார். இவர்கள் அனைவரும் சுயமரியாதை இயக்கத்தின் மேலான கொள்கைகளை வரவேற்றும் இதனை உண்டாக்கிய மாபெருந் தலைவர் ஈ.வெ. ராமசாமி அவர்களைப் பாராட்டியும் சிறப்பான உரைகளை நிகழ்த்தினார்கள். பத்தாயிரக்கணக்கில் ஆர்வமுள்ள இளைஞர்கள் குழுமியிருந்தனர். தமிழர் எண்ணிஎண்ணிப் பெருமையுறத்தக்க புரட்சிகரமான பல தீர்மானங்கள் அங்கு இயற்றப்பட்டன. சாதிப்பட்டங்களை விட்டு விடுதல்; மதக்குறிகளை உடலில் அணியாதிருத்தல்; புரோகிதத்தை அறவே ஒழித்தல்; கோவில்களில் இடைத்தரகர்கள் இல்லாமலும், பூசைக்காகக் காசு செலவில்லாமலும் ஏற்பாடு செய்தல்; எல்லாருக்கும் கட்டாயத் துவக்கக்கல்வி தருதல், தீண்டாமை ஒழிந்திட எல்லாப் பொது இடங்களிலும் தாழ்த்தப்பட்டவர் நுழையச் சட்டப்படி அனுமதி தருதல்; அரசு அலுவல்களில் முதலிடம் தாழ்த்தப்பட்டோருக்கே அளித்தல், புறம்போக்கு நிலங்களைத் தாழ்த்தப்பட்டோருக்கும் நிலமற்ற ஏழை விவசாயிகட்கும் வழங்குதல்; பெண்களுக்குச் சொத்துரிமை, வாரிசுரிமை, எந்தத் தொழிலையும் ஏற்று நடத்திடச் சமஉரிமை, 16 வயதுக்குப்பின் திருமணம் செய்ய, மணவிலக்குப்பெற, விதவை மறுமணம் புரிய உரிமை கொடுத்தல், துவக்கக்கல்வி ஆசிரியர்களாகப் பெண்களையே நியமிக்கல், ஏழை மாணாக்கர்க்கு இலவச உடை, உணவு, புத்தகம் தருதல்; ரயில்வே உணவு விடுதிகளில் சாதிப் பாகுபாடுகளை ஒழித்தல்; மத விஷயங்களில் அரசு தலையிடாமல் நடுநிலைமை வகிப்பதால், பெரும்பான்மை மக்களின் உரிமைகள் பாதிக்கப் படுவதால், சட்டப்படி அவர்களுக்குப் பாதுகாப்புத் தருதல்......

அனைத்துக்கும் முத்தாய்ப்பு வைப்பதுபோல் - சமூக முன்னேற்றத்துக்கும், சமூக விடுதலைக்கும் பாடுபடச் சுயமரியாதை இயக்கம் கண்ட ஈ.வெ. இராமசாமிப் பெரியார் அவர்களைப் பாராட்டுவதோடு, அவர் தலைமையில் பரிபூரண நம்பிக்கை தெரிவிப்பது - என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது!

சுயமரியாதை இயக்கத்துக்குச் சூடுபிடித்து விட்டது. சொரணையிழந்து, சோம்பிக்கிடந்த தமிழ் மக்களின் துருப்பிடித்த மூளைக்குச் சாணை தீட்டப்பட்டது. வெட்டாத கத்திகளை வீசமுடியாத கரங்களால் வீசிச் சுயமரியாதை இயக்கத்தையும், ஈ.வெ.ரா. பெரியாரையும் நாவில் நரம்பின்றித் தூற்றினர் பாதிக்கப்பட்டோர்; காங்கிரஸ் போர்வையில் மதவாதிகளின் பின்னிருந்து பார்ப்பனர் தூபம் போட்டனர். “தேசபந்து”, “நவசக்தி”, “சுதேச மித்திரன்” ஏடுகள் அதிகமாகத் தாக்கத்தொடங்கின. நாத்திகர், தேசத்துரோகி, மதத்துவேஷி, வகுப்புவாதி என்ற பட்டங்கள் ராமசாமிப் பெரியாருக்கு அந்த வட்டங்களால் வழங்கப்பட்டன. 1928-ல் “ரிவோல்ட்” என்னும் ஆங்கில வார ஏட்டினையும் பெரியார் துவக்கி நடத்திவந்தார். “திராவிடன்” நாளேட்டுக்குப் பெரியாரும், ஜனக சங்கர கண்ணப்பரும் ஆசிரியர்களாக இருந்தனர்.

