தந்தை பெரியார், நீலமணி/கொள்கை வேறு, பதவி என்பது வேறு

விக்கிமூலம் இலிருந்து

16. கொள்கை வேறு
பதவி என்பது வேறு...


"பதவி மோகம் எவ்வளவு பேர்களை அயோக்கியர்களாக நாணயமற்றவர்களாக ஆக்கி வருகிறது என்பது எங்களுக்குத் தெரியும். எவ்வளவோ யோக்கியனாகப் பதவிக்குச் சென்றாலும், அவனால் இன்றைய நிலையில் அயோக்கியத்தனம் செய்யாமல் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது."

- தந்தை பெரியார்

வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் சோதனைகளும் போராட்டங்களும் அனுபவங்களுமே ஒரு மனிதனைப் பக்குவப்படுத்தி முழுமையாக்குகிறது. என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார் இராமசாமி.

காசி மாநகரம் அவருக்கு அனேக பாடங்களை போதிக்காமல் கற்றுக் கொடுத்திருந்தது.

ஈரோடு வந்தபின் இராமசாமி முற்றிலும் புது மனிதராக தன்னலமற்ற வாழ்க்கையை மேற்கொண்டவராக வாழ்ந்தார்.

காசியில் உயர் சாதி மக்கள் மத்தியில் ஒருவாய் சோற்றுக்காக ஏறி இறங்கிய சத்திரங்களும் விரட்டி யடிக்கப்பட்ட வேதனையும் அவர் இமைகளை நனைத்தன.

தனக்கு ஏற்பட்ட அனுபவம் இனியாருக்கும் ஏற்படக் கூடாது என்பதற்காக முழு நேரமும் பாடுபட்டார். தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்த தடைக் கற்களாக இருக்கும் ஜாதி, மதம், சாத்திரம் இவற்றை அழிக்கும் வரை ஓய்வதில்லை என்று உறுதி கொண்டார்.

பிறரது துன்பத்தைப் போக்க இரவு பகல் பாராமல் உழைத்தார். அவருடைய சமுதாய சேவை அவருக்கு நகரசபை உறுப்பினர் பதவியைத் தேடித் தந்தது.

சுத்தமும், சுகாதாரமும் அற்றிருந்த ஊரைச் சீர் திருத்த அவர் எண்ணிக் கொண்டிருக்கும்போதே கொடிய பிளேக் நோய் ஊர் முழுதும் பரவி, மக்கள் பலரை மடியச் செய்தது.

அந்நோய்க்கு அஞ்சி பலர் ஊரை விட்டு வெளியேறினார்கள். ஏழை மக்கள் எங்கு செல்ல முடியும்.

பிளேக் நோயால் இறப்போரின் எண்ணிக்கை அதிகமாயிற்று. பிணங்களை உடனுக்குடன் அகற்ற நகர சபையில் போதிய ஊழியர்கள் இல்லை.

இராமசாமி சுய கெளரவம் பாராது தன் உயிரையும் இலட்சியம் செய்யாது, விழும் பிணங்களை தோளில் சுமந்து இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரிக்கச் செய்தார்.

பிளேக் நோய் தொடர்ந்து பரவாமல் இருக்கத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

ஈரோட்டை விட்டு கொள்ளை நோய் மறைந்ததும் மக்கள் மீண்டும் தங்கள் ஊருக்குத் திரும்பினர்.

ஊரே ஒன்று கூடி இராமசாமியின் அபார துணிச்சலையும் அயராத சேவையையும் வாயாரப் புகழ்ந்து வாழ்த்தியது.

இதையெல்லாம் கேட்டு நாகம்மையாரும், வெங்கடப்பரும், சின்னத் தாயம்மையும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இராமசாமியின் திறமை மீது அளவற்ற நம்பிக்கை கொண்ட வெங்கடப்பர் கடைத்தெருவில் தன் பெயருக்கிருந்த பெரிய மண்டிக் கடையை 'ஈ.வெ. இராமசாமி நாயக்கர் மண்டி,' என்று பெயர் மாற்றும் செய்து; முழுப் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு, ஒய்வெடுத்துக் கொண்டார். மக்கள் அவரை ஈ.வெ.ரா. என்று அன்போடு அழைத்தனர்.

