தமிழர் வரலாறும் பண்பாடும்/தமிழ் நாட்டில் தாய்வழிச் சமுதாயம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழ் நாட்டில்
தாய்வழிச் சமுதாயம்


பண்டைத் தமிழ் நூல்களில் பல அரசர் சிற்றரசர்களைப் பற்றிப் படிக்கிறோம். சிறப்புப் பெற்ற அவர்களெல்லாம் ஆண்கள். அவர்கள் தாய்முறை ஆண் வழியாகவே காணப்படுகிறது. தெய்வங்களில் ஏற்றமுடைய அனைத்தும் ஆண் வழியாகவே காண்ப்படுகின்றன. குறிஞ்சித் தெய்வமான சேயோன் (முருகன்), முல்லைத் தெய்வமான மாயோன் (திருமால்), நெய்தல் தெய்வமான வருணன், மருதத் தெய்வமான இந்திரன், ஆகிய அனைவரும் ஆண்பால் தெய்வங்களே. காவியங்களில் ஆண்களே தலைமை பெறுகிறார்கள். மணிமேகலை கதைத் தலைவியாக உருவாக்கப்பட்டிருப்பினும் அவளது ஆசிரியர் அறவணர் என்ற ஆண் என்பது சிந்தனைக்குரியது. சீவக சிந்தாமணி, பெருங்கதை ஆகிய காவியங்களில் ஆண் தலைமை பெறுவதும், பல பெண்கள் அவனுக்கு வாழ்க்கைப்பட்டு அவனது வெற்றிக்கு உதவுவதும் பெண்களுக்கு ஆணுக்குத் தாழ்ந்த ஸ்தானத்தைத் தான் காவியங்கள் அளிக்கின்றன என்பது தெளிவாகிறது. புறநானூற்றில் பெரும்பாலான செய்யுட்கள், ஆண்களின் வெற்றிச் சிறப்பையும், கொடைச் சிறப்பையும் போற்றுகின்றன. பெண் கவிகள் சிலர் பாடிய செய்யுட்கள் இத்தொகை நூலிற் காணப்பட்ட போதிலும், அவை ஆண்களுடைய வீரத்தையும், கொடையையும் பாராட்டுவனவாகவே உள்ளன. ஒன்றிரண்டு செய்யுட்கள் பெண்களுடைய துயரங்களைச் சித்தரித்த போதிலும் அவை ஆண்களைப் பிரிந்தபோது பெண்கள்படும் வேதனையாக இருக்கிறது.

இவை எல்லாவற்றையும் சான்றாகக் காட்டி தமிழ் நாட்டில் எப்பொழுதும் தந்தை வழிச் சமுதாயமே இருந்து வந்திருக்கிறதென்றும், ஆண் ஆதிக்கச் சமுதாயமே எப்பொழுதும் நிலை கொண்டிருந்தது என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வருகிறார்கள். அவர்கள் முடிவு சரிதானா? மேற்கூறிய சான்றுகளை மட்டும் தொகுத்து முடிவு கண்டால் அவர்கள் முடிவு சரியே. ஆனால் தாய்வழிச் சமூகம், இலக்கிய காலத்திற்கு முந்தியது. சரித்திர காலத்திற்கு முந்தியது. மிகவும் பழமையானது என்பதைக் கவனத்தில் கொண்டால் இலக்கியச் சான்றுகளிலிருந்து மட்டும் மேற்கண்ட முடிவுக்கு வருவது தவறாக முடியும். தற்போது இருக்கும் சமூகத்தில் ஆண் ஆதிக்கத்துக்கே சான்றுகள் அதிகமாக உள்ளன. சமீபகால முறைக்குச் சான்றுகள் அதிகம் அகப்படுவது இயற்கையே. பெண் ஆதிக்கச் சமுதாயம் மறைந்துவிட்டது. மறைந்துவிட்ட சமூக முறைகளைப் பற்றிய சான்றுகள் தேடிப் பிடித்தால்தான் அகப்படும். அதுவும் சிற்சில எச்சமிச்சங்களே கிடைக்கும். அவற்றிலிருந்து அச்சமுதாயத்தை நாம் புனரமைத்து வருணிக்க வேண்டும்.

