தமிழகத்தில் குறிஞ்சி வளம்/நீலகிரி மலைகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

4. நீலகிரி மலைகள்

பெயர்க் காரணம் :

நீலகிரி என்றால் நீல நிறமான மலை என்று பொருள். நீலகிரி என்ற பெயர் 800 ஆண்டுகளாக வழங்குகிறது. நீலகிரிக்கு அண்மையிலுள்ள சமவெளியில் நின்று மேற்குத் தொடர்ச்சி மலைகளினூடே நிமிர்ந்து நிற்கும் இதைக் காணும்போது, நீல நிறமான படலம் இம்மலையைப் போர்த்திருப்பது போல் தோன்றும். ஆகையினாலேயே இதை நீலகிரி என்று அழைக்கின்றனர். நீலகிரி மலையில் நீல நிறமான (Violet) ஒரு பூ எங்கும் நிறைந்து மலர்ந்திருக்கிறது. அம்மலரினாலேயே நீல நிறமான படலம் தோன்றுவதாகக் கூறுகின்றனர். அந்நீலப்பூ நீலகிரி மலையின் வெளிப்புறத்தில் பூப்பதில்லை. மலையின் நடுவிலுள்ள பீட பூமிகளிலேயே பூக்கிறது. ஆகையினால் மலையைச் சுற்றி ஏற்படும் நீல நிறப்படலம் அம்மலர்களால் ஏற்பட்டதல்ல என்பது தெளிவாகிறது.

அமைப்பு :

நீலகிரி மலை, மேலே மட்டமான ஒரு மேசையைப் போல் அமைந்திருக்கிறது. இதன் உயரம் எல்லாப் பகுதிகளிலும் ஏறக்குறைய ஒரே அளவுடையதாக உள்ளது. நீலகிரி மலை 35 கல் நீளமும் 20 கல் அகலமும் சராசரி 6500 அடி உயரமுமுடையது. மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் சேரும் இடத்தில் இது அமைந்துள்ளது. இம்மலையில் ஒரு சதுரமைல் கூடச் சமநிலத்தைக் காண முடியாது. எங்கு பார்த்தாலும் மேடும் பள்ளங்களுமே தென்படும், இது சமவெளியிலிருந்து செங்குத்தாக உயர்ந்துள்ளது. இம்மலையின் மேற்குச் சரிவிலும், அவுட்டர்லானி பள்ளத்தாக்கிற்கு (Ouchterlony valley) மேலும், தென்சரிவிலும், சுவர்களைப் போன்ற, நூற்றுக் - கணக்கான அடிகள் உயரமுள்ள பாறைகள் நிறைந்துள்ளன. மரங்கள்கூட வேர் ஊன்ற முடியாத அளவு அவைகள் செங்குத்தாக உள்ளன. மற்ற இடங்களில் உள்ள சரிவுகளிலெல்லாம், அடர்ந்தகாடுகள் நிறைந்துள்ளன.

நீலகிரி மலையானது நடுவில் தென்வடலாகச் செல்லும் உயர்ந்த ஒரு தொடரால் கிழக்குப் பகுதியாகவும் மேற்குப் பகுதியாகவும் பிரிக்கப்படுகிறது. அத்தொடரில் உள்ள உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா ஆகும். தொட்டபெட்டா என்றால் 'பெருமலை' என்று பொருள். இச்சிகரம் உதகமண்டலத்திற்குக் கிழக்கே அமைந்துள்ளது. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 8,640 அடி. நம் நாட்டில் இமயமலைக்குத் தெற்கிலுள்ள மலைகளில், திருவாங்கூரிலுள்ள ஆனை முடி சிகரத்திற்கு (8837 அடி) அடுத்தாற்போல் உயரமானது தொட்டபெட்டா சிகரம்தான். இச் சிகரத்தின் மேல், முன்பு வானாய்வுக்கூடம் அமைக்கப்பட்டிருந்தது. உதகமண்டலத்திலிருந்து தொட்டபெட்டாவின் அழகைப் பூரணமாக அனுபவிக்க முடியாது. கிழக்குப் பகுதியிலோ அல்லது மேற்குப் பகுதியிலோ இருக்கும் தொலைவிலுள்ள இடங்களிலிருந்து இச் சிகரத்தைக் காணின் மிகவும் அழகாகத் தோன்றும்.

தொட்டபெட்டா மலையின் கிழக்குப் பகுதியிலும் தெற்குப் பகுதியிலும் உள்ள பீடபூமிகள் பெரும்பாலும் கூனூர் கோட்டத்திலேயே அமைந்துள்ளன. அங்கு வாழும் படகர்கள் அப்பீட பூமிகளில் பயிர்த் தொழில் செய்து வாழ்கின்றனர். இவர்கள் அங்கிருந்த காடுகளில் பெரும்பகுதியை அழித்து விட்டனர். எங்கு பார்த்தாலும் செந்நிற ஓடுகவித்த படகர்களின் குடிசைகளடங்கிய சிற்றூர்களே தோன்றும். இப்படகர்கள் முன் காலத்தில் ஓராண்டு பயிரிட்ட இடத்தில், அடுத்த ஆண்டு பயிரிடுவதில்லை. எனவே தங்கள் பயிர்த் தொழிலுக்கு வேண்டிய புதிய புதிய நிலத்திற்காகக் காடுகளின் பெரும்பகுதியை அழித்து விட்டனர். தொட்டபெட்டா சிகரத்தின் செங்குத்தான சரிவுகள், பயிர்த் தொழிலுக்குப் பயன்படாத காரணத்தால் படகர்களின் அழிவு வேலையினின்றும் தப்பி, நிறைந்த காடுகளைப் பெற்றுப் பேரழகோடு விளங்குகின்றன.

தொட்டபெட்டாவிற்கு மேற்கில் உள்ள பகுதிகளில் படகர் வாழ்வதில்லை. படகர்கள் வாழாத இடத்தில் பயிர்த்தொழில் இல்லை என்று சொல்லலாம். அவ்விடங்களில் தோடர்கள் வாழும் சிறு குடிசைகள் தென்படும். எங்கு பார்த்தாலும் சிறிதும் பெரிதுமான பசுமையான குன்றுகள் தென்படும். அக் குன்றுகளில் பல வண்ணங்களையுடைய மலர்கள் பூத்துக் குலுங்கும். இக்குன்றுகளுக்கு நடுவில் நீரோடைகளும் சிற்றாறுகளும் ஓடி, இவைகளைத் தனித்தனியே பிரிக்கின்றன. அவ்வோடைகளை அடுத்தாற்போல் புற்றரைகள், பரந்த இளமரக்காடுகள் நிறைந்திருக்கும். இக்காடுகளை 'ஷோலா' (Shola) என்று அழைப்பர். இடையிடையே மேலை நாட்டினருக்குச் சொந்தமான பூங்காக்கள் தென்படுகின்றன. அப்பூங்காக்களில் பசுமையான இலைகளுக்கு நடுவில் பெரிதாக மலர்ந்திருக்கும் செந்நிற ரோஜா மலர்கள் தம் தலையை அசைத்துச் சிரிக்கும்.

தொட்டபெட்டாவன்றி நீலகிரி மலையில் வேறு பல சிகரங்களும் உள்ளன. பனிவீழ் சிகரம் (Snowdown 8,299'), கிளப் சிகரம் {Club Hill 8,030'), எல்க் சிகரம் {Elk Hill 80,90'), தேவஷோலா சிகரம் (The devine wood Hill 7,417') குலக்கம்பை சிகரம் (5,601') கூனூர்பெட்டா சிகரம் (6,894'), ரல்லியா சிகரம் (Rallia Hill 7,325') திம்மட்டி சிகரம் (6,903'), எகுபா சிகரம் (Hecuba Hill 7793'), கட்டக்காடு சிகரம் (7933'), குல்குடி சிகரம் (8,002'), நீலகிரி சிகரம் (8,118'), மூகறுத்தி சிகரம் (8,380'), தேர்பெட்டா சிகரம் (8,304'), கொலிபெட்டா சிகரம் (8,182') என்பவை குறிப்பிடத்தக்கவை.

அருவிகளும் நீர்வீழ்ச்சிகளும் :

நீலகிரியின் மீதுள்ள பீடபூமி உயர்வும் தாழ்வுமான குன்றுகளையுடையது என்று படித்தோம். இரண்டு குன்றுகளுக்கு நடுவிலுள்ள ஒவ்வோர் இடை வெளியிலும் ஓர் அருவி ஓடிக்கொண்டிருக்கும். இவ்வாறு ஓடும் அருவிகள் பல ஒன்று சேர்ந்து பேரருவியாக மாறும். அப்பேரருவி வடக்கிலுள்ள மோயாற்றிலாவது, தெற்கிலுள்ள பவானியாற்றிலாவது விழும். நீலகிரியின் வடபகுதியில் தோன்றும் சீகூர் ஆறானது சீகூர் மலைகளின் பக்கமாக ஓடி மோயாற்றில் விழுகிறது. இவ்வாறு உதகமண்டல ஏரிக்கு மேற்புறத்திலுள்ள சரிவில் தோன்றி, ஏரியில் குளித்துக் கிளம்பி, 'சண்டி நுல்லா' அருவியோடு சேர்கிறது. அவ்வாறு சேர்ந்த தும் 170 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து 'காலகட்டி' நீர் வீழ்ச்சியை உண்டாக்குகிறது. இந் நீர்வீழ்ச்சி சீகூர் மலைமேல் அமைந்துள்ள காலகட்டி தங்கல்மனை (Travellers' bangalow) யின் எதிரே உள்ளது.

நீலகிரியின் வடகிழக்கிலிருந்து தோன்றி ஓடிவரும் முதுகாடு அருவி, ஆரஞ்சுப் பள்ளத்தாக்கு என்ற இடத்தில் ஒரு நீர்வீழ்ச்சியை உண்டாக்குகிறது. இவ்விடம் இயற்கை வனப்பில் ஈடும் எடுப்பும் அற்றது. இவ்விடத்தில் ஆரஞ்சுப் பழங்கள் நிறைய விளைவதால் இப் பெயர் பெற்றது போலும். இப் பள்ளத்தாக்கிற்குள் முதல் முதல் நுழைந்த ஓர் ஆங்கிலக் காட்டிலாகா அதிகாரி, அதன் அழகில் ஈடுபட்டுத் தம்மை மறந்தார். "ஆரஞ்சுப் பள்ளத்தாக்கு! அழகான பெயர்! இப் பெயரிலேயே ஒருவிதச் சுவை தோன்றுகின்றது. வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் குளிர் நிழல் சூழ்ந்த இவ்விடத்தில் நுழைந்ததும், என் முதுமையுள்ளத்தில் கூடப் புத்துணர்ச்சி பிறக்கிறது. என் உள்ளத்தை இதன் அழகில் பறிகொடுத்து விட்டுத் தேடுகிறேன். அமைதி, புதுமை ஆகிய இரண்டையும் நான் இங்கு காண்கிறேன். இன்பத்தை நாடும் இளங் காதலர் கையொடு கையிணைத்துக் கொண்டு, கனிந்து குலுங்கும் பழங்களைச் சுவைத்துக்கொண்டு, மணங் கமழும் மலர்களைப் பறித்து நுகர்ந்துகொண்டு மென்னடை போட்டு மெதுவாக உலவுவதற்கு இவ்விடம் மிகவும் ஏற்றது“ என்று கூறி மகிழ்கிறார்.

கோதகிரி (Kotagiri)யிலிருந்து கதாதகல்லா (Gathada Halla) என்ற ஓராறு தெற்கு நோக்கி ஓடி வருகிறது. அது 250 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து செயிண்ட் காதரைன் நீர்வீழ்ச்சியை உண்டாக்குகிறது. செயிண்ட் காதரைன் என்ற அம்மையார் திருவாளர் எம். டி. காக்பர்ன் என்ற வெள்ளையரின் மனைவி. இவ்வம்மையாரும், இவர் கணவரும் முதன் முதலாகக் கோதகிரியில் குடி புகுந்த வெள்ளையரில் குறிப்பிடத் தக்கவர்கள். இவ்விருவரின் சமாதிகள் கோதகிரியிலேயே உள்ளன. இவ்வம்மையாரின் பெயர் இந்நீர் வீழ்ச்சிக்கு இடப்பட்டது. கூனூருக்கு அருகிலுள்ள டாஃபின் மூக்கி (Dolphin's nose)லிருந்து காண்போர்க்குக் காதரைன் நீர்வீழ்ச்சி கண்கொள்ளாப் பேரழகோடு காட்சி தரும்.

கூனூர் மலைக்கருகிலுள்ள படுகையில் தோன்றி, கூனூர், வெல்லிங்டன் ஆகிய இடங்களின் வழியாக ஓடி வருகிறது. கூனூர் ஆறு. இவ்வாறு 'காட்டேரி நீர்வீழ்ச்சி'யை ஏற்படுத்துகிறது. இந் நீர் வீழ்ச்சியிலிருந்து எடுக்கப்படும் மின்னாற்றல் அரவங் காட்டிலுள்ள படைக்கலத் தொழிற்சாலை (Cordite factory)யை இயக்குகிறது. இந் நீர்வீழ்ச்சியின் உயரம் 180 அடி. கூனூர், உதகமண்டல வாசிகள் இவ்விடத்திற்கு அடிக்கடி இன்பச் செலவை மேற்கொள்ளுகின்றனர்.

குலக்கம்பை மலைக்கு அருகிலுள்ள இடத்தில் பாய்ந்து வரும் குலக்கம்பை ஆறு ஒரு நீர்விழ்ச்சியை உண்டாக்குகிறது. இவ்வாறு மிகவும் சிறியது. ஆனால் இதனால் உண்டாக்கப்படும் நீர் வீழ்ச்சியோ, நீலகிரி மலையிலேயே உயரமானது. சுமார் 400 அடி உயரத்திலிருந்து இது வீழ்கிறது. குலக்கம்பை ஆற்றுக்கு மேற்கில் குந்தா ஆறு குறுகிய படுக்கை வழியாக ஓடி வருகிறது. இவ்வாறு குந்தா மலையை, நீலகிரிப் பீடபூமியிலிருந்து தனியாகப் பிரிக்கிறது. உதகமண்டலத்திற்குத் தென்மேற்கிலுள்ள நஞ்ச நாடு பள்ளத்தாக்கு, எமரால்டு பள்ளத்தாக்கு ஆகியவற்றில் ஓடி வரும் சிற்றருவிகளையும் ஒன்று சேர்த்துக்கொண்டு குந்தா மலையிலிருந்து ஓடி வருகிறது. இவ்வாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் நீர் மின்சாரத் திட்டம் மிகவும் பெரியது. இதில் உண்டாகும் மின்னாற்றல் பல தொழிற்சாலைகளை ஓட்டுவதற்கும் விளக்கெரிக்கவும் பயன்படுகிறது.

நீலகிரியின் தென்மேற்கு மூலையிலிருந்து 'பில்லி தாதா கல்லா' என்ற அழகிய சிற்றாறு ஓடி வருகிறது. இது அவலஞ்சி மலையின் மேற்குச் சரிவில் பாய்கிறது. பவானி யாற்றின் முக்கியத் துணையாறுகளில் இதுவும் ஒன்று.

நீலகிரியின் மேற்குக் கோடியிலிருந்து எல்லாவற்றினும் பெரிய ஆறாகிய பைக்காரா தோன்றுகிறது. மூக்கறுத்தி மலையின் சரிவில் இவ்வாறு தோன்றி, கிழக்கிலுள்ள கிரூர் மண்டு, பார்சன் ஆகிய பள்ளத்தாக்குகளிலிருந்து ஓடி வரும் அருவிகளின் நீரை பெற்றுக் கொண்டு, பைக்காரா தங்கல் மனைக்கு எதிரே ஓடி வருகிறது. பிறகு குறுகிய ஒரு பள்ளத்தாக்கில் புகுந்து இரண்டு பெரிய நீர்வீழ்ச்சிகளாக முறையே 180 அடி உயரத்திலிருந்தும், 200 அடி உயரத்திலிருந்தும் விழுகிறது. கூடலூர் - மைசூர் பாதையில் நான்கு கல்லுக்கு அப்பால் வரும்போதே நீர் விழும் ஒலி நம் காதில் விழும். அங்கிருந்து காண்போருக்கு, பீடபூமியாகிய பெருஞ் சுவரில், பனிக் கட்டியால் செய்து சார்த்தப்பட்ட உயர்ந்த ஏணிகள் போல் இவ் வீழ்ச்சிகள் தோன்றும்.

பிறகு பைக்காரா ஆறு மெதுவாக இறங்கி வயநாட்டுக் காடுகளில் நுழைந்து, மறுபடியும் கிழக்கில் திரும்பிச் சென்று கூடலூர் - மைசூர் பாதைக்கருகிலுள்ள திப்பக்காடு என்ற இடத்தில் மறுபடியும் ஒரு நீர்வீழ்ச்சியை உண்டாக்குகிறது.

பைக்காரா ஆற்றைத் தோடர்கள் புண்ணிய ஆறாகக் கருதுகின்றனர். கருவுற்ற தோடர் குலப் பெண்கள் இவ் வாற்றைக் கடக்கத் துணியமாட்டார்கள். ஆண்கள்கூட இவ்வாற்று நீரை எதற்கும் பயன்படுத்துவதில்லை. மிகவும் இன்றியமையாத நேரங்களில் இவ்வாற்றைக் கடந்து செல்ல நேரிட்டால்தான் நீரைத் தொடுவார்கள். ஆற்றைக் கடந்ததும், ஆற்றை நோக்கித் திரும்பி வணங்கிவிட்டுத்தான் செல்வர். பைக்காரா தங்கல் மனைக்கு அருகிலுள்ள பாலத்தின் மேல் ஏறி ஆற்றைக் கடந்தால் கூட, அதற்கு மரியாதை செலுத்தாமல் தோடர்கள் செல்லமாட்டார்கள். பைக்காரா நீர் வீழ்ச்சி மின்சாரத் திட்டம் மிகவும் குறிப்பிடத்தக்கது.

காடுகள்

இந்திய நாட்டிலுள்ள காடுகள், நாட்டின் விவசாயப் பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. நம் நாட்டில் 2.81 லட்சம் சதுர மைல் பரப்புள்ள காடுகள் உள்ளன. நம் நாட்டின் மொத்தப்பரப்பில் 100க்கு 222 விழுக்காடு இவை உள்ளன. மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், திரிபுரம், கேரளம், மைசூர் ஆகிய மாநிலங்களிலுள்ள காடுகள் மலைபடு செல்வத்திற்குப் பெயர் பெற்றவை. திரிபுரத்தின் மொத்தப் பரப்பில் 100க்கு 60 பங்கும், அஸ்ஸாமில் 100க்கு 44 பங்கும், காடுகள் உள்ளன. இக் காடுகளினால் கிட்டத்தட்ட 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது. இந்திய நாட்டுக் காடுகள் போதிய அளவு செல்வ வளத்தைப் பெற்றிருக்கின்றன. உயர்ந்த ரகமான மரங்கள், இவற்றில் நிறையக் கிடைக்கின்றன. நம் நாட்டு இரயில்வே இலாகா, பெரும்பாலும் காட்டு மரங்களையே நம்பி வளர்ந்திருக்கிறது. காகிதம், நூல் சுற்றும் கட்டை (bobin), ஒட்டுப் பலகை {plywood), நெருப்புப் பெட்டி முதலியன தயாரிக்கும் தொழில்களுக்குக் காட்டு மரங்களையே நாட வேண்டியிருக்கிறது. நாட்டு மக்களின் எரி பொருள் (fuel) காடுகளிலிருந்தே பெறப்படுகிறது. தேக்கு, கருங்காலி, சால் தீதர், சிர், சீசம் முதலிய விலையுயர்ந்த பயன்மரங்கள் காடுகளிலிருந்தே பெறப்படுகின்றன. மருந்துகள் செய்யப் பயன்படும் மூலிகைகளுக்கு நாம் காடுகளையே தேடிச் செல்ல வேண்டும்.

நம் நாட்டிலுள்ள காடுகள் அவ்வவ் விடங்களின் தட்ப வெப்ப நிலைகளுக்கேற்பப் பல திறப்பட்டவைகளாக விளங்குகின்றன. மிக்க மழை பெய்யும் இடங்களில் என்றும் பசுமை மாறாத காடுகள் வளரும். நடுத்தரமான மழையுள்ள இடங்களில் உயர்ந்த ரகமான மரங்கள் வளரும். தென்னாட்டுத் தேக்கும், வடநாட்டுச் சால் மரமும் இத்தகைய காடுகளிலேயே விளைகின்றன. மிதமான மழையுள்ள இடங்களில் முள் மரங்களும், செடிகளும் நிறைந்த வறண்ட காடுகள் வளரும்.

நீலகிரி மலைமீதுள்ள காடுகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவையாவன : (1) பசுமை மாறாக்காடுகள் (Sholas), (2) எரி பொருளுக்காகவே ஆஸ்திரேலிய மரங்களை வளர்க்கும் செயற்கைக் காடுகள், (3) வட சரிவிலும் மோயாற்றுப் பள்ளத்தாக்கிலும் உள்ள அழிக்கப்படும் காடுகள் (decidous forests), (4) வய நாட்டிலுள்ள அடர்ந்த காடுகள்.

முதல் வகையைச் சார்ந்த பசுமை மாறாக் காடுகள் நீலகிரியின் உச்சியிலுள்ள பீடபூமிகளில் உள்ளன, பொருளாதாரக் கண்கொண்டு பார்க்கும்போது இக் காடுகளெல்லாம் பயனற்றவை. இக் காடுகளில் வளரும் மரங்களெல்லாம் மெதுவாக வளரக் கூடியவை. இம் மரங்கள் முழு வளர்ச்சியடைய ஒரு நூற்றாண்டு செல்லும். மேலும் இவைகளினின்றும் வெட்டி எடுக்கப்படும் விட்டங்கள் (timber) மிகச் சிறியவை; விலைமதிப்பற்றவை. இயற்கை அழகுக்கும், மலையில் நீர் வற்றாமலிருப்பதற்கும் இக் காடுகள் பயன்படுகின்றன.

கரு மரம் (black wood), தீதர், பைன் முதலிய மரங்கள் ஆஸ்திரேலிய இனத்தைச் சார்ந்தவை. இம் மரங்கள் ஆறு அல்லது ஏழு ஆண்டுகளிலேயே விரைவாக வளர்ந்து முழு வளர்ச்சியடையக் கூடியவை. இம் மரங்கள் அளிக்கும் விட்டங்கள் உறுதியானவை ; பயன் மிக்கவை; விலை மதிப்புடையவை. இவை நம் நாட்டின் நிறைந்த எரிபொருள் தேவையையும் நிறைவு செய்கின்றன.

பின்னிரு வகைக் காடுகளில் சுமார் முப்பத்தைந்து வகையான பயனுள்ள மரங்கள் அடர்ந்து வளர்கின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானவை என்று குறிப்பிடத்தக்கவை வெள்ளை சிதார், சாடின்வுட், பூவா, வேங்கை, ஆச்சா, இருள், கருங்காலி, மட்டி, வெண் தேக்கு, தேக்கு, நெல்லி, சந்தனம் என்பவை.

விலங்குகள்

யானை :

யானைகள் நீலகிரி மலையில் இப்பொழுது அதிகமில்லை. கோடையின் வெப்பத்தைத் தாளாமல், அடி வாரத்திலிருந்து இவை குந்தா பீடபூமிக்குக் கூட்டம் கூட்டமாக வந்து விடும். இப்போது சத்திய மங்கல மலைகளிலும், மேட்டுப்பாளையத்தைச் சுற்றியுள்ள காடுகளிலும் காணப்படுகின்றன. யானைகளின் தொல்லையை ஒழிப்பதற்காக கி. பி. 1840-ஆம் ஆண்டு கோவை மாவட்டத் தண்டலராக இருந்தவர் சிட்டகாங்கிலிருந்து வேட்டைக்காரர்களை வரவழைத்து, அவைகளைப் பிடிக்குமாறு செய்தார். அவுட்டர்லானிப் பள்ளத்தாக்கில்கூட யானைகள் முன்பு நிறையத் திரிந்தன, அங்கு காஃபி பயிரிடத் தொடங்கியதும் யானைகளின் வருகை ஒழிந்தது. நீலகிரிப் பீடபூமியின் வடபகுதியிலும் வய நாட்டிலும் இப்பொழுது அதிகமாக உள்ளன. பவானிப் பள்ளத்தாக்கிலும் யானைக் கூட்டங்கள் அடிக்கடி தென்படுவதுண்டு.

புலி :

நீலகிரியின் உச்சியிலும், தாழ்ந்த பீடபூமிகளிலும் புலிகள் சுற்றித் திரிகின்றன. மார்ச்சிலிருந்து ஜூன் வரை இவை அடிக்கடி தென்படும். கோடை வெப்பத்துக்கும், காட்டுத் தீக்கும் அஞ்சி இவை இம் மாதங்களில் உச்சியிலுள்ள பீடபூமிகளுக்கு வந்துவிடும். வய நாட்டுச் செட்டிகளும், பழங்குடி மக்களான பனியர்களும் புலிகளை வலை போட்டுப் பிடிப்பதில் வல்லவர்கள், ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு வலிவான வலைகள் எப்பொழுதும் தொங்கிக் கொண்டிருக்கும். தங்கள் ஊருக்கு அண்மையிலுள்ள காட்டில் புலி வந்திருந்தால், எப்படியும் இவர்களுக்கு அச்செய்தி தெரிந்துவிடும். உடனே வலைகளை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள், புலி வேட்டைக்குப் புறப்படுவதற்கு முன்பாகத் தங்களுடைய குல தெய்வங்களுக்கு வழிபாடு நிகழ்த்துவர். அங்குள்ள பூசாரிகள் மருள் கொண்டு ஆடி வேட்டையின் முடிவைப்பற்றி முன்கூட்டிச் சொல்லுவதும் உண்டு. புலி படுத்திருக்கும் இடத்தைச் சுற்றிப் 'ப' வடிவாக வலையை அமைப்பர், ஒரு பனியன் மரத்தின்மேல் ஏறிக் கொண்டு மற்றவர்களுக்குக் கட்டளைகள் பிறப்பிப்பான். கையில் 12 அடி நீளமுள்ள குத்தீட்டிகளோடு புலியை நாற்புறமும் வளைத்துக் கொள்வர், அவ்வலைக்குள்ளேயே அப் புலியைப் பல நாள் பட்டினிபோட்டு, ஈட்டியால் குத்தித் துன்புறுத்துவர்; இரைச்சலிட்டுக் கொண்டும், ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும் புலியைக் கொல்லுவார்கள்.

சிறுத்தையும் கரடியும் :

சிறுத்தைகள் இம் மலையில் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. கருஞ் சிறுத்தைகள் பீடபூமிகளைவிடச் சமவெளிகளில் அதிகமாகத் தென்படுகின்றன. கரடிகளும் இங்கு நிறைய உண்டு. ஆனால் அவை சரிவுகளிலும் தாழ்வான பீடபூமிகளிலுமே அடிக்கடி காணப்படுகின்றன. ஆரஞ்சுப் பள்ளத்தாக்கில் முதலில் நிறைய இருந்தனவென்று காட்டதிகாரிகள் கூறுகின்றனர்.

மான் :

மானினம் இங்கு நிறைய வாழ்கிறது. காடு உள்ள இடங்களிலெல்லாம் மான்களைக் காணலாம். குறிப்பாகக் குந்தாப் பீடபூமியிலுள்ள பள்ளத்தாக்கில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. வேட்டைக் கழகத்தாரால் (Game Association) இக் காடு பாதுகாக்கப்படுவதால், அயலார் யாரும் அனுமதி பெற்றலன்றி இக் காட்டிற்குள் வேட்டையாடச் செல்ல முடியாது. எனவே மானினம் இங்கு பெருகி வளர்ந்துள்ளது. இங்குக் கலைமான்கள் நிறைய உண்டு. இம் மான்களின் கொம்புகள் வட இந்தியாவிலுள்ள மான்களின் கொம்புகளைப்போல் அதிக நீளம் வளர்வதில்லை. இருந்தாலும் 42 அங்குல நீளம் இருக்கின்றன. ஐரோப்பாவிலும் இவை போன்ற தோற்றமுடைய மானினம் உண்டு. அவைகட்கு எல்க் (Elk) என்று பெயர், உதகமண்டலத்தில் வந்து தங்கிய ஐரோப்பியர் இதையும் எல்க் என்றே அழைக்கத் தொடங்கினர். இவ்வினம் மிகுந்து காணப்படும் இடத்தை எல்க் மலை (Elk Hill) என்ற பெயராலேயே அழைத்தனர். புள்ளி மான்கள் உயர்ந்த பீடபூமி களுக்கு வருவதில்லை. அவை மசினிக்குடிக்கருகில் காணப்படுகின்றன.

குரைக்கும் மான் (Barking deer) என்ற ஓரினம் இங்கு இருக்கிறது. ஆனால் நீலகிரி மலைவாசிகள் இதைக் 'காட்டாடு' என்ற தவறன பெயரால் அழைக்கின்றனர். முதன் முதலில் நீலகிரி மலைக்கு வந்த பழங்குடி மக்கள் இதைக் காட்டாடு என்று கூறியதால் அப்பெயரே நிலைத்து விட்டது. இவைகளும் கலை மான்களைப் போலவே, உதகமண்டலத்து வேட்டை நாய்களுக்கு அஞ்சாத முரட்டுத்தனம் வாய்ந்தவை. நான்கு கொம்புகளையுடைய மான்களும் இங்கு இருக்கின்றன. ஆனால் அவை மிகவும் அருகிக் காணப்படுகின்றன. சிறிய எலி மான்கள் (Mouse deer) சரிவுகளிலுள்ள அடர்ந்த காடுகளில் உள்ளன. ஆனால் குறைந்தே காணப்படுகின்றன. கருமான் (antelope) களும் சீகூருக் கருகில் குறைந்த அளவில் காணப்படு கின்றன.

காட்டெருமை:

சில சமயங்களில் காட்டெருமைகள் சத்தியமங்கலம் மலைகளிலிருந்து மேட்டுப்பாளையத்திற் கருகிலுள்ள காடுகளுக்கு வருகின்றன. ஆனால் மசினிக்குடிக் காடுகளிலும், வய நாட்டிற்கு வடக்கிலுள்ள முதுமலைக் காடுகளிலும் நிறைய உள்ளன. காட்டில் ஏற்பட்ட ஒரு கொடிய நோயினால் இவை தாக்கப்பட்டுப் பெரும் பகுதி அழிவுற்றன. இப்போது நீலகிரிப் பீடபூமியில் இவைகள் இல்லை என்றே சொல்லலாம்.

காட்டுப் பன்றி :

நீலகிரி மலையில் வாழும் பன்றிகள் கொழுத்துப் பருத்து முரட்டுத்தனத்தோடு திரியும். இவை பயிர்களை அடிக்கடி அழிப்பதால், இவைகளை எவ்விடத்திலும் கொல்லுவதற்கனுமதி யுண்டு. வேட்டை நாய்கள் கூட இவைகளைப் பின் தொடர அஞ்சும், ஒரு சமயத்தில் ஒரு பன்றி 13 நாய்களைத் தன் கோட்டால் குத்திக் காயப்படுத்தி விட்டதாம்.

வரையாடு :

வரையாடு அல்லது காட்டாடு (Ibex) இந்திய நாட்டுக் காடுகளில் மட்டும் காணப்படும் ஓர் இனமாகும். இமயமலையில் காணப்படும் தார் (Tarh) என்னும் ஆடு இவ்வினத்திலேயே மற்றொரு பிரிவைச் சேர்ந்ததாகும். சென்னை மாநிலத்திலுள்ள காடுகளுக்கே உரித்தான இவ் வரையாடு, அபிசீனியாவிலுள்ள உயர்ந்த மலைகளைத் தவிர உலகில் வேறு எங்கும் கிடையாது. முதன் முதலாக நீலகிரி மலைக்கு வந்த ஐரோப்பியர்களுக்கு இவ்வாடு ஒரு புதுமையாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் நாட்டில் இது போன்ற ஆடு கிடையாது. இவ்வாடு நீலகிரி மலையிலல்லாமல், மேற்குத் தொடர்ச்சி மலையின் வேறு பகுதி களான பழனி மலைக் காடுகளிலும், ஆனை மலைக் காடுகளிலும் நிறைய உள்ளன. ஏன்? குமரிமுனை வரையிலும் இவ்வினம் மலிந்து காணப்படுகிறது. நீலகிரிப் பீடபூமிகளில் இது சாதாரணமாகக் காணப்பட்டாலும், குந்தா மலைத்தொடரின் தெற்கிலும் மேற்கிலும் உள்ள மிகவும் செங்குத்தான சரிவுகளிலேயே கூட்டங் கூட்டமாக வாழ்கின்றன. இவ் வாடுகளின் கொடிய பகை சிறுத்தையே. இவைகளின் கொம்புகள் 171 அங்குலம் வரை வளரும். பார்ப்பதற்கு அழகற்றவை என்றாலும், விலைமதிப்புள்ளவை. ஏனென்றால் இவைகள் எளிதில் கிடைப்பதில்லை. இவ்வாடுகள் திரியும் செங்குத்துப் பாறைகளில் யாரும் காலை ஊன்றக்கூட முடியாது. 1875-ஆம் ஆண்டில் ஒரு வரையாட்டைத் துரத்திச் சென்று சரிவில் விழுந்து இறந்த புச்செர் என்ற வெள்ளையரின் உடல் செயிண்ட். ஸ்டீஃபன் சர்ச்சில் புதைக்கப்பட்டுள்ளது.

