தமிழகத்தில் குறிஞ்சி வளம்/பழனி மலைகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
5. பழனி மலைகள்

பெயர்க் காரணம் :

பழனிமலை என்று குறிப்பிடும்போது, முருகன் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் கருமலையே எல்லோருடைய உள்ளத்திலும் தோன்றும். ஆனால் இங்குக் குறிப்பிடப்படும் பழனி மலைகள், பழனி நகருக்குத் தெற்கிலுள்ள மலைக் கூட்டமே ஆகும். வட மொழியில் இவற்றை 'வராக கிரி' என்பர். தமிழில் இதைப் பன்றி மலை என்று குறிப்பிடுவர். இம் மலைக்கு இப் பெயர் ஏற்பட்டதற்குக் காரணமாக ஒரு கர்ண பரம்பரைக் கதை வழங்குகிறது. இம் மலைமீது ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருந்தாராம், அவ் வழி வந்த பன்னிரண்டு குறும்புக்கார இளைஞர்கள் அம் முனிவரை இகழ்ந்து பேசினார்களாம். இதனால் சினங்கொண்ட அம் முனிவர் அப் பன்னிருவரையும் பன்றிகளாகப் போகும்படி சபித்தாராம். அவர்களும் பன்றிகளாக மாறி அம் மலைமீது சுற்றித் திரிந்தார்கள் . அவர்கள் பால் இரக்கம் கொண்ட சிவபெருமான் அவர்களுடைய பன்றியுருவை மாற்றி, பாண்டிய மன்னன் அவைக்களத்தில் அமைச்சர்களாக அமர்த்தினாராம். இக் காரணம் பற்றியே இம் மலை பண்டை நாட்களில் பன்றி மலை என்று பெருவழக்காக அழைக்கப்பட்டு வந்தது என்பர். பன்றி மலையின் திரிபே பழனி மலை என்றும் சிலர் கூறுகின்றனர். புகழ் மிக்க பழனி நகருக்கு அருகில் இருப்பதனால், இம் மலை பழனி மலை என்று பெயர் பெற்றதாகவும் வேறு சிலர் கூறுகின்றனர்.

அமைப்பு:

இது மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பிரிவாகும். இம் மலைக்குத் தென் மேற்கே ஏலக்காய் மலை (Cardamon Hills) அமைந்துள்ளது. அம் மலையின் கிழக்கே கம்பம் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. பழனி மலையின் நீளம் 40 கல், அகலம் 25 கல், இது கிழக்குப் பகுதி என்றும், மேற்குப் பகுதி என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகளை மேற்பழனி என்றும் கீழ்ப்பழனி என்றும் குறிப்பிடுவர். கீழ்ப்பழனி மலையில் 3000 அடியிலிருந்து 5000 அடிவரை உயரமுள்ள பல சிகரங்கள் சிதறிக் கிடக்கின்றன. இச் சிகரங்களிடையே குறுகிய பல பள்ளத்தாக்குகள் அமைந்துள்ளன. அழகின் இருப்பிடமாக விளங்கும் இப்பள்ளத்தாக்குகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பல குக்கிராமங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கதும், பெரியதும் 'பண்ணைக்காடு' என்ற சிற்றூராம். இதில் 4000 மக்கள் வாழ்கின்றனர். இச் சிற்றூர்களைச் சுற்றி மா, பலா, புளியன், ஆரஞ்சு, எலுமிச்சை, சீதளை (இது ஒருவகைப் பேரெலுமிச்சை, கடாரங்காய் என்றும் கூறுவர். Citron) முதலிய மரங்களடர்ந்த சோலைகள் கண்கவரும் வனப்போடு விளங்கும். இங்கு வாழும் மக்களைப் 'பழங்குடி மக்கள்' (Hill tribes) என்று கூறுவதற்கில்லை. இவர்களெல்லாம் கோவை, மதுரை மாவட்டங்களிலுள்ள சமவெளிகளிலிருந்து பண்டை நாட்களில் இங்குக் குடியேறியவர்களே, இவர்கள் தோற்றத்திலும், நடை உடை பாவனைகளிலும், அங்க அமைப்பிலும் சமவெளியில் வாழும் மக்களிலிருந்து வேறுபட்டவர்களாகத் தெரியவில்லை. இங்கு வாழும் 'குன்னுவர்' (Kunnuvans) என்ற குலத்தாரே பெரும்பாலும் நிலக்கிழார்களாக உள்ளனர். இங்கு வாழும் ‘புலையர்' என்னும் இனத்தார் இவர்களுக்குப் பணிபுரிந்து வாழ்கின்றனர். இங்கு வாழும் தெலுங்குச் செட்டிமார்களும், இசுலாமியர்களும் குன்னுவர்களின் நிலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களுக்கு உரிமையாக்கிக் கொண்டனர். இவ்விரு இனத்தாரும் ஓரளவு பணம் படைத்தவர்கள், குன்னுவருக்கும், புலையருக்கும் வேண்டியபோது பணங்கொடுத்து அவர்களைக் கடன்காரர்களாக்கி, பிறகு அவர்கள் நிலங்களையும் பறித்துக் கொண்டனர். இக்கீழ்ப் பகுதியானது மலேரியா நோய்க்கு இருப்பிடம் என்று சொல்லலாம். மார்ச் முதல் ஜூலை வரை இங்கு வாழும் மக்கள் காய்ச்சலால் தாக்குண்டு பெரிதும் வருந்துகின்றனர், ஆனால் மற்ற திங்கள்களில் காய்ச்சல் வராது என்று சொல்ல முடியாது.

மேல் பழனிமலை 6000 அடி முதல் 8000 அடி வரையில் உயர்வுள்ளது. பழனி மலையில் மிகவும் உயர்ந்த சிகரம் வெம்பாடி ஷோலா மலை என்பதாகும். இது மதுரை மாவட்டத்திலுள்ள எல்லா மலைச்சிகரங்களையும் விட உயர்ந்தது என்றே சொல்லலாம். இதன் உயரம் 8218 அடி. குறிஞ்சி நகரமான கோடைக்கானல் இம் மேற்பழனியின் தென்பாகத்தில் அமைந்துள்ளது. கீழ்ப்பழனியில் பரவியுள்ள அடர்ந்த காடுகளை இங்குக் காணமுடியாது. நிறைந்த பள்ளத்தாக்குகளும் இங்குக் கிடையா. வெப்ப நிலையும் குளிர்ந்து தோன்றும். பயிர்த் தொழிலுக்குப் பயன்படாத நிலம் இங்கு அதிகம். இங்குள்ள பீடபூமிகளில் முரட்டுப் புல் முளைத்த பரந்த வெளிகள் (Downs) மிகுந்து தோன்றும், ஒரு சில பள்ளத் தாக்குகளில் மக்களின் குடியிருப்புகளைச் சுற்றி உதகமண்டலத்தில் இருப்பவற்றைப் போன்று இளமரக்காடுகள் (Sholas) நிறைந்திருக்கும். இப் பள்ளத்தாக்குகளைத் தவிர மற்ற இடங்களிலுள்ள நிலங்களெல்லாம், புல் செத்தை அடர்ந்த மெல்லிய மண்படலத்தால் மூடப்பட்டிருக்கும். அப்படலத்தினடியில், மஞ்சள் நிறமான களிமண் நிலம் அமைந்திருக்கும். அக் களிமண்ணிற் கடியில் பரவியுள்ள கற்பாறைகள், எங்குப் பார்த்தாலும் தலை நீட்டிக்கொண்டிருக்கும்.

பழனிமலை மீதுள்ள சரிவு வடக்கு நோக்கிப் படிப்படியாக இறங்குகிறது. ஆனால் தென்பகுதியோ மிகவும் செங்குத்தான பாறைகளையும் சரிவுகளையும் கொண்டது. கம்பம் பள்ளத்தாக்கிலிருந்து காண்போருக்கு அச்சரிவிலுள்ள பாறைகள் பெரிய சுவர்கள் போல் காட்சியளிக்கும். அப்பாறைகளினிடையே பெரும்பெரும் பள்ளங்கள் அமைந்துள்ளன. அடிவாரத்திலிருந்து காண்போருக்கு அக்காட்சி வியப்பூட்டும் என்பதில் ஐயமில்லை. வட பகுதியில் அமைந்துள்ள இருபெரும் பள்ளத்தாக்குகள் அப்பீடபூமியை இடையறுத்துக் கொண்டு வில்பட்டி, பூம்பாறை ஆகிய சிற்றூர்கள் வரை தெற்கு நோக்கிச் செல்லுகின்றன. சமவெளியிலிருந்து இவ்விரு பள்ளத்தாக்குகளின் வழியாக மலையுச்சியை வந்தடையும் இரு குறுகிய பாதைகளும் குறிப்பிடத்தக்கவை. இம் மலையோடு நெருங்கிய வாணிபத் தொடர்பு கொண்ட நகரம் 'பழனி' ஆகும். பழனியிலிருந்து புறப்படுவோர் கால் நடைகளின் மீது பொதிகளை ஏற்றிக்கொண்டு இப்பாதைகள் மூலமாகவே உச்சியை அடைவர். பழனியிலிருந்து வில்பட்டி செல்லும் மலைவழிப் பாதை அடிக்கடி குறுகிய பள்ளங்களால் இடையறுக்கப்படுவதால், குதிரைகள் இவ்வழியாகச் செல்ல முடிவதில்லை. ஆனால் பூம்பாறைக்குச் செல்லும் மலைவழிப்பாதை செல்லுவதற்கு எளிதானது. பெரியகுளத்திலிருந்து கோடைக்கானல் செல்லும் குதிரைப் பாதை (bridle path)' அமைக்கப்பட்டதும், மேற்கூறிய இரு பாதைகளும் கவனிப்பாரற்றுச் சீர் கெட்டுப் போயின. குதிரைப் பாதையும் லாஸ் பாதை (Law's Ghat)யும், புதிய ஆத்தூர்ப்பாதையும், கோடைக்கானல் குடியிருப்புகளை இணைக்கும் பாதைகளுமே பழனி மலைமீது புழக்கத்திலிருந்தவை. இப்போது ஓரளவு சீரான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குச் செய்தி அறிவிக்கும் வேலையானது, கரடு முரடான மலைவழிப் பாதைகளின் மூலமும், கடப்பதற்கரிய காட்டுவழிகளின் மூலமுமே. நடைபெற்றன.

இம்மலை மீது அமைந்துள்ள பூம்பாறைப் பள்ளத்தாக்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. இப் பள்ளத்தாக்கின் இருபுறச் சரிவுகளும் சம அளவுள்ளவை. இச் சரிவுகளில் பயிர்த்தொழில் சிறந்த முறையில் நடைபெறுகிறது. எங்குப் பார்த்தாலும் அழகிய இள மரக் காடுகள் உள்ளன, அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிளவுபட்ட நிலப்பகுதிகள் உள்ளன. சுற்றிலுமுள்ள நிலங்களின் தாழ்ச்சியினால் ஏற்பட்ட சிறு சிறு செங்குத்தான மேடுகள் தென்படுகின்றன. இப்பள்ளத் தாக்கின் உச்சியில் அமைந்துள்ள ஒரு மேட்டு நிலத்திலேயே 'பூம்பாறை' அமைந்துள்ளது. இதில் ஏறக்குறைய 2000 மக்களே வாழ்கின்றனர். மேல் பழனி மலைமீது அமைந்துள்ள சிற்றூர்களில் இது முக்கியமானது. இம்மலைமீது நிலவரி வசூலிப்பதற்கான அலுவலகம், முன்பு இங்கு தான் அமைந்திருந்தது. இங்கு அமைந்துள்ள சுப்பிரமணியர் கோவில் மிகவும் புகழ் வாய்ந்ததாகும். விழா நாட்களில் பழனிமலையின் பல பகுதியிலிருந்தும் மக்கள் இங்கு வந்து கூடு கின்றனர்.

மேல்பழனியில் அமைந்துள்ள வீடுகளின் சுவர்கள் குறுக்கும் நெடுக்குமாகப் பொருத்தப்பட்ட மூங்கில் கழிகளின் மேல் மண் பூசப்பட்டுக் கட்டப்படுகின்றன. கூரை புற்களால் வேயப்படுகின்றது. ஒவ்வொரு வீட்டிலும் கனப்பு அமைக்கப்பட்டுள்ளது. இங்குக் குன்னுவர், காரக்காட்டு வெள்ளாளர் (கார்காத்த வேளாளர்) என்ற இரு இனத்தாரும் வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் தொகை மிகக் குறைவு. மேல் பழனி, கீழ்ப்பழனி ஆகிய எல்லா இடங்களிலும் வாழும் மக்களின் மொத்தத் தொகை 20,000.

மதுரை மாவட்டத்திலுள்ள மலைகளினிடையே ஈடும் எடுப்புமற்றுப் பழனிமலை பெருமிதத்தோடு நிமிர்ந்து நிற்கிறது. காலைஞாயிற்றுப் பொன்னொளியில் பக்கங்களிலுள்ள தொடர்களோடு தலை நிமிர்ந்து நிற்கும் சிகரங்கள், காளையர்கள் பலர் தம் வலிமிக்க தோள்களை உயர்த்திக்கொண்டு நிற்பது போல் தோன்றும். நடுப்பகல் நேரத்தில் மற்ற மலைகளைத் தன் செம்மாந்த உயரத்தால் இருளில் ஆழ்த்திவிட்டு ஒளியுடன் திகழும், மாலை நேரத்தில் கதிரவனின் செந்நிறக் கிரணங்களைப் போர்த்துக்கொண்டு ஈடில்லாப் பெருவனப்போடு திகழும். பெருமழை பெய்து ஓய்ந்த சமயத்தில் இதன் உயரிய சிகரங்கள் மேகங்களாகிய முடியைத் தலையில் சுமந்துகொண்டு, பெருஞ் சிறப்போடு நிற்கும் பேரரசைப்போல் காட்சியளிக்கும். இதன் சரிவுகளில் இழிந்து சலசலத்து ஓடி வரும் நீர் அருவிகளின் மீதும், எக்காளமிட்டுத் தாவி வரும் நீர் வீழ்ச்சிகளின் மீதும் தங்கக் கதிரோன் தன் தணற் குழம்பைப் பூசி மகிழும்போது, பசுமையும் நீலமும் மாறி மாறிச் சுடர்விடும்.

ஆறுகள் :

மதுரை மாவட்டத்தின் வட பகுதியில் உள்ள பழனி, திண்டுக்கல் வட்டங்களிலுள்ள செம்மண் நிலத்தில் சம தூரங்களில் பாயும் நான்கு ஆறுகளும் பழனி மலையிலேயே தோன்றுகின்றன. கொடவனாறு, நங்காஞ்சி ஆறு, நல் தங்கியாறு, சண்முக நதி என்பவையே அவை. இந்நான்கும் காவிரியின் துணை நதியான அமராவதியில் கலக்கின்றன. பழனியில் பெருமழை பெய்த காலங்களில் இவ்வாறுகளிலும் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்படும். சில நாட்களில் அப் பெருக்குத் தணிந்து, சிற்றோடையாகக் காட்சி தரும். இந்நான்கு ஆறுகளில் மிகவும் பயனுடையது சண்முக நதியாகும். வில்பட்டி, பூம் பாறைப் பள்ளத்தாக்குகளில் வழியும் நீரைப் பெற்று இது ஓடி வருகிறது. இப்பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ள ஆறு பிரிவான படுகைகளில் இழிந்து வரும் நீர் ஒன்றாகக்கூடி இவ்வாற்றை உருக்கொள்ளுமாறு செய்வதால் இவ்வாறு சண்முக (ஆறுமுக) நதி என்று பெயர் பெறுகிறது. இது பழனி நகரினிடையே ஓடுவதால், அப்பழனியில் கோயில் கொண்டிருக்கும் சண்முகனின் பெயரே இவ்வாற்றுக்கும் வழங்குவதாக எல்லோரும் எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.

மேற்கூறிய ஆறுகள் நான்கும் மதுரை மாவட்டத்தின் வட எல்லையில் ஓடுகின்றன. மதுரை மாவட்டத்தின் நடுவில் வைகையும், அதன் துணையாறுகளும் ஓடுகின்றன. வைகையின் துணையாறுகளில் பல பழனிமடையில் தோன்றுகின்றன. வராக நதி, மேல் பழனிமலையில் தோன்றி, பெரிய குளத்திற்கருகில் பாம்பாற்றோடு கலக்கிறது, பாம்பாறும் பழனிமலையிலேயே தோன்றுகிறது. இவ்வாறு கோடைக்கானலுக்கருகில் ஓர் அழகிய நீர்வீழ்ச்சியை உண்டாக்குகிறது. குதிரைப் பாதைக்கருகிலிருந்து காண்போருக்கு இந்நீர்வீழ்ச்சி பெருவனப்போடு காட்சி தரும். இவ்விரு நதிகளும் வைகையோடு கலக்கின்றன. மஞ்சளாறு என்ற வேறொரு நதியும் பழனிமலைச் சரிவில் தோன்றி ஓடி வருகின்றது. இதை வத்தலகுண்டு ஆறு என்றும் கூறுவர். இது தேவதானப்பட்டிக்கு மேல் 200 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து, ஓர் அழகிய நீர்வீழ்ச்சியை உண்டாக்குகிறது. பாதையிலிருந்து காண்போருக்கு அவ்வீழ்ச்சி கண்கவரும் வனப்போடு காட்சியளிக்கும், பிறகு இவ்வாறு வத்தலகுண்டுவை நோக்கி ஓடி வருகிறது. கீழ்ப்பழனியிலிருந்து தோன்றிவரும் பிறிதோர் ஆறான அய்யம்பாளையம் ஆற்றோடு சேர்ந்து, மஞ்சளாறு வைகையில் கலக்கிறது.

காடுகள் :

பழனிமலைச் சரிவுகளில் அடர்ந்த காடுகள் உள்ளன. ஆனால் அவை இப்போது வாடியும், பெரும் பகுதி அழிக்கப்பட்டும் காணப்படுகின்றன. அளவற்ற மரங்களை வெட்டியும், தீயிட்டுப் பொசுக்கியும் பாழ்படுத்தி விட்டனர். இவ்வாறு அழிக்கப்பட்டன போக மிகவும் குறைவான மரங்களே இங்குக் காணப்படுகின்றன. சரிவிலுள்ள காடுகளில் குறிப்பிடத்தக்கவை, பழனிமலையின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஆயக்குடி, கன்னிவாடி எஸ்டேட்டுகளுக்கு இடையிலுள்ள காடுகளே. மற்ற இடங்களைப் போலல்லாமல் இவ்விடத்தில் நிலம் வளமுள்ளதாக உள்ளது. வட மேற்கு மூலையில், கூகல் ஷோலாவிலிருந்து அமராவதி ஆறுவரையிலும் உள்ள சரிவு எளிதில் அடைதற்கரியது. ஆகையினால் அச்சரிவுகளிலுள்ள காடுகள் அழிவுறாமல் இருக்கின்றன. பெரிய குளத்திற்கு மேற்கில் அமைந்துள்ள அக்கமலைத்தொடரில் உள்ள காட்டு மரங்கள் வெட்டப்பட்டும், தீயிடப்பட்டும், பயிர்த் தொழிலுக்காக அழிக்கப்பட்டும் கேடுற்றன. ஆனால் இப்பொழுது அரசியலார் தலையீட்டால் அக்காடுகள் புத்துயிர் பெற்றுள்ளன, அழிக்கப்பட்ட காடுகளில் உயர்ந்த ரக மரங்கள், பிறகு நல்ல முறையில் வளர்வ தில்லை. முட்பு தர்களும், பயனற்ற சிறு மரங்களுமே வளர்கின்றன. பழனிமலைச் சரிவுகளில் பொதுவாக வேங்கை, வெக்கலி, வென் தேவதாரு, செந்தேவதாரு, தேக்கு, கருங்காலி, கால்நட் முதலிய மரங்கள் மிகுந்து காணப்படுகின்றன.