தமிழ்நாடு இளைஞர்களையெல்லாம் சுயமரியாதை இயக்கம் தன்பால் ஈர்த்தது. நீதிக்கட்சியின் முன்வரிசையிலிருந்த தலைவர்களான சர் ஆர்.கே. சண்முகம், சர் ஏ. ராமசாமி, சர் ஏ.டி. பன்னீர் செல்வம், எஸ். முத்தையா, எஸ். ராமச்சந்திரன், சி.டி. நாயகம், பி. சிதம்பரம் ஆகியோர் சுயமரியாதை இயக்க மாநாடுகளிலும் கூட்டங்களிலும் கலந்து கொண்டனர். பெரியாரின் சுயமரியாதைப் பிரச்சார பீரங்கிகளாக எஸ். இராமநாதன், எஸ். குருசாமி, சாமி சிதம்பரனார், கே.வி. அழகர்சாமி, அ. பொன்னம்பலனார், ஏ.எஸ். அருணாசலம், சொ. முருகப்பா, ராம. சுப்பையா, சி.ஏ. அய்யாமுத்து, நாகைமணி, எஸ்.வி. லிங்கம், ச.ம.சி. பரமசிவம், சி. நடராசன், சின்னையா, சித்தர்காடு இராமையா, மூவலூர் இராமாமிர்தத்தம்மையார், என்.பி. காளியப்பன், பி.எஸ். தண்டபாணி, ஏ.ஆர். சிவானந்தம், கருப்பையா, வே.வ. இராமசாமி, ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் ஆகியோர் தமிழ்நாடெங்கும் சுற்றிச் சுழன்று சூறாவளிப் பிரச்சாரம் புரிந்தனர். கூட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவ்வப்போது ஆணி அறைந்தாற்போல் இவர்கள் பதிலுரைப்பர். பெரியாரின் கூட்டத்தில் கலகம் விளைவித்துக் கலைத்துவிடச் சிலர் முயன்றதெல்லாம் இவர்களின் ஈடுபாட்டால் கனவாகவே போயிற்று. கல்லெறிதல், செருப்புவீசுதல், தண்ணீர்ப் பாம்பு விடுதல் இவையெல்லாம் கண்டு கலங்காத பெரியார், எதிர்ப்பையே எருவாகக் கொண்டு, இயக்கத்தினை வளர்த்து வந்தார், இவர்கள் துணையுடன்!

“குடி அரசு” ஒரு ஏட்டில் வெளிவந்த கட்டுரைகளுக்குப் பதில் சொல்லவோ, மறுக்கவோ எதிரணியினருக்கு எத்தனையோ பத்திரிகைகள் இருந்தன. அவைகளின் வாதங்களை, எதிர்ப்புகளை முனைமழுங்கச் செய்யக் "குடி அரசு" இதழில் பெரியார் சித்திரபுத்திரன் என்ற புனைபெயரில் எழுதும் கட்டுரைகளுடன், மாபெரும் தர்க்கவாத ஆராய்ச்சி நிபுணர்களும், மேதைகளும், அறிவாளிகளுமான சாமி கைவல்யம், சந்திரசேகரப் பாவலர், சாமி சிதம்பரனார், எஸ். குருசாமி போன்றோரின் பகுத்தறிவு விளக்கங்களும் நிரம்ப இடம் பெற்று வந்தன. இராமாயணம், பெரியபுராணம், பாரதம் இவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து, அவற்றிலுள்ள பொருந்தாக் கதைகளையும், புரட்டுகளையும் அம்பலப்படுத்தியது “குடி அரசு".

