உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தை பெரியார் சிந்தனைகள்/1. கடவுள் சமயம் பற்றிய சிந்தனைகள்

விக்கிமூலம் இலிருந்து
முதற்பொழிவு
நாள்: 26.2.2001 முற்பகல்
தந்தை பெரியார் சிந்தனைகள்

தலைவர் அவர்களே,
அறிஞர் பெருமக்களே
மாணக்கச் செல்வங்களே

டாக்டர் சி. அ.பெருமாள் அறக்கட்டளைச் சொற்பொழிவுத் திட்டத்தில் உங்கள் முன் நிற்கின்றேன். டாக்டர் இரா. தாண்டவனிடமிருந்து அழைப்பு வந்ததும் எதைப்பற்றிப் பேச வேண்டும் என்பதுபற்றிச் சிந்தித்தேன். முடிவாக 'தந்தை பெரியார் சிந்தனைகள்' என்பதுபற்றி பேசலாம் என உறுதி கொண்டேன். என் மாணாக்கர் வாழ்வில்- நான் அறிவியல் மாணாக்கன்- என் சிந்தனையைத் தூண்டியவர்கள் எனக்குக் கணிதம், அறிவியல் கற்பித்த பேராசிரியப் பெருமக்கள் (1934-1939) நன்முறையில் அமைந்தமையால் அறிவியலில் முதன் வகுப்பு- கல்லூரியில் முதல்நிலை- மாநிலத்தில் மூன்றாம் நிலையில்- தேர்ச்சியடைய முடிந்தது. ஆனால் பொதுவாழ்வில் என் சிந்தனையைத் தூண்டி அது வளரக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியார்தான் என்பதை இன்றளவும் நீள நினைந்து பார்க்கின்றேன். ஆகவே அவரே எனக்குப் பேச்சுத்தலைப்பாக அமைந்தார். 1934-39 இல் நான் புனித சூசையப்பர் கல்லூரியில் பயின்றபோது திருச்சி நகரமண்டப (town Hall) மைதானத்தில் நடைபெறும் கூட்டங்களில் தந்தை பெரியார் அவர்கள் பேசும் பேச்சுகள் என் மனத்தை அதிகமாகக் கவர்ந்தன; தவறாமல் அவர்தம் பேச்சுகளை உன்னிப்பாகக் கேட்டு வந்தேன். அவை யாவும் இளைஞர் மனத்தை ஈர்க்கக் கூடியனவாக அமைந்திருக்கும்.

இந்த அறக்கட்டளை நாயகராக இருக்கும் டாக்டர் சி. அ. பெருமாள் அவர்களை 1975 முதல் அறிவேன். நான் திருப்பதியில் பணியாற்றியபோது இப்பெருமகனாரும் இவர்தம் கெழுதகை நண்பர் திரு.J. இராமசந்திரன் அவர்களும் (முதல்வர் மாநிலக் கல்லூரி) திருப்பதிக்கு வருவார்கள். என் இல்லத்திற்கருகில் குடியிருந்த டாக்டர் K. கமலநாதன் (பேராசிரியர் அரசியல் துறை) இல்லத்திற்கு வருவர். பேசி அளவளாவுவோம். அப்பொழுதே இருவரும் துணை வேந்தர்களாக உயர்வர் என என் மனம் எண்ணியதுண்டு. ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது; மூன்றாண்டு மதுரை-காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றினார்.

நண்பர் டாக்டர் சி. அ.பெருமாள் அவர்கட்கு அந்த வாய்ப்பு வரவில்லை; அஃது அவருக்கு இழப்பு ஒன்றுமில்லையாயினும், அவர்தம் சீரிய கல்விப் பணியைத் தமிழர்கள் இழந்தனர். டாக்டர் பெருமாள் ஒரு பெரிய சிந்தனையாளர் என்பதற்கு அவர் கொணர்ந்த "மதிப்பியல் பேராசிரியர் திட்டம்" ஒன்றே சிறந்த சான்றாக அமைகின்றது. இத்திட்டம் உண்மை உழைப்பாளர்கட்குத் தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு தருகின்றது. அத்திட்டத்தில்தான் அடியேன் “வாழ்நாள் மதிப்பியல் பேராசிரியராக" (தமிழ் இலக்கியத்துறையில்) பணியாற்றுகிறேன். மூன்று பிஎச்டி மாணாக்கர்கட்கு வழிகாட்டியாக இருக்கலாம் என்ற வாய்ப்பும் பல்கலைக்கழகம் தந்துள்ளது. இரு ஆசிரியப் பெருமக்கள் ஆய்ந்து வருகின்றனர். டாக்டர் சி. அ.பெருமாளும் மதிப்பியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்; மாணாக்கர் உலகத்தில் சிறந்த செல்வாக்குடன் திகழ்கின்றார். 1983-இல், இவர் துணைவேந்தராக வந்திருந்தால் பல்கலைக்கழகம் பல்வேறு திசைகளில் முன்னேற்றம் கண்டு திகழும் என்பது என் கருத்து. இஃதுடன் இஃது நிற்க.

தந்தை பெரியார் சிந்தனைகளை மூன்று தலைப்புகளில் (1) கடவுள், சமயம்பற்றிய சிந்தனைகள் (2) சமூகம்பற்றிய சிந்தனைகள் (3) மொழிபற்றிய சிந்தனைகள் என்று மூன்று நாள் பேசத் திட்டமிட்டுள்ளேன். இதற்கு நல்ல ஏற்பாடுகள் செய்த டாக்டர் இரா. தாண்டவன் (பேராசிரியர், துறைத்தலைவர், அண்ணா வாழ்வியல் மையம்) அவர்கட்கு மிக்க நன்றி.

1. கடவுள் சமயம் பற்றிய சிந்தனைகள்

முதற்பொழிவாக இந்தத் தலைப்பில் பேசத் தொடங்குவதற்கு முன் தந்தை பெரியாரைப்பற்றி அறிமுகமாகச் சில கூறுவேன்.

(1) இலக்கண நூற்பாபோல் பாவேந்தர் பாரதிதாசனின் அறிமுகம் இது!

அவர்தாம் பெரியார்
அன்பு மக்கள் கடலின் மீதில்
அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்

மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு
வஞ்ச கர்க்கோர் கொடிய நெருப்பு
மிக்க பண்பின் குடியி ருப்பு
விடுத லைப்பெரும் படையினர் தொகுப்பு!

தில்லி எலிக்கு வான்ப ருந்து
தெற்குத் தினவின் படைம ருந்து
கல்லா ருக்கும் கலைவி ருந்து
கற்ற வர்க்கும் வண்ணச் சிந்து!

சுரண்டு கின்ற வடக்க ருக்குச்
சூள்அ றுக்கும் பனங்க ருக்கு !
மருண்டு வாழும் தமிழ ருக்கு
வாழ வைக்கும் அருட்பெ ருக்கு !

தொண்டு செய்து பழுத்த பழம்;
தூய தாடி மார்பில் விழும்;
மண்டைச் சுரப்பை உலகு தொழும்;
மனக் குகையில் சிறுத்தை எழும்!

தமிழர் தவம் கொடுத்த நன்கொடை
தன்மானம் பாயும் தலை மேடை.[குறிப்பு 1]

பாவின் சொல், சொற்றொடரின் பொருள் 'பொரி மத்தாப்பு' போல் சீறி எழுவதைக் கண்டு மகிழலாம்; அந்த ஒளியில் தந்தை பெரியாரின் உருவத்தை மானசீகமாகவும் காணலாம்.

(2) நான் நெருக்கமாகப் பழகினவரையில் என் அறிமுகம் இது: கல்லூரியில் படித்த காலத்தில் (1934-39) அவருடைய சொற்பொழிவைக் கேட்டேன்[குறிப்பு 2]; குடியரசு, விடுதலை இதழ்களில் வந்த அவருடைய கட்டுரைகளைப் படித்து அநுபவித்தேன்; நேரில் பேசினது இல்லை. துறையூரில் என் முயற்சியால் தொடங்கப்பெற்ற உயர்நிலைப் பள்ளியில் முதல் தலைமையாசிரியராக இருந்த காலத்தில் அவரிடம் நெருங்கிப் பழகினேன்[குறிப்பு 3]. தேவாங்கர் தெருமக்கள் எல்லாம் சுயமரியாதைச் கட்சியினர்; அவர்களில் முக்கியமானவர் அரங்கசாமி செட்டியார்; அவர் வீட்டில்தான் அய்யா அவர்கள் தங்குவதுண்டு. ஆண்டிற்கு ஆறு, ஏழு முறை அய்யா அவர்கள் கட்சி வேலையாகவும், திருமணம் முதலியவை நடத்தவும் வருவதுண்டு. பள்ளி விஷயமாகவும், சொந்த விஷயமாகவும், பல்வேறு உதவிகளையும் ஆலோசனைகளையும் அய்யா அவர்களிடம் பெற்றதுண்டு. அவை காரணமாக நெருங்கிய பழக்கம்.

(i) ஏழை மாணாக்கர்கட்கு உதவும் வகையில்: என் வாழ்வில் இதனை முக்கிய நோக்கமாகக் கொண்டவன். இதைப்பற்றிப் பெரியார்:

(அ) ‘நீங்கள் உண்மையைக் கடைப்பிடிப்பவர்களாக இருக்கின்றீர்கள். நெற்றியில் விபூதி குங்குமத்துடன் திகழ்கின்றீர்கள்! இந்தச் சைவக்குறிகளுடன் நல்லாடை அங்கவஸ்திரம் போட்டுக் கொண்டு திருவரங்கம் உயர்நிலைப் பள்ளி-E.R. உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லுங்கள். அந்தந்த தலைமையாசிரியர்களிடம் ‘நான் புதியன்; இளைஞன். ஏழைமாணாக்கர்கட்கு எவ்வெவ்வகையில் எல்லாம் உதவலாம்’ என்று கூறி வேண்டுங்கள். அவர்கள் பார்ப்பன மாணாக்கர்களை மனத்தில் வைத்துக்கொண்டு உதவுவதைக் கூறுவார்கள். நீங்கள் அம் முறையை நம் மாணாக்கர்கட்கு உதவுவதற்குப் பயன்படுத்துங்கள்’ என்று கூறினார் இதில் நல்ல பயன்கிடைத்தது.

(ஆ) பிற்போக்கு இனத்தைச் சேர்ந்த மாணக்கர்களின் பெற்றோர் குறைந்த வருவாயைக் காட்டி வட்டாட்சியரிடம் சான்றிதழ் பெற்றுத் தம் பிள்ளைகட்கு அரைக்கட்டணச் சலுகைக்குக் கோரியிருந்தனர். அவர்கள் இரண்டாயிரத்திற்கு மேல் வருமான வரியும் ஐயாயிரத்திற்கு மேல் விற்பனை வரியும் கட்டுகின்றனர் என்பதை அறிவேன். இதனைப் பெரியாரிடம் தெரிவித்தபோது ‘இதில் தலைவிட்டு பொதுமக்கள் விரோதத்தைச் சம்பாதிக்க வேண்டா; சான்றிதழ்கள் இருந்தால் சலுகையை வழங்கிவிடுங்கள்’ என்று அறிவுரை கூறி திசைதிருப்பி உதவினார்.

(இ) மேல் வகுப்பு தொடங்குவதற்கு இசைவு பெறுவதற்காக கோவை சென்று மண்டலப் பள்ளித்தணிக்கையாளரைச் சந்தித்துத் திரும்பும்போது ஈரோட்டில் இறங்கி பெரியாரைச் சந்தித்து அவர் பராமரிப்பில் இருந்து வரும் ஈரோடு மகாசனப் பள்ளியின் நிர்வாகக் குழு அமைப்பது பற்றிய விதிகளின் நகல் வாங்கச் சென்றேன். பெரியார் ஊரில் இல்லை. பள்ளித் தலைமையாசிரியர் பெருமாள் முதலியார். அவரைக் கேட்ட போது அவர் பள்ளிக்காரியப் பொறுப்பாளர் அலுவலகத்துக்கு ஆளை அனுப்பி நகல் வாங்கி வருமாறு பணிக்க அலுவலகப் பொறுப்பிலிருந்த ஒரு பார்ப்பனச் சிறுவன் காரியப் பொறுப்பாளர் இசைவின்றித் தரமுடியாது என்று மறுத்து விட்டார். துறையூருக்குத் திரும்பியதும் பெரியாரின் ஈரோட்டு முகவரிக்குக் கடிதம் எழுதினேன். ஒருவாரத்தில் விதிகளின் நகலைப் பதிவு அஞ்சலில் அனுப்பி வைத்து உதவினார். இங்கனம் எத்தனையோ முறைகளில் தந்தை பெரியாரின் உதவிகள் பெற்றுப் பள்ளி வளர்ச்சியில் பயன்பெற்றேன்.

(ii) மூன்று சுவையான நிகழ்ச்சிகள்: தந்தை பெரியாரை நினைக்கும் போது மூன்று சுவையான நிகழ்ச்சிகள் நினைவிற்கு வருகின்றன.

(அ) ஒரு சமயம் பெரியார் வாழ்வில் நிகழ்ந்த 'மிதியடி வரலாறு' பற்றிக் கேட்டேன். ஒரு சமயம் அவர் திறந்த மகிழ்வுந்தில் சென்று கொண்டிருந்தபொழுது அவர்மீது அவருக்குப் பிடிக்காத ஒருவன் ஒரு மிதியடியை வீசினான். அஃது அவர் மடியின்மீது விழுந்தது. அவர் அதை எடுத்து நோக்கியபோது அது புதியதாக இருந்தது. வண்டியோட்டியிடம் ‘வண்டியைத் திருப்பு; மற்றொன்று சாலையில் கிடக்கும்; அதை எடுத்து வரலாம்! அது ஒருவருக்கும் பயன்படாது; இது நமக்கும் பயன்படாது. இரண்டும் நம் கைக்குக் கிட்டினால் நமது அலுவலகத்தில் யாராவது பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று கூறி சாலையில் கிடந்த மிதியடியை எடுத்து வந்தார்.

தந்தை பெரியாரைப் பார்த்து ‘செருப்பு உங்கள்மீதுப் பட்டும் கோபம் வரவில்லையே ஏன்?’ என்று கேட்டேன். அதற்கவர் ‘தம்பி, பொதுத்தொண்டில் இருப்பவர்கட்கு இது போன்றவை அடிக்கடி நிகழக்கூடியவை. படித்தவனாக இருந்தால் கூட்டத்தில் மறுத்துப் பேசுவான்; அல்லது செய்தித்தாளில் மறுப்பு தெரிவிப்பான். இவன் படிக்காத முட்டாள். இவன் தன் எதிர்ப்பைச் செருப்புமூலம் காட்டினான். இதில் கோபப் படுவதற்கு என்ன இருக்கின்றது?’ என்று அமைதியாகக் கூறினார் ‘பெரியார், பெரியாரே’ என்பது என் அறியா மதிக்குத் தெளிவாயிற்று.

(ஆ) பிறிதொரு சமயம்: தந்தை பெரியாரிடம் “ஆத்திகர் ‘கடவுள் உண்டு’ என்கின்றார்கள். தாங்கள் ‘கடவுள் இல்லை’ என்கிறீர்கள். அவர்கள் ஏதோ ஒரு பொருளை நினைத்து உண்டு என்கிறார்கள். அவர்கள் பேச்சில் உண்டு என்பதன் எழுவாய் ‘கடவுள்’ நீங்கள் ‘இல்லை’ என்கிறீர்கள்? எந்தப் பொருளை நினைத்து இல்லை என்கிறீர்கள்?” என்று வினவினேன். அவர் சிறிதுசிந்தித்து ‘ஒன்றும் தெரியவில்லையே. கிழவனை மடக்கி விட்டீர்களே’ என்று சொல்லிச் சிரித்தார். ‘நான் சொல்லட்டுமா?’ என்றேன். ‘சொல்லுங்கள்’ என்றார். ‘அய்யா, அவர்கள் விநாயகர், முருகன், சிவபெருமான், திருமால், துர்க்கை முதலிய எண்ணற்ற தெய்வங்களை நினைந்து கடவுள் உண்டு என்கிறார்கள். நீங்கள் அவர்கள் எழுவாயாகக் கொண்டுள்ள அனைத்து தெய்வங்களையும் ஒன்றாகக் கட்டி, உங்கள் பக்கம் இழுத்து அதையே எழுவாயாகக் கொண்டு ‘இல்லை’ என்கிறீர்கள் என்றேன். ‘ஆமாம், ஆமாம்; அதுதான், அதுதான்’ என்று சொல்லி, ‘ஒன்றையும் நினையாமல் ஏதோ சொல்லிக் கொண்டு வந்தேன். நீங்கள் சிந்தித்துப் பேசுகிறீர்கள். உங்கள் சிந்தனை வளர்க’ என்று வாழ்த்தினார். அந்த வாழ்த்துதான் இன்றளவும் என்னைச் சிந்திக்கத் தூண்டுகின்றது.


(இ) பெரியார் தொடர்பு அதிகம் இருந்ததால் உள்ளூர்ப் பொதுமக்களில் சிலர் மாவட்டக்கல்வி அதிகாரிக்கு “தலைமையாசிரியர் நாத்திகர்; ‘கடவுள் இல்லை’ என்று மாணாக்கர்களிடம் பிரச்சாரம் செய்கின்றார். இவர் பொறுப்பில் பள்ளி இருந்தால் மாணாக்கர்கள் நாத்திகராவார்கள். இவரை உடனே நீக்க வழிவகைகள் செய்யவேண்டும்’ என்று ‘அநாமதேயக் கடிதங்கள்’ அனுப்ப, அவை சமாதானம் கேட்டு எனக்கு வந்தன. இஃது உள்ளூர் காங்கிஸ்காரர்களின் ‘திருவிளையாடல்’ என்ற கிசுகிசுப்பு மூலம் அறியமுடிந்தது.


அப்போது துறையூர் காங்கிரசுத்தலைவர் திரு சுவாமிநாத உடையார். அவர் சிறந்த உத்தமர். அதிகம் படிக்காதவராயினும் உயர்ந்த பண்பாட்டாளர். அவரை நன்கு அறிவேன். அவரிடம் செய்தியைச் சொல்லி நிலையை விளக்கினேன். அவர் கூறியது: “ஹெட்மாஸ்டர், நீங்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்லர் என்பதை ஊரே அறியும். எல்லாக் கட்சியிலும் உள்ள நல்லவர்களிடம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பதை அறிவேன். மாணாக்கர்களும் ஊரில் பெரியவர்களும் உங்களிடம் நல்ல மதிப்பு வைத்துக் கொண்டிருப்பவர்கள்; உங்களைப் பற்றி மக்கள் பெருமையாகப் பேசுவதையும் அறிவேன்” என்று ஆறுதல் கூறினார். விரைவில் கட்சியில் உள்ள சில்லறைப் பேர்வழிகளை அடக்கிவிட்டார். கல்வித்துறைக்கும் சமாதானம் எழுதி விட்டேன். இந்தப்பிரச்சினை பின்னர் தலைதுாக்கவில்லை. நிற்க.


இனி தந்தை பெரியாரின் கடவுள் சமயம் பற்றிய சிந்தனைகளில் கவனம் செலுத்துவோம். பெரியார் கருத்துப்படி நம் நாட்டிற்கு அவசியமாக வேண்டியவை மூன்று அவை (1) மூடநம்பிக்கை ஒழிய வேண்டும்; (2) அறிவுக்குச் சுதந்திரமும் விடுதலையும் ஏற்பட்டு அது வளர்ச்சிபெற வேண்டும்; (3) சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட வேண்டும். என்பவையாகும்.

மூட நம்பிக்கைக்கு மூலாதாரம் கடவுள் என்பது அவர்கருத்தாதலால் இறைமறுப்புக் கொள்கை அவரது பேச்சாகவும் அமைகின்றது; மூச்சாகவும் இருந்து வந்தது. அவர்தம் வாழ்நாளெல்லாம் இறைமறுப்புக் கொள்கையை நிலை நிறுத்துவதற்காக ஆயிரக்கணக்கான கூட்டங்களில் பேசிவந்தார்; குடியரசு இதழ்களில் 'சித்திரபுத்திரன்' என்ற புனைபெயரால் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதிவந்தார்.


பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வி போன்ற வாய்ப்புகள் தந்தை பெரியார் அவர்கட்குக் கிட்டாதது மனித குலத்திற்கு ஒரு மாபெரும் நன்மையாக வாய்ந்தது என்று கருதுவதற்கு இடமுண்டு. அதனால்தான் அய்யா அவர்கள் 'பகுத்தறிவுப் பகலவனாகத்' திகழ முடிந்தது. கல்விச்சாலையில் படித்திருந்தால் மனிதகுலம் சேமித்து வைத்திருக்கும் மரபுரிமை (Heritage) அவர் மனத்தில் திணிக்கப்பெற்றிருக்கும். அதனை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு ஒரு பெரும் புலவராகவோ, நாட்டமிருந்தால் ஒரு மாபெருங்கவிஞராகவோ வளர்ந்திருப்பார். ஏதாவது ஓர் அலுவலை மேற்கொண்டு பாவேந்தர் சொல்வது போல,

தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்பேன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளங்கொண்டு
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணனாகப்[குறிப்பு 4]

போயிருப்பார். இரசிகமணி டி.கே.சி. அவர்களும் பள்ளி கல்லூரிக் கல்வியைப் பற்றிக் குறைவான எண்ணங்கொண்டவர். அங்கு ஆசிரியர்கள் மாணாக்கனின் புதுப்போக்குடமையை (orginality)க் கொன்றுவிடுவர் என்ற கருத்துடையவர். இதில் ஓரளவு உண்மை உண்டு என்பதைக் கல்வித்துறையில் நீண்டகாலம் பணியாற்றி வந்த பட்டறிவால் அறிவேன்.


