தந்தை பெரியார், கருணானந்தம்/010-021
மலேயாவிலும் சிங்கப்பூரிலும் வாழ்கின்ற தமிழர்கள் எத்தனையோ தலைமுறைகளுக்கு முன் அங்குக் குடியேறியவர்கள். ரப்பர் தோட்டங்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும் உழைத்துப் பிழைத்து வருவோரும், வாணிகம் செய்வோரும், அலுவல் பார்ப்போருமாக இந்திய மரபினைச் சார்ந்தோரில் அதிகமானவர் தமிழர்களே ஆவர். இவர்கள் அங்குள்ள சுதேச மக்கள், சீனர், ஜப்பானியர், ஆங்கிலேயர், முஸ்லிம்கள், ஈழநாட்டவர் ஆகியோருடன் நல்ல முறையில் இணக்கமான சூழ்நிலையில், பின்னிப் பிணைந்து பழகி வந்தவர்கள். எனவே இவர்கள் அனைவருமே இணைந்து ஈ.வெ. ராமசாமிப் பெரியாரை மலேயா சிங்கப்பூர் நாடுகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
பெரியாரின் வெற்றிக்கு, அவரது ஆதரவாளர்கள் மட்டுமல்லாது. மற்றொரு காரணமாயிருப்பவர் அவரை எதிர்ப்போரேயாவர். அதே முறையில் மலேயாவிலுள்ள யாரோ சில பழைமை விரும்பிகள், ஆதிக்கச் சுரண்டல்காரர்கள் பெரியாரைப் பற்றித் தவறாகப் பிரச்சாரம் செய்து அரசுக்கும் அவரை அனுமதிக்கலாகாது என அறிவுறுத்தி, ஆனவரையில் தடுப்பதற்கு முயன்று, மூக்கறுபட்டார்கள். “தமிழ்நேசன்” பத்திராதிபரான அய்யங்கார் இதில் ஒருவர். அழைப்பாளர்கள் கொடுத்ததுபோல், வரவேண்டாம் என்று பொய்த் தந்தியும் கொடுத்துப் பார்த்தார்கள். ஆட்களிடம் 500 வெள்ளி தந்து ஆளையே தீர்த்து விடும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் வதந்தி பரவியிருந்தது. வருபவர் தேசத் துரோகி, மதத்துவேஷி, நாத்திகர்! அவரை யாரும் வரவேற்கக்கூடாது; என அவர்கள் மலேயா, சிங்கப்பூர் நாடுகளில் பெருத்த விளம்பரம் செய்தனர். வரவேற்பாளரைவிட எதிர்ப்பாளர் பலமான ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதனால் இருமடங்கு ஆவலுடன் பல்லாயிரம் மக்கள் கூட்டம் பினாங்குத் துறைமுகத்தில் காத்திருந்தது.
1929-ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 15-ஆம் நாள் பெரியார், தமது துணைவியார் நாகம்மையார், நண்பர்களான எஸ். இராமநாதன், சாமி சிதம்பரனார், அ. பொன்னம்பலனார், மாயூரம் நடராசன், நாகை காளியப்பன் ஆகியோருடன் நாகைப்பட்டினம் துறைமுகத்தில் கப்பலில் ஏறினார். 20-ஆம் நாள் பினாங்கில் இறங்கிய போது, மலாயா வாழ் பெருமக்கள் லட்சக் கணக்கில் திரண்டு வரவேற்றனர். வேறெந்த இந்தியத் தலைவரும் காணாத பெரு வரவேற்பு! மாலைகளும் வாழ்த்து மடல்களும் எண்ணிலடங்கா; பத்திரிகைகள் பிரமாதமாகப் பாராட்டி எழுதின! 23-ஆம் நாள் ஈப்போவில் தமிழர் சீர்திருத்த மாநாட்டைப் பெரியார் துவக்கி வைத்தார். தமிழர் மாத்திரமன்றித் தெலுங்கர், மலையாளிகள், யாழ்ப்பாணத் தமிழர், முஸ்லிம் பெருமக்கள் அங்கு ஏராளமாகக் குழுமியிருந்தனர். அடுத்து, 26 ஆம் நாள் சிங்கப்பூர் சென்று, மலேயா இந்தியச் சங்க மாநாட்டிலும் விரிவுரை நிகழ்த்தினார்.
