தமிழர் வரலாறும் பண்பாடும்/தமிழும்விஞ்ஞானமும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழும்
விஞ்ஞானமும்


இன்று மனிதன் சூரியனைச் சுற்றிவரும் கிரகத்தைச் சிருஷ்டித்திருக்கிறான். அணுவைப் பிளந்து அதன் ஆற்றலைப் பயன்படுத்துகிறான். ஜீவ அணுக்களை உருவாக்கும் முயற்சியில் முன்னேறி வருகிறான். உலகம் தோன்றிய காலத்திலிருந்து பாலைவனமாகக் கிடந்த நிலங்களை வளம் கொழிக்கும் விளை நிலங்களாக மாற்றியிருக்கிறான். பூமியைக் குடைந்து அதனடியில் ஒளிந்துகிடக்கும் அபூர்வமான உலோகங்களை வெளிக்கொணர்ந்து பயன்படுத்துகிறான். கண்ணுக்குத் தெரியாத சிற்றுயிர்களின் வாழ்க்கையைத் துணைக் கருவிகளின் மூலம் அறிந்து அவற்றின் வாழ்க்கையை மாற்றும் சக்தி படைத்திருக்கிறான். தரையைக் கடலாக்குகிறான்; கடலைத் தரையாக்குகிறான். ஒரு திசையில் வரும் பேறாறுகளைத் தனக்கு வேண்டிய திசையில் திருப்புகிறான். வானவெளியில் பிறக்கும் கதிர்களைப் பூமியில் பயன்படுத்தி நோய்களைக் குணப்படுத்துகிறான். இருநூறு ஆண்டுகளுக்கு முன் நடக்க முடியாது எனக் கருதப்பட்ட பல ஆயிரம் அதிசயங்களை மனிதன் நிகழ்த்திக் காட்டுகிறான்.

இவை எவ்வாறு சாத்தியமாயின? புராதன மனிதன் இயற்கையின் பேராற்றலை. வெள்ளத்திலும் மின்னலிலும் எரிமலையிலும் கடல் கொந்தளிப்பிலும் தொத்து நோய்களிலும் சூறைக்காற்றிலும் கண்டான். இயற்கை ஆற்றல்களின் அழிக்கும் தன்மையைக் கண்டு நடுங்கினான். இயற்கை அளித்த கிழங்கையும், கனியையும் மீனையும் விலங்குகளையும் உண்டு இயற்கையாக அமைந்த குகைகளிலே வாழ்ந்தான்.

காட்டுத் தீயைக் கண்டான்; நடுநடுங்கினான். மனிதன் தோன்றி பல லட்சம் ஆண்டுகளுக்குப்பின் தீயைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டான். முதன் முதலில் கண்டதை எல்லாம் அழிக்கும் தீயை மூன்று கற்களிடையே சிறைப்படுத்தி மாமிசத்தை சமைக்கக் கற்றுக் கொண்டான். மனிதன் இயற்கைச் சக்திகளில் ஒன்றைக் கட்டுப்படுத்தினான். முதலில் தனது செயல் மூலம் இயற்கையின் ஒரு சக்தியை வசமாக்கினான். அச் செயல் தீயின் இயல்பு குறித்துச் சிந்தனையைத் தோற்றுவித்தது. சிந்தனையின் மூலம் தீயைப் பயன்படுத்திப் பலவகை மண்களிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தான். இச்செயல் மேலும் சிந்தனையை வளர்த்தது. இதன் மூலம் உலோகங்களைப் பற்றி ஆராய்ந்தான். உலோகங்களின் தன்மைகளை, தன் வாழ்வுக்குப் பயன்படுத்தினான். இச் சிந்தனை முதலில் நடைமுறை உபயோகங்களுக்கு மட்டும் பயன்படும் கருவியாக இருந்தது. பின்னர் உலகின் இயற்கையை, தன்மையை, மாறுபாடுகளின் இயல்பை ஆராய்ந்து அறியும் விஞ்ஞானமாக மாறிற்று.

