உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழின்பம்/சரம கவிராயர்

விக்கிமூலம் இலிருந்து

20. சரம கவிராயர்

காவேரியாற்றின் கரையிலுள்ள தோணி புரியிலே பிறந்தான் பொன்னப்பன். அவன் தந்தை தமிழறிந்தவர்; தாய், பழங்கதை சொல்வதில் பேர் பெற்றவள். பொன்னப்பனை ஒரு பெரிய கவிராயனாக்கிவிட வேண்டும் என்பது தந்தையின் ஆவல். காலையில் நாலரை மணிக்கே தந்தை பையனை எழுப்பிவிடுவார்; சாலை வழியாக ஆற்றங்கரைக்கு அழைத்துச் செல்வார்; வழியெல்லாம் நிகண்டும் நன்னூலும் வாய்ப்பாடமாகச் சொல்லிக் கொடுப்பார். தலைகால் புரியாமல் பொன்னப்பன் கிளிப்பிள்ளை போல் தூக்க மயக்கத்திலே பாடம் சொல்லிக்கொண்டு போவான். தினந்தோறும் பாடம் ஏறிக்கொண்டே போயிற்று. பையனுக்கும் வெறுப்பும் வளர்ந்து கொண்டே சென்றது.

நாள்தோறும் மாலைப்பொழுதில் பொன்னப்பனுக்கு அவன் தாய் கதை சொல்வாள். அக்கதை பேய்க் கதையாகவே இருக்கும். ஒரு நாள் முண்டாசு கட்டி வரும் சண்டிக் கறுப்பன் கதையை அவள் சொன்னாள். அந்தக் கறுப்பன் நாற்பது முழக் கறுப்புத் துணியை வால்விட்டுத் தலையிலே கட்டிக்கொண்டு. கிறுதா மீசையை முறுக்கிக் கொண்டு பையனுக்குக் கனவிலே காட்சி கொடுத்தான். மற்றொரு நாள் மாலையில் அவள் சங்கிலிப் பூதத்தான் சரித்திரத்தைச் சொன்னாள். அன்றிரவு சலசவ என்ற ஒசையும், கலகல என்ற சிரிப்பும் பையன் செவியில் விழுந்துகொண்டே இருந்தன. அக்கதைகளைக் கேட்டதன் பயனாகப் பொன்னப்பன் இருட்டிவிட்டால் வீட்டை விட்டு வெளியே போகமாட்டான். அந்திசந்தியில் ஆற்றுக்குத் தனியே போக நேர்ந்தால், ஒரு வேப்பங்கொம்பைக் கையில் எடுத்துக்கொண்டு போவான். வேப்பந்தடியிருந்தால் பேய் அணுகாது என்று அவன் தாய் சொல்லி வைத்திருந்தாள்.

பள்ளிக்கூடப் படிப்பில் பொன்னப்பன் தந்தைக்குச் சிறிதும் நம்பிக்கையில்லை. 'பள்ளிக் கல்வி புள்ளிக்குதவாது' என்று அடிக்கடி அவர் சொல்வார். அந்த வசனம் தினந்தோறும் செவியில் விழும். ஆயினும், பையனுக்கு அதன் பொருள் தெரியவில்லை. ஒரு நாள் அமாவாசைச் சாப்பாடு முடித்துத் தந்தை திண்ணையில் சாய்ந்திருக்கையில் அவரைப் பார்த்து.

பையன் :- அப்பா "பள்ளிக் கல்வி புள்ளிக்குதவாது" என்று தினந்தோறும் சொல்லுகிறாயே! புள்ளி என்றால் என்ன?

தந்தை : - அப்படிக் கேளப்பா! பிழைக்கிற பிள்ளை அப்படித்தான் கேட்பான். இந்த வசனத்தை எல்லோரும் சொல்லுவார்கள். ஆனால், ஒருவருக்கும் உண்மைப் பொருள் தெரியாது.

பையன் : - அப்படியானால் உனக்கு மட்டும் எப்படித் தெரிந்தது. அப்பா? யார் சொல்லிக் கொடுத்தார்? தந்தை :- பிள்ளாய்! கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த பொருளும் கவைக்குதவுமா? நானே முயன்று கண்டுபிடித்தேன். 'வருந்தினால் வாராத தொன்றில்லை' என்பது உண்மையல்லவா?