சுயமரியாதை இயக்கத்துக்குத் தஞ்சை மாவட்டம் தந்த பங்குவீதம் அதிகமாயிருந்தது. பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சள் அழகர்சாமிக்கு நிகரான மேடைப் பேச்சாளர் அக்காலத்தில் எவருமிலர். மூன்று மணி நேரத்துக்குக் குறையாமல் நெடிதுயர்ந்த கம்பீரமான உருவத்துடன் கணீரென்ற வெண்கலக் குரலெடுத்துச் சொன்மாரி பொழிவார். கேட்டோர் உணர்ச்சிப் பிழம்புகளாய் உருகி மெய்ம்மறந்து கிடப்பர். அநேக மேடைப் பேச்சாளர்கள் தங்கள் முதல்முயற்சிக்கு அவரையே முன்மாதிரியாகக் கொள்வர். கலைஞர் மு. கருணாநிதி, நாவலர் இரா. நெடுஞ்செழியன் ஆகியோரைப் பிற்காலத்தில் எடுத்துக் காட்டாகக் கூறலாம். கடைசிவரை பெரியாரின் முகாமிலேயே இருந்தவர். பேசிப் பேசி இரத்தம் கக்கி, 1949-ஆம் ஆண்டு தஞ்சையில் இயற்கை எய்தினார்.

குருவிக்கறம்பை எஸ். குருசாமி ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் புலமை மிக்கவர் அரசியல் விஷய ஞானம் அபாரமாகப் பெற்றவர். பேச்சாளராக இவர் பெற்ற பெருமைகளைவிட எழுத்தாளராகவே இவர் சிறப்பான முத்திரை பொறித்துள்ளார். குத்தூசி என்ற புனைபெயரில் இவர் "விடுதலை" ஏட்டில் ஆசிரியராயிருந்து தீட்டியுள்ள கட்டுரைகள் ஈடு இணையற்றவை. இவர் 1962 வரையில் பெரியாருடன் வாழ்ந்தவர்.

முறையோடு தமிழ் பயின்று, இராசாமடத்தில் ஆசிரியப் பணியாற்றிய சாமி சிதம்பரனார், "குடி அரசு" இதழில் நெடுங்காலம் எழுத்துப் பணிபுரிந்தவர்; பெரியாரிடம் நீண்டநாள் தங்கியிருந்து, 1940 முதல் பிரிந்து வாழ்ந்தார். 1950-ல் பெரியாரிடம் திரும்பி வந்து மீண்டும் 1951-ல் "விடுதலை" நாளேட்டில் சிறிதுகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். இறுதிவரை சுயமரியாதைக் கொள்கைகளைக் கைவிடவில்லை.
ஆராய்ச்சி நூல்கள் பல வெளியிட்டுள்ளார். ஈடில்லாப் புகழ் சேர்க்கும் வண்ணம், தமிழர் தலைவர் என்ற இவரது நூலைப்போல் தமிழில் ஒரு சிறந்த வாழ்க்கை வரலாற்று நூல் {Biography) வேறு கிடையாது. துணைவியார் சிவகாமி அம்மையார் சென்னையில் தமிழ்த் தொண்டாற்றி வருகிறார்.

மகளிர் குலதிலகம் வீராங்கனை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், டாக்டர் அன்னிபெசண்ட் போன்ற தோற்றமுடையவர், அழுத்தமான குரல், ஆவேசமான பேச்சு, தேவதாசிக் குலத்தில் பிறந்து, சிறந்த சுயமரியாதைக்காரராகி, அந்தப் பொட்டுக்கட்டும் முறையை ஒழிக்கப் பாடுபட்டவர். “தாசிகள் மோசவலை” என்ற புத்தகம் இயற்றியவர். 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து, இறுதி மூச்சுவரை இயக்கப்பணி ஆற்றியவர்.

நாகை என்.பி. காளியப்பன் பெரியாருடைய அணுக்கத் தொண்டர்களில் ஒருவர். நல்ல மேடைப் பேச்சாளர். இன்றும் மதுக்கூரில் வாழ்ந்து வருகின்றார். இயக்கத்தின் பழைய செய்திகளைப் பெருமிதத்துடன் நினைவுகூர்ந்து, நிரல்படச் சுவைகூட்டிச் சொல்பவர்.

மாயூரம் சி. நடராஜன், சித்தர்காடு இராமையா, சின்னையா, நாகை மணி இவர்களெல்லாம் பேச்சாளர் என்பதைவிட அமைப்பாளர் என்ற சொல்லே பொருந்தும். பெரியார் கூட்டத்தில் எதிர்ப்பே தலைகாட்ட முடியாமல் செய்துவந்த வீரர்கள் இந்தப் பகுத்தறிவுப் பட்டாளத்தார்.

