தந்தை பெரியார், கருணானந்தம்/011-021
இடுக்கண் இன்னல் அடுக்கடுக்காய் வந்தாலும், துன்ப துயரங்கள் தொய்வின்றித் தொடர்ந்தாலும், அன்பு தவழும் முகமும், அருள்சுரக்கும் அகமும் கொண்ட எம் அன்னை நாகம்மையார் ஈரோட்டில் உள்ளவரை எமக்கேது குறை - எனச் சுயமரியாதை இயக்கத்தின் தோழர்களும் தோழியர்களும் தென்புடன் கட்டிவைத்த நம்பிக்கை மாளிகை; நாசமாய்ப் போயிற்றே! 1933 ஏப்ரலில் நோயாய்ப்படுத்தவர் எழுந்து நடமாடாமலே மே 11-ஆம் நாள் அனைவரையும் அவலக்கடலில் தள்ளி அபலைகளாக்கிப் போனாரே! அந்தோ !
நாற்பத்தெட்டாண்டுகள் நலிவின்றி வாழ்ந்தவர், தமக்கென்று வாழாமல், கணவர்க்கென்றே வாழ்ந்தவர்; அவருக்குத் தாம் வாழ்க்கைத் துணைவியே தவிர, அவர் தமக்கு வாழ்க்கைத் துணைவர் என்ற கருத்தினால் அவர்க்குத் தொல்லை தராமல், சாதாரணப் படிப்பறிவு பெற்றிருந்தும் இந்தியத் துணைக்கண்டமே விந்தையுடன் விழிதிருப்பி நோக்குமளவுக்கு அரசியலில் - போராட்டத்தில் - வரிசையாய் ஈடுபட்டுச், சிறைசென்று, நாடுசுற்றித் தொண்டாற்றி, விரும்தோம்பிப், பத்திரிகை நடத்தி, இயக்கத்தை முடுக்கிப்; பெரியார்க்குக் காதலியாய், மனைவியாய்த், தோழியாய்த் தொண்டராய், அன்னையாய் அமைச்சராய்த் தலைவியாய்ப் பிள்ளையாய் - ஏன் அனைத்துமாய் - நின்ற அம்மையார் மறைவு நிம்மதிக் குறைவுதானா பெரியாருக்கு?
அம்மையார் மறைவால் பெரியாருக்கு ஓர் அடிமை போனதா? ஆதரவு போனதா? இன்பம் போனதா? உணர்ச்சி போனதா? ஊக்கம் போனதா? எல்லாம் போயிற்றா? என்ன சொல்வதென்றே யார்க்கும் விளங்கவில்லை! ஏறத்தாழப் பதினொரு திங்கள், பெரியார் தம்மைப் பிரிந்து மேலை நாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்டதால், பிரிவாற்றாமை காரணமாய்த்தான் அம்மையார் உடல் நலிவுற்றது. நினைவெல்லாம் தம் கணவர் மீதும் இயக்கத்தை வளர்க்கும் பிள்ளைகள் மீதும் நிலைத்திருக்க, எந்நேரமும் நாடு, மக்கள், இயக்கம், போராட்டம் என்று - குடும்பம், மனைவி, பாசம், பற்று இவை முற்றிலும் அற்ற துறவியாய்த் தன் கணவர் அலைந்து திரியும் போக்கினை எண்ணி இரங்கி, 'நைந்துருகி, உடல் இளைத்து, அம்மையார் இறுதி எய்தினார்கள்! இந்த இழப்பால் தமக்கு லாபமா? நட்டமா? துக்கமா? மகிழ்ச்சியா? எனப் பெரியாராலேயே முடிவு கட்ட இயலவில்லை ! வருங்காலத்தில் தமது புதிய ஈரோடு வேலைத் திட்டத்தின் விளைவாய்ப் பயங்கர சூழ்நிலைகள் உருவாகலாம்; அம்மையார் அப்போது இல்லாதிருப்பதே நிம்மதி; மிச்சமிருக்கும் காலத்தில் நிரந்தர வாசம் இல்லாமல், சுற்றிச் சுழன்று வர, அம்மையார் இருந்தால் தடையாகத் தோன்றலாம், என்றே பெரியார் கருதினார்!
தமது பொதுப்பணிக்கு எதுவுமே இடையூறாக இருத்தலாகாது எனுங் கருத்துக் கொண்டவர் பெரியார். இறப்புகளையும் அவ்வாறே கருதினார்; சிறப்பெதுவுமில்லை , சாவுகளுக்கு! தமது அண்ணன் மகன் 10 வயது முதல் லண்டனில் படித்து ஊருக்கு வந்திருந்த நேரம், என்புருக்கி நோயினால் தாக்கப்பட்டு மாண்டபோது, சுற்றுப் பயணத்திலிருந்தார். தமது மாமனார் தம் வீட்டில் வந்து தங்கியிருந்த போது, நோயுற்று மாண்டநேரம், சென்னையிலிருந்தார். அண்ணனின் முதல் மனைவி - அவர்கள் பெயரும் நாகம்மாள் - இறந்த அன்றே வெளியூர் புறப்பட்டார். அதேபோல அன்னை நாகம்மையார் உடல் நிலை அபாயக் கட்டத்தில் இருந்த போதும் திருப்பத்தூர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அங்கே தமது ஈரோடு வேலைத் திட்டத்தை விளக்கி முழக்குகிறார்:- ‘அரசியல் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் மாற்றங்கள் செய்யாமல் வெறும் சமுதாய முற்போக்குக்காக எதற்குச் சுயமரியாதை இயக்கம்? அதேபோல் சாதி மதம் வர்ணாசிரமம்; வேதம் புராணம் இதிகாசம் எல்லாம் இருக்க வேண்டும்: மன்னர் மிட்டா மிராசு பிரபுக்கள் இருக்க வேண்டும்; வெள்ளைக்காரன் மட்டும் வெளியே போக வேண்டும் என்றால் என்ன நியாயம்? ஆகையால் காங்கிரசோ, தேசியமோ, காந்தியமோ, சுயராஜ்யமோ இவை யாவுமே சுயமரியாதை இயக்கத்துக்கு வைரிகள்- அழிக்கப்பட வேண்டியவை’ - என்று மக்கள் மனநிறைவு கொள்ளும் வண்ணம் ஒப்புக்கொள்ளத் தக்க விதமாகத் தமது வாதங்களை எழுப்பிக் காட்டிவிட்டுத்தான், மனைவியின் மறைவு காண ஈரோடு வந்தார் பெரியார்.
என்னதான் பகுத்தறிவுத் தந்தையாயினும், கல்நெஞ்சு கொண்டவரல்லவே; ஏழையர்பால் கசித்துருகித்தானே சமதர்மக் கொள்கை வகுத்தார்? அம்மையார் மறைந்தது குறித்துப் பெரியார் வெளியிட்ட இரங்கல் அறிக்கை; கையறு நிலைக் காவியமாய் இலக்கியத்தின் சிகரமாய் ஒளிரக் காணலாம்!
அன்று இரவே திருச்சிக்குச் சென்றார். மறுநாள் 1933 மே 12-ல் அங்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடையுத்தரவை மீறி, ஒரு கிறித்துவத் திருமணத்தை நடத்தி வைத்தார். கைதாகி, வழக்கும் தொடரப்பட்டது. பின்னர், வழக்கு திரும்பப் பெறப்பட்டது!
