தமிழின்பம்/தமிழும் சாக்கியமும்

விக்கிமூலம் இலிருந்து

 27. தமிழும் சாக்கியமும்[1]


பாரத நாட்டுப் பழைய மதங்களுள் ஒன்று பெளத்த மதம். ஏறக்குறைய இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே, இந்திய நாட்டின் வட பாகத்திலுள்ள ஒரு சிறு தேசத்தில் புத்தர் பெருமான் பிறந்தார்; இளமையிலேயே, இவ்வுலக வாழ்க்கை நிலையற்றதென்று உணர்ந்தார்; தமக்குரிய பெருஞ்செல்வத்தையும், பெற்றோரையும், அழகிய மனைவியையும், அருமைக் குழந்தையையும் விட்டுத் துறவியானார்; ஒர் ஆற்றங்கரையில் நின்ற அரச மரத்தின்கீழ் அமர்ந்து, நெடுங்காலம் தவம் புரிந்து மெய்ஞ்ஞானம் பெற்றார். அவர் காட்டிய நெறி புத்தமதம் என்று பெயர் பெற்றது. புத்தர் சாக்கிய குலத்திற் பிறந்தவராதலால் அம்மதத்தைச் சாக்கியம் என்றும் சொல்வதுண்டு.

புத்தர், எண்பது வயதளவும் இவ்வுலகில் வாழ்ந்தார்; பல நாடுகளிற் சென்று தம்முடைய மதக்கொள்கைகளைப் பரப்பினார். வடநாட்டு மன்னர் பலர், அச்சமயத்தை மேற்கொண்டார்கள். அவர்களில் மிகச் சிறந்தவன் அசோக மன்னன். ஆசிய கண்டத்திலுள்ள பல நாடுகளில் பெளத்த மதம் பரவிற்று. தமிழ் நாட்டிலே திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் காலத்தில் பெளத்த மதம் பரவியிருந்த பான்மை அவர் வரலாற்றால் விளங்குகின்றது. மணிமேகலை என்னும் தமிழ்க்காவியம் எழுந்த காலத்தும் பெளத்த மதம் தலையெடுத்து நின்றதாகவே தெரிகின்றது. அக்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த புத்த சங்கத்தில் அறவணவடிகள் என்னும் பெளத்த முனிவர் விளங்கினார். அவர் சிறந்த சீலர். கோவலன் கொலையுண்டு இறந்த பின்னர் அவன் காதலியாகிய மாதவியையும், அவன் மகள் மணிமேகலையையும் பெளத்த சமயத்தில் சேர்த்தவர் அவரே. இன்றும் அவர் பெயர் காஞ்சிபுரத்தில் நிலைபெற்றிருக்கின்றது. அவர் தங்கியிருந்து தவம் புரிந்தமையால் அறவணன் சேரி என்று பெயர் பெற்ற தெரு இப்பொழுது அறப்பணஞ் சேரி என்று அந்நகரில் வழங்குகின்றது.

சாக்கிய மதம் சிறந்திருந்த காலத்தில், சிதம்பரத்தில் வாழும் தில்லை மூவாயிரவரோடு சமய வாதம் செய்வதற்காகப் பெளத்த முனிவர்கள் திரண்டு போந்தார்கள் என்றும், அப்பொழுது, அங்கிருந்த மாணிக்கவாசகர் அம் முனிவர்களுடன் வாது செய்து அன்னாரைச் சைவ சமயத்திற் சேர்த்துவிட்டார் என்றும் சரித்திரம் கூறுகின்றது. ஆகவே, மாணிக்க வாசகர் காலத்திற்குப் பின்பு பெளத்த மதம் தமிழ் நாட்டில் ஆதிக்கமிழந்துவிட்டதென்று சொல்லலாம். சுமார் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே சீன தேசத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த யூன்சியாங் என்பவர். பெளத்த மதம் தளர்ச்சியுற்றுத் தாழ்வடைந் திருந்த நிலையைக் குறித்து வருந்தி எழுதியுள்ளார். எனவே, மணிமேகலை எழுந்த காலத்தில் ஓங்கி நின்ற பெளத்த மதம், ஏழாம் நூற்றாண்டில் தளர்ந்து தாழ்ந்துவிட்டதென்று தோன்றுகிறது. ஆயினும், அம்மதத்தைச் சார்ந்தவர் ஆங்காங்கு இல்லாமற் போகவில்லை. திருஞானசம்பந்தர் காலத்தில், இப்பொழுது பாண்டிச்சேரி என்று வழங்கும் புதுச்சேரிக்கருகே போதிமங்கை என்ற ஊர் இருந்தது. அங்குப் பெளத்த சமயத்தார் இபருந்தொகையினராக வாழ்ந்தனர். சாக்கிய நூல்களையும் தருக்க நூல்களையும் நன்கு கற்று வாது புரிய வல்லார் பலர் அவ்வூரில் இருந்தனர். திருஞானசம்பந்தர் சிவனடியார்களோடு அவ்வூரைக் கடந்து செல்லும்போது சாரிபுத்தர் என்னும் சாக்கிய முனிவர் அவரை வாதுக்கு அழைத்தார். அவ்வூர்ச் சத்திரத்தில், சாரிபுத்தருக்கும் திருஞானசம்பந்தருக்கும் வாக்குவாதம் நிகழ்ந்தது. அவ்வாதத்தில் தோல்வியுற்ற சாரிபுத்தரும் அவரைச் சார்ந்த பெளத்தரும் சைவ சமயமே மெய்ச் சமயம் எனத் தெளிந்து, திருஞானசம்பந்தர் அடிகளில் விழுந்தெழுந்து சைவராயினர் என்று பெரிய புராணம் கூறுகின்றது.