கீழ்ப் பழனி, மேற் பழனிப் பீடபூமிகளிலுள்ள காடுகளில் வளரும் மரங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. கீழ்ப்பழனிப் பீடபூமிகளிலுள்ள காடுகள் வாழையும், காஃபியும் பயிரிடுவதற்காகப் பெரும் அளவு அழிக்கப்பட்டன. ஏலமும் அங்கு மிகுதியாகப் பயிரிடப்படுகின்றது. இவ்விடத்தில் அமைந்துள்ள பள்ளத் தாக்குகளில் படிந்திருக்கும் கருமண் வளமானது; மணலும் களியும் கலந்தது. இங்கு வளர்ந்திருக்கும் இளமரக்காடுகள் அழிவுறாமல் செழிப்புற்று விளங்கு கின்றன. செந்தேவதாரு மரங்களும், கால் நட் மரங்களும், வைடெக்ஸ், ஆல்டீசிமா முதலிய மரங்களும் இங்கு செழித்து வளர்கின்றன. செந்தேவதாரு மரங்களும், வைடெக்ஸ், ஆல்டீசிமா மரங்களும் பெட்டிகள் செய்வதற்கும் சட்டங்கள் அறுப்பதற்கும் பெரிதும் பயன்படுகின்றன,

மேற்கிலுள்ள மேற்பழனிப் பீடபூமி சிறிது சிறிதாக உயர்ந்து செல்லத் தொடங்கியதும் அங்குள்ள மண், வளம் அற்றதாக மாறுகிறது. தாண்டிக் குடிக்கும் பண்ணைக்காட்டிற்கும் இடையிலுள்ள தாழ்ந்த மலைப்பகுதியைத் தாண்டியதும், மரம் செடி கொடிகளெல்லாம் வளர்ச்சியில் முற்றிலும் மாறுபட்டுத் தோன்றுகின்றன. அடர்ந்த காடுகள் அங்குக் கிடையா. எங்குப் பார்த்தாலும் புல்வெளிகளும், முட்புதர்களும், குட்டையான மரங்களுமே தென்படுகின்றன. அங்குள்ள ஈரமான பள்ளத்தாக்குகளில் மட்டும் ஓரிரு இளமரக்காடுகள் தென்படுகின்றன. பத்துப் பன்னிரண்டு காடுகளே ஓரளவு பெரியவை. புலிக் காடு (Tiger Shola), பெருமாள் காடு (Perumal Shola) வஞ்சக்கானல், கோடைக்கானல், குண்டன் காடு (Kundan Shola} கூகல் காடு {Kukal Shola) என்பவை குறிப்பிடத்தக்கவை. கோடைக்கானலிலிருந்து நான்கு கல் மேற்கிலுள்ள டாக்டர்ஸ் டிலைட் (Doctor's delight) என்னும் இளமரக்காடு, வனபோசனம் உண்போருக்கு மிகவும் ஏற்ற இடமாக விளங்குகிறது. இங்கு வளரும்படியான சிறு மரங்கள் விட்டங்கள் அறுப்பதற்கோ, பலகைகள் அறுப்பதற்கோ பயன்படாதவை, இங்கு பல நீர் அருவிகள் தோன்றுவதற்குரிய ஈரத்தைப் பாதுகாப்பதற்கே இம்மரங்கள் பெரிதும் பயன்படுகின்றன. இங்குள்ள காடுகள் முன்பு பெரிதும் அழிக்கப்பட்டன. மேற்பழனி மலையின் உச்சியில் உள்ள இப்பீடபூமி கோடைக்கானல் எல்லையிலிருந்து தொடங்கி மேற்கில் திருவாங்கூர் எல்லை வரையிலும், தெற்கில் போடிநாயக்கனூர் வரையிலும் பரவியுள்ளது. காட்டுச் சட்டத்தின் (Forest Act)படி இங்குள்ள காடுகள் அரசியலாரால் பாதுகாக்கப்படுகின்றன, இப்பீடபூமிக்கு, ஆம்ப்தில் வெளி, ( Ampthill downs) என்று பெயரிட்டிருக்கின்றனர். இதன் பரப்பு 5 சதுரமைல், இப்பீடபூமியின் கால்பகுதி காடுகள். முக்கால் பகுதி பரந்த பசும்புல் வெளிகள். இங்கு 7000 அடி முதல் 8000 அடிவரை உயரமுள்ள சிறிதும் பெரிதுமான பல சிகரங்கள் தென்படுகின்றன. இம் மா நிலத்திலுள்ள மிகவும் அழகிய மலைவெளிகளில் ஆம்ப்தில் வெளியும் ஒன்று.

பழனிமலையின்மீது பல இடங்களில் செயற்கை முறையில் காடுகள் வளர்க்கப்படுகின்றன. கி. பி. 1870-ஆம் ஆண்டு கேம்பெல் வாக்கர் (Colonel Compbell Walker) என்பவர், பழனிமலையின் வடபுற அடிவாரத்தில் உள்ள வேலன் கோம்பை என்ற இடத்திலும், பெரியாற்று ஏரிக்கருகிலுள்ள அடிவாரமாகிய வண்ணாத்திப்பாறை என்ற இடத்திலும் தேக்கு மரங்களைப் பயிரிட்டார். அவ்விடத்தில் ஏறக்குறைய 4500 மரங்கள் வளர்ந்தன. ஆனால், தேக்கு பயிரிடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவ்விடங்கள், தென் மேற்குப் பருவக்காற்றினால் பெய்யும் மழையின் முழுப் பயனையும் பெறுவதில்லை. வேலன் கோம்பையில் வளர்க்கப்பட்ட தேக்குக் காடுகள், அப்பக்கமாக ஓடிவரும் கால்வாயினால் நல்ல நீர் வளத்தைப் பெற்றிருந்தன. ஆனால் அடிக்கடி ஏற்படும் பெருவெள்ளத்தால் நிறைய மரங்கள் அழிவுற்றன, அதே ஆண்டில் கோடைக்கானலில் நீலப் பிசின் மரங்க (Blue gum trees}ளும், ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த கருமரங்களும் பயிரிடப்பட்டன. கோடைக்கானலில் வாழும் மக்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கும், அங்குள்ள அழகிய இளமரக் காட்டை அழிவுறாமல் காப்பதற்குமே இவைகள் பயிரிடப்பட்டன. இவ்விடமும் இம்மரங்களின் வளர்ச்சிக்கு ஏற்றதாக இல்லை. கோடைக்கானலின் எரிபொருள் தேவையை அந்நகருக்கு மேற்கில் 2 கல் தொலைவிலுள்ள குண்டன் காட்டிலுள்ள மரங்களே பூர்த்தி செய்கின்றன. இக்காட்டில் 1887-88ஆம் ஆண்டுகளில் நிறைய மரங்கள் பயிரிடப்பட்டன. 1895ஆம் ஆண்டிலும், 1905 ஆம் ஆண்டிலும், குண்டன் காட்டின் பெரும்பகுதி தீயினால் அழிவுற்றது.

விலங்குகள் :

பழனி மலையின் எல்லாப் பகுதிகளிலும் யானைகள் முன்பு நிறையத் திரிந்தன, கிழக்கிலுள்ள கன்னிவாடி வரையிலும் கூட அவைகள் வந்து பயிர்களுக்கு மிகவும் சேதம் விளைவித்தன. இவற்றால் ஏற்படும் அழிவைத் தடுக்க அரசியலார் பெரும் முயற்சிகள் எடுத்துக் கொண்டனர். ஜெர்விஸ் என்ற ஒரு வெள்ளையர், தாம் எழுதியுள்ள, காவிரியின் நீர் வீழ்ச்சிகளை நோக்கிச் சென்ற பயணத்தின் வருணனை' (Narrative of a journey to the falls of Cauvery) என்ற நூலில் பழனிமலையில் திரியும் யானைகளைப்பற்றி விரிவாக எழுதியுள்ளார். கம்பம் பள்ளத்தாக்கிற்கு அருகிலுள்ள மலைகளிடையே இயற்கையாக அமைந்துள்ள கணவாய்களின் வழியாக அவைகள் வருகின்றனவாம், பொய்க் குழிகள் அமைத்து, இக்கணவாய்களில் எளிதாக இவற்றைப் பிடிக்கின்றனராம். இக்கணவாய் ஓரிடத்தில் மிகவும் குறுகிச் செல்லுகிறதாம். அக்குறுகலான இடத்தில் ஒரு யானை தான் நுழைய முடியும். அவ்விடத்திற்கு அப்பாலுள்ள அகன்ற கணவாயில் வரிசை வரிசையான பல குழிகளை வெட்டி வைப்பார்கள். யானைக் கூட்டத்தை அக்குறுகிய வழியின் மூலமாக விரட்டினால், மிக விரைவில் அவ் யானைகள் குழிகளில் விழுந்துவிடும். ஒரு தடவை நான்குமணி நேரத்தில், 63 யானைகள் இம்முறையில் கைப்பற்றப்பட்டனவாம். மேற்பழனியிலும், சரிவுகளிலும் புலி, சிவிங்கிப் புலி, கரடி, காட்டெருமை, மான், வரையாடு, காட்டுப்பன்றி, செந்நாய் முதலியன வாழ்கின்றன. கோடைக்கானலில் காக்கைகளைக் காண முடியாது.

பயிர் வகைகள் :

கீழ்ப்பழனிப் பீடபூமிகளில் வாழும் குன்னுவர்களும் புலையர்களும் புன்செய்ப் பயிர்களைப் பயிரிடுவதோடு, வாழை மரங்களையும் நிறையப் பயிரிடுகின்றனர். இங்குப் பயிராகும் வாழைப்பழம் மிக்க சுவையும் மணமுமுள்ளது. கோடைக்கானல் வட்டத்தில் வேறெங்கும் இவ்வளவு உயர்ந்த ரக வாழை பயிராவதில்லை. இங்குப் பயிரிடப்படும் வாழை மரங்கள் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பலன் கொடுக்கும் தன்மையுடையவை. இங்கு, நெல், காஃபி, ஏலம், இஞ்சி, மஞ்சள் முதலியனவும் நல்ல முறையில் பயிரிடப்படுகின்றன. இங்கு அரேபிகா என்னும் உயர்ந்த ரகக் காஃபி விளைகிறது. காஃபிப் பயிரை முதன் முதலில் பயிரிட்டவர் எம். எமிலிடி ஃபாண்ட்கிளேர் என்னும் வெள்ளையர். சிறுமலையின்மீது இவருடைய தந்தையார் பயிரிட்ட காஃபி விதைகளை இங்குக் கொணர்ந்து இவரும் பயிரிட்டார். இப்போது நம் நாட்டிற்கு நல்ல வருவாய் நல்கும் பயிராக இது இங்கு விளங்குகிறது. ஏலமும், இஞ்சியும் விளைய நல்ல நிழல் வேண்டியிருப்பதால் அடர்ந்த காடுகளிலேயே இவைகள் விளைகின்றன. ஏலம் ஐந்து ஆண்டுகளிலும், மஞ்சள் 18 மாதங்களிலும் பலன் கொடுக்கும். மஞ்சள் திறந்த வெளிகளிலேயே பயிரிடப்படுகிறது. மா, பலா, ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை, கொடித்திராட்சை, ப்ளம் திராட்சை, ஆப்பிள், பெர்ரி முதலிய பழங்களும் இங்கு விளைகின்றன.

மேற்பழனிமலையில் நெல், காஃபி, மட்டரகக் கோதுமை, மட்டரகப் பார்லி, வெள்ளைப்பூண்டு, பழ வகைகள் ஆகியவை நிறைய விளைகின்றன. இங்கு விளையும் வெள்ளைப்பூண்டு பெரும் அளவில் நாடெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மலைச்சரிவுகளில் அடுக்கடுக்காக நெல் வயல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மலையிலிருந்து இழிந்து வரும் நீரருவிகளைத் தடுத்துத் தேக்கி, சிறு வாய்க்கால்களின் மூலமாக நெல் வயலுக்குப் பாய்ச்சுகிறார்கள். இவர்கள் நெல் வயல்களில் எருவைக் கொட்டி மிதிப்பதில்லை. தேக்கிய நீரை வாய்க் கால்களின் மூலமாக எருக்குவியல்களிடையே பாய்ச்சி, அவற்றில் ஊறி வரும் நீரை நெல் வயல்களில் பாய்ச்சுகின்றனர். இங்கு விளையும் நெல் அவ்வளவு உயர்ந்த ரகத்தைச் சார்ந்ததல்ல. நெற்பயிர் முற்ற எட்டு அல்லது பத்து மாதங்கள் செல்லும்.

மக்கள்

குன்னுவர் :

நீலகிரி மலையின்மீது படகர் எவ்வாறு சிறந்த உழவர்களாக வாழ்கின்றனரோ, அதுபோல் பழனிமலையில் குன்னுவர் சிறந்த உழவர்களாக வாழ்கின்றனர். இவர்களுடைய தாய்மொழி தமிழ் மொழியே ஆகும். இவர்கள் தங்களைக் குன்னுவ வேளாளர் என்று கூறிக் கொள்கின்றனர். கோவை மாவட்டத்திலுள்ள தாராபுரம், காங்கயம் பகுதிகளே தங்கள் முன்னோர் வாழ்ந்த இடமென்றும் கூறுகின்றனர். போரும் பஞ்சமும் மிகுந்திருந்த காரணத்தால், ஐந்தாறு நூற்றாண்டுகட்கு முன் இவர்களின் முன்னோர்கள் சமவெளியிலிருந்து இங்குக் குடிபுகுந்தார்களாம். விஜயநகர மன்னர், மராட்டிய மன்னர், திப்புசுல்தான் ஆகியோரின் ஆட்சியில், வரிச்சுமை தாளாமலும் வேறு பல துன்பங் களுக்கு ஆட்பட்டும் வருந்தியவர்கள் பலர் இங்குக் குடி புகுந்தார்கள். ஒரு சமயம் கக்கற்கழிச்ச (Cholera) லினால் அவதிப்பட்ட சமவெளி மக்களும் இங்குக் குடி. புகுந்ததாகக் கூறப்படுகிறது. கோவை மாவட்டத்திலுள்ள குன்னூர் என்ற சிற்றூரின் பெயரே தங்கள் குடிப்பெயராக அமைந்ததென்று காரணம் கூறுகின்றனர். குன்னுவர் பழனிமலையில் குடிபுகுந்தது பற்றி வேறொரு செய்தியும் வழங்குகிறது. விரூபாட்சி, ஆயக்குடி ஆகிய இடங்களில் வாழ்ந்த போலிகர் என்னும் வகுப்பார் மலைமீதுள்ள தங்களுடைய நிலங்களில் பணிபுரிவதற்காக இவர்களை இங்குக் குடியேற்றினார்கள். அதுவரையில் அந்நிலங்களில் பணிபுரிந்து வந்தவர்கள் புலையர் என்னும் குலத்தார். அவர்கள் சோம்பேறிகள். குன்னுவர் அவர்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இடத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். அதோடு அவர்களை மாறாத அடிமைகளாகவும் ஆக்கிக்கொண்டனர்.

குன்னுவர் வாழும் ஒவ்வோர் ஊரிலும் அவர்களுடைய சமூகவியலை மேற்பார்க்க ஒரு தலைவனுண்டு. அவனுக்கு ‘மண்ணாடி' என்று பெயர். ஊரில் அவன் மிகவும் செல்வாக்கு மிக்கவனாகக் கருதப்படுகிறான். இவ்வினத்தார், குன்னுவர், பெரிய குன்னுவர், சின்னக் குன்னுவர் என முப்பிரிவாகப் பிரிந்து வாழ்கின்றனர். இப்பிரிவுகளுக்கு 'வகுப்பு'க்கள் என்று பெயர். ஒரு வகுப்பினர் மற்ற வகுப்பினரோடு மண உறவு கொள்ளும் வழக்கம் இல்லை. ஆனால் ஒன்றாக அமர்ந்து உண்ணுவர். குன்னுவப் பெண் அணியும் உடை ஒரு மாதிரியாக இருக்கும். அவர்கள் தங்களுடைய மேலாடையால் மார்பைப் போர்த்து முன்னால் முடியிட்டுக் கொண்டு, அவ்வாடையையே இடுப்பில் சுற்றிக்கொள்கின்றனர். உலோகத்தால் செய்த கழுத்தணிகளையும், பித்தளையால் செய்த வளையல், கொலுசுகளையும், வெள்ளியினாற் செய்த கடகம் மூக்கு வளைகளையும் அணிகின்றனர். வெள்ளை ஆடையை முன்னாட்களில் பெண்கள் அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. ஆனால் இப்பொழுது பெரும்பாலோர் வெள்ளை ஆடையே உடுக்கின்றனர்.

இவர்களிடையிலும் மானரீகமுறை மிகவும் கட்டுப்பாட்டோடு கடைப்பிடிக்கப்படுகிறது. தந்தையோடு பிறந்த அத்தையின் மகளே பெரும்பாலும் மணமகளாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறாள். வயதுப் பொருத்தம் கூட இவர்களால் கவனிக்கப்படுவதில்லை. சில சமயங்களில் மணமகனைவிட மணமகள் மிகவும் வயதில் மூத்தவளாக இருப்பதுண்டு. மிகவும் இளைஞனான ஒருவனுக்கு ஒன்றுவிட்ட அத்தைமார்களின் வீட்டிலிருந்து, இரண்டு மூன்று பெண்களைத் திருமணம் செய்து வைப்பதுண்டு. பருவமடையாத அச்சிறுவனைவிட, வயதில் மூத்திருக்கும் மனைவியர், அவர்கள் குலத்திலே விருப்பமுள்ள வேறு ஆடவர்களோடு தொடர்பு கொள்ளுவார்கள். அவ்வாறு தொடர்பு கொள்ளுவதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் சட்டப்படி கணவனுக்கே பிறந்தவைகளாகக் கருதப்படும். அதனால் ஒன்பது அல்லது பத்து வயதுள்ள சில சிறுவர்கள் (Putative fathers) இரண்டு மூன்று குழந்தையருக்குத் தந்தையராக இருப்பதுண்டு. இவர்களுடைய திருமணம் சடங்குகளற்றது. மணமகனின் பெற்றோர் மணமகளுக்குப் பரிசம் (Bride Price) வழங்குவர். மணமகனின் தமக்கை பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டுவாள். பிறகு எல்லோரும் விருந்துண்பர். இத்துடன் திருமணம் முடிவடைகிறது.

‘வீட்டு வைப்பு' என்ற புதுமையான முறையொன்று இவர்களால் கடைப்பிடித்து வரப்படுகிறது. ஏதேனும் ஒரு குடும்பத்தில் ஆண் சந்ததியில்லாமல் ஒரு பெண் மட்டும் இருந்தால் அப்பெண்ணை யாருக்கும் திருமணம் செய்து கொடுப்பதில்லை. அவ்வாறு திருமணம் செய்து கொடுத்தால் அத்தோடு அவர்கள் குடி அருகிவிட்டதாக எண்ணுகிறார்கள். அத்தகைய பெண்ணை மணம் பேச முறை மாப்பிள்ளை (மாமன் மகன்) யாரும் வரக்கூடாது. அப்பெண்ணை அவளுடைய வீட்டின் வாயிலிலுள்ள ஒரு கம்பத்திற்குத் திருமணம் செய்து வைப்பார்கள். அவள் கழுத்தில் தாலி கட்டுவதற்குப் பதிலாக, அவளுடைய வலது கையில் வெள்ளியினாற் செய்த வளையல் ஒன்றை அணிவிப்பார்கள். அதன் பிறகு அப்பெண் அவள் குலத்தைச் சார்ந்த எந்த ஆடவனுடனும் தொடர்பு கொள்ளலாம். அவளுடைய வருமானம் பெற்றோரையே சேரும். அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தால், அக்குடும்பத்திற்குரிய சொத்து முழுவதும் அதையே சாரும், மேற்கு பெல்லாரியிலும், தர்வார், மைசூர் ஆகிய நாடுகளுக்கு அண்மையிலும் வாழும் பழங்குடி மக்கள் கடைப்பிடிக்கும் 'பசவிமுறை'யோடு இவ் வீட்டு வைப்பு முறை ஒத்துள்ளது.

மணவிலக்கு முறையும் இவர்களிடையே உண்டு. பரிசத் தொகையைத் திருப்பிக் கொடுத்துவிட்டால் உடனே மணவிலக்குப் பெறலாம். ஆனால் குழந்தைகள் எல்லாம் கணவனையே சாரும். கைம்பெண்களும், மணவிலக்குப் பெற்றவர்களும் மிக விரைவில் மறுமணம் செய்து கொள்ளுகின்றனர், ஆகையினால் மற்ற இனமக்கள் இப்பழக்கத்தை இழித்துப் பேசுகின்றனர்.

புலையர் :

பழனிமலையில் முதன் முதல் குடியேறியவர்கள் புலையர்களே. குன்னுவர் இம்மலையில் குடியேறுவதற்கு முன் இவர்கள் இங்கு உரிமை வாழ்வு வாழ்ந்து வந்தனர். இவர்கள் இனத்தால் தமிழர்களே. இவர்கள் கடைப்பிடித்து ஒழுகும் பழக்க வழக்கங்கள், சமவெளி யில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்களோடு பெரிதும் ஒத்திருக்கின்றன. இவர்கள் பேசும் மொழியும் தமிழே. இக்குலத்தாரின் தலைவன் நாட்டாண்மைக்காரன் என்று அழைக்கப்படுகிறான். அவனுக்குத் துணையாகச் சேர்வைக்காரன், தோட்டி என்ற இருவர் உள்ளனர். தோட்டி நாட்டாண்மைக்காரனின் பணியாள். தமிழ் நாட்டின் மற்ற இடங்களில் வாழும் நாட்டாண்மைக்காரரைப் போலவே, இக்குலத்தாரின் நாட்டாண்மைக்காரனும் செல்வாக்கு மிக்கவனாக இருக்கிறான். புலையர்கள் மூன்று பிரிவினராகப் பிரிந்து வாழ்கின்றனர். ஒவ்வொரு பிரிவிற்கும் ‘கூட்டம்' என்று பெயர். கோலன்குப்பன் கூட்டம், பீச்சிக் கூட்டம், மண்டியான் கூட்டம் என்பவையே அவை. மேற்கூறிய மூன்று பேர்களும் அவர்கள் குலத்தின் முன்னோர்கள்.

