தமிழகத்தில் குறிஞ்சி வளம்/சேர்வராயன் மலை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
2. சேர்வராயன் மலை
பெயர்க்காரணம்

‘சைலம்’ என்ற வட சொல்லுக்கு மலை என்பது பொருள். விட்டுவிட்டுச் சிதறிக் கிடக்கும் மலைத் தொடரின் பகுதிகள் சேலம் மாவட்டத்தில் நிறைந்திருக்கின்றன. கொல்லி மலைகள், கல்ராயன் மலைகள், சேர்வராயன் மலைகள், பச்சை மலைகள், கஞ்சமலை, போதமலை என்பன அவைகளில் குறிப்பிடத் தக்கவை. இவ்வாறு மலைநாடாக விளங்குவதாலேயே, சைலம் என்ற சொல் மருவி சேலம் என்றாயிற்று என்பர் சிலர். இச்சேலம் மாவட்டம் கொங்குநாட்டின் ஒரு பகுதியாகும். கொங்கு நாடு சேரநாட்டிற்கும், சோழநாட்டிற்கும் நடு எல்லை. சேர சோழ மன்னர்களில் யார் வலிமை ஓங்குகிறதோ, அவர் கைக்கு மாறி மாறி ஊசலாடிக்கொண்டிருந்தது இக்கொங்குநாடு. இருந்தாலும் சோழரைவிடச் சேர மன்னர்களும், அவர் வழி வந்த அதியர் குடியினருமே நெடுங்காலம் இங்கு அரசோச்சி வந்தனர். ‘பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட, சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது, ஆதல் தன்னகத்தடக்கிச் சாதல் நீங்க’ ஔவைக் களித்துப் பெரும்புகழ் கொண்டவனும், கடையேழு வள்ளல்களில் ஒருவனுமாகிய அதிகமான் வாழ்ந்த தகடூர் நாடு, சேலம் மாவட்டத்துத் தருமபுரிக் கோட்டமாகும். அங்கு இன்றுள்ள ‘அதமங் கோட்டை’யே பண்டைய கடையேழு வள்ளல்களில் ஒருவனான அதிகமான் வாழ்ந்த ‘அதிகன் கோட்டை’ யாகும் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். தமிழகத்தில் வாழ்ந்த பெண்பாற் புலவர்களில் தலை சிறந்தவரும், அதிகமானால் பெரிதும் பாராட்டிப் போற்றப்பட்டவருமான அவ்வையின் பெயரைத் தாங்கிக்கொண்டு, கல்ராயன் மலைத்தொடரில் ‘அவ்வை மலை’ என்ற ஒன்று இன்றுமுளது. இவ்வாறு சேரர் குடியினர்க்கு உரிமை பெற்று விளங்கிய இம்மாவட்டம் பண்டை நாளில் ‘சேரலம்’ என்று வழங்கி, இன்று சேலமாக மாறிவிட்டது என்றும், சேரராசன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த மலை ‘சேரராசன் மலை’ என்ற பெயர்கொண்டு விளங்கி, இன்று சேர்வராயன் மலையாகிவிட்டது என்றும் கொள்வது ஏற்புடைத்தாம். சேலம் மாவட்டத்தில் உள்ள மலைகளில் உயர்விலும், வளத்திலும் சிறந்தவை சேர்வராயன் மலைகள்.

அமைப்பு

மல்லாபுரம் மலைத்தொடருக்கும் மஞ்சவாடிக் கணவாய்க்கும் இடையில் இம்மலைகள் பரந்து கிடக்கின்றன. இம்மலைத் தொடர் பதினேழு கல் நீளமும் பன்னிரண்டு கல் அகலமும் உடையது. இதன் பரப்பு 100 சதுர மைல் ஆகும். இத்தொடரின் தென் சரிவு செங்குத்தானது. கடல் மட்டத்திலிருந்து 4000 அடியிலிருந்து 4800 அடிவரை உயரமுடையது. இச்சரிவில் குண்டூர், தப்பக்காடு என்ற சிற்றூர்கள் இருக்கும் இடமும், பழமலை உயர்ந்து செல்லும் இடமுமே சமவெளிகளாம். ஆனால் வடசரிவு செங்குத்தானதல்ல. அது பரந்து சிறிது சிறிதாகத் தாழ்ந்து செல்லுகிறது.

இம்மலைத் தொடரானது நடுவில் ஓடும் வாணியாற்றின் பள்ளத்தாக்கால் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படுகிறது. இவ்விரண்டு பிரிவுகளும் அமைப்பில் வேறுபடுகின்றன. கிழக்குப்பகுதி மழை நீரால் அரிக்கப்பட்ட் ஆற்றுப்படுகைகளைக் கொண்டது. மேற்குப்பகுதி பருத்து உயர்ந்த மலைகளைக் கொண்டது. கிழக்குப் பகுதியில் தலைச்சோலை, மாறமங்கலம் என்ற இரண்டு பீடபூமிகள் உள்ளன. அப்பீடபூமிகளை இணைக்கும் இடைநிலத்தில் கோட்டன்சேது என்ற சிற்றூர் அமைந்துள்ளது. மேற்குப் பகுதியை மேலும் இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று வாணியாற்றிற்கும் காடையாம்பட்டி ஆற்றிற்கும் இடைப்பட்ட பகுதி. மற்றாெரு பகுதி ஒழுங்கற்ற பீடபூமி. இப்பகுதியில்தான் ஏர்க்காடு அமைந்துள்ளது. இப்பீடபூமி வடக்கிலுள்ள சந்நியாசிமலை என்று கூறப்படும் டஃப் மலை (Duffs Hill-5231') யோடு முடிவுறுகின்றது. இதற்கு மேற்குப் பக்கத்தில் தாழ்வான மற்றாெரு மலை தலை நீட்டிக்கொண்டிருக்கிறது. அம்மலையின் மேலுள்ள பீடபூமி, கடல் மட்டத்திலிருந்து 2800-லிருந்து 2900 அடி உயரமுடையது. அதன்மீது தான் மலையாளிகள் வாழும் கொண்டையனூர், சோனப்பாடி என்ற ஊர்கள் உள்ளன.

மற்றாெரு பகுதி பல மலைச்சிகரங்களை இணைக்கும் தொடர் ஒன்றைக் கொண்டு விளங்குகிறது. அத்தொடரின் மேற்கில் நாகலூர் பீடபூமியும், கிழக்கில் பச்சை மலைப் (Green Hill) பீடபூமியும் உள்ளன. இத் தொடருக்கு அருகில் குறிப்பிடத்தக்க வேறுபல சிகரங்களும் உள்ளன. அவை சேர்வராயன் சிகரம் (5,342') பிளேன் ஃபில் சிகரம் (5,410'), பாலமடி சிகரம் (5,370') காவேரி சிகரம் (5,086') என்பன. புலிவாரை சிகரத்தை (4,576') நோக்கி இடதுபுறம் செல்லும் தொடரும், வாணியாற்றின் பள்ளத்தாக்கை நோக்கி வலதுபுறம் செல்லும் தொடரும் காவேரி சிகரத்தில் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.

நாகலூர் பீடபூமியின் எல்லாப் பகுதிகளும் அநேகமாகக் கடல் மட்டத்திலிருந்து 4000 அடிக்குக் குறைந்தே இருகின்றன. இப்பீடபூமியிலிருந்து நோக்கினால் வேப்பாடிப் பள்ளத்தாக்கு நன்றாகத் தென்படும். வேப்பாடிப் பள்ளத்தாக்கிற்கு மேற்கில் ஏரிமலைத் தொடர் உள்ளது. பச்சைமலைப் பீடபூமியிலிருந்து பார்ப்போருக்கு வாணியாற்றின் பள்ளத்தாக்கும், ஹாதார்ன் சிகரம் (Hawthorne cliff—4,899') தேன் சிகரம் (Honey Rocks 4,533) முதலிய அழகிய உச்சிகளும் தென்படும். தேன் சிகரத்திற்கு எதிரில் ஒருகல் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 2,490' உயரத்தில் வாணியாறு இழிந்து செல்கிறது.

ஆறுகள்

சேர்வராயன் மலைகளின் தென் சரிவு மிகவும் செங்குத்தாக உயர்ந்திருப்பதால் இங்கு ஆறுகள் ஏற்படுவற்கு வாய்ப்பில்லை. ஆகையால் வடசரிவிலேயே பல சிற்றாறுகள் தோன்றி ஓடுகின்றன. இச் சிற்றாறுகளில் எப்பொழுதும் நீர் இருப்பதில்லை. மழைக்காலங்களில்தான் நீர்ப் பெருக்கைக் காண முடியும் (1) தொப்பூர் ஆறு (2) சரபங்க நதி (3) வாணியாறு என்பவையே இம்மலைகளில் தோன்றுகின்றன.

தொப்பூர் ஆறு : தொப்பூர் ஆற்றிற்கு வேப்பாடி ஆறு என்ற வேறு பெயரும் உண்டு. இது சேர்வராயன் மலைகளில் முலுவி என்ற இடத்தில் தோன்றி வடகிழக்கு நோக்கி மல்லாபுரம் மலைப்பாதை செல்லும் வழியாக ஓடுகின்றது. இதன் பள்ளத்தாக்கில் வேப்பாடி என்ற சிற்றூர் உள்ளது. அவ்வூரின் பெயரை இவ்வாறு ஏற்றுக் கொண்டது. மல்லாபுரத்திற்கு அருகில் இவ்வாறு மேற்கு நோக்கித் திரும்பி ஓடி, சோழப்பாடி என்ற இடத்தில் காவிரியோடு கலக்கிறது.

சரபங்க நதி : சரபங்கர் என்ற ஒரு முனிவர் தாம் செய்த தீவினைக்குப் பரிகாரம் தேடுவதற்காக, இதன் கரையிலிருந்து தவமியற்றிய காரணத்தால் இந்த ஆறு இப்பெயர் பெற்றது என்பர். ஓமலூரில் இரண்டு ஓடைகள் ஒன்று சேர்ந்து இந்நதி உருவாகிறது. அவ்வோடைகள் இரண்டும் கீழ் ஆறு, மேல் ஆறு என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகின்றன. கீழ் ஆற்றைப் பெரியாறு என்றும் அழைப்பர். இது சேர்வராயன் மலையிலுள்ள ஏர்க்காட்டில் தோன்றுகிறது. இவ்வாறு ஏர்க்காட்டில் அமைந்துள்ள ஏரியில் தோன்றி, கிளியூர் நீர்வீழ்ச்சியில் தாவிக்குதித்து, மேற்கே திரும்பி ஓமலூரை நோக்கி ஓடுகிறது.

மற்றாேர் ஆறாகிய மேல் ஆறு சேர்வராயன் மலையின் தென்சரிவில் தோன்றிக் காடையாம்பட்டி மலைப் படுகையின் வழியாக ஓடிவருகிறது. பட்டிப்பாடி ஆறு, பறியன் குழி ஆறு, கூட்டாறு, காட்டாறு எனப் பல பெயர்கள் இதற்கு வழங்குகின்றன. இருப்புப் பாதையைக் கடந்தவுடன் இவ்வாறு தெற்கு நோக்கித் திரும்பியோடிப் பெரியாற்றில் கலக்கிறது. இவ்விதமாக இவ்விரண்டு ஆறுகளால் உண்டாக்கப்பட்ட சரபங்க நதி இடைப்பாடி, திருச்செங்கோடு ஆகிய ஊர்களுக்கு அண்மையிலுள்ள பல ஏரிகளை நிரப்பிக் கொண்டு காவேரிப்பட்டிக்கு அருகில் காவிரியுடன் கலக்கிறது.

வாணியாறு :

இது சேர்வராயன் மலையில் ஏர்க்காட்டுக்கு அருகில் தோன்றி அழகாக ஓடுகிறது. வெங்கட்ட சமுத்திரச் சமவெளியை அடைந்து, பாதையைக் கடக்கிறது. அரூரைக் கடந்ததும், பாம்பாற்றாேடு கலந்து சிறிது தூரத்தில் பெண்ணையாற்றாேடு சேர்கிறது.