காட்டு நாய் :

மற்றக் காடுகளில் இருப்பதைப் போன்றே காட்டு நாய் (wild dog) நீலகிரி மலையிலுள்ள மானினத்திற்குப் பெரும் எதிரியாக உள்ளது. இந் நாய்கள் ஒன்று விட்ட ஆண்டுகளில் நீலகிரிக் காடுகளுக்கு வந்து விட்டுச் செல்லுகின்றன. இவ்வாறு இவைகள் வந்து செல்வதன் காரணம் புரியவில்லை . கி. பி. 1906-ஆம் ஆண்டில் குந்தாக் காடுகளில் இவை நிறைந்திருந்த காரணத்தால் மானினம் அவ்வாண்டில் அருகியே காணப்பட்டது. காட்டில் பரவும் நோய்கள் ஒரு விதத்தில் நன்மையே புரிகின்றன. இந் நாய்கள் எளிதில் நோய்க்குள்ளாகி இறக்கும் தன்மையுடையவை. கி. பி. 1893-ஆம் ஆண்டு சீகூருக்கு அண்மையிலுள்ள காடுகளில் 9 நாய்கள் நோய்க்கு இலக்காகி மெலிந்து இறந்து கிடந்தன. வயநாட்டிலுள்ள நல்ல கோட்டையில் 3 நாய்கள் இறந்து கிடந்தன.

குரங்குகள் :

நீலகிரி மலையில் வாழும் குரங்குகள் பலதிறப்பட்டவை. 'நீலகிரிலங்கர்' என்று பொதுவாகக் கூறப்படும் குரங்கினம், பீடபூமிகளிலும், பசுமரக் காடுகளிலும் நிறையக் காணப்படுகின்றது. இதனுடைய உடம்பில் பட்டுப்போலக் கருமையான மயிர் நிறைந்திருக்கும். முகமும் கழுத்தும் செந்நிறமாக இருக்கும். பழத் தோட்டங்களுக்கு இதனால் பெருங்கேடு விளைவதுண்டு. ஆகையினால் அநுமாரின் அவதாரம் என்பதைக் கூடப் பொருட்படுத்தாமல், இவற்றைச் சுட்டுக் கொன்று விடுகின்றனர்.

'சிங்கவால் குரங்கு' என்ற ஓர் இனம் இங்கு உண்டு. இது மேற்குப் பக்கத்துப் பீடபூமிகளில் காணப்படுகிறது. இதன் உடலில் கருமயிர் நிறைந்திருக்கும்: இதனுடைய முகத்தைச் சுற்றி வெண்மை கலந்த செம்மயிர் வட்டமாக முளைத்திருக்கும், சிங்கத்திற்கு இருப்பதைப்போல் இதன் வால் நுனியில் மயிர் குஞ்சமாக முளைத்திருக்கும்.

வேறு சில விலங்கினங்கள் :

கிழக்கிலுள்ள தாழ்ந்த சரிவுகளில் மூன்று வகையான வௌவால்கள் காணப்படுகின்றன. சிறுத்தைப் பூனை, காட்டுப் பூனை, மரப் பூனை (palm civet) எனப் பல வகையான பூனைகள் இங்கு நிறைய இருக்கின்றன. வரிக்கழுத்துக்கீரி, செங்கீரி, பழுப்புக் கீரி என மூன்று விதமான கீரிகள் இங்குக் காணப்படுகின்றன. மேற்குச் சரிவில் தாழ்வாக உள்ள காடுகளில் 'பறக்கும் அணில்' என்ற ஒருவகை அணில் இனம் உண்டு. இதோடு ஏழு விதமான அணில்கள் நீலகிரிக் காடுகளில் காணப்படுகின்றன. இவை ஈழம், ஜாவா முதலிய நாடுகளில் காணப்படும் இனங்களைச் சாந்தவை.

இங்குப் பலவகை எலிகள் காணப்படுகின்றன. புள்ளிகளையுடைய எலி இனம் ஒன்று இங்கு உள்ளது. இவ்வெலிகள் வயல்களுக்கு அடியில் நிலத்தைக் குடைந்து பயிர்களின் வேரைக் கடித்து நாசம் செய்து விடுகின்றன. காஃபிச் செடியின் கிளைகளில் ஏறிப் பூக்களைத் தின்று விடுகின்றன.

உணவுப் பயிர்கள் :

நீலகிரி மலைகளின் மீதுள்ள பயிர்த் தொழிலை இரு வகையாகப் பிரிக்கலாம், நீலகிரியில் வாழும் பழங்குடி மக்களால் நடத்தப்பெறும் உணவுத் தானியப் பயிர்த், தொழில் ஒருவகை, ஐரோப்பிய, இந்தியத் தோட்ட முதலாளிகளால் நடத்தப்பெறும் பயிர்த்தொழில் மற்றொரு வகை, இங்கு நடைபெறும் பயிர்தொழில் முழுக்க முழுக்க மழை நீரையும், அருவி நீரையுமே நம்பி நடைபெறுகிறது. கிணறு முதலிய செயற்கைப் பாசன முறைகள் இங்குக் கிடையா.

சமவெளியில் விளைவதைப் போன்று இங்குள்ள பீடபூமிகளிலும் சாமையும், ராகியும் விளைகின்றன. கொரலி (Tiny millet) என்றொரு தானியமும் இங்கு விளைகிறது. இது கோதுமையில் இருபதில் ஒரு பங்கு பருமனே இருக்கும். இதை எல்லாவிதமான நிலங்களிலும் விளைவிக்கலாம். மோசமான வளமற்ற நிலமாக இருந்தால் கூட அவ்விடத்திலும் இது செழித்து வளரும்.

இங்கு அதிகமாக விளையும் கோதுமையானது, சமவெளியில் விளையும் கோதுமையினின்றும் உருவத்தில் மாறுபட்டது. இதன்மேல் நீண்ட வித்துறை போர்த்துக்கொண்டிருக்கும். இடிக்கும் போதுதான் இவ்வுறை தானியத்திலிருந்து பிரியும். இத்தானியத்தைப் பயிர் செய்யும் படகர்கள், இவ்வாறு வித்துறை கோதுமையைப் போர்த்துக்கொண்டிருப்பது சிறப்பு என்று கருதுகிறார்கள். ஏனென்றால் நீலகிரி மலையில் பயிர்களுக்கு மிகவும் சேதம் விளைவிக்கும் பூச்சிகளிடமிருந்து, அது தானியத்தைக் காப்பதாகச் சொல்லுகிறார்கள், மொட்டைக் கோதுமை என்ற வேறொரு தானியமும் இங்கு விளைகிறது. இது ஐரோப்பிய வகையைச் சார்ந்தது. சல்லிவன் என்ற ஐரோப்பியர் இதை முதன் முதலாக நீலகிரியில் பயிரிட்டுப் பரப்பினார். இது வித்துறையுடன் கூடியிராத காரணத்தால் மொட்டைக் கோதுமை (Naked wheat) என்று கூறுகிறார்கள்.

இங்கு விளையும் பார்லியில் பலவகை உண்டு. அவைகளில் மிகவும் சிறந்தது 'அக்கி காஞ்சி' என்பதாகும். 'படகர் காஞ்சி' என்பது, படகர்களால் நீண்ட நாட்களாகப் பயிரிடப்பட்டு வந்த நாட்டுப் பார்லி. துரைக்கஞ்சி (Gentlemen's barlie) என்ற ஒன்று உண்டு. இது சல்லிவன் துரையால் இங்குக் கொண்டு வரப்பட்டதால் இப்பெயர் பெற்றது. ஆனால் நாட்டுக் காஞ்சியைவிட இது தரத்தில் குறைந்தது. ஹனீவெல் என்ற ஐரோப்பியர் இங்கிலாந்திலிருந்தும், ஸ்காட்லாந்திலிருந்தும் உயர்ந்த ரகமான பார்லியை வரவழைத்து, அரவங்காட்டிற்கு அருகிலிருந்த படகர்களிடம் கொடுத்துப் பயிரிடுமாறு கூறினார். அவர்கள் சிறிது தயங்கவே, விளையும் தானியத்தை அதிகவிலை கொடுத்து வாங்கிக்கொள்வதாக வாக்குறுதியளித்தார். அவர்களும் கொஞ்ச நாள் பயிரிட்டனர். மற்ற பார்லிகளைவிட இதற்கு அதிகத் தழை உரம் தேவைப்பட்டது. மற்றவர்களைப்போல் நாட்டுப் பார்லியைப் பயிரிடுவதை விட்டுவிட்டுத் தாங்கள் மட்டும் புது மாதிரியான தானியத்தைப் பயிரிடுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆகையினால் அம்முயற்சி கைவிடப்பட்டது.

உருளைக் கிழங்கு :

இங்கு விளையும் உருளைக் கிழங்கு பெரும் அளவில், பர்மா, இலங்கை முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது, ஆனால் மேலை நாட்டு உருளைக் கிழங்குகளைப் போல் அவ்வளவு உயர்ந்ததல்ல. ஐரோப்பியத் தோட்ட முதலாளிகள் சீமைக் கிழங்குகளின் விதைகளைக் கொண்டுவந்து பயிர்த்தொழில் செய்யும் படகர்களுக்கு வழங்கினர்கள். சீமைக் கிழங்கைப் பயிரிடும்போது நல்ல கண்காணிப்பு வேண்டும்; பாத்திகட்ட வேண்டும் ; களை பிடுங்க வேண்டும். பூச்சி புழுக்கள் விழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். படகர்கள் போதிய கவனம் செலுத்தாததால் அப்பயிர் முதலில் சரியாக விளையவில்லை. ஆனல் இப்பொழுது நல்ல முறையில் பயிரிடுகிறார்கள்.

ஓட்ஸ் :

உருளைக் கிழங்கிற்கு அடுத்தாற்போல் ஓட்ஸ் ஒரு சிறந்த பயிர், ஆனால் இங்குக் குறைந்த அளவே விளைகிறது. ஜார்ஜ் ஒக்ஸ் என்ற ஐரோப்பியர், பாட்னா ஆஸ்திரேலியா, நியூசீலந்து முதலிய இடங்களில் இருந்து சிறந்த விதைகளைத் தருவித்து இங்குப் பரப்பினர்.

அமர்நாத்

இங்கு அமர்நாத் என்றாெரு தானியமும் விளைகிறது. இது சிற்றூர்களை அடுத்துள்ள வளமான நிலங்களிலேயே பயிராகிறது. இதைச் சொந்த உபயோகத்திற்கே பயிரிட்டுக் கொள்கின்றனர். விற்பனைக்குப் பயிரிடுவதில்லை. இது கோதுமையில் நாற்பதில் ஒரு பங்கு பருமனுள்ள, சிறிய வெண்மையான தானியம். இதை மாவாக அறைத்து அதிலிருந்து உணவுப் பண்டம் செய்கின்றனர். இதனுடைய இலைகளைக் கூடச் சமைத்து உண்கின்றனர்.

காய் கறிகள்

சீமைக் காய்கறிகள் இங்கு நிறையப் பயிர் செய்யப்படுகின்றன. கேரட், டர்னிப், தக்காளி, பார்சினிப், முட்டைக் கோசு, குவாலிஃ பிளவர், பீட்ரூட், ரேடிசஸ், லெட்டுசெஸ், ருபர்ப், ஃப்ரெஞ்சு அவரை, அகன்ற அவரை, வெள்ளரி, சிலெரி என்பவை படகர்களால் நிறையப் பயிரிடப்பட்டு நகரங்களுக்கு அனுப்பப் படுகின்றன. ஆனால் சமவெளியான பெங்களூரிலிருக்கும் தோட்ட முதலாளிகளோடு, வாணிபத் துறையில் இவர்களால் போட்டியிட முடியவில்லை. மலை மீது இவைகள் விளைவதால் சமவெளியிலுள்ள நகரங்களுக்குக் கொண்டு செல்ல நிறையப் பொருட் செலவு ஏற்படுகிறது.

நெல் நீலகிரி மலையின் ஒரு பகுதியான வயனாட்டில் கொல்லி மலையைப் போன்று நெல் பயிரிடப்படுகிறது. அதோடு சாமையும் இராகியும் உயர்ந்த மேட்டு நிலங்களில் பயிரிடப்படுகின்றன. நெல் தாழ்வான பீட பூமிகளில் பயிரிடப்படுகிறது. மலையிலிருந்து ஓடி வரும் அருவிகள் நெல் வயல்களில் பாய்கின்றன.

வணிகப் பயிர்கள் (Commercial Crops)

நீலகிரி மலையில் பயிர்த்தொழில் செய்யப்படும் மொத்த நிலப்பரப்பில் 36% காஃபித் தோட்டங்கள். தேயிலைத் தோட்டம் 10-6%. சின்கோனா 4-6%. உணவுத் தானியங்களும், பழத்தோட்டங்களும், காய்கறித் தோட்டங்களும் மீதி நிலத்தில் உள்ளன.

காஃபி

உலகில் விளையும் மொத்தக் காஃபியில் ¾ பங்கு பிரேசில் நாட்டில் விளைகிறது. மீதிக் கால் பங்கு ஜாவாவிலும், தென்னிந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும் விளைகிறது. தென்னிந்தியாவில் விளையும் காஃபி, உலகில் விளையும் மொத்தக் காஃபியில் 1 பங்குதான். தென்னிந்தியாவின் மொத்த விளைச்சலில் பாதிப்பங்கு மைசூர் மலைகளிலும், மறுபாதி சென்னை , குடகு, திருவாங்கூர் மாநிலங்களிலும் பயிராகின்றன.

1795- ஆம் ஆண்டு கொலோனல் ரீட் என்ற பெயர் கொண்ட சேலம் மாவட்டத் தண்டலர், திருப்பத்தூரில் காஃபி பயிரிட்டுச் சோதனை நிகழ்த்தினார். ஆனால் அம் முயற்சி வெற்றியளிக்கவில்லை. டாக்டர் புச்சானன் என்பவர் கி. பி. 1801-ஆம் ஆண்டு தெல்லிச்சேரியில் காஃபிப் பயிர் நன்றாக விளைவதைக் கண்டார். கி. பி. 1828-இல் பிரௌன் என்பவர் அஞ்சரிகண்டியிலிருந்து காஃபிப் பயிர்களைக் கொண்டுவந்து மலையாள நாட்டைச் சேர்ந்த வய நாட்டில் பயிரிட்டார். ஆனால் 1839-ஆம் ஆண்டு வரையில் அங்கு அப்பயிர்த்தொழில் சிறப்படையவில்லை. கூனூரில் வாழ்ந்த டாசன் என்ற ஐரோப்பியர் 1838-ஆம் ஆண்டு நீலகிரிப் பீடபூமியிலுள்ள காலகட்டி என்ற இடத்தில் காஃபிப் பயிர்களை நட்டுச் சோதனை நிகழ்த்தினார். அச்சோதனை ஓரளவு வெற்றிகரமாக முடிந்தது. உடனே அவுட்டர் லானிப் பள்ளத்தாக்கில் காஃபித் தோட்டங்கள் உருப்பெறத் தொடங்கின, கி. பி. 1866-67-ஆம் ஆண்டுகளில் அப்பள்ளத்தில் 13,500 ஏகர் நிலம் காஃபித் தோட்டமாக மாறியது. 35,000 ராத்தல் காஃபிக் கொட்டை அங்கிருந்து ஏற்றுமதியாயிற்று. நீலகிரி மலையின் கிழக்கு, தெற்கு, வடகிழக்குச் சரிவுகள் காஃபி விளைவதற்கு ஏற்ற இடங்களாக விளங்குகின்றன. இப்பொழுது நீலகிரி மலையிலுள்ள காஃபித் தோட்டங்களின் பரப்பு 50,000 ஏகருக்கு மேல் இருக்கும். உயர்ந்த ரகக் காஃபியான அரேபிகா தான் இங்கு விளைகிறது.

தேயிலை

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் தேயிலையில் தென்னிந்தியாவின் பங்கு மிக மிகக் குறைவு. அதுவும் நீலகிரியில் விளையும் தேயிலையின் அளவு மொத்த இந்தியத் தேயிலையில் 1% தான். நீலகிரியிலுள்ள தோட்ட முதலாளிகள் முதன் முதலில் தேயிலையை விரும்பிப் பயிரிட்டதற்குச் சில காரணங்கள் உண்டு. காஃபியைப் போல் தேயிலை சீக்கிரத்தில் நோயினால் தாக்கப்படுவதில்லை. பூச்சி புழுக்களும் காஃபிச் செடிக்கு அழிவு விளைவிப்பதைப் போல் தேயிலைக்கு விளைவிப்பதில்லை. ஏதேனும் ஓராண்டில் காஃபியின் விளைச்சல் பிற நாடுகளில் மிகுதியாக இருந்தால், உடனே நம் நாட்டில் விலை அதிகமாகக் குறைந்து விடும். அதனால் நம் நாட்டுத் தோட்ட முதலாளிகளுக்குப் பெரும் அளவு பொருள் இழப்பு ஏற்படும். இவை போன்ற தொல்லைகள் தேயிலைத் தோட்டக்காரர்களுக்கு ஏற்படுவதில்லை. பெரும்பாலும் காஃபிப் பயிர்த் தொழிலில் தோல்வி கண்டவர்கள், தங்கள் காஃபித் தோட்டங்களை அழித்துவிட்டுத் தேயிலை பயிரிட்டனர்.

நீலகிரி மலையின் தேயிலைப் பயிர்த்தொழில் வரலாறு கி. பி. 1833-ஆம் ஆண்டிலிருந்து துவங்குகிறது. அங்கு வாழ்ந்த கிருஸ்டீ (Christie) என்பவர், கூனூருக்கருகில் தேயிலையைப் போல் சுவையுடைய ஒருவகைச் செடி நிறைய முளைத்திருப்பதைக் கண்டார். இம்மலையிலும் தேயிலையைப் பயிரிட்டால் என்ன என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. உடனே உயர்ந்த ரகமான தேயிலைச் செடிகளைச் சீன நாட்டிலிருந்து தருவிக்க ஏற்பாடு செய்தார். ஆனால் அவைகள் நீலகிரி வந்து சேர்வதற்கு முன்பே கிருஸ்டீ இறந்து விட்டார். சைனாவிலிருந்து தருவிக்கப்பட்ட செடிகள் நீலகிரி மலையின் பல பகுதியிலிருந்த மக்களுக்கும் பயிரிடுவதற்காகக் கொடுக்கப்பட்டன.

கி. பி. 1835-ஆம் ஆண்டு இந்திய நாட்டின் கவர்னர் ஜெனரல், ஒரு குழுவை ஏற்படுத்தி நீலகிரி, குடகு, மைசூர் முதலிய மலைகளில் தேயிலை பயிரிட முடியுமா என்பதை அறிவதற்காகக் கல்கத்தாவிலிருந்து அனுப்பி வைத்தார். சீனாவிலிருந்து நல்ல விதைகளை வரவழைத்துச் சோதனைத் தோட்டங்களில் பயிரிட்டனர். நீலகிரிக்கு அனுப்பப்பட்ட செடிகளைக் 'கேதி' சோதனைத் தோட்டத்தில் பயிரிட்டனர். ஆனால் அடுத்த ஆண்டிலேயே இச் சோதனைகள் கைவிடப்பட்டுக் 'கேதி' தோட்டமும் அதிலிருந்த கட்டிடமும் பாண்டிச்சேரி கவர்னருக்கு விற்கப்பட்டன. திருவாளர் எம். பெர்ராடெட் (M. Perrottet) என்ற ஃபிரெஞ்சுத் தாவர ஆராய்ச்சியாளர் அத் தோட்டத்திற்கு வந்திருந்த பொழுது, சோதனைக் குழிகளில் நடப்பட்டிருந்த தேயிலைச் செடிகளைப் பார்த்தார். அச் செடிகள் பாதியளவு பூமிக்குள் புதைத்து நடப்பட்டிருந்தன. இவ்வாறு நடப்பட்டதற்குக் காரணம், தோட்ட வேலைக்காரனின் அறியாமையே என்பதை உணர்ந்து, அவைகளையெல்லாம் பிடுங்கி மறுபடியும் ஏற்ற முறையில் நட்டு வளர்த்தார். 1838-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் அச் செடிகள் நான்கடி உயரத்திற்கு வளர்ந்து, செழிப்பான இலைகளைத் தளிர்த்தன. பூக்களும், காய்களும், பழங்களும் தோன்றின. உடனே இச் செய்தியைப்பற்றி ஒரு கட்டுரை வரைந்து, பத்திரிகையில் வெளியிட்டார். இக் கட்டுரை சென்னை மாநிலத்திலுள்ள எல்லாத் தோட்டக்காரர்களின் கவனத்தையும் கவர்ந்த கி. பி: 1840-ஆம் ஆண்டு திருவாளர் சல்லிவன் கேதி தோட்டத்திலும் பில்லிகல் தோட்டத்திலும் விளைந்த தேயிலையின் மாதிரிகளை, சென்னையிலுள்ள 'பயிர்த் தொழில் வளர்ச்சிக் கழகத்'திற்கு அனுப்பி வைத்தார். அவற்றிலிருந்து இறக்கிய தேநீரைக் குடித்து மகிழ்ந்த அவர்களெல்லாம் அவற்றின் சுவையைப் பாராட்டினர்.

பிறகு கூனூரில் வாழ்ந்த திருவாளர் மான் (Mr. Man) என்ற வெள்ளையர் கி. பி. 1854-இல் சீனாவிலிருந்து உயர்ந்த ரகமான செடிகளை வரவழைத்து, பல இன்னல்களுக்கிடையே அவ்வூருக்கருகிலுள்ள ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்துப் பயிரிட்டார். இப்போது அவ்விடம். 'கூனூர் தேயிலைத் தோட்டம்' (Coonoor Tea Estate) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. கி. பி. 1856 இல் மான் அவர்களால் பயிரிடப்பட்ட தேயிலை மிகவும் சிறந்ததென்று இலண்டன் தேயிலை வியாபாரிகளால் பாராட்டப்பட்டது. ஆனால் தம் விளைச்சலை அதிகப்படுத்த அவர் விரும்பவில்லை. காரணம் பயிரிடும் நிலத்திற்காகக் காடுகளை அழிப்பது அவருக்கு மிகவும் தொல்லையான வேலையாகப்பட்டது.

டாக்டர் க்ளெக் ஹார்ன் (Dr, Cleghorn) என்பவர், தேயிலை பயிரிடுவதில் நல்ல அனுபவமுள்ள சில சீன உழவர்களை வட இந்தியாவிலிருந்து நீலகிரிக்குத் தருவித்து உதவுமாறு சென்னை கவர்னருக்கு வேண்டு கோள் விடுத்தார். ஆனால் அவருடைய வேண்டுகோள் அரசியலாரால் மறுக்கப்பட்டது. பிறகு திரு. ரே (Mr. Rae) என்பார் சோலூருக் கருகில் அரசியலாரிடமிருந்து நிலத்தைப் பெற்றுத் தேயிலைத் தோட்டத்தை நிறுவினார். அது இப்பொழுது 'டன்சேண்டல் தோட்டம்' (Dunsandle Estate) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. கோதகிரியில் ஒரு தோட்டமும், உதக மண்டலத்தில் 'பெல்மாண்ட்' (Belmont) என்ற தோட்டமும் ஏற்படுத்தப்பட்டன.

கி. பி. 1863--64 ஆம் ஆண்டுகளில் சென்னை கவர்னராக இருந்த வில்லியம் டென்னிசன் என்பவர் வடமேற்கு மாநிலங்களிலிருந்து தேயிலை பயிரிடுவதில் நல்ல பயிற்சிபெற்ற தோட்ட வேலைக்காரர்களை வரவழைத்து நீலகிரிக்கு அனுப்பித் தேயிலைப் பயிர்த் தொழில் வளர்ச்சியில் சிறிது அக்கறை காட்டினார். அதோடு உயர்ந்த விதைகளைத் தருவித்தும் வழங்கினார் . கி. பி. 1869 ஆம் ஆண்டு ஏறக்குறைய 300 ஏகர் நிலம் தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டிருந்தது. அவ்வாண்டு நடந்த பயிர்த் தொழில் கண்காட்சியில் 18 தோட்ட முதலாளிகள் தங்கள் தோட்டத்தில் விளைந் திருந்த தேயிலைகளைப் பார்வைக்கு வைத்திருந்தனர்.

பிறகு படிப்படியாகத் தேயிலைப் பயிர்த்தொழில் வளர்ந்து நல்ல நிலையடைந்தது. பயிரான தேயிலையை விற்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் செய்யப்பட்டன. தற்போது, நீலகிரித் தேயிலை இங்கிலாந்து நாட்டிற்குப் பெரும் அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நீலகிரியில் விளையும் தேயிலை மூன்று வகைப்படும். அவையாவன (1) தூய்மையான சீனத் தேயிலை. இத் தேயிலை மிகவும் உறுதியானதாக இருக்கும் (2) அஸ்ஸாமில் பெரும் அளவு விளையும் நாட்டுத் தேயிலை. இது 25 அல்லது 30 அடி உயரம் வளரும் தன்மையுடையது. (3) சீன இனத்தையும், நாட்டு இனத்தையும் கலந்து உண்டாக்கப்பட்ட தேயிலை (Hybrid). இது சீனத் தேயிலையைப்போல் இருமடங்கு இலைகளைக் கொண்டிருப்பதோடு, அதன் உறுதியையும் பெற்றிருக்கிறது.

சின்கோனா

நீலகிரி மலையில் பயிரிடப்படும் சின்கோனா மரங்கள் முக்கியமாகக் கொய்னா மருந்து செய்வதற்கும் வேறுசில மருந்துகள் செய்வதற்கும் பயன்படுகின்றன. சின்கோனாவின் பட்டையிலிருந்து எடுக்கப்படும் கொய்னா, மலேரியா நோய்க்கு அருமருந்தாக விளங்குகிறது. இப்போது உதகமண்டல வட்டத்தில் 4000 ஏகர் நிலத்தில் சின்கோனா பயிரிடப்படுகிறது. இத் தோட்டங்களில் பெரும்பகுதி அரசியலாருக்குச் சொந்தமானது. இதற்கென்று ஒரு தனி இலாகா (Chincona Department)வே அரசியலாரால் நடத்தப்படுகிறது. மிகவும் மலிவான விலையில் கொய்னாவைத் தயாரித்து நாட்டு மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதே இவ்விலாகா வின் நோக்கம்.

சின்கோனா மரம் தென்னமெரிக்கக் காடுகளுக்கே உரித்தான பயிர், அங்கிருந்து உலகின் மற்ற பகுதிகளுக்கு இப்பயிர் பரவியது. இது உலகில் பரவுவதற்கு முன்பு தென்னமெரிக்கச் செவ்விந்தியர்களுக்கு இதன் பயன் தெரியுமா என்பது ஐயப்பாடே. கொய்னா (Quinine) என்ற சொல்லானது செவ்விந்திய மொழிச் சொல்லான க்வினா-க்வினா (Quina-Quina) என்பதிலிருந்து பெறப்பட்டதாகும். க்வினா என்றால் பட்டை என்று பொருள்.

கி. பி. 1640 இல் 'பெரூ' நாட்டின் அரசப்பிரதிநிதியாக இருந்த ஐரோப்பியரின் மனைவியான சின்கோன் சீமாட்டி (Countess of Chinchon)யும், அவருடைய யூத நண்பர்களுமே சின்கோனா மரம் உலகில் பரவுவதற்குக் காரணமாக இருந்தவர்கள். கி. பி. 1846-க்கு மேல் தான் இம்மரம் ஐரோப்பாவில் பயிரிடப்பட்டது. இதை நம் நாட்டுக்குக் கொண்டுவரப் பெருமுயற்சி எடுத்துக்கொண்டவர் திருவாளர் டல்ஹௌசி பிரபு. சின்கோனாச் செடிகளை இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்காக அவர் கி. பி. 1852 இல் ஒரு குழுவைத் தென்னமெரிக்காவிற்கு அனுப்பினார். ஆனால் அவர்கள் கொண்டுவந்த சின்கோனாக் கன்றுகள் வரும் வழியிலேயே கருகிவிட்டன. இவ்வாறு பல தடவை எடுத்துக்கொண்ட முயற்சிகள் வீணாயின.

சின்கோனா பயிரிடுவதில் பயிற்சி பெற்ற திருவாளர் மார்க்கம் (Mr. Markham) என்பவர் கி. பி. 1860 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் நீலகிரிக்கு வந்தார். ஆனால் அவர் வருவதற்கு முன்பாக, உதக மண்டலத்திலுள்ள அரசாங்கத் தோட்டத்தின் பாதுகாவலராக இருந்த டப்ள் யூ. ஜி. மெக்கல்வர் (W. G. Mclvor) என்பார் தொட்ட பொட்டாவிற்கருகிலுள்ள பள்ளத்தாக்குகளில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துச் சின் கோனா பயிரிட ஆரம்பித்தார். திரு. மார்க்கம் அவ்விடத்தைப் பார்வையிட்டார். அவ்விடம் ஓரளவு தகுதியானதே என்றாலும், போதிய ஈரமும் வெப்பமும் இல்லை என்று கருதி பீடபூமியின் மேற்கு எல்லையிலுள்ள நடுவட்டம் என்னும் இடத்திற்கருகில் சின்கோனா பயிரிடத் தொடங்கினார். பிறகு பல இடங்களில் இத் தோட்டங்கள் தோன்றத் தொடங்கி வளர்ச்சியுற்றன. இப்பொழுது இப்பயிர்த்தொழில் காஃபிக்கு அடுத்தாற்போல் வருவாய் தருவதாக உள்ளது.

இரப்பர் :

காஃபி, தேயிலை போன்று இரப்பர் மிகுந்த வருவாய் அளிப்பதாக நீலகிரியில் இல்லை . கி. பி. 1882-ஆம் ஆண்டு இரப்பர் வயநாட்டிலும் கோதகிரியிலும் முதன் முதலாகப் பயிரிடப்பட்டது. குரங்குகளாலும், பன்றிகளாலும் தோட்டக்காரர்களின் கவனக் குறைவாலும் இரப்பர் பயிர்த்தொழில் அப்பொழுது வெற்றிகரமாக நடைபெறவில்லை. சேர்வராயன் மலையில் இரப்பர் பயிரிடுதலை வெற்றிகரமாகச் செய்து காண்பித்துத் தங்கப்பதக்கம் பெற்ற நிக்கல்சனைப்பற்றி முன்பே கூறினோம். அவர் சேர்வராயன் மலையிலிருந்து இரப்பர் செடிகளைக் கொண்டு வந்து கோதகிரியில் தமக்குச் சொந்தமாயிருந்த கிளென்பர்ன் தோட்டத்தில் பயிரிட்டார், அதன் பிறகு பல தோட்டக்காரர்கள் நீலகிரியில் குறைந்த அளவு இரப்பர் பயிரிடத் தொடங்கினர். கி. பி. 1902-ஆம் ஆண்டு ஏறக்குறைய 1200 ஏகர் நிலங்கள் இரப்பர் தோட்டங்களாக மாறின. தென்னிந்தியாவில் கொச்சி, ஆனைமலை, சேர்வராயன் மலை, பழனிமலை, மலையாளம் முதலிய இடங்களில் இரப்பர் தோட்டங்கள் உள்ளன. நீலகிரிப் பீடபூமியில் குறிப்பிடத்தக்கது கிளன்ராக் இரப்பர் கம்பனி (glem Rock Rubber Company). இது பண்டலூருக் கருகில் உள்ளது.

பழவகைகள் :

ஐரோப்பியர்கள் நீலகிரியில் குடியேறத் தொடங்கியதும், மேல் நாட்டுப் பழவகைகளை அங்கு நிறையப் பயிரிடத் தொடங்கினர். அரசியலார் சோதனைத் தோட்டங்களை நிறுவி, உயர்ந்தரகப் பழங்களைப் பயிரிடுவதற்கான வழிவகைகளை ஆராய்ந்தனர். இத்தொழில் இப்பொழுது மிக்கவருவாய் அளிக்கும் ஒன்றாக விளங்குகிறது. ஆப்பிள், பேரி, சீமைமாதுளை (Quince), சீமைக் கொவ்வை (peach), திராட்சை , பெருந்திராட்சை (Apricot), ப்ளம் திராட்சை , {plum), செர்ரி, கூஸ்பெர்ரி, முள்ளி (Rasp-berry), ஸ்ட்ரா பெர்ரி, மல்பெர்ரி, அத்தி (fig), கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை , நெக்டரின், பெர்சிம்மன், செரிமாயர் முதலிய பழங்கள் நிறைய விளைகின்றன.

மொழிகள் :

கோவைத்தமிழும், கேரளத்து மலையாளமும், மைசூர்க் கன்னடமும் ஒன்று சேரும் இடத்தில் நீலகிரி மலையானது உள்ளது. ஆகையால் இம் மூன்று மொழிகளின் சிதைவுகளே {dialects) இம்மலை வாழ் மக்களால் பேசப்படுகின்றன. தமிழ், படகா, மலையாளம், தெலுங்கு, குறும்பா, இந்துஸ்தானி, ஆங்கிலம் ஆகியவை இங்கு வழங்கும் முக்கிய மொழிகள். படகா சிதைந்த கன்னடம். இங்குவாழும் பழங்குடி மக்களால் பேசப்படும் துதம் (Toda language) முதலிய மொழிகள் யாவும் கால்டு வெல்லின் கூற்றுப்படி, திராவிட மொழியினத்தைச் சார்ந்தவை.