1932 டிசம்பர் இறுதியில் ஈரோட்டில் கூடிய சுயமரியாதைத் தொண்டர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் எதிர்கால வேலை நடைமுறைகள் பல்விதமாய் அலசி ஆராய்ந்து விவாதிக்கப்பட்டன. சுயமரியாதை இயக்கத்தின் சமுதாயக் கொள்கைகளுடன், சமதர்ம அடிப்படையிலான பொருளாதாரக் கொள்கையும், முற்போக்கான அரசியல் கொள்கையும் இணைக்கப்பட்டு, அதற்கு ஈரோடு வேலைத்திட்டம் எனப் பெயர் தரப்பட்டது. ஈ.வெ.ரா. பெரியார் தோழர் ராமசாமியாகிவிட்டார்; அதாவது பொதுவுடைமைக் கட்சியாகத் தமது இயக்கத்தை மாற்றி விட்டார்; அவர் ரஷ்யா சென்று வந்த விளைவு இது - எனப் பெரியார் மீது திரித்துக் குற்றம் சாட்டி, ஏராளமான தப்புப் பிரச்சாரம் நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. வஞ்சகர்களின் வாயை அடக்கவும், வகைபுரியாப் பாமரர்க்குத் தெளிவுறுத்திடவும் தமிழ்நாட்டில் பட்டி, தொட்டி, சிற்றூர் பேரூர், நகரம் மாநகரம் எங்கணும் கிளைகள் துவக்கப்பட்டும், பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் நடத்தப்பட்டும் பெரியாரின் ஈரோடு வேலைத் திட்டம் அருமையாக விளக்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் அல்லாது கேரளத்திலும் இவர் கொள்கைகள் விரைந்து பரவின. ஈழவர் வகுப்புத் தாழ்த்தப்பட்ட மக்களின் மாபெரும் அமைப்பான எஸ்.என். டி.பி. யோகம், பெரியாரின் தலைமையைப் பெரிதும் போற்றியது; வைக்கம் போராட்டத்திலிருந்தே அங்கும் பெரியாரின் அன்பர்கள் பலர் இருந்து வந்தனர்.
1933-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் ஈரோட்டில் நடைபெற்ற சுய மரியாதைச் சமதர்ம மாநாட்டுக்குக் கேரளத் தோழர் அய்யப்பன் தலைமை தாங்கினார். டாக்டர் வரதராஜலு நாயுடு தலைமையில் இம்மாநாட்டில் லெனின், நாகம்மையார் படங்களைத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. திறந்து வைத்தார். 1926-ஆம் ஆண்டு கோவையில் சந்தித்ததற்குப் பின்பு. இப்போதுதான் இந்த முப்பெருந் தலைவர்களும் இணைந்து கூடினர். இந்தக் கூட்டினைக் கண்டு நாட்டினரில் பிற்போக்குவாதிகள் மனங்கலங்கினர்: அரசு அதிசயத்துடன் அகலத்திறந்த விழிகளும் செவிகளுமாய், என்ன நடக்குமோ என எதிர்பார்த்துக் கூர்ந்து கவனித்து வந்தது!
கடன்களைத் திருப்பித் தராததற்காகச் சிறை பிடிக்கக் கூடாது என்பது பெரியாரின் கொள்கையல்லவா? இதை வலியுறுத்தி நிறையப் பேசியும் எழுதியும் வந்தார்; பல மாநாடுகளில் தீர்மானங்களும் இயற்றச் செய்தார். இதற்கு அவரே சோதனைக்கு ஆட்பட வேண்டிய சம்பவம் ஒன்று நடந்தது. “திராவிடன்” பத்திரிகை சம்பந்தமாக இவர்மீது ஒரு கடன் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. உண்மையில் அந்தக் கடன் இவருக்குரியதல்ல. எனினும் நியாயத்தைவிடச் சொல்லுக்கு மதிப்புத் தருபவராதலால், பெரியார் 1933 ஜூன் 2-ஆம் நாள் இதற்காகச் சிறைத்தண்டனை பெற்று, ஏற்றுக் கொண்டார். எனினும் சிறையிலிருந்து விடுதலை ஆன பின்னர் அந்தக் கடனைத் தாமே கொடுத்துத் தீர்த்துவிட்டார் பெரியார்.
1933 அக்டோபர் 29-ஆம் நாளில் வெளியான “குடி அரசு” இதழின் தலையங்கம் இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழிய வேண்டும்?' என்பது. இதில் தீவிர சமதர்ம வாடை வீசுவதாக அரசு கருதவே, இதனை எழுதிய தோழர் ஈ. வெ. ராமசாமிப் பெரியாரையும், “குடி அரசு” இதழின் வெளியீட்டாளரும், பெரியாரின் தங்கையுமான தோழியர் எஸ்.ஆர். கண்ணம்மாளையும் கைது செய்து, அவர்கள் மீது 1934 சனவரி 12-ல் ராஜத்துவேஷ வழக்குப் போடப்பட்டது. கோவை நீதிமன்றத்தில் வழக்கம்போல் பெரியார் எதிர்வழக்காடவில்லை; அன்றே வாக்குமூலம் ஒன்று வழங்கினார்:
“இ.பி.கோ. 124.A செஷன்படித் தொடரப்பட்டுள்ள பொதுவுடைமைப் பிரச்சாரத்திற்காகவும், இராஜ நிந்தனை என்பதற்காகவும் உள்ள வழக்கு கோவையில் 12-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டபோது தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் கோவை ஜில்லாக் கலக்டர் ஜி. டபிள்யூ. வெல்ஸ் அய்.சி.எஸ். அவர்கள் முன் தாக்கல் செய்த ஸ்டேட்மெண்ட்.
என்பேரில் இப்போது கொண்டுவரப்பட்டிருக்கும் வழக்குக்கு ஆதாரமே கிடையாது. வழக்குக்கு அஸ்திவாரமான 29-10-1933 “குடி அரசு" தலையங்கத்தை இப்போது பலதரம் படித்துப் பார்த்தேன். அதை நான் எழுதினேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதில் எழுதப் பட்டிருக்கும் விஷயங்களுக்காவது, வாக்கியங்களுக்காவது இராஜத் துவேஷக் குற்றம் சாட்டப்படுமானால் இன்றைய அரசாங்கமுறை முதலியவைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்து குறைகளை எடுத்துச் சொல்லவோ, அவற்றால் மக்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களை விலக்கப் பரிகாரம் தேட ஏற்பாடு செய்யவோ யாருக்கும் சுதந்திரம் கிடையாது என்றுதான் முடிவு செய்யப்பட்டதாகும்.
