தந்தை பெரியார், கருணானந்தம்/012-021
சென்னை மாகாணத்தில் பிரிட்டிஷாரின் இரட்டை ஆட்சி முறை, நீதிக்கட்சி அரசுப் பொறுப்பேற்ற 1920-ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாகச் செயல்பட்டு வந்தது. 1923 முதல் 1926 வரையில் முதன் மந்திரியாயிருந்த பனகல் அரசர் காலத்தில்தான் பெரியாரின் ஆதரவோடு, இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு என்னும் உள்ளாட்சி அமைப்பு முறைகள் மக்களாட்சி அடிப்படையில் பனகல் அரசால்தான் நடைமுறைக்கு வந்தன. கிராமப்புற மருத்துவம், சாலை, விளக்கு, கல்வி அத்தனை வசதிகளும் செய்யப்பட்டன. அதனால் அப்போதெல்லாம் சுயமரியாதை இயக்கத்தைப் பெற்றெடுத்துவிட்ட பெரியாரின் தார்மீக ஆதரவு நீதிக்கட்சிக்குத்தானே கிடைத்து வந்தது. பின்னர் நேரடியான நீதிக்கட்சி ஆட்சியாயிராமல், ஓரளவு ஆதரவு பெற்றுச் சுயேச்சையாகச் செயல்பட்ட டாக்டர் சுப்பராயன் அமைச்சரவை நான்காண்டுகள் பதவியில் இருந்தது.
இந்தக் காலத்தில் அமைச்சராயிருந்த சீர்காழி எஸ். முத்தையா முதலியார் முதன்முதலாகத் தமது இலாக்காவில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை அமுலாக்கி, அதன்படி அரசு உத்தி யோகங்கள் அளிக்க முன்வந்தார். பெரியார் தலைகால் புரியாத மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார். பார்ப்பனரல்லாதார் இதற்காக நன்றியுடன் நடந்து கொள்ள வேண்டுமானால், அவர்கள் வீட்டில் பிறக்கும் பிள்ளைகளுக்கு முத்தையா என்று பெயர் சூட்டவேண்டும் என்கிற அளவுக்குச் சென்று, பாராட்டினார். பின்னர், நீதிக்கட்சி நேரடியாக ஆட்சிக்கு வந்தது. சித்தூர் வி. முனுசாமி நாயுடு முதல் மந்திரியாகவும், சர் பி. டி. இராசன், எஸ். குமாரசாமி ரெட்டியார் மந்திரிகளாகவும் விளங்கினர். 1930 முதல் 1932- வரையில் நீதிக்கட்சியின் தலைவராகவும் இருந்த முனுசாமி நாயுடு திறமையற்றவராகவே காணப்பட்டார். நீதிக் கட்சியிலுள்ளவர்களே அவர்மீது அருவெறுப்புற்றிருந்தனர். காரணம், அவர் சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக்காட்டிக், காங்கிரஸ் மீது அனுதாபங் காட்டி வந்ததே!
1932 - அக்டோபரில் தஞ்சையில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில், அவரை அகற்றுவதற்குப் பெரியாருடைய ஆதரவை நாடினார் பொப்பிலி அரசர். சுயமரியாதை இயக்கத் தோழர்களின் பேருதவியினால் பொப்பிலி அரசர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1932 முதல் 1936 வரையில் முதன் மந்திரிப் பதவியும் வகித்தார்; மற்ற இரு மந்திரிகளாக முந்தைய இருவருமே நீடித்தனர்.
1935-ல் நீதிக்கட்சி, பெரியார் தந்த ஈரோடு வேலைத் திட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டது. தாம் ஒரு ஜமீன்தாராயிருந்தும், நாட்டுமக்கள் நலனில் நீதிக்கட்சிக்கு உண்மையான அக்கறை உண்டு என நிரூபித்து நிலைநாட்டிக் காண்பிக்கவே, பொப்பிலி அரசர் பெருமுயற்சி எடுத்துப் பெரியாரின் திட்டத்தை ஏற்றுக்கொண்டார். இதனால் வைதிகர்கள், பிரபுக்கள், பிரிட்டிஷ்காரர் ஆகிய முத்தரப்பினரின் எதிர்ப்பும் நீதிக்கட்சிக்குப் பரிசாகக் கிடைத்தது.