சமயம் :

இந்து, பார்சி, இசுலாம், கிறித்தவம் ஆகிய நான்கு சமயங்களே இம்மலையில் வாழும் மக்களால் கடைப்பிடித்து ஒழுகப் படுகின்றன. ரோமன் கேதலிக், சர்ச் ஆஃப் இங்கிலாந்து, அமெகரின் மிசன், சினானா மிசன், பாசில் லுதரன் மிசன் ஆகியகிறித்தவ நெறியினர் இங்குத் தத்தமக்குரிய கோயில்களை அமைத்துக் கொண்டு, சமய வளர்ச்சியில் ஈடுபட்டிருக்கிறனர்.

மகக்ள்

தமிழ் வேளாளர், தமிழ்ப் பறையர், தெலுங்கர், படகர், கோதர், தோடர், இருளர், குறும்பர் வய நாட்டுச் செட்டிமார், பனியர், சிறுபான்மை வெள்ளையர் ஆகியோரே நீலகிரி மலைமீது வாழ்கின்றனர்.

பழங்குடி மக்கள் :

நீலகிரி மலையில் வாழும் பழங்குடி மக்கள் குறிப்பிடத்தக்கவர்கள். மேலை நாட்டிலிருந்தும், இந்திய நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், பழங்குடி ஆராய்ச்சி (Anthropology) க்காகப் பலர் இங்கு வந்து கூடிய வண்ணமிருக்கின்றனர். இந்திய நாட்டுப் பழங்குடி மக்களைப்பற்றிக் கூறும் எந்த நூலும், தோடர்களைப் பற்றிக் குறிப்பிடாமலிருப்பதில்லை. தோடர்களைத் தவிர, நீலகிரியில் வாழும் மற்ற இனத்தவரெல்லாம் ஓரளவு நாகரிகம் பெற்று வருகின்றனர். ஆனால் தோடர்கள் மட்டும் இயற்கையோடு படிந்த வாழ்க்கையிலேயே இன்பம் காண்கின்றனர்.

பழங்குடி மக்களைப்பற்றி, எல்லா நாடுகளிலும் பேசப் படுகிறது. விஞ்ஞான நாகரித்தின் அடிப்படையில் இயங்கும் நகர வாழ்வைவிட, காடுகளிலும் மலைகளிலும் கவலையற்று வாழும் இயற்கை வாழ்வே உயர்ந்த தென்றும் பேசப்படுகிறது. பழங்குடி மக்களுக்கு அணுக்குண்டைப் பற்றியோ, நீர்வளிக் குண்டைப் பற்றியோ, பறக்கும் குண்டைப் பற்றியோ தெரியாது , கவலை கிடையாது. அரசியல், பொருளியல், சமூகவியல், தொழில் வளர்ச்சி, கல்வி ஆகியவற்றைப் பற்றியும் அவர்கள் கவலைப் படுவதில்லை, நாளை உணவுக்கு என்ன செய்வது? என்று கவலையோடு கண்துயிலச் செல்லும் இழிநிலை அவர்களிடம் இல்லை. இயற்கை அளிக்கும் வளத்தைப் பகுத்துண்டு பொது உடமை வாழ்வு வாழ்கின்றனர். பண்டித நேரு, பழங்குடி மக்களைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:-

"சமவெளியில் வாழும் நாகரிக மக்களிடத்தில் காண முடியாத பல அரும் பண்புகளை நான் அவர்களிடம் காண்கிறேன். அப் பண்புகள் என்னுள்ளத்தைப் பெரிதும் கவர்கின்றன. 'பழங்குடி மக்கள் வெறியுணர்ச்சி மிக்கவர்கள் ; கொலைக்கஞ்சாக் கொடியவர்கள் ; சினங்கொண்ட பொழுது பிறர் சிரத்தைக் கொய்யச் சிறிதும் தயங்காதவர்கள்' என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் இச் செயல்கள் எல்லாம், சமவெளியில் வாழும் நாகரிக மனிதன் செய்யும் அக்கிரமங்களை விடக் கொடுமையில் குறைந்தவையே! பிறருடைய உள்ளத்தை ஏறி மிதித்து நசுக்குவதைவிடத் தலையை வெட்டுவது எவ்வளவோ மேல் என்று நான் கருதுகிறேன்.

"அவர்கள் ஒழுங்கிற்கும் கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டவர்கள். பாராளு மன்றமும் சட்ட சபையும் அவர்களுக்கு இல்லை. ஆனால் ஜனநாயகத்தை நம்மைவிட நல்ல முறையில் உணர்ந்தவர்கள். ஆடியும் பாடியும் வாழ்க்கையை இன்பத்தோடு வாழக் கற்றவர்கள். ஆனால் நாமோ, நாகரிகத்தின் உச்சியில் வீற்றிருப்பதாகப் பெருமை பேசிக்கொண்டு, பிறரை இழித்துரைப்பவர்கள் ; பிறர் ஆக்கங்கண்டு பொறாமைப்படுபவர்கள், இத்தகைய நாகரிகத்தையா நாம் பழங்குடி மக்களுக்கு அளிக்க வேண்டும்? ஒருவனை ஒருவன் இழித்துப் பேசுவதைக் கலையாகக் கொண்டு வாழும் நாகரிக சமுதாயத்தைவிட்டு விலகி, ஒரு பழங்குடி மகனாகக் காடுகளில் திரிவதைப் பெரிதும் விரும்புகிறேன்," என்று கூறியிருக்கிறார்.

பழங்குடி மக்களைப்பற்றி இரண்டு விதக் கொள்கைகள் உலகில் உலவுகின்றன. அவர்களைக் கண்களுக்கும், கருத்துக்கும் விருந்தளிக்கும் காட்சிப் பொருளாகவும், ஆராய்ச்சிக்குரிய கருப்பொருளாகவும் அப்படியே காடுகளில் விட்டுவைத்திருக்க வேண்டும் என்பது ஒரு கொள்கை. சமவெளியில் பரவியிருக்கும் விஞ்ஞான நாகரிகத்தை வலியப் புகுத்தி, அவர்களையும் நம் வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்பது மற்றொரு கொள்கை. கி. பி. 1936-ஆம் ஆண்டு ஐரோப்பிய நாட்டுச் சட்டசபை ஒன்றில், "பழங்குடி மக்களை ஆராய்ச்சியாளருக்குப் பயன்படும் வகையில், பொருட்காட்சி சாலைகளில் ஏன் அடைத்து வைக்க லாகாது?” என்று ஓர் உறுப்பினர் கேட்டார். அச் செயல் மனிதத் தன்மைக்குப் புறம்பானது என்று வேறு பல உறுப்பினர்களால் கண்டிக்கப்பட்டுக் கைவிடப்பட்டது.

பதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த பெரும் புலவனான ஜான்சனும், அவன் நண்பன் பாஸ்வெல்லும், 'பழங்குடி மக்கள், பண்பட்ட மக்கள் ஆகிய இருவர் வாழ்க்கையில் எது உயர்ந்தது?' என்பது பற்றிக் காரசாரமான உரையாடல் நிகழ்த்தி யிருக்கின்றனர். உலகப் புகழ் பெற்ற நாடகப் புலவரான சேக்ஸ்பியர்கூட, தாம் எழுதியுள்ள புயல் (Tempest) என்ற நாடகத்தில் காலிபன், பிராஸ்ப் பெரோ, ஸ்டீஃபெனோ. டிரிங்குலோ, அந்தோணியோ, ஆலன்சோ என்ற பாத்திரங்களின் மூலம் பழங்குடி வாழ்க்கையையும் நாகரிக வாழ்க்கையையும் விளக்கிக் கொண்டு செல்லுகிறார். காலிபனைப் பற்றித் திறனாய்வாளர் (critics) குறிப்பிடும்போது, “அவன் ஒரு மடையன் ; வெறி கொண்டவன். தீங்கிழைக்கும் பண்பு அவன் உள்ளத்தில் ஊறியது. அவனைப் பண்பட்டவனாக ஆக்கப் பிராஸ்ப்பெரோ எவ்வளவோ முயன்றான், அம் முயற்சி காலிபன் உள்ளத்தில் பொறாமை, தன் தாழ்ந்த நிலை கண்டு அதிருப்தி, மிராந்தாவின் மேல் சபலம், எதிர்ப்புணர்ச்சி, குடிவெறி ஆகிய தீப்பண்புகளையே கிளப்பிவிட்டது' என்று கூறுகின்றனர்.

ஆனால் சேக்ஸ்பியர் அக் காட்டு மனிதனிடமிருந்த அரிய பண்புகளையும் புலப்படுத்துகிறார். காலிபன் இசைப்பிரியன்; காட்டு மொழியில் கவிதை பாடும் புலவன். சில சமயங்களில் அழகுணர்ச்சியோடும் பேசுகிறான். ஆனால் நாகரிகத்தின் பிரதிநிதிகளாக அத் தீவில் புகுந்தவர்கள் - அவனைவிட உள்ளத்தால் இழிந்தவர்கள், ஸ்டீஃபனோவும், டிரிங்குலோவும் குடிகாரக் கோமாளிகள், அந்தோணியோ வஞ்சகன். ஆலன்சோவின் வாழ்க்கை கறைபடிந்தது. இந் நாகரிகர்கள், பழங்குடி மகனான வாலிபனைக் கள் வெறியனாக்கிப் பிறகு நன்றி கெட்டவனாக மாற்றினர்.

பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரூசோ, "பழமை வாழ்வே பண்புடை வாழ்வு; அவ்வியற்கை வாழ்வை நோக்கிச் சென்றால் தான் எதிர்கால உலகம் அமைதியோடும் இன்பத்தோடும் வாழ முடியும்“ என்ற கொள்கையைப் பரப்ப ஓர் இயக்கமே (Back to Nature Movement) நடத்தினார். இவ்வாறு பழங்குடி மக்களைப் பற்றிச் சுவையான பேச்சுக்கள் பன்னிப் பன்னிப் பேசப்படுகின்றன.

படகர் :

நீலகிரியில் வாழும் வெள்ளையர் இவர்களைப் பர்கர் (Burgher) என்று அழைக்கின்றனர். வடக்கிலுள்ள மைசூரிலிருந்து வந்ததால் இவர்கள் வடகர் என்று பெயர் பெற்றனர் என்றும், அப்பெயரே படகர் எனத் திரிந்தது என்றும் சிலர் கூறுகின்றனர். மைசூர் நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாகவும், அரசியலில் கொண்ட கருத்து வேறுபாட்டின் காரணமாகவும், சமுதாயக் கொடுமை காரணமாகவும், மைசூரில் வாழும் லிங்காயத்தாரிடம் கொண்ட சமயப்பூசல் காரணமாகவும் இவர்கள் இங்குக் குடியேறினராகக் கூறப்படுகிறது, தோடர்களிடையே வழங்கும் பரம்பரைக் கதைகளில் படகரைப் பற்றிய செய்திகள் எதுவும் இல்லாத காரணத்தால், இவர்கள் தோடர்களுக்குப்பின் இங்குக் குடியேறியவர்கள் என்பது தெளிவாகிறது.

படகர்கள் உழவுத் தொழிலில் வல்லவர்கள். நீலகிரியில் உள்ள பயிர்த்தொழில் முழுக்க முழுக்கப் படகர்களின் உழைப்பையே நம்பி நடைபெறுகிறது. நீலகிரியின் கிழக்குப்பாதியில் இவர்கள் நிறைய வாழ்கின்றனர். குந்தா பீட பூமியில், தோட்டக் கூலிகளாக நிறைய பேர் பணிபுரிகின்றனர். சிலர் தங்களுக்குரிமையான நிலங்களில் பயிர்த் தொழில் புரிந்து வாழ்கின்றனர். தோட்டங்களில் உழுவதைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் பெண்களே செய்து கொள்கின்றனர். நகரங்களில் கூலிவேலை செய்வதற்காக ஆண்கள் நிறையபேர் வருகின்றனர். படகர்கள் சிலர் கொட்டுக்காரராகவும் (Artisans), தச்சராகவும், நாவிதராகவும், வண்ணாராகவும் தங்கள் இனத்தார்க்குப் பணிபுரிகின்றனர். கொரலியும், சாமையும் இவர்களுடைய முக்கிய உணவுப் பொருள். உணவுப் பொருள் பயிரிட்டது போக எஞ்சிய நிலங்களில் உருளைக்கிழங்கு, குச்சி வள்ளிக்கிழங்கு முதலியவற்றைப் பயிரிட்டு விலைக்கு விற்கின்றனர். இவர்கள் பரம்பரையாகப் பரம ஏழைகள். ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு, இவர்களுடைய வாழ்க்கைத்தரம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இவர்கள் இயற்கையிலேயே அஞ்சும் இயல்புடைவர்கள். பேசும் பொழுது மிகவும் பணிவோடும் அடக்கத்தோடும் பேசுகின்றனர். இங்குக் குடியேறிய காலத்திலிருந்து தோடர்களுக்கு அஞ்சி, அவர்களுக்கு அடங்கியவர்களாகவே வாழ்ந்து வந்திருக்கின்றனர். இப்பொழுது கூடத் தங்கள் விளைச்சலின் ஒருபகுதியை ஆண்டுதோறும் அவர்கட்கு வழங்கி வருகின்றனர்.

உருவம்

நீலகிரி மலைமேல் சென்றவுடன் எளிதில் படகர்களை அறிந்து கொள்ளலாம். திரும்பிய பக்கமெல்லாம் அவர்களுடைய கொச்சைக் கன்னடம் நம் காதைத் துளைக்கும். சிறிய உருவமும், ஒல்லியான உடற்கட்டும், மா நிறமான மேனியும் உடையவர்கள். ஆண்கள் வண்ணக் கரையிட்ட வெள்ளாடையை இடுப்பில் உடுத்துக் கொள்கின்றனர். மேலே சொக்காயணிந்து, அதற்கு மேல் தடித்த கோட்டு (waist coat) அணி கின்றனர். பெண்கள் மார்பை மூடும்படி அக்குளைச் சுற்றிக் குறுகலான மேலாடை யணிகின்றனர். கீழே சேலை உடுத்துக் கொள்கின்றனர். தலையில் எப்பொழுதும் ஒரு துணியைச் சுற்றிக் கொள்கின்றனர். ஆண்களும் பெண்களும் எப்போதும் மலர்ந்த முகத்துடன் காட்சியளிக்கின்றனர்.

பிரிவுகள்

படகர்கள் ஆறு பிரிவினராகப் பிரிந்து வாழ்கின்றனர். உடையார், ஆருவா, அதிகாரி, கனகர், படகர், தொரியர் என்பவையே அப்பிரிவுகள். உடையார் பிரிவினர் மற்ற ஐவரையும்விட உயர்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். இன்று கூட மைசூர் நாட்டில் வாழும் செல்வர்கள் உடையார் என்ற பெயரால் தங்களை அழைத்துக் கொள்கின்றனர். மைசூர் மன்னர் கூட உடையார் குலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொரியர் மற்ற எல்லாப் பிரிவினரையும்விடத் தாழ்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். மற்றப் பிரிவினர்க்கு இவர்கள் அடிமை வேலை செய்து வாழ்கின்றனர். ஆருவா என்னும் பிரிவினர் மற்றையோர்க்குப் பார்ப்பனத் தொழில் புரிந்து வாழ்கின்றனர். படகர்கள் மைசூரிலிருந்து இங்குக் குடி புகுந்த பொழுது, உடன்வந்த பார்ப்பனர்களே இப்பிரிவினர் என்று. கருதப்படுகின்றனர்.

பூப்பெய்தல்

ஒரு பெண் பூப்பெய்தியதும், வீட்டிலிருந்து விலக்கி, அவளை ஒரு தனிக்குடிசையில் படகர்கள் வைத்துவிடுவார்கள். அடுத்த உவாநாள் (பெளர்ணமி) வரை அப் பெண் அக்குடிசையிலேயே இருக்கவேண்டும். மற்ற வீட்டுப் பெண்களெல்லாம் நாள்தோறும் அக்குடிசைக்கு மாவு கொண்டு சென்று, உணவு சமைத்து ஒருங்கிருந்து உண்பர். உவா நாளன்று வீட்டுக்கழைக்கும் சடங்கு நடைபெறும். அன்று அப்பெண்ணை நீரில் குளிப்பாட்டுவர். புத்தாடை அணிவித்து வீட்டிற்கு வெளியில் உட்கார வைப்பர். வானத்தில் முழு நிலா தோன்றியதும், ஐந்து பெண்கள் கூடி அப்பெண்ணை வீட்டிற்குள் அழைத்துச் செல்வர். தாய் மகளை வரவேற்று, "நல்ல வீட்டையும், அன்புள்ள கணவனையும் ஆற்றல்மிக்க மகனையும் பெறுவாயாக“ என்று வாழ்த்துவாள். உள்ளே சமைத்து வைக்கப்பட்ட உணவை அப்பெண்ணுக்குப் படைப்பர். அவ்வுணவில் சிறிதளவு உண்டு, மீதியை அண்டை வீடுகளிலுள்ள முதிய பெண்களிடம் எடுத்துச்சென்று வணங்குவாள். அக்கிழவியரும், தாய் முன்பு வாழ்த்தியது போலவே வாழ்த்துவர்.

திருமணம்

படகர்கள் வீட்டில் ஒரு பெண் பிறந்தவுடன், 10 ரூபாய் பரிசமாக வாங்கிக்கொண்டு, யாராவது ஓர் உறவினருக்கு அக்குழந்தையை மருமகளாக விற்று விடுவது வழக்கம். பருவம் எய்தும் வரையிலும் அப் பெண் தாய் வீட்டிலேயே இருப்பாள். பிறகு கணவன் வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். சிறிது காலத்துக்கு முன் வரையில் படகர்களிடையே காதல் மணம்தான் பெரு வழக்காக இருந்தது. உடையார் பிரிவினர் மட்டும் காதல் மணத்தை ஆதரிப்பதில்லை. ஓர் இளைஞன் ஒரு பெண்ணை விரும்புகிறானென்றால், உடனே தன் பெற்றாேரின் ஒப்புதலோடு சில பரிசுப் பொருள்களை எடுத்துக் கொண்டு அப்பெண்ணின் வீட்டுக்குச் செல்லுவான். அப்பெண்ணின் பெற்றாேருக்கு அப் பரிசுப் பொருள்களை வழங்குவான். பிறகு சில நாள் அவர்கள் வீட்டிலேயே தங்கி, அப்பெண்ணோடு உளங்கலந்து பழகுவான். எந்தவிதக் கட்டுப்பாடும் அவர்களுக்குக் கிடையாது. கடைசியில் இருவரும் ஒருவரையொருவர் விரும்பி மனமொத்த காதல் கொண்டால் திருமணம் நடைபெறும். ஆனால் இம் முறை சில விபரீதமான முடிவுகளையும் கொண்டுவந்து விடுகிறது. சில இளைஞர்கள் இம்முறையைத் தங்கள் பொழுதுபோக்கிற்குரிய கருவியாகக் கருதத் தொடங்கினர். "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர், ஐயர் யாத்தனர் கரணம் என்ப“ என்ற தொல்காப்பியச் சட்டம் இங்கும் அமுலாக்கப்படுகிறது. இவ்வழக்கம் சிறிது சிறிதாகத் தேய்ந்து வருகிறது. சட்ட வரம்பிற் குட்பட்ட திருமணம் மலர்கிறது.

திருமணம் எப்பொழுதும், மணமகன் இல்லத்திலேயே நடைபெறுகிறது. சடங்குகள் அதிகமாக ஒன்றும் இல்லை. மணப்பெண்ணைக் குடத்தில் நீர் கொண்டுவரச் சொல்லுவார்கள், அவ்வாறு செய்வதன் மூலம், அப்பெண் கணவன் வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகப் பொருளாம். அச்சடங்கு முடிந்ததும் மணப்பெண், மாப்பிள்ளை வீட்டிலுள்ள எல்லாரையும் வணங்கவேண்டும். கோதர்களின் இசை முழங்க எல்லாருடைய முன்னிலையிலும் பெண்ணின் கழுத்தில் மணமகன் தாலிகட்டுவான். பரிசப்பணம் மாப்பிள்ளை வீட்டாரின் சக்திக்குத் தகுந்தபடி கொடுக்கப்படும். 200 ரூபாய் வரையில் பரிசப்பணம் கொடுப்பதுண்டு. ‘கூறைப்பணம்' என்று ஒரு குறிப்பிட்ட தொகையை மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்களிப்பது வழக்கம்.

மணவிலக்கு : படகர்களிடையே மணவிலக்கு அதிகமாகக் காணப்படுகிறது. கணவன் வீட்டார் திருமணத்தின்போது கொடுத்த பரிசத்தொகையையும், கூறைப்பணத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டால், எப்பொழுதும் மணவிலக்குப் பெற்றுக்கொள்ளல் எளிது. ஒரு பெண் கருவுற்றவளாக இருந்தால், பஞ்சாயத்தார் முன்னிலையில் ஏழாம் மாதச் சடங்கை (சீமந்தம்) நிகழ்த்திய பிறகே, மணவிலக்கு அளிக்கப்படும். பிறக்கும் குழந்தை கணவனுக்கே உரியது. ஒரு படகர் குலப்பெண் வாழ்க்கையில் திருப்தியும், அமைதியும் கொள்ளும் வரையிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் மணவிலக்குப் பெற்றுக்கொள்ளலாம். இதனால் பெண்களின் ஒழுக்கம் சீர்கெடுகிறது என்பது உண்மையே. படகர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் ஒரு பெண் வேறு சாதியினரிடம் தொடர்பு கொண்டால், அச்செயல் மிகவும் இழிந்ததாகவும், பெருங் குற்றத்தின்பாற் பட்டதாகவும் கருதப்படுகிறது. மிகவும் கடுமையாக அப்பெண் தண்டிக்கப்படுகிறாள். சில சமயங்களில் கொலை கூடச் செய்து விடுகின்றனர்.

இறுதிச் சடங்கு :

படகர்களின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் மிகவும் சுவையானவை. இறக்கும் தருவாயில் இருப்பவன் வாயில் ‘வீரராயப்பணம்' என்ற சிறிய தங்க நாணயத்தைப் போட்டு நீரூற்றி விழுங்குமாறு செய்வர். இப் பணத்தின் மதிப்பு நான்கணாதான். யாரேனும் ஒரு படகன் இறந்தவுடன் அச்செய்தியை ஒரு தொரியன் மூலமாக அண்டையிலுள்ள சிற்றூர்களுக்குத் தெரியப்படுத்துவர். தொரியன் இச் செய்தியைப் பிறரிடத்தில் கூறும்போது, தலைப்பாகையைக் கழற்றிவிட்டுப் பணிவோடு கூறுவது வழக்கம். பிணத்தைத் திறந்த வெளியில் ஒரு கட்டிலில் கிடத்துவர். எருமை ஒன்றைப் பிணத்தைச்சுற்றி மூன்று முறை வலமாக இழுத்துவருவர். பிறகு பிணத்தின் கையைத் தூக்கி எருமையின் கொம்பின்மேல் வைப்பர். பாடை தேர் போல் அலங்கரிக்கப்படுகிறது. செல்வர்களாக இருந்தால் பல மாடிகளோடு அலங்காரமாகத் தேர் செய்வர். தேரைப் பொதுவாகத் துணிகளாலேயே அலங்கரிப்பர். பிணத்திற்குப் புத்தாடை அணிவித்துத் தேரில் கிடத்துவர். பிணத்தின் நெற்றியில் இரண்டு வெள்ளிப் பணங்களைப் பதித்து வைப்பர். இறந்தவனுடைய சுற்றத்தார்கள் பிணத்தைச் சுற்றி நின்று கூச்சலிட்டு அழுவார்கள். பிணத்திற்கு இறுதி வணக்கம் செலுத்துவார்கள். ஆண்களெல்லாம் அரைக்கை மேலுடையும், புதுமாதிரியான தலைப்பாகையும் அணிந்துகொண்டு கோதர்களின் இன்னிசைக் கேற்ப ஆடுவார்கள். எருமைக் கொம்பினால் அமைக்கப்பட்ட பிடியோடு கூடிய அரிவாள், சிறு கோடரி, புல்லாங்குழல், ஊன்று கோல் ஆகிய பொருள்களை ஆசாரி செய்து கொண்டு வந்து, பிணத்தினருகில் தேர் மீது வைப்பான். அடுத்த உலகில் அவனுக்குப் பயன்படுவதற்காக அக்கருவிகள் வைக்கப்படுகின்றனபோலும். சுடுகாட்டுக்குச் சென்றதும் தேரை அழித்துவிடுவர். இறந்தவன் மனைவி தன் நகைகளைக் கழற்றிப் பிணத்திற்கருகில் வைத்துவிட்டுத் திரும்புவாள். ஒரு முதியோன். இறந்தவன் தலையருகில் நின்று அவன் செய்த பாவங்களைப்பற்றி நீண்ட ஒரு பாட்டுப் பாடுவான். அப்பாட்டுப் பின்வருமாறு :

ஆண்டியின் சாவை அறையக் கேட்பீர்!
மாண்ட கன்றின் மாத்தலை யோடு
பூண்ட இவன்பவம் பூண்டோடு ஒழிக;
மண்திணி ஞால வாழ்வதை விட்டு
விண் தனில் வாழ விரைகிறான் தேரில்,
வையகத் தினிலவன் செய்தவை எல்லாம்
பாவம் பாவம் தீராப் பாவம்!
பெற்றோர் செய்த பெரும்பா வத்தையே
மற்றவர் தமக்கு முற்றவே செய்தான் ;
முன்னோர் செய்த முடிவில்பா வத்தையே
பின்னோன் இவனும் பேணியே செய்தான் ; இனத்தவர் செய்த இழிசெயல் எல்லாம்
மனத்தினில் கொண்டு மட்டின்றிச் செய்தான்; பொய்யும் வழுவும் கையக வைப்பு :

செய்யின் எல்லை திருடினான்
இவனே. எளியோர் தம்மையும் ஏழையர் தம்மையும் நலிவே புரிந்து நடுங்கச் செய்தான் ;
அண்டையர் நிலத்தில் மண்டிய பயிரைக்
கண்டதும் உளத்தில் கொண்டனன் பொறாமை ; இறுதிச் சடங்கில் இயற்றிய கன்றைக்
கருதிச் சென்றே கையகம் கொண்டான் ;
மேலோ ரிடத்தில் கோளனாய்ச் சென்றே
பிறர்பழி தூற்றும் பேதையாய் வாழ்ந்தான் ; பாம்பைக் கொன்றான் : பசுவைக் கொன்றான் ;
..................
இப்படி யாக இவன்பவம் நீளும்;
முன்னூறு பாலம் முற்றவே செய்தான் ;
பலியிடப் படுமிக் கன்றின் உயிரோடு
வளியினில் புழுதியாய் இவன்பவம் தொலைக ; கன்றின் காலைக் கையினில் பற்றி
மன்றில் ஆடும் மங்கை பாகன்
நின்றிவ் வுலகம் காக்கும்
நன்றுடை பதியே சென்றிவன் சேர்க!

பாடல் முடிந்ததும் ஓர் எருமைக் கன்றைப் பிணத்தினருகில் நிறுத்திக் கோடரியின் பின்புறத்தால் தாக்கிக் கொல்லுவர். இறந்தவன் செய்த பாவங்களையெல்லாம், பலியிடப்பட்ட அக்கன்று ஏற்றுக் கொள்கிறதாம். இவன் தன் பாவங்களினின்றும் நீங்கிச் சிவனுலகை அடைகின்றானாம், யூதர்களிடம் பண்டைக் காலத்தில் இத்தகைய நம்பிக்கை இருந்ததாக விவிலிய நூல் கூறுகின்றது. யூதர்கள் இறந்தவன் பாவத்தை ஆட்டின் (Scape goat) தலையில் ஏற்றிக் கொன்றனர். நீலகிரி மலையில் வெள்ளையர்கள் குடியேறியதும், இப் பழக்கத்தைத் தடுத்து நிறுத்திவிட்டனர். இப்பழக்கம் இப்பொழுது அநேகமாக இல்லை என்று கூறலாம்.

படகர்கள் பிணத்தை எரிப்பதும் உண்டு ; புதைப்பதும் உண்டு. புதைக்கப்பட்ட பிணத்திற்கே 'பால் தெளித்தல்' என்னும் சடங்கு நடைபெறும், எரிக்கப் பட்ட பிணத்தின் எலும்புகளைப் பொறுக்கி, அவைகளைப் போடுவதற்கென்று ஒவ்வோர் ஊரிலும் தோண்டப்பட்டுள்ள குழியில் போட்டுவிட்டுத் திரும்புவார்கள். உடையார் பிரிவினர் மட்டும், சமவெளியில் வாழும் லிங்காயத்தார்களைப்போல் உட்கார வைத்துப் புதைப்பர்.

சமய வாழ்வு :

படகர்கள் மிகவும் பழமை விரும்பிகள், இந்து சமயக் கொள்கைகளில் அசையாத நம்பிக்கை கொண்டவர்கள். சிவபெருமான்தான் அவர்களுக்குத் தலையாய கடவுள். மகாலிங்கசாமி, மாதேசுவரன், திருமால் முதலிய வேறு கடவுளர்களையும் அவர்கள் வணங்குவதுண்டு. மேட்டுப்பாளையத்திற்கருகில் அரங்கசாமி மலையிலுள்ள அரங்கசாமித் தெய்வத்தையும் அடிக்கடி சென்று வணங்குவார்கள். இவைகளன்றி வேறுபல சிறு தெய்வங்களையும் வணங்குகிறார்கள். இவர்களில் கரைராயனும், ஹேதி (ஹேதம்மா)யும் குறிப்பிடத்தக்கவர்கள். ஹேதம்மாளுக்குப் பல இடங்களில்கோயில்கள் எடுக்கப்பட்டுள்ளன. தன் கணவன் இறந்த பொழுது உடன்கட்டை ஏறி மாண்ட காரணத்தால், படகர்கள் இவளைப் பெருமதிப்போடு போற்றி வணங்குகின்றனர். ஹேதம்மா கோயிலுக்கு எதிரில் திருவிழாக்காலங்களில் 'தீமிதித்தல்' நடைபெறும். ஹேதம்மா வழிபாடும், ஒருவகைப் பத்தினி வழிபாடுதான். ஓங்காளியம்மன், துரோபதையம்மன், மாரியம்மன் ஆகிய பத்தினித் தெய்வங்களின் திருவிழாக்களில் 'தீமிதித்தல்' நடைபெறுவதைப் போன்றதே இதுவும். (ஆனால் தமிழகத்தின் வீர பத்தினித் தெய்வமான கண்ணகிக்கு விழா எடுப்பதை மட்டும் நாம் மறந்து விட்டோம்)

வேறு செய்திகள் :

நீலகிரி மலைமீது வாழும் மக்களில் மிகவும் முக்கியமானவர்கள் படகர்களே. இப்போது ஏறக்குறைய 50,000 பேர் நீலகிரியில் வாழ்கின்றனர். இவர்களுடைய திருவிழாக்களில் கண்டு மகிழ்தற்குரிய சிறப்புவாய்ந்தது, அறுவடைக் காலங்களில் நடைபெறும் 'இரா விருந்து' (Fire feast) என்னும் விழாவாகும். நல்ல விளைச்சல் ஏற்பட வேண்டி, இறைவனைத் திருப்திப்படுத்துவதற்காக இவ்விழா கொண்டாடப்படுகிறது. படகர்கள் இசைப்பிரியர்கள். அவர்கள் இசை தனித் தன்மை வாய்ந்தது. பலவித இன்னேசை பயப்பது. அவர்கள் இசை பண்பட்டதல்ல என்றாலும், தொலைவிலிருந்து கேட்போருக்கு, அவர்களுடைய செவ்வோடு போட்ட குடிசைகளும், அவற்றைச் சூழ்ந்துள்ள எழில்மிக்க காடுகளும், அக்காடுகளில் மலர்ந்துள்ள கண்ணைக் கவரும் வண்ண மலர்களும் நினைவில் தோன்றாமலிருக்க முடியாது.

படகர்கள் இப்போது பழங்குடி மக்களாகக் கருதப்படும் நிலையில் இல்லை. நாகரிக மக்களாக மாறிவருகின்றனர். மேலை நாட்டினரைப் போல் காலுறையும், மூடுசெருப்பும், கோட்டும், தொப்பியும் அணிந்து காட்சியளிக்கின்றனர். கல்வி வளர்ச்சியும் அவர்களிடம் காணப்படுகிறது. பெரிய தோட்ட முதலாளிகளாகவும், வணிகர்களாகவும் பலர் உள்ளனர். ஒவ்வொரு படகர் குடும்பத்துக்கும் குறைந்தது ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. உழவுக்காலம் தவிர மற்ற நாட்களில் கூலிகளாகப் பணிபுரிகின்றனர். பெரிய இலட்சாதிபதிகள் கூட ஒரு சிலர் இவர்களிடையே உள்ளனர். படகர்களிடமிருந்து நிலங்களை மற்றையோர் வாங்குவதை அரசாங்கம் சட்ட பூர்வமாகத் தடுத்திருக்கிறது. பழமையின் பிடிப்பிலிருந்தும், மூடப்பழக்க வழக்கங்களிலிருந்தும் இவர்கள் மீண்டு வருகின்றனர்.

