தமிழின்பம்/இருமலையும் தமிழ் மலையே

விக்கிமூலம் இலிருந்து

35. இரு மலையும் தமிழ் மலையே

தெற்குமலைச் சாரலில் வசந்த காலத் தென்றல் இனிமையாகத் தவழ்ந்தது. அவ்வின்பத்தை நுகர்ந்த குன்றக் குறவர் வேட்டையாட எழுந்தனர். குற்றாலத்திலும் பொதிய மலையிலும் வாழ்ந்த குறவஞ்சியர் இருவர் குறி சொல்லிப் பிழைப்பதற்காக மதுரையை நோக்கி நடந்தனர். இளங்காற்று வீசிய திருநெல்வேலிச் சாலையில் ஒருவரை ஒருவர் கண்டு மகிழ்ந்தனர் அவ்வஞ்சியர்.

'விண்ணானக் குறத்தி' என்று பெயர் பெற்றிருந்த குற்றாலக் குறவஞ்சி தன் மலையின் பெருமையை விளம்பத் தொடங்கினாள். ஏ! பொதிய மலையம்மே! என் மலையின் பெருமையைக் கொஞ்சம் கேள்: அழகான அருவி உடையது என் மலையே! சஞ்சீவி முதலான மூலிகை வளரும் மலை என் மலையே! சித்தரும் முனிவரும் எப்பொழுதும் வாழும் மலை என் மலையே! இதனாலேதான் 'கயிலைக்கு ஒப்பானது குற்றாலம்' என்று கவிகள் பாடியுள்ளார் என்று சொல்லிப் பாடத் தொடங்கினாள்:

"தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் தேர்க்காலும் பரிக்காலும் வழுகும்

தவமுனிவர் கூட்டுறவும் அவர்இருக்கும் குகையும்
சஞ்சீவி முதலான விஞ்சைமூ லிகையும்
கவனசித்தர் ஆதியரும் மவுனயோ கியரும்
கத்திருக்கும் கயிலாயம் ஒத்திருக்கும் அம்மே”

என்று பெருமிதமாகப் பாடி முடித்தாள். அப்போது பொதியமலைக் குறவஞ்சியின் மனத்தில் புதியதொரு கிளர்ச்சி பிறந்தது. திருக்குற்றாலக் குறமாதை நோக்கி, "வஞ்சியே! என் மலையின் பெருமையை மறைத்து, உன் மலையின் பெருமையை உயர்த்தி ஓர வஞ்சகமாய்ப் பேசுகின்றாயே! பொதியமலையைப் பாடாத புலவர் உண்டா? அம் மலையின் முடியிலே வெண்மதி தவழும்; மலையெங்கும் மந்த மாருதம் மகிழ்ந்து விளையாடும்; தமிழை வளர்க்கும் தவ முனிவன் அங்கே தங்கி வாழ்கின்றான்; அங்கயற்கண் அம்மையின் அருள் போல் அருவி நீர் பொழியும். இதனினும் சிறந்த மலை இவ் வுலகில் உண்டோ?"

"திங்கள்முடி சூடுமலை
                 தென்றல்விளை யாடும்மலை
தங்கும்முகில் சூழுமலை
                 தமிழ்முனிவன் வாழுமலை
அங்கயற்கண் அம்மைதிரு
                 அருள்சுரந்து பொழிவதென
பொங்கருவி தூங்கும்மலை
                 பொதியமலை என்மலையே?"

என்று பாடினாள். தமிழ் முனிவன் வாழும் மலை என்ற சிறப்பைக் கேட்ட குற்றாலக் குறவஞ்சி சிறிது மனம் மடங்கினாள். ஆயினும் விட்டுக்கொடுக்க மனமின்றிக் குற்றாலப் பழங்களின் செழுமையையும், மலர்களின் சிறப்பையும் எடுத்துரைக்கத் தொடங்கினாள்:

"செழுங்குரங்கு தேமாவின்
              பழங்களைப்பந் தடிக்கும்
தேனலர்சண் பகவாசம்
              வானுலகில் வெடிக்கும்
வழங்குகொடை மகராசர்
              குறும்பலவி லீசர்
வளம்பெருகும் திரிகூட
              மலையெங்கள் மலையே”

