தமிழின்பம்/இறையவரும் இன்னுயிரும்

விக்கிமூலம் இலிருந்து

28. இறையவரும் இன்னுயிரும்

மன்னுயிர் அனைத்தையும் ஆதரித்துக் காக்கும் அருள்நெறியே நன்னெறியெனத் தமிழ்நாடு பழங்காலத்தே அறிந்துகொண்டது. பிற உயிர்க்கு நலம் புரிந்தவர் இன்புறுவரென்றும், தீங்கிழைத்தவர் துன்புறுவரென்றும் அறநூல் அறிவுறுத்துகின்றது. இவ்வுலகில் வாழும் உயிர்ப்பொருள்கள் பல திறப்பட்ட அறிவு வாய்ந்தன வாயினும் அவற்றுள் ஊடுருவிச் செல்லும் உயிர்த்தன்மை ஒன்றே என்னும் உண்மையைத் தமிழ்ப் பனுவல்களிற் பரக்கக் காணலாம். அறிவாற் குறைந்த உயிர்கள் பல பிறவிகளெடுத்து மேம்பட்டு, முற்றிய அறிவுடைய உயிர்களாகுமென்று பழந்தமிழ் மக்கள் கருதினார்கள், புல்லாகவும், பூடாகவும் நிற்கும் சிற்றுயிர்கள் அறிவு முதிர்த்து, மக்களாகவும் தேவராகவும் வளர்ந்து செல்லும் தன்மையைத் திருவாசகம் தெள்ளிதின் உணர்த்துகின்றது. இதனாலேயே புல்லுயிரையும் துன்புறுத்தலாகாதென்று நல்வோர் அருளிப் போத்தனர்.

மக்கள் தம் அறிவின் மதுகையால் ஏனைய உயிர்கள் நலியாவண்ணம் ஆன்றோர் வகுத்துள்ள செவ்விய நெறி அறியத் தக்கதாகும். எல்லாம் வல்ல இறைவனிடம் அச்சமும் அன்பும் எஞ்ஞான்றும் மக்கட்கு உண்டு என்னும் உண்மையை உணர்ந்த அறிவோர், வனவிலங்குகள் முதலிய புற்பூண்டுகள் ஈறாக உள்ள எல்லா உயிர்களையும் இறையவரோடிணைத்து அருள் நெறியை இவ்வுலகில் நிலை நிறுத்த முயன்றுள்ளனர்; காட்டில் வாழும் விலங்குகளையும், விண்ணிலே பறந்து திரியும் பறவைகளையும், மண்ணிலே ஊர்ந்து செல்லும் உயிர்களையும், நீரிலே வாழும் மீன்களையும், நிலத்திலே மருவி நிற்கும் மரஞ்செடிகளையும் இறையவரோடிணைத்து அவற்றின் உயிரைக் காக்க ஆசைப்பட்டுள்ளார்கள். காட்டில் வாழும் வேழமும் வேங்கையும், அரியும் பரியும், மானும் மற்றைய உயிர்களும் இறையவர்க்கு உகந்த பொருள்களாகும். வேழத்தின் உரியும், வேங்கையின் தோலும், ஈசன் உவத்து அணியும் உடைகள். வேங்கையின் தோலை அரையிலுடுத்து வேழத்தின் உரியால் ஆகத்தைப் போர்த்துக் கடும் பனியுறையும் கயிலை மர்மலையில் சிவபெருமான் வீற்றிருக்கின்றார். இன்னும், விழுமிய வேழம் விண்ணவர் தலைவற்குரிய வாகனமாகும். அன்றியும். ஈசனுடைய தலைமகனாகிய பிள்ளையார் திருமுகம் வேழத்தின் முகமாக விளங்குகின்றது. ஆகவே, உருவத்தால் உயர்ந்த வேழம் ஈசனார்க்கும் இந்திரற்கும், பிள்ளையார்க்கும் இனிய உயிராக இலங்குகின்றது. இத்தகைய யானைக்குத் தீங்கிழைத்தோர் அம் மூவரது சீற்றத்திற்கும் ஆளாவரல்லரோ? இன்னும், ஈசன் தோள்களில் ஆரமாக இலங்கும் நாகம் திருமாலின் பாயலாகவும் அமைந்துள்ளது. ஆகவே, நஞ்சமைந்த நாகமும் இறையவர் இருவரைச் சார்ந்து, இனிது வாழ்கின்றது. விலங்கரசு எனப்படும் அரிமான், காளியின் ஊர்தியாகக் களித்திருக்கின்றது. பரிமான் பைரவற்கு உகந்த தாயிற்று. கலைமான் ஈசனார் கையில் இனிதமர்ந்தது. காட்டு விலங்குகளை விடுத்து, நாட்டு விலங்குகளைக் கருதுவோமாயின், அவைகளும் இறையவரைச் சார்ந்த உயிர்களாய் இலங்கக் காணலாம். எருது ஈசனது வாகனமாம்; எருமை எமனது ஏற்றமாம். பசுவின் வயிற்றிற் பிறந்தான் சித்திரகுப்தன் என்னும் வானவன். திருமாலும் பன்றியாய்த் தோன்றினான். நன்றி மறவாத நாய் சாத்தனது நல்வாகனமாம். ஆடு அங்கியங் கடவுளுக்கு அமைந்த ஊர்தியாம். ஆகவே, எருதுக்குத் திங்கிழைத்தால் ஈசன் முனிவான்; எருமைக்குத் தவறிழைத்தால் எமன் விடமாட்டான்; பன்றியைக் கொன்றால் மாயோன் சீறுவான்; நாயை எறிந்தால் சாத்தன் தொடர்வான்; ஆட்டை அடித்தால் அங்கி அடுவான்.