பையன் : - நீ வருந்திக் கண்டுபிடித்த அர்த்தத்தை எனக்குச் சொல்லித் தரமாட்டாயா?

தந்தை : - உனக்கில்லாமலா! இதோ சொல்கிறேன். ஆனால், நான் சொல்லும் அர்த்தத்தை எவனிடமும் சொல்லாதே! இப்பிரபஞ்சம் படுமோசம்! பாடுபடுபவன் ஒருவன்; பலனடைபவன் மற்றொருவன். இந்தப் பழமொழியின் பொருளைச் சொல்விவிட்டாயோ மறுநாள் "வெடிகுண்டு விகடனில் அதைக் கேட்டவன் வெளியிட்டுப் பணமும் புகழும் பெற்றுக் கொள்வான்.

பையன் : - நான் சொல்வேனா, அப்பா! நீ உன் மூளையைக் கசக்கிப் பிழிந்து கண்டு பிடித்த கருத்தை நானா வெளியே சொல்வேன்?

தந்தை : - நீ சமர்த்தன் என்பது எனக்குத் தெரியும். ஆனால், இவ்வஞ்சக உலகத்தை நினைக்கும் பொழுது என் நெஞ்சம் நடுங்குகிறது. நன்றாகக் கேள். நன்னூல்தான் உனக்குக் கனபாடமாய்த் தெரியுமே! புள்ளி என்பது ஆய்த எழுத்து. அது மூன்று புள்ளியாய் அடுப்புக்கட்டி போலிருக்கும். பள்ளிக்கூடப் படிப்பு அடுப்புக் கட்டிக்குக்கூட உதவாது என்பது அப்பழமொழியின் கருத்து. அடுப்புக் கட்டிக்கு உதவாது என்றால், அடுப்புக்கு உதவாது: ஒரு பிடி அன்னத்துக்கு உதவாது என்பதைப் படிப்படியாக உய்த்துணர வேண்டும். பையன் திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தான்: ஒன்றும் புரியவில்லை; மூளை கிறுகிறுத்தது.

பையன் : - போதும், அப்பா! எல்லாம் விளங்கிப் போச்சு. நான் இனிப் பள்ளிக்கூடம் போகவே மாட்டேன். வீட்டிலிருந்து தமிழ்ப் பாட்டுக் கட்டுவேன். ஒழிந்த நேரத்தில் அம்மாவுடன் இருந்து அடுப்பு மூட்டுவேன்.

தந்தை : - அதுதான் சரி. 'சோறு பொங்கித் திண்ணு; சொந்தக்கவி பண்ணு' என்று அந்தகக் கவிராயர் கொச்சையாய்ச் சொல்லுவார். ஆயினும், அது நல்ல வசனம்.

பையன் எழுந்து போனான். பாட்டுப் பாட வேண்டும் என்னும் ஆசை அவனைப் பற்றிக் கொண்டது. ஓசையே பாட்டுக்கு உயிர் என்பது அவன் கருத்து. "சீரும் தளையும் சிறியோர் பார்ப்பர்: மோனையும் எதுகையும் மூடர் விரும்புவர்” என்று சொல்வி, யாப்பிலக்கணத்தின்படி பாட்டெழுதும் பள்ளிப் பிள்ளைகளை அவன் பரிகாசம் செய்வான்.

முதலில் எல்லார்க்கும் படியளக்கும் கடவுளின் மீது பாட்டுக் கட்டுவதே முறையென்று பொன்னப்பனுக்குத் தோன்றியது. வளமாகச் சோறும் கறியும் தரும்படி அவன் சிவபெருமானைப் பாடினான்.

