தமிழின்பம்/காயும் கனியும்
V. அறிவும் திருவும்
21. காயும் கனியும்
மலை வளமுடைய தமிழ்நாட்டில் முற்காலத்தில் அருந்தவம் முயன்ற முனிவர்கள் காய்கனிகளையே அருந்தி வந்தார்கள். நாவிற்கினிய நற்கனிகளும் காய்களும் தமிழ் நாட்டு மலைகளில் நிறைந்திருந்தமையால் ஆன்றோர் பலர் அங்கு வாழ்ந்து அருந்தவம் புரிவாராயினர். தமிழ் முனிவன் வாழும் பொதிய மலையில் பன்னிராண்டு, முனிவர் ஒருவர் கடுந்தவம் புரிந்தார். நெடுந்தவம் முடிந்த நிலையில் பசியின் கொடுமை யறிந்த முனிவர், அம்மலையிலிருந்த ஒரு நாவல் மரத்தின் நற்கனியைக் கொய்து, அதைத் தேக்கிலையிற் பொதிந்து, அருகேயிருந்த ஆற்றை நோக்கிச் சென்றார். பன்னிராண்டுக்கு ஒருமுறை பழுக்கும் பெருமை வாய்ந்த அக்கனியை ஆற்றங்கரையில் வைத்துவிட்டு நீராடப் போந்தார் முனிவர். அப்பொழுது அவ்வழியாகத் தன் காதலனுடன் களித்து விளையாடி வந்த ஒரு சிறுமி அக் கனியைக் காலால் மிதித்துச் சிதைத்தாள். அரும்பசி தீர்க்கும் அமுதக்கனி சிதைந்தழியக் கண்ட தவமுனிவர் சீற்றமுற்றுப் 'பன்னிராண்டு நீ கடும் பசியால் நலிந்துழல்க' என்று பிழை செய்த பேதையைச் சபித்தார். அச்சாபத்தின் வலிமையால் அன்று முதல் வயிறு காய்ந்து வருந்திய மங்கை பன்னிராண்டு பசியால் வருந்திய பின்பு அமுதசுரபியினரின்று மணிமேகலை வழங்கிய அன்னத்தை உண்டு பசி தீர்ந்தாளென்று பழஞ்சரிதை கூறுகின்றது.
அமுதம் காக்கும் நெல்லிக் கனி தமிழகத்தில் உண்டு என்பதை அறிந்தான் அதிகமான் என்ற சிற்றரசன்; அதனை அருந்தி நீடு வாழ ஆசையுற்றான். மந்தியுமறியா மரங்கள் செறிந்த தென்மலையில், பளிங்கரும் அணுகுதற் கரிய விடரொன்றில் நின்றது அந்நெல்லி. அதை அறிந்த காவலன் பல்லாண்டுகளாகப் பெரிதும் முயன்று, விடரை அடைவதற்கு வழியமைத்து, மருந்து துளவி, மலை வண்டுகளை விலக்கி, மஞ்சினில் மறைந்திருந்த செழுங்கனியைக் காவலாளர் மூலமாகப் பெற்றான். பல்லாண்டுகளுக்கு ஒரு முறை பழுக்கும் பான்மை வாய்ந்த அந்நெல்லிக் கனியின் வண்ணத்தை. வள்ளல் அங்கையில் வைத்து நோக்கி அகமகிழ்த்திருக்கையில், சொல்லின் செல்வியாகிய ஒளவையார், செந்தமிழ்க் கவி பாடி அவன் முன்னே சென்றார். அப்பாட்டின் சுவையைச் செவி வாயாகப் பருகிய அதிகமான் மது உண்டவன்போல் மகிழ்வுற்றான். அதிமதுரக் கவி பாடிய ஒளவையார்க்கு அமுதம் பொழியும் நெல்லிக் கனியே ஏற்ற பரிசென்று எண்ணி, அங்கையில் இருந்த கனியை அவரிடம் அக மலர்ந்தளித்தான். அந் நெல்லிக் கனியினை ஒளவையார் அருந்திய பொழுது அதன் தீஞ்சுவையினை அறிந்தார்; திகைப்புற்றார். அந்நிலையில் அதிகமான் அந்நெல்லிக் கனியின் அருமை பெருமைகளை எடுத்துரைத்துச் செழுந்தமிழ்க் கவி பொழியும் செந்நாப் புலவர்க்கு அமுதம் சுரக்கும் அருங்கனியே அமைந்த உணவாகும் என்று மனமகிழ்ந் துரைத்தான். பல நாள் முயன்று வருந்திப் பெற்ற அருங்கனியைத் தானருந்தி இன்புறக்கருதாது, பாடிவந்த கிழவிக்கு அதனைப் பரிசாக அளித்த வள்ளலின் அருங்குணத்தை ஒளவையார் வாயாரப் புகழ்ந்து வாழ்த்தினார்.
"நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத் தடக்கிச்
சாதல் நீங்க எமக்கித் தனையே"
'பொன்னொளி மாலை யணிந்த வள்ளலே! அணுகுதற்கரிய மலைவிடரில் அமைந்த இனிய கனியின் அருமையையும் கருதாது. பயனையும் குறியாது. அக்கனியை என்னிடம் உவந்தளித்தனையே! உன் பெருமையை ஏழையேன் எவ்வாறு புகழ்வேன்? பாலாழியில் எழுந்த அமுதினைப் பிறர்க் களித்து, நஞ்சுண்டு கண்டம் கறுத்த செஞ்சடைக் கடவுள் போல் நீயும் என்றென்றும் இவ்வுலகில் வாழ்வாயாக!' என்று நிறைந்த மொழிகளால் ஒளவையார் அருளிய வாழ்த்துரையில் கருநெல்லிக் கனியின் வரலாறும் அதனை அன்புடன் அளித்த அதிகமானது வள்ளன்மையும் ஒருங்கே விளங்கக் காணலாம்.
பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதலே அறங்களுள் எல்லாம் தலையாய அறமென்று தமிழ் மறை கூறுகின்றது. இவ்வாறு அறநூல் விதித்ததற்கும் மேலாகத் தன்னலம் மறுத்துப் பிறர் நலம் பேணும் பெருந்தகைமை சாலச் சிறந்ததென்பது சொல்லாமலே விளங்கும். தான் அருத்திப் பயன் பெறுமாறு வருந்திப் பெற்ற அருங்கனியை ஒளவையாருடன் பகுத்துண்ணவும் எண்னாது, முழுக்கனியையும் அக் கவிஞர்க்கு ஈந்து மகிழ்ந்த வள்ளலின் பெருமை உலக முள்ளளவும் அழியாததன்றோ? இப் பண்பினைக் கண்டு வியந்த புலவர் ஒருவர்,
"கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்துவிளை தீங்கனி ஒளவைக் கீந்த
அரவக் கடற்றானை அதிகன்"
என்று புகழ்ந்துரைத்தார்.
இத்தகைய அமிழ்துறும் அருங்கனிகள் தமிழகத்தில் முன்னாளிருந்தமையாலேயே, 'கனியிருப்பக் காய்கவர்தல் ஆகாது' என்று ஆன்றோர் கட்டுரைப்பார் ஆயினர். கனி என்னும் சொல் பொதுவாகப் பழங்களை எல்லாம் உணர்த்து மாயினும், சிறப்பு வகையில் அமிழ்தம் பொழியும் அருங் கனியையே குறிக்கு மென்பது அறிஞர் கருத்து. -
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று”
"கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ
மயிலாடும் ஆரூ ராரைக்
கையினால் தொழாதொழிந்து கனியிருப்பக்
காய்கவர்ந்த கள்வ னேனே.”
என்று அருளிய தேவாரத் திருப்பாட்டிலும் கனி என்னுஞ்சொல் அழியாப் பெரு வாழ்வளிக்கும் அமுதக் கனியையே குறிப்பதாகும். இத்தகைய கனியினைப் பெற்றும் அதனைத் தானருந்தி நெடுங்காலம் வாழ விரும்பாது, தக்கார்க் கீந்து இன்பமுற்ற வள்ளலை ஈன்ற தமிழ்நாடு அறநெறியில் தலைசிறந்த தென்பதில் ஐயமுண்டோ?