அந்த நாடுகளில் இந்த நாட்டைபோலச் சாதி-மதச் சண்டைகள் இல்லையெனினும், மூட நம்பிக்கைகள், அறிவுக்குப் பொருந்தாத குருட்டுப் பழக்க வழக்கங்கட்குக் குறைவில்லை. பலபேர் பெரியார் என்றால் துறவி இராமசாமியென்றே கருதிக் காலில் வீழ்ந்து வணங்கினர். அவர்களுக்கெல்லாம் பகுத்தறிவு விளக்கங்களைப் பெரியாரும் குழுவினரும் தாராளமாகவும் ஏராளமாகவும் வழங்கினர். அவர்கள் கேட்ட அய்யவினாக்களுக்கெல்லாம் தயங்காமல் மயங்காமல், அறிவுபூர்வமான தெளிவான பதிலுரைகள் வழங்கினார். மக்களிடையே பேதங்கள் ஒழிந்து சுயமரியாதை பெருக வேண்டும் என்ற குறிக்கோளை எடுத்துரைத்தனர். எதிர்ப்பாளரும் மனநிறைவடைந்து அமைதி பெற்றனர்.
சிங்கப்பூரில் “தமிழ்முரசு” ஏடு நடத்தி வந்த திருவாரூர்க்காரர் கோ. சாரங்கபாணி பெரியாரின் சிறந்த நண்பரானார். மலேயாவிலுள்ள பற்பல பெரிய ஊர்களுக்குப் பெரியாகும் குழுவினரும் சென்று பிரச்சாரம் புரிந்தனர். பினாங்கு, ஈப்போ , கோலாலம்பூர், கோலப்பிறை, கோலக்கங்சார், தைப்பிங், மூவார். ஜோகூர்பாரு, பத்துப் பகாட், மலாக்கா, தம்பின், கோலக்குபு, தஞ்சை மாலிம், சுங்கை குரூட், சுங்கை பட்டாணி, தெலுக்கான்சன், கம்மார் அகிய சுமார் எழுபத்தொரு இடங்களில் சொற்பொழிவுகளும், வரவேற்பு நிகழ்ச்சிகளில் உரைகளும் நிகழ்த்தி மாபெரும் எழுச்சியும், விழிப்புணர்ச்சியும் ஏற்படுத்தினார்கள்.
மீண்டும் 1930-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 11-ஆம் நாள் பினாங்கில் கப்பலேறி, 16-ஆம் நாள் நாகைப்பட்டினம் துறைமுகத்தில் வந்திறங்கினர். இந்த நேரத்தில்தான் பெரியாரின் தோற்றத்தில் முக்கியமானதொரு மாற்றம் நேர்ந்தது. அதுவரையில் முகத்தில் வெண்ணிறமான திண்ணிய மீசை மட்டும் வளர்த்திருந்த பெரியார், மலேயாவிலிருந்து திரும்பியபோது, வெண்மையான தாடியுடனும் காணப்பட்டார். தற்செயலாய் நேரிட்ட, சவரம் செய்து கொள்ள இயலாத நிலையைப் பிற்காலங்களில் தனக்கு மிகவும் சாதகமான அமைப்பாக்கிக் கொண்டார் பெரியார். அதாவது பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர் குளிக்கவோ, பல் துலக்கவோ, தலை சீவவோ, சவரம் செய்து கொள்ளவோ துணி துவைக்கவோ, சலவை: உடுக்கவோ, அலங்காரம் மேற்கொள்ளவோ நேரம் செலவழிக்கக் கூடாது என்பது பெரியாரின் பிடிவாதமான கொள்கை. இதற்கு மாறுபடும் அவருடைய அணுக்கத் தொண்டர்கள் சிலர் அவரது கண்டனத்துக்கு ஆளாகியுள்ளனர்; நன்குணர்ந்த புத்திசாலிகள் தப்பித்துள்ளனர். பிடரியினைச் சிலிர்த்தெழும் அடலேற்றுச் சிங்கமெனப் பெரியார் மலேயா நாடுகளிலிருந்து திரும்பினார் கவர்ச்சி மிகு தோற்றத்துடன்!