தோடர் : நீலகிரி மலையில் வாழும் பழங்குடி மக்களில் மிகவும் தொன்மையானவர்கள் தோடர்களே. இவர்கள் இயற்கை எழில் மிக்க நாட்டுப்புற வாழ்வில் (Arcadian life) ஊறிப் போனவர்கள். மற்றைய மக்கள் கடைப்பிடித்தொழுகும். நாகரிகத்தை விரும்பாதவர்கள். எருமைக் கூட்டத்தைத் தவிர வேறு எதையும் செல்வமாகக் கருதாத மேய்ச்சல்காரர்கள். உலகப் பெருங் கவி சேக்ஸ்பியர் எழுதியுள்ள இன்பியல் நாடகங்களான 'விரும்பிய வண்ணமே ' (As YouLikeIt) 'நடு வேனிற்கனவு' (Mid Summer Nights' Dream) என்ற இரண்டிலும் சித்தரித்துக் காட்டப்படும் இயற்கை வாழ்வின் எழில் நலத்தைக் காண விரும்புவோர் தோடர் வாழும் தொட்டபெட்டாவிற்குச் சென்றால் காணலாம். புனலிடை மூழ்கிப் பொழிலிடை உலவி, கவலையென்றால் என்னவென்று அறியாமல் இயற்கையோடு இயற்கையாக ஒன்றிவாழும் அவர் கள் வாழ் வைக்காண்போர், தாங்களும் இயற்கைவாழ் மக்களாக (Pastoral Nomads) ஏன் மாறிவிடக்கூடாது? என்று எண்ணாமல் இருக்கமாட்டார்கள். இலக்கிய உணர்வுடையோர் அங்குச் சென்றார்களானால், சங்க காலக் குறிஞ்சித்திணை அவர்கள் கண்முன் நிழலாடும்.

தோடர்கள் பெருமிதமும், அஞ்சாமையும், கவர்ச்சியூட்டும் உடற்கட்டும் வாய்க்கப்பெற்றவர்கள். வெள்ளையர்களிடம் அஞ்சாமையோடு உரையாடுவார்கள். ஆனால் சோம்பேறிகள், எருமை மேய்ப்பதைத் தவிர, வேறு எந்த வேலையும் செய்ய விரும்பாதவர்கள். நீலகிரி மலை தங்களுக்குப் பரம்பரை உரிமையுடையதென்று கருதுபவர்கள். முதலில் குடியேறியபோது, படகர்கள் இவர்களுக்கு அஞ்சியவர்களாகவே வாழ்ந்தனர். நிலங்களைப் பயிரிட்டு விளைந்த தானியத்தின் ஒரு பகுதியைக் கப்பம் வழங்குவதுபோல் தோடர்களுக்குப் படகர்கள் வழங்கிவந்தனர். இன்றும் அப்பழக்கம் இருந்து கொண்டு வருகிறது.

தோடர்களின் தொகை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. இதற்குப் பலகாரணங்கள் உண்டு. நோயினால் துன்புற்று நிறையப்பேர் மடிகின்றனர். இவ்வினப் பெண்களில் மலடிகள் அதிகம். பெண் குழந்தை பிறந்ததும் கொன்றுவிடும் பழக்கம் (Female Infanticide) இவர்களிடம் உண்டு . ஒருபெண் பல ஆண்களைத் திருமணம் செய்து, கொள்ளும் பழக்க (Polyandry)மும், பல காதலர்களை ஏற்றுக்கொள்ளும் பழக்கமும் இவர்களிடம் உண்டு . இவ்வளவு தடைகளை வைத்துக்கொண்டு, அவர்களுடைய இனம் எவ்வாறு பெருக முடியும்? நீலகிரி மலையில் மொத்தம் 1000 பேர்களே வாழ்கின்றனர். இவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருந்தாலும் பழங்குடி ஆராய்ச்சியாளரின் கவனத்தை இவர்கள் ஈர்க்கும் அளவுக்கு, இந்திய நாட்டில் உள்ள எந்தப் பழங்குடியினரும் ஈர்ப்பதில்லை. நீலகிரி மலைமீது இவர்கள் கொண்டிருந்த தனியுரிமை பிறரால் கொஞ்சங் கொஞ்சமாகப் பறிக்கப்பட்டுவிட்டது. பொருளாதாரத்திலும், உள்ளமகிழ்ச்சியிலும் முன்னைவிடச் சற்றுக் குறைந்தவர் களாகவே காணப்படுகின்றனர். இந்திய ஊழியர்கழக (Servents of India Society)மும், சென்னை அரசாங்கமும் இவர்கள் முன்னேற்றத்திற்குத் துணைபுரிகின்றன. இவர்களுடைய குழந்தைகளுக்குக் கல்வி வசதி அளிக்கப்படுகிறது. மருத்துவ உதவியும், பொருளுதவியும் செய்யப்படுகின்றன. இப்பொழுது சோம்பலை நீக்கி ஒருசிலர் தோட்டக் கூலிகளாகப் பணி யாற்றுகின்றனர்.

தோற்றம் :

இவர்களுடைய தோற்றத்தையும், உடலமைப்புகளையும் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பலதிறப்பட்ட செய்திகளைக் கூறுகின்றனர். இவர்களுடைய மூக்கு ரோமானிய இனத்தாருடையதைப் போன்றது; முகச் சாயல் கிரேக்க இனத்தைச் சார்ந்தது. எனவே ஆராய்ச்சியாளர்கள் இவ் வினத்தாரை ரோமானியர்களோடும், கிரேக்கர்களோடும் தொடர்புபடுத்திக் கூறுகின்றனர். நீண்ட மேலாடை போர்த்துக்கொண்டிருப்பதால் இவர்கள் ஈப்ரு (Hebrews) இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்று சிலர் எண்ணுகின்றனர். சமவெளி மக்களால் துரத்தப்பட்டு, இம் மலைகளில் தஞ்சம் புகுந்த சிதியர் இனத்தாரே இவர்கள் என்று கூறுவோரும் உண்டு. தோடர்களின் சமயச் சடங்குகளில் பாடப்படும் பாடல்களை ஆராய்ந்த கிரேக்க நாட்டு ஆராய்ச்சியாளரான எச். எச், பிரின்ஸ் பீட்டர் (H. H. Prince Peter) என்பார், சுமேரியர்கள் வழிபட்ட கடவுளரின் பெயர்களும், அக் கடவுளர்களைப் பற்றிய செய்திகளும், இவர்களுடைய கடவுளர்களையும், செய்திகளையும் ஒத்திருக்கின்றன என்று கூறுகிறார். எனவே தோடர்கள் சுமேரிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்று அவர் எண்ணுகிறார்.

தோடர்குல ஆண்மகனின் சராசரி உயரம் 5 அடி 7 அங்குலம். பெண்களின் உயரம் 5 அடி 1 அங்குலம். சமவெளியிலுள்ள மக்களைவிட அழகிய நிறத்தைப் பெற்றிருக்கிறார்கள். வடித்தெடுத்த சிலை போன்ற உடற்கட்டுடையவர்கள். ஆண்கள் தலையில் அடர்த்தியான மயிரைப் பெற்றிருக்கின்றனர். பெண்கள் தங்களுடைய கூந்தலை வெண்ணெயிட்டு நீவி, உருண்டையான குச்சியில் சுருள்களாகச் சுற்றிப் பக்கங்களில் தொங்க விட்டிருக்கிறார்கள். ஆண்களும் பெண்களும் மொத்தமான போர்வையொன்று மட்டும் போர்த்துக்கொண்டிருக்கின்றனர். அப் போர்வை வெண்மை நிறமானது. ஓரங்களில் சிவப்பும் நீலமும் கலந்த வண்ணக் கரைகளையுடையது. இப் போர்வையைப் 'புட்குலி' என்று கூறுகின்றனர். இப் போர்வையைக் கழுத்திலிருந்து பாதங்கள் வரையில் போர்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆண்கள் கோவணம் அணிகின்றனர்.

ஆடவர்கள் உடலுரமும், பெருமிதமான தோற்றமும், நுண்ணறிவும், உற்சாகமும், சலிப்பற்ற தன்மையும், கூரிய பார்வையும், பிறரை அடக்கியாளும் நம்பிக்கையும் இயற்கையாகவே பெற்றிருக்கின்றனர். இவர்கள் தங்கள் மயிரை வெட்டுவதுமில்லை; சிரைப்பதுமில்லை. எப்போதும் சடாமுடியோடு காட்சியளிப்பார்கள். பெண்கள் அழகிய தோற்றமுடையவர்கள். ஆனால் அறிவில் குறைந்தவர்கள். ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், பச்சை குத்திக்கொள்ளும் பழக்கம் இவர்களிடம் உண்டு.

வீடுகள் :

தோடர்கள் வாழும் சிற்றூருக்கு 'மண்டு' என்று பெயர். ஒவ்வொரு மண்டுவிலும் நான்கு அல்லது ஐந்து வீடுகளே உள்ளன. இவ் வீடுகள் அரை வட்ட வடி வமானவை; பீப்பாயை நீள வாக்கில் குறுக்காக அறுத்துக் கவித்து வைத்தாற்போல் தோன்றுகின்றன. மரப் பலகைகளாலும், சட்டங்களாலும் இவ் வீட்டை அமைத்து, மேலே புற்களையும், தழைகளையும் போட்டுக் கூரை வேய்கிறார்கள். வீட்டிற்கு முன்னால் மட்டும் ஒரே ஒரு வழியுண்டு. அது குறுகலானது ; இரண்டடி சதுர அளவுள்ளது. வீட்டிற்குள் செல்வோர் குழந் தைகளைப் போல் நான்கு காலில் தவழ்ந்துகொண்டே செல்ல வேண்டும். வீட்டிற்குள் படுத்துறங்குவதற்கென்று மேடைகள் அமைக்கப்பட்டிருக்கும். காற்றும் கதிரவன் ஒளியும் உள்ளே மருந்துக்குக்கூடக் கிடையா. வீட்டைச் சுற்றி நாற்புறச் சுவர் அமைந்திருக்கும். எருமைகள் உள்ளே நுழைவதற்கென்று தனி வழியொன்று அச்சுவரில் இருக்கும்.

மொழி :

தோடர்கள் பேசும் மொழி, அங்குள்ள மற்ற பழங்குடி மக்களின் மொழிகளினின்றும் மாறுபட்டிருக்கிறது. அவர்களுடைய மொழி 'துதம்' என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. திராவிட மொழியாராய்ச்சி வல்லுநரான கால்டுவெல் துரைமகனார், திருந்தாத திராவிட மொழிகளில் இதையும் சேர்த்திருக்கிறார். மற்ற திராவிட மொழிகளைவிடத் துதம் தமிழோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாக மொழியாராய்ச்சி வல்லுநர்கள் கூறுகிறார்கள். இம் முடிவிலிருந்து ஓருண்மை மட்டும் புலனாகிறது. அதாவது தோடர்கள் திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதே. தோடர்களில் தார்த்தர் (Tarthar), தீவலி (Teivali) என்ற இரு பிரிவினர் உண்டு . இவர்கள் வெவ்வேறு காலங்களில் இங்குக் குடியேறியவர்கள்.

அன்றாட வேலை :

தோடர்கள் பயிர்த் தொழில் செய்வதில்லை. காலையில் எழுந்ததும், கட்டை விரல்களை மூக்கிற்கெதிரில் வைத்து, மற்ற விரல்களை அகல விரித்துப் பரிதி வணக்கம் செய்வார்கள். பிறகு எருமைத் தொழுவத்திற்குச் சென்று பால் கறப்பார்கள். முதல் நாள் பிரையிட்டு உறைந்த தயிரைக் கடைவார்கள். உணவு உண்டபின் எருமைகளை ஓட்டிக்கொண்டு செல்வார்கள். நாள் முழுவதும் எருமை மேய்த்துக்கொண்டு சோம்பலாகப் பொழுது போக்குவர். மாலை நேரத்தில் விளக்கு ஏற்றி அதை வணங்குவர். எருமைகளைத் தொழுவத்தில் அடைத்த பின் உண்டு உறங்குவர். பால் கறத்தல், எருமைகளைக் கண்காணித்தல் முதலிய பணிகளை ஆண்கள் மேற்கொள்வர். வீட்டு வேலைகளைப் பெண்கள் செய்வர்.

சமய வாழ்வு :

கதிரோன் வணக்கத்திலிருந்து, இவர்கள் இயற்கையைக் கடவுளாகக் கொள்ளும் வழக்கமுடையவர்கள் என்பது புலனாகிறது. அதோடு அவர்களுக்கே உரித்தான வேறுபல கடவுள்களையும் வணங்குகின்றனர். தோடர்களின் வழிபாட்டிற்குரிய முக்கியமான கடவுள் ஆன் (On) ஆகும். ஆனின் தந்தை பிதி (Pithi). ஆனுக்கு ஒரு சோதரியும் உண்டு. அவள் பெயர் தீகிர்சி (Teikirzi). பிதி மிகவும் பழமையான கடவுள். பிதிதான் தோடர்களையும், அவர்களுடைய செல்வமான எருமைகளையும் படைத்தார் என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் பிதி இப்போது இவ்வுலகில் இல்லையாம், இறந்தோர் வாழும் உலகின் தலைவராக இருக்கிறாராம். தோடர் இனத்தின் முதல் தோற்றத்தைப்பற்றி அவர்களிடையே ஒரு கதை வழங்குகிறது.

பிதியும் அவர் மனைவியும், ஒரு நாள் குந்தா மலையின் உச்சிக்குச் சென்றார்களாம். ஒரு நீண்ட இரும்புச் சட்டத்தை அவ்வுச்சியின் மேல் குறுக்காக வைத்து, அச்சட்டத்தின் ஒரு நுனியில் பிதியும், மற்றொரு நுனியில் அவர் மனைவியும் நின்று கொண்டார்களாம். பிதி அந்நுனியிலிருந்தவண்ணம் பூமியிலிருந்து 1800 எருமைகளை மேலே கொணர்ந்தாராம். பிதியின் மனைவி, மற்றொரு நுனியிலிருந்துகொண்டு 1600 எருமைகளைக் கொணர்ந்தாராம். பிதி கொண்டுவந்த எருமைகளே, இப்பொழுது தோடர்களிடையே உள்ள புனித எருமைகளின் (Sacredbuffaloes) முன்னோர்கள். பூமியிலிருந்து பிதியினால் கொண்டுவரப்பட்ட கடைசிப் புனித எருமையின் வாலைப் பிடித்துக்கொண்டு தோடர்களின் முன்னோன் வந்தான். அவன் தன் மார்பு எலும்புகளில் ஒன்றை எடுத்து, முதல் தோடர்குலப் பெண்ணை உருவாக்கினான். ஒருநாள் பிதியின் மகனான ஆன் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டானாம். மகனின் பிரிவைத் தாளமுடியாத பிதி, தாமும் இறந்தோர் வாழும் உலகிற்குச் சென்று, அவ்வுலகின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அங்கேயே இருக்கிறாராம். பிதிக்குப் பிறகு அவர் மகளான தீகிர்சி தோடரைக் காக்கும் பணியை மேற்கொண்டு, அவர்களின் மதிப்பிற்குரிய கடவுளாக வீற்றிருக்கிறாள். உண்மையிலேயே இக்கதையும், இக் கதையில் வரும் கடவுளர் பெயர்களும் கிரேக்க, சுமேரிய பாணியிலேயே அமைந்துள்ளன. இக் கதையிலிருந்தும், இவர்களுடைய பழக்க வழக்கங்களிலிருந்தும், இவர்கள் தங்களுக்கென ஒரு தனிச் சமயத்தையும், கடவுளர்களையும் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

சில சமயங்களில் தோடர்கள் இந்து சமயக் கடவுளர்களையும் வழிபடுகின்றனர். இவர்கள் வணங்கும் இந்து சமயக் கடவுள்களில் குறிப்பிடத்தக்கது 'நஞ்சன்' என்பதாகும். பிள்ளைப்பேற்றுக்காக மட்டும், இக்கடவுளை வணங்குகின்றனர். புனித மந்தையின் குரு, மந்திரவாதி, மருத்துவன் ஆகிய ஒவ்வொருவருக்கும் தனித்தனிக் கடவுளுண்டு. குருமார்களின் சடங்குகளில் கூறப்படும் மந்திரம் மலையாள மொழியிலேயே அமைந்துள்ளது.

கோயிலும் புனித மந்தையும் :

தோடர்களின் கோயில்கள் அவர்களுடைய குடிசைகளைப் போலவே காட்சியளிக்கின்றன. அவர்களுடைய குடிசைக் கூட்டத்திலிருந்து, சிறிது தூரத்தில் இக் கோயில்கள் அமைந்திருக்கின்றன. பெண்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. தங்களைப் போலவே கடவுளும் எருமைகளை மேய்த்துக்கொண்டு மலையுச்சியில் வாழ்வதாகத் தோடர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் மனிதர்கள் கண்ணில் தென்படுவதில்லையாம். தங்கள் மந்தையிலிருந்து, கோயிலுக்குச் சில எருமைகளை விட்டுவிடுகிறார்கள். அவ்வாறு விடும் எருமைகளைப் 'புனித எருமைகள்' என்று அவர்கள் கூறுகிறார்கள், அவைகள் கடவுளுக்குச் சொந்த மானவை என்று கருதுகிறார்கள். இப்புனித எருமைகளைக் கண்காணிக்க ஒரு குரு அமர்த்தப்படுகிறான். அவனை எல்லாரும் பாலோல் (Palol) என்று அழைக் கின்றனர். பாலோல் தான் புனித எருமைகளுக்கும் தோடர் களுக்கும் இடையிலிருந்து பணிபுரிபவனாக. {Intermediary) விளங்குகிறான். அவனுக்குத் துணையாக ஒரு பணியாளன் உண்டு. அவனைக் 'கல்டமொக்' (Kaltmokh) என்று அழைக்கின்றனர்.

தோடரின் கோயில் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முற்பகுதி பாலோலின் இருப்பிடமாகப் பயன்படுகிறது. உட்பகுதி கடவுளின் இருப்பிடம். கோயிலிலுள்ள எருமைப்பண்ணைக்கு 'டி' (Ti) என்று பெயர். இத்தகைய பண்ணை சீகூர் (Sigur) சிகரத்திற்கருகில் உள்ளது. உதகமண்டலத்திலுள்ள ஐரோப்பியர்கள் இதைத் தோடர் கோயில் (Toda Cathedral) என்றே அழைக்கின்றனர். புனித எருமைகளிலிருந்து கிடைக்கும் வருவாய் கோயில் வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படுகிறது. கோயிலின் முற்பகுதியில் பாலோல் உறங்குவது வழக்கம். இந்துக் கோயில்களில் கருவறை (மூலத்தானம்) எவ்வளவு புனிதமாகக் கருதப்படுகிறதோ, அது போல இதன் உட்பகுதி தோடர்களால் கருதப்படுகிறது. அதனுள் பாலோலைத் தவிர வேறு யாரும் நுழையக் கூடாது. புனிதப் பண்ணையில் பணிபுரிபவர்கள் கூட உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. புனித எருமைகளின் பாலைக் கறத்தல் முதலிய பணிகளைக்கூடப் பாலோல் தான். நேரடியாகச் செய்வது வழக்கம், கோயிலுக்குள் இருக்கும் போது பாலோல் ஒரே ஒரு லங்கோடுதான் அணிவது வழக்கம். பாலோல்அணியும் போர்வை பழுப்பு அல்லது கருப்பு நிறம் உடையதாக இருக்கும். கோயில் வழிபாட்டிற்கும், புனித எருமைகளின் உபயோகத்திற்கும் ஒரு நீரோடை பயன்படுத்தப்படும். அதன் நீரை வேறு யாரும் பயன் படுத்தக்கூடாது. பாலோல் எதிர்பாராவிதமாக, வேறு ஏதேனும் குடிசையில் உறங்க நேரிட்டால், தரையையும், உறங்கும் மேடையையும் தவிர, அக் குடிசையிலுள்ள வேறு எப்பொருளையும் தொடுவது கிடையாது. பெரிய கோயிலில் உள்ள பாலோல் மிகவும் புனிதமானவனாகக் கருதப்படுகிறான். சந்தைக்குச் செல்லுவதும், பெண்ணோடு உடல்தொடர்பு கொள்வதும், பிறரோடு பழகுவதும் அவனால் விலக்கப்படுகின்றன. திங்கள், வியாழன் ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் பிறர் அவனை நெருங்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் இக்கட்டுப்பாடுகளெல்லாம் இப்பொழுது தளர்ந்து வருகின்றன. ஒரு குரு புனித மந்தைகளின் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாகச் சில சடங்குகள் நடத்தப்படுகின்றன. கோயிலுக்கென்று ஒதுக்கப்பட்ட புனித அருவியில் குளித்து, அதன் நீரை உட்கொள்வது அச்சடங்குகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

உணவு :

தோடர்கள் பொதுவாக மரக்கறி உணவே உண்கின்றனர். பாலும் தயிரும் அவர்களுடைய இன்றியமையாத உணவுப் பொருள்கள். சடங்குகளில் எருமைக் கன்றுகளைப் பலியிடும்போது மட்டும் அவற்றின் ஊனை உண்கின்றனர். வேட்டையில் மான் கிடைத்தால், அதையும் விருப்பத்தோடு உண்கின்றனர். மது அருந்துவதில், இவர்கள் பெரு விருப்பம் உடையவர்கள்.

பலியிடுதல் :

எருமைக் கன்றுகளைப் பலியிடுதல் இவர்களிடம் பெரு வழக்காகப் பரவியிருந்தது. கடவுளைத் திருப்திப் படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஒவ்வொரு மண்டுவிலும் ஓர் எருமைக் கன்றும், ஒவ்வொரு 'டி'யிலும் இரண்டு கன்றுகளும் பலியிடப்படுகின்றன. பலவித நுணுக்கமான சடங்குகள் அப்போது நடைபெறும். சடங்குகளெல்லாம் முடிந்தபிறகு பலியிடப்பட்ட கன்றின் ஊனை எல்லாரும் உண்பர். பாவங்களைப் போக்கிக்கொள்வதற்கும், துயரங்களைத் தீர்த்துக்கொள்வதற்கும்கூட, இவர்கள் பலியிடும் வழக்கத்தை மேற்கொண்டிருக்கின்றனர். தேனும், பழங்களும் மலைச் சரிவில் பெருகவேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் திங்களில் பாலோலும் அவன் துணைவனும் நெருப்பு மூட்டி வேள்வி செய்வது வழக்கம். அரசியலாரின் தலையீட்டால், பலியிடும் பழக்கம் குறைந்து வருகின்றது.

பில்லி சூனியம் :

பில்லி சூனியம் எல்லாத் தோடர்களுக்கும் ஓரளவு தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு நன்றாகத் தெரியும். மேன்மேலும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் உண்டு. இக்கலை பரம்பரையாகப் பயிலப்பட்டு வருகிறது. பிற இனத்தார் இதனால் தான் தோடர்களைக் கண்டு அஞ்சுகிறார்கள். இவ்வச்சத்தினாலேயே ஆண்டுதோறும் நன்கொடையாக இவர்களுக்குத் தானியம் வழங்குகின்றனர். மனித மயிரில் ஐந்து கல்லைக்கட்டி, மந்திர உச்சாடனம் செய்து, அவற்றைத் துணியில் கட்டி, எதிரியின் வீட்டுக் கூரையில் செருகி விடுவது வழக்கம். அல்லது அவன் வாழும் மண்டுவிற்கருகிலுள்ள ஷோலாவில் புதைத்து விடுவது வழக்கம்.

குழந்தைக் கொலை :

தோடர்களின் தொகை நாளுக்கு நாள் அருகிக் கொண்டு வருவதற்குப் பெண் குழந்தைக்கொலை முக்கியக்காரணம் ஆகும் என்று முன்பே குறிப்பிட்டேன். பெண் குழந்தைகளின் மீது அவர்கள் கொண்ட வெறுப்பிற்குரிய உண்மையான காரணம் விளங்கவில்லை. பெண்குழந்தை பிறந்ததும், எருமைத் தொழுவத்தின் வாயிலில் அதைக் கிடத்திவிடுவார்கள். மலர்ந்து மணம் வீசவேண்டிய அவ்விளமொக்கு, எருமைகளின் காலில் மிதிபட்டு மடிகிறது. கி. பி. 1820- இல் உதகமண்டலத்தில் வாழ்ந்த சல்லிவன் என்ற ஐரோப்பியர் இப்பழக்கத்தை கைவிடுமாறு தோடர்களுக்கு அறிவுறுத்தினார். கி. பி. 1856-ஆம் ஆண்டில் கோவை மாவட்டத்தின் தண்டலராக இருந்தவர் ஒரு புதிய சட்டம் இயற்றினார். அதன்படி தோடர் வீட்டில் பிறந்த பெண் குழந்தையைப் பெற்றோர் கொண்டுவந்து ஆண்டுதோறும் நேரில் காட்டினால், அதன் வளர்ச்சிக்காகக் குறிப்பிட்ட ஒரு தொகையைக் கொடுப்பதாகக் கூறினார். இப்பொழுதுகூட இச் சட்டம் அமுலில் உள்ளது. இதனால் பெண் குழந்தைக் கொலைச் செயல் ஓரளவு குறைந்ததெனலாம். ஆனால் முழுதும் நீங்கவில்லை. தோடர்களின் இச்செயலால் பெண்கள் தொகை ஆண்களின் தொகையைவிட எப் பொழுதும் குறைந்தே காணப்படுகிறது.

உதகமண்டலத்திற் கருகில் வாழும் தோடர்குல மகளிர் காதற் செயல்களில் கைதேர்ந்தவர்கள். நகரில் வாழும் மற்ற இன ஆண்களோடு கொண்ட தொடர்பால், ஓரளவு அவர்கள் மக்கள் தொகை அதிகரித்தது எனலாம். ஆனால் அப்படிப் பிறக்கும் குழந்தைகள் தோடர்களின் உடற்பண்புகளையே பெற்றிருக்கின்றன. வேற்று இனப் பண்புகளைப் பெற்றுப் பிறக்கும் குழந்தைகள் மிகவும் குறைவு.

பல கணவர் முறையும் பொது மனைவி முறையும் :

தோடர்களின் காதல் வாழ்க்கையும், இல்லறமும் சுவையானவை, கற்பைப்பற்றி அவர்கள் அதிகமாகக் கவலைப்படுவதில்லை. கலாசார வரலாற்றின்படி, கற்பு முறையானது, காலத்திற்குக் காலம் நாட்டுக்கு நாடு மாறுபட்டுக்கொண்டு வந்திருக்கிறது. ஒரு நாட்டுக் கற்புமுறை, மற்றொரு நாட்டினருக்கு புதுமையாகத் தோன்றும். பண்படாத மக்களினத்திலும் கற்பைக் காண முடியாது; எல்லோரும் கல்வி கற்று அறிவு ஆராய்ச்சியில் மிகுந்திருக்கும் இனத்தாரிடத்திலும் கற்பைக் காண முடியாது. முன்னவர் அறியாமையினாலும், பின்னவர் அலட்சியத்தாலும் கற்பைக் கைகழுவி விடுகின்றனர். கீழை நாட்டினரிடையே கற்பு ஓரளவு கட்டுப்பாட்டிற்குட்பட்டிருக்கிறது. நாகரிகத்தில் (வள்ளுவர் கூறும் நாகரிகமல்ல) மேம்பட்டவர்களாக விளங்கும் மேனாட்டினரிடையே, கற்பு அதிக மதிப்புப் பெறுவதில்லை. பிரெஞ்சு நாட்டில் கற்பு மிகவும் இழிந்த நிலையில் உள்ளது. அமெரிக்க நாட்டில் 10 நிமிடத்திற்கொரு உந்துவண்டித் திருட்டும், 40 நிமிடத்திற்கொரு கற்பழிப்பும் நடை, பெறுவதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். இங்கிலாந்து நாட்டில் விபசாரம் அதிகமில்லை, ருசிய நாட்டில், விபசாரத்தைச் சட்டபூர்வமாகத் தடுத்துக் கடுந்தண்டனையளிப்பதால், கற்பு அங்குக் காக்கப்படுகிறது. படியாத மக்கள் பாவத்திற்கஞ்சி, இழி செயல் புரிவதில்லை. வறுமை தாக்கும்போது மட்டும், வேறு வழியின்றிக் குற்றம் செய்கின்றனர். ஆனால் மிகவும் படித்த மக்களுக்குப் பாவத்தில் நம்பிக்கை கிடையாது. கற்பை இழப்பதைக் குற்றமாகவும் அவர்கள் கருதுவதில்லை, எதிர்காலத்தில் தனி மனைவியுரிமை என்ற நிலைமாறி, அதிலும் பொதுவுடைமைக் கொள்கை ஏற்படலாம் என்பது உலகப் பேரறிஞரான இரஸ்ஸலின் கருத்தாகும்.

தோடர்கள் கற்பைப் பற்றிக் கவலைப்படாமலிருப்பதற்கு இரண்டு காரணங்களுண்டு. முதலாவது காரணம் அறியாமை. ஒவ்வொரு தோடர்குல ஆணுக்கும், ஒவ்வொரு பெண் கிடைக்காமலிருப்பது இரண்டாவது காரணம். பெண்களின் பற்றாக் குறையினால், ஒவ்வொரு பெண்ணும் பல ஆடவரைக் கணவராக ஏற்றுக்கொள்ளும் வழக்கத்தை -(Polyandry}க் கொண்டிருக்கின்றனர். அவர்களோடு அமையாமல், வேறுசில ஆடவரைக் காதலர்களாகவும் ஒரு பெண் ஏற்றுக் கொள்வதுண்டு. கணவர்களும் இப் பழக்கத்தை அனுமதிக்கின்றனர். ஆகையினால் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட காதலர்கள் (recognised lovers) என்று அழைக்கப்படுகிறார்கள்.

பல ஆடவர்கள் சேர்ந்து பல மனைவியரைப் பொதுவாகக் கொள்ளும் பழக்கமும் இவர்களிடம் உண்டு. ஒரு குடும்பத்தில் பல சகோதரர்களிருந்தால், அவர்களுடைய மனைவியர், எல்லாருக்கும் உரிமையுடையவர்கள். இப்பழக்கம் பல மனைவி முறையோடு (Polygamy) ஓரளவு தொடர்புடையதாகக் காணப்படுகிறது. ஆனால் இப்பொழுது ஒரு குடும்பத்திலுள்ள ஒவ்வொரு சகோதரனும் தனக்கென ஒருத்தியை மனைவியாக உரிமையாக்கிக் கொள்கிறான். ஆனால் கட்டுப்பாடின்றித் தன் உடன்பிறந்தாரின் மனைவியரிடம் தொடர்புகொள்ள அவனுக்கு உரிமையுண்டு. இச் செயலினால் வரம்பிற்குட்பட்ட மனைவி முறை (Monogamy) ஓரளவு தலைகாட்டுகிறது.

ஒரு பெண்ணுக்குரிய கணவர்களிலோ அல்லது காதலர்களிலோ, யாரேனும் ஒருவன், அப்பெண் இருக்கும் குடிசைக்குள் நுழையும்போது, ஒரு பூவை வாயிலில் செருகிவிட்டுச் செல்வது வழக்கம். அப்பூவைக் காணும் மற்ற கணவன்மாரோ, அல்லது காதலர்களோ அப்போது குடிசைக்குள் நுழையக் கூடாது. மேற் கூறிய பழக்கவழக்கங்களெல்லாம், சமவெளியிலுள்ள மக்கள் தொடர்பால் இப்போது குறைந்துவருகின்றன. ஆனால் முற்றிலும் மறையவில்லை,

திருமணம் :

தார்த்தார், தீவலி என்ற இருபிரிவினர் தோடர்களிடையே உண்டு எனக் கண்டோம். அவர்களிடையே மணத் தொடர்பு கிடையாது. ஆனால் ஓரினப் பெண் மற்றோரினத்தானைக் காதலனாக ஏற்றுக்கொள்ளலாம். ஒரு பெண் குழந்தை பிறந்ததும், மூன்று அல்லது நான்காவது வயதில், அதைத் தாய்மாமன் மகனுக்கோ, அத்தை மகனுக்கோ , திருமணம் செய்து கொடுப்பது வழக்கம். மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்கு அடிக்கடி பரிசுகள் வழங்குவதன் மூலம் திருமணத்தை உறுதி செய்து கொள்கின்றனர், பெண் 15 அல்லது 16 வயது வரையில் பெற்றோர் வீட்டிலேயே இருப்பது வழக்கம். ஒரு பெண் பருவம் அடையும் நிலையில் இருக்கும்போது, வேற்றுக்குலத்தான் ஒருவனை அழைத்து அப்பெண்ணோடு ஓர் இரவு முழுவதும் தனி அறையில் இருக்குமாறு செய்வர். இது 'பருவப் பெண்ணின் கற்பழிப்புச் சடங்கு' {ceremonial defloration of nubile girls) எனப்படும். இச்சடங்கு மிகவும் இன்றியமையாததாகக் கருதப்பட்டது. இச்சடங்கு நடைபெறாமல் ஒருபெண் பருவமெய்துவது, அவமானமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்பழக்கம் இப்பொழுது கைவிடப்பட்டது.