மேலே சுட்டிக் காட்டியது மனிதன் இயற்கையின் ஆற்றலை அறிந்து பயன்படுத்திய ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளில் ஒரு உதாரணம் மட்டுமே. செயலின் மூலம் சிந்தனை வளர்ந்து, சிந்தனையின் மூலம் மனிதன் மேலும் திறமையான முறையில் செயல் புரிந்து, இயற்கையின் பல்வேறு மாறுபாடுகளின் தன்மைகளை உணர்ந்து அவற்றை வகைப்படுத்தியிருக்கிறான். அவைதான் விஞ்ஞானத்தின் பல்வேறு கிளைகள்.

இக்கிளைகள் ஒவ்வொன்றும் மனித வாழ்க்கைக்குப் பயன்படுகின்றன. அவற்றைத் திறமையாகப் பயன்படுத்தத் தனித்தனியான விஞ்ஞானக் கிளைகள் உள்ளன. உதாரணமாக, பூமியைக் குடைந்து நமக்குத் தேவையான பெட்ரோலியம், நிலக்கரி, இரும்பு, தங்கம், ஈயம் முதலியவற்றை வெளிக் கொண்டுவருவதற்கு முன், அவை எங்கே காணப்படும் என்று தெரிய வேண்டும். அதைத் தெரிந்து கொள்ள இந்தக் கனியங்களும், அவற்றின் மூலப் பொருள்களும், எப்பொருள்களோடு சேர்ந்து கிடைக்கும் என்று தெரிய வேண்டும். முன்கூட்டி இந்த அறிவு நமக்கு இல்லாவிட்டால் கண்ட கண்ட இடங்களில் வீண் செலவு செய்து, பயன் காண முடியாது போகும்.

ஆகவே சுரங்கம் தோண்டி, பயனுள்ள பொருள்களைப் பெற, பொருள்களின் தன்மையை ஆராயும் ரசாயனம், அழுத்தத்தின் தன்மையை ஆராயும் பெளதீகம், பூமியின் உள்ளமைப்பை ஆராயம் தரையியல் (geology), பூமியினுள்ளிருக்கும் பொருள்களில் ஏற்படும் மாறுதல்களை ஆராயும் தரையியல் இரசாயனம் (geochemistry) ஆகிய விஞ்ஞானக் கிளைகள் அனைத்தின் உதவியும் தேவை, இவை வளர்ச்சியுற்றிராவிட்டால், ஆயிரம் இடங்களில் தோன்டித் தோல்வியுற்று, ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் தேடும் பொருள்களைக் காணலாம். ஆகவே விஞ்ஞானக் கொள்கை அல்லது சிந்தனை பயனுள்ள நடைமுறை தொழில்களை நடத்த அவசியம். தீயை அடுப்பினுள் கட்டுப்படுத்தியது முதல் பல்வேறு இயற்கைச் சக்திகளைக் கட்டுப்படுத்த, அவற்றின் இயல்புகளைக் கண்டறிந்து மனிதன் அவற்றைப் பயன்படுத்தி வருகிறான். அதன் விளைவே, இன்று பொருள் உற்பத்தியில் காணப்படும் இயந்திரங்களும், அவற்றை இயக்கும் சக்திகளும், இன்னும் நமது சுகவாழ்விற்கும், நாகரிக வாழ்க்கைக்கும் அவசியமான லட்சக்கணக்கான பொருள்களுமாயின.

விஞ்ஞான வளர்ச்சியின் விளைவுகள் யாவது?

1. நாகரிகத்திற்கு அவசியமான பொருள்கள் அனைத்தையும், செய்து கொள்ளும் வழிகளை, அது சமூகத்திற்கு அளித்துள்ளது. உதாரணங்கள்: புத்தகங்கள், உடை, கட்டிடங்கள். விவசாயக் கருவிகள், உற்பத்திக் கருவிகள் இவையாவும் விஞ்ஞான வளர்ச்சியின் பயன்களே.

2. இவ்வாறு நடைமுறைப் பயன்களை அளித்ததல்லாமல், உலகையும், பொருள்களையும், சக்திகளையும், உலகிற்கு அப்பாலுள்ள கோளங்களைப் பற்றியும் மனிதனது அறிவை விசாலப்படுத்தியுள்ளது.