என்ன காரணத்தைக் கொண்டு என்மேல் இந்தப் பிராது தொடரப்பட்டிருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால், என்னுடைய சமதர்மப் பிரச்சாரத்தை நிறுத்திவிடச் செய்வதற்காக முதலாளி வர்க்கமோ அல்லது மத சம்பிரதாயக்காரர்களோ செய்த சூழ்ச்சியாக இருக்க வேண்டுமென்ற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கிறது. வியாசத்தின் விஷயத்திலாவது பதங்களிலாவது நோக்கத்திலாவது சாட்டப்பட்ட குற்றத்தின் அமைப்பே கிடையாது. முக்கியமாய் அதில் சொல்லப்பட்ட விஷயம் எல்லாம் கல்வி இலாக்காவின் சம்பளங்கள் அதிகமென்றும், பிள்ளைகளுக்குக் கல்விச் செலவு அதிகமென்றும், அதற்கேற்ற பயன் விளைவதில்லை என்றும் ஏழைகளுக்குக் கல்விபரவ சௌகரியம் இல்லை என்றும், இப்படிப்பட்ட முறையால் லாபம் பெறும் பணக்காரர்களும் அதிகார வர்க்கத்தாரும், உத்தியோகஸ்தர்களும் சொல்லுவதைக் கேட்டு ஏமாந்து போகாமல் வரப்போகும் சீர்திருத்தப்பட்ட எலக்dஷன்களில் ஜாக்கிரதையாய் நடந்து கொள்ள வேண்டுமென்று ஏழைப் பொது ஜனங்களுக்கு எடுத்துக் காட்டியதே ஆகும்.
நான் 7, 8 வருஷகாலமாய் சுயமரியாதை இயக்க சமதர்மப் பிரச்சாரம் செய்து வருகிறேன். சமூக வாழ்விலும் பொருளாதாரத்திலும் மக்கள் யாவரும் சமத்துவமாய் வாழ வேண்டுமென்பது அப்பிரச்சாரத்தின் முக்கியத்துவமாகும். நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை நாட்டு மக்கள் யாவரும் சமமாய் அனுபவிக்க வேண்டும் என்பதும் அவ்வுற்பத்திக்காகச் செய்யப்படவேண்டிய தொழில்களில் நாட்டு மக்கள் எல்லாரும் சக்திக்குத் தக்கபடி பாடுபடவேண்டும் என்பதும் அத் தத்துவத்தின் கருத்தாகும்.
அவ்வியக்க இலட்சியத்திலோ வேலைத் திட்டத்திலோ பிரச்சாரத்திலோ அதற்காக நடைபெறும் “குடி அரசு”ப் பத்திரிகையிலோ பலாத்காரம், துவேஷம், இம்சை இடம் பெற்றிருக்கவில்லை, எந்த விதத்திலாவது அவை நமது நாட்டில் இடம்பெறுவது என்பதும் எனக்கு இஷ்டமான காரியம் அன்று; எனது பிரசங்கத்தைக் கேட்டாலே தெரியும்.
அரசாங்கமானது முதலாளித்தன்மை கொண்டதாயிருப்பதால் அது இத்தகைய சமதர்மப் பிரச்சாரம் செய்யும் என்னை எப்படியாவது அடக்க வேண்டும் என்று முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதில் அதிசயமில்லை. தற்கால ஆட்சியில் பங்குபெற்று போகபோக்கியம் பதவி அதிகாரம் அடைந்துவரும் பணக்காரர்களும் மதம், சாதி, படிப்பு இவற்றால் முதலாளிகளைப் போல வாழ்க்கை நடத்துகின்றவர்களும் இம்முயற்சிக்கு அனுகூலமாயிருப்பதும் அதிசயமல்ல.
ஏதாவது ஒரு கொள்கை பரவ வேண்டுமானால் இக்கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் இதற்கு இடையூறு செய்பவர்களால் அடக்குமுறைக்கு ஆளாக வேண்டியதும் அவசியமேயாகும். இந்தப் பிரச்சாரத்தைத் தடுக்க வேண்டுமென்ற கருத்தில் இவர்கள் வழக்கைக் கொண்டு வந்திருப்பதால் எப்படியாவது எனது வியாசத்தில் துவேஷம் வெறுப்பு பலாத்காரம் இருப்பதாகக் கற்பனை செய்து தீரவேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள். அந்தப்படிச் செய்யப்படும் கற்பனைகளால் நான் தண்டிக்கப்பட்டாலும் பொதுவாக என்மீது நம்பிக்கையும் நல்லெண்ணமும் உடையவர்களும், சிறப்பாக எனது கூட்டுப் பணித் தோழர்களும் தப்பான அபிப்பிராயம் கொள்ளக் கூடுமாதலால் அப்படிப்பட்ட கற்பனைகளை மறுத்து, உண்மையை விளக்கிவிட வேண்டும் என்றே இந்த ஸ்டேட்மெண்ட்டைக் கொடுக்கக் கடமைப்பட்டவனாவேன்.
இதனால் பொது ஜனங்களுடைய கவனிப்பு இன்னும் அதிகமாவதோடு அவர்களது ஆதரவும் பெற நேர்ந்து கிளர்ச்சிக்குப் பலம் ஏற்படக்கூடும். ஆதலால் என் மீது சுமத்தப்பட்ட இவ்வழக்கில் ஒரு ஸ்டேட்மெண்ட்டை மாத்திரம் கொடுத்துவிட்டு, எதிர் வழக்காடாமல், இப்போது கிடைக்கப் போகும் தண்டனையை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்.
இந்நிலையில் சர்க்கார் என்னைத் தண்டித்தாலும் சரி. அல்லது இந்தப் பிராதுக்குப் போதிய ஆதாரமில்லையென்று நியாயத்தையும் சட்டத்தையும் இலட்சியம் செய்து, வழக்கைத் தள்ளிவிட்டாலும் சரி, இப்படிப்பட்ட அடக்குமுறையை வரவேற்குமாறு எனது தோழர்களுக்கு வழிகாட்ட எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றேன்.”
இந்த வழக்கையொட்டிப் பெரியார் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பக்கத்து அறையில் இராஜாஜி இருந்தார். ஜெயிலைப் பற்றிப் பெரியாரின் பொதுவான கருத்து அவர் வாய் மொழியாகவே:- “ஜெயில் என்பது ஒரு பூச்சாண்டி. ஜெயிலுக்குப் போன பலர் தங்கள் தரத்துக்கு மேல் வாழ்வும் சுகமும் அனுபவித்தவர்களாகவே இருப்பார்கள். நான் ஜெயிலுக்குப் போன சுமார் 19 முறைகளில் 4 தரம் A. B கிளாஸ் ஏற்படாத C கிளாஸ் கைதியாக மண்சட்டியிலே கஞ்சியும் சோற்று மொத்தையும் வாங்கிக் கல்லையும் புழுவையும் பொறுக்கி எறிந்து விட்டுச் சாப்பிட்டவன். இன்று காங்கிரசில் அப்படிப்பட்டவர் ஒருவர்கூட இல்லை (18-8-1961).