மண விலக்கு :

தோடர்கள் கடைப்பிடித் தொழுகும் மனைவி முறைகளால் மணமுறிவும், மறுமணமும் அடிக்கடி ஏற்படும் என்பதில் ஐயமில்லை. மணவிலக்குப் பெற விரும்புவோர் சில எருமைகளை ஒறுப்புக்கட்டணமாகச் (Fine) செலுத்திவிட்டு எளிதில் பெறலாம். ஆகையினால் வேண்டுமென்றே சில ஆடவர்கள், ஆடை மாற்றுவது போல் மனைவியரை மாற்றிக் கொண்டிருக்கின்றனர், ஒரு பெண் தன் வாழ்க்கையில் ஐந்து முறைகூட மண விலக்குப் பெறுவதுண்டு.

பிள்ளைப்பேறு :

தோடர் குலப்பெண் கருவுற்ற ஐந்தாவது திங்களில், பல சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. அவர்கள் வாழும் ‘மண்டு'விலிருந்து சிறிது தொலைவில் ஒரு குடிசை அமைத்து, அதில் அப்பெண்ணைக் குடியேற்றுகின்றனர். ஒரு கயிற்றின் நுனியில் தீயைப் பற்றவைத்து, அத்தீயினால் தன் இடுப்பின் இருபுறங்களையும் அப்பெண்ணையே சுட்டுக் கொள்ளச் சொல்கின்றனர். ஒரு திங்கள் அக்குடிசையில் இருந்தபிறகு, பல சடங்குகளோடு அப்பெண் வீட்டிற்கழைக்கப்படுகிறாள்.

ஏழாவது திங்களில் மறுபடியும் ஒரு சடங்கு நடைபெறுகிறது. இச்சடங்கு மிகவும் முக்கியமானது. இதற்கு 'வில்லம்புச் சடங்கு' என்று பெயர். கருவுற்ற பெண்ணும், வயிற்றில் உள்ள குழந்தைகளுக்குரிய தந்தை என்று அவளால் குறிப்பிடப்பட்ட கணவனும், மண்டுவிற்கருகிலுள்ள ஷோலாவிற்குச் செல்லுவார்கள். கணவன் மரத்திலிருந்து குச்சியை ஒடித்து முக்கோணமாக வைப்பான். அதன் நடுவில் ஒரு விளக்கு ஏற்றப்படும். பிறகு கணவனும் மனைவியும் வேறொரு குச்சியை ஒடித்து வில் செய்வார்கள். ஒரு புல்லினால் அம்பு செய்வார்கள். பிறகு தம் உறவினரை வணங்குவார்கள், வில்லைக் கையிலேந்திய வண்ணம் அப்பெண் எரியும் விளக்கை ஒருமணி நேரமோ, அணையும் வரையிலோ பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.

பிறகு அம்மண்டுவிலுள்ள எல்லாரும், அவ்விடத்திலேயே உணவு சமைத்து உண்டுவிட்டு, அவ்விரவை அவர்களோடு கழிப்பர். ஒரு பெண் முதல் தடவையாகக் கருவுறும் போதோ, புதிய ஒரு கணவனை அக் குழந்தையின் தந்தையாகத் தேர்ந்தெடுக்கும் போதோ இச்சடங்கு நடைபெறும். திருமணமில்லாமலோ, குழந்தையில்லாமலோ ஒருபெண் இறந்தால், சுடுகாட்டில் திருமணச் சடங்கும், வில்லம்புச் சடங்கும் நடை பெறும். குழந்தை பிறந்தவுடன் அப்பெண் மறுபடியும் மண்டுவிற்கு வெளியிலுள்ள அக்குடிசைக்கு அனுப்பப்படுகிறாள். அக்குடிசையில் மூன்று வாரங்களோ ஒரு திங்களோ அவள் இருக்க வேண்டும். குழந்தையின் முகத்தை மூன்று திங்கள்கள் முடியும் வரை யாரும் பார்க்கக் கூடாது. ஆகையினால் ஒரு துணி கொண்டு அதன் முகத்தை மூடியே வைப்பார்கள். குழந்தைக்கு முடி யெடுக்கும்போது பெயரிடுவார்கள்.

சொத்து முறை :

ஒரு பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தை ஏழாவது மாதச் சடங்கின்போது குறிப்பிடப்பட்ட கணவனுக்கே உரிமையானது. அவனுடைய சொத்தெல்லாம் அக் குழந்தையையே சாரும். வேறொருவர் குழந்தையைத் தத்தெடுக்கும் வழக்கம் இவர்களிடம் இல்லை. பெண்களுக்குச் சொத்துரிமை கிடையாது. இச்சொத்துரிமை நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு அமர்த்தப்பட்டவரை மோணிகர் (Monigar) என்று அழைக்கின்றனர். ஆனால் தோடரிடையே இருக்கும் பஞ்சாயத்துச் சபை, மோணிகரைவிடச் செல்வாக்கு மிகுந்ததாக உள்ளது. அப்பஞ்சாயத்தின் தீர்ப்பையே எல்லாரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

இறுதிச் சடங்கு :

தோடர்களின் இறுதிச் சடங்கு மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பச்சை இறுதிச் சடங்கு (Green Funeral), காய்ந்த இறுதிச் சடங்கு (Dry Funeral) கடைசி இறுதிச்சடங்கு (Last Funeral) என்பவையே அப்பிரிவுகள். முதன் முதலாக இறந்துபோனவனை ஆடை அணிகளால் அலங்கரித்து, ஒரு குடிசையில் கொண்டுபோய் வைப்பார்கள். பெண்கள் இணை இணையாக ஒருவர் நெற்றியோடு மற்றொருவர் முட்டிக் கொண்டு கூச்சலிட்டு அழுவார்கள். அப்பொழுது புனித எருமைகளில் இரண்டைப் பலியிட வேண்டும். அதற்காகப் புனித எருமைகளை ஷோலாவில் ஓட்டி அச்சுறுத்துவார்கள். அவை மருண்டு சினங்கொண்டு ஓடும். அப்பொழுது பலபேர் சேர்ந்து அவற்றைத் துரத்திப் பிடிப்பார்கள். அம்முயற்சியில் பல பேருக்குக் கடுமையான காயம் ஏற்படுவதுண்டு. கடைசியாக இரண்டு எருமைகளைப் பிடித்துப் பிணத்திற்கருகில் கொண்டுவருவார்கள். அவற்றின் கொம்புகளில் நெய்யைப் பூசுவார்கள். பிறகு கோடரியின் பின்புறத்தால் தலையில் தாக்கி, எருமைகளைக் கொல்லுவார்கள். இறந்தவர் ஆணாக இருந்தால், பலியிடப்பட்ட எருமைகளைப் பிணத்தின் தலையருகில், வலதுகைப் புறமாகக் கிடத்துவர். பெண்ணாக இருந்தால், பிணத்தின் கால்களை எருமைகளின் தலைமீது தூக்கி வைப்பர். அங்கிருக்கும் ஆடவர்களெல்லாரும் இறந்துகிடக்கும் எருமைகளின் கொம்புகளைத் தொட்டு, அவைகட்கு வணக்கம் செலுத்துவர். பிறகு பிணம் பாடையிலேற்றப்பட்டு இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும். பிணத்தோடு உணவு, ஆடை, அணி, பணம், புகையிலை முதலியனவும் அடுத்த உலகில் பயன்படுத்துவதற்காக வைத்தனுப்பப்படுகின்றன. அதன் பிறகு பிணத்தைச் சிதையில் வைத்துத் தீயிடுவார்கள். விலையுயர்ந்த பொருள்களையும், பிணத்தின் தலையிலிருந்து சிறிது மயிரையும் எடுத்துக்கொள்வார்கள், பிணம் எரிக்கப்பட்ட பிறகு, சிதறிய அதன் மண்டையோட்டின் ஒரு பகுதியையும் எடுத்துக்கொள்வார்கள். இத்துடன் பச்சை இறுதிச் சடங்கு முடிவுறுகிறது.

மேற்கூறிய மூட்டையை ஒரு குடிசையில் கொண்டுபோய் வைப்பார்கள். முதலில் எவ்வாறு பெண்கள் அழுதார்களோ, அதே போல் இன்றும் அழுவார்கள். எருமைக் கன்றுகள் பலியிடப்படும். பலகறைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தடியை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, அக் குடிசையைச் சுற்றி ஒருவன் ஆடி வருவான். கடைசியாக எல்லாரும் உணவு உண்டு, தத்தம் வீடுகளுக்குப் பிரிந்து செல்வர். இதற்குக் காய்ந்த இறுதிச் சடங்கு என்று பெயர்.

மறுநாள் காலையில் கடைசி இறுதிச் சடங்கு தொடங்கும், குடிசையிலிருந்து அம் மூட்டையை எடுத்துக்கொண்டு சென்று வட்டமாக அமைக்கப்பட்ட கற்களுக்கு நடுவில் ஒரு குழி தோண்டி, அதில் வைப்பார்கள். அவ்விடத்திற்கு ' 'ஆசாரம்' (Azaram) என்று பெயர். அம் மூட்டையையும், உணவுப் பொருளோடு கூடிய மரத் தட்டையும் வைத்து ஒன்றாக எரிப்பார்கள். பிறகு அச் சாம்பலைக் குழிக்குள்ளேயே வைத்து மூடிவிடுவார்கள். பிறகு மூன்று முறை மணியடிக்கப்படும். புதிய மட்பாண்டமொன்று உடைக்கப்படும். இத்துடன் சாச்சடங்குகள் முடிவுறுகின்றன. சிலர் இச் சடங்குகளைச் சில திங்கள்கள் கழித்துக்கூடச் செய்வதுண்டு.

தோடர்கள் யார்?

இந்திய நாட்டிலேயே மிகவும் கவர்ச்சியூட்டும் பழங்குடியினராகிய இத் தோடர்களின் பழக்க வழக்கங்களைக்கொண்டு, இவர்கள் யாராயிருக்கலாம்? எங்கிருந்து வந்திருக்கலாம் ? என்ற வினாக்களுக்கு விடை காண முயலுகின்றனர். திருவாளர் ரிவெர்ஸ் (Mr. Rivers) என்பார், கேரளத்து மலையாள மக்களின் பண்பாட்டோடு, இவர்கள் பண்பாடு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதை விளக்கப் பல சான்றுகள் காட்டுகின்றார். ஒரு பெண் பல கணவரை ஏற்றுக்கொள்ளும் முறை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரை மலையாளத்தில் நிலவி வந்தது. அம் மண முறை, 'சம்பந்த மண முறை' என்று மலையாள மக்களால் கூறப்பட்டு வந்தது. திருமணத்தின்போது நடக்கும். கூறைச் சடங்கு, இரு இனத்தாரிடையிலும் முக்கிய மானதாகக் கருதப்படுகிறது. திருமணமாகாமல் ஒரு பெண் இறந்துவிட்டால், புதுப்புடவை வைத்து எரித்தலும், மணத்திற்குரிய சடங்குகளைப் பிணத்திற்குச் செய்தலும். இரு இனத்தாரிடையிலேயும் நிலவிவரும் பழக்கங்களாகும். பலகறைகளால் ஒரு கழியை அலங்கரித்து, பிணம் வைக்கப்பட்ட குடிசையைச் சுற்றி ஆடும் பழக்கம் மலையாள மக்களுக்கே உரியது. தோடர்களும் அப் பழக்கத்தை மேற்கொண்டு ஒழுகுகின்றனர். இறந்துபோனவனுடைய உயிர் மேற்கு நோக்கிச் (மலையாளம் இருக்கும் திசை நோக்கி) செல்லுவதாகத் தோடர்கள் கருதுகின்றனர். தோடர்குலக் குருமார்கள், சமயச் சடங்குகளின்போது, மலையாள மந்திரங்களையே கூறுகின்றனர். தோடர்களின் உருவ அமைப்புகள் மலையாளத்திலுள்ள நம்பூதிரிகளையும், நாயர்களையுமே பெரும்பாலும் ஒத்திருக்கின்றன. தோடர்கள் நீண்ட காலத்திற்கு முன் (சுமார் 800 ஆண்டுகட்குமுன்) மலையாளத்திலிருந்து இங்கு வந்திருக்க வேண்டும். ஆகையினால் தான் தோடர் மொழி தமிழ் மொழியோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. ஏனென்றால், பண்டைய மலையாளம் தமிழேயன்றோ?

பிற செய்திகள் :

கொன்னமரா என்ற இடத்தில் தோடர்களுக்குரிய கோயில் ஒன்றுளது. உயரமான வடிவத்தை உடையது. ' பிங்கர் போஸ்ட்'டிற்குத் திரும்பும் வழியில் இதைக் காணலாம். காட்டெருமைகளைக் கண்டால், எல்லோரும் அஞ்சி நடுங்குவார்கள். ஆனால் அவைகளின் அருகில் அச்சமில்லாமல் சென்று, பால் கறக்கும். கலையைத் தோடர்கள் நன்கு அறிவார்கள்.

கோதர் :

கோதர் நீலகிரி மலைமீது 1500 பேர் வாழ்கின்றனர். கோதகிரியிலுள்ள 6 சிற்றூர்களும், கூடலூருக்கருகிலுள்ள ஒரு சிற்றூரும், இவர்களுடைய வாழ்விடங்களாம். இவர்களுடைய வீடுகள் அழகற்றவை ; உருவத்தால் பெரியவை. ஒவ்வொரு வீட்டின் முன் பகுதியிலும் தாழ்வாரம் அமைந்திருக்கும். கற்றூண்கள் வீட்டில் நாட்டப்பட்டிருக்கும். ஆனால் சித்திர வேலைப்பாடு. அவற்றில் அதிகமிருக்காது. வீடுகள் பெரும்பாலும் கூரையினால் வேயப்பட்டவை.

கோதர்கள் தூய்மையற்ற உடலினர். அவர்கள் அணியும் ஆடைகள் மிகவும் அழுக்கடைந்து காணப்படுகின்றன. தமிழரைப்போல் வேட்டியே அரையில் உடுக்கின்றனர். கோதர்களை எளிதில் அறிந்துகொள்ளலாம். படகர்களைவிடக் கறுத்த நிறமுடைவர்கள் ; நடுவில் வகிடு எடுத்துப் பின்னால் குடுமி முடிந்திருக்கின்றனர். நாகரிகம் வளர்ந்திருக்கும் இக் காலத்திலும் கூட, இறந்த விலங்குகளின் ஊனை முக்கிய உணவாகக் கொள்கின்றனர். இவர்களுடைய கடவுளாகிய காமட்டராயன் (Kamattarayan) தன் உடலிலிருந்து வழிந்த மூன்று துளி வியர்வையிலிருந்து தோடர்களையும், குறும்பர்களையும், கோதர்களையும் படைத்தானாம். அதோடு, தோடர்கள் பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றையும், குறும்பர்கள் இறைச்சியையும், கோதர்கள் அழுகிய இறைச்சியையும் உண்ண வேண்டுமென்று ஆணையிட்டானாம். அவ்வாணையின் படியே தாங்கள் அழுகிய இறைச்சியை உண்பதாகக் கூறுகின்றனர். இவ் விழிந்த உணவு, அவர்கள் உடல் நிலைக்கு ஏற்றதாக அமைந்துவிட்டது. கோதர்கள் பருத்த, உறுதியான உடற்கட்டுடையவர்கள்.

கோதர்கள் மைசூர் நாட்டுக் குன்றுகளிலிருந்து இங்குக் குடியேறியதாகக் கூறுகின்றனர். அவர்கள் பேசும் மொழி திருந்தாக் கன்னடம். தச்சராகவும், கம்மியராகவும், சக்கிலியராகவும், கொல்லராகவும் பிற இனத்தாருக்குக் கோதர்கள் பணிபுரிகின்றனர். இவ்வினப் பெண்கள் மட்பாண்டம் செய்து பிற இனத்தாருக்கு வழங்குகின்றனர். இச் சேவைக்கு ஈடாக மற்ற வர்களிடமிருந்து தானியம், எருமைகள், இறந்த மிருகங்கள் ஆகியவற்றைப் பெறுகின்றனர். அறுவடைக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு தானியம் படகர்களால் ஆண்டுதோறும் இவர்கட்கு வழங்கப்படும். படகர்களைப் போன்று இவர்களும் ஆண்டுதோறும் தோடர்களுக்கு நன்கொடைத் தானியம் வழங்குவது வழக்கம். அதற்குக் 'குடு' (Gudu) என்று பெயர். படகர்களிடையே மூன்று பிரிவுகளுண்டு. இப் பிரிவினர் தங்களுக்குள் மணத் தொடர்பு கொள்வதில்லை. கோதர்கள் இசைஞர்கள். இவர்கள் நீலகிரி மலையிலுள்ள எல்லா இனத்தார்க்கும், திருமணக் காலங்களிலும், விழாக் காலங்களிலும், இசைப் பணி புரிகின்றனர்.

திருமணம் :

திருமணம் பெற்றோர்களின் இசைவுடனேயே நடைபெறுகின்றது. மணமகன் மாமனாரின் வீட்டிற்குச் சென்று, வணக்கம் செலுத்திப் பரிசுப் பொருள்களை அளித்துவிட்டுத் திரும்புவதன் மூலம் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்குரிய சடங்குகள் அதிகமாக ஒன்றுமில்லை. பரிசப்பணத்தைக் கொடுத்த பிறகு, மணமகன் மணமகளைத் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வருவான். அதன் பிறகு விருந்து ஒன்று நடைபெறும். இத்துடன் திருமணம் முடிவடைகிறது. முதல் மனைவிக்குப் பிள்ளைப்பேறு இல்லை யென்றால்தான், ஆண்கள் இரண்டாவது மணம் செய்து கொள்ளுகின்றனர்.

மணவிலக்கு :

மணவிலக்கு கோதர்களிடையே அதிகமாக நடைபெறுவதில்லை. பொறுப்பற்ற தன்மையும், குடிவெறியும், சோம்பலும், ஒழுக்கக் குறைவும் உடைய பெண்ணே மணவிலக்கிற்குரியவளாகக் கருதப்படுகிறாள். மணவிலக்கு ஊரிலுள்ள பெரியவர்கள் முன்னிலையில் நடைபெறும். மிகவும் சிக்கலான வழக்காக இருந்தால், கோதர்கள் வாழும் ஏழு ஊர்களிலுமுள்ள பெரியோர்களடங்கிய பஞ்சாயத்தால் ஆராயப்பட்டு மணவிலக்கு அளிக்கப்படும்.

பிள்ளைப்பேறு :

பிள்ளைப் பேற்றுக்காகப் பயன்படுத்தப்படும் குடிசை, இரு அறைகளாகத் தடுக்கப்பட்டிருக்கும். ஓர் அறை மருத்துவத்திற்குரிய மனையாகவும், மற்றொன்று பிள்ளைப்பேற்றுக் காலத்தில் தங்குவதற்குரிய இடமாகவும் பயன்படுத்தப்படும். குழந்தை பிறந்ததும், தாய் அடுத்த உவா நாள் வரை அக் குடிசையிலேயே தங்கவேண்டும். உவா நாளன்று அப் பெண்ணை வீட்டுக்கழைப்பர். அன்று எல்லாருக்கும் ஒரு விருந்து நடைபெறும். ஊர்த்தலைவன் குழந்தைக்குப் பெயரிடுவான். முதற் குழந்தை ஆணாக இருந் தால், அதற்குக் 'காமட்டன்' என்று தங்கள் கடவுள் பெயரை இடுவர். பெண்களுக்கு ‘மாடி' என்ற பெயரே அதிகமாக வழங்குகிறது. மாடி என்பது அவர்கள் வழிபடும் ஒரு சிறு தெய்வத்தின் பெயர்.

சமய வாழ்வு :

கோதர்கள் வழிபடும் கடவுளரில் தலைமை பெற்றவன் காமட்டராயன். கோதர்களின் சமயகுரு 'தேவாதி' என்று அழைக்கப்படுகிறான். சமய குருவின் பதவி பரம்பரை உரிமையுடையது. கோயில் பணி புரியும் பூசாரிகளைக் கோதர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். தோடர்குலப் பூசாரிகளுக்கிருப்பது போன்று, தனியுடையோ, வேறு கட்டுப்பாடுகளோ இவர்களுக்குக் கிடையா. மற்ற மக்களைப் போலத் திருமணம் செய்து கொண்டு, குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். காமட்டராயன் மனைவியின் பெயர் 'காசிகை.' கோதர்கள் வாழும் ஒவ்வோர் ஊரிலும் இவர்களுக்குக் கோயில் உண்டு. காமட்டராயனுக்கு ஆண்டுதோறும் பெரு விழா ஒன்று நடைபெறும். தங்கள் வாழ்வில் நன்மை பெருக வேண்டும் என்று இறைவனை வேண்டி அவ்விழாவைக் கொண்டாடுவர். ஜனவரித் திங்களில் உவா நாள் கழிந்து, முதல் திங்கட்கிழமையன்று இவ் விழா துவங்கும். பிறகு பதினைந்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இப் பதினைந்து நாட்களையும், ஒவ்வோர் ஆண்டிலும் ஓய்வு நாட்களாக இவர்கள் கருதுகின்றனர். இத் திருவிழாவின் போது, ஆண்களும் பெண்களும் ஒன்றாகக் கூடி ஆடும் ஆட்டம் மிகவும் ஆபாசமானது.

அருகில் வாழும் படகர்களில் முக்கியமானவர்களைக் கோதர்கள் இவ்விழாவிற்கு அழைப்பது வழக்கம். இவர்களுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு வராவிட்டால், அச்செயல் பெரும் அவமானத்திற்குரியதாகக் கோதர்களால் கருதப்படும். அவ்வாறு வந்து விழாவில் கலந்து கொள்ளாத படகர்களின் நிலங்களில் யாரும் பணி புரிவதில்லை. வேறு எந்தச் சடங்குகளிலும் கலந்து கொள்வதில்லை. காமட்டராயன் விழா நடைபெறும் அப்பதினைந்து நாட்களும், கோயிலின் முன்னால் மூட்டிய தீ அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும். கோயிலின் பழைய கூரையை நீக்கிவிட்டு, மூங்கிலினால் புதிய கூரை வேய்வார்கள். இறைவனுக்குச் சிறப்பான ஆடைகளும், தலைப்பாகையும் அணிவித்து அலங்காரம் செய்வர். திருவிழாக் காலங்களில் எல்லாரும் சேர்ந்து வேட்டைக்குச் செல்வார்கள். தேவாதி ஓர் இரும்புத் துண்டை நெருப்பில் போட்டுப் பழுக்கக் காய்ச்சுவான். பூசாரி அவ்விரும்புத் துண்டைச் சுத்தியால் அடிப்பான். இவ்வாறாகப் பலவிதச் சடங்குகள் நடைபெறுகின்றன.

இறுதிச்சடங்கு :

இறக்கும் நிலையில் இருப்பவரின் வாயில் படகர்களைப் போன்று வீரராயப் பணத்தைப் போட்டு நீர் ஊற்றும் பழக்கம் இவர்களிடமும் உண்டு, பிணத்தின் கைகளை மார்பின் மேல் கிடத்திப் பெரு விரல்களை நூலினால் கட்டிவிடுவார்கள். இறந்தவரின் உறவினர்கள், பிணத்திற்கு இறுதி வணக்கம் செலுத்துவர். மரத்தினால் பாடைசெய்து, அதைத் துணியால் அலங்கரிப்பர். அலங்கரித்த அப்பாடையை வீட்டின் முன்னால் வைப்பர். உறவினர் எல்லாரும் அழுவர். மற்றையோர் இசைக்கேற்ப ஆடுவர். ஓர் எருமையைப் பலியிட்டு, அதன் ஊனை எல்லாரும் பங்கிட்டுக் கொள்வார்கள். பிணத்தை அலங்கரித்து அதன் நெற்றியில் காசைப் பதிப்பார்கள், பிறகு இரும்பினால் செய்த சிறு கருவிகளையும், அரிசி, புகையிலை, அன்றாட உணவுப் பொருள் முதலியவற்றையும் பிணத்தோடு பாடையில் வைப்பார்கள். அழுகையும், ஆடலும், மதுவருந்தலும் பலமணி நேரம் நடைபெறும். கடைசியாகப் பாடையை இடுகாடு நோக்கி எடுத்துச் செல்லுவர், இறந்தவன் மனைவி, தன் நகைகளை இடுகாட்டில் களைந்து, இறுதி வணக்கம் செலுத்துவாள், பிணத்தைச் சிதையில் எடுத்துவைத்த பிறகு, பாடையை அழித்து விடுவர். பிணம் எரிந்த பிறகு, நீரூற்றிச் சிதையை நனைத்து, எலும்புகளையெல்லாம் பொறுக்கி ஒரு குழியில் புதைத்து மூடி, அதன்மேல் நடுகல் நாட்டுவர்.

தோடர்கள் எவ்வாறு காய்ந்த இறுதிச் சடங்கு செய்கிறர்களோ, அதே போல் திசம்பர் திங்களில் கோதர்களும் செய்கிறார்கள். இறந்து போனவரின் வீடுகளின் முன்னால், சடங்குகள் நடைபெறுவதற்கு எட்டு நாள் முன்பிருந்தே தினமும் ஆடல்பாடல் நடை பெறும். குறிப்பிட்ட நாளில் உறவினர்கள் எல்லாரும் சேர்ந்து, எருமையின் மண்டையோட்டைத் துணியில் ஒரு மூட்டையாகக் கட்டிப் பாடையின் மேல் வைத்து வணங்குவார்கள். அன்று பிணத்தோடு வைத்தவைகளைப் போன்றே, இன்றும் புகையிலை, அரிசி, உணவுப் பொருள் முதலியவற்றையும் பலகறைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தடியையும் அம் மூட்டையோடு இடுகாட்டில் வைத்து எரிப்பார்கள். அப்பொருள்களெல்லாம் எரிந்த பிறகு, சிதையை முன் போலவே நீர் ஊற்றி நனைப்பார்கள். எல்லாரும் அவ்விரவை இடு காட்டிலேயே கழிப்பர். இத்துடன் கோதர்களின் இறுதிச்சடங்கு முடிவுறுகிறது.

பிற செய்திகள் :

தோடர்களிடையே இருப்பது போன்று ஒரு பெண் பல கணவரை ஏற்றுக்கொள்ளும் முறை கோதர்களிடையே இல்லையென்றாலும், அதனின்றும் சிறிது மாறுபட்ட ஒருமுறை இவர்களிடையே நிலவி வருகின்றது. ஒரு குடும்பத்தில் பல சகோதரர்கள் இருந்தால், ஒருவன் மற்றவனுடைய மனைவியோடு எந்தவித வேறுபாடுமின்றித் தொடர்பு வைத்துக் கொள்வது வழக்கம். இதை அவர்கள் குற்றமாகக் கருதுவதில்லை. இதன் காரணமாகப் பொறாமையோ, பூசலோ ஏற்படுவதில்லை. கோதர்களிடையே உடன் பிறந்த ஒற்றுமை மிகவும் அதிகம். அவர்களுடைய சமூக, பொருளியல் முறைகளெல்லாம், சோதர ஒற்றுமையின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. 'உடன் பிறந்தார் இல்லாதவன் கையிளைத்தவன்' என்ற ஒரு பழமொழி அவர்களிடையே நிலவுகிறது. மது அருந்துவதிலும், அபினி தின்பதிலும் இவர்களுக்குப் பெருவிருப்பம் உண்டு.

குறும்பர் :

இவர்களைக் குறுமர் என்றும், குறுபர் என்றும் வேறு பெயர்களால் அழைக்கின்றனர். இவர்கள் நீலகிரிப் பீடபூமியிலுள்ள சிற்றூர்களிலும், வய நாட்டிலும் வாழ்கிறார்கள். இம்மக்கள் குறும்பர், ஊர்க்குறும்பர், ஜேன் குறும்பர் என மூன்று பிரிவினராகப் பிரிந்து வாழ்கின்றனர். நீலகிரிப் பீடபூமியில் குறும்பர்களும், நெல்லியாளத்தை (Nellialam)ச் சுற்றி ஊர்க்குறும்பர்களும் வாழ்கின்றனர். ஜேன் குறும்பர்கள், 'ஷோலா நாயக்கர்'கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வய நாட்டிலும், குறிப்பாக மதுமலைப் பகுதியிலும் வாழ்கின்றனர்.

ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில், காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு, பல்லவர் என்ற இனத்தார் தமிழகத்தைச் சிறப்பாக ஆண்டு வந்தனர். அவர்களுக்கும் குறும்பர்கள் என்ற வேறு பெயருண்டு. மாமல்லபுரம். சிற்றன்னவாசல், குடுமியான் மலை, நாமக்கல், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள குடைகோயில்களும், காஞ்சி நகரிலுள்ள பெருங்கோயில்களும் அவர்களுடைய, கலையையும் நாகரிகத்தையும் பறைசாற்றிய வண்ணம் இன்றும் காட்சியளிக்கின்றன. 10ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பெருஞ்சோழ (Imperial Cholas)ரின் ஆட்சி தமிழகத்தில் ஓங்கியபோது, பல்லவர்களின் பேரரசு சிதைந்து, சோழப் பேரரசோடு ஒன்றிவிட்டது. சோழரிடம் தோல்வியுற்ற பல்லவர்கள், நீலகிரி மலையில் ஓடி ஒளிந்தனரென்றும், அவர் வழி வந்தோரே இன்றுள்ள குறும்பர் என்றும் சிலர் கருதுகின்றனர். இம்முடிவு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. ஏனென்றால் பல்லவர்கள் நாகரிகமும், கலையுணர்வும் மிகுதியாகக் கொண்டவர்கள்; வட மொழியையோ, அதன் சார்பு மொழியையோ தாய்மொழியாகக் கொண்டவர்கள்; வடமொழிக் கலைகளை வளர்த்தவர்கள். ஆனால் நீலகிரிக் குறும்பர்கள் நாகரிகமும் கலையுணர்வும் அற்றவர்கள். திராவிட மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். பல்லவர்கள் பொன்னிற மேனியும், அழகிய தோற்றமும் வாய்க்கப் பெற்றவர்கள். ஆனால் குறும்பர்களோ, கறுத்த உடலும், அழகற்ற தோற்றமும் கொண்டவர்கள். பல்லவர்கள் சோழ நாட்டை விட்டு வெளியேறிய காலம் பத்தாம் நூற்றாண்டு. தோடர்களின் வருகைக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்தே குறும்பர்கள் நீலகிரி மலையில் குடியேறினர். எனவே, நீலகிரிக் குறும்பர்கள் பல்லவர்களாக இருக்க முடியாது.

ஊர்க்குறும்பரைத் தவிர மற்ற இரு இனத்தாரும் கூச்சம் கொள்ளும் இயல்பினர். ஆனால் கோழைகளல்ல. வெள்ளையரைக் கண்டால் முன்பெல்லாம் ஓடி ஒளிந்து கொள்வார்கள். குறும்பர் வாழும் சிற்றூர் 'மோட்டா' என்றும், 'கம்பை' என்றும் அழைக்கப்படுகிறது. இப்பொழுது 'குலக்கம்பை, மஞ்சக் கம்பை' என்று வழங்கும் இடங்களில் குறும்பர் வாழ்வதில்லை. ஆனால் முதலில் அவ்விடங்களிலும் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை அப்பெயர்களால் அறியலாம். ஒவ்வொரு கம்பையிலும், சுமார் பன்னிரண்டு குடிசைகள் இருக்கும். இக்குடிசைகள் மண்ணினால் கட்டப்பட்டுப் புற்களால் கூரை வேயப்பட்டவை.

தோற்றம் :

குறும்பர்கள் கருநிறமும், குள்ளமான உருவமும், ஒற்றை நாடி உடலும் பெற்று, தோற்றத்தில் இருளர்களைப்போல் விளங்குகிறார்கள். இவர்கள் தலையிலுள்ள மயிர் தடிப்பாகவும் சுருண்டும் இருக்கும்; தலையைச் சுற்றிப் புதர் போலப் பரவி முளைத்திருக்கும், பெண்கள் ஒரே ஒரு துணியை ஆடையாக அணிகின்றனர். மார்பை மூடும்படியாக அக்குளைச் சுற்றி அத்துணியை முடிந்து கொள்கின்றனர். முழந்தாள் வரையில் அத்துணி கீழே மறைத்துக்கொண்டிருக்கிறது.

மொழி ;

குறும்பர்கள் பேசும் மொழி கன்னடத்தோடு நெருங்கிய தொடர்புடையதென்றும், சிதைந்த கன்னடமே அம்மொழி என்றும் கூறுகின்றனர். ஆனால் திராவிட மொழியாராய்ச்சி வல்லுநரான கால்டுவெல் அம்மொழியைச் சிதைந்த தமிழ் என்று கூறுகிறார்.

