தந்தை பெரியார் சிந்தனைகள்/2. சமூகம் பற்றிய சிந்தனைகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இரண்டாவது பொழிவு
நாள்: 27.02.2001 முற்பகல்


2. சமூகம் பற்றிய சிந்தனைகள்


அன்பு நிறைந்த தலைவர் அவர்களே,
அறிஞர்பெருமக்களே,
மாணாக்கச்செல்வங்களே.

இன்றைய இரண்டாவது சொற்பொழிவு பெரியாரின் சமூகச் சிந்தனைகளைப் பற்றியது. பேச்சில் நுழைவதற்குமுன் சமூகம் பற்றிய சில சொல்ல நினைக்கின்றேன்.

மனிதன் என்ற சீவப்பிராணியும் அசேதனமாகவும், தாவரமாகவும், அசரமாகவும் இருந்த பொருள்களிலிருந்தே படிப்படி யாக உருமாறி இன்று மனித உருப்பெற்றிருக்கின்றான். இங்கு,

புல்லாகிப் பூடாய்ப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லா மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்....[1]

என்று மணிவாசகப்பெருமானின் மணியான பாடல்பகுதியை நினைக்கலாம். இது மனிதனைப் பற்றிய ஒருவிதமான விளக்கம்; படிவளர்ச்சிக் கொள்கையை (Theory of Evolution) அடிப்படை யாகக் கொண்டது.

மனிதன் யார் என்றால் நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான்; பாம்பு, தேள், கொசு, மூட்டைப்பூச்சி முதலியவை போல் மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும் குருதியை உறிஞ்சியும் வாழும் சீவப்பிராணிகளேயாகும் என்பது தந்தை பெரியாராவர்களின் கருத்தாகும். “உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே"[2] என்பது தொல்காப்பியம். மனிதவடிவமாக இருப்பவர்கள் அனைவரும் மக்கள் அல்லர்; ‘இவன்தான் மனிதன்’ என்று சுட்டியுரைக்கப் பெறும் தகுதி உள்ளவர்களே மனிதர்கள், உயர்திணையைச் சார்ந்தவர்கள். மற்றவர்கள் மாக்கள்; அஃறிணையைச் சார்ந்தவர்கள் என்கிறான் அந்த இலக்கணப்புலவன்.

மனிதன் மனித இனத்தின்-மனித சமுதாயத்தின் ஓர் அலகு; சிறிய அளவு கோல். இவனே குடும்பமாக வளர்பவன். மனிதன் பகுத்தறிவுள்ளவன். இதுதான் மனிதனுக்கும் ஏனைய பிராணிகட்கும் உள்ள வேறுபாடு. அறிவுக்கும் அநுபவத்திற்கும் ஒத்து வராததைப் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடையாத மனிதனாகின்றான். தனக்கென்று ஒருகருத்து சம்பிரதாயம் என்றில்லாமல் பலர் சொல்வதைக் கேட்டு ஆராய்ச்சி செய்து ஏற்புடையவற்றை ஒப்புக் கொள்வதே, சிந்திக்கும் பகுத்தறிவுடைய மனிதனுக்கு ஏற்புடையது என்பது தந்தை பெரியாரவர்களின் கருத்து; அறிவியலடிப்படையில் அமைந்த கருத்து. மனிதன் என்பதற்கே பொருள், விஷயங்களை பார்த்து நன்மை தீமைகளை உணர்ந்து அனைத்துத் துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிற தன்மையுடையவன் என்று மேலும் விளக்குவார்கள் அய்யா அவர்கள்.

மனிதன் காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கைக்கு வரும் போது ஒவ்வொரு மனிதனும் சமுதாயவாழ்க்கையில் ஒருவனுக்கொருவன் உதவிசெய்து வாழ்க்கை நிலையை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று கருதி வந்திருப்பானே யொழிய மற்ற மனிதனைக் கொடுமைப்படுத்தி, இழிவுபடுத்தி, கஷ்டப்படுத்தி அதன் பயனாய்த் தான் வாழலாம் என்று கருதி இருக்க மாட்டான். அப்படிக்கருதி இருந்தால் சமூக வாழ்க்கை ஏற்பட்டே இருக்காது.

மனிதன் ஒருபோதும் தனித்து வாழக்கூடியவன் அல்லன்; அப்படி வாழவும் அவனால் முடியாது. அதனால்தான் கூட்டமாகக் கூடி வாழ்கிறான். சமுதாயத்திற்குத் தேவையான ஒவ்வொரு காரியத்தையும் ஒவ்வொருவன் செய்கிறான். ஆகவே அவன் சமுதாயத்தோடு வாழும் சீவன். சமுதாயச் சட்டம் எந்த மனிதனையும் தனக்குள் அடக்கித்தான் தீரும். துறவியோ, மகாத்மாவோ, சாமியாரோ ஆக இல்லாதவனின் உலகநடை, மனிதாபிமானத்திற்கும் நாணயத்திற்கும் ஒழுக்கத்திற்கும் அடிமைப்பட்டே ஆகவேண்டும்.

இங்ஙனம் வாழ்நாள் முழுவதும் சமூகப்பணிக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பெரியார் தம்மைப் பற்றி இவ்வாறு மனித சமூகத்திற்கு அறிமுகம் செய்து கொள்கிறார்கள். "நான் ஒரு நாத்திகன் அல்லன். தாராள எண்ணமுடையோன். நான் ஒரு தேசியவாதியும் அல்லன்; தேசாபிமானியும் அல்லன்; ஆனால் தீவிர சீவாதார எண்ணமுடையவன். எனக்குச் சாதி என்பதோ, சாதி என்பதன் பெயரால் கற்பிக்கப்பெறும் உயர்வு தாழ்வுகளோ இல்லை. அத்தகைய எண்ணத்தையே நான் எதிர்ப்பவன்; ஆதரிப்பவன் அல்லன்.

தமிழ்நாட்டில் சாதி சமயச் சண்டைக்கு காரணமாய் நிற்கும் எவ்வியக்கத்தையும் ஒழிக்கவேண்டும் என்று விரதம் பூண்டிருப்பவன். சுத்தமானவனா அசுத்தமானவனா என்பது பாராமல் ஒருவனைப் பிறவிக்காரணமாகத் தொடக்கூடாது என்பதே வர்ணாசிரமம். பிறவியைக் கவனிக்காமல் சுத்தமாயிருப்பவனைத் தொடலாம் என்பதும், அசுத்தமாயிருப்பவனைச் சுத்தப்படுத்தித் தொடத்தக்கவனாக ஆக்கிக் கொள்ளலாம் என்பதும் எனது கொள்கை.

ஒவ்வொரு மனிதனும் இறந்து போவது உண்மைதான். யாக்கை நிலையாமையை வள்ளுவப் பெருந்தகையும் நமக்கு நினைவுபடுத்தியுள்ளார்.

‘'நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்'’
‘'பெருமை உடைத்திவ் வுலகு (336)'’

என்பது வள்ளுவம். “இஃது உண்மைதான் என்றாலும் அவனோடு அவன் முயற்சியும்- அவன் தொடங்கிய செயலும் அவனுடைய எண்ணத்தை அவனால் கூடுமான அளவுக்கு அவனைச் சூழ்ந்துள்ள மக்களிடையே பரப்பிவிட்டால்-அந்த எண்ணம் ஒருபோதும் அழியாது; அடக்கி விடவும் முடியாது” என்று கூறுவார் பெரியார். “என்னுடைய முயற்சி எல்லாம் மக்கள் எதையும் சிந்திக்கவேண்டும் என்பதுதான். அவர்கள் எதையும் கண்மூடித்தனமாக நம்பிவிடக்கூடாது என்பது தான். இது போதுமான அளவுக்கு வெற்றி பெற்றுவிட்டது” என்கின்றார்.

இராமகிருஷ்ணபரமஹம்சரின் கொள்கைகளை விவேகாநந்தர் பரப்பி வந்தார். அவர்கட்குப்பின் நாடு முழுதும் நிறுவப் பெற்றுள்ள இராமகிருஷ்ண மடங்கள் பொறுப்பேற்றுப் பரப்பி வருகின்றன. இராமலிங்க அடிகளின் கருத்துகளை பொள்ளாச்சி வள்ளல் டாக்டர் நா. மகாலிங்கம் அவர்கள் பரப்பி வருகிறார்கள். வெளிநாடுகளிலும் இப்பணி நடைபெற்று வருகின்றது. இங்ஙனமே மானமிகு கி. வீரமணி அவர்கள் பெரியார் கொள்கைகளைப் பரப்பி வருகின்றார்கள். இன்று பெரியாரைப் பார்க்காதவர்கள்கூட அவர் பெயரைக் கேட்டிராத சிற்றுார்கள் கூட ஏதோ ஒருவகையில் அவர்தம் கொள்கைகளின் தாக்கம் இருந்து வருகின்றது.

பெரியார் கூறுவார்: “நரக வாழ்வாயிருந்தாலும் அங்கு நான் மனிதனாக மதிக்கப்படுவேனாகில் அவ்வாழ்வே இப்பூலோக வாழ்வைவிட மேலென்று கருதுவேன். நரகவாழ்வு மட்டுமல்ல; அதைவிடப் பலகொடிய கஷ்டங்களை அனுபவிக்க நேரும் இடமானாலும் அவ்விடத்தில நான் மனிதனாக மதிக்கப் பெறுவேன் என்றால் அவ்வாழ்வே இவ்விழிச்சாதி வாழ்வை விட சுகமான வாழ்வு என்று கருதுவேன்”

சாதி ஒழிய வேண்டும் என்பது என்னுடைய கருத்து. சிறுவயது முதல் சாதி ஒழிய வேண்டும் என்பதில் கருத்துக் கொண்டவன் நான். நாற்பதாண்டுக் காலமாகச் சாதி ஒழிய வேண்டும், மதம் ஒழியவேண்டும், மநுதர்ம வர்ணாசிரமம் ஒழிய வேண்டும், சாத்திரம் ஒழிய வேண்டும் என்று சொல்லியும் எழுதியும் வந்தவன். முப்பத்தைந்து ஆண்டுக்காலமாக பார்ப்பானும் ஒழிய வேண்டும் என்ற உண்மைக் கருத்தை நன்றாக உணர்ந்து அதற்குமுன்னைவிட இன்னும் அதிகத் தீவிரமான முறையில் பாடுபட்டுக் கொண்டுவருகின்றேன்.

எனது நாற்பதாண்டுக் கால உழைப்பின் பயன் இன்று ஒரளவுக்கும் பலன் அளித்து வருகிறது. எல்லா வாய்ப்புகளும் நன்மைகளும் ஒருசாதிக்கே ஒருசாராருக்கே என்ற நிலை மாறி எல்லா நன்மைகளும் எல்லோருக்கும் உண்டு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சாதி ஒழியவேண்டுமானால் - இந்தக் கடவுள், மதம், சாத்திரம், புராணம் ஒழியவேண்டும், ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறினேன். சும்மா வெறுமனே வாயால் சொல்லவில்லை. கடவுள் ஒழிய வேண்டும் என்ற நான் பிள்ளையாரைப் போட்டு நடுத்தெருவில் உடைத்தேன். இராமர் படத்தைச் செருப்பால் அடித்தேன்; தீயிட்டுக் கொளுத்தினேன். இராமாயணம், கீதை, மநுதர்மம் போன்ற சாத்திரங்களை நெருப்பில் போட்டுப் பொசுக்கினேன்; அரசாங்கம் ஒழிய வேண்டும் என்று கூறிச் சிறை சென்றேன்.

சாதியை ஒழிக்கிறேன் என்றால் அது மேல் சாதிக்காரன்மேல் வெறுப்பு என்றும், வகுப்பு வாதம் என்றும் சொல்கிறான். நான் ஏன் வகுப்புவாதி? எந்த ஒரு பார்ப்பன சேரிக்காவது தீ வைத்து, எந்த ஒரு பார்ப்பனக் குஞ்சுக்காவது தீங்கு விளைவித்திருக்கிறோமோ? சாதி இருக்கக் கூடாது என்று கூறினதால் அதை வகுப்பு துவேஷம் என்றால் என்ன நியாயம்? எனக்கு வந்த மந்திரிப் பதவி ஆளுனர் பதவி எல்லாம் உதறித் தள்ளிவிட்டு நாற்பது ஆண்டுகளாக கடவுள் சாதி ஒழிப்புக்காகப் பாடுபட்டு வருகின்றேன். இதற்கு என்னபலன் கிடைத்தது என்றால், நான் சொல்வதை மக்கள் கேட்கிறார்கள். அடித்து நொறுக்காமல் மரியாதை செய்கிறார்கள். காலைத் தொட்டுக் கூடக் கும்பிடுகிறார்கள்; அவ்வளவுதான். பார்ப்பான் சொல்கிறான். கடைசிக் குழவிக் கல்(சாமி) இருக்கிறவரை இந்த இராமசாமி நாயக்கனாகட்டும் வேறு எவனாகட்டும். எங்களை ஒன்றும் அசைக்க முடியாது என்று கூறும் அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது அவனுக்கு.

எங்களூர் வாய்க்காலில் நான்கு படித்துறைகள்; பார்ப்பானுக்கு ஒன்று, அவனுக்கொன்று, இவனுக்கொன்று என்று இருந்தன. அதையெல்லாம் ஒன்றாக்கினேன்.”

இந்த அளவில் தந்தை பெரியார் அவர்களைக் காட்டினேன். அவர் உள்ளத்தின் நிலையை அவர் வாக்காலேயே தெளிவாக்கினேன். இனி சமூகம்பற்றிய, அவர் சிந்தனைகளைப் பொருத்தமான பலதலைப்புகளில் உங்கள்முன் வைக்கின்றேன்.


1. ஆட்சிமுறை.

இதுபற்றித் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளைக் காண்போம்.

(1) ஆட்சிமுறை என்பது யார் நம்மை ஆள்வது என்கின்ற விஷயமல்ல. நமது மக்களுக்கு எந்த மாதிரி அரசியல் முறை இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமாகக் கருதப்பெற வேண்டியது.

(2) "ஓர் இணைச்செருப்பு 14 ஆண்டுக்காலம் இந்த நாட்டை ஆண்டதாக உள்ள கதையை மிகுந்த விசுவாசத்தோடு படிக்கும் மக்களுக்கு மனிதனே அல்லாமல் இழிவான மிருகம், நாய், கழுதை, ஆண்டால்கூட அஃது அதிகமான அவமானம் என்றோ குறை என்றோ நான் சொல்லவரவில்லை. ஆனால் மனிதனானாலும் கழுதையானாலும் எந்தக் கொள்கையோடு எந்த முறையோடு ஆட்சி புரிகின்றது? அதனால் பொது மக்களுக்கு என்ன பலன் என்பதுதான் எனது கவலை” என்கின்றார்.

(3) மக்களை வருணசிரமத் தர்ம முறைக்கும், காட்டு மிராண்டிக் காலத்துக்கும் கொண்டு போகாமல் இருக்கும்படியானதும் அறிவு உலகத்திற்கு இட்டுச் செல்வதுமான ஆட்சி யாருடையதானாலும், அப்படிப் பட்ட ஆட்சி வேண்டுமென்று தான் போராடுகின்றோம். (4) உலகத்தில் பாடுபடும் மக்கள் 100க்கு 90 பேர்கள் உள்ளனர். சோம்பேறிகள், பாடுபடாமல் ஊரார் உழைப்பில் வாழுகின்றவர்கள் 100க்கு 10 பேர்கள்தாம் இருப்பார்கள். ஆதலால் 100க்கு 90 பேர்களுக்கு அனுகூலமான ஆட்சி அவர்களுடைய நலனுக்காக அவர்களாலேயே ஆட்சி புரியக்கூடிய ஆட்சியாக இருக்க வேண்டும்.

(5) எந்த ஆட்சியாயிருப்பினும் நம் நாட்டார்களே ஆள வேண்டும். அந்த ஆட்சியும் மான உணர்வுள்ளதாக, ஏழைகளை வஞ்சிக்காத முறையில் இருக்க வேண்டும். வடநாட்டான் முதல் எந்த வெளிநாட்டானுக்கும் எவ்விதத்திலும் அடிமைப்பட்டதாகவும் இருக்கக்கூடாது. நேசப்பான்மையில் வேண்டுமானால் எல்லா நாடுகளுடன் ஒன்று சேருவோம்.

(6) நகரச் சுகாதாரம், கல்வி, தெரு பாதுகாப்பு முதலியவவைகள் அரசாங்கத்தின் முழு சுதந்திரத் துறையாகவே இருந்து நடந்து வருமானால்தான் ஓர் அளவுக்காகவது பொறுப்பும் ஒழுக்கமும் நாணயமும் நல்லாட்சியும் நடைபெற முடியும். அதை ஒரு சனநாயகத் துறையாக ஆக்கி வைத்திருப்பது நிர்வாகக் கேடும், ஒழுக்கம், நாணயம் பொறுப்பற்ற தன்மையும் தாண்டவமாடவே செய்யப்பெற்றிருக்கும் ஒரு சாதனமேயாகும்.

(7) இன்றைய சுதந்திர ஆட்சியில் முழு முட்டாள்களுக்கும் முழுப் பித்தலாட்டக்காரர்களுக்கும் முழுக் கசடர்களுக்கும் தான் இடம் இருந்து வருகின்றது. எனவேதான் பெருத்த அறிவாளியானவர்கள் இவ்வாட்சியில் மயங்கி இருக்கக் காண்கின்றோம். நாம் பரம்பரையாக முட்டாள் பட்டத்தை ஏற்றிருப்பதனாலேயே இதனைச் சகித்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது.

(8) காவல்துறையினர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். காவல்துறைக் காவலன் ஒருவன் ஏதோ தப்பு செய்திருக்கலாம். அனைத்துத் துறைகளிலும் உள்ளவர்களைப் போல் அவனும் ஒருமனிதன்தானே. அவனை மக்களுக்குக் காட்டிக் கொடுக்காமல் துறைமூலம் கண்டிப்பும் நடவடிக்கையும்தான் எடுத்துக் கொள்ளவேண்டும். காவல் துறைக் காவலன்மீது எல்லோரும் அறிய நடவடிக்கை எடுப்பது விருப்பத்தக்கதன்று. அப்படி எடுத்தால் அவனுக்கு நாளை எவன்-அய்யா பயப்படுவான்? எப்படி அய்யா அவனுக்கு மதிப்பு இருக்கும்? என்று கேட்கிறார் அய்யா. இதனால்தான் காவல்துறைக் காவலர்கட்கு (Police men)ப் பரிந்து கொண்டு பேசவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகின்றார். இந்த அறிவுரையை அரசு கடைப்பிடிக்குமா? திருக்குறள் கூறும் அறிவுரை போன்றது. இது.

(9) மக்களிடம் ஒழுக்கம், நாணயம், நேர்மை வளர வேண்டும். வளரச் செய்ய வேண்டும் என்று ஒருவன் கருதுவானேயானால் இந்த மூன்றும், பார்ப்பான், வணிகன், வக்கீல் வளர வேண்டும் வளரச் செய்யவே என்று ஒருவன் ஆக்கிய அமைப்புகளை அடியோடு அழித்தாக வேண்டும். அரசாங்கம் யோக்கியமான பயனுள்ள அரசாங்கமாய் விளங்க வேண்டுமானால் கண்டிப்பாய் இவ்வமைப்புகளைச் சட்டபூர்வமாக ஒழித்தாக வேண்டும்.2

(10) மக்கள் நலத்திற்காக எந்த அரசாங்கத்திற்கும் அடக்கு முறை என்ற ஆயுதம் இருந்தே தீரவேண்டும். அடக்குமுறை இல்லாத ஆட்சி ஆட்சிகவிழ்ப்பு (Anarchism) என்ற குழப்பமும் காலித்தனமும் கொண்ட அநாகரிக ஆட்சியாக முடியும்.

(11) மக்கள் பிரதிநிதிகள் கையூட்டு (Bribery) முதலிய குற்றங்கள் புரிந்து வழக்கு தொடுக்கப்பெற்று நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்பெறுவார்களேயானால் அவர்கள் நிரந்தரமாகத் தேர்தலில் போட்டியிடும் உரிமையைப் பறித்து விட வேண்டும். (அ) இரண்டு ஆண்டு தண்டனை பெற்றால் ஓர் ஆறாண்டுக் காலம் தேர்தலில் நிற்கக்கூடாது என்று யோசனை கூறப்பெறுகிறது. இஃது அறிவுடைமையன்று நிரந்தர உரிமைப் பறிமுதலே உகந்தது. அதன் பிறகு அவர்கட்சியில் தொண்டாற்றட்டும். வேறு ஆட்கள் அரசுக்கு வரவாய்ப்பாக இருக்கட்டும். (ஆ) குடியரசுத்தலைவர் தேர்தல் ஆணையப் பொன் விழாவில் (சனவரி 17, 2001) பேசியபோது “பணம், உடல் பலம், தேர்தலில் சட்டப் பகைமையில் இழை"க்கப்படும் குற்றம் ஆகிய ஆரோக்கியமற்ற பங்கினைப்பற்றி” மிக்க வருத்தத்துடன் குறிப்பிட்டு அரசியல் கட்சிகள் குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு தேர்தலில் நிற்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டதை நினைவுகூர வேண்டும். (இ) இன்று நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டமன்றங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களில் 500 முதல் 800 வரை எண்ணிக்கையுள்ளவர்கள் குற்றம் இழைத்தவர்களின் பட்டியலில்

_______________________________________

2. இந்த அறிவுரை நடைமுறைக்கு உகந்ததன்று. இதனால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவை. இடம் பெற்றிருப்பதாகக் கணக்கிட்டிருப்பதையும் நினைவு கூரத்தக்கது. இந்நிலை வேலியே பயிரைத் தின்று வருவதற்கொப்பாகும்.

(12) எவன் ஒருவன் பொது மக்கள் ஆதரவுகளைத் திரட்டிக் குற்றங்களை எடுத்துக்காட்டி அரசாங்கத்தை அச்சுறுத்துகிறானோ அவனைக் கண்டுதான் அரசாங்கம் பயப்படும். மற்றும், அரசாங்கம் அவன் பட்டியலிட்டுக் காட்டும் குறைகளைக் கவனிக்கும். சட்டமன்றத்துக்கோ நாடாளுமன்றத்துக்கோ சென்று கூப்பாடு போட்டால் அவனிடம் அரசாங்கம் பயப்படுமா?

(13) மக்கள் எப்படியோ அப்படித்தான் ஆட்சியும் அமையும். மக்கள் புத்திசாலிகளாக அறிவாளிகளாக இருந்தால் நல்லாட்சி ஏற்படும்.

(14) சட்டமன்றம் என்பது மிகமிகக் கண்ணியமான மக்களைக் கொண்டதாகவும் பெரும் கவுரவம் உடையதாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்வது அரசாங்கத்தினுடையவும் அங்கத்தினர்களுடையவும் பொதுமக்களுடையவும் ஆன உயிர்போன்ற கடமையாகும்.

(15) இந்தக் காலத்தில் அரசாங்கம் என்பதற்கெல்லாம் மக்களால் ஆக்கப்படுவதும் அழிக்கப்படுவதுமேயாகும். இதை யாராலும் மறுத்துச் சொல்ல முடியாது. அரசாங்கத்தை, ஆட்சியை அழிக்கப் பொதுமக்களுக்கு அதிகாரம் உண்டு. அதிகாரம் “வாக்கின் பலத்தால்" ஏற்படுவது.

(16) மக்களிடமிருந்து வரிவாங்காமலேயே ஆட்சியை நடத்திக் கொண்டு போகமுடியும். எப்படியெனில், இருப்பூர்தி, அஞ்சல்-தந்தி, தொலைபேசி, சாலை விளக்கு முதலியவற்றிற்கு வரி போடுகிறோமோ? செலவுக்கு சார்ஜ்-கூலி பெற்றுக் கொள்கிறோம்; அதிலும் இலாபம் பெறுகின்றோம். ஆனால் வரி என்பதாக ஒன்றும் இல்லாமலே அவை நன்றாக இலாபத்தில் நடைபெறுகின்றன. அவற்றால் மக்களுக்கு வரிச் சுமையே இல்லை.

2 . திருமணம்

வழக்கமாக நடைபெறுவது:

(1) திருமணம் என்பது-வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்றால் ஒரு பெண்ணும் ஓர் ஆணும் சேர்ந்து உலக வாழ்வு வாழ்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளுகிற ஒப்பந்தம் (contract) என்பதாக இருக்க வேண்டுமே தவிரத் திருமணம் என்றால் ஆண் வீட்டாருக்குச் சம்பளம் இல்லாமல் வெறும் சோற்றுச் செலவோடு மட்டுமே ஒரு வேலைக்கு ஆள் (பெண்) சம்பாதிப்பதாக இருக்கக்கூடாது.

(2) ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதுதான் வாழ்க்கை. வாழ்க்கை நடத்த ஆணும் பெண்ணும் - உற்ற துணைவர்கள் ஆவார்கள் என்பதைக் குறிப்பதுதான் ‘வாழ்க்கைத் துணை’ என்பதாகும். வாழ்க்கை என்பது சுதந்திர இன்பவாழ்க்கையே ஒழியக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட துன்ப வாழ்க்கையல்ல.

(3) திருமணமானவள் என்பதைக் குறிப்பதாகப் பெண்ணுக்குத் தாலி கட்டப் பெறுகின்றது. திருமணம் ஆனவன் என்பதைச் சுட்ட ஆணுக்கு எந்தவித அடையாளமும் இல்லை. இது தவறு. ஆண்பெண் இருவரும் சமம் என்பதற்கு இருவர் கழுத்திலும் ஒருவருக்கொருவர் தாலிகட்டிக் கொள்ள வேண்டும். இல்லையேல் இருவருக்கும் தாலி இல்லாமல் இருக்க வேண்டும். மோதிரம் மாற்றிக் கொள்ளும் முறையை மேற்கொள்ளலாம்.

(4) தாலி என்பது நாய்க்கு நகராண்மைக்கழகம் கட்டும் பட்டை போன்றது. தாலி பெண்ணை ஆண் அடக்கியாளும் மூர்க்கத்தனத்தின் சின்னம். பெண்களுக்கு அறிவு வந்தா லொழியத் தாலியை நீக்க முடியாது.