சர் ஏ.டி. பன்னீர்செல்வம் பண்பாளர். பெரியாரின் அன்புக்குரியவர். உயர் பதவி ஏற்க லண்டன் சென்றபோது விமானமே காணாமற்போய் முடிவு தெரியாமல் அகால மரணமடைந்த பெருவீரர் பெரும் பண்ணையூரைச் சார்ந்தவர். தஞ்சைத் தமிழ்வேள் உமாகேசனார் வழக்கறிஞர். கரந்தைத் தமிழ்ச்சங்கம் நிறுவிய சான்றோர். இவர் நண்பர் அய். குமாரசாமியார், நெடும்புலம் சாமியப்பா இவர்களெல்லாம் நீதிக்கட்சியினரேனும் பெரியாரை மதித்துக் கொண்டாடிய மாண்பு மிக்கவர்கள். தஞ்சை மாவட்டத்தின் பட்டியல் பிற்பகுதியிலும் தொடர்கிறது.

துவக்க முதல் பெரியாருடனிருந்த எஸ். இராமநாதன் எம்.ஏ.பி.எல். 1938-ல் இராஜாஜியுடன் காங்கிரசில் மீண்டும் சேர்ந்து அமைச்சராகி விட்டார். ஆனால் 1950-51-ல் வகுப்புரிமைப் போராட்டத்தில் பெரியாரிடம் இணைந்து பணியாற்றினார். அவர் இளவல் மாயூரம் எஸ், சம்பந்தம் 1938 இந்தி எதிர்ப்புப் போரில் சர்வாதிகாரியாகிச் சிறை ஏகினார். இறுதிவரை பெரியாரின் நண்பராக இருந்தார்.

சிவகங்கை வழக்கறிஞர் எஸ். இராமச்சந்திரன் (சேர்வை) அகமுடையார் வகுப்பில் பெருந்தலைவர். சுயமரியாதை இயக்கத்தில் அளவுகடந்த பற்றுள்ளவர். 1929-ல் திருநெல்வேலி சுயமரியாதை மாநாட்டுக்குத் தலைமை ஏற்று அரிய கருத்துகளை வழங்கியவர். 48-ம் வயதில் 26-2-1933-ல் அகால மரணமடைந்தபோது பெரியார் எல்லையற்ற துயரமடைந்தார். இவரது மகன்தான் பிற்காலத்தில் சர்வீஸ் கமிஷன் தலைவராயிருந்த ராமசுப்ரமணியம். இவருடைய உறவினர்கள் அத்தனை பேரும் வழக்கறிஞர்கள்; சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் இவற்றில் முழுமூச்சுடன் ஈடுபட்டவர்கள். சிவகங்கை ஆர். சண்முகநாதன், கே. ராஜசேகரன் ஆகியோர் கழகத்தின் முக்கியப் பொறுப்பேற்றனர்; குடும்பமே இயக்கத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும்.

பூவாளூர் அ. பொன்னம்பலனார் அளவு விரைவாக மேடையில் பேசவல்லார் இன்று ஒரே ஒருவர்தான் இருக்கின்றார். அவர் பெயர் கி. வீரமணி எம்.ஏ, பி.எல். போட்மெயில் பொன்னம்பலனார் என்றே மக்கள் அன்புடன் இவரை அழைத்தனர். பெரியாருடனும், தனித்தும், தமிழகத்திலும், மலேயாவிலும் இவர் சென்று பேசாத ஊரே கிடையாது. தி.மு. கழகத்தில் சேர்ந்து இறுதி நாள்வரை இயக்கப் பணியாற்றினார்.