“பகுத்தறிவு” மாத இதழ் ஒன்றினைப் புத்தக வடிவில் பெரியார் துவங்கியிருந்தார். பண்டித முத்துசாமி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், ஜலகண்டபுரம் ப. கண்ணன் ஆகியோர் இதில் பயனுள்ள எழுத்துப் பணி புரிந்து வந்தனர். விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சிப் பூர்வமான கட்டுரைகள், புராண இதிகாச மோசடிகளைப், புரட்டுகளை விளக்கும் கட்டுரைகள், சமூக சீர்திருத்தக் கதைகள், கவிதைகள் இதில் இடம் பெற்றன. இது சுமார் நான்காண்டுகள் நடைபெற்று வந்தது. 1934-ஆம் ஆண்டு பாரதிதாசன் எழுதிய இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்ற நாடகம் சென்னையில் அரங்கேறிய போது பெரியார் தலைமை தாங்கிக் கவிஞருக்குத் தங்கப் பதக்கம் வழங்கிப் பாராட்டினார். 1946-ஆம் ஆண்டில் அண்ணா முயற்சியால் சென்னையில் கவிஞருக்குப் பணமுடிப்பு வழங்கப்பட்டது.
புதுவை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெரியாரின் கொள்கைகளை நூற்றுக்கு நூறு அப்படியே ஏற்றுக்கொண்டு அவற்றைக் கவிதை வடிவில் வெளியிட்டு வந்தார். இறுதிவரை அவர் இந்த நிலையிலிருந்து பிறழவில்லை . தேசியமும் ஆத்திகமும் கலந்தே பாடிய பாரதியின் சீடராயினும், இவர் நாத்திகரே. மிகப் பெரிய பரம்பரை ஒன்றை இவர் உருவாக்கி விட்டார். இவரால் கவிதையுலகில் செய்யப்பட்ட முதல் மாறுதல்கள் பெரிய திருப்புமுனையாய் நிற்கின்றன. அஞ்சா நெஞ்சமும் ஆழ்ந்தகன்ற பெரும் புலமையும் புதுமையான நோக்கும் கொண்ட இவர் உலக அளவில் தமக்கு நிகரற்ற நிலை பெற்றுவிட்ட கவிஞராவார். மாடுகளும் வழக்கத்தால் செக்கைச் சுற்றும், மடையர்களும் இயற்றிடுவார் சுடவுட்பாடல் என்ற வரிகள் இவரது புரட்சி மனப்பாங்கைக் காட்டும். வயதில் அறிவில் முதியார் நாட்டின் வாய்மைப் போருக்கென்றும்
நீதிக்கட்சி தமது திட்டத்தை ஏற்றுக் கொண்டதில் பெரியார் மிகுந்த பெருமிதமும் பூரிப்பும் கொண்டார். அவர் விரும்பியதும் அஃதேயாகும். காங்கிரஸ் புறக்கணித்ததையே பெரியார் பெருமையாகத் கருதினார். காரணம், காங்கிரஸ் பசுத்தோல் போர்த்திய புலி என்று, அதன் தோலுரித்துக் காட்டவே பெரியார் நேரம் பார்த்திருந்தார். அதனால் 1937-ஆம் ஆண்டுத் தேர்தலில் காங்கிரஸ் பெருமளவில் ஈடுபட்டதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார். வெற்றி தோல்லி பற்றிய கவலை அவருக்கு எப்போதுமே இருப்பதில்லையாதலால், முழுமூச்சாக நீதிக்கட்சியை ஆதரித்துத் தேர்தல் பிரச்சார இயந்திரத்தை முடுக்கி விட்டார். 1938-ஆம் ஆண்டுவரை பெரியார் மதுவிலக்கை ஆதரித்துத்தான் வந்தார். கதர், கைராட்டை, கைத்தறி இவற்றிலெல்லாம் அவர் நம்பிக்கை இழந்திருந்தார். மதச்சின்னங்களைப் போலவே கதரும் ஒரு மூடநம்பிக்கைச் சின்னம்; பொருளாதார அடிப்படையிலும் இலாபமில்லாமல், மனித உழைப்பை வீணாக்கிடும் ஒரு சாதனம், இயந்திர யுகத்தில் தேவையில்லாத பழைய கட்டை வண்டிக் காலத் திட்டம்; இது கதைக்குதவாது என்று பெரியார் கருதினார்.