பகுத்தறிவுப் பகலவனானதலால் மனம் பொது நலத்தை நாடியது; இராமானுசருக்கு மனிதகுலத்தின்மீது இருந்த அக்கறையைப்போல், பாவேந்தர் சொல்லுகிறபடி,

தூயஉள்ளம் அன்புள்ளம் பெரியஉள்ளம்,
தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்னும்
தாயுள்ளார்.[குறிப்பு 5]

கொண்டார். அதில் தனி இன்பமும் கண்டார். தன் வாழ்வையெல்லாம் மனிதகுல மேம்பாட்டுக்காகவே அர்ப்பணித்து மகிழ்ந்தார். இனி தலைப்புக்கு வருகிறேன். சமயங்கள் கடவுளைப் பற்றிக் கூறும் கருத்துகளைக் காண்போம். அப்போதுதான் அய்யா அவர்களின் கருத்துகள் தெளிவாகும்.


1. கடவுள் - பொது

ஒவ்வொரு சமயமும் கடவுளைப் பற்றிக் கருதுகின்றது. எல்லாச் சமயங்களும் உருவழிப்பாட்டைச் சார்ந்தவையாயினும் இதில் சைவமும் வைணவமும் தனித்தன்மை வாய்ந்தவை.

(1) சைவம்: சைவம் சிவபெருமானையும் சிவக்குமாரர்களையும் கடவுளர்களாகக் கொண்டது. இந்திரியங்களின் துணைக் கொண்டு அறியப்பெறுவது உலகம். இவ்வுலகை உள்ளபடி காண்பவன் கடவுளையே காண்கின்றான். கடவுள் எத்தகையவர் என்று இயம்புவதன் மூலம் இவ்வுலக நடைமுறையே விளக்கப் பெறுகின்றது. குடும்பிகளுள் சிவபெருமான் ஒரு சிறந்த குடும்பி. உலகெலாம் அவர் குடும்பம். அது தன் முறை பிறழாது நடைபெறுகின்றது. அதன் முறை பிறழாத நடப்பே அவரது ஆட்சி. சிதறடையும் உலகம் அவர் ஆட்சிக்குட்பட்டு ஒன்று சேர்ந்துள்ளது. முரண்பாடுகளெல்லாம் அவரது ஆணையால் ஒழுங்குபாடு பெறுகின்றன. அவரது குடும்பத்தை ஓர் எல்லையில் அடக்கி வைத்துப் பார்த்தால் இவ்வுண்மைகள் விளங்கும். இங்கு நாம் அனைத்தையும் உருவகங்களாகக் காண்கின்றோம்.

திருக்கயிலாயம் சிவனது உலகம். அங்கு தம் தேவி பார்வதியுடன் வீற்றிருக்கின்றார். பரிவாரங்கள் அனைத்தும் அவரைச் சூழ்ந்துள்ளன. மனை வாழ்க்கையின் பொறுப்பு, பேறு, பண்பு அனைத்தும் ஆங்கு ஒன்று சேர்ந்து மிளிர்கின்றன. பேறுகளில் தலையாயது மக்கட்பேறு. ஒருவருக்கு மகன் என்று ஒரு பதுமை பிறந்து விட்டால் போதாது. அது அறிவறிந்த மகனாக அமைதல் வேண்டும். சிவபெருமானின் முதல் மகன் கணபதி. ஞானக்களஞ்சியமாகத் திகழ்கின்றான். இனி, இவனுக்கு உருவம் போதாது. அது வெறும் சப்பாணி; செயலுக்கு உதவாது. மூத்தவனுக்கு அநுசரணையாக ஆற்றலும் துடுக்கும் வடிவெடுத்தவனாகின்றான் இளையவன் கார்த்திக்கேயன். அறிவும் ஆற்றலும் எவனிடத்து ஒன்று சேர்ந்து ஒளிர்விடுகின்றனவோ அவனே பண்புடைய மகனாகின்றான். இவ்விரண்டு மேன்மைகளைத் தனித்தனியே விளக்குவதற்கு அவை இரு பிள்ளைகளாக உருவகப்படுத்தி விரிவாக விளக்கப்பெறுகின்றன. அறிவும் ஆற்றலும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவன், சிவனை அறியவல்லவனாகின்றான். அவனே உண்மையில் சிவகுமாரனாகின்றான். சிவபெருமான் எதிரே அவரது ஊர்தியாகிய காளையொன்று படுத்துள்ளது. இறைவனது இடப்பாகத்தில் அம்பிகை அமர்ந்துள்ளாள். அருகில் அவளடைய வாகனம் சிம்மம் உள்ளது. அப்பன் அருகில் மூத்தவன் கணபதியும் அம்மையின் மருங்கில் இளையவன் முருகனும் இடம் பெற்றுள்ளனர். தந்தை மூத்தவனையும் தாய் இளையவனையும் நேசித்தல்தானே இயல்பு! மூத்தவன் முன்னர் மூஞ்சுரு விளையாடுகின்றது. முருகன் மருங்கில் மயில் குலாவுகிறது. தந்தையின் மேனியில் பாம்பு நெளிந்து நெளிந்து ஊர்கின்றது. இடைஇடையே அது படமெடுத்தும் ஆடுகின்றது. மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இக்காட்சியில் அதிசயம் ஒன்றுமில்லை. ஐதிகத்துக்கு உட்பட்டுக் கன்னத்தைக் கரத்தால் அடித்துக் கொண்டு ‘அரஹரா’ என்று ஆரவாரித்து அண்ணலை வணங்குதலோடு அவர்களது பணிமுடிந்து விடுகின்றது.

சிந்தித்து நோக்குபவர்கட்கு இதில் வினோதம் ஒன்று தென்படும். காளையும் அதனைக்கொன்று உண்ணும் சிங்கமும் அருகருகே அமர்ந்துள்ளன. அவற்றின் இயல்புகள் ஒன்றுக் கொன்று முரண்பட்டவை. ஒரே உலகில் அவை வாழ்ந்திருக்கின்றன. வருந்தும் தன்மை காளையிடமும் வருத்தும் தன்மை சிங்கத்திடமும் உள்ளன. தன் உயிருக்கு எப்பொழுது வேண்டுமானாலும் கேடுவரலாம் என்ற கவலை காளைக்கு இருந்து வரும். மூத்தவனுடைய வாகனமாகிய எலி துள்ளிக் குதித்து விளையாடித் தன் தலைவனுக்கு படைக்கப்பட்டிருக்கும் உணவு வகையில் உரிமை பாராட்டுகின்றது. நினைத்த பொழுதெல்லாம் அதில் சிறிது கொரித்துத் தின்கின்றது. இங்குமங்கும் ஒடித்திரியும் எலியின்மீது திடீரென்று பாம்பு பாய்ந்து விடக்கூடும். ஆனால் பாம்பு பயமற்றுத் திரிதற்கு இடம் இல்லை. ஏனென்றால் அச்சமயம் மயில் குதித்தோடி வந்து பாம்பைக் குத்திக்கொல்லவும் கூடும். இங்குச் சிற்றுயிர்கட்கிடையே இத்தனை விதமான போராட்டங்கள் எழக்கூடிய நிலைகள் உள்ளன.

இனி பேருயிரின் பிரதிநிதியான பிள்ளையாரும் குழந்தை வேலனும் விவகாரமற்ற சாந்த மூர்த்திகள் அல்லர். மூத்தவனுடைய முறம் போன்ற காதைக்கிள்ளுவதற்கு கள்ளத்தனனமாக மெதுவாக முருகன் அருகில் வரக்கூடும். அதனைத் தனது மதிநுட்பத்தால் குறிப்பறியும் கணபதியோ இளையவன் தலையில் ஓங்கிக் குட்டி விடுவான். சிறார் சண்டைமூண்டு விடும். ஆக சிவனாருடையது சாந்தக்களை தட்டும் குடும்பம் அன்று. இதனைக் கற்பனையில் காணும் சிவப்பிரகாச அடிகள் ஒரு பாடலில் தன் கற்பைனையை விரிக்கின்றார்.

அரனவன் இடத்திலே ஐங்கரன் வந்துதான்
'ஐயஎன்ன செவியை மிகவும்
அறுமுகன் கிள்ளினான்’ என்றே சிணுங்கிடவும்
அத்தன்வே லவனை நோக்கி
விரைவுடன் வினவவே, ‘அண்ணன் என்சென்னியில்
விளங்குகண் எண்ணினன்’ என,
வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து ‘நீ அப்படி
விகடம் என்செய் தாய்’ என
‘மருவும்என் கைந்நீள முழம் அளந் தான்’ என்ன,
மயிலவன் நகைத்து நிற்க,
மலையரையன் உதவவரும் உமையளை நோக்கிநின்
மைந்த ரைப்பா ராய்’ என
கருதரிய கடலாடை உலகுபல அண்டம்
கருப்பெறாது ஈண்ட கன்னி
கணபதியை அருகழைத்து, அகமகிழ்வு கொண்டனள்
களிப்பு டன்உமை காக்கவே[1]

என்ற பாடலில், எந்த வேளையில் வேண்டுமானாலும் விவகாரம் வந்துவிடும் என்பது தெளிவு.

வாழ்க்கை என்பதே விவகாரம் மலிந்த ஒன்று. தொல்லைகள் பல அதில் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆயினும் அதைப் பற்றி அப்பெருமான் அல்லற்படுவதில்லை. மனை வாழ்க்கையை மாற்றியமைக்கவேண்டும் என்ற ஏக்கமும் அவருக்கு இல்லை. உள்ள ஏற்பாடே உயர்ந்தது என்ற சித்தாந்தம் அப்பிரானுக்கு நெடுநாள் ஆய்வின் பலனாய்த் தோன்றியது போலும்.

கயிலயங்கிரியில் மட்டுந்தான் இந்நிலை என்று கருதவேண்டா. காணுமிடமெங்கும் இயற்கையில் இதே காட்சிதான் தென்படுகின்றது. உலக வாழ்க்கையில் முரண்பாடுகளுக்கு முடிவு இல்லை. இன்பத்தை நாடுபவனைத் துன்பம் துரத்துகிறது. நட்பை நாடுகிறவனுக்கு பகை வந்து சேர்கின்றது. அமைதி தேடுபவனுக்கு அலைபாயும் நிலைகுலைவு நேரிடுகின்றது. இந்த மாறுபாடுகளுக்கு இடையில் வாழ்க்கை உறுதிப்பாடடைய வேண்டும். உறுதிப்பாடே இல்வாழ்க்கையின் நோக்கம். யாரிடத்து உறுதிப்பாடு உண்டோ அவர் தக்கார். யாரிடத்து அஃது இல்லையோ அவர் தகவிலர். இயற்கையின் அமைப்பும் அதில் மனிதன் கடைப்பிடிக்கும் இல்லறம் என்னும் நல்லறமும் சேர்ந்து அளிக்கின்றன. பார்வதி சமேதராகிய பரமசிவனது விநோதனமான குடும்பத்தினின்று நாம் பெறும் பாடம் இதுவே. இத்துடன் இது நிற்க.

இன்னொரு விதமாக நோக்குவோம். சைவம் இறைவனைப் 'பதி' என்று பேசும். பதிக்கு சிறப்பியல்பு, பொது இயல்பு என்ற இரண்டு இயல்புகள் உண்டு. இயல்பு-இலக்கணம். சிறப்பியல்பைச் சொரூப (தன் இயல்பு) இலக்கணம் என்றும், பொது இயல்பைத் தடத்த இலக்கணம் என்றும் வழங்குவர் சித்தாந்திகள். தடத்தம்-அயலிலுள்ள பொருட்கண் இருப்பது. பிறிதொரு பொருளின் சார்பினால் மாறுபடாத தன்மையுடைய பதியிடம் றிதொன்றை நோக்காது தன்னையே நோக்கி நிற்கும் நிலையில் காணப்பெறும் இயல்புகளே பதியின் சொரூப இலக்கணம் ஆகும். பதி உலகத்தை நோக்கி நிற்கும் நிலையில் காணப்பெறும் இயல்புகள் தடத்த இலக்கணம் ஆகும். உயிர்களும் ‘உலகம்’ என்பதனுள் அடங்கும்.

(அ) பதியின் சொருப இலக்கணம்: இது குணம் குறிகளைக் கடந்த நிலை. பதி ஒன்றே; அதாவது அஃது ஏகமாய் இருக்கும் எல்லாவற்றிற்கும் மேலானது; அது காணப்படும் உருவம் அற்றது; காலம் இடம் இவற்றால் அளவுபடுத்தப் பெறாதது; குணங்களும் இல்லை; அடையாளங்களும் இல்லை; மலமற்றது; என்றும் அழியாதிருப்பது; ஆன்மாக்களுக்கு அறிவாய் நிற்பது; சலிப்பற்றது; அளவுபடாததால் போக்குவராகிய அசைவு இல்லாதது. காட்சிக்கும் கருத்திற்கும் அப்பாற்பட்டது. இந்நிலையை,

குணம்இ லான்குணம் குறிஇலான்
குறைவிலான் கொடிதாம்
புலம்இ லான்தனக் கென்னஓர்
பற்றிலான் பொருந்தும்
இலம்இ லான்மைந்தர் மனைவிஇல்
லான்னவன்? அவன்சஞ்
சலம்இ லான், முத்தி தரும்பர
சிவன் எனத் தகுமே [2]

என்ற தாயுமான அடிகளின் திருப்பாடல் விளக்குவதைக் காணலாம்.

(ஆ) பதியின் தடத்த இலக்கணம்: இது குறிகுணங்களோடு கூடிய நிலை. தன்னையே நோக்கி நிற்கும் ‘பரசிவம்’ அந்நிலையினின்றும் உலகத்தை நோக்குங்கால் தனது சிறப்பியல்புகளில் ஒன்றான பெருங்கருணை காரணமாக உயிர்களின் பொருட்டுத் தானே தனது விருப்பத்தால் தனது ஆற்றலை (சக்தியை) கொண்டு பல்வேறு நிலைகளையுடையதாக இருக்கும். இந்நிலைகளே பதியின் தடத்த இலக்கணமாகும்.

இதனால் சொரூப நிலையில் பதி 'சிவம்' என்றும், தடத்த நிலையில் 'சக்தி' என்றும் பேசப்படும். சொரூபநிலையில் சக்தி செயற்படாது அடங்கி இருக்குங்கால் பதி 'சிவம்' என ஒன்றேயாக இருக்கும். உலகில் சிலர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுக் களைத்துப் போய் படுக்கும் போது ‘சிவனே என்று கிடக்கின்றேன்’ என்று சொல்லுவதில் இக்கருத்து அடங்கியிருத்தல் காணப்படுவதை அறியலாம். சக்தி செயற்படும் நிலையில், சிவம் அதனோடு அச்செயலையெல்லாம் உடன் இயைந்து இயற்றி நிற்றலால் 'சிவமும் சக்தியும்' அம்மை அப்பனாய்- மாதொருபாகனாய்- தையல் பாகனாய்- இரண்டாய்த் தோற்றம் அளிக்கும்.

தடத்த நிலையில் பதி சக்தியினால் பலநிலைகளையுடையது. இந்த நிலையில் அதற்கு உருவம் உண்டு; தொழில் உண்டு; அவற்றிற்கேற்ற பலப்பல பெயர்களும் உண்டு. ஆயினும், இவையனைத்தும் இறைவனின் அருள் காரணமாக உண்மையால் கொண்டனவேயன்றி வெறும் கற்பனையல்ல என்பது ஈண்டு அறியப்பெறும். சொரூப இலக்கணம் எப்படி உண்மையோ, அப்படியே தடத்த இலக்கணமும் உண்மையாகும்.

(இ) தடத்தநிலையில் சிவற்றைக் காட்டுதல் பொருத்தமாகும். சொரூப நிலையில் பதி 'பரசிவம்' என நிற்குங்கால் அதன் சக்தி 'பராசக்தி' என வழங்கப்பெறும். அஃது உயிர்களின் அறிவை நோக்கி நிற்கும் அறிவு வடிவமானது. அந்த அறிவே சக்தியின் சொரூபம். பாரதியாரின் சக்தி வழிபாடெல்லாம் இந்தச் சக்தியை நோக்கியேயாகும் என்று கருதுவதில் தவறில்லை. மேலும்,

சித்தத்தி லேநின்று சேர்வ துணரும்
சிவசக்தி தன்புகழ் செப்பு கின்றோம்;
இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும்
எமக்குத் தெரிந்திடல் வேண்டுமென்றே.[3]

என்ற தாழிசையிலும் இந்த நிலையினைக் காணலாம்.

பதி உலகத்தை நோக்குங்கால் மேற்குறிப்பிட்ட பராசக்தியின் ஒரு சிறு கூறு உலகத்தைத் தொழிபட முற்படும். அதனை 'ஆதி சக்தி' என வழங்குவர்.[குறிப்பு 6] இது, சிவம் தோன்றாது உலகமே தோன்றுமாறு பிறப்பு இறப்புகளில் செலுத்தி நிற்றலால் 'திரோதான சக்தி' (திரோதானம்-மறைப்பது) என்ற திருப்பெயரையும் பெறுகின்றனது. இந்தச் சக்தியையே பாரதியார்,

பரிதி யென்னும் பொருளிடை யேய்ந்தனை;
பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை;
கரிய மேகத் திரள்எனச் செல்லுவை;
காலு மின்னென வந்துயிர் கொல்லுவை;
சொரியும் நீரெனப் பல்லுயிர் போற்றுவை;
சூழும் வெள்ள மெனஉயிர் மாற்றுவை;
விரியும் நீள்கடல் என்ன நிறைந்தனை;
வெல்க காளி யெனதம்மை வெல்கவே.[4]

என்ற பாடலை அடுத்து வரும் பாடல்களெல்லாம் இந்தச் சக்தியையே குறித்தனவாகும் என்று கருதலாம்.

மேற்கூறியவற்றால் சொரூப நிலையில் இறைவனை தனக்கென்று ஓர் உருவும், தொழிலும், பெயரும் இல்லாதவனாயினும், தடத்த நிலையில் ஆருயிர்களின் பொருட்டுப் பலப்பல உருவமும் தொழிலும் பெயரும் உடையவனாகின்றான் என்பதை அறிய முடிகின்றது. இதனை அநுபூதி நிலையில் தெளிந்த மணிவாசகப் பெருமான்,

ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க் காயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ?[5]

என்று அருளிச் செய்துள்ளதை ஈண்டு நினைத்தல் தகும். இவை தடத்தநிலையேயன்றி கற்பனையாகாமையை அறிந்து தெளியலாம்.

(ஈ) இறைவனின் திருமேனி பற்றி: இறைவனின் திருமேனிப் பற்றி மேலும் சில கருத்துகளைத் தெரிவிப்பேன். இறைவனுடைய உருவத்திருமேனி 'போகவடிவம், யோகவடிவம், வேகவடிவம்' என்று மூவகைப்படும். போகவடிவம் உலக இன்பத்தைத் தருதற்பொருட்டு மணக்கோலம் கொள்ளுதல் போன்றவை. யோக வடிவம் ஞானத்தைத் தருதற்பொருட்டுக் குருமூர்த்தியாய் எழுந்தருளியிருத்தல் போன்றவை. வேகவடிவம் உலகத்தார்க்கு உண்டாகும் துன்பத்தைப் போக்கப் போர்க்கோலம் கொள்ளுதல் போன்றவையாகும். இறைவன் போகவடிவம் கொண்டாலல்லது உயிர்கட்குப் போகம் அமையாது; யோகவடிவம் கொண்டாலல்லது உயிர்கட்கு ஞானம் உதியாது; வேகவடிவம் கொண்டாலல்லது உலகிற்கு கல்லாலின் மரத்தின்கீழ் யோக்கியாய்- தட்சிணாமூர்த்தியாய்- எழுந்தருளியிருந்த காலத்தில் உயிர்கட்குப் போகம் முதலியவை அமையாதிருந்தமையைப் புராணங்கள் விரித்துப் பேசும். காமனை எரித்து உருவிலாளனாய்ச் செய்தது போன்ற கதை இதில் அடங்கும். இறைவன் திருப்பெருந்துறையில் குருவாய் எழுந்தருளித் தம்மை ஆட்கொண்ட அருமைப்பாட்டினை மணிவாசகப் பெருமானும்,[6] இறைவன் குருவாய் வந்தமையைத் தாயுமான அடிகளும் தத்தம் பாடல்களில் குறிப்பிடுவர்.[7]

(உ) நவந்தருபேதம்: இறைவனது திருமேனிகள் ஒன்பது வகையாகவும் பேசப்பெறும். அவை: ‘சிவம், சக்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுவரன், உருத்திரன் மால் அயன் என்பவை.[குறிப்பு 7] இவையே 'நவந்தரு பேதம்'. ஆகவே ஒருவனாகிய இறைவனே உலகத்தைச் செயற்படுத்த வேண்டி நவந்தரு பேதமாய் நிற்பன் என்பது அறியப்படும்.

இக்கூறியவற்றுள் முதலில் உள்ள ‘சிவன், சக்தி, நாதம், விந்து’ என்னும் நான்கும் அருவத் திருமேனிகள். இறுதியில் உள்ள ‘மகேசுவரன், உருத்திரன், மால், அயன்’ என்னும் நான்கும் உருவத்திருமேனிகள். இடையிலுள்ள ‘சதாசிவன்’ மட்டிலும் அருவுருவத் திருமேனி. உருவம் கண்ணுக்குப் புலனாவது; அதாவது நம்மனோர் கண்ணுக்குப் புலனாகாவிடினும் தவத்தோர் கண்ணுக்குப் புலனாவது. அருவம், அங்ஙனம் புலனாகாதது; எனினும் வரம்புபட்டு நிற்பது. அருவுருவம் கண்ணுக்குப் புலனாயினும் ஒளிப்பிழம்பாய் நிற்பதன்றிக் கை, கால் முதலியன இல்லாதது. இலிங்கவடிவமே அறிவுருவத் திருமேனி என்பது ஈண்டு அறியப்பெறும்.