காடுகள்

எங்குபார்த்தாலும் மலைத்தொடர்கள் மண்டிக் கிடப்பதால், சேலம் மாவட்டத்தில் காடுகளுக்குப் பஞ்சமில்லை. சேர்வராயன் மலைகள் மீதும் அடர்ந்த காடுகள் உள்ளன. நாட்டில் காடுகள் நிறைய இருந்தால்தான் மழைவற்றாது பெய்யும் என்று அறிவியற்கலைஞர்கள் வற்புறுத்தி வருகின்றனர். இவ்வுண்மையை உணர்ந்து தான், நம் நாட்டின் உணவு மந்திரியாக இருந்த திருவாளர் முன்சி மரம் நடுவிழாவை (வனமகோத்சவம்) நாடெங்கும் துவக்கிவைத்தார்.

சேலம் மாவட்டத்திலுள்ள காடுகள் பலவிதங்களில் அழிக்கப்பட்டன. அதற்குக் காரணம் சென்ற நூற்றாண்டில் இங்கு இருப்புப்பாதைகள் அமைக்கப்பட்டதுதான். தண்டவாளங்களைப் பொருத்துவதற்கு வேண்டிய கிடை மரங்கள் (Sleepers) நிறையத் தேவைப்பட்டன. அம்மரங்களைப் பெறக் குத்தகைக்காரர்களை நாடினர் அரசாங்கத்தார். காடுகளிலுள்ள மரங்களை அவர்கள் விருப்பம்போல் வெட்டிக் கொள்ள ஒப்பமளித்தனர். இதைத் தகுந்த நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட குத்தகைக்காரர்கள், காடுகளைத் தங்கள் பேராசைக்குப் பலியிட்டுக் கொள்ளை வருவாய் தேடிக்கொண்டனர். இருப்புப்பாதைக்குப் பயன் படுத்தப்படும் கிடைமரங்கள் ஒரே அளவினதாகவும், ஒழுங்கானதாகவும் இருக்கவேண்டும். வளைவோ, வலிவற்றதன்மையோ இருக்கக் கூடாது. அவ்வாறு கிடைமரங்கள், செய்வதற்கு அடிமரம்தான் பயன்படும். ஒரு கிடைமரத்திற்காக ஒரு முழுமரமே வீணாக்கப்பட்டது. 1859-60ஆம் ஆண்டில் மட்டும் இருப்புப்பாதை அமைப்பதற்காக வாங்கப்பட்ட கிடை மரங்களின் எண்ணிக்கை 2,45,743. அவைகளைக் காடுகளில் வெட்டிக் கொடுக்கக் குத்தகைக்காரர்களுக்கு உரிமை வழங்கியதற்காக விதிக்கப்பட்ட வரித் தொகை மட்டும் அவ்வாண்டில் ரூ. 23,500 சேர்ந்தது. இருப்புப்பாதை அமைக்கும் அவசரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகக் கணக்கற்ற மரங்கள் பொறுப்பின்றி மிக விரைவில் அழிக்கப்பட்டன. மலைமீதுள்ள காடுகளில் வாழ்ந்த மலையாளிகளும் பயிர்த்தொழில் செய்வதற்காகக் காடுகளை அழிக்கத் தொடங்கினர். அதனால் நிறைய மரங்கள் அழிக்கப்பட்டன. அரசியலார் தலையிட்டு இவ்வழிவைத் தடுக்கச் சட்டங்களியற்றினர்.

சேர்வராயன் மலையைச் சுற்றியுள்ள ஊர்களிலும் நகரங்களிலும் வாழும் மக்களின் எரிபொருள் (fuel) தேவையை இம்மலையே நிறைவேற்ற வேண்டிவந்தது. இருப்புப்பாதை அமைக்கப்பட்டுப் புகைவண்டி ஓடத் தொடங்கியதும், அதற்கும் தேவையான எரிபொருளை வழங்கும் பணியைச் சேர்வராயன் மலையும் அதைச் சூழ்ந்த காடுகளுமே மேற்கொண்டன. சேலத்தில் வாழ்ந்த ஐரோப்பியர் பலர், காஃபி, இரப்பர் முதலியவற்றைப் பயிரிடுவதற்கான சோதனைகளைச் செய்ய அரசியலாரின் ஒப்பம் பெற்றுக் காடுகளை அழித்தனர். போதாக் குறைக்கு, மாபெரும் விட்டங்களுக்கான மரங்களை வெட்டிக் கள்ளக் கடத்தல் செய்வோரும் உண்டு. மரம்கடத்துவோரை ஒறுப்பதற்கான சட்டங்கள் அப்போது அமுலில் இல்லாத காரணத்தால் அவ்வழிவைத் தடுக்கவோ, நிறுத்தவோ வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மூங்கில் ஒன்றாேடொன்று உரசித்தீப் பற்றிக்கொண்டு, அதனால் காட்டிற்கு அழிவு நேர்வதும் உண்டு.

கி. பி. 1886-ஆம் ஆண்டு திடீரென்று அரசியலாருக்குக் காடுகளைப் பாதுகாக்கவேண்டும் என்ற அக்கறை ஏற்பட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள காடுகளையெல்லாம் அளந்தனர். சேர்வராயன் மலைகள் மீதும், அவற்றைச் சூழ்ந்துள்ள அடிவாரங்களிலும் உள்ள காடுகளும் அளக்கப்பட்டுக் காவலுக்கு (Reserved forests) உட்படுத்தப்பட்டன. அவ்வாறு அளக்கப்பட்ட சேர்வராயன் மலைக்காடுகள் 113 சதுரமைல் பரப்புள்ளவை. காட்டதிகாரி (Forest Officers) களும், காவலர் (Rangers) களும் அமர்த்தப் பட்டனர். காடு திட்டமான முறையில் பயன்படுத்த முடிவு செய்தனர். 

(1) கட்டிடங்களுக்கான தூலங்களை வெட்டுதல் (2) எரிபொருளுக்கான மரங்களை வெட்டுதல் (2) கரி தயாரித்தல் (4) மூங்கில் வெட்டுதல் (5) சந்தன மரங்களை வளர்த்தல், வெட்டுதல் (6) மேய்ச்சல் நிலமாகப் பயன்படுத்தல் (7) தழை உரம் சேகரித்தல் (8) சிறுபொருள் தயாரித்தல் எனப் பலவகைகளில் சில சட்டங்களுக்கும் அமைப்புக்களுக்கும் காடுகளை உட்படுத்தி அவற்றின் பயனைக் கொண்டனர் அரசியலார்.

காடுகளில் தீப்பற்றி அழிவு நேராமலிருக்கப் பல வழிமுறைகளை மேற்கொண்டனர். தீப்பற்றுவதற்கான ஏதுக்களைக் களைந்தனர். காட்டுத் தீயணைப்புக்காக சேர்வராயன் மலைகளின் ஒரு பகுதியான சந்நியாசி மலையில் மட்டும் ரூ. 9000 செலவிட்டனர். தழை உரம் நல்ல வருவாய் அளிப்பதைக் கண்டு அதை வளர்க்க முற்பட்டனர். கால்நடைகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகப் பெற்றுக்கொண்டு மேய்ச்சல் நிலங்களில் அவற்றை மேயவிட்டனர். மலைகளின் மீது நீர்ப்பாசன வசதிகளைச் செய்தனர். புதிதாகச் சந்தனக் காடுகளைத் தோற்றுவித்தனர்.

ஆனால் மறுபடியும் காட்டழிவு வேலைகள் தொடங்கின. தென்னிந்திய இரயில்வேயின் எரிபொருள் தேவைக்காகச் சேலம் மாவட்டத்தில் பல கிடங்குகள் (Coupe depots) ஏற்படுத்தப்பட்டன. இத்திருப்பணியைத் துவக்கி வைத்தவர், அப்போது சேலம் மாவட்டத் தண்டல (Collector) ராக இருந்த திருவாளர் பிரேசியர் (Mr. Brasier) என்ற துரைமகனார். இதோடு விடவில்லை அவர். “அனுமதிக்கப்பட்ட மரம் வெட்டல்” (Located fellings) என்ற புதுமுறைக்கும் ஆக்கமளித்தார். இம்முறைப்படி, அரசியலாருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கப்பமாகக் கட்டிவிட்டு அனுமதி பெற்றவர்கள், காட்டின் எப்பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று, விருப்பப்பட்ட மரங்களை வெட்டிக்கொள்ளலாம். தென்னிந்திய இரயில்வேயின் எரிபொருள் தேவை, கி. பி. 1892-ஆம் ஆண்டிலிருந்து துவங்கியது. திங்கள்தோறும் அதற்கென 200 டன் நிறையுள்ள மரங்கள் வெட்டி அனுப்பப்பட்டன. கி. பி. 1894-ஆம் ஆண்டு அந்த அளவானது, திங்களுக்கு 500 டன்களாக உயர்ந்தது. 1896-ல் 1200 டன்களும், 1899-இல் 2200 டன்களும் திங்கள்தோறும் வெட்டி அனுப்பப்பட்டன. 1906-இல் நிலக்கரி நிறையக் கிடைக்கத் தொடங்கியதும் மரக்கட்டையின் தேவை குறைந்தது. மேற்கூறிய செய்கைகளால், காடுகளின் வளர்ச்சி குறைந்தும் அழிவுகள் பெருகியுமே காணப்பட்டன. இவ்வாறு அழிந்தவை, அழிக்கப்பட்டவை போக எஞ்சியுள்ளவையே இன்று சேர்வராயன் மலைகளின் மீதுள்ள காடுகள்.

மூங்கில் :

சேலம் மாவட்டக் காடுகளில் கிடைக்கும் மூங்கில் மிகவும் பெயர் பெற்றது; பயன்மிக்கது. மூங்கிலானது, கடல் மட்டத்திற்குமேல் 1000 அடியிலிருந்து 4000 அடிவரையில் எவ்விடத்திலும் நிறையப் பயிராகும். சேர்வராயன் மலைகளின் மீதும் அளவற்ற மூங்கில்கள் விளைகின்றன. ஓடைக்கரைகளிலும், பள்ளத்தாக்குகளிலும் இது பருத்து அடர்த்தியாக வளரும்.

சந்தனம் :

சந்தனம் தமிழர் வாழ்வோடு நெருங்கிய தொடர்புடையது ; சங்கப் புலவர்களின் பாடல் பெற்றது. வெப்ப நாடான தமிழகத்தில் வாழும் மக்கள் அதனை உடலில் பூசி, அதன் குளிர்ச்சியில் திளைத்தனர். சேர்வராயன் மலையில் சந்தன மரங்களுக்குக் குறைவில்லை. ஆனால் தேன்கனிக்கோட்டை (Denganikottah) யில் விளையும் சந்தன மரங்களைப்போல் இவை தரத்தில் உயர்ந்தவையல்ல. இவற்றைப்பற்றி ஒரு சுவையான வரலாறுண்டு. கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ஆட்சி சேலம் மாவட்டத்தில் ஏற்பட்டதும், சந்தன மரத்தின் சிறப்பையும், உயர்வையும் ஆங்கிலேயர் உணர்ந்தனர். அவைகளைக்கூட விட்டு வைக்க அவர்களுக்கு மனமில்லை. கேப்டன் கிரகாம் (Captain Graham) என்பவன், காட்டில் வளர்ந்திருந்த எல்லாச் சந்தன மரங்களையும் வெட்டிக்கொள்ளும்படி ஒரு குத்தகைக்காரனுக்கு அனுமதியளித்து, அதற்கீடாக 300 பகோடா (Pagodas) க்களைப் பெற்றுக் கொண்டான். பகோடா என்பது பண்டைக்காலத்தில் நம் நாட்டில் வழங்கிய ஒரு தங்க நாணயம். அப்பேராசை பிடித்த குத்தகைக்காரன், சேலம் மாவட்டக் காடுகளிலிருந்த ஒரு சந்தனக் குச்சியைக்கூட விடல்லை. பத்தாண்டுகளுக்குச் சேலம் மாவட்டக் காடுகளில் சந்தன வாடையே இல்லாமல் செய்து விட்டான்.