தமிழ் நாட்டுப் பெருவேந்தருள் ஒருவனாகிய இராஜராஜ சோழன், நாகப்பட்டினத்தில் ஒரு புத்த ஆலயம் கட்டுவதற்கு அனுமதியளித்ததோடு, அதற்கு நன்கொடையும் வழங்கினான் என்பது சரித்திரத்தால் அறியப்படுகின்றது. இன்னும், வீரசோழன் என்ற பட்டப் பெயர் பூண்ட வீர ராஜேந்திரன் அரசாண்ட காலத்தில், பெளத்த சமயத்தினராகிய புத்தமித்திரன் என்னும் புலவர் தமிழில் ஒர் இலக்கணம் செய்தார். அந்நூல் வீரசோழியம் என்று பெயர் பெற்றது. பெளத்த சமயக் கொள்கைகள் மணிமேகலை, குண்டலகேசி முதலிய நூல்களில் விளக்கப்பட்டுள்ளன. பிறப்பென்பது துன்பம்; பிறவாமையே இன்பம் என்பது அச்சமயத்தின் அடிப்படைக் கொள்கை. அப்படியாயின், பிறப்பை எப்படி ஒழிப்பது? அகப்பற்று, புறப்பற்று என்னும் இருவகைப் பாசமும் பிறப்பிற்கு வித்து பற்று அற்றால் பிறப்பு ஒழியும் என்பது பெளத்த சமயத்தின் கருத்து. இவ்வுண்மையை மணிமேகலையிற் காணலாம்.

"பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்
பற்றின் வருவது முன்னது; பின்னது
அற்றோர் ஆறுவது அறிக.”

என்று அறுதியிட்டுக் கூறப்படுகின்றது. எனவே, எல்லாவற்றையும் துறந்தவரே சிறந்தவர்; அவரே பேரின்பமடையும் பெற்றி வாய்ந்தவர் என்னும் கருத்து பெளத்த சமயவாதிகளால் இந்நாட்டில் நன்கு பரப்பப்பட்டது. இல்லறம், துறவறம் என்னும் இருவகை அறங்களுள் துறவறமே சாலச் சிறந்ததென்னும் கொள்கை பெளத்த மத போதனையால் தமிழ் நாட்டில் ஊற்றம் பெற்றது. அப்போதனையாலேயே இள நங்கையாகிய மணிமேகலையும் அவள் தாயும், பிறரும் துறவு நிலையடைந்தார்கள்.

துறவறத்தை மேற்கொண்ட புத்தர், கொல்லாமை என்னும் அறத்தின் பெருமையை எல்லார்க்கும் எடுத்துரைத்தார். அக்காலத்தில், வட நாட்டில், பல வகையான யாகங்கள் நடந்து வந்தன. அசுவ மேதயாகம், கோமேத யாகம் முதலிய வேள்விகள் செய்து, குதிரைகளையும் பசுக்களையும் அரசர்கள் பலி கொடுத்தார்கள். பிம்பசாரன் என்ற அரசன் பல பசுக்களைக் குறியிட்டுக் கோமேத யாகம் செய்யக் கருதியதைக் கேள்வியுற்று, புத்தர், அவன் அரசு புரிந்த நகரத்திற்கு விரைந்து சென்றார்; கொல்லாமையாகிய அறத்தின் பெருமையை அவன் உள்ளங் கொள்ள எடுத்துரைத்தார். புத்தர் உருக்கமாகப் பேசிய வாய்மொழியைக் கேட்ட பிம்பசாரன் மனம் மாறினான்; யாகத்தை நிறுத்தினான்; அன்று முதல் கொல்லாமை என்னும் நல்லறத்தை மேற்கொண்டு வாழ்ந்தான். இவ்வாறு புத்தர் சரிதம் கூறுகின்றது.