சிவக்குமாரர்கள்: ஒருவர் கணபதி, மற்றொருவர் முருகன். இவர்கள் தோற்றத்தைப்பற்றியும் உருவங்களைப் பற்றியும் சமய இலக்கியங்கள் சாற்றுகின்றன.

(அ) கணபதி: இந்தியாவில் தோன்றியுள்ள சமயங்கள் அனைத்துக்கும் பொதுவாய் எழுந்தருளியிருக்கும் தெய்வம் கணபதி. இத்தெய்வத்தின் துணைக்கொண்டு தத்தம் தெய்வத்தை மக்கள் வணங்குகின்றனர். பெளத்த, திருமால் ஆலயங்களிலும் கணபதிக்கு இடம் உள்ளது. கெளமார சமயத்திலும் கணபதி வழிபாடே முன்னிற்கின்றது.

அரக்கர்களும் அசுரர்களும் செய்து வரும் அக்கிரமங்களைப் போக்க வழி காணுமாறு தேவர்கள் பரமசிவனை வேண்டினர். அப்பெருமான் அம்பிகையின் உதவியால் சிவசக்தியின் அருட்பிரசாதமாக ஆனைமுகன் உருவெடுத்தான். மனித உடல்- யானைத்தலை- இதற்கு வரலாறுகள் பல உண்டு. இவற்றில் அருவருக்கத் தக்க பல செய்திகளைத் தந்தை பெரியார் அவர்கள் எடுத்துக் காட்டிப் பரிகசிக்கின்றார்கள்.

இந்த உருவத்தில் அடங்கியுள்ள தத்துவமே மிக முக்கியமென்று கருதுகின்றனர் பக்தர்கள். தத்துவத்தை உருவகப்படுத்தியதில் அமைந்தது கணபதியின் வடிவம். 'ஓம்' என்னும் எழுத்து பலமொழிகளில் பல பாங்கில் எழுதப்பெற்றுள்ளது. அத்தனை எழுத்துகளுக்கும் பொது இயல்பு ஒன்று உண்டு. யானையில் காது, தலை துதிக்கை ஆகிய மூன்றும் சேர்ந்து ஓம் என்பதன் பொது இயல்பு ஆகின்றது. யானை முகத்தையுடைய கணபதி ஓங்கார மூர்த்தியாகத் திகழ்கின்றான். அவனுடைய தலையும் துதிக்கையும் அக்கோட்பாட்டை விளக்குகின்றன.

பிறகு அவனுடைய உடல் முழுவதும் 'துப்புஆர் திருமேனி' என்னும் சிறப்பைப் பெற்றுள்ளது. தத்துவத்தை எடுத்து இயம்புங்கால் பிரபஞ்சம் முழுதும் கணபதியின் உடல் ஆகின்றது. அவனிடத்து வலிவும், உறுதியும், தூய்மையும், அறிவும் பொலிவதைக் காணலாம். 'துப்பு' என்னும் சொல்லில் இத்தனைக் கருத்துகளும் அடங்கியுள்ளன. ஞானமே வடிவெடுத்தவன் கணபதி. இயற்கை என்னும் உடலில் ஒழுங்குப்பாடும் நல்லறிவும் திகழ்வதே இதற்குச் சான்று ஆகும். நமக்குப் புலனாகும் பருத்த உடல்களில் யானையின் உடல் முதன்மை பெறுகின்றது. சிவசக்தியின் புறத்தோற்றமாய் இருப்பது இயற்கை. இஃது அகண்டாகாரமாய் விரிந்துள்ளது. இதனுள் இயங்கும் இறைவனைச் சுட்டிக்காட்டுவதற்கு யானைத் தலையையுடைய பருத்த திருமேனி பொருத்த உருவகமாகின்றது. கணபதிக்கு 'விநாயகன்' என்ற திருநாமமும் உண்டு. இச்சொல் நல்லாரை அறநெறியில் நடத்துபவன் என்பதாகின்றது. வி=அற்ற; நாயகன்=தலைவன். தனக்கு வேறு ஒரு தலைவனும் இல்லாத தனிப்பெரும் பொருள் என்னும் அது பொருள்படுகின்றது.

ஏகதந்தன், மூஷிகவாகனன் கணபதியின் வெவ்வேறு வடிவங்கள். இவற்றிற்கெல்லாம் சிறப்புப்பொருள்கள் உண்டு. விரிவஞ்சி அவை ஈண்டு எடுத்துக் காட்டப்பெறவில்லை.

(ஆ) முருகன்: விநாயகனுக்கு தம்பி இவன். இவனுக்குச் ‘சிவகுமாரன், சரவணன், கார்த்திகேயன், சேனாபதி, குகன், ஞானபண்டிதன், சுவாமிநாதன், சுப்பிரமணியன்’ என்று பல திருநாமங்கள் உண்டு. இவன் பிறப்பைப் பற்றியும் பலகதைகள் உண்டு. பாமரமக்கள் உணர்வதற்காகப் புனையப்பெற்றவையே இக்கதைகள். தந்தை பெரியார் அவர்கள் இக்கதைகளை ஆதாரமாகக் கொண்டு அனைத்தையும் சாடுகிறார்கள். அறிஞர்கள் இக்கைைதகளில் அடங்கியுள்ள தத்துவத்தை மட்டிலும் எடுத்துக் கொள்கின்றார்கள்.

அண்டமெங்குமுள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனிடத்திருந்து வந்தவைகள். ஆகவே அவையாவுக்கும் அவன் அப்பனாகவும், பராசக்தி அன்னையாகவும் இருக்கின்றனர். தோன்றிய உயிர்களுள் உயர்வுதாழ்வு உண்டு, விலங்குக்கும் மனிதனுக்கும் எவ்வளவு வேற்றுமை? இதற்கெல்லாம் மேலாக மக்களுக்கும் அமைந்துள்ள தராதரமோ அளப்பரியது. கல்நிலையிலிருந்து கடவுள் நிலைவரை மக்களைக் காணலாம். மனிதன் எவ்வளவு மேலோன் ஆகமுடியும் எனபது ஒரு பெரிய வினா. இவ்வினாவுக்கு விடையாக அமைந்திருப்பவன் சிவக்குமாரன்.

பிறப்பு: உலகை உய்வித்தற்பொருட்டு உண்டு பண்ணப்பட்டவன் முருகக் கடவுள். அவன் உண்டான விதம்- பிறப்பு- வியக்கத்தக்கது. சிவபெருமான் யாண்டும் தன் சொரூபத்தில்- தடத்த நிலைக்கு வாராமல்-திளைத்திருந்தார். அவனது நிறைநிலையைக் கலைக்க முயன்ற காமனை- மன்மதனை- அவர் காய்ந்தார் [குறிப்பு 8]. ஆதி சக்தி அவரைக் குறித்துத் தவம் செய்து அவரை அடைந்தாள். பிறகு அவர்களுக்குக் கந்தன் மைந்தனானான். ஆகவே அவன் தோற்றத்துக்கும் காமத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. தவத்தின் விளைவே முருகவேள்.

சிவனாரது ஐம்பொறிகளின்று ஐந்து ஒளிப்பிழம்பு, மனத்தினின்று மற்றோர் ஒளிப்பிழம்பு, ஆக ஆறு ஒளிப் பிழம்புகள் வெளிக்கிளம்பின. அவற்றின் தேசுவை (தேஜசை)க் கண்டு அம்பிகையே திகைத்துப் போய்விட்டாள். கங்கையை உலர்த்திவிட்டு அவ்வொளித்திரள் சரவணப் பொய்கையில் பிரவேசித்தது. சரவணப் பொய்கை என்பது நாணல் காட்டிலுள்ள நீர்நிலை. ஆங்கிருந்து ஆறுமுகம் பன்னிருதோள் ஓர் உடல் உடைய, தெய்வக்குழந்தையொன்று உருவெடுத்து வந்தது. சண்முகன் என்பவன் அவனே.

கார்த்திகைப் பெண்கள் ஆறுபேர் அவனைப் பராமரிக்க முன் வந்தனர். அவர்களின் பொருட்டு அவன் ஆறு குழந்தைகளாகத் தன்னைப் பிரித்துக் கொள்வதுண்டு. அவர்களிடம் பால் பருகினபிறகு அவன் ஓர் உருவமாகி விடுவான். விளையாட்டாகக் கணக்கற்ற உருவங்களையும் அவன் எடுப்பதுண்டு. படுத்துறங்கும்பொழுது ஒற்றை மேனியனாகி விடுவான். கார்த்திகை மங்கையர்களால் வளர்க்கப் பெற்றமையினால் அவனுக்குக் 'கார்த்திகேயன்' என்ற திருநாமமும் ஏற்பட்டது.

சரவணபவன்: சீவர்களின் தோற்றத்திற்கே முருகக்கடவுள் முன்மாதிரியாகின்றான். சரவணப்பொய்கை கருப்பைக்குச் சமமானது. அது முற்றிலும் சக்தி சொரூபம், சிவசேதனம் என்னும் பித்து (விந்து) அதன்கண் நாட்டப்பெற்றது. அப்பொழுது பஞ்சேத்திரியங்களும் மனமும் ஒன்றுபட்டன. உயிர்களுள் ஆறு அறிவோடு கூடியது மிக உயர்ந்தது. பரஞானம் அல்லது இறைஞானத்தைப் பெறுவதற்கு ஆறு அறிவு உயிரே முற்றிலும் தகுதி வாய்ந்தது. கண், காது, வாய் போன்ற ஒவ்வோர் இந்திரியமும் தனித்தனியே பயிற்சிபெறுகின்றது. கார்த்திகை மாதர் ஆறுபேரிடம் ஆறு வடிவங்களில் இருந்து வளர்பொருள் பஞ்சேந்திரியங்களும் மனமும் நல்ல பயிற்சி பெறுதலாகும். உறங்கும் பொழுது எல்லா இந்திரியங்களும் மனமும் ஒடுங்கி விடுவதால் ஓர் உருவம் ஆய்விடுகின்றது.

சொருபவிளக்கம்: ஆறுமுகமும் பன்னிருதோளும் ஒரு திருமேனியும் உடைய சரவணபவன் தோன்றியதில் பொருள் பல புதைந்து கிடக்கின்றன. இயற்கையின் அமைப்பில் பல தலைகளுக்குத் தேவை இல்லை. இரண்டு தலையுடன் ஏதாவது பிறந்தால் அது பிழைக்காது. ஆறுதலைகளுக்கு வேலை என்ன என்ற வினா எழுகின்றது. பல கைகள் இருந்தால் அவற்றைப் பயன்படுத்தலாம்; பல தலைகளைப் பயன்படுத்துதல் எவர்க்கும் முடியாது. சீவர்களுள் மனிதனாகப் பிறந்தவனிடத்து உள்ள மகிமைகளெல்லாம் உருவெடுத்தவன் முருகன். உயர்ந்த தத்துவங்களை உருவகப்படுத்தி ஒவ்வொன்றும் ஒவ்வொரு தலையாகக் கருதப்பெறுகின்றது. தலைபெறுகின்ற சிறப்பை வேறு எந்த உறுப்பும் பெற முடியாது. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்தின் வடிவத்தின் வகை அறிவதற்கு ஐம்பொறிகள் அமைந்துள்ளன. இவற்றிற்கெல்லாம் மேலாக எண்ணவும் உணரவும் வல்லது மனம். இவை ஆறும் ஆறுமுகங்களுக்கு ஒப்பானவை. முகம் போன்று இவை பாராட்டப்பெறல் வேண்டும். முறையாக இவற்றை வளர்க்குங்கால் ஒவ்வொன்றும் ஒரு முகத்துக்குச் சமமானது.

'பகவான்' என்னும் சொல்லுக்கு ஆறுகுணசம்பந்தன் என்பது பொருள். ஞானம், வைராக்கியம், வீரியம், ஐசுவரியம், செல்வம் கீர்த்தி ஆகிய ஆறும் எவனிடத்து ஒன்று சேர்ந்து உள்ளனவோ அவன் பகவான், இந்த ஆறனுள் ஏதேனும் ஒன்று சிறப்பாக அமைந்து விட்டாலேயே சாதாரண சீவன் ஒருவன் பெருமகனாகி விடுகின்றான். இந்த ஆறு தெய்வமகிமைகளும் ஒன்று சேர்ந்து ஒருவனிடம் மிளிருமானால் அவன் முருகக் கடவுளாகவே ஆகிவிடுகின்றான். பிறந்தது நாணற்காடு ஆகிய பிரபஞ்சம். ஆங்கு வளர்ந்திருந்து அடையப்பெறும் பெருமையாவும் தெய்வ சம்பத்துகளாம். ஆறுமுகமுடைய குமரேசன் இந்தக் கோட்பாட்டை ஓயாது உயிர்களுக்கு நினைவூட்டி வருகின்றான்.

ஆறுமுகத் தத்துவத்தில் தன்னையே மறந்து ஆழங்கால் பட்ட அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானைத் துதிக்கும் பாடல் இது:

ஏறுமயில் ஏறிவிளையாடுமுகம் ஒன்றே;
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே;
கூறும்அடி யார்கள்வினை தீர்க்குமுகம் ஒன்றே;
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே;
மாறுபடு சூரரை வதைத்தமுகம் ஒன்றே;
வள்ளியைம ணம்புணர வந்தமுகம் ஒன்றே;
ஆறுமுகம் ஆனபொருள் நீஅருளல் வேண்டும்;
ஆதிஅரு ணாசலம் அமர்ந்தபெரு மாளே.

இன்னும் முருகனது மூவித சக்திவடிவம், வள்ளி - தெய்வயானை தத்துவம், தேவசேனாபதி, நான்முகனைச் சிறையில் வைத்தல், சூரசம்காரம், குகன், ஞானபண்டிதன் என்பவைபற்றியெல்லாம் தத்துவங்கள் உள்ளன. இங்ஙனம் முருகனடியார்கள் சிந்தித்து எழுதியுள்ளனர். இவற்றையெல்லாம் பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் ஏற்பட்டன என்று சொல்வதற்கில்லை. என்ன காரணத்தாலோ பார்ப்பனர்களைத் திட்டித் தீர்க்கின்றார்கள் தந்தையவர்கள். வெள்ளைக்காரர் ஆட்சியில் பார்ப்பனர்கள் படித்து அரசு அலுவல்களில் சேர்ந்து விட்டனர். பலமட்டங்களில் அவர்கள் அக்காலத்தில் செய்த அட்டகாசங்கள் சொல்லிமுடியா. இதனால் தான் அக்காலத்தில் நீதிகட்சி தோன்றி அரசையும் பார்ப்பனர்களையும் எதிர்த்தது, இதனை நினைந்துதான் அதிகமாக அவர்களைக் கடிக்கின்றார். 1940-முதல் ஓரளவு எனக்குத் தெரியும். துறையூரில் நான் தலைமையாசிரியனாக இருந்த காலத்தில் (1941-1950) எவ்வளவோ விளம்பரம் செய்தும் பார்ப்பனர்களைத் தவிர வேறு சாதி ஆசிரியர்கள் கிடைக்கவில்லை; பயிற்சி பெறாத பட்டதாரிகள் கூட கிடைக்கவில்லை. ஓய்வு பெற்ற பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள், இவர்களை நேரில் தேடிப்பிடித்து நியமனம் செய்து பள்ளியை நடத்தும் நிலை ஏற்பட்டது.

இன்றைய நிலை வேறு. பார்ப்பனர்கள் நம்முடன் கலந்து பழகுகின்றனர். கலப்புத்திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு முன்வந்து விட்டனர். இந்நிலையில் அவர்களை வெறுக்க வேண்டிய இன்றியமையாமை இல்லை. நம்மோடு அவர்களை இணைத்துக்கொண்டு வாழ்வதே சிறப்பு. சாதிக்கொள்கையைக் கைவிட்டு சாதியற்ற பெரியார் கொள்கையைக் கடைப் பிடித்தவர்களை வெறுப்பது நியாயம் இல்லை.


(2) வைணவம்: வைணவம் இறைவனை 'ஈசுவரன்' என்று பேசும். இங்கும் உருவ வழிபாடு சிறப்பாக அமைகின்றது. இறைவனுடைய திருமேனியைப்பற்றி வைணவதத்துவம் ஐந்து வகையாகப் பேசும்.

(i) பரத்துவம்: இது காலம் நடையடாததும், ஆனந்தம் அளவிறந்து ஒப்பற்றதாயுமுள்ள பரமபதத்தில் இறைவன் பெரிய பிராட்டியார், பூமிப்பிராட்டியார், நீளாதேவியார் சகிதம் அனந்தாழ்வானை அரியாசனமாகவும், பெரியதிருவடியை வாகனமாகவும் கொண்டிருக்கும் இருப்பு.

(ii) வியூகம்: இந்த உலகில் (லீலா விபூதியில்) முத்தொழில்கள் நடைபெறச்செய்யவும், சம்சாரிகளைக் காப்பதற்காகவும், வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்தியும்னன், அநிருத்தன் என்ற பெயருடன் இருக்கும் நிலையாகும்.

(iii) விபவம்: அவதாரங்களைப் பற்றிக் கூறுவது. இவை ஆவேச அவதாரம், முக்கிய அவதாரம் என்று இருவகையாகப் பகுத்துப் பேசப்பெறும். ஆவேச அவதாரத்தில் கபிலர், தத்தாத்ரேயர், பரசுராமர் போன்ற அவதாரங்கள் அடங்கும். முக்கிய அவதாரத்தில் இராமர், கிருட்டிணர், வாமன-திரிவிக்கிரமர் முதலிய மனிதாவதாரங்களும்; மச்சம், கூர்மம், வராகம் போன்ற திரியக் (பிராணிவகை) அவதாரங்களும், நரசிம்மம் என்ற பிராணி - மனித அவதாரமும், குப்ஜாமரம் (குட்டை மாமரம்) முதலான தாவரவடிவங்களும் அடங்கும்.

(iv) அந்தர்யாமித்துவம்: சேதநர்களின் இதய கமலத்தில் அழகே வடிவெடுத்தாற் போன்ற மங்களகரமான திருமேனியுடன் எல்லாவித ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பெற்றவனாய் பெரிய பிராட்டியோடு கட்டைவிரலளவாய் (அங்குஷ்ட பிரமாணமாய்) எழுந்தருளியிருக்கும் இருப்பு.

(v) அர்ச்சாவதாரம்: அடியார்கள் எதைத் தனக்குத் திருமேனியாகக் கொள்ளுகின்றனரோ அதையே தனக்கு வடிவமாகவும், அவர்கள் உகந்து வைத்த திருநாமத்தையே தனக்குப் பெயராகவும் கொண்டுள்ள நிலை.

இந்த நிலையில் எல்லா நிலை எம்பெருமான்களும் அர்ச்சையாக - விக்கிரகமாக - எழுந்தருளியிருப்பர். இந்நிலையில் அனைத்து எம்பெருமான்களும் தம்மைத் துதிப்பவர்களுடைய கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இனிதாம்படி அநுபவித்தற்கு இடமாக இருத்தல். அதாவது திருப்பாணாழ்வார்,

அண்டர்கோன் அணிஅரங்கன் என் அமுதினைக்
கண்டகண்கள் மற்றொன்றினைக் காணாவே.[8]

என்று அநுபவித்தவாறு அநுபவிக்கும் நிலை இது.

திருமால் வடிவம்: எம்பெருமானின் திருமேனியைப் பற்றி வேதாந்த தேசிகளின் விளக்கம்: வேதத்தின் பொருளாக உள்ளவன் எம்பெருமான். சித்தும் (உயிர்கள்), அசித்தும் (சடஉலகம்) அவன் திருமேனியில் அடங்கி உள்ளது. இதனை வைணவதத்துவம் சரீர-சரீரிபாவனை (உடல்-உயிர் உறவு) என்று பேசும். திருமங்கையாழ்வாரும்,

திடவிசும்பு எரிநீர் திங்களும் சுடரும்
செழுநிலத்து உயிர்களும் மற்றும்
படர்பொருள் களுமாய் நின்றவன்[9]

என்று கூறுவர்; இத்தொகுதி ‘உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்’ என்று மேலும் இதனைத் தெளிவாக்குவர். சீவன்-இரத்தினங்களுள் சிறந்த கெளஸ்துவாக உள்ளான்; மூலப்பிரகிருதி (உலகம்) ஸ்ரீவத்சம் என்ற மறுவாக உள்ளான்; மகாந் என்னும் தத்துவம் கெளமோதகி என்னும் கதையாக உள்ளது. ஞானம் நந்தகம் என்னும் வாளாகவும்,
 1. சிவப்பிரகாசர்-தனிப்பாடல்
 2. தா.பா. ஆசையெனும்-30
 3. மேலது-வையமுழுதும்-5
 4. மேலது.-மகாசக்தி வாழ்த்து-3
 5. திருவா-தெள்ளேணம்-1
 6. திருவா. சிவபுரா, அடி 3; மேலது அடி. 7; மேலது-கீர்த்தித் திருஅகவல் அடி-1.
 7. தா.பா.தேசோமயானந்தம்-15; மேலது ஆகாரபுவனம்-18.
 8. அமலனாதிபிரான்-10
 9. பெரி. திரு. 4.3:3
அஞ்ஞானம் அவ்வாளின் உறையாகவும் உள்ளன. தாமசாகங்காரம் சாரங்கம் என்னும் வில்லாகவும், சாத்துவித அகங்காரம் பாஞ்சசன்னியம் என்னும் சங்காகவும், மனம் என்னும் தத்துவம் சுதர்சனம் என்னும் சக்கரமாகவும், ஞானேந்திதரியங்கள் ஐந்தும், கன்மேந்தாரியங்கள் ஐந்தும் அம்புகளாகவும், தந்மாத்திரைகள் ஐந்தும், பூதங்கள் ஐந்தும் ஆகியவற்றின் வரிசை வைஜயந்தி என்னும் வந மாலையாகவும் அமைந்துள்ளன [1]. எம்பெருமானின் நான்கு திருக்கரங்கள் அவனுடைய தெய்வப் பெற்றியை விளக்குகின்றன. மனிதனது ஆற்றலுக்கு அறிகுறி இரண்டு கரங்கள். அவற்றில் ஒன்றில்லா விட்டாலும் அவன் பல செயல்கட்கும் உதவாதவன் ஆகின்றான். இருகைகளையுடையவன் எதையும் செய்யவல்லவனாகின்றான். ஆயினும் மானுட ஆற்றல் அளவைக்கு உட்பட்டது. தெய்வத்தின் ஆற்றல் அளப்பரியது என்பதை நான்கு கைகள் விளக்குகின்றன. ஒரு கையில் திருச்சங்கும், மற்றொரு கையில் திருவாழியும் (சக்கரம்) உள்ளன.