(5) சீர்த்திருத்தத் திருமணங்களிலும் 100க்கு 90 திருமணங்களில் இந்த அடிமைச் சின்னமாகிய தாலி கட்டும் பழக்கம் இருந்து வருகின்றது. இந்நிலைமாற வேண்டும் என்கிறார் பெரியார்.

(6) கல்யாணம் என்பதற்கு ‘வாழ்த்து' என்பது பொருள். அது வாழ்க்கைத்துணை என்ற பொருளில் இல்லை. ஏதோ கறுப்பு ஆட்டை 'வெள்ளாடு' என்பது போலவும், கொடிய நஞ்சுள்ள நாகத்தை 'நல்ல பாம்பு' என்பது போலவும் இப்படித் தப்பான சொற்களை அமைத்துக் கலியாணம், திருமணம் என்றெல்லாம் சொல்லி வருகின்றோம். ஆனால் பார்ப்பனர் மட்டும் சரியான சொற்களையே உபயோகித்து வருகின்றனர். அவை 'தாராமுகூர்த்தம்' 'கன்னிகாதானம்' என்பவை. ‘தானம்’ என்பது வடமொழிச்சொல். ‘தாராமுகூர்த்தம்’ என்பதிலும் இரண்டு சொற்களும் வடமொழிச் சொற்களே. தமிழர்க்கான காரியங்களில் வடமொழிச்சொல்லாக இருந்தால் அஃதொன்றினாலேயே அந்த முறை நமக்கில்லை என்று தெரிந்துவிடும். ஒரு பெண்ணைப் பெற்று வளர்த்து ஒருவனுக்குத் தாரைவார்ப்பது-தானம் தருவது என்பது கருத்து. நம் பழக்கப்படி ஆணும் பெண்ணும் சமஉரிமை கொண்டு இருத்தல் வாழ்க்கைத்துணை. மற்றொருவர் இது தமிழ்ச் சொல். பார்ப்பனன் வந்த பிறகுதான் இதை யெல்லாம் அழித்து விட்டுப் பெண்ணை அடிமையாக ஆக்கி விட்டான்.

(7) ஆண்-பெண் சம்பந்தத்திற்குத் தமிழில் இரண்டு முறைகள் சொல்வார்கள். ஒன்று கற்பு; மற்றொன்று காதல். கற்பிற்கு என்ன பொருள் சொன்னான் என்றால் பெற்றோர்கள் பார்த்து ஆணையும் பெண்ணையும் சேர்த்து வைப்பதாகும். காதல் என்பது ஆணும் பெண்ணும் தாங்களே சம்மதித்துக் கூடிவாழ்வதாகும். இதுதான் தமிழனுக்கு இழிந்த முறையாகும். இடையில் வரப் பெற்றதுதான் திருமணம் என்பதெல்லாமாகும்.

(அ) காதல் மணம்: இதுபற்றித் தந்தை பெரியாரின் சிந்தனைகள்:

(1) சுதந்திரமான காதலுக்கு இடமிருந்தால்தான் ஒரு நாடோ ஒரு சமூகமோ அறிவு, அன்பு, நாகரிகம், தாட்சண்யம் முதலியவற்றில் பெருக்கமடையும். நிர்ப்பந்தக் காதல் இருக்குமிடத்தில் மிருகத்தன்மையும் அடிமைத்தன்மையும்தான் பெருகும்.

(2) பழங்காலக் காதல் மணம் இன்று மிருகப் பிராய மணம் என்றே சொல்லவேண்டும். காதல் என்பது மிகமிகச் சாதாரண அற்ப விஷயம். காதலுக்கு அடிமையாவது இன்றைய சமுதாய வாழ்க்கை முறைக்குச் சிறிதும் பொருந்தாது. கண்டதும் காதல் கொண்டு காதல் பசிதீர்ந்ததும் சலிப்படைந்து அதன் பயனைப் பிறகு வேதனையுடன் பொறுத்துக் கொண்டிருப்பதென்றால் அஃது இன்பவாழ்க்கையாக இருக்க முடியாது.

(3) ஒரு குறிப்பிட்ட இச்சையின் பெருக்கம்தான் பெரிதும் காதலின் முழுஇடத்தையும் பெற்று விடுகின்றது. மற்ற பல வாழ்க்கை வேறுபாடுகளுக்கு அந்த இச்சைப் பெருக்கம் போதவே போதாது. ஆகையால் அறிவையும் நிகழ்ச்சிப் பயனையும் அலட்சியப்படுத்தும் காதலை மனிதன் அடக்கி, வாழ்க்கைத் தன்மையைக் கொண்ட வாழ்க்கைத் துணையிணைப் பொருத்திக் கொள்ள வேண்டும்.

(4) காதல் மணம் என்பதற்குப் பலவீனத்தில்- அவசரத்தில்- மாட்டிக் கொண்டு பின்னால் தொல்லை அல்லது அதிர்ப்தி அல்லது சரிப்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஆகியவற்றை அடைவதைத்தான் பொருளாகச் சொல்லலாம். (5) உண்மையில் காதல் மணம் என்றால் பெண்களும் ஆண்களும் சமநிலையில் பழகும் வாய்ப்புத் தந்து, ஒருவருடைய குணா குணங்களை மற்றவர் அறியும் சமயம் கிடைத்து ஒருவருடைய வாழ்க்கைக்கு மற்றொருவர் இன்றியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காதலாகும்.

(6) திடீரென்று காதல் கொள்வது, பிறகு கஷ்டப்படுவது, கேட்டால் காதலுக்காக என்று சொல்வது, என்ன நியாயம்? இது பலமற்ற சபலத்தனம். காதலுக்காகத் துன்பத்தை அடைவது முட்டாள்தனம். காதலும் கடவுளும் ஒன்று என்று சொல்வது இதனால்தான். காதலும் கடவுளும் ஒன்று என்றால்-காதலும் பொய், கடவுளும் பொய் என்றுதான் பொருள்; அர்த்தம்.

(7) ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரையொருவர் அறிந்து கொண்டபிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்களோடு சாதாரணமாகப் பெண்களைப் பழகச் சொல்ல வேண்டும். யோக்கியனா? கோபக்காரனா? பைத்தியக்காரனா? வேடக்காரனா? குடிகாரனா? என்று பெண்ணுக்கு முன்னரே தெரிய வேண்டாமா? பழகினால்தானே தெரியும்? திடீரென்று ஒருவரையொருவர் முடிச்சு போடலாமா? அன்பு, குணம், பழக்கவழக்கம் ஆகியவற்றை உணர்ந்து ஒருவருக்கொருவர் நண்பர்களாகப் பழக வேண்டும். உடல் சேர்க்கை வேண்டும் என்று நான் கூறவில்லை. இதுதான் நான் சொல்லும் காதல்-ஆசை-விருப்பம் (இறையனார் களவியல் கருத்தை ஒட்டியுள்ளது).

(8) காதல் மணத்தைவிட வாழ்க்கை ஒப்பந்த மணமே வாழ்க்கைக்கு மேலானதாக இருந்துவரக் கூடும் என்பது எனது கருத்து.

(9) திருமணம் அல்லது கல்யாணம், கன்னிகாதானம் ஆகியவை போன்ற நிகழ்ச்சிகள் தமிழ்மக்களாகிய நம்மவர்க்குக் கிடையாது. நம்மவர்க்கெல்லாம் மணவாழ்க்கை இல்லை; காதல் வாழ்க்கைதான் இருந்தது.

(ஆ) கலப்பு மணம்: இது பற்றியும் அய்யா அவர்களின் சிந்தனைகள்:

(1) கலப்பு மணம் என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. எல்லா மக்களாலும் எல்லா மதங்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டும், வேதபுராண காலங்களில் இருந்தும், சுருதி, சுமிருதி ஆகியவற்றால் அனுமதிக்கப் பெற்றும் நடந்து வருகின்ற முறையே ஒழிய சுயமரியாதைக் காரர்கள் மாத்திரம் ஆரம்பித்து நடத்தி வருவதாகச் சொல்லிவிட முடியாது.

(2) உண்மையிலேயே கலப்புத் திருமணம் என்று கூற வேண்டுமானால் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் இருவருக்கும் நடைபெறும் திருமணம்தான் கலப்புத் திருமணம் என்று கூறவேண்டும். சாதிகளுக்குள் மிக உன்னத சாதி என்றும் கடவுளுக்கு அடுத்த அந்தஸ்து உடைய சாதி என்றும் கூறப்பெறும் பார்ப்பனர் சாதிதான் தலை தூக்கிநிற்கிறது. பார்ப்பனர் அல்லாத சூத்திரர் சாதி என்று சொல்லப் பெறுகின்ற சாதிதான் சமுதாயத்தில் மிகவும் கீழானது என்றும் நிலைநாட்டப் பெற்றுள்ளது. இந்த வேற்றுமை ஒழியவேண்டும். இந்த இரண்டு சாதிகளுக்கும் திருமணம் நடைபெறுவதைத்தான் ‘கலப்புத் திருமணம்’ என்று கூறலாம்.

தம்பதிகளுக்கு அய்யாவின் அறிவுரை: இதுவும் சமுதாயத்திற்கு அய்யா அவர்கள் ஆற்றிய தொண்டு என்று கருதலாம். இத்திசையில் அவருடைய சிந்தனைகள்:

(1) மணமக்கள்- உயிர் நண்பர்கள். ஒருவருக்கொருவர் பழகும் முறையைப்போல் நடந்து கொள்ள வேண்டும். எதிலும் தான் கணவன் என்ற ஆணவம் மணமகன் கொள்ளக்கூடாது. மணமகளும் தான் கணவனுக்கு அடிமைப் பொருள்- அடுப்பூதுவதற்கே வந்தவள்-என்ற எண்ணமில்லாது பழகவேண்டும.

(2) மணமக்கள் பிள்ளைபெறுவதில் அவசரப்படக்கூடாது. திருமணம் நடந்து குறைந்தது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னாவது குழந்தை பெறுவதாயின் மிக நல்லதாகும்.

(3) மணமக்கள்-வாழ்க்கையில் மற்றவர்களுக்காக உதவும் மனப்பான்மையை உடையவராக இருக்கவேண்டும். நம்மால் நன்மை செய்ய இயலாவிட்டாலும் கேடாவது ஏற்படாதமாதிரி நடந்துகொள்ள வேண்டும். நல்வாழ்வும் நாணயமான வாழ்வும் பெறக் குழந்தைப்பேற்றைக் குறைத்துக் கொண்டு வாழ்க்கை வசதிகளை நல்ல வண்ணம் அமைத்துக்கொள்ள வேண்டும்.

(4) மணமக்கள்-தங்கள் வாழ்க்கையில் வரவுக்கேற்ற வகையில் செலவு செய்ய வேண்டும். கடன் வாங்கக் கூடாது. வரவு சிறிதாக இருப்பினும் அதிலும் ஒருகாசாவது மீதப்படுத்த வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் ஒழுக்கம் என்பது இதுதான் என்பேன். வரவுக்கு அதிகமாகச் செலவு செய்வது விபசாரித்தனம் என்பேன். (5) வாழ்க்கையில் தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் சிக்கனமாக வாழவேண்டும்.

(6) எந்தவிதமான சிரமம் வந்தாலும் மற்றவர்களிடமிருந்து உதவி பெறுவது என்ற எண்ணம் கொள்ளவே கூடாது. வெறுக்க வேண்டும். நாம் வாழவேண்டுமானால் மற்றவருக்கு உதவ வேண்டுமேயொழிய மற்றவர்களிடமிருந்து உதவியை எதிர் பார்க்கக் கூடாது.

(7) கணவன்-மனைவி என்பது இல்லை. ஒருவருக்கொருவர் துணைவர்கள்; கூட்டாளிகளே என்பதுதான் உண்மை. இதில் ஒருவருக்கொருவர் அடிமை-எசமான் என்பது இல்லை. இருவரும் சம அந்தஸ்துள்ளவர்கள் ஆவார்கள்.

(8) மணமகன் மணமகளைச் சிநேகிதராகவே கருதவேண்டும். அறிவை மழுங்க வைக்கும் கோயிலுக்குப் போவதும் உற்சவத்திற்குப் போவதும் கூடாது. வெளியேபோக வேண்டும், உல்லாசமாக இருக்க வேண்டும் என்றால் கண்காட்சிகள், ஆலைத்தொழிற்சாலைகள், அணைக்கட்டுகள், அருங்காட்சியகங்கள் முதலிய இடங்களைச் சென்று பார்க்க வேண்டும்.

(9) அறிவோடு சிக்கனமாக வாழவேண்டும். வரவிற்குமேல் செலவிட்டும் பிறர் கையை எதிர்ப்பார்ப்பதும், ஒழுக்கக்கேடான காரியங்களுக்கு இடங்கொடுப்பதுமான காரியங்கள் இன்றி வரவிற்குள் செலவிட்டுக் கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும்.

(10) மணமக்கள் இருவரும் நண்பர்களாக நடந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை அன்புருவாக இருக்க வேண்டும். மணமக்கள் தங்களுக்காகவே என்று இராமல் மற்றவர்க்காகவே வாழ்கின்றோம் என்று எண்ணவேண்டும்.

(இ) சீர்த்திருத்தத் திருமணம்: இதுபற்றியும் அய்யாவின் சிந்தனைகளை உங்கள் முன்வைக்கிறேன்:

(1) கல்யாணம் என்றால் சுதந்திர வாழ்க்கை, சமத்துவ வாழ்க்கை என்று இருக்க வேண்டுமேயொழிய அடிமை வாழ்க்கை, மேல் கீழ் வாழ்க்கை என்று இருக்கக்கூடாது என்பதே எங்களது ஆசை.

(2) ஆணும் பெண்ணும் பதிவு அலுவலகத்திற்குச் சென்று வாழ்க்கைத் துணையாகிவிட்டோம் என்று சொல்லிக் கையெழுத்தும் போட்டு விட்டால் போதும். அந்த வெறும் கையெழுத்துத் திருமணத்துக்கு இதைவிட (சுயமரியாதைத் திருமணத்தைவிட) அதிக மதிப்பும் நன்மையும் சுதந்திரமும் உண்டு. (3) பெண்கள் உலகம் முன்னேற்றம் அடையவேண்டுமானால், அவர்களுக்கும் மனிதத்தன்மை ஏற்படவேண்டுமானால், ஆண்களுக்கும் திருப்தியும், இன்பமும்; உண்மையான காதலும், ஒழுக்கமும் ஏற்படவேண்டுமானால் சீர்திருத்தக் கல்யாணத்துக்கு இடம் அளிக்கப்பெற வேண்டியது முக்கியமான காரியமாகும்.

(4) வேறு எந்தக் காரியங்களில் மாறுதல் இல்லாவிட்டாலும் இந்த வாழ்க்கைச் சுதந்திரத்தில் சம சுதந்திரம் ஏற்பட்டுத்தான் ஆகவேண்டும். சுயமரியாதை இயக்கத்தின், முதல் இலட்சியம் அதுவாகும். ஆதலால் அதுவிஷயத்தில் ஏற்படப்போகும் மாறுதலை மக்கள் வரவேற்றுத்தான் ஆகவேண்டும்.

(5) திருமணம் என்பது வயது வந்த அறிவு வந்த ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்பந்தப்பட்ட காரியமேயொழிய மற்ற யாருக்கும்-வேறு எந்தக் கட்டுப்பாட்டுக்கும் சம்பந்தப்பட்ட தல்ல.

(6) இந்துமதப்பேரால், இந்துக்கடவுளர்களின் பேரால், அடிமையாக இருக்கும் இந்துப் பெண்களுடைய நன்மைக்குத் தான், அவர்களுக்கு சவுரியம் உண்டாகத்தான், அவர்களுடைய அடிமைத்ன்மையை ஒழிக்கத்தான்-இந்த மாதிரியான புரட்சிக்கரமான திருமணங்களை நாம் நடத்துகிறோம் என்பதை நமது பெண்கள் உணரவேண்டும்.

(7) நமக்கு மேலான மேல்சாதிக்காரன் என்பவனைப் (பார்ப்பானை), புரோகிதனை வைத்து நடத்தாத திருமணம் சுயமரியாதைத் திருமணம் ஆகும்.

(8) நமக்குப் புரியாததும், இன்ன அவசியத்திற்கு இன்னகாரியம் செய்கின்றோம் என்று அறிந்து கொள்ளாமலும் அறிய முடியாமலும் இருக்கும்படியானதுமான காரியங்களை (சடங்குகளை)ச் செய்யாமல் நடத்தும் திருமணம் பகுத்தறிவுத் திருமணம் ஆகும்.

(9) திருமணத்தில் சங்கீதம், நாட்டியம், காலட்சேபம் முதலியவைகளை மட்டும் ஏற்பாடு செய்யாமல் பல அறிஞர்களை அழைத்துக் கருத்துரை நிகழ்த்தவும், மக்கள் கேட்டுப் பயன் அடையவும் செய்து இருக்கிறார்கள். இதற்காக நாம் பாராட்ட வேண்டும்.

(10) மாறுதல் திருமணம் என்பது அடியோடு மூட நம்பிக்கையையும் தேவையற்றவைகளையும் விடுத்துப் பகுத்தறிவு அடிப்படையில் நிகழ்த்துவது என்பதாகும். திருமணம் என்பது மனிதனுக்குக் கவலையினை மாற்றத் தக்கதாக ஆகவேண்டும். (11) வாழ்க்கைத் துணைவிஷயத்தில் காதல் போதாது. அறிவு, அன்பு, பொருத்தம், அநுபவம் ஆகிய பல காரியங்களே முக்கியமானவையாகும்.

(12) நமது திருமணம் திராவிடர் திருமணம்தான். ஆனால் இந்த முறையில்தான் திராவிடரின் பழங்காலத் திருமணம் நடந்ததென்றோ, அல்லது இப்படித்தான் திராவிடர் எதிர்காலத்திலும் திருமணங்கள் நடத்த வேண்டும் என்றோ நான் முடிவு கட்டவில்லை.

(ஈ) மறுமணம்: மனிதன் எப்பொழுது மறுமணம் செய்து கொள்ளலாம் என்பதுபற்றியும் அய்யா அவர்கள் சிந்தித்துத்துள்ளார்கள். அவருடைய சிந்தனைகள்:

(1) அவனுடைய முதல் மனைவி இறந்து போனகாலத்திலும்

(2) தன் மனைவி மற்றொரு ‘சோர நாயகனிடம்’ விருப்பங்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய காலத்திலும் மறுமணம் செய்து கொள்வதை யாரும் குறை சொல்வதில்லை.

(3) தீராத கொடியநோய் தன் மனைவியை பீடித்தகாலத்தில் மறுமணம் செய்து கொள்வதை எவரும் ஆட்சேபம் செய்வதில்லை.

(4) மனைவி புத்திசுவாதீனம் இல்லாமல் போய் விட்ட காலத்தில் மறுமணம் செய்து கொள்வதை எவரும் எதிர்ப்பதில்லை.

ஆகவே பகுத்தறிவுக்காரரும் அநுபவக்கொள்கையினரும் மேற்கண்ட சந்தர்ப்பங்களில் மறுமணம் செய்துகொள்வதை ஆட்சேயிக்க மாட்டார்கள்.

(உ) விதவை மணம்: விதவை மணம்பற்றி அய்யா அவர்களின் சிந்தனைகள் இந்து சமூகத்தில் புரையோடிப்போன கீழான நிலையைக் காட்டுகின்றன.

(1) உலக இன்பத்தை நுகர்ந்து அலுத்துப் போயிருக்கும் பழுத்த கிழவனேயாயினும் தன் துணைவி இறந்துபட்டவுடன் மறுமணம் புரிந்து கொள்ள முயலுகின்றான். அதுவும், வனப்பு மிகுந்த-எழில் கொழிக்கும்-இளம்நங்கையொருத்தியைத் தேர்ந்தெடுக்கின்றான்.

ஆயின், ஓர் இளம்பெண் தன் கொழுநன் இறந்துவிட்டால் அவள் உலக இன்பத்தையே துய்க்காதவளாயிருப்பினும்- அவள் தன் ஆயுட்காலம் முழுவதும் இயற்கைக்கு கட்புலனை இறுக்க மூடி, மனம் நொந்து, வருந்தி மடிய நிபந்தனை ஏற்பட்டு விடுகின்றது. இஃது என்ன அநியாயம் என்று மனம் நொந்து அய்யா அவர்கள் வருந்துகிறார்கள்.

(2) விதவைத்தன்மை நிலைத்திருக்கும் காரணத்தினாலேயே இந்து சமூகமும் இந்து மதமும் ஒரு காலத்தில் அழிந்து போனாலும் போகும் என்பது தந்தையின் கருத்து.

(3) கணவனிழந்த காரிகையை எப்படி ‘விதவை’என்கிறோமோ அது போலவே மனைவியை இழந்த கணவனை ‘விதவன்’ என்று வழங்க வேண்டும்.

(4) “மனித சமூகத்தில் மகளிர் விஷயத்தில் ஒரு பெரும் மாறுதல் ஏற்பட வேண்டியது அவசியம். இது தீண்டாமையை ஒழிப்பதைவிட அவசரமாய்ச் செய்ய வேண்டிய காரியம் என்பது என் அபிப்ராயம்”. அதிலும் விதவைக் கொடுமைஅடியோடு ஒழிக்கப்பெறவேண்டும். அது மனித தர்மத்துக்கு மாத்திரமல்ல, சீவதர்மத்துக்குப் விரோதமாகும் என்கின்றார்.

(5) “எதற்காக ஒரு பெண் விதவை” யாக இருப்பது என்பது எனக்கு விளங்கவில்லை; விதவைத்தன்மை என்பதைத் தண்டனைக்குள்ளாக்க வேண்டும் என்பது வெகுநாளைய அபிப்பிராயமாகும்” என்கின்றார்.

(6) விதவைத்தன்மையை அனுமதிக்கும் சமூகம் மற்றொரு விதத்தில் விபசாரித்ன்மையை தூண்டவும் அனுமதிக்கவும் செய்கின்ற சமூகம் என்றுதான் சொல்லவேண்டும்.

(7) விதவைத்தன்மைதான் விபச்சாரம் என்கின்ற பிள்ளையைப் பெறுகின்றது. பிறகு, ஆண் எப்படி வேண்டுமானாலும் திரியலாம்- எவ்வளவு மனைவிமார்களை வேண்டுமானாலும் மணக்கலாம்- என்கிற முறையே விபச்சாரம் என்னும் பிள்ளையை வளர்க்கிறது. கலியாண ரத்து இல்லை என்கிற முறை விபச்சாரத்தை நீடுழி வாழச் செய்கின்றது.

(8) விதவைத் தன்மை என்பது கடவுள் செயலாக இருந்தால் ஊர்தோறும் குப்பைத் தொட்டிகளும், ஓடைப்புறம்போக்குகளும், கள்ளிமேடும், ஊருணிகளும் எப்படிப் பிள்ளைகளைப் பெற முடியும்?

(9) பெண்களில் விதவைகள் என்ற ஒரு நிலைமை ஏன் இருக்கவேண்டும்? கல்யாணம் செய்துகொண்டால்தானே இந்தக் கொடுமை? கலியாணம் செய்து கொள்ளாவிட்டால் பெண் எப்படி விதவையாக முடியும்? கலியாணம் செய்து கொள்ளாமல் இருப்பதில் பெண்களுக்கு இரண்டுவித நன்மை உண்டு. (அ) குழந்தை பிறக்காது என்பதுடன் விதவையும் ஆக முடியாது (ஆ) அடிமை நிலையும் சொத்து வைத்திருக்க உரிமையற்ற நிலையும் இருக்க முடியாது. உலகிலுள்ள சகல கொடுமைகளிலும் விதவைக்கொடுமையே அதிகமானது.

(10) ‘விதவைத் திருமணம்’ என்கிற தொடர் நம்முடைய பெண்கள் விஷயத்தில்தான் சொல்லப்படுகிறது; ஆண்கள் விஷயத்தில் சொல்லப்பெறுவதில்லை. எப்படி இந்த அம்மை (திருமதி சொர்ணம்) ஒரு கணவனை மணந்து அவர் காலமான பின்பு எப்படி ஒருவரை மணந்து கொள்கிறார்களோ அது போலவே ஆண்மகன் ஒருவரும் ஒரு மனைவி தவறி இரண்டாவதாக ஒரு பெண்ணை மணந்துகொள்கிறார். இதனை ‘விதவன்’ திருமணம் என்று தானே போட வேண்டும்? ஏன் அப்படிச் செய்வதில்லை?

(11) இந்த உலகில் கணவனை இழந்த பெண்கள்தாம் அதிகம். மனைவியை இழந்த ஆண்கள் அதிகம் இல்லை. காரணம் மனைவியை இழந்தவன் மறுமணம் செய்து கொள்கிறான். ஆனால் கணவனை இழந்த பெண்களை மணக்க யாரும் முன்வருவதில்லை.

(12) விதவைத் தன்மை என்பது நமது நாட்டில் மிகக் கொடுமையான முறையில் இருந்து வருகிறது. இதனை எந்தச் சீர்திருத்தவாதியும் கவனிப்பது இல்லை. விதவைகளின் வாழ்க்கை ஒரு சிறைக்கூட வாழ்க்கையை ஒக்கும். ஒரு கைதிக்குள்ள நிர்பந்தம் ஒவ்வொரு விதவைக்கும் இருந்து வருகிறது. எப்படிக் கைதியானவன் சிறைக்கூட விதியை மீறவேண்டும் என்கிற ஆசைக்கும் அவசியத்திற்கும் உள்ளாகிறானோ அதுபோலவேதான் ஒவ்வொரு விதவையும் விதவைச்சட்டத்தை மீறவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகிச் சிரமப்படுகிறாள். இந்தக் கொடுமை நிரபராதியான ஒரு பெண்ணுக்கு ஏன் ஏற்பட வேண்டும் என்று கேட்டால் இதற்கு என்ன மறுமொழி உள்ளது? இந்த 20-ஆம் நூற்றாண்டில் ‘தலை விதி’ என்றும் ‘கடவுள் செயல்’ என்றும் சொல்லி மக்களை எப்படி ஏய்க்க முடியும்?