அவரில்லாத காலத்தில் சென்னைக்கு மாற்றப்பட்டிருந்த “குடி அரசு”, “ரிவோல்ட்” இதழ்கள் மீண்டும் ஈரோட்டுக்கே கொண்டு வரப்பட்டன. ரிவோல்ட் இதழ் 1930ஆம் ஆண்டில் அடியோடு நிறுத்தப்பட்டுவிட்டது. "குடி அரசு" இதழில் முன்னிலும் அதிகத் தீவிரத்துடன் பெரியார் எழுதி வந்தார். இந்த நேரத்தில்தான் காந்தியார் தமது உப்புச் சத்தியாக்கிரகம் எனும் புதிய போராட்டத்தைத் துவக்கியிருந்தார். 1930-ல், இந்தியாவிலிருந்து வெள்ளை ஆட்சியை விலகச் செய்திட ஒரு கருவியாக இந்த உப்புப்போர் கருதப்பட்டு, இதில் ஏராளமானோர் ஈடுபட்டனர். தென்னாட்டில் வேதாரண்யத்தில் உப்புப் போர் நடத்த இராஜாஜியும், சர்தார் வேதரத்தினம் பிள்ளையும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டுங்கெட்டான் நிலைமையிலிருந்த சில தமிழ் மக்கள் உப்புப் போர் மிக நியாயமானதே என்று நினைக்கவும் தொடங்கினர். இந்நிலையில், அதனை அடியோடு எதிர்த்துப் பெரியார் முழக்கமிட்டார். இந்தக் கொள்கையிலும், இதை நடத்துகின்ற தலைவர்களின் நாணயத்திலும் தமக்கு நம்பிக்கை இல்லை என்றார். இந்தியாவில் மத ஆதிக்கம், குருட்டு நம்பிக்கை, தீண்டாமை, பெண்ணடிமை, சாதி இழிவு, பார்ப்பன் ஆளுகை இவை யாவும் அடியோடு ஒழிக்கப் பட்டால்தான் பூரண சுயராஜ்யம் கிடைக்கும்; கிடைத்தாலும் நிலைக்கும் என்ற தமது கொள்கையை அழுத்தந்திருத்தமாக அஞ்சாது வெளிப்படுத்தினார் பெரியார்!
இவ்வாறு சொன்னதால், ஒரு பெரிய தேசிய எழுச்சியை அவமதிக்கிறார் என்று சொல்லிக் கடுமையாக ஏசினார்கள்; மிரட்டினார்கள்; மொட்டைக் கடிதங்கள் தீட்டினார்கள்; வெள்ளைக்காரர் பாதந்தாங்கி எனப்பட்டம் சூட்டினார்கள் என்னதான் அச்சுறுத்தினாலும், இந்த உப்புக் காய்ச்சும் போரினால், வளைந்து போன குண்டூசியளவு நன்மைகூட இந்தியாவுக்குக் கிடைக்காதென்று, கோபுரத்தின் மீதிருந்தும் கூறுவதாகப் பெரியார் பிரகடனம் செய்தார்! கலந்து கொள்ளாவிட்டாலும், இதைக் கண்டிக்காமலாவது விடலாமே என்று உடனிருந்தோரில் சிலரது முணுமுணுப்பும் அவர் செவிகளில் ஏறவில்லை !