இங்ங்னம் வடநாட்டில் புத்தர் செய்த நற்போதனையைத் தென்னாட்டில் திருவள்ளுவர் செய்தார்.

"நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை"

என்று திருக்குறள் திருத்தமாகக் கூறுகின்றது. தமிழ் நாட்டில் நடந்த கோமேதயாகம் ஒன்று மணிமேகலையிற் குறிக்கப்படுகின்றது. அழகான ஒரு பசு: அதன் கொம்புகளில் மாலை சுற்றி அலங்கரிக்கப்பட்டிருந்தது. மறுநாள் நிகழ நின்ற தீமையையறிந்து அப்பசு அங்கமெல்லாம் பதறிற்று; வாய் விட்டுக் கதறிற்று கண்ணிர் வடித்தது. அதனைக் கண்டான் ஆபுத்திரன் என்ற சிறுவன்: எவ்வாற்றானும் அந் நல்லுயிரைக் காப்பாற்றக் கருதினான். அன்றிரவு காரிருளில் எல்லோரும் கண்ணுறங்கும் வேளை பார்த்து, அப் பசுவைக் கட்டவிழ்த்துக் காட்டுக்குள்ளே ஓட்டிச் சென்றான். யாகப் பசுவைக் காணாத வேதியர்கள் நாற்றிசையும் விரைந்து ஓடினார்கள் தேடினார்கள்; காட்டிலே அதைக் கடத்திச் சென்ற ஆபுத்திரன்மீது சாடினார்கள். அந்நிலையில் பசுவுக்காகப் பரிந்து பேசலுற்றான் ஆபுத்திரன். தன்னைப் பிடித்து அடித்தவரை நோக்கி, "ஐயரே! இப் பசு உமக்கு என்ன தீங்கு செய்தது? என்ன பாவம் பண்ணிற்று? அரசன் விட்ட நிலத்தில் மழையால் முளைத்துத் தழைத்த புல்லை மேய்கின்றது; இனிய நல்ல பாலை எல்லோர்க்கும் தருகின்றது. இத்தகைய பசுவை ஏன் கொல்ல வேண்டும்?"

"விடுநில மருங்கில் படுபுல் லார்ந்து
நெடுநில மருங்கின் மக்கட் கெல்லாம்
பிறந்தநாள் தொட்டுச் சிறந்ததன் தீம்பால்
அறந்தரு நெஞ்சொடு அருள்சுரந் தூட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை?”

என்று வினவினான். இவ்வாறு பசுக்கொலையை மறுத்த பாலனே மதுரையம்பதியில் சிந்தாதேவியால் அமுதசுரபி என்னும் அக்ஷ்ய பாத்திரம் அளிக்கப் பெற்றான் என்றும், அப் பாத்திரத்தின் உதவியால் ஊர் ஊராகச் சென்று பசித்தோர்க் கெல்லாம் வயிறாரச் சோறிட்டு அறம் வளர்த்தான் என்றும் மணிமேகலை கூறுகின்றது.

பெளத்த மதம் அக்காலத்தில் பல நாடுகளில் பரவியதற்கும், இக்காலத்திலும் பெருஞ் சமயமாக நிலைத்திருப்பதற்கும் சிறந்த காரணம் அதன் சங்கமே யாகும். பெளத்த துறவிகளுடைய கூட்டத்திற்குச் சங்கம் என்பது பெயர். முதன்முதல் காசி நகரத்தில், புத்தர் ஐந்து முனிவருக்கு உபதேசம் செய்து சங்கத்தைத் தொடங்கினார். பின்னர், அது வளர்ந்து பல்லாயிரக் கணக்கான துறவியரையுடையதாயிற்று. பெளத்தர்கள் புத்தரையும் தருமத்தையும் சங்கத்தையும் மும்மணிகளாகப் போற்றுகின்றார்கள். தமிழ்நாட்டில் சங்கம் என்ற சொல்லுக்கு ஏற்றமளித்தவர் பெளத்தரே என்று கூறுதல் மிகையாகாது. சங்கம் நிறுவிப் பெளத்த சமயத்தை வளர்த்தார் புத்தர். அம்முறையில், பாண்டிய மன்னர்கள் தென்னாட்டில் மூன்று சங்கங்கள் நிறுவி முத்தமிழையும் வளர்த்தார்கள். பெளத்த சமயத்தில் சங்கத்திற்கு எவ்வளவு பெருமையுண்டோ. அவ்வளவு பெருமை தமிழ் நாட்டில் தமிழ்ச் சங்கத்திற்கு உண்டு.