ஒரு பெண் பருவமடைந்த பிறகே, திருமணம் செய்கின்றனர். திருமணம் பெற்றோர்களாலேயே ஏற்பாடு செய்யப்படுகிறது. திருமணச் சடங்கு மிகவும் எளிய முறையிலேயே நடைபெறுகிறது. மணப்பெண்ணுக்கு ரூ. 25 பரிசப்பணமாக அளிக்கப்படுகின்றன. வெள்ளை மணிகளைக் கோத்துப் பெண்ணின் கழுத்தில், தாலியாக அணிவிக்கின்றனர். பரிசப்பணத்திற்கு ஈடான தொகையை ஒறுப்புக் கட்டண (fine) மாகச் செலுத்திவிட்டு ஆண், பெண் ஆகிய இருவரில் யார் வேண்டுமானலும் மணவிலக்குப் பெறலாம். மணவிலக்குப் பெற்றவர்களும், கைம்பெண்களும் தாம் விரும்பும் யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம். புலையர்கள் மாயாண்டி, கரு மலையான், பூவாடை (பெண் தெய்வம்) என்ற தெய்வங்களை வணங்குகின்றனர். ஒவ்வொரு சிற்றூருக்கும் அருகில் அமைந்திருக்கும் திடலின்மேல் மாயாண்டியின் கோவில் இருக்கும். இக்கடவுளர்களுக்குப் புலையர்கள் சித்திரைத் திங்களில் விழா எடுக்கின்றனர். இவ்விழாவில் பன்னிரண்டு ஆடவர்கள் சேர்ந்து ஆடும் ஆட்டம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இவ்வாட்டத்தில் பங்கு கொள்ளும் பன்னிரண்டு ஆடவரும் தங்களைத் தூய்மையோடு வைத்துக் கொள்வதற்காக, மாட்டிறைச்சியை உண்ணாமல் விலக்குகின்றனர். விழாவெடுத்த முதல் நாளில் மாயாண்டிக்கு ஓர் ஆடு பலியிடுகின்றனர். இரண்டாம் நாள் ஒரு பானையில் ராகிக் களி சமைத்து, கருமலையான் கோவிலில் வைத்து அதைச் சுற்றி ஆடுவார்கள். ஆடல் முடிந்ததும் எல்லோருக்கும் களி வழங்கப்படும். மூன்றாம் நாள் பூவாடை கோவிலில் படையல் துவங்கி எட்டு நாள் தொடர்ந்து நடைபெறும். விழா முடிவுறும்போது, ஆடல் சிறப்பாக நடைபெறும். புலையர்கள் ஆடலில் பெருவிருப்பம் கொண்டவர்கள். பங்குனித் திங்களில் ஆடவரும் பெண்டிரும் திரளாகக் கூடி, கொட்டும் பறையோசைக்கேற்பச் சுற்றியாடும் ஆட்டம் காண்டற்குரியது. புலையர்கள் மாட்டிறைச்சியையும், பன்றியிறைச்சியையும் விரும்பியுண்கின்றனர். எலியைக் கூட உண்ணும் பழக்கம் அவர்களிடம் உண்டு. 'யாரேனும் ஒருவன் பெரியம்மையால் பீடிக்கப்பட்டால், உற்றாரும் உறவினரும் அவனை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். ஆடவரும் பெண்டிரும் உடல் தொடர்பு கொள்ளமாட்டார்கள்' என்று டர்ன்புல் என்ற வெள்ளையர் தம் நூலில் குறிப்பிடுகிறார். கல்ராயன் மலைகளில் வாழும் மலையாளிகளிடமும் இப்பழக்கம் உண்டு

கிருத்தவ சமயத்தைப் பரப்பும் நோக்கத்தோடு கி, பி, 1850-ஆம் ஆண்டில் ஒரு பாதிரி அனுப்பப்பட்டார். ஆனால் அப்பணி சரிவர நடைபெறவில்லை. இடையிலே தடைப்பட்டது. மீண்டும் அமெரிக்கத் திருச்சபையைச் சார்ந்த கிருத்தவப் பாதிரிமார் இங்கு சமயத்தைப் பரப்பப் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். கி. பி. 1850-ஆம் ஆண்டு சமயப் பிரசாரத்திற்காகப் புலையர்களிடையே சென்ற பாதிரியார் புலையர்களைப் பற்றிய சில குறிப்புகளைத் தம் கடிதங்களில் எழுதியுள்ளார், Madras Quarterly Missionary Journal for 1850-55-என்ற நூலில் அக்கடிதங்கள் காணப்படுகின்றன. அக்கடி தங்களில் காணப்படும் செய்திகள் பின் வருமாறு :

'வேட்டையாடுவதற்காகப் புலையர்கள் சில சமயங்களில் திரளாகக் கூடுவதுண்டு. வேட்டையில் கிடைத்த முதல் விலங்கின் தோலையோ அல்லது வேறு சில உறுப்புக்களையோ அருகிலுள்ள கோவிலுக்குக் காணிக்கையாக அனுப்புவர். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்களுடைய கடவுள் மன நிறைவு கொண்டு அவர்களுக்கு வேட்டையில் அதிகமான விலங்குகள் கிடைப்பதற்கு அருள்புரிவாராம். வேட்டையின் போது யாரேனும் இறந்துபட்டால், மிகவும் மரியாதையோடு அவன் உடலைக் காட்டில் அடக்கம் செய்வார்கள். அவ்வாறு இயந்தபட்டவன். புலையர்களின் மரியாதைக்குரியவனாகவும், வழிபாட்டிற்குரியவனாகவும் கருதப்படுகின்றான். புலையர்கள், அவர்களுடைய ஆண்டை (Masters) களான குன்னுவர்களால் மிகவும் அடிமைத்தனத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கின்றனர். குன்னுவர் புலையர்களுக்குக் கடும் வட்டிக்குப் பணம் கொடுத்து, அவர்களால் கொடுக்க இயலாதபோது, தங்கள் அடிமைகளாக ஆக்கிக் கொள்கின்றனர். குன்னுவர்கள் அவர்களை இரவில் விளக்கு வைத்துக் கொள்வதற்கும், கட்டிலில் படுத்துறங்குவதற்கும்கூட அனுமதிப்பதில்லை. நோய் நொடிகளைத் தீர்ப்பதற்குக் குன்னுவர்கள் புலையர்களையே பெரிதும் நாடவேண்டியிருக்கிறது. ஏனென்றால் காட்டிலுள்ள மூலிகைகளின் தன்மைகளை நன்குணர்ந்தவர்கள் புலையர்களே, பேய் பிடித்தவர்களைக் குணப்படுத்தும் திறமையும் அவர்களிடமே உள்ளது. ஏனென்றால் அம்மலை மீது வாழும் பேய் பிசாசுகளை வசப்படுத்தும் ஆற்றலை அவர்கள் பெற்றிருப்பதாகக் குன்னுவர்கள் கருதுகின்றனர். புலிகளை நஞ்சூட்டிக் கொல்லும் கலையைப் புலையர்கள் நன்கு அறிவார்கள். யாரேனும் ஒரு புலையன் ஒரு புலியை நஞ்சூட்டிக் கொன்ற செய்தியை, மற்ற புலையர்கள் அறிந்தவுடன் எல்லோரிடமும் பணம் வசூலித்து அவனுக்குப் புத்தாடை வாங்கி வழங்குவர். அவனை ஒரு நாற்காலியில் அமர்த்தி ஊர்வலமாகக் கொண்டு வருவர். ஊர்வலத்தின்போது அவனைச் சுற்றிப் பலர் ஆடிக்கொண்டு வருவர்.

பளியர் :

பளியர்கள், பழனிமலையில் வாழ்வோரில் மிகவும் பிற்பட்ட இனத்தார். மேல் பழனிமலையிலும், வருசநாட்டுப் பள்ளத்தாக்கிலும் உள்ள காடுகளில், சிறு சிறு கூட்டங்களாகச் சிதறி வாழ்கின்றனர். மஞ்சம்பட்டிக்கு அருகிலுள்ள காடுகளிலும் வாழ்கின்றனர். ஆனால் இவர்களுடைய உச்சரிப்பு மிகவும் வேறுபட்டும், புரிந்துகொள்ள முடியாமலும் அமைந்துள்ளது. புலையர்களைவிட நாகரிகத்தில் இவர்கள் மிகவும் கேவலமான நிலையில் உள்ளனர். ஆனால் இவர்கள் மாட்டிறைச்சியை உண்பதில்லை. பெரும்பாலும் இவர்கள் மரத்தின் மேல் அமைத்த பரண்களிலும், குகைகளிலும் பாறை இடுக்குகளிலும் வாழ்கின்றனர். சில சமயங்களில் புற்களால் அமைக்கப்பட்ட குடிசைகளில் வாழ்கின்றனர். உடலை மறைக்கப் போதிய அளவற்ற ஆடையையே அணிகின்றனர். அவ்வாடையோடு தழைகளையும், புற்களையும் சேர்த்து இடுப்பில் சுற்றிக் கொள்கின்றனர். இவர்கள் ஆடை மிகவும் அழுக்கேறித் தூய்மையற்றிருக்கும். இலைகளையும், கிழங்குகளையும் (பெரும்பாலும் மரவள்ளிக் கிழங்கு) தேனையுமே முக்கிய உணவாகக் கொள்கின்றனர். கிழங்குகளை ஒரு குழியினுள் போட்டு, அதன்மேல் சுள்ளிகளைப் பரப்பித் தீயிட்டுச் சுட்டுத் தின்கின்றனர். இவர்கள் இருப்பிடத்திற்கு முன்னால் எப்பொழுதும் தீ எரிந்துகொண்டே இருக்கும். காட்டு விலங்குகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவே அவ்வாறு செய்கின்றனர்.

காட்டில் எரிந்துகொண்டிருக்கும் தீயின் மூலமாகவே, பளியர்கள் அவ்விடத்தில் இருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள முடியும். ஏனென்றால் பளியர்கள் மிகவும் அஞ்சும் இயல்பினர். பிற இன மக்களைக் காண அவர்கள் விரும்புவதில்லை. அவ்வாறு கண்டாலும் ஓடி ஒளிந்து கொள்கின்றனர். சக்கிக்முக்கிக் கல்லின் உதவியினாலேயே இவர்கள் நெருப்பு உண்டாக்குகின்றனர். அதற்குத் துணைப் பொருளாகக் காட்டுமரங்களில் கிடைக்கும் பஞ்சு போன்ற பொருளைப் பயன்படுத்துகின்றனர். திருமணங்கள் எவ்விதச் சடங்குமின்றி நடைபெறுகின்றன. 'திருமணம் ஓர் இசைந்த ஏற்பாடு' (Marriage is an adjustment) என்று ஒரு மேலை நாட்டு அறிஞன் கூறிய கூற்று இவர்கள் வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமே, இவர்கள் வாழ்க்கையில் எவ்வித இடர்ப்பாடும் கிடையாது. கணவன் உணவுப் பொருளைத் தேடிக் கொணர வேண்டும். மனைவி அதைச் சமைத்துக் கொடுக்க வேண்டும். இவர்களுடைய வாழ்க்கைப் பொறுப்புக்கள் இவற்றோடு முடிவுறுகின்றன. அவர்களில் யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால், அப்பிணத்தை இருந்த இடத்திலேயே விட்டுவிட்டு எல்லோரும் வேறு இடத்திற்குச் சென்று விடுவார்கள். அவ்விடத்திற்குச் சில திங்கள் வரையில் யாரும் செல்லமாட்டார்கள். திருவாளர் தர்ஸ்டன் என்ற ஒரு வெள்ளையர், திருநெல்வேலிக் காடுகளில் வாழும் பளியர்களின் வாழ்க்கையைப் பற்றி விரிவான குறிப்புகளைப் படங்களோடு ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார். திருநெல்வேலிப் பளியர்கள் இறந்தவனைப் புதைத்து, அப்புதைகுழியின்மேல் ஒரு கல்லை நாட்டிவிட்டுச் சென்று விடுவர். பிறகு அவ்விடத்தை அக்குடும்பத்தார் எப்போதும் காண விரும்புவதில்லை, மஞ்சம்பட்டிக்கு அருகிலுள்ள மலைப் பகுதிகளில் இவர்கள் வாழ்கின்றனர்,

கோடைக்கானல் :

கோடைக்கானல் வட்டம் (taluk) மதுரை மாவட்டத்தைச் சார்ந்ததாகும். ஆங்கிலேயர்கள் கீழ்ப் பழனி மலை, மேற்பழனி மலை ஆகிய இரு பகுதிகளையும் சேர்த்து கி. பி. 1889 ஆம் ஆண்டு இவ்வட்டத்தை அமைத்தனர். மேற்பழனிமலையின் மேல் அமைந்திருக்கும் கோடைக்கானல் நகரத்தின் பெயரால் இவ்வட்டமும் அழைக்கப்படுகிறது.

பெயர்க் காரணம் :

கோடைக்கானல் என்ற பெயர் அரசியலாரின் குறிப்புக்களில் கி. பி. 1860-ஆம் ஆண்டிற்கு மேல் காணப்படுகின்றது. இப்பெயர் இந்நகரத்திற்கு எவ்வாறு ஏற்பட்டது என்று திட்டவட்டமாகக் கூற முடியாது. 'கானல்' என்ற சொல்லுக்குக் காடு அல்லது சோலை என்று பொருள். இதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. ஆனால் இப்பெயரில் அமைந்திருக்கும் நிலை மொழி (முன் சொல்) யான 'கோடை' எதைக் குறிக்சிறது என்பதே ஆராய்ச்சிக்குரியதாக இருக்கிறது. இந்நகரம் அமைந்துள்ள காடு, பழனிமலைகளின் கடைசியில் உள்ள தொடரின்மீது இருப்பதால் இது "கோடிக்கானல்' என்று முதலில் அழைக்கப்பட்டுப் பிறகு கோடைக்கானல் ஆயிற்று என்பர். வேறு சிலர் 'கொடிக்கானல்' என்ற பெயரே கோடைக்கானல் ஆயிற்று என்பர். இந்நகரைச் சூழ்ந்திருக்கும் காட்டில், பின்னிப் படர்ந்திருக்கும் எண்ணற்ற கொடிகளும், லியானா (Liana) முதலிய காட்டுமரங்களின் தொங்கும் வேர்களும், இப்பெயரை உறுதிப்படுத்துகின்றன. கோடைக் காலத்திலும் - பசுமையான இளமரக்காடுகளைப் பெற்றிருப்பதால், இது கோடைக்கானல் எனப் பெயர் பெற்றது என்று கூறுவாருமுண்டு. சங்க இலக்கியத்தில் கூடப் பசுமரக் காட்டைக் குறிப்பிடக் 'கோடைக்கானல்' என்ற தொடர் ஆளப்பட்டிருக்கிறது. 'கொடைக்கானலே' கோடைக்கானல் ஆகியிருக்கும் என்று சிலர் எண்ணுகின்றனர். ஆனால் இது யாருக்கு யாரால் கொடைப் பொருளாக அளிக்கப்பட்டது என்பது விளங்கவில்லை. கோடைக்கானல் பெருமழைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு 91 அங்குல மழையைப் பெறுகிறது. இங்கு வாழும் மக்கள் எப்போதும் குடையும் கையுமாகத் திரிவதால் 'குடைக்கானல்' என்ற பெயரே கோடைக் கானலாக மாறியிருக்கும் என்றும் கூறலாம்.

வளர்ச்சியும் வரலாறும் :

கோடைக்கானல் நகர் பெரியகுளத்திற்கு நேர் உச்சியில் கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்திலமைந்துள்ளது. செங்குத்தாக உயர்ந்து செல்லும் தென்பக்க உச்சியின் ஓரத்தில் இந்நகரம் உள்ளது. மலை உச்சியில் தாழ்வான இடத்தைச் சுற்றியுள்ள சரிவுகளில் இந்நகரம் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 2 கல்; அகலம் 1 கல். இவ்வுச்சியிலிருந்து காண்போருக்குச் சமவெளியின் தோற்றம் தெளிவாகத் தோன்றும். இந்நகரின் வடக்கில் மலையானது உயர்ந்தும், செங்குத்தாகவும் செல்லுகிறது. மேற்கில் உயர்ந்த மலைத்தொடர் தடுத்து நிற்கின்றது. கிழக்குப் பக்கத்தில் மலையானது சிறிது சிறிதாகத் தாழ்ந்து கீழ்ப்பழனி மலைகளை நோக்கிச் செல்லுகிறது. அப்பக்கத்தில் தான் மற்ற எல்லாச் சிகரங்களையும்விட உயர்ந்து அழகிய தோற்றத்தோடு பெருமாள் மலை நிற்கிறது. இதன் உயரம் 7326 அடி. கோடைக்கானல் அமைந்துள்ள சரிவுகளில் தென்பக்கத்துச் சரிவு, பசு மரங்களைத் தன்னகத்தில் நிறையக் கொண்டிருக்கிறது. தொலைவில் இருந்து காண்போருக்குத் தொங்கும் தோட்டமாக {hanging wood) அது தென்படும். இக்காடே கோடைக்கானல் என்று அழைக்கப்பட்டு, நகருக்கும் ஆகி வந்தது. நகருக்கு நடுவில் உள்ள தாழ்விடம் முதலில் சதுப்பு நிலமாக இருந்தது. ஒரு சிற்றோடை அதன் நடுவில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. மதுரை மாவட்டத் தண்டலராக இருந்த திருவாளர் லிவெஞ் (Mr. Levenge) என்பார், கி. பி. 1863 ஆம் ஆண்டு திட்டமிட்டு, அரசியலாரின் நன்கொடையையும், தம் கைப்பணத்தையும் செலவிட்டு அச்சிற்றோடையைச் சுற்றிக் கரை அமைத்து, ஏரியாக மாற்றினார். அழகிய அவ்வேரியைச் சுற்றிப் பசுமரங்கள் அடர்ந்த வழிகள் பல அமைந்துள்ளன. அவ்வழிகளிலேயே எழில்பெறு மனைகள் பல எழுப்பப்பட்டுள்ளன. இவ்வேரி உருவத்தால் ஒரு நட்சத்திர மீனை (Star fish) ஒத்து இருக்கிறது. இதன் குறுக்களவு ½ கல் இருக்கும். ஆனால் இதன் சுற்றளவு 3 கல் நீளம் இருக்கும். ஏரிக்கரையைச் சுற்றி ஒட்டினாற்போல் ஒரு பாதை செல்லுகிறது. அப்பாதைக்குச் சற்று மேலே ஒரு பாதையும், அதற்கு மேல் மற்றொரு பாதையும் சரிவுகளில் அமைந்துள்ளன. அவைகள் முறையே 'நடு ஏரிப் பாதை' (Middle Lake Road) என்றும், 'மேல் ஏரிப் பாதை' (Upper Lake Road) என்றும் அழைக்கப்படுகின்றன. இம்மூன்று பெருஞ்சாலைகளும், இடையிடையே பல சிறு பாதைகளால் இணைக்கப்படுகின்றன.

நகருக்கு வெளியில் ஐந்து முக்கியப் பாதைகள் செல்லுகின்றன. தென் மேற்காகச் செல்லும் பாதை தூண் பாறை (Pillar Rocks) களை நோக்கிச் செல்லுகிறது. மேற்குப் பக்கத்தில் செல்லும் பாதை, 12 கல் தொலைவில் அமைந்திருக்கும் 'பூம்பாறை' என்னும் சிற்றூரை அடைகிறது. அவ்விடத்தில் சிறந்த வானாய்வுக் கூடம் ஒன்று உள்ளது. வடக்குப் பக்கத்தில் செல்லும் நடைபாதை திருநெல்வேலிக் குடியேற்ற (Tinnevelli settlement)த்தின் வழியாக வில்பட்டியை அடைகிறது. நீர்வீழ்ச்சிக்கு அண்மையில் செங்குத்தான சரிவுகளுக்கிடையில் இவ்வழகிய சிற்றூர் அமைந்துள்ளது. கிழக்குப் பக்கத்தில் செல்லும் 'லாஸ்காட்' என்னும் வழியானது மேற்பழனி மலையையும் கீழ்ப்பழனி மலையையும் பிரிக்கும் இயற்கை எல்லையான நியூட்ரல் சேடல் (Neutral Saddle) என்ற இடத்தையடைகிறது. இவ்விடம் பெருமாள் சிகரத்தின் அடிவாரத்திலுள்ளது. தெற்கில் செல்லும் பாதை குதிரைப் பாதையாகும். இது செங்குத்தாக அமைந்துள்ளது. 12 கல் நீளமுள்ள இப்பாதை, செண்பகனூர் அடிவாரத்திலுள்ள கிஷ்ட்னமா நாயக்கர் தோப்பு (Kistnama Nayak's Tope) வழியாகச் சமவெளியை அடைகிறது. கிஷ்ட்னமா நாயக்கர் தோப்பு, (பொதுவாகத் தோப்பு என்றே அழைக்கப் பெறும்) மதுரையில் நாயக்க மன்னரிடம் அமைச்சராகப் பணியாற்றிய ஒருவருடைய உறவினர் பெயரால் அமைக்கப்பட்டது. மதுரையில் நாயக்கர் ஆட்சி அழிவுற்றதும், அப்பரம்பரையினர் பெரிய குளத்திற்கு ஓடிவந்து தங்கினர். அவர்கள் பரம்பரையினரே தொடர்ந்து கி. பி. 1870-ஆம் ஆண்டுவரை, வடகரை என்னும் ஊருக்குக் கிராமத் தலைவர்களாகப் பணியாற்றி வந்தனர்.

