தந்தை பெரியார் சிந்தனைகள்/3. மொழி பற்றிய சிந்தனைகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

மூன்றாம் பொழிவு

நாள்: 28.2.2001 முற்பகல்
3. மொழிபற்றிய சிந்தனைகள்


அன்பு நிறைந்த தலைவர்அவர்களே
அறிஞர்பெருமக்களே
மாணாக்கச்செல்வங்களே

இன்றைய மூன்றாவது பொழிவு பெரியாரின் ‘மொழி பற்றிய சிந்தனைகள்’ ஆகும். பேச்சைத் தொடங்குவதற்குமுன் வேறு சில செய்திகளை உங்கள் முன் வைக்கிறேன்.

இரண்டு சொற்பொழிவுகளில் தந்தைபெரியாரைப்பற்றி மின்வெட்டு போல சில குறிப்புகள் மட்டிலும் தான் உங்கட்குத் தெரிந்திருக்கும். இந்தப் பெரியார் யார்? என்பதை இன்றைய பொழிவில் விவரமாகச் சொல்வேன்.[குறிப்பு 1]


1. பெரியார் வாழ்க்கைக் குறிப்புகள்

தந்தை பெரியார் பிறந்தது- அவதரித்தது என்றே சொல்லலாம், ஈரோடு நகரில். கன்னட பலிஜ நாயுடு வகுப்பினர். ‘நாயக்கர்’ என்பது பட்டப்பெயர். வைதிகக் குடும்பம்; பழுத்த வைணவக்குடும்பம். எப்பொழுதும் பாகவதர்கள், சந்நியாசிகள், மதவாதிகள் இவர்கட்கு இங்கு விருந்து நடைபெற்ற வண்ணம் இருக்கும்.

தந்தையார் வெங்கட்ட நாய்க்கர்; தாயார் சின்னத் தாயம்மை யார் என்று வழங்கும் முத்தம்மாள். வைணவ பக்தர்களாக இருந்த இவர்கட்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன; இரண்டும் இறந்தன. பின்னர் 19 ஆண்டுக்காலம் மக்கட்பேறு இல்லை. இருவருக்கும் கவலை மிகுந்திருந்தது. திருமாலிடம் அன்பும் பக்தியும் பெருகியது. இருவரும் பெருமாளை நினைத்துப் பிள்ளைவரம் வேண்டினர்; பாகவதர்கட்குப் பணிவிடை செய்தனர்; சனிக்கிழமை நோன்பு, ஏகாதசி விரதம் இருந்தனர்; இராமாயணம் கேட்டனர்; பாகவதம் கேட்டனர்; இவ்வகையாக இருவருக்கும் வைணவப்பற்று மிகுந்தது.

இவர்கள் ஏக்கம்தணிய ஈ.வெ. கிருட்டிணசாமி 1877 ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் நாள் பிறந்தார். இவருக்குப் பின் 1879-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17ஆம் நாள் ஈ.வெ. இராமசாமி பிறந்தார். இவருக்குப் பின் இரண்டாண்டுகள் கழித்துப் பொன்னுதாயம்மாள் பிறந்தார். இவருக்குப்பின் பத்தாண்டுகள் கழித்துக் கண்ணம்மாள் பிறந்தார். குடும்பம் புதல்வர்களால் பொலிந்தது.

ஈ.வெ.ரா வுக்குக் கல்வி சரியாக அமையவில்லை. துடுக்குத்தனத்தை அடக்கவே பள்ளியில் போடப்பெற்றார். திண்ணைப் பள்ளியில் 3 ஆண்டும் ஆங்கிலப்பள்ளியில் 2 ஆண்டும் படித்தார். 4-ஆம் வகுப்பு தேறி சான்றிதழ் பெற்றார். படிப்பு 11-வயதிலேயே முடிந்தது. தந்தையார் மண்டியில் வேலை. நன்றாகப் பேசுவார். வணிகர்களிடம் நன்றாகப் பழகுவார்.

19-வயதில் 13-வயதுடைய நாகம்மாளை மணந்தார். நாகம்மாள் தம்தாயின் ஒன்றுவிட்ட தம்பியின் பெண். பள்ளியை எட்டிப்பார்க்காதவர். திருமணம் ஆகி சில ஆண்டுகட்குப் பின்னர் கையெழுத்துப்போட மட்டிலும் கற்றுக்கொண்டவர். 35 ஆண்டுகள் கணவனோடு இணைந்து-பிணைந்து-வாழ்ந்து கணவனுடைய எல்லா நிகழ்ச்சிகட்கும் தோள் கொடுத்து உதவினார். படிப்பில்லாவிட்டாலும் சிறந்த அறிவாளியாகத் திகழ்ந்தார். திருமணம் ஆகி இரண்டாண்டுகள் கழித்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஐந்து மாதங்கள் வாழ்ந்து இறந்தது. பிறகு குழந்தையே பிறக்கவில்லை.

வகித்த பதவிகள்: இளமைத் துடுக்கில் இருந்தபோது நேரிட்ட விலைமாதர் தொடர்பு, காலிகள் தொடர்பு முதலியவை நாளடைவில் நல்லோர் கூட்டுறவுவால்[குறிப்பு 2] அகன்றன. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத வெள்ளை உள்ளமும், செல்வராயினும் எளிய வாழ்வும், அஞ்சாமையும், உரிமை வேட்கையும் இவரைப் பொதுநலத் தொண்டில் கொண்டு செலுத்தின. இந்நிலையில் இவர் வகித்த பதவிகளைப் பட்டியலிட்டுக் காட்டுவேன்.

(1) 70 ஆண்டுகள் உலக அநுபவம் (2) 30 ஆண்டுகள் வாணிக அநுபவம் (3) 4 ஆண்டுகள் ஈரோடு வணிகர்சங்கத் தலைவர் (4) தென்னிந்திய வணிகர் சங்க நிர்வாக சபை உறுப்பினர் (5) ஐந்து மாவட்டங்களுக்கு வருமானவரி டிரைபூனல் கமிஷனர்கள் மூவரில் ஒருவர் (மைய அரசால்) நியமிக்கப்பெற்ற பதவி (6) ஈரோடு நகர படிப்பகச் செயலாளர் (7) பழைய மாணாக்கர் சங்கச் செயலர் (8) உயர்நிலைப் பள்ளிவாரியச் செயலர் (9) 1914இல் கோவை மாவட்டக் காங்கிரசு மாநாட்டுச் செயலர் (10) 10 ஆண்டு கெளரவ நீதிபதி (11) பல்லாண்டுகள் ஈரோடு நகராண்மைக் கழகத்தலைவர் (12) மாவட்டவாரிய உறுப்பினர் (13) வாட்டர் வொர்க்ஸ் செயலர் (14) பிளேக் குழு செயலர் (15) கோவை மாவட்ட இரண்டாவது வட்ட தேவஸ்தான கமிட்டி செயலராக 10 ஆண்டு (16) பின்னர் 1929 வரை துணைத்தலைவர் (17) பின்னர் அதன் தலைவர் (18) 1918-ஆண்டு முதல் உலகப்போரில் கெளரவ ஆள் சேர்க்கும் அதிகாரி (19) 1918-ஆண்டுப் போர் வட்டம் மாவட்டம் அரிசி கட்டுப்பாட்டின் அரசு நிர்வாகி (20) கார்னேசன்குழு செயலர் (21) தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி செயலர் (22) பின்னர் அதன் தலைவர் (23) காதிவாரிய நிறுவனர் (24) அதன் தலைவராக 5 ஆண்டு இருந்தபோது அவருக்குச் செயலராக டாக்டர் டி.எஸ்.எஸ் இராஜன், கே. சந்தானம், எஸ்.இராமநாதன் கே. எம். தங்கப்பெருமாள், அய்யாமுத்து ஆகியோர் செயலராகப் பணிபுரிந்தமை-இங்ஙனம் பொதுத் தொண்டில் ஈடுபாடு கொண்டு பணிபுரிந்தவர் நம் தந்தை.

1940, 1942இல் இரண்டு வைஸ்ராய்கள் இரண்டு ஆளுநர்கள் தந்தையாரை அழைத்து அமைச்சரவை அமைக்கக்கேட்டனர். இராஜாஜியும் வேண்டினார். ஆனால் தந்தை மறுத்துவிட்டார். 1919இல் ‘இராவ்பகதூர்’ விருதுக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார். அதையும் மறுத்துவிட்டார். காங்கிரசுக்கு விரோதியான பிறகுகூட சட்டசபை உறுப்பினருக்கு விண்ணப்பத்தில் கையெழுத்து போடுமாறு பி. இராசகோபலாச்சாரியார் (லோகல் பண்டு அண்டு முனிசிபல் அவை கவுன்சில் மெம்பர்) கேட்டும் அதற்கும் மறுத்துவிட்டார். அக்கால அமைச்சர்கட்குச் சிறிதும் குறையாத அறிவும் அநுபவமும் திறமையும் கொண்டு இருந்த தந்தை அவர்களின் தியாகம் என்றுதான் சொல்லவேண்டும்.

காங்கிரசில் தொண்டு: ஈ.வெ.ரா., காந்தியாரின் சொற்களை நம்பினார். அவற்றையே தமது ஒத்துழையாமைப் பிரச்சாரத்தில் பேசினார். தாம் அணிந்த ஆடம்பரமான ஆடைகளையெல்லாம் உதறி எறிந்தார். சிறுசுருட்டு பிடிப்பது, வெற்றிலை போடுவது முதலியவற்றை ஒரே பகலில் அடியோடு நிறுத்தினார். ஒரு சாது ஆனார். முரட்டுக்கதரையே உடுத்தினார். தம் துணைவியார் நாகம்மையாரையும் கதர் உடுத்தச் செய்தார். 80 வயதுள்ள தம் அன்னையாரையும் கதர் உடுத்தச் செய்தார். தம் வீட்டிலுள்ளவர்களையும் இனத்தவரையும் நண்பர்களையும் கதர் அணியச் செய்தார்.[குறிப்பு 3] கதர் இயக்கம் இவரால்தான் பலமடைந்தது. கதர்இயக்கம், கள்ளுக்கடைமறியல் போன்றவற்றில் இவர் தொண்டு ஈடு எடுப்பும் அற்றது. கதர்வளர்ச்சிக்காக இராட்டினத்தைத் தூக்கிக் கொண்டு ஊர்ஊராகச் சுற்றி வந்தார். கதர் மூட்டை தூக்கிவிற்றார். இங்ஙனம் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட காங்கிரசு கட்சியில் சாதி வேறுபாடு தலைவிரித்தாடியது. ‘தமிழ்நாட்டுக் குருகுலம்’ என்ற பெயரில் சேரன் மாதேவியில் (நெல்லை மாவட்டம்) பார்ப்பனப் பிள்ளைகட்குத் தனிஉணவு, பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்கு வேறு உணவு, வேறு இடம், வேறு வேறு பிரார்த்தனை. இதன் மூலம் சாதிப்பிரிவுக்கு ஆக்கம். இவை குருகுலத்தில் நடைபெற்றன. ஈ.வெ.ரா இதனை எதிர்த்தார். அப்போது அவர் காங்கிரசு செயலாளர். இதனையும் வேறு பலகாரணங்களையும் கொண்டு காங்கிரசுக்கு முழுக்கு போட்டார். சுயமரியாதைக்கட்சி தொடங்கப்பெற்றது. இத்தகைய கோடாரிக்காம்புகள் காங்கிரசில் இருப்பதனால் தமிழ்நாடு காங்கிரசு கழுதை தேய்ந்த கட்டெறும்புபோல் ஆகிவிட்டது. இத்துடன் இவை நிற்க.

தாய்மொழி கன்னடம், இருந்தாலும் தமிழில் தான் ஈடுபாடு. இதைத்தான் பயன்படுத்தினவர்.[குறிப்பு 4] தம்வாழ்க்கையை கடவுள், சாதி ஒழிப்பு இவற்றிற்காக அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்தவர். அமைச்சர் பதவி, ஆளுநர் பதவி எல்லாம் வந்தன. அனைத்தையும் மறுத்து பொதுத்தொண்டையே வாழ்க்கைப் பணியாக ஏற்றுப் பணியாற்றியவர். தமிழுக்குத் தொண்டு செய்தார். “தமிழர்கட்கு நிறைய நன்மைகள் விளையவேண்டும்; நாட்டில் புரட்சிகரமான செயல்கள் பல நடைபெறவேண்டும். இதுவே என் ஆசை” என்று சொன்னவர். “அறிவியல் முறையில் தமிழ் வளம் பெறவேண்டும்” என்று அவாவுபவர். பல மேடைகளில் “ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்பெறும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப் பற்றேயாகும். மொழிப்பற்று இல்லாதாரிடத்து நாட்டுப்பற்று இராதென்பது உறுதி. . . தமிழ் நாட்டில் பிறந்தவர்கட்கு மொழிப்பற்று அவசியம் அவசியம்” என்று சொல்லி வந்தவர்.

இப்பொழிவின் கருவாக உள்ள கருத்துகளுக்குள் புகுவதற்கு முன் அறிவியலடிப்படையில் மொழியின் தோற்றம், வளர்ச்சி பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளல் சாலப்பயன் தரும் எனக்கருதுகிறேன். சிலவற்றை உங்கள்முன் வைக்கிறேன்.


2. மொழியின் தோற்றம்


‘மொழி’ என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலையாகும். மொழியே மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது. பெற்றதாயின் முதல் வேட்கை தன் குழந்தையுடன் பேசுதல்; அவள் முதலில் அடையும் பெருமகிழ்ச்சி, குழந்தையின் பேச்சைக் கேட்பதிலேயே ஆகும். குழந்தையின் மனவளர்ச்சியோடு ஒத்துவளர்ந்து வருவது மொழிவளர்ச்சியேயாகும். மனம் என்பது பெரும்பாலும் மொழியால் வளர்ந்து அமைந்தது; மனத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவே பேசுவோரின் மொழியும் வளர்ச்சி பெற்று நிற்கும். மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் உள்ளனர்; மாணாக்கராகவும் உள்ளனர்; மொழியை வளர்ப்பவரும் மக்களே; மொழியால் வளர்பவரும் மக்களே.

பலர் சேர்ந்து ஒரு சமுதாயமாய் ஓர் இனமாய்ப் பழகி வாழ்வதற்குத் துணையாகவுள்ள சிறந்த கருவி மொழியேயாகும். பலர் ஓர் இனமாய் வாழ்கின்றனர் என்பதற்கு உண்மையான அறிகுறி அவர்களின் நிறம் முதலிய எவையும் அல்ல; அவர்கள் பேசும் மொழியே உண்மையான அறிகுறி எனலாம். சமுதாய வாழ்வுக்கு அறிகுறியாகவுள்ள மொழியே, அந்தச் சமுதாய வளர்ச்சிக்கும் காரணமாக உள்ளது. சமுதாயத்தால் வளர்ந்து சமுதாயத்தை வளர்த்து வருவது மொழி எனலாம் என்று ஜே. வென்றிஸ் என்ற மொழியியல் அறிஞர் மொழிவர்.

மனிதனது மனத்தை விடுத்து ஆராய்ந்தால், மொழியைப்பற்றி அறியத்தக்கதாக ஒன்றும் இல்லை. மொழியை வளர்த்தது மனமே; மனத்தின் இயல்பைக் காட்ட வல்லதாக, மனத்தின் எதிரொளியாக (பிரதிபலிப்பாக-Reflection) உள்ளது மொழியே. மனிதரின் தொடர்பு இல்லாமல் தனியே வளர்ந்து வாழவல்லது என மொழியைப்பற்றிக் கருதுதல் பொருந்தாது. பேசும் மக்களை விட்டுத் தனியே மொழி என்பது இல்லை. மனிதரின் ஒவ்வொருவரின் ஆழத்திலும் மொழி வேர் கொண்டுள்ளது; அங்கிருந்தே மொழி வளர்ச்சி பெற்று விளங்குகிறது.

பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; ஆயினும் எழுதப்படுவதும் படிக்கப்பெறுவதும் அடுத்த நிலையில் வைத்துக்கருதப்பெறும் மொழியாகும். இவையேயன்றி வேறுவகை மொழிநிலைகளும் உண்டு. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவுகாணப்படுவது ஆகியவைகளும் மொழியேயாகும்.

பொருள்களை மட்டிலும் அறியும் அறிவு ஊமைக்கு உள்ளது; மொழிவளர்ச்சி இல்லாமையால் மேலும் அறிவை வளர்க்க வாய்ப்பு அவனுக்கு இல்லை. நாகரிகம் தொடங்கும் முன்பு, மக்களுக்குப் புலன்கள் வளர்ந்திருந்தன; இயற்கையும் வளம் மிக்குக் காத்து வந்தது; ஆயின் அக்காலத்து மக்கள் அறிவு வளர்ச்சி பெறவில்லை. பேசக் கற்றுச் சொற்களைப் படைத்துக் கொண்டபிறகே அறிவுவளரத் தொடங்கியது. பேச்சுடன் நிற்காமல் எழுத்துமுறை கற்றுச் சொற்களை மிகப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகே அறிவு விரைவாக வளரத் தொடங்கிற்று.

பேச்சுமொழி உள்ளத்து உணர்ச்சியின் தூண்டுதலால் இயல்பாகத் தானே வளரும் மொழி. எழுத்து மொழி. அறிவின் முயற்சியால் ஒழுங்கு செய்து அமைக்கப்பெறும் மொழி. முன்னது, மழைநீர் திரண்டு வரும் வெள்ளம் போன்றது. பின்னது, அணைகட்டித்தேக்கிய நீர் வாய்க்கால்களில் வருவது போன்றது. ஆதலால் எழுத்து மொழியில் எழுவாய், பயனிலை செயப்படுபொருள் முதலியன அமைவதில் ஒழுங்குமுறை காணப்பெறுகின்றது. பேச்சுமொழியிலோ உணர்ச்சிவசமாய்ப் பேசுவோரின் உள்ளத்தில் எது முதலில் தோன்றகிறதோ, அதற்கு உரிய சொல்லே முதலில் வெளிப்படுகிறது. ஆகவே பேச்சு மொழியில் சொற்கள் மனம்போன போக்கில் அமைகின்றன எனலாம்- என்று கருதுவர் ஜே. வென்றிஸ் என்ற மொழி இயல் வல்லுநர்.

எது தமிழ்? மேற்கூறிய அடிப்படையில் தமிழ்மொழியை நோக்குவோம். தமிழ்மொழியை ஆறு கோடி (2001 கணக்குப்படி) மக்களுக்கு மேல் பேசுகிறார்கள். தமிழ் என்பது அந்த ஆறுகோடி மக்களின் பேச்சும் சேர்ந்த ஒன்றா? அன்று. ஆறு கோடி மக்களின் பேச்சில் சராசரியான ஒன்று எனலாம்; அல்லது, ஆறு கோடி மக்களில் ஏறக்குறைய ஒரே வகையாகப் பேசும் பெரும்பாலோரின் பேச்சே தமிழ் எனலாம்.

பேசும் மக்களுக்குள் பலவகை வேறுபாடுகள் இருக்கின்றமையால் ஒருசாரார் பேசும் பேச்சையே அந்த மொழி என்று கூறிவிட முடியாது. பேசுவோர் ஒவ்வொருவரின் பேச்சிலும் சிறிது சிறிது வேறுபாடு இருத்தலால், ஒவ்வொருவரும் ஒவ்வொருவகைத் தமிழ் பேசுகின்றனர் எனலாம். பேசும் இனத்தார் அல்லது வகுப்பார்க்குள் வேறுபாடு இருந்தால், ஒவ்வொரு வகுப்பு, அல்லது இனமும் ஒவ்வொருவகைத் தமிழ் பேசுவதாகக் கூறலாம். திருநெல்வேலித்தமிழ், தஞ்சைத் தமிழ், செட்டிநாட்டுத் தமிழ், வைணவ பார்ப்பனர்த் தமிழ், சுமார்த்தப் பார்ப்பனர் தமிழ், ஆதிதிராவிடர் சேரித்தமிழ், சென்னைத்தமிழ்- இவற்றில் வேறுபாடுகளின் குறிப்புகள் நமக்குப் புலனாகும்.

பலகால உழைப்பு: இன்னும் ஆராய்ந்து நோக்கினால், மொழி என்பது ஒரு தலைமுறையினர் மட்டும் பேசும் கருவி அன்று என்பது விளங்கும்; நூற்றுக்கணக்கான தலைமுறையினர், கணக்கற்ற மக்கள் வழிவழியாக வளர்த்துப் போற்றிவரும் கருவி எனத்தக்கது இது. ஓர் எடுத்துக்காட்டால் இதனை விளக்க முயல்வேன்.

தஞ்சைப் பெருங்கோயில், கங்கை கொண்ட சோழபுரத்துக் கோயில் போன்ற கட்டடம் ஒரு குறிப்பிட்ட காலத்து மக்கள் பாடுபட்டுக் கட்டிய பெருங்கட்டடம் ஆகும். ஆனால், தஞ்சை மக்கள் பேசும் மொழியாகிய தமிழ், கணக்கற்ற தலைமுறைகளாக கணக்கற்ற மக்கள் ஓயாமல் உழைத்துத் தந்தது, இன்னும் விடாமல் உழைத்துப்போற்றி வருவது என்று கூறவேண்டும்.

தொல்காப்பியனாரின் உழைப்பும் இதில் கலந்திருக்கிறது; தொல்காப்பியனார் வேற்றுமைகளைப்பற்றியும், சாரியை முதலியவைகளைப்பற்றியும் ஆராய்ந்து எழுதுவதற்குக் காரணமாக இருந்த அக்காலத்துத் தமிழைப் பேசியும் எழுதியும் வளர்த்த மக்களின் உழைப்பும் இதில் கலந்துள்ளது. தொல்காப்பியனாருக்கு முன் எத்தனையோ தலைமுறையினர் இவ்வாறு உழைத்த உழைப்பும் இதில் கலந்துள்ளது. அவர்களின் உழைப்பு முதல், இன்றை கவிஞர்கள், கட்டுரையாசிரியர்கள், கதையாசிரியர்கள் முதலியவர்களின் உழைப்புவரையில் அவற்றோடு எழுதக்காரணமாக இக்காலத்துத் தமிழ்பேசும் மக்களின் உழைப்பும் ஆகிய எல்லாம் இந்த ஒரு மொழியின் வளர்ச்சியில் கலந்திருக்கிறது. தமிழைப் போலவே, உலகத்து மொழிகளுள் ஒவ்வொன்றும் இவ்வாறு பல தலைமுறையினரின் உழைப்பால் வளர்ந்து விளங்கும் பெரிய அமைப்பாக உள்ளது எனலாம்.

மொழிக்கலப்பு: சமயம், வாணிகம் முதலிய காரணங்களால் பிறமொழிச்சொற்கள் தமிழில் அதிகமாகக் கலந்துள்ளன. பெரும்பாலும் இவை பேச்சு வழக்கில்தான் அதிகமாக அடிபட்டு வந்தன. வடமொழி வெறியாளர்கள் வேண்டுமென்றே வடசொற்களைக் கலக்கத் தொடங்கினர். தொல்காப்பியர் வடசொல், திசைச்சொல் இவற்றிற்கு இலக்கணத்திலும் இடம் வைத்து அவை வழங்கப்பெறும் முறைகளையும் வகுத்துக் காட்டியுள்ளார். தனித்தமிழ் இயக்கம் தோன்றி அவற்றிற்கு எதிர்ப்பும் தோன்றியுள்ளது. செந்தமிழ், கொடுந்தமிழ் என்ற கருத்துகளும் தோன்றியுள்ளன. கிளைமொழிகள் பற்றிய கருத்தும் இடம் பெற்றுள்ளது.

மேல்நாட்டு அறிஞர்களான கிட்டல் (கன்னடம்), குண்டெர்ட் (மலையாளம்), சி. பி. பிளெளன் (தெலுங்கு), கால்டுவெல்(தமிழ்) போன்ற அறிஞர்கள் மொழிகளைச் சித்தியமொழி இனம், ஆரிய மொழி இனம், திராவிட மொழியினம் என வகுத்துக் காட்டித் திராவிடமொழியினத்தில் தமிழ்தான் தலைமொழி என்ற கருத்தையும் நிலைநாட்டினர். திராவிட மொழியினத்தில் திருந்திய மொழிகள், திருந்தாத மொழிகள் இன்னவை இன்னவை என்று வகைப்படுத்தியும் மொழி ஆய்வில் புதுத்துறையையும் காட்டியுள்ளனர்.

மொழி ஆராய்ச்சி: பழங்காலத்தில் மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டோர் மேற்கொண்ட முயற்சி விநோதமானது. மனித வர்க்கம் முற்றிலும் ஒன்று சேர்ந்து தேவனை எதிர்த்தார்கள் என்றும், தேவன் அவர்கள்மீது சினங்கொண்டு “நீங்கள் பேசும் மொழிகள் பல்வேறு மொழிகளாக மாறக்கடவதென்றும், ஒரு பகுதியினர் பேசும் மொழி ஏனைய பகுதியினருக்கு விளங்கக் கூடாதென்றும் சாபம் இட்டார் எனவும்” நம்பினர், இச்சாபமே பல்வேறு மொழிகளைத் தோற்றுவித்தது என்று நம்பினர். எனவே மொழிகள் கடவுளால் தோற்றுவிக்கப்பெற்றன என்ற கருத்துடையராயினர் நம் நாட்டு மக்கள். தமிழ் மொழி சிவபெருமான் டமாரத்திலிருந்து பிறந்ததாக நம்புகின்றனர். பிறிதொரு சாரார் வடமொழியும் தென்மொழியும் சிவபிரானின் இருகண்கள் எனக்கொள்வர்.

கண்ணுதற்பெருங் கடவுளும் கழகமோடு அமர்ந்து
பண்ணுறத்தெரிந்து ஆய்ந்தஇப் பசுந்தமிழ்[1]

என்று தமிழ்மொழி போற்றப் பெறுகின்றது.