(ஊ) குழந்தை மணம்: இதைப்பற்றியும் பெரியார் சிந்தித்துள்ளார். அவர் சிந்தனைகள்:

(1) குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்குத் தகுதியற்ற பருவத்தில் உள்ள சிறுமியர்களை மணம் என்னும் கயிற்றினால் பிணித்துக் குடும்பம் என்னும் குழியில் வீழ்த்திக் கணவன் என்னும் விலங்கனைய காவலாளி கையில் ஒப்புவிக்கும்படி எந்த அறநூலும் போதிக்கவில்லை. (2) சட்டத்தை மீறி நடக்கும் கல்யாணங்களில் சம்பந்தப்பட்ட வர்கள்மேல் வழக்குத் தொடுக்கும் உரிமை காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் தாராளமாக இருக்க வேண்டும். ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்ற ஏட்டுச் சுரைக்காயைப்போல் ‘பெண்ணின் திருமண வயது 21’ என்று எல்லா இடங்களில் எழுதிவைப்பது நகைச்சுவை விருந்தேயன்றி வேறு என்ன?

(3) சாரதா சட்டத்தை மீறுவதான முறையில் மணம் நடைபெறப் போவதாகத் தெரிந்தால் அதைத் தடுக்கும் அதிகாரமும் அவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரமும் நீதிமன்றத்துக்கு இருக்கவேண்டும்.

(4) பெண்களுக்கும் ஆண்களுக்கும் திருமணம் செய்து வைத்து விடுவதால் சிறுவயதிலேயே அவர்கள் தலைமீது குடும்பப் பொறுப்பு விழுந்து விடுகின்ற காரணத்தால் சுதந்திரம் அற்றுக் கவலை, தொல்லை இவற்றிற்கு ஆளாகிப் போதிய வளர்ச்சியற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

திருமண அடையாளம்: திருமணத்தில் தாலிகட்டப் பெறுகின்றது. இதுபற்றிப் பெரியார் சிந்தனைகள்:

(i) தாலிகட்டுவது என்பது பெண்களுக்குமட்டும் ஆண்கள் தாலிகட்டுவதால் அதில் ஏதோ காரணம் இருக்க வேண்டும், தாலிகட்டினவன் அப்பெண்ணுக்கு எசமான் என்றும் தாலி அடிமைச்சின்னம் என்றும் விளங்குகிறது. ஆண்பெண் இருவரும் சம அந்தஸ்து உள்ளவர்கள் என்பதற்கு இருவர்கழுத்திலும் தாலி கட்டிக்கொள்ளவேண்டும். இல்லையேல் இருவருக்கும் இல்லாமல் இருக்கவேண்டும் (மோதிரத்தை மாற்றிக் கொள்ளும் ஏற்பாடு செய்யலாம்).

(ii) தாலி என்பது நாய்க்கு நகராண்மைக்கழகம்கட்டும் பட்டை போன்றது. தாலி பெண்ணை அடக்கி ஆளும் மூர்க்கத் தனத்தின் சின்னம். தாலிபற்றிப் புலவர்கள் பேசும்போது காளையை அடக்குதல், புலிவேட்டையாடுதல் போன்ற பொருத்தமற்ற இலக்கிய ஆதாரங்களை அள்ளி வீசுவார்கள். பெண்களுக்கு அறிவு வந்தாலொழியத் தாலியை நீக்கமுடியாது.

(iii) தாலி கட்டுவது எதற்காக? அஃது எதற்காகப் பயன்படுவது என்றால் பெண்களை முண்டச்சியாக்கப் பயன்படுகின்றது. அறுப்பதற்காகவே பயன்படுகின்றது.

(iv) தாலி என்ற அடிமைச்சின்னம் சீர்த்திருத்தத் திருமணங் களிலும்- நூற்றுக்குத் தொண்ணுறு திருமணங்களில்கட்டப்பெறுகின்றது. இது மாறவேண்டும். (v) மணமானவள் என்று தெரிந்து கொள்வதற்காகத் தாலி கட்டுவது என்று கூறுகின்றனர். ஆனால் ஆண்கள் திருமணமானவர் என்று தெரிந்து கொள்ள அவர்கள் கழுத்திலும் தாலி கட்ட வேண்டாமா? இதில் ஆண்களுக்கும் மட்டிலும் விதிவிலக்கு ஏன்?

அய்யா வாழ்க்கையில்: 19 வயதில் திருமணம். அப்போது தாலிகட்டிதான் திருமணம் நடைபெற்று (1898) வந்தது. அந்த வயதில் தாலியைப் பற்றி எதிர்ப்பு செய்யவே இல்லை[குறிப்பு 1]. ஒருநாள் இரவு அய்யா தாலியைக் கழற்றும்படி கூறினார். அம்மையார் மறுத்தார். “நானே பக்கத்தில் இருக்கும்போது தாலி இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? நான் ஊரில் இல்லாதபோதுதான் அது இல்லாமல் இருக்கக்கூடாது” என்று அளந்த அளப்பில் நாதன்சொல் உண்மை என நம்பி தாலியைக் கழற்றிக்கொடுத்தார். ஈ.வெ.ரா. அதனைத் தம் சட்டைப்பையில் போட்டுக் கொண்டு உறங்கிவிட்டார். விடிந்தவுடன் அம்மையாரும் தாலியைக் கேட்க மறந்துவிட்டார். கணவரும் அதனைத்தர மறந்தார். அவரும் தாலியின் நினைவில்லாமலேயே சட்டையை மாட்டிக் கொண்டு வெளியில் சென்றுவிட்டார்.

இப்போது நாகம்மையாருக்கு தாலியின் நினைப்பு வந்துவிட்டது. கழுத்தில் தாலியில்லாமலிருப்பதை யாரேனும் கண்டால் ஏளனம் செய்வார்களே என்று நாணப்பட்டுக் கூடியவரை தம் கழுத்தைப் பிறர் காணாதபடி மறைத்துக் கொண்டே வேலை பார்த்து வந்தார். தம் கழுத்து வெளியில் தெரியாதபடி அடிக்கடித் துணியை இழுத்து இழுத்து மூடிக் கொண்டு வேலை செய்வதை மாமியார் கவனித்து விட்டார். உடனே ‘தாலி எங்கே?’ என்று வினவ, மருமகள் விடைகூற முடியாமல் ஏதேதோ சொல்லி மழுப்பிக் கொண்டிருந்தார். இதற்குள் இன்னும் சில பெண்கள் கூடிவிட்டனர். அவர்கள் நாகம்மையாரை நக்கல் செய்யத் தொடங்கிவிட்டனர். அம்மையாருக்குச் சினம் பொங்கி எழுந்தது. “உங்களுக்கு என்ன தெரியும்? கணவர் ஊரில் இருக்கும்போது தாலி இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?” என்று ஒரு போடு போடவே, நக்கல் பண்ணிய பெண்கள் மறுமொழிகூற முடியாமல் வாயடைத்துப் போனார்கள். “கணவனுக்கேற்ற மனைவி; நாம் என்ன சொல்வது?” என்று சொல்லிக்கொண்டே நழுவி விட்டனர். இந்த நிகழ்ச்சியை,

தாலி என்னும் சங்கிலிதான், பெண்ணினத்தைப்
பிணித்திருக்கும் தளைஎன் றெண்ணித்
தாலிதனைக் கழற்றென்னத் தன்மனைவி
மறுத்துரைக்க, ‘நானி ருக்கத்
தாலிகட்டிக் கொள்ளுவதன் பொருளென்ன?
எனக்கேட்டு வாங்கிக் கொண்டார்.
‘தாலிஎங்கே?’ எனக்கேலி செய்த பெண்கள்
தமைக்கண்டு சினந்தார் அம்மை!

-ஈரோட்டுத்தாத்தா-பக்.

என்ற பாட்டாக வடித்துக் காட்டுவார் கவிஞர் நாச்சியப்பன்.

மூடநம்பிக்கை: திருமணம் பற்றிய சில மூடநம்பிக்கைகள் உள்ளன. அவைபற்றிய பெரியாரின் சிந்தனைகள்.

(i) சாத்திரப்படி பெண் சுதந்திரமற்றவள், அவள் காவலில் வைக்கப் பெறவேண்டியவள் என்பது. இஃது ஒருபுறம் இருக்க மனிதன் ‘புத்’ என்னும் நரகத்திற்குப் போகாமல் இருப்பதற்காகவும் பெற்றோர்கட்கு இறுதிக்கடன், திதி முதலியவை செய்ய ஒரு பிள்ளையைப் பெறவும் என்பதாகவும் திருமணம் செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறுகிறது.

(ii) பொருத்தம் பார்ப்பது, சகுனம் பார்ப்பது என்பது மிக மிக முட்டாள்தனம். பொருத்தம் பார்க்கும் சோதிடனுக்கு ஆணையோ பெண்ணையோ தெரியாது. இருந்தாலும் பொருத்தம் பார்க்கிறார்கள். இரண்டு ஆண்களின் சாதகத்தையோ இரண்டு பெண்களின் சாதகத்தையோ கொடுத்தால் இவை பொருத்த மற்றவை என்று எவனாவது கூறமுடியுமா?

(iii) தாரைவார்த்து வாங்கினவன் வாங்கின பெண்ணை யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்து விடலாம். வாடகைக்கு விடலாம். அடகுவைக்கலாம். அவனுக்கு உரிமை உள்ளது. ஏன் என்று கேட்க முடியாது. இங்ஙனம் புராண இதிகாசங்களில் நடந்துள்ளது. தருமன் திரெளபதியை பணயம் வைத்துச் சூதாடினான். அரிச்சந்திரன் தன்மனைவியை வேறு ஒருவனிடம் விற்றான். இயற்பகை நாயனார் தன் மனைவியை சிவனடியார் ஒருவருக்கு கூட்டிக் கொடுத்தார். அவமானம் உள்ள கதைகள்!

(iv) இன்றைக்குப் பொருத்தம் சோதிடனைக் கொண்டுதான் பார்க்கப்பெறுகின்றதே ஒழிய வயதுப் பொருத்தம், உடற்கட்டு, குருதிக்குழுப்பொருத்தம், அழகு, பண்பு, படிப்புப் பொருத்தம் முதலியவற்றை எவன் பார்க்கின்றான்? இன்றைக்கு இப்படிப்பட்ட முட்டாள்தனமான பொருத்தம் படித்தவன்-பணக்காரன் இடத்தில்தான் குடிகொண்டுள்ளது.

நாகம்மையின் மூடப்பழக்கத்தைக் களைதல்: இரண்டு நிகழ்ச்சிகளை ஈண்டுக் காட்டுவேன்.

(1) விரத ஒழிப்பு: இராமசாமியாரைப்போல் நாகம்மையாரையும் ஆசாரமில்லாதவராக விடக்கூடாது என்பது மாமனார்-மாமியார் கருத்து. கணவருக்கு வேண்டிய புலால் உணவைத் தன்னிச்சையாகச் சமைப்பார். பரிமாறுவார். பிறகு நீராடி விட்டுதான் சமையல் அறைக்குள் போவார். கணவர் வெளியில் அமர்ந்துதான் உணவு உண்ண வேண்டும். சமையல் அறைக்குள் எப்போதும் நுழையக்கூடாது.

நாகம்மையார் வெள்ளிக்கிழமைதோறும் நோன்பிருந்து வந்தார். இது மாமியார் இட்டகட்டளை. மக்கட்பேறு இல்லை என்பதற்காகவே இந்த நோன்பு ஏற்பாடு. என்றைக்கு விரத நாளோ அன்றுதான் தவறாமல் இராமசாமியாருக்குப் புலால் உணவு சமைக்கவேண்டும். நாகம்மாள்தான் பரிமாற வேண்டும். இஃது இராமசாமியாரின் பிடிவாதம். நாகம்மையாரும் கணவன் முகம் கோணாமல் அவர் விருப்புப்படி புலால் உணவு சமைப்பார். பரிமாறுவார். உடனே நீராடச் சென்றுவிடுவார்.

இச்சமயத்தில் இராமசாமியார் சமையலறைக்குள் புகுந்து அம்மையார் அருந்துவதற்கெனத் தனியாக மூடிவைத்திருக்கும் விரதச் சோற்றைத் திறந்து அதற்குள் எலும்புத்துண்டைப் புதைத்துவிட்டுப் போய்விடுவார். அம்மையார் சாப்பிடும்போது சோற்றுக்குள்ளிருந்த எலும்புத்துண்டு தலைநீட்டும். இது கணவரின் திருவிளையாடல் என்பதை அவர் உணர்ந்து கொளவார். அவ்வளவுதான்; நோன்புக்கு முற்றுப்புள்ளி. அம்மை யார் பட்டினி. இக்குறும்புத்தனம் ஈ.வெ.ரா பெற்றோர்கட்கு தெரிந்தது. அவர்களும் கண்டித்தனர். ஆயினும் நிற்கவில்லை. இறுதியில் மாமியார் மருமகளை அழைத்து ‘இந்தக் கணவனைக் கட்டிக்கொண்டு நீ வாழ்ந்தது போதும். நிறுத்திவிடு ’ என்று சொல்லிவிட்டார். இவ்வளவோடு நாகம்மையாரின் வெள்ளிக் கிழமை விரதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப் பெற்றது. மற்ற விரதங்களும் நாளடைவில் பறந்தன. இந்த நிகழ்ச்சியை கவிஞர் நாச்சியப்பன்,

தன்மனைவி தனைத்தொட்டால் தீட்டென்று
தலைமுழுகிப் பிள்ளைப் பேற்றிற்கு
என்று வெள்ளிக் கிழமைதொறும் நோன்பிருக்கும்
நிலைபோக்க எண்ணி, ஆய்ந்து
சின்னவோர் எலும்பெடுத்துச் சோற்றுக்குள்
புதைத்திடுவார்! சென்ற வம்மை
தன்னுணவை உண்ணுங்கால் தலைநீட்டும்
எலும்புகண்டு நோன்பி ழப்பார்!

-ஈரோட்டுத்தாத்தா-பக்.7.

என்ற பாடலால் வார்த்துக் காட்டுவார்.

(2) கோயில் செல்லல் ஒழிப்பு: நாகம்மையார் விழாக் காலங்களில் எப்பொழுதாவது கோயிலுக்குச் செல்வதுண்டு. இவ்வழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பது ஈ.வெ.ராவின் திட்டம். இதற்காக இவர் செய்த குறும்பு மிக வேடிக்கையானது. ஒருநாள் ஏதோ ஒரு திருவிழாவை முன்னிட்டு நாகம்மையார் சில பெண்களுடன் கோயிலுக்குச் சென்றிருந்தார். ஈ.வெ.ரா. தம் கூட்டாளிகள் சிலருடன் கோயிலுக்குச் சென்றார். தாம் மைனர் கோலம்பூண்டு அம்மையார் தம்மை நன்கு பார்க்க முடியாதபடி ஓர் ஒதுக்கிடத்தில் நின்று கொண்டார். நாகம்மையாரைத் தம் கூட்டாளிகளுக்குக் காட்டி ‘இவள் யாரோ ஒரு புதியதாசி. நமது ஊருக்கு வந்திருக்கிறாள். இவளை நம் வசப்படுத்தவேண்டும்; நீங்கள் அவள் நோக்கத்தை அறிந்துகொள்ள வேண்டிய முயற்சியைச் செய்யுங்கள் என்றார்.’ அவர்களும் அவ்வம்மையார் நின்றிருந்த இடத்திற்குச் சென்று அவரைப் பார்த்து ஏளனம் செய்யத் தொடங்கினர். நாகம்மையார் இக்கூட்டத்தின் செய்கைகளைப் பார்த்துவிட்டார். அவருக்குச் செய்வது இன்னது என்று தோன்றவில்லை. கால்கள் வெலவெலத்துவிட்டன. உடம்பு நடுநடுங்கியது. தாங்கமுடியாத அச்சத்தால் நெஞ்சம் துடிதுடிக்கின்றது. வியர்வையால் அப்படியே நனைந்தது போய் விட்டார். ஆயினும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு அக்காலிகளிடமிருந்து தப்பி வீடு வந்து சேர்ந்துவிட்டார். திருக்கோயில்களின் நிலைமையையும் தெரிந்து கொண்டர். மறுநாளே கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சி தம் கணவரின் சூழ்ச்சி மிக்க திருவிளையாடல்தான் என்று உணர்ந்து கொண்டார்.


3. சாதிக்கொள்கை

தமிழர் வாழ்வில் எப்படியோ புகுந்தவிட்ட ‘சாதிக்கொள்கை’ யைச் சாடுவதை ஆய்வு செய்வதற்கு முன்பு பண்டைய தமிழ் இலக்கணங்களில் இக்கொள்கைகைபற்றி வரும் குறிப்புகளை முதலில் தெரிந்து கொள்வது இன்றியமையாதது என்று கருதி அவற்றை முதலில் காட்டுவேன்.

களவுக்காலத்தில் தலைவன் பிரிவு வகைகளைக் கூறும் இறையனார்களவியல்,

ஓதல் காவல் பகைதணி வினையே
வேந்தர்க் குற்றுழி பொருட்பிணி
ஆங்க ஆறே அவ்வுயிற் பிரிவே [குறிப்பு 2]

என்ற நூற்பாவில் அப்பிரிவுகள் தொகுத்துக் கூறப்பெற்றுள்ளன. அவை: ஓதற்பிரிவு, காவல்பிரிவு, பகைதணிவினைப் பிரிவு, வேந்தர்க்குற்றுழிப்பிரிவு, பொருட்பிணிப்பிரிவு, பரத்தையர் பிரிவு என்ற ஆறு ஆகும். இந்த ஆறுபிரிவுக்கும் காலவரையறையும் தொல்காப்பியத்தில் கூறப்பெற்றள்ளது. கல்வியின்பொருட்டுப் பிரியும் பிரிவு மூன்றாண்டுகாலம் எனவும் ஏனையபிரிவுகட்கு ஓராண்டுக் காலம் எனவும் கூறப்பெற்றுள்ளன [குறிப்பு 3]. தொல்காப்பியத்திலேயே அந்தணர், அரசர், வணிகர்[குறிப்பு 4], வேளாளர் என்ற சாதி வேறுபாடு கூறப்பெற்றுள்ளமையால், அவர்களில் இன்னின்னாருக்கு இன்னின்ன பிரிவுகள் உள்ளன என்றும் கூறிச்செல்லுவர். ஆசிரியர் இப்பிரிவு இவர்க்குரியது என்று நூற்பா செய்து காட்ட வில்லை. எனவே, பிறப்பு காரணமாகத் தொல்காப்பியர் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற கொள்கையைக் கூறினார் அல்லர் என்பது ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. தமிழ்மறை அருளிய வள்ளுவர் பெருமானும்,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் (குறள் 672)

என்று கூறியுள்ளதை நாம் நன்கு அறிவோம். தவிர, உலகியலில் இன்னார்தான் போர்க்காரணமாகப் பிரியவேண்டும். இன்னார்தான் பொருளிட்டுவதற்குப் பிரியவேண்டும் என்ற நியதியும் ஒன்று இருந்ததாகத் தெரியவில்லை.

இன்று எல்லாச் சாதியினரும் எல்லாத் தொழில்களையும் செய்து வருவது கண்கூடு. பார்ப்பனர் போரில் ஈடுபடு கின்றனர்;[குறிப்பு 5] அரசு அலுவல் பார்க்கின்றனர்; வாணிகம் செய்கின்றனர்; உழவுத்தொழில் செய்கின்றனர். அங்ஙனமே, வேளாளர் மறையோதுகின்றனர்; அரசு அலுவல்களில் அமர்ந்துள்ளனர்; வாணிகத்தில் ஈடுபடுகின்றனர். ஏனைய சாதியினரும் எல்லாவிதத் தொழில்களிலும் ஈடுபடுகின்றனர். எனவே, மக்கள் தொழில் செய்யும் பொழுது, செய்யும் தொழில் காரணமாக அந்தந்தச் சாதியினராகின்றனர் என்று கோடலே பொருந்தும்[குறிப்பு 6]. பண்டும் இந்த நிலையே வழக்கில் இருந்திருத்தல் வேண்டும். நான் ஆசிரியத்தொழிலிலிருப்பதால் நான் பார்ப்பனன். என் மைந்தருள் ஒருவன் வணிகம் செய்தால் அவன் வாணிகன்; இன்னொருவன் உழவுத்தொழிலில் ஈடுபட்டால் அவன் வேளாளன்[குறிப்பு 7] ஓதல், பகை, தூது என்ற பிரிவிற்கு நிமித்தம் கூறும் தொல்காப்பியம்.

அவற்றுள், ‘ஓதலும் தூதும் உயிர்ந்தோர் மேன’[குறிப்பு 8]

என்று கூறும்பொழுது ‘உயிர்ந்தோர்’ என்று பொதுப்படையாக இருப்பது சிந்திக்கத் தக்கது. பிறப்பினால் உயர்வு உண்டு என்ற கொள்கையில் அழுந்திய உரையாசிரியகள் ‘உயிர்ந்தோர்’ என்பதற்குத் தத்தமக்குத் தோன்றியவாறு பொருளுரைத்தனர். இளம்பூரணர், ‘நால்வகை வருணத்தினும் உயர்ந்த அந்தணர் அரசர்’ என்றும், நச்சினார்க்கினியர் ‘அந்தணர் முதலிய மூவர்’ என்றும் பொருளுரைத்தனர். ஒவ்வொருவரும் தத்தம் மனப்பான்மைக் கேற்றவாறு ஒவ்வோர் அளவுகோல் (Norms) கொண்டனர். இங்ஙனம் உரையாசிரியர்கள் சாதிப்பிரிவையொட்டி ‘உயர்ந்தோர்’ என்று கூறியிருப்பது இக்காலத்திற்குச் சிறிதும் ஏற்காது; எக்காலத்திற்கும் ஏற்காது; ஏற்கவும் முடியாது. எனவே, ‘உயர்ந்தோர்’ என்பதற்கு ‘அறிவினாலும் ஒழுக்கத்தினாலும் சீலத்தினாலும், பண்பாட்டினாலும் உயர்ந்தோர்’ என்ற கோடலே பொருந்தும்; அஃதே அறிவுடைமையுமாகும். மேற்குறிப்பிட்ட நூற்பாவினை அடுத்து வரும் நூற்பாக்களிலும் பிரிவுகளைப்பற்றிப் பொதுப்படையாகவே கூறியிருப்பது இதனை வலியுறுத்தச் செய்யும்.

சாதிப்பற்றிய பெயர்கள்: இனி, நால்வகைச்சாதி பற்றிய மரபுகளை நோக்குவோம். தொல்காப்பியத்தில் அகத்திணையொழு கலாற்றுக்குரிய மக்களை வகைப்படுத்திக்கூறிய நிலையிலும், புறத்திணையொழு கலாற்றில் வாகைத்திணைப் பகுதிகளை விரித்துரைத்த நிலையிலும் மக்களை ஆசிரியர் தொல்காப்பியனார் அவர்கள் வாழும் நிலத்தாலும்[குறிப்பு 9] அவர்கள் மேற்கொண்ட தொழில்வகையாலும் பகுத்துரைத்தனரேயன்றிப் பிறப்பு வகையால் அன்று என்பது பெறப்படும். திருவள்ளுவரின் கருத்தும் இதுவே என்று மேலே காட்டப்பெற்றது.

(1) சாதி: சாதிப்பற்றிய பெரியார் சிந்தனைகளைக்காண்போம்:

(i) மனிதன் திருடுகிறான்; பொய்பேசுகிறான்; பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை; சாதியைவிட்டுத் தள்ளுவதில்லை; ஆனால் சாதியைவிட்டுச் சாதி சாப்பிட்டால், கல்யாணம் செய்தால் சாதியை விட்டுத் தள்ளப் பெறுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம், நாணயம் எப்படிப்பட்டது என்று பாருங்கள்.

பெரியார் காலத்தில் இருந்த இந்த நிலை இன்று இல்லை. கிராமங்களில்கூட இல்லை என்பது சிந்திக்கத்தக்கது.

(ii) கோயிலைக் கட்டிவைத்துக் கல்தச்சருக்குச் காசு கொடுத்துச் சிலை செய்யச் செய்து பூசைக்கு மானியம்விட்ட நம்மக்கள் தொட்டால் சாமி தீட்டாகி விடும் என்று பார்ப்பனர் கூறுகிறார்களே! காரணம் இழிசாதி என்கிறான். இவ்வளவையும் பொறுத்துக் கொண்டு சாமி கும்பிடுகிறார்களே, மானம் ஈனம் இருந்தால் செய்வார்களா?

வடநாட்டில், குறிப்பாகக் காசியில் இந்த நிலை இல்லை; காசி விசுவநாதர் கோயிலில் எவரும் இலிங்கத்தைத் தொட்டு வழிபடலாம். (1958-இல் நான் வாரணாசியில் தங்கியிருந்தேன்)

(iii) நீங்கள் என்னைப் பெரியார் என்று கூறலாம். பண்டார சந்நிதிகள், இராஜா சர். அண்ணாமலைச்செட்டியார் கோடீசுவரராயும் இருக்கலாம். இருந்தாலும் அவர்கள் உட்பட நாம் சூத்திரர்களாக இந்தக் கடவுள்களால்தான் ஆக்கப்பெற்றிருக்கிறோம். சிந்தியுங்கள்; பத்துத்தடவை சிந்தியுங்கள்; நாம் ஏன் சூத்திரர் என்று? வழிபிறக்கும்.

இன்று இந்நிலை இல்லை. எவரையும் பொதுஇடத்தில் இப்பெயரிட்டு வழங்குவதில்லை. பார்ப்பனக் குடும்பத்திற்குள் இத்தகைய பேச்சு ஒருவேளை அடிபடலாம். அது பற்றி நமக்குக் கவலை வேண்டா.

(iv) சாதி வகை என்பது பிறவியால் வருவது இல்லை. யாருக்குப் பிறக்கிறதோ அவரது சாதியைச் சொல்லுகிறார்களே ஒழியப் பிறக்கும்போது சாதிமுத்திரையோடு எந்தக் குழந்தையும் பிறப்பது இல்லை.