"கற்பனை கடந்தவன். கறிசோறு தருபவன்
வெற்பினில் உறைபவன், வெஞ்சனம் அளிப்பவன்
சற்பத்தை அணிபவன், சாப்பாடும் தருபவன்
நற்பதம் பணிவேன், நான்பசி தணிவேன்"

என்று தொடங்கி, அறுசுவை உண்டிக்குப் பத்துப் பாட்டுப் பாடி முடித்தான். அப்பாட்டுக்கு 'அகட்டுத் திருப்பதிகம்' என்று தலைப்பிட்டுத் தந்தையிடம் கொண்டு போனான். பொன்னப்பன் பாடிய முதற் பாட்டு அன்னப் பாட்டாயிருக்கக் கண்டு தந்தை ஆனந்த மடைந்தார்: "அவரை போட்டால் துவரை முளைக்குமா? துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்திருக்கின்றது" என்று மெச்சினார்; பள்ளிக்கூடத்தில் படிக்கும் பயல்கள் அசட்டுப் பிசட்டென்று பாடுகிறார்களே! என் மகன் பாடிய அகட்டுப் பாட்டின் அடித்தூசி விலை பெறுமா அவை: அகட்டுப் பாட்டு என்ற தலைப்பின் அர்த்தந்தான் அப்பயல்களுக்குத் தெரியுமா? என் பிள்ளை பொன்னப்பனுக்கு நிகண்டு தலைகீழாய்ப் பாடம். 'அகடும் மோடும் உதரமும் வயிறே' என்ற பண்டை நிகண்டு மனப்பாடமா யிருப்பதனால் அன்றோ, வயிற்றுப் பாட்டை அகட்டுப் பாட்டு என்று அழைத்தான் என் அப்பன்? இவன் கம்பரைப்போல் ஒரு பெரிய கவிச்சக்கரவர்த்தி யாவான் என்று எண்ணி மனங்களித்தார்; அகட்டுத் திருப்பதிகத்தை ஆறு தரம் படித்தார்; பல ராகங்களில் பாடினார். அத்திருப்பதிகத்துக்கு ஒரு சிறப்புப் பாயிரமும் கொடுத்தார்.

"அன்னக் கவிபாடி அகங்குளிரச் செய்திட்ட
பொன்னப்பா உன்தன் புலம்ைத் திறத்தாலே
மன்னவரும் போற்ற மணியா சனத்திருப்பாய்
என்னப்பா என்குலத்திற் கேற்ற எழிலொளியே”

என்று தந்தை பாடித் தந்த பாயிரத்தைப் பையன் பதிகத்தோடு சேர்த்துக் கட்டி வைத்துக்கொண்டான். அன்னப் பாட்டுப் பாடிய புகழ் பெற்ற பொன்னப்பக் கவிராயர் அன்று முதல் ஆயிரம் ஆயிரமாகப் பாடித் தள்ளினார். அவரது கவியின் பெருக்கத்தைக் கண்டவர்கள். கம்பருக்கும் காளிதாசருக்கும் அருள் செய்த காளியே அவருடைய நாவிலும் சூலத்தால் எழுதிவிட்டாள் என்று வெளிப்படையாகப் பேசினார்கள். அவர் வாக்குப் பலிக்கும் என்று நம்பித் தோணிபுரி வாசிகள் அவருக்கு வேண்டிய பொருள் கொடுத்தார்கள். பணக்காரர் வீட்டில் கல்யாணம் நடந்தால், பொன்னப்பக் கவிராயர், பட்டைத் தார் போட்டு, நெற்றியிலே திருநீற்றைப் பட்டையாக இட்டு, வெள்ளிப் பூண் பிடித்த தடிக்கொம்பைக் கையிலே பிடித்துக் கம்பீரமாக நடந்து செல்வார். கல்யாணப் பந்தலிலுள்ள மிராசுதார்கள் மரியாதையாக விலகி, சபையின் நடுவே கவிராயருக்கு இடங் கொடுப்பார்கள் மனச்சடங்கு முடிந்தவுடனே கவிராயர் நளினமா வெள்ளி டப்பியிலிருந்து பொடி யெடுத்து நாசியில் இழுத்துக்கொண்டு உச்சத்தொனியில் தம் வாழ்த்து பாட்டை எடுத்து விடுவார்.

