தந்தை பெரியார், நீலமணி/பிரிந்தவர் கூடினால் பேரின்பமே

விக்கிமூலம் இலிருந்து
15. பிரிந்தவர் கூடினால் பேரின்பமே...

"வாலிபர்களுக்கு வெறும் உற்சாகமும், துணிவும், தியாக புத்தியும் மாத்திரம் இருந்தால் போதாது.

நன்மை தீமையை அறியும் குணமும், ஆய்ந்து ஓர்ந்து பார்க்கும் தன்மையும் இருந்தால்தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக் கூடியவர்கள் ஆவார்கள்."

- தந்தை பெரியார்

மனிதன் என்னதான் எதிர்நீச்சல் போட்டாலும் வாழ்க்கை வெள்ளம் அது மனிதனைத்தன் போக்கிற்கு இழுத்துச் செல்லவே விரும்புகிறது.

துறவியாகப் போக வேண்டும் என்று புறப்பட்ட இராமசாமி தோற்றுப் போய் எல்லூரில் இறங்கினார். அங்கு தன் நண்பர் சுப்பிரமணியப் பிள்ளையின் வீட்டைத் தேடிப்பிடித்து அடைந்தார்.

முதலில் இராமசாமியை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. பிறகு புரிந்ததும் மிகுந்த அன்புடன் வரவேற்று உபசரித்தார்.

இராமசாமி வீட்டை விட்டுப் புறப்பட்டுக் காசியில் பட்ட கஷ்டங்கள் வரை ஒன்று விடாமல் கூறினார். சுப்பிரமணியபிள்ளை, இராமசாமியிடம் "நீங்களாக, உங்கள் ஊருக்கு எப்போது போக வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அதுவரை இது உங்கள் வீடு" என்று அன்புடன் கூறினார்.

ஒரு நாள் இராமசாமி சுப்பிரமணியப் பிள்ளையுடன் கடை வீதிகளைப் பார்க்கச் சென்றார். எல்லூர் கடை வீதியைப் பார்த்தபோது; ஈரோடு மண்டிக் கடையைப் பார்ப்பது போலவே இருந்தது. பலதரப்பட்ட நவதானியக் கடைகளையும், வரிசையான அரிசி மண்டிக் கடைகளையும் ஜனங்களையும் பார்த்துக் கொண்டு வந்தபோது, மலரும் நினைவுகளாக அவருள் வியாபார எண்ணம் தலை தூக்கியது.

எதிரில் இருந்த ஓர் எள்ளுவிற்கும் கடைக்குச் சென்றார். அந்த ஊரின் விலைவாசியை அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் விலை கேட்டார்.

அந்தக் கடையின் சொந்தக்காரரான ஸ்ரீராமுலு விலை சொன்னார். அவருக்கு இராமசாமியை எங்கோ பார்த்த ஞாபகம் இருந்தது. ஆனால் சட்டென்று நினைவிற்கு வரவில்லை.

விலை கேட்ட இராமசாமி கையில் எடுத்துப்பார்த்த எள்ளை மூட்டையில் போட்டு விட்டுச் சிரித்தபடி மேலே சென்று விட்டார்.

இது ஸ்ரீராமுலுவுக்கு என்னமோ போலிருந்தது. உடன் சென்று கொண்டிருந்த சுப்பிரமணியப் பிள்ளையிடம், "இவர் யார்?' என்று விசாரித்தார்.

சுப்பிரமணியப் பிள்ளை விவரமாக எடுத்துக் கூறியதும், "நம்ம ஈரோட்டு நாயக்கர் மகனா?” என்று கூறி, இராமசாமியை வியப்புடன் பார்த்தார்.

இராமசாமி தன் கடையில் சரக்கு வாங்காமற் போனது ஸ்ரீராமுலுவின் மனதிற்கு கஷ்டமாயிருந்தது.

அன்றிரவே ஈரோடு வெங்கடப்ப நாயக்கருக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டு விட்டார். அதில்

"தாங்கள் என் கடையில் பல வருஷங்களாக எள்ளு வியாபாரம் செய்கிறீர்கள். இந்தத் தடவை தாங்கள் வராமல் தங்கள் மகனை அனுப்பியதால் என் கடைக்கு அவர் வந்தும் பேரம் கூடப் பேசாமல் வேறு கடைக்குப் போய்விட்டார். இது எனக்கு வருத்தமாக இருக்கிறது" என்று எழுதியிருந்தார்.