இராஜாஜி அவர்களின் பக்கத்து அறையில், நான் கம்யூனிஸ்ட் பிரச்சாரம் செய்ததற்காக சுய மரியாதைக் கைதியாக இருந்தபோது அங்கிருந்த காங்கிரஸ் தோழர்கள் தாங்கள் உள்ளே இருக்கிறோமே என்று கருதி மனக் குறைப்பட்டிருப்பார்களே ஒழிய, மற்றபடி வீடு போன்ற சகல வசதிகளுடன், ஒரு நாளைக்குப் பொங்கல், ஒரு நாளைக்குத் தத்தியோதனம், அக்காரவடிசில் (சர்க்கரைப் பொங்கல்) பாயசம், பலகாரம் முதலிய நல்ல உணவுடன்தான் இருந்தார்கள். எனக்குக்கூட அதில் நல்ல பங்கு கிடைத்தது. ஜெயிலுக்குப் போனதற்காகவே காங்கிரசில் ஒருவர்கூடச் சாகவில்லை. என் இயக்கத்தில் 10, 15 பேர் செத்தார்கள்! ஆகையால் ஜெயிலுக்குப் போனதே யோக்கியதாம்சம் என்றால் அது மூன்றாம் தர யோக்கியதாம்சம் என்று மறுபடியும் சொல்கிறேன். ஜெயிலுக்குப் போகாத பார்ப்பனர் - காங்கிரசையும் காந்தியாரையும் ஆபாசமாய் வைத பார்ப்பனர்கள் - எத்தனை பேர் காங்கிரஸ் ஆட்சியில் பதவி வகிக்கிறார்கள்!
இந்த வழக்கை ஒட்டிச் சிறையிலிருந்து வந்த காலத்தில், கோவைச் சிறையில் முன்பே அடைக்கப்பட்டிருந்த இராஜாஜியைப் பெரியார் சந்திக்க நேர்ந்தது. எந்த வகையிலேனும் பெரியாரை மீண்டும் காங்கிரசுக்குள் வளைத்துப் போடவேண்டும் என்ற பேரவா இராசகோபாலாச்சாரியாருக்கு! தந்திரமாகவும், சாமர்த்தியமாகவும் பேசத் துவங்கினார். பொதுவான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டது. முதலாவதாகக், கடவுள், மத எதிர்ப்புப் பிரச்சாரத்தைப் பொது மேடைகளில் கலவாமல் தனிப்பட்ட கொள்கையாக அவரவர் கடைப்பிடிப்பது; இரண்டாவது, அரசுப் பதவி, அலுவல்களில் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவ முறை அமல் செய்யப்பட வேண்டும் என்பது. காந்தியாரிடம் கலந்து பேசி வருவதாகக் கூறிய ராஜாஜி, பின்னர், காந்தியார் வகுப்பு வாரி உரிமை விவகாரத்தை ஒப்புக் கொள்ளவில்லை என்பதாகவும், ஆனால் பெரியார் காங்கிரசுக்குத் திரும்பிட வேண்டும் என விரும்பியதாகவும் தெரிவித்தார். உண்மையில் ஆர்.கே. சண்முகம் இல்லத்தில் காந்தியடிகள் தங்கியிருந்தபோது, அங்கே சந்தித்த இராஜாஜிதான் வஞ்சகமாகக், காந்தியடிகள் இத்திட்டத்தை ஏற்காதவாறு செய்தார், என்று ஒரு செய்தி பரவியது. நெருப்பில்லாமல் புகையாதல்லவா?
காங்கிரஸ் கட்சி பெரியாரின் ஈரோடு வேலைத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்பது தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. அதனால் தமது திட்டத்தைப் பெரியார் நீதிக்கட்சிக்கு அனுப்பி வைத்தார். உழுவோர் கடன் தொல்லையால் அவதிப்படாமல், லேவாதேவிக்காரரிடமிருந்து காப்பாற்றப்படக் கூட்டுறவு வங்கிகள் ஏற்படுத்தல்; சொத்துகளை பினாமி பெயரில் எழுதுவோர் வழக்காட முடியாமல் சட்டம் இயற்றுதல்; உழவர்க்கும் வணிகர்க்கும் இடையே தரகர் சுரண்டாவண்ணம் அரசு சார்பில் அமைப்புகள் உண்டாக்குதல்; இன்ஷ்யூரன்ஸ் தொழிலை அரசே மேற்கொள்ளல்; தொழிலாளர் மற்றும் பொதுமக்களின் வருவாய் பெருகிட வகைசெய்தல்; எல்லா மக்களுக்கும் கட்டாயமாக ஆரம்பக் கல்வி தருதல்; மதுவை ஒழித்தல்; தீண்டாமை மற்றும் பிறவியால் உயர்வது, சமூகத்தில் மூடநம்பிக்கை பெருகுவது ஆகியவற்றைச் சட்ட மூலமாக ஒழித்தல்; வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை ஏற்படுத்தல்; நிலவரி, நிலத்தின் அளவுக்குத் தக்கவாறு, படிப்படியே உயர்த்தப்படுதல்; உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் வழங்கி, அரசு மேற்பார்வையில் நடத்துதல்; அரசு நிர்வாகச் செலவைக் குறைத்தல் - ஆகியவை ஈரோடு வேலைத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள். நாற்பத்தைந்து ஆண்டுகட்கு முன் இவை எவ்வளவு புரட்சிகரமானவை? இப்போது இவற்றில் யாவுமே நடைமுறைக்கு வந்துவிட்டன, பெரியாரின் விருப்பத்திற்கேற்ப.
1934 செப்டம்பர் 29, 30-ல் சென்னையில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில், பெரியாரின் ஈரோடு வேலைத் திட்டம் பரிசீலனைக்கு வந்தது. நீதிக் கட்சியினைத் தோற்றுவித்த டாக்டர் டி.எம். நாயர் 1919-ஆம் ஆண்டிலும், சர் பி. தியாகராயர் 1925-ஆம் ஆண்டிலும் மறைந்தார்கள். இப்போது கட்சியின் தலைமைப் பீடத்தில் பொப்பிலி அரசர் வீற்றிருந்தார். 1932 முதல் 1937 வரை இவர் சென்னை மாகாண முதலமைச்சராகப் பொறுப்பிலிருந்தார். பெரியாரிடத்தில் அளவற்ற மதிப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தவர் இவர்.
இதை நன்கு அறிந்து வைத்திருந்ததால்தான் பெரியார். தம்மை ஈரோட்டில் வந்து சந்தித்து உரையாடி மகிழ்ந்த ஜெயப்பிரகாச நாராயணன் எவ்வளவோ வேண்டியும், காங்கிரசில் மீண்டும் சேர மறுத்து விட்டார்!
ஒரு குழுவினை அமைத்து, ஈரோடு வேலை திட்டத்தைப்பற்றி ஆராயுமாறு பொப்பிலி அரசர் பணித்தார். திட்டத்தை எப்படியும் ஒப்புக் கொள்வதாகப் பெரியாரிடமும் வாக்களித்தார். 1934-ல் டெல்லியிலுள்ள இந்திய சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சியை ஆதரிக்குமாறு பெரியாரிடம் வேண்டினார். பெரியாரும் ஏற்றுக்கொண்டு, தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கினார்.
1920- ல் சுயராஜ்ய நிதி 1 கோடி ரூபாய், 1926-27-ல் கதர் நிதி 30 லட்சம் ரூபாய், 1934-ல் அரிசனநிதி 30 லட்சம் ரூபாய் வசூலித்துப் பார்ப்பன ஆதிக்கத்துக்கும் தேர்தலுக்கும் காந்தியார் செலவிட்டதாகப் பெரியார் இந்த நேரத்தில் குற்றம் சுமத்திப் பேசி வந்தார்.