நாகம்மையார் மறைந்தபோது பெரியாருக்கு வயது 54. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் பெரியார் ஈரோட்டில் தங்க நேர்ந்து, தமது தாயார் சின்னத்தாயம்மையாரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டால், அந்த அம்மையார், ஈன்ற அன்னையென்ற பாசத்தோடும், தனது இளைய மகன் பயமறியாமல் கண்டபடி திரிவதால், மீண்டும் கால் கட்டுப்போட வேண்டும் என்ற வழக்கமான ஆசையோடும், திருமணம் செய்து கொள்ளத் தூண்டுவார். அப்பேர்ப்பட்ட சின்னத்தாயம்மையார் தமது 95-ஆவது வயது வரையில் நல்ல நிதானத்தோடும் நடமாட்டத்தோடும் (ஆகா! அப்படியே தந்தை பெரியாரை நினைவூட்டுகிறாரே!) வாழ்ந்து வந்தவர். 1936-ஆம் ஆண்டு ஜூலை 28-ஆம் நாள், நள்ளிரவு 12 மணிக்கு இயற்கை எய்தினார். ஜோலார்ப் பேட்டை சென்றிருந்த பெரியாருக்குச் செய்தி எட்டவே மறுநாள் வந்து சேர்ந்தார்.
தாயாரைப் பற்றிய சுருக்கமான வாழ்க்கை வரலாற்றைத் திருக்குறள் போல் இனிதாக எளிதாக 2-8-1936 “குடி அரசு” இதழில் பெரியார் எழுதி வெளியிட்டுள்ளதைக் காணும்போது, இவ்வளவு அருமையான Biographer ஏன் தமது Autobiography எழுதி நமக்கு உயிர் ஊட்டியிருக்கக் கூடாது, என்ற அய்ய வினா எழாமல் இருக்காது! இறுதியாகத், தமது அன்னையாரின் பழைமைப் பிடிப்புக்கோர் உதாரணமாகப், புகழ் பெற்ற மவுலானா முகம்மது அலி, ஷவுக்கத்அலி சகோதரர்கள் ஈரோடு வந்திருந்தபோது, தமது அன்னையாருடைய கரங்களின் மீது தங்கள் சிரங்களைப் படியவைத்து, அப்பேர்ப்பட்ட வீர இராமசாமிப் பெரியாரின் அன்னை, தங்களை வாழ்த்த வேண்டுமென்று கேட்டபோது, அவர்களெதிரில் அவ்வாறே வாழ்த்திவிட்டுப், பின் உள்ளே சென்று, தீட்டுப்பட்டதற்காகத் தலை முழுகிய செய்தியினைப் பெரியார் நயமாக வெளியிட்டுள்ள பாங்கு, எண்ணியெண்ணி மகிழத்தக்கதாகும். பெற்ற மகனையே தொட நேரிட்டாலும், குளித்து முழுக ஓடும் ஆச்சார சீலராயிற்றே அந்தப் பெருமாட்டி! ஒரு குறிப்பிட்ட அந்தஸ்தை அடைந்துவிட்ட சிலர், தமது முன்னாள் ஏழ்மை வாழ்க்கையினைத் திரும்பிப் பார்ப்பதில்லை! இன்றுள்ளோர் யாருக்கும் உண்மை தெரியாது என்ற துணிவில், தாம் அரசபரம்பரை எனக் கூசாது பொய் மொழிவதுதான் வாடிக்கை. இங்ஙனமிருக்கப், பெரியார் தமது பெற்றோரின் ஏழ்மைக் கூலி வாழ்க்கையினை, எட்டுணையும் மறைக்காமல் கூறியுள்ள வாய்மையினை எவ்வாறு பாராட்டுவதோ?