இத் தோப்பிலிருந்து பெரியகுளம் 5 கல் தொலைவில் அமைந்துள்ளது. பெரிய குளத்திலிருந்து அம்மைய நாயக்கனூர் புகை வண்டி நிலையம் 28 கல் தொலைவிலுள்ளது. பண்டைக்காலத்தில் கோடைக் கானலை அடைய விரும்புவோர் அம்மைய நாயக்கனூரிலிருந்து தோப்பிற்குச் செல்லும் 33 கல் தொலைவை மாட்டு வண்டியிலேயே கடந்து செல்ல வேண்டி யிருந்தது. தோப்பிலிருந்து புறப்பட்டுக் குதிரையில் ஏறியோ, நடந்தோ, செண்பகனூர் வழியாக மலையுச்சியை யடைய வேண்டும். நடந்து செல்ல முடியாதவர்களை, பழனிமலைப் புலையர்கள் திறந்த பல்லக்குப் (Canvas Chair) போன்ற இருக்கையில் அமர்த்தித் தூக்கிச் செல்வர். செல்லும்போது அவர்கள் தங்கள் மொழியில் உரக்கப் பாடிக்கொண்டே. வழி நடைப் பயணத்தை மறந்து செல்வர்.

உதகமண்டலத்திலிருப்பதைப் போன்றே கோடைக் கானலிலும் தட்ப வெப்ப நிலை உள்ளத்தைக் கவரும் தன்மையதாய் அமைந்துள்ளது. ஆனால் உதகையில் பெய்வதைவிட இங்கு மழை அதிகம். ஆண்டுக்கு ஏறக்குறைய 100 அங்குலம் மழை பொழிகிறது. உதகை தென்மேற்குப் பருவக் காற்றினால் ஜூன், ஜூலை, ஆகஸ்டுத் திங்கள்களில் மழையைப் பெறுகிறது. ஆனால் கோடைக்கானல் வட கிழக்குப் பருவக் காற்றினால் மழையைப் பெறுகிறது. மே, ஜூன் திங்கள்களில் பார்வையாளர்கள் (Visitors) இங்கு நிறையக் கூடுகின்றனர். அப்போது மழை பெய்து அவர்களுக்குத் தொல்லை கொடுப்பதில்லை. ஆனால் அதே சமயத்தில் உதகை சென்றால் நாள் தோறும் மழையினால் அவதிப்பட நேரிடும். கசிவும், வெப்ப நிலை வீழ்ச்சியும் உதகையிலிருப்பதைப் போல் அவ்வளவு அதிகமாக இங்கு இருப்பதில்லை. குளிர் காலத்தில்கூட இங்குக் குளிரின் கடுமை மிகவும் அதிகமில்லை என்றே சொல்லலாம். இங்குள்ள நிலம் மணலும் கல்லும் கலந்ததாக இருக்கிறது. அதனால் இங்குள்ள பாதைகளும், மட்டைப் பந்தாட்ட மைதானங்களும், மழை பெய்த சிறிது நேரத்தில் உலர்ந்து விடுகின்றன. கோடைக்கானலுக்கு மேற்கில் அடுத்தடுத்து அமைந்துள்ள செங்குத்தான மலைத் தொடர்கள், அவைகட்கப்பாலுள்ள அடர்ந்த காடுகளை மறைத்து நிற்கின்றன. இக் காடுகளுக்குள் எளிதாக யாரும் செல்ல முடியாது. இக் காடுகளிலும், கோடைக்கானலுக் கருகிலுள்ள காடுகளிலும் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட கற் கருவிகளும், சமாதிகளும் கண்டறியப்பட்டுள்ளன. பெருமாள் சிகரத்திற்குத் தென்மேற்குப் பகுதியிலுள்ள காடுகளிலும் (வில்பட்டி செல்லும் பாதையில்) பாலமலையிலும் இவைகள் மிகுதியாகக் கிடைத்துள்ளன. கீழ்ப் பழனி மலையில் மச்சூர், பண்ணைக்காடு, தாண்டிக்குடி, காமனூர், பாச்சலூர் முதலிய இடங்களிலும் இவைகள் நிறையத் தென்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர். இச் சின்னங்களைப் போல் இந்திய நாட்டின் வேறு எப் பகுதியிலும் கிடைக்கவில்லை. இச் சமாதிகள் பெரும்பாலும் 8 அடி நீளமும் 3 அடி அகலமும் உடையனவாய் சொரசொரப்பான கற்களால் பெட்டி போல் செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு பக்கம் திறந்திருக்கிறது. துருப் பிடித்த அரிவாள் ஒன்றும், செந்நிற, கருநிற மட்பாண்டங்களும் கிடைத்துள்ளன. கோடைக்கானலைச் சுற்றிக் காணத் தகுந்த பல இடங்கள் உள்ளன. நகரைச் சுற்றி அமைந்துள்ள மூன்று நீர் வீழ்ச்சிகள் குறிப்பிடத்தக்கவை ; கண்கவரும் வனப்புடையவை. இவைகளை யடைதற்கு நல்ல வழிகளும் அமைந்துள்ளன. லா மலைத் தொடரில் (Law's ghat) வெள்ளி வீழ்ச்சி (Silver 'cascade) அமைந்துள்ளது. இது பரப்பாறு என்னும் அருவியால் உண்டாகிறது. கிளென் வீழ்ச்சி (Glan falls) யானது வில்பட்டிக்கு வடக்கில் செல்லும் சிறு பாதையருகில் அமைந்துள்ளது. இதுவும் பரப்பாற்றின் ஒரு பிரிவினாலேயே உண்டாக்கப்படுகிறது. கோடைக்கானலின் தென்மேற்கில் பாம்பாற்றினால் மோகினி வீழ்ச்சி (Fairy Falls) உண்டாக்கப்படுகிறது. கோக்கர்ஸ் நடைவெளி (Coaker's walk) யானது, கோடைக் கானலின் எல்லையில், பழனி மலையின் தென்பக்கச் சரிவின் உச்சியில் அமைந்துள்ளது. (லெஃப்டினெண்ட் கோக்கர் என்பவர் ஓர் சிறந்த பொறியியல் வல்லுநர். இவர் கி. பி. 1870 முதல் 1872 வரை மதுரை மாவட்டத்தில் பணியாற்றி வந்தார். கி. பி. 1870-ஆம் ஆண்டு கோடைக்கானலின் படத்தை (Map) வரைந்து வெளி யிட்டவர் இவரே). இந் நடை வெளியிலிருந்து காண் போருக்குச் சமவெளியில் அமைந்துள்ள ஊர்கள் அழகோடு காட்சியளிக்கின்றன. வானம் நிர்மலமாக இருக்கும் நாட்களில் 47 கல் தொலைவில் அமைந்துள்ள மதுரை நகரம் கூடத் தென்படுவதாகக் கூறுகிறார்கள், அத் தென்பக்கப் பீட பூமியிலேயே, கோக்கர் நடை வெளியிலிருந்து 3 கல் சென்றால் தூண் பாறைகளைக் காணலாம். மூன்று உயரமான பருத்த பாறைகள் பெரும் பெரும் தூண்களைப்போல் உயர்ந்து நிற்கின்றன. இவைகளின் உயரம் ஏறக்குறைய 400 அடி இருக்கும். இவற்றின் நடுவிலும் அடியிலும் பல குகைகளும், பிளவுகளும் அமைந்துள்ளன. இப் பாறைகளின் உச்சியிலிருந்து காண்போருக்கு அதிகமலையின் அழகிய காட்சிகளும், கம்பம் பள்ளத்தாக்கிலிருந்து உயர்ந்து செல்லும் செங்குத்துச் சரிவுகளும், சம வெளியும் நன்கு தெரியும்.

தூண் பாறைகளிலிருந்து இரண்டு கல் தொலைவில் டாக்டர்ஸ் டிலைட் {Doctor's Delight) என்ற உயர்ந்த மேடு ஒன்று உள்ளது. இது தூண் பாறைகளைவிட மிகுந்த பேரழகோடு விளங்குகின்றது. கோடைக் கானலிலிருந்து 9½ கல் தொலைவில் 'ஹேமில்டன் கோட்டை ' (Fort Hamilton} உள்ளது. மேஜர் டக்ளஸ் ஹேமில்டன் என்பவரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. சென்னை மாநிலத் தலைவராக விளங்கிய சர் சார்லஸ் டிரெவெல்யான் என்பவரின் ஆணையின்படி இவர் கி. பி. 1859, 1861; 1862 ஆகிய ஆண்டுகளில் பழனி மலையில் தங்கி, அதன் நிலப்படத்தை வரைந்தார். அப்படம் விளக்கமாகவும், பெரிதாகவும் உள்ளது. பொது நூலகங்களிலும், அலுவலகங்களிலும் இப் படம் தொங்கிக் கொண்டிருக்கின்றது. பழனி மலையைப் பற்றி அவர் எழுதிய இரண்டு குறிப்புகள் குறிப்பிடத்தக்கவை. அவை முறையே கி. பி. 1862-ஆம் ஆண்டிலும் கி. பி. 1864-ஆம் ஆண்டிலும் சென்னையில் அச்சியற்றி வெளியிடப்பட்டன. ஹேமில்டன் கோட்டை என்று குறிப்பிடப்படும் இடத்தில் கோட்டை எதுவுமில்லை. ஒரே ஒரு குடிசைதான் உள்ளது. அவ்விடம் முதலில் ஒரு பெரிய ஏரியாக இருந்தது என்ற சுவையான உண்மையைத் திருவாளர் ஹேமில்டன் முதன் முதலாகக் கண்டு வெளியிட்டார். இவ்வேரியைப் பற்றிய முன் குறிப்புக்களோ, செவி வழிச் செய்திகளோ கூடக் கிடையாது. நீர் மட்டம் இருந்த அடையாளங்கள் இன்றும் காணப்படுகின்றன. அவ்வடையாளங்களை வைத்துக்கொண்டே அவ்விடத்தில் ஓர் ஏரி இருந்திருக்க வேண்டுமென்று அவர் முடிவு கட்டினார். அவ்வேரி ஏறக்குறைய 5 கல் நீளமும், 1 கல் முதல் 2 கல் வரை அகலமும், 30 அடி முதல் 70 அடி வரை ஆழமும் உடையதாக இருந்திருக்க வேண்டும் என்று கணக்கிட்டிருக்கிறார். ஒரு பள்ளத்தாக்கின் குறுக்கே நீண்டு படிந்திருந்த மலைத் தொடர், இயற்கையாக இவ்வேரி அமைவதற்குக் காரணமாக இருந்தது. இத் தொடர் வடக்கு நோக்கி அமராவதி ஆறுவரை செல்லுகிறது. இவ் வேரியில் விழுந்த ஓர் அருவியைத் தடுத்து நீரை இத் தொடர் தேக்கி வந்தது. ஆனால், திடீரென்று அணைபோல் இருந்த அத் தொடர் பிளவுபட்ட காரணத்தால் ஏரியில் நீர் தேங்குவதில்லை. அணைபோல் தடுத்திருந்த அத் தொடர் 200 கெஜ நீளம் உள்ளது. அதில் ஏற்பட்டிருக்கும் பிளவு 100 கெஜ அகலமும் 90 அடி ஆழமும் உள்ளது. மேஜர் ஹேமில்டன், 'இவ்விடம் ஓர் அழகிய குறிஞ்சி நகரமோ , படையினரின் பாடியோ (Contonement) அமைப்பதற்கு மிகவும் ஏற்றது' எனக் குறிப்பிட்டார். ஆனால் இவ்விடம் சென்றடைதற்கரியது என்று பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். கோடைக்கானலானது, தற்போது அமைந்திருக்கும் இடத்தில் முதன் முதல் கட்டப்பட்ட போது, 'இயற்கை அழகுமிக்க எவ்வளவோ இடங்கள் பழனி மலை மீது இருக்க இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்தது அறியாமை' என்று பலர் குற்றம் சாட்டினர். அவர்களுக்கும் இதே காரணத்தைத்தான் கூற வேண்டும். பெரிய குளத்திலிருந்து பழனி மலையின் உச்சியை அடையப் புழக்கத்திலிருந்த குதிரைப் பாதைக்கு அண்மையிலேயே, இந் நகரை அமைத்தனர். காரணம் போக்கு வரவு வசதியே.

பழனி மலையை முதன் முதலில் பார்வையிட்ட ஐரோப்பியர் லெஃப்டினண்ட் பி. எஸ். வார்டு என்பவர். இவர் கி. பி. 1821-ஆம் ஆண்டு இம் மலையை அளப்பதற்காக இங்கு வந்தார். பெரிய குளத்திலிருந்து செல்லும் பாதையில் புறப்பட்டு, வெள்ளக்கவி என்னும் சிற்றூர் வழியாக மலையுச்சியை அடைந்து அவ்வாண்டு மே திங்கள் 25-ஆம் நாள் பாம்பாறு வீழ்ச்சிக்குச் சற்று மேலே தங்கியிருந்தார் என அவர் குறிப்பால் அறியப்படுகிறது. அக் குறிப்பில் பழனி மலையை ‘வராககிரி' என்றும் திருவாங்கூர் மலைகளைக் 'கண்ணன் தேவன் மலைகள்' என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

- கி. பி. 1834-ஆம் ஆண்டு, மதுரை மாவட்டத் துணைத் தண்டலராக இருந்த ஜெ. சி. ராட்டன் என்பாரும், தென்மண்டல நடுவராக (Judge of the Provincial court, Southern Division) இருந்த சி, ஆர். காட்டன் என்பாரும் பெரிய குளத்திலிருந்து புறப்பட்டுச் செண்பகனூரை வந்தடைந்தனர். அவர்கள் வரவால் சீர் கேடுற்றிருந்த அக்குதிரைப் பாதை சீர்திருத்தம் பெற்றது. கி. பி. 1836-ஆம் ஆண்டு திருவாளர் வைட் என்பவர் தேவதானப் பட்டியிலிருந்து அடுக்கம் சிகரத்திற்கு அண்மையிலுள்ள கணவாயை நோக்கிச் செல்லும் செங்குத்தான கணவாய் மூலம் மலையுச்சியை அடைந்தார். அவர் இப்போது கோடைக்கானல் அமைந்துள்ள தாழ்நிலத்திற்குச் செல்லவில்லை. அவர் பழனிமலையில் உள்ள தாவரங்களைப் பற்றி வெளியிட்டுள்ள குறிப்புக்கள் குறிப்பிடத் தக்கவை.

கோடைக்கானலில் முதன் முதலாகத் தங்குவதற்கு மாளிகையைக் கட்டியவர்கள், மதுரையில் வாழ்ந்த அமெரிக்கப் பாதிரிமார்களே (American missionaries). நம் நாட்டின் தட்ப வெப்பநிலை அவர்களுக்கு ஒத்துவராமையால் பலர் நோய்வாய்ப்பட்டனர். ஆகையினால் அவர்களுடைய கேந்திரமான 'ஜஃப்னா'விற்கு நோயுற்றவர்களைக் கொண்டு செல்லவும், நோயிலிருந்து மீண்டு குணமடைந்தவர்களை அழைத்துவரவும் கி. பி. 1838ஆம் ஆண்டு ஒரு சிறு கப்பலே விலைக்கு வாங்க முடிவு செய்தனர். மதுரைக்கு அண்மையிலுள்ள சிறு மலையின் மீது ஒரு மாளிகையை அமைத்து நோயுற்றவர்களை அங்குக் கொண்டு செல்ல முடிவு செய்ததால், அத் திட்டம் கைவிடப்பட்டது. சிறு மலையின்மீது கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் அங்குச் சென்றவர்கள் மலைக் காய்ச்சலினால் அடிக்கடி அவதிப்பட்டனர். ஆகையினால் அவ்விடத்தைக் கைவிட்டு விட்டுப் பழனி மலையின் மீது கி. பி. 1845-ஆம் ஆண்டு ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்தனர். கோடைக்கானல் என்னும் இள மரக்காடு - அமைந்திருந்த சரிவின் அடிவாரத்தில் இரண்டு கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. கட்டிட வேலை ஜூன் திங்களில் தொடங்கப் பெற்று அக்டோபரில் முடிவுற்றது.

கி. பி. 1834 முதல் 1847 வரை மதுரை மாவட்டத் தண்டலராகப் பணியாற்றிய திருவாளர் ஜான் பிளேக்பர்ன் என்பவர் பழனி மலையின் மீது நிலவரித் திட்டத்தை அமுலாக்கப் பெரு முயற்சி எடுத்துக் கொண்டார். அடுக்கம் கணவாயின் உச்சியிலிருந்து 5 கல் தொலைவில், தாம் தங்குவதற்கென்று ஒரு மாளிகையை அமைத்தார். ஆனால், முதன் முதலாக அம் மாளிகையில் நெருப்பு மூட்டியபோது, அது பற்றி எரிந்து பாழாகியது. அதனுடைய அடிப்படைச் (அஸ்தி வாரம்) சுவரை இன்றும் காணலாம். கி.பி. 1848-49-இல் மதுரை மாவட்டத் துணைத் தண்டலராக இருந்த திருவாளர் தாமஸ் கிளார் (இவர் 1853-ஆம் ஆண்டு மேத் திங்களில், பழனி மலையைப் பற்றி வெளியிட்ட நூல் குறிப்பிடத் தக்கது) என்பாரும், மாவட்ட நடுவராக இருந்த திருவாளர் சி. ஆர். பேன்ஸ் என்பாரும், தண்டலராக இருந்த திருவாளர் ஆர். டி. பார்க்கர் என்பாரும், கோடைக்கானலின் உச்சியில், சமவெளிகளைப் பார்த்தாற் போன்று கோடைக் காலக் குளிர்மனைகளை எழுப்பினர். இப்போது உள்ள ‘பாம்பாறு மனை' (Pambar House) க்கும், 'ரோசனீத்' (Roseneath) திற்கும் இடைப்பட்ட இடத்திலேயே அவைகள் கட்டப்பட்டன. அலுவலகக் குறிப்புகளில் காணப்படும் மனை அமைப்பு (House plans) களை வைத்துக்கொண்டு பார்த்தால், திருவாளர் பார்க்கர் அமைத்த மனை, இப்பொழுது பாம்பாறு மனை அமைந்திருக்கும் இடத்திலேயே இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. திருவாளர் பேன்ஸ் கட்டிய மனை பாம்பாறு மனைக்கு அடுத்தாற் போல், கிழக்கில் அமைந்துள்ளது. இப்போது அது ரோமன் கத்தோலிக்க சமயத்தாருக்கு உரிமையுடையதாக உள்ளது. திருவாளர் கிளார்க் கட்டிய மனை இப்போதுள்ள 'ரோசனீத் 'தின் ஒரு பகுதியாகும்.

•ரோசனீத்' என்ற இக் கட்டிடம், மற்றவைகளை விட வரலாற்றுச் சிறப்புப் பெற்றது என்று கூறலாம். திராவிட மொழிகளை ஆராய்ந்து, ஒப்புயர்வற்ற ஒப்பிலக்கணத்தை (Comparative grammar) எழுதிய கால்டுவெல் பாதிரியார் இம் மனையில் தான் வாழ்ந்தார். அவர் எழுதிய ஒப்பிலக்கணம் திராவிட மொழியாராய்ச்சித் துறைக்கு வழி வகுத்ததோடல்லாமல், தமிழ் மொழி ஆரியத்தினின்றும் முற்றிலும் வேறுபட்ட உயர்தனிச் செம்மொழி என்ற உண்மையையும் உலகிற்கு உணர்த்தியது. கால்டுவெல் பாதிரியார் தம் இறுதி நாட்களை இம் மனையிலேயே கழித்து இயற்கை எய்தினார். கேப்டன் டபிள்யூ. எச். ஆர்ஸ்ஸி என்ற ஒரு பொறியியல் வல்லுநர், பேன்ஸ், கிளார்க் ஆகிய இருவரின் மனைகளுக்கிடையே ஒரு கட்டிடத்தை எழுப்பினார். அடுத்தாற்போல் அமெரிக்கன் மிஷனைச் சேர்ந்த பாதிரிமார் தங்களுக்கென ஒரு மனையை அமைத்தனர். அது இப்பொழுது 'கிளவரக்' என்று அழைக்கப்படுகிறது. பம்பாய்ப் பட்டாளத்தைச் சேர்ந்த மேஜர் ஜே. எம். பார்ட்ரிட்ஜ் என்பவர் கி. பி. 1852ஆம் ஆண்டு இங்கு வந்து கூடாரமடித்து ஏரிக்கருகில் தங்கினார். குளிரின் கொடுமையையும், புயலின் வேகத்தையும் தாள முடியாத அவர் ஒரு சிறு மனையை அமைத்துத் தங்கினார். அவ்விடம் இப்போது 'பம்பாய் ஷோலா' (Bombay Shola) என்று அழைக்கப்படுகிறது. அவருக்கு உரிமையான தோட்டம் ஒன்றும் அங்கு இருந்தது. முதன் முதலாகப் பழனி மலையில் நீலப் பிசின் மரம் என்ற ஆஸ்திரேலிய மர வகையை நட்டுப் பயிரிட்டவர் இவரே. இவர் வீட்டின் முன்னால் இருந்த இரண்டு நீலப் பிசின் மரங்களில் ஒன்று இன்றும் உள்ளது. அப் பகுதியில் மிகவும் பெரிய மரம் அதுதான். கோடைக்கானல் வாசிகளுக்குப் பயன்படும் வகையில் முதன் முதலாக இசைக் கலைஞர்களைக் குடியேற்ற முயன்றவரும் இவரே. இவர் வீட்டிற்கருகில் ஒரு கடையும் இருந்ததாகக் குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது.