(v) சாதி மாடுகளை அடையாளம் காட்டலாம்; சாதி நாய்களை அடையாளம் காட்டலாம். சாதிப்பெண்களை எவ்வித அடையாளமுமின்றி அம்மணமாக நிறுத்தினால் இவர்களை இந்த சாதிப்பெண் என்று அடையாளம் காட்டமுடியுமா? -என்பது அய்யா அவர்களின் சவால் வினா.

தாழ்த்தப்பட்டோர்: இந்த வகையினரைப்பற்றி அய்யா அவர்களின் சிந்தனைகளைக் காண்போம்:

(1) உங்களை யாராவது கிராமவாசிகள் இழிவாக நடத்தினால் எதிர்த்து நிற்கவேண்டும். முடியாவிட்டால் நகர்ப்புறங்களுக்குச் சென்று அங்கு குடியேறவேண்டும். அங்குப் பிழைப்புக்கு வழி இல்லாவிட்டால் இம்மாதிரியான கொடுமையான மதத்தை உதறித் தள்ளிவிட்டு சமத்துவமுள்ள மதத்திற்குப் போய்விட வேண்டும். அதுவும் முடியாவிட்டால் வெளிநாடுகளுக்காவது கூலிகளாய்ப் போய் உயிரையாவது விடவேண்டும். இம்மாதிரியான உறுதியான முறைகளைக் கையாளத் துணிவு இல்லா விட்டால் உங்கள்மீது சுமத்தப்பெற்ற இழிவு எளிதில் ஒழியாது என்றே சொல்லுவேன்.

(2) தாழ்த்தப்பட்டுக் கொடுமை செய்யப்பெற்ற மக்களை விடுதலை செய்ய வேண்டுமானால் அவர்களுக்கு அதிகாரங்களில் உயர் பதவி கொடுப்பதன்மூலம்தான் சீக்கிரத்தில் செய்யக்கூடுமே தவிர வேறு செயல்களால் அல்ல.

இன்று ST/SC சாதியினர் பெரியவேலைகளில் அமர்த்தப் பெற்று வருகின்றனர். காலப்போக்கில் மெதுவாக சாதிபற்றிய கொடுமை ஒழியும். ஆனால் சாதிப்பெயர்கள் மாறாமலேயே அப்படியே இருக்கும். அரசும் இதைப்பற்றிச் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

(3) தாழ்த்தப்பெற்றவர்களாகிய நீங்கள் காங்கிரசு, மதம், கோவில், சாமி ஆகியவற்றையெல்லாம் உடைக்க ஆரம்பித்தீர் களேயானால் உங்களுக்கு யாருடைய தயவும் இல்லாமல் சகல சுதந்திரமும் சகலஉரிமையும் தாமாக உங்களைத் தேடிக்கொண்டு வரும் என்பார் பெரியார்.

நடைமுறையில் இது சாத்தியமல்ல. இதனால் அராஜகம் தலையெடுக்குமாதலால் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இராது. இந்த யோசனை வெறும் ஏட்டுச்சுரைக்காய் என்பது என் கருத்து.

(4) தாழ்த்தப்பட்ட மக்களை அவர்களுக்கு மற்றவர்கள் இழைத்துவரும் கொடுமையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்பதை உண்மையான கருத்துடன் பார்த்தால் அஃது ஒரு புரட்சி வேலையேயாகும். ஏனெனில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை ஒரு பெரிய அஸ்திவாரத்தின்மீது கட்டப் பெற்றுள்ளது.

பெரியாரின் இத்தகைய சிந்தனையின் பலத்தால் அத்திவாரம் ஆட்டம் கொடுத்து விட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் முன்னுக்கு வந்து கொண்டுள்ளனர்.

(5) ‘பறையர்கள்’ என்ற பட்டம் மாறி ‘ஆதி திராவிடர்கள்’ ஆகி இப்போது ‘அரிசனங்கள்’ என்கிற பட்டம் வந்ததுபோல் வேறு ஏதாவது ஒரு பெயர் ஏற்படலாமெயொழிய இழிவு நீங்கிவிடாது. விபசாரிகளுக்கும் குச்சுக்காரிகளுக்கும் ‘தேவதாசி’ ‘தேவர்அடியாள்’ என்ற பெயர்கள் இருப்பதால் அவர்களுக்குச் சமூகத்தில் இழிவு இல்லாமல் போய்விடவில்லை.

இது கடுமையான சிந்தனைதான். பெயர்கள் இருந்தால்தான் விகிதாச்சாரப்படி அலுவல்கள் கிடைக்கும். பெயர்களும் மாறவேண்டும். மக்களின் மனநிலை மாறவேண்டும். காலப் போக்கில் மாறலாம்; மாறாமலும் இருக்கலாம். மக்களாட்சியில் எதுவும் விரைவாக நடைபெறாது. சட்டமன்றம், நாடாளுமன்றம் இவற்றின் உறுப்பினர்களில் மூன்றில் ஒருபாகம் மகளிர் இருக்கவேண்டும் என்ற நல்லெண்ணப்படி தயாரிக்க பெற்ற சட்ட வரைவு (Bill) இன்னும் நிறைவேற்றப்பெறாமல் தடைக் கற்கள் எழுப்பியவண்ணம் இருத்தலே இதற்குச் சான்றாகும். மகளிர் மன்றம் ஏறினால் தங்கள் குற்றங்களை எடுத்துச் சந்தி சிரிக்க வைக்கலாம் என்ற அச்சமும் இதற்குக் காரணமாகலாம்.

(6) எவனாவது உங்களைப் பார்த்து ‘ஒதுங்கிப்போ’ என்று சொன்னால் ‘ஏனப்பா, நான் ஒதுங்கவேண்டும்? என் காற்றுப் பட்டால் உனக்கு என்ன வாந்தி பேதியா வந்து விடும்? என்று கேளுங்கள். அவன் தானாகவே ஒதுங்கிப்போய்விடுவான். எவனாவது உங்களைக் கண்டு ஒதுங்கிப்போனால் அவனையும் விடாதீர்கள். ‘என்னப்பா, என்னைப் பார்த்துத் தவளைப்போல் குதிக்கிறாயே? நான் என்ன மலமா? தொட்டால் நாற்றமடிக்க; அல்லது நான் என்ன நெருப்பா? தொட்டால் சுடும் என்று கூற; ஏனப்பா, இப்படிப் பித்தலாட்டம் செய்கிறாய்? மலத்தைத்தொட்டால் கூடக் கைகழுவிவிட்டால் சரியாய்ப் போகிறது என்கிறாய்; என்னைத் தொட்டால் உடுத்தியிருக்கிற வேட்டியோடு குளிக்க வேண்டுமென்று சொல்லுகிறாயே; இதற்கு என்னப்பா அர்த்தம்? என்று கேளுங்கள்!’.

பெரியார் காலத்தில் இருந்த இந்நிலை இன்று இல்லை. எவ்வளவோ மாற்றம் அடைந்துவிட்டது. இந்த யோசனைக்கு இன்று வேலை இல்லை.

(2) தீண்டாமை: தீண்டாமைபற்றிக் காந்தியடிகளும் சிந்தித் துள்ளனர்; அது பதமான வெறும் மழுப்பல்போல் தோன்றுகின்றது. அரிஜன் (Harian) என்ற பருவ வெளியீட்டில் எவ்வளவோ எழுதியுள்ளார். பெரியாரும் இதனைத் தம்வாழ்நாள் பணியாக மேற்கொண்டு ‘குடியரசு’ ‘விடுதலை’ என்ற இதழ்களில் எவ்வளவோ எழுதியும் பெருங்கூட்டங்களில் ‘முழங்கியும்’ பணிசெய்துள்ளார். இப்பணியே பட்டிதொட்டியெல்லாம் பரவியுள்ளது. ‘நாத்திகர்’ என்று பெரியாரை வெறுத்த உள்ளங்களில் பெரியாரின் எழுத்தும் பேச்சும் ‘பூச்சி மருந்து’ அடித்ததுபோல் வேலை செய்துள்ளது. தம்மை அறியாமலேயே மனமாற்றம் செய்துள்ளது. பெரியாரின் இத்தகைய சிந்தனைகளில் ஈண்டு சிலவற்றைக் காட்டுவோம்.

(i) ‘தீண்டாமை விலக்கு’ என்பது பிறருக்குச் செய்யப்பெறும் பரோபகரமான செய்கை எனக்கருதுவது அறிவீனம். அது மனிதத்தன்மையை நிலைநாட்டச் சுயமரியாதையைக் காக்க நாட்டின் விடுதலைக்காக என்று கருதவேண்டும்.

(ii) கூறுவார்கள்: ‘பார்ப்பான் சிவப்பாக இருக்கிறான், பறையன் கறுப்பாக இருக்கிறான் என்று’; “ஒரு கறுப்புப் பார்ப்பானையும் ஒரு சிவப்புப்பறையனையும் நிறுத்தி எவன் பறையன்? எவன் பார்ப்பான்? என்று காட்டு” என்றால் காட்டமுடியுமா? எனவே சாதி என்பது இல்லாத ஒன்றாகும். அது கற்பனையே.

(iii)மலத்தைத் தீண்டினால் அசிங்கம் (அசஃயம்). மின் சாரத்தைத் தீண்டினால் உயிருக்கு ஆபத்து. இவையெல்லாம் இயற்கையிலேயே தீண்டமுடியாத பொருள்களாயிருப்பதால் தீண்ட அஞ்சுகின்றோம். ஆனால் மனிதனில் தீண்டாதவன் என்று சொல்லும்படியாக ஏதாவது அமைப்போ வேறுபாடோ காட்டமுடியுமா அதற்கு? இதற்கு ஆதாரம்தான் ஏதாவது சொல்ல முடியுமா? ஒன்றும் இல்லையே!

(iv) சாதியை வைத்துக் கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதும், இந்து மதத்தை வைத்துக்கொண்டு தீண்டாமை போகவேண்டும் என்பதும் மாபெரும் முட்டாள்தனமாகுமே தவிர, சிறிதும் அறிவுடைமையாகாது என்பது என் கருத்து” என்கின்றார் அய்யா.

(v) காவலர் பணியைத் தாழ்த்தப்பட்டவர்க்கே தரவேண்டும். அவர்களைப் பார்ப்பனர் சேரியில் குடியிருக்கச் செய்ய வேண்டும். தீண்டாமையைப் பாராட்டாத சிறந்த சிற்றூர்களுக்குப் பரிசளிக்கவேண்டும். தாழ்த்தப்பெற்ற மக்களுக்கென்று தனியாகச் சேரி கட்டி அங்கே அவர்கள் குடியேறுவதை மாற்றவேண்டும். தாழ்த்தப் பெற்றவர்களுக்கென்று தனியாகச் சேரிகள் இருக்கக் கூடாது (இன்று கலைஞரின் சமத்துவபுரக் கருத்து இத்திசையில் சிறந்த பணியாற்றுகிறது).

இன்று தீண்டாமை குறைந்துவிட்டது. இக்கருத்தை வலியுறுத்துவதற்காக எண்ணற்ற கட்டுரைகள் வெளிவந்துள்ளன. சிறுகதைகளும் புதினங்களும் தோன்றியுள்ளன. தீண்டாமை குறித்து ஒன்றிரண்டு புதுக்கவிதைகளும் உள்ளன. “வள்ளி சிரித்தாள்” என்ற தலைப்பில் உள்ள ஒரு கவிதை.

சப்பரத்தில் வள்ளியும் முருகனும்
காஷ்லைட் தூக்கியவாறு
நான்முன்னால் சென்று கொண்டிருந்தேன்
அபிஷேகத்திற்காக
பன்னீர் பாட்டலுடன் வந்த பட்டர்
என்மீது மோதிவிட்டார்.
“டேய் மடப்பயலே தீட்டாச்சேடா
நான்குளிச்சிகிட்டில்லேடா சாமி கிட்டே போகனும்”
நான் சப்பரத்தைப் பார்த்தேன்
வள்ளியின் உருவம் சிரித்துக் கொண்டிருந்தது.[3]

நல்ல கிண்டல், தீட்டைப் பொருட்படுத்தாது இறைவனே வேடர் குலப்பெண்ணை மணந்து கொண்டதை நினையாமலே, அந்த இறைவனுக்குப் பூசை செய்யும் பட்டர் தீட்டைப்பற்றிப் பேசுகின்றார். நல்ல நகைச்சுவைக் கவிதை இது.

இன்னொரு கவிதை. ஒரு பக்தன் தன் அருகே வந்த நாயை அடித்துத் துரத்தி ஆண்டவனைத் தரிசிக்க ஆலயத்துள் புகுகின்றான். அவனைப் பார்த்துக் கவிஞர் பேசுகின்றார்.[குறிப்பு 10]

.....................
நாயும் கடவுளும்
ஒரே பிரம்மம்தான்
என்பதை அறிவாயா நீ?
வேண்டுமானால்
அந்த இரண்டுக்குமுரிய
ஆங்கிலச் சொல்லின் எழுத்துகளை[குறிப்பு 11]
மாறிப் போட்டுப்பார்.[குறிப்பு 12]

ஆன்மாநுபவம் பெற்ற கைவல்யார்த்திக்கே இரண்டும் ஒன்றாகத் தெரியும். இறையநுபவம் பெற்ற உண்மை பக்தனுக்கு இந்தத் தத்துவ உண்மை கட்டாயம் தட்டுப்படும். வேதாந்த இரகசியம் இது!

இத்தகையவற்றைப் படிக்கும் மக்களிடம் இவை நல்ல மனமாற்றத்தை விளைவித்துள்ளன என்று கருதலாம்.

(3) சாதித்தொழில்: இது நம்நாட்டில் நடைமுறையில் இருப்பது. இதனைக் கடியும் பாங்கில் பெரியாரின் சிந்தனைகள் உருவாகியுள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்!

(i) தொழில்பாகுபாட்டைக் கொண்டே சாதிவகுக்கப்பட்டதே ஒழியப் பிறவியைக் கொண்டு அல்ல என்கின்றனர் ஒரு சிலர்: ஒரு மனிதன் காலையில் தச்சனாகவும், நண்பகலில் வியாபாரியாகவும், இரவில் ஆசிரியனாகவும் மறுநாள் காலையில் உழுவோனாகவும், பகலில் நெய்வோனாகவும், காவல்காரனாகவும், ஏன் இருக்கக் கூடாதென நான் அவர்களைக் கேட்கிறேன்.

தஞ்சைப் பக்கம் நாயுடுமார்களும் பிள்ளைமார்களும் வாணிகம் செய்தால் ‘செட்டியார்’ என்றே வழங்கப்பெறுகின்றனர். என் நண்பர் ஒரு தெலுங்கு பேசும் நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர். ஒரு சமயம் (1950-60) அவர் எனக்கு ஒரு திருமண அழைப்பு அனுப்பிவைத்தார். அதில் செட்டியார் மகன் ஒருவருக்கு நாயுடு மகள் ஒருத்தியைத் திருமணம் புரிவதாக இருந்தது. நான் கலப்புத் திருமணமா? என்று வினவ, அவர் செய்யும் தொழிலால் ஏற்பட்டது என்று நிலைமையை விளக்கினார்.

(ii) இந்த நாட்டில் பறையன், சக்கிலி, வண்ணான், நாவிதன் இருக்கின்றனர். இவர்களெல்லாம் நடைமுறையில் ஒவ்வொரு சாதியாக அல்லவா இருக்கின்றனர்? இந்த நிலையெல்லாம் ஒழிய வேண்டும் என்று நான் (பெரியார்) சொல்லவில்லை. இந்தத் தொழில்கள் உலகத்தில் எல்லா நாட்டிலும்தான் இருக்கின்றன. ஆனால் இந்தத் தொழிலை இன்னின்ன சாதி மக்கள்தாம் செய்யவேண்டும். அம்முறையில் செய்கின்ற அவர்கள் எல்லாம் “கீழ்ச்சாதி மக்கள்” என்று சொல்லுகின்றாயே? இது சரியா? என்று கேட்கிறார் அய்யா.

இன்று சென்னையில் ஒரு முதலியார் தச்சுவேலையையும், ஒரு போயன் கொத்து வேலையையும், ஒரு நாயுடு இரும்பு வேலையையும் செய்து கொண்டிருப்பதை நான் அறிவேன். நகர்ப்புறங்களில் இந்தச் சாதிமுறை மெதுவாக ஒழிந்து வருகின்றது. ஆயினும் அவர்கள் தம்மை ‘முதலியார்’, ‘போயன்’, ‘நாயுடு’ என்றே சொல்லி வருகின்றனர். ‘பிறவிக்குணம்’ இன்னும் மறையவில்லை.

(iii) உண்மையில் சாதியின் பெயரால் இந்தத் தொழிலாளி வர்க்கம் என்பது சிருட்டிக்கப்பெறவில்லை என்று சொல்லப் பெறுவது உண்மையானால் ‘மலம்’ எடுக்கின்ற தொழிலாளி மக்களிலும் நாலு பார்ப்பனர்கள் இருக்க வேண்டுமே. எந்தப் பார்ப்பானாவது மலம் எடுத்ததாக யாராவது கேள்வியுற்றீர்களா? தாழ்த்தப்பெற்ற மக்கள்தாமே அந்தத் தொழிலைச் செய்து வருகின்றனர்?

பெரியாரின் இந்த வினாவைப் பார்ப்பனர் ஒத்துக் கொள்வதில்லை. மலம் எடுக்கும் தொழிலை ஒரு முதலியார், ஒரு நாயுடு, ஒரு பிள்ளை செய்கின்றாரா? என்று எதிர்வினா தொடுத்தால், வாயடைத்துப் போய்விடுகின்றது. பேச்சு எழமுடியவில்லை.

(iv) சாதி இருக்கும் வரையில்தானே சாதித்தொழில்? சாதித்தொழில் இன்று இல்லாவிட்டால் பிழைப்புக்கு வழி இருக்காது. எல்லா மக்களும் படித்துவிட்டால் அவரவர் சாதித் தொழில் செய்ய முற்படுவார்களா? பேனா எடுக்கத்தானே நினைப்பார்கள்? நம் பெண்கள் எல்லாம் பள்ளியிறுதிப் படிப்பு வரை படித்து முடித்துவிடுவார்களேயானால் களை எடுக்கச் செல்வார்களா? படித்துவிட்டால் வயிற்றுக்கொடுமை ஒருபுறம் இருந்தாலும் பட்டினிகிடக்க முற்பட்டாலும் முற்படுவார்களே ஒழிய ஒருபோதும் சாதித்தொழில் செய்ய முன்வரமாட்டான். வெள்ளைச்சட்டை வேலையைத் (White collar job) தான் அனைவரும் நாடுவார்கள்.

(v) நம் நாட்டில் சாதி என்று எடுத்துக் கொண்டால் பார்ப்பான், சூத்திரன் என்கின்ற இரண்டுதான். செட்டி, முதலி, பறையன், நாவிதன், வண்ணான் என்பவன் எல்லாம் அவனவன் செய்கிற தொழிலால் பிரிந்திருந்தவனே தவிர-பிரிக்கப் பெற்றவனே தவிர-மற்றபடி அவர்களுக்குள் எந்தப் பேதமும் இல்லை.

(vi) சாதியின் காரணமாகத் தொழில் என்கின்ற நிலைமை அடியோடு தொலைந்தால்தான் நாட்டில் உயர்வு தாழ்வு மனப்பான்மை ஒழியும். ஆனால் அந்த நிலைமை உருவாகிறவரை அந்தந்த வகுப்பினர்க்குரிய உரிமைகள் காக்கப் பெற்றாக வேண்டும்.

(4) சட்டத்தின் மூலம்: சட்டத்தின் மூலம் சாதியை ஒழிக்க முடியும் என்ற திசையில் கூட பெரியாரின் சிந்தனைகள் செல்லுகின்றன. அவற்றைக் காண்போம்.

(i) சாதிபேதங்கள் ஒழிவது சட்டத்தினால்தான் முடிய வேண்டுமேயொழிய பொதுமக்கள் இசைவில் என்றால் ஒருநாளும் முடியவே முடியாது. (சனநாயக நாட்டில் இது எப்போதும் சாத்தியம் இல்லை).

(ii) சாதி ஒழிப்பது என்பது இன்று சட்டத்தின் மூலம் முடியாது என்று ஆகிவிட்டது. கிளர்ச்சி மூலத்தான் முடியும். வெள்ளைக்காரனிடமிருந்து பார்ப்பான் கைக்கு அதிகாரம் வந்ததும் முதலில் அரசியல் சட்டத்தின் மூலதார உரிமையாக மதத்தையும் சாதியையும் காப்பாற்றுவது என்று போட்டு விட்டான்.

(iii) சாதி ஒழிப்புக்கு இன்றைய அரசியல் சட்டம் இடம் தரவில்லை. அது அடிப்படை உரிமைக்கு விரோதம் என்கிறது. அதேபோல்தான் வகுப்புவாத விகிதம்பேச்சும் பேசாதே. அது வகுப்பு துவேஷம் என்கிறது. சாதி இருப்பது தவறல்லவாம். சாதிப்படி உரிமை கேட்டால் மட்டும் தவறு என்றால் இதைவிடப் பித்தலாட்டம் வேறு இருக்கமுடியுமா?

(iv) சாதி உள்ளவரையிலும் எதையும் சாதிவெறி என்று சொல்ல முடியாது. சாதிவெறி ஒழிப்பதற்குச் சட்டம் வருமானால் வெறியை உண்டாக்க வேறு சாதனம் தேவையே இல்லை. அது சாதிப்புரட்சியை உண்டாக்கியே தீரும். இஃது என்தீர்க்கதரிசனம்.

(v) உத்தியோகத்தினால் ஒருவன் மேல்சாதியானால் கீழ்ச்சாதிக்காரனுக்கும் மேல் சாதியான் பெற்றிருக்கும் அளவுப்படியே உத்தியோகம் கொடுத்துக் கீழ்சாதித் தன்மையை ஒழி என்கிறேன். தகுதியால் ஒருவன் மேல்சாதியானால், மேல்சாதியான் பெற்றிருக்கும் தகுதிமுறையைக் கீழ்ச்சாதியானும் பெறும் அளவுக்குத் தகுதியைக் கொடுத்துக் கீழ் சாதித் தன்மையை ஒழி என்றுதான் நான் கூறுகிறேன் என்கிறார்.

(vi) சாதி ஒழிய வேண்டுமென்றால் அரசாங்கம் என்ன செய்தால் ஒழியுமோ அதைத் துணிச்சலோடு செய்ய வேண்டும். கோயில்-பூசாரி வேலையைக்கூடப் பறையனுக்குக் கொடுக்க வேண்டும்; எவனாவது சாமி கும்பிடமாட்டேன் என்றால் கும்பிடாமல் போகட்டுமே. இன்றைக்குப் பார்ப்பான் எல்லா வேலைக்குப் போயும் மணியடிக்கும் வேலையைக்கூட விடமாட்டேன் என்கிறான். இன்று என்னைக்கேட்டால் புரோகிதர்கள் வேலைக்குக்கூட உரிமம் (License) கொடுக்கச் சொல்லுவேன். அதற்கும் யோக்கியதாம்சம் ஏற்படுத்தவேண்டும்.

(5) பார்ப்பனர்: இவர்களைப் பற்றியும் பெரியார் சிந்தனைகள் உள்ளன. அவற்றையும் காண்போம்:

(i) தெருவில் மலம், மூத்திரம், எச்சில் இவற்றை மிதித்துக் கொண்டு நடந்து நமது வீட்டுக்குப் பிச்சைக்கு வந்த பார்ப்பான் நமது பட்டுப்பாயைக் கண்டால் தாண்டிக் குதிக்கிறான், அதனைத் தொட்டால் தீட்டு என்கின்றான்.

(ii) சாதியை ஒழிக்கிறவருக்குப் (இராசகோபாலாசாரியாருக்குப்) பூணூல் எதற்காக? என்ன அடையாளம் அந்தப் பூணூல் போட்டால்? என்ன அர்த்தம்? சாதிவேறுபாடு காண்பவன் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவன் என்பதைக் காட்டுவதற்குத்தானே தவிர வேறு எதற்காக?

(iii) பார்ப்பானை அழைத்துத் திருமணம் நடத்துகிறவர்கள் அவன் மேல்சாதி, அவன் வந்துதான் நடத்தவேண்டும் என்ற எண்ணத்தில்தானே அவனைக் கூப்பிடுகிறார்கள். இப்படிக் கூப்பிடுவதன் மூலம் பார்ப்பான் மேல்சாதி என்றும் தாங்கள் கீழ்ச்சாதி என்னும் ஒப்புக் கொள்வதாகத்தானே அர்த்தம்? இதை ஒழியவேண்டும் என்று விரும்புகிறவர்கள் இப்படிச் செய்வார்களா?

(iv) இந்த நாட்டில் இருப்பது போல் சாதிக்கொடுமை உலகில் வேறு எங்கும் காணமுடியாது. காரணம், சாதியை அழியவொட்டாமல் பாதுகாக்கும் பார்ப்பான் இந்த நாட்டில் மட்டுமே உள்ளான்.

(v) மலம் எடுப்பவன் இல்லாவிட்டால் ஊர் நாறிவிடும். துணி வெளுப்பவன் இல்லாவிட்டால் சுத்தமான துணிகட்ட முடியாது. சிரைப்பவன் இல்லாவிட்டால் முகம் தெரியாது. வீடு கட்டுபவன் இல்லாவிட்டால் வீடு இருக்காது. நெசவாளிகள் இல்லாவிட்டால் நிர்வாணம்தான். குடியானவன் இல்லா விட்டால் மக்கள் பட்டினி கிடக்கவேண்டும். இந்த இன்றியமையாத தொழிலாளிகள் இழிசாதிகளாம்; நாட்டுக்குப் பயனற்ற பார்ப்பான் மேல் சாதியாம்; இது நியாயம்தானா?