"அம்மே! எனது குற்றால மலையில் கொத்துக் கொத்தாய்த் தொங்கும் மாம்பழங்களை வானரங்கள் பறித்துப் பந்து அடித்து விளையாடும்; வானுற ஓங்கிய மரங்களின் மலர்கள் விண்ணுலகில் வெடித்து மணம் கமழும்; இத்தகைய மலைக்கு உன் மலை இணை ஆகுமோ?” என்று இறுமாந்து கூறினாள். இவ்வாறு குற்றால மாது கூறிய மாற்றம் பொதியமலை மாதின் மனத்தை வெதுப்பியது. வண்ணமான சொற்களால் தன் மலைவளம் கூறத் தொடங்கினாள்:

"கொழுங்கொடியின் விழுந்தவள்ளிக்
         கிழங்குகல்லி எடுப்போம்
குறிஞ்சிமலர் தெரிந்துமுல்லைக்
         கொடியில்வைத்துத் தொடுப்போம்
பழம்பிழிந்த கொழுஞ்சாறுந்
         தேறலும்வாய் மடுப்போம்
பசுந்தழையும் மரவுரியும்
         இசைந்திடவே யுடுப்போம்
செழுந்தினையும் நறுந்தேனும்
         விருந்தருந்தக் கொடுப்போம்
சினவேங்கை புலித்தோலின்
         பாயலின்கண் படுப்போம்

எழுந்துகயற் கணிகாலில்
     விழுந்துவினை கெடுப்போம்
எங்கள்குறக் குடிக்கடுத்த
     இயல்பிதுகாண் அம்மே”

'ஏ! வஞ்சி! மலையின் வளத்திலும் மலர்களின் சிறப்பிலும் என் மலை உன் மலைக்கு இளைத்த தென்றெண்ணாதே; எனது மலையில் கொழுங் கொடியில் செழுங் கிழங்கு வீழும். அக் கிழங்கை அகழ்ந்தெடுத்து அக மகிழ்வோம். குன்றில் நிறைந்த குறிஞ்சி மலர்களைக் கொய்து குழைந்த முல்லைக் கொடியில் வைத்துத் தொடுப்போம். பழம் பிழிந்து சாறெடுத்து அதனைத் தேனோடு கலந்து தினமும் உண்போம். செழுந்தினையும் நறுந்தேனும் விருந்தினருக்குக் கொடுப்போம். பதமிட்ட புலித்தோலைப் பாயாக விரிப்போம். காலையில் எழுந்து கருணை வடிவாய அங்கயற்கண்ணியைத் தொழுவோம். இத்தகைய மலையினும் செம்மை வாய்ந்த மலை எங்குமேயில்லை' என்று செம்மாந்து உரைத்தாள்.

அருவியிலும் மற்றைய அரும்பொருளிலும் இருமலையும் நிகரெனவே குற்றாலமாதின் மனத்தில் தோன்றியது. ஆகவே, வேறு வகையால் பொதியமலை மாதை வெல்லக் கருதினாள். புதுப் பெருமையில்லாதவர் பழம் பெருமை கூறும் பான்மை போல் குற்றாலக் குறவஞ்சி தனது நாட்டின் தொன்மை கூறத் தொடங்கினாள்: -

“தக்க பூமிக்கு முன்புள்ள நாடு
சகல தேவர்க்கும் அன்புள்ள நாடு
திக்கெல்லாம் வளர்ந் தோங்கிய நாடு

சிவத்து ரோகமும் நீங்கிய நாடு
முக்க ணான்விளை யாடிய நாடு
முதிய நான்மறை பாடிய நாடு
மைக்க ணாள்குழல் வாய்மொழி பாகர்
வசந்த ஆரியர் நாடெங்கள் நாடே"