இப்பொழுதெல்லாம் சந்தன மரங்கள் காட்டிலாகாவினராலேயே வெட்டப்படுகின்றன. காட்டுக் காவலன் ஒரு முதிர்ந்த சந்தன மரத்தைக் கண்டால், அது வெட்டுவதற்குத் தகுதியானதா? என்பதை முடிவு செய்வான். தகுதியானது என்று தெரிந்தால், அதன் உயரம், பருமன் முதலியவற்றை அளந்து காட்டிலாகா அதிகாரிக்குத் தெரியப்படுத்துவான். காட்டிலாகா அதிகாரி, அவ்வளவுகளைக் குறித்துக்கொண்டு, அம்மரத்தை வெட்டுவதற்கு ஆணையிடுவார். அதன் பிறகு அம்மரம் அடியோடு தோண்டப்பட்டு, பல துண்டுகளாக்கப்பட்டு, பட்டை செதுக்கப்பட்டுக் காட்டிலாகா அதிகாரின் மேற்பார்வைக்கு அனுப்பப்படும். அளவுகளெல்லாம் குறித்தபடி சரியாக இருக்கின்றனவா ? என்று தலைமை அதிகாரி சரி பார்ப்பார். இவ்வளவு முன்னெச்சரிக்கையோடு சந்தன மரங்கள் இப்போது வெட்டப்படுகின்றன.

வெள்ளோக்கு :

வெள்ளோக்கு (Silver Oak) என்பது சேர்வராயன் மலைகளில் நிறைய வளரும்படியான மரம். இதனுடைய பட்டை வெள்ளியைப்போல் பளபளப்பாக இருப்பதால் இம்மரம் இப்பெயர் பெற்றது. இது பருத்து நீண்டு 100 அடிக்கு மேல் வளரும். சேர்வராயன் மலையில் வாழும் மக்கள் வீடு கட்டுவதற்கும், வீட்டுச் சாமான்கள் செய்வதற்கும் இதையே பயன்படுத்துகின்றனர். இது மாம்பலகையைப்போன்ற தன்மையுடையது. இது வளையும் ; ஆனால் உறுதியானது. சேர்வராயன் மலைகளின்மீது எங்கு பார்த்தாலும் வானளாவி வளர்ந்து மஞ்சுரிஞ்சும் இம்மரங்கள் செம்மாந்து நிற்பதைக் காணலாம். சேர்வராயன் மலைகளில் வாழும் தோட்ட முதலாளிகள் இதை விரும்பி வளர்க்கின்றனர். ஏனென்றால் இதன் சிறப்புக்காக அல்ல; காஃபிப் பயிருக்கு எப்பேர்தும் நிழல் வேண்டும் என்ற காரணத்தால், காஃபித் தோட்டங்களிலேயே இதனையும் சேர்த்து வளர்க்கின்றனர்.

தீவனம் :

மலைமீது எப்பொழுதும் புல் நிறைய வளரும். மலைமீது வாழும் மக்கள், அது நன்றாக வளர்ந்திருக்கும் சமயத்தில் அறுத்துச் சேகரம் செய்து வைப்பர். கால்நடைகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் போது, அச்சேமிப்புப் பயனுடையதாக இருக்கும். இதில் மற்றுமொரு பயன் இருக்கிறது. காய்ந்துபோன புற்கள் எளிதில் தீப்பற்றிக் கொள்ளுமல்லவா ? அதனால் அடிக்கடி காட்டுத் தீப்பரவும். ஆகையினால் இவற்றை அறுத்துவிடுவது காட்டுத் தீயைத் தடுக்கச் சிறந்த வழியாகும்.

தழை உரங்கள் :

காடுகளில் இருக்கும் பயனற்ற இலை தழைகள் வயல்களுக்கு உரமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சேலம், ஆத்தூர்க் கோட்டங்களில் உள்ள விளை நிலங்களுக்குச் சேர்வராயன் மலைகளில் உள்ள தழைகள் உரமாகப் பயன்படுகின்றன. ஒரு ஏகர் நஞ்சை நிலத்திற்கு இரண்டு அல்லது மூன்று டன் தழைகள் உரமாகப் பயன்படுகின்றன. அரசியலார் முதலில் குத்தகைக்காரர்களுக்குக் குறிப்பிட்ட இடத்தில் தழை உரம் சேகரிக்க அனுமதியளித்தனர். ஆனால் பிறகு அரசியலாரே, தனிப்பட்ட அமைப்புகளை ஏற்படுத்தித் தழை உரங்களைச் சேகரம் செய்தனர்.

கனிப் பொருள்கள்

மாக்னசைட் :

சேர்வராயன் மலையடிவாரத்திலும், அதற்கு ஐந்து கல் தொலைவிலுள்ள சுண்ணாம்புக் கரட் (Chalk Hills) டிலும் கிடைக்கும் வெள்ளைக்கல் (சுண்ணாம்புக்கல்) (Magnesite) மிகவும் உயர்ந்த ரகத்தைச் சேர்ந்தது. இவற்றைத் தோண்டி எடுத்துத் தூய்மை செய்யப்பெரும் பெரும் சூளைகள் நிறுவப்பட்டுள்ளன. அவைகள் சுண்ணாம்புக் கரட்டிலும், சேர்வராயன் மலையடிவாரத்திலும் உள்ளன. இத் தொழிலகங்களில் ஒன்று. ஆங்கிலேயருக்கும் மற்றாென்று டால்மியாவுக்கும் உரிமை பெற்றவை. ஆனால் ஆங்கிலேயர் ஓர் இந்திய முதலாளிக்கே தங்களுடையதை விற்றுவிட்டனர். இவைகளேயன்றி வேறு இரண்டு தொழிலகங்களும் உள்ளன. மாக்னசைட் பெருத்த அளவில், தோண்டத் தோண்டக் குறையாத கனிப்பொருள். உலகில் வேறு இடங்களில் கிடைக்கும் சுண்ணாம்புக் கற்களைவிடச் சேலத்தில் கிடைக்கும் கற்களே மிகவும் சிறந்தவை என்றும், தூய்மையானவை என்றும் கூறுகின்றனர்.

மிதமான சுண்ணாம்புக் கலப்புள்ள கற்கள், பலவித இன்றியமையாத பணிகளுக்குப் பயன்படுகின்றன. கட்டிடத் தொழிலுக்கு மிகவும் தேவையான காரை (Plaster), ஓடுகள் (Tiles), செயற்கைக் கற்கள் (Artificial stones), பெரிய உலைகளின் தளங்கள் (boiler coverings) முதலியன செய்வதற்குச் சுண்ணாம்புக்கற்கள் பயன்படுகின்றன. உலோகங்களை உருக்க உயர்ந்த வெப்பநிலை தேவை. அந்த வெப்ப நிலையிலும் எரிந்து போகாதபடி வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் முறையில் உலைகள் (Furnaces) அமைக்கப்படவேண்டும். அத்தகைய வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தி இந்த வெள்ளைக் கற்களினால் செய்த வெப்பச் செங்கற்க (Fire bricks) ளுக்கே உண்டு. ஆகையினால் தான் இவ் வெப்பச் செங்கற்களை மாபெரும் எஃகு உலைகளின் உட்தளங்களில் பதிக்கிறார்கள். சேலம் மாவட்டத்தில் (1) கஞ்சமலை (2) கோதுமலை (3) சிங்காபுரம் (4) கொல்லி மலை (5) தீர்த்த மலை (6) கெத்தமலை (7) மல்லிக் கரை (8) பைத்தூர் மலை ஆகிய இடங்களில் இரும்புத்தாது நிறையப் புதைந்து கிடைக்கிறது. உருக்குவதற்கு நிலக்கரி இல்லாத காரணத்தாலேயே, இத்தாது பூமிக்கடியில் தூங்கிக் கொண்டிருக்கிறது. நெய்வேலி நிலக்கரி உபயோகத்துக்கு வந்தவுடன், இவ்விரும்புத்தாது தோண்டி எடுக்கப்படும். அவைகளை உருக்குவதற்கு அமைக்கப்படும் பேருலைகளுக்கு இவ் வெள்ளைக்கல் சிறந்த துணைப் பொருளாகப் பயன்படும்.

பாக்சைட் :

பாக்சைட் என்னும் கனிப் பொருள் சேர்வராயன் மலையில் அளவில்லாமல் கிடைக்கிறது. ஆனால் இதைத் தோண்டி எடுத்து விரிவான முறையில் ஆலைகள் நிறுவித் தொழிலைப் பெருக்க இன்னும் முயற்சி எடுக்கப்படவில்லை. பாக்சைட்டிலிருந்து அலுமினியம் செய்யலாம். ஆனால் பாக்சைட்டை உருக்குவதற்கு உயர்ந்த மின்னாற்றல் தேவை. சேலம் மாவட்டத்திலுள்ள நீர்வீழ்ச்சிகளை நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டால் இது ஒன்றும் நமக்குக் கடினமான செயல் அல்ல. சேலம் மாவட்டத்தின் இன்பப்பொழுது போக்குக்குரிய நிலைக்களங்களில் ஒன்றாக விளங்கும் ‘ஒகைனகல் நீர்வீழ்ச்சி’ யைச் செயல்படுத்தினால், சேலத்தில் அலுமினியத் தொழிற்சாலை செயலாற்றுவதற்கு வேண்டிய மின்னாற்றலை நிச்சயம் பெற முடியும். இந்திய அரசியலாரும் டேனிஷ்பேட்டை என்ற இடத்தில் ஒரு பாக்சைட் தொழிற்சாலை நிறுவத் திட்டமிட்டிருக்கின்றனர். ஏர்க்காட்டிலிருந்து நான்கு கல் தொலைவில் சேர்வராயன் சாமி கோயில் உள்ளது. அக்கோயிலுக்கு அண்மையில் இப்போது பாக்சைட் தோண்டி எடுக்கப்படுகிறது. சென்ற நூற்றாண்டில் திரு. டிக்கென்ஸ் (E. K. Dickense) என்ற ஒரு வெள்ளையர் ஏர்க்காட்டில் வாழ்ந்தார். அவர் ஒரு தோட்ட முதலாளி (Plantainer) முதன் முதலாக அவ்விடத்தில் பாக்சைட் கிடைப்பதை அவர் தாம் கண்டறிந்தார். அரசியலாரிடமிருந்து அவ்விடத்தைச் சுரங்கக் குத்தகைக்கு (mining leace) எடுத்துக் கொண்டு, அங்குக் கிடைக்கும் பாக்சைட்டைத் தோண்டி எடுக்கத் தொடங்கினார். இப்பொழுது அவ்விடம் வட இந்திய ஆலை முதலாளிகளில் ஒருவரான வி. எச். டால்மியாவிற்கு உரிமை பெற்று விளங்குகிறது. வெட்டி எடுக்கப்படும் பாக்சைட் தாது ஏர்க்காட்டிலுள்ள தொழிற்சாலைக்குக் கொண்டு வரப்படுகிறது. பெரிய உலையிலிட்டு வறுக்கப்பட்டு, மாபெரும் இரும்பு உலக்கைகளினால் பொடி செய்யப்படுகிறது. அவ்வாறு செய்யப்படும் பொடியை எம்ரி பொடி (Emry Powder) என்று அழைக்கின்றனர். அப்பொடி இந்தியா பூராவும் அனுப்பப்படுகிறது. இந்திய நாட்டில் எம்ரிபொடி செய்யும் தொழிற்சாலை இது ஒன்று தான். ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய் பெறுமான எம்ரி பொடி இங்கிருந்து அனுப்பப்படுகிறது. இத்தொழிற்சாலை கி. பி. 1942 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் தற்போது 100 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். எம்ரி பொடியிலிருந்து, சாணைக்கல், உப்புக் காகிதம், மின்சாரக் கருவிகளுக்கு வேண்டிய துணைப் பொருள்கள் ஆகியவை செய்யப்படுகின்றன.