மொழியின் தோற்றத்தைப்பற்றி இன்னொரு விதமான நம்பிக்கையும் இருந்து வந்தது. வடமொழியை பாணிணி ஆக்கி வளர்த்தார் என்றும், தென்மொழியாகிய தமிழை அகத்தியர் கொணர்ந்து வளர்த்தார் என்றும் ஆகிய கொள்கை நம்நாட்டில் உண்டு; அதுபோலவே ஐரோப்பாவிலும் நம்பிக்கைகள் இருந்து வந்தன. இத்தாலி மொழி தாந்தே என்ற கவிஞராலும், ஆங்கிலம் சாஸர் என்னும் புலவராலும், ஜெர்மன் மொழி லூதர் என்னும் அறிஞராலும், டச்சுமொழி கிறிஸ்தியெர்ன்பெடர்ஸன் என்பவராலும் ஆக்கி வளர்க்கப்பெற்றன என்று ஐரோப்பியர்கள் நம்பினர் என்பதாக ஆட்டோயெஸ்பர்சன் எடுத்துக் காட்டுவார். ஆய்வு முறை தலையெடுத்த பின்னர் இக்கருத்து “பொய்யாய் பழங்கதையாய் மெல்ல மெல்ல” போய்விட்டது. மொழிகளின் தோற்றத்திற்கு இவர்கள் காரணர் அல்லர் என்றும், மற்றப்புலவர்களுக்கு முன்தோன்றிய இம்மொழிகளை வளர்த்தபெருமையே இவர்களுக்கு உரியது என்றும் உண்மையை உணர்ந்தனர்.

மூளைவளர்ச்சி: ஒலிக்கும் முயற்சிக்கும் உரிய உறுப்புகளைப் பொறுத்தவரையில் மனிதனுக்குச் சிறப்பாக அமைந்தவை ஒன்றும் இல்லை. மூளையின் சிறப்பான ஆற்றலே இவன் பெற்றுள்ள தனிச் செல்வமாகும். விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் அது இல்லாமையே ஒரு குறை. மனிதன் ஒலிக்கும் எல்லா ஒலிகளையும் கிளியால் ஒலிக்க முடிகிறது. ஆனால், ஒலிக்கும் பொருளுக்கும் கருத்துக்கும் மனித மூளையில் ஏற்படும் தொடர்புபோல் கிளியின் மூளையில் தொடர்பு ஏற்படுவதில்லை; வேறு பறவை விலங்குகள் மூளையிலும் இத்தகைய தொடர்பு ஏற்படுவதில்லை. அதனால்தான், மனிதன், மட்டும் மொழியை வளர்க்க முடிந்தது; முடிகின்றது.

கிளிபேசுவதாகக் கூறப்படும். ஆயினும், அது பேச்சு அன்று; பேச்சு என்பது கருத்தை உணர்த்துவது. திருவரங்கத்திலுள்ள கிளி ‘ரங்கா, ரங்கா’ என்று பேசும், பேசப்படும் ஒலிகள் சில பொருள்களையும் அவற்றின் தன்மைகளையும் செயல்களையும் உணர்த்துகின்றன. ஒலிகள் பயனின்றித் தனித்து நிற்காமல் இவ்வாறு பொருளுடையனவாய் நிற்கின்றன. இத்தகைய ஒலிகளால் அமைந்ததுதான் பேச்சு. கிளியின் ஒலிகள் கருத்துகளை உணர்த்த ஒலிக்கப் படுவதில்லை. ‘ரங்கா, ரங்கா’ என்பதன் பொருள்- அது திருவரங்கத்தில் அறிதுயில் கொள்ளும் அரங்காதன்- என்பது அதற்குத் தெரியாது. ஒலிக்கும் கிளிக்கு அவை பொருளற்ற ஒலிகளே. பொருளுணர்ச்சி இல்லாமல் ‘கிளி பேசுவதால்’ அதன் வாயில் பிறக்கும் ஒலிகள் வெற்றொலிகள் ஆகும்; பேச்சு ஆகா. மனிதன் வாயில் ஒலி பிறக்குமுன், அவற்றின் தொடர்பான கருத்துகள் அவனுடைய மூளையில் தோன்றுகின்றன. கிளியின் வாயில் பிறக்கும் ஒலிகளுக்கு ஏற்ற கருத்துகள் அதன் மூளையில் பிறப்பதில்லை. பிறக்குமாயின், கிளிகளின் வாழ்வில் வளர்ச்சி ஏற்படும்; அவையும் மனிதரைப் போல் நாகரிக அமைப்புகளான அரசு முதலியவற்றை அமைக்க இயலும்.

இத்தகைய கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு தந்தை பெரியாரின் மொழிபற்றிய சிந்தனைகளைக் காண்போம்.

3. மொழி

மொழிபற்றிய தந்தை பெரியாரின் கருத்துக்களை உங்கள்முன் வைக்கிறேன்.

(1) மொழி பற்றியவை: (i) மொழி என்பது ஒருவர் கருத்தை மற்றவருக்கு அறிவிக்கப் பயன்படுவது என்பது தவிர வேறு எதற்குப் பயன்படுவது? இது தவிர மொழியில் வேறு என்ன இருக்கிறது? இதற்காகத் தாய்மொழி என்பதும், தகப்பன் மொழி என்பதும், நாட்டுமொழி என்பதும், மொழிப்பற்று என்பதும், முன்னோர் மொழி என்பதும் எதற்காக மொழிக்குப் பொருத்துவது என்பது எனக்குப் புரியவில்லை.

(ii) மொழியின் தத்துவத்தைப்பற்றிச் சிந்தித்தால் மொழி எதற்காக வேண்டும்? ஒரு மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க வேண்டும். அதற்கு அந்தந்த நாட்டிலிருப்பவன் அந்தந்த நாட்டின் மொழியைக் கொண்டு அந்தந்த நாட்டு மக்களுக்குத் தன் கருத்தைத் தெரிவிக்கின்றான். இதைத்தவிர வேறு எந்தக் காரணத்துக்காவது மொழி வேண்டுமென்றால் அந்தக் காரணத்துக்குப் பயன்படும்படியான மொழிதான் நமக்கு வேண்டும்.

(iii) தேசிய மொழி என்றாலே நாட்டுமொழி என்றுதானே பொருள்? அப்படிப்பார்த்தால் சுதந்திரத்தமிழனுக்குத் தமிழ் அல்லாத வேறு எந்த மொழியும் அன்னியமொழிதானே? அப்படியிருக்க இன்று தேசியமொழி என்பதும் தேசம் எவன் ஆதிக்கத்திலிருக்கின்றதோ அவன் மொழியாகத்தானே ஆக்கப்பெற்றிருக்கிறது? தமிழனுக்குத் தமிழ்நாடுதானே தேசம்? தேசம் என்றால் நாடு என்றுதானே பொருள்?

(iv) எதற்கெடுத்ததாலும் பெருமையையே பேசிக்கொண்டு தாய்மொழி, வெங்காயம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி நாம் உலகத்தோடு போட்டியிடமுடியும்? உலகமே ஒருமொழிக்கு வரவேண்டும். அப்போதுதான் உலகமக்களோடு போட்டிபோட்டுப் பழக வாய்ப்பு ஏற்படும்.

(v) மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்காலச் சந்ததிக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படிச் செய்யவேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும்? அன்றியும், சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்கவேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும்.

(vi) மொழியின் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் சலுகையும் ஆதரவும் மிக முக்கியமாக உள்ளது. அரசின் ஆதரவின்றேல் ஒரு மொழி எவ்வளவு சிறப்புடையதாயினும் அதன் வளர்ச்சி மிகவும் தடைப்பட்டே நிற்கும் (இன்று தமிழ்மொழி இந்திய அரசியல்மொழியாகச் செய்ய கலைஞர் ஆட்சி முயன்று வருகின்றது).

இவற்றால், தந்தை பெரியார் அவர்கள், பயன்படும் முறையால்தான் ஒரு மொழியின் பெருமை அமைகின்றதேயன்றி வேறு எவற்றாலும் மொழிக்குப் பெருமை இல்லை என்ற கருத்துடையவர் என்பதை நாம் அறிய முடிகின்றது.

(2) தமிழ்: தமிழ்க் கவிஞர்கள் தமிழைப் புகழ்ந்ததுபோல வேறு எந்த மொழியையும் அந்தந்த மொழிக் கவிஞர்கள் புகழ்ந்தததில்லை. ஒரு காவியத்தில் அல்லது புராணத்தில் இம்மொழிப்புகழ்ச்சி இடம் பெறுகின்றது. எடுத்துக்காட்டாக,


பொருப்பிலே பிறத்து, தென்னன்
புகழிலே கிடந்து, சங்கத்து


இருப்பிலே இருந்து, வையை
ஏட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர்
நினைவிலே நடந்து ஓர் ஏன
மருப்பிலே பயின்ற பாவை
மருங்கிலே வளரு கின்றாள்
[2]

என்று பாடுவார் வரந்தருவார். ‘தமிழ்விடுதூது’ ஆசிரியர் ‘தித்திக்கும் தெள்ளமுது’, ‘முத்திக்கனி’, ‘புத்திக்குள் உண்ணப் படுந்தேன்’ என்றெல்லாம் புகழ்மாலை சூட்டுவார். ஆனால் தந்தை பெரியாருக்கு இம்முறை மனத்திற் குகந்ததாக இல்லை. தமிழ் மொழிபற்றி அவரது சிந்தனைகள்:

(i) தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழிவரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால், தமிழையும் சமயத்தையும் பிரித்துவிடவேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்கவேண்டும்.

(ii) தமிழ் மொழியின் பெருமை, பரமசிவனுடைய டமாரத்திலிருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய மொழி என்றோ சொல்லிவிடுவதாலும், தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததாலும், முதலை உண்ட பாலகனை அழைத்ததாலும், எலும்பைப் பெண்ணாக்கியதாலும், மறைக் கதவைத் திறந்ததாலும் தமிழ் மேன்மையடைந்துவிடாது. இந்த ஆபாசக் கதைகள் தமிழ்வளர்ச்சியையும் மேன்மையையும் குறைக்கத்தான் செய்யும்.

(iii) தமிழ் மிகவும் காட்டுமிராண்டிகள் கையாளவேண்டிய மொழியாகும். நாகரிகத்திற்கேற்ற வண்ணம் அமைந்துள்ள மொழி என்று கூறுவதற்கில்லை. முன்பு மதமும், கடவுளும், சாதியும் தலைதூக்கி நின்றிருந்த காலத்திற்கேற்ற வண்ணம் தமிழையும் கெடுத்து விட்டார்கள்... நாம் காலத்திற்கேற்ற வண்ணம் தமிழ் மொழியைச் சீர்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. பழங்கால அநாகரிகத்திற்கேற்றவற்றை மாற்றி இக்கால நாகரிகத்திற்கேற்றபடி சீராக்க வேண்டியது அவசியம்.

(iv) நான் தமிழுக்குத் தொண்டு செய்வது தமிழுக்காக என்று அல்ல. தாய் மொழியைப் பாதுகாத்தல் ஒவ்வொவருடைய கடனுமாகும். நம் தமிழ்மொழி தாய்மொழி என்ற மட்டிலுமல்லாமல் எல்லா வனப்புகளும் கொண்ட சிறந்த மொழி. இந்தியத் துணைக்கண்டத்திலேயே பழமை வாய்ந்த பண்பட்ட மொழியாகும். அப்படிப் பெருமைக்குரிய மொழிக்கு ஏற்படும்
 1. பரஞ்சோதியார் - திருவிளையாடல்-நாட்டுச் சிறப்பு-57
 2. வில்லிபாரதம்-சிறப்புப்பாயிரம்- (வரந்தருவார்)

ஆபத்துகளை எதிர்த்தும் அது மேன்மை அடைய வேண்டும் என்று முயன்றும் அதற்காகப் போராட்டங்கள் நடத்துகின்றோம்.

(v) தமிழுக்கு ஆபத்து வரக்கூடாது என்று ஏன் நினைக்கிறேன் என்றால் இதைவிட மோசமான ஒன்று நம்மீது வந்து உட்கார்ந்துவிடக்கூடாதே என்ற கவலையினால்தானே தவிர, தமிழை மிகவும் உயர்ந்த மொழி, எல்லாவல்லமையும் பொருந்திய மொழி என்று நினைத்து அல்ல.

(vi) தமிழ் படித்தால் சமயவாதியாகத்தான் ஆக முடிகிறதே ஒழிய, அறிவுவாதியாக ஆகமுடிவதே இல்லை. அது மாத்திரமேயல்லாமல் எவ்வளவுக்கெவ்வளவு தமிழில் படிப்பு ஏறுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவனது கண்கள் முதுகுப்பக்கம் சென்று முதுகுப்பக்கம் கூர்ந்து பார்க்கவே முடிகிறன்றதே தவிர, முன்பக்கம் பார்க்கமுடிவதே இல்லை.[குறிப்பு 5]

(vii) தமிழ் படிக்காதவனுக்குத்தான் முன்பக்கப்பார்வை ஏற்படுகிறது. தமிழ்படித்துவிட்டால் பின் பார்வைதான் ஏற்பட முடிகிறது. எந்தத் தமிழ்ப்புலவனும் மேதையும் தமிழ்ப்படித்ததன் மூலம் முன்புறம் பார்க்கும் வாய்ப்பே இல்லாதவனாக ஆய்விடுகின்றான்! தமிழனுக்கு உயிர் அவனது இலக்கியங்கள்தாம். இலக்கியங்கள் என்பவை பெரிதும் சமயஉணர்ச்சியோடு பழமைக் கற்பனைகளே அல்லாமல், அறிவு நிலையில் நின்று பழமைப் பற்றில்லாமல் ஏற்பட்ட, ஏற்படுத்தப்பட்ட, இலக்கியங்களைக் காண்பது அமாவாசையன்று சந்திரனைப் பார்ப்பது போலத்தான் முடிகிறது.[குறிப்பு 6]

(iii) தமிழை- (பிறமொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப் பெறாத) தமிழ்மூல நூல்களைத் தனித்தமிழ் இலக்கியநூல்களில் எதை எடுத்துக் கொண்டாலும் அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், அணி, யாப்பு என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ்ச்சுவை அல்லாமல் அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி அறிவு பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனைத்தைச் சிறு கருத்தை உருப்பெருக்கி வைத்துத்தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா?[குறிப்பு 7]

(ix) தமிழனைத் தலையெடுக்க முடியாமல் செய்வது தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்கள் - நூல்களே. அவை புதைகுழியின் மீது பாறாங்கல்லை வைத்து அழுத்தி இருப்பதுபோன்று தலைதுாக்க முடியாமல் செய்து வருகின்றன.[குறிப்பு 8]

(x) தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்த வேண்டாமா? கவலை எடுத்துக்கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்கள் எல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தகாலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின்மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஓர் எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்றமுடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?[குறிப்பு 9] (3) ஆங்கிலம்: இம்மொழிபற்றி தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் தீர்க்கதரிசனமானவை. பொறுப்பிலிருக்கும் கட்சி அரசு ஆலோசித்துச் செயற்படுதல் இன்றியமையாதது. தந்தையின் சிந்தனைகளில் சில:

(i) இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டாலும் உலகசம்பந்தம் இல்லாமல் இந்தியா வாழ்ந்துவிட முடியாது. வருங்கால உலகம் தேசத்துக்கு தேசம், நாட்டுக்கு நாடு இப்போதுள்ள தூரத்தில் இருக்காது; கூப்பிடு தூரத்தில் இருக்கப்போகிறது. இந்திக்கு ஆகட்டும், வேறு இந்திய மொழிக்கு ஆகட்டும் இனி அடுப்பங்கரையிலும் படுக்கை அறையிலும்கூட வேலை இருக்காது.

(ii) தமிழ் நாட்டுக்கு, தமிழருக்கு வேறு எந்த மொழி தேவையானது நல்லது, அரசியல், விஞ்ஞானம், இலக்கியம், கலை முதலியவைகளுக்கு ஏற்றது, பயன்படக்கூடியது என்று என்னைக்கேட்டால் எனக்கு ஆங்கில மொழிதான் சிறந்தது என்று தோன்றுகிறது. ஆங்கிலமே தமிழரின் பேச்சுமொழியாக ஆகுங்காலம் ஏற்பட்டால் நான் மிக்க மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவேன்.

(iii) தமிழின் மூலமோ தமிழ் இலக்கியத்தின் மூலமோ, தமிழ்ச்சமயம் தமிழ்ப்பண்பாடு மூலமோ நாம் உலகமக்கள் முன்னிலையில் ஒருநாளும் இருக்கமுடியாது. தமிழ் வடமொழியை விட, இந்திமொழியைவிடச் சிறந்ததென்பதிலும் பயன்படத்தக்கது என்பதிலும் எனக்கு ஐயமில்லை என்றாலும், நாம் இன்றைய நிலையைவிட வேகமாக முன்னேற வேண்டுமானால் ஆங்கிலம்தான் சிறந்த சாதனம் என்றும், ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனாமொழியாகவும் இருந்தாக வேண்டும் என்றும், ஆங்கில எழுத்துகளே தமிழ் நெடுங்கணக்கு எழுத்துகளாவது[குறிப்பு 10] அவசியம் என்றும், ஆங்கிலமே நமது பேச்சுமொழியாவது நலம் பயக்கத்தக்கது என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஏனெனில் ஆங்கிலம் அறிவு மொழி மாத்திரம் அல்லாமல் அஃது உலகமொழியுமாகும்.

(iv) தமிழ் மக்கள் என்னும் குழந்தைக்குத் தாய்ப்பால் என்னும் தமிழானது முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ வளருவதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? தாய்ப்பால் சிறந்தது என்பதில், தாய்ப்பாலில் சக்தியும் சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்குத் தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைப் பருகும், குழந்தை உருப்படியாக முடியுமா! தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்குப் பால் ஊறும்? அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்? தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?

(v) மண்டலமொழியை நாம் எவ்வளவு கற்றாலும் நாம் புலவனாக, வித்துவானாக, பண்டிதனாக, மடாதிபதியாக, ஆழ்வாராக, நாயன்மாராகத்தான் ஆகமுடியுமே ஒழிய, ஒரு நாளும் உலக அறிவு பெற்ற, இயற்கையின் தன்மையை உணர்ந்த அறிவின் எல்லை காண ஒரு சிறிதும் தகுதி உடையவர்களாக ஆக முடியவே முடியாது. ஆங்கிலத்தைப் புறக்கணித்துத் தமிழில் பாடம், படிப்பு, கல்வி சொல்லிக்கொடுத்தல் என்பது மனிதன் செல்லும் அறிவுப் பயணத்தை தடுத்து வழியில் குழி தோண்டி வைப்பது போலத்தான் ஆகும்.

(vi) நான் கல்லூரியில் ஆங்கிலத்தில் பாடம் சொல்லித்தர வேண்டும் என்றும் மூன்றாம் வகுப்பிலிருந்து மாத்திரமல்லாமல் எழுத்தாணிப் பால்குடிக்க வைக்கும்போதே ஆங்கிலத்தில் துவைத்துக் கொடுக்கவேண்டும் என்றும் சொல்லுகிறேன்.

(vii) எந்த ஒரு மொழியின் நடப்பும் பெரும்பாலும் அம்மொழியின்மூலம் அறியக்கிடைக்கும் கருத்துகளைப் பொறுத்துத்தான் இருக்கும். ஆரியருக்கு அடிமைப்பட்டிருக்கும் வாழ்வே ஆனந்தம் என்று நினைத்திருந்த இவ் இந்தியநாட்டு மக்களுக்கு விடுதலை வேட்கையை ஊட்டியதே ஆங்கில அறிவுதான் என்று கூறுவது மிகையாகாது.[குறிப்பு 11]

(viii) நம் இந்திய நாட்டில் உள்ள மக்கள் எல்லாநாட்டு மக்களுடனும் பழகவேண்டுமானால் ஆங்கிலம்தான் எளிதான மொழியாகும். உலக மக்களோடு பழகக் கருத்துமாற்றம் செய்து கொள்ள ஆங்கிலம்தான் கட்டாயமொழியாகும். விஞ்ஞானத்தில் கருத்து செலுத்தவேண்டுமானால் ஆங்கிலத்தினாலேயேதான் முடியும்?

(ix) ஆங்கிலம் சீர்த்திருத்தத்திற்கு ஏற்ற பொருள் உள்ள மொழி. எளிதில் மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு உள்ள மொழி. ஆங்கிலம் எந்த அளவுக்கு வளர்கிறதோ அந்த அளவுக்கு நாம் அறிவு பெற முடியும். ஆகையால் ஆங்கிலம் வளரவேண்டும். (x) அரசன் வேண்டா, குடியரசுதான் வேண்டும் என்கின்ற அறிவு, சமதர்மம் வேண்டும், சானாதனம் ஒழியவேண்டும் என்கின்ற அறிவு, ஆணும் பெண்ணும் சமம் என்கின்ற அறிவு ஆகிய சகல அரசியல், பொருளாதார முன்னேற்ற அறிவுக்கருத்துகளையும் ஆங்கிலமொழிதான் நமக்குத் தந்தது. வடமொழித் தொடர்பு சாத்திர, புராண, இதிகாச மூடநம்பிக் கைகள் நம்பகுத்தறிவை அடிமைப்படுத்தின. ஆங்கிலமொழி நம்மை அந்த அடிமைத்தளையிலிருந்து விடுவித்து எதையும் நம் பகுத்தறிவு கொண்டு சிந்தித்துப் பார்க்கும்படிச் செய்தது. இந்த இடத்தில் அக்காலத்தில் நம்நிலை பற்றி ‘மெக்காலே’ என்ற அறிஞர் ஆயத்தம் செய்த Minutes என்ற அறிக்கையை மீளநோக்கினால் புத்தொளிவீசும்.[குறிப்பு 12]

இந்த இடத்தில் அரசு தனது முரண்பட்ட கொள்கைகளைச் சிந்தித்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது அடியேனின் வேண்டுகோள்.

(அ) சாதிப்பெயர்கள்: (i) சாதிப்பெயர்கள் உள்ள தெருப் பெயர்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்கியது.

விளைவு: (i) காஞ்சியில் உள்ள ‘அய்யர் தெரு’ என்பதிலுள்ள ‘அய்யர்’ என்பதை நீக்கினால் என்ன ஆகும்?

(ii) புதுச்சேரியில் உள்ள ‘செட்டித்தெரு’ என்பதிலுள்ள ‘செட்டி’ என்ற பெயரை நீக்கினால் என்ன ஆகும்?

(iii) பேருந்துப்பெயர்களில் அரசியல் தலைவர்களின் பெயர்களை நீக்கக் கொண்டுவந்த திட்டத்தால் ‘திருவள்ளுவர்’ பெயரும் அடிபட்டுப் போயிற்று. இது மிகவும் வருந்த வேண்டியதொன்று. அரசு மீண்டும் ‘திருவள்ளுவர்’ பெயரைக் கொண்டு வரவேண்டும். ஏதாவது ஒரு குறள் வாசகத்தை எல்லாப் பேருந்துகளிலும் எழுதும்படிச் செய்தல் வேண்டும்.

(ஆ) மொழிவழிக் கல்வி: (i) தமிழ்வழியிலும், ஆங்கில வழியிலும் பயிலலாம் என்ற விருப்பமுறையைப் பயன்படுத்தலாம்.

(ii) சட்டத்தால் தமிழை வளர்க்க முடியாது. சங்கத்தால்தான் வளர்க்க முடியும்.

(iii) பண்டை அரசர்கள் சங்கத்தில் கவிபாடினார்களேயன்றி அரசவையில் அல்ல.

(iv) மூன்றாம் தமிழ்ச்சங்கம் நிறுவிய சேதுபதி அனைத்தையும் சங்கத்திற்கு விட்டுத் தாம் ஒதுங்கிக் கொண்டார்.

(v) கலைஞர் அரசும் தமிழ்வளர்ச்சிப் பொறுப்பைச் சங்கப் பலகைக்கு விட்டு, அரசு ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்பது அடியேனின் விழைவு.

(4) சமஸ்கிருதம்: சமஸ்கிருதம் பற்றியும் தந்தை பெரியாரவர்கள் சிந்தித்துள்ளனர். அவர் சிந்தனைகளை ஈண்டுத் தருகிறேன்:

(i) சமஸ்கிருதத்தினால் தமிழர்களும் தமிழ் நாடும் இன்று என்ன நிலைமைக்குத் தாழ்ந்து தொல்லையும், மடமையும், இழிவும் அநுபவிக்கின்றோம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

(ii) பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்கிருதத்தை எடுத்து வைத்துக்கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்? பொதுப்பணம் சமஸ்கிருதத்தின் பேரால் எவ்வளவு செலவாகிறது? சமஸ்கிருதத்திற்காக ஏன் ஒரு பைசாவாவது செலவாக வேண்டும்? தமிழ் மக்கள் யாரும் இதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை.

(iii) வடமொழியை நம் படுக்கை வீட்டுக்குள் விட்டுக் கொண்டு, மதம், கலாச்சாரம், கடவுள், ஆத்மார்த்தம், நாகரிகம், இலக்கியங்கள், பேச்சு வழக்கு முதலியவைகளில் தன்னிகரில்லா ஆதிக்கம் செலுத்தவிட்டுக் கொண்டு இருப்பவர்கள் இந்தி வெறுப்பு, இந்தி எதிர்ப்புகள் நடத்துவது வெட்கக் கேடானகாரியம் ஆகும்.

(iv) இந்நாட்டில் வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் மொழிக்கும் (சமஸ்கிருத்தத்திற்கு) கடவுள் பேரால் பல மகத்துவங்கள் கூறி, நம்மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாகச் சமஸ்கிருதச் சொற்களை ஆசார அனுட்டானங்களைப் புகுத்தி விட்டனர். அந்த வேற்றுமொழிக்குத் தனிச்சிறப்பு ஏதுமில்லை.