மேற்கூறிய எழுவருமே கோடைக்கானலின் முன்னோடிகள் (Pioneers) என்று கூறலாம். கி. பி. 1853-இல் இவர்களுக்குரிமையான ஏழுமனைகளே கோடைக்கானலிலிருந்தன. கி. பி. 1861-ஆம் ஆண்டு, மேலும் மூன்று வீடுகள் கட்டப்பட்டன. கி. பி. 1854. ஆம் ஆண்டு உச்சிக்குச் செல்லும் குதிரைப் பாதையைச் செப்பனிட ரூ 4,500 செலவிடப்பட்டது. கோடைக் கானலில் வாழ்ந்த கிருத்தவப் பாதிரிகள் ஒரு கல் நீளமுள்ள பாதையொன்றை நகரில் அமைத்தனர். மேலும் 6 கல் நீளமுள்ள பாதை அங்கு வாழ்வோரால் அமைக்கப்பட்டது. 1860 ஆம் ஆண்டு சென்னை மாநில ஆளுநராக இருந்த சர் சார்லஸ் டிரிவெல்யான் என்பவர் தோப்பிலிருந்து புறப்பட்டுக் குதிரைப் பாதையின் வழியாகப் பழனிமலையுச்சியை அடைந்து, கோடைக்கானலைப் பார்வை யிட்டார். (இவர் வருகையிலிருந்தே இந்நகர், அரசியற் குறிப்பேடுகளில் கோடைக்கானல் என்று குறிப்பிடப்படுகிறது) பழனி மலையைப்பற்றி அவர் கொண்ட கருத்துக்களை அழகிய ஒரு குறிப்பு நூலாக எழுதியுள்ளார். திருவாளர் கிளார்க்கிற்கு உரிமையாக இருந்த ரோசனீத், மனையிலேயே இவர் தங்கி யிருந்தார். கி. பி. 1871-ஆம் ஆண்டு திருவாளர் நேப்பியர் பிரபு இங்கு வந்திருந்தார். இப்பொழுது கோடைக் கானலில் 'நேப்பியர் வில்லா' என்ற ஒரு மனை உள்ளது. நேப்பியர் பிரபு அவ்விடத்தில் சிறிது நேரம் நின்று சென்றதால், அம்மனை அப்பெயர் பெற்றதாகக் கூறுகிறார்கள்.

கி. பி. 1860-ஆம் ஆண்டு திருவாளர் வெர்ஹென்றிலிவெஞ் மதுரை மாவட்டத் தண்டலராக அமர்த்தப்பட்டார். 1867 வரை அப்பணியில் இருந்து விட்டு, ஓய்வு பெற்றவராகக் கோடைக்கானலில் குடிப்புகுந்தார். கி. பி. 1885-ஆம் ஆண்டு சென்னையில் உயிர் நீத்தார். இறப்பதற்குச் சிலவாரங்கள் முன் வரையில் கோடைக்கானலிலுள்ள 'பாம்பாறு மனை' யிலேயே வாழ்ந்து வந்தார். கோடைக்கானலில் அவர் வாழத் தொடங்கியதும், ஆங்கில அரசியலாரால் பிரபு நிலை (Baronetcy) க்கு உயர்த்தப்பட்டார். அவர் மாவட்டத் தண்டலராக இருந்த போதும், ஓய்வுபெற்று இங்குத் தங்கிய போதும், கோடைக்கானலின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உழைத்தார். கோக்கர் நடை வெளிக்குச் சற்றுமேல் அவருடைய சமாதி அமைந்துள்ளது. அதில் நாட்டப்பட்டுள்ள சிலுவையில் 'கோடைக்கானலின் முன்னேற்றத்தின் பெரும் பகுதி இவரையே சாரும்' என்று எழுதப்பட்டுள்ளது. முதலிலேயே குறிப்பிட்டது போல், கோடைக்கானல் ஏரி இவரது முழு முயற்சியாலும், கைப்பொருளாலும் அமைக்கப்பட்டது. பெரிய குளத்திலிருந்து வரும் குதிரைப்பாதையை, பீடபூமியின் தெற்கு எல்லையிலுள்ள பாம்படி ஷோலா (Pambadi Shola) வரை அமைத்தார். நகரினுள்ளும் பல பாதைகளை அமைத்தார். ஐரோப்பியப் பழவகைகளையும் பூவகைகளையும் பழனிமலையின் மீது பயிரிடுவதற்குப் பெருமுயற்சி எடுத்துக்கொண்டவரும் இவரே.

கி. பி. 1853-ஆம் ஆண்டு அமெரிக்கன் மிஷனைச் சேர்ந்தவர்கள் 'சன்னிசைட்' (Sunny Side) என்ற இடத்திற்கருகில் தங்களுக்குரிமையான நிலத்தில் ஒரு கோவில் கட்டத் தொடங்கினர். அது 1856-ஆம் ஆண்டு முடிவுற்றது. ஆங்கிலிகன் மிஷனைச் சார்ந்தோரும் அக்கோவிலிலேயே வழிபாடு நிகழ்த்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அக்கோவிலைச் சுற்றி ஓர் இடுகாடு அமைக்கப்பட்டது. (இப்போது அது மூடப்பட்டு விட்டது) முதன் முதலாக அவ்விடுகாட்டில் அமைக்கப்பட்ட சமாதி இரு குழந்தைகளினுடையது. அக்குழந்தைகள் கி. பி. 1819-ஆம் ஆண்டு இறந்தன; நகருக்குச் சிறிது தொலைவிலுள்ள நேபோமலை {Mount Nebo) யில் புதைக்கப்பட்டன. அவைகள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, இங்குக் கொண்டு வந்து புதைக்கப்பட்டன. கி. பி. 1896-ஆம் ஆண்டு இக் கோவில் கோடைக்கானல் கழக (club) த்திற்கு அண்மையில் புதிதாகக் கட்டப்பட்ட இடத்திற்கு மாற்றப்பட்டது. பிறகு பழைய கோவில் அழிவுற்றது. கி. பி. 1863-ஆம் ஆண்டு செயிண்ட் சைர், கோடைக்கானலுக்கு வந்தார். கத்தோலிக்கரில் முதன் முதலாக வந்த பாதிரியார் இவரே. இவர் திருவாளர் பேன்ஸின் மனையை விலைக்கு வாங்கினார் ; இப்போது கோடைக்கானலிலிருக்கும் ரோமன் கத்தோலிக்கக் கோவிலுக்குக் கால்கோளிட்டார். ஆங்கிலிகன் திருச்சபைக் கோவிலை அமைப்பதற்காக நேபோ மலையில் கால்டுவெல் பாதிரியாரின் பெயருக்குக் கி. பி. 1883ஆம் ஆண்டு அரசியலாரால் நிலம் வழங்கப்பட்டது. அதே ஆண்டில் கோடைக்கானல் வட்டத் தலைவ (Tahsildar) ரின் அலுவலகம் அமைப்பதற்கு அரசியலாரிடமிருந்து அனுமதியும் கிடைத்தது. செண்பகனூரிலிருந்து செல்லும் மலைவழிப் பாதைக் கருகில் ஐரோப்பியருக்குரிய இடுகாடு ஒன்று அமைந்துள்ளது. கோடைக்கானலுக்குள் நுழைந்ததும் இது நம் கண்களில் படும். இது கி. பி. 1900-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஒவ்வொரு சமயத்தார்க்கும் தனித் தனிப் பிரிவு இதில் உண்டு.

கோடைக்கானல், முன்னாளில் வில்பட்டியின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது. கி. பி. 1899-ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் இங்கு நகராட்சி மன்றம் (Municipality) நிறுவப்பட்டது. சென்னை மாநிலத்திலேயே மிகவும் சிறிய நகராட்சி மன்றம் இதுதான். மிகக் குறைந்த எண்ணிக்கையுள்ள மக்களே இங்கு வாழ்கின்றனர். முதன் முதலாக இந்நகராட்சி மன்றத்தில் 12 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்கள் யாரும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களல்லர். முன்பெல்லாம், இந்நகரில் வாழ்வோருக்குத் தேவையான குடிநீர், கிணறுகளிலிருந்தும், அருவிகளிலிருந்தும் பெறப்பட்டது. கி. பி. 1902-ஆம் ஆண்டு குடிநீர் வசதிக்கான திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. அத்திட்டத்தின்படி பாம்பாற்றில், மோகினி வீழ்ச்சிக்குமேல் 370 கெஜ தூரத்தில் ஓர் அணைகட்டி நீரைத் தேக்கி, குழாய்களின் மூலம் அந் நீரை நகரின் எல்லாப் பகுதிகளுக்கும் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்காக ரூ 43,000 செலவிடுவதென்றும் முடிவு செய்யப்பட்டது. பிறகு, இந் நீர்த்தேக்கம் சுண்ணாம்புக் கலவையால் உறுதியாகக் கட்டப்பட வேண்டு மென்று முடிவு செய்யப்பட்டதால் இத்திட்டத்தின் செலவு ரூ 62,250 க்கு உயர்த்தப் பட்டது. நகராட்சி மன்றம் பூராச் செலவையும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருந்ததால், அரசியலாரின் உதவியை நாடவேண்டிய தாயிற்று.

ஃபிஷர் சீமாட்டியின் இருக்கை :

திருவாளர் ஃபிஷர் என்ற ஒரு வெள்ளையர் மதுரையில் அலுவலில் இருந்தார். செண்பகனூரில் அவருக்குச் சொந்தமான மாளிகை ஒன்றிருந்தது. அதில் தம் மனைவியை விட்டுவிட்டு மதுரைக்குச் சென்று விடுவார். ஓய்வு நாட்களில் செண்பகனூர் திரும்புவார். பழனி மலையின்மீது வரும் குதிரைப் பாதையின் உச்சியில் அமைந்துள்ள வளைவில், அழகிய சிறிய ஒரு கோடைமனை அமைத்தார். தனிமை வருத்தும் போது, ஃபிஷர் சீமாட்டி அவ்வளைவில் அமர்ந்துகொண்டு மதுரை நகர் அமைந்துள்ள திக்கைப் பார்த்த வண்ணம் இருப்பாராம், குறிப்பிட்ட நாட்களில் தம் கணவர் குதிரை ஊர்ந்து மலைவழிப் பாதையில் ஏறிவரும் காட்சியை அங்கிருந்து கண்டு களிப்பதுண்டாம். அதனால் அவ்விடம் இன்றும் ஃபிஷர் சீமாட்டியின் இருக்கை (Lady Fischer's seat) என்று எல்லோராலும் அழைக்கப் படுகிறது. 'வன போசனம்' உண்பதற்கு இது மிகவும் ஏற்ற இடமாக எல்லோராலும் இப்பொழுது கருதப்படுகிறது.

வானாய்வுக்கூடம் :

கோடைக்கானலில் அமைந்துள்ள வானாய்வுக் கூடம் சென்னை மாநிலத்திலேயே மிகவும் குறிப்பிடத் தக்க ஒன்றாகும். இது கோடைக்கானலுக்கு இரண்டு கல் தொலைவில், பூம்பாறைக்குச் செல்லும் பாதைக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு சிகரத்தின்மேல் நிறுவப்பட்டுள்ளது. கி. பி. 1899-ஆம் ஆண்டு இந்திய நாட்டின் வான ஆராய்ச்சிக் கூடங்கள் திருத்தியமைக்கப்பட்டபொழுது, சென்னையிலிருந்த வானாய்வுக் கூடம் இங்கு மாற்றப்பட்டது. உதகமண்டலத்திலும், கோதகிரியிலும் வான ஆராய்ச்சிக் கூடங்கள் நிறுவ முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆனால் அவ்விடங்களைவிடக் கோடைக்கானலே வான ஆராய்ச்சிக்கு ஏற்ற இடம் என்று முடிவு செய்யப்பட்டது. இவ்விடத்தின் பொருத்தமான தட்ப வெப்ப நிலையும், மப்பு மந்தாரமற்ற தெளிந்த வானமும் இவ்வாராய்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிகின்றன.

19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கோடைக்கானலில் ஒரு வீழ்கொள்ளி (Meteorite) திருவாளர் லோகன் என்பாரின் தோட்டக்காரனால் தோண்டி எடுக்கப்பட்டது. நில ஆராய்ச்சித் துறையினர், இந்தியாவில் காணப்படும் இரண்டாவது இரும்பு வீழ் கொள்ளி இதுவே என்று கூறுகின்றனர். இதன் நிறை 35 ராத்தல். இது இப்போது கல்கத்தா பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ் வீழ்கொள்ளி வான ஆராய்ச்சியாளரின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்ததால், 105 ஆண்டுகளாகச் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த சென்னை வானாய்வுக் கூடம் கோடைக்கானலுக்கு மாற்றப்பட்டது. முதன் முதலில் கிளென் வீழ்ச்சிக்கருகில் தற்காலிகமாக இக்கூடம் நிறுவப்பட்டது. மிகவும் உயர்ந்துள்ள, கோடைக்கானலுக்கு அருகில் அமைந்திருக்கும் தற்போதைய இடத்திற்குப் பிறகு இது மாற்றப்பட்டது.

தற்போதுள்ள வானாய்வுக்கூடம் திருவாளர் ஆர். எஃப், ஸ்டோனி என்ற ஒரு சிறந்த பொறியியல் வல்லுநரால் கட்டி முடிக்கப்பட்டது. சென்னைமாநில ஆளுநராக இருந்த திருவாளர் வென்லாக் என்பவர் தாம் கி. பி. 1895-ஆம் ஆண்டு இக்கட்டிடத்திற்குக் கல் நாட்டினார். குதிரைப் பாதையின் வழியாகவே குதிரையூர்ந்து அவரும் கோடைக்கானலுக்கு வந்தார். இதை நல்ல வாய்ப்பாகக் கொண்ட கோடைக்கானல் மக்கள் இக்குறிஞ்சி நகரை இருப்புப்பாதை மூலமாகவோ, வண்டிப்பாதை மூலமாகவோ இணைக்க வேண்டுமென்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார். வென்லாக் அவர்கள் இங்கு வந்தபோது, மழைக்கால இரவில் இரட்டை வண்டியில் பயணம் செய்தும், குதிரைப்பாதையில் நடந்தும், புரவியூர்ந்தும் மிகவும் தொல்லைகளுக்குள்ளாகிக் கோடைக் கானலையடைந்தார். கோடைக்கானலுக்கு ஒரு நல்ல பாதை அவசியம் என்பதை அவரும் உணர்ந்திருக்க வேண்டும்.

சர் ஆர்தர் ஹாவ்லாக் என்பவர் 1899-ஆம் ஆண்டு வானாய்வுக்கூடத்தைப் பார்வையிட்டார். சென்னைக் கிருத்தவக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவரும், சென்னை அரசியலாரின் வான ஆராய்ச்சித்துறைத் தலைவராக இருந்தவருமான திருவாளர் மிச்சி ஸ்மித் என்பவர் கோடைக்கானல் வானாய்வுக் கூடத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறிதுகாலம் பணி செய்தார். அவர் அலுவலிலிருந்து ஓய்வு பெற்றதும், திருவாளர் ஜே. எவர்செட் என்பவர் பொறுப்பேற்றார். எவர்செட் அவர்களின் மனைவியாரும் வான ஆராய்ச்சிக் கலையில் நல்ல புலமை பெற்றவர், அவ்வம்மையார் 'தென்மண்டல விண்மீன்களின் வழி காட்டி' (Guide to the Southern Stars) என்ற ஒரு நூலை எழுதிப் பதிப்பித்தார்.

கி. பி. 1910-ஆம் ஆண்டு திருவாளர் கேனான் மீச்சி என்பாரும் அவர் மனைவியாரும், திருநெல்வேலிக் குடியேற்றத்திலிருந்து தங்கள் இல்லத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, வானத்தில் ஒரு பெரிய வால்மீனைக் (Comet) கண்டார்கள். ஆங்கிலக் கழகத் (English Club) தினருகே நின்று அதைப் பற்றி, வான ஆராய்ச்சி வல்லுநரான மிச்சி ஸ்மித்தைக் கேட்டார்கள். அதைக் கண்ட மிச்சி ஸ்மித், அது ஒரு ஹாலி வால்மீன் (Halley's Comet) என்று கூறி விட்டு, 'ஜெருசலம்' என்ற தம் குதிரைமேல் தாவி ஏறி, வான ஆய்வுக்கூடத்திற்கு ஓடி, அதைப்பற்றி ஆராய்ந்தார். அதுபோன்ற வால்மீன் பல நூற்றாண்டு கட்கு ஒருமுறைதான் தென்படுமாம். கி. பி. 1910-ஆம் ஆண்டு, கோடைக்கானலில் வாழ்ந்த ஒருவர் தம் நண்பருக்கு எழுதிய கடிதத்தில், 'நான் கோக்கர் நடை வெளியில் அதிகாலை 4-40 மணிக்குச் சென்று கொண்டிருந்தபொழுது ஒரு வால்மீனை வானத்தில் கண்டேன். அதன் பேரழகு என்னை வியப்பில் ஆழ்த்தியது. அது போன்ற வால்மீனை நான் என்றும் கண்டதில்லை. அது அடிவானத்திலிருந்து நடுவானம் வரை நீண்டு பேரொளியோடு விளங்கியது' என்று குறிப்பிட்டார்.

திருவாளர் எவர் செட் ஒய்வ பெற்றகம். டாக்டர் டி. ராய்ட்ஸ் என்பவர் பொறுப்பேற்றார். 1936-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் நாள் ஏற்பட்ட 'பூரண சூரிய கிரகணத்தை ' (total eclipse of the sun)ப் பற்றி ஆராய்வதற்காக அவரும் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டார்.

கோடைக்கானலிலுள்ள இவ்வானாய்வுக் கூடம், 'இந்திய அரசியலாரின் வானக்கலை ஆய்வுக்கூடம்' (The Government of India Solar Physics Observatory) என்ற பெயர் கொண்டு விளங்குகிறது. இக் கூடம் சூரியனைப்பற்றி ஆராய்ந்தும், சுண்ண ஒளி (Calcium light) யையும், நீர்வாயு ஒளி (Hydrogen light) யையும் படம் பிடித்தும், பல உண்மைகளை வெளியிட்டு வானக்கலை வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டு வருகிறது. மேலும் புவிக்கவர்ச்சி (Terrestrial magnetism) யைப் பற்றியும், அனிலோற்பன்னக் கலை (Meteorology) யைப் பற்றியும், பூகம்பவியல் (Seismology) பற்றியும் இது ஆராய்கிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வில்சன்மலை (Mt. Wilson) மீது அமைந்துள்ள வானாய்வுக் கூடமும் ஃப்ரான்ஸ் நாட்டில் மியூடன் (Meudon) என்ற இடத்தில் அமைந்துள்ள வானாய்வுக்கூடமும் ஆற்றும் அத்தனை ஆராய்ச்சிகளையும் இது இங்கு ஆற்றுகிறது. மிகவும் புதுமையான வான ஆராய்ச்சிக் கருவிகளும், அனிலோற்பன்னக் கலையைப் பற்றி ஆராயும் கருவிகளும் இங்குப் பொருத்தப்பட்டுள்ளன. கி. பி. 1937-ஆம் ஆண்டு டாக்டர் ராய்ட் அலுவலிலிருந்து ஓய்வு பெற்றதும் டாக்டர் ஏ. எல். நாராயணன் இவ்வானாய்வுக் கூடத்தின் பொறுப்பை ஏற்றார்.

முதலிலேயே வான ஆய்வுக்கூடப் பொறுப்பாளரிடம் அனுமதி பெற்று, அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரிய தொலைநோக்காடி (Telescope)யின் மூலம் வான மண்டலத்தில் திரியும் கோள்களையும் விண்மீன்களையும் காணலாம். வான மண்டலத்தின் தன்மையை அறிந்து இன்படைவதற்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையிலும் பொதுமக்கள் இவ்வானாய்வுக் கூடத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்திய நாட்டுக் கால அளவைப் (Indian Standard Time) பொதுமக்களுக்கு உணர்த்துவதற்காக நாள்தோறும் காலை பத்து மணிக்கு ஒரு கொடி இவ்வானாய்வுக் கூடத்தில் உயர்த்தப்படுகிறது. வான ஆராய்ச்சியின் மூலமாகவும், உலகத்தின் மற்ற பகுதிகளில் அமைந்துள்ள வானாய்வுக் கூடங்களிலிருந்து வெளியாகும் ரேடியோ காலக் குறிப்புகளின் மூலமாகவும், இங்கு அமைந்துள்ள மணிப்பொறி சரியான கால அளவைக் காட்டி நிற்கிறது. பைன் மரங்களும், நீலப்பிசின் மரங்களும் கோடைக்கானலைச் சுற்றியுள்ள காடுகளில் உயர்ந்து வளர்ந்திருப்பதால் இங்கு ஏற்றப்படும் கொடி, எல்லா இடங்களுக்கும் தென்படுவதில்லை.