ஒரு நாள், நந்திபுரிச் சுந்தர முதலியார் வீட்டில் விமரிசையாக நடந்த கல்யாணத்திற்குக் கவிராய போயிருந்தார். மணமக்கள் மணவறையைச் சுற்றி வந்து உட்கார்ந்ததும், கவிராயர் "மந்திகள் லாகை போடும் என்று ஒர் எடுப்பு எடுத்தார்.

"மந்திகள் லாகை போடும்
நந்தியம் புரியில் வாழும்"

என்று ஆரம்பித்தவுடன் பந்தலில் பேச்சு அடங்கிற்று. எல்லோரும் ஒருமுகமாய்ப் பாட்டைக் கேட்டார்கள். அவ்வூரில் உள்ள மாஞ்சோலையில் மந்திகள் கிளைக்குக் கிளை தாவித் தலைகீழாக ஆடும் அழகைக் கண்டு கவிராயர் ஒரு பாட்டுக் கட்டிவிட்டாரே என்று பாட்டிகள் பாராட்டினார்கள். பந்தலுக்கு வெளியே கிளித்தட்டு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் பாட்டைக் கேட்டவுடனே ஒரு லாகை போட்டுக் கவிராயர் வாக்கை மெய்ப்பித்தார்கள்.

மற்றொரு நாள் சமரபுரி முதலியார் வீட்டில் ஒர் அமரகிரியை நடந்தது. அதைக் கேள்விப்பட்ட கவிராயர் கருமாந்திரக் கூட்டத்திற் புகுந்து,

"அமரர்கள் கண்ணீர் சிந்த
அந்தரர் பொருமி யேங்கத்
தமரெலாம் தவித்து வாடத்
தங்கையர் தளர்ந்து சோர”

என்று உருக்கமாய் எடுத்த பாட்டு முடியுமுன்னே அங்கிருந்த மங்கையர் ஓவென்று அலறி அழத் தொடங்கினார்கள். பாட்டு, அழுகையால், அரை குறையாய் முடிந்தது. பாட்டைக் கேட்டு உருகிய சமரபுரி முதலியார் கவிராயருக்கு வெள்ளிப் பாக்குவெட்டியொன்று பரிசளித்தார்.

இவ்வாறு நன்மை தீமைகள் நேராத காலங்களிலும் கவிராயர் சீமான்கள்மீது சித்திரக்கவி செய்வார்; சில பேர்வழிகளை நாக பந்தத்தில் அடைப்பார்: மற்றும் சில பேரைக் கமல பந்தத்தில் கட்டுவார்; பந்தங்கள் தயாரானதும் வெள்ளித்தடி பிடித்து அவர்கள் வீட்டை நோக்கிச் செல்வார். ஒரு நாள், கவிராயர், நாகபந்தத்தை எடுத்துக்கொண்டு அரசூர் ஆனையப்ப பிள்ளையைக் காணச் சென்றார். அவர், தம் பங்காளிகளின்மீது தொடுத்திருந்த வழக்கு அவருக்குப் பாதகமாகத் தீர்ப்பான செய்தி அப்பொழுதுதான் தந்தியின் மூலமாக வந்திருந்தது. சாய்வு நாற்காலியில் சோர்ந்து சாய்ந்திருந்த பிள்ளையவர்களின் முன்னே நின்று கொண்டு,

"தந்தியொன்று வந்ததென்று
நொந்திருக்கும் வேளையில்
பந்தமொன்று தந்துநான்
வந்தனைபு ரிகுவேன்"

என்று கவிராயர் போட்ட போடு அவரைத் தூக்கி வாரிப் போட்டுவிட்டது. தந்திக்காரனைத் தலைவாசலில் கண்டு செய்தியறிந்துகொண்டு, கவிராயர் உள்ளே வந்தார் என்பதை அறியாத பிள்ளையவர்கள் ஆச்சரியப்பட்டு வணங்கி அவரை வரவேற்றார்; உபசரித்தார். காரியம் பலித்ததென்றெண்ணி, கவிராயர் பந்தத்தைக் கம்பீரமாகப் படித்துக் கொடுத்தார். பந்தப்பாட்டின் பொருளறியாத பிள்ளையவர்கள் காளியின் அருள் பெற்ற கவிராயரொடு பேசவும் அஞ்சி, ஐம்பது ரூபா சன்மானம் கொடுத்து, கோர்ட்டுச் செலவோடு செலவாய், 'பந்தச் செலவு ரூபா ஐம்பது' என்று எழுதிவிட்டார்.