கோவை சி.ஏ. அய்யாமுத்து இறுதிவரை சுயமரியாதைக் காங்கிரஸ்காரராயிருந்து 1975-ல் மறைந்தார். ஆங்கிலப் பெண்மணியான மிஸ்மேயோ தனது(Mother India) இந்தியத்தாய் என்ற நூலில் இந்திய மக்கள் கல்வி அறிவில்லாமல் இருப்பதற்குக் காரணம் பார்ப்பனர்களே - என்று குறிப் பிட்டிருந்தார். குப்பைக்காரி என்றெல்லாம் தேசியத்தலைவர்கள் மேயோவை ஏசினபோது அவர்களுக்குப் பதிலளிக்கும் முறையில் எழுதப்பட்ட மேயோகூற்று மெய்யா பொய்யா என்ற இவரது நூல் பிரச்சினைக்குரியதாய் விளங்கிற்று. நல்ல தமிழ் அறிவு கொண்ட பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர்.

வயி.சு. சண்முகம், முருகப்பா. ராமசுப்பய்யா ஆகியோர் செட்டி நாட்டுப் பகுதியில் இயக்க வளர்ச்சிக்கு உரமேற்றிய அன்பர்கள். ராமசுப்பையா தி.மு. கழகத்தில் இன்றும் முதிய தொண்டர்.

வயி.சு. சண்முகம் மறைந்த பின்னும் முன்னர் அவரால் கலப்புத் திருமணம் செய்துகொள்ளப்பட்ட மஞ்சுளாபாய் அம்மையார் தமது முதுமையிலும் இயக்கப் பணியில் ஈடுபட்டுள்ளார். பெரியார் - மணியம்மை குழந்தைகள் காப்பகத்தைப் பார்த்துக் கொள்கிறார் இப்போது (1979-ல்).

எஸ். வி. லிங்கம், தண்டபாணி ஆகியோர் நல்ல விதண்டாவாதிகள்; யாரும் இவர்களிடம் அகப்பட்டுச் சொற்போராடி மீள முடியாது.

சவுந்தரபாண்டியனாரும், இராமசாமியாரும் மதுரை இராமநாதபுரம் மாவட்டங்களில் நாடார் சமூகத்திடையே இயக்கம் வேரூன்றிச் செல்வாக்குப் பெற இறுதிவரை உழைத்தவர்கள். 1945-க்குப்பின் சவுந்தரபாண்டியனார் ஒதுங்கி வாழ்ந்தார். 1979-ல் மறைந்த வே.வ. இராமசாமி முதிய வயதிலும் சுயமரியாதை வீரராய் விளங்கினார்.

“குடி அரசு” எழுத்தாளர்களில் சந்திர சேகரப் பாவலர் நல்ல தமிழ், வடமொழிப் பாண்டித்யம் உள்ளவர். புராண இதிகாச நூல்களை அலசி ஆராய்ந்தவர். பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைக்கு எருவிடுவதுபோல இவரது தெளிவான கட்டுரைகள் செறிவுடன் மறுக்க முடியாத ஆதாரங்களுடன் விளங்கின.

பகுத்தறிவு எழுத்தாளர்களில் பழைய பெரியோர் வரிசையில் முதலிடம் சாமி கைவல்யம் அவர்களுக்கே. கள்ளிக் கோட்டையில் பிறந்து, திருச்சியில் பயின்று, இந்தியா முழுவதும் சுற்றியலைந்தவர். கோவை மாவட்டத்தில் இவருக்கு அதிகச் செல்வாக்கு. இவரை அறியாத மக்களே கிடையாது. பொன்னுசாமி என்ற இயற்பெயர் மறைந்தது; கைவல்ய நூலைப்பற்றி அதிகமாக விவாதம் செய்து வந்ததால், கைவல்ய சாமியார் என்ற பெயரே நிலைத்தது. தர்க்கம் செய்வதில் இவருக்கு இணையானவர் யாரும் இலர். கற்றறிந்தவர்களாகக் கருதப்பட்ட ஆத்திகப் பெரியோர் பலர் இவரிடம் வாதிட அஞ்சி ஓடி ஒளிவர். பெரியாருடைய 24-ஆம் வயது முதல் இவர் நண்பர்; சிறிது மூத்தவர். கருத்த உயர்ந்த மேனி; வெளுத்த முடி; மழித்த முகம்; வெள்ளை வேட்டி; வெண்மையான தொளதொள அங்கி; கையில் மெலிந்து நீண்ட ஒரு தடி; வேறு ஒன்றும் சொத்து கிடையாது. எங்கு சென்றாலும் மரியாதையான அன்பான உபசரணை.

