தமிழகத்தில் குறிஞ்சி வளம்/குறிஞ்சி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search1. குறிஞ்சி

மங்கையரின் சிரிப்பொலியோடு போட்டியிட்டு மலையிலிருந்து இழிந்துவரும் குற்றால நீர்வீழ்ச்சியில் மூழ்கியபோதும், உதகமண்டலத்தைச் சுற்றிப் பரவியுள்ள கண்கவரும் இள மரக்காட்டில் கவலையின்றிச் சுற்றித் திரிந்தபோதும், அணியிழை மகளிர் ஆடவர் புடைசூழக் கோடைக்கானல் ஏரியில் தோணியூர்ந்த காட்சியை நேரில் கண்டபோதும், புரட்சிக் கவிஞன் தமிழகத்தை வாழ்த்திப் பாடிய தெள்ளு தமிழ்ப்பண், தென்றல் இவர்ந்து என் செவிப்பறையில் மோதியது.

புனலிடை மூழ்கிப் பொழிலிடை உலவி
பொன்னார் இழையும் துகிலும் பூண்டு
கனிமொழி பேசி இல்லறம் நாடும்
காதல் மாதர் மகிழுறும் நாடு!”

இப்பாடல், எத்தனை முறை படித்தாலும் தெவிட்டாமல் தித்திக்கும் கொல்லித்தேன். “மங்கை ஒருத்தி தரும் சுகமும் எங்கள் மாத்தமிழுக்கு ஈடாமோ?” என்ற மறத்தமிழன் கூற்றுக்குப் பொருத்தமான எடுத்துக்காட்டு! இன்றமிழ் நாட்டின் இயற்கை வளத்தை எழில் நலத்தோடு கூட்டி, நம் கண்ணெதிரே கொண்டு வந்து நிறுத்தும் படப்பிடிப்பு அன்பொடு இயைந்த காதல் வாழ்வை அணிபெறப் பொதிந்து வைத்த அலங்காரப் பெட்டகம் ! பண்டைத் தமிழ் வாழ்வைத் தெரியக் காட்டும் பண்ணமைப்பு !

இக்கொஞ்சு தமிழ்ப் பாட்டில் என் உள்ளத்தைக் குழையவிட்டு, தமிழகத்து மலைகளில் இரண்டு திங்கள் பித்தனைப்போல் சுற்றியலைந்தேன். சிலம்பில் சிரித்து, மேகலையில் மின்னி, சங்கப்பொழிலில் தவழ்ந்து விளையாடும் செந்தமிழ்க் குமரியோடு உறவுகொண்ட என் கவிதை உள்ளம், கபிலரும் பரணரும், அவ்வையும் ஆதிமந்தியும் வாழ்ந்த சங்க காலத்தை நோக்கிச் சிறகடித்துப் பறந்து சென்றது. இன்றைய விஞ்ஞான நாகரிகம் என் உள்ளத்தைவிட்டு நீங்கியது. ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட என்னரும் தமிழ் நாகரிகம் என் இதயத்தில் குடிப்புகுந்தது. நாற்புறச் சுவர்களுக்குள் இருந்து வரிவரியாகப் படித்த குறிஞ்சிக் கலியின் உண்மைப் பொருளை நேரில் கண்டு உணர்ந்தேன். குறிஞ்சிப்பாட்டின் விரிவுரையை இங்கு கூர்ந்து கற்றேன். அகநானூற்றுப்பாடல்களை இங்கு ஆழ்ந்து பயின்றேன். பண்டைத் தமிழ்க்குடியின் குறிஞ்சி வாழ்வு என் உள்ளத்தில் நிழலாடியது. அச்சங்க காலக் கனவிலேயே மூழ்கி என்றென்றும் இருந்துவிட்டால் என்ன என்று என் உள்ளம் ஏங்கியது.