வடநாட்டுடன் தொடர்பு ஏற்பட்ட நாள்முதல்- புத்தம், சமணம் நமது நாட்டிற்கு வந்த நாள்முதல்- பாலி, பிராக்ருதம், சமஸ்கிருதம் நம்நாட்டிற்கு வந்து விட்டன; மெதுவாக கலக்கவும் தொடங்கின. பார்ப்பனர் அம்மொழியைக் கொண்டுவந்து புகுத்தினர் என்று சொல்லுவதற்கில்லை. படித்தவர்களும் சரி, படிக்காதவர்களும் சரி சமஸ்கிருதத்தைத் தேவமொழி என்றும் அதுவே தமது மொழி என்றும் உரிமை கொண்டாடி வருகின்றனர். தொடக்கக் காலத்திலிருந்து அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் நகராண்மை மாவட்டவாரியத்தின் நிர்வாகத்தில் இருக்கும் உயர்நிலைப்பள்ளிகளிலும் அம்மொழி பயில்வதற்கு வாய்ப்புகள் தரப்பெற்றிருந்தது. திருவையாறு, திருப்பதி, கும்பகோணம், சென்னை போன்ற இடங்களில் கல்லூரிகளில் பயின்று சிரோமணி பட்டம் பெறுவதற்குரிய கல்வி கற்பிக்கப் பெற்றுவந்தது. ஆனால், ஆர்வத்துடன் படிப்பவர்கள் குறைவாகவே இருந்தனர்.

60-களில் உயர்நிலை பள்ளிகளில் எல்லோரும் பொதுத்தமிழ் பயில்வதற்கும் மேற்படிவங்களில் சிறப்புத் தமிழுக்குப் பதிலாக விரும்புவோர் சமஸ்கிருதம் பயிலலாம் என்ற வாய்ப்பும் இருந்தது. ஆயினும் பார்ப்பனர்கள் இதனை விரும்பி அதிகமாகப் படித்தனர் என்று சொல்வதற்கில்லை.

காரைக்குடியில் மேற்படிவங்களில் படிவம் ஒன்றுக்கு 400க்கு மேல் இருந்த மாணவர்களில் 7 பேர்தான் சமஸ்கிருதம் படித்தனர் என்பதையறிவேன். நான் படிக்கும்போது வாயப்புகளை இழந்ததால் என் மகன் ஒருவனை சமஸ்கிருதம் படிக்கும்படி செய்தேன். 1943-முதல் தவத்திரு சித்பவாநந்த அடிகளை அறிவேன், பார்ப்பனரல்லாதார் பெருவாரியாக சமஸ்கிருதம் பயில வேண்டும் என்றும் இவர்கள் படித்து அம்மொழியில் புலமை எய்திவிட்டால் பார்பபனர் தம்மொழி என்று உரிமை கொண்டாடும் பழக்கத்தை விட்டிடுவர் என்றும் அறிவுரைகூறி வந்ததை அறிவேன். ஆனால் 1941 முதல் புதிதாகத் தொடங்கப் பெற்ற உயர்நிலைப் பள்ளியில் நான் தலைமையாசிரியனாக இருந்த காலத்தில் (1941-50) இந்தி, சமஸ்கிருதம் பயில வாய்ப்புகள் ஏற்படுத்தவில்லை. நான் விட்டு வந்த ஒன்றிரண்டு ஆண்டுகட்குப் பிறகு இந்திபயில வாய்ப்பு ஏற்படுத்தியிருப்பதாக அறிந்தேன்.

இருமொழிக் கொள்கையை அரசு செயற்படுத்தத் தொடங்கிய நாள் முதல் இந்தியும் சமஸ்கிருதமும் அரசு உயர்நிலை மேனிலை பள்ளிக்கல்வித் திட்டத்தில் இடம்பெறாமல் போய்விட்டன.


4. இந்தி எதிர்ப்பு

“உலக வாழ்க்கையில் ஓர் ஒடிந்து போன குண்டுசிக்கும் பயன்படாத மொழியாகிய இந்திக்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்பெற்று வருகிறது. என்பது வெகுநாளாகத் தமிழ் மக்கள் கவனித்து வரும் சங்கதியாகும்” என்று எழுதிய அய்யா அவர்கள் இந்தி எதிர்ப்புக்காக மேற்கொண்ட பணி மிகப் பெரியது. இவற்றை விவரமாக ஈண்டு எடுத்துக்காட்டுவேன்.

1926-ஆம் ஆண்டு முதலே பெரியார் தமிழ்நாட்டில் இந்தி நுழைக்கப்பபெறுவதை எதிர்த்து வருகின்றார்.

“இந்தியைப் பொதுமொழியாக்குவதால் நாட்டிற்கு நன்மை இல்லை. அதனால் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்குத் தடை உண்டாகும்; தமிழ் மொழியின் வளர்ச்சியும் குன்றும்”[குறிப்பு 13] என்று கூறி வந்ததுள்ளனர்.

1924-ஆம் ஆண்டு டிசம்பரில் திருவண்ணாமைைலயில் நடைபெற்ற 30-வது காங்கிரஸ் மாநாட்டில் நம் அய்யா அவர்கள் தலைமை தாங்கினார்கள் (அப்போது அவர் காங்கிரசில் இருந்தவர்). அவரது தொடக்க உரையில் கூறியது.

“தமிழ் மொழியின் பழமையையும் தமிழ் மக்களின் நாகரிகத்தையும் பழந்தமிழ் நூல்களில் காணலாம். தமிழரசர்கள் யவனதேசம், உரோமாபுரி, பாலஸ்தீனம் முதலான தேசங்களோடு வியாபாரம் செய்ததும் அவ்வியாபாரத்திற்கு ஏற்ற தொழில்கள் நாட்டில் நிறைந்திருந்ததும் பிறவும் தமிழ்நாட்டின் முழுமுதற்றன்மையை விளங்கச்செய்யும்... வங்காளிக்கு வங்க மொழிப் பற்றுண்டு. மராட்டியனுக்கு மராட்டிய மொழியில் பற்றுண்டு. ஆந்திரனுக்கு ஆந்திரமொழியில் பற்றுண்டு. ஆனால் தமிழனுக்கு தமிழில் பற்றில்லை. இது பொய்யோ? தமிழ்நாட்டில் தமிழ் புலமை மிகுந்த தமிழர்கள் எத்தனை பேர்? ஆங்கிலப்புலமையுடைய தமிழர்கள் எத்தனை பேர்? என்று கணக்கெடுத்தால் உண்மை விளங்கும். தாய்மொழியில் பற்றுச்செலுத்தாதிருக்கும்வரை தமிழர்கள் முன்னேற்றமடைய மாட்டார்கள்.” என்பதால் இவர்தம் அளவு கடந்த தமிழ்ப்பற்றினை அறியலாம். தமிழைப் பேணவேண்டும் என்பதில் அய்யா அவர்கட்கு இருந்த இணைவேறு எவர்க்கும் இல்லை.

(அ) இந்தி எதிர்ப்புபற்றி ‘குடியரசில்’ (7.3.1925) ‘தமிழுக்குத் துரோகமும் இந்திமொழியின் இரகசியமும்’ என்ற தலைப்பில் ‘சித்திரபுத்திரன்’ என்ற புனைப்பெயரில் எழுதப்பெற்ற கட்டுரையின்சில பகுதிகள்:

“இந்திக்காக செலவாகியிருக்கும் பணத்தின் பெரும்பாகம் பார்ப்பனரல்லாருடையது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இந்தி படித்தவர்களில் 100க்கு 97 பேர் பார்ப்பனர்கள். தமிழ்நாட்டில் மொத்தத் தொகையில் 100க்கு 97 பேர் பார்ப்பனரல்லாதாராயிருந்தும் 100க்கு 3 வீதம் உள்ள

பார்ப்பனர்கள்தாம் இந்தி படித்தவர்களில் 100க்கு 97 பேர்களாயுள்ளனர்; பார்ப்பனரல்லாதவர் 100க்கு 3 பேர்களாவது இந்தி படித்தவர்களாயுள்ளனரா என்பது சந்தேகம். இந்தப் படிப்பின் எண்ணிக்கை எப்படியிருந்தாலும் நமக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை. ஆனால் இந்திக்கு எடுத்துக் கொள்வதைப் போல 100க்கு ஒரு பங்கு கவலைகூட தமிழ்மொழிக்கு எடுத்துக் கொள்வதில்லை என்பதையும், இந்தி படித்த பார்ப்பனர்களால் நமக்கு ஏற்படும் கெடுதலையும் நினைக்கும்போது இதைப்பற்றி வருந்தாமலும், இம்மாதிரி பலன்தரத்தக்க இந்திக்கு நாம் பாடுபட்ட முட்டாள்தனத்திற்கும் நாம் பணம் கொடுத்த பைத்தியக்காரத் தனத்திற்கும் வெட்கப்படாமல் இருக்க முடியவில்லை.

இந்தியைப் பொதுமொழியாக்க வேண்டும் என்ற கவலையுள்ளவர்கள்போல் தேசத்தின் பேரால் ஆங்காங்குப் பார்ப்பனர்கள் பேசுவதும் அதை அரசுப் பள்ளிகள் முதலிய பலவிடங்களில் கட்டாய பாடமாக்க முயற்சி செய்வதும் யார் நன்மைக்கு? இனி கொஞ்சகாலத்திற்குள் இந்திப் பிரசாரத்தின் பலனை நாம் அநுபவிக்கப் போகிறோம். பார்ப்பனரல்லாதார்க்கு ஏற்பட்ட பல ஆபத்துகளில் இந்தியும் ஒன்றாய் முடியும் போலுள்ளது.

பொதுவாய் இந்தி என்பது வெளிமாநிலங்களில் பார்ப்பன மதப்பிரச்சாரம் செய்யக்கற்பித்துத்தரும் ஒருவித்தையாகிவிட்டது. இந்த இரகசியத்தை நமது நாட்டுப் பாமரமக்கள் அறிவதே இல்லை; இரண்டொருவருக்கு அதன் இரகசியம் தெரிந்தாலும் பார்ப்பனர்களுக்குப் பயந்து கொண்டு தாங்களும் ஒத்துப்பாடுகிறார்கள் யாராவது துணிந்து வெளியில் சொன்னால் இவர்களைத் தேசத்துரோகி என்று சொல்லிவிடுகிறார்கள்”

(ஆ) இக்கட்டுரையில் மேலும் பல உண்மைகள் உள்ளன.

(இ) 1930-இல் நன்னிலத்தில் (தஞ்சைமாவட்டம்) நடைபெற்ற ஒரு சுயமரியாதை மாநாட்டில் இந்தித் திணிப்பைக் கண்டித்து முடிவு செய்யப் பெற்றது. இந்தி எதிர்ப்புத் தீர்மானத்தை எழுதியவர் தோழர் எஸ். இராமநாதன் அவர்கள். இத்தீர்மானத்தை முன்மொழிந்தவர் தோழர் சாமி. சிதம்பரனார் அவர்கள். தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேறியது.

பல ஆண்டுகட்கு முன்னரே மறைமலையடிகள் “இந்தி பொதுமொழியாவதற்குத் தகுதியுடையதன்று; இந்தித் திணிப்பால் தமிழ்கெடும்; தமிழர் துன்புறுவர்” என்பவற்றை விளக்கிக் கட்டுரை எழுதியுள்ளார்.

தமிழ் நாட்டில் இந்திக்கு எதிர்ப்பு இருக்கும் செய்தியை மாண்புமிகு முதலமைச்சர் ஆச்சாரியார் அறிவார். ஆயினும் “இந்தியைக் கட்டாய பாடமாக்குவேன்” என்று கூறினார். காங்கிரசுகாரர்கள் பலரும் எதிர்த்தனர். தோழர் பசுமலை எஸ். சோமசுந்தர பாரதியார் அவர்கள் அதைக் கண்டித்து முதலமைச்சருக்குக் கடிதம் எழுதினார். தமிழ் நாடெங்கும் பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் முதலமைச்சரின் கருத்து கண்டிக்கப்பெற்றது.

(ஈ) 1937 டிசம்பர்-26இல் திருச்சியில் தமிழர் மாநாடு கூட்டப்பெற்றது. [குறிப்பு 14] தோழர்கள் கி.ஆ.பெ. விசுவநாதம், டி.பி, வேதாசலம் (வக்கீல்) ஆகியவர்கள் இதனைக் கூட்டமுனைந்து நின்றனர். இதில் கலந்து கொண்டவர்கள்: காங்கிரசு கட்சியினர், நீதிக்கட்சியினர், முஸ்லீம்லீக்கினர், கிறித்தவ சபையினர், வைதிகர்கள், புலவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அனைவருமே. மாநாட்டின் தலைவர் பசுமலை நாவலர் எஸ். சோமசுந்தர பாரதியார். இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு, தமிழ்நாட்டைத் தனி மாநிலமாக்கல் போன்ற தீர்மானங்கள் நிறைவேறின. இம்மாநாட்டைப் பார்த்தோர் தந்தை பெரியாரையே புகழ்ந்தனர். அவருடைய உண்மைக்கொள்கையே இம்மாநாடாக உருக்கொண்டதென வியந்தனர். இதுமுதல் தமிழர் கிளர்ச்சி வலுத்தது. நகரெங்கும் கூட்டங்கள், மாநாடுகள், தமிழ் உரிமைப்போர், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஆகியவை நடைபெற்ற வண்ணம் இருந்தன.

ஆயினும் முதலமைச்சர் ஆச்சாரியார் விட்டுக் கொடுக்க வில்லை. ஆணவத்தைத் தளர்வுறச் செய்தது. சிலமாற்றங்களுடன் இதித் திணிப்பு நுழைந்தது. எல்லாப் பள்ளிகளிலும் என்றிருந்த திட்டம் 125 பள்ளிகள் (பரீட்சாரத்தமாக) என்று ஆயின. படிக்கவேண்டியதும் முதல் மூன்று படிவங்களில்தாம் இதற்கும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை. திட்டம் பிசுபிசுத்தது; செத்தபாம்பு மாதிரிதான். திரு.ஆச்சாரியார் மக்கள் எதிர்ப்பு நாடியை நன்கு அறிபவர். ஏனைய காங்கிரசார்போல் திமிர் பிடித்தவர் அல்லர்.

(உ) 1938 பிப்பிரவரி 27 இல் காஞ்சிமாநாகரில் ஒரு பெரிய இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டுத் தலைவர் சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள்; ஆந்திரர் (பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரானவர்). மாநாட்டைத் திறந்து வைத்தவர் முன்னாள் சட்ட உறுப்பினர் சர்.எம்.கிருட்டிணநாயர். தொடர்ந்து மறியல்கள், உண்ணா விரதம், போராட்டங்கள் முதலியவை நடைபெற்ற வண்ணம் இருந்தன. சட்ட மறுப்புக் காலத்தில் வைஸ்ராய் பிரபுவால் பிறப்பிக்கப் பெற்ற கிரிமினல் திருத்தச் சட்டத்தைக் காங்கிரசு அரசு இந்தி எதிர்ப்புத் தொண்டர்கள் மீது தாராளமாய்க் கையாண்டது. இது குறித்துப் பலகண்டனக் குரல்கள் எம்மருங்கும் எழுந்தன. தந்தை பெரியார் “அமைச்சர் இல்லத்துக்கு முன் மறியல் செய்யாதிருப்பது நலம்” என்றோர் அறிக்கை விடுத்தார். ஆச்சாரியாரைப் போலவே பெரியாரும் இங்கிதம் தெரிந்தவர்.

(ஊ) திருச்சியிலிருந்து 100 போர் வீரர்கள் கொண்ட இந்தி எதிர்ப்புப் படையொன்று சென்னையை நோக்கிச் சென்றது. இப்படையைத் தந்தை பெரியார், ஜனாப் கலிஃபுல்லாசாகிப் எம்.ஏ.(சிலகாலம் திருச்சி மாவட்ட வாரியத் தலைவராயிருந்தவர்) முதலியவர்கள் நல்லுரை கூறி வழி அனுப்பி வைத்தனர்.

இப்படையில் காஞ்சியைச் சேர்ந்த பரவஸ்து இராச கோபாலாசாரியர், இராவ்சாகிப் குமாரசாமி பிள்ளை, மணவை ரெ. திருமலைசாமி, கே.வி. அழகர்சாமி, இராமாமிர்தத்தம்மாள், தோழர் முகைதீன் போன்ற பலர் இப்படையில் சென்றனர். இப்படை சென்னையை அடைந்ததும் அதற்கு வரவேற்பு அளிக்க சென்னைக்கடற்கரையில் என்றும் கண்டிராத அளவு சுமார் 70,000 பேர்கள் கூடினர். அன்று அக்கூட்டத்தில் பேசும் போதுதான் தந்தை பெரியார் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முதற்போர்க்குரலிட்டு அதனை விளக்கிக் கூறினார். அன்று முதல் அதுவே தமிழரின் கொள்கையாயிற்று.

இப்படைவீரர்களில் பலர் சென்னையில் மறியலில் ஈடுபட்டுச் சிறை சென்றனர். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின் பேரால் கூட்டுறவு இயக்க முன்னாள் துணைப்பதிவாளர் சி. டி. நாயகம் (தி.நகர் சர். தியாகராசர் மேனிலைப் பள்ளியை நிறுவியவர்), தோழர் கே. எம். பாலசுப்பிரமணியம் பி.ஏ.,பி.எல்., (சிறந்த பேச்சாளர், சைவசித்தாந்தி), ஈழத்து சிவானந்த அடிகள், சி.என். அண்ணாத்துரை (முதல் தி.மு.க முதலமைச்சர்), டி.ஏ.வி நாதன், சாமி அருணகிரிநாதர், கே. இராமய்யா, மறை. திருநாவுக்கரசு, திருவாரூர் பாலசுந்தரம் போன்ற 1,500 பேர்கள் சிறைப்பட்டனர்.

(எ) இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நம்நாட்டு மகளிர் மனத்தையும் கொள்ளை கொண்டது. அவர்களும் மொழிப்போரில் ஈடுபட்டனர். 1938 நவம்பர் 13-இல் சென்னையில் மகளிர் மாநாடு நடைபெற்றது. திருவாட்டி நீலாம்பிகை அம்மையார் (மறைமலையடிகளின் திருமகளார்) மாநாட்டுத்தலைவர். இம்மாநாட்டில் தந்தைபெரியார் ஆற்றிய சொற்பொழிவு தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்தது; உரிமை உணர்ச்சியை எழுப்பிவிட்டது. இம்மாநாட்டில்தான் ஈ. வெ. இராமசாமி பெயருக்கு முன் பெரியார் என்னும் அடைமொழி கொடுத்து அழைக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

(ஏ) பெரியார் மீது வழக்கு: இம்மாநாடு முடிந்தபின் பல பெண்கள் மறியல் செய்து சிறைபுகுந்தனர். இந்த வீராங்கனைகளைப் பாராட்டும் கூட்டங்களில் நம் அய்யா அவர்களும் பாராட்டினார்கள்; பெண்களின் வீரதீரச் செயல்களை எடுத்துக் காட்டினார்கள். இந்தி எதிர்ப்புக்கும் பெரியாரே காரணம் என்று அரசு கருதியது. ஆதலின் அவரைச் சிறையிலிடக் காலம் கருதியது. பெரியாரின் இருபொழிவுகளைக் கொண்டு அவர்மீது குற்றம் கற்பித்தது. “பெண்களை மறியல் செய்யத் தூண்டினார்” என்பதே அப்பழி. பெரியாருக்கும் அரசு அழைப்பு அனுப்பியது. மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொண்டார்.

வழக்கு சென்னையில் 1938 டிசம்பர் 5, 6ஆம் நாட்களில் நடைபெற்றது. அவர் வழக்கம்போல் எதிர் வழக்காடவில்லை. சர் பன்னீர்செல்வம், குமார ராஜா முத்தய்யா செட்டியார் போன்றவர்கள் எதிர்வழக்காட வற்புறுத்தியும் மறுத்துவிட்டார். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின் நோக்கம், தமது அரசியல் கொள்கை ஆகியவற்றை விளக்கும் அறிக்கையொன்றை எழுத்து மூலம் நீதிபதியிடம் கொடுத்ததோடு நிறுத்திக் கொண்டார்.

அவர்கொடுத்த வாக்கு மூலத்தின் சில பகுதிகள்:

“இந்தக் கோர்ட்டு காங்கிரசு அமைச்சர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்டது. நீதிபதியாகிய தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவைதவிர இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் காங்கிரசு அமைச்சர்கள் அதிதீவிர உணர்ச்சியுடன் உள்ளார்கள். அதுவிஷயத்தில் நியாயம் அநிநாயம் பார்க்க வேண்டியதில்லை என்றும், கையில்

கிடைத்த ஆயுதத்தைப் பயன்படுத்தி ஒழித்தாக வேண்டும் என்றும், இந்தி எதிர்ப்புகிளர்ச்சியைத் திடீரென்று வகுத்து புகுந்த திருடர்களுடன் ஒப்பிட்டும் மாண்புமிகு அமைச்சர் கடற்கரைக் கூட்டத்தில் பேசியுள்ளார். இந்தி எதிர்ப்பு விஷயத்தில் அமைச்சர்கள் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் அடக்குமுறையே என்பது என் கருத்து. அடக்குமுறைக் காலத்தில் இம்மாதிரிக் கோர்ட்டுகளில் நியாயம் எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம். இந்த இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சி ஒரு செயல் விளக்கம் (Demonstration) ஆக மேற்கொள்ளப்பெற்று வருகிறதேயொழிய அதில் எவ்வித நிர்ப்பந்தப்படுத்தும் கருத்தும் இல்லையென்று தெரிவித்துக் கொள்ளகிறேன். இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சி நிறுவனத்தின் கொள்கையில் சட்டம் மீறக்கூடாதென்பது முக்கிய நோக்கமாகும். நான் சம்பந்தப்பட்ட சுயமரியாதை இயக்கம், தமிழரியக்கம், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி, ஜஸ்டிஸ் இயக்கம் ஆகியவையும் சட்டத்திற்கு உட்பட்டே கிளர்ச்சி செய்ய வேண்டும் என்ற கொள்கையுடைவைகளே. இதுவரை அக்கொள்கை மாற்றப்படவே இல்லை. என்னுடைய பேச்சு முழுவதையும் படித்துப்பார்த்தால் இது தெளிவாகும். ஆகவே, நீதிமன்றத்தார் அவர்கள் தாங்கள் திருப்தி அடையும் வண்ணம் அல்லது அமைச்சர்கள் திருப்தி அடையும் வண்ணம் எவ்வளவு அதிகத் தண்டனை வழங்கமுடியுமோ அதையும், பழிவாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க முடியுமோ அதையும் கொடுத்து, வழக்கு விசாரணை நாடகத்தை முடித்து விடும்படி வணக்கமாகக் கேட்டுக் கொள்கிறேன்.”

இந்தவழக்கு ஜார்ஜ்டவுன் போலீஸ் நீதிமன்றத்தில் நீதிபதி திரு. மாதவராவ் முன்னிலையில் நடந்தது. நீதிபதி வழக்கில் முடிவு கூறினார். “இவர் செய்த குற்றங்கள் இரண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோராண்டு கடுங்காவல், ஒவ்வோர் ஆயிரம் ரூபாய் அபதாரம். அபராதம் செலுத்தத் தவறினால் மீண்டும் அவ் ஆறு மாதம் தண்டனை. இரண்டு தண்டனைகளையும் தனித்தனி காலத்தில் அடையவேண்டும்” என்பது. பின்னர் அரசு கடுங்காவலை வெறுங்காவலாக மாற்றி விட்டது.

இச்செய்திகளை அக்காலத்திலேயே பெரியாருடன் நெருங்கிப் பழகியும் அவர்தம் கொள்கையைக் கடைப்பிடித்தும் ஒழுகிய கவிஞர் நாரா. நாச்சியப்பன்,

நெடுநாட்கள் உறங்கிவிட்ட தமிழ்ப் பெண்கள்
தமையெல்லாம் நீஎழுப்பித்
தொடுப்பிர்போர், தமிழ்த்தாயைத் தொலைக்குவழி தடுத்தென்றே துண்டி விட்டாய்!
கொடுங்குற்றம் செய்தனைநீ யபராதம் கொடுவென்று
கூறி இன்னும்
கடுங்காவல் தண்டனையிட் டடைத்தார்கள் தாத்தாவைக்
கம்பிக் கூட்டில்.
[குறிப்பு 15]

என்று பாடலாக வார்த்துக் காட்டி தமிழ் மக்களுக்கு எழுச்சியூட்டினார்.

பெரியார் தண்டனை ஏற்றதுபற்றி அவர்தம் கெழுதகை தோழர் திரு.வி.க. அவர்கள் எழுதியது:

“திரு.ஈ.வெ. இராமசாமிநாயக்கர் கடுங்காவல் தண்டனை ஏற்றுச் சிறைக் கோட்டம் நண்ணினர். வெள்ளிய தாடி அசைய, மெலிந்த தோல் திரங்க, இரங்கிய கண்கள் ஒளிர, பரந்த முகம் மலர, கனிந்த முதுமை ஒழுக, ஒழுகத் தாங்கிய தடியுடன் திருநாயக்கர் சிறைபுகுந்த காட்சி அவர்தம் பகைவர், நொதுமலர், நண்பர் எல்லாருள்ளத்தையும் குழையச் செய்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

முதுமைப்பருவம்! காவல்! கடுங்காவல்! என்னே! இந்நிலையை உன்ன உருகுகிறது. திருநாயக்கருடன் மிக நெருங்கிப் பழகிய சிலர் அமைச்சர் பதவியில் வீற்றிருக்கின்றனர். அவர்தம் மனமும் சரிந்தே இருக்கும். வயதின் முதிர்ச்சி எவரையும் அலமரச் செய்யும்”

-நவசக்தி 9.12.1938 தலையங்கம்.

இக்கருத்தினயே மனமுருகிப் பாடிக் குமுறுகின்றார் கவிஞர். நாச்சியப்பன்!

வெள்ளியமென் தாடியசைந் தாடத்தன் மேனியிலே
முதுமை தோன்ற
அள்ளிஉடை ஒருகையில் தடியைமறு கையிலெடுத்
தலர்ந்த பூப்போல்
வெள்ளைமனத் தூய்மையது முகத்தினிலே மலர,உடல்
மெலிந்து கண்டோர்
உள்ளமெலாம் கசியமழை போற்கண்ணி பொழிய
சிறைக்குள்ளே சென்றார்
[குறிப்பு 16]

என்ற ஒரு பாடலில்.