மணப் பொருள்கள்

சேர்வராயன் மலைகளில் ஜெரேனியம் பச்சோலி, பெப்பெர் மெண்ட், யூக்கலிப்டஸ், சிற்றடோரா என்ற மணச் செடிகள் விளைகின்றன. இந்தியாவிலேயே இச்செடிகள் வளர்வதற்குரிய தட்ப வெப்பநிலை இங்கு தான் ஏற்றதாக உள்ளது என்று கூறுகின்றனர். ஏர்க்காட்டிலிருந்து நாகலூர் செல்லும் வழியில் ‘எசென்ஸியல் ஆயில்ஸ் அண்ட் கெமிகோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்’ (Essential Oils And Chemico Industries Ltd) என்ற தொழிற்சாலை உள்ளது. அதன் உரிமையாளர், திரு. பவானிசிங் என்பவர். இவர் கி. பி. 1942 இல் நடந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றவர். இவர் தமக்கு உரிமையான துர்க்கா தோட்ட (Durga Estate) த்தில் மேற்கூறிய செடிகளைப் பயிர்செய்து அவற்றிலிருந்து ஜெரேனியம் எண்ணெய், பச்சோலி எண்ணெய், பெப்பெர் மெண்ட் எண்ணெய், யூகிலிப்டஸ் எண்ணெய் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறார். இந்த எண்ணெய்கள், சோப்பு, கூந்தலெண்ணெய், செண்ட் முதலிய மணப் பொருள்கள் செய்வதற்கு மிகப் பயன் படுகின்றன.

ஜெரேனியம் செடியானது தென் ஆப்பிரிக்க நாட்டுத் தாவரம். அங்குள்ள பாறைகளடர்ந்த மலைச்சரிவுகளில் இது நிறைய விளைகிறது. அல்ஜீரியா, தென் ஃபிரான்சு, இத்தாலி, போர்பன், உருசியா, கருங்கடற் கரை, ஆகிய இடங்களிலும் இச் செடி பயிரிடப்படுகிறது. இதிலிருந்து எடுக்கப்படும் ஜெரேனியம் எண்ணெய் வாணிப முக்கியத்துவம் வாய்ந்தது. சேர்வராயன் மலைமீது 4500 அடிகளுக்கு மேல் இது நன்றாக வளருகிறது. இம்மலையில் சுமார் 150 ஏக்கர் நிலத்தில் ஜெரேனியம் பயிர் செய்யப்படுகிறது.

இந்திய நாட்டு மக்கள் மணப் பொருள்களைப் பண்டைக் காலத்தில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தினார்கள் என்பதற்கு நிறையச் சான்றுகள் உள்ளன. குறிப்பாகத் தமிழ் மக்கள் மணப் பொருள்களை மிகவும் விரும்பினர். அகில் கட்டையைப் புகைத்து அதில் கிளம்பும் மணமிக்க புகையைத் தங்கள் கூந்தலில் ஏற்றித் தமிழ் மகளிர் தம் கூந்தலை ஒப்பனை செய்தனர் என்றும், மல்லிகை, குறிஞ்சி, முல்லை முதலிய மணமிக்க மலர்களைச் சூடி இன்புற்றனரென்றும் சங்க இலக்கியங்கள் பரக்கப் பாடுகின்றன. ஆடவரும் பெண்டிரும் மார்புக்குச் சந்தனம் பூசிக்கொள்ளும் வழக்கம் பண்டைக் காலத்தில் பெரு வழக்காக இருந்தது. அகிலும் சந்தனமும், வேறு சில மணப் பொருள்களும் கிரீஸ், உரோமாபுரி, எகிப்து, அரேபியா முதலிய நாடுகளுக்குத் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டனவென்று வரலாறு கூறுகிறது. ஆனால் இன்றாே, நம் நாடு இத்துறையில் பின்னடைந்துள்ளது. மணப்பொருள் உற்பத்தி செய்யும் தொழில், ஃப்ரான்சு, இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, உருசியா முதலிய நாடுகளில் மிகவும் முன்னேற்றமடைந்துள்ளது. மணப் பொருள்களுக்கான தாவரங்கள் விளைவதற்குரிய தட்ப வெப்பநிலை நம் நாட்டில் இயற்கையாகவே அமைந்துள்ளது. குளிர்ந்த மலைச் சரிவுகளும், பள்ளத்தாக்குகளும் இங்கு நிறைய உள்ளன. ஆனால் அவைகளை நாம் இன்னும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இந்திய நாட்டில் சோப்பு முதலிய மணப் பொருள்கள் செய்வதற்கு ஆண்டுதோறும் 28,000 இராத்தல் ஜெரேனியம் எண்ணெய் தேவைப்படுகிறது. இவ்வளவும் வெளி நாடுகளுலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. ஜெரேனியம் விளைவதற்கு ஏற்ற இடங்களைக் கண்டறிந்து இத்துறையில் அரசியலார் சிறிது ஊக்கம் காட்டினால், நம் நாட்டுக்கு வேண்டிய முழு அளவு ஜெரேனியம் எண்ணெயையும் நாமே தயார் செய்து கொள்ளலாம். சேர்வராயன் மலைமீது 200 ஏகர் நிலத்தை, இந்த ஆராய்ச்சிக்காகத் திரு. பவானி சிங்கிற்கு அரசியலார் வழங்கியுள்ளனர். இவருடைய தொழிற்சாலையில் ‘சேர்வராய் பிரமி கூந்தலெண்ணெய்’ என்ற ஒரு வாசனைத் தைலமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இது இந்திய நாட்டின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உயிரினங்கள் :

சேர்வராயன் மலைகளின் அடிவாரங்களிலுள்ள காடுகளில் ஒருவகை மானினம் (Sambur) காணப்படுகிறது. ஆனால் அதிக அளவில் இல்லை. மஞ்சவாடிக் கணவாய்க்குச் செல்லும் வழியில் கொம்பு தூக்கி, மாறன் மங்களம் முதலிய ஊர்களுக்கு அப்பால் கரடியும், அறுபதடி பாலத்திற்கருகில் உள்ள குடுமப்பட்டிக் காட்டில் சிறுத்தையும் இருப்பதாகக் கூறுகின்றனர். சேலம் மாவட்டக் காடுகளில் வழக்கமாகக் காணப்படும் நாகப் பாம்பு (Lachesis macrolecpis), கட்டுவிரியன் (Russells viper), பச்சைப் பாம்பு, (Green viper), குறுமலைப் பாம்பு (Young Python or Rock Snake) முதலியவை சேர்வராயன் மலைகளிலும் காணப்படுகின்றன.

தட்ப வெப்ப நிலை :

சேர்வராயன் மலையின் தட்ப வெப்பம் மிதமானது. 1906-ஆம் ஆண்டு, தட்ப வெப்ப நிலைக் கணக்கு எடுக்கப்பட்டது. ஏர்க்காட்டின் ‘கிரேஞ் ஹவுசின்’ கீழ் அறையில் வெப்பமானி பொருத்தப்பட்டிருந்தது. காலை 6 மணிக்கும், நடுப்பகல் 12 மணிக்கும் மாலை 4 மணிக்கும், இரவு 11 மணிக்கும் வெப்ப அளவு தவறாமல் குறிக்கப்பட்டது. அக் கணக்கு 24 ஆண்டுகள் தொடர்ந்து எடுக்கப்பட்டது. அவ்வாறு கணக்கிட்டதில் வெப்ப நிலையின் மேல் வரம்பு 82° க்கு மேல் சென்றதில்லை. கீழ் வரம்பு 60 1/2° க்குக் குறைந்ததில்லை. வெப்ப நிலையின் மேல் வரம்பிற்கும் கீழ் வரம்பிற்கும் உள்ள வேறுபாடு 21 1/2° க்கு மேல் எந்த ஆண்டிலும் இருந்ததில்லை. அநேகமாகக் கோடைக் காலங்களில் 80° க்கு மேல் வெப்பநிலை மிகுவது மிக மிகக் குறைவு. அநேகமாகக் கோடை நாட்களில் (ஏப்ரல், மே) 77° தான் இருப்பது வழக்கம். குளிர் காலங்களில் (டிசம்பர்) வெப்ப நிலை 67° தான் இருப்பது வழக்கம். எப்பொழுதாவது ஓரிரு நாட்களில் வெப்பநிலை 64° க்கு வருவதுண்டு.

மழை :

சேர்வராயன் மலைகளின் மீது பெய்யும் மழை அங்கு வீசும் காற்றின் வேகத்தைப் பொருத்தது. காற்றின் வேகம் குறைவாக இருக்கும் மாதங்களில் மழை மிகுதியாகப் பெய்யும். காற்றின் வேகம் மிகுந்திருக்கும் மாதங்களில் மழையின் அளவு குறைந்து விடும். காற்றுதன் வேகத்தையிழந்து மீண்டும் புத்துயிர் பெறும் மாதங்களில் மழை அநேகமாக இருப்பதில்லை. அக்டோபரிலிருந்து மார்ச் வரை வடகிழக்குக் காற்று வீசும். ஏப்ரலில் காற்று தெற்கு நோக்கி வீசும். மேயிலிருந்து செப்டம்பர் வரை தென் கிழக்குப் பக்கமாகவோ அல்லது தென்மேற்குப் பக்கமாகவோ வீசும். ஃபெப்ருவரி, மார்ச் மாதங்களில் காற்றின் வேகம் மிகுந்திருக்கும். ஏப்ரலில் காற்றின் வேகம் சிறிது குறையும். மே மாதத்தில் காற்றின் வேகம் திடீரென்று குறைந்து ஜூனில் மறுபடியும் உயர்ந்துவிடும். ஜூலையிலிருந்து காற்றின் வேகம் படிப்படியாகக் குறைந்து கொண்டு வந்து, அக்டோபரில் அமைதியாக இருக்கும். தொடர்ந்து வரும் மாதங்களில் காற்று மறுபடியும் புத்துயிர் பெறத் தொடங்கும். சேர்வராயன் மலைகளின் மீது ஆண்டுக்குச் சராசரி 41 அங்குல மழை பெய்கிறது.