3. இயற்கையை ஆராய மனிதனுக்கு ஒரு முறையை அது அளித்துள்ளது. மனிதன் இயற்கையின் இயக்கத்தை அறிய இயங்கியல் முறையே சிறந்தது. அம்முறையைப் பொருள் உலகத்தை அறியப் பயன்படுத்த வேண்டுமென்பதை விளக்குகிறது.

இப்பயன்களைத் தமிழ் மக்கள் அடைய வேண்டாமா? நம்மைச் சுற்றிலுமுள்ள இயற்கையை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா? நாம் பயன்படுத்தும் பொருள்கள் வேலை செய்யும் விதங்களை அறிந்து கொள்ள வேண்டாமா? ஸ்பூட்னிக்குகள் போன்ற செயற்கைக் கிரகங்கள் எப்படி உலகைச் சுற்றி வருகின்றன என்று தெரிந்து கொள்ள முடியுமா? வியாதிகள் வராமல் நம் உடலைப் போற்றி வளர்க்கும் வழிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டாமா? இத்தனை அறிவையும் படைத்துக் தரும் மனிதனது மூளை வேலை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? உலகையும் நம்மையும் தொடர்புபடுத்தும் அறிவு வாயில்களான ஐம்பொறிகளின் வேலை முறைகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ளாவிட்டால் நமக்கும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோருக்கும் அறிவு நிலையில் வேறுபாடு என்ன?

இவற்றைப் பற்றி அறிந்து கொள்ளத் தமிழில் நூல்கள் உள்ளனவா? அத்தகைய நூல்களுக்கு அவசியம் இல்லையா? தற்பொழுது தமிழ் நாட்டில் ஏராளமான இளைஞர்கள் உயர் நிலைப்பள்ளிகளில் படித்து வெளியேறுகிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் உயர் நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகமாகியுள்ளது. இவர்களெல்லாம் தமிழில் விஞ்ஞான அறிவு பெற முடியும். முன்பைவிட இன்று நூல் நிலையங்கள் அதிகமாகியுள்ளன. அவை விஞ்ஞான நூல்களை வாங்கிக் கிளைகளுக்கு அளிக்கின்றன.

சமீபத்தில் வெளியான விஞ்ஞான நூல்கள் நன்றாக விலை போகின்றன. பாவ்லால் எழுதிய விஞ்ஞானக் கட்டுரைகளில் சில, ‘உடலும் உள்ளமும்’ என்ற தலைப்பில் தமிழில் வெளியிடப்பட்டது. ஆயிரம் பிரதிகளில் 750 பிரதிகள் ஆறுமாதத்திற்குள் விலை போயிற்று. அது போலவே உயிரைப் பற்றிய விஞ்ஞான விளக்கத்தை வெளியிடும் ஒபாரின் எழுதிய ‘உயிரின் தோற்றம்’ என்ற நூலின் தமிழாக்கம் நன்றாக விலை போயிற்று. டார்வின் தத்துவத்தைப் பற்றியும் அணுவைப் பற்றியும் எழுதிய நூல்களும் நன்றாக விலை ஆயின. கதைகளை விட விஞ்ஞான நூல்கள் விரைவில் விலையாகின்றன.

ஆனால் தமிழ்நாட்டு மக்களின் அறிவுத் தாகத்தைத் தணிக்கும் அளவுக்கு வேகமாக விஞ்ஞான நூல்கள் வெளியாகவில்லை. பத்திரிகைகளில் கட்டுரைகளும் வெளியாவதில்லை. பத்திரிகை ஆசிரியர்களும், எழுத்தாளர்களும் இந்தத் தேவையை உணராதது இதற்கு ஒரு முக்கிய காரணம்.