நீதிபதியின் தீர்ப்பைக் கேட்டவுடன் பெரியார் அதை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அன்றலர்ந்த செந்தாமரையினை நிகர்த்தது “அவர் முகம்”.[குறிப்பு 17] ஆனால், அன்பர் பலரும் கண்ணீர் விட்டனர். பன்னீர்செல்வம் போன்ற கலங்கா நெஞ்சினரும் கலங்கிவிட்டனர். நாடெல்லாம் அழுதன. நடுநிலைதவறாத நாளேடுகள் அரசின் போக்கைக் கண்டித்தன. நவசக்தி “ஓய்வு என்பதை அறியாது வீரகர்ச்சனை புரிந்து வந்த கிழச்சிங்கம் இப்பொழுது ஓய்வு பெற்றிருக்கிறது. சிறையில் தலைநிமிர்ந்து நடக்கிறது” (நவசக்தி-9.12.1938. தலையங்கம்) என்று எழுதியது.

பெரியாரைச் சிறையில் வைத்தால் தமிழர் கிளர்ச்சி அடங்கிவிடும் என்று அரசு நினைத்தது. மாறாக அது வலுத்தது. தடுப்பு ஊசி போட்ட பலன் போலாயிற்று. பெரியாரின் வீரகர்ச்சனை தமிழர் காதுகளில் ஒலித்தது. பெரியார் தெளித்த விதைகள் முளைத்து எங்கும் செழித்து வளர்ந்தன. “தமிழ் நாடு தமிழருக்கே” என்று அவர் தந்த மந்திரத்தின் வல்லோசை வானையும் பிளந்தது.

நாமிருக்கும் நாடுநம தென்றறிந்தோம் -இது
நமக்கே உரிமையாம் என்பதுணர்ந்தோம்.
[குறிப்பு 18]

என்ற பாரதியாரின் கவிதை அடிகள் எம்மருங்கும் குதித்துக் கூத்தாடின.


பெரியார் சிறைப்பட்ட சிலநாட்களுக்குப் பின்னர் 1938 டிசம்பர் 18இல் அவர்தம் மணிவிழா நாடெங்கும் நடைபெற்றது. அவர் பெயரால் அன்னதானங்கள், ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், அவர்கொள்கைக்கு மாறாக அவர் படத்துக்கு தூபதீப ஆராதனைகள் நடைபெற்றன. தமிழ் நாடெங்கும் மூலைமுடுக்குகளிலும் அவர் விழா கொண்டாடப் பெற்றது. அவர் தியாகத்தை மக்கள் உணர்ந்தனர். “தியாகராஜராக” மக்கள் மனத்தில் காட்சி அளித்தார். அரசு செய்வதறியாது திகைத்தது. ஆரவாரித்தனர் தமிழர். இராமன் வனவாசத்தைக் கேட்டபோது அயோத்திமக்கள் ஆர்த்தெழுந்ததுபோல் இராமசாமியின் சிறைவாசம் கேட்ட தமிழகம் ஆர்த்தெழுந்தது என்று ஒப்பிட்டும் சொல்லலாம்.

நாரா. நாச்சியப்பன் பாடல்கள்: இந்தி எதிர்ப்பு நடைபெற்ற அக்காலத்திலேயே தந்தையொடு நெருங்கி உறவாடிய கவிஞர் நாச்சியப்பன். அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் நிரல்படத் தொகுத்து கவிதைகளாக வார்த்து நமக்குத் தந்துள்ளார். அவற்றுள் பலவற்றை ஈண்டுத் தருகின்றேன்.


தன்வாழ்வைத் தொண்டாக்கித் தமிழ்நாட்டை
வளமாக்கத் தகுஞ்செயல்கள்
நன்றாற்றி நம்பெரியார் ஈ.வெ.ரா
முதுமைதனைக் கண்ட போதில்
தென்னாட்டில் தமிழகத்தில் இந்திஎனும்
புன்மொழியைத் தேசப் பேரால்
சென்னைமுதல் அமைச்சரவர் கட்டாயம்
ஆக்கிவிடத் திட்டம் செய்தார்! (1)

தாய்மீதில் விருப்பற்ற ஓரிளைஞன்
தன்னுழைப்பைத் தாய்நாட்டிற்கே
ஈயென்றால் மதிப்பானா? எதிரிமொழி
மதித்துயிரவைத் திருப்பான் பேடி!
தூயதமிழ் நாட்டில்செந் தமிழ்மொழியை
மன்றத்திந்தி தோன்றின் நாடே
தாயென்ற நிலைபோகும்! தமிழ்சாகும்!
இந்தியெனும் கனிமே லாகும்! (2)

ஈதறிந்த ஈரோட்டுத் தத்தாதாம்
ஓயாமல் எழுத்தி னாலும்
மோதியுணர் வலையெழுப்பி மக்களைத்தம்
வயப்படுத்தும் மொழியி னாலும்
தீதுவரும் இந்தியினால்! முன்னேற்றம்
தடையாகும்! தீந்த மிழ்க்கும்
ஆதரவு கிடைக்காமல் அழிவுவரும்!
இந்திஉயர் வாகும் என்றார் (3)

சிறுதுரும்பும் பற்குத்த உதவும் இந்த
இந்தியெனும் தீமை மிக்க
சிறுமொழியால் எட்டுணையும் பயனில்லை!
அதுவளர்க்கச் செலவழிக்கும்
பெரும்பணமோ தமிழர்களின் பணமாகும்;
படிக்கவரும் பெரும்பா லோர்தாம்


வெறும்பேச்சுப் பேசித்தம் வயிறடைக்கும்
வித்தைகற்ற மேலோர் என்றார்! (4)

ஆட்சிசெயும் முலமைச்சர் பார்ப்பனராய்
இருந்தமையால் [குறிப்பு 19] அவர்வ டக்குப்
பேச்சுதனைத் தமிழகத்தில் வளர்த்துத்தீந்
தமிழ்கெடுக்கும் பெருவி ருப்பால்
சூழ்ச்சிசெய்தார்! இவ்வுண்மை தனையறிந்து
மக்களுக்குச் சொன்னார் தாத்தா!
‘சீச்சியிவர் துரோகி’ எனச் செந்தமிழ
ராய்ப்பிறந்தும் சிலர்ப ழித்தார். (5)

தூய்தமிழை வடமொழியாம் நச்சகற்றிக்
காப்பாற்றத் துடிக்கும் நெஞ்சு
வாய்ந்ததிருப் பாரதியார்[குறிப்பு 20]தலைமையிலே
கூடிநின்ற மிக்க ஆர்வம்
பாய்தமிழர் மாநாட்டை[குறிப்பு 21]திருச்சியிலே
பார்த்தவர்கள் இதுதான் அந்தத்
தூய்மனத்தார் ஈரோட்டுத் தாத்தாவின்
நினைவொத்த தோற்றம் என்றார். (6)

கிளர்ச்சியினை அடக்கித்தம் இந்தியினைப்
புகுத்திவிடும் கீழ்மை யான
உளவுறுதி முதலமைச்சர்க் கிருப்பதனைத்
தமிழரெல்லாம் உணர்ந்த போதில்
தளர்ச்சியிலை எருமைத்தோல் இல்லையெமக்
கெனவுரைத்து ‘தமிழ்வாழ் கெ’ன்று
கிளர்ந்தெழுந்தார்! பெரியாரே தலைவரெனில்
வேறென்ன கேட்க வேண்டும்? (7)

இந்து-தியா லாஜிகல் பள்ளிமுன்னும்
முதலமைச்சர் வீட்டு முன்னும்
செந்தமிழை மீட்பதற்குச் சேர்ந்தபடை
வீரரெலாம் சென்று நின்று
‘இந்தி விழ! தமிழ்வாழ்க!’ எனமுழங்கப்
பல்லடத்துப் பொன்னு சாமி
செந்தமிழைக் காவாமல் எனக்குணவு
செல்லாதென்றாணை யிட்டான்! (8)


தமிழ்காக்கும் வீரரைத்தண் டிக்கவில்லை
மற்றெவர்க்குத் தண்டிப் பென்றால்
எமைவீட்டின் எதிர்நின்று வசைமொழிந்த
தாற்செய்தோம் என்று சொன்ன
அமைச்சர்மொழி கேட்டபின்னர் ஈரோட்டுத்
தாத்தாஓர் அறிக்கை யிட்டார்;
தமிழர்களே! ‘இனிஅமைச்சர் வீட்டின்முன்
கிளர்ச்சியின்றித் தமிழ்காப்பீரே!’ (9)

தலைவர்சொல் பின்பற்றித் தமிழரெலாம்
ஒதுங்கிவிட்ட தன்மை கண்டும்
நிலைமையறி யாமல்ஒரு சிங்கத்தின்
எதிர்வாலை நீட்டி நின்று
அலைக்கழிக்கும் சிறுநரிபோல் உமையெல்லாம்
சிறைக்குள்ளே அடைக்க வல்லோம்!
இலை எம்மைத் தடுப்பவர்கள் எனுமமதை
அரசியலார்க் கேறிற் றன்றே! (10)

மமதையினைத் தமிழரிடம் காட்டுகின்ற
அரசியலை மட்டம் தட்ட
அமைத்தபடை வீரரொரு நூற்றுவரைத்
திருச்சியினின்றனுப்பி வைத்துத்
தமிழ்காத்துத் திரும்பிடுவீர் எனவாழ்த்துக்
கூறியந்தத் தமிழர் போற்றும்
தமிழ்தலைவர் ஈரோட்டுத் தாத்தாநற்
சென்னைக்குத் தாமும் சென்றார்! (11)

சென்னையிலே கடற்கரையில் மற்றுமொரு
கடல்வெள்ளம் சேர்ந்த தேபோல்
மின்னனைய மாதர்களும் ஆடவரும்
இளைஞர்களும் மிகுந்த ஆண்டு
சென்றவரும் தமிழ்காத்தார் எல்லோரும்
சேர்ந்திருந்து செயமு ழக்கம்
நின்றுகடல் செய்தஅலை ஓசையினும்
பெரிதாக நிறைந்த அன்றே! (12)

எழுபதினாயிரமக்கள் ‘தமிழ் வாழ்க’
‘ஒழிக இந்தி’ எனஒ லிக்கக்
கிழவரவர் எனினுமொரு இளைஞரென
முனைந்துதமிழ்க் கிளர்ச்சி செய்ய
எழுந்தனர் அங் கோர்மேடை தனிலேறி
நின்றாரவ் ஈரோட் டண்ணல்!


எழுந்ததுகாண் வீரத்தின் திருத்தோற்றம்
மனிதஉரு வெடுத்துக் கொண்டே! (13)

விழுந்துவிட்ட தமிழினத்தை விழித்துப்போர்
செயச்செய்த வீரப் பேச்சை
எழுந்துதமிழ்ச் சொற்களினால இளைஞர்களைத்
தட்டிவிட்ட இலக்கி யத்தைக்
கொழுந்துவிட்டுத் தமிழார்வம் இன்றெரியச்
செயஅன்றே கொளுத்தி விட்ட
செழுந்தமிழின் வீறாப்பைச் செவிமடுத்தோர்
உணர்வடைந்தார்! சிங்க மானார்! (14)

தாய்மொழியைக் காப்பாற்றத் துடிந்தெழுந்து
கிளர்ச்சிசெய்த தமிழ்ச்சிங் கங்கள்
ஆயிரத்தைந் நூற்றுவரை அரசியலார்
சிறைகூடத் தடைத்து வைத்தார்
நோயிருந்தும் தாளமுத்து நடராசர்
தமிழ்க்குற்ற நோயை நீக்கப்
போய்ச்சிறையில் உயிர்விட்டார் அரசியலார்
கைவிட்டார் பொருமிற் றுள்ளம் ! (15)

மறைமலையார் தமிழ்களித்த திருநீலாம்
பிகைமுதலாய் மாத ரெல்லாம்
நிறை “தமிழ்நாட் டுப்பெண்கள் மாநாட்”டில்
கூடிநின்றோர்[குறிப்பு 22] நெஞ்சில் பாய
இறைத்துவிட்ட தாத்தாவின் சொல்வெள்ளம்
உணர்வெழுப்ப எங்கும் பெண்கள்
சிறைபுகுதற் கஞ்சாமல் கிளர்ந்தெழுந்த
வரலாறோ சிலம்புக் காதை! (16)

தாத்தாவைச் சிறையிலிட்டுத் தமிழர்களை
எளிதாகத் தாம்அ டக்கப்
பார்த்தார் அவ்வரசியலார் பயனில்லை!
தமிழகத்தைப் பாரதத்தில்
சேர்த்தாளும் முறைமையினால் தமிழழிக்கப்
பகைசூழ்ச்சி செய்த தாய்ந்து
தாத்தாசெந் “தமிழ்நாடு தமிழர்க்கே”
எனுந்திட்டம் தமிழர்க் கீந்தார். (17)

தமிழரெலாம் மாநாடு கூட்டிஅதில்
சிறையிருக்கும் தாத்தா வைப்போல்


அமைந்தஉரு வம்தலைவ ராகப்பன்
னீர்செல்வம் அருகு வந்தார்.
சுமைசுமையாய் மறவரெலாம் தமக்கிட்ட
மாலைகளைத் தூக்கி வந்து
எமதுபெருந் தலைவரே! என்றடிபணிந்து
மாலைபடைத் தெழுந்தார் செல்வம்! (18)

மலைபோலும் மலர்மாலை தனைப்பன்னீர்
செல்வம்அவர் மதிப்பு வாய்ந்த
தலைவர்சிலை முன்படைத்த போதிலங்குக்
கூடிநின்றோர் தாத்த உள்ள
நிலைநினைந்தார் உளம்நொந்தார்! அருவிஎனக்
கண்களினால் நீர்பொழிந்தார்!
தலைவணங்கிப் ‘பெரியாரே தலைவர்’ என
உறுதிசொன்னார் தமிழ்நாட் டிற்கே[குறிப்பு 23] (19)

சில பாடல்கள் விடப்பெற்றன; சிலவேறிடத்தில் வந்துள்ளன.

(ஐ) பெரியாரின் சிந்தனைகள்: இவற்றில் சிலவற்றைக் காண்போம். அவை பல்வேறு இடங்களில் பேசிய பேச்சிலும் பல்வேறு ஏடுகளில் எழுதிய கட்டுரைகளிலுமிருந்து தொகுத்த இந்தி எதிர்ப்பு பற்றியவை.

(1) கட்டாய இந்தித் திட்டம் நமது கலைகளுக்கு விரோதமாகப் பார்ப்பனர் மதத்தையும் கலைகளையும் பலப்படுத்தி வித்தரிக்கும் ஒரு குறுகிய நோக்குள்ள திட்டமாகுமென்று நான் அபிப்ராயப்படுவது போன்றே சனாப் சின்னாவும், டாக்டர் அம்பேத்காரும் அபிப்பிராயப்பட்டனர்.

(2) நம்முடைய நாடு தமிழ்நாடு. நாம் பேசும் மொழி தமிழ். இதில் ஆட்சி செலுத்த வேண்டுமென்று முயன்ற பின்பு இந்தி எதற்காகப் படிக்க வேண்டும்? எங்களுடைய நாட்டிலே எங்களுடைய ஆட்சியில் உட்கார்ந்து கொண்டு ‘இந்தி படி?’ என்றால் அஃது எப்படி எங்கள் அரசு ஆகும்.

(3) தமிழ்மொழி நம்முடைய தாய் மொழி; அது மிகவும் உயர்ந்த மொழி; அஃது எல்லா வல்லமையும் பொருந்திய மொழி; சமயத்தை வளர்க்கும் மொழி; பழமையின் மொழி; உலகத்திலேயே சிறந்த மொழி என்று சொல்லப் பெறுகின்ற காரணத்தால் நான் இந்தியை எதிர்த்துப் போராடவில்லை. தமிழுக்கு ஆபத்து வரக்கூடாது என்று நினைக்கிறேன் என்றால் தமிழைவிட இந்தி மோசமான மொழி; தமிழைவிட இந்தி எந்தவிதத்திலும் மேலான மொழி அல்ல; தமிழைவிட இந்தி கீழான மொழி; தமிழுக்குப்பதில் நமக்கு இந்தி வரத்தகுதியற்றது; இந்தி வருவது நன்மை அல்ல என்ற காரணத்திற்காகத்தான்.

(4) அரசு நடந்து கொள்ளும் போக்கில் இந்தியைக் கட்டாயமாக்குவதும், அதை அரசியல் மொழியாக்குவதும் அலுவல் தகுதிக்கு இம்மொழிப் பாண்டித்யத்தைச் சேர்ப்பதும் திராவிட மக்களை வம்புச் சண்டைக்கு இழுக்கும் அகம்பாவ ஆணவக் காரியமாகும்.

(5) எப்படியாவது இந்தியை ஒழித்துக்கட்ட வேண்டும். அது காட்டுமிராண்டிமொழி. அதற்காகவே அதை வலியுறுத்துகிறார்கள் பார்ப்பனர்கள். இந்தியைவிட மேம்பட்ட மொழி தமிழ் என்பதற்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் எனது இந்தி எதிர்ப்புத் தமிழுக்காக அல்ல.

(6) தமிழ் இலக்கியங்களினால் நாம் மூட நம்பிக்கைக்காரர்களாகி விட்டோம். இந்தி வந்தால் நாம் காட்டுமிராண்டிகளாவோம்.

(7) மொழி கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்குத் தேவையானதேயொழிய பற்றுக்கொள்வதற்கு அதில் என்ன உள்ளது? இந்தி தமிழ் நாட்டையும் தமிழனையும் வடநாட்டானுக்கும் பார்ப்பானுக்கும் அடிமைப்படுத்துவதற்கே தவிர அதனால் வேறு பயன் என்ன?

(8) இந்தியை மற்றவர்கள் எதிர்ப்பது எந்தக் காரணத்தைக் கொண்டிருந்தாலும் என்னைப் பொறுத்தவரை சமுதாயத்தைக் கெடுத்து நம் மக்களுக்கு நஞ்சைக்கொடுத்து நமது சமுதாயத்தை முன்னேற்றமடையச் செய்யாமல் அது தடுக்கிறது என்பதாகும்.

(9) சமஸ்கிருதத்திற்குப் பதிலாக இந்தியைக் கட்டாயமாகப் புகுத்துவதும், இந்தி வேண்டா என்றால் அது பிரிவினைக்கு ஒப்பாகும் என்பதுமாக இருந்தால் இதற்குப் பயந்துகொண்டு இருப்பவர்கள் சமுதாயத்தைக் காட்டிக்கொடுக்கும் துரோகியாகத்தானே இருக்கவேண்டும்.

(10) இந்திமொழியைத் தென்இந்தியர் (தமிழர்) நல்லவண்ணம் தயவுதாட்சணியமின்றி வெறுக்கத் துணியவேண்டும். கெட்ட வற்றின் மீது வெறுப்பு ஏற்பட்டவரையில்தான் மனிதன் யோக்கியனாக இருக்கமுடியும். இந்தி தமிழனுக்குப் பெருங்கேடு விளைவிக்கக்கூடியது. அது காட்டுமிராண்டிமொழி; நமக்குள் வடமொழியையும் வடவர் ஆதிக்கக் கொள்கையும் புகுத்தும் மொழி.

(11) என்னைப் பொறுத்தவரையிலும் இந்தியைப் பற்றிக் கவலை இல்லை; தமிழைப்பற்றிப் பிடிவாதமும் இல்லை.

(12) அலுவலுக்கு இந்தி ஒரு யோக்கியதையாய் வந்துவிட்டால், நம்மவர்கட்குப் பழையபடி பங்கா இழுப்பதும் பில்லைப்போட்டுக்கொள்வதுமான வேலைதான் கிடைக்கும்.

தந்தை பெரியாரின் நீண்டகாலப் பிரச்சாரபலத்தால் காங்கிரசு ஆட்சி அகற்றப்பட்டது; இதனால் ‘இந்திக்கரடிபுகும்’ என்ற அச்சமும் அகன்றுவிட்டது. அண்ணா ஆட்சி அமைவதற்குப் பெரியார் ஆசியே காரணமாக அமைந்தது. அதனால் இருமொழிக்கொள்கை அமுலுக்கு வந்தது. இனி இந்தி அரசு மூலம் வராது. வேண்டுவோர் படித்துக் கொள்ள பல அமைப்புகள் உள்ளன. ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதால் பயன் இருக்கத்தான் செய்யும்.

5. தமிழ்மொழியாராய்ச்சி

மேலே காட்டியவாறு பெரியாரின் இந்தி எதிர்ப்புச் சிந்தனைகளைக் கண்டோம். தமிழ் மொழி ஆய்வுபற்றியும் சிந்தனைகளைச் செலுத்தியுள்ளார். அச்சிந்தனைகள் சிலவற்றை ஈண்டுக் காட்டுவேன்.

(1) ‘தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்பவை தமிழேயாகும்’. மலைநாட்டுப் பகுதியில் பேசும் தமிழ் மலையாளம் என்றும், கர்நாடகப் பகுதியில் பேசப்பெறும் தமிழ் கன்னடம் எனப்பெறுகின்றது. ஆந்திரப் பகுதியில் பேசப்பெறும் தமிழ் தெலுங்கு எனப்படுகின்றது. இந்த நால்வரும் பேசுவது தமிழ்தான்.

(2) திராவிடமொழிகள் என்று சொல்லப்பெறும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்பவை பிரித்துக் கொள்ளப்பெற்ற- பிரிக்கப்பெற்ற- மொழிகளேயல்லாமல் கிளை மொழிகள் அல்ல.

(3) பண்டிதர்களில் சிலர் இவை நான்கும் (தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம்) ஒன்றிலிருந்து வந்தவை, ஒரேதாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த நாலு அக்கா தங்கைகள் என்று கருதுகிறார்கள். இது பித்தலாட்டம் என்பதுதான் என் கருத்து. இந்தத் தாய்க்கு பிறந்தது ஒரே மகள்தான்; அது தமிழ்தான். அந்த ஒன்றைத்தான் நாலு பேரிட்டு வழங்குகிறோம். நாலு இடத்தில் பேசப்பெறுவதால் நான்கு பெயரில் வழங்குகிறதேயொழிய நாலிடங்களிலும் பேசப்பெறுவது தமிழ் ஒன்றுதான். நாலும் ஒன்றிலிருந்து உண்டானவை என்று எண்ணுவது தவறு. ஒன்றுதான் நமது அறியாமையால் நாலாகக் கருதப்பெற்று வருகிறது. இதனை மெய்ப்பித்துக் காட்ட என்னால் முடியும்.

(4) தமிழை நன்கு அறியாதவன்தான் இவை நான்கும் தமிழ் அல்ல என்று கூறுவான்.

தந்தை அவர்களின் கருத்து எளிதாகத் தள்ளப்பெறுவது அல்ல. நம்முடைய கல்விச் செருக்கால் படியாதவர் உளறுகின்றார் என்று நினைப்பது தவறு. தந்தையாரின் கருத்து மேலும் மேலும் ஆழ்ந்து ஆராய்தற்குரியது.

இவற்றிற்குள்ளும் சில சொல்ல ஆசைப்படுத்துகிறேன்.

ஆங்கிலேயர் ஆட்சியில் நம்நாட்டில் கிறித்தவ சமயத் தொண்டர்களும் அரசு அதிகாரிகளும் குறிப்பிடத்தக்க நிலையான பல்வேறு வகையில் தொண்டாற்றியுள்ளனர். மொழிநூல் துறைக்கு வித்திட்டவர்கள் மேனாட்டார். டாக்டர் குண்டர்ட் மலையாள மொழியைச் செவ்வனே கற்று ‘வடமொழியில் திராவிடக்கூறுகள்’ என்ற கட்டுரையை வெளியிட்டார் (1809). டாக்டர் கிட்டல் என்ற அறிஞர் கன்னட மொழியை முட்டறுத்துணர்ந்து 1872இல் ‘வடமொழி அகராதியில் திராவிடச் சொற்கள்’ என்ற கட்டுரையை வெளியிட்டார். ஆந்திரத்தில் அலுவல்பார்த்த சி.பி. பிரெளன் (மாவட்டத்தலைவர்) என்பார் தெலுங்கு மொழியினைத் துருவி ஆராய்ந்து தமது கருத்துகளை கட்டுரைகளாக வெளியிட்டார். நீலகிரியில் வாழும் தோடர்மொழிச் சொற்களை ஆய்ந்து போப் வெளியிட்டார். இவையெல்லாம் பின்னர் வந்த கால்டுவெல்லுக்குத் துணையாக இருந்தன. அவர் தமிழில் கவனம் செலுத்தினார். அனைத்தையும் ஒரு சேரவைத்து ஆராய்ந்து ‘திராவிட மொழிகளில் ஒப்பிலக்கணம்’ (A Comparative Grammar of Dravidian Languages) என்ற நூலை வெளியிட்டார். இவரால் ‘திராவிட மொழியினம்’ உலகுக்கு உணர்த்தப் பெறலாயிற்று. இதன்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு என்ற ஆறும் திருந்திய மொழிகள். தூதம், கோடம், கோந்த், கந்த், ஒரொவன், இராஜ்மகால் என்ற ஆறும் திருந்தாமொழிகள். இவற்றுடன் பிராஹூய் மொழியும் சேர்தல் உண்டு.


6. எழுத்துச் சீர்திருத்தம்

இன்றைய தமிழ் வரிவடிவத்தில் செய்யப்பெற வேண்டிய மாற்றங்கள் பல என்பதைப்பற்றிப் பலருக்குக் கருத்து இருந்தாலும் எவரும் துணிவாய் முன்வராமலே உள்ளார்கள். ஆனால் தந்தை பெரியார் அரைநூற்றாண்டிற்கு முன்னதாகவே துணிவாகவே சில வரிவடிவங்களில் மாற்றம் செய்து விடுதலை, குடியரசு இதழ்களில் செயற்படுத்திவிட்டார்கள். எழுத்துச் சீர்த்திருத்தம்[குறிப்பு 24] பற்றி அய்யா அவர்களின் சிந்தனைகளில் சில:

(1) பல நாட்டுமக்கள் கூட்டுறவால் பலமொழிச் சொற்கள் கலக்கும்படி நேரிட்டுவிட்டன. அவற்றை உச்சரிக்கும் போதும் எழுதும்போதும் தமிழ்மொழியும் தமிழ் எழுத்தும் விகாரமாய் வெட்கப்படவேண்டிய தன்மையில் உள்ளன. இதனால் சில எழுத்துகள் வேறு மொழிகளில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டியது கூட இன்றியமையாததாகும். அதற்கு வெட்கமாய் இருக்கும் பட்சத்தில் புதியனவாகவாவது எழுத்துகளை உண்டாக்கிக் கொள்ளவேண்டும்.