பெரியார் முதன் முதலில் 1934-ல் நீதிக் கட்சியைத் தேர்தலில் ஆதரித்து வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்தார். அக்டோபர் 12-ம் நாள் கோயமுத்தூர் டவுன்ஹாலில் சொற்பொழிவாற்றினார். மேல்நாட்டுப் பாணியில் கூட்ட இறுதியில் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். பெரியாரின் வாதத்திறனும் கூர்ந்த மதியும் இங்கு வெளிப்படக் காணலாம்:
கேள்வி: ஜஸ்டிஸ் கட்சி உத்தியோக வேட்டைக் கட்சியா யிற்றே; அதை நீங்கள் ஆதரிக்கலாமா?
பதில்: ஆம்; ஜஸ்டிஸ் கட்சி உத்தியோக வேட்டைக் கட்சிதான். ஆனால் காங்கிரஸ்காரர்கள் 30, 40 வருட காலமாய் ஆடி வந்த உத்தியோக வேட்டையைத்தான், ஐஸ்டிஸ் கட்சிக்காரர்கள் வேட்டையாடிப் பிடிக்கிறார்களே தவிர வேறில்லை, ஆனால், காங்கிரஸ் காரியதரிசிகள், காங்கிரஸ் பிரமுகர்கள், தேசாபிமானிகள் ஆகிய சர் சி.பி. இராமசாமி அய்யர், கே. சீனிவாச அய்யங்கார், வி. கிருஷ்ணசாமி அய்யர், சர் பி. எஸ். சிவசாமி அய்யர், மகாகனம் வி.எஸ். சீனிவாச சாஸ்திரிகள் முதலியவர்கள் ஆடிய வேட்டைகளைத்தான் ஆடுகிறார்களே ஒழிய - அவர்கள் வாங்கிய சம்பளத்தைத்தான் வாங்குகிறார்களே ஒழியப் - புதிய வேட்டை ஒன்றுமில்லை; அதிகச் சம்பளமும் இல்லை .
காங்கிரஸ், பார்ப்பனர்களுக்கே உத்தியோகம், படிப்பு முதலியவை இருக்கும்படிப் பார்த்து வந்தது: ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனருக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் இருக்கும்படிப் பார்த்து வருகிறது! எல்லா உத்தியோகங்களுக்கும், எல்லாப் பதவிகளுக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் லாயக்கும் உரிமையும் உண்டு என்பதைச் செய்து காட்டி, மெய்ப்பித்து வருகின்றது!
கேள்வி: உத்தியோகந்தான் பெரிதா?
பதில்: ஆம்; இதுவரை தேசாபிமானிகள், காங்கிரஸ்காரர்கள், தேசிய வீரர்கள் என்பவர்கள் பெரிதும் உத்தியோகத்தை இலட்சியமாகக் கொண்டுதான் உழைத்து வந்திருக்கிறார்கள். இப்போது பார்ப்பனரல்லாதார் அந்தக் கொள்கையைக் கொண்டவுடன், பார்ப்பனர்கள் அதைத் தேசத்துரோகமென்று சொல்ல வந்து விட்டார்கள்!
ஒருவன் பாடுபட்டும் பட்டினியாய்க் கிடப்பதும், ஒருவன் பாடுபடாமல் வயிறுபுடைக்கத் தின்று புரளுவதும், ஒருவன் பல வேலைகளைக் கைப்பற்றித் தனது தேவைக்கு மேல் பயனடைந்து பாழாக்க, ஒருவன் செய்வதற்குக்கூட வேலையில்லாமல் திண்டாடித் தெருவில்திரிய - இவைகளுக்கு வகுப்பு ஆதிக்கமும், வகுப்பு வித்தியாசமும் காரணமாயிருப்பதென்றால், இவற்றை எப்படிச் சகித்துக்கொண்டு, வகுப்பைப் பற்றியே கவலையில்லாத ஒரு தேசாபிமானத்தை ஆதரிக்க முடியுமென்று கேட்கிறேன்!
ஜஸ்டிஸ் கட்சியை நான் ஆதரிப்பதைக் கண்டு நீங்கள் வயிற்றெரிச்சல் படுவதில் பயனொன்றுமில்லை. அது தைரியமாய் வகுப்பு நியாயத்தையும், வகுப்பு உத்தியோகங்களையும் நிலைநாட்டி; உயர்வு தாழ்வுகளை ஒழிக்கச் சட்டம் செய்வதையும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அமுல் நடத்துவதையும் கொள்கையாகக் கொண்டு, வேலை செய்து வருகின்றது.
ஜஸ்டிஸ் கட்சியின் யோக்கியதையும் காங்கிரசின் யோக்கியதையும் நாணயமாய் வெளியாக வேண்டுமானால், கம்பளிபோட்டு எல்லோரும் உட்கார்ந்து, ஒரு பொது நியாயாதிபதியை வைத்து. இருவரும் பேசுவோம்! ஜஸ்டிஸ் கட்சியின் அக்கிரமங்களை நாணயத்தவறுதல்களை நீங்கள் சொல்லுங்கள். காங்கிரஸ் - பார்ப்பனர் அக்கிரமங்களை, மோசங்களை நாணயத் தவறுதல்களை நானும் சொல்கிறேன், யார் சொல்வது சரி என்று முடிவு செய்யட்டும்! இந்த நாட்டுப் பார்ப்பனர்களுடையவும், பார்ப்பனியத்தினுடையவும், காங்கிரசினுடையவும், அரசியலினுடையவும், தேசாபிமானத் தினுடையவும் 30, 40 வருஷத்திய வண்டவாளமும், கொடிவழிப் பட்டியும் என்னிடமிருக்கிறதே ஒழிய, நான் வெறும் ஆள் என்று மாத்திரம் கருதிக் கூப்பாடு போட்டு, மிரட்டி ஓட்டி விடலாமென்று நினனத்து ஏமாந்து போகாதீர்கள்!
நான் மொட்டைமரம்; என்னை மிரட்டுவதற்கு உங்களிடம் சரக்கு இடையாது! உத்தயோகமோ, பணமோ, வயிற்றுச் சோற்றுக்கு வழியோ, ஒரு கவுரவமோ, பெருமையோ எதிர்பார்த்து நான் பொதுச்சேவையில் இறங்கவில்லை! நான் 6, 7 முறை ஜெயில் பார்த்தாகி விட்டது; சிவில், கிரிமினல் இரண்டும் பார்த்தாகிவிட்டது; பார்ப்பனர்கள் தொல்லைகளையும், அவர்களால் கூடிய மட்டிலும் செய்து பார்த்தாய் விட்டதை, அனுபலித்துமாய் விட்டது! காடு வா வா என்கிறது; வீடு போ போ என்கிறது! (இதற்கப்புறம் 40 ஆண்டுகள் பெரியார் வாழ்ந்திருக்கிறாரே!) நான் செத்தால் எனக்காக அழுபவர்கள் கூட யாருமில்லை! என்னால் காப்பாற்றப்பட வேண்டியவர்களும் எவருமில்லை! நான் ஒற்றை ஆள்! நின்ற நாளைக்கு நெடுஞ்சுவர்; விழுந்தால் குட்டிச்சுவர்! முழுகிப்போவது ஒன்றுமில்லை; எலெக்ஷன் முடிந்த எட்டாம் நாள் நான் அரசாங்க விருந்தாளியாய்ப் போகப் போகிறேன்!