ஈரோட்டில் இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாடுகளின் தொகுப்பு, 1931 -ஆம் ஆண்டு மே 10,11 நாட்களில் நடைபெற்றது. வரவேற்புக் குழுத்தலைவர் ஆர்.கே. சண்முகம், சுயமரியாதை மாநாட்டுத் தலைவர் எம்.ஆர். ஜெயக்கர், இளைஞர் மாநாட்டுத் தலைவர் நாகர்கோயில் வழக்கறிஞர் பி. சிதம்பரம், பெண்கள் மாநாட்டுத் தலைவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (இவர் தேவதாசி ஒழிப்பு மசோதாவைச் சட்டமன்றத்தில் நிறைவேற்ற அரும்பாடு பட்டார். பெரியாரின் முழு ஆதரவு இதற்கு இருந்தது. இதை உடனடியாக நிறைவேற்றித் தராததற்காகப் பெரியார் நீதிக் கட்சியினரைக் கடுமையாகக் கண்டித்து வந்தார்) 1930-ல் மதுவிலக்கு மாநாட்டுத் தலைவர் சிவகங்கை வழக்கறிஞர் எஸ். இராமச்சந்திரன், சங்கீத மாநாட்டுத் தலைவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகச் சங்கீதப் பேராசிரியர் தஞ்சை கே. பொன்னையா - எனப் பெரியார் ஏற்பாடு செய்தார்.
மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் - இந்து முஸ்லீம், கிறிஸ்தவர், தாழ்த்தப்பட்டோர் - ஒன்றாகக்கூடி அமர்ந்திருப்பதையும், இவர்களனைவருக்கும் உணவு சமைத்துப் பரிமாறுகின்றவர்கள் யாவரும் தாழ்த்தப்பட்டோர் என்பதையும் கண்டு, எம்.ஆர். ஜெயக்கர் என்னும் வடநாட்டு அறிவாளர் மிக்க வியப்பும் மகிழ்வுங்கொண்டு பல்லாயிரம் ஆண்டுகளாய் எந்த மதத் தலைவரும் செய்யாத அருஞ் சாதனைகளைப் பெரியார் ஆற்றியுள்ளதாகப் பாராட்டிப் புகழ்ந்தார். சட்டமன்றம் செல்லவோ, அரசுப்பதவி பெறவோ விரும்பாமல் ஏழை மக்களின் மேம்பாட்டுக்குத் தொண்டு செய்வதே அவரது பிறவிப் பயனாய்க் கருதுவதைப் போற்றினார்.
பெரியார் சில முற்போக்கான தீர்மானங்களைக் கூடுதலாகக் கொணர்ந்து இங்கு இணைத்தார். செங்கற்பட்டுத் தீர்மானங்களை முழுமையாக ஏற்றுக் கொள்வதோடு, மாதம் 1000 ரூபாய்க்கு மேல் எந்த அரசு அலுவலரும் சம்பளம் பெற இடமிருக்கக்கூடாது என்பது ஒன்றாகும். இது இங்கு நிறைவேறிய பின்னர்தான் காங்கிரஸ் கட்சி 500 ரூபாய் சம்பளத்துக்கு மேல் அரசு யாருக்கும் தரக்கூடாது என்று தீர்மானித்ததாகும். மேலும், யார் தூற்றினாலும் போற்றினாலும் கவலை கொள்ளாமல், சுயமரியாதை இயக்கம் அரசியலில் கலக்கக் கூடாது; சட்டமறுப்பு இயக்கங்களை ஆதரிக்கக் கூடாது: முழுமையான சமூக சீர்திருத்த இயக்கமாகவே நடைபெற வேண்டும் என்பது மற்றொரு முக்கிய தீர்மானமாகும். சுயமரியாதை இயக்கம் என்றைக்குமே மூடப் பழக்க வழக்கங்களையும், கடவுள் மதம் சாதி பார்ப்பான் பண்டிதனைக் கண்டித்துக்கொண்டு மட்டுந்தான் இருக்கும் என எண்ணிட வேண்டாம்; ஒருவன் உழைப்பில் மற்றவன் நோவாமல் சாப்பிடுவதும்: ஒருவன் கஞ்சிக்கு அலைய, மற்றவன் அய்ந்து வேளை சாப்பிட்டுச் சாய்ந்து ஓய்ந்து கிடப்பதும்; ஒருவன் கந்தை யணிவதும் மற்றவன் மூன்று உடுப்பு அணிந்து திரிவதும்; பணக்காரர்கள் செல்வம் முழுவதும் தங்களது சுக வாழ்வுக்கு மட்டுமே என எண்ணுவதும் இனி நடக்காது - என்ற சமதர்மக் கருத்தையும் பெரியார் ஈரோடு மாநாட்டில் பிரகடனம் செய்துவிட்டார்! இந்தப் புதிய பொருளாதாரத் திட்டம் மேலும் பல இளைஞர்களை இயக்கத்தின்பால் ஈர்த்தது.
பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது - ஆங்கிலேய அடக்குமுறைக்கு அஞ்சிப் பிறதேசபக்தர் வாய்மூடிக்கிடக்கபோக - பெரியார். “அவர்தான் யோக்கியமான மனிதர்; அவர் மேற்கொண்டதுதான் சரியான மார்க்கம்” என்று பாராட்டி 1931 மார்ச் 29-ஆம் நாள் "குடி அரசு" இதழில் எழுதினார்.
அடுத்ததாக, விருதுநகரில் 1931-ஆகஸ்டில் மூன்றாவது மாகாண சுயமரியாதை மாநாடு ஆர்.கே. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. வே.வ. இராமசாமி வரவேற்புக் குழுத்தலைவர். இங்கு செங்கற்பட்டு, ஈரோடு மாநாடுகளின் தீர்மானங்கள் ஏற்றுக் கொள்ளப் பெற்றன. கதர் கைத்தொழில் திட்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவை அல்ல; எனவே இயந்திர சாதனங்களே தொழில் வளர்ச்சிக்கு உகந்தவை என்பதாக ஒரு தீர்மானம் இங்கே இயற்றப்பெற்றது குறிப்பிடத் தக்கதாகும்.
மார்க்ஸையும் லெனினையும் அறிந்துகொள்ளாமலே, பெரியார் தமது கூர்த்த மதியினால், 1900 ஆண்டிலேயே, தமது 21-ஆவது வயதில், தாம் தீவிரமாக மண்டி வணிகத்தில் ஈடுபட்டிருந்த காலையில் தொழிலாளர்க்குத் தொழிலில் பங்கு என்ற திட்டத்தை மேற் கொண்டிருந்தார். இலாபத்தை மூன்றாகப் பிரித்துத் தனக்கு ஒரு பாகம், தன் முதலுக்கு வட்டியாக ஒரு பாகம், தொழிலாளிகளாகிய உழைக்கும் கூட்டாளிகளுக்கு ஒரு பாகம் எனப் பிரித்துக் கொடுத்தார். அது நன்கு செயல்பட்டதால், அதுவே தொழிலாளர் பிரச்சனை தீர்க்கும் வழி என்பதைத் தனது கொள்கையாய்க் கொண்டு பிரச்சாரமும் செய்து வந்தார். இப்படியாகச் சமுதாயத்திலிருந்து, பொருளாதார சம்பந்தமாகவும் தமது கொள்கைகளை விரிவுபடுத்திய, பெரியார், அப்போது சமதர்மத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்திக் காட்டிய சோஷலிச சோவியத் ரஷ்ய நாட்டை நேரில் கண்டுவர விரும்பினார். இச்சமயத்தில் 1931- நவம்பரில், அவருக்கு உடல் நலிவுற்றது; நாகம்மையார் ஓர் அறிக்கை வாயிலாகவும் இதனை வெளிப்படுத்தி, அவருக்கு ஓய்வு தேவையென வேண்டியிருந்தார். எனினும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எஸ். இராமநாதன், ஈரோடு இராமு ஆகியோருடன் மேல்நாட்டுச் சுற்றுப் பயணத்துக்காகக் கப்பலில் 4-ஆம் வகுப்பில் வசதிக் குறைவென்றாலும் சிக்கனம் கருதி அதிலேயே புறப்பட்டுவிட்டார் பெரியார்! ஆப்பிரிக்க நாடுகளில் இருந்த வரையில் வேட்டி சட்டையுடன் இருந்தார்; பின்னர் கம்பளி யாலான முழுக்கால் சட்டை, முழுநீள ஓவர்கோட், பெரிய தலைப்பாகை இவற்றுடன், காண்பவர் கண்களைக் கவரும் கம்பீரமான தோற்றத்துடன், பெரியார் மேலைநாடுகளில் வலம் வந்தார்.