(2) சிலமாற்றங்கள்: 12 எல்லா உயிர்மெய் எழுத்துகளுக்கும் ஆ-காரம், ஏ-காரம் ஆகிய ஒலிகளுக்கு ‘கால்’, ‘இரட்டைக் கொம்பு’ ஆகிய குறிப்புகளைச் சேர்த்து எப்படி கா, கே என்று ஆக்கிக் கொண்டுள்ளோமோ அதுபோலவே, மேல்கண்ட கி, கீ, கு, கூ முதலிய ஒலிகளுக்கும் ஒரு தனிப்பட்ட குறிப்பு அடையாளத்தை ஏன் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்பது மிகவும் யோசிக்கத்தக்க விஷயமாகும்.

(3) ஒள-காரத்துக்கும் கெள என்பதற்குப் பதிலாக கவ் என்றோ கவு என்றோ எழுதினால் ஒலிமாறுவதில்லை. கெளமதி,கவ்மதி, கவுமதி என்பவற்றின் ஒலிகள் ஒன்றுபோலவே உச்சரிப்பதைக் காணலாம்.

(4) உயிரெழுத்துகள் என்பவற்றில் ஐ, ஒள என்கிற இரண்டு எழுத்துகளும் தமிழ்மொழிக்குத் தேவையில்லை என்பதே நமது வெகுநாளைய அபிப்ராயம். ஐகாரம் வேண்டிய எழுத்துகளுக்கு என்னும் அடையாளத்தை சேர்ப்பதற்குப் பதியலாக ‘ய்’ என்ற எழுத்தைப் பின்னால் சேர்த்துக் கொண்டால் ஐகார ஒலி தானாக வந்துவிடுகிறது (ஐ-அய்).[குறிப்பு 25]

(5) எழுத்துகள் உருவம் மாற்றுவது, குறிப்புகள் ஏற்படுத்துவது, புதிய எழுத்துகளைச் சேர்ப்பது என்பது போலவே சில எழுத்துகளை, அதாவது அவசியமல்லாத எழுத்துகளைக் குறைக்க வேண்டியதும் அவசியமாகும்.[குறிப்பு 26]

(6) வரிவடிவத்தில் மாற்றம் செய்வது மொழியின் பெருமையும் எழுத்துகளின் மேன்மையும் பெற்று, அவை எளிதில் தெரிந்து கொள்ளக்கூடியனவாகவும், கற்றுக் கொள்ளக்கூடியனவாகவும் இருப்பதைப் பொறுத்ததேயொழிய வேறல்ல.

(7) தமிழ்மொழியில் உள்ள எழுத்துகளை எடுத்துக் கொண்டால் எல்லாம் காட்டுமிராண்டிக்காலத்திய எழுத்துகள்தாம். எத்தனை சுழி! எத்தனை கோடு! எத்தனை மேல் இழுப்பு! எத்தனைக் கீழிழுப்பு! இந்தக் காலத்தில் இத்தனை எழுத்துகள் எதற்காக இருக்கவேண்டும்? நமக்கு எதற்காக 216 எழுத்துக்கள்? உலகத்திலேயே உயர்ந்த அதிசய அற்புதம் எல்லாம் பண்ணுகிறானே வெள்ளைக்காரன்? அவனுடைய மொழியான ஆங்கில மொழியில் அவன் 26 எழுத்துகளைத்தானே கொண்டிருக் கின்றான்? அந்த 26 எழுத்துகளை வைத்துக்கொண்டு அவன் உலகத்தையே புரட்டுகிறான்.[குறிப்பு 27]

(8) நமது பெண்கள் கோலம் போடுவதையாவது விரைவில் கற்றுக்கொள்ளலாம். ஆனால் நமது எழுத்துகளைக் கற்றுக் கொள்வது நமது குழந்தைகளுக்குச் சிரமமாக உள்ளது. பல ஆண்டுகளாக நான் எழுத்துச் சீர்த்திருத்தம்பற்றிச் சொல்லி வருகிறேன். எவன் கேட்கிறான்? இன்றைக்கு நேரு இந்தியாவுக்குப் பொதுஎழுத்து (லிபி) வேண்டும் என்கிறார். மொழியில், எழுத்தில் மாறுதல் உண்டுபண்ணவேண்டும் என்றால் நமது புலவர்கள் குறுக்கே படுத்துக்கொண்டு தடுக்கின்றார்களே!

(9) தமிழ்மொழிக்கு ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்திக் கொள்ள முன் வருவோமானால், மொழிபற்றி, எழுத்துபற்றி கற்பதுபற்றிய சிரமங்களும் பிரச்சனைகளும் பறந்தோடிவிடும்.

(10) மனிதன் விஞ்ஞானத்தில், நாகரிகத்தில், நடப்பில் தலைகீழாக மாற்றம் பெற்றபின் அதற்கேற்ப மொழியை மாற்றிக் கொள்ளாமல் இருப்பது மடமையாகும்.

(11) எளிதாகக் கற்றுக்கொள்வதற்கு எழுத்துகள் எளிதில் எழுதக்கூடியனவாகவும், எண்ணிக்கையில் குறைவாகவும், இருக்கவேண்டியது இன்றியமையாததாகும்.

வரிவடிவச் சீரமைப்பில் பெரும்பங்கெடுத்து முயன்றுவரும் அறிஞர் டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் கூறியவற்றைத் திரும்பக் கூறுதல் இவ்விடத்தில் பொருந்துவனவாகும்.

வரிவடிவம்பற்றி வந்த ஒன்று: தமிழ் வரிவடிவம் ஏதோ தொல்காப்பியர் காலத்திலிருந்து நிலைத்து நிற்கும் ஒன்றன்று. வள்ளுவரும் இளங்கோவும் எழுதிய வரிவடிவத்தில் ஓர் எழுத்தும் நமக்குப் புரியாது. இன்று நாம் எழுதும் வரிவடிவத்திலும் அவர்கட்கு ஓர் எழுத்தும் புரியாது. அவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழ் மொழியின் அடிப்படையும் அடையாளமும் மாறவில்லை. மொழிக்கு ஒலிதான் அடிப்படை; வரிவடிவம் ஒலிக்கு நாம் கொடுக்கும் குறியீடு. வரிவடிவமாற்றத்தால் மொழி அணுவளவும் பாதிக்கப் படுவதில்லை நாம் புரிந்து கொள்ள இயலாத சுருக்கெழுத்தில் (Short Hand) எழுதப்படும் தமிழும், நாம் எழுதும் பேசும் தமிழ் தான். வரிவடிவமே மொழி அன்று.

சோதனைக்காலம்: தமிழ்மொழி தனது மேடும் பள்ளமும் நிறைந்த நீண்டவாழ்வில் பல சோதனைகளைச் சந்தித்திருக்கின்றது. ஆனால் இன்றைய நிலைவேறு. நாம் வாழ்வது கல்வியுகம். அறிவியலும் தொழில் நுட்பமும் ஆட்சி செய்யும் காலம். 19-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட போக்குவரத்துப் புரட்சியும், 20-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட புரட்சியும் பரந்து விரிந்த உலகை ஒரு ‘வையச்சிற்றுார்’ (Global Village) என்று கூறும் அளவிற்குச் சுருக்கிவிட்டன. இந்தச் சூழ்நிலை வலியர் மொழியும் பண்பும் வளரவும், மெலியவர் மொழியும் பண்பும் தேயவும் துணைநிற்கின்றது. சிறுபான்மை எதுவாயினும் பெரும்பான்மையில் கரைந்து மறையும் காலகட்டத்தில் இருக்கிறோம். இருப்பதை இறுக்கிப் பிடிப்பது மட்டும் போதாது. சற்று இளக்கமும் (Flexity) தேவை. வளர்ச்சிக்கு மாற்றங்கள் தேவை.[குறிப்பு 28]

சிறந்த ஆய்வாளர்கள் ஒன்றுகூடிச் செய்யவேண்டிய பணியை உயர்நிலைப் பள்ளிக் கல்வியைக் கூடப் பெறாத தந்தை பெரியார் செய்த பணியை எண்ணிப் பார்த்தால் புலவர்கள் மூக்கின்மேல் விரலை வைத்துக் கொள்ளவேண்டும்; அறிஞர்கள் பெரியாருக்குச் ‘சலாம்’ போடவேண்டும்.

7. தமிழ்ப்புலவர்கள்

தமிழ் மொழியைப் பற்றியும், இலக்கியத்தைப் பற்றியும் ஆராய்ந்து பேசும், எழுதும் தமிழ்ப்புலவர்களைப் பற்றி தந்தை பெரியார் அவர்கட்கு நல்ல மதிப்பு இல்லை; குறைகள் மிகுந்தவர்கள், ஒழுங்கற்றவர்கள், யோக்கியதை இல்லாதவர்கள் என்றே கருதுகின்றார். புலவர்களைப் பற்றி அய்யா அவர்களின் சிந்தனைகள்:

(1) நம்நாட்டில் எனக்குத் தெரிந்தவரையில் தமிழ்நாட்டுக்கோ, தமிழ் பண்பாட்டுக்கோ ஒரு பலனும் புலவர்களால் ஏற்பட்டதில்லை. தமிழ்ப்புலவர்கள் ஆரியப்பண்பாடு, பழக்கவழக்கங்களில் மூழ்கிப் போனவர்களாவார்கள். மேனாட்டுப் புலவர்கள் இப்படியல்லர்; அவர்கள் மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய வழியில் பாடுபட்டனர்.

(2) இன்று புலவர்களில், அறிஞர்கள் நல்ல ஆராய்ச்சியாளர்கள் இருப்பார்களேயானால் கற்பனையான மூடநம்பிக்கையான இலக்கியங்களை மக்களுக்கு எடுத்துகாட்டி இவற்றைப் பற்றிய மக்கள் கருத்தைத் திருத்திக் கொள்ளவும் செய்வதோடு அதே இலக்கியங்களையும் திருத்தியாக வேண்டும். புதிய புதிய இலக்கியங்களை, மக்களுக்கு அறிவூட்ட வல்லவையும் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டதுமான இலக்கியங்களைச் செய்யவேண்டும்.

(3) மக்களுக்கு அறிவுவரும்படி எதையும் சொல்ல ஒரு வெங்காயப் புலவனும் இல்லை. அவன் வேலைக்குப் போனாலும் அங்குப் புராணக் கதை என்று பேசுவானே தவிர மனிதன் அறிவு வருவதற்காகப் பேசமாட்டான். நல்ல புலவன் ஆபாசக்கதைகளுக்கு வியாக்கியானம் எழுதினவனாகவே இருப்பான். நல்ல புலவன் என்றால் இவர்பெரிய புராணத்திற்கு விளக்கம் எழுதியவர், இவர் கம்பராமயாணத்திற்கு நுண்பொருள் கண்டவர் என்ற நிலையில் இருப்பானே தவிர ஒருவனும் அதில் வரும் அசிங்கங்களை நீக்கி அறிவு வரும்படிச் செய்யக் கூடியவனாக இல்லை.

(4) நமது நாட்டில் இன்றைக்கு டாக்டர் பட்டம் பெற்ற புலவர்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் எல்லாம் பழமைக்கு மெருகு பூசுபவர்களாக இருக்கின்றனரேயொழிய, இலக்கியங்களி லுள்ள குற்றம் குறைகளை எடுத்துக்காட்டுபவர்களாகப் பழமைக்கு நுண் பொருள் காண்பவர்களாகத்தான் இருக்கின்றனர்.

(5) புலவர்கள் என்றால் அறிவாளிகளாக, புரட்சியாளர்களாக இருக்கவேண்டும். ஆங்கிலத்தில் சொல்வார்களே கண்டனம் தெரிவிப்பவர் (புராட்டஸ்டண்டு) என்பவர்களாக இருக்க வேண்டும்.

(6) நாட்டில் மக்களைத் திருத்தத் தகுதியுள்ளவர்கள் புலவர்களே. தமது புலமையெல்லாம் சோற்றுக்கு ஆக அல்ல; மக்களைத் திருத்த என்று கருதித்தொண்டாற்ற வேண்டும். புலவர்களாலேயேதான் நாடு திருத்தப்பாடு அடைய முடியாமல் போய் விட்டது.

(7) நம் மக்கள் அறிவுத்துறையில் இவ்வளவு காட்டுமிராண்டிகளாக மூடநம்பிக்கைக் களஞ்சியங்களாக ஆகப் புலவர்களும் இவர்களது தமிழின் பெருமையும்தான் காரணம் என்று கூரைமேலிருந்து கூறுவேன்.

(8) புலவர்கள் என்றால் அறிஞர்கள், மேன்மக்கள் என்பது அகராதிப் பொருள். ஆனால் நம் புலவர்கள் எவரிடமும் இவை இரண்டும் காணுவது குதிரைக்கொம்பு. மற்றென்னவென்றால் இவர்கள் புலமையைப் பயன்படுத்தும் தன்மையைக் கொண்டு பார்த்தோமேயானால் பெரும்பாலான புலவர்கள் என்பவர்களைத் தமிழ்க் கொலைஞர்கள் என்று சொல்லத்தக்க வண்ணம் தான் நடந்து கொள்ளுகின்றனர்.

(9) தமிழ்புலவர்கள் தமிழை ஒரு நியூசென்ஸ் ஆக ஆக்கிவிட்டார்கள். அதாவது தமிழினால் மக்களுக்கு வாழ்க்கையில், வளர்ச்சியில் ஒரு பயனும் ஏற்படமுடியாதபடிச் செய்துவிட்டார்கள். சமயத்துறையில் புலமையைக் காட்டும் இலக்கண இலக்கியத்துறையல்லாமல் அறிவுத்துறைக்கோ, வாழ்க்கைத் துறைக்கோ, மனிதச் சமுதாய வளர்ச்சிக்கோ ஒரளவுகூடப் பயன்படமுடியாத மொழியாகத் தமிழை ஆக்கிவிட்டார்கள்.

(10) தமிழ்ப் படித்தவனெல்லாம் சாமியானேனே ஒழிய எவனும் பகுத்தறிவுவாதியாகவில்லை. நமக்குத் தெரிய மறைமலையடிகள் தமிழ் படித்துச் சாமியானவர்தானே. இப்போது நடந்தது சாமிசங்கரதாஸ் நூற்றாண்டுவிழா. நாடகத்துக்குப் பாட்டு எழுதிக் கொண்டிருந்தவர். இந்த சங்கரதாஸ் என் வீட்டில் வந்து நாடகத்துக்குப் பாட்டு எழுதிக் கொண்டிருந்தவர். சங்கரம்பிள்ளை என்று பெயர். சங்கரதாஸ் ஆக இன்று சாமி ஆகிவிட்டார்.

(11) நம் நாட்டை நாசமாக்கியது பார்ப்பான் மட்டும் அல்ல; நமது புலவர்களும் ஆவார்கள். பார்ப்பான் புராணங்களையெல்லாம் வடமொழியில் செய்திருந்தான். அவற்றையும் நாம் படிக்கக்கூடாது, கேட்கக்கூடாது என்று வைத்திருந்தான். அவற்றைப் புலவர்கள் தமிழில் ஆக்கியதால் அவை சந்து பொந்து எல்லாம் பரவி மக்களையெல்லாம் மடையர்களாக்கிவிட்டன.

(12) வள்ளுவன் சொன்னான்; சிலப்பதிகாரத்தில் இருக்கிறது; இராமயணத்தில் கம்பன் சொன்னது இது; பாரதத்தில் கிருஷ்ணன் இப்படிச் சொல்லியிருக்கிறான்; அந்தப்புராணத்தில் இப்படி இருக்கிறது; இந்தப்புராணத்தில் அப்படி இருக்கிறது என்றெல்லாம் சொல்லிப் புலவர்கள், மக்கள் தங்கள் அறிவைப் பயன்படுத்தாமல் தடைசெய்கின்றனர். புலவர்களுக்கு இந்தக் குப்பையைத் தவிர வேறு கிடையாது. அதைக்கொண்டு பிழைக்கத்தான் பார்க்கின்றார்களே தவிர அதனால் நம்மக்கள் அடைந்துள்ள இழிவை மானம்மற்ற தன்மையை எடுத்துக்காட்ட எந்தப்புலவனும் முயல்வதில்லை.[குறிப்பு 29]

(13) கடுகளவு அறிவுள்ளவன்கூடப் பாரதிதாசன் கவிதையைப் படித்தால் முழுப்பகுத்தறிவு வாதியாகி விடுவான்.

(14) பல புலவர்கள் நம்மைக் காணும்போது நமக்கு ஏற்றாற் போல் பேசுவதும், அடுத்து மக்களிடையே போய் கந்தபுராணத்திலிருக்கிற நுண்பொருள், பக்திரசம் என்று மடமையை, மூடநம்பிக்கையைப் புகுத்துவதுமாக இருக்கிறார்கள். நம்மக்களுக்கு அறிவு வளர வேண்டும். அதற்காக நாம் நம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்று நம் புலவர்கள் கருதவேண்டும்.

(15) நம்பண்டிதர் என்பவர்களுக்குப் பகுத்தறிவு ஏற்படுவதற்குத் தடையாக இருப்பது அவர்களது படிப்பே ஒழிய அவர்களது அறிவுக்குறைவன்று. தவறிக்கீழே விழுந்த பிள்ளைக்கு அரிவாள்மனை எதிரில் இருந்தால், எப்படி அதிகக் காயம் ஏற்படுமோ, அதுபோல புராண இதிகாசக் கதைச்சேற்றில் விழுந்த நமது பண்டிதர்களுக்கு, இயற்கைவாசனை அறிவால் ஏற்படக்கூடிய பகுத்தறிவையும் பாழ்படுத்தித் தக்க வண்ணம் மூடநம்பிக்கைச் சமயங்கள் என்னும் நச்சரவங்கள் அவர்களைக் கரையேறாதபடிச் சுற்றிக்கொண்டுள்ளன.

(16) வள்ளுவர் அறிவைக் கொண்டு ஒரு நூல் (குறள்) எழுதினார் என்பதல்லாமல் அதில் பகுத்தறிவைப் பயன்படுத்தினார் என்று சொல்வதற்கில்லை. அதில் மூடநம்பிக்கை, பெண் அடிமை, ஆரியம் ஆகியவை நல்ல வண்ணம் புகுத்தப்பெற்றுள்ளன.

குறிப்பு: பெரியார் சொல்கிறார் என்று நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அவர் கூறியவை எவற்றையும் மறுத்துச் சொல்ல முடியாது. அவற்றை சிந்திக்கலாம். இயன்றவரைப் பின்பற்றலாம் என்றாலும் என் மனத்தில் எழுந்தவற்றையும் உங்கள்முன் வைக்கிறேன்.

(1) பாடத்திட்டத்தில் சமயஇலக்கியங்கள், புராணங்கள், சாத்திரநூல்கள் சேர்க்கப் பெற்றுள்ளன. அந்நூல்களைக் கற்பிக்கும்போது புலவர்கள் தத்தம் அறிவுநிலைகேற்ப திறனாய்வு முறையில் ஏதோ சில கருத்துகளைக் கூறலாமேயன்றி பகுத்தறிவு நோக்கில் பிரச்சாரமுறையில் வகுப்பறையைப் பயன்படுத்தலாகாது. பல்கலைக்கழகவிதிகள் ஆசிரியர்க்குரிய விதிகள் இவற்றிற்குட்பட்டே தம் கடமையைச் செய்யவேண்டும்.

(2) கடவுள், சமயநம்பிக்கையுள்ளவர்களால் எழுதப்பெற்ற நூல்கள் பாடநூல்களாக உள்ளன. அவற்றைப் பயிற்றும்போது அவற்றிலுள்ள கருத்துகளை விளக்கலாம்; புதிய பார்வையில் சிந்திக்க மாணாக்கர்களைத் துரண்டலாம்.

(3) அய்யா அவர்கள் நினைக்கிறபடி அனைத்தையும் விஞ்ஞானத்திற்குக்கீழ் கொண்டு வரமுடியாது. விஞ்ஞானக் கருத்துகள் கொண்ட நூல்கள்[குறிப்பு 30] பாடநூல்களாக அமைந்தால்[குறிப்பு 31] அவற்றை அவர்கள் விருப்பத்துடன் நோக்குவதில்லை.

(4) நானும் நான்கைந்து தலைமுறைகளாக ஆசிரியர்களுடன் நெருங்கிப்பழகுபவன். பெரும்பாலோருக்குக் கற்கும் விருப்பமே இருப்பதில்லை. புத்தம்புதிய நூல்களைப் படைக்கவேண்டும் என்ற ‘உந்தும் ஆற்றல்’ அவர்களிடம் நான் காண்பதில்லை. அவர்கள் பணியாற்றும் முறையும் அறிஞர் மனத்திற்கு உகந்ததாக இல்லை.


8. இலக்கியம்


‘இலக்கியம்’ என்ற பெயருக்குத் தகுதியான நூல்களை அறிஞர்கள்தாம் இயற்ற முடியும். பண்டைக்காலம் முதல் இலக்கிய ஆசிரியர்கள் பலவகையான சிறப்புகளையும் அறிவாற்றலையும் உடையவர்களாகத் திகழ்ந்தனர். எவரும் நூலியற்றல் என்பது இயலாத செயல். அறிவால் நிரம்பியவர் மிகச் சிறு தொகையினரேயாவர்.

 
ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன்றாம்புலவர்
வார்த்தைபதி னாயிரத் தொருவர்
[குறிப்பு 32]

என்ற வெண்பாப் பகுதியால் அறியலாம். எந்த நூலைப் படித்த பிறகு மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும் என்ற வேட்கை எழுகின்றதோ அதுதான் இலக்கியம்.

தந்தை பெரியார் அவர்கள் இலக்கியத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் கருத்துகள் தனித்தன்மை வாய்ந்தவை. அவர்கள் இலக்கியம் பகுத்தறிவுக் கொத்ததாக இருத்தல் வேண்டும் என்று விழைகின்றார். இன்று நிலைபெற்றுள்ள இலக்கியங்கள் அனைத்தையும் கடிகின்றார். இலக்கியம்பற்றி அவருடைய சிந்தனைகளைக் காண்போம்.

(1) மதம், கடவுள் சம்பந்தமற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவாக இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறக்கமுடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக்கியம் ஆகியவை மூலம்தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மையடையமுடியும் என்பது மாத்திரமல்லாமல் அதைக் கையாளும் மக்களும் ஞானமுடையவராவார்கள்.

(2) தமிழர்களுக்கு மொழி சம்பந்தமான இலக்கியம் தொல் காப்பியத்தைத் தவிர, வேறு ஒன்றும் இருந்ததாகத் தெரியவில்லை. வேறு ஒன்றும் ஆதியில் இருந்ததாகக் காணப்படவில்லை. தமிழர்களுக்கு இன்று காணப்படும் இலக்கியங்களும் ஆரியச் சார்பு உடையனவாக உள்ளனவே தவிர சுத்தத்தமிழாகக் காணக்கிடைப்பதில்லை. (3) இலக்கியம் என்பது நாகரிகத்தைப் புகட்டவேண்டும். மக்களிடம் உயர்குணங்களைப் புகுத்துவதாக இருக்கவேண்டும். ஆனால் ஆண்களுக்குப் பெண்களை அடிமை படுத்தவேண்டும் என்பதற்கே இலக்கியங்கள் இயற்றப்பெற்றுள்ளன. இதனால்தான் பெண்கள் சமுதாயம் தலையெடுக்கவே முடியாது போய்விட்டது.

(4) இனிமேல்தான் நமக்காக இலக்கியம் தோன்றவேண்டும். அதில் இந்துமதம், ஆத்திகம், ஆரியம் ஆகிய மூன்றும் இருக்கக் கூடாது. அறிவு, ஒழுக்கம், விஞ்ஞானம் இவைதாம் இருக்க வேண்டும். அறிவு, ஒழுக்கம், விஞ்ஞானம், ஆராய்ச்சி என்றால் அவை நம்நாட்டில் நாத்திகம், மதவெறுப்பு என்றாக்கப் பட்டு விட்டது. அதனாலேயே நம் நாட்டில் பயன்படும் இலக்கியம் இல்லை என்பதோடு தோன்றவும் இல்லை.[குறிப்பு 33]

(5) இலக்கியம் எதற்காக? இலக்கியம் எப்படி இருக்கவேண்டும்! எப்படிப்பட்டதை இலக்கியம் என்று சொல்லாம்? அது எதற்காக இருக்கவேண்டும்? என்பவைபற்றிச் சிந்தித்தால் உலகில் எல்லாம் எல்லாத்துறைகளும் மனிதனின் உயர்வாழ்க்கைக்கு மட்டிலும் அல்ல; மனிதர் சமுதாய வளர்ச்சிக்குக்கும் ஏற்றதாக இருக்கவேண்டும் என்பது எனது கருத்து.

(6) பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணாக்கர்கட்குத் தமிழ் இலக்கியத்திற்கு நூல்கள் எவை? கம்பராமாயணம், வில்லி பாரதம், பாகவதம், பெரியபுராணம், தேவாரம், திவ்வியபிரபந்தம் போன்ற மதத் தத்துவங்களையும், ஆரியமதத்தத்துவம் என்னும் ஒருதனிப்பட்ட வகுப்பின் உயர்வைப் போதித்து மக்களை மானமற்றவர்களாக்கும் ஆபாசக் களஞ்சியங்களும் அல்லாமல் வேறு இலக்கியங்கள் காணப்பெறுகின்றனவா? பண்டிதர்களுக்கு உலக ஞானத்தைவிடப் புராணஞானத்தானே அதிகமாக இருக்கின்றது?