விஞ்ஞானக் கட்டுரைகளில் வெளியிடவென்றே வெளிவந்த கலைக் கதிர் இப்பொழுது கதைகளையும், வேறுபலவகைக் கட்டுரைகளையும் வெளியிடுகிறது. விஞ்ஞானக் கட்டுரைகள் போதுமான அளவு கிடைக்காதது இதற்குக் காரணமா அல்லது முழுதும் விஞ்ஞானக் கட்டுரைகள் அடங்கிய ஒரு மாத பத்திரிகை தமிழ் நாட்டுக்கு அவசியமில்லை என்பது நிர்வாகிகள் கருத்தா என்று எனக்குத் தெரியவில்லை. முன்னது காரணமாக இருந்தால் சிறிது முயன்றால் கட்டுரைகள் கிடைக்கும். இரண்டாவது காரணமாக இருந்தால் நிர்வாகிகள் தமிழ்நாட்டு மக்களின் அறிவுத் தரத்தைக் குறைவாக மதிப்பிடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

உண்மையில் தமிழ்நாட்டில், எளிய முறையில் மக்களுக்கு விஞ்ஞான உண்மைகளையும், கருத்துக்களையும் பரப்ப, பல்வேறு விதமான பத்திரிகைகள் வேண்டும். அவை ‘அணுச் சிதைவின் வரலாறு’, ‘மூலப்பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டதன் கதை’,‘விஞ்ஞான அதிசயங்கள்’, ‘பயனுள்ள பொருள்களைத் தயாரிக்கும் முறைகள்’. ‘விஞ்ஞானிகளின் சரித்திரங்கள்’, ‘வியாதிகள்’, ‘உடல் கூறு அதிசயங்கள்’, ‘தரை இயல் விஞ்ஞானம்’, ‘வான இயல்’ போன்ற பல தலைப்புகளில் தொடர்ச்சியான கட்டுரைகள் தாங்கி வெளிவர வேண்டும். இலக்கியக் கலாச்சாரப் பத்திரிகைகளும், விஞ்ஞானத்துக்குச் சிறிது இடம் ஒதுக்க வேண்டும்.

சிறு வயதிலேயே விஞ்ஞான ஆர்வம் ஏற்படுத்த, அமெரிக்காவிலும், சோவியத் நாட்டிலும் பல புதிய நூல்கள் வெளியிடுகிறார்கள். முன்பு காக்காய், குரங்கு, நாய்க் கதைகளும், ‘ராஜா ராணி’க் கதைகளும், குழந்தைகளுக்காக அச்சிடப்படும். இப்பொழுது உயிர் நூல் உண்மைகளை ஆதாரமாகக் கொண்ட கதைகளும், விஞ்ஞானப் புதுமைகளை ஆதாரமாகக் கொண்ட அழகிய படங்கள் கொண்ட நூல்களும், சிறுவர்களுக்காக அச்சிடப்படுகின்றன. அத்தகைய நூல்கள் நமக்கும் தேவை. வருங்கால சந்ததியில் விஞ்ஞானிகள் தோன்ற வேண்டுமானால் சிறு வயதில் அவர்கள் மனத்தில் விஞ்ஞான ஆர்வம் தோன்ற வேண்டும். விஞ்ஞான கற்பனைக் கதைகள் இத்தகைய ஆர்வத்தைத் தோற்றுவிக்கும். தமிழில் விஞ்ஞானக் கற்பனைக்கதைகள் (Scientific Fantasies) மிகவும் அருமையாகவே உள்ளன. குழந்தைகளுக்கெனத் தனிநூல் நிலையங்கள் நிறுவப்படும் இக்காலத்தில், இத்தன்மையான நூல்கள் வெளிவருவது மிகவும் அவசியம்.

தொழிலாளிகள் தங்கள் திறமையை உயர்த்திக் கொள்ளவும், உழவர்கள் தங்கள் தொழிலைத் திறமையாகச் செய்யவும், தங்கள் தங்கள் தொழில்களின் விஞ்ஞான அடிப்படையைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்றே சிறு சிறு நூல்கள் நூற்றுக்கணக்கில் வெளிவர வேண்டும். முக்கியமாகக் களைகள், பூச்சி, புழுக்கள் உரமிடுதல் போன்றவற்றைப் பற்றி எளிய தமிழில் நூல்கள் வெளிவர வேண்டும்.