வெள்ளையர் வாணிபத்திற்காக வந்து இறங்கிய போதுதான் நாகரிகம் என்னும் சரக்கையும் தங்கள் கப்பலிலிருந்து தமிழகத்தில் கொட்டினார்கள் என்று எண்ணும் வழக்கம் சில மேதாவிகளிடையே இன்றும் இருந்து வருகிறது. குளிர் நாட்டில் வாழ்ந்த வெள்ளைத்துரைமார்கள் தமிழகத்துக் கொதிக்கும் வெயிலுக்கு ஆற்றாமல் உதகைக்கும், கோடைக்கானலுக்கும் ஓடினர். ஆங்கில நாகரிகத்தைச் செம்மறியாட்டைப் போல் பின்பற்றிய நம் நாட்டுச் செல்வர்களும், வெள்ளையரின் வாலைப்பிடித்துக்கொண்டு குறிஞ்சி நகரங் (Hill Stations) களுக்கு ஓடினர். கோடையில் குறிஞ்சி நகரங்களில் வாழ்வதை நாகரிகம் என்றும் கருதினர். மலை வாழ்க்கையைக்கூட வெளி நாட்டார் தாம் நமக்குக் கற்றுக் கொடுத்ததாகக் கருதினர். பாவம்! நம் இலக்கியத்தில் பரந்து கிடக்கும் குறிஞ்சித் திணை அவர்கள் கண்ணில் படுவதில்லை.

உலகில் வழங்கும் வளர்ச்சியுற்ற மொழிகளிலெல்லாம் எழுத்து, சொல், யாப்பு, அணி என்ற நான்கிற்கும் இலக்கணம் உண்டு. ஆனால் வாழ்க்கைக்கும் இலக்கணம் அமைத்து அதன்படி வாழ்ந்த பெருமை, பரவைசூழ இப்பரந்த உலகில் தமிழருக்கேயன்றி வேறு யாருக்கும் கிடையாது. அவ்வாழ்க்கை இலக்கணத்தை அகம், புறம் எனத் தமிழர் இரு கூறாக்கினர். அவ்விலக்கணத்தின் அடிப்படையிலேயே தமிழ் இலக்கியங்களெல்லாம் தழைத்து வளர்ந்தன.

அக வாழ்க்கை காதல் வாழ்க்கையாகும். ஒத்த காதல் வயப்பட்ட ஓரிளைஞனும் குமரியும், துய்த்த இன்பத்தை இன்னதென வெளியில் கூற இயலுமோ? கற்றறிந்த காதல் மொழியையும், காதலன்பால் உற்றறிந்த இன்ப உணர்வையும் அகத்தில் பொதிந்து வைத்து, எண்ணி எண்ணி இன்பவெறி கொள்வாளே தவிர எந்தப் பெண்ணும் வெளியில் கூறமாட்டாள். கொஞ்சுமொழிக் கோதையிடம் பயின்ற காதல் விளையாட்டை, நெஞ்சில் நிறுத்தி நினைவைத் தேனாக்கி வாழ்வானே தவிர, எந்த ஆடவனும் வெளிக்கூறான். இவ்வாறு அகத்தோடமைந்த அன்புடை வாழ்க்கை ‘அகம்’ எனப்பட்டது. அவ்வாறன்றி, தம் வாழ்வில் துய்த்த இன்ப துன்பங்களைப் பலரும் அறிய வெளிப்படக் கூறும் தகுதியுடையது புறம் எனப்பட்டது. அகம் என்றால் இன்பத்தை மட்டும் குறிப்பதன்று. துன்பமும் காமத்தைச் சார்ந்து நிகழுமாயின் அது அகத்திலும், பிற சார்பு பற்றித் தோன்றுமாயின் அது புறத்திலும் கொள்ளப்படும். மற்றும் ஈகை, வீரம், யாவும் புறம் எனப்படும்.

தமிழ் மக்கள் நிலத்தை ஐவகையாகப் பிரித்தனர். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பனவே அவை. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி எனவும், வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் எனவும், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனவும், காடும் காடு சார்ந்த இடமும் முல்லை எனவும் குறிக்கப் பெறும். ஆகையினால்தான் நிலவுலகை ‘நானிலம்’ என்ற பெயரால் தமிழ்ப் பெரியோர் குறித்துப் போந்தனர். பாலைக்குத் தனி நிலப்பகுப்புக் கிடையாது. குறிஞ்சியும் முல்லையும் கால வேற்றுமையால் மாறிச் சுரமாதலே பாலையெனக் கூறப்படுகின்றது. இந்நிலங்களில் நிலைபெற்ற பொருள்களை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என மூவகைப் படுத்தினர்.