கேள்வி: அப்படியானால் நீங்கள் ஏன் காங்கிரசில் சேரக்கூடாது?
பதில்: சேருவதற்குச் சமயம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன். இந்த பம்பாய் காங்கிரசில் தோழர் காந்தியவர்கள் விலகிப் போய் விடுவதாகச் சொல்லுகிறாராம். அப்படி அவர் விலகி விடுவாரானாலும், எனது திட்டங்களை ஜஸ்டிஸ் கட்சி ஒப்புக் கொள்ளவில்லையானாலும், நான் காங்கிரசில் சேர்ந்து, எனது திட்டத்தை நடத்த, முயற்சி செய்ய உத்தேசித்திருக்கிறேன்.
இன்று இரவு 8 மணிக்கு, இந்தக் கூட்டத்தை முடித்துக்கொண்டு, ஒரு விருந்துக்கு வருவதாக ஒப்புக்கொண்டு இருக்கிறேன். மணி 8.30 ஆகிவிட்டது. இனியும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம். இன்னும் 15 நிமிஷம் இங்கிருக்க ஆட்சேபனை இல்லை!-
பெரியார் சிறிது நேரம் நின்று கொண்டு, கேள்விகளை எதிர்பார்த்தார். யாரும் கேட்க முன்வராததால் “இத்துடன் கூட்டத்தை முடித்து விடுகிறேன்” என்றார்!
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் நேரடியாகப் போட்டியிட்டது முதல்முறையாக! தேர்தலில் போட்டியிட்ட ஆர்.கே. சண்முகம், ஏ. இராமசாமி போன்ற பிரமுகர்கள், நீதிக் கட்சிக்குத் தோல்வியையே பெற்றுத் தந்தனர். காங்கிரஸ் கணிசமான வெற்றிகள் பெற்றது.
இந்தத் தோல்வியால் துவண்டுபோன நீதிக் கட்சியினர்க்கும், சுயமரியாதை இயக்கத் தோழர்களுக்கும், புத்துணர்ச்சியும் உத்வேகமும் புகுத்தித், தென்பினைப் பாய்ச்சி அன்பினைச் சொரிந்த பெரியார், எதிர்காலத்தில் தமது திட்டங்களைச் செயல்படுத்திட நீதிக்கட்சியையே கருவியாகப் பயன்படுத்தப் போவதாகவும், அதுதான் வெற்றியளிக்குமென்றும் திடமாக நம்பிக்கை தெரிவித்து வந்தார். உண்மைதானே?
ஈரோட்டில் குடியரசுப் பதிப்பகம் நிறைய நூல்களை வெளியிட்டு வந்தது. சாத்தான்குளம் இராகவன் வந்து பெரியாருக்கு உதவியாயிருந்தார்; மேலும் புத்தகங்கள் வெளியாக்கப் பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகமும் நிறுவப்பட்டிருந்தது. இதன் வாயிலாகவும் எண்ணற்ற, பயனுள்ள நூல்கள் பதிப்பிக்கப் பெற்றன. மிகக் குறைவான, அடக்க விலையில், பெரியார் நூல்களை வெளியிட்டு வந்தார். இந்த இரண்டு நூல் வெளியீட்டு அமைப்புகளின் சார்பிலும் பெரியார் எழுதிய கர்ப்ப ஆட்சி, புராண ஆபாசம், பார்ப்பனக் கொடுமை, பெரியாரின் பல உபந்யாசங்கள் (சொற்பொழிவுகள்), சோஷலிசம், சோதிடப்புரட்டு, பொதுவுடைமைத் தத்துவம், பெண்ணடிமை, பிரகிருதிவாதம், மதம் என்றால் என்ன; மற்றவர் எழுதிய ஞானசூரியன், இராமாயணப் பாத்திரங்கள், பாரத ஆபாசம் என்பன போன்ற தலைப்புகளில் வெளியான கணக்கில்லாப் புத்தகங்கள் நன்றாக விற்பனை ஆயின. பெரியார் சுற்றுப்பயணம் செல்கின்ற நேரங்களில் பிரம்பு, கைப்பெட்டி, படுக்கை (ஹோல்டால்) இவற்றோடு இரண்டு மூன்று சிப்பங்கள் இப்புத்தகங்களையும் சுமந்து ரயிலுக்குச் செல்வார். ஆங்காங்கு கூட்டங்களிலும், மாநாடுகளிலும் உரையாற்றுகையில், இடையிடையே இந்தப்புத்தகங்களின் சிறப்புகளையும் கருத்துகளையும் பற்றி விவரித்து, விலை சகாயத்தையும் எடுத்துக்காட்டி விளம்பரம் செய்து, நூல்களை விற்பனை செய்வார். இறுதி நாள்வரை இந்த வழக்கம் பெரியாரிடம் தொடர்ந்தது!
இந்தப் பதிப்பகங்கள் இரண்டும் அரசாங்கத்தால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தன. பல புத்தகங்களை அரசு பறிமுதல் செய்தது. சிலவற்றைத் தடைசெய்தது. “குடி அரசு” இதழ்மீது 1933-ல் வழக்குத் தொடுத்துப், பெரியாருக்கு 9 மாதம் சிறைத்தண்டனை; 300 ரூபாய் அபராதம்; செலுத்தத் தவறினால் 1 மாத சிறை. தங்கை கண்ணம்மாளுக்கு 6 மாத சிறைத் தண்டனை; 100 ரூபாய் அபராம்; செலுத்தத் தவறினால் 1 மாத சிறை; அதே போன்று 1935-ல் பத்திரிகைக்கு மீண்டும் ஜாமீன் கேட்கப்பட்டது. நான் ஏன் நாஸ்திகன் ஆனேன் என்ற புத்தகமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது புரட்சி வீரர் பகத்சிங் அவர்களால் தமது தந்தைக்குக் கடிதமாக எழுதப்பட்டுத், தோழர் ப. ஜீவானந்தம் தமிழில் மொழிபெயர்த்தது. இதனை எழுதியதற்காக ஜீவாவும், உண்மை விளக்கம் அச்சகத்தில் பதிப்பித்ததற்காக ஈ. வெ. கிருஷ்ணசாமியும் கைது செய்யப்பட்டனர்.