தொழில் :

குறும்பர்கள் தோடர்களைப்போல் மேய்ச்சல்காரர்களுமல்ல; படர்களைப் போல் நிலக்கிழார்களுமல்ல, இவர்கள் கோதர்களைப் போல் ஏழைகள். பிற இனத்தார்க்குப் பணிபுரிந்தே வாழ்பவர்கள், தோடர்களுக்கு இவர்கள் அஞ்சுவதுமில்லை; மற்றவர்களைப் போல் 'குடு' கொடுப்பதுமில்லை. கோதர்களோடு சேர்ந்து மற்றையோர்க்கு இசைப்பணி புரிந்து வாழ்கின்றனர். மந்திர வித்தையில் இவர்கள் மிகவும் வல்லவர்கள். இதனாலேயே இவர்களைக் கண்டு மற்ற இனத்தார் மிகவும் அஞ்சுகின்றனர். 'படகர்' வாழும் ஒவ்வொரு சிற்றூரிலும், அவர்களுக்குத் துணைபுரிவதற்காகக் குறும்பர்களை அமர்த்திக் கொள்ளுவதுண்டு. நிலத்தை முதன் முதலாக உழும் சடங்கையும், முதல் விதையை விதைக்கும் சடங்கையும், முற்றிய பயிரை முதன் முதலாக அறுக்கும் சடங்கையும் நிகழ்த்திவைக்கப் படகர்களால் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். படகர்களின் நிலத்தில் பண்ணையாட்களாகவும் குறும்பர்கள் பணிபுரிகின்றனர், கால் நடைகளுக்கும், பயிர்களுக்கும் ஏற்படும் நோயைத் தீர்ப்பதற்குப் படகர்கள் இவர்களையே நாடவேண்டியிருக்கிறது. இப்போது குறும்பர்களிடம் படகர்கள் கொண்டிருக்கும் அச்சம் சிறிது குறைந்துவிட்டது எனலாம். பண்டைக்காலத்தில் படகர்கள் கொண்டிருந்த அச்சத்தைப் பற்றி திரு. மெட்ஸ் (Mr. metz) என்ற ஐரோப்பியர் குறிப்பிடும் போது, “ஒரு படகன் தனியாக ஒரு குறும்பனைக் காட்டிற்குள் எதிர்பாராதவிதமாகக் காண நேரிட்டால், அஞ்சி நடுங்கி அப்பொழுதே உயிர்விட்டுவிடுவான்" என்று கூறுகிறார்.

ஜேன் குறும்பர்கள் மலை இடுக்குகளில் உள்ள மலைத் தேனீயின் கூட்டை அழித்துத் தேன் எடுப்பதில் வல்லவர்கள், இதை இவர்கள் தொழிலாகவும் கொண்டிருக்கிறார்கள். ஜேனு என்றால் கன்னடத்தில் தேன் என்று பொருள். ஆகையினால் இக்குறும்பர்கள் தங்களைத் “தேனெடுக்கும் காட்டுத் தலைவர்கள்" (ஜேனு கொய்யோ ஷோலா நாயகா) என்று அழைத்துக் கொள்கிறார்கள்.

அக வாழ்க்கை :

குறும்பர் குலத்தில் ஒரு பெண் பருவமடைந்ததும், அப்பெண்ணின் மூத்த சகோதரன் புதிதாக ஒரு குடிசையை அமைப்பது வழக்கம். அதில் அப்பெண்ணைக் கொண்டுபோய் வைப்பார்கள். உறவினர்கள் நாள் தோறும் குடிசைக்குச் சென்று அப்பெண்ணைப் பார்ப்பார்கள். பருவமடைந்த பத்தாம் நாள் அப்பெண்ணைக் குளிப்பாட்டி வீட்டிற் கழைப்பார்கள். அத்தை மகளே பெரும்பாலும் மணத்திற்குரியவளாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறாள். திருமணம் பெற்றோரின் இசைவுடனேயே நடைபெறும். மணமகளின் தாயார் பெண்ணுக்குத் தாலியும், மணமகனுக்குப் புத்தாடையும் அளிப்பாள். மணமகனின் பெற்றோர் பெண்ணுக்குக் கூறைப்புடவையும், பித்தளையினால் செய்த மோதிரங்களும் வளையல்களும் அளிப்பர். மணப் பெண்ணின் தாய் தாலியைக் கையிலெடுத்து மகளின் கழுத்தில் கட்டுவாள். பிறகு எல்லாரும் மகிழ்ச்சியுடன் விருந்துண்பர். விருந்தின்போது மணமக்களுக்கு ஒரே உண்கலத்தில் உணவு பரிமாறப்படும். உணவின் ஒரு பகுதியை மணமகன் மணப் பெண்ணுக்கும் மணப்பெண் மணமகனுக்கும் ஊட்ட வேண்டும். விருந்து முடிந்ததும் மணமக்களைத் தனியறையில் விட்டுவிட்டு எல்லாரும் பிரிந்து செல்வர்.

மணவிலக்கு குறும்பர்களிடையே அனுமதிக்கப்படுகிறது. ஆணுக்கே மணவிலக்குக் கோர உரிமையுண்டு; பெண்ணுக்குக் கிடையாது. மறுமணமும், கைம்பெண் மணமும் இவர்களிடையே நடைபெறுகின்றன. இம் மணங்களில் பெண்வீட்டாரே மாப்பிள்ளை தேடவேண்டும். மறுமணத்திற்கு எந்த விதச் சடங்கும் கிடையாது. பெற்றோர் இசைவு கிடைத்தவுடன், தனிக் குடித்தனம் செய்ய வேண்டியது தான்.

இறுதிச் சடங்கு :

குறும்பர்களின் இறுதிச் சடங்குகளும் படகர்களின் சடங்குகளையே ஒத்திருக்கின்றன. இவர்களும் வீரராயப் பணத்தை இறப்பவன் வாயில் போட்டு நீர் ஊற்றுகின்றனர். தேரமைத்து அதில் பிணத்தைக் கிடத்தி இடுகாட்டிற்கு எடுத்துச்செல்லுகின்றனர். மிகவும் வயது முதிர்ந்தவர்களை எரித்துவிடுகின்றனர். மற்றவர்களை உட்கார்ந்த நிலையில் புதைத்து நடுகல் நாட்டுகின்றனர். ஏழாம் நாள் இறந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த எல்லாரும் இடுகாட்டிற்குச் செல்வர். ஒரு முதியவர் குழிபறித்து அதில் ஒரு புல்லை நடுவார். மூங்கிலினால் செய்த ஒரு கலத்தில் நீரை நிரப்பி, அதில் இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் விடுவார்கள். இவ்விரண்டு சொட்டு விளக்கெண்ணெயும் தொலைவில் விலகியிருந்தால், தீச்சகுனம் என்று கருதி, வேறு எந்தச் சடங்கும் செய்யமாட்டார்கள். ஒன்று சேர்ந்தால் நற்சகுனமாகக் கருதி, அந்நீரைக் கீழே கொட்டி விடுவார்கள். பிறகு புதுப்பானை ஒன்று வாங்கிப் 'பில்லாலா' கோயிலில் வைப்பார்கள், உறவினர்கள் யாரேனும் சமாதியைக் கடந்து செல்ல நேரிட்டால் வெற்றிலை, பாக்கு, புகையிலை முதலியவற்றை வைத்து வணங்கிவிட்டுச் செல்வர். இரண்டாண்டுகள் முடியும் வரை, மழை காலத்தில் சமாதியின் மேல் பந்தல் போடுவார்கள்!

பிற செய்திகள் :

குறும்பர்கள் கல்லாத்தா (பெண் தெய்வம்), ஐரு பில்லி, காடுபில்லாலா என்ற மூன்று தெய்வங்களை வணங்குகின்றனர். ஐருபில்லியும், காடுபில்லாலாவும் மலையாளத்திலிருந்து வயநாட்டில் குடிபுகுந்த தெய்வங்களாகக் கருதப்படுகின்றன. நீலகிரியிலுள்ள மற்ற பழங்குடி மக்களைவிட, ஜேன் குறும்பர்களும் மந்திரத்தில் வல்லவர்களாகக் கருதப்படுகின்றனர். அவர்கள் நினைத்தபோது காட்டானைகளை அழைக்கும் ஆற்றல் மிக்கவர்களென்றும், சில மர்மமான மூலிகைகளை வீசிப் பாறைகளைக்கூடப் பொடி செய்து விடுகிறார்கள் என்றும் கதை கூறப்படுகின்றன. சமூகச் சட்டங்களை அமுல் நடத்த ஒவ்வொரு ஊரிலும் ஒரு பஞ்சாயத்து உள்ளது. அப் பஞ்சாயத்தின் தலைவர் 'எசமான்' என்று அழைக்கப்படுகிறார். தோடர்களும் படகர்களும் ஒன்று சேர்ந்து குறும்பர்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுப்பதுண்டு. குறும்பர்கள் வாழும் ஊர்களில் புகுந்து, கூட்டங் கூட்டமாக அவர்களைக் கொன்றுவிடுவார்கள். இத் தகைய படுகொலைகள், கி. பி. 1824, 1835, 1875, 1882, 1900 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றிருக்கின்றன. குறும்பர்கள் சிறந்த வில்லாளிகள். கோட்டையம் மன்னருக்கும் ஆங்கிலேயருக்கும் போர் ஏற்பட்ட போது, கோட்டைய மன்னரின் சார்பிலிருந்து குறும்பர்கள் வீரப்போர் புரிந்தனர்.

வயநாட்டுச் செட்டிகள் :

நீலகிரி மலையிலுள்ள வய நாட்டு வட்டத்தில் வாழ்பவர்கள் ஆலையால், இவர்கள் வய நாட்டுச் செட்டிகள் என்று அழைக்கப்படுகிறார்கள், இவர்கள் தொழிலால் உழவர்கள். இவர்கள் மலையாள மொழி பேசுவதோடு, மலையாளத்திலுள்ள மருமக்கள் தாய முறையையும் கடைப்பிடித்து ஒழுகுகின்றனர். வய நாட்டுச் செட்டிகளின் முன்னோர்கள் கோவை மாவட்டத்திலுள்ள தாராபுரத்திலிருந்து நீலகிரி மலைமீது குடிபுகுந்த வெள்ளாளச் செட்டியரே ஆவர். எனவே இவர்கள் இனத்தால் தமிழர், வய நாட்டுச் செட்டிகளிடையே இரண்டுவிதத் திருமணங்கள் உண்டு. முதல்வகைத் திருமணத்தின்படி, பெண்ணானவள் கணவனிடம் தொடர்பு (marital relations} கொள்ளுவாள் ; ஆனால் கணவன் வீட்டுக்குச் சென்று வாழமாட்டாள். மற்றொரு வகைத் திருமணம் ‘மாலைக் கல்யாணம்' என்று சொல்லப்படுகிறது. அதன்படி மனைவி கணவனோடு வாழ அனுமதிக்கப்படுகிறாள். மருமக்கள் தாய முறையே இத் திருமண வேறுபாடுகளுக்குக் காரணம் என்று சொல்லலாம். இவர்கள் வய நாட்டுப் பீடபூமியில், இழிந்துவரும் நீரருவிகளின் நீரைப்பாய்ச்சி நெல் விளைவிக்கின்றனர். அதோடு புன்செய்த் தானியங்களையும் விளைவிக்கின்றனர். வய நாட்டுச் செட்டிகளின் சமுதாயத்தில் ஐந்து குடும்பங்கள் தலைமைபெற்ற குடும்பங்களாகக் கருதப்படுகின்றன. அக்குடும்பத்தாரின் ஆணைவழி எல்லாரும் ஒழுகுகின்றனர். இவர்கள் சிறந்த உழைப்பாளிகள் ; கட்டுப்பாட்டிற் கடங்கியவர்கள் ; அமைதியான வாழ்க்கையை உடையவர்கள் ; வேட்டையில் விருப்பமுடையவர்கள்; புலிகளை வலை போட்டுப் பிடித்து, ஈட்டியால் குத்திக் கொல்லும் வேட்டை முறையில் கைதேர்ந்தவர்கள். வயநாட்டுச் செட்டியரில் பலர் நிலக்கிழார்களாக இருந்தாலும், பெரும்பாலோர் ஏழைகள். சுல்தான் பேட்டரியிலிருக்கும் மாப்பிள்ளைகளிடம் எல்லாரும் கடன்பட்டு வாழ்கின்றனர். (மாப்பிள்ளைகளென்போர் மலையாளத்து முஸ்லீம்கள், அரேபியாவிலிருந்து மலையாளக்கடற்கரையில் குடியேறி அங்கேயே நிலைத்துவிட்டவர்கள். இவர்கள் சேர நாட்டுத் தமிழ்ப் பெண்களை மணந்து, நமக்கு மாப்பிள்ளைகளாகி விட்டனர் போலும். வய நாட்டில் பெரிய வட்டிக்கடைக்காரர்களாக இவர்கள் விளங்குகிறார்கள்). வய நாட்டுச் செட்டிகள் பெருங் குடியர்கள்.

பிற செய்திகள் :

நீலகிரியில் பனியர், இருளர் என்று வேறுசில பழங்குடியினரும் வாழ்கின்றனர். இவர்கள் எல்லாரும் மற்ற இனத்தார்க்குப் பணிபுரிந்து வருகின்றனர். குறும்பர்கள் இருளர்களைக் கண்டு மிகவும் அஞ்சுவார்கள். காரணம் இவர்களும் பெரிய மந்திரவாதிகள் என்பதே. இருளர் குலத்தைச் சேர்ந்த பெண், வெளியில் வேலைக்காகச் செல்லும்போது, பெண் புலிகளைத் தன் குழந்தைகளுக்குக் காவலாக வைத்துவிட்டுச் செல்லுவாள் என்று கூறப்படுகிறது.

மலைகளில் வாழும் இப் பழங்குடி மக்களின் நலனுக்காக, மத்திய அரசாங்கமும், சென்னை அரசாங்கமும் நிறையப் பொருட் செலவு செய்கின்றன. இவர்களின் கல்விக்காக ரூ. 10.67 இலட்சம் ஒதுக்கியுள்ளனர். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின்படி மாணவர்கள் தங்கிப் படிக்கக் கூடிய 9 பள்ளிகளும், 11 சாதாரணப் பள்ளிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில், 16 பள்ளிகளும் துவக்கப்பட்டுள்ளன. இவைகளன்றி 4 தங்கும் விடுதிகளும் நடத்தப்படுகின்றன.

மலைவாழ் மக்களில் பெரும்பாலோர் உழவுத தொழில் செய்ய நிலம் இல்லாதவர்களாக இருக்கின்றனர். ஒருசிலர் தாம் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். உழவுத் தொழில் செய்வதற்கும், உழவுக் கருவிகள் வாங்குவதற்கும் அவர்களிடம் பணவசதி கிடையாது. ஆகவே உழவு மாடுகள், உழவுக் கருவிகள், விதைகள் முதலியனவாங்குவதற்காக இவர்களுக்கு மானியங்கள் வழங்குவதற்கென்று ரூ 5.8 இலட்சம் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

சில மலைவாழ் மக்கள் கூடைமுடைதல், தச்சுவேலை முதலிய சிறு கைத்தொழில்களைச் செய்தல் ஆகியவற்றில் வல்லவர்களாக இருக்கின்றனர். இத் துறையில் அவர்களுக்கு உதவியளிப்பதற்காக ரூ 2.75 இலட்சம் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. நீலகிரிப் பீடபூமியிலுள்ள கோதகிரியில் ஒருபயிற்சி உற்பத்தி நிலையம் துவக்கவும், சில குடிசைத் தொழில்களைத் துவக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

மலைவாழ் மக்கள் நல்ல காற்றுள்ள இடங்களில் வாழ்ந்துவந்த போதிலும், நல்வாழ்வு நடத்தவில்லை. மலேரியாக் காய்ச்சலினால் இவர்கள் கடுமையாகத் தாக்கப்படுகின்றனர். இதனால் பலர் ஆண்டுதோறும் இறந்துவிடுகின்றனர். நீலகிரி மலையிலுள்ள தோடர்கள் தோல்நோயினால் பீடிக்கப்பட்டு ஆண்டுதோறும் மக்கள் தொகையில் குறைந்துவந்தனர். நீலகிரி மாவட்டப் பழங்குடி மக்களுக்காக ஒரு நடமாடும் மருத்துவமனை {mobile dispensary) இயங்கிவருகின்றது. மலைவாழ் மக்கள் இருக்கும் எல்லாப் பகுதிகளுக்கும் இம்மருத்துவமனை சென்று பணிபுரிவதன் மூலம் தோடர்களிடையே பரவிவந்த தோல்நோய் அறவே நீங்கிவிட்டது. கொயினா மருந்து எல்லாருக்கும் வழங்குவதன் மூலம் மலேரியாவும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

பழங்குடி மக்கள் தண்ணீர் நிறையக் கிடைக்கக் கூடிய மலைப்பகுதிகளில் வாழ்ந்த போதிலும், தூய்மையான குடி தண்ணீர் கிடைக்காமல் வருந்துகின்றனர். எனவே எல்லா மாவட்டங்களிலுமுள்ள மலைவாழ் மக்களுக்குக் குடி தண்ணீர் வசதிகள் செய்வதற்காக இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ 80,000 ஒதுக்கப் பட்டிருக்கின்றன.

மலைவாழ் மக்கள் சிறுகுடிசைகளில் குடியிருக்கின்றனர். அக்குடிசைகள் விலங்குகளும் தங்கமுடியாதபடி மிகவும் கேவலமான நிலையில் உள்ளன. நல்ல குடியிருப்புகள் இல்லாமல் அவர்கள் நலத்துடன் வாழ்வது எப்படி? ஆகவே வீடுகள் கட்ட ரூ 5.53 இலட்சம் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ 900 செலவிட முடிவு செய்துள்ளனர்.

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நீலகிரி, சேலம் மாவட்டங்களிலுள்ள மலைகளின்மீது சாலை வசதிகளைப் பெருக்குவதற்காக ரூ. 37,000 செலவிடப்படும். ஆடைகள் முதலிய இதர செலவினங்களுக்காக ரூ 77,000 ஒதுக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களெல்லாம் நல்ல முறையில் அமுலாக்கப்பட்டால், பழங்குடி மக்களின் வாழ்வு சிறப்படையும் என்பதில் ஐயமில்லை.

குடியேற்றம் :

முதன் முதலாகக் கி. பி. 1602 ஆம் ஆண்டில் ஒரு போர்த்துகீசியப் பாதிரியார், நீலகிரி மலையைக் காண்பதற்காக வந்தார். அவர் பெயர் ஃபெர்ரீரி (Ferreiri). நீலகிரியில் வாழும் தோடர்களோடு உரையாடியதோடு அமையாமல், அவர்கள் குடும்பங்களுக்குப் பல பரிசில்களும் வழங்கினார். மிகவும் தொன்மையான பழங்குடி மக்களான தோடர்கள் வாழும் செய்தி, அப்பொழுதுதான் சமவெளியில் வாழும் மக்களுக்குத் தெரிந்தது.

ஃபெர்ரீரிக்குப் பிறகு நீலகிரி மலையை ஆராய்வதற்கு, 200ஆண்டுகள் வரையில் யாரும் முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை. டாக்டர் புச்சானன் (Dr. Buchanan) என்பவர், இந்திய அரசியலாரின் ஆணையை மேற்கொண்டு, மைசூர் நாட்டிலும் அதற்கு அண்மையிலும் உள்ள மலைகளை, வாணிப நோக்கோடும், பயிர்த் தொழில் நோக்கோடும் ஆராய்வதற்காக வந்தார். நீலகிரி மலையையும் சுற்றிப் பார்த்தார். ஒரு நாளில் எவ்வாறு அதை ஆராயமுடியும்? நீலகிரி மலையைப் பற்றி அவர் கொடுத்த குறிப்புகள் பயனற்றவை ; மேற்போக்கானவை. டாக்டர் புச்சானன் சென்று திரும்பியபின், 12 ஆண்டுகள் கழித்து நீலகிரி மலையை விஞ்ஞான நோக்கோடு ஆராய்வதற்காக திரு. கீஸ் (Keys) என்ற ஓர் ஆராய்ச்சியாளரையும், அவருக்குத் துணையாக மக்மகான் (Macmahon) என்ற ஒருவரையும் கோவை மாவட்டத் தண்டலர் அனுப்பிவைத்தார். ஆனால் அவர்கள் அளித்த குறிப்புகள் சொந்த ஆராய்ச்சியினால் எழுந்தவைகளல்ல. பிறர் வாயிலாகக் கேட்டறிந்தவையே. எனவே அவர்களுடைய ஆராய்ச்சியும் பயனற்றதாக ஒழிந்தது.

ஆறு ஆண்டுகள் கழிந்தபின்னர், கோவை மாவட்டத்தின் தண்டலராகப் பணியாற்றியவரும், நீலகிரிமலையின் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றவருமான திருவாளர் ஜான் சல்லிவன் என்பார், ஆராய்ச்சி விருப்பும், விடா முயற்சியும் கொண்ட இருவரை நீலகிரி மலைக்கு அனுப்பினார். அவர்கள் ஆராய்ந்து வெளியிட்ட கருத்துக்கள் தண்டலரின் கருத்தை ஈர்த்தன. அவரும் நீலகிரிக்குச் சென்றார். சென்றதோடு அமையாமல், ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்து, கோடையில் தங்குவதற்குரிய குளிர்மனை யொன்றை எழுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். நீலகிரிமலையின் மீது குடியேறிய முதல் ஐரோப்பியர் இவரே.

திருவாளர் ஜான் சல்லிவன் நீலகிரி மலைக்குச் சென்ற ஆண்டு கி. பி. 1819 ஆகும். நீலகிரி மலையை உண்மையில் ஆராய்ந்து பிறருக்கு வெளியிட்டவர் இவரே எனில், அது மிகையாகாது. இப்போது உதக மண்டலம் அமைந்திருக்குமிடத்தை திரு. சல்லிவன் முதலில் கண்டதும், அவ்விடத்தின் இயற்கையழகும். தட்ப வெப்ப நிலையும் அவர் உள்ளத்தை வெகுவாகக் கவர்ந்தன. உடனே, அவ்விடம் ஒரு குறிஞ்சி நகரம் அமைப்பதற்குரிய சிறந்த தகுதிகளையெல்லாம் பெற்றிருக்கிறது என்ற செய்தியை அரசியலாருக்கு அறிவித்தார். கி. பி. 1823-ஆம் ஆண்டு தாம் தங்கியிருப்பதற்காக ஓரழகிய மனையை எழுப்பினார். அது இப்பொழுது 'கல்மனை' (Stone House) என்ற பெயரால் அழைக் ப்படுகிறது. உதக மண்டலத்திலுள்ள சந்தை வெளியினருகில், உயரமான இடத்தில் சில மாறுதல்களைப் பெற்று இன்றும் கல்மனை கண்ணைக்கவரும் தோற்றத்தோடு விளங்குகிறது.

கி. பி. 1824 ஆம் ஆண்டிலிருந்து ஐரோப்பியர்கள் பெரும் அளவில் நீலகிரி மலை மீது குடியேறத் தொடங்கினர். கோடைக்காலங்களில், சென்னை மாநில ஆளுநரும் (governor) இங்கு வந்து தங்கத் தொடங்கினார். ஆளுநர் ஆண்டுதோறும் வந்து தங்குவதற்கென்று அரசியலார் ஓரழகிய மாளிகை எழுப்பினர். அம்மாளிகை முதலில் ' 'அரசியல் மனை' (Government House) என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இப்பொழுது அதை 'நார்வுட் மனை' (Norwood House) என்று எல்லாரும் அழைக்கின்றனர். பக்கிங்காம் பிரபு (Duke of Buckingham) சென்னை மாநில ஆளுநராகப் பணியாற்றிய போது, அரசியல் மனையின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார். அம்மாளிகையைச் சுற்றி அழகான தோட்டத்தையும் அமைத்தார். மாளிகையிலும் தோட்டத்திலும் பனிபுரிவோரின் அலுவல்களை அடிக்கடி கண்காணித்தார். இவருடைய இடையறாத தலையீட்டை அப்பணியாளர்கள் பெரிய தொல்லையாகக் கூடக் கருதினர். ஓய்வு நாட்களில் எளிய உடையணிந்து சுற்றி வருவார் பிரபு. ஒருநாள் காலையில், முகச் சவரம் கூடச் செய்து கொள்ளாமல், அலங்கோலமான தோற்றத்தோடு தோட்டத்தைச் சுற்றி வந்தார். ஓர் ஐரோப்பிய வேலைக்காரன் பாத்தி அமைத்துக்கொண்டிருந்தான். பிரபு அவனருகில் சென்று, "ஏனப்பா, இப்பாத்தியை இப்படி அமைத்தால் நன்றாயிருக்கு மல்லவா? இச் செடிகளை ஏன் இப்படி நடக் கூடாது?" என்று வினவினார். அவ் வேலைக்காரன் பிரபுவை அத்தகைய தோற்றத்தில் இதற்கு முன் பார்த்தது கிடையாது. வேறு, யாரோ வழிப்போக்கர் என்று எண்ணினான். அவன் அவரை நிமிர்ந்து கூடப் பார்க்கவுமில்லை ; அவருடைய வினாக்களைச் செவியில் வாங்கிக் கொள்ளவுமில்லை. பிரபு மேலும் மேலும் வினவவே, அவன் பொறுமை யிழந்தான். உடனே தலை நிமிர்ந்து, "ஏனய்யா! உனக்கு வேறு வேலையில்லையா? உம் வழியைப் பார்த்துக்கொண்டு போம். பக்கிங்காம் பிரபு என்ற எண்ணம் போலிருக்கிறது!" என்று சினந்துரைத்தான். உடனே பிரபு தன்னை மறந்து சிரித்தார். வேலைக்காரன் அவரை உடனே யாரென்று உணர்ந்து கொண்டான். தன் செயலுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.

அரசியல் மனைக்குச் சற்று மேலே, காட்டிலாகா அதிகாரி ஒருவரால் பயன்படுத்தப்பட்ட குடிசை யொன்றுள்ளது. அரசியல் மனையில் தங்கியிருந்த ஆளுநரின் குழந்தைகள் அங்குச் சென்று விளையாடுவது வழக்கம். இப்பொழுது அது இன்ப விருந்து (Picnic) உண்ண மிகவும் ஏற்ற இடமாக விளங்குகிறது.

உதகமண்டலம்

பெயர்க் காரணம் :

உதக மண்டலம் என்று இந்நகருக்குப் பெயர் ஏற்பட்டது பற்றி ஒரு செவி வழிச் செய்தி உலவு கின்றது. 'மண்டு' என்ற சொல் தோடர் வாழும் சிற்றூரைக் குறிக்கும் என்று முன்பே குறிப்பிட்டேன். திருவாளர் சல்லிவன் கட்டிய கல்மனை அமைந்திருக்கும் இடம், முன்பு ஒரு மண்டுவாக இருந்ததாம். ஒவ்வொரு மண்டுவிலும் வழக்கமாக நான்கைந்து குடிசைகள் இருக்கும். ஆனால் இந்த மண்டுவில் ஒரே ஒரு குடிசைதான் இருந்ததாம். பார்த்கை (Parth-Kai) என்ற ஒரு வயது முதிர்ந்த தோடர் குலச் செல்வன் அக் குடிசையில் தன் குடும்பத்தாரோடு வாழ்ந்து வந்தான், செல்வர்களாக இருக்கும் தோடர் வீட்டின் எதிரே சிறிது தொலைவில் ஒரு கல் நடப்பட்டிருக்கும். அதன்மேல் தங்கள் கடவுளுக்கு உணவு படைப்பது அவர்கள் வழக்கம்.

திருவாளர் சல்லிவன் முதன் முதலாக நீலகிரி மலைக்கு வந்தபொழுது, பார்த்கையைக் கண்டு பேசினார். பார்த்கை கல் நாட்டப்பட்டிருந்த அவ்விடத்தைக் காட்டி, “ஜெல்லோகோ எ மண்டு" என்று கூறினானாம். “கல் நாட்டப்படிருக்கும் இச் சிற்றூரை நீ வைத்துக் கொள்” என்பது அத்தொடரின் பொருள். 'ஜெல் லோகோ' என்ற தொடர் மொழிச் சொல், தனியாக நிற்கும் ஒரு கல்லையோ, அல்லது கல் நாட்டப்பட்ட சிற்றூரையோ குறிப்பிடும். அச் சொல்லின் தமிழ் மொழி பெயர்ப்பு, ஒற்றைக்கல் மண்டு என்பதாகும். ஒற்றைக்கல் மண்டு என்ற பெயர் ஒத்தைக்கல் மண்டு என மாறி, இப்பொழுது 'உடகமண்ட்' (Ootacamund) என்று வழங்குவதாகக் கூறுகின்றனர்.

வேறு சிலர் இப்பெயரைப் படகர்களோடு தொடர்பு படுத்துகின்றனர், படகர், வடக்கிலுள்ள மைசூர் நாட்டிலிருந்து வந்ததால் வடகர் என்றும் அழைக்கப்பட்டனர் என்பதை முன்பே குறிப்பிட்டேன், வடகர் வந்து குடியேறிய அவ்விடம் • வடகமண்டு' என்று தோடர்களால் அழைக்கப்பட்டதாம், பிறகு அப்பெயர் ‘வட்டயாக மண்டு,' ' 'வட்டச மண்டு' எனப் பலவிதமாக மாறி, இப்பொழுது உடகமண்ட் என்று வழங்குவதாகவும் கூறுகின்றனர். வேறு சிலர் மற்றொரு காரணமும் கூறுகின்றனர். இக்காரணம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் உள்ளது. 'உதகமண்டலம்' என்பதே ஆதியிலிருந்து இவ்வூருக்கு வழங்கும் பெயர் என்பது அக் கொள்கை, உதகமண்டலம் என்றால் படகர் மொழியில் 'எப்போதும் மழை பெய்து கொண்டிருக்குமிடம்' என்பது பொருள்.

வழி :

உதகமண்டலத்தை இரு வழிகளில் வந்தடையலாம். மைசூரிலிருந்து மலைவழிப் பாதையில் 100 கல் உந்து வண்டியின் மூலம் சென்று உதக மண்டலத்தை அடையலாம். கோவையிலிருந்து மேட்டுப் பாளையம் வழியாகவும் சென்றடையலாம். மைசூரிலிருந்து வரும் வழி கன்னடக் காட்டில் (Kanara forest) புகுந்து வருகிறது. இவ்வழி அழகிய காட்சிகளைக் கொண்டது; உள்ளத்திற்கு இன்பத்தைப் பயப்பது. கோவையிலிருந்து உதக மண்டலம் செல்ல உந்து வண்டிகளும் நிறைய உள்ளன. ஆனால் புகைவண்டியில் ஏறி, மேட்டுப் பாளையம் வழியாகச் சென்றால் நீலகிரியின் மலைவளத்தை நல்ல முறையில் கண்டு இன்புறலாம். புகைவண்டிச் செலவு நம் பொறுமையை அளவுக்கு மீறிச் சோதித்துவிடும். புகை வண்டி மிகவும் மெதுவாகச் செல்லும். மேலும் இடையிலுள்ள புகை வண்டி நிலையங்களில் அடிக்கடி நின்று விடும். மற்ற புகை வண்டிகளுக்கும் நீலகிரி மலைமேல் செல்லும் புகை வண்டிகளுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. இவ்வண்டிகளில் இயங்கி (engine) முன்னால் பொருத்தப்படுவதில்லை, பின்னிருந்து வண்டியைத் தள்ளுகிறது. இவ்வண்டியிலுள்ள முதல் பெட்டி திறந்த பக்கங்களையுடைய தாக இருக்கும். ஆகையினால் இப்பெட்டியில் இடம் பிடிக்க எல்லாப் பிரயாணிகளும் போட்டியிடுவர். ஏனென்றால் அப்பெட்டியில் உட்கார்ந்திருப்போர் மலைச்சரிவுகளில் உள்ள இயற்கைக் காட்சிகளை நன்கு. பார்த்து மகிழ முடியும்.

வளர்ச்சி :

அரசியல் மனை (Government House) கட்டப்பட்டதும், சுதேச மன்னர்களும் செல்வந்தர்களும் உதகமண்டலத்தில் பெரிய பெரிய மாளிகைகளை எழுப்பத் தொடங்கினர். இப்போது ஊட்டியில் ஏறக்குறைய 5000 வீடுகள் உள்ளன. இவ் வீடுகளெல்லாம் வண்ணம் பூசப்பட்டுப் பேரழகுடன் விளங்குகின்றன.

இந்நகரின் மக்கள் தொகை பெருகிக்கொண்டே இருப்பதாலும், புதிய புதிய இல்லங்கள் தோன்றிக் கொண்டே இருப்பதாலும் நகரின் வசதிகளையும் பெருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கி. பி. 1826-ஆம் ஆண்டு , முதல் அஞ்சல் மனை {Post-office) தோற்று விக்கப்பட்டது. கி. பி. 1829-ஆம் ஆண்டு முதல் மருத்துவமனை கட்டப்பட்டது. கி. பி. 1863-ஆம் ஆண்டு நகராட்சி மன்றம் ஏற்படுத்தப்பட்டது. தண்டலர் அலுவலகம் கி. பி. 1866-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1878-ஆம் ஆண்டு 40,000 நூல்களடங்கிய ஒரு நூலகம் ஏற்படுத்தப்பட்டது. தென்னிந்தியாவிலுள்ள மிகவும் சிறந்த நூலகங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. செவ்வாய்க்கிழமை தோறும் அங்குச் சந்தை கூடுகிறது. உதகமண்டலத்தில் வாழும் ஆண்களும் பெண்களும் அங்குக் கூடி, ஒரு வாரத்திற்கு வேண்டிய பொருள்களை வாங்கிச் செல்லும் காட்சி உண்மையிலேயே உள்ளக் கிளர்ச்சியூட்டும் தன்மையது. 'சார்மிங் கிராஸ்' (Charming Cross) என்பது உதகமண்டலத்தின் நடுவிடம். அம்முனையில் நான்கு புறமும் பரவிச் சொரியும் செயற்கை நீர் ஊற்று (Flora Fountain) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கார்காலத்தில் அவ்வூற்று களிநடம் புரியும். அவ்விடத்தைச் சுற்றி அழகிய கடைகள் வரிசையாக உள்ளன.