கண்டவுடன் “வாங்க சார்” என வாஞ்சையுடன் அழைத்து, முதலில் வெற்றிலை பாக்கு வாங்கி வந்து,

கைவல்யசாமியைப் பெரியார் உபசரிப்பார். அங்கேயே உட்கார்ந்து ஆராய்ச்சிப் பொருள் நிறைந்த அறிவு கமழும் கட்டுரை எழுதித் தந்து சென்று விடுவார் கைவல்ய சாமியார்.

சுயமரியாதைச் சேனா வீரர்கள் இன்னும் எண்ணற்றோர் எழுதிட இயலுமா?

பெரியாரின் புயல்வேகப் பணிகளால் வைதிகம் ஆடி அலறித் துடித்தது. பரம்பரையாய் அரசியலிலும் ஆன்மிகத்திலும் தலைமைப் பீடத்தில் அமர்ந்துகொண்டு, நகத்தில் அழுக்குப்படாமல், வெயிலில் அலையாமல், மேனி குலையாமல் வாழ்வின் எல்லா அம்சங்களையும் நல்ல வண்ணம் அனுபவித்து வந்த ஆதிக்கபுரியினர், மதத் தலைவர்களைச் சரணடைந்து, பெரியாரை மடக்கிவிட மனப்பால் குடித்தனர். சிருங்கேரி மடத்துச் சங்கராச்சாரியார் முயன்று பார்த்தார். நாயக்கர்வாளும், அவரது பார்யாளும் பொதுநலத்தொண்டு செய்து வருவதைத் தாம் பாராட்டுவதாகவும் அவர்களிருவரும் தம்மைச் சந்திக்கத் தாம் விழைவதாகவும் 'திருமுகம்' அனுப்பியிருந்தார். அவரைச் சந்திப்பதால் இயக்கத்திற்கு எள்ளளவு பயனும் ஏற்படப் போவதில்லையெனும் தமது தோழர்களின் கருத்தை மதித்துப் பெரியார், சங்கராச்சாரியாரின் அழைப்பினை ஏற்றுக் கொள்ளவில்லை எனப் பணிவுடன் தெரிவித்தார்.

வெறும் வாய்ச்சொல் வீரர்களாகச் சுயமரியாதை இயக்கத்தவர் விளங்கிட மாட்டார்கள் என மெய்ப்பிக்குமாறு, நிறையச் சுயமரியாதைக் கலப்பு மணங்களை நடத்தி வைத்தார் பெரியார். குறிப்பிடத்தக்க இணைகளாகச் சிதம்பரனார் - சிவகாமி, குருசாமி - குஞ்சிதம், சிதம்பரம் - ரங்கம்மாள், முருகப்பா-மரகதவல்லி, சண்முகம் - மஞ்சுளாபாய், இராம சுப்ரமணியம் - நீலாவதி, இரத்தினசபாபதி - அன்னபூரணி, ராமசுப்பய்யா- விசாலாட்சி ஆகியோர் விளங்கினார்கள். இவையன்றி நாடு முழுதும் ஏராளமான விதவைத் திருமணங்கள், புரோகிதம், சடங்கு ஒழிந்த திருமணங்கள் ஆகியவற்றையும் பெரியார் நடத்தி வந்தார். பெண்ணுரிமை பேணுவதில் கண்ணுங் கருத்துமாயிருந்த பெரியார். 1928-ஆம் ஆண்டில் முதன்முதலாகக் கர்ப்ப ஆராய்ச்சி என்ற, குறைவாகக் குழந்தை பெறும் குடும்பநலத் திட்டத்தைக் கொள்கையாக அறிவித்துப் பிரச்சாரமும் செய்து வந்தார்.

தமிழ் நாட்டில் மிக நல்லவகையில் சுயமரியாதைக் கருத்துக்கள் வேர்விட்டு முளைத்தன. இந்த முறையில் சொல்லும் செயலும் ஒருமித்து விளங்கியதால் மிகக்குறுகிய கால அளவான நான்கைந்து ஆண்டுகளில், 1925-முதல் 1929 வரையில், தமிழகத்தில் சுயமரியாதை இயக்கத்திற்குக் கடைக்கால் நன்கு போடப்பட்டு விட்டது!