இத்தகைய எச்சமிச்சமான சான்றுகள் இன்று அகப்படுகின்றனவா? என்றாவது தமிழ்நாட்டில் பெண் ஆதிக்கச் சமுதாயம் இருந்ததா? இருந்திருத்தால் எந்தச் சமூக அடிப்படையின்மீது மேற்கோப்பாக அது இயங்கிற்று என்பதையும் நாம் அறிந்து கொள்ள முயலுவோம்.

மனிதன் தனது உணவை வேட்டையாடிப் பெற்றான் என்பது சமூக நூல் ஆராய்ச்சியாளர் முடிவு. வேட்டையாடி உணவு பெற்ற மனிதரை ‘வில்லேறுழவர்’ என்று பண்டை நூல்கள் அழைக்கின்றன. அக்காலத்தில் வேட்டைத் தொழிலில் சிறந்தவர்களுக்கு ஏற்றம் இருந்தது. காரணம் சமூகத்திற்குத் தேவையான உணவை அவர்களே தேடி அளித்தார்கள். உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் மனிதன் வேலை செய்தான். வேல், வேட்டைக் கருவி ஆயிற்று. வேலைக் குறி பார்த்துத் திறமையாக எறிபவன் சிறப்பாக வேலன் என்று அழைக்கப்பட்டான். உணவு தேடுவதில் அவனுக்கிருந்த முக்கியப் பங்கு குறித்து அவன் சிறப்புப் பெற்றான். வேலன் சக்தி மிகுந்தவன் என்று கருதப்பட்டான். அவனை வேடர்கள் போற்றினார்கள். தங்கள் வாழ்க்கையில் தோன்றும் சங்கடங்களைப் போக்க அவனை நாடினார்கள். மற்றவரைவிட அவன் அறிவு மிகுந்தவன் என்று நம்பினர். வர வர இவனுக்குச் செல்வாக்கு மிகுந்தது. நாட்பட அவன் தெய்வமானான். வேடர்கள் உணவு தேட வேறு வழி தேடிக்கொண்டபோதும் வேலனை மறக்கவில்லை. உணவு தந்த வேலன் உணவு தராதபோதும் செழிப்பின் சின்னமாகிவிட்டான். அவனை அவர்கள் கற்பனையில் தங்களைவிட சக்தி மிகுந்தனவாகக் கருதித் தெய்வமாக வழி பட்டனர்.