திருச்சங்கு: இதன் தத்துவம்: சங்கு ஊதுமிடத்து உண்டாகும் ஒலி ஓங்காரம். 'ஓம்' என்னும் ஓசைக்கு நாதபிரம்மம் என்று பெயர். இஃது ஒரு மொழியிலும் ஒரு சமயத்திலும் கட்டுப்படாதது. இயற்கை முழுதும் இயங்குவதால் உண்டாகும் ஒலியே ஓங்காரம். அது பிரணவம் என்றும் பகரப்படும். தன்கையில் சங்கை வைத்திருப்பதன் மூலம் தான் பிரணவப்பொருள் என்பதை அவன் அறிவுறுத்துகிறான். அகரம் உகரம் மகரம் அடங்கப்பெற்றது ஓங்காரம், பிரபஞ்சத்திலுள்ள ஓசை ஒலியாகவுள்ள இதன் வெவ்வேறு தோற்றங்கள், ஓசைதான் உலகிலுள்ள அனைத்துக்கும் வித்து ஆகின்றது. ஒசை உருப்பட்டே ஒவ்வொரு பொருளும் ஆகிறது. ஒரு பொருளைப் பதார்த்தம் (வடமொழி) என்கின்றோம். பதமும் அதன் அர்த்தமும் சேர்ந்தது அப்பொருள். வித்து அகப்பட்டால் அதிலிருந்து மரத்தை உண்டு பண்ணலாம். சொல் என்னும் வித்திலிருந்து பொருள் உண்டாகின்றது. ‘மந்திரம்’ என்பது சொல். அதனை ஓயாது உச்சரித்தால் அதன் வடிவம் வந்து விடும்.

நலம்தரு சொல்லை நான்கண்டு
கொண்டேன் நாராயணா என்னும் நாமம் [2]

என்பது திருமங்கையாழ்வார் திருமொழி, 'ஓம்' என்பதும் ‘நாராயணன்’ என்பதும் மந்திரம். அதனை உருப்போடுகிறவர்
 1. தேசிகப் பிரபந்தம்-80
 2. பெரி. திரு. 1.1
களின் மனம் அந்தப் பொருளின் வடிவெடுக்கின்றது. பிறகு நாராயணனைக் காணவும், அவனை அடையவும் முடியும். இப்பொழுது அவன் யாரென்று நமக்குத் தெரியாது; ஆனால் அச்சொல் நமக்குத் தெரியும். தெரிந்ததை உறுதியாகப் பிடித்துக் கொண்டால் தெரியாததை அடையலாம். இக்கோட்பாட்டை அனைவர்க்கும் விளக்குதற்கென்றே அவன் கையில் சங்கை ஏந்திக்கொண்டுள்ளான். பிரணவம் அல்லது அவனுடைய நாம உச்சாரணத்தால் அவனை உறுதியாகப் பெற்றுவிடலாம்.

திருவாழி: சக்கரபாணி என்பது திருமாலின் மற்றொரு பெயர். அண்டங்களின் நடைமுறையை விளக்குவது சக்கரம். கோள் எல்லாம் சுழன்று சுழன்று வருகின்றன. வட்டமிடுவது அவற்றின் இயல்பு. நட்சத்திரங்கள் பல நேரே ஓடிக் கொண்டுள்ளனபோலத் தென்படுகின்றன. பெருவேகத்துடன் பல்லாண்டு பல்லாண்டுகளாகப்பறந்தோடி ஒரு வட்டத்தை நிறைவேற்றுகின்றன. ஒன்றுக்கு அப்பால் ஒன்று அனந்தம் சக்கரங்கள் ஓயாது சுழல்கின்றன. அவையாவும் திருமாலின் திருச்சக்கரத்தில் தாங்கப்பெற்றுள்ளன. அண்டங்கள் யாவையும் உண்டு பண்ணுதலும், நிலைபெறச் செய்தலும், பின்பு அவற்றை நீக்குதலும் நாராயணனின் ‘அலகிலா விளையாட்டுச்’ செயல்கள்; நிரந்தரமான செயல்கள். சக்கரம் சுழல்வது போன்று இச்செயல்கள் சுற்றிச் சுற்றி வருகின்றன. முடிவில்லாத விளையாட்டாக முகுந்தன் முத்தொழில்களையும் முறையாகச் செய்துவருகின்றான். இதனைத் திவ்வியகவி பிள்ளைப்பெருமாள் அபயங்கார்,

ஞாலத் திகிரி முதுநீர்த்திகிரி
நடாத்தும் அந்தக்
காலத் திகிரிமுதலான யாவும்
கடல்க டைந்த
நீலத் திகிரியனையார் அரங்கர்
நிறைந்த செங்கைக்
கோலத் திகிரி தலைநாளதனின்
கொண்ட கோலங்கள்.[1]

என்று பாசுரமிட்டு அற்புதமாக விளக்குவர்.

அறவாழி அந்தணன்: சக்கரத்தின் செயல்களால் ஆரா அமுதன் ஆழியங்கை அம்மான் ஆகின்றான். தர்மசக்கரம் அல்லது அறவாழி அவன் திருக்கரத்தில் திகழ்கின்றது. ஏனென்றால் அவன் அறத்தைப் பாதுகாப்பவன் அல்லவா? இயற்கையின் நடைமுறையிலுள்ள ஒழுங்குப்பாடு அறமெனப் படுகின்றது. உயிர்வகைகள் செய்யும் செயலில் முன்னேற்றத்துக்கு ஏதுவானவைகள் தர்மம் எனப்படுகின்றன. அவை ஏற்கெனவே அடைந்துள்ள நிலைகளினின்று கீழே இழுத்து செல்லும் செயல்களாதலால் அதர்மம் எனப்படுகின்றன. தர்மத்தின் முடிந்த பயன் இன்பம். அதர்மத்தின் முடிந்த பயன் துன்பம். ஆழியங்கைக் கருமேனியன் உயிர்களைக் காக்கும் கடவுள். அறவாழியைக் கொண்டு அவன் அனைத்தையும் காத்து வருகின்றான். அறம் செய்கின்றவர்களை ஆழிகாப்பாற்றுகின்றது. கேடு செய்கின்றவர்களை அது துன்புறுத்துகின்றது. சக்கரத்துக்கு மறைந்திருந்து யாரும் எச்செயலும் செய்யமுடியாது. எங்கும் வியாபகமாய் எல்லா உயிர்களிடத்தும் மனச்சாட்சி என்னும் பெயரெடுத்து, அஃது ஊடுருவிப் பாய்ந்திருந்து ஆணை செலுத்துகின்றது. திருமாலின் அறவாழிக்கு உட்பட்டு நடடப்பவர் நலம் அனைத்தையும் அடைவர்.

அதே ஆழியைக் காலச்சக்கரம் என்றும் பகரலாம். ஆதியந்தம் இல்லாத காலமாக அது சுழல்கின்றது. சென்றது, நிகழ்வது, வருவது எல்லாம் ஒருவட்டமாய் வருகின்றது. அதற்கு இருப்பிடம் திருமாலின் திருக்கரம். திருமாலே கால சொரூபம். காலம் முழுவதையும் நாம் அறிய முடியாது. அக்காரணத்தை முன்னிட்டே அவன் கருமேனியனாக நமக்குத் தென்படு கின்றான். காலம் என்னும் ஆழியை நன்கு பயன்படுத்துவது திருமாலின் ஆராதனையாகும்.

இங்ஙனம் வழிவழியாக வரும் கடவுளைப் பற்றிய கருத்துகள் காலந்தோறும் வளர்ந்து வருபவை. இந்த வளர்சிக்கு ஒரு சமூகத்தார் பொறுப்பாளர்கள் அல்லர்; குறிப்பாகப் பார்ப்பனர்கள் சூழ்ச்சியும் அல்ல. இது வழிவழியாக வளர்ந்து வரும் வழிவழி உடைமை (Heritage); அதாவது மரபுரிமை.

உருவழிபாட்டுக்கு எதிர்ப்பு: தந்தை பெரியாருக்கு முன்னரே சித்தர்கள் உருவ வழிபாட்டைக் கடிந்தனர்; உருவத்தில் கடவுள் இல்லை என்று சாதித்தனர். சிவவாக்கியரின் புரட்சிகரமான பாடல் ஒன்று உள்ளது. அஃது இது:

நட்ட கல்லை சுற்றி வந்து
நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொ ணென்று
சொல்லும் மந்தரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள்ளி ருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை அறியுமோ!

நெற்றி நிறைய திருநீறு அணிந்து மணிக்கணக்காக இந்தப் பாடலைப் பாடிக்கொண்டு வீடுவீடாக அமுதுபடி யாசித்து வரும் பண்டாரங்களைக் காணாத ஊரோ நகரமோ தமிழ்நாட்டில் இல்லை. இன்னொரு பாடல்:

இருப்பு நெஞ்ச வஞ்சகத்
திசைந்து நின்ற ஈசனைப்
பொருப்பி னும்பு னலினும்
புரண்டு தேடும் மூடர்காள்!
கருப்பு குந்த காலமே
கலந்து நின்ற அண்ணலார்
குருப்பி ரானோ டன்றி
மற்றுக் கூடலாவதில்லையே.

இதுவும் உருவ வழிபாட்டைக் கடிவதாகும்.

இதற்கு முன்னதாகவே நாவுக்கரசர்,

மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லான்
ஒப்புடையவன் அல்லன்; ஒருவன் அல்லன்;
ஓர்ஊரன் அல்லன்; ஓர்உவான் இல்லி;
அப்படியும் அந்நிறமும் அவ்வண் ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவன் இறைவன் என்றெழுதிக் காட்டோ ணாதே(6.97:10)

என்று இறைவனை வடிவத்தில் வடித்துக் காட்டமுடியாது என்று சொல்லிப் போனதையும் நினைக்கலாம்.

மேல்நாட்டிலும் கடவுள் மறுப்புக் கொள்கை இல்லாமல் இல்லை. இங்கர்சால் என்பாரைக் கேள்விப்படாதவர் இல்லை. இவர் இறைமறுப்புக் கொள்கையினரின் முன்னோடி. என் கல்லூரி வாழ்வின்போது இவர் நூலைப் படித்து நுகர்ந்ததுண்டு.

தந்தை பெரியாரும் ஒரு சாக்ரடீசைப் போலவும் வைர நெஞ்சுப்படைத்த வால்டேர் போலவும், ‘எரிமலையாய், சுடுதழலாய், இயற்கைக் கூத்தாய், எதிர்ப்புகளை நடுங்கவைக்கும் இடியொலியாய்’ இயங்கி இறைமறப்புக் கொள்கையைப் பல்வேறு கோணங்களில் பேசியும் எழுதியும் வந்தார். அவற்றை உங்கள் முன் வைக்கின்றேன். அதற்கு முன் தந்தை பெரியார் அவர்களுக்கே உரிய தன்னடக்கத்துடன் ஒரு முறை ‘நான் பேச்சாளனும் அல்லன்; எழுத்தாளனும் அல்லன்; கருத்தாளன்’ என்று குறிப்பிட்டதை நினைவு கூர்கின்றேன்.

கடவுளைப்பற்றிப் பேசத் தொடங்குமுன் அதுபற்றிய குழப்பத்தைக் காட்டுகின்றார். கடவுள் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்ட மனிதன் கடவுள் நம்பிக்கையாளர்களில் ஒருவருமே இல்லை. ஒரு பொருள் இருந்தால்தானே அஃது இன்னது என்று புரிந்து கொள்ள முடியும்? அஃது இல்லாததனாலேயேதான் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் ஆளுக்கு ஒரு விதமாய்க் கடவுளைப் பற்றி உளறிக் கொட்டவேண்டியுள்ளது.

அதற்குப் பெயரும் பலப்பல சொல்ல வேண்டியுள்ளது; அதன் எண்ணிக்கையும் பலப்பல கூற வேண்டியுள்ளது; அதன் குணமும் பலப்பலவாக மொழிய வேண்டியுள்ளது; அதன் உருவமும் பலப்பலவாக உளற வேண்டியுள்ளது; அதன் செயல்களும் பலப்பல சொல்ல வேண்டியுள்ளது. இந்த இலட்சணத்தில் கடவுளைப் பற்றிப்பேசும் அறிவாளிகள் பெயரில்லாதான்- உருவமில்லாதான்- குணம் இல்லதான்- என்பதாக உண்மையிலேயே இல்லாதானை- இல்லான்- இல்லான் என்றே அடுக்கிக் கொண்டே சென்று உளறலை உச்சக்கட்டத்துக்கு ஏற்றிவிடுகின்றார்கள். இதனைப் பெரியார் பேச்சிலும் எழுத்திலும் கண்டவற்றை உங்கள் முன் வைக்கின்றேன். பலதலைப்புகளில் பாகுபாடு செய்து சமர்ப்பிக்கின்றேன்.


1. கடவுள்

தோற்றம்: கடவுளின் தோற்றத்தைப் பற்றி தந்தை பெரியாரின் சிந்தனைகள் இவ்வாறு செல்கின்றன.

(1) சோம்பேறிகள், வஞ்சகர்கள் ஆகியோர் மக்களை ஏமாற்றுவதற்காகவே மனிதர்களுடைய பொதுக்குறைகளுக்குத் தெய்வத்தைக் கற்பித்துக் காரணம் காட்டி வருகின்றனர். தெய்வம் என்கின்ற கற்பனை மக்களின் மூடத்தனத்தினால் ஏற்பட்டது என்பது ஒருசாராரின் முடிவு. ஆனால் சிறிதளவுக்கு அப்படி ஒருகால் இருக்கலாம். பெரும்பாலும் தெய்வக் கற்பனைக்கு ஏமாற்றும் தன்மையே காரணமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது கருத்து என்பது தெளிவாகத் தெரிகின்றது. அச்சமும், ஐயமும், பேராசையும், பழக்க வழக்கங்களும் மற்றவர்களின் படிப்பினைகளும் சுற்றுப்புறமும் மனிதனுக்குக் கடவுள் உணர்ச்சியை உண்டாக்கி விடுகின்றன.

(2) இன்று நடைமுறையில் இருக்கும் கடவுளர்களின் 100க்கு 98 விழுக்காடு ஆரியர்களால் இறக்குமதி செய்யப்பெற்றவர்கள் என்பது ஒருதலை. இஃது எப்படி என்று கேட்டால், ஆரியக் கடவுளர்க்கெல்லாம் பூணூல் உண்டு. எல்லாக் கடவுளர்களும் பார்ப்பான் எப்படி நம்மிடம் நடந்து கொள்கின்றானோ அந்த மாதிரி நடந்து கொண்டதாகத்தான் இருக்கும். அஃதுடன் எல்லாக் கடவுளர்களும் இரண்டு வகையில் அடங்கியவர்களாக இருப்பார்கள், ஒன்று. சைவத்தைச் சார்ந்தவர்களாக இருப்பர்; மற்றொன்று வைணவத்தைச் சார்ந்தவர்களாக இருப்பர். எல்லாக் கடவுளர்களுமே ஆரியர்கள் இந்த நாட்டிற்கு வந்தபிறகு கற்பிக்கப் பெற்றவர்களாக இருப்பர். இந்த இருவகைகளிலும் ஒரு கடவுளாவது தமிழர் நாகரிகத்திற்கு உகந்தவர்களாக இல்லை என்பது தெளிவு.

(3) புத்தர் ஏற்பட்டு அறிவும் ஒழுக்கமும் ஏற்பட்டவற்றை ஒழிக்கவே அவதாரக் கதைகள்-அவற்றுள்ளும் முக்கியமாக கிருட்டிணாவதாரம்; அதிலும் சிறப்பாக கிருட்டிணனின் திருவிளையாடல்கள் சிருட்டிக்கப் பெற்றன. அதாவது மூடநம்பிக்கைக்காகக் கிருட்டிணனும் ஒழுக்கக்கேடு ஏற்பட அவனது திரு விளையாடல்கள், லீலைகள் ஆகியவை கற்பிக்கப்பெற்றுள்ளன. இவ்வளவும் செய்துவிட்டு அவை கடவுள் நடத்தை- வாக்கு என்பதற்காகக் கீதையும் பன்னாட்களுக்குப்பின் எழுதிச் சேர்க்கப்பெற்றது.

(4) மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கத் தொடங்கிய பிறகுதான் கடவுள் பற்றி எண்ணம் தோற்றுவிக்கப் பெற்றிருக்க வேண்டும். அதை யாரும் மறுக்க முடியாது. இப்போதுகூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும் நினைப்பும் ஏற்படுகின்றனவே தவிரத் தானாக ஏற்படுவதில்லை.

(5) முதன் முதலில் மனிதன் ஏற்பட்ட நாளில் கடவுள் என்ற பேச்சோ அந்த எண்ணமோ இருந்திருக்க முடியாது. நீண்ட நாட்களுக்குப் பின்னரே ஏற்பட்டிருக்கும். இந்த எண்ணம் ஏற்பட்ட நேரத்தில் எந்தத்தன்மையில் மனிதன் வாழ்ந்தானோ அதே தன்மை அந்தக் காலக் கடவுளுக்கும் கற்பிக்கப் பெற்றுள்ளது. அதன்படி பார்த்தால் சிவன்தான் முழுமுதற் கடவுளாக இருந்திருத்தல் கூடும்; பிறகு நாகரிகமடைந்த காலத்தில்தான் விஷ்ணு அல்லது திருமால் ஏற்பட்டிருக்க வேண்டும்.

(6) நமக்கு எத்தனை ஆயிரம் கடவுளர்கள்? அவர்களின் பெயர்களை எழுதவேண்டுமென்று தொடங்கினால் ஊற்றுப் பேனாவிலுள்ள மைதான் தீர்ந்து விடும்; பெயர்கள் முடிவு அடையா. பெரியார் போன்றோர் தலையெடுத்து இதைக் கேட்காமல் விட்டிருந்தால் மைல்கற்கள், ஃபர்லாங் கற்கள் எல்லாம் கடவுளர்களாகி இருக்கும். அம்மிக்கல்லையும் நிறுத்தி வைத்துக் குங்குமம் மஞ்சள் பூசிவிட்டால் அதுவும் ஒரு கடவுளாகக் காட்சியளிக்கும் என்கின்றார்.

(7) கடவுளைக் கற்பித்தவனை மன்னித்துவிடலாம். ஏனெனில் அவன் மடையன். அறிவில்லாத காரணத்தால் கற்பிக்க வேண்டியவனானான். கடவுளைக் கற்பித்தவன் “உலக உற்பத்திக்கு அது நடைபெறுதற்கு ஒரு கர்த்தா இருக்க வேண்டும். அந்தக் கர்த்தாதான் கடவுள்” என்று ஒரு சந்தேகத்தின்மீது உறுதிபடுத்திச் சொல்லுகிறான். அதாவது சந்தேகத்தின் பயனைக் (Benefit of doubt) கடவுளுக்குக் கொடுக்கிறான்.

(8) சைவன் வீட்டில் பிறந்தால் சிவன் கடவுள். வைணவன் வீட்டில் பிறந்தால் விஷ்ணு கடவுள். இஸ்லாமியன் வீட்டில் பிறந்தால் அல்லா கடவுள். கிறித்தவன் வீட்டில் பிறந்தால் கிறித்து கடவுள். நாத்திகன் வீட்டில் பிறந்தால் யார் கடவுள்? எனவே கடவுள் என்பது தற்செயலாக ஏற்பட்டதேயன்றி இயற்கையாக ஏற்பட்டது அன்று என்கின்றார்.

(9) பார்ப்பான் நினைத்தபடி எல்லாம் கடவுளர்கள் தோன்றியபடி உள்ளார்கள். மனிதக் கடவுள்; மாட்டுக் கடவுள்; குரங்குக்கடவுள்; பட்சிக் கடவுள்; பலதலைகளுள்ள, பல கைகளுள்ள கடவுள்; ஏன் இவை? எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த யாவையுமான கடவுள் என்கின்றபோது ஏன் இத்தனைக் கடவுளர்கள்? என வினவுகின்றார் அய்யா அவர்கள்.

(10) பிறப்பு இறப்பு இல்லாதவன் கடவுள் என்ற பிறகு தாய் வயிற்றில் பிறந்தவன் கடவுள் ஆக முடியுமா? இராமன், கிருட்டிணன் அப்படிப் பிறந்தவர்கள்தாமே? ஒரு கடவுளுக்குத் தாய், தகப்பன் ஏற்பட்டால் அந்தத் தாய் தகப்பன்களான கடவுளர்களுக்கும் தாய் தகப்பன் ஏற்பட்டுத்தானே தீரும்? இவற்றை நோக்கும்போது கடவுளர்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்பதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?

