தமிழின்பம்/காளத்தி வேடனும் கங்கை வேடனும்

விக்கிமூலம் இலிருந்து

33. காளத்தி வேடனும் கங்கை வேடனும்[1]

தமிழ்நாட்டுக் காளத்தி மலையிலே தோன்றினான் ஒரு வேடன். வடநாட்டுக் கங்கைக் கரையிலே பிறந்தான் மற்றொரு வேடன். அவ்விருவராலும் வேடர் குலம் பெருமையுற்றது. காளத்தி வேடனைக் கண்ணப்பன் என்றும், கங்கை வேடனைக் குகன் என்றும் இலக்கிய உலகம் போற்றும். இருவரும் உயரிய அன்பு நெறியைக் கடைப்பிடித்து அழியாப் புகழ் பெற்றனர்.

காளத்திநாதன்பால் வைத்த அன்பினால் தன் கண்ணையும் பெயர்த்தெடுத்த கண்ணப்பன் பெருமை தமிழ் நாடெங்கும் பரவி நின்றது. எல்லையற்ற அன்பிற்கு அவ்வேடர் பெருமானே எடுத்துக்காட்டாயினார்.

"கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
வண்ணப்ப ணித்தென்னை வாவென்ற வான்கருணைச் சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ"

என்று வண்டை நோக்கிப் பாடும் பான்மையில் கண்ணப்பனது எல்லையற்ற அன்பின் திறத்தினை மாணிக்கவாசகர் நன்கு விளக்கியுள்ளார். திருவாசகத்திலும் தேவாரத் திருப்பாசுரங்களிலும் கண்ணப்பன் பெருமை பேசப்படுதலால் சைவ சமயத்தை நிலைநிறுத்திய நால்வருக்கும் அவன் முந்தியவன் என்பது நன்கு விளங்குகின்றது. காளத்திநாதனை வணங்கிய திருஞானசம்பந்தர் கும்பிட்ட பயன் காண்பார்போல் வேடர் பெருமானாகிய கண்ணப்பனைக் கைதொழுதாரென்று சேக்கிழார் அழகாக எழுதிப் போந்தார்.

கவிக்கு நாயகராகிய கம்பர் இராம கதையை வடமொழிக் காவியத்தினின்றும் எடுத்துக்கொண்டாரேனும் அதனைத் தமிழ் நாட்டாருக்கு ஏற்ற முறையில் ஒதுக்கி இனியதொரு விருந்தாக அளித்துள்ளார். இராமனிடம் அன்பு பூண்ட கங்கை வேடனை உருவாக்கும் பொழுது, கம்பர் உள்ளத்தில் காளத்தி வேடன் வடிவம் கனிந்து இலங்கிற்று. காளத்தி வேடனைக் கருவாகக் கொண்டு கங்கை வேடனாய குகனை அவர் வார்த்து வடித்துள்ளாரென்று தோற்றுகின்றது. இதற்கு இரண்டொரு சான்றுகள் காட்டுவேன்:

கோசல நாட்டு இளவரசனாகிய இராமன், தாயின் சொல்லைத் தலைக்கொண்டு, தனக்குரிய நாடு துறந்து, கங்கைக் கரையை வந்தடைந்தான் என்று அறிந்த குகன் அக்குரிசிலைக் காணப் புறப்பட்டான். வான்மிக முனிவர் எழுதிய வடமொழிக் காவியத்தில் குகன் இராமனைக் காணப் புறப்படும் கோலம், ஒர் அரசன் மற்றோர் அரசனைக் காண எழுகின்ற தன்மையில் அமைந்திருக்கின்றது. ஆனால் கம்பர், ஆண்டவனைக் காணச் செல்லும் அடியவனாகக் குகன் கோலத்தைத் திருத்தியமைத்துள்ளார்.