கல்விக் கூடங்கள்

புனித இதயக் கல்லூரி :

புனித இதயக் கல்லூரி (Sacred Heart Collage) கி. பி. 1895-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதில் ஏறக்குறைய 2000 மாணவர்கள் பயின்று வெளியேறியிருக்கின்றனர். இந்திய மாணவர்களல்லாமல், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா, பர்மா முதலிய நாடுகளிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து கல்வி பயில்கின்றனர். இது கோடைக்கானலுக்குச் செல்லும் பாதையில், செண்பகனூரில் அமைந்துள்ளது. இது ரோமன் கத்தோலிக்கருக்கரிய சமயக் கல்லூரியாகும். இப்பள்ளி துவக்கப்பட்ட காலத்தில் பாதிக்குமேல் ஃப்ரெஞ்சு நாட்டு இளைஞர்கள் கல்வி பயின்றனர். உலகப் போர்களினால் வெளிநாட்டிலிருந்து வரும் மாணவர்களின் தொகை குறைந்துவிட்டது. இக் கல்லூரி கட்டப்பட்டிருக்கும் இடம் கி. பி. 1878-ஆம் ஆண்டிலிருந்து பலதடவை சிறுசிறு பகுதிகளாக வாங்கப்பட்டது. ஒரு விவசாயப் பள்ளியையும், தொழிற்பள்ளியையும் நிறுவும் நோக்கத்தோடு இவ்விடம் வாங்கப்பட்டது. சின்கோனா மரங்களும் வேறு சில பயிர்களும் இங்கு முதலில் பயிரிடப்பட்டன. ஆனால் அவை நல்ல முறையில் விளையாத காரணத்தால் விவசாய, தொழில் கல்லூரிகள் நடத்தும் எண்ணம் கைவிடப்பட்டது. பிறகு இப்பொழுது உள்ள சமயக் கல்லூரி துவக்கப்பட்டது.

கோடைக்கானலில் வாழும் மக்களுக்கு இக் கல்லூரி மிகவும் அறிமுகமான ஒன்று. செண்பகனூரிலுள்ள யூகிலிப்டஸ் காட்டின் வழியாக வரும்போது, கண்கவரும் அழகிய தோட்டத்தின் நடுவே கலையழகுமிக்க இக்கல்லூரிக் கட்டிடங்கள் நிமிர்ந்து நிற்பதைக் கண்டு மகிழலாம். கோடைக்கானலுக்கு வரும் உந்து வண்டி, செண்பகனூர் அஞ்சல் நிலையத்திற்கு அருகில் நின்றால், அருகிலுள்ள இக்கல்லூரியின் வாயில் தென்படும். கோக்கர் நடைவெளியில் சென்றோமானால் இக்கல்லூரியின் மணியொலி நம் காதில் மோதும். கழுத்திலிருந்து கால்வரை நீண்ட ஆடை உடுத்துக் கொண்டு, இடுப்பில் செந்நிறப்பட்டை அணிந்து கொண்டு, கையில் புத்தகமோ, மாதிரிப்பெட்டியோ (Specimen-case) தாங்கிய வண்ணம் பாதிரி நடை வெளி (Priest's walk) யிலும், கோடைக்கானலின் இயற்கையழகு சொரியும் எல்லா இடங்களிலும் இம் மாணவர்களின் கூட்டத்தைக் காணலாம். அக் கல்லூரிக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப் படுவதில்லை. அவர்கள் கல்விமுறை, வேலைத் திட்டம் ஆகியவை பற்றி யாருக்கும் தெரியாது.

இடைக்கலையோ (Intermediate), அதைவிட உயர்ந்த கல்வியோ கற்ற மாணவர்களே இங்குச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இங்கு எட்டாண்டுக்கல்வி எல்லாருக்கும் பயிற்றப்படுகின்றது. முதல் இரண்டாண்டு, சமயவாழ்வில் ஆழ்ந்த பற்றுக் கொள்ளும் வகையில் மாணவர்கள் பயிற்றப்படுகிறார்கள். பிறகு மூன்றாண்டுகள் இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் அறிவு பெறுகிறார்கள். பல தாய்மொழிகளைப் பேசும் மாணவர்கள் இங்குக் கூடுவதால் பொதுவாக ஆங்கிலமும், இலத்தீனும் பேச்சு மொழியாகவும் கற்பிக்கும் மொழியாகவும் பயன்படுகின்றன. கடைசி மூன்றாண்டுகளும் தத்துவ ஆராய்ச்சியிலே கழிகின்றன, கிரேக்க ரோம நாட்டுப் பெரியார்கள் அருளிச் செய்த பழமையான தத்துவங்களும், இந்திய நாட்டுத் தத்துவங்களும், மேலை நாட்டுத் தத்துவங்களும் தெளிவாகக் கற்பிக்கப்படுகின்றன. கல்லூரியில் வரலாறு படித்தவர்கட்கு இங்கு அறிவியலும் (Science), அறிவியல் படித்தவர்கட்கு வரலாறும் கற்பிக்கப் படுகின்றன. இவ்வாறு எட்டாண்டுக் கல்வி முற்றுப் பெற்றதும், அம்மாணவர்கள் பூனாவிற்கோ, குர்சியாங்கிற்கோ செல்ல வேண்டும். அங்கு, நான்காண்டுச் சமயக் கல்வியும், பாதிரித் தொழிலுக்கேற்ற ஓராண்டுப் பயிற்சியும் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன, அஞ்சல் நிலையத்திற்கருகில் இக்கல்லூரியினால் நடத்தப்படும் பொருட்காட்சிசாலை ஒன்றுள்ளது. தோண்டி யெடுக்கப்பட்ட புதைபொருள்களும் பழனி மலையிலுள்ள தாவர வகைகளும், விலங்குகளும், பலவகையான பாம்புகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன. மண்ணில் மூழ்கிய புதைபொருள்களைத் தேடியெடுத்து ஆராய்வதில், இக்கல்லூரிப் பேராசிரியர்கள் பலர் பேரூக்கும் காட்டினர்; காட்டிவருகின்றனர்.

ஹைகிளெர்க் பள்ளி :

பல ஆண்டுகள் திட்டமிடப்பட்டுக் கோடைக்கானலில் 'ஹைகிளெர்க் பள்ளி' கி. பி. 1901-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இப்பள்ளி துவக்கப்படுவதற்கு முன் 'ஹைகிளெர்க் பள்ளி' (Highclerc boarding School) என்ற ஒரு நிறுவனம் கோடைக்கானலில் இருந்தது. கோடைமாதங்களில் இங்குத் தங்க வரும் அமெரிக்க, ஆங்கிலேய மக்களின் குழந்தைகள் இப்பள்ளிவிடுதியில் தங்கிப் படித்தனர். அப்பொழுது இந்நிறுவனத்தைப் 'பாதிரிமாரின் குழந்தைகள் பயிலும் கோடைக் கானல் பள்ளி' (The Kodaikanal School for Missio naries children) என்றும், 'கோடைப்பள்ளி' என்றும், 'ஹைகிளெர்க், என்றும் அழைத்தனர். முதன் முதலாகப் பதின்மூன்று மாணவர்களே இப்பள்ளியில் சேர்ந்தனர். திருமதி எம். எல். எட்டி என்ற அமெரிக்க மாது, தன் மகனான ஷெர்வுட் எட்டியைக் காண இந்தியா வந்தார். கோடைக்கானல் மக்கள் அவரை இப்பள்ளியின் முதல்வராகப் பணி ஏற்குமாறு வேண்டினார்கள். அந்த அம்மையாரும், பொறுப்பேற்றார். தாய்மையுள்ளம் கொண்ட அவ்வம்மையார் மாணவர்களின் தேவையை யறிந்து அவர்கள் தங்கிப் படிப்புதற்காக, இராப்பள்ளிகளைப் போன்று இரண்டு சிறிய கட்டிடங்களைக் கட்டினார். அவை பெரிய, 'பள்ளி யறை', 'சிறிய பள்ளியறை' என்று அழைக்கப்பட்டன. அப்பள்ளியைச் சுற்றி ரோஜாப்பூத் தோட்டமும், பைன் மரக்காடும் பேரிக்காய்த் தோட்டமும் அமைக்கப்பட்டன.

கி. பி. 1902-ஆம் ஆண்டு இப்பள்ளி 'செண்ட்ரல் ஹவுசுக்கும் (Central House) ராக் காட்டேஜு (Rock cottage)க்கும் மாற்றப்பட்டது. அப்போது திருமதி எட்டி அமெரிக்கா சென்றிருந்தார்கள். மீண்டும் இந்தியா திரும்பியபோது, ரூ 10,000 திரட்டிக்கொண்டு வந்தார். அப்பணத்தைக் கொண்டு சந்தைவெளியில் அமைந்திருந்த ஹைகிளெர்க் பள்ளியை விலைக்கு வாங்கினார். கி.பி.1902 முதல் 1904 வரை இவ்விடம் குமாரி ஓர்ல்பார் என்பவரால் குடிக்கூலிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர் கொடைத்தன்மை மிக்கவர்; இந்தியாவில் பல இடங்களில் தங்கும் உணவுவிடுதிகளையும் (Boarding houses), கிருத்தவப் பாதிரிகளுக்கான தங்கல் மனைகளையும் நிறுவியவர். மீண்டும் இப் பள்ளி ஹைகிளெர்க்கிற்கு மாற்றப்பட்டது. உலகப்போர்கள் நடந்த சமயத்தில் பல நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இங்குப் பணியாற்றினர். பொதுவாக அமெரிக்க ஆங்கில நாட்டுக் கல்விமுறைகள் இங்குக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. ஆனால், சில சமயங்களில் அமெரிக்க மாணவர்கள் மிகுந்திருந்த காரணத்தால் அமெரிக்க நாட்டுக் கல்வித்திட்டமே இப்பள்ளியிலும் மேற்கொள்ளப்பட்டது. ஆண் பெண் ஆகிய இரு பாலரும் இங்குக் கல்வி பயில்கின்றனர். கோடையில் தங்குவதற்காகக் கோடைக்கானல் வரும் பெற்றோர்களின், இளஞ்சிறுவர் சிறுமியர்களுக்கான 'கிண்டர் கார்டன் பள்ளி' ஒன்றும் ஆண்டுதோறும் மூன்று திங்கள்களுக்கு இங்கு நடத்தப்படுகிறது. அமெரிக்கன் மிஷனைச் சார்ந்த கிருத்தவரின் குழந்தைகள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், இலங்கை, அரேபியா, பாரசீகம் சியாம் முதலிய அண்டை நாடுகளிலிருந்தும் இங்கு வந்து கல்வி பயில்கின்றனர். ஓர் இரட்டைமாடிக் கட்டிடமும், வேறுபல கட்டிடங்களும், இப்பள்ளிக்காகக் கட்டப்பட்டன. பார்டன் (Barton), ஏர்லி (Airlie) முதலிய இடங்களும் இப்பள்ளிக்காக வாங்கப்பட்டன. பெண்டர்லாச்( Benderloch) என்ற இடம் பள்ளித்தலைவர் தங்குவதற்காக வாங்கப்பட்டது. வில்லிஸ்டன் (Williston), லிட்டில் வில்லி (Little Willie) என்ற இடங்கள் ஆசிரியர்களின் குடியிருப்புகளுக்காக வாங்கப்பட்டன. 'வின்ஸ்டன்' (Winston) என்ற இடம் பள்ளிக்குரிய இலவச மருத்துவமனையாகப் பயன்படுகிறது. கி. பி. 1932-ஆம் ஆண்டு இது ஓர் உயர் நிலைப்பள்ளியாக மாற்றப்பட்டது. 'இங்கு நடத்தப்படும் இறுதித் தேர்வு மெட்ரிகுலேஷனுக்கு ஒப்பானது. இதில் கல்வி கற்று வெளியேறும் மாணவர்கள் அமெரிக்கா, கானடா நாட்டுக் கல்லூரி வகுப்புக்களில் சேர்த்துக்கொள்ளப் படுகின்றனர். இங்குப் பயிலும் மாணவர்கள் சீனியர் கேம்பிரிட்ஜ்' தேர்விலும் கலந்துகொண்டு நல்ல வெற்றியடைகின்றனர். ஏரிக்கருகில், இப்பள்ளிக்காக ஒரு பரந்த விளையாடுமிடம் அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் அலெக்ஸ், திருமதி அலெக்ஸ், எஸ். வில்சன், குமாரி ப்ரிவாஸ்ட், திருவாளர் கார்ல், திருமதி கார்ல், டபிள்யூ ஃபெல்ஸ் ஆகியோர், நீண்ட நாள் பள்ளிப்பொறுப்பாளர்களாகப் பணியாற்றினர். பொதுமக்களிடத்தில் பணம் திரட்டி, திருமதி மார்கரட் எட்டியின் நினைவுச் சின்னமாக இப்பள்ளியில் ஒரு கோவிலைக் கட்டியுள்ளனர்.

பிரசெண்டேஷன் கான்வென்ட் :

கோடைக்கானலிலே குறிப்பிடத்தக்க மற்றொரு பள்ளி, 'பிரசெண்டேசன் கான்வெண்ட்' என்ற பெண்கள் உயர் நிலைப்பள்ளியாகும். சென்னைப் பிரசெண்டேசன் திருச்சபையைச் சார்ந்த சேவியர் தாயார் (Rev. Mother Xavier) அவர்களும் வேறு சில கன்னியரும் 1914-ஆம் ஆண்டு கோடைக்கானலுக்கு வந்திருந்தனர். அவ்வாண்டு 'ஹில்சைட்' (Hill Side) என்ற இடத்தில் தங்கினர். கி. பி. 1915-ஆம் ஆண்டு 'கென்மூர்' (Kenmure) என்ற இடத்தில் தங்கினர். அப்பொழுது அவர்களுடன் சில குழந்தைகளும் தங்கியிருந்தனர். அவ்வாண்டு எல்லோரும் சென்ற பிறகு, சேவியர் தாயாரும், இக்னேசியஸ் தாயாரும், ஃபோர் வீரி என்ற இடத்தில் தங்கி, ஒரு பள்ளி நிறுவுவதற்கு ஏற்ற இடத்தைத் தேடினர். கிளென் வீழ்ச்சிக்கு அருகில் அமைந்திருந்த மலையுச்சியில் (முன்பு வானாய்வுக்கூடம் இருந்த இடம்) பள்ளியை நிறுவுவது என்று முடிவு செய்தனர். அப்பள்ளியை அமைப்பதற்கு வேண்டிய பொருளாதாரத்தைப் பற்றித் திருவாளர் ஈ. ஆர். லோகன் என்பாருடன் ஆலோசனை நடத்தினர்.

கி. பி. 1916-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் பிரசெண்டேசன் திருச்சபையைச் சார்ந்த கன்னியர்கள், 'ஹில் சைட்' என்ற இடத்திலேயே 17 மாணவியர்களைக் கொண்டு இப்பள்ளியைத் துவக்கினர். 1916-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 16-ஆம் நாள் இப்போதுள்ள பள்ளிக் கட்டிடத்திற்குக் கல் நாட்டு விழா நடத்தப்பட்டது. மரங்களும் நடப்பட்டன. கட்டிட வேலை முடிந்ததும் கி. பி. 1917-ஆம் ஆண்டு ஃபெப்ருவரித் திங்களில், பள்ளி புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. பள்ளியில் ஒரு கோவிலும் அமைக்கப்பட்டது. அக்கோவில் காலையில் தொழுகைக்குரிய இடமாகவும், மாலையில் பள்ளியாகவும் பயன்படுத்தப்பட்டது. முதலில் மிகவும் எளிய முறையிலேயே இப் பள்ளி தொடங்கியது. இங்குப் பணிபுரிந்த கன்னிமார்களுக்குப் போதிய வசதியும் இல்லை. சாமான்கள் கொணர்ந்த பெட்டிகளே நாற்காலிகளாகப் பயன் படுத்தப்பட்டன. மாட்டு வண்டியில் பொருத்தப்பட்ட பீப்பாய்களின் மூலம் நெடுந்தொலைவிலிருந்து நீர் கொண்டுவரப்பட்டது. அப்போது போக்குவரவு வசதிகளும் மிகக் குறைவு. கி. பி. 1916-ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாகத் துவங்கிய இது கி. பி. 1919-ஆம் ஆண்டு உயர் நிலைப்பள்ளியாக மாறியது. கி. பி. 1920- ஆம் ஆண்டு கோடைக்கானலுக்கு வந்த வெலிங்க்டன் சீமாட்டி, இப்பள்ளிக்கான இரட்டை மாடிக் கட்டிடம் ஒன்றுக்குக் கால்கோள் இட்டார். 1 லட்சம் ரூபாய் பொருட் செலவில் இக்கட்டிடம் கட்டப்பட்டது. 'கிண்டர் கார்டன்' வகுப்பிலிருந்து, சீனியர் கேம்பிரிட்ஜ் வகுப்பு வரை, இக்கட்டிடத்தில் நடைபெற்றன.

இப்பள்ளி நாளடைவில் நல்ல விளம்பரமும் முன்னேற்றமும் பெற்று ஒரு சிறந்த ஐரோப்பியப் பள்ளியாக மாறியுள்ளது. பத்து வயது முடியும்வரை, சிறுவர்களும் இங்கு மாணவர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். பெண்கள் பள்ளியிறுதி வகுப்புவரை படிப்பதோடு, டிரினிடி கல்லூரி இசைத் தேர்வுக்கும் பயிற்சி பெறுகின்றனர். சேவியர் தாயார் ஓய்வு பெற்றதும், அகஸ்டின் தாயார் பள்ளித் தலைவராகப் பொறுப்பேற்றார். கி. பி. 1926-முதல் 1944 முடியப் பணியாற்றினார். அவருக்குப் பிறகு ஜோசஃபைன் தாயார், பள்ளித் தலைவராகப் பணியாற்றி வருகிறார். கோடை நாட்களில் இப்பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழா குறிப்பிடத்தக்கது. செயிண்ட் ஜான் சோதரியாலும், குமாரி எல்ஸ்பெர்க் என்பவராலும் இங்கு மாணவிகளுக்குச் சிறந்த கலைப் (Fine Arts) பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆண்டு விழாக் காலங்களில் மாணவிகள் நிகழ்த்தும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் பாராட்டுதலுக்குரியவை,

கோஹென் நினைவுப் பள்ளி :

கி. பி. 1912-ஆம் ஆண்டு, கோடைக்கானலில் லாச் எண்டு' (Loch End) என்ற ஓர் இடத்தை, அமெரிக்க லூதரன் சமயத்தைச் சார்ந்தவர்கள், திருவாளர் டேனியல் மக்நாயர் என்ற பொறியியல் வல்லுநரிடமிருந்து விலைக்கு வாங்கினார்கள். கி. பி. 1922-ஆம் ஆண்டு, தங்கள் குழந்தைகள் பயிலுவதற் கென்று ஒரு பள்ளியை நிறுவினார்கள். தங்கள் தந்தையர் நாடான அமெரிக்க நாட்டுக்குக் கல்வி முறையை அப்பள்ளியில் புகுத்தினர். கோடைக்காலத்தில் இங்கு வந்து தங்கியவர்களின் குழந்தைகளுக் சான பருவப்பள்ளி (Season school) யாகவே இது முதலில் துவக்கப்பட்டது. திருவாளர் பாச்மேன் என்ற ஆசிரியர் பள்ளிக்காகச் சிறிய ஒரு கட்டிடத்தைக் கட்டினார். பிறகு மாணவர்களுக்குத் தங்குமிடமும், கோவிலும் அமைத்தார். இவ்விரண்டின் கட்டிடக் கலையழகு கோடைக்கானலில் குறிப்பிடத்தக்கது, திருவாளர் புச்சானன் புதைபொருள் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ளவர். பழனிமலைகளில் கி. பி. 1942-ஆம் ஆண்டு அவர் தோண்டியெடுத்த புதைபொருள்கள் செண்பகனூரிலுள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளன. இப்பள்ளியில் 8 வகுப்புக்கள் இப்பொழுது உள்ளன. திருவாளர் மியூல்லெர் என்பாரும் திருமதி ஹெக்கல் அம்மையாரும் ஆசிரியர்களாக இங்குப் பணியாற்றுகின்றனர்.

ஸ்வீடிஷ் பள்ளி :

இந்தியாவில் வாழும் ஸ்வீடிஷ் குழந்தைகள் பயில்வதற்கென்று கோடைக்கானலில் ஒரு பள்ளி உள்ளது. ஸ்வீடிஷ் குழந்தைகள் முதலில் ஹைகிளெர்க் பள்ளிக்கே அனுப்பப்பட்டனர். ஆனால் இருபதாண்டுக்கு முன் ஸ்வீடிஷ் குழந்தைகள் தனியாகப் பயில்வதற் கென்று இப்பள்ளி துவக்கப்பட்டது. இப்பள்ளியின் பெயர் 'சால்விக்' (Solvik) என்பதாகும். ஹைகிளெர்க் பள்ளி இருக்கும் அதே மலையின்மீது தான் இதுவும் அமைந்துள்ளது. இங்குப் பயிலும் மாணவர்கள் தங்கள் தாய் மொழியிலேயே கல்வி பெறுகின்றனர். ஹைகிளெர்க் பள்ளியில் பயிலும்போது பல நாட்டு மாணவர்களோடு சேர்ந்து பழகும் வாய்ப்பு இருந்தது. இப்பொழுது அது இல்லை. இந்திய நாட்டில் உள்ள ஸ்வீடிஷ் பள்ளி இது ஒன்றுதான். எனவே, இந்திய நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வாழும் ஸ்வீடிஷ்காரர்கள், தங்களுடைய குழந்தைகளை 'சால்விக்'கிற்கே அனுப்புகின்றனர். கடந்த சில ஆண்டுகட்கு முன்பாக, ஸ்வீடன் நாட்டுப் பாராளு மன்றமும் இதை அங்கீகரித்தது. இப்பள்ளி உருவத்தில் சிறியதாக இருந்தாலும் ஈடற்ற அழகோடு ஏரியைப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது.