(11) நமக்கெல்லாம் கடவுள் எது என்றால் புராணங்களில் வரும் பாத்திரங்களே. தத்துவப்படியான கடவுள் நமக்கு இல்லை.

(12) கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்கின்றார். ஏன் என்றால் அவன் எந்தக் காரணமுமின்றித் தன்னுடைய பயத்தையும் அறிவற்ற தன்மையையும் கொண்டு இயற்கையாக ஏற்படுபவைகளை அவை ஏற்பட ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் என்பதற்காகக் கடவுளைக் கற்பித்தான். அறிவாளியால் உண்டாக்கப் பெற்றிருந்தால் காரண காரியங்கள் இருக்கும்; முட்டாள்களால் உண்டாக்கப் பெற்றிருந்தால் காரணகாரியம் இருக்காது. இதனால் அது-கடவுள்-முட்டாள்களின் கண்டுபிடிப்பு என்கின்றார்.

(13) மனிதன் சிந்திக்கிற தன்மையற்றிருந்த காலத்தில் இயற்கை யில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு அவை தோன்றியதற்குக் காரணம் தெரியாது பயந்தவன் இவற்றிற்கு ஒரு காரணம் வேண்டுமென்று நினைத்து முட்டாள்தனமாகக் கற்பித்ததே கடவுள் என்பது பெரியாரின் கருத்து.

(14) கடவுள் வேதம் பிரார்த்தனை முதலியவற்றின் பலன் என்கின்ற உணர்வைக் கடவுள் மதவாதிகள், பார்ப்பனர்கள் மக்களுக்கு ஏற்றாதிருந்தால் நாட்டில் கடவுளர்களே தோற்றுவிக்கப்பெற்றிருக்க மாட்டார்கள் என்று உறுதியாக உரைக்கின்றார் உத்தமர் பெரியார்.

(15) கடவுளைக் கற்பித்தவர்களும் உலகில் உள்ள எல்லாப் பொருள்களிலும் கடவுள் பெரியவர்[குறிப்பு 9] என்று சொல்லிக் கற்பித்தார்களேயொழிய மனிதத் தன்மைக்கு மேல் கடவுளிடம் என்ன பெருந்தன்மை உள்ளது என்று எதையும் எவரும் மெய்ப்பித்துக் காட்டவே இல்லை என்பது பெரியாரின் கருத்து.

(16) பண்டைக் காலத்தில் தோற்றுவிக்கப் பெற்ற மனிதனும் கடவுளும் அன்றைய பாதுகாப்பிற்குப் போதுமானதாய் இருந்தன. அந்தக் காலத்திய பாதுகாப்பிற்கு இன்று எவரும் பயப்படுவதில்லை. அந்தக் காலத்தில் ஓர் ஐந்து ரூபாய்த்தாளை வைத்து அதன் மீது ஒரு பளுவையும் வைத்து நாலு பக்கங்களிலும் ஏசுநாதர், முகமது நபிநாயகம், சிவன், திருமால் என்று எழுதி விட்டுப் போய்விட்டால் ஒருவன்கூட அதை எடுக்கத் துணிய மாட்டான். இந்தக்காலத்தில் அதனை ஒருவன் கூட எடுக்காமல் இருக்கமாட்டான். பெரியாரின் அற்புத எடுத்துக்காட்டு இது !

நம்பிக்கை: கடவுள் நம்பிக்கைப்பற்றிப் பெரியார் சிந்தனைகளில் சிலவற்றைக் காண்போம். பொதுவாக, கடவுள் நம்பிக்கை தவறான வழிகளில் மக்களைக் கொண்டு செலுத்துவதாகக் கருதுகின்றார்.

(1) கையாலாகாதவனுக்குக் கடவுள் துணை; அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் செயல்; இவற்றை உணர முடியாதவனுக்குத் தலைவிதி; இப்பேச்சு ஓர் இலக்கண விதிபோல் அமைந்துள்ளது. (2) கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக்கொண்டு எடுத்தற்கெல்லாம் அவர்மீது பழிபோட்டுக்கொண்டு திரிகின்றவன் முழுமூடன்; அடிமுட்டாள் என்பது அய்யாவின் கருத்து.

(3) கடவுள் மனிதன் மூலமாகவே தன்னுடைய ஆட்சியை நடத்துகின்றார் என்பதே பெரும்பாலான ஆத்திகர்களின் முடிவு. இதனாலேயே பிச்சை பெற்றவனும் கடவுள் கொடுத்தார் என்று சொல்லுகின்றான். உத்தியோகம் பெற்றவனும் கடவுள் கொடுத்தார் என்று செப்புகின்றான். பிறரிடம் உதவி பெற்றவனும் கடவுள் கொடுத்தார் என்று கூறுகின்றான். ஏதாவது ஒரு நெருக்கடியில் விபத்து நேராமல் தப்பித்துக் கொண்டவனும் கடவுள் காப்பாற்றினார் என்று மொழிகின்றான். இந்நிலையில் எந்த நன்மைக்கும் தீமைக்கும் மனிதன்மீது பொறுப்பைச் சுமத்துவது எப்படி முடியும்? என்பது பெரியார் நம்முன் வைக்கும் வினா?

(4) சிறையிலிருக்கும் கைதிகூட கடவுளைப் பிரார்த்திக்கின்றான். கொள்ளையடிக்கும் கறுப்புச் சந்தைக்காரனும், சதா கடவுளை வணங்குகிறான். திருட்டுத்தொழில் புரிகிறவனும், திருடப்போகும்போது கடவுளை நினைத்துக் கொண்டுதான் செல்லுகின்றான். தன்னைச் சாமியார் என்றும், கடவுளின் சீடன் என்றும் சொல்லிக்கொள்கின்றவன் மடியில் சாராயப்புட்டியும் பிராந்தி பாட்டிலும் உள்ளன. பூசை அறையில் சாராயம் காய்ச்சும் செயலும் வேசியுடன் இன்பலீலைகளும் நடைபெறுகின்றன. இங்ஙனம் எந்தத் தொழிலைச் செய்கின்றவனாயிருந்தாலும் அவனவன் கடவுளை வணங்கியே செயல்படுகின்றான். ஆனால் இவனது தகாத செயல் வெளிப்பட்டுச் சிக்கிக் கொண்டால் 'அட கடவுளே' என்று அப்பொழுதும் கடவுள் பக்தியுடன் நடந்து கொள்வதாக நடிக்கின்றான். இத்தனை பேர்களிலும் தன்னைக் கடவுள் நம்பிக்கையற்றவன் என்று ஒருவனாவது கூறிக் கொள்வதில்லை.

(5) கடவுள் கொடுக்கிறார் என்று கூறிக்கொண்டு கடவுளை வணங்குவது வெறும் வேடம்; முட்டாள்தனம் ஆகும் என்பது பெரியார் கருத்து. முதலாளி என்பவன் மூட்டை அடிக்கிறான்; அவர் கடவுள் கொடுத்தார் என்று கூறி மக்கள் தன்மேல் ஆத்திரப்படாமல் இருக்கக் கடவுளை வணங்குகின்றான். தொழிலாளிக்கு நாளை சோற்றுக்கு வழி இல்லை. அவனுக்குக் கடவுள் பக்தி இருந்தும் சோற்றுக்கு வழி இல்லாதவனாக இருக்கின்றான். புளிச்சேப்பக்காரனுக்கு மேலும் மேலும் பணம். பசி ஏப்பக்காரனுக்கு ஒன்றும் இல்லை. கடவுளுக்கு ஏன் இந்த பாரபட்சம்? என்று கேட்கின்றார் அய்யா.

(6) கடவுள் நம்பிக்கையால் ஒழுக்கம் எங்கே வளர்கிறது? ஆயிரம் வேலி நிலம் வைத்திருக்கிற சாமியையே பெயர்த்து விட்டுக் கீழே இருப்பதைத் தோண்டிக்கொண்டு அம்மன் சாமியின் சேலையை எடுத்துக்கொண்டு அம்மணமாக்கிப் போகின்றவனை கடவுள் ஏனென்று கேட்பதில்லை. உள்ளபடியே கடவுள் நம்பிக்கை இருந்தால் எதற்குக் காவல் நிலையம்? எதற்கு நீதிமன்றம்? தன் சுயநலத்துக்கு மற்றவனை ஏமாற்றக் கடவுள் இருக்கிறார் என்கின்றான். வேறு எதற்கும் கடவுள் நம்பிக்கை பயன்படவில்லை.

(7) கடவுளை நம்புகிறவன் அயோக்கியத்தனம் செய்யப் படுவதற்கு அஞ்சுவதில்லை. காரணம் எந்த அயோக்கியத்தனம் செய்தாலும் ஆண்டவன் மன்னிப்பான் என்பதால்தான் நிறைய அயோக்கியத்தனம் நடைபெற்ற வண்ணம் உள்ளது?

(8) சில சமயம் பெரியார் நகைச்சுவையாகவும் பேசுவார்: ‘எல்லாம் கடவுள் செயல்’ -இதை ஒருவன் நம்பவேண்டும் என்கின்றான். அவர் கன்னத்தில் ஓர் அறைவிட்டால் ‘என்னடா அயாக்கியா அடித்துவிட்டாயே?’ என்கின்றான். அவன் அடித்தவனைச் சொல்லுகின்றானா? அவனன்றித் துரும்பும் அசையாதபோது அது கடவுள் செயல் என்பது தானே பொருள்? இப்படித்தானே கடவுள் நம்பிக்கைக்காரன் கருதவேண்டும்? - இப்படிக் கேட்கிறார் பெரியார்.

(9) ஒரு விநோதமான கேள்வி: கடவுள் நம்பிக்கை இல்லாததால்தான் அண்ணாத்துரை செத்தார் என்கின்றான் ஒருவன். அவனிடம் பெரியார் “அடமுட்டாளே. கடவுளே இல்லை என்று சொன்னவன் நான். அண்ணாத்துரைக்குச் சொன்னவனும் நானே. நான் இன்று 90 வயதுக்கு மேல் கொழுக்கட்டைபோல் இருக்கிறேனே! கடவுள் இல்லை என்று சொன்னதற்காக நானல்லவா அவருக்குமுன் இறந்திருக்க வேண்டும்?” என்கின்றார்.

(10) எவன் ஒருவன் தன் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கின்றானோ அவன் கண்ணுக்குக் கடவுளே தெரியாது. கடவுள் என்ற சங்கதி பிறர் சொல்லித்தான் தெரியுமே தவிர எவனுக்கும் தானாகத் தெரிவதில்லை. கடவுள் உண்மையாக இருந்து கடவுளைக் கும்பிடுவது உண்மையாக இருக்குமானால் இவனுக்குக் கடவுள் இருக்கிறது என்பதை இன்னொருவன் சொல்லி அறிந்து கொள்வானேன்? என்கின்றார் தந்தை பெரியார். இதில் சிந்தனையின் ஆழத்தைக் காணமுடிகின்றது.

நம்பிக்கையைப்பற்றி அய்யா அவர்களின் சிந்தனைகள் இவ்வாறு நடைபெறுகின்றன.

எல்லாம் வல்வர்: கடவுள் எல்லாம்வல்ல சக்தியுள்ளவர் என்று சொல்லப் பெறுகின்றது. இதுபற்றி அய்யா அவர்களின் சிந்தனையைக் காண்போம்.

(1) சர்வசக்தியுடைய கடவுள் ஒருவர் இருந்து, சர்வத்திலும் புகுந்து சர்வத்தையும் ஒன்று போலப் பார்ப்பவராக இருந்தால் சர்வத்தையும் ஒன்றுபோலவே சிருட்டிக்கலாமல்லவா?[குறிப்பு 10]. வேறு வேறாகக் காணப்படுவதாலேயே சர்வ சக்தியும் வியாபகமும் சமத்துவமும் கொண்ட கடவுள் என்பதாக ஒன்றும் இல்லை என்பதுதான் உண்மை.

(2) கடவுள் சர்வவியாபியாய் இருக்கும்போதும், மனிதனுடைய காரியங்களையும் கவனித்து வருகின்றவராய் இருக்கும்போதும் மனிதனுக்குத் தனிப்பட்ட பிரார்த்தனை எதற்கு? அதற்காக இடம் பொருள் நேரம் எதற்காகச் செலவு செய்ய வேண்டும்?

(3) இன்றையதினம் எத்தனைக் கடவுளர்கள் பணக்காரக் கடவுளாகவும், ஏழைக்கடவுளாகவும் உள்ளனர்? ஒரு கடவுளுக்குச் சோற்றுக்குக்கூட வழி இன்றிச் சொத்து ஒன்றும் இன்றி உள்ளது! மற்றொன்றுக்கு பத்து ஏக்கர்நிலம், இன்னொன்றுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள். இன்னும் ஆயிரம் இலட்சக் கணக்கான மிகப்பணக்காரச் சாமியும் உள்ளது. இக்கடவுளர்க்கெல்லாம் எதற்குச் சொத்து? சர்வவல்லமையும் உள்ளதாக இருக்கும்போது இதற்குச் சாப்பாட்டுக்கு நிலமா வேண்டும்?

(4) பொய் பித்தலாட்டங்களையும் அக்கிரமத்தையும் அநீதியையும் வளர்க்கவே கோயில்கள் ஏதுவாக உள்ளன. கோயிலுக்கு வருபவனே சாமியின் பொருளைத் திருடுகின்றான். கோயிலின் கலசத்தைக் கும்பிடவருபவன் கவர்ந்து செல்லுகின்றான். கடவுளின் ஆபரணத்தைக் குருக்களே களவாடுகிறான். இன்னும் கடவுளையே பெயர்த்து எடுத்துக் கொண்டு போய் விற்றுவிடுகிறார்கள். இதிலிருந்து சாமியின் சக்தியும் கோயிலின் நிலையும் சந்தி சிரிப்பதுதான் மிச்சம்!

(5) கடவுள் எல்லாம் வல்லவர்; அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்று கூறுபவன் தன் வீட்டுப் பெட்டியைப் பூட்டிவைக்காமல் இருக்கிறானா அல்லது எல்லாம் வல்ல கடவுள் பார்த்துக் கொள்வார் என்று தன் வீட்டுக்குக் கதவு, பூட்டு, தாள், போடாமல் இருக்கிறானா? அவ்வளவு ஏன்? கோயிலில் தான் இவையின்றிய நிலை உண்டா? முப்பது, நாற்பது அடிஉயரமுள்ள மதில்களையும் கடந்து கோயிலில் கொள்ளை அடிக்கின்றானே, அவனை ஏன் கடவுளால் தடுத்து நிறுத்த முடியவில்லை? தன் பொருளையும் தன்னையும் காத்துக் கொள்ள முடியாத கடவுள் நம்மை எப்படிக் காப்பாற்ற முடியும்?

(6) உண்மையிலேயே கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் யார் என்றால் கடவுள் உண்டு என்று கூறுகிறவர்கள்தாம். ஏன்? உண்மையிலேயே கடவுள் சக்தி வாய்ந்தவர், எல்லா மனிதர்களிடத்திலும் கடவுள் இருக்கிறார் என்பது உண்மையானால் இவர்கள் ஏன் கடவுள் இருக்கிறார் என்று நம்மிடம் கூற வேண்டும்? சர்வசக்தி வாய்ந்தவர் கடவுள் என்பது உண்மையானால் எங்களுக்குக் கடவுள் ஒருவர் உண்டு என்ற நம்பிக்கையைக் கடவுளே உண்டாக்கியிருக்கலாமே? -என்கின்றார்.

(7) கோயிலில் குழவிக் கல்லில் போய் முட்டிக் கொள்கின்றானே; எவனாவது அது கல் என்பதை உணருகின்றானா? உண்மையில் அங்குக் கடவுள் சக்தி இருக்குமானால் இரவில் திருடன் சாமியைக் குப்புறத்தள்ளி அதன் பெண்டாட்டியின் தாலியையும் சேலையையும உருவிக்கொண்டு போகிறானே எந்தச் சாமியாவது ‘ஏண்டா’ அப்படி என் மனைவியின் தாலியை உருவிக் கொண்டும் சேலையையும் அவிழ்த்துக் கொண்டும் போகிறாய்? என்று கேட்கிறதா? அப்படித் தன் மனைவியின் தாலியையும் சேலையையும் காப்பாற்றாத கடவுள் மனிதனுக்கு என்ன சொல்ல முடியும். இதனை எவனாவது எண்ணிப் பார்க்கின்றானா?

(8) சர்வத்திலும் வியாபகமாக இருக்கிற கடவுள்-மக்களுக்கு ஏன் தான் இருப்பதாக, தன்னைத் தானாகத்தெரிந்து கொள்ளச் செய்ய முடியவில்லை?

(9) உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால் நமக்குத் தெரியாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன? அந்தக் கடவுள் தான் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக் கூடாது? ஐம்புலன்கட்கும் மனத்திற்கும் எட்டாமல் ஒரு கடவுள் ஏன் பயந்து கொண்டு இருக்க வேண்டும்? சர்வசக்தியுள்ள கடவுள் என்று சொல்லி உற்பத்தி செய்துவிட்டு அது நமக்கு விளங்கும்படி செய்யாவிட்டால் அஃது எப்படி சர்வசக்தி உடையதாகும்? இந்த வினாக்களுக்கு எந்த ஆத்திகனும் மறுமொழி தரமுடியாது.

(10) கடவுளும் மதமும் அறிவற்றவனைத் தான் ஆட்டும் என்பதோடு நம்பிக்கைக்காரனை வெறியனாகவும் பைத்தியக் காரனாகவும்கூட ஆக்கிவிடும். ஆனால் எப்படிப்பட்ட தன்மையுள்ள கடவுளும் மதமும் பகுத்தறிவுவாதி இருக்கிற பக்கம் எட்டிக்கூடப் பார்க்கமுடியாது.

இப்படிச் செல்கின்றன அய்யா அவர்களின் சிந்தனைகள்.

உருவவழிபாடு: மணிவாசகப்பெருமான் கடவுளுக்கு உருவம் இல்லை, பெயர் இல்லை என்று கூறியதையும்; சித்தர்கள் உருவவழிபாட்டைக் கடிவதையும் முன்னர் குறிப்பிட்டேன். அவற்றை நினைவு கூர்ந்த நிலையில் தந்தை பெரியாரின் இதுபற்றிய கருத்துகளைக் கவனிப்போம். கல்லைக் கடவுள் என்று வழிபடும் மக்கள் பார்ப்பனரைச் 'சுவாமி' என்று குறிப்பிடுவதைக் காண்பதில் வியப்பில்லை என்கின்றார். அண்மைக்காலத்தில் கேரள சபரிமலை ஐயப்பன் பெரும்புகழ் பெற்றுள்ளான். ஆண்டு தோறும் எண்ணற்ற தமிழர்கள்-பெரும்பாலும் தொழிலாளர்கள், அலுவலர்கள் போய் வருகின்றனர். அவர்கள் ஒருவரை யொருவர் வினவும் போது 'சுவாமி' என்று விளிக்கின்றனர்.[குறிப்பு 11]

(1) கடவுள் உருவமில்லாதவர், நிறம் இல்லாதவர், குணம் இல்லாதவர், எவர் கண்ணுக்கும் படாதவர், யாராலும் உணரமுடியாதவர், ஐம்புலன்கட்கும் அப்பாற்பட்டவர் என்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டு இன்னொருப்பக்கம் கழுதை, குதிரை, மாடு, களிமண், சாணி உருண்டை, குரங்கு, பல்லி, செம்பு, பித்தளை, கல், மரம், பாம்புப் புற்று, காக்காய், கழுகு ஆகியவற்றை மக்கள் வழிபடுகின்றனர். இஃது அறியாமை, வடிகட்டின முட்டாள்தனம் அல்லவா? என்று கேட்கின்றார் பெரியார்.

(2) கடவுளைப் பற்றிச் சொல்லுகின்றவர்கள் “கடவுள் பற்றற்றவர்; கருணையுள்ளவர், அன்பானவர், வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர், உருவமற்றவர், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பவர், ‘அவனன்றி ஒரணுவும் அசையாது’ என்றெல்லாம் சொல்லிவிட்டு, அதற்கு முற்றிலும் மாறான தன்மையில் மனிதனைப்போல் உருவம் அமைத்ததோடு நில்லாமல் அதற்குப் பெண்டாட்டி, பிள்ளைக்குட்டி, வைப்பாட்டி என்றெல்லாம் கற்பித்துக் கொண்டு அவற்றிற்குச் சோறு, சாறு முதலியவற்றைப் படைக்கின்றாயே. இஃது அறிவுள்ளவர் செயலா?” என்று கேட்கின்றார்.

(3) அன்பு மயமான ஆண்டவனுக்கு அவன் திருக்கைகளில் அரிவாள், சூலம், வில், வேல் போன்ற பயங்கரமான ஆயுதங்கள் வைத்திருப்பதுபோல் உருவம் அமைக்கப்பெற்றுள்ளது. இஃது அன்புள்ளவருக்குப் பொருத்தமான செயலா? இப்படியெல்லாம் படைப்பது காட்டுமிராண்டித்தனமல்லவா? இவ்வாறு படைப்பவர்களை அடியார்கள் என்று சொல்வதற்கு என்ன அருகதை? “நான்பந்தயம் கட்டிச் சொல்லுகின்றேன்; நம் மக்களில் கடவுளை வணங்குகிறவர்களில் அறிவாளர்களோ யோக்கியரோ, உண்மை அறிந்தவரோ? இல்லை; இல்லை! இல்லவே இல்லை!” என்கின்றார் பகுத்தறிவுப் பகலவன்.