பெரிய மண்டிக்கடை முதலாளி ஆகிவிட்டாலும் ஈ.வெ.ரா. பொது நலத்தொண்டை விடவில்லை.

பொறுப்புகளும் பதவிகளும் வலியத் தேடி வந்த வண்ணமிருந்தன.

ஈரோட்டை சுற்றியுள்ள ஆலயங்கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கடவுளையும் ஆலய வழிபாடுகளையும் ஈ.வெ.ரா. தனிப்பட்ட முறையில் எதிர்ப்பவராக இருந்தாலும், பொதுப் பணியில் தன் கொள்கைகளை ஒதுக்கி வைத்தார்.

பல ஆலயங்களைப் புதுப்பித்து; திருப்பணிகளை மேற்கொண்டார். பக்தர் கொண்டாடும் ஆலய உத்சவங்களை விமரிசையாக நடத்த வேண்டிய செளகரியங்களைச் செய்தார்.

பாழடைந்த கோயில்களைப் புதுப்பிக்கத் திருப்பணிக் குழுக்களை அமைத்தார். வழக்கமான ஆலய திருவிழாக்களை முன்னிலும் சிறப்பாக முன்னின்று நடத்தினார்.

ஈ.வெ.ரா.வுக்கு முன் அப்பதவிகளை நிர்வகித்து வந்தவர்கள், கோயில் பணங்களை வீண் செலவு செய்து திருப்பணிகள் நடத்தக்கூட பணமில்லாமல் கடனில் இருந்தது.

ஈ.வெ.ரா. பதவிக்கு வந்தபின், பல திட்டங்கள் வகுத்து சிக்கனத்தைக் கடைப்பிடித்து அனாவசியச் செலவுகளைத் தவிர்த்தார்.

பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல் பணத்திற்கும் நன்கொடைகளுக்கும் ஏற்ப சரியான வரவு செலவு கணக்குகளைக் கையாண்டார். கையிருப்புகளை வங்கியில் வட்டிக்குப் போட்டார்.

ஈ.வெ.ரா. பதவிக்கு வந்தபோது இருந்த பழைய கடன்களை அடைத்து; பதவி விலகும் போது ஐம்பதினாயிரத்திற்கும் மேல் கையிருப்பும் வைத்துவிட்டு வந்தார்.

ஆலய அறங்காவலராக இருந்தபோது ஈ.வெ.ரா. ஆற்றிய தொண்டுகளையும் அவரது நிர்வாகத் திறமையையும் மக்கள் புகழ்ந்தனர்.

விரைவிலேய ஈ.வெ.ரா.வுக்கு நகரப் பாதுகாப்புக் கழகத் தலைமைப் பதவி கிடைத்தது.

பத்தாண்டுகள் இப்பதவியை ஈ.வெ.ரா. திறமையாக நிர்வகித்தார். தொடர்ந்து தாலுகா துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்துடன் கெளரவ நீதிபதியாகவும் பணியாற்றினார்.

ஈரோட்டு நகரசபைத் தலைவராக ஈ.வெ.ரா. விளங்கியபோது மக்களுக்கு அரிய திட்டங்கள் மூலம் பல நன்மைகள் செய்தார்.

காவிரியிலிருந்து அந்நகருக்குக் குடி தண்ணீர் கொண்டு வரும் திட்டம் வகுத்தார். நகர் முழுதும் குழாய்கள் போட ஏற்பாடு செய்தார். விரைவிலேயே பணி முடிந்து; நகர மக்கள் நல்ல காவிரி நீரைப் பருகி மகிழ்ந்தனர்.

தங்களுடைய இந்த நன்றியைத் தெரிவிக்க பொதுமக்கள் மகிழ்ச்சியோடு ஈ.வெ.ரா.வின் பெயரைக் கல்லில் செதுக்கி நட்டனர். இதனால் ஈ.வெ.ரா மீது சிலர் பொறாமை கொண்டனர்.