அன்னையார் மறைவுக்குப் பின்னர் மிச்சமிருந்த குடும்பப் பிணைப்பும் அற்று விடவே, முன்னிலும் தீவிரமாகப் பெரியார் தேர்தல்களத்தில் குதித்தார். நீதிக்கட்சி ஆட்சி செய்து வந்த இந்தப் பதினேழு ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டுள்ள அருஞ்சாதனைகளைப் பட்டியல் போட்டுக் காட்டினார். சர்க்கஸ் கொட்டகையில் புலியும் பசுவும் ஒன்றாய் நிற்கலாம்; ரயில் வண்டியில் பறையனும் பார்ப்பானும் ஒன்றாய்ப் பிராயாணம் செய்யலாம்; இது சமதர்மம் ஆகிவிடாது! நீதிக்கட்சி ஆட்சியில் சட்டப்படித் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அநேக உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன; இதைப்பற்றிக் காங்கிரசார் எண்ணியும் பார்த்ததில்லை! நீதிக்கட்சியார் ஆட்சிக்கு மறுபடியும் போனால் மக்கள்தொகைக்கு ஏற்ப அந்தந்தச் சமூகத்தார்க்கும் பதவியில், அதிகாரத்தில் விகிதாச்சாரம் தருவதாகச் சொல்கிறார்கள்; காங்கிரசார் இதைத் தேசத் துரோகம் என்கிறார்கள் நீதிக் கட்சியார் வெள்ளையருடன் அவசியத்துக்கு ஏற்ப ஒத்துழைக்கிறார்கள்; காங்கிரசார் வெள்ளையருக்கு ரகசியமாய்ச் சலாம் போடுகிறார்கள்! ஆகையால் காங்கிரஸ் வெற்றிபெற்றுவிட்டால், நமது சமுதாயம் ஒரு நூற்றாண்டு பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும். பார்ப்பனர்களின் சுயராஜ்யம் நிலை நிறுத்தப்படும் - என்ற ரீதியில் பெரியாரின் தேர்தல் பிரச்சாரம் மும்முரமாய் நடந்தது.
இரட்டையாட்சி ஏற்பட்ட 17 ஆண்டுகளாய் நீதிக்கட்சியே தொடர்ந்து ஆட்சி செய்ததால், மனப் புழுக்கமடைந்த காங்கிரசாரும் அவர்களை அதிகம் நம்பி எதிர்பார்த்திருந்த பதவி வேட்டைக்காரர்களும் வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வழங்கினர். மக்களும் அப்படியே நம்பித், தங்கள் வரிச்சுமை நீங்கும்; வறுமை பறக்கும்; வளமை சுரக்கும்; ஏகாதிபத்தியம் ஓடும்; துயரங்கள் ஒழியும்; சுயராஜ்யம் வாழும் என்றெல்லாம் எதிர்பார்த்தனர். பழசாய்ப் போன நீதிக்கட்சி மீதில் காதல் குறைந்ததும், புதுமையான காங்கிரஸ் மீது மோகம் பிறந்ததும் இயற்கைதானே? அதனால் 1937-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், காங்கிரசே எதிர்பாராத அளவுக்கு அது அமோக வெற்றி பெற்றது! நீதிக்கட்சி படுதோல்வி கண்டது; பெரும் தூண்களெல்லாம் அடியோடு சாய்ந்தன!
காங்கிரசார் வெறியாட்டம் போட்டனர். நீதிக் கட்சியை அய்யாயிரம் அடி ஆழக்குழி தோண்டிப் புதைத்து விட்டதாகக் காங்கிரஸ் பேச்சாளர்கள் கொக்கரித்தனர். ஈ.வெ. ராமசாமிப் பெரியார் காங்கிரசில் சேர்ந்து விட வேண்டும்; இனி உலகு உள்ளளவும் ஆட்சிபீடம் காங்கிரசுக்குத்தான் - என்றும் ஆர்ப்பரித்தனர்.