மேற்கூறிய பணியை யார் மேற்கொள்வது? தமிழ் நாட்டின் பண்பாட்டை உயர்த்துவதற்கு விஞ்ஞான அறிவைப் பரப்புவது மிகவும் அவசியம். தமிழ்நாட்டின் பண்பாட்டைப் பாதுகாப்பதும், வளர்ப்பதும் ஒவ்வொரு தமிழனுடைய கடமைதான். தமிழ் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கும், சென்னை அரசாங்கத்துக்கும், இந்தக் கடமையை ஆற்றுவதில் முக்கிய பொறுப்பு உண்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் இப்பணியை எப்படி செய்து வருகிறது என்பதைக் குறித்துச் சில வார்த்தைகள், வருஷத்துக்கு ஒரு விஞ்ஞான நூலை மொழி பெயர்க்க அவர்கள் ரூ.1000 பரிசு கொடுக்கிறார்கள். சென்ற வருஷம் பெயர் தெரியாத ஆசிரியர் ஒருவரது நூலை மொழிபெயர்க்கச் செய்து ரூ.1000 பரிசும் ஒரு மொழி பெயர்ப்பாளருக்குப் போய் சேர்ந்து விட்டது. இப்பொழுது புத்தகம் வெளியிடத் தகுதியற்றது எனக்கருதி அதை வெளியிடவில்லையாம்.

முப்பது வருஷங்களுக்கு முன் ஜேம்ஸ் ஜீன்ஸ் எழுதிய வான் நூலைத் தமிழில் வெளியிட இவ்வருஷம் மொழி பெயர்ப்பாளருக்கு விளம்பரம் செய்திருக்கிறார்கள். இந்த நூலின் கருத்துக்கள் தவறு என்று நிரூபிக்கப்பட்டவை. விநாடிக்கு விநாடி விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது. வான வெளியைப் பற்றிய நம்முடைய பழைய கருத்துக்களை ‘வான் கதிர்’ ஆராய்ச்சிகளும், ஸ்பூட்னிக்குகளும், செயற்கைக் கிரகங்களும் புரட்சிகரமாக மாற்றிவிட்டன. ஜேம்ஸ் ஜீன்ஸின் கருத்துக்கள், பழங்கதையாகி விட்டதன் பின்னர் அதனை மொழிபெயர்க்கத் தோன்றியிருக்கிறது நமது பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு! நல்ல வேளை, இன்னும் இருபது வருஷங்கள் கழித்து இந்த நூலை மொழி பெயர்க்க வேண்டும் என்று சொல்லவில்லையே, என்று மகிழ்ச்சியடைய வேண்டியதுதான்.

இந்த பணிக்கு அவர்கள் இட்டுக் கொண்டிருக்கும் பெயர் (Promotion of Scientific Knowledge in regional language) பிராந்திய மொழிகளில் விஞ்ஞான அறிவைப் பரப்புதல் என்பது ஆகும். ஒரு நூல் தமிழன் கண்ணிலேயே படவில்லை; மற்றொன்று 25 வருஷங்களுக்கு முன் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். பிராந்திய மொழிகளில் விஞ்ஞான அறிவை நமது பல்கலைக் கழகம் பரப்பும் விதம் இதுதான்.

சென்னை அரசாங்கக் கல்வி இலாகாவில் வயதுவந்தவர் கல்விக்கென்று ஓர் இலாகா இருக்கிறது. புதிதாகப் படித்தவர்களுக்குச் சில நல்ல நூல்களையும் சில மோசமான நூல்களையும் இந்த இலாகா வெளியிட்டுள்ளது. தேசிய விஸ்தரிப்புத் திட்டத்துக்கென நூல்களுக்குப் பரிசளிக்க அது ஒரு திட்டம் வகுத்திருக்கிறது. அவை யாவும் விஸ்தரிப்புத் திட்டத்திற்கான பிரசாரமே. விஞ்ஞானம் வயது வந்தவர்களுக்கு அவசியமில்லை என்பது அந்த இலாகாவின் கருத்துப்போலும் அது எந்த விஞ்ஞான நூலை வெளியிட்டிருக்கிற தென்பது யாருக்கும் தெரியாது.