குடியேற்றம் :

நீலகிரி மலை ஒரு கோடை வாழ் இடமாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாகவே கி. பி. 1819-இல் சேலம் நகரில் வாழ்ந்த அதிகாரிகள், சேர்வராயன் மலையைத் தேர்ந்தெடுத்தனர். சேலம் மாவட்டத்தின் தண்டலராக இருந்த திருவாளர் காக்பர்ன் (Mr. Cockburn 1820-1829) என்பவர், சேர்வராயன் மலையில் முதன் முதலாகக் குடியேறினார். காஃபி, ஆப்பிள், பியர்ஸ், லாக்குவட்ஸ் முதலியவற்றைப் பயிரிட்டுச் சோதனை நடத்தினார். இப்போது ஏர்க்காட்டுக்கு அண்மையிலுள்ள கிரேஞ் தோட்டம் (Grange Estate) தான் அவருடைய சோதனைக் களமாக இருந்தது. கிரேஞ் ஹவுசில் இப்போது சரக்கறை (Store house) இருக்கும் இடத்தில்தான் சேர்வராயன் மலைமீது அமைக்கப்பட்ட முதல் கட்டடம் தோன்றியது. கி. பி. 1823-இல் சேலத்தில் அரசாங்க மருத்துவ (Civil Surgeon) ராக இருந்த ஒரு வெள்ளையரை சேர்வராயன் மலையின் இயற்கை அழகு வெகுவாகக் கவர்ந்தது. கோடையில் வாழ்வதற்கு ஏற்ற இடமாகச் சேர்வராயன் மலையைக் கருதினார். அதன் மீது ஒரு குறிஞ்சி நகரம் அமைப்பின் சேலம் மக்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என்று எண்ணினார். அவ்வாண்டு சர் தாமஸ் மன்றோ (Sir Thomas Manro) என்பவர் சென்னை மாநில ஆளுந (Governor) ராக விளங்கினார். அவருடைய ஆணைப்படி அவ்வாண்டிலேயே திருவாளர் இங்கிலண்ட் என்பவர் சேர்வராயன் மலைகளை அளந்து ஆய்ந்தறிய வந்தார். சேலம் மாவட்டத் தலைமை மருத்துவர், சேர்வராயன் மலையின் மீது மல்லாபுரத்திலிருந்து ஒரு மலைப் பாதை (Ghat road) அமைப்பது அவசியம் என்பதை வலியுறுத்தி மேலதிகாரிகளுக்கு ஓரறிக்கை விடுத்தார். ஆனால் சேர்வராயன் மலைகளின் மீது பரவிய ஒரு கொடிய காய்ச்சலால் தாக்கப்பட்டு அவ்வாண்டிலேயே அவர் இறந்தார். ஆகையினால் சேர்வராயன் மலையின் முன்னேற்றம் சிறிது காலம் தடைப்பட்டது. வாழ்க்கையில் ஒரு மாற்றத்தையும் கேளிக்கையையும் விரும்பியவர்கள், அடிக்கடி மலை மேல் சென்று சில நாட்கள் தங்கி இன்பமார்ந்தனர்.

கி. பி. 1824-இல், இந்திய இராணுவத்தில் தளபதியாகப் பணியாற்றி வந்த வெல்ஷ் துரை மகனார் (Colonel Welsh) சேலம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது சேர்வராயன் மலைகளைப் பார்வையிடும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. திருவாளர் காக்பர்ன் தம் குடும்பத்தோடு மலைமீது தங்கியிருந்தார். அவர்களைக் கண்டு மகிழ்ந்த வெல்ஷ் பின்வருமாறு சேர்வராயன் மலைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

“சேலம், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் வாழும் பணம் படைத்த செல்வர்களுக்கு இம்மலை சிறந்த வாழ்விடமாகவும், சிறந்த பொழுது போக்கிற்கு ஏற்ற இடமாகவும், உடல் நலத்தைப் பெருக்கி இன்பம் நல்கும் நிலைக்கலனாகவும் விளங்கியது. ஆனால் சில ஆண்டுகள் கழிந்ததும், இம்மலைகளில் ஒருவித நோய் பரவி அங்கு வாழ்ந்தவரை மிகுந்த கொடுமைக்குள்ளாக்கியது. அதனால் அவ்விடத்தைவிட்டு எல்லோரும் வெளியேறிவிட்டனர். அவர்களிடம் பணியாற்றிய வேலைக்காரர்கள் அக்கொடுமையை ஏற்று அங்கேயே தங்க வேண்டியவரானார்கள். அவர்களெல்லாம் அம்மலை வாழ் மக்களான ‘மலையாளிகள்’. அம்மலையின் தட்ப வெப்பம் அவர்களுக்குப் பழக்கமான தென்றாலும், அப்பொழுது அவர்கள் அனுபவித்த குளிரைப் போல் அவர்களுடைய வாழ்நாளில் என்றும் அனுபவித்திருக்கமாட்டார்கள்.”

திருவாளர் பெட் (Mr. Bett) என்பார், சேலம் மாவட்டத் தண்டலராகப் பொறுப்பேற்றிருந்தகாலை, காஃபி பயிரிடும் தொழில் வெற்றிகரமாக முன்னேறியது. ஆகையினால் வருவாயை விரும்பி, மக்கள் பெரும் அளவில் அங்குக் குடியேறத் தொடங்கினர். நோய்க்காலத்தில் தங்களுடைய தோட்டங்களை விட்டு வெளியேறியவர்கள் மறுபடியும் குடியேறினர். இயற்கையழகு மிக்க சரிவுகளில் தங்கள் மனைகளை எழுப்பினர். ஆனால் அவ் வீடுகளெல்லாம் ஏர்க்காட்டை விடத் தாழ்வான இடங்களிலேயே அமைக்கப்பட்டன. அவ்விடங்களெல்லாம், எளிதிலே மலேரியாக் காய்ச்சலுக்கு உள்ளாகும் இடங்கள், மக்கள் வாழ்வதற்குத் தகுதியற்றவை. ஆனால் ஏர்க்காடு அமைந்திருக்கும் இடம் ஈரமற்றது ; உடல் நலத்தை வளர்ப்பதற்கேற்ற தட்ப வெப்ப நிலையினைக் கொண்டது. ஏர்க்காடு அமைந்திருக்கும் பீட பூமியைச் சுற்றியிருக்கும் மலைச் சரிவுகள் எல்லாம் மலைக் காய்ச்சலுக்கு நிலைக்கலன்கள்.

ஏர்க்காடு :

இவ்வூரின் பெயர்க் காரணங்களாகப் பல கூறுகின்றனர். ஏரிக்கரையில் அமைந்திருப்பதால், முதலில் ‘ஏரிக்காடு’ என்று வழங்கிப் பிறகு ஏர்க்காடு ஆயிற்று என்பர். ‘ஏர்+காடு’ எனப் பிரித்து, அழகிய காடு என்று பொருள் கொள்வாரும் உண்டு. ஏறுகாடு என்ற சொல்லே, ஏர்க்காடு ஆயிற்று என்பர் வேறு சிலர். ‘ஏற்காடு’ என்றும் பலர் எழுதுகின்றனர்.

இந் நகரமானது சேர்வராயன் மலை மீதுள்ள பீட பூமியின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சேர்வராயன் மலைமீது எத்தனையோ கண்ணைக் கவரும் இடங்களும், இயற்கை அழகு பொங்கித் ததும்பும் வண்ணப் பீட பூமிகளும் உள்ளன. ஆனால் அவ்விடங்களிலெல்லாம் இவ்வூர் அமைக்கப்படாமல், இவ்விடத்தில் அமைக்கப்பட்டதற்குக் காரணம், சேலத்திலிருந்து இவ்விடம் எளிதில் வந்தடைவதற்கு ஏற்றதாக உள்ளது. மற்றுமோர் காரணம், சேர்வராயன் மலைகளின் மற்றப் பகுதிகள் கண்டு ஆராயப்படுவதற்கு முன்பாகவே, இவ்விடம் கண்டறியப்பட்டு, எதிர்கால ஏர்க்காடு நகரம் உருவாவதற்கு வேண்டிய ஒருசில கட்டடங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. கி. பி. 1841-ஆம் ஆண்டு ஜெ. எம். லெச்லர் (Rev J. M. Lechier) என்ற பாதிரியார், அப்பொழுது சேலம் மாவட்டத்தில் துணைத் தண்டல (Sub Collector) ராக இருந்த பிரெட் (Brett) என்பவரோடு மலைவளங் காண வந்தபோது, ஏர்க்காட்டின் முதல்வீடு உருப் பெற்றது. திருவாளர் பிரெட் கலை உள்ளம் படைத்தவர். வீடுகளை அமைப்பதற்கு எழில் மிக்க இடங்களைத் தேர்ந்தெடுப்பதில் பெருவிருப்பம் கொண்டவர். கி. பி. 1845-இல் ஓரழகிய மனையை அமைத்தார். அவ்வில்லம் இப்போது, ஃபேர் லான்ஸ் ஓட்டல் (Fair-Lawns Hotel) என்ற பெயரோடு விளங்குகிறது. உடனே ‘கிரேஞ்’ என்ற கட்டடமும் உருவாகியது. இது கற்களினால் உறுதியாகக் கட்டப்பட்ட ஈரடுக்கு மாளிகை.

கி. பி. 1857-ஆம் ஆண்டு வட இந்தியாவில் முதல் உரிமைப் போர் நடந்ததைப் பற்றி அறிவோம். நானா சாகப், ஜான்சிராணி, பகதூர்ஷா ஆகியோர் அப்போரை முன்னின்று நடத்தினர். ஆங்கில வரலாற்றாசிரியர்களால் அந் நிகழ்ச்சி ‘சிப்பாய்க் கலகம்’ (Soldiers’ Mutiny) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அதைப் போன்ற கிளர்ச்சி சென்னை மாநிலத்தில் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் அதே ஆண்டில் மலையாள நாட்டில் கேனோலி (Canolly) என்ற ஒரு பெரிய ஆங்கில அதிகாரி படுகொலை செய்யப்பட்டார். ஆனால் வடக்கில் நடந்த கிளர்ச்சிக்கும் கேனோலியின் படுகொலைக்கும் யாதொரு தொடர்புமில்லை. அவர்பால் ஒரு சிலர் கொண்டிருந்த தனிப்பட்ட பகைமையும், பழியுணர்ச்சியும் காரணமேயன்றி, அவர் கொலைக்கு அரசியல் காரணம் எதுவுமில்லை.

அதே ஆண்டில் சேலத்தில் ஒரு கலகம் தோன்றியது. இதுவும் தனிப்பட்டோர் பகையுணர்ச்சியின் காரணமாகவே எழுந்தது. ‘மருண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது பழமொழி யன்றாே ? சேலத்தில் வாழ்ந்த வெள்ளையரையும் அச்சம் என்ற கொள்ளை நோய் பீடித்தது. எல்லாரும் ஏர்க்காட்டைப் புகலிடமாகக் கொண்டனர். கலகக்காரரை எதிர்ப்பதற்கு வேண்டிய ஆயத்தங்களில் ஈடுபட்டனர். கிரேஞ்சின் அடியில் ஒரு நிலவறை அமைக்கப்பட்டு, ஆறு திங்கள்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்கள் அதில் சேர்த்து வைக்கப்பட்டன. கையில் துப்பாக்கி தாங்கிய காவல் வீரர்கள் கூரையின் மேல் நிறுத்தி வைக்கப்பட்டனர். மூன்று பெரிய கனல் கக்கும் பீரங்கிகள் அக்கட்டடத்தின் உச்சியில் பொருத்தப் பட்டுப் போருக்குத் தயாராக இருந்தன. அதன் மீது அமைக்கப்பட்டிருந்த கோபுரத்தில் ஆங்கிலக் கொடி பறந்து கொண்டிருந்தது.

ஏதேனும் அபாயம் நேருமென்று தோன்றினால், உடனே ஓர் அபாயச் சங்கு ஊதப்படும். உடனே ஏர்க்காட்டில் வாழும் எல்லா ஐரோப்பிய மகளிரும் குழந்தைகளும், ஆண்கள் பின் தொடர கிரேஞ்சில் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு எல்லோரும் அறிவிக்கப் பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி எந்தவிதத் தாக்குதலும் நேரவில்லை. அப்படி ஏதேனும் நேர்ந்திருந்தால், கேவலம் அத்தோட்ட வீடு ஒரு நாள் தாக்குதலுக்குக் கூட ஈடு கொடுத்திருக்க முடியாது.

ஏரி:

ஏர்க்காட்டின் வட பகுதி பச்சைக் கம்பளம் பரப்பப்பட்டாற் போன்ற புல் வெளிகளில் அமைந்துள்ளது. அப் புல்வெளிகளில் நடுவில் பரந்து கிடக்கும் நன்னீர் ஏரி, கண்ணைக் கவரும் வனப்புடையது. இன்பமாகப் பொழுதைக் கழிக்க விரும்புவோர் இதில் தோணியூர்ந்து மகிழ்வார். ஒரு சிறு தொகையைக் கட்டணமாகச் செலுத்திவிட்டு, அவ்வூர் வாழ் வெள்ளையர் மீன் பிடித்துப் பொழுதைக் கழிப்பதும் உண்டு. திரைப்படங்களுக்குரிய காட்சிகள் இங்கு அடிக்கடி எடுக்கப்பெறும். இவ்வேரியிலிருந்து தோன்றும் வாணியாறு, கிளியூர் நீர் வீழ்ச்சியில் தாவிக் குதித்து ஓடும் காட்சியைக் காண்போர் உள்ளம் களி கொள்ளும்.

