உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழகத்தில் குறிஞ்சி வளம்/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து
முன்னுரை

“ஒரு சொற்றாெடர் எழுதுவதற்கு நூறு நூல்கள் படித்தேன். ஒரு வருணனை எழுதுவதற்கு நூறு கல் சுற்றுப் பயணம் செய்தேன்” என்று குறிப்பிட்டான் ஆங்கிலச் சொல்லேருழவன் மெகாலே. இதைப் படித்தவுடன் என்னையறியாமல் ஒருவகை உள்ளக்கிளர்ச்சி பெற்றேன். ‘நாமும் ஏன் தமிழகத்தைச் சுற்றிவரக்கூடாது?’ என்ற எண்ணம் என் உள்ளத்தில் ஏற்பட்டது. முதன் முதலாக இயற்கை எழில்மிக்க தமிழகத்து மலைகளைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்று முடிவுசெய்தேன். இந்த முடிவு என் உள்ளத்தில் கருக்கொண்ட பொழுது, இப்பயணத்தை ஓர் இன்பப் பயணமாகவே மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் புறப்படும் நேரத்தில் என் உள்ளம் மாறிவிட்டது. இப்பயணத்தைப் பயனுள்ள வழியில் செலவிட்டால் என்ன என்று எண்ணினேன். அதன் விளைவே இந்நூல். ஆனால் முதலில் என் உள்ளத்தில் கருக்கொண்ட குறிக்கோள் முற்றுப் பெறாமல் போய்விட்டது. வரலாற்றுச் செய்திகளையும், புள்ளி விவரங்களையும் தேடித்திரிந்த காரணத்தால் இயற்கை எழிலில் என் உள்ளத்தை முழுக்க முழுக்கத் தோயவிட்டு, இன்பம் நுகர முடியாமல் போய்விட்டது. அக்குறையை நிறைவு செய்ய, நான் மீண்டுமொருமுறை தமிழகத்து மலைகளைச் சுற்றித்தான் ஆகவேண்டும்.

இந்நூல் வெளிவரப் பல நண்பர்கள் எனக்குப் பேருதவி புரிந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சேலம் மாவட்ட விளம்பர அதிகாரியும், என் கெழுதகை நண்பருமான திரு. T. M. காளியப்பா, M. A. அவர்கள். சிறந்த மேற்கோள் நூல்களை அவர் எனக்கு அரிதின் முயன்று தேடித்தந்தார். நீலகிரிக் காடுகளின் உட்பகுதியில் நுழைந்து பல செய்திகளை அறிவதற்கும், தோடர்கள் வாழும் தொட்டபெட்டா முதலிய இடங்களுக்குச் சென்று அவர்கள் பண்பாட்டை அறிவதற்கும் எனக்குப் பெருந்துணை புரிந்த படகா இளைஞனான ‘லிங்கமூர்த்தி’யை என்னால் இங்குக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. அவ்விளைஞன் என்னைக் குதிரை மீது அமர்த்தி, எளிதில் சென்றடைய முடியாத இடங்கட்கெல்லாம் இட்டுச் சென்று, பல அரிய செய்திகளை அறிவதற்குப் பெருந்துணை புரிந்தான்.

இந்நூல் சிறந்த முறையில் அச்சிடப்பட்டு உங்கள் கையில் வண்ணமலராய், விரிந்திருப்பதற்குக் காரணமானவர், மதிப்பிற்குரிய திரு. பழனியப்பா அவர்களே அன்னார்க்கு என் நன்றி.

முருகுசுந்தரம்

சேலம்
1-12-61