(4) திராவிடப் பொருளைச் சுரண்டுவதற்கு காரணமாயிருந்ததும், இன்றுவரை காரணமாய் இருந்து வருவதும் சிலை வணக்கமேயாகும். ஆரிய நச்சுமரத்திற்கு எருப்போட்டு நீர் ஊற்றி வருவது இந்தச் சிலை வணக்கமேயாகும்.

(5) சர்வ சக்தியிலுள்ள கடவுள் என்பதைச் சாதாரணச் சாணி உருண்டையாக ஆக்கிவைத்திருப்பது மாபெரும் அயோக்கியத்தனம்; ஆட்டுக்கல்லாக அடித்து வைத்திருப்பது அதைவிட பெரும் அயோக்கியத்தனம் என்கின்றார் பெரியார்.

(6) கடவுள் எங்கும் இருக்கிறார் என்றும் சொல்லி முடித்த பிறகு எதற்காகக் கோயில் கட்டி அதற்குள் குழவிக்கல்லைக் கொண்டுபோய் வைத்து ‘இதுதான் கடவுள்’ என்று ஏன் சொல்ல வேண்டும்? உருவம் இல்லாதவர் கடவுள் என்று கூறிவிட்டு கடவுளுக்கு நான்கு கைகள், 12 கைகள் என்றும் இரண்டு தலை, ஆறு தலை என்றும் எதற்காகப் படைக்க வேண்டும்?

(7) கடவுள் எக்காலத்தும் என்றும் நிறைந்து நிற்கும் சக்தியாகச் சொல்லப் பெறுகிறது. அப்படிப் பார்த்தால் இராமன் எப்படிக் கடவுளாக முடியும்? கிருட்டிணன், கந்தன், விநாயகன் இப்படியாகச் சொல்லப்பெறுபவைகள் அனைத்தும் எப்படிக் கடவுளர்களாக முடியும்? இவர்கள் எல்லாம் பிறந்திறந்து போயுள்ளனர். சராசரிமனிதர்களின் குணம் படைத்தவர்களாக உள்ளனர். இவர்களை எப்படிக் கடவுளர்களாக ஒத்துக் கொள்ள முடியும்? என்று வினவுகின்றார். கோயில்கள்: உருவ வழிபாட்டின் விளைவாக எழுந்தவை திருக்கோயில்கள். மராமத்து செலவு அடிக்கடி ஏற்படும், எதிர் காலத்தில் இதனை எவரும் ஏற்காமாட்டார்களோ என்று எண்ணியே கல்லாலேயே கோயில்களைக் கட்டியுள்ளனர்.

(1) இந்நாட்டில் எத்தனைக் கோயில்கள்? வைணவர்களுக்கு 108 திவ்விய தேசங்கள். யாவும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்றவை; மங்களாசாசனம் செய்யப்பெறாத கோயில்கள் ஆயிரக்கணக்கானவை. சைவர்கட்குப் பாடல் பெற்ற தலங்கள் 274; வைப்புத்தலங்கள்-பாடல்களில் பெயர்கள் வைக்கப் பெற்றவை 233. இந்த இரண்டிலும் அடங்காதவை எண்ணற்றவை. பிள்ளையார் கோவில்கள் எத்தனை? ஆற்றங்கரை, அரச மரத்துப்பிள்ளையார்கள் எத்தனை? சாலையோரங்களில் நாடோறும் தோன்றி வரும் கோயில்கட்குக் கணக்கே இல்லை. இது பக்தி பெருகி வருவதற்கு அடையாளமா? என்று கேட்கின்றார் பெரியார்.

(2) மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில், காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில், இராமேசுவரத்திலுள்ள இராமநாதர் கோயில்- இவை ஒவ்வொனறும் நாடாளுமன்ற கட்டடத்தைவிட முப்பது, நாற்பது இலட்சம் அதிகம் போட்டாலும் கட்ட முடியாது. இவை ஒவ்வொன்றிலும் உள்ள சாமிகளோ நாடாளுமன்ற உறுப்பினர்களைவிட ஏன்? வாக்களார்களைவிட எத்தனையோ மடங்கு அதிகமாக உள்ளன. அந்தச் சாமிகளுக்கு ஆகின்ற செலவோ நாடாளுமன்ற உறுப்பினர்கட்குக் கொட்டி அழுகின்ற தெண்டச் செலவைவிட ஏராளமாக ஆகின்றது-என்று மனவருத்தத்துடன் பேசுகின்றார்கள் அய்யா அவர்கள்.

(3) நம் நாட்டைப் பிடித்துள்ள பெருங்கோயில்கள்தாம் நாம் கெட்டு சீரழிந்து அடிமையானதற்கு, வறுமையில் கஷ்டப்பட்டுத் திண்டாடுவதற்கு எல்லாம் காரணம் என்பது அய்யா அவர்களின் கருத்தாகும். இவற்றை நம் வாழ்வைக் கெடுத்த சனியன்களே என்று வயிறெரிந்து பேசுகிறார்கள். கொள்ளையடித்த பணத்திற்குப் பரிகாரம் இதுதான் என்று நம்பியே பணக்காரர்கள் கோயில்களைக் கட்டுகிறார்கள். தவறாகத் திரட்டிய பணத்தின் ஒரு பகுதியை, தாமே அச்சடித்த 100 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகளைக் கட்டுக்கட்டாக திருப்பதி போன்ற திருக்கோயில்களின் உண்டியில் கொட்டுகிறார்கள். அவை நல்ல நோட்டுகளுடன் கலந்து புழக்கத்திற்கு வந்து விடுகின்றன. கல்லுச்சாமிகளைத் தம் தகாத செயல்களுக்குப் பங்காளிகளாக்கி விடுகிறார்கள். பண்ட உற்பத்திக்குமேல் பண உற்பத்தி பெருகி விடுவதால் விலைவாசி சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்து விடுகின்றது. இங்குக் கடவுளர்கள் கயவர்களின் இழிசெயல்கட்குத் துணை போவதைக் காண்கின்றோம். கோயில் வருமானத்தைக் கொண்டு பக்தியை அளவிடுவது எவ்வளவு கேவலம் என்பது அறிவுள்ளவர்கட்குத் தெளிவாகின்றது.

(4) கடவுளர்களைப் பற்றிச் சொல்லப் பெறுகின்ற இலக்கணம், இலட்சியம் இவற்றிற்குச் சிறிதும் பொருந்தாத அயோத்தி இராமன் எப்படிக் கடவுளாக முடியும்! கோகுலத்தில் வளர்ந்த கண்ணன், பழநி, திருச்செந்தூர் போன்ற கோயில்களில் எழுந்தருளியுள்ள கந்தன் ஆகியோர் எப்படிக் கடவுளர்களாக முடியும்? என்று கேட்கிறார்கள் அய்யா அவர்கள். மனிதகுலம் படைத்த இவர்களை எப்படிக் கடவுளாக ஒத்துக் கொள்ள முடியும்?

(5) தமிழன் வணங்கும் கோயில்கள் ஆயிரக்கணக்கானவை. ஒரு மனிதன் ஒரு கடவுளுக்குமேல் வழிபடுகின்றான், நம்புகின்றான் என்றால் அவன் கடவுளை நம்புகின்றவன் ஆகான் என்பதுதானே பொருள்? அவன் கடவுளுக்கு உருவம் உண்டு என்று சொல்வானேயானால் அவன் கடவுளைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாதவன் என்று தானே கொள்ள வேண்டும்? இங்குத் தந்தை பெரியாரின் வினாக்கள் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதைக் காண்கின்றோம்.

(6) "கோயிலுக்குப் போகக்கூடாது; செத்தாலும் போகக்கூடாது. அங்கே என்ன இருக்கின்றது. குழவிக்கல்லைத் தவிர? யாராவது சொல்லுங்கள்” என்று சவால் விடுக்கும் தந்தை பெரியார், “எல்லா இடங்களிலும் எங்கும் நிறைந்த கடவுளுக்கு தனியான ஓர் இடத்தில் என்ன வேலை? எல்லாமாய் இருக்கின்ற இறைவனுக்கு குழவிக்கல்லாய் இருக்க வேண்டும் என்று என்ன தலை எழுத்து? எவனாவது சாபம் கொடுத்தானா?” என்று கிண்டல் பாவனையில் தொடுக்கும் வினாக்களுக்கு எந்த அடியாராவது பதில் சொல்ல முடியுமா?

(7) ஒரு கோயிலுக்குள் பூசைக்குரிய பலசிலைகள் உள்ளன. அவற்றுள் சில கருவறைக்குள் உள்ளன; சில அந்த அறைக்கு வெளியே உள்ளன. இரண்டு வகைகளும் கடவுளர்களே; சாத்திரப்படி குடமுழுக்கு செய்யப்பெற்றவையே. வெளியிலிருக்கும் கடவுளர்களைத் தொடலாம்; தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். கருவறைக்குள் இருக்கும் கடவுளை மாத்திரம் நெருங்கக் கூடாது என்றால் இதில் யோக்கியமிருக்கிறதா? என்று வினவுகின்றார் தந்தை பெரியார். (8) வடநாட்டில், குறிப்பாக வாரணாசியில், கங்கையில் நீராடிவிட்டு வில்வத்தைக் கையில் கொண்டுவரும் அடியார்கள் விசுவாசநாதர் கோயிலில் உள்ள இலிங்கத்தின்மீது வில்வத்தைத் தூவுகின்றனர்; தொட்ட கைகளைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளுகின்றனர். தென்னாட்டில் மட்டிலும் ஏன் இந்த நிலை ஏற்படவில்லை? சாத்திரங்களில் இதற்கு இடம் இல்லையா? என்று வினவும் பெரியாருக்கு எந்த சாத்திர அறிஞர் என்ன பதில் சொல்ல முடியும்?

இங்ஙனம் பல்வேறு விதமாகச் சொல்மாரிகளை வீசும் பெரியாருக்கு பதில் கண்மூடி மெளனியாக இருக்கும் அடியார்களைத்தான் காண்கின்றோம்.

இவ்விடத்தில் அடியேனுக்கு ஒன்று சொல்லத் தோன்றுகின்றது. இந்தக் கோயில்கள் எல்லாம் ஆரியர்களின் பார்ப்பனர்களின்- சூழ்ச்சியால் ஏற்படவில்லை. ஏதோ காலந்தோறும் தோன்றி வருகின்றன. நாடோறும் எண்ணற்ற அடியார்கள் சைவர்கள், வைணவர்கள் உட்பட-திருத்தலப் பயணம் மேற்கொண்டு மூர்த்திகளை வழிபட்டு மன அமைதியினைப் பெறுகின்றனர். வடநாட்டினர், தென்னாட்டினர் யாவரும் காசிக்கும் இராமேசுவரத்திற்கும் பயணம் செய்து வருகின்றனர். மக்கட்பேறு வேண்டுவோர் இராமேசுவரத்திற்கும் வீடுபேறு வேண்டுவோர் காசிக்கும் சென்று வருகின்றார்.

திருக்கோயில்களுக்குச் சென்று வருவதால் பெறும் பயனைப் பற்றியும் நூல்கள் உள்ளன. அங்கு சென்று வருவது மூடத்தனம் என்று பெரியார் அவர்கள் பேசிய பேச்சும், எழுதிய கட்டுரைகளும் நூல்களாக உள்ளன. இரண்டையும் மக்கள் படித்து அவரவர்கள் விரும்பும் பயனைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு இரண்டுவிதக் கருத்துகளும் மன்பதையின் நடுவே என்றும் உலவிவரும் என்பதுதான் உண்மை.

கடவுள் மறுப்பு: இது பற்றிய தந்தை பெரியாரின் சிந்தனைகளை ஈண்டுக் காட்டுவேன்.

(1) கடவுளுக்கு இலட்சணமோ குறிப்போ ஏதாவது ஒன்று விளக்கமாகச் சொல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டிருந்தால், இவ்வளவு காலத்துக்குள்ளாகக் கடவுள் சங்கதியில் இரண்டில் ஒன்று, அஃதாவது உண்டு இல்லை என்கின்ற ஏதாவது ஒரு முடிவுக்கு உலக மக்கள் வந்ததிருப்பார்கள் என்கின்றார்.

(2) இன்றைய தர்மம் நாளைக்கு அதர்மமாகித் தலைகீழாக மாறக்கூடும். அத்தகைய நிலைமை வரும்போது இன்றைய நிலைமை எல்லாம் கடவுள் கட்டளை என்றால் அதனை மாற்ற முற்படுகின்றவன் கடவுள் கட்டளையை மறுக்க-ஏன் கடவுளையே- மறுக்கத் துணிந்தாக வேண்டும். கடவுளை மறக்கத் துணிந்தவனே தர்மத்தின் பெயரால் உள்ள இன்றைய கொடுமையை ஒழிக்க முடியும்.

(3) கடவுள் மறுப்பு என்றால் எல்லாக் கூட்டங்களிலும் ‘கடவுள் வாழ்த்து’ மரபாக வருவது போல், பொதுக் கூட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக,

‘'கடவுள் இல்லை'’
‘'கடவுள் இல்லவே இல்லை'’
‘'கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்'’
‘'பரப்பினவன் அயோக்கியன்'’
‘'வணங்குகிறவன் காட்டுமிராண்டி'’
‘'கடவுள் இல்லை; இல்லவே இல்லை.'’

என்பதாகச் சொல்லிவிட்டு மற்ற நிகழ்ச்சிகளைத் தொடங்குவதுதான் கடவுள் மறுப்பு என்றதாகும்.

(4) கடவுள் என்றால் என்ன என்று எப்படிப்பட்ட ஆத்திகராலும் சொல்ல முடியவில்லை. ஆகவே ஒவ்வொரு ஆத்திகனும் தனக்குப் புரியாத ஒன்றையே, தன்னால் தெரிந்து கொள்ள முடியாததும் பிறர்க்கு விளக்க முடியாததும் ஆகிய ஒன்றையே குரங்குப் பிடியாய்ப் பிடித்துக் கொண்டு ‘கடவுள், கடவுள்’ என்று அழுகின்றான். இந்தப் பிடியைத் தளர்த்திக் கடவுள் இருப்பினை மறுக்க வேண்டாமா?

(5) கடவுள் கண்ணுக்கும் எட்டாதவன்; அறிவுக்கும் எட்டாதவன்; மனத்துக்கும் எட்டாதவன் என்று ஆத்திகன் கூறுகின்றான். இந்த மூன்றுக்கும் எட்டாதவன் பிறகு எதற்குத்தான் எட்டுவான்? இதுபற்றி ஏன் ஆராயக் கூடாது? அப்படியே நம்பவேண்டும். அதற்குப் பெயர்தான் ஆத்திகம். இப்படி எதற்கும் எட்டாதது எப்படிக் கடவுளாகும்? என்று கேட்டால் நாத்திகமா? இப்படி வினவுகின்றார் அய்யா.

(6) கடவுள் ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் எதற்கு மனிதனாகப் பிறந்து வரவேண்டும்? அவன் மனத்தில் நினைத்தால் நினைத்தபடி ஆகிவிட வேண்டாமா? இராமன் கடவுளாக இருந்தால்? ‘ஏ இராவணா, நீ மாண்டு போக வேண்டும்’ என்று சங்கல்ப்பித்தாலே போதுமே; அவன் செத்துப் போயிருப்பானே!

(7) "கடவுள் என்கிறார்களே; என்ன கடவுள்? வேதத்தில் கடவுள் உண்டா? ஒரு கடவுள் இருந்ததாகச் சொல்லட்டும்; ஒத்துக் கொள்கின்றேன்; வேதத்தில் கடவுள் இல்லை. நான் ஒன்றும் புளுகுபவன் அல்லன். அதில் எங்கே இருக்கிறது என்று எடுத்துக்காட்டட்டும்; ஒத்துக் கொள்ளுகிறேன். அதுவும் தமிழனைப் (திராவிடனைப்) பொறுத்தவரையில் கடவுளே இல்லை.

இவ்விடத்தில் பாரதியார் ‘கண்ணன்-என் தாய்’ என்ற ‘கண்ணன் பாட்டில்’

சாத்திரம் கோடி வைத்தாள்; - அவை
தம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள்;
மீத்திடும் போதினிலே-நான்
வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற்கே
கோத்தபொய் வேதங்களும்-மதக்
கொலைகளும் அரசர்தங் கூத்துகளும்
மூத்தவர் பொய்நடையும்-இள
மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள்(9) [குறிப்பு 12]

என்று கூறுவதை நினைவு கூர்ந்து மகிழலாம். ஒருவகையில் தந்தை பெரியார் பாரதியாரின் உள்ளத்திலிருந்து பேசுவது போல் தோன்றுகின்றது.

(10) 'கடவுள் இல்லை' என்று சொல்லிக் கொண்டு கடவுளைச் செருப்பால் அடித்துக் கொண்டிருக்கும் ஒருவன் [குறிப்பு 13], 92 ஆண்டுகளுக்கு மேல் வாழ்கின்றான் என்றால் உண்மையில் கடவுள் இருந்தால் தன்னை இழிவு படுத்துகிறவனை இவ்வளவு நாள் விட்டு வைத்திருக்குமோ? தண்டனையும் கொடுக்கவில்லை. ஏன்? கடவுள் இல்லை என்பதே உண்மை.

(11) கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்கின்றதைக் கேட்டு ஒருவன் கோபம் அடைகிறான். ஒருவரின் மனம் நோகிறது என்றால் அவன் கடவுள் தானாகத் தோன்றினார் என்பதை நம்பவில்லை என்பதோடு கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பெற்றது என்று கருதுகிறான் என்பதுதானே பொருள்?

(12) கடவுள் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்ட மனிதர் கடவுள் நம்பிக்கைக்காரர்களில் ஒருவரும் இல்லை. ஒருபொருள் இருந்தால் தானே அஃது இன்னது என்று புரிந்து
 1. பாவேந்தர்
 2. 1934-39 ஆண்டுகளில், அப்போது அவர்தாடி இல்லாதவராக இருந்ததாக நினைவு- அப்போது என் வயது 18; அவருக்கு வயது 55.
 3. 1944 முதல். அப்போது என் வயது 28; அவர் வயது 65. தாடியுடன் இருந்ததாக நினைவு.
 4. பாரதிதாசன் கவிதைகள்-உலக ஒற்றுமை. அடி (1-4)
 5. மேலது-அடி (13-15)
 6. மேல் மருவத்திதூர் ‘ஆதிபராசக்தி’ திருக்கோயில் இந்தக் கருத்தின் அடிப்படையில் அமைக்கப்பெற்றதாகக் கருதலாம்.
 7. வித்தியேசுவரனில்-உருத்தின், மால், அயன் என மூன்றும் அடங்கும்.
 8. இவ்வரலாறு இன்னொரு விதமாகவும் சொல்லப்பெறுவதுண்டு. சனகாதி முனிவர்கட்கு சிவதத்துவத்தை உபதேசிக்கும் பொருட்டு தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளிய கதை.
 9. அத்வைதம் கூறும் பிரம்மம்; தாயுமானவர் அதை மொழி பெயர்த்துக் கூறுவர் பெரிய பொருள் என்று.
 10. இந்த வேறுபாட்டிற்குக் காரணம் அவரவர் செய்த வினைப்பயன் என்று சமயங்கள் சாற்றும். தந்தை பெரியார் பேச்சில் எழுத்தில் இதுபற்றிய குறிப்பே இருப்பதாகத் தெரியவில்லை. மோட்சம் நரகம் என்ற அளவில் அவர் சிந்தனை நின்று விடுகின்றது.
 11. ஒருவன் உள்ளத்தில் அந்தர்யாமியாக இருக்கும் கடவுளை நினைத்து சுவாமி என்று குறிப்பிடுவதாக ஐதிகம்.
 12. மதக்கொலைகள்-சமணர்களைக் கழுவேற்றல், சிலுவைப்போர்கள் போன்றவை. அரசர்தம் கூத்துகள்- துரியோதனன் செயல்கள், இராவணன் தீங்குகள், இரணியனின் அடாத செயல்கள் போன்றவை.
 13. இராமர் படத்தைச் செருப்பால் அடித்தவர் பெரியார். தன்னையே படர்க்கையில் சுட்டுகின்றார்.
கொள்ளமுடியும்? அஃது இல்லாததனாலேயே கடவுள் நம்பிக்கைக்காரர்கள் ஆளுக்கு ஒருவிதமாகக் கடவுளைப் பற்றி உளறிக் கொட்டுகின்றனர்.

(13) "எப்போதுமே நான் கடவுளையும் மதத்தையும் அவை சம்பந்தப்பட்ட எவற்றையுமே வெங்காயம் என்றுதான் சொல்வேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது; வெறும் சதை அச்சசொல்லின் பொருள்-வெறுங்காயம்; உயிரற்ற உடல்; விதை இல்லாதது; உரிக்கஉரிக்கத் தோலாகவே-சதையாகவே வந்து முடிவில் சூனியமாய்-விதை இல்லாததன்மையதாய்-முடிவது என்பது. ஆகவே வித்து, விதை இல்லாத காரணத்தால் அதற்கு வெங்காயம் என்ற பெயர் உண்டாகிறது. அது போன்றனவே, கடவுளும் மதமும் ஆகும். இச்சொற்களுக்கு இயற்கைப் பொருள்களே இல்லை. கற்பிக்கிறவர்கள் சொல்லும் பொருள்தான்”

இந்த உவமையின் சிறப்பைப் பாராட்டும் முகத்தான் இலால்குடி திராவிடக் கழகத்தினர் (திருச்சி மாவட்டம்) நான் துறையூரில் பணியாற்றிய காலத்தில் (1941-50) ஏதோ ஒரு வருடத்தில் தந்தை பெரியாருக்கு எடைக்கு எடை (துலாபாரம்) வெங்காயப் பரிசு அளித்ததை நினைவுகூர முடிகின்றது.