ஏரிக்கு மேற்கே ஒரு குறுகிய பாதை இந்த நீர் வீழ்ச்சிக்குச் செல்லுகிறது. இவ்வழி மூன்று கல் தொலைவுடையது. மழைக் காலங்களில் ஏரியில் வழிந்து செல்லும் தண்ணிர் மூன்று கல் மேற்காக ஓடி, சுமார் 100 அடி உயரத்திலிருந்து கீழே விழுகிறது. இவ்விடத்திற்குச் செல்ல அரைக்கல் தொலைவு செப்பனிட்ட நல்ல பாதை உள்ளது. அது வரையில் உந்து வண்டிகளும், மிதி வண்டிகளும் செல்லலாம். அதற்கு மேல் பாதை சரிந்தும் குறுகியும் உள்ளது.

இவ்வேரியின் நீர் வளத்துக்குக் காரணமாக இருப்பது ஓர் அருவி. இது பழ மலையின் உச்சியிலிருந்து மரங்கள் சூழ்ந்த படுகையின் வழியாக ஓடி வந்து இதில் விழுகிறது. ஏரியின் வட புறத்தில் அமைந்திருக்கும் புனித இளமரக் காட்டில் (Sacred grove) மலையாளிகள் தொழுது வணங்கும் இரண்டு அழகிய கோயில்கள் உள்ளன. இக் கோயில்களுக்குச் சற்று மேற்கே, வாரச் சந்தை கூடும் இடமுள்ளது.


சீமாட்டி இருக்கை :

ஏர்க்காடு உந்து வண்டி நிலையத்திலிருந்து சீமாட்டி இருக்கையை அடைய ஒரு கல் தொலைவு செல்ல வேண்டும். கடல் மட்டத்திலிருந்து இவ்விடம் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஏர்க்காட்டில் வாழ்ந்த ஓர் ஐரோப்பிய மாது, இவ்வழகிய இடத்திற்கு நாள்தோறும் சென்று அமர்ந்து படித்துக் கொண்டிருப்பாராம். ஆகையினாலேயே இவ்விடம் ‘சீமாட்டி இருக்கை’ (Lady Seat) என்று அழைக்கப்படுகிறது என்று அவ்வூர் வாழ் மக்கள் கூறுகின்றனர். இவ்விடத்தில் அமர்ந்து நோக்குவார்க்குச் செங்குத்தான மலைச் சரிவும், சமவெளிகளும் தோன்றா நிற்கும். மேட்டூர் அணை தன் பரந்த நீர்ப் பரப்போடு நம் கண்களில் படும். நெளிந்து செல்லும் மலைப் பாம்பு போல் மலை வழிப் பாதை தோன்றும். அப் பாதையில் மேலும் கீழுமாக ஊர்ந்து வரும் உந்து வண்டிகள் நம்மை இன்பத்தில் ஆழ்த்தும். சுண்ணாம்புக் கரட்டில் அமைக்கப்பட்டிருக்கும் பேருலைகளிலிருந்து எழும்புகை வான மண்டலத்தை இருட்டாக்கும் காட்சியைக் காணலாம். இரவு நேரங்களில் சேலத்தைக் காண்போமானால், இலட்சக் கணக்கான வண்ண விளக்குகளின் நடுவில் அந்நகரம் அமைந்து ஒளியுடன் விளங்கும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும்; வானத்து விண்மீன்களையெல்லாம் பிடித்து மண்ணில் பதித்து வைத்தாற் போன்று தோன்றும்.


பகோடா உச்சி :

ஏர்க்காடு அமைந்துள்ள இடம் இயற்கை அழகுமிக்கது என்று கூறிவிட முடியாது. அதைவிட்டு ஓரிரண்டு மைல் நடந்து சென்றாேமானால் சேர்வராயன் மலையின் இயற்கை நலம் கொழிக்கும் பல காட்சிகளைக் கண்டு மகிழலாம். தமிழகத்தின் பல பகுதிகள் நம் கண்ணில் படும். ஏர்க்காட்டின் வட கிழக்கில் பகோடா உச்சி (Pagoda Point) என்ற இடம் உள்ளது. இது 4507 அடி உயரமுள்ளது. இங்குள்ள மலைக் கோயில்கள் பர்மியர்களின் பகோடா (கோயில்)க்களைப் போல் விளங்குகின்றன. பகோடாக்கள் அடியில் அகன்றும் மேலே செல்லச் செல்லக் குறுகியும் இருக்கும். எனவே இவ்விடம் பகோடா உச்சி என்று அழைக்கப்படுகிறது. இங்கிருந்து காண்போருக்கு, கிழக்கில் இருக்கும் தேனாந்தி மலைகளும், கல்ராயன் மலைகளும், சேலம் ஆத்தூர் சமவெளிகளும், பரந்து கிடக்கும் கொல்லிமலை, பச்சைமலை, போதமலை, ஜெருகுமலைத் தொடர்களும் தோன்றும். பகோடா உச்சிக்கு எதிரில் மிகவும் அழகான பெரும்பாறை ஒன்று உள்ளது. அப் பாறையிலிருந்து சில நூறு அடிகளின் கீழ் தேன்கூடு போன்று அழகுடன் காட்சியளிக்கும் காகம்பாடி என்னும் சிற்றூர் உள்ளது.


கரடிமலையும் பிராஸ்பெக்ட் உச்சியும் :

கரடிமலை என்னும் சிகரம் 4828 அடி உயரமுள்ளது. பிராஸ்பெக்ட் உச்சி 4759 அடி உயரமுள்ளது. இவ்விரண்டிடங்களினின்றும் காண்போருக்குத் திருச்செங்கோட்டுச் சமவெளியும், ஓமலூர்க் கோட்டமும், அவைகட்குப் பின்னால் கோவை மாவட்டத்தில் பரவியிருக்கும் பில்லி மலைகள், பருகூர் மலைகள், கம்பட்டராயன் மலைகள், பாலமலை, லாம்ப்டன் சிகரம் முதலியனவும், மைசூர் நாட்டிலுள்ள குட்டிராயன் மலையும் நன்கு தெரியும். வானத்தில் மூட்டமில்லாமல் தெளிவாக இருக்கும் நாட்களில் ஆனை மலைகளும், நீலகிரி மலைகளும், (Nilgiries) பழனிமலைகளும் நன்கு தெரியும்.

டஃப் சிகரம் :

சேர்வராயன் மலைகளில் காண்பதற்குரிய மற்றாென்று டஃப் சிகரம் (Duff’s Hill) ஆகும். இதிலிருந்து காண்போர் சேர்வராயன் மலைகளின் மேற்குச் சரிவுகளையும், அழகுடன் விளங்கும் குறுகிய பள்ளத்தாக்கையும காணலாம்.


காவேரி சிகரம் :

ஏர்க்காட்டிலிருந்து நாகலூர் சென்றால் இவ்வுச்சியை அடையலாம். சேர்வராயன் மலையின் வடபகுதியை இவ்விடத்திலிருந்து நன்கு காணலாம். சேர்வராயன் மலையிலேயே மிகவும் அழகான காட்சிகளை இப்பகுதியில்தான் காணலாம். இவ்விடத்திற்கு அண்மையில்தான் சிறந்த பழத் தோட்டங்களும் காஃபித் தோட்டங்களும் அமைந்துள்ளன. காஃபிக் கொட்டையைத் தூய்மைப்படுத்தும் ஆலையும் இங்குதான் உள்ளது. வாணியாற்றுப் பள்ளத்தாக்கும், அதன் துணையாறுகளின் படுகைகளும், அங்கிருந்து காண்போருக்குக் காட்சிதரும். வெள்ளாளக் கடைப்பாதையில் அவைகள் வளைந்து, மஞ்சக் குட்டையை நோக்கிச் செல்லும் காட்சியையும் கண்டு மகிழலாம்.

மக்களும் வாழ்க்கையும் :

ஐரோப்பியர்கள் குளிர் நாட்டில் வாழ்ந்தவர்கள். நம் நாட்டின் வெப்பநிலை அவர்கள் உடல் நலனுக்கு ஏற்றதாக இல்லாத காரணத்தால், ஏர்க்காடு போன்ற குறிஞ்சி நகரங்களில் வாழத் தொடங்கினர். எனவே ஏர்க்காட்டில் குடி புகுந்த மக்களில் பெரும்பாலோர் ஐரோப்பியரே. ஐரோப்பியர்களின் சமயமான கிருத்துவ சமயமே இங்கு வாழ்வோரின் சமயமாக விளங்குகிறது. ஐரோப்பியரல்லாத மக்கள் இந்து சமயத்தவரே. கிருத்தவ சமயத்தைச் சார்ந்த பல்வேறு பிரிவினரும் இங்கு வாழ்கின்றனர். கத்தோலிக்க நெறி, ஆங்கிலிகன் நெறி, இலண்டன் நெறி, லீப்சிக் லூதர் நெறி, டேனியர் நெறி, ஆகிய பல்வேறு நெறியாளருக்கும் இங்கு தனித் தனிக் கோயில்களும் கட்டடங்களும் உள்ளன. ஆங்கிலிகன் நெறியாளர் கோயிலும், புனித டிரினிடி நெறியாளர் கோயிலும் ஏர்க்காட்டில் வாழ்ந்த அவ்வச்சமயத்தாரின் பொருளுதவியால் கட்டப்பட்டவை. தத்தம் கோயில்கட்குரிய தலைவர்களைத் (Chaplain) தாமே தேர்ந்தெடுத்து, சமயத் தலைவரின் இசைவோடு, அவராணையின் கீழ் அக்கோயில்களை நடத்துகின்றனர். இக் கோயில்களைச் சார்ந்துள்ள இடுகாட்டில் (Cemetary) பல குறிப்பிடத்தக்க சமாதிகள் உள்ளன. திருவாளர் சார்லஸ் பிரடெரிக் சாமியர் என்பவர் சேலத்தில் நடுவராகப் (Session’s judge) பணியாற்றி 20-4-1869-இல் உயிர் நீத்தார். அவருடைய சமாதி இங்குள்ளது. கேப்டன் எட்வர்டு ஆல்வெல் ஷார்ட் (இறப்பு: 7-12-1883) என்பாரும், சென்னை மாநிலப் படையில் உயர் மருத்துவராகப் (Surgeon general) பணியாற்றிய திரு. ஜான்ஷார்ட் என்ற புகழ்பெற்ற ஆங்கிலோ இந்தியரும் (இறப்பு: 24-4-1889) இங்கு தான் புதைக்கப்பட்டுள்ளனர்.

சேர்வராயன் மலைமீது கத்தோலிக்க நெறியாளர்க்குரிய கேந்திரங்களாக ஏர்க்காடும், பாலமடியும் விளங்குகின்றன. ‘கிளனி புனித சூசையப்பர் திருச்சபை’ யைச் (St Joseph’s of Cluny) சார்ந்த கன்னியர் 1894-ஆம் ஆண்டு ஏர்க்காட்டிற்கு வந்தனர். 1897-இல் தங்களுக்குரிய கோயில் ஒன்றை எழுப்பினர். அவர்களால் சிறந்த மகளிர் பள்ளியொன்றும் இங்கு நடத்தப்படுகிறது.

கல்விக் கூடங்கள் :

ஏர்க்காட்டிலுள்ள பள்ளிக் கூடங்களெல்லாம் கிருத்தவர்களாலேயே நடத்தப்படுகின்றன. இவை முதன் முதலில் ஏர்க்காட்டிலும் சேலத்திலும் வாழ்ந்த வெள்ளையரின் குழந்தைகள் பயில்வதற்காக ஏற்படுத்தப்பட்டவை. இப்போது எல்லாரும் கல்வி பயில்கின்றனர்.