(vi) பார்ப்பான் வந்து நமக்குத் திருமணம் செய்து வைப்பது சாத்திர விரோதமாகுமென்று சாத்திரமே கூறுகின்றது. இப்படித் திருமணம் மட்டுமல்ல; சாவுக்கும் வரக்கூடாது. இன்று நல்லகாரியமானாலும் கெட்ட காரியமானாலும் பார்ப்பான் வந்து சடங்கு நடத்திதான் வைக்கிறான். சாத்திரவிரோதத்தை நிவர்த்திக்கச் சிறிது நேரம் பூணுரல் போட்டு மேல் சாதியாக்கிச் சில மந்திரத்தையும் சொல்லி நடத்தி வைத்து ஏமாற்றுகின்றனர்.

இன்று நடைபெற்றுவரும் செயல்கள் அனைத்திற்கும் பார்ப்பனர்கள் மட்டுமே காரணம் அன்று. அவர்கள் சூழ்ச்சியால் அனைத்தும் நடைபெறுகின்றன என்று கருதுவதும் நியாயம் அன்று. காலவெள்ளத்தில் எத்தனையோ செயல்கள் நடைபெற்று வழக்கங்களாகிவிட்டன. பார்ப்பனர் சாதிமீது அனைத்தையும் பழி சுமத்துவது நியாயம் அன்று என்று எனக்குத் தோன்றுகின்றது. தம் மனத்தில் பட்டவற்றை எல்லாம் மனத்தில் சிறிதும் களங்கமற்று எடுத்துரைக்கின்றார் பெரியார் இதனால் பெரியார் அவர்களை நாம் வெறுப்பதற்கு நியாயமில்லை. அவர் எடுத்துக்காட்டுபவை அனைத்திலும் உண்மை இல்லாமல் இல்லை. அந்த உண்மையை உணரவேண்டும், சிந்திக்க வேண்டும்.

இங்ஙனமே ஒரு குறிப்பிட்ட சாதியாரைக் கடுமையாகக் கடிவதற்கு உளவியல் கோட்பாட்டின்படி இரண்டு காரணங்கள் எனக்குப் புலப்படுகின்றன. அவற்றை ஈண்டு உங்கள்முன் வைக்கின்றேன்.

(i) தந்தை பெரியார் எழுதிய ஒரு சிறுகட்டுரையில்- சுயசரிதை யில்- குறிப்பிட்ட ஒரு சம்பவப் பொறி பெருந்தீயாக கிளம்புவதற்கு வித்திட்ட வரலாறு அவர் வாக்கிலேயே தருவது.

“எங்கள் வீடு அந்தக்காலத்தில் அதாவது 1890-இல் சிறிய பணக்கார வீடு ... வைணவமத விசுவாசமுள்ள பாகவதர் வீடு ... சதா சந்நியாசிகள், பக்தர்கள், பாகவதர்கள், புராணீகர்கள், வித்துவான்கள் ஆகியோர் தங்கிப்போகவுமான வீடாகி விட்டதால் இவர்களிடம் வம்பளத்தல், தர்க்கம் பேசுதல் ஆகிய வசதி அதிகமாகிவிட்டது. இவர்களிடம் பேசுவது மத எதிர்ப்பு, சாத்திர எதிர்ப்பு, புராணஎதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு என்கிற அளவுக்குப் போய்விட்டது. இதுவே எனக்குச் சாதி, மதம், கடவுள் என்கிற விஷயங்களில் நல்ல முடிவு ஏற்படும்படிச் செய்துவிட்டது. இதன்காரணமாக எனக்குப் பார்ப்பனீயத்தில் ஒரு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது.

ஒரு தடவை எங்கள் ஊருக்கு நெருஞ்சிப்பேட்டை சாமியார் (சங்கராச்சாரி போன்றவர்) அவர்களுக்கு எங்கள் ஊர் நகரத்து செட்டியார் வகுப்பு வியாபாரிகள் தடபுடலாய்ப் பிச்சை நடத்துவார்கள். எங்கள் தகப்பனாரும் 50 ரூபாய் கொடுத்தார். அந்தச் சாமியார் தம்பி ஒரு மைனர்; கடன்காரன். அவனும்கூட வந்திருந்தான். ஈரோட்டில் ஒரு வியாபாரிக்கு அவன் வாங்கிய கடன் திருப்பித்தரவேண்டும். அது கோர்ட்டில் டிக்ரி ஆகியிருந்தது. அந்தச் சமயம் வியாபாரி அக்கடனை வசூல் செய்ய என்னிடம் யோசனை கேட்டார். நான் ‘வாரண்டு கொண்டுவா’ என்றேன். மறுநாள் பகல் 12 மணிக்கு வாரண்டு எடுத்துக் கொண்டு சேவகனுடன் அந்த வியாபாரி என்னிடம் வந்தார். நான் அவர்களைக் கூட்டிக்கொண்டு ஈரோட்டில் சாமியார் இறங்கியிருந்த ‘எல்லயர் சத்திரம்’ சென்றேன். உள்ளே சுமார் 200 பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாமியார் தம்பியை வரவழைத்தோம். வாரண்டு என்று தெரிந்ததும் ஓடினான். சட்டென்று பார்ப்பனர்கள் உண்டு கொண்டிருந்த வீட்டில் புகுந்து கதவைத் தாளிட்டுக் கொண்டான். நான் தூணைத் தாவிப்பிடித்து வீட்டின்மீது ஏறி, ஓடுகள் உடையப் புறக்கடைப்பக்கம் வீட்டுக்குள் குதித்து சாப்பாடு இருக்கும் இடத்தையும் பார்ப்பனர்கள் சாப்பிடும் இடத்தையும் தாண்டி வந்து, வீதிக்கதவைத் திறந்து சாயுபு சேவகனைக் கூப்பிட்டு, ஓர் அறைக்குள் ஒளிந்து கொண்ட சாமியாரின் தம்பி கையைப் பிடித்து ஒப்புவித்தேன்.

வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டுக் கடைக்குச் சென்றேன். நகரத்துச் செட்டியார், குமஸ்தாகள், பார்ப்பனப்பிள்ளைகள் எங்கள் கடைக்கு வந்து எனது தந்தையாரிடம் நடந்ததைச் சொன்னார்கள். “சாப்பாட்டுப் பண்டம் தீட்டுப்பட்டுவிட்டது. 200, 300பேர் பட்டினி. எல்லாம் உங்கள் மகன் ராமுவால்” என்று செய்திகளைச் சொன்னார்கள். நான் நடந்ததைச் சொன்னேன். என் தகப்பனாருக்கு ஏற்பட்ட கோபத்துக்கும், ஆத்திரத்துக்கும் அளவே இல்லை. “அடத். . . மகனே உனக்கென்ன அங்கு வேலை?” என்று ஆத்திரத்தோடு கூறினார். வந்தவர்கள் மேலும் மேலும் சொன்னார்கள்.

“என்ன முழுகிப் போய்விட்டது? அந்தத்திருட்டுப் பார்ப்பான் பண்ணினதைப் பத்திச்சிந்திக்க மாட்டேன் என்கிறீர்கள். இவர்கள் கொழுத்துப் போய் சோற்றைக் கொட்டிவிட்டால் அதற்கு யார் என்ன பண்ணுவார்கள்?” என்றேன். என் தகப்பனாருக்கு மேலும் ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டது. “சாமி, நீங்க சும்மா இருங்க” என்று சொல்லிக்கொண்டு அவரது செருப்புகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு என்மீது வெற்றிலைப் பாக்கு எச்சிலைத் துப்பி, முகம், முதுகு என்று பார்க்காமல் 7/8 அடி பலமாக அடித்தார்.

“இந்தச் செய்கையால் கடைவீதியில் நான் ஒரு வீரனாகி விட்டேன். பார்ப்பான் சாப்பிடுவதை நாம் பார்த்தால் குற்றம், தோஷம் என்று சொல்வது நமக்கு அவமானம் என்றும், கடைவியாபாரிகள், குமஸ்தாக்கள் மனத்தில் படும்படியாக ஏற்பட்டுவிட்டது. இந்தப் பிரஸ்தாபம் ஜாதி பேதத்தைப் பற்றிய பேச்சாகிக் கடைசியில் ‘சாய்பு வீட்டில் சாப்பிட்டால் தான் என்ன கெடுதி?’ என்று ஏற்பட்டு, அப்போது முதலே சமபந்தி வருஷா வருஷம் சித்ராபெளர்ணமியன்று - என் தலைமை ஆதிக்கத்தில் நடப்பதென்றும், எல்லாச்சாதியார், மதத்தார் வந்து சாப்பிடுவது என்றும் வழக்கமாகிவிட்டது. “சாப்பிடுவதைக் கண்களால் பார்த்தால் குற்றம் என்பதில் ஆரம்பித்த விவகாரம் - “சாப்பாட்டில் சாதி பேதம் காட்டுவது அறியாமை” என்கிற முடிவு உண்மையாகவே மக்களுக்கு ஏற்படும்படி அந்தச்சம்பவம் செய்துவிட்டது” என்று தந்தை பெரியார் அவர்கள் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

(ii) பிற்காலத்தில் இவர் காங்கிரசில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலத்தில் நெல்லைப் பகுதியில் ஏதோ ஓர் ஊரில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் வ.வே.சு.அய்யர் தலைமையில் பார்ப்பனர்களுக்குத் தனியாக உணவு படைக்க ஏற்பாடு செய்யப் பட்டது. இதனைப் பொறுக்கமுடியாமல் தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதைக் கட்சியைத் தொடங்கி அதனை நடத்திவரலானார்.

இன்றைய நிலைவேறு. இப்பொழுது பார்ப்பனர்களிடம் எவ்வளவோ மாற்றம் நிகழ்ந்து விட்டது. ஒருசிலரைத் தவிர பெரும்பாலோர் நம்மிடம் கலந்து பழகத்தொடங்கிவிட்டனர். இனியும் அவர்களிடம் வெறுப்புக் காட்டி ஒதுக்குவது- ஒதுங்கிப் போவது- அறிவுடைமையாகாது என்பது அடியேனின் கருத்து. பண்டைய நிகழ்ச்சிகள் இன்று வரலாறு போல் ஆகிவிட்டது. அந்த வரலாற்றைப் படிக்கின்றோம் என்பதாக நினைத்துக் கொள்வோம்.

(6) அரசியல்: அரசியல் மூலம் சாதி ஒழிப்பு செய்யமுடியுமா என்பது பற்றியும் தந்தை பெரியார் சிந்தித்துள்ளார். அந்தச் சிந்தனைகள் சிலவற்றை ஈண்டுக் காண்போம்.

(i) இந்திய ஏழை மக்களுக்கும், பாமரமக்களக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் போதிய உணர்வும் சொரணையும் இல்லாததால் இன்று அரசியல் வேறாகவும் சமூகஇயல் வேறாகவும் இந்நாட்டில் இருந்து வரமுடிகின்றது.

(ii) ஒரு பெருங்கூட்ட மக்கள் இன்று சமூகவாழ்வில் தீண்டப் பெறாதவர்களாகவும், மற்றொரு பெருங்கூட்டமக்கள் சமூகவாழ்வில் சூத்திரர்கள், அடிமைகள், கூலிகள், தாசிமக்கள், இழிமக்கள் என்கின்ற பெயருடனும் இருந்து வருகிறார்கள் என்றால் இது மாறுவதற்கு அருகதை இல்லாத சுயராச்சியம் யாருக்கு வேண்டும்? இது மாறுவதற்கு இல்லாத மதமும் சாத்திரமும் கடவுளும் யாருக்கு வேண்டும்?

(iii) நமக்கு இன்று வேண்டிய சுயஆட்சி என்பதானது- சாதிக் கொடுமைகளையும், சாதிப் பிரிவுகளையும், சாதிச் சலுகைகளையும் அழிக்கும்படியாகவும் ஒழிக்கும்படியாகவும் இருக்கத் தக்கதாயிருந்தால் நமக்கு அதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்பதோடு மனப்பூர்வமாய் வரவேற்கவும் ஆசைப் படுகின்றோம்.

(iv) பாரதமாதாப் புத்திரர்களுக்கு ஏன் நாலு சாதி? ஒரு பாரதமாதாவுக்கு எப்படி நாலு சாதிப்பிள்ளைகள் பிறந்தன? அப்படியானால் பாரதமாதாவுக்கு எத்தனைக் கணவர்கள்? நானும் முதலியார் சாதி, என் மனைவியும் முதலியார் சாதியானால் எங்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளில் எப்படி ஒன்று செட்டியாராக, ஒன்று எப்படி நாயுடுவாக இருக்கமுடியும்? அப்படியிருக்குமானால் எனக்குத்தெரியாமல் என் மனைவிக்கு எத்னைப் புதுப்புருடர்கள் இருந்தார்கள் என்பதுதானே இதன் அர்த்தம்? உடன்பிறந்தாருக்குள் ஏன் இந்தப்பிரிவினை?

உருவகத்தில் ஒருவித மாய தேசபக்தியை உண்டாக்கும் அரசின் செயலுக்கு அதே உருவகத்தையே ஆயுதமாகக் கொண்டு அந்த அமைப்பைச் சாடுகிறார்கள் அய்யா அவர்கள். இன்றைய அரசியலில் சாதிகள் குழுக்களாக மாறியுள்ளன. ஒவ்வொரு சாதியாரும் சாதிச்சங்கங்கள் அமைத்துக்கொண்டு ஒரு குழுவிலிருந்து மிகவும் தாழ்ந்த குழுவுக்கு மாற்றுமாறு தீர்மானங்கள் நிறைவேற்றி அரசை மிரட்டித் தங்கள் கோரிக்கையை முற்றுவித்துக் கொள்ளுகிறார்கள். இன்னும் ஒரு விநோதனமான முயற்சி ஒரு குறிப்பிட்ட சாதியாருள் பல கிளைகள் இருக்குமானால் அவர்கள் மாநாடு போட்டு “நாங்கள் எல்லாம் ஒரு குடைக்கீழ் வரவேண்டும்” என்று தீர்மானம் போடுகிறார்கள். கட்சி அரசியலாதலால் அரசும் பணிந்து அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுகின்றது. வாக்கு வங்கியை நினைத்துக் கொள்கின்றது அரசு. இது ‘ஜனநாயகம்’ என்று நாம் நினைத்துக் கொள்ளுகின்றோம். இஃது ஒருவித உரிமம்போல் (License) செயற்படுகின்றது. அறிவியல் நோக்கு மனப்பான்மையுள்ளவர்கள் தமக்குள் நகைத்துக் கொள்ளுகின்றார்கள். புராண நம்பிக்கை புள்ளவர்கள் “யுகதர்மம்” என்று நினைந்து மனத்தைத் தேற்றிக் கொள்ளுகின்றார்கள்.

(v) சாதிவேற்றுமையை ஒழிக்கும் அரசாயின் காவல்துறையினரிடம் கத்திரிக்கோலைக் கொடுத்துப் பூணூலையும் உச்சிக்குடுமியையும் நறுக்கச் சொல்லியிருக்க வேண்டாமா? மதவகுப்பு சார்பற்ற அரசு என்று சொல்லிக்கொண்டு மந்திரம் ஓத, பூணூல் போட, விரதம் இருக்க, கிருட்டிணன் பிறந்த ஒவ்வொருநாள் விடுமுறை என்றால் இதனை ஆரிய வகுப்பு வாதப் பிரச்சார ஆட்சி என்றுதானே கூற வேண்டும்?

இது பெரியாரின் கடுமையான சிந்தனை. மடங்களும் சங்கராச்சாரியார்கள் போன்றவர்களின் யோசனைகளை வைதிகர்கள் நிறைவேற்றிக் கொள்வது போலவே, பெரியார் சார்புள்ளவர்கள் அதனை நிறைவேற்றத் தொடங்குகின்றனர். முன்னவர் செயல் திட்டம் நிறைவேற்றப்பெறும்போது அமைதியாக நடைபெறுகின்றது. பின்னவர் செயல்திட்டம் நிறைவேற்றப்பெறும் போது கலகமாகிறது; சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாக வடிவங் கொள்ளுகின்றது.

பல்லாண்டுகட்கு முன் (1950-60களில்) என்பதாக நினைவு. திருச்சியில் பெரியாரின் “அருள்வாக்கை” கேட்ட ஒரு சுயமரியாதைக் கட்சியைச் சார்ந்த ஒருசிறு கும்பல் ஓர் அமாவாசையன்று திருச்சி காவிரிக்கரையில் தர்ப்பணம் செய்து வைக்கும் சாத்திரிகளின் உச்சிக்குடுமியையும் பூணுலையும் கத்திரித்த செய்தி நாளிதழ்களில் வெளியானதைப் படித்தேன்; வருந்தினேன். இது நாகரிகமற்ற செயல் என்று நினைத்துக்கொண்டேன். நான் துறையூரில் பணியாற்றிய போது (1941-50), ஏதோ ஓர் ஆண்டு (1948 என்பதாக நினைவு) பாரதிதாசன் ஒருவார காலம் என் இல்லத்தில் தங்கியிருந்தபொழுது “பூணுால் உச்சிக் குடுமியை வெட்டும் திட்டத்தை” கடுமையாக ஆதரித்துப் பேசியதும் நினைவிற்கு வருகின்றது. பாவேந்தர் பெரியார் கொள்கையினர் என்பதை நாம் அறிவோம்.

(vi) சமுதாயத்தில் நலம் ஏற்படவேண்டுமானால் சாதி ஒழிக்கப் பெறவேண்டும். சாதியை ஒழிக்கக்கூடிய ஆட்சி வரவேண்டும். இன்றைய ஆட்சி சாதிகள் ஒழிக்கப்பெற வேண்டும் என்று சொல்லத் துணிவுள்ள ஆட்சியே தவிர, சாதிகளை ஒழிக்கத் துணிவுள்ள ஆட்சி அல்ல.

தேர்ந்தெடுக்கபெற்ற எந்த அரசும் தன்னிச்சையாகவோ, சட்டம் நிறைவேற்றவோ ஒன்றும் செய்யமுடியாது. மனிதச் சமுதாயத்தில் ஆத்திகர்கள் அதிகம். ஏதாவது துணிவாகச் செய்யத் தொடங்கினால் ஆட்சி கவிழும். எந்தவித சீர்த்திருத்தங்களையும் சங்கங்கள் போன்ற அமைப்புகள் மூலம் பிரச்சாரத்தால்தான் செய்யவேண்டும். ஆத்திகர்கள், நாத்திகர்களின் சங்கங்கள் இவற்றைச் செய்து வருகின்றன. அனைத்தையும், மக்கள் கேட்டுக் கொண்டுதான் உள்ளார்கள். காலந்தோறும் இது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும்.

(7) சாதிவேற்றுமையை வளர்ப்பவை: இவைபற்றியும் தந்தை பெரியார் அவர்கள் சிந்தித்துள்ளார்கள். சில சிந்தனைகளை உங்கள் முன்வைக்கிறேன்:

(i) வருணாசிரமதர்மத்தின் மூலமாக நமது நாட்டில் தீண்டாமைக் கொள்கை அமுலில் இருந்து வருகின்றதேயொழிய, வருணாசிரமம் இல்லாவிட்டால் தீண்டாமைக்கொள்கை பரவ மார்க்கமே இல்லை. வருணாசிரமதர்மம் என்கிற உடல் இல்லாவிட்டால் தீண்டாமை என்கிற உயிருக்கு ஆட்டம் இல்லை.

(ii) இன்றைய சாதி வேற்றுமைக்கு ஆதாரமாயுள்ள சாலை, கிணறு, சாவடி, பள்ளிக்கூடம் முதலியவைகள் எல்லாம் ஒருவிதமாக மாற்றப்பட்டு வந்துகொண்டிருந்தாலும், இந்தக் கோயில்கள் தாம் சிறிதும் மாற்றுவதற்கு இடம்தராமல் சாதிவேற்றுமையை நிலைநிறுத்தப் பயன்படுத்தப்பெற்று வருகின்றன. ஆதலால்தான் நான் தீண்டத்தகாத மக்கள் என்போர் கண்டிப்பாய்க் கோயிலுக்குள் போய்த்தீர வேண்டும் என்கின்றேனே ஒழிய, பக்திக்காகவோ, மோட்சத்திற்காகவோ, பாவமன்னிப்புக்காவோ, அல்லவே அல்ல. கோயில் சமத்துவம் அடைந்துவிட்டால் மற்ற காரியங்களில் வேற்றுமை இருக்க முடியவே முடியாது. கோயிலில் பிரவேசித்து நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் சாதி வேற்றுமையை ஒழிக்கச் செய்யும் முயற்சியே ஒழிய வேறில்லை. இன்றைய தினம் எல்லோரும் கோயிலுக்குள் சாதி வேற்றுமையின்றி விடப்பட்டார்கள் என்று ஏற்பட்டுவிட்டால் நாளைய தினமே நான் அங்கு எதற்காகப் போகிறீர்கள்? என்று சொல்லித் தடுக்கவே முயற்சி செய்வேன்.

(iii) எந்த மதமும், கடவுளும், அரசாங்கமும் ஏழைகள் முதுகின்மீது சவாரி செய்கின்றனவேயொழிய முதலாளிமார்களை ஏன் என்றே கேட்பதில்லை. அவர்களுடைய முன்னேற்றத்திற்கு உதவிசெய்தே வருகின்றன. கேவலம் தீண்டாமை என்கின்ற ஒருகாரியம் எவ்வளவு அக்கிரமம் என்றும், அயோக்கியத்தனமானதென்றும் ஆதாரமற்றதென்றும் எல்லா மனிதனுடைய அறிவுக்குட்பட்டிருந்தும் இன்று அதை அழிப்பது என்றால் எவ்வ்ளவு கஷ்டமாய் இருக்கிறதென்று யோசித்துப் பாருங்கள்.

(iv) இன்று தீண்டாமை விலக்கு வேலையிலும் சாதி வேற்றுமை ஒழிப்பு வேலையிலும் ஈடுபட்டிருப்பவர்களில் 100க்கு 100பேரும் கீதை மநுதர்மம், சாத்திரம் ஆகியவற்றை நம்பும், ஆதரிக்கும் சோணகிரிகளேயாவார்கள். இவர்கள் எவ்வளவு நாளைக்குப் பாடுபட்டாலும் அடியற்ற ஓட்டைக்குடத்தில் தண்ணீர் இறைக்கும் மூடர்களுக்கு ஒப்பானவர்களேயாவார்கள். ஆகவே தீண்டாமை ஒழிப்புக்கோ, சாதி ஒழிப்புக்கோ நீங்கள் முதலில் உங்கள் மதத்தை ஒழித்தாக வேண்டும். மதத்தை ஒழிக்க உங்களால் முடியவில்லையானால் மதத்தை விட்டு நீங்களாவது விலகியாக வேண்டும். உங்கள் மதம் போகாமல் ஒருநாளும் உங்களது தீண்டாமைத் தன்மையோ பறைத்தன்மையோ ஒழியவே ஒழியாது என்பது உறுதி. ஆகவே மதத்தைக் காப்பாற்றிக்கொண்டு தீண்டாமையை விலக்கிவிடலாம் என்று நினைத்து ஏமாற்றமடையாதீர்கள்.

கிறித்துவ மதத்திற்குப் போனால் கழுவாய் ஏற்படலாம் என்று நினைப்பது தவறு. 1970-75களில் பெருந்தலைவர் காமராஜர் இறந்த ஆண்டு புரசவாக்க கிறித்துவ சங்கத்தில் மூன்றுநாள் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. கருத்தரங்கப் பொருள் “தந்தை பெரியார் கொள்கை” (Periyarism) என்பது. ‘தாய்’ ஆசிரியர், வார்த்தை சித்தர் வலம்புரிஜான் என்பவர் கூட அதில் கலந்து கொண்டார். திருப்பதியிலிருந்து அடியேனும் என் மேற்பார்வையில் பிஎச்.டி. பட்டத்திற்கு ஆய்வு செய்து கொண்டிருந்த என். கடிகாசலம் என்ற மாணவரும் கலந்து கொள்ள வந்திருந்தோம். பெங்களூரிலிருந்து வந்திருந்த சமயத்தலைவர் (Bishop) ஒருவர் கிறித்துவமதம் மாறினும் சாதிவேறுபாடு ஒழியவில்லையே என்று மிக்க ஆத்திரத்துடன் பேசினார். நாடார் கிறித்தவர், அய்யர்கிறித்தவர், அரிசனக் கிறித்தவர் என்றெல்லாம் வேறுபாடுகள் இருப்பதாகவும், இதனால் இந்துமதத்தில் திருமால் பத்து அவதாரங்கள் எடுத்து வந்து திருத்தியது போல் தந்தை பெரியார் பத்து முறை கிறித்துவ அவதாரம் எடுத்துவந்து கிறித்தவ சமூகத்தைத் திருத்தவேண்டும் என்று ஆவேசமாகப் பேசினார்.

(v) மனிதனுக்கு இழிவு சாதியால் தானே வருகிறது? சாதியோ மதத்தினால் உண்டாகிவருகின்றது. மதமோ கடவுளால்தானே உண்டாகி வருகின்றது. இவற்றுள் ஒன்றைவைத்துக் கொண்டு ஒன்றை அழிக்கமுடியுமா? ஒன்றுக்கொன்று எவ்வளவு கட்டுப்பாடும் பந்தமும் உடையதாக உள்ளன என்று யோசித்துப் பாருங்கள்- என்கின்றார் தந்தை.

(vi) நம்நாட்டில் எம்.ஏ. படிக்கிறான்; பி.ஏ. படிக்கிறான்; டாக்டராக இருக்கிறான்; வக்கீலாக இருக்கிறான்; சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்றான்; முதல் அமைச்சராக இருக்கிறான்; இன்னும் வெங்காயமாக இருக்கின்றானேயொழிய இதில் எவனும் தான் ஏன் இழிமகனாக இருக்கவேண்டுமென்று கருதுவதில்லை என்பதோடு மண்ணையும் (திருமண்) சாம்பலையும் (திருநீறு) நெற்றியில் பூசிக்கொண்டும் கோயிலுக்குப் போய்க் கொண்டும் மேலும் மேலும் தன்னை இழிமகனாக்கிக் கொண்டிருக்கின்றானேயொழிய ஒருவன்கூட தான் ஏன் தாழ்ந்த சாதிக்காரன்? பார்ப்பான் மட்டும் ஏன் உயர்ந்த சாதிக்காரன்? என்று கேட்பதில்லையே!