மக்கள் தொகை பெருகியதும் பல கழகங்கள் தோன்றத் தொடங்கின. கி. பி. 1841-ஆம் ஆண்டு ஊட்டிக் கழகம் (Ooty Club) தோன்றியது. அதன் உறுப்பினர்களெல்லாம் வெள்ளையரே. தோட்ட முதலாளிகளுக்காகவே இக் கழகம் அமைக்கப்பட்டது. கி. பி. 1869-ஆம் ஆண்டு ஜிம்கானா கழகம் (Gymkhana Club) தோன்றியது. அது இப்பொழுது ஊட்டி குழிப்பந்தாண்டக் கழகம் (Golf Club) என்ற பெயர் கொண்டு விளங்குகிறது. ஊட்டியிலுள்ள வேட்டையர் கழகம் (Hunt Club) இப்பொழுது சிறந்த முறையில் உள்ளது. இவைகளேயன்றி வேறு சில கழகங்களும் உள்ளன. அவற்றில் குறிப்பிடத் தக்கது லாலி நிறுவனம் (Lawly Institute) என்பதாகும், கோடைக் காலத்தில் மட்டைப் பந்தாட்டப் (Tennis Championship) போட்டியை இது சிறந்த முறையில் நடத்தி வைக்கிறது.

கோடையில் இந்திய நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் பெருந்திரளாக இங்கு வந்து கூடுகின்றனர். எனவே அவர்களுடைய வசதிக்காகப் பல சிறந்த உணவு விடுதிகளும், தங்கல் மனைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோடையில் தங்குவதற்கென்று வீடுகள் குடிக் கூலிக்கு விடப்படுகின்றன.

சிறப்பு :

நீலகிரி மலையின் பரப்பு 900 சதுர மைல் ஆகும். இதன்மீது அமைந்துள்ள குறிஞ்சி நகரமான உதகமண்டலம் இயற்கையழகில் ஈடு இணையற்றது. சர் சி. பி. இராமசாமி ஐயர் ஒரு சமயம், “உலகிலேயே மிகவும் அழகிய குறிஞ்சி நகரம் உதகமண்டலம்" என்று பாராட்டிப் பேசினார். 'குறிஞ்சி நகரங்களின் அரசி' (Queen of Hill stations) என்ற சிறப்புப் பெயருக்கு உதகமண்டலம் தகுதியுடையது. எக்காலத்தும் இது தன் சிறப்புக் குன்றாமல் விளங்குகிறது. ஏப்ரல் தொடங்கி ஜூன் திங்கள் முடியும் வரை இதைப்போல் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் தாண்டவமாடும் இடம் எதையும் இந்திய நாட்டில் காண முடியாது. இந்திய நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், இன்பத்தை நாடுவோர் இங்கு வந்து குவிகின்றனர். விருந்துண்டும், வேட்டையாடியும், ஆடல் நிகழ்த்தியும், குதிரைப் பந்தயத்தில் பங்கு கொண்டும், குழிப்பந்து மட்டைப் பந்தாட்டப் போட்டிகளைக் கண்டு கழித்தும், மீன் பிடித்தும், மலைகளில் சுற்றித் திரிந்தும், ஏரியில் தோணியூர்ந்தும், பசும்புற்றரையில் படுத்துப் புரண்டும், பழங்குடி மக்களைக் கண்டு களித்தும், குறிஞ்சியழகில் உள்ளத்தைப் பறிகொடுத்தும் பொழுதை இன்பமாகக் கழிக்கின்றனர். உதகமண்டலத்தின் தட்ப வெப்பநிலை இளைஞர், முதியோர், நோய்வாய்ப்பட்டோர் ஆகிய எல்லாருக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது. இந்நகரில் கார் காலம் என்று தனியாக ஒரு காலம் கிடையாது. ஆண்டு முழுவதும் சிறு தூறல்களாக மழை தூறிக்கொண்டே இருக்கும். ஆண்டுக்கு 30 முதல் 40 அங்குலம் வரை மழை பெய்கிறது. இந்நகரின் வெப்பம் 60°-க்கு மேல் உயர்வதுமில்லை. 50°-க்குக் கீழ்க் குறைவதும் இல்லை .

சிகரங்கள் :

முதலிலேயே சிகரங்களைப் பற்றிப் பொதுவாகக் குறிப்பிட்டேன். அவைகளில் முக்கியமானவற்றையும் அழகியவற்றையும் பற்றிச் சிறிது குறிப்பிடுவோம். உதகமண்டலத்தைச் சுற்றித் தொட்டபெட்டா, எல்க், பனிவீழ்சிகரம், ஃபெர்ன், கெய்ரன் என்ற அழகிய சிகரங்கள் வானளாவி நிற்கின்றன. தொட்டபெட்டா : தொட்டபெட்டா என்றால் பெருமலை என்பது பொருள். இதனுடைய உயரம் 8,640 அடி, நீலகிரிப் பீடபூமியில் அமைந்துள்ள மிக உயர்ந்த சிகரம் இது தான், இச்சிகரத்தை எளிதில் அடையலாம். மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை உந்துவண்டியில் கடந்துவிடலாம். மீதிப்பகுதியை நடந்தே ஏறிச் செல்ல வேண்டும். உதகமண்டலத்தின் நடுவிலுள்ள சார்மிங் கிராஸிலிருந்து, தார் போடப்பட்ட பாதை கோதகிரிக்குச் செல்லுகிறது. அப்பாதையில் நான்கு கல் தொலைவு சென்று பிறகு 13-க்கல் மலைமீது ஏற வேண்டும். முதல் நான்கு கல் தூரமுள்ள பாதை வளைந்து வளைந்து செல்லுகிறது. வண்டியை ஓட்டிச் செல்லுவோர் மிகவும் எச்சரிக்கையோடு செல்ல வேண்டும்.

தொட்டபெட்டா உச்சியில் வானாய்வுக்கூடமொன்று கி. பி. 1846-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆனால் கி. பி. 1859-இல் உதகமண்டலத்திற்கு ஒன்பது கல் தொலைவில் உள்ள இராணுவத்தாரின் தங்கல் இடமான வெல்லிங்டனுக்கு இது மாற்றப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து மறுபடியும் தொட்டபெட்டாவிற்கே மாற்றப்பட்டது. ஆனால் இது இப்பொழுது பயன்படும் நிலையில் இல்லை. தொட்டபெட்டாவின் உச்சியிலிருந்து காண்போர் கண்களுக்கு உதகமண்டலத்தின் முழுக் காட்சியும் பேரழகோடு தென்படும். அதோடு கோவை மாவட்டத்திலுள்ள எல்லா மலைகளும் தென்படும்.

பனிவீழ் சிகரம் :

தொட்டபெட்டாவிற்கு அடுத்தாற்போல் மிகவும் உயரிய சிகரம் பனிவீழ்சிகரம் (Snow down} என்பதாகும். இதன் உயரம் 8,299 அடி. தொட்டபெட்டாவைப்போல் எளிதாக இதன்மீது ஏற முடியாது. ஏறுவதற்குத் தொல்லையாக இருந்தாலும், உயர்ந்த மரங்களடர்ந்த வழிகளூடே ஏறிச் செல்லும்போது உள்ளத்திற்கு இன்பமாக இருக்கும். ஸ்பென்சர் மலை மீது அமைந்துள்ள செயிண்ட் ஸ்டீஃபன் சர்ச்சிற்குப் பின்னால் இருக்கும் மெர்லிமண்ட் பாதையில் இரண்டு கல் தொலைவு சென்றால், இவ்வுச்சியை அடையலாம். இவ்வழியும் மரங்களடர்ந்தது.

எல்க் சிகரம் :

எல்க் சிகரம் 8000 அடிகளுக்கு மேல் உயரமுள்ளது. இதன்மீது பல கோயில்கள் உள்ளன. இவ்வுச்சியின் பக்கத்தில் ஓர் அழகிய கோயில் குடையப்பட்டுள்ளது. அங்குள்ள பூசாரி மாலைதோறும் ஒரு விளக்கேற்றி வைக்கிறார். ஊட்டியின் எப்பகுதியிலிருந்து பார்த்தாலும் அவ்விளக்கு நன்றாகத் தெரியும்.

கெய்ரன் சிகரம் :

எல்லாவற்றையும்விட மிகவும் அழகியது கெய்ரன் சிகரம் (Cairn Hill). மற்ற எல்லாச் சிகரங்களையும் விட இது மரங்களடர்ந்தது. நல்ல வேளையாக, மற்ற சிகரங்களில் மரங்கள் அழிக்கப்பட்டாற்போல் இதில் அழிக்கப்படவில்லை . இதன் உயரம் 6,583 அடி. பச்சைக் கம்பளம் பரப்பினாற் போன்ற புல்வெளிகள் இச்சிகரத்தில் எங்கும் பரவிக் கிடக்கின்றன. இங்குள்ள மரங்களின் அடியில் மேடையிட்டாற்போல் பாசி படர்ந்துள்ளது. அதன்மீது இலக்கிய உணர்வுள்ள யாரேனும் தனிமையில் அமர்ந்திருந்தார்களானால், ஜோகன் ஸ்ட்ராஸ் (Johan Strause) என்ற மேலை நாட்டுக் கவிஞனின் உள்ளத்தில், அமரத்வம் பெற்ற இசைப் பாடல் உருவாகுமாறு தூண்டிய, வியன்னாவின் இளமரக்காடுகள் நினைவில் தோன்றும், கெய்ரன் சிகரம் உதகையிலிருந்து சற்றுத்தொலைவில் உள்ளது. நகரத்திலிருந்து புறப்பட்டு, ஏரியைச் சுற்றிச் செல்லும் புகைவண்டிப் பாதையோரமாகச் சென்றோமானால், தூண்கள் போல் உயர்ந்து நிற்கும் பாறைகளைக் காணலாம். அவ்விடத்திலிருந்து ஒரு கல் தொலைவு மிகவும் மோசமான பாதை அமைந்துள்ளது, அதைக் கடந்துவிட்டால், கெய்ரன் மலையின் இளமரக் காட்டிற்குள் நுழையலாம்.

மூக்கறுத்தி சிகரம் :

மூக்கறுத்தி சிகரம் (Mukerti Peak) தோடர்களால் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இச்சிகரத்திற்கு அப்பால் சுவர்க்கத்தின் வாயில் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். இச் சிகரத்தோடு தொடர்புடைய இரண்டு கதைகள் தோடர்களிடையே வழங்குகின்றன. தோடர்களிடையே பெண் குழந்தைகளைக் கொலை செய்யும் பழக்கம் இருந்ததாகக் குறிப்பிட்டோம். கொலை செய்ய வேண்டிய குழந்தைகளை இங்குக் கொணர்ந்து எறிந்து கொன்று விடுவதுண்டாம், ஆகையினால் எந்தப் பெண்ணையும் தோடர்கள் இச்சிகரத்தின் பக்கமாகச் செல்ல விடுவதில்லை. இக் கட்டுப்பாட்டை மீறி ஒரு பெண் இங்கு வந்துவிட்டாளாம். இதையறிந்த தோடர்கள், அப் பெண்ணின் மூக்கை அறுத்துத் தண்டித்தார்களாம். தண்டனை பெற்ற அப் பெண் எப்படியோ இம்மலைச் சிகரத்தை அடைந்து மறைந்துவிட்டடாளாம். இன்றுகூட அப் பெண்ணை ஒரு சிறு தெய்வமாகத் தோடர்கள் வணங்கு கின்றனர்.

இச் சிகரத்தோடு தொடர்புடைய மற்றொரு கதை இராவணனைப் பற்றியதாகும். தோடர்கள் இராவணனுக்கு மரியாதை காட்டாமல், இராமனிடத்தில் அதிக அன்பு செலுத்தினார்களாம். அதனால் சினங்கொண்ட இலங்கை மன்னன் ஒரு கை மண்ணை எடுத்துக் காற்றில் வீசினானாம். அம்மண் கொடிய கிருமிகளாக மாறித் தோடர்களுடைய கால்நடைகளையும், வீடுகளையும் பீடித்துத் துன்புறுத்தியதோடு, அவர்களையும் நோய் கொள்ளுமாறு செய்து கொடுமை புரிந்ததாம். இன்றுகூட அக்கிருமிகளால் துன்புறுவதாகத் தோடர்கள் நம்புகிறார்கள். இதை உணர்ந்த இராமன் இச்செயலுக்குப் பழிவாங்க எண்ணி இராவணன் தங்கையான சூர்ப்பநகையின் மூக்கை அறுத்து, எல்லாருக்கும் தெரியும்படி இச் சிகரத்தில் பதித்து வைத்தானாம். இக் காரணங்களாலேயே இச்சிகரம் இப் பெயர் பெற்றதாகத் தோடர்கள் கூறுகின்றனர்.

குன்று வெளிகள் :

உதகமண்டலத்தைச் சுற்றிப் பரந்த குன்று வெளிகள் (downs) அமைந்துள்ளன. வேறு எந்தக் குறிஞ்சி நகரத்திலும் இங்கிருப்பன போன்று பரந்த வெளிகளைக் காண முடியாது. உந்துவண்டிகளில் ஏறி உல்லாசமாகச் சுற்றித் திரிய விரும்புவோர், இணையற்ற இன்பம் காண இவ்வெளிகள் பெருந்துணை புரிகின்றன. உதகமண்டலத்தைச் சுற்றியுள்ள பாதைகள் அமைப்பிலும், அழகிலும் ஈடற்றவை, வேறெங்கும் இத்தகைய மலைவழிப் பாதைகளைக் காண முடியாது. மகாபலேசுவரம் (Mahabaleshwar), மாதெரன் (Matheran) ஆகிய நகரங்களில் இருப்பதுபோல், உதகையைச் சுற்றி உயர்ந்த மலைகளும், குறுகிய பள்ளத்தாக்குகளும் கிடையா. மைசூரிலிருந்து கூடலூர் வழியாக உதகை செல்லும் பாதை. அழகிய வெளிகளிடையே புகுந்து செல்லுகிறது. இவ்வழிச் செல்வோர் எய்தும் இன்பம் எடுத்தியம்பற்பாலதோ?

இவ்வழி தாழ்ந்த குன்றுகளில் ஏறி இறங்கிச் செல்லுகிறது. அங்குப் பரவிக் காணப்படும் பசும் புல்வெளிகள், இங்கிலாந்து நாட்டில் மிக்க அழகோடு விளங்கும், யார்க்ஷைர் புல்வெளிகளை (Yorkshire Moors) நினைவூட்டுகின்றன. இவ்விடம் குழிப் பந்தாட்டத்திற்கு மிகவும் ஏற்ற இடமாக விளங்குகிறது. இங்குள்ள குழிப்பந்தாட்ட மைதானம் (Golf Course) இந்திய நாட்டிலேயே மிகவும் அழகியது. இவ்வெளிகளில் அமைந்துள்ள இளமரக்காடுகளில் செம்புலி (leopards) களும், சிறுத்தை (Panthers) களும், வரையாடுகளும் நிறைய உள்ளன. இவைகளை வேட்டையாடுவது, உதகை வாழ் மக்களுக்குச் சிறந்த பொழுது போக்காக உள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் திங்களின்போது இவ்விடங்களில் எங்குப் பார்த்தாலும் போட்டிப் பந்தயங்கள் நடைபெறும். அடுத்தடுத்து வரும் குன்றுகளிடையே, வளைந்து வளைந்து செல்லும் பாதைகளில் கவலையின்றி நடந்து திரிவதும் ஈடற்ற இன்பமே.

திரு. வென்லாக் பிரபு (Lord Wenlock) சென்னை மாநில ஆளுநராகப் பணியாற்றிய போது, இவ்வெளிகளின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் பாடுபட்டார். ஆகையினாலேயே இவ்வெளிகள் அவருடைய பெயரை முன்னே கொண்டு 'வென்லாக் வெளிகள்' (Wenlock Downs) என்று வழங்குகின்றன. உதகமண்டலத்திலுள்ள எல்லா முக்கிய உணவு விடுதிகளிலிருந்தும் இவ் வெளிகளை எளிதில் சென்றடையலாம். உணவு விடுதிகளிலிருந்து புறப்பட்டு 1 அல்லது 1½க்கல், வெஸ்ட்பரி பாதையில் செல்ல வேண்டும். உதகையிலிருந்து கிளம்புவோர் பாதையை அடைந்து ஃபிங்கர் போஸ்ட் (Finger Post) டை நோக்கிச் சென்றால் இவ்வெளிகளைச் சீக்கிரம் அடையலாம், கை விரல்களை விரித்து வைத்தாற்போல் ஐந்து பாதைகள் பிரிந்து செல்வதால் இவ்விடம் ஃபிங்கர் போஸ்ட் என்று பெயர் பெற்றது.

ஏரி :

உதக மண்டலத்தில் அமைந்துள்ள ஏரி சிறியது. இது செயற்கை ஏரி என்பதை எல்லாரும் அறிவர். ஆனால் இதைக் காண்போர் இயற்கையாக அமைந்துள்ள எழில் மிக்க ஏரி என்றே எண்ணுவர். இதன் சுற்றளவு இரண்டு கல் இருக்கும். முதன் முதலாக இவ்வேரியின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டியவர் திருவாளர் சல்லிவன் துரை. இவ்வேரியின் நீரைப் பயிர்த் தொழிலுக்குப் பயன்படுத்த முதலில் எல்லாரும் எண்ணினர். சிறிது சீர்திருத்தப்பட்டதும் இது கண் கவரும் வனப்போடு காட்சியளித்ததால், அழகுக்காகவே இதைப் பயன் படுத்தப் பின்னர் முடிவு செய்தனர். கி. பி. 1823-ஆம் ஆண்டிலிருந்து, இது பல மாறுதல்களுக்குட்பட்டுப் பல வழிகளிலும் முன்னேறியது. கி. பி. 1896-லிருந்து 1899 வரையில் ரூ.20,000 இதற்குச் செலவிடப்பட்டது. இப்போது இவ்வேரியைச் சுற்றி மரங்களடர்ந்த காடு ஒன்றுள்ளது. அமைதியான அழகு அவ்விடத்தில் குடி கொண்டிருக்கிறது. உதகை மக்கள் இவ்வேரியில் தோணியூர்ந்தும், மீன் பிடித்தும் இன்பமாகப் பொழுதைக் கழிக்கின்றனர். ஏரியின் எதிர்க் கரையில் பெர்ன் மலை தொடங்குகிறது. ஏரியைச் சுற்றி நடந்து சென்றால், நம் உள்ளத்திற்கும் உடலுக்கும் ஒரு விதப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. ஏரியின் கரையோரமாகக் கடைவீதியை நோக்கி நடந்து சென்றால் ஹோபர்ட் பூங்கா (Hobert Park) வின் எல்லையை அடையலாம். அவ்விடத்தில் குதிரைப் பந்தய மைதானமும் பார்வையாளர் இருப்பிடமும் (Pevilian) அமைந்துள்ளன. குதிரைப் பந்தய வீரர்களையும், பொழுது போக்கிற்காகக் குதிரை மீதும், கோவேறு கழுதை மீதும் சவாரி செய்வோரையும் அங்குக் காணலாம். அக்காட்சி மிகவும் வேடிக்கையானதாக இருக்கும்.

இன்பச் செலவிற்குரிய இடங்கள் (Excursions)

அவலஞ்சி :

உதகமண்டலத்தைச் சுற்றி இன்பமாகப் பொழுது போக்கற்குரிய பல இடங்களும், கண்டு மகிழ்தற்குரிய பல இடங்களும் உள்ளன. கெய்ரன் மலையில் உள்ள காடுகளின் ஒருபகுதி பனிப்படலத்தில் மறைந்து தோன்றும், உதக மண்டலத்திலிருந்து 15-ஆவது கல்லில் இக்காட்சி அமைந்துள்ளது. இவ்விடத்திற்கு 'அவலஞ்சி' என்று பெயர். அவலஞ்சி (Avalanche) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, 'இழிந்து வரும் பனிக்கட்டி' என்று பெயர். கி. பி. 1823-ஆம் ஆண்டு, பனிவெள்ளம் இவ்விடத்தில் ஓடிவந்த காரணத் தால் இது இப்பெயர் கொண்டு விளங்குகிறது.

உதகமண்டலத்திலிருந்து இவ்விடத்திற்குப் செல்லும் வழி மிகவும் மோசமானது. ஆனால் இப்பாதையின் வளைவுகளில் செறிந்து தோன்றும் இயற்கை வளம், காண்போர் உள்ளத்தை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தும். இவ்வழியில் பல சிற்றூர்கள் அமைந்துள்ளன. அச்சிற்றூர்களைக் கடந்ததும் வழி இரண்டாகப் பிரிந்து செல்கிறது. ஒருவழி எமரால்டு பள்ளத்தாக்கி (Emerald Valley)ற்குச் செல்லுகிறது. அப்பள்ளத்தாக்கில் இராணுவத்தினர் தங்கி, மாதிரிப் போர் (Mock battle) பயிலுகின்றனர். மற்றோர் வழியில் ஐந்து கல் சென்றால் அவலஞ்சியை அடையலாம். உதகமண்டலத்திலிருந்து 14 ஆவது கல்லில் அவலஞ்சி ஆறு ஓடுகிறது. இயற்கைவளம் செறிந்த அச்சரிவில், பளிங்கு போல் சுழித்து ஓடும் அவ்வாற்றின் அழகைச் சொற்களால் கூறமுடியாது. அவ்விடத்தில் அமைந்திருக்கும் பிரயாணிகளின் தங்கல் மனை (Travellers' Bangalow)யிலிருந்து ஒரு சிறிய வழி மேலே செல்லுகிறது. அவ்வழியாக மேலேறி நோக்கினால் ஒரே அளவான உயரத்தோடு 8300 அடி நிமிர்ந்து நிற்கும் சிகரங்களைக் காணலாம்.

மீன் பண்ணை :

பிரயாணிகள் தங்கல் மனையிலிருந்து ஒருகல் தொலைவில் ஒரு பெரிய மீன் பண்ணை (Trout Hatchery) அமைந்துள்ளது. இத்தகைய பண்ணை நீலகிரியின் மீது எங்கும் கிடையாது. 'இங்கு வளர்க்கப்படும்படியான மீனின் பெயர் 'டிரவுட்' எனப்படும். இது 'சால் மன்' (Salmon) என்ற மீனினத்தைச் சார்ந்தது. ஆனால், அதைவிட உருவத்தில் சிறியது. இப்பண்ணையில் ஐந்து பெரிய குளங்களில் ஓராண்டிலிருந்து மூன்றாண்டுவரை வயதுடைய மீன்கள் வளர்க்கப்படுகின்றன. நவம்பர் முதல் ஃபெப்ருவரி வரையிலும் உள்ள காலமே இம்மீனின் வளர்ச்சிக்கு ஏற்ற பருவமாகும். 10,000 மீன்கள் இப்பண்ணையில் வளர்க்கப்படுகின்றன. இம்மீனின் முட்டைகள் 29 நாட்களில் கண் விழிக்கின்றன,

பிற இடங்கள் :

இப்பண்ணைக் கருகிலுள்ள காடு உள் நுழைந்து காண்பதற்கு ஏற்றது. அழகிய ஒரு சிறுபாதை காட்டின் உட்பகுதியில் செல்லுகிறது. அப்பாதையில் 9 கல் தொலைவு சென்றால் காட்டிலாகாத் தலைவரின் மாளிகை உள்ளது. அவ்விடத்திற்குப் பண்டகபல் (Bantakapal) என்று பெயர்.

உதகமண்டலத்திலிருந்து அவலஞ்சி செல்லும் வழியில் அமைந்துள்ள மூக்கறுத்தி, பைக்காரா சிகரங்கள் குறிப்பிடத்தக்கவை. உதகை சென்றுவிட்டு இவ்விரண்டையும் காணாமல் யாரும் வரமாட்டார்கள். இச்சிகரங்கள் அமைந்துள்ள இடங்களில் பல ஆறுகளும், அணைகளும், ஏரிகளும் பேரழகுடன் காட்சி அளிக்கின்றன.

உதகமண்டலத்திலிருந்து பதினோராவது கல்லில் அமைந்துள்ள பைக்காரா ஆற்றின் பாலத்தைக் கடந்து சென்றோமானால், ஓர் அணை கட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம். இவ்வணை பைக்காரா அணைக்கட்டின் தொடர்ச்சி. இதன் உயரம் 150 அடி.

இவ்வழியிலேயே மேலும் ஐந்து கல்சென்று இடது புறமாகத் திரும்பினால் ஓர் அழகிய பாதை செல்லுகிறது. அவ்வழியின் ஒவ்வொரு திருப்பத்திலும் சலசலத்து ஓடும் நீரருவியையோ, பசுங் குன்றையே. அல்லது சிறு சிறு குடிசைகளையோ காணலாம். க்கப் காடுகளில் நுழைந்தால் தோடரின் வாழ்விடங்களைக் காணலாம்.

மூக்கறுத்தியில் அமைந்திருக்கும் தங்கல் மாளிகை (Dak Bangalow) அழகியதாகவும், வசதியான தாகவும் அமைந்துள்ளது. இது அணைக் கட்டிலிருந்து ஒருகல் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வணை கி. பி. 1835இல் இருந்து கி. பி. 1938 வரை கட்டப்பட்டது. இது உருவத்தால் சிறியது. ஆனால், இதில் இரண்டு எதிரொலிகள் தோன்றுகின்றன. முதல் எதிரொலி தொடங்கி அரை நிமிடம் கழித்து இரண்டாவது எதிரொலி தோன்றுகிறது. இங்குள்ள ஏரி பார்ப்பதற்குச் சிறிதாகத் தோன்றும். ஆனால் இது மூக்கறுத்தி மலையைச் சுற்றிப் பரவியுள்ளது. இவ்வேரியின் நான்கு பக்கங்களிலும் நிறையப்பேர் மீன்பிடித்துப் பொழுதைக் கழிக்கின்றனர். இவ்வேரியில் தோணியூர்ந்து சென்றே மூக்கறுத்தியின் அடிவாரத்தை அடைய முடியும். அடி வாரத்திலிருந்து அச்சிகரம் மிகவும் செங்குத்தாக உயர்ந்து செல்லுகிறது. உதகமண்டலத்திலிருந்து பார்ப்போருக்கு அவ்வுச்சி தெளிவாகத் தெரியும். இவ் வேரியைச் சுற்றியிருக்கும் கரடுமுரடான பாதை 12 கல் நீளமுடையது. இப்பாதையில் நடந்து ஏரியை வலம் வருதல் பெருவெற்றிக்குரிய செயலாகும்.

கவர்னர்ஸ் ஷோலா {Governor's Shola) என்ற இளமரக்காடு குறிப்பிடத்தக்க அழகுவாய்ந்தது. அக்காட்டின் இடையே நிழலடர்ந்த மரங்களினடியில் புகுந்து செல்லும் 5 கல் நீளமுள்ள பாதை, இங்கு வாழ்ந்த மாநில ஆளுநர்களுக்கு மிகவும் பிடித்தமானது. கன்னமரா பாதை என்ற மற்றொரு வழி 10 கல் நீளமுள்ளது. குடை மரங்க (Umbrella trees) ளிடையே இப்பாதை புகுந்து செல்லும் காட்சி பேரழகு ஆப்பது. இப்பாதையிலிருந்து ஒருகல் தொலைவு சென்றால் இன்ப விருந்து (Picnic) உண்பதற்கான அழகிய இடம் ஒன்றுள்ளது. அவ்விடத்திலிருந்து மேகமூட்டமற்ற நாளில் நோக்கினால், மைசூர் நகரம் நன்றாகத் தெரியும். கன்னமராப் பாதையின் முடிவில் செங்குத்தான சீகூர் மலை (Sigur ghat) தொடங்குகிறது. அத்தொடர் 3000 அடிக்குக் கீழ் அடர்ந்த காடுகளிடையே அமைந்திருக்கும் கால்கட்டி நீர் வீழ்ச்சி (Kalhatty falls) வரை செல்லுகிறது.

அரசியலார் பயிர்த் தோட்டம் :

உதகமண்டலத்தில் அமைந்துள்ள அரசாங்கப் பயிர்த் தோட்டம் (The Botanical Gardens), இந் நகர வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கி. பி. 1850 ஆம் ஆண்டு திருவாளர் மக்கல்வர் (Mr. Mclver} என்பவரால் இப்பயிர்த் தோட்டம் நிறுவப்பட்டது. முதலில் இது 'கியூ தோட்டம்' (Kew Gardens) என்ற பெயர் கொண்டு விளங்கியது. கி.பி. 1950-ஆம் ஆண்டு இத் தோட்டத்தின் நூற்றாண்டு விழா மிகவும் சிறந்த முறையில் கொண்டாடப்பட்டது. முதன் முதலாக இது காய்கறி பயிரிடுவதற்காக நிறுவப்பட்டது. ஆனால் இது இப்பொழுது தாவரப்பயிர் ஆராய்ச்சிக்குரிய இடமாக விளங்குகிறது. இங்குத் தாவர ஆராய்ச்சிக் கழகம் (Harticultural Society) கி. பி. 1847-ஆம் ஆண்டு பொது மக்களின் நன்கொடையைக் கொண்டு துவக்கப்பட்டது. கி. பி. 1855-ஆம் ஆண்டு இத்தோட்டம் அரசியலார் கைக்கு மாறியது. பிறகு இது பலவித மாறுதல்களையும், வியக்கத்தக்க முன்னேற்றங்களையும் மேற்கொண்டது. தற்போது இது பல அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. பயனுள்ள செடிகளும், பலவித மலர்ச் செடிகளும் உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கொணரப்பட்டு இங்குப் பயிரிடப்படுகின்றன. இப்போது ஏறக்குறைய 650 வகையான செடி கொடிகளும், மரங்களும் இங்கு உள்ளன. அழகுக்காகவே வளர்க்கப்படும் மரங்கள், முட்செடிகள், ஆண்டு முழுதும் பயன் தரத்தக்க மரங்கள், கிழங்குச் செடிகள், வேலி அமைப்பதற்குப் பயன்படும் படியான செடிகள், மூலிகைச் செடிகள், நீர்ச் செடிகள், மணப்பொருள் செய்யப்பயன்படும் செடிகள், அழகு வளைவுகளில் படரவிடும் கொடிகள், ரோஜாச் செடிகள் என அளவற்ற தாவர வகைகள் இங்கு வளர்க்கப்படுகின்றன.

பூக் கண்காட்சி :

ஆண்டு தோறும் மேத் திங்களில் இங்கு நடை பெறும் பூக் கண்காட்சி (Flower Show) மிகவும் குறிப்பிடத்தக்கது. அக் கண்காட்சியில் பூவோடு காய்கறி, பழம் முதலியனவும் வைக்கப்படுகின்றன, நீலகிரி மலையின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், சமவெளியிலிருந்தும் மக்கள் அக்கண்காட்சியில் வந்து கூடுகின்றனர். நாகரிக மக்களும், பழங்குடி மக்களும் ஒன்றுசேர இவ்விழா பெரிதும் துணைபுரிகின்றது. நாகரிகர் பழங்குடி மக்களையும், பழங்குடி மக்கள் நாகரிகரையும் அங்காந்த வாயோடு பார்த்து வியப்படைவர். பூக் கண்காட்சி நடைபெறும் அந் நாளிலேயே பறவைகளின் கண்காட்சி (Poultry Show) ஒன்றும் நடைபெறும். நாய்க் கண்காட்சிக்காக ஒரு நாள் அப்போது ஒதுக்கப்படுகிறது. உதகமண்டலத்தில் பல நாய் வளர்ப்பு நிலையங்கள் உள்ளன: அவ்விடங்களிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் காட்சிக்காக நிறைய நாய்கள் அங்கு வந்து கூடும். உயர்ந்த இன நாய்களில் சிறப்பானவற்றையெல்லாம் அங்குக் காணலாம். பூனைக்குட்டி அளவிலிருந்து கன்றுக் குட்டியின் அளவு வரையுள்ள நாய்கள் அங்கு அணி அணியாக இருக்கும்.

வன விலங்குகளைக் காண விரும்புவோர், கூடலூருக்கு அப்பால் உள்ள காடுகளுக்குச் செல்லுகின்றனர். ஊட்டியிலிருந்து நாற்பது கல்லுக்கு அப்பால் தான் வனவிலங்குகளைக் காண இயலும். மாலையில் புறப்பட்டு, சூரியன் மலைவாயில் விழுந்ததும் யானை மேல் ஏறிக் காட்டிற்குள் நுழைந்தால், காட்டு விலங்குகளின் கூட்டத்தைக் காணலாம். புலி, காட்டெருமை, மானினம் ஆகியவை எதிர்ப்படும்.

பள்ளிகள் :

உதகமண்டலத்தில் மாணவர்கள் தங்கிப் பயிலுவதற்கேற்ற நான்கு பள்ளிகள் (boarding schools) உள்ளன. பிரீக்ஸ் நினைவுப்பள்ளி (Breek's Memorial School), திருச்சபை மகளிர் உயர் நிலைப்பள்ளி (High School for Sisters of the Church), நாசரேத்து மகளிர் பள்ளி (The Nazareth Convent), லாரன்ஸ் பள்ளி (The Lawrence School) என்பன அவை. மேற்கூறிய நான்கு பள்ளிகளில் மிகவும் சிறப்பானது வாரன்ஸ் பள்ளி. இது உதகமண்டலத்திலிருந்து நான்கு கல் தொலைவில் லவ்டேல் (Lovedale) என்ற இடத்தில் அமைந்துள்ளது. 'லவ்டேல்' என்றால் அன்புப் பள்ளத்தாக்கு' என்று பெயர். அன்பால் பிணிக்கப்பட்டுப் பல்கலை பயிலும் பிஞ்சுள்ளங்களின் கலைக் கூடம் அமைந்திருக்குமிடத்திற்கு இப்பெயர் மிகவும் பொருத்தமே. இவ்விடத்தின் தட்ப வெப்ப நிலை உடல் நலத்திற்கு மிகவும் ஏற்றதாக அமைந்துள்ளது.