சங்கமே பெளத்த சமயத்தின் ஆணிவேர் என்பதையறிந்த சைவ சமயத்தார் அம் முறையைத் தாமும் மேற்கொண்டார்கள். சைவம் நன்றாக நிலை பெறுதற் பொருட்டும், எங்கும் பரவுதற் பொருட்டும் திருக்கூட்டம் தமிழ் நாட்டில் ஏற்படுவதாயிற்று. திருக்கூட்டம் என்பது சிவனடியார் சங்கம். சோழ நாட்டின் பழைய தலைநகராகிய திருவாரூரில் அமைந்திருந்த திருக்கூட்டத்தின் செம்மையைப் பெரியபுராணம் எடுத்துரைக்கின்றது; இருவகைப் பாசமும் அற்றவர்கள், ஈசன் திருவடியைப் போற்றும் செல்வமே மெய்ச் செல்வமாய்க் கொண்டவர்கள்.

"மாசி லாத மணிதிகழ் மேனிமேல்
பூசும் நீறுபோல் உள்ளும் புனிதர்கள்
தேசி னால்எத் திசையும் விளக்கினார்
பேச ஒண்ணாப் பெருமை பிறங்கினார்"

என்று அத்தொண்டர் கூட்டத்தைப் போற்றினார் சேக்கிழார். அத்திருக்கூட்டத்தைக் கண்டார் சுந்தரமூர்த்தி: ஆர்வம் கொண்டார். அன்னார்க்கு அடியவராக ஆசைப்பட்டார். அவ் ஆசையால் எழுந்ததே 'திருத்தொண்டத் தொகை' என்னும் அருமைத் திருப்பதிகம். அதன் அடியாகவே பிற்காலத்தில் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் தமிழ் நாட்டிலே பிறந்தது. ஆகவே, பெளத்த சங்கத்திற்கு நிகராகிய திருக்கூட்டத்தால் சைவ சமயம் அளவிறந்த நன்மையடைந்தது என்பதில் ஐயமில்லை.

தமிழ் நாட்டில் அரச மரத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அரச மரமும் பிள்ளையாரும் இல்லாத ஊர் இந்நாட்டில் இல்லை என்றே சொல்லலாம். அம்மரத்தைச் சுற்றி வந்து வணங்கும் வழக்கமும் இந்நாட்டில் உள்ளது. முன்னாளில் இங்குப் பரவியிருந்த பெளத்த சமயத்தால் அம் மரத்திற்கு இத்துணைச் சிறப்பு ஏற்பட்டதாகத் தோன்றுகின்றது. 'போதி மரம்' என்று சொல்லப்படும் அரச மரத்தின் அடியிலே புத்தர் மெய்ஞ்ஞானம் பெற்றார். அதனால் 'போதி நாதர்' என்ற பெயரும் அவருக்கு அமைந்தது. இத்தகைய புத்தரை அரச மரத்தடியில் வைத்துப் பண்டைத் தமிழர் வணங்கினர். புத்தரொடு சேர்ந்த மரமும் புனித முற்றதாகப் போற்றப்பட்டது. புத்த மதம் இந்நாட்டை விட்டகன்றபோது புத்த பெருமானுடைய திருவுருவங்களும் பெயர்ந்து மறைந்தன. ஆனால், அரச மரத்தின் பெருமை குன்றவில்லை. புத்தர் வீற்றிருந்த இடத்தில் 'பிள்ளையார் இனிதமர்ந்தார்.

ஆகவே, புத்த மதம் ஆதிக்க மழிந்து போய் விட்டாலும், அதன் சின்னங்கள் அடியோடு இந் நாட்டில் அழிந்து போகவில்லை. பஞ்ச காவியங்களில் ஒன்றாகிய, மணிமேகலை, அதன் பெருமைக்குச் சான்றாக நிற்கின்றது. வீரசோழியம் என்னும் இலக்கண நூல் அம்மதத்தைச் சார்ந்தவரது புலமைத் திறத்தை விளக்கி நிற்கின்றது. போதியின் கீழ் மாதவம் புரிந்த புத்தரின் ஞாபகச் சின்னமாக அரசமரம் சிறப்புற்று விளங்குகின்றது.


  1. சென்னை வானொலி நிலையத்திற் பேசியது. அத் நிலையத்தார் இசைவுபெற்றுச் சேர்த்தது.