(vii) மனிதன் மேலும் தெளிவுபெறவேண்டும். ஒருவன் உயர்வு, ஒருவன் தாழ்வு; ஒருவன் காலை ஒருவன் கழுவிக் குடிப்பது என்பது முட்டாள்தனம், அறியாமை. அவனுக்கும் இவனுக்கும் எவனுக்கும் பிறவித் தத்துவத்தில் எவ்விதபேதமும் இல்லை. இருவருக்கும் நெருப்பு சுடத்தான் செய்யும். இருவருக்கும் உப்புகரிக்கத்தான் செய்யும். இருவருக்கும் வேம்பு கசக்கத்ததான் செய்யும். இப்படியிருந்தும், பிறவியின் பெயரால் சாதி வேற்றுமை இருந்துவரக்காரணம் என்ன என்பதை உங்கள் சொந்த புத்தியைக்கொண்டு சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

(viii) இந்தச் சாதி இழிவிற்குக் காரணம் கடவுள்தான் என்று உங்களுக்குத் தோன்றினால் அந்தக் கடவுளுக்கு முன்னறிவிப்பு (Notice) தாருங்கள். “நாங்கள் தாம் உனக்கும் உன்னைக் குளிப்பாட்டி வரும் உன் அர்ச்சகனுக்கும் அன்றாடம் படி அளந்து வருகிறோம். பாடுபடாத உன்னையும், பாடுபடுகிற எங்களையும் ஏமாற்றுகிற அவனை உயர்சாதியாக்கிவிட்டாய். ஆகவே, ஒன்று இனி மக்களில் உயர்வு தாழ்வு இல்லை என்றாவது கூறு; அல்லது நீயல்ல அதற்குக் காரணம் என்றாவது ஒப்புக் கொண்டு விடு. இந்த அறிவிப்பு விண்ணப்பத்தை அறிந்து இரண்டு வாரத்திற்குள் நீ ஏதாவது ஒரு முடிவான பதில் தெரிவிக்கா விட்டால் உன் கோயிலை இடித்துவிடுவோம்” என்று எச்சரிக்கை செய்யுங்கள். கடவுள் என்று ஒன்று அந்தக் குழவிக் கல்லில் அடைந்திருக்குமானால் அது வாய்திறந்து பேசட்டும். இன்றேல் அதனை உதறித்தள்ளுங்கள்.

இங்ஙனம் தந்தை பெரியாரவர்கள் தம் கருத்தைக் கேட்டோர் மனத்தில் ஆணித்தரமாகப் பதியும்படிப்பேசுவார்கள். அவரிடம் அலங்காரப்பேச்சு இராது. தெளிவான நடையில் தம் சிந்தனைகளை மக்கள் மனத்தில் கொட்டுவார்கள்.

(8) சாதிஒழிப்பு: இது பற்றித் தந்தை பெரியாரவர்கள் ஆழ்ந்து சிந்தித்துள்ளார்கள். அவர்களின் சிந்தனைகள் சிலவற்றை உங்கள் முன் வைக்கின்றேன்.

(i) ஒவ்வொரு சமூகத்தாரும் தங்களுக்கு மேலானவர்கள் இல்லை என்று சொல்லி வருவதுபோல் தங்களுக்குக் கீழானவர்களும் இல்லை என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும்; அப்பொழுதுதான் ஒற்றுமையை நிலைநிறுத்தமுடியும்.

(ii) மனிதனை மனிதன் தொடக்கூடாது; பார்க்கக்கூடாது; தெருவில் நடக்கக்கூடாது என்கின்ற கொள்கையோடு ஒரு மதத்தை இன்னமும் உலகத்தில் வைத்துக் கொண்டிருப்பது அந்த மதமக்களுக்கு மாத்திரமேயல்லாமல் உலகமக்களுக்கே அவமானமாக காரியமாகும்.

(iii) சாதியை ஒழிப்பதற்குப் பல அடிப்படையான முறைகள் உள்ளன. சாதிப்பட்டங்கள் (அய்யர், முதலியார், பிள்ளை, அய்யங்கார், செட்டியார், நாயுடு, நாயக்கர், ரெட்டியார், நாடார் முதலியன) சட்டப்பூர்வமாகத் தடுக்கப்பெற வேண்டும். புதிதாக மணம்புரிவோர் அத்தனைபேரும் கலப்புமணம் செய்யுமாறு தூண்டக்கூடிய சட்டங்கள் இயற்றப்பெறல் வேண்டும். ஒரே வகுப்பில் ஒரே சாதிப்பிரிவில் திருமணம் செய்பவர்களுக்குப் பல கஷ்டமான நிபந்தனைகளையும் சட்டத்திட்டங்களையும் விதித்து அத்தகைய திருமணம் புரிபவர்களுக்குச் சமுதாயத்தில் செல்வாக்கு இல்லாமல் செய்யவேண்டும். சமயங்களைக் குறிக்கும் நெற்றிக்குறி, உடை, சாதியைக் குறிக்கும் பூணூல் சின்னங்களையும் சட்டபூர்வமாகத் தடுக்கவேண்டும். இவ்வாறு செய்தால்தான் சாதிகள் அடியோடு ஒழியும்.

சட்டங்களை இயற்றுவது நடைமுறைக்கு ஒவ்வாது. இன்று கலப்புத்திருமணங்கள் பரவலாக நடைபெறுகின்றன. இது மக்களின் மனமாற்றத்தை ஒருவாறு காட்டி நிற்கின்றது. நெற்றிக்குறி, பூணூல் முதலிய சின்னங்களை அணிதல் கூடாது என்று கூறுவது சரியல்ல. இதனால் யாருக்கும் தீங்கில்லை. இவற்றை எவரும் பொருட்படுத்துவதில்லை.

(iv) தங்களுக்குள் சாதிபேதம் இல்லை என்று வாயில் சொல்லுவார்கள். கபிலர் சொன்னவாக்கும் சித்தர்கள்-ஞானிகள் சொன்ன வாக்குகளும் பேச்சளவில் மாத்திரம் போற்றப் பெறுகின்றன. ஆனால் காரியத்தில் சிறிது கூட பொருட்படுத்துவதில்லை. இந்நிலையில் எப்படிச் சாதி ஒழியும்? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

எல்லாம் மெதுவாக மனமாற்றத்தால்தான் முடியும். பிரச்சாரத்தாலும் நூல்களைப் படிப்பதாலும் நடைபெறும்.

(v) தான் உயர்ந்தசாதி, மற்றவன் தாழ்ந்தசாதி என்று பார்ப்பான் மட்டுமல்ல; வேறு எவர் நினைத்தாலும் அவர்கள் பார்ப்பபனீய வெறிபிடித்த நாசக்காரர்கள்; கொடுமைக்காரர்கள் என்றே மதித்தல் வேண்டும். அப்பேர்ப்பட்டவர்கள் யாராயிருப்பினும் அவர்களைச் சமுதாய துரோகிகளாகப் பாவித்தல் வேண்டும்.

(vi) உயர்சாதி ஆணவமும் அதைத்தாங்கி நிற்கும் பழக்க வழக்கமென்னும் தூண்களும் என்று சரிந்து விழுந்து தரை மட்டமாகின்றதோ அன்றுதான் நம் நாடும் மக்களும், நம் நாட்டு நாகரிகமும் தழைத்தோங்கமுடியும்.

(vii) சாதிகள் கடவுளால் உண்டாக்கப்பெறாமல் எப்படி உண்டாயிற்று என்று எந்த ஆத்திகர்களாவது ஆதாரத்துடன் பதில் சொல்லட்டும். கீதை, இராமாயணம், மநுதர்மசாத்திரம், பராசர சுமிருதி வேதம் ஆகியவைகளை நெருப்பில் பொசுக்கத் துணிவதுதான் சாதி ஒழிப்பு.

(viii) ‘சாதி’என்னும் சொல்லே வடமொழி. தமிழில் ‘சாதி’ என்ற சொல் நீர்வாழ் பிராணிகளையே குறிக்கும் (தொல்காப்பியம்). தமிழில் என்ன இனம்? என்ன வகுப்பு? என்று மட்டிலும் சொல்லுவார்கள். பிறக்கும்போது சாதிவேற்றுமையை, அடையாளத்தைக் கொண்டு பிறப்பதில்லை. மனிதரில் சாதி இல்லை. ஒரு நாட்டில் பிறந்த நமக்குள் சாதி சொல்லுதல் குறுப்புத்தனம்; அயோக்கியத்தனம்.

(ix) மனிதனக்குள்ள இழிவு சமுதாயத்துக்குள்ள இழிவாகும். சமுதாயத்துக்குள்ள இழிவு நாட்டுக்கே இழிவாகும். இந்த இழிவு சாதி முறையினால் ஏற்படுவதேயாகும். இந்தச் சாதி இழிவு நீங்கவில்லையானால் நமக்கு எந்த முன்னேற்றமும் இல்லை; சுதந்திரமும் இல்லை. திராவிடர்கழகம் இதை நீக்கவே பாடுபடுகின்றது.

(x) உண்மையான எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்த வரையில் கடவுள், மதம், சாத்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரசாரமாகத்தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடந்தான் சாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீதி இருந்தாலும் சாதி உண்மையிலேயே ஒழித்ததாக ஆகாது.


4. பொதுவானவை


சமூகம் பற்றிய சிந்தனைகளில் பொதுவான சிலவற்றை உங்கள் முன் வைக்கின்றேன்.

(1) மதுவிலக்கு:

(i) மதுபானத்தால் பொருளாதாரக் கேடு ஏற்படுவதும், அறிவுக்கேடு ஏற்படுவதும் செயற்கையேயொழிய இயற்கையால் அல்ல.

(ii) பொதுவாக மதுஅருந்துவதையே குற்றம் என்று சொல்லிவிடமுடியாது. கெடுதி உண்டாகும்படியானதும் பொருளாதாரத்திலும் அரசியலிலும் கேடுவிளைவிக்கும் படியானதுமான மதுபானமே இன்று விலக்கப்பட வேண்டியதாகும். அதைத்தான் நாம் ‘மதுவிலக்கு’ என்பதேயொழிய மதுவையே அடியோடு எப்போதும் யாரும் வெறுக்கவில்லை.

(iii) ஓர் இடத்தில் கடைகளை மூடிவிட்டு மற்ற இடத்திற்கு ஓடவிட்டு அவர்களை நாசமாக்குவதும், அத்தொழிலில் இருந்த இலட்சக்கணக்கான மக்களுக்கு வேறு தொழில் இல்லாமல் செய்வதும் ஒரு நாளும் கள்ளை நிறுத்திவிடாது. வெளிப்படையாய்ப் பிழைக்க வழி இல்லாதவர்கள் திருட்டுத்தனமாய்ப் பிழைத்துத் தீரவேண்டியது இயற்கை விதி.

(iv) மதுவிலக்குத் திட்டம் என்பது மக்களை மயக்கும் அரசியல் பித்தலாட்டமேயாகும். மது விஷயத்தில் மக்கள் நலம் கருதினால் அதற்கு மதுவிலக்கு என்ற பேரே இருத்தல் கூடாது. ‘மதுக்கெடுதி ஒழிதல்’ என்ற பேர் இருத்தல் வேண்டும். அதற்குச் செயற்கையாக அரசு மது வியாபாரம் செய்யக்கூடாது என்பதுதான் இருக்க வேண்டும்.

(v) மதுவிலக்கு என்பதே சக்கரவர்த்தி இராசகோபாலாசாரியர் மூளையின் அதிசயக் கண்டுபிடிப்பு. வெள்ளையர் ஆட்சியில் கல்விக்கு ஆகும் செலவுக்கு மதுத்துறை வரும்படியை ஒதுக்கிவைத்தனர். மதுத்துறை வரும்படி குறைந்தால் கல்விக்குச் செலவிடப் பணம் குறைந்துவிடும். ஆதலால் மக்களுக்குக் கல்வி அளிப்பதைக் குறைத்து விடலாம் என்று கருதியே இந்த மதுவிலக்குத்திட்டம் சூழ்ச்சிகரமாக நிர்மாணத்திட்டத்தில் சேர்க்கப்பெற்றது.

(vi) இந்த முட்டாள்தனமாக கொள்கையால் (மதுவிலக்குக் கொள்கையால்) அரசாங்கத்துக்குக் கிடைக்கும் சுமார் இருபது கோடி ரூபாய் இழப்பாகிறது. இந்தப் பணத்தை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தலாம்.

இவை பெரியார் காலத்து அரசியல்நிலையை அனுசரித்துச் சிந்திக்கப் பெற்றவை. இன்றைய நிலையில் இவை ஏட்டுச்சுரைக்காயாகிவிட்டது.

(2) புதுமை வேட்கை: இதுபற்றியும் பெரியாரின் சிந்தனைகள்:

(i) முன்னோர்கள் செய்து வைத்தவற்றை மாற்றக்கூடாது என்று கவலைப்படுகிறவர்கள் கோழைகளேயாவார்கள். முன்னோர்களைவிடக் கண்டிப்பாக நாம் அதிக அநுபவசாலிகள் ஆவோம். நம்மைவிட நமக்குப் பின்னால் வருகிறவர்கள் இன்னும் மிக்க அநுபவசாலிகளேயாவார்கள்.

(ii) முன்னோர்கள் கூறியது என்றோ, முன்னோர் செய்தது என்றோ எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள்! நெருப்பென்பதே என்னவென்று தெரியாதகாலத்தில் சிக்கிமுக்கிக் கற்களால் நெருப்பை உண்டாக்கியவன்-அந்தக்காலத்துக் கடவுள்தான், அந்தக் காலத்து எடிசன் தான்; அதைவிட மேலான வத்திப்பெட்டி வந்தபிறகு எவனாவது சிக்கிமுக்கிக் கல்லைத் தேடிக்கொண்டு திரிவானா நெருப்பு உண்டாக்க? அப்படித் திரிந்தால் அவனைப் பைத்தியக்காரன் என்றல்லவா உலகம் மதிக்கும்?

(iii) பழமையை யார் அலட்சியம் செய்யாமல் இருக்கிறார்கள்? பழமை என்பதற்காக எதைவிடாமல் அப்படியே கையாண்டு வருகிறார்கள்? பழமை என்பதால் இன்னும் கட்டைவண்டியில் பயணம் செய்கிறோமா? இல்லையே?

(iv) நம்மக்கள் வேட்டி, சட்டை முதலியவை கொஞ்சம் பழசானாலும் வேறு புதியவைகளை மாற்றிக்கொள்ளுகிறார்கள். உணவு, உடை, வீடு இவற்றையெல்லாம் நமது வசதிக்கேற்ப மாற்றிக்கொள்ளுகிறோம். இப்படி மற்றவைகளின் புதுமையைக் கருதும் நாம் நமது தன்மானத்தில் பழமையை நோக்கியே சென்று கொண்டுள்ளோம்.

(v) மருத்துவச் சிகிச்சையில் நோய்க்குத்தக்க மருந்தை வயிற்றுக்கு அனுப்பி அங்கு அது செரிமானக்கருவி மூலம் செரிக்கச் செய்து சக்கை மலத்தின் மூலம் கழித்துச் சத்தைக் குருதியோடு கலக்கும்படிச் செய்து நோயை குணமாக்க முயற்சி செய்வதைவிட, மருந்தில் உண்மையான சத்தை எடுத்து நேரே குருதியில் சேர்த்து வேலை செய்யும்படி (ஊசிமூலம் செலுத்தி) செய்வதுபோல ஒழுக்கத்தையே நேரடியாகக் கற்பிப்பதால் என்ன இழப்பு?

(3) மூடநம்பிக்கைகள்: இவற்றைப்பற்றி அதிகமாகச் சிந்தித்தவர் நம் அய்யா அவர்களே.

(i) மூடநம்பிக்கை என்பது ஒரு பெருநோயேயாகும். இதனால் சிலருக்கு மேல்சாதித் தன்மையும், வயிற்றுப் பிழைப்புக்கு வழியும் இருந்து வருவதால், இருகூட்டத்தினரும் தங்கள் சுயநலத்திற்காகவே மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்தி நீண்ட நாட்களாகப் பயன்பெற்று வந்திருக்கவேண்டும்.

(ii) தனது புத்திக்கும் பிரதியட்ச அநுபவத்திற்கும் தோன்றுவதை நம்பாமல் எவனோ ஒருவன் எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன் மூடன்.

(iii) புதிய சங்கதி எதுவானாலும் காதை மூடிக்கொள்ளவே நமது மக்கள் கற்பிக்கப்பெற்றுள்ளனர். சிறுகுழந்தைப் பருவத்தில் நமக்குப் புகுத்தப் பெற்றவிஷயங்களையே ஆராய்ச்சியின் மூலம் அறிவின்மூலம் கண்ட முடிவு என்று கருதி அதற்குத் தலை கொடுத்துக் கொண்டுள்ளோம்.

(iv) நம் மக்கள் மாறுதலில் அறிவு செலுத்தமுற்பட்டாலும், சமுதாயப் பழக்கவழக்கங்கள் எனப்படுபவைகளில் முட்டுக் கட்டைபோன்று இடையூறுகள் விளைவிக்கப் பெறுகின்றன. நாம் அறிவை, உணர்ச்சியை, ஊக்கத்தை இழந்து ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஏமாற்றப்பெற்று மிரட்டப்பெற்று, அடக்கப்பெற்று வந்துள்ளோம்.

(v) கடவுள்: மக்களுக்குள் சிலருக்குப் பேராசையும், பொறாமையும், சோம்பேறித்தனமும் வலுக்க வலுக்க அவற்றிலிருந்து செல்வவானும், அரசனுக்குக் குருவும் ஏற்பட்ட பிறகு அவற்றை நிலைநிறுத்த ஆத்மா கடவுள்[குறிப்பு 13] வேதம், மதம், முனிவர்கள், மகாத்மாக்கள் ஆகியவைகளைக் கற்பித்தும் பிறகு அவைமூலம் கடவுள் செயல், முற்பிறப்பு, பிற்பிறப்பு, கர்மம் (வினை) பாவம், புண்ணியம், மேல் உலகம், கீழ் உலகம், தீர்ப்புநாள், மோட்சம், நரகம் ஆகியவையும் கற்பிக்க வேண்டியதாய் விட்டன. கடவுள், மதம் இவைபற்றி நேற்றைய பொழிவில் விளக்கப்பெற்றன. விட்டுப்போன சிலவற்றை ஈண்டுக் காட்டுவேன்.

(அ) ஆத்மா: இதுப்பற்றி தந்தை பெரியார் சிந்தனைகளைக் காண்போம்:

(i) ஆத்மா என்பது ஒரு பொருளல்ல; அது சுதந்திரம், அறிவு, உணர்ச்சி முதலியவற்றை உடையதல்ல என்பதோடு அது பெரிதும் பொருள் என்றே நமக்குக் காரணப்பெறுகின்றது.[குறிப்பு 14]

(ii) ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும், உடல், உருவம், குணம் இல்லாதது என்றும் சொல்லப்பெற்றுள்ளதே. உடல் உருவம் இல்லாத ஒன்றுக்கு நாம் பார்ப்பனரிடம் தரும் அரிசி, பருப்பு, செருப்பு, துடப்பம் ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அநுபவிக்க முடியும்.

(iii) இறந்தவர்கட்குத் திதி கொடுக்க வேண்டுமென்றால் இறந்தவர்களின் ஆத்மாவைப்பற்றி மூன்றுவிதமாகச் சொல்லப் பெற்றுள்ளது. (i) இறந்த சீவனின் ஆத்மா மற்றொரு உடலைப் பற்றிக்கொண்டு விடுவதாக, (ii) இறந்த சீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர்லோகத்தை அடைந்து அங்கு இருப்பதாக (பிதிர்லோகத்தில் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ?), (iii) இறந்த சீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத்தக்கபடி மோட்சத்திலோ நரகத்திலோ பலன் அநுபவித்துக் கொண்டிருப்பதாக. ஆகவே இந்த மூன்றில் (மூன்று விஷயத்தில்) எது உண்மை? எதனை உத்தேசித்துத் திதி கொடுப்பது?

(iv) மனிதன் மரித்தபிறகு ஆத்மா என்பது ஒன்று பிரிந்து சென்று தண்டனை பெறுகின்றது என்பது பெரும் பித்தலாட்டம். ஆத்மா என்பது பார்ப்பனார்கள் கட்டிவிட்டது. பொதுவாக இந்தச் சொல்லே தமிழ்ச்சொல் அல்ல. ஆத்மா என்பது வடமொழிச்சொல். இதற்குத் தமிழில் சொல்லே இல்லை. அதுமட்டுமல்ல; வேறு மொழியில்கூட ஆத்மா என்பதற்குச் சொல் இல்லை.[குறிப்பு 15] எனவே பார்ப்பனர்களால் ஏற்பட்டதாதலால் வடமொழியில் மட்டும் இச்சொல் உள்ளது.[குறிப்பு 16]

(v) ஆத்மா என்பது பொய், மதக்கற்பனைக்கு ஒரு பொய் பாதுகாப்பே அல்லாமல் வேறல்ல. ஒரு பொய்யை நிலைநாட்ட பலபொய் பேச வேண்டியிருப்பது போல, மதத் தத்துவம் என்ற பொய்யை நிலைநிறுத்தவோ ஆத்மா, தர்மம் என்பதாக பொய்க்களஞ்சியங்களை உற்பத்தி செய்யவேண்டியதாயிற்று.

(vi) ஆத்மாவைப்பற்றிப் பேசவேண்டுமானால் அறிவையும் அநுபவத்தையும் தூரவைத்துவிட்டு வெறும் நம்பிக்கைமீதே ஒப்புக்கொண்டு பேசவேண்டியதாக உள்ளது.

(ஆ) சோதிடம்: சோதிடம் பற்றியும் தந்தையவர்கள் சிந்தித்துச் சிந்தனைகளை வடித்துள்ளார்கள். அவற்றுள் சிலவற்றை உங்கள் முன் வைப்பேன்:

(i) பொதுவாக ஒரு பகுத்தறிவுவாதி சோதிடத்தின் தன்மையை ஊடுருவிப் பார்த்தால் அதனை ஒரு மதசம்பந்தமான கொள்கை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் மத சம்பந்தமான கொள்கைகள் அநேகமாக மூடநம்பிக்கைகளை அத்திவாரமாகக் கொண்டிருக்கின்றன. அதுபோலவே சோதிடமும் மூடநம்பிக்கையாகவே உள்ளது.

(ii) முட்டாள்தனமும் பித்தலாட்டமும் (அயோக்கியதனமும்) சரிபாதியாகக் கலந்ததே சோதிடம் என்பது.

(iii) மனிதன் செய்யும் காரியங்கள் எல்லாம் சாதகப்படியும், சாதகப்பலன்கள் எல்லாம் விதிப்படியும், விதியெல்லாம் முற்பிறவி பலன்படியும் நடப்பதாயிருந்தால் பாவம், புண்ணியம் என்ற பாகுபாடும் நற்செய்கை, துர்ச்செய்கை என்ற பெயரும் எப்படிப் பொருந்தும்?

(iv) பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் “சாதகம் பார்க்கிறேன்” என்கிறான். அந்தச் சாதகம் பார்ப்பவனிடம் ஒரு குதிரையின் சாதகத்தையும் கழுதையின் சாதகத்தையும் கொடுத்துப் பொருத்தம் பார்க்கச் சொன்னால், ‘இது குதிரைச் சாதகம்’ ‘இது கழுதைச் சாதகம்’ என்று கூறமாட்டானே! உடனே பொருத்தம் பார்த்துச் ‘சரியாக இருக்கிறது’ என்றுதானே கூறுவான்? குதிரை, கழுதைச் சாதகத்திற்கு வேறுபாடு தெரியாத இவன் எப்படி மனிதனுக்குப் பொருத்தம் கூறமுடியும்? என்று நம் மக்கள் கொஞ்சம்கூட சிந்திப்பதில்லையே!

(v) நாள், கிழமை, மாதம், ஆண்டு, நேரம், காலம், சோதிடம், சகுனம் முதலிய மற்றும் எத்தனையோ துர்நாற்றங்கள் மக்களைக் கவ்விக்கொண்டுள்ளன. இவற்றிலிருந்து மக்களை விலகச் சொல்ல வேண்டுமானால் பூகம்பம், வெள்ளம், புயல், விஷநோய் முதலிய சாதனங்களால்தான் முடியுமே அல்லாமல் அறிவைப் புகட்டித் திருத்துவது என்றால் நினைக்கும் போதே பயமாக உள்ளது.

(vi) சோதிடம் என்பது வடமொழிச்சொல். தமிழ்மொழியில் அதற்குப் பழஞ்சொல்லே இல்லை. கிரகங்களின் பெயர்களும் வடமொழிச் சொற்களேயாகும். அவற்றிற்குத் தமிழில் பழஞ்சொற்கள் இல்லை. வருடங்கள்கூட வடமொழிச்சொற்கள் தாம். சாதகம் முதலியசொற்களும் வடசொற்களே. சோதிடக்கலை என்பது தமிழனுக்கு இல்லாத கலையேயாகும். மற்றும், சகுனம், இராகுகாலம், குளிகை, எமகண்டம், முதலிய சொற்களும் பஞ்சபட்சி சாத்திரம் என்ற சொற்களும் வடமொழிச் சொற்கள்தாம். தமிழர்களில் வடவர்கள் கலாச்சாரங்களைப் பின்பற்றித் தங்களைச் சூத்திரர்களிலேயே கொஞ்சம் பெரியசாதி என்று கருதிய, ஆக்கிக்கொண்ட சிலரால் தமிழர்களுக்கு வந்த நோய்கள் தாம் இவை.