மான்ஃபோர்ட் உயர்நிலைப் பள்ளி:

ஏர்க்காடு உந்துவண்டி நிலையத்திலிருந்து சிறிது தூரம் சென்றால் மான்ஃபோர்ட் உயர்நிலைப் பள்ளி பெருமிதமான தோற்றத்தோடு நம் கண்களில் தென்படும். சிறிய ஏரியின் பக்கமாக நேர் கிழக்கில் அமைந்துள்ளது. ஏர்க்காட்டில் தோட்ட முதலாளிகளாக விளங்கிய ஆங்கிலோ இந்தியர்களின் குழந்தைகளுக்கு மேலைநாட்டு முறையில் ஒரு கல்விக்கூடம் தேவைப்பட்டது. திருவாளர் ஏஜீன் (Br. Eugene) என்ற கத்தோலிக்கப் பாதிரியார் கி. பி. 1917-இல் இப் பள்ளியைத் துவக்கினார். துவக்கும்போது ஏழுமாணவர்களே சேர்ந்தனர். ஆனால் தற்போது 320 மாணவர்கள் இதில் கல்வி பயில்கின்றனர். இவர்களில் 280 பேர் தங்கிப் பயிலும் மாணவர்கள் (Boarders) 40 மாணவர்கள் வெளியிலிருந்துவந்து பயில்வோர் (Daystudents) இப்பள்ளி இப்பொழுது புனித கிப்ரியல் திருச்சபையாரால் நடத்தப்படுகிறது. சிறந்த ஆங்கிலப் பயிற்சியும், கலைப் பயிற்சியும், இங்கு அளிக்கப்படுகின்றன. இராக், சையாம், கேரளம், இலங்கை, மலேயா, முதலிய நாடுகளிலிருந்தும், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இங்குவந்து கல்வி கற்கின்றனர்.

புனித இதய மகளிர் உயர்நிலைப் பள்ளி:

புனித இதய மகளிர் உயர்நிலைப்பள்ளி (Sacred Heart Girls High School) யானது கிளனி புனித சூசையப்பர் கன்னியரால் நடத்தப்படுகிறது. இப்பள்ளியானது கி. பி. 1894-ஆம் ஆண்டு திருவாட்டி வால்டர் அன்னை (Mother Valderbert)யின் தலைமையில் துவக்கப்பட்டது. இதிலும் ஏறக்குறைய 300 மாணவியர் கல்வி பயிலுகின்றனர். இதில் குழந்தைகளுக்கான கிண்டர் கார்டன் பள்ளியும் உள்ளது. இதில் மேலைநாட்டு இசை நடனக் கலைகளும் தொழிற்கல்வியும் கூடக் கற்றுக் கொடுக்கின்றனர்.


பிறகலைக் கூடங்கள் :

புனித மேரி திருச் சபையாரால் கிருத்தவக் கன்னியருக்காக நடத்தப்படும் இரண்டு பள்ளிகளும் உள்ளன. கோடைக் காலங்களில் கன்னியர் வந்து தங்கும் குறிஞ்சிமனையாக இவைகள் பெரிதும் விளங்குகின்றன. கிருத்தவ ஆடவர்க்குச் சமயக்கல்வி பயிற்றும் ஒரு பள்ளியும் இங்கு உள்ளது.


நாய் பங்களா :

ஏர்க் காட்டில் சிறப்பாகப் பேசப் படுவனவற்லுள் நாய் பங்களாவும் ஒன்று. பெரிய ஏரிக்கு இடதுபுறமாக நாகலூர் செல்லும் வழியில் இது உள்ளது. பாதையில் செல்லும் போதே நாய்கள் குரைக்கும் ஒலி நம்மை அச்சுறுத்தும். அப்பங்களாவின் உரிமையாளர் திருமதி. கோல்டுஸ்மித் அம்மையார். இவர் ஃபிரெஞ்சு நாட்டிலிருந்து இங்குக் குடியேறி நீண்ட காலமாக வாழ்கிறார். இவருடைய உற்றார் உறவினர் எல்லாம் நாய்களே என்று சொன்னால் கூடப் பொருந்தும். பூனையின் பருமனுள்ள நாயிலிருந்து சிறுத்தை அளவுள்ள நாய்கள் வரையில் இங்கிருக்கின்றன. நான் இவரைப் பார்க்கச் சென்றிருந்தபோது இவருடைய படுக்கை அறை மஞ்சத்தில் உரிமையோடு ஓர் ஆப்கானியச் சடைநாய் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது. இவருடைய சாய்வு நாற்காலியில் ஒரு சீன நாய் அரசனைப் போல் வீற்றிருந்தது. அல்சேஷன், புல்டெர்ரியர், முதலிய முரட்டு நாய்களும், சைனீஸ், ஆப்கன் முதலிய அழகு நாய்களும் இவரிடத்தில் உள்ளன. அல்சேஷன் என்பது ஜெர்மானிய நாட்டு இனம். இது அச்சுறுத்தும் தோற்றமுடையது. புல்டெர்ரியர் என்பது ஆங்கில நாட்டு இனம். இது மிகவும் வீறுடையது. நம் நாட்டில் கோழிச்சண்டை நடத்துவதுபோல இங்கிலாந்தில் புல் டெர்ரியர் நாய்களைக் கொண்டு நாய்ச் சண்டை நடத்துவார்களாம். ஆனால் இவ்விளையாட்டு இப்போது அந்நாட்டில் சட்ட பூர்வமாகத் தடுக்கப்பட்டுவிட்டதாம். உயர்ந்த இன நாய்களைக் கலப்பின்றி உற்பத்தி செய்து இவர் விற்பனை செய்கிறார்.

இங்கு ‘இந்திய நாய் வளர்ச்சிக் கழகம்’ (Kennel Club of India) என்ற ஓர் அமைப்பு உள்ளது. இதன் பொறுப்பாளர், நம் நாட்டின் தலைவரான இராசேந்திர பிரசாத் அவர்களே. இதன் செயலாளராக நீண்டநாள் பணியாற்றிவருபவர் திருமதி கோல்டுஸ்மித் அம்மையார். இந்திய நாட்டின் தலைமைக் கழகமே நாய்பங்களா தான். மாநிலங்களில் தனித்தனிக் கழகங்கள் உண்டு. நாய் இனத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவது, நாய்க் கண் காட்சி (Dog Shows) களை நடத்துவது, நாய்களைப் பற்றிய சிறந்த செய்தித்தாள் ஒன்று நடத்துவது, உயர்ந்த இன நாய்களுக்கு அவற்றின் தகுதியறிந்து சான்றிதழ் வழங்குவது எனப் பல நோக்கங்கள் இக்கழகத்திற்குரியவை. நாய்களைப் பற்றித் திருமதி கோட்டுஸ்மித் அம்மையாரிடம் நான் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் பின் வருமாறு குறிப்பிட்டார்.

“மேலை நாட்டு நாய்களைப்போல், இந்திய நாட்டு நாய்களிலும் வலிமையும் அறிவும் உள்ள இனங்கள் உண்டு. இராசபாளையம், கோம்பை என்ற இரண்டு இனங்களும், இந்திய இனங்களில் சிறந்தவை. மேலை நாட்டு நாய்களுக்கு ஒப்பானவை. ஆனால் இந்தியர்கள் இவற்றின் சிறப்பை உணர்வதில்லை. ‘அல்சேஷன் ! அல்சேஷன் !’ என்றே அலைகின்றனர். இந்திய இனங்களை நல்ல முறையில் எங்கும் விளம்பரப்படுத்துவதே என் நோக்கம்” என்றார் அவர்.


ஊராட்சி :

16-5-1923 இல் இங்கு ஊராட்சி மன்றம் நிறுவப்பட்டது. கி. பி. 1911 ஆம் ஆண்டுக் கணக்குப்படி ஏர்க்காட்டின் மக்கட் தொகை 1322 ஆகும். ஆனால் இன்று ஏர்க்காட்டிலும், அதன் ஊராட்சிக்கு அடங்கிய சிற்றூர்களிலும் 19,861 பேர் வாழ்கின்றனர். இவ்வூராட்சியின் ஆண்டு வருவாய் ரூ 70,000. இவ்வூராட்சிக்கு அடங்கிய நிலப்பரப்பு, 147 சதுர மைல்.


வாரச் சந்தை :

ஏர்க்காட்டிலுள்ள பெரிய ஏரிக்கு அண்மையில் சந்தை வெளி உள்ளது. உணவுப் பண்டங்களும், வேறு பல இன்றியமையாத பொருள்களும் இச் சந்தையில் விற்கப்படுகின்றன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இங்குச் சந்தை கூடுகிறது. அன்று ஏர்க்காடு பரபரப்பாகத் தோன்றும். தோட்டத் தொழிலாளர்களும், சேர்வராயன் மலையின் ஆதிக்குடிகளான மலையாளிகளும் அங்கு நிறையக் கூடுகின்றனர். மலைபடுபொருள்களான காய்கள், பழங்கள், கிழங்குகள், தேன் முதலியவற்றைச் சந்தையில் கொண்டுவந்து விற்று விட்டுத் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு செல்லுகின்றனர்.


தோட்டப் பயிர்கள்

காஃபி :

சேர்வராயன் மலைகளில் விளையும் தோட்டப் பயிர்களில் தலைசிறந்தது காஃபி ஆகும். காஃபிக் கொட்டைகளில் மிகவும் உயர்ந்த ரகத்தைச் சார்ந்த அரேபிகா (Arabica) இங்கு விளைகிறது. இப்பயிர் நம் நாட்டிற்கு வந்தது பற்றி ஒரு சுவையான வரலாறு கூறப்படுகிறது. கி. பி. 1600 இல் பாபாபூதான் சாகிப் என்ற ஓர் இஸ்லாமிய மன்னர், மைசூர் நாட்டிலுள்ள சந்திரகிரி மலைமீது வாழ்ந்த ஒரு குறுநில மன்னனைத் தோற்கடித்து விட்டுத் தன் வீரர்களைப் பார்த்து, “நண்பர்களே ! நான் மெக்காவிற்கு ஒரு புனித யாத்திரை செல்லப் போகிறேன். நான் வரும் வரையில் காத்திருங்கள்” என்று கூறிவிட்டு ஒரு குகையில் நுழைந்து மறைந்தார். அவ் வீரர்களும் பல திங்கள்கள் அவர் வருகைக்காகக் குகையின் வாயிலில் காத்திருந்தனர். சாகிபும் பல திங்கள்களுக்குப்பின் திரும்பி வந்தார். வந்தவுடன் தன் வீரர்களை நோக்கி, “நான் மெக்காவாகிய புண்ணிய பூமியிலிருந்து உங்களுக்குப் பரிசாக ஏழு விதைகள் கொண்டு வந்திருக்கிறேன். அவற்றிலிருந்து ஓர் அதிசயமான பயிர் விளையப் போகிறது. அது நமக்கு உணவாகவும், சுவை நீராகவும் பயன்படும்” என்று கூறி அரேபியாவிலிருந்து கொண்டு வந்த அக்கொட்டைகளைக் கொடுத்தார். அக் கொட்டைகளை அம் மலைமீது பயிரிட்டனர். அரேபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட காஃபிக் கொட்டை அரேபிகா என்று பெயர் பெற்றது என்பர். பிறகு அம் மன்னரும் ஒரு குடிசை அமைத்து அம் மலையின்மீதே வாழ்ந்தாராம். அதிலிருந்து அம் மலை பாபாபூதான் மலை என்று அழைக்கப்படுகிறது. இக் கதை நம்பத் தகுந்ததாக இல்லை. இருந்தாலும் காஃபி விதைகளை இந்தியாவிற்குக் கொணர்ந்தவர் பாபாபூதான் சாகிபுதான் என்று கூறுகின்றனர்.