"தேவா நின்கழல் சேவிக்க வந்தனன்
 நாவாய் வேட்டுவன் நாயடியேன்”

என்று குகனே கூறுதலால் இவ்வுண்மை விளங்கும். காளத்தி வேடன் தனக்கினிய இறைச்சியே தன் தலைவனாகிய இறைவனுக்கும் இனியதாகும் என்று எண்ணி, அதனை எடுத்து ஊட்டியவாறே, குகன் தனக்கினிய கங்கையாற்று மீனையும் கொம்புத் தேனையுமே எடுத்துக்கொண்டு சென்றான். அவ் விரண்டையும் இராமன் திருமுன்பு வைத்து, "ஐயனே! தேனும் மீனும் திருத்திக் கொணர்ந்தேன். தேவரீர் திருவமுது செய்தருளல் வேண்டும்” என்று இறைஞ்சி நின்றான். அச்செயல் நிகழும்போது இராமனுடன் விருத்த மாதர் சிலர் உரையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் குகனது மனப்பான்மையை அறியாதவராய், தகாத பொருள்களை வேடன் எடுத்துவந்து அபசாரம் செய்துவிட்டான் என்றெண்ணி வெறித்து நோக்கினர். அவர்கள் மனத்தில் நிகழ்ந்த கருத்தினை அறிந்த இராமன்,

"அரியதாம் உவப்ப உள்ளத்து
       அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால்
       அமுதினும் சீர்த்த வன்றே"

என்று விருத்த மாதரைத் தெருட்டியருளினான். இதற்கு நேரான செயல் கண்ணப்பன் சரித்திரத்தில் உண்டு. கண்ணப்பனுக்கு இனிய காளத்திநாதனைச் சிவ கோசரியார் என்னும் வேதியர் முறைப்படி பூசனை செய்து வந்தார்; கண்ணப்பன் இறைச்சியைக் கொண்டு திருக்கோயிலில் இட்டதைக் கண்டு செய்வ தொன்றறியாது கவலை கொண்டிருந்தார். அதை உணர்ந்த இறைவன் அவர் கனவிலே தோன்றி,

“அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும் அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாமென்றும்
அவனுடைய நிலையில்வா றறிநீயென் றருள்செய்வார்"

இது சேக்கிழார் பெருமான் திருவாக்கு.

காளத்திநாதன்பால் அன்பு பூண்ட கண்ணப்பனைப் போலவே குகனும் இராமனைப் பிரிந்திருக்கலாற்றாத மனப்பான்மை பெற்றான். அந்தி மாலை வந்தடைந்த பொழுது இராமன் குகனை நோக்கி, "அப்பா இன்றிரவு உன் ஊருக்குச் சென்று, நாளைக் காலையில் கங்கையாற்றைக் கடப்பதற்குப் படகுகள் கொண்டுவருக” என்று சொல்விய பொழுது, குகனுடைய மனம் அனலிடைப்பட்ட மெழுகு போல் உருகுவதாயிற்று. என் ஐயன், என் ஆண்டவன், என்னைப் போ என்றானே! அவனை விட்டு நான் எவ்வாறு போவேன்? அவனுடனிருத்தலே எனக்குப் பேரின்பம். அவனைப் பிரிந்திருத்தல் பெருந்துன்பம் என்று எண்ணி, இராமனை நோக்கி, "ஐயனே! நான் போகலாற்றேன்; ஈண்டிருந்து என்னால் இயன்ற தொண்டு செய்வேன்” என்றான்.

“கார்குலாம் நிறத்தான் கூறக்
        காதலன் உணர்த்து வான்.இப்
பார்குலாம் செல்வ நின்னை
        இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வ னேன்யான்
        இன்னலின் இருக்கை நோக்கித்
தீர்கிலேன் ஆன் தைய
        செய்குவன் அடிமை என்றான்”

என்று குகன் பெருமையை அறிவிக்கும் கம்பர் பாட்டு மிக்க அழகு வாய்ந்ததாகும்.

"என் பெருமானே! அயோத்தி மாநகரில், அரியாசனத்தில் மன்னர் மன்னனாய் மணிமுடி தரித்துச் செங்கோலேந்தி அரசாளும் கோலத்தில் காண வேண்டிய உன்னைச் சடைமுடியும் மரவுரியும் தரித்துக் கானகப் புல்லில் அமர்ந்திருக்கக் கண்டேனே! என் கண் செய்த பாவம் கடலினும் பெரிதன்றோ? இந்தக் கோலத்தில் உன்னைக் கண்ட என் கண்களைப் பறித்தெறியாத பாவியேன் நான். ஆயினும், ஐயனே! உன்னை விட்டுப் போக என்னால் இயலாது; என்னா லியன்ற சிறுதொண்டு செய்துகொண்டு ஈண்டுத்தான் இருப்பேன்" என்று மனங்கசிந்து பேசினான். கங்கை வேடன் பேசிய வாசகத்தின் சுவையை அறிந்த இராமன்,