தமிழ்ப் பள்ளிகள் :

கோடைக்கானலில் வாழும் தமிழ் மாணவர்கள் பயிலுவதற்கென்று பல தமிழ்ப் பள்ளிகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. யூனியன் சர்ச் கோடைக்கானலில் நிறுவப்பட்ட போது பாதிரியாரின் இல்லத்திற்கருகில், அமெரிக்கன் மிஷனைச் சார்ந்தோர் ஒரு துவக்கப் பள்ளியை நிறுவினர். கோடைக்கானலில் மக்கட் பெருக்கம் ஏற்பட்டதும், நகராட்சியினர் வான்ஆய்வுக் கூடப் பாதையிலும், உந்து வண்டி நிலையத்திற்கருகிலும் தமிழ் மாணவர்களுக்கென்று பல துவக்கப் பள்ளிகளை நிறுவினர். கி. பி. 1942-ஆம் ஆண்டு 'தோபிகானா'விற்கு எதிரில் ஒரு நடுநிலைப் பள்ளி துவக்கப்பட்டது. இது இப்பொழுது உயர் நிலைப் பள்ளியாக வளர்ந்துள்ளது. ரோமன் கத்தோலிக்கச் சமயத்தாரால் மூன்று தமிழ்ப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. அவை மேல் ஏரிப் பாதையிலும், கான்வெண்ட் பாதையிலும் அமைந்துள்ளன.

ஏழை மாணவர் பள்ளி :

கி. பி. 1919-ஆம் ஆண்டு இந்திய ஏழை மாணவர்களுக்காக ஓர் இலவசப் பள்ளி துவக்கப்பட்டது. இப்போது அது 'செயிண்ட் சேவியர் இந்திய ஏழை மாணவர் பள்ளி' என்ற பெயர் கொண்டு விளங்குகிறது. 80 மாணவர்களுக்கு இலவச உணவும் உடையும் இங்கு அளிக்கப்படுகின்றன. ரோமன் கத்தோலிக்க மாணவர்களடங்கிய ஒரு குழு இப் பள்ளியில், அமைக்கப் பட்டுள்ளது. இக் குழு , கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்த ஏழைகளுக்குத் தொண்டு புரியப் பயன்படுத்தப்படுகிறது.

அனாதைப் பள்ளி :

கி. பி. 1906-ஆம் ஆண்டு ஓர் ஆங்கிலப் பாதிரியார், 'ஆண்கள் ஆங்கிலப்பள்ளி' என்ற ஒரு பள்ளியை ஃபெர்ன்ஹில் என்ற இடத்தில் துவக்கினார். ஆனால் அப் பள்ளி சில நாட்களில் மூடப்பட்டு விட்டது. 1908-ஆம் ஆண்டு குமாரி கார் என்பவர் சில ஆங்கிலக் குழந்தைகளுக்காகச் சிறிய பள்ளியொன்றைப் பென் லொமாண்ட்' என்ற இடத்தில் (ஸ்பென்சர் கடைக்குப் பின்னால்) துவக்கினார். அதுவும் கைவிடப்பட்டது. கி. பி. 1915-ஆம் ஆண்டு , இமயமலைச் சாரலிலுள்ள 'காலிம்பாங் விடுதி' (Kalimpong Homes) யைப் போன்று, ஆங்கிலோ இந்திய அனாதைக் குழந்தைகளுக்காகக் கோடைக்கானலிலும் ஒரு விடுதியை அமைத்தற்கான ஒரு திட்டம் உருவாகியது. செண்பகனூர் தொடரில், ப்ளேக்பர்ன் ஷோலா இருந்த இடத்தில் (அடுக்கம் கணவாயின் உச்சியில்) அவ் விடுதியைக் கட்ட முடிவு செய்தனர். இதற்குள்ளாகக் கோடைக்கானலில் வாடகைக் கட்டிடம் ஒன்றில் இவ்விடுதி துவக்கப்பட்டது, ஸ்பென்சர் கடைக்கு அடுத்தாற் போல் உள்ள 'கிளெஞ்சில்' (Glengyle) என்ற இடத்தில் வயது வந்த பெண்களுக்கான ஒரு விடுதியும், ஃபெர்ன்ஹில் மனையில் ஆண்களுக்கும் இளஞ் சிறுமியர்க்குமான விடுதியோடு பள்ளி ஒன்றும் நிறுவப் பட்டன. இக் கட்டிடத்திற்குப் 'ப்ளேக்பர்ன்' என்று பெயரிட்டனர். ஆனால் இவ்வனாதைப் பள்ளி நீலகிரி மலையின் மீதுள்ள கெய்டி பள்ளத்தாக்குக்கு மாற்றப்பட்டுவிட்டது. இப்பொழுது அங்குப் பெரும் அளவில் சிறப்பாக இப் பள்ளி நடத்தப்படுகிறது.

மாண்டிசோரிப் பள்ளி :

திருமதி மாண்டிசோரி அம்மையார் கி. பி. 1942 முதல் 1944 வரை கோடைக்கானலில் தங்கி யிருந்தார். அப்பொழுது சிறு குழந்தைகளுக்கான மாண்டி சோரிப் பள்ளி ஒன்றும், மாண்டிசோரிக் கல்வி முறையைப் பயிற்றுவதற்காக ஆசிரியப் பயிற்சிப் பள்ளி ஒன்றும் அவர் நடத்தினார். பல நாட்டுச் சிறு குழந்தைகளும் அப் பள்ளியில் கல்வி பயின்றனர். 'ரோஸ் பேங்க்'கில் அப் பள்ளியிருந்தது. புகழ் பெற்ற இப் பேராசிரியரின் காலடியிலமர்ந்து சிறந்த கல்வி பெறும் வாய்ப்பை இந்திய நாட்டின் பல பகுதியிலிருந்தும் வந்த குழந்தைகள் இரண்டாண்டுகள் பெற்றனர்.

கழகங்கள்

படகுக் கழகம் :- கோடைக்கானலிலுள்ள கழகங்களில் படகுக் கழகம் குறிப்பிடத் தக்கது. ஆரம்பத்திலிருந்தே ஏரியில் படகுகள் இருந்தன. சில தோட்ட முதலாளிகள் தங்கள் சொந்த உபயோகத்துக்காகக் கீழ் ஏரிப் பாதையில் சில படகு வீடுகளை {Boat houses) அமைத்தனர். ரோமன் கத்தோலிக்கப் பாதிரிமார்கள் 'வெஸ்ட் வர்டு ஹோ'விற்கு அருகில் ஒரு படகு வீட்டைக் கொண்டிருந்தனர். தனிப்பட்டவர்கள், படகுகளை வாங்கிக் கோடைக்கானலுக்குக் கொண்டு வருவது அவ்வளவு எளிதாகத் தோன்றவில்லை. ஆகையினால் இக் குறையைப் போக்க கி. பி. 1890-ஆம் ஆண்டு பொதுமக்களால் படகுக் கழகம் துவக்கப்பட்டது. முதலில் தனிப்பட்டவரிடமிருந்து சில படகுகளை இக் கழகம் வாங்கியது. கள்ளிக் கோட்டையிலுள்ள 'சால்டர் அண்டு கம்பெனி' (Salter and co.) யிலிருந்து, 'கேட்ஃப்லை' (Gadfly), சேஃபர் (Chafer) என்ற படகுகளும் வாங்கப்பட்டன. படகுக் கழகத்தின் முதல் கௌரவச் செயலாளராக இருந்தவர் கேப்டன் கிளார்க் என்பவர்.

நாய்களைப் படகுகளில் அனுமதிப்பதில்லை. மெருகிடப்பட்ட படகுகளில் சிறுவர்களை ஏற்றுவதில்லை. சிறுவர்களுக்காக 'லிலி' என்ற படகு உள்ளது. கி. பி. 1894-ஆம் ஆண்டுக் காவற் படைக் குறிப்பு (police reports) களில் படகுக் கழகம் தீக்கிரையானதாகக் குறிக்கப்பட்டுள்ளது. அதனால் ரூ. 1779 பெறுமான பொருள்கள் சேதமுற்றனவாம். பொதுமக்களிடம் நன்கொடையாகப் பொருள் திரட்டிப் படகுக் கழகத்திற்குப் புத்துயிர் கொடுத்ததோடு, போக்குவரவிற்கு இடைஞ்சலாக ஏரிக் கரையோரங்களில் முளைத்திருந்த நாணல்களையும் அகற்றினர். ஒவ்வோர் ஆண்டும் 60 முதல் 80 உறுப்பினர்கள் வரை சேர்ந்துகொண்டே யிருந்தனர். உறுப்பினர் தொகை பெருகியதும், நிறையப் படகுகள் வாங்கப்பட்டன. கி. பி. 1897-ஆம் ஆண்டு , படகுக் கழகத்தின் செயற்குழுவில், புதுக்கோட்டை மன்னரின் இளவலாகிய துரை ராஜாவின் பெயர் காணப்படுகிறது. திருவாளர் மிச்சி ஸ்மித், வான் ஆய்வுக்கூடப் பொறுப்பாளர் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும், 'வின்ஸ்ஃ போர்டு' (Winsford) மாளிகையில் தங்கி வாழ்ந்தார். அப்போது படகுக் கழகத்தின் கௌரவச் செயலாளராகப் பொறுப்பேற்றார். அவர் வின்ஸ்ஃபோர்டு மாளிகையில் அமர்ந்தவண்ணம், தம் முடைய தொலை நோக்காடியின் மூலமாகப் படகுகளைக் கண்காணிப்பார். படகுக் கழகத்தின் விதிகள் ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா எனக் கவனிப்பார். முதன் முதலில் தலைமைப் படகோட்டியாகப் பணியாற்றியவன் பெயர் 'மைகேல்' என்பதாகும். படகுகள் தேவைப்படும்போது, பிரயாணிகள் கரையில் நின்று கொண்டு மைகேல்' என்று கத்துவர். அதனால் எல்லாப் படகோட்டிகளும் 'மைகேல்' என்ற பெய ராலேயே அழைக்கப்பட்டனர்.

கோடைக்கானல் ஏரி, காதலர்களின் கூட்டுறவுக்கு மிகவும் ஏற்ற இடமாகக் கருதப்படுகிறது. தனிமையை விரும்பும் ஐரோப்பியக் காதலர்கள் இணை இணையாகப் படகூர்ந்து பொழுதைக் கழிப்பர், ஐரோப்பியக் காதலர்களைப் பற்றிய நகைச் சுவையான செய்திகள் பல இங்குக் கூறப்படுகின்றன. கோடைக்கானலுக்குப் புதிதாக ஒரு பிராடெஸ்டண்டுப் பாதிரி வந்திருந்தார். அவர் இளைஞர். அழகிய தோற்றமும், எடுப்பான உடற்கட்டும் உடையவர். அவ்வூரில் வாழ்ந்த செல்வக் குடும்பத்தைச் சார்ந்த அழகிய நங்கை ஒருத்தியுடன் சில காலம் நெருங்கிப் பழகி வந்தார். அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற ஆசை அவருள்ளத்தில் ஏற்பட்டது. தம் உள்ளக் கருத்தை அவ்வழகிக்குக் கூற நினைத்த அவர், படகில் உலவிவர அழைத்தார். அப்போது அவரைப் பின்புறமிருந்து ஒரு நண்டு கவ்வியது. வலி பொறுக்க முடியாத அவர் மல்லாந்த வண்ணம் வீழ்ந்தார். அப்பெண் அக் காட்சியைக் கண்டு வயிறு குலுங்கச் சிரித்தாள். அவமானம் தாங்க முடியாத அப் பாதிரியார் எழுந்து விரைவாக வீடு சென்று விட்டார். பிறகு அப் பெண்ணிடம் தம் கருத்தைக் கூற அவர் மனம் ஏனோ துணியவில்லை! பாவம் ! காதலில் அவருக்கு ஏற்பட்ட தோல்வி இரங்கத்தக்கது. ஆனால் கோடைக் கானல் ஏரியில் தொடங்கிய எல்லாக் காதலும் இப்படி முடியவில்லை. பல, 'இன்பியல்' முடிவுகளைப் பெற்று வெற்றிகரமாக முடிந்தன.

கோடைக்கானல் கழகம் :

கோடைக்கானலில் பல நாட்டு மக்களும் குடியேறத் தொடங்கியதும், மாலை நேரத்தில் இன்பமாகப் பொழுதைக் கழிப்பதற்கு ஒரு கழகம் தேவை என்பதை எல்லோரும் உணர்ந்தனர். அதன் விளைவாகவே கோடைக்கானல் கழகம் தோன்றியது. சர்வெர்லி வெஞ்ச் அவர்களும், நடுவர் கிரகாம் அவர்களும் கோடைக்கானலில் வாழ்ந்தபோது, 'பாம்பாறு மனையில்' அடிக்கடி விருந்தும், கூட்டங்களும் நடத்துவார்கள். கோடைக்கானலில் வாழ்ந்த சமய வாதிகளும், பொதுமக்களும் சேர்ந்து ஒரு கழகத்தை நிறுவ வேண்டும் என்று முடிவு செய்தனர். இப்போது இக் கழகக் கட்டிடம் அமைந்துள்ள இடம் மதுரை அமெரிக்க மிஷனால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் மைதான விளையாட்டுக்களும் (Out door games), குடியும் அங்கு இடம் பெறக் கூடாது என்ற நிபந்தனைகளை விதித்தனர். பொது மக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டுக் கழகக் கட்டிடமும், மட்டைப் பந்தாட்ட மைதானமும் அமைக்கப்பட்டன. கழகம் கி. பி. 1887-ஆம் ஆண்டு துவங்கியது. கோடைக்கானலில் மக்கள் தொகை பெருகியதும், ஒவ்வொரு சமயத்தாரும் தங்களுக்கெனத் தனியான அமைப்புகளை நிறுவிக்கொண்டனர். அதனால், இக் கழகம் கவனிப்பாரற்றுச் சிறிது காலம் கிடந்தது. கழக முன்னேற்றத்துக்காகத் தனிப்பட்டாரும், இராணுவ அதிகாரிகளும், பொருளுதவி செய்ய மறுத்துவிட்டனர். இதை யறிந்த மதுரை அமெரிக்க மிஷனைச் சார்ந்தவர்கள் மீண்டும் இக் கழகத்தின்பால் ஊக்கம் காட்டினர். கழகத்தின்மீது சுமத்தியிருந்த கட்டுப்பாடுகளையும் நீக்கினர். பிறகு இக் கழகம் நல்ல முறையில் வளர்ச்சியுற்றது. கட்டிடம் மேலும் பெரியதாகவும், வசதியுடையதாகவும் கட்டப்பட்டது. வேறு பல மட்டைப் பந்தாட்ட மைதானங்களும் தோற்றுவிக்கப்பட்டன. கழகக் கட்டிடத்தில் ஒரு பொது அறையும், ஒரு படிக்கும் அறையும், பில்லியார்டு விளையாடும் ஒரு அறையும் ஆண்களுக்காக அமைந்துள்ளன. சீட்டாட்ட அறை (Playing cards room) ஒன்றும், ஒப்பனை அறை (dressing room) ஒன்றும் பெண்களுக்காக அமைந்துள்ளன. இக் கட்டிடத்தின் நடுவில் அமைந்துள்ள அறை மிகவும் பெரியது. அதில் ஒரு மேடையும் அமைந்துள்ளது. கோடைக்கானலில் நடைபெறும் முக்கியக் கூட்டங்களும், நாடகங்களும் இங்குதான் இடம் பெறுகின்றன.

கோடைக்கானல் பாதிரிமார் கழகம் :

நன்றாகப் பணியாற்றும் கழகங்களில் கோடைக்கானல் பாதிரிமார் கழக (Kodaikanal Missionary Union)மும் ஒன்றாகும். கி. பி. 1890-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் புதுக்கோட்டை அரசரின் தம்பியான துரைராஜா அவர்களை டாக்டர் ஃபேர்பேங்க் அவர்களும், டாக்டர் ரேசி அவர்களும் 'ஆர்கோடியா' (Arcotia) என்ற இடத்தில் ஒரு படிப்பகத்தையும் ஒரு கழகத்தையும் திறந்து வைப்பதற்காக அழைத்தனர். அதன் பிறகு அம் மூவரும் பூப்பந்து, மட்டைப் பந்து விளையாட்டுகளின் பொருட்டும், புத்தகத்தேநீர் விருந்தின் (book-teas) பொருட்டும் அடிக்கடி கூடினர். இக் கழகம் சிறிது வளர்ச்சியுற்றது. 'ராக்காட்டேஜ்' என்ற இடத்தில் இக் கழகம் சிறிது நாள் அமைந்திருந்தது. மக்கள் தொகை கோடைக்கானலில் குறைவாக இருந்தபோது பாதிரிமார், பொதுமக்கள், ஆங்கிலேயர், அமெரிக்கர் ஆகிய எல்லோரும் நெருங்கிய கூட்டுறவோடு இருந்தனர். ஆனால் மக்கள் தொகை பெருகியவுடன் அக் கூட்டுறவு சிதையத் தொடங்கியது. அதனால் அங்கு வாழ்ந்த திருவாளர்கள் விக்காஃப். டியதி, ஹேக்கெர், ஜோன்ஸ், டாக்டர் கேம்பெல் முதலியோர் மறுபடியும் இக் கழகத்தை , 'ஆர்கோடியா லாட்ஜில் துவக்கினர். இக் கழகத்திற்குச் சொந்தமாக ஒரு கட்டிடம் நிறுவ முடிவு செய்தனர். ஹைகிளெர்க் பள்ளிக்கருகிலுள்ள பியர் தோட்டத்தில் 'வின்ஸ்டன்' என்ற கட்டிடத்தை விலைக்கு வாங்கினர். பள்ளியின் அருகில் இக் கழகம் அமைக்கப்பட்டதால் மட்டைப் பந்தாட்டம் ஆட எல்லோருக்கும் வசதி ஏற்பட்டது. பிறகு புதிதாக ஓர் இடத்தையே விலைக்கு வாங்கி, இப் பொழுதுள்ள கழகக் கட்டிடத்திற்குக் கல் நாட்டு விழாவைச் செய்தனர். அக் கட்டிடத்திற்குக் கல் நாட்டியவர், கோடைக்கானலின் நீண்டகால வாசியான பேலிஸ் தாம்சன் என்ற அம்மையார். இக் கட்டிடத்தில் இப்போது அகன்ற ஒரு நடுமுற்றமும், நூல் நிலையமும், ஒரு சமயலறையும், ஆடவர் மகளிர்க்குரிய தனி அறைகளும், ஓய்வு பெறும் அறை ஒன்றும், செயற் குழு நடைபெறும் அறை ஒன்றும் அமைந்துள்ளன, அகன்ற நடுமுற்றம், வாரந்தோறும் புதன்கிழமையன்று தேநீர் விருந்து நடத்துவதற்கும், கூட்டங்கள், மாநாடுகள் நடத்துவதற்கும் பயன்படுகின்றது. இதில் 1200 உறுப்பினர்கள் உள்ளனர். கோடைக்காலங்களில் நானூறு பேர்களுக்குக் குறையாமல் இங்கு வருகின்றனர். இதில் பாதிரிமார்களல்லாத பொது மக்களும் நிறைய உள்ளனர்.

இக் கழகமானது ஆண்டுதோறும், பல குறிப்பிடத்தக்க பணிகளைப் புரிகிறது. சமூகவியல் பற்றிய மாநாடுகளோடு, மருத்துவம், கல்வி, தொழில் ஆகியவை சம்பந்தமான மாநாடுகளையும் இது நடத்தி வைக்கிறது. தென்னிந்தியாவிலுள்ள பிராடஸ்டண்டு கிருத்தவ சங்கங்கள் பலவற்றிற்கும் பாலமாக இருந்து இது இணைத்து வைக்கிறது, தென்னிந்தியாவின் பல பகுதிகளிலுமுள்ள கிருத்தவப் பாதிரிமார்கள் ஆண்டுக்கொருமுறை ஒன்று கூடுவதற்குரிய நல்வாய்ப்பையும் இது ஏற்படுத்துகிறது.