ஆனால், தோல்வியிலும் வெற்றி காணும் பெற்றிகொண்ட பெரியார். நீதிக்கட்சியின் தோல்வி தமக்கு அனுகூலந்தான் என்றார். தேர்தல் நடைபெறுமுன்பே அவர் கணிப்பு, வெற்றியைக் காட்டிலும் தோல்வியினால்தான் பார்ப்பனரல்லாத மக்கள் ஒன்று சேர்ந்து, பலமாக வேலை செய்ய வாய்ப்புக் கிடைக்கும் என்பதே! ஆகவே சோர்வடையாமல், ஊக்கம் மிகுந்தவராய்த் தோழர்களை உற்சாகப்படுத்தி வந்தார் பெரியார், காங்கிரஸ்காரர்களும், பார்ப்பனர்களும் இதுவரையில் செய்து வந்த புளுகுப் பிரச்சாரம், இனி வெட்ட வெளிச்சமாகும். இப்போதுதான் அவர்கள் உண்மையான நெருக்கடியில் சிக்கியிருக்கிறார்கள், தொடர்ச்சியான அவர்களது விஷமத்தனங்களுக்கு இப்போதுதான் முடிவு ஏற்படும்; மந்திரிப் பதவி ஏற்பவர்களின் சாமர்த்தியம் தெரியவரும். நம்மைப் பொறுத்தவரையில் சுயமரியாதைப் பிரச்சாரத்துக்கு நல்ல முறையில் பாதை திறந்து விட்டது போலாகும் - என்று பெரியார் பேசி வந்தார்.
காங்கிரஸ்காரருக்கோ தலைவலி ஆரம்பித்தது. ஆட்சி அமைக்குமாறு கவர்னர்கள் அழைத்தபோது. மந்திரிகளின் அன்றாட அலுவல்களில் கவர்னர்கள் கலந்து கொள்வதில்லை என உறுதி தரவேண்டும் என்று கேட்டனர்; அரசினர் இதனை ஏற்க மறுத்தனர்! அதனால், சுமார் மூன்றரை மாதம் வரை, கவர்னர்களே இடைக்கால மந்திரி சபை அமைத்தனர். நீதிக்கட்சி இந்த இடைக்கால மந்திரி சபையில் பொறுப்பேற்கக் கூடாது என்று பெரியார் சொல்லிவிட்டதால், யாரும் ஏற்கவில்லை . கே.வி. ரெட்டி, எம். சி. ராஜா, கலிபுல்லா, பன்னீர் செல்வம், முத்தையா செட்டியார், பாலட் ஆகியோர் பதவியில் அமர்த்தப்பட்டனர். இதனைக் காங்கிரசார் அற்பாயுள் மந்திரிசபை எனக் கேலி பேசினர்.
காங்கிரஸ்காரர்களுக்குப் பசி வயிற்றைக் கிள்ளுகிறது; இவை முன்னர் படைக்கப்பெற்ற விருந்தை எவ்வளவு நேரம் அருந்தாமல் பார்த்துக் கொண்டேயிருக்க முடியும்? காங்கிரஸ்காரர்கள் கடைசியாகப் பிடிவாதத்திலிருந்து இறங்கி வந்தனர். சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் தலைமையில் முதன் முறையாகச் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் மந்திரிசபை பதவி ஏற்றது 1937 ஜூலை 14-ஆம் நாளில்! முரண்பாடாக நடந்து கொண்டதால் இந்தக் காங்கிரஸ் மந்திரிசபைக்குப் பெரியார், சரணாகதி மந்திரிசபை எனப் பெயர் சூட்டினார். வீம்புடன் முதலில் ஒதுங்கியிருந்தவர்கள், பின் விட்டுக்கொடுத்த பண்பையே பெரியார் சரணாகதி என்றார்; தவறல்லவே? சுயமரியாதைக்காரராக இருந்த எஸ். ராமநாதன் இந்த மந்திரி சபையில் ஒரு மந்திரியானார். முதலமைச்சரை வைத்து ஒரு மாட்டு வண்டியை இவரே ஓட்டிச் சென்றதாகப் புகைப்படங்கள் வெளியாயின. அது முதல் இவர் கட்டை மாட்டு வண்டி ராமநாதன் என்று கேலி செய்யப்பட்டார். இந்த மந்திரிசபையில் ஆச்சாரியார், சத்தியமூர்த்தி அய்யருக்கு இடந்தராமல் டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் அய்யங்காருக்குப் பதவி தந்து விட்டதால், சத்திய மூர்த்தி இதன்பின் ராஜாஜியின் எதிரியாகவே விளங்கினார்.