கடவுள் ஒழிப்பு: இது பற்றிய அய்யா அவர்களின் சிந்தனைகளைக் காண்போம்.

(1) கடவுள் தன்னைச் செல்வனாகப் பிறப்பித்ததற்காக செல்வனொருவன் திருக்கோயிலை எழுப்புகிறான் என்றால், வறிஞனாகப் பிறப்பித்தற்காக அந்த வறிஞன் அத்திருக்கோயிலை இடித்துத் தள்ள வேண்டாமா! அல்லது அத்திருக்கோயிலில் எழுந்தருள்விக்கப் பெற்ற தெய்வத்திருமேனியைத் தூள்தூளாக்க வேண்டாமா? கடுமையான யோசனை. இங்கு வைதிகரின் கருத்து பொடியாக்கப்பெறுகின்றது. இந்தக் கடவுளையும் ஆத்திகத் தன்மையையும் ஒழித்துக்கட்டாமல் மனிதன் மனிதத் தன்மையை அடைய முடியாது என்பது அய்யா அவர்களின் அசைக்க முடியாத அபிப்ராயம்.

(2) கடன்பட்டு வட்டி கொடுத்த மக்களுடையவும் பாடுபட்டு பலனைக் கொடுத்த மக்களுடையவும் மனமும் வயிறும் வாயும் பற்றி எரிய எரிய அந்த உழைப்பாளிகளின் பணங்களைக் கொண்டு திருக்கோயில் எழுப்பவும், வாகனங்கள் செய்யவும், திருமேனிக்குக் கிரீடம் அமைக்கவும், திருக்கல்யாணம் செய்யவும், திருவிழாவான வேடிக்கை உண்டாக்க ஏற்படுத்தப் படுமானால் யார்தான் சகித்துக் கொண்டு இருக்க முடியும்? இந்த அக்கிரமங் களைப் பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள்தான் இருக்க முடியும்? அப்படி ஒரு கடவுள் உள்ளது என்று சொல்லப் பெறுமானால் அப்படிப்பட்ட கடவுளை அழித்து ஒழித்து விடுவதால் என்ன நட்டம்? என்று கேட்கின்றார் அய்யா.

(3) கடவுளைப் பற்றிய எண்ணமேகூடாது என்பது அய்யாவின் கருத்தன்று. மனிதச் சமூகச் சமதர்ம வாழ்வுக்குத் தடையாய் எந்தக் கடவுளும் இருக்கக் கூடாது என்றும், அப்படிப் பட்ட கடவுள் இருக்கக்கூடாது என்று தான் அய்யா அவர்கள் வற்புறுத்திப்பேசுகின்றார்கள்.

(4) புலிக்கு ஆடுகளால் ஏற்படுத்தப்பெற்ற உணவு என்பது போலவும், பூனைக்கு எலி கடவுளால் ஏற்படுத்தப்பெற்ற உணவு என்பது போலவும், ஆணுக்குப் பெண் கடவுளால் ஏற்படுத்தப் பெற்ற அடிமை என்பதாகக் கருதி நடத்தப் பெற்று வருகின்றனர். உண்மையிலேயே கடவுள் இப்படி ஒரு நீதி எற்படுத்தி இருப்பாரானால் முதலில் அந்தக் கடவுளை ஒழித்து விட்டுத்தான் வேறு காரியம் பார்க்க வேண்டும்.

(5) கோயிலுக்குப் போய்ச் சாமியைத் தொட்டால் சாமி தீட்டுப் பட்டுச் செத்துவிடும் என்கிறானே பார்ப்பான் ! ‘வெளியிலிருந்து கன்னத்தில போட்டுக்கொள்’ என்கிறானே! நீயும் அதை ஒத்துக் கொண்டு எட்டி நின்றால் கீழச்சாதி என்று ஒத்துக் கொள்வதாகத்தானே பொருள்? மானமுள்ளவன் கோயிலுக்குப் போகலாமா? -என்கிறார் பெரியார்.

(6) "நான் ஏன் இராமனை எரிக்கச் சொன்னேன்? நான் ஏன் பிள்ளையாரை உடைக்கச் சொன்னேன்? இதன் காரணம் 100க்கு 90 விழுக்காடு பிள்ளையார் கடவுள் அல்ல என்பதாக இருந்தாலும் அதன் பிறவிக் கதைகள் கடவுள் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதோடு அந்தக் கதைகள் காட்டு மிராண்டிக் கதைகள் என்பது விளக்கப்படவேயாகும்.

(7) கடவுள் ஒழியாமல் நாம் மனிதனாகவே முடியாது. பணக்காரனாக பதவிகளை வகிக்கலாம்; ஆனால் மனிதனாக முடியாது. எங்கெங்குப் பகவான்- கடவுள்- ஒழிகின்றானோ அங்கெல்லாம் அறிவாளி தோன்றுவான்; அறிவியலறிஞன் தோன்றுவான்.

(8) தமிழனை முட்டாளாக ஆக்குவது கடவுள். அதை ஒழிப்பது தான் எங்கள் வேலை. தமிழனை இழிவுபடுத்துவது சாத்திரம், மதம், புராணம். அவற்றை ஒழிப்பதும் நெருப்பிலிட்டுக் கொளுத்துவதும்தான். எங்கள் வேலை-என்கின்றார்கள். (9) பெரியார் சொல்லுவார்: “இந்த ஊர்க் கோயிலை நீங்கள்தான் கட்டினீர்கள். கல்தச்சருக்குக் காசு கொடுத்துக் குழவிக் கல்லை அடித்து வைக்கச் சொன்னீர்கள். சாமி பூசைக்கு மானியம் விட்டீர்கள். இவ்வளவும் பண்ணி விட்டு நீ கோயிலின் வெளியிலிருந்து கன்னத்தில் போட்டுக் கொள்ளுகிறாயே! நீ இழிசாதி, நீ தொட்டால் சாமி தீட்டாகிவிடும். சாமி செத்துவிடும்” என்கின்றான். இதை பொறுத்துக் கொண்டுதானே சாமி கும்பிடுகிறாய். இப்படிநீ தொட்டால் தீட்டாகிவிடும். செத்துவிடும் என்கிற கடவுளை நீ கும்பிடலாமா?-என்று கேட்கின்றார்.

(10) மனிதன் இழிவுக்கு, மானமற்ற தன்மைக்கு, பகுத்தறிவற்ற தன்மைக்கு, கடவுள் நம்பிக்கை காரணமாக இருப்பதால் அதை ஒழித்துக் கட்டவேண்டும் என்கின்றோமே தவிர கடவுள்மேல் எங்களுக்கு எந்தவிதக் கோபமும் இல்லை-என்கின்றார். இக்கருத்து நீண்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பெறல் வேண்டும்.


2. சமயம்

இவ்வுலகம் தோன்றியநாள் தொட்டு மக்களிடையே ஏதோ ஒருவகையில் சமயம் நிலவி வருகின்றது. மக்கள் அன்றாட வாழ்க்கை ஒழுங்கு பெறவிருக்கும் நன்னெறிகளின் தொகுதியே சமயம் ஆகும். நம் நாட்டில் நிலவும் சமயங்கள்; சைவம், வைணவம், புத்தம், சமணம் என்பவையாகும். நடைமுறையிலுள்ள மதம் அல்லது சமயத்தைப் பற்றிப் பெரியார் கூறுவது.

(1) நம்மீது ஆதிக்கம் செலுத்த ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்ச்சி என்னும் கட்டடம் மதம் என்னும் சிமெண்ட் (சீமைக்காரை) சுண்ணாம்பினால், கடவுள் என்னும் கற்களைக் கொண்டு என்றும் அழியாத மாதிரியில் பலமாகக் கட்டி, அதைச் சாத்திரம் புராணம், மறுபிறவி, சொர்க்கம், மோட்சம் என்னும் அழகான சித்திர வேலைகளுடன் பூசப் பெற்றுள்ளது-என்று விளக்குவார்.

(2) மதம், கடவுள், சாத்திரம் மனிதச் சமுதாயத்தை முறைப்படுத்தவும் ஒழுக்கம், நாணயம் முதலியவற்றை வளரச் செய்யவும் ஏற்படுத்தப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் நாளடையில் இது (மதம்) ஒருசில சுயநலசோம்பேறிகளிடம் அகப்பட்டுக் கொண்டு, இன்றைக்கு அதற்கு நேர்மாறாக நாணயமற்ற தன்மையும் தீயொழுக்கமும் அயோக்கியத்தனமும்தான் வளருகின்றன. மதம் ஆஷாடபூதிகள், போலி வேடதாரிகள் நிறைந்ததாக மாறிவிட்டது என்று கருதுகின்றார் அய்யா. (3) மதம் என்பதைப் பலவிதமாகச் சமயத்துக்குத் தக்கபடி சொல்லுவார்கள். மனித வாழ்வுக்காக மனிதனுடைய முடிவான இலட்சியத்தை அடையத்தக்க ஏற்பாடுகளே, விதிகளே, எண்ணங்களே மதம் என்ற சொல்லலாம்.

(4) எவ்வளவு ............................... அறிவாளியான நல்ல ............................... உண்டாக்கப்பட்டது ............................... தெய்விகத் தனிச்சக்தி, ............................... ஏற்படுத்தப்பெற்றது ...............................

(5) மதம் என்பது ............................... அறிந்திருப்போர் ............................... அறியாது பழமை ............................... கண்மூடித்தனமாகப் ............................... பெரும்பாலோர் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார். அய்யா அவர்களின் இந்தக் கருத்தினை அடிப்படையாகக் கொண்ட மக்கட் சமுதாயத்தைக் கூர்ந்து நோக்கினால் இந்த உண்மை நமக்கும் தெளிவாகும்.

(6) மதம் என்பது மனிதனின் உலகவாழ்க்கையின் நடப்பிற்கு வழிகாட்டியான கொள்கைகளைக் கொண்டது; அது நம்மைப் போன்ற ஒரு மனிதனால் ஏற்படுத்தப்பெற்றது; அது கால தேசவர்த்தமானப்படி மக்கள் செளகரியத்திற்காகத் திருத்தி அமைக்கக்கூடிய உரிமையுள்ளது. மனிதனுடைய அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் இடந்தரக்கூடியது என்று சொல்லுகின்ற எந்த அமைப்பையும் பெரியார் எதிர்த்ததே இல்லை என்பதை நாம் அறிய வேண்டும். (இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டே ஆகமங்கள் கால ............................... அடைகின்றன)

(7) அரசு, மதம்; கடவுள் ஆகிய அமைப்பை எதிர்ப்பதற்குக் காரணம் அவை மக்களின் தீமைக்குக் காவலாய் இருக்கின்றன என்கின்ற ஒரே நோக்கமேயல்லாமல் அவருக்கு அவற்றின்மேல் எந்தவிதக் காழ்ப்பும் பொறாமையும் வெறுப்பும் இல்லை என்பதை அவரே தெளிவாக வற்புறுத்தி எடுத்தோதுவதைக் காணலாம்.

(8) மனிதன் சட்டமோ, மதக்கொள்கையோ ஏற்படுத்த வேண்டுமானால் ஐம்புலன்களின் இயற்கை உணர்ச்சிக்கும் ஆசையின் சுபாவத்திற்கும் ஏற்றவிதமே விதி செய்யவேண்டும். அதற்கு விரோதமான கொள்கை கொண்ட மதமும் சட்டமும் மனிதனை அடிமையாக்கிச் சிறைப்படுத்துவதற்கு ஒப்பாகும்

_______________________________________

(குறிப்பு: ............................... = கிடைக்காத வரிகள், நூலின் அச்சுப்திபதிப்பில் பிழை நேர்ந்துள்ளது) என்பது அய்யாவின் ஆணித்தரமான கருத்து. மனிதாபிமானமே தந்தையவர்களின் பேச்சும் மூச்சுமாக இருந்தன.

(9) சீவன்களிடத்தில் அன்பு செலுத்துவதுதான் சைவம் என்பதனால் தாமும் சைவனாகவும் அதன்மூலம் தாமும் ஒரு சைவன் என்று சொல்லிக் கொள்ளவும் ஆசைப்படுவதாகச் செப்புகின்றார்.

(10) சீவன்களிடத்தில் இரக்கம் காட்டுவது, சீவன்களுக்கு உதவி செய்வது ஆகிய குணங்கள்தாம் திருமால்; அக்குணங்களைக் கொண்டு ஒழுகுவதுதான் வைணவம் என்பதனால் விட்டுணு விடத்திலும் வைணவனிடத்திலும் தமக்கு எவ்விதத்திலும் தகராறு இல்லை என்று அய்யா சொல்லுவதோடு நில்லாது தாமும் தம்மை ஒரு வைணவன் என்று சொல்லிக் கொள்ளும் நிலைமை ஏற்பட வேண்டும் என்பதே தமது விருப்பமாகும் என்று உறுதியுடன் சொல்லுகின்றார்.

(11) மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி. மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி. மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி. மதமே மனித சமூகசமதர்மத்திற்கு விரோதி. மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை. மதமே முதலாளி வர்க்கத்துக்குக் காவல். மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு. மதமே பார்ப்பன சமூகத்தினரின் பிழைப்புக்கு வழி- எவ்வளவு ஏக்கமிருந்தால் எரிமலைப் பிழம்பு போல் இவ்வார்த்தைகள் அவர்தம் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டிருக்க வேண்டும்?

(12) மதவாதி மோட்சத்திற்குப் போகக் கோயில்கட்டச் செய்வான். குளம் வெட்டச் செய்வான். எறும்புப் புற்றுக்கு அரிசி போடச் செய்வான். பாம்புப் புற்றுக்கு பால் வார்க்கச் செய்வான். ஆனால் மனிதனுக்குத் தொண்டு செய்வதன் மூலம் மனித இனம் மேன்மை அமையவேண்டும் என்று எந்த மதநிறுவனமோ மதவாதிகளோ போதிப்பதில்லை.

இந்தக் காரணங்களால் தந்தைபெரியாரை இராமாநுசர், இராமகிருஷ்ண பரமஹம்சா, இராமலிங்க அடிகள், காஞ்சி பெரியவர் என்பவர்களோடு ஒப்பவைத்துப் பாராட்ட வேண்டும் என்று என்சிறுமனம் எண்ணுகின்றது.

மதக்கேடுகள்: மதத்தினால் விளையக்கூடிய கேடுகளைப் பற்றிய அய்யாவின் சிந்தனைகள்:

(1) மதத்திற்கும் உலக இயற்கைக்கும் எப்போதுமே சம்பந்தம் இருப்பதில்லை. ஏனெனில், பெரும்பாலும் எல்லா மதங்களுமே உலக இயற்கைமீது ஆதிக்கம் செலுத்தி அதை வழிமறித்துக் கண்மூடித்தனமான செயற்கையில் திருப்புவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. அதனால் மதம் கலந்த படிப்பு இயற்கை அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் இடம் அளிக்காமலே போய் விடுகின்றது.

(2) மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி. மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி. மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி. மதமே மனிதசமூக சமதர்மத்திற்கு விரோதி. மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை. மதமே முதலாளிவர்க்கத்துக்குக் காவல். மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு. இச்சிந்தனை வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் காட்டிவிடுகின்றது மதக்கோட்பாடுகளை.

(3) எந்த வழியில் எந்த மாதிரியில் எவ்வளவு நல்லமுறையில் கடவுளையும் மதத்தையும் வேதத்தையும் சிருட்டித்துக் கொண்டாலும் அது மனித சமூகப் பெரும்பான்மை மக்களுக்கு ஆபத்தையும் கேட்டையும் பிரிவினையையும் முரட்டுத்தனத்தையும் குரோதத்தையும் அடிமைத்தன்மையையும் உண்டாக்கியே தீரும். உலகில் மதங்களால் ஏற்பட்ட மாபெரும் போர்களே இவற்றை மெய்ப்பிக்கின்றன.

(4) கள்ளினால் உண்டாகும் வெறியைவிட இம்மாதிரி மதங்களால் ஏற்படும் வெறி அதிகமான கேட்டைத்தருகின்றது. கள் குடித்தவனைக் கெடுக்கின்றது. மதம் மனத்தில் நினைத்தவனையே கெடுக்கிறது. வள்ளுவர் பெருமான் கள்ளுக்கும் காயத்துக்கும் ஒப்பிடுவதை நினைவூட்டுகின்றது இது.

(5) நான்காவது ஐந்தாவது சாதியாக்கி-பார்ப்பனரல்லாத மக்களை மடமையில் அழுத்தி வைக்கவே வேத, புராண மதம் வழி செய்கின்றன. இதைக் கொஞ்சமேனும் எடுத்துச் சொல்ல, திருத்த முயற்சி செய்தாலும் 'நாத்திகன்’, ‘மதத்துவேஷி' என்று சொல்லித் தலையில் கல்லைத் தூக்கி வைத்துவிட்டால் என்ன பொருள்?

(6) எந்த மதத்திலும் எந்தச் சமுதாயத்திலும் பாவமன்னிப்பு எளிதில் இருக்கிறதோ, அனுமதிக்கப்பெறுகின்றதோ, அந்த மதத்தில், சமுதாயத்தில், அயோக்கியர்கள் அதிகமாகத்தான் இருப்பார்கள். இதில் அதிசயம் ஒன்றுமில்லை.

(7) இன்று மதமானது ஒருவரையொருவர் ஏய்க்கவே பயன்படுத்தப் பெறுகின்றதே அல்லாமல், தொல்லையில்லா திருக்க நிம்மதியான வாழ்வு வாழ உதவுவதாக இல்லை. போலி வாழ்க்கைக்காரருக்குத் திரையாகவே மதமும் பக்தியும் உதவுகின்றன. இன்றைய வாழ்க்கையில் பல போலித்துறவிகள் வழக்கில் சிக்கிக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம். இதனை நினைந்தே வள்ளுவப் பெருந்தகை,

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று (குறள்-273)

என்று கூறிப் போந்தார்.

(8) மதங்கள் பிரிவினைக்கும் பேதத்திற்கும் காரண மாத்திரமல்லாமல் மடமைக்கும் மூடநம்பிக்கைக்கும் காரணமாக உள்ளன. அச்சத்தின் அத்திவாரத்தின்மீது ஆண்டவன் இருப்பது போல, மூடநம்பிக்கை மடமை என்ற அத்திவாரத்தின்மீதே மதங்கள் இருக்கின்றன.

(9) மதம் மனித சமுக முற்போக்கைத் தடைசெய்வதுடன் மனித சமூக ஒற்றுமைக்கும் சுதந்திரத்திற்கும் சம உரிமைக்கும் இடையூறாய் உள்ளது.

(10) ஓரிரு கோடிருபாய் பணமும் ஓரிரு ஆயிரம் ஆட்களும் 5-6 மொழிகளில் செய்தித்தாள்களும் வைத்துக்கொண்டு ஓர் ஈன மிருகத்திற்கும் தெய்வத்தன்மை கற்பித்து அற்புத அதிசயங்கள் செய்ததாகக் கதைகட்டி விட்டுப் பிரச்சாரம் செய்தால் ஓர் ஆண்டுக்குள்ளேயே பல இலட்சக்கணக்கில் மக்கள் மண்டியிட்டுப் பின்பற்றும் புதிய மதத்தைக் காணலாம்.

இந்தப் போக்கில் அய்யா அவர்களின் சிந்தனைகள் அமைகின்றன.

(அ) மதவாதிகளின் கொடுமை: மதவாதிகளின் கொடுமைகளைப் பற்றிய அய்யா அவர்களின் சிந்தனைகள் இவை:

(1) மதத்தின் ஆதிக்கத்தில் கட்டுண்டு இருப்பவர்கட்கு ஆவேசமும் வெறியும் உண்டாவதுதான் முக்கிய பலனாக இருக்கின்றதேயன்றி, அது சிரமப்படுகின்ற, ஒரு பாவமும் அறியாத பாமரமக்களுக்குக் காரியத்தில் என்ன நன்மை செய்துள்ளது? மதத்தால் மக்களுக்கு என்ன ஒழுக்கம் ஏற்பட்டுள்ளது? இந்த வினாக்களுக்கு மறுமொழி என்ன கூறமுடியும்? ஏதாவது இருந்தால்தானே சொல்ல முடியும்? வேண்டுமானால் இவை மதத்துரோகமான வினாக்கள் என்று கூறித் தட்டிக் கழிக்கலாம்.

(2) குரு, பாதிரி, முல்லா, புரோகிதர்கள் என்கின்ற கூட்டத்தார்கள், அரசர்கள், செல்வர்கள், சோம்பேறிகள் ஆகியவர்கள் உரிமம் (License) பெற்ற காலிகளேயாவர்கள். இவர்களின் உழைப்பின் பயன் எல்லாம் அரசர்கட்கும், செல்வர் கட்கும், சோம்பேறிக் கூட்டத்தார்களான மதப்பாசாண்டிகட்கும் பயன்பட்டதாகும். கடுமையான சொற்கள். ஆயினும் இவை அவர்கள் காதில் ஓதினாலும் பலன் இராது. அவ்வளவு தூரம் அவர்கள் உணர்வு தடித்துப் போய்விட்டது.