(7) கம்பராமாயணம் அரிய இலக்கியம் என்று சொல்லுகிறார்களே. இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்வளவுநாள் பட்டினி கிடந்தாலும் மலத்திலிருந்து அரிசி பொறுக்குவானா? அதுபோலத்தானே கம்பராமாயண இலக்கியம் உள்ளது? அதில் தமிழ்மக்களை எவ்வளவு இழிவாகக் குறிப்பிடப் பெற்றுள்ளது? சுயமரியாதையை விரும்புகிறவன் எப்படிக் கம்பராமாயண இலக்கியத்தைப் படிப்பான்? இன்று கம்பராமாயணத்தால் தமிழ் மக்களுக்கு இலக்கியம் பரவிற்றா என நடுநிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள்.[குறிப்பு 34]

(8) கம்பராமாயணக் கதையை எடுத்துக் கொண்டால் வெறும்பொய்க் களஞ்சியம் அது. அதன் கற்பனையை எடுத்துக் கொண்டால் சிற்றின்ப சாகரம்.[குறிப்பு 35] அஃதாவது இஃது ஒரு காமத்துப்பால் என்றுதான் சொல்லலாம். நடப்பை எடுத்துக்கொண்டால் காட்டுமிராண்டித்தனத்தின் உருவம். இவற்றில் இன்றைய அநுபவத்திற்கு அறிவு உலகப் போக்கிற்கு, வளர்ச்சிக்குப் பயன்படக்கூடியவை என்பதாக என்ன காணமுடிகிறது?

(9) நமது நாட்டுக்குத் தெளிவான உண்மையான வரலாறே இல்லை; வரலாறு எழுதப்புகுந்தவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள். நமது வரலாறு மட்டும் உண்மையாகக் கிடைத்து இருக்குமேயானால் இவ்வளவு மோசம் ஏற்பட்டு இருக்காது. வரலாற்றினைக் கூறினால் படித்தால் உணர்ச்சி உண்டுபண்ணும்படியான நிலையில் நமக்குவரலாறே இல்லை.

(10) தமிழனுக்கு இலக்கியம் என்று சொல்லுவதற்குத் தனித்தமிழ் இலக்கியம் எதுவும் கிடையாது. தமிழில் ஆரியம் கலந்த இலக்கியமே இருக்கின்றன.[குறிப்பு 36]

இலக்கியங்கள்: இவ்வளவு கடுமையாகச் சிந்தித்த தந்தையவர்கள் இரண்டு இலக்கியங்களையும் குறிப்பிடுகிறார்கள் அவை:

குறள்: மேலே குறளைப்பற்றிச் சற்றுக்குறைவாகப் பேசியதைக் குறிப்பிட்டேன். ஈண்டு அதை மிகப் பெருமையாகப் பேசுகின்றார்கள். அவற்றுள் சில சிந்தனைகள்.

(1) அறிவால் உய்த்துணர்ந்து ஒப்புக்கொள்ளக்கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துகளையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள்.

(2) குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சிபெறுவார்கள். அரசியல், சமூக அறிவு, பொருளாதார அறிவு ஆகிய அனைத்துத் அதில் அடங்கியுள்ளன.

(3) மனிதச் சமுதாயத்திற்கே நல்வழிகாட்டி நன்னெறியூட்டி நற்பண்புகளையும் ஒழுக்கங்களையும் கற்பிக்கும் வகையில் எழுதப்பெற்ற நூல்தான் திருக்குறள். எனவேதான் எல்லா மக்களும் எல்லா மதத்தவரும் “எங்கள் குறள், எங்கள் மதக்கருத்தை ஒப்புக்கொள்ளும் குறள்” என்றெல்லாம் அதனைப் போற்றி வருகின்றனர்.

(4) வள்ளுவரையும் நாம் ஒரு மனிதராக மதித்தே மக்களிடையே காணப்படும் இழிவுநீங்கி மனிதத்தன்மை வளர்ந்தோங்க வேண்டும் என்ற கருத்தோடு பாடுபட்ட ஒரு பெரியாராக மதித்தே நாம் குறளை ஒப்புக்கொள்ளுகிறோமே ஒழிய அதை நாம் கடவுள் வாக்காகவோ, அசரீரிவாக்காகவோ ஏற்றுக்கொள்ளவில்லை.

(5) நீங்கள் என்ன சமயத்தார் என்று கேட்டால் ‘வள்ளுவர் சமயத்தார்’ என்று சொல்லுங்கள்; உங்கள் நெறி என்ன என்றால் ‘குறள் நெறி’ என்று கூறுங்கள்; அப்படிச் சொன்னால் எந்தப் பிற்போக்கு வாதியும் எப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரரும் எதிர்நிற்கமாட்டார்; யாரும் குறளை மறுக்கமுடியாததே இதற்குக் காரணம்.

(6) குறளாசிரியர் கடவுளையும் மோட்ச நரகத்தையும் ஒத்துக்கொள்ளவில்லை. குறளில் அறம், பொருள், இன்பம் என்ற அளவில் காணமுடியுமே தவிர வீடு மோட்சம்பற்றி அவர் கூறியிருப்பதாக இல்லை. கடவுள்வாழ்த்து என்ற ஓர் அதிகாரம் இருக்கிறது. அதில் உருவ வணக்கக் கொள்கை இடம்பெற வில்லை. ‘கடவுள்’ என்ற சொல்லே கடவுள்வாழ்த்து அதிகாரத் தில் இடம்பெறவில்லை. வள்ளுவர் கடவுள்வாழ்த்து பாடியிருப்பதெல்லாம் ஒவ்வொரு நற்குணங்களை வைத்து, அந்தப்படியே நடக்கவேண்டும் என்பதற்காகவே பத்துப் பாட்டிலும் பத்து விதமான குணங்களைக் கூறினார்... மனிதன் எப்படியிருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காகத்தான் வாழ்வின் வகையை, நிலையை உணர்த்துவதற்காகத்தான் எட்டு, ஒன்பது கருத்துகளை வைத்து வள்ளுவர் கடவுள் வாழ்த்து கூறியுள்ளார்.

(7) அறிவு பெற்றவன் அறிவையே முதன்மையாகக் கொண்டவன்; ஆலோசித்துப் பார்க்கும் ஆராய்ச்சி தன்மை கொண்டவன் எவனும் குறளை மதித்தே தீருவான்; குறளைப் பாராட்டியே தீருவான்; சிறிதாவது பின்பற்றிக் குறளை வழிகாட்டியாய்க் கொண்டே தீருவான்.

(8) குறள்பக்தி நூலல்ல; கடவுளைக் காட்டும் எந்தவிதமான மத நூலல்ல; மதப்பிரச்சாரம் செய்யும் மதக்கோட்பாட்டு நூல்அல்ல... உண்மையான ஒழுக்கத்தை அதாவது யாவருக்கும் பொருந்தும் சமத்துவமான ஒழுக்கத்தைப் போதிப்பதாக இருக்கிறது குறள்.

(9) குறள் வெறும் ஒழுக்கத்தையும் வாழ்க்கைக்கு வேண்டிய அநுபவப்பூர்வமான பிரத்தியட்ச வழியையும் கொண்டதாகும்.

(10) குறள் ஓர் அறிவுக்களஞ்சியம். பகுத்தறிவு மணிகளால் கோக்கப்பெற்ற நூல் திருக்குறள். பார்ப்பனரின் பித்தலாட்டங்களை வெளியாக்குவதற்கென்றே எழுதப்பெற்ற நூல். ஆகவே வள்ளுவர் ஒரு பகுத்தறிவுவாதியாக இருந்திருக்கவேண்டும். நூலின் ஒவ்வொரு செய்யுளும் பார்ப்பனர்களின் அயோக்கியத் தன்மையை விளக்குகின்றது.

இங்கனம் குறளைப்பற்றி ஏராளமான கருத்துகளைக் கூறுகின்றார். விரிவஞ்சி அவை தவிர்க்கப்பெறுகின்றன.

2. சிலப்பதிகாரம்: தமிழ்நாட்டுக் கதையை துறவுநிலையிலுள்ள தமிழரால் எழுதப்பெற்றது. இதனைப்பற்றிப் பெரியாரின் சிந்தனைகள்:

(1) தமிழ்ப்புலவர்கள் மிகச்சிறப்பான இலக்கியம் என்று சொல்லக்கூடிய சிலப்பதிகாரத்தில் ‘மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டத் தீவலம் சுற்றி’ என்று வருவது பார்ப்பான் வந்தபின் இயற்றிய இலக்கியம் என்பதற்குச் சான்றாகும். தமிழ் இலக்கியங்கள் யாவும் பார்ப்பான் வந்தபின் இயற்றப்பட்டனவே யாகும். தமிழனுக்கென்று தனித்த இலக்கியம் தமிழில் ஒன்றுகூட இல்லை.

(2) சிலப்பதிகாரக் கதையில் ஒரு பெண்ணைப் பதிவிரதையாக்கவேண்டும் என்பதற்காக உலகத்திலுள்ள முட்டாள்தனத்தையெல்லாம் கொண்டுவந்து புகுத்தியிருக்கிறான். சாமி மட்டுமல்ல, பார்ப்பான், பேய், பிசாசு இவை வந்துள்ளன. அரசனை முட்டாளாக்கியுள்ளன. பசுமாடு, பார்ப்பான் இவர்களை நீக்கிவிட்டு நாடு பூராவும் தீயில் எரியவேண்டும் என்று சாபம் இட்டிருக்கின்றாள் (கண்ணகி). இதனால் எல்லாம் நம் தாய்மார்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம் என்ன இருக்கிறது?

(3) ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியும் வழங்கப்படுவது பார்ப்பன முறை. ஆணுக்கு உள்ள சுதந்திரம் பெண்ணுக்கு இல்லை என்பதும், பெண்ணுக்கு உள்ள கட்டுப்பாட்டைப் போல ஆணுக்கு இல்லை என்பதும் பார்ப்பனர்களின் நாகரிகமுறை. அதைச் சித்திரிப்பதே சிலப்பதிகாரம்.

(4) சிலப்பதிகாரம் விபசாரத்தனத்தில் தொடங்கி, பத்தினித்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில் மூடநம்பிக்கையில் முடிந்த கருவூலமாகும்.

(5) சீவகசிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம் என்ற இலக்கியங்களில் உள்ளவை எல்லாம் கற்பனை (புளுகு). அதிலிருந்து மக்கள் அறிவு வளர்ச்சியோ, ஒழுக்கமோ, நீதியோ கற்றுக்கொள்ளுகிறமாதிரி இல்லை. அவை கற்பனைப் புளுகுக்கு, இலக்கியச் சிறப்பு வாய்ந்தனவாக இருக்கலாம். அவை புலமைக்குத் தான் பயன்படும். அறிவு ஒழுக்கத்திற்கான சங்கதி அதில் இல்லை.

அன்பர்களே, இதுகாறும் நாம் பெரியார் அவர்களின் கருத்துப்படி இலக்கியம் பயனைக் கருதித்தான் இருக்கவேண்டும் அல்லது நீதியைக் கருதியாவது, ஒழுக்கத்தைக் கருதியாவது இருக்கவேண்டும் என்று அறிகின்றோம். சுருக்கமாகச் சொன்னால் உலகாயதத்தைக் கருதியே அவர் நோக்கம் அமைவதாக உள்ளது எனலாம். இத்துடன் இன்றைய பொழிவு நிறைவு செய்வதற்குமுன் பெரியார் அவர்களைப் பற்றி அறிஞர் கருத்துகளை உங்கள் முன் வைக்க நினைக்கிறேன்.


9. பெரியார் பற்றி அறிஞர்கள்

(1) “நாயக்கர் பேச்சில் கருத்துச் செலுத்தியபின்னர் அவர் தமிழ்நாட்டுக் காளமேகமானார். நாயக்கர் பேச்சு மழையாகும்; கனமழையாகும்; கல்மழையாகும்; மழை மூன்றுமணி நேரம், நான்கு மணிநேரம் பொழியும். தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் -கருத்து வேற்றுமைக்கு மதிப்பளிப்பவர் ”

-திரு.வி.க.

(2) “எங்கெங்கே தமிழ் உணர்ச்சி தவழ்கின்றதோ, எங்கெங்கே சமுதாயச் சீர்த்திருத்தம் பேசப்படுகின்றதோ, எந்தெந்த இடத்தில் புரட்சி வாடை வீசுகின்றதோ-அங்கங்கெல்லாம் ஈ.வே.ரா.வின் பெயர் ஒளி வீசித் திகழ்கின்றது.”

-சர். ஏ.இராமசாமி முதலியார்.(1928)

(3) “செய்கையில் உண்மை-நீதியை நிலைநாட்டுவதில் அடங்கா ஆர்வம்-சிறிதும் தன்னலம் என்பதே இல்லாத வாழ்க்கை-இவையே ஒரு மனிதனைச் சிறந்தவனாக ஆக்கக் கூடியவை. இவையனைத்தும் உருண்டு திரண்டுத் திகழும் ஒரு மாமனிதர் ஈ.வே.ரா.”

-சர். ஆர்.கே.சண்முகம் செட்டியார் (1933)

(4) “சமூக சீர்த்திருத்தத் துறையில் பலர் அநேக ஆண்டு பாடுபட்டுப் பயன்பெறாமற்போன வேலையை இவர் (ஈ.வே.ரா) சில ஆண்டுகளில் பயன் அளிக்குமாறு செய்துவிட்டார்.”

-பனகல் அரசர் (1928)

(5) “துணிவு, தியாகம், வேலையை அநுபவத்திற்குக் கொண்டு வருதல் என்ற மூன்று குணங்களமைந்த ஒருவரைத் தென்னிந்தியா முழுவதும் தேடினாலும் நமது நாயக்கரைத் தவிர வேறு யாரையும் கண்டுபிடிக்கமுடியாது.”

-சர்.கே.வி.ரெட்டிநாயுடு (1928)

(6) “திருநாயக்கரிடத்திலுள்ள சிறப்பான குணம் மனத்திற்படும் உண்மையை ஒளிக்காமல் சொல்லுவதுதான். தமிழ் நாட்டின் எல்லா தலைவர்களையும்விட பெரிய தியாகி ஆவார்.”

-கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம்பிள்ளை (1928)

(7) “வைக்கம்வீரர் ஒரு மனிதரல்ல; அவர் எனக்கு ஒரு கொள்கையாகவே தேன்றுகிறார்”

-திரு.எஸ். இராமநாதன் எம்.ஏ. பி.எல். முன்னாள் அமைச்சர்(1930)

(8) “தமக்குச் சரியென்று பட்டதை வற்புறுத்துபவர். சமூக சீர்திருத்தமே தோழர் நாயக்கர் அவர்கள் கொள்கையின் உயிர் நாடி. சுயமரியாதை இயக்கத்தை மக்களிடையே வேரூன்றச் செய்தவர்”

-டாக்டர்.பி.சுப்பராயன், முன்னாள் முதலமைச்சர் அவர்கள்(1928)

(9) “தமக்கு நியாயமென்று பட்ட கருத்துகளை அஞ்சாது வெளியிடுவதில் திரு நாயக்கரவர்கள் முதலிடம் பெற்றவர் என்பதை ஒருவரும் மறுக்கமுடியது. சமய-சமூக-அரசியல் துறைகளில் திரு நாயக்கர் செய்துள்ள தியாகமும் சேவையும் அவர்பட்டுள்ள சிரமங்களும் இந்நாட்டில் ஒரு நாளும் மறக்கமுடியாதது”

-டாக்டர்.பி.வரதராஜுலு நாயுடு, ஆசிரியர் - தமிழ்நாடு (1934)

(10) “நமது பெரியார் அவர்கள் ஒரு மகாத்மா அல்லர். ஆனால் தாம் நினைத்ததைச் சாதிக்கும் ஒரு நேர்மைவாதி. அவருடைய அபிப்பிராயங்கள் ஆணித்தரமானவை. நேர்மையான வழியில் பாடுபடுவார். காங்கிரசுகாரருக்கு வார்தா எப்படியோ -திராவிடருக்கு அப்படி ஈரோடு. அவர்கள் வார்தா போவது போல் நாம் அறிவுரை கேட்க ஈரோடு வருகிறோம். பெரியார் தமிழ் நாட்டின் உண்மைக் களஞ்சியம்!”

-சர். ஏ. டி. பன்னீர்செல்வம், பார். அட்லா (1938)

(11) “ஈ.வே. இராமசாமி நாயக்கர் அவர்கள் வெகுவாக மதிக்கப்டுகின்ற ஒரு பார்ப்பனரல்லாத தலைவர். தமிழ் நாட்டைத் தனியாகப் பிரித்துவிடவேண்டுமென்று வெளிப் படையாகவே சொல்லிவருகிறார். பாகிஸ்தானத்தில் முதல் அமைச்சராக இருப்பதோடு ஜின்னாவிற்கு எவ்வளவு உரிமை உண்டோ அவ்வளவு உரிமை தமிழ்நாட்டின் தனி ஆட்சியில் இராமசாமி நாயக்கருக்கு உண்டு”

-சர்.சி.பி.இராமசாமி அய்யர் அவர்கள், திருவாங்கூர் முன்னாள் திவான்(1945)

(12) “பொதுமக்களுக்குப் பெரியார் செய்த தொண்டு மிகப் பெரியது. யாகத்தின் பெயரால் பசுக்கொலை முதலிய கேடுகளைச் செய்தவர்களை எதிர்க்கப் புத்தர் பெருமான் தோன்றினார். தமிழையும் தமிழரையும் அடிமைப்படுத்தி வரும் சுயநலக்கூட்டத்தை எதிர்க்கப் பெரியார் அவதரித்துள்ளார். அவர் இல்லாவிடில் நாம் மிகக் கீழான நிலையில், நம்மை வெட்கமில்லாமல் ‘சூத்திரன்’ என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்ளும் பேதைமையில் இருந்திருப்போம்.”

-முதுபெரும்புலவர் அ.வரதநஞ்சைப்பிள்ளை அவர்கள்(1944)[குறிப்பு 37]

(13) “உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் போலிப் பெரியார் வரிசையில் சேராதவர். எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்ணிய முயற்சியுடையார். பொது நலமொன்றையே பேணித் தம் உள்ளத்தால் பொய்யாதொழுகும் நேர்மையாளர். தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர். தமிழரின் தன்மானக்குரல், புத்துணர்ச்சி, உள்ளக்கொதிப்பு, முன்னேற்றம் எல்லாவற்றிற்கும் பெரியார்தான் காரணம்.”

-பசுமலை நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், எம்.ஏ.பி.எல்[1942]

(14) “திரு ஈ.வெ. இராமசாமி அச்சம் என்பதையே அறியாத சமுதாய சீர்திருத்தவாதி. அந்தக் காலத்திலேயே “திராவிடநாடு திராவிடருக்கே” என்று முதன் முதலாக முழங்கியவர்.”

-டாக்டர்.ஏ.கிருஷ்ணசாமி, எம்.பி. டி. பார். அட்.லா. ஆசிரியர் - லிபரேட்டர்.

(15) “தமக்கென வாழாது பிறர்க்கே வாழவேண்டுமென்பது பண்டைத் தமிழரின் உயரிய கருத்தாகும். இச்சீரியகருத்தைத் தம் வாழ்நாட்களில் கொண்டு அதன்படி எல்லியும் காலையும் தூயதொண்டாற்றி மக்கள் அனைவரும் மாயவலையில் சிக்காதபடி, உண்மை அறிவு கொளுத்தி,‘பிறப்பொக்கும்’ என்னும் தூயமொழியை இம்மாநிலத்தில் நிலைநாட்டிய பேரறிஞருள் ஈ.வெ. இராமசாமி முதல்வர்.”

-காஞ்சிபரவஸ்து இராசகோபாலாச்சாரியார் பி.ஏ., [1939]

(16) “சுயமரியாதை உணர்ச்சியைத் தமிழ்நாட்டில் துவக்கி விட்டவர் நாயக்கர் ஆவார். பார்ப்பனரல்லாத இயக்கத்திற்குப் புத்துயிர் அளித்த பெருமையும் அவருக்கே உரியது. இன்று இந்தியா முழுவதும் இந்த இயக்கம் கொண்டாடப் பெறுகின்றது. இம்மகத்தான பெருமைக்கு அருகர் நாயக்கரே.”

-ரசிகமணி.டி.கே. சிதம்பரநாத முதலியார். பி.ஏ.பில் [1929]

(17) “தோழர் இராமசாமி நாயக்கர் அவர்கள் கபடமற்றவர். மனத்தில் நினைப்பதைப் பேசியும், பேசியவாறே செய்தும் காட்டுபவர்.”

-திவான்பகதூர் எஸ். குமாரசாமி ரெட்டியார், முன்னாள் அமைச்சர் [1928]

(18) “மனச்சாட்சிக்கும் தொண்டுக்கும் பக்தரான நாயக்கரை ‘நாஸ்திகன்’ என்று கூறும் அன்பர்கள் நாஸ்திகம் யாது என்றே தெரிந்து கொள்ளவில்லை என்றே சொல்லுவேன்... அநீதியை எதிர்க்கத் திறமையும், தைரியமும் அற்ற ஏழைகளாய்ச் சொரணையற்றுக் கிடந்த தமிழர்களின் உள்ளத்தை, அடி தெரியும்படி கலக்கிய பிரம்மாண்ட பாக்கியம், நாயக்கரைப் பெரிதும் சேர்ந்ததாகும். அப்பப்பா! நாயக்கரின் அழகுப் பிரசங்கத்தை, ஆணித்தரமான சொற்களை, அணிஅணியாய் அலங்காரம் செய்யும் உவமானங்களை, உபகதைகளை, அவரது கொச்சைவார்த்தை உச்சரிப்பை, அவரது வர்ணனையை, உடல் துடிப்பைப் பார்க்கவும் கேட்கவும், வெகுதூரத்திலிருந்து மக்கள் வண்டுகள் மொய்ப்பது போல வந்து மொய்ப்பார்கள். அவர் இயற்கையின் புதல்வர்! மண்ணை மணந்த மணாளர்! மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு நாயக்கரின் பிரசங்கம் ஆகாயகங்கையின் பிரவாகம் என்பதில் சந்தேகம் இல்லை. செய்யவேண்டும் என்று தோன்றியதைப்போல, தமிழ் நாட்டில் வேறு எவரிடமும் காணப்பெறுவதில்லை. தமிழ் நாட்டின் வருங்காலப் பெருமைக்கு நாயக்கர் அவர்கள் முன்னோடும் பிள்ளை; தூதுவன்.”

-வ.ரா. 1933-இல் ‘காந்தி’ இதழில் எழுதியது.

(19) “சாதாரணமாக இராமசாமியாருடைய பிரசங்கங்கள் மூன்று மணிநேரத்திற்குக் குறைவது கிடையாது. இந்த அம்சத்தில் தென்னாட்டு இராமசாமியார் வடநாட்டுப் பண்டித மாளவியாவை ஒத்தவராவார். ஆனால் இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. பண்டிதரின் பிரசங்கத்தை அரைமணி நேரத்திற்குமேல் என்னால் உட்கார்ந்து கேட்கமுடியாது. .. இராமசாமியார் தமது பேச்சை எவ்வளவுதான் நீட்டினாலும் அவருடைய பேச்சில் அலுப்புத் தோன்றுவதே இல்லை. அவ்வளவு ஏன்? தமிழ் நாட்டில் இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றுமட்டும்தான் என்னால் மூன்று மணிநேரம் உட்கார்ந்து கேட்கமுடியும் என்று தயங்காமல் கூறுவேன்... அவர் உலக அநுபவம் என்னும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ நானறியேன்.

தாம் உபயோகிக்கும் கடும்சொற்கள் எல்லாம் செந்தமிழ்ச் சொற்கள்தாமாவென்று நாயக்கர் சிந்திப்பதில்லை. எழுவாய் பயனில்லைகள், ஒருமை பன்மைகள், வேற்றுமையுருபுகள் முதலியவை பற்றியும் கவலைப்படுவதில்லை. ஆனால் தாம் சொல்லிவரும் விஷயங்களை மக்களின் மனத்தைக் கவரும் முறையில் சொல்லும் வித்தையை அவர் நன்கறிவார். அவர் கூறும் உதாரணங்களின் சிறப்பையோ சொல்லவேண்டுவதில்லை.

இராமசாமியாரின் பிரசங்கம் பாமரமக்களுக்கே உரியது என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். பாமரமக்களை வசப்படுத்தும் ஆற்றல், தமிழ் நாட்டில் வேறெவரையும்விட அவருக்கு அதிகம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இதிலிருந்து அவருடைய பிரசங்கம் படித்தவர்களுக்குச் சுவைக்காது என்று முடிவு செய்தல் பெருந்தவறாகும். என்னைப் போன்ற அரைகுறைப் படிப்பாளர்களேயன்றி.[குறிப்பு 38] முழுதும் படித்துத் தேர்ந்த பி.ஏ., எம்.ஏ., பட்டதாரிகளும் கூட அவருடைய பிரசங்கங்களைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறார்கள். அவருடைய விவாதத் திறமை அபாரமானது. “இவர் மட்டும் வக்கீலாக வந்திருந்தால் நாமெல்லாம் ஓடு எடுத்துக்கொள்ள வேண்டியது தான்” என்று ஒரு பிரபல வக்கீல் மற்றொரு வக்கீல் நண்பரிடம் கூறியதை நான் ஒரு சமயம் கேட்டதுண்டு... உபயோகமற்ற வாதங்களும் அவர் வாயில் உயிர்பெற்று விளங்கும். இதற்கு ஓர் உதாரணம்; அந்தக் காலத்தில் நாயக்கர் அவர்கள் மாறுதல் வேண்டாதவராக விளங்கியபோது, சட்டசபைப் பிரவேசிதத்துக்கு விரோதமாகப் பலபிரசங்கள் புரிந்தார். அப்போது அவர் கூறியவாதங்களில் ஒன்று சட்டசபைப்பிரவேசத்தினால் வீண் பணச்செலவு நேரும் என்பது.