மகனைப் பல ஊர்களிலும் தேடி அலைந்து கிடைக்காமல் மனம் சோர்ந்து போயிருந்த வெங்கடப்ப நாயக்கருக்கு ஸ்ரீராமுலுவின் கடிதம் புதையல் கிடைத்தது போன்ற மகிழ்ச்சியை ஊட்டியது.

தன்னை மறந்து மனைவி, மருமகள் எல்லோருடைய பெயரையும் சொல்லி உரக்க அழைத்தார். என்னுடைய மகன் இருக்கிற இடத்தை பெருமாள் காட்டி விட்டார். தெய்வம் நம்மைக் கைவிடவில்லை” என்று உணர்ச்சி பொங்க உற்சாகத்துடன் கூறினார்.

அன்றிரவே வெங்கடப்பர் தன் நண்பர் ஒருவருடன் எல்லூருக்குப் புறப்பட்டார்.

வியாபாரி ஸ்ரீராமுலுவின் உதவியுடன் சுப்பிரமணிய பிள்ளை வீட்டிற்குச் சென்றார்.

வெங்கடப்பரை சுப்ரமணிய பிள்ளை அன்புடன் வரவேற்று உபசரித்தார்.

வந்ததுமே, "சுப்ரமண்யம்... என் மகன் எங்கே?" என்று கேட்டார் வெங்கடப்பர் அருகிலிருந்த மகனை அடையாளம் தெரியாமல்.

"இதோ நான்தான் அப்பா" என்று நெஞ்சைத் தொட்டுச் சொன்னார் இராமசாமி.

குரலைக் கேட்டதும் அருகிலிருந்த மகனை வாரி அணைத்துக்கொண்டார். அவரது விழிகள் கண்ணீரைச் சொரிந்தன. செல்லமாக வளர்த்த பிள்ளை எப்படியாகி விட்டான்.

- உடல் இளைத்து மீசையை எடுத்து உருமாறிப்போயிருந்த மகனின் உச்சியில் முத்தமிட்டார்.

அவன் தன்னை விட்டுப் போனதிலிருந்து அன்று வரை அவனைத் தேடித்தேடி அலைந்த ஊர்களையும் அனுபவித்த வேதனைகளையும் வெங்கடப்பர் சொல்லி அழுதார்.

"உனக்குத் தெரியுமா! நீ போனதிலிருந்து உன் அம்மா படுத்த படுக்கையாகி விட்டாள். எங்களை எல்லாம் விட்டு எங்கே போயிருந்தாய் இராமா" என்றார் வெங்கடப்பர் குரல் தழுதழுக்க.

"அப்பா! நான் துறவியாக வேண்டுமென்று காசிக்குப் போனேன். ஊரில் நம்முடைய அன்னச் சத்திரத்தில் எவ்வளவோ பேர் சாப்பிடுகிறார்கள். காசியில் எனக்கு ஒருவேளை சாப்பாடு கிடைக்க வில்லை. தெருவில் பிச்சை எடுத்தேன்; எச்சிலை சாப்பிட்டேன்..." என்று கூறிக்கொண்டு வரும் பொழுதே இராமசாமி அழுதுவிட்டார்; அது கண்டு அப்பாவும் அழுதார்.

"இனிமேல் நான் உன்னை எதற்காகவும் கோபிக்க மாட்டேன். வா, ஊருக்குப் போவோம்" என்று அழைத்தார்.

"சரி அப்பா", என்ற இராமசாமி தன்னுடைய நகைகளைப் பற்றிக் கூறினார். தந்தி அடித்ததும் ரங்கநாத நாயுடு கொண்டு வந்து கொடுத்தார்.

வெங்கடப்பர் அனைவருக்கும் நன்றி கூறி விடை பெற்றதும்; மகனை அழைத்துக் கொண்டு ஈரோடு புறப்பட்டார்.