மனிதன் வேட்டையாடி உணவு தேடிய காலத்தில் ஆண்களே வேட்டைத் தொழில் செய்தனர். அவர்களே சமுதாயத்தில் ஆதிக்கம் வகித்தனர். அதனால் பெண்கள் குகைகளிலும், குடிசைகளிலும் தங்கினர். அவர்கள் செடி, கொடிகளைக் கண்டனர். அவற்றின் இனப்பெருக்கத்தை அனுபவத்தில் கண்டனர். இயற்கையைப் பின்பற்றித் தாங்களும் கொட்டைகளைப் பூமியில் விதைத்தனர். விதைகளை நிலத்தில் ஊன்றினர். கிழங்குகளை நிலத்தை அகழ்ந்து புதைத்து மூடினர். அவை வளர்ச்சியுற்றுப் பலனளித்தன. இவ்வாறு பண்டைப் பயிர்த் தொழில் தோன்றிற்று. பயிர்த் தொழிலிலிருந்து, வேட்டைத் தொழிலிருந்து கிடைப்பதை விட அதிகமாக உணவு கிடைத்தது. முதலில் பெண்களே பயிர்த்தொழிலில் ஈடுபட்டனர். அவர்களே பயிர்த் தொழிலை கண்டுபிடித்தனர். பயிர்த் தொழில் செய்ய ஆள்பலம் வேண்டும். அதற்குரிய மக்களை ஈன்றதும், அவர்களுக்குப் பயிர்த்தொழிலைக் கற்றுக் கொடுத்ததும் பெண்களே. ஆண்கள் வேட்டைக்காக நெடுந்தூரம் சுற்றி அலைவார்கள். சில நாட்களுக்கு ஒருமுறையே குடில்களுக்குத் திரும்புவார்கள். ஆகவே பயிர்த் தொழிலின் தொடக்கக் காலத்தில் ஆண்களுக்கு அதில் அதிகப்பங்கு இருந்ததில்லை. குடும்ப வளர்ப்பிலும், அதிகப்பங்கு இருந்ததில்லை. பெண்களே புராதனப் பண்பாட்டை உருவாக்குவதில் முக்கியப் பங்கு பெற்றனர். வேட்டை முக்கியத் தொழிலாக இருந்தது மாறி பயிர்த் தொழில் முக்கியத் தொழிலாயிற்று. பயிர்த் தொழிலில் பங்கு பெற்ற பெண்களும் ஆண்களை விட உயர்வு பெற்றனர். தொல்குடிகளைப் பற்றி ஆராய்ந்த அறிஞர் அனைவரும் ஒருமுகமாக ஒப்புக் கொள்ளும் உண்மை இது.

இந்நிலையில் மனிதனது கருத்துக்களும் மாறின. பெண் ஆதிக்கச் சமுதாயம் தோன்றி வளரும் சரித்திர முற்காலத்தில் பெண் தெய்வங்கள் தோன்றின. பயிர்த் தொழில் செழிப்பைக் கொடுத்தது. ஆகவே செழிப்பைக் குறிக்கும் தெய்வங்கள் பல நாடுகளிலும், பெண் தெய்வங்களாகவே இருக்கின்றன. சீதேவி, கிரேக்க தெய்வங்களான சைபீல்டெடோனா, டெல்பி முதலியவை பெண் தெய்வங்களே, செழிப்பை வேண்டி நடத்தப்படும் விரதங்களிலும், விழாக்களிலும், இன்றும் ஆண்களுக்குப் பங்கில்லை. உதாரணமாக பாவை நோன்பை நோக்குவோம். பாவைகள் பலவகைப்படும்; அல்லிப்பாவை, கொல்லிப்பாவை, தெற்றிப் பாவை, மணற்பாவை, வண்டற்பாவை முதலியன. நாடுவளம் கொழிக்க இவற்றைப் பெண்கள் பூசை செய்வார்கள். மழைவளம் சுரக்கவும், ஆற்று நீர் நிலத்தை விதையேற்கும் பருவமாக்கவும், முளை வளரவும், பயிர்வளம் பல்கவும் பாவையை வாழ்த்துகிறார்கள். ‘திருப்பாவை’ இப்பாவை நோன்பை வருணிக்கிறது. இந்நோன்பிலே ஆண்களுக்கு இடமில்லை. பாவையை வணங்கி விழா கோண்டாடினால் வளம் கரக்கும். பெண்மக்களுக்கு இன்பமும் சுரக்கும் என்று திருப்பாவை கூறுகிறது. பாவைக்கு நோன்பு செய்தால் கண்ணன் பரப்பு மாக பறை தருவான் அருள் தருவான் என்றும் ‘திருப்பாவை’கூறுகிறது. இதிலே கூர்ந்து நோக்க வேண்டியது. கண்ணனுக்குப் பூசை இல்லை, விழாவும் இல்லை. பாவைக்குத்தான் பூசை, பாவை மணலாலும் வண்டலாலும் கிழங்கினாலும் செய்யப்பட்டது. பாவை நிலத்திற்கு அடையாளம், நிலமோ பெண்; பெண்ணே செழிப்பைத் தருபவள். அவனை வணங்கினால் வளம் அருளுவாள். இங்கே கண்ணன் பார்த்து நிற்பவனே அவனுக்கு முக்கியத்துவம் இல்லை. ஆண்டாளுடைய காலத்துக்கு முன் தமிழ் நாட்டுப் பெண்கள் பாவை நோன்பு கொண்டாடியிருக்க வேண்டும். அப்பொழுது கண்ணனுக்கு அதில் சற்றும் இடமிருந்திராது என்பது நிச்சயம். பாவைநோன்பு, பாவைக்கு மட்டுமே, அதில் பங்கு பெறுபவர் பெண்கள் மட்டுமே, ஆண்டாள் காலத்தில், மிகப் புராதன காலத்தில் நடந்த விழா வொன்றின் மிச்சங்கள் பாவை நோன்பில் எஞ்சிக் காணப்பட்டன.