இனி, பறவை இனங்களைச் சிறிது பார்ப்போம்: அன்னமும் கிளியும், சேவலும் மயிலும், குயிலும் கொக்கும், காக்கையும் கலுழனும் ஒவ்வோர் இறைவனை ஒன்றி வாழக் காணலாம். அயன் அன்னத்தின்மீது அமர்ந்தான். மாரவேள் கிளியின்மீது ஊர்கின்றான். குமரவேள் சேவலைக் கொடியாகவும், மயிலைப் பொறியாகவும் உடையான். குயிலை மாரன் துரதனாக்கினான். கொக்கிறகை ஈசன் தன் வேணியில் அணிந்தான். காக்கையைச் சனியன் பிடித்துக்கொண்டான். கலுழனைத் திருமால் கவர்ந்துகொண்டான். ஆகவே, அன்னத்தைத் துன்புறுத்தினால் அயன் சபிப்பான். மயிலை, பேசும் கிளியைப் பிடித்தால் மாரன் அம்பு தொடுப்பான்; சேவலுக்குத் தீங்கிழைத்தால் முருகன் சீறுவான்; மயிலைப் பிடித்தால் அயில் வேலெடுப்பான்; குயிலைக் கொன்றால் மாரன் கோபிப்பான்; காக்கையை அடித்தால் சனியன் தொடர்வான்; பருந்துக்குத் தீங்கிழைப்போர் மாயோன் நேமிக்கு விருந்தாவர். எனவே, பறவை இனங்களும் பெரியாரைச் சார்ந்து அச்சமின்றி வாழ்கின்றன.

இன்னும், சிறிய உயிர்களாய அணிலும், ஆகுவும், குரங்கும், கழுதையும் பெரியார் அருளால் பெருமையுற்று விளங்கக் காணலாம். அணிற்பிள்ளை, காலத்தில் உதவி செய்து இராமனது அருளைப் பெற்றது. ஆகுவோ பிள்ளையார் வாகனமாய்ப் பெருமை புற்றது. வானரம், இராமனுக்குத் துணை புரிந்து உயர்ந்தது. கத்தும் கழுதையோ, மூத்தாள் வாகனமாய் அமைந்தது. திருமால் மச்சாவதாரம் கொண்டமையால், மீன் இனங்களையும் ஈனமென்றெண்ணி ஊறு செய்தல் ஆகாது.

இனி, மரங்களின் உயிரை ஆன்றோர் பாதுகாத்த மாண்பும் அறிந்து மகிழத் தக்கதாகும். இனிய நிழல் தரும் மரங்களின் அடியில் இறையவரை அமைத்துப் பழந்தமிழ் நாடு வழிபட்டது. குற்றாலநாதர் குறும்பலாவின்கீழ் அமர்ந்தார். நெல்வேலியப்பர் வேணுவின் அடியில் வீற்றிருந்தார். மதுரேசர் கடம்ப வனத்தில் களித்தமர்ந்தார். தில்லைவனத்தில் அழகிய கூத்தர் திளைத்தார். மரமடர்ந்த வனங்கள் பிற்காலத்தில் நகரங்களாகச் சிறந்தபொழுது குறும்பலாவனம் திருக்குற்றாலமாகவும், வேணுவனம் திருநெல்வேலியாகவும், கடம்பவனம் மதுரையாகவும், தில்லைவனம் சிதம்பரமாகவும் திகழ்வனவாயின. முன்னாளில் கல்லாலின்கீழ் அமர்ந்து இறையனார் அறமுரைத்தார். அரசமரத்தடியில் அமர்ந்து கெளதம புத்தர் அரிய உண்மைகளை அறிந்தார். அசோக மரத்தடியில் அமர்ந்து அருகனார் அறமுணர்த்தார். கூவிள மரம் எப்பொழுதும் ஈசனுக்கு உகந்ததாகும். இன்னும், வன்னியும் தென்னையும், மருதும் நாவலும், மற்றைய மரங்களும் இறையவர் விரும்பி உறையும் இடங்களாகும். வினை தீர்க்கும் விநாயகரை வேம்பும் அரசும் கலந்து நிற்குமிடத்தில் அமைத்து வணங்கும் பழக்கம் இன்னும் தமிழ்நாட்டில் நிலவுகின்றது.

மரங்களைப் போலவே செடிகொடிகளும், புற்பூண்டுகளும் இறையவரோடு இணைந்து வாழும் தன்மை அறியத்தக்கதாகும். எப்பயனும் தராத எருக்கும் குருக்கும் ஈசனுக்கினிய வென்றால், ஏனைய செடிகளைச் சொல்லவும் வேண்டுமோ? தும்பையும் துளசியும், அறுகும் புல்லும் இறையவர்க்கு ஏற்றனவாம். மாயோன் துளசியில் மகிழ்ந்துறைகின்றான். ஆனை முகத் திறைவனுக்கு அறுகினும் இனிய பொருளில்லை. ஆகவே, அறநெறியை அகிலமெல்லாம் பரப்பக் கருதிய தமிழ் மக்கள் உயிர்ப்பொருள் அனைத்தையும் இறையவரோடு இணைத்துக் காக்கக் கருதிய முறை நினைக்குந்தொறும் உள்ளத்தை நெகிழ்விப்பதாகும்.