(3) 'அன்பே சிவம்', 'அன்பே வெங்காயம்' என்கின்றான் சைவன். இந்தச் சைவன் இதுவரை யாரிடத்தில் எந்தக் காரியத்தில் அன்பு காட்டியுள்ளான்? அன்பு அகிம்சை கொள்கைகளையுடைய சமண பெளத்தர்களை ஒழித்தான். அன்பு அகிம்சை காட்டியதாலேயே அவர்களைப் பனங்காயைச் சீவுவதுபோலத் துண்டாகத் தலையைச் சீவியும் கழுவில் ஏற்றியும் அவர்களுடைய உடைமைகளைச் சூறையாடியும், அவர்களு டைய இருப்பிடங்களையெல்லாம் தீயிட்டுக் கொளுத்தியும், இடித்துப் பாழாக்கியும் செய்த சைவர்களின் மதிவெறி காட்டினதை வரலாறு கூறும்.

(4) நம் கடவுளையும் சமயத்தையும் ஏற்ற மக்கள்தாம் 100 விழுக்காடு மலமெடுக்கிறார்கள். கசுமாலக்குழியில் இறங்கிச் சேறு எடுக்கிறார்கள். 100க்கு 75 பேர் மண் வெட்டியும் அவர்தம் மனைவிமார் மண் சுமக்கும் கூடையையும் தங்கள் சொத்தாக வைத்து வாழ்கிறார்கள். படிப்பில், கிறித்தவர்களும் இசுலாமியர்களும் நம்மைவிட இரண்டுமடங்கு படித்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் நம் மதவாதிகள், மதத்தலைவர்கள், மதபிரசாரர்கள் நம்மக்களின் குறையையும் இழிநிலையையும் அறியாமையையும் மாற்றுவதற்கு என்ன செய்தார்கள் ? என்ன செய்கிறார்கள் ? என்ன செய்யப் போகிறார்கள்? ‘திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா தோரும்’ என்றும் ‘திருப்பதி மிதியாப்பாதம், சிவனடி வணங்காச் சென்னி’ என்றும் பாடினால் மட்டிலும் போதுமா? கூழில்லாமல் கும்பி பாழாவதைப் பற்றிச் சிறிது கூடச் சிந்தியாமல் ‘திருநீறு இல்லாத நெற்றி பாழ்’ என்றும், ‘திருமண் இல்லாத நெற்றி பாழ்’ என்றும் பிரசாரம் செய்தால் போதுமா? என்று வயிறெரிந்து கேட்கின்றார்? தள்ளாத வயதில் அவர் மனம் நொந்து பேசுவதைக் கேட்கின்றோம்-கண்ணில் நீர் சொட்ட.

(5) நம் மதவாதிகள், சிறப்பாக இந்துமத வாதிகள் என்பவர்கள் பண்டிதமதவாதிகளைவிட மோசமானவர்கள். பண்டிதர்கள் ஆயிரக்கணக்காக ஆண்டுகட்கு முன்னால் இருந்த உலகத்துக்குப் போகவேண்டும் என்பவர்கள்; மதவாதிகளோ பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன், பல யுகங்களுக்கு முன்னால் இருந்த உலகங்கட்குச் செல்ல வேண்டும் என்பவர்கள். இவர்கள் இருவருக்கும் பகுத்தறிவுக்குப் பொருத்தமில்லாததும் மனித ஆற்றலுக்கு மீறியதுமான காரியங்களிலும் அசாத்தியமான கற்பனைகளிலும் தான் நம்பிக்கையும் பிரியமும் இருக்கும்.

(ஆ) மத ஒழிப்பு: மக்களை பல்வேறு வகைகளில் இழிநிலைக்குத் தள்ளும் மதத்தை ஒழிக்கவேண்டும் என்பதுபற்றி அய்யா அவர்களின் சிந்தனைகள்:

(1) மக்களைச் சுயமரியாதை இல்லாமல் செய்து மிருகங்களாக்கி நாய் பன்றிகளைவிட இழிவாய் நடத்த ஆதாரமாயிருக்கும் மதம் எதுவானாலும் அதனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்கின்றார்.

(2) எந்த மதத்தை எந்தக் கடவுள் அல்லது யார் நேரில் வந்து சொல்லிவிட்டுப் போயிருந்தாலும், எந்தச் சமயாச்சாரியார் எவ்வளவு அற்புதங்கள் செய்திருந்தாலும் தீண்டாமை என்னும் கொடுமைக்கு இடம் கொடுத்துக் கொண்டுள்ள மதத்தை உடனே ஒழித்துக்கட்ட வேண்டும் என்று உரைக்கின்றார்.

(3) மதவிஷயத்தைப் பற்றி ஆதரித்து எவர்தெருவில் நின்று பேசினாலும் தெருவில் மதசம்பந்தமான நூல்கள் வைத்துக் விற்பனை செய்தாலும் மதம் பற்றிய கருத்துகளை செய்தித்தாள்களில் எழுதினாலும் அவர்களெல்லாம கடுமையான தண்டனைக்குள்ளாவார்கள் என்று சட்டம் செய்யப்பெறுமானால், உலகமக்கள் பிரிவினையற்று, குரோதமற்று, மடமையற்று தோளோடு தோள் இணைந்து தோழர்கள் போல் வாழ முடியும். தத்துவங்களால் விளைந்த வேற்றுமைகள் ஒழிந்து எல்லாத்துறைகளிலும் ஒற்றுமையாய் வாழ முடியும் என்று கருதுகின்றார் அய்யா (மக்களாட்சியில் இத்தகைய சட்டம் இயற்றுவது சாத்தியமல்ல என்பதை அய்யா அவர்கள் அறியாததல்ல).

(4) பார்ப்பனர்களின் மோசடித்தன்மை தொலைய வேண்டுமானால், இந்த நாட்டுமக்கள் மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து தடுத்தாக வேண்டுமானால், மக்கள் எல்லோரும் ஒரேகுலம் என்கிற நல்லுணர்ச்சியைக் கைக்கொள்ள வேண்டுமானால், உலகத்தில் மற்ற நாடுகளைப் போல் நாமும் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமானால், முதலில் மக்களுக்கிடையே பரப்பப்பெற்றிருக்கும் மதவுணர்ச்சி வேர்களுக்கு வெந்நீரை ஊற்ற வேண்டும். குருட்டுத்தனமான மதவுணர்ச்சியை வளர்க்கும் பண்டிகைகள் வெறுக்கப் பெறல் வேண்டும். அயோக்கியச் செயல்களுக்கெல்லாம் வளர்ப்புப் பண்ணைகளாயிருந்து மதப்போர்வையைப் போர்த்திக் கொண்டிருக்கும் மடலாயங்கள் எல்லாம் மக்கள் சொத்தாக வேண்டும்.

(5) மக்கள் முன்னேற்றத்தில் மதம் வந்து தடை செய்தால், அஃது எந்த மதமாயிருந்தாலும் ஒழித்துதான் ஆகவேண்டும். ‘உன்னைப் பறையனாய்ப் படைத்தார்; அவனைப் பார்ப்பனனாய்ப் படைத்தார்; என்னைச் சூத்திரனாய்ப் படைத்தார்’ என்று கடவுள் மேல் பழிபோட்டுக் கொடுமைகள் நிலைக்கச் செய்வதை விட்டுக் கொடுத்துக் கொண்டு அக்கொடுமைகளுக்கு ஆதரவாயும் அக்கிரமங்களுக்கு அநுகூலமாயும் இருக்கும் கடவுளை ஒழிக்க வேண்டும் என்கின்றார்.

(6) மதம், சாத்திரம், வேதம் என்பவைகள் ஒழிக்கப் பெறாவிட்டால் தீண்டாமையும் சாதிப் பேதமும் போக்கடிக்கப் பெறமுடியுமா? இதுவரையும் இந்துமதம் விட்டு வேறு மதம் (முக்கியமாக இசுலாம்) ஆகாத எந்தப் பார்ப்பனரல்லாதாருக்காவது தங்களது சமூகத்தில் தீண்டாமை போயுள்ளதா? பார்ப்பனருக்குள்ள சுதந்திரமும் செளகர்யமும் சமூகவாழ்விலும் பொருளாதாரத்திலும் மற்ற வகுப்பினருக்கு இருந்து வருகிறதா? இப்படிப்பட்ட மதம் ஒழிக்கப்பெற வேண்டியதுதான் என்பதற்கு இதைவிட வேறு என்ன காரணம் வேண்டும்?

(7) எல்லா மதக்காரர்களுக்கும் எல்லாவிதமானப் பாவங்களுக்கும் பாவமன்னிப்பு, பாவவிலக்குபெற மதங்களில் ஆதாரங்கள் மார்க்கங்கள் உள்ளன. இதனால்தான் மனிதரில் எவனும் யோக்கியமாக இருக்கவேண்டிய அவசியமும் இல்லாமல் போய்விட்டது. மனிதன் என்றால் எவனும் அயோக்கியமாய் இருக்க வேண்டியவனாகவே ஆகிவிட்டான். எனவே, மதங்கள் ஒழிந்தால் ஒழிய எவனும் யோக்கியனாக இருக்க முடியாது.

(8) சமூகக் கொடுமைக்கு அடிப்படையான மதம், சாதி, பழக்க வழக்கங்கள், சாத்திரங்கள், கடவுள் கட்டளைகள் என்பவை தகர்க்கப் பெறாமல் எப்படிப்பட்ட அரசியல் சீர்திருத்தம் ஏற்பட்டாலும் ஒருகாதொடிந்த ஊசியளவுகூட ஒருபயனும் பாமரமக்களுக்கு ஏற்படாது. இது பெரியாரின் சிந்தனையின் கொடுமுடி.

(9) 'மதச்சார்பற்ற’ (Seculer) என்ற சொல்லுக்கு காங்கிரசு, பார்ப்பனர் என்று இருசாராரும் கூறிவருகின்ற வியாக்கியானம் பற்றிப் பெரியார் கூறும் விளக்கம்: ஒரு பெண் கன்னியாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு ஆண்சம்பந்தமே இருக்கக் கூடாது என்பது பொருள் அல்ல; எல்லா ஆண்களையும் சமமாகக் கருதிக் கூப்பிட்டவனிடமெல்லாம் கலவி புரிய வேண்டும் என்பதுதான் கன்னி என்பதற்குப் பொருள் என்பது போல் பொருள் சொல்லுகின்றனர். எல்லா மதங்களையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்ற கொள்கை மதவிஷயத்தில் காலம் காணாததற்கு முன்பு இருந்தே இருந்து வருகிறபோது அதைப் புதிதாக வலியுறுத்த வேண்டிய அவசியம் ஏன் வரும்? பெரியாரின் இச்சிந்தனை கூர்த்த மதியுடையாருக்கும் வியப்பினை விளைவிக்கும்.

(10) 'மதச்சார்ப்பற்ற' என்பதற்குப் பெரியார் தரும் விளக்கம் இன்னோர் உவமையின் அடிப்படையில் அமைகின்றது. பெண்கள் மாநாடு நடத்துகிறார்கள். அந்தமாநாட்டில் உள்ள பெண்கள் அத்தனைபேரும் ‘பெண்கள் பதிவிரதைகளாக நடந்து கொள்ளவேண்டும்’ என்று தீர்மானித்து விட்டுப் பதிவிரதை என்றால் எல்லா ஆண்களையும் தங்கள் கணவனைப் போல் கருதி நடந்துகொள்ள வேண்டும். அதுதான் பதிவிரதைத் தன்மை: என்று பொருள் சொல்வது எவ்வளவு அயோக்கியத்தன மானதோ, அதைவிட அயோக்கியத்தனமாகும் ‘மதச்சார்பற்ற’ என்பதற்கு எல்லாமதங்களையும் ஒன்றுபோலக் கருதவேண்டும் என்பதும் ஆகும். "மதச்சார்பற்ற" என்றால் எந்த மதத்தையும் சாராத என்பதுதான் பொருள். பெரியாரின் இந்த விளக்கம் அவரது சிந்தனையை இமயம் போல் உயர்த்துகின்றது. இந்த விளக்கம் அரசின் காதில் ஏறுமா? புத்திக்கு எட்டுமா?

மனிதகுல முன்னேற்றத்தில் இராமாநுசரும் தந்தை பெரியாரும் விரிந்த பரந்த நோக்கத்தையுடையவர்கள். திருவரங்கத்தில் முன்னவர் ஆத்திகர்; ஆசாரியநிலையில் இருந்தவர்; பின்னவர் நாத்திகர் (தாம் நாத்திகர் அல்லர் என்று பல இடங்களில் சொல்லியுள்ளார்); கடவுளைக் கனவிலும் கருதாதவர். மனிதகுல மேம்பாட்டில் இருவரும் ஒத்த கருத்தை புடையவர்கள்.

திருக்கோட்டியூர் நம்பியிடமிருந்து இராமாநுசர் திருமந்திர உபதேசம் பெற்றது ஒரு நீண்டகதை. திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூர் சுமார் 60 கல் தொலைவிலுள்ளது. 18 முறை கால் நடையாக நடக்க வைத்து 18-வது முறைதான் உபதேசம் செய்தார். தனிமையாக வரச் சொன்னார். ஆனால் இவர் முதலியாண்டானுடனும் (தண்டு) கூரேசனுடனும் (பவித்திரம்) சென்றார். அதற்கு விளக்கமும் சொன்னார். நம்பிக்கு ஒரே வியப்பு.

ஓராண்வழியாக, குரு சீடர் முறையில், உபதேசிக்கப்படும் திருமந்திரத்தை (ஓம் நமோ நாராயணாய) எவர்க்கும் தெரிவிக்கக் கூடாது என்ற உறுதி மொழியையும் பெற்றார். “தான் அறப் பெய்துமாயும் தடமுகில்” என்று பாராட்டப்பெறும் இளையாழ்வார் திருக்கோட்டியூர் கோபுரத்தின் மீதேறி சாதிவேறுபாடின்றி திருமந்திரத்தையும் அதன் பொருளையும் அனைவரும் கேட்குமாறு முழங்கினார். போர்க்களத்தில் கண்ணன் காண்டீபனுக்குக் கீதையை உபதேசிக்கவில்லையா? அதுபோல் எனலாம். ஆசாரியரும் உடையவரை ‘எம்பெருமானாரே’ என்று அழைத்து மகிழ்ந்தார். “இதுவரையில் ‘பரமவைதிக சித்தாந்தம்’ என்று வழங்கிவந்த இந்தச் சித்தாந்தம் இன்று முதல் ‘எம்பெருமானார் தரிசனம்' என்ற வழங்குவதாகுக” என்று வாழ்த்திப்போற்றினார்.

காரேய் கருணை இராமாநுசர் இக்கட லிடத்தில்'’
‘'ஆரே அறிபவர்நின் அருளின் தன்மை?'’ (இராமா. நூல். 25)

என்று திருவரங்கத்து அமுதானாரும் குறிப்பிட்டு மகிழ்ந்தார்.

தந்தை பெரியாரும் தம்வாழ்நாள் முழுவதும் பார்ப்பனரல்லாத சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக (சாதி பேதமின்றி) தம்பணியைச் செய்தவரல்லவா? ஆகவே, இருவரும் இந்த வகையில் ஒப்புமை உடையவர்கள். உடையவர் வைதிகர்; ஆதலால் அவர்க்கு மோட்சம் உண்டு. தந்தை பெரியாரும் ஒரு வகையில் வைதிகரே. எப்படி? ‘பெரியாரின் சீடர்கள் யாவரும் தம் பெயர்களை மாற்றிக் கொண்டனர்.[குறிப்பு 1] ஆனால் அவர் பெயராகிய இராமசாமி (தந்தையார் சூட்டிய பெயர்) அவரோடு நிலைத்து நின்றது. இராமர் படத்தை ஊர்வலம் செய்து செருப்பால் அடிக்கச் செய்தார். ஆனால் 'இராமசாமி' என்ற தம் பெயரைக் கட்டுரைகளிலும் காசோலைகளிலும்; பத்திரங் களிலும் இன்னபிறவற்றிலும் எழுதியும் பெரிய கூட்டங்களில் 'இராசாமி கூறுகிறான்' என்று மொழிந்தும் தள்ளியிருப்பார். 'சிரீராமசெயம்' என்பதை இலட்சக்கணக்காகப் பயன் கருதி எழுதியவர்கள் உண்டு. இவர் பயன் கருதாது தம் பெயரை எழுதி இராமபக்தரானார் என்பது அடியேனின் கணிப்பு. இராம காதையில் வரும் அநுமனுக்கு நிகரான இராமபக்தர்கள் இவ்வுலகில் இல்லை. ஞாயிற்றுக்கிழமையை அநுமனது நாளாகக் கொண்டாடுவதுண்டு. தந்தை பெரியாரும் தம் புகழுடம்பை விட்டு விட்டுப் பூத உடம்பைக் கழிந்தது ஞாயிற்றுக் கிழமையில்தான். ஆதலால் அந்த மீளாத உலகில்- பரமபதத்தில்- வைணவ குடும்பத்தைச் சார்ந்தவராதலால்- ஒருதனித் திருமாளிகையில் தங்கி யிருக்க வேண்டும். வழிபாட்டுக்குத் திருமாமணிமண்டபம் வந்து நித்திய சூரியர்களுடனும் முத்தர்களுடனும் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று என் சிறுமனம் எண்ணுகின்றது.

ஓரிடத்தில் “நான் நாத்திகன் அல்லன்; தாராள மனமுடையவன்; நான் பகுத்தறிவு வாதி” என்றும் (இரண்டாம் பொழிவு -பக்.56) மனிதன் இழிவுக்கும் மானமற்ற தன்மைக்கும் கடவுள் நம்பிக்கை காரணமாக இருந்தால் அதை ஒழித்துக் கட்டவேண்டும் என்கின்றோமே தவிர கடவுள்மேல் எங்களுக்கு எந்தவிதக் கோபமும் இல்லை” என்றும் (முதற்பொழிவு-பக் 4), கூறுவனவே இதற்கு அரணாக அமைகின்றன.

‘'மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்'’
‘'தம்புகழ் நிறிஇத் தாமாய்ந்த'’ (புறம்-165)

பெரியாருள்-ஒருபெரும் பெரியாராக-'தந்தை பெரியாராக'-நம்மனோர் உள்ளத்தில் நிலையான இடம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

‘'உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்'’
‘'உள்ளத்துள் எல்லாம் உளன்'’ (குறள்-294)

முடிவுரை: இன்றைய பொழிவில் தந்தை பெரியாரைப் பாவேந்தர் அறிமுகத்தைக் காட்டினேன். அடியேனுக்கும் தந்தை பெரியாருக்கும் 1934 முதல் அப்பெருமகனாரின் பூதவுடல் மறையும் வரையிலும் இந்தத் தொடர்பு இருந்தது என்று கூறினேன்.

பெரும்பாலும் தந்தைபெரியாரின் சிந்தனைகள் மறுக்கும் பாங்கில் அமைந்திருப்பதால் அவர் ஒருவாறு மறுக்கும் சைவ வைணவ கடவுளர்களையும் அவர்தம் உருவங்களையும் முன் வைத்தால்தான் அவர்தம் மறுப்பின் போக்கு தெளிவாகும் என்று கருதியே சைவசமயத்திலுள்ள கடவுளர்களின் வடிவங்கள் பற்றியும் வைணவ சமயத்தில் உள்ள இறைவனுடைய ஐந்து நிலைகளையும் எடுத்துக் காட்டினேன்.

பெரியாரின் சிந்தனைகளுக்கு வரும்போது கடவுள், அவர் பற்றிய நம்பிக்கை, கடவுள் எல்லாம் வல்லவர், கடவுளர்களின் உருவங்கள், திருக்கோயில்கள், கடவுள் மறுப்பு, கடவுள் ஒழிப்பு ஆகியவைபற்றிய சிந்தனைகளையும் உங்கள் முன் வைத்தேன்.

அடுத்து சமயம் என்ற தலைப்பில் சமயம் பற்றியும், சமயக் கேடுகள், சமயவாதிகளின் கொடுமை சமய ஒழிப்புபற்றிய சிந்தனைகளையும் எடுத்துக் காட்டினேன்.

இவை வைதிக சமயத்தில் வேதங்களினின்றும் தெள்ளி எடுத்த உபநிடதக்கருத்துகள்போல தந்தை பெரியார் தமது நீண்டகால வாழ்வில் பல்லாயிரக்கணக்கான கூட்டங்களில் பேசியவற்றிலிருந்தும், குடியரசு, விடுதலை ஆகிய இதழ்களில் தொடர்ந்து எழுதியவற்றிலிருந்தும் எடுக்கப்பெற்று உங்கள் முன் வைத்த சிந்தனைகள் உபநிடத கருத்துகளை நிகர்த்தவை என்று உறுதியாகக் கூறலாம்.[குறிப்பு 2] பேராசிரியர் நன்னன் அவர்களின் நூல்களும் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தொகுத்த பெரியார் களஞ்சியத் தொகுதிகளும் இப்பொழிவை அமைக்கத் துணையாக இருந்தன. அந்த இரண்டு நண்பர்களுக்கும் என்நெஞ்சம் உருகும் நன்றி. இன்று இவண் கூடி, பெரியார் அவர்களோடு நெருங்கிப் பழகி 85 அகவை நிறைவுறும் நிலையிலுள்ள அடியேனினின் சொற்களைச் செவிமடுத்த உங்கள் அனைவர்க்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள் உரியவை.

அடுத்த இரண்டாவது பொழிவு “சமூகம் பற்றிய சிந்தனைகள்” என்பது. இதற்கும் அன்பு வருகை தந்து சிறப்பிக்க வேண்டு கின்றேன்.


குறிப்புகள்

 1. இராமய்யா - அன்பழகன் ஆனார். நாராயணசாமி - நெடுஞ்செழியன் ஆனார். சோமசுந்தரம்-மதியழகன் ஆனார்.
 2. பேராசிரியர் மா. நன்னன் அவர்களின் பெரியார்கணிணி (இரண்டு பகுதிகள்) உபநிடதங்கள்போல் என்றும் நிலைத்து வாழும்.

சான்றுகள்

 1. திருவரங்கத்துமாலை-84