"எனது நாடு நன்னாட்டின் முன்னாட்டும் நாடு: விண்ணோரும் விரும்பி வரும் நாடு; எத் திசையும் புகழ் மணக்க இருந்திலங்கும் நாடு; நீங்காத வல்வினையும் நீங்கிய நன்னாடு; அரனார் விளையாடிய திருநாடு; ஆரணம் பாடிய அருமை சான்ற நாடு; இத்தகைய பழம்பெருமை உனது நாட்டுக்கு உண்டோ?” என்று அளவிறந்த மகிழ்ச்சியால் ஆடிப் பாடினாள். இப்பாட்டில் அமைந்த நாட்டின் பெருமையை நன்றாகக் கேட்ட பொதிய மலை மாது, புன்முறுவல் பூத்துத் தன் மலையின் பழம் பெருமை கூறத் தொடங்கினாள்:

"மந்தமா ருதம்வளரும்
      மலையெங்கள் மலையே
வடகலைதென் கலைபயிலும்
      மலையெங்கள் மலையே
கந்தவேள் விளையாடும்
      மவையெங்கள் மலையே
கனகநவ மணிவிளையும்
      மலையெங்கள் மலையே
இந்தமா நிலம்புரக்கும்
      அங்கயற்கண் அம்மை
இன்பமுறும் தென்பொதிய
      மலையெங்கள் மலையே!”

'அம்மே! மந்தமாருதம் வளரும் மலை எங்கள் மலையே, வடகலையும் தென்கலையும் வளர்ந்தோங்கு மலை எங்கள் மலையே. பொன்னும் மணியும் பொருந்திய மலை எங்கள் மலையே. அங்கயற்கண் அம்மையின் அருள் சுரந்து பொங்கும் மலை எங்கள் மலையே. இவ்வாறு இறையோரும் மறையோரும் விரும்பி உறையும் இணையற்ற நாடு எங்கள் நாடேயாகும்' என்று பொதிய நாட்டின் பழம்பெருமை கூறக் கேட்ட குற்றால வஞ்சி சிறிது தலை குனிந்தாள்.

நாட்டின் பெருமை கூறிப் பொதியமலைக் குறத்தியை வெல்ல இயலாதென்றறிந்த குற்றாலக் குறமாது ஆற்றின் பெருமையால் அம்மாதை வெல்லக் கருதினாள். ஞானிகளும் அறியாத சித்திர நதியின் பிறப்பையும் சிறப்பையும் குறவஞ்சி கூறத் தொடங்கினாள். திரிகூட மலையில் தேன் அருவித் திரை எழும்பிச் சிவகங்கை ஆறாய்ப் பரந்து, செண்பக அடவியின் வழியாய்ச் சென்று, பொங்குமா கடலில் வீழ்ந்து, சித்திர நதியாய்ப் பாயும் சிற்றாற்றின் பெருமையைக் குறவஞ்சி நிறைந்த சொற்களால் போற்றிப் புகழ்ந்தாள்.

"நவநிதியும் விளையுமிடம்
அவிடமது கலந்தால்
நங்கைமார் குரவையொலிப்
பொங்குமா கடலே
பொங்குகடல் திரிவேணி
சங்கமெனச் செழிக்கும்
பொருந்துசித்ர நதித்துறைகள்
பொன்னுமுத்துங் கொழிக்கும்"

என்று குறவஞ்சி சித்திர நதியின் பெருமையைச் சிந்தையாரப் புகழ்ந்தாள்.

இதைக் கேட்ட பொதியமலைக் குறமாது தனது மலையில் தோன்றும் பெரியாறென்னும் பொருதை யாற்றின் பெருமையை அழகுற எடுத்துரைத்தாள். குறுமுனிவன் வாழும் இடத்திலே தோன்றி வாணருவியாக வீழ்ந்து பொருநையாறாகப் பெருகிவரும் பொதிய மலையாற்றின் பெருமையைக் குறமாது கனிந்த சொற்களால் எடுத்துரைத்தாள்.

இவ்வாறு பொருநையாற்றின் பெருமையை வியந்து கூறக் கேட்ட குற்றாலக் குறவஞ்சி பொதிய மலையின் பெருமையை அறிந்து இரு மலையும் நிகரென்னும் இதற்கையம் உண்டோ என்னும் சமரச அறிவோடு சாந்தமாய்ப் பிரிந்து சென்றாள்.