ஒரு காலகட்டத்தில் பெரியார், அரசுக்குத் தம்மீதும் இயக்கத்தின் மீதும் தப்பபிப்பிராயம் ஏற்பட்டதை அறிந்து, அதனைப் போக்க, ஒரு ராஜி பேச நேரிட்டது. இது கேவலமல்ல என்ற எண்ணந்தான் பெரியாருக்கு. அதற்கு ஆதரவாகப் பெரியார் என்ன எழுதினார்:- “உண்மை விளக்கம் பிரஸ் பதிப்பாசிரியரான தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் மீதும், தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் மீதும், காலஞ்சென்ற பகத்சிங்கால் எழுதப்பட்ட ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ என்ற புத்தகத்தை - முறையே பிரசுரித்ததற்காகவும், மொழி பெயர்த்ததற்காகவும், இந்தியன் பினல் கோட் 122-A செக்ஷன்படி, இராஜத்துவேஷக் குற்றம் சாட்டிக், கைதியாக்கிச் சிறையில் வைத்து. வழக்குத் தொடர்ந்திருந்தது வாசகர்கள் அறிந்திருந்ததாகும்! அவ்வழக்கு, மேற்கண்ட இருதோழர்களாலும் இராஜத்துவேஷத்தை உண்டாக்கவோ, அதைப் பிரச்சாரம் செய்யவோ எண்ணங் கொண்டு அப்புத்தகம் பிரசுரிக்கப்படவில்லை என்று அரசாங்கத்திற்குத் தெரிவித்து, இராஜத்துவேஷம் என்று கருதத் தகுந்த காரியங்கள் பதிப்பிக்கப்பட்டுவிட்டதற்காக மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதன்பேரில் - அரசாங்கத்தார் வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டு ஈ.வெ.கி., ப.ஜீ., ஆகியவர்களை விடுதலை செய்து விட்டார்கள்.
இந்தப்படி இந்த இரண்டு தோழர்களும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுதலை அடைந்தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்லர் என்பதையும், பெரும்பான்மையான அளவுக்கு நானே ஜவாப்தாரி என்பதையும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்த மன்னிப்பு எழுதிக் கொடுக்கப்பட்டதும், அதைச் சர்க்கார் ஏற்றுக்கொண்டதும், ஆகிய இரண்டு காரியங்களும் மிகுதியும் இந்தக் கேசையே பொறுத்தது மாத்திரமல்ல என்பது இதில் முக்கிய விஷயமாகும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சுயமரியாதை இயக்கத்தைப் பற்றிச் சர்க்கார் மனத்தில் எப்படியோ தப்பபிப்பிராயம் ஏற்பட்டு, எப்படியாவது அடக்கி அழித்துவிடவேண்டும் என்று தீர்மானித்து விட்டார்கள் என்பதாக, நான் கொஞ்ச நாளைக்கு முன்பே தெரிந்து கொண்டேன்!
நம் சுயமரியாதை இயக்கம் சமூகத் துறையிலுள்ள குறைகளை நிவர்த்திப்பதற்கென்றே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்ததும், சர்க்கார் அதிகாரிகள் முதல் அநேக செல்வவான்களும் நமது இயக்கத்தில் கலந்து வேலைசெய்து வந்ததும் எவரும் அறியாததல்ல! ஆனால், சிறிது காலம் சென்றபின், மக்களுக்குள்ள சமுதாயக் கொடுமைகள் தீரவேண்டியது எவ்வளவு அவசியமோ, அதுபோலவே, மக்களுக்குள்ள பொருளாதாரக் கொடுமையும் தீரவேண்டியது மிகவும் அவசியமென்று கருதியதால், பொருளாதார சம்பந்தமாக நாம் சிறிது பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தோம். என்றாலும், அரசாங்கத்தார் தப்பபிப்பிராயத்தைக் கொண்டு, இயக்கத்தை அடக்க அடக்குமுறைப் பிரயோகம் ஆரம்பித்துவிட்டார்கள் என்று உணர்கிறேன். எனக்கு ரஷ்யாவிலிருந்து பணம் வருவதாகவும், நான் ரஷ்ய ஒற்றனென்றும் சந்தேகப்பட்டதால், எனக்கு ரஷ்யாவோடு எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அதிகாரிகளிடம் விளக்க வேண்டி வந்தது.
அதனால் ஓரளவுக்கு சர்க்காருடன் ராஜி ஏற்படுத்திகொள்ளலாம் என்கின்ற ஆசையின்மீதே, பொருளாதார விஷயத்தில் சமதர்மக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதில் சர்க்காருக்கு ஆட்சேபனை இல்லை என்றும், சாதி, மத சம்பந்தமான விஷயங்களில் வேறு சாதிக்காரர்கள் மனம் புண்படும்படியோ, அவமானம் ஏற்படும்படியோ என்று இல்லாமல், சாதி மதக் கண்டனங்கள் செய்து கொள்ளலாம் என்றும் முடிவுக்கு வந்தோம். சர்க்காரோடு இந்த மாதிரியான ஒரு சமாதான முடிவுக்கு வராதபட்சம், சர்க்காருக்கும் நமக்கும் வீண் தொந்தரவும், மனக்கசப்பும் ஏற்பட்டுத் தீரும் என்கின்ற நிலையில், மற்ற ஆதாரங்களும், முயற்சிகளும், நிலைமைகளும் இருந்ததால், நான் இந்தச் சமாதானத்துக்கு வரவேண்டியதாயிற்று. ஆகவே, இதன் பலன் என்னவானாலும், இதற்குநானே பொறுப்பாளி என்றுதான் சொல்லவேண்டும்.
சில இளைஞர்களுக்கு இது கேவலமானதாகத் தோன்றலாம். என்றாலும், நம் இயக்க சம்பந்தமாக நமது கொள்கைகளிலோ, திட்டங்களிலோ எதையும் விட்டுக் கொடுத்துச் சமாதானம் செய்து கொண்டதாக எனக்குப் படவில்லை, சுயமரியாதை இயக்கம் சட்ட வரம்புக்கு உட்பட்ட இயக்கம் அல்லவா!
ஊரார் என்ன சொல்லுவார்கள், எதிரிகள் என்ன சொல்லுவார்கள் என்பதையே முக்கிய குறிப்பாய் வைத்து அதற்கு அடிமையாகி, மாற்றங்கள் செய்வதானால் மாத்திரம், அவற்றுக்கு அதிக ஆயுள் இருக்குமென்று கருதமுடியாதே தவிர, மற்றபடி உண்மையும் துணிவும் உள்ள காரியத்தில், எவருக்கும் யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றே கருதுகிறேன்!” (குடி அரசு 31.3.1935)
அடிக்கடி அரசின் அடக்குமுறைகளுக்கு உள்ளாக நேரிட்டதால், அவ்வப்போது பல பத்திரிகைகளை மாற்றி மாற்றிப் பெரியார் நடத்தி வந்தார். 1933-ல் “புரட்சி” வார இதழ், 1934-ல் “பகுத்தறிவு” வார இதழ், 1939-ல் “பகுத்தறிவு” நாளேடு, 1985-ல் “பகுத்தறிவு” மாத இதழ் இப்படியாகப் பலப்பல.
கருத்துச் சுரங்கமான பெரியார், தமிழ் நாட்டில் அடிப்படைக் கல்வி அகலமாகப் பரவாத காரணத்தை ஆழ்ந்து சிந்தித்து வந்தார். மனுதர்மப்படி சூத்திரன் கல்வி கற்கக் கூடாது; உடலுழைப்பு மட்டுமே செய்ய வேண்டும் என்ற சூழ்ச்சி ஒரு புறம், மக்களின் வறுமை நிலையில் அன்றாடம் வாய்க்கும் கைக்குமே போராட்டம் என்னும் நிலை இன்னொரு புறம் பாதித்தாலும், தமிழ் மொழியிலுள்ள பெருத்த குறைபாடு அதன் நெடுங்கணக்கிலுள்ள ஏராளமான எழுத்து வடிவங்களே என்பது பெரியாரின் ஆராய்ச்சி முடிவாகும். இப்போதுள்ள தமிழ் எழுத்து முறை எவ்வளவோ மாறுதல்களைக் கண்டு வந்துள்ளது என்பது, கல்வெட்டு எழுத்துகளை ஊன்றிப் பார்த்தால் விளங்கும், வீரமாமுனிவர் எனும் பெஸ்கி பாதிரியார் கடைசியாகச் சல மாற்றங்கள் செய்துள்ளார். அதே போல், உயிர் 12, ஆய்தம் 1, மெய் 18, உயிர்மெய் 216 ஆகிய இத்தனை வடிவங்களை இளம் நெஞ்சங்களில் பதிய வைப்பது என்பதற்குப் பதிலாக, இந்த எழுத்து வடிவங்களில் சிலவற்றை நாமும் குறைக்கலாமே என்று பெரியார் சந்தித்தார்.