"சீதையை நோக்கித் தம்பி
       திருமுகம் நோக்கித் திராக்
காதலன் ஆகும் என்று
       கருணையின் மலர்ந்த கண்ணன்
யாதினும் இனிய நண்ப
       இருத்திஈண்டு எம்மோ டென்றான்"

“யாதினும் இனிய நண்ப" என்று அழைத்தமையால், குகன் இராமனுக்குப் பொன்னினும் இனியன் ஆனான்: புகழினும் இனியன் ஆனான். மற்றெதனினும் இனியன் ஆனான் என்பது வெளிப்படையாக விளங்குகின்றது. இங்ஙனம் ஆட்கொள்ளப்பட்ட குகன் அகமும் முகமும் மலர்ந்தான். அன்றிரவு நாணற் பாயலில் இராமனும் சீதையும் படுத்துறங்க, இலக்குவன் வில்லை யூன்றிய கையோடு அவ்விருவரையும் காத்து நிற்க, அன்பு வடிவாய குகன், முறையாக மூவரையும் காத்து நின்றான். இரவு முழுவதும் கண்ணிமையாது காவல் செய்த குகன், இன்பப் பணியிலே ஈடுபட்டான். காளத்தி நாதனை இராப்பொழுதில் கண்ணிமையாது காத்துநின்ற கண்ணப்பனைப் போலவே இராமனைக் காத்து நின்றான் குகனும்.

இன்னும் காளத்தி வேடனது அன்பிற்கும் கங்கை வேடனது அன்பிற்கும் ஒரு சிறந்த ஒற்றுமையுண்டு. இருவரும் இறைவனிடம் பயன் கருதாப் பக்தி பூண்டவர்கள்; கூடும் அன்பினில் கும்பிடுதல் தம் கடன் என்று கொண்டவர்கள். இத்தகைய பக்தியே சாலச் சிறந்தது என்று சான்றோர் கூறுவர். இராமன் நாடு துறந்து காடு புகுந்த பின்னர், அவன்பால் அன்பு கொண்டவர் மூவர். கங்கைக் கரையிலே குகன் இராமனைச் சேர்ந்தான்; கிஷ்கிந்தையில் சுக்ரீவன் வந்து சேர்ந்தான்; இலங்கையில் விபீஷணன் வந்து அடைந்தான். தன்னை வந்தடைந்த மூவரையும் தன்னுடைய குடும்பத்திலே சேர்த்துக்கொண்டான் இராமன். எனினும், சுக்ரீவன் இராமனிடம் அன்பு பூண்டதற்குக் கைம்மாறாகக் கிஷ்கிந்தை அரசைப் பெற்றான். விபீஷணன் இராமனைச் சரணடைந்து இலங்கையரசைப் பெற்றான். குகன் ஒருவனே பக்திக்காகப் பக்தி செய்து கைம்மாறு கருதாத அன்பின் நீர்மையை நன்கு விளக்கிக் காட்டினான்.

இவ்வாறு கனிந்த அன்பு வாய்ந்த காளத்தி வேடனையும், கங்கை வேடனையும் குறிக்கோளாகக் கொண்டு இறைவனை நினைந்துருகிய அன்பர் நிலையும் அறியத் தக்கதாகும். அன்பைப் பெருக்கி இன்பப் பேறடையக் கருதிய ஆன்றோர் இவ்விரு அடியாரது அன்பின் பெருமையை நினைந்து, "எற்றே இவர்க்கு நாம்" என்று உள்ளம் உருகினர்.

முற்றத் துறந்த பட்டினத்தடிகள் என்று தமிழகம் போற்றிப் புகழும் பெரியார் கண்ணப்பனது அருஞ்செயலை நினைந்து கரைந்து உருகுவாராயினர். காளத்தி மலையிலமர்ந்த ஈசனுக்கு ஆளாகக் கருதிய அடிகள்,

"வாளால் மகவரிந்து ஊட்டவல் லேனல்லன்
                      மாதுசொன்ன
சூளால் இளமை துறக்கவல் லேன்அல்லன்
                      தொண்டுசெய்து
நாளாறில் கண்ணிடந்து அப்பவல் லேனல்லன்
                      நான்இனிச்சென்று
ஆளாவ தெப்படி யோதிருக் காளத்தி அப்பருக்கே"