நீதிக்கட்சியினரால் 1935-ல் சென்னையில் துவக்கப்பட்டு, வாரம் இருமுறையாயிருந்து, பின்னர் நாளேடு ஆகிய "விடுதலை" பெரியாரிடம் 1937-ல் ஒப்படைக்கப்பட்டது. செய்தித்தாள். என்னும் புதிய படைக்கலன், போர்வீரராகக் களத்தில் முன்னணியில் நின்று கொண்டேயிருக்கும் பெரியாரிடம் உரிய நேரத்தில் வரலாயிற்று! அதனை ஈரோட்டுக்கே மாற்றிக் கொண்டார் பெரியார். “விடுதலை”யின் முதல் பக்கத்தில், கொட்டை எழுத்தில், சரணாகதி மந்திரிசபை - இன்று...... ஆவது நாள்! இன்னும் எத்தனை நாள்? என்று பெட்டிச் செய்தி நாள்தோறும் வெளியிடப்பட்டு வந்தது மிக்க பரபரப்பாயிருந்தது! எப்படித்தான் பெரியார் முன்கூட்டி எதிர்பார்த்தாரோ? - 1939 அக்டோபர் மாதத்தில், 28 மாத ஆட்சிக்குப் பின், காங்கிரஸ் பதவியை விட்டு வெளியேறியது. அதன்பின் 1946- வரை சென்னை மாகாணத்தில் ஆலோசகர்கள் உதவியுடன் கவர்னர் ஆட்சியே நடந்தது!
காங்கிரசார் உள்ளாட்சி நிறுவனங்களான பஞ்சாயத்து, நகராட்சி, ஜில்லாபோர்டு ஆகிய அனைத்திலும் வெற்றி பெற்றனர். தோல்வியுற்றதால் சிலர் காங்கிரசிலே போய்ச் சேர்ந்து கொண்டனர்! இப்படிப் பதவிக்காகக் கட்சி மாறியவர்களைப்பற்றிப் பெரியார் என்ன நினைத்தார் என்பதைக் கவனித்தால், 1937 ஏப்ரல் 5-ஆம் நாள் “குடி அரசு” கூறுவது, இன்றும் என்றும் பொருந்துமே! - “காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால்தான் இனிப் பதவி, உத்தியோகம் தமக்குக் கிட்டும் என நம்பிச் சிலர் அங்கே போகிறார்கள். இந்த முட்டாள்தனமான தேர்தல், அந்த முடிவுக்கு வரத் தூண்டுயிருக்கிறது. யார்யாருக்குப் பதவியினால் மாத்திரம் மதிப்பும் மரியாதையும் கிடைக்குமோ - அவர்கள்தான் போயிருக்கிறார்கள்! வேறு வாழ்வுக்கு வகையில்லாதாரும் போகிறார்கள். இவர்கள் நீதிக் கட்சியிலிருந்து, ஒருக்கால் பதவிக்குச் சென்றாலும், கட்சிக்குக் கெட்ட பெயர் தேடித்தரக் கூடியவர்களே! ஆகையால் இவர்கள் போவதுதான் நல்லது. கட்சியே இவர்களை வெளியேற்றுமுன், தாமே சென்றுவிட்டது அவர்களுக்கே நல்லது! இன்னும் இம்மாதிரி, வெளியேற்றப்படவேண்டிய சிலர் இருக்கிறார்கள்; அவர்களும் போய்விட்டால் நீதிக்கட்சிக்கு உதவியவர் ஆவார்கள்! இப்படிக் குடியிருந்த வீட்டுக்கு கொள்ளி வைக்கும் ஆட்களுக்குப் புகலிடமாய்க் காங்கிரஸ் இருப்பதும் மகிழ்ச்சியே!” எப்படி?
பதவி ஏற்ற காங்கிரசார் வாக்குறுதிகளை மறந்தனர்; கொள்கைகளை மறந்தனர்; செயல்பட மறந்தனர்; மொத்தத்தில் வந்த வேலையை மறந்தனர்; மக்களையே மறந்தனர்! தவறு கண்டவிடத்துத் தயவு தாட்சண்யம் பாராமல் தட்டிக் கேட்கும் பெரியாரின் இயல்பு பீரிட்டுக் கிளம்பிற்று. “விடுதலை”யும், “குடி அரசும்” வெடிகுண்டுகளாக வீசின!