முதற்பொருள் நிலம் காலம் என இருவகைப்படும். குறிஞ்சி நிலத்திற்குரிய பெரும்பொழுது கூதிர் காலமும் முன்பனிக் காலமும் ஆகும். சிறுபொழுது யாமம். கருப்பொருள் என்பது அந்தந்த நிலத்திற்குரிய தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் முதலியன. குறிஞ்சிக்குரிய தெய்வம் முருகன். உயர்ந்தோர் பொருப்பன், வெற்பன், சிலம்பன், கொடிச்சி. தாழ்ந்தோர் குறவர், கானவர், குறத்தியர். பறவைகள், கிளி, மயில். விலங்கு, பன்றி, புலி, கரடி, யானை, சிங்கம். ஊர் சிறுகுடி, குறிச்சி. நீர், அருவிநீர், சுனைநீர். பூ, வேங்கைப்பூ, குறிஞ்சிப்பூ, குவளைப்பூ, காந்தட்பூ. மரம் சந்தனம், தேக்கு, அகில், வேங்கை, திமிசு, அசோகம், நாகம், மூங்கில். உணவு மலைநெல், மூங்கிலரிசி, தினை, தேன், பழம். பறை, முருகியம், தொண்டகப்பறை. யாழ் குறிஞ்சி யாழ். பண் குறிஞ்சிப்பண். தொழில் வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினைகாத்தல், கிளிகடிதல், தேனழித் தெடுத்தல், கிழங்கு கிண்டியெடுத்தல், அருவி நீராடல் முதலியன.

குறிஞ்சிக்குரிய உரிப்பொருள்கள், புணர்தலும், புணர்தல் நிமித்தமும் ஆகும். இயற்கைப் புணர்ச்சி யும் இடந்தலைப்பாடும், பாங்கற் கூட்டமும், பாங்கியிற் கூட்டமும், இரவுக் குறிக்கண் எதிர்ப்பாடும், பகற் குறிக்கண் எதிர்ப்பாடும் புணர்தல் என்று கூறப்படும், தலைவன் தோழியைக் குறையுறும் பகுதியும், அப்போது தோழி கூறுவனவும், குறை நேர்தலும், மறுத்தலும் புணர்தல் நிமித்தமாகும்.

குறிஞ்சி என்ற இப்பெயர் அந்நிலத்தில் பூக்கும் மலர்பற்றி வந்ததாகும். குறிஞ்சிப்பூ நம் நாட்டில் மிகவும் அருகிக் காணப்படுகிறது. இது பல்லாண்டுகளுக்கு ஒருமுறையே பூக்கும் தன்மையது. அழகும் மணமும் மிக்கது. இது மலரும் காலத்தை முன்கூட்டியே அறிந்து மேலை நாட்டினரும், நம் நாட்டில் ஆர்வமுள்ள பலரும் அது பூக்கும் இடத்தில் சென்று கூடுகின்றனர். இறுதியாக 1959-ஆம் ஆண்டு, குறிஞ்சி மலர் கோடைக்கானலில் பூத்தது. இச்செய்தியைப் பத்திரிகைகள் விளம்பரப்படுத்தின.

நானிலங்களில் குறிஞ்சியே சிறந்தது; வற்றாத வளப்பமுடையது. அதனால்தான் வைப்பு முறையில் குறிஞ்சியை முதலில் வைத்துக் கூறினர் இலக்கண நூலார். மற்ற நிலங்களில் வாழும் மக்களைப்போல் குறிஞ்சி நில மக்கள் உழைக்க வேண்டியதில்லை. இவர்களது வாழ்க்கைக்குப் போதுமான வளம் இயற்கையாகவே மண்டிக் கிடக்கிறது. எப்பொழுதும் இடையறாத மழை பெய்து கொண்டிருப்பதால், நீர் வளத்திற்கு இங்கு குறைவில்லை. எங்கு பார்த்தாலும் அருவிகளும், சிற்றாறுகளும் சுழித்து ஓடிய வண்ணமிருக்கும். தினையை விதைத்துவிட்டால் தானாக விளையும். அருவி நீரின் வளத்தால் மலைநெல் விளைகிறது. மூங்கிலரிசியும் குறிஞ்சிவாழ் மக்களுக்கு உணவாக அமைகிறது. தேனும் இவர்களுக்குச் சிறந்த உணவாகும். தினை மாவைத் தேனில் பிசைந்து கானவர் விருப்போடு உண்பர். காடுகளில் உள்ள தேன்கூட்டை அழித்துத் தேனெடுப்பது இவர்களுக்குச் சிறந்த பொழுது போக்கு. கானவர் தேனெடுப்பதில் பெரு விருப்புடையவர் என்பதைக் குறிஞ்சிக் கலி இலக்கிய நயத்தோடு கூறிச் செல்லுகிறது.

