தமிழின்பம்/பாரதப் பண்பாடு

விக்கிமூலம் இலிருந்து

34. பாரதப் பண்பாடு[1]

பழம் பெருமை வாய்ந்தது பாரதநாடு. வடக்கே இமயமலை முதல் தெற்கே குமரி முனை வரையுள்ள இப்பரந்த நாட்டிலே மொழிகள் பல உண்டு. மதங்கள் பல உண்டு இனங்கள் பல உண்டு. ஆயினும் பாரதப் பண்பாடு ஒன்றே.

இத்தகைய பண்பாட்டின் ஒருமைப்பாட்டை உணர்த்துகின்றது தமிழிலக்கியம். பாரத நாட்டிலுள்ள வடமொழிக்கும் தென்மொழிக்கும் எந்நாளும் பிணக்கமில்லை. இரு மொழிகளும் இறைவன் அருளால் தோன்றின; ஆன்றோர் சேவையால் சிறந்தன; இம்மை இன்பமும் மறுமையின்பமும் தருவன ஆதலால், "இரு மொழியும் நிகர் என்னும் இதற்கு ஐயமுளதேயோ" என்று பாடினார் வடநூற் கடலையும், தென்னூற் கடலையும் நிலைகண்டு உணர்ந்த சிவஞான முனிவர்.

வட நாட்டிலும் தென்னாட்டிலும் மதுரை என்னும் பெயருடைய திருநகரம் உண்டு. வடமதுரையில் அவதரித்தார் கண்ணபிரான்; தென் மதுரையில் புகழ் பெற்றார் திருவள்ளுவர். கண்ணன் அருளிய கீதையும், வள்ளுவர் இயற்றிய குறளும், உலகம் போற்றும் உயரிய ஞான நூல்கள். 'இவ்விரண்டையும் அச்சாக உடையது பாரத ஞானரதம்' என்னும் கருத்தை அமைத்துப் பாடினார் ஒரு பழங்கவிஞர்.

"உப்பக்கம் நோக்கி உபகேசி தோள்மணந்தான்
உத்தர மாமதுரைக்கு) அச்சென்ப - இப்பக்கம்
மாதானு பங்கி மறுவில் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற்கு) அச்சு"

என்பது நல்கூர் வேள்வியார் பகர்ந்த நல்லுரை.

முன்னாளில் பாடலிபுத்திரம் என்னும் பெயருடைய இரு நகரங்கள் பாரத நாட்டில் சிறந்து விளங்கின; அவற்றுள் ஒன்று வடக்கே கங்கைக் கரையில் இருந்தது; மற்றொன்று தெற்கே கெடில நதிக்கரையில் இருந்தது. அசோக மன்னன் காலத்திலே சிறந்து விளங்கிற்று வட நாட்டுப் பாடலிபுத்திரம். பல்லவ மன்னர் காலத்தில் புகழ் பெற்றுத் திகழ்ந்தது தென்னாட்டுப் பாடலிபுத்திரம். இப்பாடலி நகரங்கள் இரண்டும் கலைக் களஞ்சியங்களாகக் காட்சியளித்தன. தமிழ் நாட்டுப் பாடலிபுத்திர நகரில் அமைத்த சமணக் கல்லூரியின் பெருமையைக் கேள்வியுற்றார் திருநாவுக்கரசர். கலைஞானக் கோயிலாய் விளங்கிய அக்கல்லூரியை நாடிற்று அவருள்ளம். அப்போது அவருக்குத் தந்தையுமில்லை, தாயுமில்லை; தமக்கையார் ஒருவரே இருந்தார். அவரிடம் விடைபெற்றுப் பாடலிக் கல்லூரியிற் சேர்ந்தார் திருநாவுக்கரசர். அவருடைய கலையார்வமும் மதி நுட்பமும் சமணப் பேராசிரியர்களின் உள்ளத்தைக் கவர்ந்தன. கலை பயின்ற மாணவரின் இளமை புள்ளம் சமண சமயத்தில் கவிழ்ந்தது. அது கண்டு மகிழ்ந்த சமண முனிவர்கள் அவரைச் சமண மதத்திலே சேர்த்தார்கள்: தரும சேனர் என்ற பெயரையும் சூட்டினார்கள்.

"அங்கவரும் அமண்சமயத் தருங்கலைநூ லானதெலாம்
பொங்கும்உணர் வுறப்பயின்றே அந்நெறியில்
                         புலன்சிறப்பத்
துங்கமறும் உடற்சமணர் சூழ்ந்துமகிழ்
                         வார்அவர்க்குத்
தங்களின்மே லாம்தரும சேனர்எனும்
                         பெயர்கொடுத்தார்"

என்று அவர் வரலாறு கூறுகின்றது. இவ்வாறு சமண சமயத்தில் சிறப்புற்றிருந்த அறிஞர் அவருடைய தமக்கையார் அருளால் மீண்டும் சிவநெறியை மேற்கொண்டு செந்தமிழ்ப் பாட்டிசைத்துச் செம்மையான தொண்டு புரிந்த செய்தியைத் திருத்தொண்டர் புராணத்திற் காணலாம்.