ளை என்றும் பதின்மூன்று எழுத்து வடிவங்களை மாற்றியமைத்தார். 1935-ஆம் ஆண்டு சனவரி 13-ஆம் நாள் முதல் நடைமுறைப்படுத்தித் தமது பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் தொடர்ந்து கையாண்டு வந்தார்.
இன்றும் இதேமுறை திராவிடர்கழகத்தில் தொடர்கிறது. இன்றையத் தமிழ்நாடு அரசு இந்த முறையை அனைவரும்
கையாள வேண்டுமென அரசாணையும் பிறப்பித்துள்ளது பாராட்டுக்குரியதாகும்.தட்டச்சுச் செய்யவும், அச்சுக் கோக்கவும் இம்மாற்றம் எளிதாக இருக்கும். மேலும், தமிழில் ஐ, ஒள ஆகிய இரு உயிரெழுத்துகளும், அவற்றின்மேல் மெய் சேர்ந்த 36 எழுத்துகளும் எழுத்து வடிவத்தில் தேவையில்லை. ஒலி வடிவத்திற்கேற்ப அய் என்றும், அவ் என்றும் எழுதிக்கொள்ளலாம் என்றும் பெரியார் விளக்கியுள்ளார். உயிர் 5, மெய் 15, ஆய்தம் 1, சிறப்புக்குறி 8, ஆக 29-ல் தமிழ் எழுத்து வடிவத்தை அடக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இந்தக் காலகட்டத்தில், பெரியாரின் பொதுவுடைமைக் கருத்துகள் புதுமையாகப் புகுத்தப்பட்டதால், இயக்க மேடைகளிலும், மாநாடுகளிலும் சமுதாய சம்பந்தமான கருத்துகளைவிட, அரசியல் பொருளாதார சம்பந்தமான இக்கருத்துகள் பெரும்பான்மையான இடத்தைப் பெற்றன. இவற்றுக்கான விளக்க மொழிகள், தெளிவுரைகள் மிகுதியும் பேசப்பட்டன, சுயமரியாதை இயக்கம் புது முறுக்கோடும், பொலிவோடும், வலிவோடும் வளர்ந்தோங்கிவரக் கண்ட ஆதிக்க புரியினரும் பாதிக்கப் படுவோரும், சென்னையிலுள்ள நீதிக்கட்சி ஆட்சி பெரியாருக்கு ஒத்துழைப்பதால், டெல்லியிலுள்ள மத்திய பிரிட்டிஷ் ஆட்சியின் துணையை நாடி, அடக்கி ஒடுக்கப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நுனிப்புல் மேயும் அவசரக்காரர்கள், மாகாண அரசுக்கும் பெரியாருக்கும் பகை மூண்டதாகக் கதை கட்டி விட்டனர் இந்த உண்மை புரியாமல்!
இந்நிலையில் சுயமரியாதை இயக்கம் இதுவரை ஆற்றி வந்த அரும்பணிகள் பாழாகிப், பெரும் இழப்புக்கு உள்ளாகி, அடக்கி ஒடுக்கப்படுமோ என்ற அய்யுறவு, நலம் நாடுவோர் உள்ளத்தில் தோன்றியது. பெரியாரிடம் உண்மை நிலவரத்தை எடுத்துச் சொல்லி, விளக்கமாக ஓர் அறிக்கை விடுத்திட வேண்டினர். அதற்கிசைந்து 1935-மார்ச் 10-ஆம் நாள் "குடி அரசு" இதழில் பெரியார் அறிவித்தார்:- “சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் கொள்கை - பார்ப்பன ஆதிக்கத்திலுள்ள காங்கிரசை ஒழிப்பது, இதற்காக மத்திய அரசுடன் ஒத்துழைப்பது; சமுதாயக் கொள்கை - சாதிமத பேதங்களை அகற்றுவது; மூடநம்பிக்கைகளை ஒழிப்பது; பொருளியல் கொள்கை சமதர்மம் ஆகும். இவைகளை மக்களிடையே பிரச்சாரம் செய்து அமுலுக்குக் கொண்டு வரும் செயல்கள் வெற்றி பெற வேண்டுமானால் என்னைப் பொறுத்த வரையில் காங்கிரஸ் ஆட்சியை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேல் என்பதாகும்.”
காற்று காங்கிரசின் பக்கம் வீசத் தொடங்கியதால் பழுத்த மரத்தை நாடிய வவ்வால் மனிதர்கள் சிலர் இது பிரிட்டிஷ்காரரான அந்நியரை ஆதரிக்கும் போக்கு எனச் சாக்குக் கூறி வேற்றிடம் தேடினர். ஆனால் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சுயமரியாதை இயக்கத்தின் திட்டங்களை ஏற்று நடத்த முன்வந்த நீதிக் கட்சியும் கூடப் பெரியாரின் வலையில் வீழ்ந்து விட்டதாகவும், நாத்திக சமதர்ம மோசடியில் சிக்கியதாகவும் பழைமை வாதிகளின் குற்றச் சாட்டிற்கு உள்ளாயிற்று!
எது எவ்வாறாயினும், பெரியார் - நீதிக்கட்சி உறவு, பொப்பிலி அரசர் காலத்தில் வலுப்பெற்றது சரித்திர உண்மையாகும்!
ஏறத்தாழ இந்தக் கால கட்டத்திலேயேதான் வடநாட்டில் ஆதி திராவிட சமுதாயத்தில் பிறந்த ஒப்பற்ற மேதையும் ஈடிணையற்ற போராட்ட வீரருமான டாக்டர் அம்பேத்கார் தமது தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள், சாதி இந்துக்களாலும், அரசியலில் காங்கிரஸ் கட்சியாலும், தொடர்ந்து நசுக்கப் படுவது கண்டு மனங் குமுறித் தாம் இஸ்லாத்தில் சேர்ந்து விடப் போவதாக அறிவித்தார். அது தெரிந்தவுடன் பெரியார், 1935 அக்டோபர் 20-ஆம் நாளிட்டுத் “தயவு செய்து அவசரமாக முஸ்லிம் மதத்துக்கு மாறிவிடாதீர்கள்! உங்களவர்களில் குறைந்தது பத்தாயிரம் பேரையாவது முஸ்லிம் ஆக்கிவிட்ட பிறகே நீங்களும் இஸ்லாமாகுங்கள்” என்று தந்திச் செய்தி அனுப்பினார் பெரியார்.
எப்படி அதிரடி?