பண்டைத் தமிழ் நூல்களில் பெண் தெய்வம் ஒன்றின் பெயர் காணப்படுகிறது. அவள் பலவாறு அழைக்கப்படுகிறாள். ‘முதியோள்’ என்பது அவளது பெயர்களுள் ஒன்று. எல்லோரிலும் பெரியவள் என்று அதன் பொருள். அதே பொருளில் அவள் ‘பழையோள்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளாள். இவள் யாரால் வணங்கப்பட்டாள்? அதற்கு அவளுடைய மற்றொரு பெயர் பதிலளிக்கிறது. பரிபாடல் பதிகத்தில் அவள் ‘காடுகள்’ என்று அழைக்கப்படுகிறாள். ‘காடு கிழாள்’ என்ற மறு பெயரும் அவளுக்கு உண்டு. குறிஞ்சி நில மக்கள், வேட்டைத் தொழிலிலிருந்து புராதனப் பயிர்த் தொழிலுக்குத் திரும்பிய காலத்தில் புன்புலப்பயிர் செய்யத் தொடங்கினார்கள். அக்காலத்தில் பெண்கள் ஆதிக்கம் பெறத் தொடங்கினார்கள். ஆகவே காட்டில் பெண்கள் பயிர் செய்யத் தொடங்கிய காலத்தில் காடு கிழாளும் தோன்றினாள்.

அதற்கு முன்பே. சேயோன் (வேலன்) கடவுளாகி விட்டானல்லவா? அவனுடையச் சிறப்பு ஆண் ஆதிக்கத்தையல்லவா குறிக்கிறது? பெண் ஆதிக்கச் சமுதாயம் அவனுக்கும் ஓர் இடம் கொடுக்க வேண்டும். ஆகவே அவனைக் காடு கிழாளின் மகனாக ஏற்றுக் கொண்டது. அவன் வீரன் ஆகவே அவளையும் வீரமங்கையாக்கியது. வீரத் தொழிலில் வெற்றி பெறுவோருக்கு அவள் கொற்றவை ஆனாள். அவனும் கொற்றவைச் சிறுவன் ஆனான். பிற்காலத்தில் வேட்டைத் தொழிலை விட்டு, ஆண்கள் ஏர் உழவின் மூலம், பயிர்த் தொழிலில் முக்கிய பங்கு பெறத் தொடங்கியபின், மறுபடியும் வேலன் தாய்க் கடவுட் சேய் ஆகிவிட்டான். பெண்ணாதிக்கச் சமுதாயத்தில் தாய்வழி உறவு பெருமையாகச் சொல்லப்படுகிறது. ஆணாதிக்கச் சமுதாயத்தில், தந்தை வழி உறவு பெருமையாகச் சொல்லப்படுகிறது.

சிலப்பதிகாரத்தில் கொற்றவை வழிபாட்டு முறை சொல்லப்படுகிறது. கொற்றவை கோயில் ஐயைக் கோட்டம் என அழைக்கப்படுகிறது. ஐயைக்கு விழாச் செய்ய வேண்டுமென நாள் குறித்துச் சொல்லுபவள். அவள் தெய்வவெறி கொண்டு ஆடுபவள். ‘பழங் கடனுற்ற முழங்குவாய்ச் சாலினி’ என்று அவள் வருணிக்கப்படுகிறாள். ஐயைக்குப் படிவமில்லை. ஒரு குமரிப் பெண்ணைக் கோலம் புனைந்து ஐயை என்று பெயரிட்டுக் கலைமான் மீது ஏற்றி வணங்குகிறார்கள்.