(vii) இன்னஇன்ன கிரகம் இன்னஇன்ன வீட்டில் இருப்பதாலும், இன்னஇன்ன காலத்தில் இன்னஇன்ன கிரகங்கள் இன்னஇன்னகிரங்களைப் பார்ப்பதாலும் இந்தச் சாதகன் இன்னஇன்ன காரியம் செய்து இத்தனை தடவை சிறைக்குப் போவான் என்பதாக ஒரு சரியான பிறந்தகாலம் கண்டுபிடிக்கப்பட்ட சாதகன் ஒருவனுக்குச் சரியான கெட்டிக்காரச் சோதிடன் ஒருவன் பலன்சொல்வதாக வைத்துக்கொள்வோம். இவற்றுள் சாதகன் இன்னவேளையில் இன்னாரைக் கொன்று சிறைக்குப் போவான் என்று இருந்தால், அந்தக் கொல்லப்பட்டவன் சாதகத்திலும் இன்ன வேளையில் இன்னாரால் கொல்லப் பெற்றுச் சாவான் என்று இருந்தாலொழிய ஒருகாலமும் பலன் சரியாகவே இருக்கமுடியாது என்பது உறுதியானதாகும்.[குறிப்பு 17]

(vii) சோதிடம் மெய்யென்றோ, அது மனிதச் சமூகத்துக்குப் பயன்படக்கூடியதென்றோ இருக்குமானால் காற்று அலைகளில் இருக்கும் ஒலியையும் அசைவையும் கண்டுபிடித்த அறிவியலறிஞர்களும்; கம்பியில்லாத் தந்தியில் ஒலி, கம்பியில்லாத் தந்தியில் உருவம், கம்பில்லாத்தந்தியில் அசைவு ஆகியவற்றைக் கண்டுபிடித்த வல்லுநர்களும், விண்வெளியில் மேலாகப் பலகோடி மைல்துரமும் கீழாகப் பல இலட்ச மைல்துரமும் கண்டுபிடித்தவர்களான வானநூல் வல்லுநர்களும் பெரும் பெரும் அரசாங்கமும் இப்படிப்பட்ட பெரும் இலாபகரமான விஷயத்துக்குப் பெருத்ததொரு ஆய்வுக்கூடம் வைத்துப் பரிசீலனை செய்து, சோதிடச்சாத்திரத்தில் மக்களுக்குப் பயிற்சி தந்து, மனிதருடைய வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை அடியோடு ஒழித்திருக்கமாட்டார்களா என்பது மிகவும் யோசிக்கத்தக்க விஷயமாகும்.

(ix) சோதிடர்கள் கிரகங்கள் ஒன்பது என்று சொல்லுகிறார்கள். மனிதன் பிறந்தநேரத்தில் வானத்தில் இருக்கும் கிரகங்களின் நிலையை வைத்துச் சோதிடம் கணிக்கின்றனர் என்று கூறப்பெறுகின்றது. இப்பொழுது யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ போன்ற புதிய கிரங்களை அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றிற்குச் சோதிடர்களின் சாதகத்தில் என்ன பலன்?

(இ) விழாக்கள்: விழாக்கள் பற்றியும் அய்யா அவர்களின் சிந்தனைகள் உள்ளன. அவற்றைக் காட்டுவேன்:

(i) இது நாகரிகக் காலம் என்பதைக்கூட உணராது காவடி என்றும், கரகம் என்றும் சிறிதும் கூட வெட்கம் இன்றி நடுத்தெருவில் கூத்தாடுகிறாய் என்றால், உன்னை எவ்வளவு திருத்தமுடியாத நிலையில் உன்னிடம் பார்ப்பனன் கடவுளையும் சாத்திரத்தையும் புகுத்திவிட்டான்? எந்தப்பார்ப்பானாவது காவடி எடுத்தும் கரகம் தூக்கியும் நடுத்தெருவில் ஆடுகிறானா? இல்லையே.[குறிப்பு 18] நீ இன்றைய தினம் திருவிழாவும் அபிஷேகமும் காவடியும் எடுத்தால் அவனுக்கு அதனால் நன்மை உண்டு; வரும்படியும் உண்டு; இதை உணராத நம் மக்கள் இவ்வளவு மோசமான நிலைமையில் நாகரிகத்தையும் கொள்கையும் கொண்டுள்ளவர்களாக இருக்கும் தற்காலத்தில் கூட வசிக்கிறார்கள் என்றால் இதைவிட முட்டாள்தனமும் மூடநம்பிக்கையும் என்ன இருக்கிறது?

(ii) மகாமகக்குளத்தில் யார் வந்து குளித்தாலும் பாவம் எல்லாம் தீர்ந்து போகுமாம். இக்கற்பனைக் கதையை நம்பி இலட்சக்கணக்கில்கூட தம்மடமையைத் தாமே காட்டிக் கொள்கிறார்கள். இது மக்களை ஏய்த்துப் பிழைக்கும் கூட்டாத்தாருக்கே இலாபமாகும்.

(iii) முட்டாள்தனமும் மூடநம்பிக்கையும் உள்ள நிகழ்ச்சிகளில் தலைசிறந்தது மகாமகம் என்னும் மதக்கற்பனை விழாவே. நம்மைப் பச்சைக் காட்டுமிராண்டிகளாக அந்நியர் கருதச் செய்யும் விழா. இதுபற்றி இந்துக்களுக்கு மானமோ வெட்கமோ சிறிதும் ஏற்படவில்லையே.

(iv) கார்த்திகை என்கின்றான்; குடம் குடமாகப் பீப்பாய் பீப்பாயாக நெய், வெண்ணெய், எண்ணெய் பாழாகிறது. இலட்சத்தீபம் என்கிறான்; டின் டின்னாக எண்ணெய் பாழாகிறது. அபிஷேகம் என்கிறான்; நெய், எண்ணெய், பால், தயிர், வெண்ணெய் படிப்படியாகச் சலதாரைக்குப் போகிறது. இப்படிப்பட்ட வழக்கமோ பழக்கமோ வேறு எந்த நாட்டிலாவது உள்ளனவோ? நம்நாட்டில்தான் இவை போன்றவற்றிற்குக் கேள்வி கேட்பாரே இல்லை.

சில விழாாக்களைப்பற்றி அய்யா அவர்களின் சிந்தனைகள்.

(1) பொங்கல்:

(i) பொங்கல் நாள் ஒன்றுதான் தமிழர்நாள்; மற்ற பண்டிகைகளெல்லாம் பெரிதும் தமிழருக்கு அவமானம், கேடு. தமிழர்களைக் கொலைசெய்த, செய்யும்நாள்.

(ii) தமிழர்களைக் கொன்று தமிழர்களின் பண்பு, நாகரிகம், கலாச்சாரம், பழக்கவழக்கம் இவற்றைக் கொண்டதாக ஒரு பண்டிகை இருக்குமானால் அதற்குத் தமிழிலேயே பெயர் இருக்கவேண்டும். ஆனால் வடமொழியில் இருக்குமானால் அது எப்படித் தமிழர்க்குண்டான பண்டிகை என்று கூறமுடியும்? பொங்கல் பண்டிகை என்று கூறும் முறையில் அது தமிழ்ப்பெயராக இருப்பதும் அன்றி நம்மக்களுக்கு ஏற்ற பண்டிகையாகவும் உள்ளது.[குறிப்பு 19]

(iii) தமிழர்கள் கொண்டாடும் மற்ற பண்டிகைகட்கு எல்லாம் தமிழனுடையவை என்று சொல்ல ஆதாரம் இல்லை; பார்ப்பானுடையவை என்று கதைகள் எழுதிவைத்துள்ளனர். ஆனால் பொங்கல் பண்டிகைக்கு இப்படி ஒன்றும் கூறவழி இல்லை; என்றாலும் இதற்கும் மற்ற பண்டிகை போலக் கதை கட்டிவிட முனைந்து விட்டார்கள். (iv) நான் பொங்கல் பண்டிகை ஒன்றுதான் மூடநம்பிக்கையற்ற, முட்டாள்தனமற்ற அறிவிற்குப் பொருத்தமான விழாவாகும் என்று சொல்லி வருகிறேன்.

(v) பொங்கல் பண்டிகை என்பது நாள் நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலியன எதுவுமே இல்லாமல் தைமாதம் முதல் நாள் என்பதாக, தைத்திங்களையும் முதல் நாளையுமே ஆதாரமாகக் கொண்டதாகும்.

(vi) தமிழ் மக்களுக்குப் பாராட்டத் தகுந்த ஓர் உண்மையான திருநாள் உண்டு என்றால் அது தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாள்தான். மற்றத் திருநாள் எல்லாம் வைதிக சம்பந்தமானவை. இந்தத்திருநாள் ஒன்றுதான் பகுத்தறிவை அடிப் படையாகக் கொண்டது; அறிவியலையும் அடிப்படையாகக் கொண்டது.[குறிப்பு 20]

(2) தீபாவளி:

(i) தீபாவளி உலகச் சேமத்திற்கு என்று ஆரியர்களால் உற்பத்தி செய்யப்பெற்ற ஐந்தாம் படைக்கதை. திராவிடர்களை (தமிழர்களை) இழிவுபடுத்தித் திராவிட ஆதிக்கத்தை அழித்த கதை.

(ii) தீபாவளிக் கொண்டாட்டமானது தமிழ்மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்லாமல் தமிழர் (திராவிடர்) இன்னமும் ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது கலைக்கு அடிமை, மீட்சி பெறவிருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப்பிறவி என்பதைக் காட்டிக் கொள்ளப் போட்டிப் போடுகின்றனர் என்பதேயாகின்றது.

(iii) தீபாவளியன்று கறுப்புடைத் தரித்து நரகாசுரனுக்கு (திராவிடத்தலைவனுக்கு) வாழ்த்துக்கூறி வலம் வருவதுடன் ஆங்காங்குக் கூட்டம்கூடி அவனது கொலைக்காகத் துக்கப்பட வேண்டியதை விளக்கி “துக்கநாளாக” கொள்ளவேண்டும்.

(iv) தீபாவளி நாளன்று நாம் (திராவிடர்கள்-தமிழர்கள்) இரணியனையும் இராவணனையும் எப்படிப் புகழ்ந்து மரியாதை செய்கிறோமோ அது போலவே, நரகாசுரனும் நம் மரியாதைக்கு உரியவனாவான். ஆதலால் அப்படிப்பட்ட நம் தலைவனைத் தேவர் கூட்டம் கொன்றதற்காக நாம் துக்கப்படவேண்டுமேயொழிய மகிழ்ச்சியடைவது மடமையும் இழிவுமான ஈனச்செயலாகும்.

(v) தீபாவளி என்கிறார்கள்; கடவுள் பன்றி அவதாரம் எடுத்துப் பூமியை மீட்டது என்கிறார்கள். பூமிக்கும் பன்றிக்கும் பிள்ளை பிறந்தது என்கின்றார்கள். இவற்றை நம்புகிறீர்களா? கடவுள் எஎன்கிறவனுக்கு ஒரு யோக்கியதை வேண்டாமா? போயும் போயும் மலம் தின்கின்ற பன்றியாகவா கடவுள் அவதாரம் எடுக்க வேண்டும்?

(vi) எவனாவது போரில் கொல்லப்படுகிறவன் “நான் அயோக்கியன்; நான் சாகப்போகிறதை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள் என்று கூறுவானா?” நம்மை இழிவுபடுத்த நம்மவனையே கொன்ற எதிரிகளின் செயலை நாம் மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறோம் என்றால் என்னப்பொருள்? இந்த அக்கிரமம் ஒழிய, மனிதர்கள் மான உணர்ச்சி பெறவேண்டும். எனவே, இந்த நாளை நாம் மகிழ்ச்சியாகக் கொண்டாடாமல் இழிவுபடுத்த எதிரிகள் ஏற்படுத்தி துக்க நாளாகக் கொண்டாடவேண்டும்.

(3) சரசுவதிபூசை:

(i) இது ஓர் அர்த்தமற்ற பூசை. கல்வியையும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்குச் ‘சரசுவதி’ என்று பெயர் கொடுத்து அதைப்பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்றும் சொல்லி நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றிக் கல்விகற்கச் சொந்தமுயற்சி இல்லாமல் சாமியையே நம்பிக் கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு நாம் அந்தச் சாமிக்கு பூசை செய்வதன் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே பார்ப்பனர்கள் மட்டும் படித்துப் பெரிய படிப்பாளிகளாக ஆகிகொண்டு[குறிப்பு 21] நம்மைப் படிப்பு வரமுடியாத மக்குகள் என்றும் சொல்லிக்கொண்டும் உள்ளனர்.

(ii) சரசுவதி பூசை என்கிறான்; ‘தசரா’ என்கிறார்கள். தராசை வைத்துக் கும்பிடுகிறார்கள். கணக்குப் புத்தகங்களை வைத்துப் படைக்கிறார்கள். உண்மையிலேயே இப்படிக் கும்பிடுகிறவர்கள் பொய்க் கணக்கு எழுதாமல் இருக்கிறார்களா? தராசை வைத்துக் கும்பிடுகிறவர்கள். ஒழுங்காக வியாபாரத்தில் நிறைவை செய்கிறார்களா? எல்லாப் பித்தலாட்டங்களையும் செய்வதைச் செய்துவிட்டு அதற்குப்பூசை என்றால் என்ன பொருள்?

(iii) சரசுவதியைக் கொலுவிருத்திப் பெரிய உற்சவங்களை செய்யும் நமது நாட்டில் ஆயிரத்துக்கு ஐம்பது பேர்க்குகூட கல்வி இல்லை. சரசுவதியே இல்லாத நாட்டில் ஆயிரத்திற்கு 996 பேர்கள் கல்விகற்றவர்களாக இருக்கிறார்கள்.

(iv) ஆயுதத்தை வைத்துப் பூசை செய்து வந்த நம் நாட்டு அரசர்கள் கதி என்னவாயிற்று? ஆயுதத்தை வைத்துப்பூசை செய்வதையே அறியாத வெள்ளையன் துப்பாக்கி முனைக்கு மண்டியிடவில்லையா? சரசுவதி பூசை செய்யும் வணிகர்களில் ஒரு வியாபாரியாவது சரசுவதிக்குப் பயந்து பொய்கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை நிறுக்காமலோ, குறை அளவு அளக்காமலோ இருக்கிறார்கள் என்று சொல்லமுடியும்? அதுபோலவே புத்தகங்களையும் பேனா-பென்சில்களையும் வைத்துச் சந்தனப்பொட்டிட்டு பூசை செய்கிறார்களே அல்லாமல் காலோ, கையோ பட்டுவிட்டால் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கும்பிடுகிறார்களே அல்லாமல் நமது நாட்டு மக்களில் படித்தவர்கள் 100க்கு 25 பேர்களுக்குள்ளாகத்தானே இருந்து வருகிறார்கள்?

இவ்வளவு ஆயுதப்பூசை செய்தும் சரசுவதிபூசை செய்தும் இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் கதி என்னவாயிற்று? நமது வணிகர்களின் நிலை என்ன? எவ்வளவு இழப்பு அடைந்து வருகிறார்கள்? நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்புக்காக வேறு நாட்டிற்குப் போகிறார்களே இதன் காரணமென்ன? நாம் செய்யும் பூசைகளைச் சரசுவதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரசுவதி தெய்வத்துக்கும் இந்த விஷயத்துக்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லையா? அல்லது சரசுவதி என்கிற ஒரு தெய்வம் பொய்க்கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தானே இருக்க வேண்டும்?

(v) இங்ஙனமே இராமநவமி கிருட்டிணன் பிறப்பு போன்ற வழிபாடுகளையும் சாடுகிறார்.

இவ்விடத்தில் நம் நாட்டு மக்கள் பாரதமாதா, தமிழ்த்தாய், தெலுங்குத்தல்லி என்றெல்லாம் கொண்டாடி வருகிறார்களே இவற்றையெல்லாம் நோக்கும்போது நம்நாட்டின் மரபு தெய்வமரபாகி வருவதைக் காணமுடிகிறது. மக்கள் மரபு நம்பிக்கையின் அடிப்படையில் அமைகிறது. அய்யா அவர்கள் குறிப்பிடும் மரபு காரணகாரியத்தை ஒட்டி அமைகின்றது. மக்களில் பலரோ சிலரோ அவரவர் மனப்பான்மைக்குத் தக்கவாறு மனப்பக்குவத்திற்கு உகந்தவாறு அவற்றைத் தழுவிக்கொண்டு வாழ்கிறார்கள்.

5. தலைவர்கள்

தலைவர்களின் தகுதிகளைப் பற்றி அய்யா அவர்கள் சிந்தித்துள்ளார்கள். அவர்தம் சிந்தனைகள்.

(1) ஒருதலைவன் வேண்டும், அவன் நடத்துபவனாய் இருக்கவேண்டுமேயொழிய நடத்தப்படுபவனாய் இருக்கக்கூடாது. அடுத்தாற்போல பின்பற்றுபவர்கள் இருக்கவேண்டும். அவர்கள் தலைவர் அபிப்பிராயத்துக்கு உழைக்கிறவர்களாக இருக்கவேண்டும். அதற்குத்தான் ஒத்துழைப்பு என்று பெயர்.

(2) மக்களை நடத்துகிறவன் தலைவனேயொழிய மக்களின் பின்னால் செல்லுகிறவன், மக்களை அடக்க முடியாதவன் தலைவன் அல்லன் தலைவன் ஆகவும் மாட்டான்.[குறிப்பு 22]

(3) தலைவனாக வருபவன் பொதுமக்கள் அத்தனை பேர்களின் விருப்பத்தையும் சம்பாதிக்கவேண்டும் என்று ஆசைப்படக்கூடாது. அது முடியாதகாரியம் என்பதோடு அது தேவையற்றதும் ஆகும். மற்றவர்கள் குறைகூறுகிறார்கள் என்பதற்காக இலட்சியம் செய்யவேண்டியதில்லை. தனக்குச் சரியென்று பட்டதைத் துணிவுடன் செய்ய வேண்டியதே முறையாகும்.

(4) தற்சமயம் நாட்டில் நல்ல தலைவர் பஞ்சம் ஏற்பட்டு வருகிறது. மக்களிடம் நன்மதிப்புப் பெற்ற எந்தத் தலைவனும் இப்பொழுது நாட்டில் இல்லை.

சில தலைவர்களைப்பற்றி அய்யா அவர்கள் கருத்து தெரிவித் துள்ளார்கள். அத்தகைவர்களுள் சிலரை ஈண்டுக்குறிப்பிடுகிறேன்.

(1) அறிஞர் அண்ணா: அறிஞர் அண்ணாவைப் போன்று இது வரையில் நாம் கண்டதில்லை. தூய்மையான நெஞ்சம் கொண்டவர்; ஏழைகள்மீது இரக்கத்துடன் நெஞ்சு நெகிழ்பவர். இவரைப் பற்றிப் பெரியாரின் சிந்தனைகளில் சில.

(i) சுமார் 40 ஆண்டுக்காலமாக தந்தை பெரியார் நடத்திவைத்த ஆயிரக்கணக்கான திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியற்ற திருமணமாக இருந்தது. அவற்றை எல்லாம் செல்லுபடியாகும்படி சட்டம் நிறைவேற்றிவிட்டார் தம் ஆட்சிக்காலத்தில்.

(ii) வரலாற்றில் சமுதாய சீர்திருத்த வீரர் என்று பொறிக்கப்படுவார் என்பது உறுதி.

(ii) அண்ணா நம் நாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்றதும் பகுத்தறிவுக் கொள்கைப்படித் துணிந்து ஆட்சி செய்து வருகின்றார். ஒவ்வொரு மன்றங்களிலும் இல்லத்திலும் அண்ணாபடம் இருக்கவேண்டும்.

(iv) தமிழர் சமுதாயத்தினரின் அன்பை இதுகாறும் எவரும் பெறொதவரை பெற்றுவிட்டார். எப்பக்கம் திரும்பினாலும் ‘அண்ணா வாழ்க! அண்ணா வாழ்க!’ என்ற ஒலிதான்.

(v) அண்ணாவின் பகுத்தறிவு ஆட்சியைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. இவரைப்போல் இன்னொருவர் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவர்தம் புகழேணி உயர்ந்து விட்டது.

(vi)அண்ணாவைப்போல் ஒருவரைச்சொல்ல வேண்டுமானால் இரஷ்ய நாட்டு லெனினைத்தான் சொல்லலாம்.

ஒன்று நினைவிற்கு வருகிறது. சிறிது கருத்து மாறுபாடு இருப்பதாகத் தெரிந்தாலும் அண்ணா அவர்கள் இராஜாஜியையும் பெரியாரையும் ஒப்ப மதித்தவர். பெரியாரும் இராஜாஜியும் கருத்து மாறுபட்டவர்களாக இருப்பினும் இரட்டையர்கள் போல் அன்புடன் வாழ்ந்தவர்கள். இருவர் அறிவுரைகளையும் கேட்டவர் அண்ணா.

நான் திருப்பதியில் பணியாற்றி வந்த காலத்தில் ஏதோ ஓர் அலுவல்நிமித்தம் சென்னை வந்திருந்தேன். பாரிமுனை பக்கம் இருந்த இராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு கூட்டம். அண்ணா அதில் பேசுகிறார். திரளான கூட்டம். முன்வரிசையில் பெரியாரும் இராஜாஜியும் வீற்றிருக்கின்றனர். கூட்டத்திற்கு வருகை புரிந்த அண்ணா இருவரையும் கண்டு அவர்களிடம் சென்று அவர்கள் காலைத் தொட்டு வணங்கிவிட்டு மேடைக்குச் சென்றார். மக்களின் கையொலி கட்டத்தை அதிரவைத்தது.

மேடைக்குச் சென்ற அண்ணா சொன்னார்: “நான் ஏன் இவர்களை வணங்கினேன் என்றால் இருவரும் என் அரசியல் குருநாதர்கள். என் காலில் முள் தைத்து சீழ்பிடித்து சிரமப்படும் போது என்ன செய்யலாம் என்று தாடியில்லாத பெருமகனைக் கேட்டால், “மெதுவாக முள்ளை நீக்கி சீழைவடியச் செய்து மருந்து போட்டு ஆற்றினால் சரியாகிவிடும்” என்று சொல்வார். தாடியுள்ள பெருமகனைக் கேட்டால், “நல்ல மருத்துவரிடம் சென்று காலையே எடுத்துவிடு; புதிய செயற்கைக் காலைப் பொருத்திக் கொள்ளலாம்” என்று சொல்வார். இவ்வாறு சொன்னதும் மீண்டும் மக்களின் கையொலி ஒருமணித்துளி கட்டடத்தை அதிரவைத்தது.

(2) அம்பேத்கார்: இவரைப்பற்றியும் தந்தை பெரியாரின் சிந்தனைகள் உள்ளன. இருவரும் புத்தரையும் புத்த மதத்தையும் போற்றுபவர்கள், அய்யா அவர்களின் சிந்தனைகள்.

(i) இந்தியாவிலேயே அம்பேத்கார் தனியான கருத்துடைய ஓர் ஒப்பற்ற மாமனிதர். மனிதர்களிலேயே அறிவாக்கத்தால் மேம்பட்ட நிலையில் விளங்கியவர். சுதந்திரமாகச் சிந்திக்கும் அறிவும் ஆற்றலும் உடையவர்.

(ii) டாக்டர் அம்பேத்கார் ஒருவரே பொதுவாழ்வில் சமுதாயத்துறையில் முயற்சி செய்து வெற்றி பெற்றவர்.

(3) காமராசர்: இவரைப்பற்றியும் அய்யா அவர்கள் சிந்தித்துள்ளார். காமராசரும் ஓரளவு பெரியார் கருத்துகளைத் தழுவி வந்தவர். அய்யா அவர்களின் சிந்தனைகள்:

(i) தமிழர் சமுதாயத்திற்காக உழைத்து வரும் நான் (பெரியார்) பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டு முதல்மந்திரி காமராசரைப் பாதுகாக்கத்தானே வேண்டும்.

(ii) மானமும் நாதியும் இனஉணர்ச்சியும் அற்ற நம் சமுதாயத்துக்குக் காமராசர் ஆட்சி ஏற்பட்டது எதிர்ப்பாராத சம்பவமாகும். இந்த ஆட்சி மீண்டும் அமையும் என்று எதிர்பார்க்க முடியாது.

(iii) நான் கொள்கைகளை விட்டுப் பேசுபவன் அல்லன். காங்கிரசைத் தாக்கிப் பேசுபவன். நான் காமராசரை ஆதரிக்கிறேன் என்றால் அவரது எல்லாக் கொள்கைகளையும் ஆதரிக்கிறேன் என்பதல்ல.

(iv) என்னுடைய வீடு நெருப்பு பற்றி எரிகிறது. அணைக்கத் தண்ணீர் இல்லை. அணைக்கக்கூடிய ஊர் மக்கள் பக்கத்துக் வீட்டில் இருக்கும் என்எதிரிக்கு உரிமையான கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அணைக்கவந்தால்-எதிரி வீட்டுத் தண்ணீரால் எரியும் என் வீட்டை அணைக்காதே என்று நான் சொன்னேனானால், அஃது அறிவுள்ளவன் செய்கிறவேலையா? காமராசர் நமக்கும் நம்மக்களுக்கும் நன்மை செய்யும்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமா?

(v) மக்கள் எல்லாரும் படிக்கும்படியான பெருமை காமராசரால் வந்தது என்று கூறுவேனேயொழிய காங்கிரசினால் வந்தது என்று நான் ஒத்துக் கொள்ளமாட்டேன். காமராசருக்கு முன் இருந்த காங்கிரசு ஆட்சியில் இவை எல்லாம் ஏன் நடக்கவில்லை? கேடுகள் தாமே நடந்துள்ளன? காமராசர் தோற்று அவருடைய இடத்துக்கும் பார்ப்பானோ, பார்ப்பானுடைய அடிமைகளோ வந்து உட்கார்ந்தால் இவை எல்லாம் செய்வார்களா? தோசையைத் திருப்பிப்போடுவதுபோல் காமராசர் செய்த நன்மைகளை எல்லாம் மாற்றிவிடுவார்கள்.

(vi) இன்று மந்திரிசபை ஒரு தமிழன் கையில் இருக்கின்றது. அதுவும் தமிழன் நலனில் அக்கறை கொண்ட கீழ்ச்சாதி ஆள் கையில் இருக்கின்றது. அதன் காரணமாக ஆதரிக்கின்றேன். இது போய்விடாமல் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

(vii) எங்கள் கொள்கையை நிறைவேற்றிக் கொள்ளக் காமராசரை ஆதரிப்பதும் பல திட்டங்களில் ஒன்றேயாகும்.