உலகத்திலேயே காஃபிப் பயிர் விளைவுக்கென்று ஒரு சில மலைகளே உள்ளன. அப் பயிர் விளைவதற்கு ஏற்ற நிலம் சூரிய ஒளி பரவும் உயர்ந்த மலைச் சரிவே ; ஆனால் நிழலுள்ள இடமாகவும் இருக்க வேண்டும் ; நிறைய மழையும் பெய்ய வேண்டும். மழைநீர் தேங்கக் கூடாது. தழை உரம் நிறைந்த வளமான காட்டு நிலமாகவும் இருக்க வேண்டும். அத்தகைய குறிஞ்சி நிலங்கள் தென்னிந்தியாவில் நிறைய இருக்கின்றன. மைசூரிலுள்ள பாபாபூதான் மலைகளும், சென்னை மாநிலத்திலுள்ள நீலகிரி, வயநாடு (Wynaad), சேர்வராயன் மலைகளும், ஆனைமலை, பழனி மலை முதலியனவும், குடகு மலைகளும், மைசூர், சென்னை மாநிலங்களில் பரவிக் கிடக்கும் பில்லிகிரி மலைகளும், கேரளத்திலுள்ள நெல்லியம்பதி, கண்ணன் தேவன் மலைகளும் குறிப்பிடத்தக்கவை. அஸ்ஸாம், ஒரிசா, மத்தியப் பிரதேசம் முதலிய வட இந்திய மாநிலங்களிலும், அந்தமான் தீவுகளிலும் இப் பயிர் குறைந்த அளவில் விளைகிறது.

சேர்வராயன் மலைகளில் முதன் முதலாகக் காஃபிப் பயிர்த் தொழிலைத் தொடங்கியவர் ஜி. பிஷர் (Mr. G. Fischer) என்ற வெள்ளையரே. சேலம் மாவட்டத் தண்டலராக விளங்கிய எம். டி காக்பர்ன் என்பாரின் ஒப்புதல் பெற்று, இப்பயிர்த்தொழிலைத் துவக்கினார். இப்புதுத் தொழிலுக்கு ஆக்கமளிக்க விரும்பிய அரசியலார், இவருக்கு நிறைய நிலங்களை அளித்தனர். அதன் பிறகு பலர் இப்பயிர்த் தொழிலை வளர்க்க இங்குக் குடியேறினர். ஓரளவு சிறந்த முறையில் இத்தொழில் வளர்ச்சியுற்றது. ஆனால் திடீரென்று காஃபி விலையில் ஏற்பட்ட சரிவும், இப்பயிர்த் தொழில் செய்வதற்கு ஏற்பட்ட முட்டு வழிச் செலவின் உயர்வும், விளைவால் வீறு குன்றிய நிலங்களுக்கு நிறைந்த உரமிட வேண்டிய இன்றியமையாமையினால் ஏற்பட்ட செலவும், தோட்டக்காரர்களை வறுமையில் ஆழ்த்தி விட்டன. போதாக் குறைக்குப் புதிய புதிய நோய்கள் தோன்றிப் பயிர்களைப் பாழடித்தன. செய்வதறியாது கலங்கிய தோட்டக்காரர்கள் சிறிது நாள் இத்தொழிலைக் கைவிட்டனர். பிறகு பல வழிகளில் ஆராய்ந்து சிந்தித்து, சாகுபாடியில் புதிய முறைகளைப் புகுத்தினர். காஃபித் தோட்டங்களில் நிழல் தருவதற்கும், தழை உரம் அளிப்பதற்கும் வெள்ளோக்கு மரங்களை உடன் வளர்க்கத் தொடங்கினர். இது விரைவில் பருத்து நீண்டு வளரக் கூடியது. நட்டு நான்கைந்து ஆண்டுகளில் பெரு மரங்களாக வளர்ந்து விடும்.

உலகில் அதிகமாகப் பயிரிடக் கூடிய சிறந்த காஃபிப்பயிர் வகைகள் அரேபிகா (Arabica) ரோபஸ்டா (Robusta), லிபெரிகா (Liberica) என்பவையே. இவற்றில் மிகவும் சிறந்ததான அரேபிகாவே சேர்வராயன் மலைகளில் விளைகிறது. காஃபித் தோட்டங்களெல்லாம் பெரும்பாலும் லூப் பாதை (Loup Road) யிலேயே அமைந்துள்ளன. ஏர்க்காட்டிலிருந்து புறப்பட்டு, நாகலூர் வழியாகச் சென்று வெள்ளக் கடை வழியாக இப்பாதை மீண்டும் ஏர்க்காட்டை அடைகிறது. இதன் நீளம் 20 கல். ஐம்பதுக்கு மேற்பட்ட காஃபித் தோட்டங்கள் இப்பாதை செல்லும் வழியில் அமைந்திருக்கின்றன. இத் தோட்டங்களின் பரப்பு 10,000 ஏகர். ஓராண்டுக்கு 2000 டன் காஃபிக் கொட்டை சேர்வராயன் மலைமீது விளைகிறது. இக்கொட்டை இங்கிலாந்து, ஐரோப்பா, உருசியா முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.


தேயிலையும் இரப்பரும் :

தேயிலைப் பயிரானது, கி. பி. 1850-ஆம் ஆண்டில் பிஷர் அவர்களால் பயிரிடப்பட்டுச் சோதனை செய்யப்பட்டது. போதிய அளவு நல்ல பலனளிக்காததால் கைவிடப்பட்டது. 1881-ஆம் ஆண்டில் இரப்பரானது சேர்வராயன் மலையில் முதன்முதலாகப் பயிரிடப்பட்டது. ஆனால் 1898-இல் ஏ. ஜி. நிக்கல்சன் என்பவர் 3500 அடி உயரத்திலுள்ள ஆதார்ன் தோட்டத் (Hawthorm Estate) தில் பெருத்த அளவில் பயிரிடத் தொடங்கிய போதுதான் இரப்பர் பயிர்த் தொழில் எல்லோருடைய கவனத்தையும் கவரத் தொடங்கியது. 1903-இல் மெக்சிகோவிலிருந்து நேரே இரப்பர் விதைகளை வரவழைத்துப் பரவலான முறையில் அவர் பயிர் செய்யத் தொடங்கியதும், எல்லாத் தோட்ட முதலாளிகளும் தங்கள் காஃபித் தோட்டங்களில் ஒரு பகுதியை அழித்து விட்டு இரப்பரைப் பயிரிடத் தொடங்கினர். இப்பயிர்த் தொழிலும் ஓரளவு வெற்றிகரமாகவே இருந்தது. திருவாளர் நிக்கல்சன் விளைவித்த இரப்பர் இந்தியாவிலேயே உயர்ந்த ரகத்தைச் சேர்ந்தது என்று அரசியலார் ஒரு தங்கப் பதக்கமும், சான்றிதழும் அளித்தனர். உடனே சேர்வராயன் மலையிலுள்ள தோட்டக்காரர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படலாயிற்று. 1911-ஆம் ஆண்டுக் கணக்குப்படி 3816 ஏகர் நிலங்களில் 10,54,000 இரப்பர் மரங்கள் பயிரிடப்பட்டன. ஆனால், நாளாக நாளாக இப் பயிர்த் தொழில் குறைந்து கொண்டு வந்தது. இப்பொழுது அநேகமாகச் சேர்வராயன் மலைகளில் இரப்பர் தோட்டங்கள் இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் காஃபிப் பயிரைப் போல் இது அதிக வருவாய் தரக் கூடியதாக இல்லை.


பழ வகைகள் :

சேர்வராயன் மலைகளில் அதிகமாக எல்லோராலும் பயிரிடப்படுவது, கெட்டியான தோலையுடைய செயிண்ட் மைகேல் (St. Michael) என்னும் ஆரஞ்சுப் பழமாகும். இந்த ஆரஞ்சு மரம் முழு வளர்ச்சியடைந்து நல்ல பலனைத் தர எட்டு ஆண்டுகள் பிடிக்கும். உயர்ந்த ரக ஆரஞ்சு மரங்களோடு ஒட்டிப் பயிரிட்டு இந்த இனத்தைச் சுவையுடையதாக்குகின்றனர். குடகு ஆரஞ்சு முதலில் குறைந்த அளவே பயிரிட்டனர். இப்போது இது நிறையப் பயிரிடப்படுகிறது. எலுமிச்சை எல்லாத் தோட்டங்களிலும் பயிரிடப்பட்டது. அது ரிவர் டேல் (River Dale) என்ற ஒரே தோட்டத்தில் மட்டும் விளைந்தது. மற்றத் தோட்டங்களில் விளைவதில்லை. ரிவர் டேலின் மண் வளமும் சூழ்நிலையும் ஆப்பிள் விளைவதற்கு ஏற்றனவாக இருந்தன போலும், இப்போது இது எங்கும் பயிரிடப்படுவதில்லை. பேரிக்காய்கள் (Strawberries) இங்கு நிறைய விளைகின்றன. லாடம் பழம், சாம்பிராணி வாழை, கரு வாழை, செவ்வாழை, சந்தன வாழை எனப் பலவகை வாழைகள் இங்கு பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் லாடம் பழம், சிறு மலை வாழையைப் போன்று சுவையுடையதாக இருக்கும். பெரு நாவல், சிறு நாவல் என இரு வகை நாவற் பழங்களும் இங்கு விளைகின்றன. பலா மரங்கள் சேர்வராயன் மலைகளில் எல்லாப் பகுதிகளிலும் நன்கு வளர்கின்றன. மாதுளை, கொய்யா முதலிய பழங்களும் இங்கு நிறைய விளைகின்றன. இங்கு விளையும் அன்னாசிப் பழம் (Pine-apple) உருவத்தில் சிறியதாக இருந்தாலும் மிக்க சுவையுடையது.

லாக்குவட் (Loquat) என்ற ஒரு வகைப் பழம் இங்கு எல்லாத் தோட்டங்களிலும் பயிரிடப்படுகிறது. இது செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அதிகமாகக் கிடைக்கும். இதிலிருந்து இங்கு வாழும் வெள்ளையர்கள் ஒரு வகைச் சாராயம் (Champagne) இறக்கி வந்தார்கள்.

ஏலக்காய், மிளகு, கடுக்காய் முதலியவை இங்கு குறைந்த அளவில் பயிரிடப்படுகின்றன. இங்கு வாழும் மலையாளிகளால் பனிச் சாமை, அவரை, சர்க்கரை வள்ளி, குச்சி வள்ளி முதலியன பயிரிடப்படுகின்றன. உருளைக்கிழங்கும் இங்கு பயிரிடப்படுகிறது. ஆனால் அதிக அளவில் இல்லை.


மக்கள் :

சேர்வராயன் மலைகளில் வாழும் பழங்குடி மக்கள் மலையாளிகள் எனப்படுவர். இவர்கள் மொழி கொச்சைத் தமிழ். ‘கவுண்டர்’ என்ற சாதிப் பெயரைத் தங்கள் பெயருடன் சேர்த்து வழங்குகின்றனர். இவர்கள் தங்களுக்குச் சொந்தமான நிலங்களில் பயிர்த் தொழில் செய்தும், காஃபித் தோட்டங்களில் கூலிகளாகப் பணி செய்தும் வாழ்கின்றனர். சேர்வராயன் மலை உச்சியில் இவர்களுடைய குல தெய்வம் உள்ளது. அங்குக் கோயில் கொண்டிருக்கும் இறைவனின் பெயர் சேர்வராயன் என்பதாகும். ஆண்டுக்கொருமுறை மலையாளிகளெல்லாம் அவ்விடத்தில்கூடி விழாவெடுப்பர். இம் மலையாளிகளின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் நூதனமானவை. கொல்லி மலை, பச்சை மலை, கல்ராயன் மலை முதலிய இடங்களில் இவ்வினத்தார் நிறைந்து வாழ்கின்றனர். இவர்களுடைய முழு வரலாறும் அடுத்த பகுதியில் விரிவாகக் கூறப்படும்.