பல்கலைக் கழகங்களும், சென்னைக் கல்வி இலாகாவின் முதியோர் கல்விப் பிரிவும் உண்மையாகவே தமிழில் விஞ்ஞான அறிவைப் பரப்ப முயலவேண்டுமென ஒவ்வொரு தமிழனும் கோரவேண்டும். நூற்றுக்கணக்கான சிறு சிறு நூல்களை வெளிக்கொணர, விஞ்ஞானிகளது ஆதரவையும், விஞ்ஞான எழுத்தாளர்களின் ஆதரவையும் திரட்டப் பல்கலைக் கழகமும், கல்வி இலாகாவும் முயலவேண்டும். இப்பணியைச் செய்ய விஞ்ஞான நூல் பதிப்பகம் ஒன்றைப் பல்கலைக் கழகமும், சென்னை அரசாங்கமும் சேர்ந்து துவக்க வேண்டும். அதில் என்ன நூல்கள் அச்சிட வேண்டும் என்பதை நிர்ணயிக்க எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், மனத்தத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அரசாங்கம் நிறுவவேண்டும்.

சமீபத்தில் தமிழ்நாட்டிலுள்ள ஒரு வைத்தியக் கல்லூரியின் பேராசிரியர்கள் சிலரைச் சந்தித்தேன். அவர்கள் எனது கல்லூரி நண்பர்கள் தமிழார்வம் உடையவர்கள். வைத்தியம் பற்றித் தமிழில் பத்தகம் எழுதியுள்ளார்கள். ஒவ்வொரு வியாதியைப் பற்றியும் சாதாரண மக்கள் புரிந்து கொண்டு தடுப்பு முறைகளைக் கையாளுவதற்குரிய அறிவைப் பரப்பும் வகையில் ஆண்டிற்கு ஐந்து நூல்கள் சுமார் 150 பக்கங்களில் வெளியிட ஆர்வம் கொண்டுள்ளார்கள். ஆனால் சர்க்கார் ஊழியர்களின் நடத்தை விதிகளின் படி அவர்கள் முன் அனுமதி பெறவேண்டும். எழுதிய புத்தகத்தின் மூலம் லாபம் பெறக்கூடாது. அவ்வாறே தங்களுக்கு லாபம் வேண்டாம் என்று சொல்லவும் அவர்கள் தயார். அனுமதி கேட்டாலேயே, தங்களுக்குரிய வேலைகளை விட்டு, வேறு வேலைகளில் நேரம் செலவழிக்கிறார்கள் என்று மேலதிகாரிகள் எண்ணுகிறார்களாம். இதனால் அவர்கள் அறிவும், திறமையும், தமிழ் நாட்டு மக்களுக்குப் பயன்பட வழியின்றிப் போகிறது.

இவ்விதிகள் தளர்த்தப்பட வேண்டும். கல்லூரி வேலைகளுக்குக் குந்தகம் இல்லாமல் தமிழில் விஞ்ஞான நூல்கள் எழுத விரும்பும் பேராசிரியர்கள், டாக்டர்கள், என்ஜீனியர்கள் முதலியோருக்குச் சர்க்கார் உற்சாகம் அளிக்க வேண்டும். நன்றாகப் படித்தவர்கள், விஞ்ஞானத்தில் உயரிய பட்டம் பெற்றவர்கள் எல்லாம் சர்க்கார் வேலைகளில்தான் இருக்கிறார்கள். அவர்கள் விஞ்ஞான நூல்கள் எழுதத் தடைகள் இருந்தால் அவற்றை அகற்றுவதுதானே தமிழ் மொழியில் அக்கறை கொண்ட சர்க்கார் செய்ய வேண்டிய காரியம்.

தமிழ் நாட்டுப் புத்தகம் வெளியிடுவோரும், தமிழ் மக்களின் அறிவுத் தாகத்தை மதித்து இந்தத் துறையில் சிறந்த நூல்களை வெளியிட்டு, தமிழுக்கும். தமிழகத்துக்கும் சேவை செய்வதோடு தங்களுக்கும் புகழ் தேடிக் கொள்வார்களாக.