இட்டுத் தலையெண்ணும்
        எயின ரல்லது
சுட்டுத் தலை போகா
        தொல்குடிக் குமரியை
சிறு வெள்ளாவின்
        குருளை நாண் சுற்றி,
குறு நெறிக் கூந்தல்
        நெடு முடி கட்டி,
இளை சூழ் படப்பை
        இழுக்கிய வேனத்து,
வெண்கோடு
        பறித்து மற்றது
முளை வெண்
        திங்க ளென்னச் சாத்தி
மறங் கொள் வயப்புலி
        வாய்பிளந்து பெற்ற
மாலை வெண் பற்றாலி
        நிரை பூட்டி
வளியும், புள்ளியும்
        மயங்கு வான் புறத்து
உரிவை மேகலை
        உடீ இப்பரிவோடு
கருவில் வாங்கும்
        கையத்துக் கொடுத்து
... ... ... ... ... ...

பறையும், குழலும் சூறைச் சின்னமும், முழங்கவும் மணியிரட்டவும் தெய்வமென எழுந்தருளுவித்து வேடர்கள் (எயினர்) வணங்குகின்றனர். பூசைக்குரிய சந்தனத்தையும், மலரையும், சாம்பிராணியையும் எயிற்றியர் (பெண்கள்) ஏந்தி வருகிறார்கள். தெய்வமும், பெண் தெய்வம் பூசனை முழுவதும் பெண்களின் உரிமை. இது பழங்காலப் பெண்ணாதிக்கத்தின் எச்சம், சிலப்பதிகார காலம் ஆணாதிக்கமும் தந்தை வழி முறையும் நன்றாக வளர்ச்சி பெற்றிருந்த காலம், அக்காலத்திலும் தொன்மையின் எச்சம் இவ்வழிபாட்டில் காணப்படுகிறது. பிற்காலத்தில் ஆணாதிக்கச் சமுதாய அடிப்படையில் தோன்றிய கடவுளர்களும், இத்தெய்வங்களின் உறவினர்களாக்கப்படுகின்றனர். இத்தெய்வத்தின் செயல்களெனப் புராணங்கள் வருணிக்கும் நிகழ்ச்சிகள், ஐயை மீது ஏற்றிக் கூறப்படுகின்றன. உதாரணமாக சிவனது தன்மைகள் சில ஐயை மீது ஏற்றிக் கூறப்பட்டுள்ளது.

'மதியின் வெண் தோடு சூடுஞ் சென்னி நுதல் கிழித்து விழித்த
இமையா நூட்டத்து பவள வாய்ச்சி,
தவள வாய் நகைச்சி நஞ்சுண்டு கறுத்த கண்டி......'

கண்ணனது செயல் இவள் மீதேற்றிக் கூறப்படுகிறது.

'மருதின் நடந்து நின்
மாமன் செய் வஞ்சம்
உருளும் சகடம்
உதைத் தருள் செய்குவாய்.