1931-ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 13-ஆம் நாள் சென்னையிலிருந்து கிளம்பிப் பாண்டிச்சேரியில் ஒரு நாள் கப்பலில் தங்கியபோது, பாரதிதாசன் வந்து பார்த்து, அன்னியச் செலாவணி நாணயங்களை மாற்றித்தந்தாராம். டிசம்பர் 24-ஆம் நாள் தென்னாப்பிரிக்காவில் இறங்கி, அங்கே அய்ந்தாறு நாள் சுற்றிப் பார்த்துச் சூயஸ் கால்வாய் வழியே பிறகு எகிப்து சென்று, அங்கு 10 நாட்கள்; அதன் பின்னர் கிரீஸ், துருக்கி நாடுகளில் சில வாரங்கள்; அதற்குப் பிறகு சோவியத் ரஷ்யாவில் 1932-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் நாள் முதல் மே 19-ஆம் நாள்வரை தங்கியிருந்தனர். சோவியத்நாட்டில் பெரியார் குழுவினர்க்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இளைஞர் சங்கங்கள், நாத்திகச் சங்கங்கள், தொழிற்சாலை நிர்வாகம் ஆகியவை பெரியாரை வரவேற்றன. சுமார் மூன்று மாத காலம், அரசு விருந்தினராக ஏற்றுக் கொள்ளப்பட்டு, மொழி பெயர்ப்பாளர்களின் துணை கொண்டு, பல்வேறு நகரங்களிலுள்ள இடங்களையும் விரிவாகச் சுற்றிப் பார்த்து விளக்கம் பெற்றார் பெரியார். மிகப்பெரிய தொழிற்சாலைகள், கல்விச் சாலைகள், நூலகங்கள், நாடக அரங்குகள், வேளாண்மைப் பண்ணைகள், பொது உணவு விடுதிகள், லெனின் மியூசியம், லெனின் உடல் பாதுகாக்கப்படும் இடம் ஆகிய எல்லா இடங்களையும் நல்ல முறையில் கண்டார். ஆங்காங்கு சிறிய பொதுக் கூட்டங்களில் பேசினார். தொழிற்சங்கங்களில் உரையாற்றி, வரவேற்பும் பெற்றார். அப்போது நடைபெற்ற மாபெரும் மேதின விழா அணிவகுப்பினையும் பார்வையிட்டார். அங்கு அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்ள வந்த ரஷ்யத் தலைவர் ஸ்டாலினுக்கு, இந்தியாவிலிருந்து வந்துள்ள நாத்திகத் தலைவர் என அறிமுகம் செய்யப்பட்டார். எட்ட நின்றே இருவரும் வணக்கம் பரிமாறிக்கொள்ள முடிந்தது. ஸ்டாலினுடன் பேட்டி ஒன்று, 1932-மே 29-ஆம் நாள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரஷ்யா போய்ச் சேர்ந்ததுமே பெரியார் தன்னையும் ராமநாதனையும் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்ள விண்ணப்பம் செய்து, உறுப்பினர் கட்டணமும் செலுத்தி, அவ்வாறே சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆனால் பெரியாருடன் சென்றிருந்த எஸ். இராமநாதனுடைய நடவடிக்கைகளில் ஏதோ சந்தேகம் கொண்ட சோவியத் அரசு, 19-ஆம் நாளே இவர்கள் ரஷ்யாவிலிருந்து புறப்பட வேண்டுமென்று தெரிவித்துவிட்டது! கைக்கெட்டிய வாய்ப்பு கை நழுவிப் போன வருத்தம் பெரியாருக்கு!