(viii) 100க்குப் 15 பேர் படித்தவர்கள் உள்ள நிலையில் ஆச்சாரியார் பதவிக்கு வந்து அதை 10ஆகக் குறைக்கப் பாடுபட்டார்.[குறிப்பு 23] பல பள்ளிகளை மூடினார். காமராசர் பதவிக்கு வந்த 7 ஆண்டுக்காலத்தில் ஆசாரியர் மூடியபள்ளிகளை எல்லாம் திறந்ததோடு அதற்கு மேலும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை ஏற்படுத்தி நிலையை மாற்றி இப்பொழுது 100க்கு 35 பேர் படிக்கும் நிலையை உண்டாக்கினார்.

(ix) நேருவின் தொண்டைத்தொடர்ந்து செய்யக் காமராசர் இருக்கிறார். நேரு அவர்கள் விட்டுச் சென்ற காரிய்ததைக் காமராசர் எடுத்துச் செய்வார். அவரும் நேருவைப் போன்று அவ்வளவு விளம்பரம் இல்லாவிட்டாலும் நமது நாட்டைப் பொறுத்தவரையில் அவர் ஒரு பெரியதியாகி ஆவார்.

(x) தமிழ் நாட்டின் வரலாற்றில் ஏன் இந்தியாவின் வரலாற்றில் காமராசரின் காலம் ஒரு குறிப்பிடத்தக்க “சுந்தரகாண்டப்” பொற்காலம் அரசியலில் ஆகும். இன்று இந்திய அரசியலில் காமராசருக்கு நிகர், அடுத்த இரண்டாவது மூன்றாவது நபர் யார் என்று சொல்ல முடியாத அளவுக்கு ஓர் உச்சநிலை பெற்ற காலமாகும்.

(xi) காமராசரின் சமதர்மத்திட்டத்தால் இன்று ‘கோயில் இல்லாத ஊரில் குடியிராதே’ என்னும் முட்டாள்தனமான பழமொழி மறைந்து ‘பள்ளி இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா’ என்ற புதிய நீதிமொழி ஏற்பட்டுள்ளது.

(xii) கல்வி சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சி தொடங்கினாலும் ‘கடவுள் வாழ்த்துச்’ சொல்லுவதை நிறுத்திவிட்டு ‘காமராசர் வாழ்த்து’ கூறவேண்டும். அவர்காலத்தில் பள்ளிகள் நாடெங்கும் திறக்கப்பெற்றன.[குறிப்பு 24]

இராஜாஜி, காந்தியடிகள், திரு.வி.க. கலைஞர் பற்றியும் கூறியுள்ளார். விரிவஞ்சிவிடப் பெற்றன.

கலைஞரைப்பற்றி: கருணாநிதி இராஜதந்திரம் மிக்கவர். இந்தநாடு சிக்கல் நிறைந்த நாடு. ஒழுக்கம், நாணயம், நேர்மை ஆகியவைபற்றிக் கவலைப்படாத மக்களுள்ள நாடு. இந்த நாட்டில் மிகச்சிக்கலான பிரச்சினைகளையெல்லாம் மிக அறிவுத்திறன் காரணமாகத் தீர்த்து வருகின்றார்.

இவர் ஆட்சிமுழுமையும் பார்க்கும் முன்மறைந்து விட்டார். அதனால் இதற்குமேல் குறிப்புகள் இல்லை.

இன்னும் வள்ளுவர், புத்தர், இராமலிங்கர், பாரதிதாசன் இவர்களைப் பற்றியெல்லாம் சிறப்பாகக் கூறியுள்ளார். விரிவஞ்சி அவைவிடப் பெற்றன.


6. பெரியார்


பெரியார்: இதுகாறும் நான் கூறிவந்த பெரியார் யார்? அவரே கூறுகிறார்.

(1) நான் பகுத்தறிவுவாதி எனக்கு மதம் - கடவுள் - மொழி - நாடு-அரசு இவைபற்றியெல்லாம் கவலை இல்லை. யார் ஆட்சி புரிகின்றனர் என்பது பற்றியும் கவலை இல்லை. பகுத்தறிவோடு ஆட்சி செய்கிறார்களா என்பதுதான் முக்கியம் ஆகும்.

(2) பகுத்தறிவு ஆட்சி என்பது வேறு எந்தக்காரியங்களில் தங்கள் பகுத்தறிவைக் காட்டத் தவறினாலும் இளம் உள்ளங்களில் இம்மாதிரி கீழ்த்தரக் கருத்துக்களை (புராண இதிகாசத்தில் உள்ள ஒழுக்கக் கேடான கருத்துகளை) எந்தக் காரணம் கொண்டும் புகுத்தாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது முக்கியக் காரியமல்லவா?

(3) எனக்குக் கடவுள் பற்று, மதப்பற்று, நாட்டுப்பற்று, மொழிப்பற்று, சாத்திரப்பற்று ஆகிய எதுவொன்றும் இல்லை. ஆனால் மக்களின் வளர்ச்சிப்பற்று ஒன்றுதான் உண்டு-அதுவும் அறிவுக்கும் ஏற்றவகையில்.

மானசீகமாக: தந்தை பெரியார் படத்தைப் பார்த்திருப்பீர்கள். அதனை மனத்தில் நிறுத்திக் கொண்டு நான் கூறுவதை அதனுடன் பொருத்திக் காணுங்கள்.

சிவந்தமேனி; தடித்த உடல்; பெருத்த தொந்தி; நல்ல உயரம்; வெளுத்த தலைமயிர்; நரைத்தமீசை; தாடி; நீண்டமூக்கு; அகன்ற நெற்றி; உயர்ந்த மயிரடர்ந்த புருவங்கள்; ஆழமான கண்கள்; மெதுவான உதடுகள்; செயற்கைப் பற்கள்; ஒருசாதாரண மூக்குக் கண்ணாடி. இவை அனைத்தும் கலந்த உருண்டையான முகம்; ஒரு தனியான முகவெட்டு; என்னமோ ஒருவிதமான கவர்ச்சி.

இடுப்பில் எப்போதும் ஒரு நான்கு முழத்துணி. காலில் செருப்பு. முக்கால்கையுடன் ஒருமாதிரியான வெள்ளைச்சட்டை. அதில் வரிசையாக நூல் பொத்தான்கள். பழங்காலத்து முழுகோட்டுக்கும் இக்காலத்து ‘ஷர்ட்’டுக்கும் நடுவில் ஒரு நூதனமான உடுப்பு. வெளிப்புறத்தில் மூன்று பாக்கெட்டுகள், உட்புறத்தில் (பணப்பை வைத்துக் கொள்வதற்காக) கட்டாயம் ஒருபாக்கெட். வெளிப்பைகளில் செய்தித்தாள்கள், சில கடிதங்கள், பொதுக்கூட்டத்தில் கேட்கப்பெற்ற கேள்வித்தாள்கள், இரண்டொரு சிறு புத்தகங்கள், துண்டுப்பிரசுரங்கள், நாட்குறிப்பு, ஒருசிறு கத்தி-ஆகிய சகலசாமான்களும் நிறைந்து எப்போதும் உப்பிய வண்ணம் இருக்கும். இவற்றில் பல வெகு மாதங்களுக்கு முந்தியவையாகவும், குப்பைத் தொட்டிக்குப் போயிருக்கவேண்டியவையாகவும் இருக்கும். வெளிப்புறத்துக்கு மேல் ஒரு ‘ஃபவுண்டன் பேனா’ செருகப்பெற்றிருக்கும். உட்புறப்பையில் ஒரு ‘மணிபர்ஸ்’. அதன் அறையொன்றில் கடிகாரம்.

இவ்விதமான ஒரு சட்டைப்பைக்குமேல் ஓர் ஐந்து முழப்போர்வை. அநேகமாக ‘ஆரஞ்சு’ அல்லது ‘காப்பி’ நிறத்தில். இந்த உடைகள் பெரும்பாலும் அழுக்காகவே இருக்கும்.[குறிப்பு 25] சட்டைப்பைகளின் ஓரங்கள் அடிக்கடிக் கிழிந்து தொங்கிக் கொண்டே இருக்கும். கையில் எப்போதும் ஒரு மொத்தமானதடி பிடிக்கும் பக்கம் வளைந்திருக்கும்.

கையில் ஒரு தோற்பெட்டி அதற்குப் பூட்டுமில்லை; சாவியும் இல்லை. மிக அந்தரங்கமான சொந்தக் கடிதங்கள் முதல் பழைய செய்தித்தாள்கள், பட்டையாக நசுக்கப் பெற்ற பற்பசைக்குழல், பழையபல் (பிரஷ்) மைப்பெட்டி, சோப், கடிதத்தாள், உறைகள் வரையில் எல்லாம் இந்தப் பெட்டிக்குள்தான். சட்டைப்பையிலுள்ள குப்பைகள் அதாவது ‘ரிக்கார்டுகள்’ மிகுந்து விட்டால் அவற்றில் சில இப்பெட்டிக்குள் புகலிடம் பெறும். இரண்டு மூன்று மாதங்கட்கு ஒருமுறை பெட்டி மூட முடியாமலே முட்டிக்கொண்டால் இப்பெட்டி காலி செய்யப்பெறுவதுண்டு.

இம்மாதிரி உருவத்தோடும் உடையோடும் வாலிபநடையோடும் கையில் பிடித்த தடியுடனும் காணப்பெறுபவரே தந்தை பெரியார். இவருடைய பொறுமை யாவராலும் போற்றக் கூடியது. எவ்வளவு கிளர்ச்சியான நிகழ்ச்சிகளிலும் சரி, பொறுமையை இழக்கமாட்டார். கடுஞ்சொற்களைப் பயன் படுத்தமாட்டார். இவர்பகைமை என்பதைப் பொருட்படுத்தவே மாட்டார். நீண்டகாலப் பகைவர்களோடும்கூட விரைவில் தாமாகவே வலிந்து நட்புக் கொண்டு விடுவார். இப்பெருந் தகையை,

வயதில் அறிவில் முதியோர்-நாட்டின்
வாய்மை போருக் கென்றாம் இறையாய்!
உயர் எண்ணங்கள் மலரும் சோலை.

என்று சித்திரித்துக் காட்டுவார் பாவேந்தர் பாரதிதாசன். டாக்டர் பழநி. அரங்கசாமியார்,

சாதியும் மதவெறியும் சாய்ந்திருந்த கழகத்தைத்
தடிகொண்டு நிமிர்த்திட்ட தனிப்பெருந் தலைவா!
தமிழகத்தின் சுமைதன்னைத் தன்முதுகில் தாங்கிஇங்குத்
தொண்ணூற்று நான்கிலும் தொண்டுசெய்த பழுத்தபழம்
துணிச்சலும் ஆற்றலும் சுயமான சிந்தனையும்
தொலைதூர நோக்கும் அயராத உழைப்பும்
அன்புக்குப் பணிவையும், வன்புக்குத் துணிச்சலையும்
காலமெல்லாம் காட்டிவந்த கருஞ்சட்டைப் பெருந்தலைவர்!
[4]

என்று ஒரு சொல்லோவியமாகக் காட்டுவார்.

“பெரியார் உயிருடன் வாழ்ந்த மொத்த நாட்கள் 34,433 ஆகும. இந்த நாட்களில் அவர் பெரும்பாலான நேரத்தைப் பேசவும் எழுந்தவும் பயன்படுத்தினார். அவர் செய்த மொத்தப் பயணதூரம் 15,12,000 கிலோமீட்டர். இந்தத் தூரம் பூமியை 33 முறை சுற்றி வந்ததற்குச் சமமாகும். அவர் சொற்பொழிவாற்றிய மொத்தநேரம் 21,400 மணி. இந்தப்பேச்சை ஒலிப்பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதம் 11 நாட்கள் வரை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கலாம்” (மின்மினி)[5]
 1. திருவா. சிவபுராணம் -அடி 28-31.
 2. தொல். சொல். கிளவியாக்கம்-1.
 3. கோதண்டம், கொ, மா: கோழிக்குட்டிகளும் பன்றிக்குஞ்சுகளும்- பக்.41
 4. தந்தைபெரியார் 21ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்-பக் 23.
 5. பெரியாரியல் (நன்னன் தொகுத்தது) பக்-73.

பெரியாரின் பேச்சுத்திறன்: பெரியாரின் பேச்சு மக்களைக் கவர்வதற்குக் காரணமாக இருந்தவை அவர் கையாண்ட பழமொழிகள், குட்டிக் கதைகள், உவமைகள் முதலியவை. தோழர் மா. நன்னன் அவர்கள் இவற்றைத் தொகுத்து சிறுசிறுநூல்களாக வெளியிட்டுள்ளார்கள்.[1] எடுத்துக்காட்டுகள் தந்து விளக்கினால் பேச்சு நீளும். ஆகவே தவிர்க்கப் பெற்றன. ஆயினும் கவிஞர் நாரா. நாச்சியப்பன்[குறிப்பு 26] கவிதையில் தந்தால் சுவை பயக்கும் என்பதால் அவற்றை ஈண்டுத் தருகின்றேன்.


பெரியார்தம் சொற்பொழிவைக் கேட்டவர்கள்
வெறுப்பகற்றிப் பெரியார் கொள்கைக்
குரியாராய் மாறுவதாம் விந்தையிதன்
உட்பொருளைச் சொல்வேன், கல்வி
தெரியாத மக்களையும் வசப்படுத்தும்
முறைமைதனில் திறமை யாக
உரைபகர்வார்! தன்னுளத்துப் பட்டதெல்லாம்
ஒளியாமல் உரைப்பார் கண்டீர்!

காற்றடிக்கும்! புயல்வீசும்! இடையின்றி
மழைபொழியும்! கருத்து, வெள்ளம்
போற்பெருகும்! அருவியென ஓடிவரும்
மணிக்கணக்காய் பொழியும்! பேச்சில்
ஆர்ந்திருக்கும் நாட்டிலுள்ள வகைப்பட்ட
பழமொழிகள் அத்த னையும்!
சோற்றினுக்குக் காய்கின்ற ஏழைகட்குச்
செயல்காட்டிச் சோர்வ கற்றும்!

உவமைகளோ குவிந்திருக்கும்! கலைப்பேச்சுப்
பேசுங்கால் ஒன்றோ டொன்றாய்த்
தவழ்ந்துவரும் கேள்விகட்குப் பதில்சொல்லத்
தெரியாமல் தவித்த பேர்கள்
இவர்கட்குத் தொண்டர்களாய் இன்றிருக்கும்
நிலையொன்றே ஈரோட் டண்ணல்
இவர்பேச்சின் திறம்விளக்கப் போதுமெனக்
கூறிடுவேன்! எழுச்சி கொள்வேன்!

இந்த கவிஞர் 1954 முதல் பெரியாரிடம் நெருங்கிய தொடர்புடையவர் கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகட்கு முன்னர் இவர் பர்மாவில் இருந்தபோது (1954இல்) பெரியாரை வரவேற்றுப் பத்து
 1. 1930-இல் விருது நகரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில்தான் தாலி கட்டும் பழக்கத்தை எதிர்த்ததாகத் தெரிகிறது. அதற்குமுன் பல சுயமரியாதைத் திருமணங்களில் தாலிகட்டும் வழக்கம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. வி. செய்வித்த தமிழ்த்திருமணங்களில் இப்பழக்கம் தொடக்கத்தில் இருந்து வந்தது.
 2. நூற்பா- 35
 3. தொல். பொருள்-கற்பியல்-47, 48, 49.
 4. வணிகர்- ‘வாணிகம் ’ செய்வோர் தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்களிலும் ‘வாணிகம்’ என்று போடவேண்டிய இடத்தில் ‘வணிகம்’ என்று போடப்படுகிறது. சன் தொலைக்காட்சிக்குக் கடிதம் எழுதியும் திருத்திக்கொள்ளாமை வருந்தத்ததக்கது.
 5. பாரதத்தில் துரோணர், கிருபர், அசுவத்தாமா போரில் ஈடுபட்டிருந்ததை ஈண்டு நினைவு கூரலாம். இவர்கள் பார்ப்பனர்.
 6. இதுதான் தந்தை பெரியாரின் வினாவாக இருந்தது. வள்ளுவர் கருத்துக்கும் ஒத்துள்ளதாக அமைகின்றது. இக்கருத்து ‘தீண்டாமை’ என்ற தலைப்பின்கீழும் வந்துள்ளது.
 7. ஆந்திரநாட்டில் இன்றும் ஆசிரியத் தொழிலிலுள்ளவரை ‘அய்யவொரு’ (அய்யா) என்று வழங்குவதை அறியலாம்.
 8. அகத்திணை-நூற்பா-28
 9. முல்லை, குறவஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்ற அடிப்படையில்
 10. மேலது-பக்.23
 11. மேலது-பக்.23
 12. DOG-GOD
 13. சைவம் இதனைப் ‘பதி’ என்றும், வைணவம் ‘ஈசுவரன்’ என்றும் பேசும்.
 14. சைவம் இதனைப் ‘பசு’ என்றும் வைணவ தத்துவம் ‘சித்து’ என்றும்கூறும்.
 15. ஆங்கிலத்தில் soul என்பது ஆத்மாவைக் குறிப்பது.
 16. தத்துவங்களை நிறுவியவர்கள் கண்ட சொல் இது. அனைத்தையும் பார்ப்பனர்கள்மீது சுமத்துவது நியாயம் இல்லை.
 17. மேல்நாட்டிலும் மூடப்பழக்கம் உண்டு. அப்போலோ-13, ஒரு பதின்மூன்றாம் நாள், 13 மணி, 13 நிமிஷம், 13 வினாடியில் செலுத்தப்பெற்று பூமியில் விழுந்து நொறுங்கியது. எண் 13 தான் இதற்குக் காரணம் என்று நம்புகின்றனர் அறிவியலறிஞர்கள். எண்-13 அவர்களுக்கு ஆகாத எண்.
 18. காவடி எடுப்பதும் கரகம் எடுப்பதும் பார்ப்பனர் சூழ்ச்சி அல்ல. பார்ப்பனர் எவரும் ஆடுவதில்லை. நம்மவர்களே ஆடுகின்றனர். கடவுள் மக்களிடம் எதற்காகவாவது வரும்போது பார்ப்பனனாகத்தான் வருகிறார். இந்திரன் பார்ப்பனனாக வந்துதான் கர்ணனிடம் கவச குண்டலங்களைப் யாசித்துப் பெற்றான். கண்ணன் பார்ப்பனனாகச் சென்றுதான் கர்ணனிடம் அவன் செய்த புண்ணியம் அனைத்தையும் பெற்றான்.
 19. இதற்கும் ‘சங்கராந்தி’ என்றுகூட பெயர்சொல்ல முனைந்துள்ளனர் பார்ப்பனர்.
 20. இதனைப்பற்றி பொங்கலும் அணுவும் என்ற கட்டுரை ஒன்றும் பல்லாண்டுகட்குமுன் எழுதி வெளியிட்டுள்ளேன்.
 21. சரசுவதி பூசையை அவரவர்களே வீட்டில் செய்து கொள்கிறார்கள்.இதனால் பார்ப்பனர்கட்கு வரும்படி இல்லை.
 22. இதற்கு இன்று, பலர் எடுத்துக்காட்டுகளாக உள்ளனர். பெயர்கள் குறிப்பிட விரும்பவில்லை. சிந்தித்தால் அறிந்துகொள்ள முடியும்.
 23. 1952 இல் காங்கிரசு தோற்று ஆட்சி அமைக்கவில்லை. எதிர்க்கட்சிகளிலும் சரியானநிலை இல்லை. காங்கிரசு இராஜாஜியை அழைத்து ஏற்பாடு செய்யச் சொல்லியது. அவர் சில எதிர்க் கட்சிகளின் உறுப்பினர்களை Associate member (Congress) ஆக்கி, அவர்கட்குப் பதவிகள் கொடுத்து ஆட்சி அமைத்தார். அந்தக் காலத்தில்தான் மாணிக்கவேல் நாயக்கர் சட்டமன்றத்தலைவர் (Speaker) ஆனார்.
 24. இவர்காலத்தில் திரு நெ.து. சுந்தரவடிவேலு கல்வி இயக்குநர். இவருக்கு விருப்பப்படி செயற்படும். உரிமைதரப் பெற்றதால் மதிய உணவுத்திட்டம், சீருடைத்திட்டம் ஆகியவை ஏற்படுத்தி அற்புதமாகச் செயற்பட்டன. தமிழ் நாட்டைப் பாராளும் மன்றமும் புகழ்ந்தது.
 25. இவர் சரியாகக் குளிப்பது இல்லை. இவரை இழுத்துப்பிடித்துக் குளிக்க வைப்பது நாகம்மையாருக்குப் பெரும்பாடாக இருக்கும்.
 26. ஈரோட்டுத்தாத்தா-சொல்லின் செல்வர் (1-3)
 1. பெரியாரின் குட்டிக்கதைகள் (ஆகஸ்டு-1998); பெரியாரின்பழமொழிகள் (ஆகஸ்டு-1998)

நாட்கள் அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்புப் பெற்றவர். 1945-முதல் பகுத்தறிவுக் கருத்துகளை ஏற்றுக்கொண்டவர். நாடு விடுதலை அடைவதைவிட மக்கள் மூடத்தனத்திலிருந்து விடுதலை பெறுவது மிகமிகத் தேவையானது என்ற சுயமரியாதைக் கொள்கை இளைஞரான இவர்தம் எண்ணத்தில் வேர்கொண்டது.[1]


7. முடிப்புரை


மனிதன் ஒரு சமூகமாக-கூட்டமாக-வாழவேண்டியவன். மனித விருத்திக்குத் திருமணம்தான் அடிப்டையாக அமைவதால் இந்தப் பொழிவு மனிதனுடைய இயல்புகளாகிய திருமணத்தில் தொடங்கினேன். வழக்கமாக நடைபெறும் திருமணங்களைச் சுட்டிகாட்டி காதல் மணம், கலப்புமணம், சீர்த்திருத்த திருமணங்கள், மறுமணம்- மனைவியை இழந்தவன் செய்து கொள்வது, விதவைத்திருமணம் முதலியவற்றிற்கு முதலிடம் தரவேண்டும் என்பது பெரியாரின் அடிப்படை நோக்கம் என்பதை எடுத்துக்காட்டினேன். குழந்தை மணத்தைத் தவிர்க்கவேண்டும் என்பது அய்யா அவர்களின் அசைக்க முடியாத கொள்கை என்பதை தெளிவாக்கினேன்.

திருமணத்தின் அடையாளமாக மனைவி கழுத்தில் அமையும் தாலியைப்போல் கணவன் கழுத்தில் ஓர் அடையாளமாக இருக்கவேண்டியது தந்தையின் விருப்பம் என்பதைச் சுட்டியுரைத்தேன், வேண்டுமானால் மோதிரங்களை அடையாளமாகக் கொள்ளலாம் என்பதை நினைவூட்டினேன்.

சமூகத்தில் தொத்து நோய் போல்அமைதிருப்பது சாதி முறை என்றும், சாதி என்ற சொல்லே சரி அல்ல என்றும் தொல்காப்பியம்மூலம் எடுத்துக்காட்டினேன். தீண்டாமை, சாதித்தொழில், சட்டத்தின்மூலம் சாதி வேற்றுமையைக் களையலாம் என்றும், ஆனால் நடைமுறை அரசியலில் அதனை நீக்குவதற்குப் பதிலாக வற்புறுத்தும் முறையே நடைமுறையில் உள்ளது என்றும், சாதிச் சங்கங்கள் பெருவாரியாகத் தோன்றி அரசாங்கத்தை ஆட்டிவைக்கின்றன என்றும், அரசு வாக்குவங்கியின் தேவையை நினைத்துக் கொண்டு அவற்றின் வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாத நிலையில் உள்ளது என்பதைச் சுட்டிஉரைத்தேன். பொதுவாக மதுவிலக்கு, புதுமை வேட்கை இவற்றில் சில பெரியார் கருத்துகளை எடுத்துக்காட்டினேன். ஆத்துமாபற்றிய கருத்து, சோதிடத்தை நம்பும் மூடத்தனம் இவற்றைத் தந்தைவழியில் நின்று விளக்கினேன். பொங்கல்விழாவைத் தவிர ஏனைய விழாக்கள் மூடத்தனத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது அய்யா அவர்களின் கருத்து என்பதைச் சுட்டிக்காட்டினேன். சிறந்த சமூகத்தலைவர்களாக நின்று தொண்டாற்றிய அறிஞர் அண்ணாத்துரை, டாக்டர் அம்பேத்கார், காமராசர் இவர்கள் செய்த பணிகளை விளக்கினேன். சிறப்பாக காமராசர் ஆற்றிய கல்விப்பணிகளைக் விரிவாக விளக்கினேன். கலைஞரைத் தந்தையவர்கள் ஓர் இராஜதந்திரியாக மதிப்பீடு செய்ததை நினைவு கூர்ந்தேன். இப்பொழிவில் நாம் பெரியாரைப் பற்றி தெரிந்து கொண்டவை: அவர்தம் ஓய்வறியாத உழைப்பு, உண்மைகளை அஞ்சாமல் வெளியிடும் நெஞ்சுரம், தன்னலம்புகாத தன்னேரில்லாத பொதுத்தொண்டு என்று இவர் தம் பேச்சுத் திறன் ஆகியவற்றைச் சுட்டியுள்ளதை காட்டி இவைதாம் பெரியார் என்பதை நினைவூட்டினேன். இதுகாறும் என் உரையைக் கேட்ட அறிஞர் பெருமக்கள் அனைவர்க்கும், மாணாக்கச்செல்வங்களுக்கும் என் நன்றி உரித்தாகின்றது.

அடுத்த மூன்றாவது பொழிவு ‘மொழிபற்றிய சிந்தனைகள்’ என்பது. இது மிகவும் சிக்கலான பிரச்சனைகளைக் கொண்டது. இதற்கும் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.


குறிப்புகள்


சான்றுகள்

 1. நாரா. நாச்சியப்பன்-பர்மாவில் பெரியார் (1993)-முன்னுரையில்.