என்று அகம் குழைந்தார். "ஐயோ! பெற்ற பிள்ளையை வாளாலரிந்து இறைவனுக்கு இன்னமுதூட்ட வல்லேனா? திருநீலகண்டன் மேல் மனையாள் வைத்த ஆணை கடவாது இளமையிலேயே ஐம்பொறிகளையும் வென்று, இன்பம் துறக்க வல்லேனா? ஆறு நாள் பழகிய பான்மையில் ஆராத அன்பு வாய்ந்து, கண்ணைப் பறித்து, இறைவன் கண்களில் அப்ப வல்லேனா? இத்தகைய பொக்கனாகிய யானும், மெய்யடியார்போல் நடித்து, வீடகத்தே புகுந்திட விழைகின்றேன்" என்று உள்ளத் துறவமைந்த உயரிய அடிகள் உருகுவாராயினர். கடந்தோர்க்கும் கடத்தலரியதாய மக்கட் பாசம் நீத்த ஒரு தொண்டர், பெரிய சிறுத்தொண்டராய்ப் பேறு பெற்றார். மனையாள்மீது வைத்த பாசம் துறந்த மற்றொரு தொண்டர் இறைவனது அன்பிற்குரியராயினர். கண்ணிற் சிறந்த உறுப்பில்லை என்றறிந்தும் ஈசன்பால் வைத்த அன்பினால், இரு கண்களையும் ஈர்த்தளிக்க இசைந்த ஒரு தொண்டர் மாறிலா இன்பத்தில் மகிழ்ந்தார். இவ்வாறு அகம் புறமென்னும் இருவகைப் பற்றையும் அறவே களைந்து, இறைவன்பால் அன்பை வளர்த்த அடியாரது நிலையை நினைந்து பட்டினத்தடிகள் உருகும் பான்மை அறிந்து போற்றத் தக்கதாகும்.

காளத்தி வேடனைக் குறிக்கோளாகக் கொண்டு அடிகள் கரைந்துருகியவாறே, கங்கைவேடனை இலக்காகக் கொண்டு, வாணர வேந்தனான சுக்ரீவன் வாடி வருத்தினான். இருமையும் தரும் பெருமானாகிய இராமனிடம் எப் பயனையும் கருதாது விழுமிய அன்பு பூண்ட வேடனது பெருமையையும் தனது சிறுமையையும் நினைத்துச் சுக்ரீவன் சிந்தை தளர்ந்தான். வானர சேனை இலங்கை மாநகர்ப்புறம் எய்தியபோது, அப்படையின் திறன் அறியுமாறு தன் நகரில் நின்று நோக்கிய இலங்கை வேந்தனைக் கண்டான் வானர மன்னன். அவன் உள்ளத்தில் சீற்றம் பொங்கி எழுந்தது; பஞ்சின் மெல்லடிப் பாவையாகிய சீதையை வஞ்சனையாற் கவர்ந்து, சிறை வைத்த அரக்கர் கோனைக் கொன்று பழி தீர்க்கக் கருதி, அவன்மீது பாய்ந்தான். வீரராகிய இருவரும் நெடும்பொழுது கடும்போர் விளைத்தார்கள். இலங்கைநாதனது அளவிறந்த வலிமையை அறிந்த வானரத் தலைவன் அவனை வெல்ல இயலாது, அவன் தலை மீதிருந்த மணிமுடியைக் கவர்ந்து, மீண்டும் இராமனது பாசறையை வந்தடைந்தான். காலனுக்கும் காலனா யமைந்த அரக்கன் கையினின்றும் தப்பி வந்த வானர வீரனைக் கண்டு இராமன் களிகூர்ந்தான். அந்நிலையில் அன்பினால் அகங்குழைந்த வானர மன்னன், ஐயனை நோக்கி,

"காட்டிலே கழுகின் வேந்தன்
        செய்தது காட்ட மாட்டேன்
நாட்டிலே குகனார் செய்த
        நன்மையை நயக்க மாட்டேன்
கேட்டிலேன் அல்லேன் இன்று
        கண்டும்அக் கிளியன் னாளை
மீட்டிலேன் தலைகள் பத்தும்
        கொணர்ந்திலேன் வெறுங்கை வந்தேன்”