மலைநாட்டுத் தலைவன் ஒருவன், காதலியைக் காணவராமல் காலந்தாழ்த்துகிறான். அவன் பிரிவைப் பொறுத்தல் ஆற்றாத காதலி, மிகவும் உள்ளம் நைந்து வாடுகிறாள். அவள் துன்பத்தைக் கண்ட தோழி, “அன்புடைத் தோழி! உன் காதலன் உயர்குடியில் பிறந்தவன். அவன் மலைநாடு வளப்பம் மிக்கது. அவன் நாட்டில், தினைக் கொல்லையில் அமைத்த பரண்மீது அமர்ந்து காவல் புரியும் கனி மொழிப்பாவையர், தம் கூந்தலின் ஈரத்தை உலர்த்திக் கொள்வதற்காகப் புகைக்கும் அகிற்புகை, வானில் சென்று பரவுகிறது. அப்புகையுள் புதையுண்ட விண்மதி ஒளி மறைத்து மலையுச்சியை அடைகிறது. அம்மலையின் அடுக்கத்தில் தேன் கூடுகள் மலிந்து காணப்படுகின்றன. தேன் கூடுகளையே கண்டு பழகிய கானவர் கண்கள், புகையுண்ட முழுமதியை மலையுச்சியில் கண்டதும், அதையும் ஒரு தேன் கூடு என்று கருதுகின்றனர். அக்கூட்டை அடைவதற்காக மலையுச்சியில் ஏணியைச் சார்த்தி ஏறுகின்றனர். அத்தகைய செழிப்புமிக்க மலைநாட்டுத் தலைவன் உன்னைக் காணக் கட்டாயம் வருவான்” என்று கூறித்தேற்றுகிறாள். 

அப்பாடல் பின் வருமாறு :

“அவனுந்தான், ஏனல் இதனத்து அகிற்புகை உண்டு இயங்கும்
வான் ஊர் மதியம் வரைசேரின், அவ்வரைத்
தேனின் இறால்என ஏணிஇழைத் திருக்கும்
கான்அகல் நாடன் மகன்.”

அருவி நீரின் வளத்தால் விளைந்த மலைநெல்லை அவர்கள் குற்றும் செய்தி இலக்கியத்தில் சுவைபடக் கூறப்பட்டுள்ளது. முற்றி மணம் வீசும் சந்தனமரத்தால் உரல் செய்வார்கள். முத்து உதிருமளவு முதிர்ச்சி பெற்று, நீண்டு வளர்ந்த யானையின் கொம்பை உலக்கையாகப் பயன்படுத்துவார்கள். முறம் போல் அகன்றிருக்கும் சேம்பின் இலையில் மலைநெல்லை வாரிக் கொண்டு வருவார்கள். அதை உரலில் கொட்டி மகளிர் இருவர் உலக்கையால் மாறி மாறிக் குற்றுவர். குற்றும் உழைப்பை மறப்பதற்காக இருவரும் இனிமையாகப் பாடுவர். அப்பாடல் கேட்பதற்கு இனிமையானது. அது வள்ளைப்பாட்டு எனப்படும். உலக கைப்பாட்டு, அகவினம் என்றும் அது கூறப்படும். அப்பாட்டைக் கேளுங்கள் :

“அகவினம் பாடுவாம் தோழி ! அமர்க்கண்
நகைமொழி நல்லவர் நாணும் நிலைபோல்
தகைகொண்ட ஏனலுள் தாழ்குரல் உரீஇ
முகைவளர் சாந்துரல் முத்தார் மருப்பின்
வகைசால் உலக்கை வயின்வயின் ஒச்சிப்
பகையில் நோய்செய்தான் பயமலை ஏத்தி
அகவினம் பாடுவாம் நாம்.”