குழிப்பந்தாட்டக் கழகம் :

கி. பி. 1880-ஆம் ஆண்டில் கோடைக்கானலில் ஒரு குழிப்பந்தாட்ட மைதானம் அமைக்க முயன்றனர். ஆனால் அம்முயற்சி பலனளிக்கவில்லை. கி. பி. 1895-ஆம் ஆண்டு, குழிப்பந்தாட்டத்தில் ஆர்வமுடைய பலர் கோடைக்கானல் கழகத்தில் கூடினர். அக்கூட்டத்திற்கு ஜெ. டபிள்யூ. எஃப். டி யூமெர்கியூ என்பவர் தலைமை தாங்கினார். தூண்பாறைப் பாதையில் மைதானம் அமைக்கப்பட்டது. கி. பி. 1926 ஆம் ஆண்டு இக்கழகத்திற்காக ஒரு கட்டிடமும் கட்டப்பட்டது. கட்டிடத்திற் கெதிரில் மைதானமும் சிறப்பாக அமைக்கப்பட்டது. கி. பி. 1930-ஆம் ஆண்டு மேத் திங்கள் 7- ஆம் நாள் வீசிய புயல் இக் கழகத்தின் கூரைகளைப் பிரித்தெறிந்ததோடு கட்டிடத்திற்கும் கேடு விளைத்தது. ஆனால் புயல் வீசியது நன்மைக்கே என்று சொல்ல வேண்டும். பிறகு நன்கொடை நிறைய வசூல் செய்யப்பட்டுப் பெரியதும், அழகானதுமான மற்றொரு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இக்கழகக் கட்டிடத்தை முன்னின்று கட்டி முடித்த ஈ. ஓ. கிங் என்பவர் இக்கழக வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார்.

இந்தியர் கழகம் :

கி. பி. 1901-ஆம் ஆண்டுக் கணக்குப்படி 1900 குடியிருப்புகள் கோடைக்கானலில் இருந்தன. அங்கு வாழ்ந்த இந்தியரில் பெரும்பாலோர் வணிகர்களாகவும், மரவேலை செய்வோர்களாகவும், கொத்தர்களாகவும், தாளாளர் {Clerks)களாகவும், வேலைக்காரர்களாகவும் இருந்தனர். நகராட்சி மன்றம் வளர்ச்சியுற்றதும், அதில் பணிபுரிவதற்காகப் படித்த இந்தியர்கள் மிகுதியாகத் தேவைப்பட்டனர், கோடைக்கானலின் அழகைப் பற்றியும், வருவாய் நல்கும் காஃபித் தோட்டங்களைப் பற்றியும் கேள்வியுற்ற இந்திய நாட்டுச் செல்வர்கள் மிகுதியாக இங்குக் குடியேறித் தங்களுக்கென மாளிகைகளை அமைக்கத் தொடங்கினர். டெல்லிப் பாராளு மன்றத்தின் மேல்சபை உறுப்பின (Member of council of states)ராகப் பணியாற்றியவர் டேவிட் தேவதாஸ் என்பவர். கி. பி. 1903-ஆம் ஆண்டு வானாய்வுக் கூடத்தின் எதிரில் 'ஒதுக்கம்' (Odookum) என்ற கட்டிடத்தைக் கட்டினார். இலங்கை அரசியலாரின் செயற்குழு (Executive council of the Ceylon Government) உறுப்பினராக இருந்த சர். பி. இராமநாதன் கிளென் வீழ்ச்சிக்கு அருகில் தம் மாளிகையைக் கட்டினார். இவ்வாறு இந்திய மக்களின் தொகை கோடைக்கானலில் பெருகியது.

கி. பி. 1915-ஆம் ஆண்டு இந்தியக் குடும்பங்களெல்லாம் ஒன்று சேர்ந்து தங்களுக்கென ஒரு தனிக் கழகத்தையும், ஒரு படகுக் கழகத்தையும் ஏற்படுத்தினர். இப்பணியை முன்னின்று நடத்தி வைத்தவர் சென்னையைச் சார்ந்த சர். டி. வி. சேஷகிரி ஐயர் என்பவர். அவருடைய உருவப்படம் இந்தியர் கழகக் கட்டிடத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. முதன் முதலில் கழகக் கட்டிடத்தில் ஒரு சிறிய அறைமட்டும் இருந்தது. கழகத்தோடு இணைந்த மட்டைப் பந்தாட்ட மைதானம் ஒன்றும் இருந்தது. சில ஆண்டுகளில் உறுப்பினர் தொகை உயர்ந்தது. கழகத்திற்குச் சொந்தமாக ஒரு நல்ல கட்டிடமும் கட்டப்பட்டது. திருவாளர் பாலசுப்பிரமணிய ஐயர் தற்போது செயலாளராக இருக்கிறார். இவர் கடந்த முப்பது ஆண்டுகளாக இந்தியர் கழகத்தின் உறுப்பினராக இருந்துவருகிறார். அவருடைய நண்பர்கள் அவரைக் 'கோடைக்கானலின் முதியோர்' என்று அழைக்கின்றனர். எஸ். சீனிவாச அய்யங்கார், சர். டி. விஜய ராகவாச்சாரியார், சர். ஏ. லட்சுமணசாமி முதலியார், கே. என். ஐயர், ஜனாப் அப்துல் காதர், ஜஸ்டிஸ் சந்திரசேகர ஐயர் ஆகிய பெரியார்கள், இக்கழகத்தின் குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள்.

இந்திய மாதர் பொழுது போக்குக் கழகம் :

இந்திய மாதர் பொழுது போக்குக் கழகம் (The Indian Ladies Recreation Club) என்ற ஒரு நிறுவனம் கடந்த சில ஆண்டுகட்கு முன் கோடைக்கானலில் ஏற்படுத்தப்பட்டது. இக்கழகம் கோடைக் காலத்தில் மட்டும் இயங்குகிறது. கிளென் வீழ்ச்சிக்கும் கான்வெண்டுக்கும் செல்லும் பாதையின் திருப்பத்தில் உள்ள ஒரு வீட்டில் இக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கழகம் சென்னையைச் சார்ந்த சீதாபதி ஐயரின் மனைவியால் துவக்கப்பட்டது.

நார்தெம் :

நார்தெம் (Nordhen) என்ற மற்றொரு கழகமும் கோடைக்கானலில் அமைந்துள்ளது. ஸ்வீடிஷ் குடியேற்றத்தில் வாழும் பாதிரிமாரும், டேனியப் பாதிரிமாரும் சேர்ந்து இக்கழகத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஸ்வீடிஷ் குடியேற்றப் பகுதியின் பெயர் நார்தெம் என்பதாகும். இவ்விடத்தில் இக்கழகம் கூடுவதால், இப்பெயர் பெற்றது. நார்தெம் என்ற சொல்லுக்கு 'வட நாட்டு மக்கள் மனை' என்பது பொருள். ஸ்வீடனும் டென்மார்க்கும் ஐரோப்பாக் கண்டத்தின் வட பகுதியாக அமைந்திருப்பதால், தங்கள் நாடுகளை 'வட நாடு' என்று இவர்கள் அழைக்கின்றனர் போலும். வாரத்தில் ஒரு நாள் இவர்கள் இங்குக் கூடுகின்றனர். அப்போது தேனீர்விருந்து, விளையாட்டு முதலியவை நடைபெறும். சில சமயங்களில் சொற்பொழிவுகளும் நடைபெறுவதுண்டு. கோடைக்கானலிலேயே சிறந்த இசை நிகழ்ச்சிகள் இங்குதான் நடைபெறுகின்றன. சில சமயங்களில் விளையாட்டுப் போட்டிகளும் இங்கு நடத்தப்படுகின்றன. இதில் பங்குகொண்டுள்ள பெரும்பாலோர் கோடைக்கானல் பாதிரிமார்கழகத்தின் உறுப்பினர்கள்.

கோடைக்கானல் நட்புறவு இயக்கம் :

கோடைக்கானல் நட்புறவு இயக்கம் (The Kodaikanal Fellow-ship) 1927-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இது பல நாட்டு மக்களின் நட்புறவை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இது உலக நட்புறவு இயக்க (International Fellow-ship) த்தின் கிளையாகப் பணிபுரிகிறது. இவ்வியக்கத்தைத் துவக்கும் கருத்தை முதன்முதலாக வெளியிட்டவர் சென்னையில் வாழ்ந்த டாக்டர் எலியனார் மேக் டோகால் என்பவர். டாக்டர் மேனன், திருவாளர். பி. ஜி. நாராயணன் ஆகிய இருவரும் குமாரி ஸ்பென்ஸ், திருமதி பீச்சி ஆகிய இரு நங்கையரின் துணை கொண்டு 'லிட்டில் ஹேஸ்' என்ற இடத்தில் இவ்வியக்கத்தின் முதல் கூட்டத்தை நடத்தினர். பொதுவாகக் கோடைக்கானலில் வாழ்ந்த ஐரோப்பியர், இந்தியர் ஆகியோரின் நட்புறவை வளர்ப்பதற்காகவே இவ்வியக்கம் துவக்கப்பட்டது. தேநீர் விருந்துகளும், உரையாடல்களும், சொற்பொழிவுகளும் இவ்வியக்கக் கூட்டங்களில் பெரிதும் இடம்பெற்றன. திருமதி ராய்ட்ஸ், திருமதி கிளேடன் ஆகியோரின் இல்லங்களிலும், இந்தியர் கழகத்திலும், பாதிரிமார் கழகத்திலும் இவ்வியக்கக் கூட்டங்கள் அடிக்கடி நடைபெற்றன, அடிக்கடி கலாச்சாரக் கூட்டங்களும் இவ்வியக்கத்தாரால் நடத்தப்பெற்றன. மொகஞ்சதாரோ புதைபொருள் ஆராய்ச்சியைப் பற்றிப் பல அறிஞர்கள் இக் கழகத்தில் தொடர்ந்து சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.

இந்தியப் பல்கலைக்கழக மாதர் கழகம் :

'இந்தியப் பல்கலைக்கழக மாதர் கழகம்' என்ற ஓர் அமைப்பும் இங்கு உள்ளது. இக்கிளை, கல்கத்தாவிலுள்ள தலைமைக் கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகக் கல்வியில் பங்குகொண்டுள்ள மாதர்கள் ஆண்டுக்கொரு தடவை இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து கூடுகின்றனர். இக்கழகம் இந்தியாவில் வாழும் அமெரிக்கப் பட்டதாரிப் பெண்டிரால் முதலில் துவக்கப்பட்டது. முதலில் சமுதாய நலன்பற்றி ஆராயும் கழகமாக இது துவங்கியது. பிறகு இந்தியாவில் வாழும் எல்லா இனப்பட்டதாரிப் பெண்களும் இதில் பங்கு கொண்டனர். இந்திய நாட்டுப் பெண்கள், வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்கு வேண்டிய நல்வாய்ப்புகளையும், வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து நன்முறையில் இக்கழகம் பணிபுரிகிறது.

மேலும் இங்குப் 'பழனிமலைகள் வேட்டைக் கழகம்' என்ற ஓர் அமைப்பும் உள்ளது, இதன் கௌரவச் செயலாளராகப் பழனிமலை காட்டிலாகா அதிகாரி பணிபுரிகிறார். பழனிமலைக் காடுகளில் வேட்டையாட விரும்புபவர்களுக்கு, இது சில சட்டதிட்டங்களை வகுத்து அமுல் நடத்தி வருகிறது. கி. பி. 1937-ஆம் ஆண்டு கோனலூரில் ஆற்று மீன்களை வளர்க்கும் பண்ணை ஒன்றை இது அமைத்தது. ஹேமில்டன் கோட்டையையும் பூம்பாறையையும் இணைக்கும் பாதைக்குச் சற்று மேற்புறத்தில் செம்படவர் வாழ்வதற்கான குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவஞ்சிக்கும், 'வந்தரவு'க்கும் இடையிலுள்ள தலைவாரி ஆற்றிலும் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

இரண்டாம் உலகப் போரின்போது கோடைக்கானலில் இருந்த இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சிறந்த முறையில் பணியாற்றியது. போரில் காயம்பட்டவர்களின் மருத்துவத்திற்கு மிகவும் இன்றியமையாத பல பொருள்களை உற்பத்தி செய்து வழங்கியது.

சமய வாழ்வு :

கோடைக்கானலின் சமய வாழ்வு குறிப்பிடத்தக்கது. பல சமயத்தாரும் இங்கு உறவுகொண்டு அன்போடு வாழ்கின்றனர். இங்குள்ள பசுமையான இளமரக்காடுகளும், தேனினுமிய தீஞ்சுவை அருவிகளும், கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் நீர் வீழ்ச்சிகளும், பசுமையான குன்றுகளும், மெல்லென அசைந்தாடும் தென்றலும், கோடைக்கானலில் ஓர் இன்ப அமைதியைச் சூழவிடுகின்றன. கோடைக்கானல் பல நாட்டு மக்களுக்கும் ஒரு தங்கல்மனை போன்றது. ஸ்காட் மக்களுக்கு அவர்கள் தாய் நாட்டிலுள்ள மலைகளையும், நீர்வீழ்ச்சிகளையும் இவ்வூர் நினைவூட்டுகிறது : ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாந்திலுள்ள யார்க்ஷைர் வெளியை நினைவூட்டுகிறது. பருவக் காற்றினால் அசைந்தாடும் நீலப் பிசின்மரங்கள் ஆஸ்திரேலியருக்கு அவர்கள் அன்பு நாட்டை நினைவூட்டுகின்றன. வானளாவி நிற்கும் செங்குத்தான மலைச்சரிவுகள், ஸ்வீடன் மக்களுக்கும், டேனியர்களுக்கும், ஸ்காண்டிநேவியா தீபகற்பத்தை நினைவூட்டுகின்றன. இங்குள்ள நீல நிறமான மலைத்தொடர்கள் அமெரிக்கரின் உள்ளத்தில் அவர்கள் தந்தையர் நாட்டைப்பற்றிய இன்ப நினைவுகளை எழுப்புகின்றன. தமிழர்களுக்கோ, இலக்கியத்தில் மிளிரும் குறிஞ்சித் திணை இன்னகை காட்டி எதிரில் நடம்புரிகின்றது.

பிராஸ்பெக்ட் பாயிண்டின் கடைசியில் பெருமாள் மலையைப் பார்த்தாற்போன்று, தமிழரின் குறிஞ்சிக் கடவுளான முருகனின் கோவில் அமைந்துள்ளது. இது திருவாளர் இராமநாதனின் நினைவுச் சின்னமாக அவருடைய ஆஸ்திரேலிய மனைவியால் கட்டப்பட்டது. இக்கோவில் அந்த அம்மையாரின் மேற்பார்வையிலேயே இன்றும் உள்ளது. கோடைக்கானலிலிருந்து இக்கோவிலுக்குச் செல்லும் பாதை குறிஞ்சி ஆண்டவன் பெயராலேயே வழங்குகிறது. 'முஞ்சிக்கல்'லில் மாரியம்மனுக்கும் விநாயகனுக்கும் கோவில்கள் உள்ளன. வேறு பல சிறு தெய்வங்களின் கோவில்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளன. தேநீர் விருந்துகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும் மாலை நேரங்களில், காது செவிடுபடும்படி பறையடித்தும், மருள் கொண்டு ஆடிக்கொண்டும், மாரியம்மனை ஊர்வலமாக எடுத்துக்கொண்டு 'சாரிங் கிராஸ்' வழியாகத் தமிழ் மக்கள் திரளாகச் செல்லும் காட்சி ஐரோப்பியருக்கு வியப்பூட்டும் புதுமையாகத் தோன்றலாம்.

இங்குக் கிருத்தவ சமயத்தைச் சார்ந்த பல பிரிவினரும் கோவில்கள் எழுப்பியுள்ளனர். கோடைக்கானலைச் சுற்றியுள்ள மலைகளின் மீது பல ரோமன் கத்தோலிக்கக் கோவில்கள் அமைந்துள்ளன. ப்ராடெஸ்டண்ட் கிருத்தவர்களில் நான்கு பிரிவினர் (தங்களைப் பிரிந்த சகோதரர்கள்-Our Devided Brethren என்று அழைத்துக் கொள்கின்றனர்) இங்கு வாழ்கின்றனர். செயின்ட் பீடர் சர்ச்சும், யூனியன் சர்ச்சும், லாச் எண்டு என்ற இடத்தில் அமைந்துள்ள அமெரிக்க மிஸ்ஸெனரி சர்ச்சும், ஸ்வீடிஸ் குடியேற்றத்திலுள்ள ஜூபிலி சர்ச்சும் இவர்கட்கு உரிமையானவை. லீப்சிக் எவேஞ்சலிகல் லூதரன் மிசன், ஹெர்மன்ஸ்பர்க் மிஷன் என்ற இரு ஜெர்மானியக் கிருத்தவ சமயத்தைச் சார்ந்த மக்களும் இங்கு வாழ்கின்றனர்.

தூங்கும் இளவரசி :

“இளவரசன் தன் அன்புக் கரங்களால் ஆரத்தழுவித் துயிலெழுப்பும் வரையில், கோடைக்கானல் தூங்கும் இளவரசியாக விளங்கினாள்“ என்று கோடைக்கானலில் வாழ்ந்த 'மெட்ராஸ் டைம்ஸ்' பத்திரிகையின் நிருபர் கி. பி. 1894-ஆம் ஆண்டு எழுதினார். ஆம்! உதகமண்டலத்தைக் குறிஞ்சி நகரங்களின் அரசி' என்று குறிப்பிடும்போது, கோடைக்கானலைக் 'குறிஞ்சி இளவரசி' என்றுதான் குறிப்பிட வேண்டும். இங்கு இளவரசர் என்று குறிப்பிடப்படுபவர் காலஞ் சென்ற புதுக்கோட்டை மன்னரே. கி. பி. 1890-ஆம் ஆண்டு அவரும் அவருடைய இளவலாகிய துரைராஜாவும், அவர்களுடைய பொறுப்பாளரும், ஆசிரியருமான திருவாளர் எஃப். எஃப். கிராஸ்லீயும் கோடைக்கானலில் வசிப்பதற்காக வந்தனர். 'சென்ட்ரல் ஹவுஸ்' என்ற இடத்தில் வாழ்ந்தனர். பிறகு 'வுட்வில்லி' என்ற மாளிகையில் குடியேறினர். கடைசியாக, கொலோனல் ஜே. பென்னிகுவிக் என்பாரிடத்திலிருந்து 'ட்ரெடிஸ்' என்ற தோட்ட மாளிகையை வாங்கினர். இம் மாளிகை சென்னையில் சிறந்த வழக்கறிஞராயிருந்தவரும், கோடைக்கானலில் முதன் முதலில் குடியேறிய இந்தியருமான திருவாளர் முத்துகிருஷ்ணன் என்பவரால் கட்டப்பட்டது. 'நட்ஷெல்' என்ற இடமும் திருவாளர் ஈ. எஃப். பினர் என்பவரிடமிருந்து வாங்கப்பட்டது.

கி. பி. 1894-ஆம் ஆண்டிலிருந்து, இளவரசர் 'ட்ரெடிஸ்' மாளிகையில் அடிக்கடி விருந்துகள் நடத்தத் தொடங்கினார். உடனே கோடைக்கானல் குமரி விழித்தெழுந்து நகை முகம் காட்டி நடனமாட ஆரம்பித்து விட்டாள். 'ட்ரெடிஸ்' மாளிகையில் இரண்டு மட்டைப் பந்தாட்ட மைதானங்கள் அமைந்திருந்தன. விருந்தின் போது எல்லோரும் அழைக்கப் பட்டனர். இன்னிசை முழக்கோடு விருந்து ஆரம்பமாகும். விளையாடுமிடத்தை மிக அழகோடு ஒப்பனை செய்து, அடிக்கடி போட்டிகளும் நடத்துவர். கி. பி. 1895ஆம் ஆண்டு 'டிரெடிஸ்' மாளிகையில் 'அகில உலக மட்டைப் பந்தாட்டப் போட்டிகள், {International Tennis matches) நடைபெற்றன. அப்போது ஆங்கிலப் பேரரசின் சார்பில் இளவரசரும், இளவல் துரை ராஜாவும், திருவாளர்கள் பீர்ஸ், மெக்கன்சி என்ற ஆங்கிலேயர்களும் கலந்துகொண்டனர். அமெரிக்காவின் சார்பில் டாக்டர் ஸ்குடர், ரெவரண்டு ஸ்குடர், ரெவரண்டு ஜோன்ஸ், ரெவரண்டு பெர்கின்ஸ் ஆகிய நால்வரும் விளையாடினர். ஆங்கிலப் பேரரசு வென்றது. இதே குழுவினர் திருவாளர்கள் மேன், சேண்ட்லர் என்ற இருவரையும் சேர்த்துக்கொண்டு பூப்பந்தாட்டப் போட்டி ஒன்றும் நடத்தினர். அதில் அமெரிக்கா வென்றது. இளவரசர், துரைராஜா ஆகிய இருவரின் ஒத்துழைப்பால் கோடைக்கானலின் சமூக வாழ்க்கை மிகவும் சிறப்படைந்தது என்று கூறலாம். துரை ராஜா தம் இறுதிக் காலம் வரையிலும் கோடைக்கானலிலுள்ள 'நட்ஷெல்' மாளிகையிலேயே வாழ்ந்து வந்தார். கோடைக்கானல் கழகம், பாதிரிமார் கழகம், குழிப்பந்தாட்டக் கழகம் ஆகியவற்றில் இவர் பெரும் பங்கு எடுத்துக்கொண்டு பணியாற்றினார். இளவரசரும் இவரும் அடிக்கடி புலிவேட்டை ஆடுவது உண்டு.