என்றும் மனம் வருந்தி மொழிந்தான். "அந்தோ! காட்டில் வாழும் கழுகின் வேந்தனும், நாட்டில் வாழும் நல் வேடனும் காட்டிய அன்பை நான் காட்ட இயலாதவனாயினேன். இலங்கை மாநகரில் சிறையிருந்த சோகத்தாளாய நங்கையை இங்கே கொண்டுவர வலியற்று வெறுமையாகக் கண்டு வந்தேனே, நல்லார்க்கு இடர் விளைக்கும் அரக்கனை எதிர்த்தும். அவன் சிரங்களைக் கொய்து கொணராது வெறுங்கையனாய் வந்தேனே என்று வாணர மன்னன் வருந்தினான்.

காட்டிலே கழுகின் வேந்தன் ஆற்றிய கடமையையும் நாட்டிலே கங்கை வேடன் ஆற்றிய நன்மையையும் அறிவோமாயின், வானர வீரனது சொல்லின் பொருள் இனிது விளங்கும். கானகத்தில் தனியளாய் இருந்த தையலை இலங்கை வேந்தன் வஞ்சனையாற் கவர்ந்து மனோ வேகமாகச் செல்லும்பொழுது, ஆதரவற்று அரற்றிய மங்கையின் அழுகுரல் கேட்டுக் கழுகின் காவலன் காற்றினுங் கடுகி வந்தான்; அறநெறி தவறிய அரக்கனுடன் நெடும் பொழுது கடும் போர் புரிந்து ஆவி துறந்தான். இவ்வாறு ஆதரவற்ற சீதைக்காக அறப்போர் புரிந்து ஆவி நீத்த கழுகின் வேந்தன், "தெய்வ மரணம்” எய்தினான் என்று இராமன் போற்றிப் புகழ்ந்தான். "தன்னுயிர் புகழ்க்கு விற்ற சடாயு" என்று சொல்லின் செல்வனாய அனுமன் புகழ்ந்துரைத்தான். அரன் அளித்த வாளுடையானை வெறும் அலகுடையான் வெல்லுதல் இயலாதென்றறிந்தும், அறநெறி திறம்பிய அரக்கனோடு பொருது ஆவி துறத்தலே தன் கடமை என்று அறிந்து, கழுகின் வேந்தன் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டான். இவ்வாறு இராமனது சேவையில் அமர் புரிந்து இறக்கவும் ஒருப்படாத தனது குறையை நினைந்து வானர வீரன் வருந்தினான்.

இனி கங்கைக் கரையின் காவலனாகிய குகன், பரதனது பரந்த சேனையைக் கண்டபோது, அவன் இராமனை வெல்லக் கருதி வந்தான் என்று எண்ணித் தன்னுயிரையும் ஒரு பொருளாகக் கருதாது போர்க் கோலம் புனைந்து,

"ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு விலங்கிடு வில்லாளோ
தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ
ஏழமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ"

என்று வீரமொழி பகர்ந்து தன் தோழனுக்காக உயிரையும் கொடுக்க இசைந்து நின்றான். "என் காவலில் அமைந்த கங்கையாற்றைக் கடந்து இவர் போவாரோ? தோழன் என்று நாயகன் உரைத்த சொல் ஒரு சொல்லன்றோ? நன்றி மறவாத நாய்போல், தலைவனது ஆணைக்கடங்கிக் காவல் புரியும் ஏழையேன், அமர்க்களத்தில் இறந்த பின்னன்றோ, பரதன் இராமனைப் பார்க்க வேண்டும்" என்று குகன் கூறிய மொழிகளில் தலையாய அன்பு தழைத்திலங்கக் காணலாம். இவ்வாறு குகனைப் போல் உயிர் கொடுக்கத் துணியவும் இயலாத தனது சிறுமையை நினைத்துச் சுக்ரீவன் வருந்தினான்.

ஆகவே, காளத்தி வேடனும் கங்கை வேடனும் அன்பு நெறியில், ஒப்பாரின்றி உயர்வுற்று ஏனைய அன்பர்க்கு ஒரு கலங்கரை விளக்கமாக அமைந்திலங்கும் தன்மை இனிது விளங்கும்.


  1. நேமத்தான்பட்டி, திருநாவுக்கரசு வித்தியசாலையின் பதின்மூன்றாவது ஆண்டு விழாவில் நிகழ்த்திய சொற்பொழிவின் சுருக்கம்.