இவ்வாறு குற்றிய அரிசியை உலையிட்டுச் சமைத்து விருந்தோடு உண்பர்.

மா, பலா, வாழை ஆகிய முக்கனியும் தமிழகத்து மலைகளில் செழித்து வளரும். அவ்வளம் கலித்தொகையில் மிக இனிமையாகக் கூறப்படுகிறது. தினைக்கொல்லையை இரவில் காவல் புரியும் கானவன் ஒருவன், யானையின் அடியோசை கேட்டுக் கவண்கல் வீசுகிறான். இரவு நேரமாகையால் யானையை நோக்கி எறியப்பட்ட கல் குறிதவறி வேறு பக்கம் செல்கிறது. அக்கல் வேங்கை நறுமலரைச் சிதறி, ஆசினிப்பலவின் பழுத்த கனியைப் பிளந்து, தேன்கூட்டை உடைத்து, மாவின் பூ, காய் ஆகிய குலைகளைச் சிதறி, மாவிற்கு அருகில் வளர்ந்திருக்கும் வாழையின் மடலைக் கிழித்து, இறுதியாக அதற்கு அருகே இருக்கும் செவ்வேர்ப் பலவின் தீங்கனியைத் துளைத்து உட்சென்று தங்குகிறதாம். என்னே மலைநாட்டின் வளம் !

“இடிஉமிழ்பு இரங்கிய இரவுபெயல் நாடுநாள்
கொடிவிடுபு இருளிய மின்னுச்செய் விளக்கத்துப்
பிடியொடு மேயும் செய்புன் யானை
அடிஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன்
நெடுவரை ஆசினிப் பணவை ஏறிக்
கடுவிசைக் கவணையில் கல்கை விடுதலின்
இறுவரை வேங்கையின் ஒள்வீ சிதறி
ஆசினி மென்பழம் அளிந்தவை உதிராத்
தேன்செய் இறாஅல் துளைபடப் போகி
நறுவடி மாவின் பைந்துணர் உழக்கிக்
குலையுடை வாழைக் கொழுமடல் கிழியாப்
பலவின் பழத்துள் தங்கும் மலை”

இவ்வாறு இயற்கை வளம் செழித்துக் குலுங்கும் மலைநாட்டில் வாழும் மக்களுக்குக் கவலை ஏது? இன்னிசை பாடி வானில் திரியும் வானம்பாடிபோல் இன்ப வாழ்வு வாழ்ந்தனர் மலைவாழ் மக்கள். சுனை நீரில் படிந்து விளையாடி, சோலையில் ஆடிப்பாடிப் பொழுதைக் கழித்தனர். குறிஞ்சித் திணைக்குரிய ஒழுக்கம் புணர்ச்சி. அந்நில மக்களின் காதல் வாழ்வு குறிப்பிடத்தக்கது. புனல் விளையாட்டில் இன்பங் கண்ட ஒரு மலைநாட்டுத் தலைவியின் காதல் அனுபவத்தை அவள் தோழி கூறுகிறாள். 

காட்டாற்றில் புதுவெள்ளம் வருகிறது. அதில் ஆடி மகிழத் தோழியரோடு செல்லுகிறாள் தலைவி. புதுப்புனலில் பாய்ந்து நீந்தி விளையாடுகிறாள். நெடுநேரம் புனலில் விளையாடியதால் அவள் கால்கள் சோர்ந்துவிடுகின்றன. தாமரை மலர்போலும் ஒளி வீசும் அவளுடைய கண்களும் சோர்ந்துவிடுகின்றன. ஆற்று வெள்ளம் அவளைத் தன்னோடு அடித்துக் கொண்டு செல்லுகிறது. அப்போது அவ்வழியே வந்த கட்டிளங் காளையொருவன், தலைவியின் துன்ப நிலையைக் கண்டு ஆற்றில் பாய்கிறான். தன் மார்பில் அணிந்துள்ள புன்னைமலர்மாலை நீரில் அலையுமாறு நீந்திச் சென்று அவளைப்பற்றித் தன் மார்பு அவளுடைய மார்போடு பொருந்துமாறு அணைத்துக் கொண்டு வந்து கரைசேர்த்துக் காப்பாற்றுகிறான். அப்பாடல் பின்வருமாறு:

“காமர் கடும்புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்
தாமரைக் கண்புதைத்து அஞ்சித்தளர்ந்து அதனோடு ஒழுகலால்
நீள்நாக நறும் தண்தார் தயங்கப்பாய்ந்து அருளினால்
பூண் ஆகம் உறத்தழீஇப் போதந்தான் அகன்அகலம்
வருமுலை புணர்ந்தன என்பதனால் என்தோழி
அருமழை தரல்வேண்டில் தருகிற்கும் பெருமையளே!”

இன்ப அனுபவம் ! இத்தகைய அனுபவம், வாய்க்குமானால், நாள்தோறும் பெண்கள் காட்டாற்றில் விழத்தயங்குவாரோ! மற்றாெரு குறிஞ்சி நிலத்தலைவி ஊசலாடி மகிழ்ந்த சிறப்பை அவள் வாயிலாகவே கேட்போம். தலைவி தோழியிடம் கூறுகிறாள் தன் காதல் இன்பத்தை.

“ தோழி! நம் தினைக்கொல்லைக்கு அருகிலிருக்கும் ஊசலில் அமர்ந்து ஒருநாள் ஆடிக்கொண்டிருந்தேன். அப்போது ஓராணழகன் அவ்வழியே வந்தான். அவன் கட்டழகு என் கண்களை ஈர்த்தது. அவன், காணாமல் என்னைக் கடைக்கண்ணால் கண்டான். “அன்பரே ! சிறிது நேரம் இந்த ஊசலை ஆட்டுவீரோ?” என்று அன்புடன் கேட்டேன். அவனும் அதை எதிர் நோக்கித்தான் காத்திருந்தான். “அன்பே ! உன் விருப்பம் போல் நான் ஊசலை ஆட்டுகிறேன்!” என்று தேனைச் சொல்லாக்கித் தித்திக்கக் கூறினான். தன் வலிய கைகளால் என் ஊசலைப்பற்றி ஆட்டினான். அவன் ஆட்ட நான் ஆடினேன். இடையில் கைநழுவி வீழ்பவளைப்போல் அவன் அன்புக் கரத்தில் வீழ்ந்தேன். உண்மையில் கைநழுவவில்லை. பொய்யாக நடித்தேன். ஆனால் அக்காளையோ, உண்மை என்று நம்பினான். என்னை விரைந்தெடுத்து மார்பில் அணைத்துக் கொண்டான். அவன் அகன்ற மார்பில் சிறிது நேரம் எல்லையற்ற இன்பங் கண்டேன். ஆனால் கண் விழிக்க விரும்பவில்லை. அக்காளையோ நல்லன். நற்பண்புகள் வாய்க்கப்பெற்றவன். கண்விழித்தால், நான் தன்னுணர்வு பெற்றுவிட்டதாக எண்ணி என்னை விடுத்து “இல்லத்துக்கு ஏகு என் கண்ணே!” என்று கனி மொழியால் கூறிவிடுவான். பின் அவன் மார்பில் துயிலும் இன்பம் எளிதில் கிட்டுமா? எனவே கண் திறக்காமல் அவன் கடிமார்பில் மாலையாய்க் கிடந்தேன்.” அப்பாடல் வருமாறு:

“.................................... ஏனல்
இனக்கிளி யாம்கடிந்து ஓம்பும் புனத்தயல்
ஊசல் ஊர்ந்தாட ஒருஞான்று வந்தானை
‘ஐய சிறிதென்னை ஊக்கி’ எனக்கூறத்
‘தையால் ! நன்று’ என்று அவன்ஊக்கக் கைநெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன் அவன்மார்பில் : வாயாச் செத்து
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்மேல் :
மெய்யறியா தேன்போல் கிடந்தேன்மன் ; ஆயிடை
மெய்யறிந்து ஏற்றெழுவே னாயின் ஒய்யென
‘ஒண்குழாய் ! செல்க’ எனக்கூறி விடும்பண்பின்
அங்கண் உடையன் அவன்.”குறிஞ்சிநிலக் கோதை கூறும் காதல் அனுபவம் உள்ளத்தைக் கொள்ளை இன்பத்தில் சாய்க்கிறது. பொய்யும் வழுவும், போட்டியும் பொறாமையும் மலிந்த இந்நாகரிகம் அழிந்து, இயற்கைநலம் திகழும் அவ்வெழில் வாழ்வு பூக்காதா? என்று உள்ளம் ஏக்கம் கொள்கிறது.