இப்பள்ளி கி. பி. 1858-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 6-ஆம் நாள் துவக்கப்பட்டது. அப்போது இந்திய நாட்டுப் படையின் தளபதி (Major General) யாக விளங்கிய சர் ஹென்றி லாரன்ஸ் என்பாரின் பெயர் கொண்டு இப்பள்ளி விளங்குகிறது. இந்தியப் படையில் பணியாற்றிய படைவீரர்கள், ஓய்வுபெற்ற படைவீரர்கள், ஆகியோரின் குழந்தைகள் சிறந்த முறையில் கல்வி பயிலுவதற்காக, நீலகிரி மலையில் உயரிய ஒரு பள்ளியை நிறுவ வேண்டும் என்ற கருத்தை முதன் முதலாக வெளியிட்டவர் அவரே. கி. பி. 1949-ஆம் ஆண்டு வரையில், படையினர் குழந்தைகள் பயிலும் பள்ளியாகவே இது இருந்துவந்தது. அவ்வாண்டு இந்திய அரசியலார் இப்பள்ளியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும், எல்லாருடைய குழந்தைகளும் பயிலும் பொதுப்பள்ளியாக இது மாற்றப்பட்டுவிட்டது.

கி. பி. 1949-க்கு முன் ஆங்கிலேயருக்கே ஏகபோக உரிமை பெற்றிருந்த இப்பள்ளி, இப்போது இந்திய நாட்டுச் செல்வர்களுக்கே உரிமையுடையதாக இருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் ஈடன் {Eton) என்ற இடத்தில் உள்ள பள்ளி, அரசிளங்குமரர்களும், பிரபுக்களின் குழந்தைகளும், மாபெரும் ஆலை முதலாளிகளின் மக்களும் பயிலும் பள்ளியாக விளங்குகிறது. அப்பள்ளி, வரலாற்றுப் புகழ்பெற்றது ; பல நூற்றாண்டு வளர்ச்சியுடையது; பல அறிஞர்களையும், எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் உருவாக்கியது; பல இலக்கிய ஆசிரியர்களால் எடுத்துக் கையாளப்பட்டது. அத்தகைய ஒரு பள்ளி இந்திய நாட்டில் இருக்கிற தென்றால், அது லாரென்ஸ் பள்ளியாகத்தான் இருக்க முடியும். 'இந்திய நாட்டின் ஈடன்' என்று இதை அழைத்தாலும் தகும். ஆண்டு ஒன்றுக்கு ஏறக்குறைய ரூ. 4000 இங்கு பயிலும் ஒவ்வொரு மாணவனுக்கும் செலவாகின்றன. இப்பள்ளியில் இடம் பிடிப்பதென்பது, அவ்வளவு எளிதான காரியமல்ல. மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் அதிகாரம் இப்பள்ளியின் செயற்குழு (The Board of Administration) விற்கே உரியது. இந்திய நாட்டுக் கல்வித் துறைச் செயலாளரே (The Secretary to the Government of India, Ministry of Education) இச் செயற்குழுவின் தலைவர். இப்பள்ளி அமைந்திருக்கும் இடத்தின் மொத்தப் பரப்பு 700 ஏகர். இது அமைந்திருக்கும் இடத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 7200 அடி. இப்பள்ளியின் நடுவில் அழகிய ஏரி ஒன்றும் அமைந்துள்ளது.

இது தங்கிப் பயிலும் பள்ளி. இதில் 550 மாணவர்களே தங்கிப் பயில இடமுண்டு. 5 வயது முதல் 9 வயது வரை உள்ள இளமாணவர் பிரிவு (Preparatory School), ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என இப்பள்ளி முப்பிரிவுகளைக் கொண்டது. இம் முப்பிரிவினர்க்கும் தங்குமிடங்கள் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளனவேயன்றி, ஆண்களும் பெண்களும் ஒன்றாகவே பயில்கின்றனர். குடும்பக்கலை (Demestic Science) முதலிய பெண்களுக் குரித்தான கலைகளும், பொழுது போக்குக் கலைகளும் தனியாக அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு விடுதியும் ஒரு குடும்பம் போன்ற முறை (House ---System)யிலேயே நடத்தப்படுகிறது. இங்கு மிகவும் சிறந்த ஆங்கிலக் கல்வி பயிற்றப்படுகிறது. ஆங்கிலத்திற் கடுத்தாற்போல், இந்தி கட்டாய பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. இங்கு மேலை நாட்டு இசைக்கலையும், இந்திய இசைக்கலையும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இசைக் கலையைப் பாடமாக எடுத்துக்கொண்ட எல்லா மாணவர்களும் பியானோ, வயலின் ஆகிய இசைக் கருவிகளை இசைக்கக் கற்றுக்கொடுக்கப்படுகின்றனர். மேலை நாட்டு இசையில் நல்ல தேர்ச்சியும், ஆர்வமுமுள்ள மாணவர்கள் இலண்டன் டிரினிடி கல்லூரி இசைத்தேர்வுக்கு அனுப்பப்படுகின்றனர். மட்டைப் பந்து (Tennis), துடுப்புப் பந்து, (Cricket), கூடைப் பந்து (Basket ball), கால்பந்து (Foot ball), கைப் பந்து (Volley ball), வலைப்பந்து(Net ball), தடிப்பந்து (Hockey) முதலிய விளையாட்டுக்கள் இங்குக் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. அனுபவம் வாய்ந்த ஓராசிரியர் குதிரை ஏற்றமும் மாணவர்கட்குக் கற்றுக்கொடுக்கிறார். ஆனால், அதற்குத் திங்கள் தோறும் ரூ. 20 தனிக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். சமயக் கல்வியும் இங்குப் பயிற்றப்படுகிறது.

மாணவர்களுடைய உடல் நலத்தை நல்ல முறையில் கண்காணிக்க ஒரு மருத்துவ மனையும் உள்ளது. அம்மனையில் பயிற்சி பெற்ற ஒரு மருத்துவர் இருந்து பணிபுரிகிறார். 55 படுக்கைகள் அம்மருத்துவ மனையில் உள்ளன. ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியும் கருத்தோடு கவனிக்கப்படுகிறது. மாணவர்களின் எடை, உயரம் முதலியன யாவும் திங்கள்தோறும் கணக்கிடப்பட்டுப் பதிவு செய்யப்படுகின்றன. நாள் தோறும் சோதனையிடப்பட்ட சீரிய உணவே எல்லாருக்கும் அளிக்கப்படுகிறது. மருத்துவமனையில் ஒரு மாணவன் 24 மணி நேரத்திற்குமேல் தங்கியிருக்க நேரிட்டால், அச் செய்தியைப் பள்ளி நிர்வாகிகள் பெற்றோருக்கு அறிவித்து விடுகின்றனர். மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் மாணவனின் உடல் நல முன்னேற்றம், வாரந்தோறும் பெற்றோர்களுக்கு அறிவிக்கப்படும். மாணவனின் உடல் நலத்தைப் பற்றி வினவும் பெற்றோருக்கு உடனுக்குடனே முடங்கல் மூலம் அக்கறையோடு நிலைமை அறிவிக்கப்படும். மிகவும் நோய்வாய்ப்பட்ட மாணவர்கள் உதகமண்டலத்திலுள்ள புனித பார்த்தலோமி மருத்துவமனை {St. Bartholomews Hospital) யில் சேர்க்கப்படுவர். அப்போது ஏற்படும் செலவினத்தைப் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். பள்ளி மருத்துவமனையில் செய்யும் சிகிச்சைக்குப் பணம் கிடையாது. எக்ஸ்-ரே படம் பிடிப்பதற்கும், அறுவை மருத்துவத்திற்கும், டானிக்குகளுக்கும், விலையுயர்ந்த மருந்துகளுக்குமான பணத்தைப் பெற்றோர்கள் அளிக்க வேண்டும். நீலகிரி மாவட்ட மருத்துவ அதிகாரி, (District Medical Officer) இப் பள்ளியின் மருத்துவ ஆலோசகராக எப்பொழுதும் இருப்பார். இப் பள்ளிக்கென்று தனிப்பட்ட பல் மருத்துவர் (Dental Surgeon) ஒருவர் இருக்கிறார். மாணவர்களுடைய பற்களின் நலம் நன்கு கவனிக்கப்படுகிறது. இதற்கென்று ஆண்டுதோறும் ரூ. 5 கட்டணமாகப் பெறப்படுகிறது.

பத்து வயதிற்குட்பட்ட மாணவர்களின் பிறந்த நாள் விருந்தும் இங்கு நடத்தப்படுகிறது. யாராவது ஒரு மாணவனின் பெற்றோர் தம் குழந்தையின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாட விரும்பினால், பிறந்த நாள் வருவதற்குப் பதினைந்து நாட்களுக்குமுன் ஒரு விண்ணப்பத்தோடு ரூ. 10-ம் அனுப்பி வைக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது பெற்றோருக்கு முடங்கல் எழுத வேண்டுமென்பது பள்ளியின் சட்டம், முடங்கல் எழுத முடியாத துவக்கப்பள்ளி மாணவர்களுக்காக வகுப்பு ஆசிரியர்களே இரண்டு வாரங்களுக்கொரு முறை எழுதுகின்றனர். முடங்கல் தவறிவிட்டால், அதைப் பற்றிய செய்தியைப் பெற்றோர்கள் பள்ளி . நிர்வாகிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். பள்ளியில் அணிவதற்கென்று தனிப்பட்ட உடை (Uniform) எல்லா மாணவர்களுக்கும் அளிக்கப்படுகிறது.

அழகுக் கலைகளான ஓவியம், சிற்பம், ஆடல் முதலியனவும் இங்குச் சிறந்த முறையில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. சிறந்த படைப் பயிற்சியும், துப்பாக்கி சுடும் பயிற்சியும் இங்கு அளிக்கப்படுகின்றள.

கிருத்தவக் கோயில்கள் :

உதகமண்டலத்தில் சிறந்த மூன்று கிருத்தவக் கோயில்கள் உள்ளன. புனித ஸ்டீஃபன் திருக்கோயில் (St. Stephen's Church), புனித தாமசு கோயில் (St. Thomas Church), கண்டல் உரோமன் கத்தோலிக்கத் திருக்கோயில் (The Tiny Church of Kandal) என்பவையே அவை. புனித ஸ்டீஃபன் திருக்கோயில் கி. பி. 1830-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இக் கோயிலின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் மரத்தினால் செய்யப்பட்ட வளைவுகள் கண்ணையும் கருத்தையும் கவரும் கலைவனப்புடையவை. இவை திப்பு சுல்தான் மாளிகையிலிருந்து கொணரப்பட்டவை, உதகமண்டலத்தை நீலகிரி மலையின்மீது தோற்றுவித்த திருவாளர் சல்லிவன் அவர்களுடைய சமாதியும், அவருடைய குடும்பத்தார் சமாதிகளும் இக் கோயிலிலேயே உள்ளன. இக்கோயிலின் மணிக் கூண்டு கி. பி. 1851-ஆம் ஆண்டிலும், ஆலயமணி கி. பி. 1894-ஆம் ஆண்டிலும் அமைக்கப்பட்டன, புனித தாமசு திருக்கோயில் கி. பி. 1867-ஆம் ஆண்டு துவக்கப்பட்டு கி. பி. 1870-ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. இவ்விரு கோயில்களும் நகரத்தின் நடுவிலேயே அமைந்துள்ளன.

உதகமண்டலத்திலிருந்து இரண்டு கல் தொலைவில் உள்ள 'கண்டல்' என்ற இடத்தில் அமைந்துள்ள கத்தோலிக்கர் கோயில் மிகவும் புகழ் பெற்றது. உதகமண்டலத்திலிருந்து புறப்பட்டு, ஏரிக்கரை வழியாக வளைந்து செல்லும் மைசூர்ப்பாதையில் சென்றால், இடது புறத்தில் இயற்கையழகு கொழிக்கும் ஒரு மேட்டு நிலம் தென்படும். அதுவே கண்டல் திருக்கோயிலாகும். அக்கோயிலில் குறிப்பிடத்தக்க பெரிய கட்டடங்கள் எதுவுமில்லை. அம்மேட்டின் உச்சியில் ஏசு நாதரோடு கூடிய ஒரு சிலுவை நாட்டப்பட்டுள்ளது. இச்சிலுவை பாரிசிலுள்ள கத்தோலிக்கத் திருச்சபையாரின் ஆணையால் கி. பி. 1933-இல் இங்கு நாடடப்பட்டது. இது நாட்டப்பட்ட சில ஆண்டுகளில் இவ்விடத்தின் புகழ் நாடெங்கும் பரவத் தொடங்கிவிட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்டு தோறும் இங்குப் புனித யாத்திரை செல்லுகின்றனர். சிலுவை நாட்டப்பட்டுள்ள மேடைக்குச் செல்லும் வழி, மிக்க அழகோடு அமைக்கப்பட்டுள்ளது. அவ் வழியில் இடையிடையே பல தங்குமிடங்கள் கண் கவரும் வனப்போடு அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோயில் அமைந்துள்ள இடம் கத்தோலிக்கக் கிருத்தவர்களைப் புதைப்பதற்காக அரசியலாரிடமிருந்து பெறப்பட்டதாகும். சமாதிகளெல்லாம் நில மட்டத்திற்குக் கீழே அடுக்கடுக்காக அமைக்கப்பட்டுள்ளன, கோயிலின் வளர்ச்சிக்குதவிய நன்கொடையாளர்களின் பெயர்கள் சட்டமிட்ட தகடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்விடுகாட்டின் நடுவில் நாட்டப்பட்டிருக்கும் சிலுவை, ஏசு நாதரின் சிலையோடு அழகுடன் விளங்குகிறது. அச்சிலை வெண்கலத்தால் ஆனது; சிற்பக் கலைவளம் செறிந்தது.

இச்சிலுவை சக்தி வாய்ந்ததாகவும், கேட்டோருக்குக் கேட்ட வரம் நல்கும் பெற்றியுடையதாகவும், தெய்வத் தன்மை மிக்கதாகவும் எல்லாராலும் கருதப்படுகிறது. இச்சிலுவை பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன. இச்சிலுவையில் அடிக்கப்பட்டிருந்த பித்தளை ஆணிகளை மாடு மேய்க்கும் சிறுவர்கள் ஒரு நாள் திருடிக் கொண்டு செல்ல முயன்றனராம். ஆனால் அவைகளைப் பிடுங்க முடியாமல் வீடு சென்றனர். வீடு சென்றதும் அச்சிறுவர்கள் கடும் நோய்வாய்ப்பட்டு வருந்தினராம். உண்மையறிந்த பெற்றோர்கள் சிலுவையின் முன் மண்டியிட்டு வணங்கித் தம் சிறுவர்களின் அறியாமையை மன்னிக்குமாறு வேண்டினர். பிறகு அச் சிறுவர்கள் பிழைத்தெழுந்தனர். கி. பி. 1935-ஆம் ஆண்டு சமவெளியில் வாழ்ந்த ஏழெட்டுப் பேர்களடங்கிய ஒரு குடும்பம் இச்சிலுவையைக் கண்டு வணங்கக் கண்டலுக்கு வந்திருந்ததாம். மிகவும் குளிரான அச் சமயத்தில் போர்த்துக் கொள்ளப் போர்வைகள் கூட கொண்டுவர வில்லையாம். சிலுவைக்கெதிரிலுள்ள பந்தலில் அவர்களைக் கண்ட பாதிரியார், குளிரின் கொடுமையைப் பற்றிக் கூறி, தக்க பாதுகாப்போடு இல்லாவிட்டால் இறக்க நேரிடும் என்றுகூடச் சொன் னாராம். ஆனால் அக் குடும்பத்தார் பாதிரியாரை நோக்கி, "ஐயரே! ஏசு பெருமான் பனியில் நனைந்து குளிரால் வருந்தும்போதும், நாங்கள் மட்டும் ஏன் போர்வை தேட வேண்டும்? ஏசு நாதரின் காலடியிலேயே நாங்கள் எட்டு நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்திருக்கிறோம்,“ என்று கூறினார்களாம். எட்டு நாட்கள் இரவு பகல் எந்நேரமும் அப்பந்தலின் அடியிலேயே இறைவனை வணங்கிய வண்ணம் அக்குடும்பத்தார் காத்துக்கிடந்தனராம். எவ்விதத் துன்பமுமின்றி எட்டு நாட்களையும் கழித்துவிட்டு ஊர் திரும்பினராம். இக்குடும்பத்தார் இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்து இந்துக்கள் பழனியாண்டவனுக்கும், திருப்பதி வேங்கடப்பனுக்கும் ' வேண்டுதலை' மேற்கொள்வதுபோல், கிருத்தவர்கள் கண்டல் சிலுவைக்கு வேண்டுதலை மேற்கொள்ளு கின்றனர். பெரும் பெரும் செல்வர்களும், உயர் நிலையிலுள்ள சீமான்களும், படித்தவர்களும் இச்சிலுவையின் மகிமையைத் தம் வாழ்வில் அனுபவித்து அறிந்ததாகப் பத்திரிகையில் அடிக்கடி எழுதிக்கொண்டிருக்கின்றனர், இச்சிலுவையின் சிறப்புக்குச் சான்றாகப் புதுப்புதுக் கதைகள் தோன்றியவண்ணமிருக்கின்றன.

நாள் தோறும் இச்சிலுவையைக் கண்டு வணங்கப் பிரயாணிகள் வந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் வெள்ளிக்கிழமையன்று நோய்வாய்ப்பட்டோரும், மன்னிப்புப் பெற விரும்பும் பாவிகளும், வரம் பெற விரும்பும் பக்த கோடிகளும், கவலையால் கருத்திழந்து அமைதிகாண விரும்புவோரும் இங்குத் திரளாகக் கூடுகின்றனர். விழா நாட்களில் கண்டல் சிலுவையைத் தரிசிக்க வரும் பிரயாணிகளுக் கென்று, தனிப்பட்ட புகைவண்டிகளும், உந்துவண்டிகளும் விடப்படுகின்றன. நோய்வாய்ப்பட்டோரை, 'டோலிகளில் வைத்துத் தூக்கிக் கொண்டுவருகின்றனர். கொடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் விடியற்காலை மூன்று மணிக்கே எல்லாரும் வந்து கூடுகின்றனர்.

கூனூர் :

நீலகிரி மலைக்கு வரும் பிரயாணிகளில் பெரும்பாலோர் இரவில் தங்குவதற்கு உதகையைவிடக் கூனூரையே ஏற்ற இடமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். இது மிதமான குளிரையுடைய இடமாகும். இவ்வூர் அமைந்திருக்கும் இடம் கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயர முள்ளது. உதகமண்டலத்திலிருந்து 12 கல் சென்றால் இவ்வூரை அடையலாம். இவ்வழியானது கெய்டி (Kaity) பள்ளத்தாக்கில் புகுந்து செல்கிறது. அழகு கொலுவீற்றிருக்கும் இப்பள்ளத்தாக்கில் அனாதை விடுதி யொன்றும் அமைந்துள்ளது. இவ்வழிச் செல்லும் பாதையில் அமைந்துள்ள அரவங்காட்டில் படைக்கலத் தொழிற்சாலை (Cordite factory) ஒன்று அமைந்துள்ளது. இது கி. பி. 1904-ஆம் ஆண்டு அரசியலாரால் இங்கு நிறுவப்பட்டது. இத்தொழிற்சாலை ஆறு பிரிவுகளைக் கொண்டது. இதைக் காண விரும்புவோர், இந்தியப் படைத் துறைச் செயலாள (The secretary, Ministry of Defence)ரிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்கவேண்டும்.

வெல்லிங்டன் :

அரவங்காட்டிலிருந்து மூன்று கல் தொலைவு வந்தால் 'வெல்லிங்டன்' என்ற படையினர் வாழ்விடத்தைக் (Military town) காணலாம். படையினர் தங்குவதற்கென்று அமைக்கப்பட்ட இல்லங்கள் வரிசை வரிசையாக அமைந்துள்ளன. கி. பி. 1852-ஆம் ஆண்டு இங்குப் பாடி வீடுகள் அமைக்கப் பெறுவுதற்கு முன் இவ்விடம் 'ஜேக்டலா' (Jacktala) என்று அழைக்கப்பட்டது. இங்கு அழகிய பொழுது போக்கு மன்றம் (Club} ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள மட்டைப் பந்தாட்ட (Tennis courts) மைதானங்களில் இராணுவ அதிகாரிகளும், அவர் தம் மனைவியருமே விளையாடுகின்றனர். வெல்லிங்டனுக்குள் எல்லாரும் அனுமதிக்கப்படுவதில்லை, உறவினர்களோ, நண்பர்களோ இருந்தால் அங்குச் சென்று இன்பமாகப் பொழுதைக் கழிக்கமுடியும். ஒவ்வொரு சனிக்கிழமை இரவிலும், இங்குள்ள மன்றங்களில் மேலை நாட்டு நடனங்கள் நடைபெறுகின்றன, ஆடவரும் பெண்டிரும் இணைந்து இன்னிசைக் கேற்ப ஆடும் அக்களியாட்டம் காண்டற்கினியது.

கானிங் சீமாட்டியின் இருக்கை :

கி. பி. 1857-ஆம் ஆண்டு வடஇந்தியாவில் நடந்த சிப்பாய்க் கலகத்தின்போது, இந்திய நாட்டு அரசப் பிரதிநிதியாக வீற்றிருந்த கானிங் பிரபுவின் மனைவியார் தென்னிந்தியாவிற்கு வந்தார்கள். அப்பொழுது சென்னை, பெங்களூர், நீலகிரி ஆகிய இடங்களில் சிறிது காலம் தங்கினார்கள். சீகூர் மலைத்தொடரின் வழியாக நீலகிரியை அடைந்தார்கள். ஊட்டியிலிருந்து புறப்பட்டு 1858-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 7-ஆம் நாள் கூனூரை அடைந்தார்கள். சீமாட்டியும் அவரோடுவந்த பிரயாணக் குழுவினரும் ஒரு மாளிகையில் தங்கினார்கள். அம்மாளிகை இன்று கிளன்வியூ ஹோட்டல் (Glenview Hotel) என்ற பெயர் கொண்டு விளங்குகிறது. அதே மாளிகையில் தான் கானிங்கிற்கு முன் அரசப் பிரதிநிதியாக இருந்த டல்ஹௌசிபிரபு 1855-ஆம் ஆண்டு மே முதல் ஆகஸ்டு வரை தங்கியிருந்தார்.

கூனூரிலிருந்து 6 கல் தொலைவில் கானிங் சீமாட்டியின் இருக்கை {Lady Cannig's seat) அமைந் துள்ளது. இவ்விடம் இவ்வம்மையாருக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறுகிறார்கள். நாள்தோறும் இவ்விடத்திற்குச் சென்று அவர் அமர்ந்திருப்பாராம். 'இரண்டு உத்தமர்' (Two Noble Lives) என்ற ஆங்கிலப் புதினத்தில் (Novel), இவ்வம்மையார் இங்கு அமர்ந்து எழுதிய முடங்கல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்விடம் அழகிய ஒரு காட்டின் நடுவில் அமைந்துள்ளது. இவ்விடத்திலிருந்து காண்போருக்குக் கூனூரின் முழுத் தோற்றமும், பல தேயிலைத் தோட்டங்களும், அழகோடு காட்சியளிக்கும். அவற்றோடு மைசூரை ஆண்ட திப்புசுல்தானின் பழைய கோட்டை ஒன்றும் தென்படும். பகைவரிடமிருந்து கைப்பற்றிய கைதிகளை அவ்விடத்திலிருந்து கீழே தள்ளிக் கொன்றுவிடுவார்களாம். மேட்டுப்பாளையமும், அவ்வூரிலிருந்து மலையின்மேல் வளைந்து வளைந்து ஏறிவரும் புகைவண்டிப் பாதையும், உந்துவண்டிப் பாதையும் நன்றாகத் தெரியும். கூனூரிலிருந்து இவ் விருக்கைக்குச் செல்லும் வழியில். லேம்ப்ஸ் பாறை (Lamb's Rock) என்ற ஓர் அழகிய இடமும் உண்டு.

சிம் பூங்கா :

கூனூர் நகரின் நடுவில் அமைந்துள்ள சிம் பூங்கா (Sim's Park) மிகவும் அழகானது. உதகமண்டலத்திலுள்ள அரசியலார் பயிர்த் தோட்டத்தைவிட இது அளவில் சிறியதென்றாலும் உள்ளத்தைக் கவரும் தன்மையது. மலைச்சரிவில் இது அமைந்துள்ளது. உலகின் பல பகுதிகளிலும் உள்ள மரங்கள் இங்குப் பயிரிடப்பட்டுள்ளன. அடுக்கடுக்கான திட்டுகளில் வரிசை வரிசையாகப் பெருமரங்களும், பல வண்ண மலர்ச் செடிகளும் உள்ளன. சிறிய ஓடைகள் நாற்புறமும் ஓடிவந்து பூங்காவின் நடுவிலுள்ள குளத்தில் விழுகின்றன. அக்குளத்தின்மீது பல அழகிய சிறு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பூங்கா திருவாளர் ஜெ. டி. சிம் சி. எஸ். ஐ. (I. D. Sim C. S. I) என்பவரால் நிறுவப்பட்டது. ஆகையினாலேயே இப்பூங்கா இவர் பெயர் கொண்டு விளங்குகிறது. இவர் சென்னை மேல் சபையின் உறுப்பினராக (Member of the Legislative Council) 1870 முதல் 1875 வரை பணியாற்றினார். இந்தியாவில் தாம் வாழ்ந்த இறுதி நாட்களைக் கூனூரிலேயே கழித்தார். அப்போது இப்பூங்காவை அமைத்து அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார்.

பாஸ்டர் நிறுவனம் :

கூனூரில் குறிப்பிடத்தக்க ஒன்று பாஸ்டர் நிறுவனம் (Pasteur Institute) ஆகும். லூயி பாஸ்டரை அறியாதவர்கள் உலகில் யாரும் இருக்க முடியாது. விஞ்ஞான உலகில் அவருடைய ஆராய்ச்சிகள் புரட்சிகரமான மாறுதல்களைச் செய்தன. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அவர் ஆய்ந்து வெளியிட்ட கிருமியாராய்ச்சி (Bacteriology)க் கொள்கைகள் மருத்துவத் துறைக்குப் பெரும் பயன் விளைத்தன. எனவே, உலகின் பல பகுதியிலும் கிருமியாராய்ச்சிக் கழகங்கள் தோன்றின. இந்தியாவிலும் பல கழகங்கள் தோன்றின. ஆக்ரா கழகம் 1892-லும், பம்பாயி லுள்ள ஆஃப்கின் கழகம் (Haffkine Institute) 1896-லும், கசௌலியிலுள்ள பாஸ்டர் கழகம் 1900-லும், சென்னை அரசர் ஆராய்ச்சிக் கழகம் (King Institute) 1903-லும், கசௌலி நடுவண் ஆராய்ச்சிக் கழகம் (Central Research Institute) 1906-லும், நிறுவப்பட்டன. 1902-ஆம் ஆண்டு வெறி நாய்க் கடியினால் தாக்குண்ட ஆங்கிலச் சிறுமியை, கசௌலிக்குக் கொண்டு செல்லக் கால தாமதம் ஏற்பட்டதால், அப் பெண் இறந்துவிட்டாள். இச் செய்தி தென்னிந்தியாவிலிருந்த ஆங்கில அதிகாரிகளின் கவனத்தைக் கவர்ந்தது. அதன் விளைவாகவே கூனூரிலுள்ள பாஸ்டர் நிறுவனம் 1907-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 25-ஆம் நாள் (வியாழக்கிழமை) ஏற்படுத்தப்பட்டது.

அமெரிக்காவில் வாழ்ந்த திருவாளர் ஹென்றி ஃபிப்ஸ் (Mr. Henry Phipps) என்ற கோடீசுவரர், இந்திய நாட்டின் மருத்துவத்துறை முன்னேற்றத்திற்காகப் பெருந் தொகையை நன்கொடையாக வழங்கினார். அப்போது இந்திய நாட்டின் மக்கள் தலைவராக (Governor General} விளங்கிய கர்சன் பிரபு அந் நன்கொடையின் பொறுப்பாளராக இருந்தார். அத் தொகையிலிருந்து ஒரு லட்சம் ரூபாயை, தென்னாட்டில் பாஸ்டர் கழகம் நிறுவுவதற்காக வழங்கினார். அப்போது சென்னை மாநில ஆளுநராக விளங்கிய ஆம்ப்தில் பிரபு (Lord Ampthill) அப் பணியில் அதிக அக்கறை காட்டினார். சென்னையில் சிறந்த மருத்துவ நிபுணராக விளங்கிய டபிள்யு. ஆர். பிரௌன், ஐ.எம்.எஸ், (W. R. Brown, I.M.S.) என்பாரையும், ஜி. ஆரிஸ் (G. Harris) என்ற கட்டிட நிபுணரையும் கூனூருக்கு அனுப்பி, ஒரு சிறந்த இடத்தைத் தேர்ந் தெடுத்து, பாஸ்டர் நிறுவனத்தை அமைக்குமாறு பணித்தார். இப்போது, இந் நிறுவனம் நல்ல முறையில் வளர்ச்சி பெற்று, பல இன்றியமையாத ஆராய்ச்சிகளைச் செய்துகொண்டிருக்கிறது. வெறி நாய்க் கடியினால் தாக்குண்ட ஆயிரக் கணக்கான மக்கள் இங்குச் சிறந்த சிகிச்சை பெறுகின்றனர்.

பிற காட்சிகள் :

கூனூரில் காண்டற்குரிய வேறு பல இடங்களும் உள்ளன. புலிமலை (Tiger's Hill), வாக்கர்ஸ் மலை (Walker's Hill), புரூக்லேண்ட்ஸ் பாதை (Brooklands Road) ஆகியவை குளிர்ந்த நிழல் தரும் மரங்களடர்ந்த காடுகளின் நடுவில் அமைந்துள்ளன. உதகமண்டலத்திலிருந்து புறப்பட்டு, கெயிட்டி பள்ளத்தாக்கு, அரவங்காடு, கூனூர், கிளன் மோர்கன் தேயிலைத் தோட்டம், காட்டேரி அணை ஆகியவற்றின் வழியாகச் சென்று மறுபடியும் உதகமண்டலத்தை அடையும் சுற்றுச் செலவு (Round trip) உள்ளத்திற்கு மிகவும் இன்பம் பயக்கக்கூடியதாகும். கூனூருக்கு 6 கல் தொலைவிலிருந்து அழகிய குந்தா மலைத்தொடர் தொடங்குகிறது. அடர்ந்த காடுகளையுடைய அம் மலைத்தொடர், ஆராயும் இயல்பூக்கமுடையோர்க்கு நல்வாய்ப்பை நல்கும். கூனூரில் பல சிறந்த பள்ளிகள் உள்ளன. புனித சூசையப்பர் பள்ளி (St. Joseph's School) மிகவும் தொன்மையானது.

கோதகிரி :

உதகமண்டலத்திலிருந்து 18-ஆவது கல்லில் கோதகிரி என்ற ஊர் அமைந்துள்ளது. நீலகிரி மடந்தையின் காதில் ஒளிரும் ஆணிமுத்து என்று இதைக் கூறலாம். உதகையிலிருந்து தொட்டபெட்டாவிற்குச் செல்லும் வழியில் நான்கு கல் சென்று இடது புறமாகச் செல்லும் உலோகப் பாதை (Metal Road) யில் சென்றால், கோதகிரியை அடையலாம். இவ் வழியின் ஒரு புறத்தில் அழகிய பள்ளத்தாக்கையும், சிற்றூர்களையும் காணலாம். தும்மனடி, மடித்தொறை, குண்டமுக்கை முதலிய ஊர்களைக் கடந்து செல்லும் போது நாட்டுப்புற வாழ்வின் சிறப்பு நம் உள்ளத்தில் தென்படும். இவ்வூர்களைக் கடந்ததும் வழி நெடுகத் தோன்றும் நீரருவிகளும், இளமரக் காடுகளும், பசும் புல் வெளிகளும் நம்மை மீளா இன்பத்திலாழ்த்தும். குறுகி வளைந்து செல்லும் பாதைகளும், அவற்றில் அமைந்துள்ள வளைவுகளில் பெருமூச்சு விட்டுக் கொண்டு திணறி ஏறும் உந்து வண்டிகளும், கோதர்களின் நாட்டுப்புற வாழ்வும், நம் உள்ளத்தை விட்டு நீங்காமல் நிலைத்து, நினைக்குந்தோறும் இனிக்கும். 15 கல் கடந்ததும் கட்டபுட்டை என்ற சிற்றூர் உள்ளது. அவ்விடத்திலிருந்து மீண்டும் தார் போடப்பட்ட பாதை தொடங்குகிறது. அழகிய காட்சிகளிடையே மேலும் மூன்று கல் சென்றோமானால், கோதகிரியை அடையலாம். கோதகிரியின் கடைவீதி ஒரு சரிவில் அமைந்துள்ளது. அவ் வீதியிலேயே ஊராண்மைக் கழக அலுவலகமும், வேறு சில அழகிய கட்டிடங்களும் அமைந்துள்ளன.