“ஒரு ஜில்லாவில் சுமார் 30,000 வாக்காளர்கள் இருப்பார்கள். அபேட்சகராக நிற்பவர் இவர்களுக்கு 30,000 ‘கார்டாவது’ போட வேண்டும். தபால் துறைக்கு இதனால் நல்ல வருவாய். இத்துடன் போதாது. இந்த அபேட்சகர் இறந்து விட்டதாக எதிர் அபேட்சகர் ஒருவதந்தியைக் கிளப்பிவிடுவார். “நான் இறக்கவில்லை உயிருடன்தான் இருக்கிறேன்” என்று மறுபடியும் 30,000 கார்டு போடவேண்டும்”.

நாயக்கரின் இந்த வாதத்தில் அர்த்தமே இல்லை என்று சொல்லவேண்டுவதில்லை.[குறிப்பு 39] அதுவும் எழுத்தில் பார்க்கும்போது வெறும் குதர்க்கமாகவே காணப்படுகிறது. ஆனால் அப்போது நாயக்கரவர்கள் கூறும்போது நானும் இன்னும் 4,000 மக்களும் ஒவ்வொரு வாக்கியத்துக்கு ஒருமுறை ‘கொல்’ என்று சிரித்து மகிழ்ந்தோம்.”

-கல்கி [1931-இல் ‘ஆனந்தவிகடன்’ இதழில் எழுதப்பட்டது.]

(20) “பெர்னார்ட்ஷா தம் மனத்திற்பட்ட எதையும் பயப்படாமல் சொல்வார்; அறிவுக்கு சரியென்று தோன்றியதை வெளிப்படையாகக் கூறுவார். எவருடைய போற்றுதலையும், தூற்றுதலையும் பொருட்படுத்தாமல் பேசிவிடுவார். இப்படித்தான் பெரியாரும் தமக்குச் சரி என்று தோன்றும் எவ்வித புதுக்கருத்தாக இருந்தாலும் பிறருக்கு எப்படியிருக்கும் என்பதைச் சிறிதும் சிந்திக்காமல் மிகத் துணிவோடு கூறிவிடுவார். இவ்வகையில் இவரைத் ‘தமிழ்நாட்டு பெர்னார்ட்ஷா’ என்று கூறலாம்.

உலகிலேயே ஒரே ஒரு சாக்ரடீஸ்; ஒரே ஒருபுத்தர்; ஒரே ஒரு மார்ட்டீன்லூதர்; ஒரே ஒரு அப்துல்லா; ஒரே ஒரு கமால் பாட்சா, ஒரே ஒரு பெர்னாட்ஷா, ஒரே ஒரு இராமசாமிப் பெரியார்தான் தோன்றமுடியும்.”

-தமிழ்ப்பண்டிதர் சாமி-சிதம்பரனார்[1939]

(21) “பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் நாவன்மையும், எழுத்துவன்மையும் அபாரம். அது மட்டுமா? அஞ்சாமையை வெகுதிறமையுடன் ஆளும் திறமை பெற்றவர் பெரியார். எத்தனையோ மகத்தான காரியங்களைச் சாதித்திருக்கிறார்.”

-நகைச்சுவை மன்னர் என்.எஸ்.கிருஷ்ணன் [1947]

இன்னும் பலர் தந்தையவர்களின் பெருமையைப் பேசியுள்ளனர். பிற மாநிலப்புகழ்களும் உண்டு.

அலர் காலத்தில் வாழ்ந்து, அவரோடு பழகி, அவர் கொள்கையைப் பரப்பும் நம்முடன் உள்ள நாரா. நாச்சியப்பன் பாடல்களில் சில:

சாதியால் மதத்தால் பார்ப்பான்
சாதியினால் சேர்ந்த இந்து
நீதியால் மூட பக்தி
நிறைவினால் கேட்டி ருக்கும்
போதிலே தன்மா னத்தைப்
புகட்டுதற் கென்று வந்த
சோதியாய்ப் ஈரோட் டண்ணல்
தோன்றினார் தமிழர் நாட்டில்.

ஆரியத்தின் வைரி யாகி
அதனாலாம் தீமை நீக்கப்

போரியக்கும் வீரன்! எங்கள்
பொன்னாட்டுத் தந்தை! மிக்க
சீரியற்றித் தமிழ கத்தார்
சிறப்புற வேதன் மானப்
பேரியக்கம் கண்டோனே! நல்ல
பெரியார்ஈ ரோட்டுத் தாத்தா!
[குறிப்பு 40]

முடிவுரை: என் பேச்சுகளுக்கு மூல மனிதராக இருக்கும் நாயக்கர் வாழ்க்கைக் குறிப்புகளையும் அவரது தோற்றத்தைப் பற்றியும் இன்று விளக்கப்பெற்றது. மொழிபற்றிய தோற்றம் வரலாற்று அடிப்படையில் விளக்கப்பெற்றது. அடுத்து இதன் அடிப்படையில் எது தமிழ் என்பது தெளிவாக்கப் பெற்றது. பலகால உழைப்புதான் மொழியாக அமைந்தது என்று சுட்டப்பெற்றது. மொழி ஆராய்ச்சியில் தெய்வக்கூறு பெரியரால் வெறுக்கப்பெற்றது என்றும், மூளையின் வளர்ச்சி காரணமாகத்தான் மொழி வளர்ந்தது என்றும் கூறி கிளியின் பேச்சில் மூளையின் கூறு செயற்படாததால் அதன் பேச்சு வெற்றொலியாகவே உள்ளது என்று சான்று காட்டி விளக்கப்பெற்றது. இவற்றின் அடிப்படையில் தந்தை பெரியாரின் மொழிபற்றிய சிந்தனைகள் நோக்கப் பெறுதல் வேண்டும் என்று சொல்லப்பெற்றது. தமிழ்க் கவிஞர்கள் தமிழ் மொழியைப் புகழ்வதுபோல வேறு எந்தமொழிகளையும் அந்தந்த மொழிக் கவிஞர்கள் புகழவில்லை என்பது விளக்கப் பெற்றது. பெரியார் தமிழுக்கு ஆதரவு தருவதன் காரணம் விளக்கப்பெற்றது, அவர்தம் வாய்மொழியாகவே. தமிழ் தலையெடுக்காமல் செய்தது அதன் இலக்கியங்கள்தாம் என்பது பெரியாரின் கருத்து என்பது சான்றுகளுடன் விளக்கப் பெற்றது. தமிழர் வாழ்வில் ஆங்கிலம் இன்றியமையாமையை தந்தையவர்கள் மிகவும் வற்புறுத்துகிறார்கள் என்பது தெளிவுறுத்தப் பெற்றது. அரசுதன் முரண்பட்ட கொள்கைளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை என் கருத்தாகக் காட்டினேன். சம்ஸ்கிருதம் இருமொழிக் கல்வித்திட்டம் அமுலில் உள்ள தமிழ்நாட்டிற்குத் தேவை இல்லை என்பது சுட்டப் பெற்றது.[குறிப்பு 41] பள்ளி, கல்லூரிக் கல்வித்திட்டத்தில் இந்தி இடம் பெறக்கூடாது என்று தந்தையவர்கள் பேச்சாலும் எழுத்தாலும் கையாண்ட எதிர்ப்புபற்றி விவரங்களுடன் விளக்கப்பெற்றது. இந்தித் திணிப்புபற்றிப் பெரியார் அவர்களின் சிந்தனைகள் காட்டப்பெற்றன. தமிழ்மொழியாராய்ச்சியில் தமிழே கேரளம், கர்நாடகம், ஆந்திரம் என்ற இடங்களில் பேசப்பெற்றது என்றும் இடவகையால் தமிழின் பெயரே மலையாளம், கன்னடம் தெலுங்கு என்பதாக வழங்கப்பெற்றது என்பது பெரியாரின் கருத்தாகும் என்றும், இது ஆராயத்தக்கது என்றும் காட்டப்பெற்றது. எழுத்துச்சீர்த்திருத்தமே தந்தையவர்கள் தமிழ் எழுத்துவடிவ மாற்றத்தில் பெரும்பங்காகும் என்பது காட்டப்பெற்றது. இதுபற்றிய பெரியாரின் சிந்தனைகள் விவரம் விளக்கப்பெற்றது. அறிஞர் குழந்தைசாமியின் கருத்தும் தரப் பெற்றது. தமிழ்ப்புலவர்கள்பற்றி பெரியாருக்கு நல்ல அபிப்ராயம் இல்லை என்பதையும் காட்டினேன். இதுபற்றி என் கருத்தையும் உங்கள் முன் வைத்தேன்.

இலக்கியம்பற்றி அய்யா அவர்கள் கம்பராமாயணம், சீவசிந்தாமணி, சிலப்பதிகாரம் போன்றவற்றை ஒதுக்குவது உகந்ததாக இல்லையென்றும், பன்னெடுங்காலமாக தமிழர்களின் மரபுச்செல்வமாக வந்தவற்றை ஒதுக்கித்தள்ளுவது அறிவுடையன அல்ல என்றும்; கம்பராமாயணத்தை ‘காமத்துப்பால்’ என்று சொல்லுவது பொருத்தமன்று என்றும் இலக்கியங்களில் வரும் நிகழ்ச்சிகள் சுவையின்பாற்படும் என்றும் விளக்கினேன். சுவை இலக்கணத்தின்பால் அய்யா அவர்கள் தனிக் கருத்தினைச் செலுத்தவில்லை என்பது என் கருத்து என்று குறிப்பிட்டேன். திருக்குறளை விரிவாகப் போற்றும் அய்யா அவர்கள் சிலம்பு, சிந்தாமணி, மேகலை போன்ற காவியங்களை வெறுப்பது விரும்பத்தக்கதன்று என்றும் குறிப்பிட்டேன். இங்ஙனமாக இன்றைய பொழிவு அமைந்தது.

கடந்த பல்லாண்டுகளாக சைவம், வைணவம், சமணம், பெளத்தம் போன்ற சமயங்களையும் இறைவனை அடிப்படையாகக் கொண்ட பக்தி இலக்கியங்களையும் படித்தும் ஆய்ந்து எழுதியும் வந்த அடியேனுக்கு இறைமறுப்புக் கொள்கையே தமது குறிக்கோளாக்க கொண்ட தந்தை பெரியார் சிந்தனைகளைப் பேச வாய்ப்பு அளித்த டாக்டர் இரா. தாண்டவனுக்கும், பல்கலைக்கழகத்தினருக்கும் குறிப்பாகப் பெரியார் கொள்கையின் சார்பாக உள்ள துணைவேந்தர் டாக்டர் பொன். கோதண்டராமன் அவர்கட்கும் என் அன்பு கலந்த நன்றி என்றும் உரியது. எண்பத்தைந்து அகவையைக் கடக்கும் நிலையிலுள்ள அடியேன் என்னுடைய கல்லூரி வாழ்க்கையில் (ஐந்து ஆண்டுகள்) தந்தையாரின் பேச்சை விருப்புடன் கேட்டவன்; அதன்பிறகு அவர் மறையும் வரையில் நெருங்கிப் பழகியவன். இந்த நீண்டகால அநுபவத்தில் என் மனம் தெளிவான நிலையில் உள்ளது; அநுபூதி நிலையை எட்டும் நிலையில் உள்ளது. இப்போது அடியேனுக்கு இராமாநுசர், இராமலிங்க அடிகள், தாயுமான அடிகள், இராமகிருஷ்ண பரமஹம்சர், நால்வர்களில் குறிப்பாக நாவுக்கரசர், மணிவாசகர் ஆகியோருடன் தந்தை பெரியார் அவர்களும் சேர்கின்றார் என்பது என் கருத்து. அப்பர் சுவாமிகள், வள்ளலார் இவர்கள் படைப்பில் பெரியார் கருத்துகளைக் காணலாம். அண்மையில் திரு இராம. வீரப்பன் (எம்.ஜி.ஆர்.கழகத் தலைவர்) ‘வள்ளலார் மென்மையாகச் சொன்னவற்றையே பெரியார் வன்மையாகச் சொன்னார்’ என்று கூறியது போன்ற கருத்தைக் கொண்டவன் அடியேன். இராமாநுசர் வாழ்வையும் தந்தை பெரியார் வாழ்வையும் இருவர்தம் கருத்துகளையும் ஒரு சேரவைத்து ஒப்பிடுங்கால் இருவரும் மானிட இனத்தின் மேம்பாட்டுக்காகப் பணியாற்றிய பெரியார்கள் என்பது எனக்குத் தெளிவாகின்றது. ஆகவே இராமநுசரே பெரியாராகப் பிறந்துள்ளாரோ- மறுஅவதாரமோ என்று நினைக்கத்தோன்றுகிறது. பெரியாரும் தம் இறைமறுப்புக் கொள்கைமூலம் உருவமற்ற பரம்பொருளைக் (Transcendent Universal Reality) கண்டவர் என்பதாக எனக்குப் புலப்படுகின்றது. மக்கள் வழங்கும் கடவுளைப்பற்றிக் குறை கூறினாரேயன்றி தாம் மனத்தில் கொண்டுள்ள கடவுளைப்பற்றிக் குறிப்பிட்டுப் பேசவில்லை. அவர் அநுபூதி நிலையில் இருந்ததாகவே எனக்குத் தோன்றுகிறது.

பின்னிணைப்பு-1

சவகர்லால் நேரு மறைந்த போது அவர் நினைவாக நேரு அவர்களைப் பற்றி அறிஞர் கருத்துகளைத் திரட்டி ‘இந்தியப் பேரொளி’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டது கழகம். அங்ஙனமே அறிஞர் அண்ணா மறைந்தபோது அம்முறையில் தொகுத்து ‘தமிழ்ப் பேரொளி’ என்ற தலைப்பில் வெளியிட்டது. தந்தை பெரியார் மறைவு நினைவாக இங்ஙனமே ஒருநூல் வெளிவரத் திட்டமிட்டது கழகம். ஆனால் எக்காரணத்தாலோ நூல் வெளிவரவில்லை. அதற்கு கழகம் வேண்டியபடி 18.2.1974இல் தந்தை பெரியாரைப்பற்றி எழுதிய குறிப்பு இது:

“தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்த பெரியார்”
(பேராசிரியர் டாக்டர் ந.சுப்புரெட்டியார், தமிழ்ப் பேராசிரியர்,
துறைத் தலைவர், திருவேங்கடவன் பல்கலைக் கழகம், திருப்பதி)

தமிழ் கூறு நல்லுலகில், பெருமையுடனும் புகழுடனும் வாழ்ந்து புகழை மட்டிலும் இம்மண்ணுலகில் நிறத்தி விட்டுப் பொன்னுலகு புக்கவர் தந்தை பெரியார் அவர்கள். ‘மகாத்மா’ என்ற பெயர் காந்தியடிகளின் பெயருடன் முன்னொட்டாக நிலைத்து நிற்பது போல் ‘பெரியார்’ என்ற பெயரும் ‘இராமசாமி’ என்ற பெயருடன் முன்னொட்டாக நிலைத்து நிற்கின்றது. ‘மகாத்மா’ என்றாலே காந்தியை நினைவூட்டும்; ‘பெரியார்’ என்றாலே ஈரோட்டு அண்ணலை நினைவூட்டும். ‘பெயர்மாற்றம்’ நிறைந்த தமிழுலகில் பெயர் மாற்றமின்றித் திகழ்ந்தவர் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள். பெரியாழ்வாரை ‘விட்டுசித்தன்’ என்று சொல்வது மரபு. அங்ஙனமே தந்தை பெரியாரை ‘இராமசித்தன்’ என்று சொல்லி வைக்கலாம். முன்னவர் ‘விட்டுவை’ நேசித்துப் போற்றியவர். பின்னவர் ‘இராமனை’ தூசித்துப்போற்றியவர். இதுவே இவர்தம்முள் வேறுபாடு. வைதாரையும் வாழவைப்பவன் இறைவன் என்ற கருத்து உண்மையாக இருப்பின் இராமசித்தனுக்கும் திருநாட்டில் இடமுண்டு. இராமபக்தனாகிய மாருதியின் திருநாளன்று (ஞாயிறு) பெரியார் அமரரானமையே இதனைக் குறிப்பாகப் புலப்படுத்துவதாகக் கொள்ளலாம்.

‘பெரியாரைத் துணைக்கோடல்’ என்ற ஓர் அதிகாரம் ‘திருக்குறள் அரசியல் பகுதியில்’ உள்ளது. அரசனுக்குப் பெரியார் துணையின் இன்றியாமையை வற்புறுத்துவது அப்பகுதி. வள்ளுவத்தின் இந்த உண்மையை அறிந்தோ அறியாமலோ அவரைத் துணையாகக் கொண்டு கட்சித்தலைவர்களும், ஆட்சித்தலைவர்களும், கல்வித்துறை நிபுணர்களும், பிறரும் இவரது நட்பினையும், ஆசியையும் பெற்றே இருந்தனர் என்பது நாடு நன்கறிந்த உண்மை. கொள்கையளவில் எதிர்த்துருவங்களில் நிற்பதுபோல் தோன்றும் ‘இராஜாஜி’ அவர்களும் பெரியார் அவர்களும் கூட தனிப்பட்ட மனித உறவில் உள்ளன்புடன் பழகினர் என்பதை இருவர் மறைந்த நாள் நிகழ்ச்சிகளும் உலகிற்கு உணர்த்திவிட்டன. ‘சிதம்பர ரகசியம்’ போல் இருந்து வந்த இருவர் நட்பையும் அவை அனைவர்க்கும் தெளிவாக்கி விட்டன. ‘உணர்ச்சிதான், நட்பாங் கிழமை தரும்’ என்ற வள்ளுவத்தை இவர்தம் ஆருயிர் நட்பால் நாடு நன்கறிந்து கொண்டது.

தந்தை பெரியார் மிகவும் கண்டிப்பானவர்; உழைப்பை வற்புறுத்துபவர். ஆனால் அன்பும் பண்பும், அடக்கமும் சீலமும், நேர்மையும் ஒழுங்கும் நிறைந்த உயர்குணச் செம்மல். தம் கருத்துகளை மூடிமறைக்காமல், விளக்கெண்ணெய் கலக்காமல், துணிவுடன் எடுத்துக் கூறுபவர். தம் வாழ்வின் தொடக்க காலத்திலேயே நாட்டுத்தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டு; நாட்டுத்தொண்டிலும் இவருக்கு நிறைந்த பங்கு உண்டு. மதுவிலக்கு, தீண்டாமை, நாட்டுப்பற்று, கடவுட்கொள்கை, சமய நம்பிக்கை, கல்வி, எழுத்துச்சீர்திருத்தம், சினிமாத்தொழில் முதலிய துறைகளிளெல்லாம் இவருக்கெனத் தனி முத்திரை உண்டு. சிக்கனத்தால் சேர்த்த நிதி இவர் பெயரால் அமைந்த கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகள் வடிவில் நாட்டுக்கு நன்கு பயன்பட்டு வருகின்றன. நிறை வாழ்வு வாழ்ந்த தந்தை பெரியாரின் நினைவும் புகழும் தமிழ் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

‘உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து யெல்லாம் உளன்’ (குறள் - 294)

என்ற வள்ளுவரின் இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்பவர் தந்தை பெரியார் அவர்கள். அவர்தம் புகழ் நீடு நின்று நிலவுவதாகும்.

பின்னிணைப்பு-2


துணை நூல் பட்டியல்

சிதம்பரனார், சாமி:
தமிழர் தலைவர்-1939 (11ம் பதிப்பு)

தந்தை பெரியார்:
பெரியாரின் குரல் (முல்லைப் பதிப்பகம்)

தந்தை பெரியார்:
வாழ்க்கை ஒப்பந்தம் (1999)

கண்ணன். மா:
பெரியார் கணினி-1 (1998)
பெரியார் கணினி-2 (1998)
பெரியாரியல்-4 கலை (1993)
பெரியாரியல்-5 தாம் (1998)
பெரியாரின் குட்டிக் கதைகள் (1998)
பெரியாரின் பழமொழிகள் (1998)

நாச்சியப்பன். நாரா:
ஈரோட்டுத் தாத்தா (1995)

பழநி.மு:
வீரமணியின் பதில்கள் (1997)- (முல்லைப் பதிப்பகம்)

விடுதலை:
தந்தை பெரியார்-121ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா மலர்

வீரமணி. கி:
பெரியார் களஞ்சியம்

Periyar:
An Anthology தொகுதி-1 (1992) கடவுள் (1997)

இந்நூலாசிரியரைப் பற்றி...


85 அகவையைக்(பிறப்பு: 27.8.1916) கடந்த நிலையிலுள்ள இந்நூலாசிரியர் பி.எஸ்.சி., எம்.ஏ., எல்.டி, வித்துவான், பிஎச்.டி., டி.லிட் பட்டங்கள் பெற்றவர்.

ஒன்பதாண்டுகள் துறையூர் உயர் நிலைப்பள்ளி நிறுவனர், தலைமை யாசிரியராகவும் (1941-50), காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் - துறைத் தலைவராகவும் (1950-60), பதினேழு ஆண்டுகள் - திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் நிறுவனர், பேராசிரியர் - துறைத்தலைவராகவும் (1960-77) பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

1978 சனவரி 14இல் சென்னையில் குடியேறிப் பதினைந்து மாதங்கள் (1978 பிப்பிரவரி - ஜூன் 1979) தமிழ்க் கலைக் களஞ்சியத்தின் முதன்மைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர். திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் மூன்று மாதங்கள் மதிப்பியல் பேராசிரியராகவும், 1989 மே முதல் 1990 அக்டோபர் முடிய 18 திங்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் - காஞ்சித் தத்துவ மையத்தில் தகைஞராகவும் பணியாற்றி, 1200 பக்கத்தில் ‘வைணவச் செல்வம்’ என்ற ஒரு பெரிய ஆய்வு நூலை உருவாக்கி வழங்கியவர். முதற்பகுதி 1995இல் 575 பக்கத்தில் வெளி வந்துள்ளது. இரண்டாவது பகுதி அச்சேறும் நிலையில் உள்ளது (த.ப.க. வெளியீடு). 1986 முதல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் மதிப்பியல் பேராசிரியராக (வாழ்நாள் வரை)வும் இருந்து வருபவர். ஆய்வு மாணவர்கட்கு வழிகாட்டியாகவும் இருப்பவர். 1996-பிப்ரவரி முதல் சென்னைப் பல்கலைக்கழகத் தெற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மரபு வழிப் பண்பாட்டு நிறுவனத்தில் மதிப்பியல் இயக்குநராகவும் பணியாற்றுபவர்.

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் தத்துவத்தை ஆய்ந்து டாக்டர் (பி.எச்டி.,) பட்டம் பெற்றவர். அந்த ஆய்வு நூல் ஆங்கிலத்தில் 940 பக்கங்களில் திருவேங்கடவன் பல்கலைக் கழக வெளியீடாக வெளிவந்துள்ளது. எம்.ஃபில்., பி.எச்.டி., மாணாக்கர்களை உருவாக்கியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டவர். பெரும்பாலும் இவை நூல் வடிவம் பெற்றுள்ளன, பெற்றும் வருகின்றன. தவிர, ஆசிரியம், கல்வி உளவியல் (5), இலக்கியம் (22), சமயம், தத்துவம் (35), வாழ்க்கை வரலாறு, தன் - வரலாறு (13), திறனாய்வு (21), அறிவியல் (20), ஆராய்ச்சி (6), ஆக 122 நூல்களை வெளியிட்டவர்.

இவர்தம் அறிவியல் நூல்களுள் மூன்றும், சமய நூல்களுள் நான்கும் தமிழக அரசுப் பரிசுகளையும், அறிவியல் நூல்களுள் ஒன்று சென்னைப் பல்கலைக் கழகப் பரிசினையும், அறிவியல் நூல்களுள் ஒன்று தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசினையும் ஆக 10 நூல்கள் பரிசுகள் பெற்றன.

இவர்தம் அறிவியல் நூல்களைப் பாராட்டிக் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் ‘அருங்கலைக்கோன்’ என்ற விருதினையும் (1968), வைணவ நூல்களைப் பாராட்டிப் பண்ணுருட்டி வைணவ மாநாடு ‘ஸ்ரீசடகோபன் பொன்னடி’ என்ற விருதினையும் (1987), தமிழ்ப்பணியைப் பாராட்டித் தமிழக அரசு ‘திரு.வி.க.’ விருதினையும் (10,000 வெண்பொற்காசுகள் - 1987), இவர்தம் தமிழ்ப்பணியைப் பாராட்டி மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினையும் (1991), இராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளை கல்வி, இலக்கியம், அறிவியல் என்ற மூன்று துறைகளில் இவர்தம் பணியைப் பாராட்டி ‘இராஜா சர் முத்தையவேள்’ விருதினையும் (50,000 வெண் பொற்காசுகள் - 1994), இவர்தம் கம்பன் பணியைப் பாராட்டிச் சென்னைக் கம்பன் கழகம் ‘பேராசிரியர் இராதாகிருஷ்ணன்’ விருதினையும் (1994 - 1000 வெண்பொற்காசுகள்), சென்னை ஆழ்வார்கள் ஆய்வு மையம் இவர்தம் வைணவ வெளியீடுகளைச் சிறப்பிக்கும் முறையில் ‘ஸ்ரீ இராமாநுஜர்’ விருதையும் (1996 - 25,000 வெண் பொற்காசுகளையும்) வழங்கிச் சிறப்பித்துள்ளன.

இவர்தம் இயற்றமிழ்ப் பணியைப் பாராட்டித் தமிழ் இயல் இசை நாடக மன்றம் (அரசு) ‘கலைமாமணி’ என்ற விருதினையும் (1999 - 3 சவரன் தங்கப் பதக்கம்), இவர்தம் வாழ்நாள் பல்துறைப் பணிகளைப் பாராட்டி மதுரை - காமராஜர் பல்கலைக் கழகம் ‘டி.லிட்’ (மதிப்பியல்) பட்டத்தையும் (1999), இவர்தம் தமிழ் - சமயப் பணியைப் பாராட்டி காஞ்சி - காமகோடி பீட அறக்கட்டளை ‘சேவாரத்னா’ விருதையும் (1999 - ஆயிரம் வெண்பொற்காசுகள்), (1941-50)களில் இவர் முயற்சியால் நான்கு உயர்நிலைப் பள்ளிகளை (தாம் தலைமையாசிரியராகப் பணியாற்றிய உயர்நிலைப் பள்ளியைத் தவிர) நிறுவி கிராமப்புறங்களில் உயர்கல்வி ஏற்பட வசதி செய்ததைப் பாராட்டும் வகையில் துறையூர்த் தமிழ்ச் சங்கமும் அவ்வூர் நகராண்மைக் கழகமும் இணைந்து சிறந்ததோர் வரவேற்பினை நல்கிச் (செப்டம்பர்) சிறப்பித்தன. இவர்தம் வைணவ - இலக்கியப் பணியைப் பாராட்டிச் சென்னை கோயம்பேடு ‘மனிதநேய வைணவ இயக்கம்’ ‘வைணவ இலக்கிய மாமணி’ விருதையும் (2001), இவர்தம் வாழ்நாள் ஒட்டுமொத்தமான தமிழ்ப் பணியைப் பாராட்டி ‘தினத்தந்தி அறக்கட்டளை’ ‘சி.பா. ஆதித்தனார் ‘மூதறிஞர் விருதையும்’ (2001 - ஓர் இலட்சம் வெண்பொற்காசுகள்) வழங்கிச் சிறப்பித்தது.