மேற்கூறியவாறு, பண்டைத் தமிழ் மக்கள் மலைவளத்தை அணு அணுவாகச் சுவைத்து இன்பமார்ந்தனர். இவ்வுண்மையை அறியாச் சிலர், வெள்ளையரைப் பார்த்துத்தான், நாம் மலைவாழ்வைக் கற்றுக் கொண்டோம் என்பது எவ்வளவு அறிவீனம்.

இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் பெறும் யானைக் கூட்டங்கள் தமிழகத்து மலைகளில் கூட்டம் கூட்டமாகத் திரிகின்றன. மெல்லியலாரின் விழியழகை வென்று, புள்ளிமான் கூட்டம் துள்ளி விளையாடுகின்றது. கன்னியரின் சாயலைக் கவர்ந்த வண்ணமயில்கள், தம் பன்னிறக் கலாபத்தை விரித்துக் காண்போரின் எண்ணத்தைக் கொள்ளை கொள்கின்றன. அருந்திக் களைதீர அருவிநீர்! குடைந்து விளையாடக் குளிர்ந்த சுனைநீர்! கொன்றை நிகர் கூந்தலில் சூடி மகிழக் கோட்டுப்பூ, கொடிப்பூ! ஆடி மகிழ அசைந்தாடும் ஊசல்! பாடிக்களி கொள்ளப் பாட்டமைந்த குறிஞ்சிப்பண்! உண்டு மகிழ உயர்ந்த கனி வகைகள்! நிலத்தில் கிழங்கு! இறைச்சி உணவுக்கு, வனத்தில் விலங்கு! காட்சிக்கு இயற்கை எழில்மிக்க நெடுவரை! காதல் மாட்சிக்குக் கனிமொழியார் ! குடித்து மகிழ, மலைச்சாரலில் வழியும் கொம்புத் தேன்! சுவைத்து மகிழப் பாவையரின் பலாச்சுளை உதடுகளில் வழியும் முத்தத்தேன்! இன்பமாக வாழ மனிதனுக்கு இன்னும் என்ன வேண்டும்? எனவேதான் பண்டைத் தமிழ் மக்கள் மலைவாழ்க்கையை விரும்பி ஏற்றனர். 

மக்கள் வாழ்க்கையே மலையில்தான் தோன்றியது என்பது சில அறிஞர்களின் கொள்கை. மக்கள் நாகரிகம் மலையில்தான் தோன்றியதென்றும், அளவைக் கருவிகளும், இசைக்கருவிகளும், வில் முதலிய போர்க் கருவிகளும், மருத்துவம், கடவுளுண்மை, இசை, அரசு முதலிய கலைகளும் மலையிலேயே முதன்முதலில் கண்டறியப்பட்டன என்றும் தமிழ்த் தென்றல் திரு. வி. க. கூறுகிறார். மலைவாழ்வு, மக்களோடு தொடர்பு பெற்றிருக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே தமிழ் மக்கள் கோவில்களை மலைகளின் மீது எழுப்பினர் என்றும் குறிப்பிடுகிறார்.

இத்தகைய பெருஞ் சிறப்புக்கள் வாய்ந்த மலைகள் பரந்தும், உயர்ந்தும், நீண்டும் தமிழகமெங்கணும் நிறைந்துள்ளன. அவற்றின் வளம், அவற்றில் இழிதரும் ஆறுகள், அவற்றில் புதைந்து கிடக்கும் கனிப்பொருள்கள், வாழும் மக்கள், அவர்கள் வாழ்க்கை, தொழில் வளம், அழகு, மரங்கள், விலங்குகள், பறவைகள் ஆகிய எல்லாச் செய்திகளையும் இந்நூல் ஆராய்ந்து கூறுகிறது.