அதற்கு அப்பால், ஜூன் திங்கள் முதல் அக்டோபர் திங்கள் வரை இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். இங்கிலாந்தை நன்கு சுற்றிப் பார்த்துப் பல தொழிலாளர் தலைவர்களைச் சந்தித்து உரையாடினார். பிரபல இந்தியத் தொழிற்சங்க வாதியான சக்லத்வாலாவையும் கண்டு பேசினார். 1932-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் நாள் இங்கிலாந்தில் யார்க்ஷயரிலுள்ள மேக்ஸ்பரோ லேக்பார்க்கில் சுமார் அய்ம்பதாயிரம் தொழிலாளர் நிரம்பிய கூட்டத்தில் பெரியார் உரையாற்றினார். அப்போது இங்கிலாந்தில் தொழிற்கட்சி ஆட்சி நடத்தி வந்தது. இந்தியச் சுரங்கங்களில் 10 மணி நேரம் வேலை செய்யும் ஆண் தொழிலாளர் நாள் ஒன்றுக்கு எட்டணாவும், பெண் தொழிலாளர் அய்ந்தணாவும் கூலி பெற்று, வறுமையில் நெளிகின்றனர். இந்தியாவில் மன்னர்களும், ஜமீன்தார்களும், மிட்டா மிராசுகளும், முதலாளிகளும், வெள்ளைக்கார வியாபாரிகளும், சாமான்யக் குடிமக்களாகிய பெரும்பான்மையினரை ஆதிக்கம் செலுத்தி, அடிமைப்படுத்தி வைக்க உதவிடும் ஓர் ஆட்சி அங்கு நடைபெற, இங்குள்ள தொழிற்கட்சி எப்படி அனுமதிக்கிறது? ஆகவே, போலித்தனமான இந்தத் தொழிலாளர் நலக் கொள்கைகளை நம்பாமல், உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு, ஒற்றுமையாய்ப் போராட வேண்டும் என்று பெரியார் முழங்கினார். சிங்கத்தின் குகையிலே நுழைந்து, அதன் பிடரி மயிரைப் பிடித்து உலுக்குவது போல, இங்கிலாந்து சென்று, அந்த அரசைக் கண்டித்தது கண்டு, தொழிளாலர்களும், அவர்களின் தலைவர் லான்ஸ்பரியும் பெரிதும் பாராட்டினர். திரும்பும்போது, மார்ஸேல்ஸிலிருந்து பெரியாரை இந்தியாவுக்குக் கப்பலேற்றிவிட்டு, எஸ். இராமநாதன், சில திங்கள் கழித்து வருவதாகக் கூறி, ஜெனிவா சென்றுவிட்டார்.
அய்ரோப்பாவை விட்டுப் புறப்பட்டுப் பெரியார் அப்படியே இலங்கை வந்தடைந்தார். 1932 அக்டோபர் 17 முதல் நவம்பர் 6 வரையில் இலங்கையில் சுற்றுப் பயணம் நடத்தினார். கொழும்பு, கண்டி, நாவலம்பிட்டியா, ஹட்டன், யாழ்ப்பாணம், பருத்தித் துறை ஆகிய சுமார் 18 இடங்களில் நடந்த வரவேற்பு விழாக்களிலும் பொதுக்