எப்படியாயினும் இப்பெண் தெய்வத்தின் கணவன் எவன் என்று கூறப்படவில்லை. இவளே குமரி, இவளே செழிப்பின் செல்வி, இவளது வழிபாட்டை நடத்தும் உரிமையுடையவர்கள் பெண்களே, ஆண்கள் எட்ட நின்று அருள் பெறுவதற்கே உரியவர்கள், பெண்ணாதிக்கச் சமுதாயத்தின் எஞ்சிய மரபென்று இதனை ஐயமறக் கொள்ளலாம். இனி தந்திரம் என்றழைக்கப்படும் சித்தர் தத்துவத்திலிருந்து பெண்ணாதிக்கச் சமுதாயத்தின் எச்சங்களைச் சுருக்கமாகக் காணலாம். சித்தர்கள் சக்தி உபாசகர்கள். பட்டினத்தாரையும், இராமலிங்கரையும் தற்காலத்தார் சித்தர்களாக்கிவிட்டனர். உண்மையான சித்தர்கள் தந்திரத்தில் நம்பிக்கையுடையவர்கள். தந்திரம் தொன்மையான மந்திரவாதம் அதன் அடிப்படை சக்தி. இச்சக்தி பெண்மைதான்.அவர்கள் பெண் பிறப்புறுப்பை(அல்குல்) இரண்டு விதமான அடையாளங்களில் ஒப்பிடுவர். ஒன்று தாமரை, மற்றொன்று முக்கோணம். பெண்மையின் ஆற்றலை அடைந்தால் பிரபஞ்சத்தை அடக்கி ஆளலாம் என்பது அவர்கள் தத்துவம். இதற்காகப் பெண்மை ஆற்றலையடைய அவர்கள் யோக முறைகளை ஏற்படுத்தினார்கள். இதற்கு ஒரு புராதன விஞ்ஞான விளக்கமும் கொடுக்கிறார்கள். முதுகுத் தண்டிலுள்ள சுழுமுனை என்னும் நரம்பில் சட்சக்கர பேதம் என்று படிப்படியாக உயரும் நிலையில் 7 தாமரைகள் இருப்பதாகவும் யோகத்தின் மூலம் மனம் ஒவ்வோரு படியாக ஏறிக் கடைசியில் சகல சக்திகளையும் அடையும் என்பதும் அவர்கள் தத்துவம். இவையனைத்தும் பெண்மையின் சக்தியைப் பெறும் முயற்சியே. ஆண்கள் பெண்களின் சக்தியை ஏன் பெற வேண்டும்? பெண்கள் உயர்வானவர்கள் என்று மதிக்கப்பட்ட காலத்தில்தான் அத்தகைய எண்ணம் தோன்ற முடியும். பெண்ணாதிக்கத்திற்கு அடிப்படையான சமுதாய அமைப்பு பின்னரும், சக்தி வழிபாட்டிலும், தந்திர முறைகளிலும் சித்தர் தத்துவங்களிலும், எச்சங்களாகக் காணப்படுகின்றன. இவையனைத் தையும் 'வாமாசாரம்' என்ற சொல்லால் இந்தியத் தத்துவ நூலார் அழைக்கிறார்கள், வாமம் என்றால் பெண், ஆசாரம் என்றால் ஒழுக்கம். பெண்ணொழுக்கத்தைக் கடைப்பிடித்து பெண்மையின் சக்தியைப் பெறுவதே இம்முறைகளின் நோக்கம். இம்முறைகளின் மூலவேர் பெண்ணாதிக்கச் சமுதாயத்திலிருந்தது என்பதில் ஐயமில்லை. இனி இன்று நிலவி வரும் அம்மன் வணக்கத்திலிருந்து சில சான்றுகள் காணலாம். ஆண்டு தோறும் நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறதல்லவா? ஒவ்வொரு ஊரிலும் பெண் தெய்வங்களுக்குத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இத்தெய்வங்களுக்கு ஆகம முறைப்படி பூசனையில்லை. தந்திரீக முறைகள் சிலவும் தொன்முறை வழக்கங்களும் இப்பூசனைகளில் இடம்பெறுகின்றன. அம்மனுக்கு முன் முக்கோணம் அல்லது தாமரை வடிவத்தில் யந்திரங்கள் கோலமாகப் போடப்படுகின்றன. இவை எதனைக் குறிக்கின்றன என்று முன்னரே கண்டோம். அவற்றின்மீது பூரண கும்பம் வைத்து, நெல் நிரப்பி, மஞ்சளும், தேங்காயும் வைக்கிறார்கள். அல்குல் இனவிருத்திக்கு அடையாளம். அதனோடு தொடர்பு கொள்ளும், நெல்லும் மஞ்சளும், தென்னையும் பல பயிர்வகைகளுக்கு அடையாளங்கள். பயிர்களெல்லாம் ஒன்று நூறாகப் பெருக வேண்டும் என்பது இச்செய்கையில் மறைந்திருக்கும் பொருள். அம்மனுக்குக் குங்குமம் அர்ச்சனை செய்கிறார்கள். தந்திர நூல்களில் குங்குமம் மாதவிடாய் இரத்தத்தைக் குறிக்கும்.