இனிமை, எளிமை, தெளிவு இவர்தம் படைப்புகளின் சிறப்பியல்புகள்.

பேராசிரியர் டாக்டர் ந.சுப்புரெட்டியாரின்
நூல்கள்


ஆசிரியம் (5)
1. தமிழ் பயிற்றும் முறை
2. அறிவியல் பயிற்றும் முறை
3. கவிதை பயிற்றும் முறை
4. கல்வி உளவியல் கோட்பாடுகள்
5. யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்

இலக்கியம் (15)
6. கவிஞன் உள்ளம்
7. காலமும் கவிஞர்களும்
8. காதல் ஒவியங்கள்
3. அறிவுக்கு விருந்து
10. அறிவியல் தமிழ்
11. திருக்குறள் கருத்தரங்கு மலர். 1974 பதிப்பு
12. கம்பனில் மக்கள் குரல்
13. முத்தொள்ளாயிர விளக்கம் (பதிப்பு)
14. காந்தியடிகள் நெஞ்சுவிடுதூது (பதிப்பு)
15. திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்
16. தமிழ் இலக்கியங்கள்- அறம், நீதி முறை
17. புதுவை (மை)க் கவிஞர்-சுப்பிரமணிய பாரதியார்: ஒரு கண்ணோட்டம்
18. பாவேந்தர் பாரதிதாசன்: ஒரு கண்ணோட்டம்
19. திருக்குறள் தெளிவு
20. வாய்மொழியும் வாசகமும்

சமயம், தத்துவம்
(அ) விளக்க நூல்கள் (29)
21. முத்திநெறி (தமிழக அரசு பரிசு பெற்றது)
22. சைவ சமய விளக்கு
23. சைவ சித்தாந்தம்- ஓர் அறிமுகம்
24. சைவமும் தமிழும்
25. வைணமும் தமிழும்
26. ஆன்மீகமும் அறிவியலும்
27. வைணவ உரைவளம் (ஐதிகம், இதிகாசம், சம்வாதம்)
28. கலியன்குரல்
29. கீதைக்குறள் (பதிப்பு)
30. கண்ணன் எழில் காட்டும் கவிதைப் பொழில் (பதிப்பு)
31. ஆண்டாள் பாவையும் அழகு தமிழும் (பதிப்பு)
32. கண்ணன் துதி பதிப்பு)
33. இராம தோத்திரம் (பதிப்பு)
34. முருகன் துதியமுது (பதிப்பு)
35. திருப்பாவை விளக்கம்
36. நவவித சம்பந்தம்
37. அர்த்த பஞ்சகம்
38. அர்ச்சிராதி
39. ஐந்து இரகசியங்கள்

(ஆ) திருத்தலப் பயணநூல்கள்
40. மலைநாட்டுத் திருப்பதிகள்
41. தொண்டை நாட்டுத் திருப்பதிகள்
42. பாண்டி நாட்டுத் திருப்பதிகள்
43. வடநாட்டுத் திருப்பதிகள்
44. சோழ நாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி (த.அ. பரிசு பெற்றது)
45. சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி (த.அ. பரிசு பெற்றது)
46. தம்பிரான் தோழர்
47. நாவுக்கரசர்
48. ஞானசம்பந்தர்
49. மாணிக்க வாசகர்

திறனாய்வு (24)
50. பாட்டுத்திறன்
51. தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை
52. கம்பன் படைத்த சிறுபாத்திரங்கள்
53. அகத்திணைக் கொள்கைகள்
54. கவிதையநுபவம்
55. அண்ணல் அநுமன்
56. புதுக்கவிதை போக்கும் நோக்கும்
57. கண்ணன் பாட்டுத் திறன்
58. பாஞ்சாலி சபதம்- ஒரு நோக்கு
59. பாரதீயம் (த. அ. பரிசு பெற்றது)
60. குயில்பாட்டு: ஒரு மதிப்பீடு
61. உயிர் தந்த உத்தமன் (பதிப்பு)
62. ஆழ்வார்கள் ஆரா அமுது
63. விட்டு சித்தன் விரித்த தமிழ்
64. சடகோபன் செந்தமிழ்
65. பரகாலன் பைந்தமிழ்
66. பாவேந்தர் பாட்டுத்திறன்
67. பாண்டியன் பரிசு: ஒரு மதிப்பீடு
68. கவிஞர் வாலியின் அவதார புருஷன்: ஒரு மதிப்பீடு
69. கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி: ஒரு மதிப்பீடு
70. வாழும் கவிஞர்கள்
71. அறிவியல் நோக்கில்-இலக்கியம், சமயம், தத்துவம்
72. தந்தை பெரியார் சிந்தனைகள்
73. பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்
74. இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்

வரலாறு, தன் வரலாறு (15)
75. நினைவுக் குமிழிகள்- முதற் பகுதி
76. நினைவுக் குமிழிகள்- இரண்டாம் பகுதி
77. நினைவுக் குமிழிகள்- மூன்றாம் பகுதி
78. நினைவுக் குமிழிகள்- நான்காம் பகுதி
79. நினைவுக் குமிழிகள்- ஐந்தாம் பகுதி
80. மலரும் நினைவுகள்
81. நீங்காத நினைவுகள்
82. வேமனர்
83. குரஜாட
84. சி. ஆர். ரெட்டி
85. தாயுமான அடிகள்
86. பட்டினத்தடிகள்
87. வள்ளல் இராமலிங்க அடிகள்
88. இராமாநுசர்
89. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள்
90. தமிழ்க்கடல் இராய.சொ.
91. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்

அறிவியல் (15)
92. மானிட உடல்
93. அணுவின் ஆக்கம்
94. இளைஞர் வானொலி
95. இளைஞர் தொலைக்காட்சி
96. அதிசயமின்னணு
97. நமது உடல் (த. அ. பரிசு பெற்றது)
98. அம்புலிப் பயணம்
99. தொலை உலகச் செலவு
100. அணுக்கரு பெளதிகம் (செ.ப.க. பரிசு பெற்றது)
101. இல்லறநெறி
102. வாழையடி வாழை
103. அறிவியல் விருந்து (தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்றது)
104. தமிழில் அறிவியல்- அன்றும் இன்றும்
105. விண்வெளிப் பயணம் (த. அ. பரிசு பெற்றது)
106. இராக்கெட்டுகள் (த. அ. பரிசு பெற்றது)
107. தமிழில் அறிவியல் செல்வம்

ஆராய்ச்சி (7)
108. கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி
109. வைணவச் செல்வம்-முதற்பகுதி (தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு)
110. வைணவச் செல்வம்-இரண்டாம்பகுதி (தமிழ்ப் பல்கலைக் கழகவெளியீடு)
111. வடவேங்கடமும் திருவேங்கடமும்
112. Religion and Philosophy of Nalayiram with Special Reference to Nammalvar
113. Studies in Arts and Science (61st Birth Day commemoration volume)
114. Collected Papers

பேராசிரியர் ரெட்டியாரைப் பற்றி
சில அறிஞர் புகழாரங்கள் ....


‘சாதி அமைப்பு ஒழிக்கப் பெறாதவரை நாட்டிற்குக் கதி மோட்சம் இல்லை ’ என்பது இவர் கொள்கை. தந்தை பெரியார் அடிச்சுவட்டை ஓரளவு பற்றியவரல்லவா?

- சிலம்பொலி செல்லப்பன் (இவர் மாணவர்)‘நெம்புகோல் விஞ்ஞானம் கற்ற ஆசான்
நெடுமாளின் திருவருளால் தமிழைச் சேர்ந்தார்
அம்பலத்தில் ஆடாமல் அறைக்குள் ஆய்ந்தே
அறிவுலகப் பலதுறையில் நூல்கள் யாத்தார்’

ஆழ்வார்கள் பாசுரத்தில் மூழ்கி மூழ்கி
ஆழங்கால் படுவதவர் பிறவிப்பேறு;
வாழ்விற்கும் கருவிதரும் விஞ்ஞானத்தில்
வைத்திருக்கும் பேரறிவு கல்விப்பேறு;

ஆழ்வாரின் தலைமணியாம் நம்மாழ்வாரை
அருகணைய வாய்த்ததுவே ஆய்வுப்பேறு;
பால்வார்க்கும் தாய்போல துறைகள் தோறும்
பலநூல்கள் அவர்யாத்தால் தமிழர் பேறே.

- டாக்டர் அ. சிங்காரவேலன், தமிழ்ப்பேராசிரியர்
(ஓய்வு) தேவக்கோட்டை சேவுகன் அண்ணாமலைக்
- கல்லூரி (ரெட்டியாரின் மாணாக்கர்)

குறிப்புகள்

 1. இது ஒரு யுக்தி முறை. பாகவதபுராணத்தில் பத்து இயல்கள்வரை கண்ணனைப்பற்றிச் சில குறிப்புகள்தாம் சொல்லப் பெறுகின்றன. 11ம் இயலில்தான் பிறப்பு வளர்ப்பு, தாய், தந்தையர் போன்ற விவரங்கள் தரப்பெறுகின்றன. அது போல ஒருமுறைதான் இன்று பெரியாரைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வது.
 2. திரு.வி.க., ஆர்.கே. சண்முகம் செட்டியார், இராஜாஜி, சேலம் விசயராகவாசாரியர், நாவலர் எஸ்.எஸ் பாரதியார் முதலிய பலர். அதிக விவரம் வேண்டுவோர் சாமி. சிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்’ என்ற நூலைப் படித்தறியலாம்.
 3. 1937-1941 வரை நான் கதர் அணிந்தவன். 1936 திருமண முகூர்த்த சேலையும் முகூர்த்த வேட்டியும் கதரே. நானும் என்மனைவியும் (1937முதல்) இராட்டையில் நன்கு நூற்போம். 1942 முதல் சிறிது சிறிதாகவிடநேர்ந்தது வெறுப்பால் அல்ல. தலைக்குமீறிய பள்ளிப்பணி. தொண்டெல்லாம் கல்விக்கு அற்பணித்தேன். திருச்சி மாவட்டத்தில் சிறந்த தலைமை ஆசிரியர், கணித அறிவியல் ஆசிரியர் என்ற புகழ் பெற்றேன்.
 4. எனது தாய்மொழி தெலுங்கு. படித்தது தமிழ். அறிவியல் படிப்பு; தமிழுக்கு வந்தவன். தாய்மொழி தெலுங்கு என்று கூறி சென்னைப் பல்பகலைக் கழகத்தில் நுழையமுடியாமல் செய்துவிட்டனர். திருப்பதியிலும் ‘அரவவாடு’ என்று கூறி அருவருப்புக் காட்டினர். The mother has come to daughter’s house. Treat her with respect என்பது போல் நகைச்சுவையாகப் பேசி அனைவராலும் அரவணைக்கப் பெற்றவன். இப்போது இங்குத் தமிழ் இலக்கியத் துறையில் வாழ்நாள் Emeritus Professor ஆகப்பணி; மூன்று பிஎச்.டி. மாணவர்கட்கு வழி காட்டும் பொறுப்பு.
 5. நான் திருப்பதியில் பணியாற்றியபோது தமிழ் இலக்கியத்தை ஆழ்ந்து கற்று முதல்வகுப்பு பெறவேண்டும் என்று வற்புறுத்துவேன். இது தமிழாசிரியனாகப் போவதற்காக அல்ல என்றும், தேர்வுகள் எழுதி வங்கி அலுவலர், முதல் வகுப்பு அலுவலர், IAS அலுவலர் பணிக்குச் செல்ல முயலவேண்டும் என்றும் அதற்காகப் பொது அறிவு பெறும் வழிகளைக் காட்டியும் அறிவுறுத்துவேன். பொருளாதாரம், தத்துவம், கணிதம், அறிவியல் படிப்போர் எங்ஙனம் பிறதுறைகளில் பணியாற்றுகின்றனரோ அவ்விதம் பணியாற்றவேண்டும் என்றும் ஆற்றுப்படுத்துவேன். இதன்பலனை அப்பொழுதே நேரில் கண்டேன்.
 6. எந்தத் துறைக்கும் போகமுடியாதவன்தான் தமிழுக்கு வருகிறான். அவனது அறிவுக்குறை பிறதுறைகட்குச் செல்லும் உந்தல் இல்லாமல் செய்துவிடுகிறது; தமிழாசிரியர் அலுவல் தவிர பிறதுறை அலுவலுக்குப் போகும் ஆசை இல்லாமல் செய்து விடுகின்றது.
 7. 17 ஆண்டுகள் ஆந்திரத்தில் பணியாற்றினாலும் என் தாய்மொழியாகிய தெலுங்கைக் கற்கும் ஆசை ஏற்படவில்லை. அறிவியல் ஆசிரியர்களின் துணை கொண்டு தாவரஇயல், விலங்கியல், உயிரியல் போன்ற துறைகளில் அறிவு பெற்றேன். அத்துறைகளில் நான் ஐந்து அறிவியல் மூலநூல்களை எழுதி வெளியிட்டேன். ஒரு பெரிய கல்வியியல் நூலை மொழிபெயர்த்து வெளியிட்டேன். “பிறநாட்டு சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும், இறவாத புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்” என்ற பாரதியாரின் வாக்கு எனக்கு இத்திசையில் செல்ல உந்தல் கொடுத்தது
 8. இது பின்னர் விளக்கப்பெறும்.
 9. இதற்குத் தமிழாசிரியர்கள் என்ன செய்வார்கள்? அறிவியல் கல்விகற்க ஏற்பாடு செய்து அதனைக் கற்றவர்களை நோக்கிவிடுக்கப் பெறவேண்டிய வினாக்கள் இவை. இவண் குறிப்பிட்ட அறிவியல் அறிஞர்கள் கல்லூரிக் கல்வியின் விளைவால் இவற்றைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்களின் உள்ளுணர்வும் ஆயும் திறனுமே அவர்கட்குக் கைக்கொடுத்து உதவின. நான் கல்லூரியில் பயின்ற காலத்தில் எனக்கு கணிதம், அறிவியல் கற்பித்த ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையே எனக்கு இயல்பாக இருந்த உந்தலைத் தூண்டிக் கணிதத்திலும் அறிவியலிலும் அளவற்ற ஆர்வத்தை விளைவித்தது. எனது நூலக அறிவியல் படிப்பும் இவற்றிற்குக் கைகொடுத்து உதவியது.
 10. இது கருத்து வேறுபாட்டுக்கு உரியது. மேல்மட்டத்திலேயே நம்சிந்தனை போய்க் கொண்டுள்ளது. அடிமட்டத்தில் கிராமமக்கள் நிலையில் இஃது இடையூறாக முடியும் என்பது வெள்ளிடை மலை.
 11. ஆங்கிலம் படித்த காந்தி, நேரு முதலியவர்களுக்குத்தான் விடுதலை வேட்கை எழுந்ததேயன்றி வடமொழி படித்த சாத்திரிகட்கும் புரோகிதர்கட்கும் கோயில் குருக்கள்கட்கு ஏன் எழவில்லை? சிந்திக்க வேண்டும்.
 12. இன்று வெளிநாட்டுக்குக் கல்வி கற்கச் சென்றவர்கள் அனைவரும் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்றவர்களே என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
 13. குடியரசு (10-5-1931) இதழில் எழுதப்பெற்ற தலையங்கம். குடியரசு வாரஇதழ் 2.5.1925இல் ஈரோட்டில் தொடங்கப்பெற்றது. இதனைச் சிறந்த தமிழறிஞரும் பெரியாருமாகிய திருப்பாதிரிப்புலியூர் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் என்னும் ஞானியார் சுவாமிகள்தொடங்கி வைத்தார்கள்.
 14. இக்காலத்தில் நான் புனித சூசையப்பர் கல்லூரி பி.எஸ்சி வகுப்பு மாணவன். அன்றும் இன்றும் அரசியல் எனக்கு ஒவ்வாமை. செய்திகளைப் படிப்பதோடு சரி. ஞாயிறு மாலைநேரங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் தந்தை பெரியார், புதுக்கோட்டை வல்லத்தரசு, திருச்சி ஹாலாசியம் (காங்கிரசு) முதலிய நல்ல பேச்சாளர் பேசுவது தெரிந்தால் தொலைவிலிருந்து பேச்சைக் கேட் பேன். படிப்பைத்தவிர, பிற தாக்கங்கள் என்னைக் கவருவதில்லை.
 15. ஈரோட்டுத்தாத்தா-தமிழ்க்காத்த போராட்டம்-17
 16. மேலது-17
 17. கைகேயி காடேக வேண்டும் என்பது தந்தையின் கட்டளை என்று சொல்லக்கேட்ட இராமன் முகம்,
  அப்பொழுது அலர்ந்த செந்தா மரையினை வென்ற தம்மா
  -கைகேயி சூழ்வினை-108

  என்று மலர்ந்தது (இது வனவாசம்). இப்போது இராமசாமியின் முகம் செந்தாமரையினை நிகர்த்தது (இது சிறைவாசம்) இராமன் தன்னிச்சையாகத் திரியலாம். இராமசாமிக்கு அந்த உரிமை இல்லை. இதுதான் ‘வேற்றுமை’. இராமன் படத்தை செருப்பாலடித்தற்கு இது ஒருவகைத் தண்டனையோ என்று எதிரிகள் கருதுகின்றனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

 18. பா.க.தேசியகீதங்கள்-சுதந்திரப்பள்ளு-5
 19. சக்கரவர்த்தி இராசகோபாலாசாரியார்
 20. பசுமலை நாவலர் ச. சோமசுந்தர பாரதியார்
 21. 1937 டிசம்பர் 26இல் கூட்டப்பெற்ற ‘தமிழர் மாநாடு’
 22. நவம்பர் 13, 1835இல் கூட்டப்பெற்றது.
 23. ஈரோட்டுத்தாத்தா-தமிழ்க்காத்தபோராட்டம் (காண்க)
 24. திருத்தம் செய்யும்போது வரிவடிவம் மேற்கொள்ளும்போது ஒலிவடிவம் மாறாதிருக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. நான் திருப்பதியில் பணியாற்றியபொழுது (1960-77) -1975இல் மானமிகு கி.வீரமணி கேட்டபடி எழுத்துச் சீர்த்திருத்தம் வரைந்து அனுப்பினேன். அது பெரியார் ஆண்டுவிழா மலர் ஒன்றில் வெளிவந்தது; பின்னர் அவராலேயே நூல்வடிவமும் பெற்றது.
 25. என்ற எழுத்தே ஒரு சொல்லாக வழங்கி பொருள் தருவதால் அதை அப்படியே வைத்துக் கொள்ள நேர்ந்தது (எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில்).
 26. உயிர் எழுத்துகள் 12இல் ஒள காரம் நீக்கப்பெற்றால் உயிர்மெய் எழுத்துகளில் (216களில்) 18 எழுத்துக்கள் குறைந்து விடுகின்றன.
 27. பெரும்பாலான ஐரோப்பியமொழிகளின் எழுத்துகள் யாவும் ஆங்கில மொழியில் பயன்படும் 26 எழுத்துகளே. ஒரு குறிப்பிட்ட கணக்குப்படி இயக்கினால் ஆங்கில மொழிவரும். வெவ்வேறு வகைகளில் இயக்கி வெவ்வேறு மொழிகளை உண்டாக்கலாம். இத்தனை விதமாக இயக்கி இத்தனைவிதமான மொழிகளை உண்டாக்கும் ஒருவனுக்கு மிகப் பெரிய ஊதியம். ஐரோப்பாவில் இவனுக்கு அளிக்கப்பெறும் ஊதியம் போல் எந்த உயர்ந்த அலுவலர்க்கும் இல்லை!
 28. கட்டுரை: தமிழ் வரிவடிவச் சீரமைப்பு - தந்தை பெரியார் 121-ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் (விடுதலை)-பக். 156.
 29. திருவிளையாடற்புராணத்தில் தாயைப் புணர்ந்தவன், குருபத்தினியைப் புணர்ந்தவன் இவர்கட்கு மோட்சம் சொல்லப்பெற்றுள்ளது. பெரியபுராணத்தில் சிவபெருமான் அடியார் வேடங்கொண்டு பிள்ளைக்கறி கேட்டது, அவரது மனைவியைக் கேட்டது போன்ற நிகழ்ச்சிகள் வருகின்றன. பகுத்தறிவு உள்ளவனுக்கு அருவருக்கத்தக்க இவை கோபத்தைக் கிளப்புகிறது. கற்பனை செய்தாலும் இவ்வளவு கீழான நிலைக்குப் போகவேண்டுமா? பெரியார் சொல்லுகிறார் என்றால் ஏன் சொல்லமாட்டார்? அவரைத்தவிர எவர் இவற்றை எடுத்துக் காட்டினார்; அதனால் தானே ‘பெரியார்’ ஆகிவிட்டார்!
 30. எடு: என் நூல்கள் அறிவியல் விருந்து, அறிவியல் தமிழ்.
 31. தேர்வுக்குழுவே அவற்றை எடுப்பதில்லை. தப்பித் தவறி பாடநூல்களாக அமைந்துவிட்டால் ஆசிரியர் தம் ஒவ்வாமைப் பண்பால் அவற்றைத் தொட்டுக்கூடப் பார்ப்பதில்லை. தாம் அக்கருத்துகளை அறிந்து கொள்ளலாம் என்ற அவாவும் அவர்கள்பால் எழுவதில்லை. இது மிகவும் வருந்தத்தக்க நிலை.
 32. ஒளவையார்-தனிப்பாடல் திரட்டு-பகுதி-1 பக். 119.
 33. இத்தகைய இலக்கியம் தோன்றினால் அஃது உணர்வுக்கு இடம் இல்லாத இலக்கியமாகவே இருக்கும்.
 34. இதை எழுதினவன் தமிழன். ஆரியன் அல்லன். கதைதான் வடநாட்டுக்கதை
 35. சுவை என்பது வாழ்க்கை நிகழ்ச்சிகளில் வருவது அல்ல. காவியத்தில், நாட்டியத்தில் வருவது. அது பொருளைப் புறக்கணித்து அநுபவிக்கத் தக்கது. அது போலத்தான் அழுகைச் சுவையும் பிறவும், தந்தை அவர்கட்கு மதிப்பு தந்து, அவரது கருத்தை ஒப்புக்கொள்ள முடியவில்லை.
 36. சங்க இலக்கியங்கள் உள்ளன. அவற்றில் ஒரு சில வடசொற்களே உள்ளன; அவ்வளவே. பெரும்பாலானவற்றை அச்சுக்குக் கொணர்ந்தவர் உ.வே.சா. இவர் தமிழ்ப் பார்ப்பனர், நம்மவர்; பெரியார் போலவே மதிக்கத் தக்கவர். போற்றற்குரியவர்.
 37. இதே ஆண்டில் நான் துறையூரில் தலைமை ஆசிரியனாக இருந்தபோது, இராசிபுரத்தில் (சேலம் மாவட்டம்) நடைபெற்ற தமிழர் மாநாட்டில் புலவர் தலைமையில் ‘கலையும் நாட்டுநிலையும்’ என்ற தலைப்பில் பேசினேன் (இரண்டாம் உலகப் பெரும்போர் நடைபெற்ற காலம் காங்கிரசும் உரிமைப்போர் முழங்கிவந்த காலம்). புலவர் அவர்கள் ‘கலையும், நாட்டுநிலையும்’ என்ற தலைப்பின் நடுவில் ஒரு காற்புள்ளி இட்டுவிட்டால் நாட்டுநிலைக்கும் பொருந்தும் என்று கூறி அனைவரையும் மகிழ்வித்ததை நினைவு கூர்கின்றேன்.
 38. இப்படிக் கூறுவது ‘கல்கி’யின் இயல்பான அடக்கம். படித்தவர்கள் இவரை மிஞ்சமுடியாது. அவர்தம் புதினங்கள்கூட நல்லத்தமிழில் அமைந்துள்ளன. தாமஸ் ஹார்டியின் புதினங்களை நிகர்த்தவை அவர்தம் புதினங்கள்.
 39. ஆங்கில அறிஞர் டாக்டர் ஜான்சன் வாதம் புரிவதில் சில சமயம் வாதம் தவறாக முடியும்போது விதண்டாவாதத்தில் இறங்குவார். அவர் வரலாற்றை எழுதும் ஆசிரியர் கூறுவார்: “if his pistol misses fire, he would knock at its butt’s end” இதை அய்யா அவர்களின் விதண்டாவாதத்துடன் ஒப்பிட்டு மகிழலாம்.
 40. நாரா. நாச்சியப்பன்-ஈரோட்டுத் தாத்தா - ஆரியத்தின் வைரி 3, 5. பெரியார் மீது கொண்டிருந்த அளவற்ற பக்தியின் காரணமாக தம்முடைய பதிப்பகத்தையும் ‘அன்னை நாகம்மை பதிப்பகம்’ என்று பெயரிட்டுள்ளார்.
 41. அந்தமொழியை வெறுக்கவேண்டியதில்லை. இந்தி படிப்பதுபோல் தனியாகக் கற்றுக் கொள்ளலாம். பார்ப்பனர்கள் தம்மொழி என்று சமஸ்கிருததத்தை உரிமை கொண்டாடுகின்றனரேயன்றிப் பெரும்பாலோர் படிப்பதில்லை.

சான்றுகள்