இத்தகைய சீர்மை வாய்ந்த பாடலி நகரங்கள் இக்காலத்தில் வேறு பெயர் பெற்றுள்ளன. வடநாட்டுப் பாடலிபுத்திரம் பாட்னா (Patna) என்றும், தென்னாட்டுப் பாடலிபுத்திரம் திருப்பாதிரிப்புலியூர், என்றும் இப்போது வழங்குகின்றன. பாடலி என்ற வடசொல்லுக்கும், பாதிரி என்ற தென் சொல்லுக்கும் பொருள் ஒன்றே. திருப்பாதிரிப்புலியூரில் கோயில் கொண்டுள்ள ஈசன் பாடவீசுரர் என்றே இன்றும் அழைக்கப் பெறுகின்றார்.

பாரத நாட்டுப் புண்ணியத் தலங்களுள் காசி என்னும் வாரணாசியும், இராமேச்சுரமும் தலைசிறந்தன என்பது தக்கோர் கொள்கை. இந்திய நாட்டுத் தென்கோடியில் உள்ள இராமேச்சுரத்தை நாடி வருவர் வடநாட்டார். காசியிலுள்ள விசுவநாதரை வழிபடச் செல்வர் தென்னாட்டார். வடகாசியின் வாசியறிந்த தமிழ் மக்கள் தம் நாட்டிலும் ஒரு காசியை உண்டாக்கினர். தென்காசி என்பது அதன் பெயர். பராக்கிரம பாண்டியன் என்ற அரசன் "தென்காசி கண்ட பெருமாள்" என்று சாசனங்களிலே பேசப்படுதலால் அவனே தென்காசியை உருவாக்கி, அங்கு விசுவநாதருக்கு ஒரு திருக்கோயிலும் கட்டினான் என்று கொள்ளலாம்.

"ஓங்கு நிலைஒன்பதுற்றதிருக் கோபுரமும்
பாங்குபதி னொன்று பயிறுாணும் - தேங்குபுகழ்
மன்னர் பெருமான் வழுதிகண்ட தென்காசி
தன்னிலன்றி உண்டோ தலத்து

என்று பராக்கிரம பாண்டியன் செய்த திருப்பணியின் செம்மையைப் பாராட்டுகின்றது ஒரு சாசனப்பாட்டு.

நதிகள் ஒன்று கூடும் துறைகளைப் புனிதமான இடங்களாகக் கருதிப் போற்றுதல் பாரத நாட்டுப்பண்பு. கங்கையும் யமுனையும் சரஸ்வதியும் கூடும் இடம் திரிவேணி சங்கமம் என்று வடநாட்டில் அழைக்கப் படுகின்றது. தமிழ்நாட்டில் புண்ணிய நதிகள் கூடு மிடங்கள் பல உள்ளன. அத்தகைய இடங்களை முக்கூடல் என்று வழங்குவர் தமிழ் மக்கள். தென் பாண்டி நாட்டில் பொருநையாறும் சிற்றாறும் கயத்தாறும் ஒன்றுசேர்கின்ற இடம் முக்கூடல் என்னும் பெயர் கொண்டு முற்காலத்தில் சிறந்திருந்தது. இந்நாளில் அந்த இடம் சீவலப்பேரி என்று வழங்கு கின்றது. காஞ்சி மாநகரத்திற்கு அருகே பாலாறும். சேயாறும், கம்பையாறும் சேர்கின்ற இட்ம் திருமுக்கூடல் என்னும் பெயர் பெற்றுள்ளது. திரிவேணி சங்கமம் என்றாலும் முக்கூடல் என்றாலும் பொருள் ஒன்றே.

ஐந்து ஆறுகள் பாயும் வள நாட்டிற்குப் பஞ்சாப் என்று பெயரிட்டனர் வடநாட்டார். தென்னாட்டில் அத்தகைய நாடு ஐயாறு என்று அழைக்கப் பெற்றது. திருவையாறு என்பது இப்போது ஒர் ஊரின் பெயராக அமைந்துள்ளது. பஞ்சநதம் என்பதும் அதுவே.

எல்லாம் வல்ல இறைவனை வைத்தியநாதன் என்னும் பெயரால் வழிபடும் வழக்கம் வடநாட்டிலும் உண்டு; தென்னாட்டிலும் உண்டு. சிதம்பரத்திற்கு அருகே வைத்தீஸ்வரன் கோயில் என்ற சிவஸ்தலம் இருக்கின்றது. அங்குள்ள ஈசன் "மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான்” என்று பாடினார் திருநாவுக்கரசர்.

வடநாட்டிலும் வைத்தியநாதன் கோயில் ஒன்று உண்டு. அதனை இந்நாளில் உலகறியச் செய்து விட்டனர் அங்குள்ள பண்டாக்கள். சில நாட்களுக்கு முன்பு தாழ்ந்த குல மக்கள் என்று கருதப்படும் அரிஜன அடியார்களோடு வைத்திய நாதனை (பைத்திய நாதன் என்பது வடநாட்டு வழக்கு.) வழிபடச் சென்றார் விநோபா அடிகள். அடிகளையும் அடியாரையும் தடியால் அடித்துத் துன்புறுத்தினர் கோயிற் பண்டாக்கள். அவர்கள் செய்த சிறுமையால் இன்று வைத்தியநாதன் கோவிலை உலகம் அறிந்து கொண்டது.

இங்ஙனம் பல்லாற்றாலும் ஒருமையுற்று விளங்கும் பாரதப் பண்பாட்டை ஒல்லும் வகையால் பேணி வளர்த்தல் நல்லறிஞர் கடனாகும்.


  1. ஆனந்த விகடன் தீபாவளி மலருக்கு எழுதப்பட்டது.