முதன் முதலில் பூப்பெய்தியதிலிருந்து, மாதவிடாய் நிற்கும் காலம் வரை, பெண் செழிப்பின் சின்னம். அதற்கு முன்னும் பின்னும் அவள் கருவுயிர்த்து, இனச்செழிப்புக்குக் காரணமாவதில்லை. ஆகவே மாதவிடாய் உதிரம் மாயசக்தி உடையது. செழிப்புக்கு அறிகுறி என்ற கருத்துப் புராதன மக்களுக்கு ஏற்பட்டது. இன்னும் நாகரிகமடையாத தொல்குடி மக்களுக்கு இந்த நம்பிக்கை உள்ளது. மாதவிடாய் பருவத்திலுள்ள பெண்களை விதை முளைக்கும் வயலைச் சுற்றி வரச் செய்தால் விதை வளர்ந்து நல்ல பயன்தரும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இதற்கு அடிப்படையான காரணம் மனிதனது பிறப்புக்கு ஆண் பெண் உறவு காரணமாவதுபோல உலகில் எல்லாம் தோன்றுவதற்கு உடலின் நிகழ்ச்சிகள் போன்ற வேறு பிரகிருதி நிகழ்ச்சிகள் காரணம் என்ற நம்பிக்கையும், பிரகிருதியின் செழிப்பை, பெண்ணின் செழிப்புச் சக்தி வளர்க்கும் என்ற நம்பிக்கையுமே. எல்லா அம்மன்களுக்கும் சிவன் கணவன் என்ற கதை இன்று வழங்கி வருகிறது. முத்தாரம்மன் கதை, குமரியம்மன் கதை போன்ற கதைகளில் இவ்வம்மன்மார் சிவனது மனைவிமாராக பேசப்படவில்லை. சிவனை எதிர்த்துப் போராடிய அசுரர்களுக்கு உதவியாகவும் கதை சொல்லுகிறது. இக்கதைகளைப் பற்றிய விரிவான ஆராய்ச்சி தாய் வழிச் சமுதாயம் பற்றிய புதிய கருத்துகளைக் கொடுக்கும். இக்கட்டுரை தமிழகத்தின் வரலாற்று முற்காலத்தை அறிய ஆதாரமாகும் சில சான்றுகளை மட்டுமே குறிப்பிட்டது. ஒவ்வொரு சான்றையும் விளக்கினால் அது ஒரு விரிந்த நூலாகிவிடும். அத்தகைய ஒரு நூல் முற்கால தமிழகத்தின் சமுதாய வளர்ச்சியை அறிய மிகவும் அவசியம். மார்க்சிய அறிவும், இலக்கிய அறிவும், சரித்திர அறிவும் அமையப் பெற்ற பலர் கூட்டுறவில் இத்தகைய நூல் தோன்றுமாக.[1]

  1. ஆதார நூல்கள்: புறநானூறு, சிலப்பதிகாரம், பரிபாடல், திருப்பாவை, சித்தர் பாடல்கள். நாடோடிப் பாடல்கள், ‘Lokayatha‘’ Debiprasad Chatopadyaya; Orgin of the Family and the state-Engeles; Art and Social life - Plekonov; Forgotten sons of India-Subborayan, Retired DSP; Science in History - Bernal. Matriarchy in India-Ehrenfels.