காலஞ் செல்லச் செல்லக் கவிராயர் புகழ் ஏறிக் கொண்டே போயிற்று. அவருக்கு வயதும் நாற்பது நிறைந்தது. அவரது இருபத்தெட்டாம் வயதில் பிள்ளையிடம் சரமகவி பெற்றுக்கொண்டு தாயார் பரமபதம் அடைந்தாள்; பின்னும் ஐந்து ஆண்டுகளில் தந்தையும் கவிராயரிடம் விடைபெற்றுக்கொண்டார். பெற்றோர் இருவரும் போய்ச் சேர்ந்த பின்பு, கவிராயர் கல்யாணம் செய்துகொண்டு இல்லறம் நடத்த வேண்டுமென்று அவர் உற்றார் உறவினர் சொல்லத் தொடங்கினார்கள். அவர்கள் கல்யாணப் பேச்சை எடுக்கும் பொழுது, 'அந்த இழவு யாருக்கு வேணும்?' என்று கவிராயர் நறுக்கென்று பேசிவிடுவார். ஆகவே, 'கல்யாண இழவை’ப்பற்றி யாரும் அவருடன் பேசுவதில்லை.

நாளடைவில் கவிராயருக்கு, 'நாக பந்த நாயகம்', 'சரமகவிச் சிங்கம்' முதலிய பட்டங்கள் வலிய வந்து சேர்ந்தன. ஆயினும், பெரிய ஆசை ஒன்று அவர் மனத்திலே குடிகொண்டிருந்தது. பதினாயிரம் பாட்டுப் பாடிய கம்பர், கவிச்சக்கரவர்த்திப் பட்டம் பெற்றால், அறுபதினாயிரம் கவி பாடிய பொன்னப்பர் ஏன் அப்பட்டம் பெறக்கூடாது என்பது அவர் கேள்வி. மேலும் அவர் கவிச்சக்கரவர்த்திதான் என்று மனச் சாட்சி உள்ளிருந்து சொல்லிக்கொண்டேயிருந்தது.

கவியரசுப் பட்டம் பெறுவதற்கு மதுரையும் காஞ்சியுமே சரியான இடங்கள் என்று கவிராயர் எண்ணினார்: முதலில் மதுரைக்குத் தம் பரிவாரங்களோடு புறப்பட்டார். அங்கே கோனேரியப்பக் கவிராயர் என்பவர் முத்தமிழ்ப் புலவராக மதிக்கப்பட்டிருந்தார். அவருடைய முழக்கத்தைக் கேட்டு அஞ்சிய மதுரைச் சங்கத்தார் 'கோடையிடிக் கோனேரியப்பர்' என்று அவரை அழைத்தார்கள். அக்கோடையிடியைப் பொன்னப்பக் கவிராயர் காணச் சென்றார்; தாம் இயற்றி அச்சிட்டிருந்த நாகபந்தம், கமலபந்தம் முதலிய பந்தங்களையும், சரமகவி, சீட்டுக்கவி முதலிய பாட்டுகளையும் கோடையிடியிடம் காட்டினார். சரமகவிச் சிங்கத்தின் கர்ச்சனை கோடையிடியின் முழக்கத்திலும் அதிகமாகவே இருந்தது.

கோடையிடி: - தோணிபுரித் தோன்றலே! நாகபந்த நாயகமே! அடியேன் குடிசை தங்கள் வருகையால் புனிதமடைந்தது. எளியேன் தங்களுக்கு என்ன செய்யக்கூடும்? தங்கள் சித்தம் என் பாக்கியம்.

கவிராயர் :

"கோடை யிடிமுழக்கும் கோனேரி யப்பாகேள்
மாட மதிதவழும் மதுரைமாப் புலவரிடம்
நாடறியப் பட்டம் நயந்துபெற வேணுமென்றே
காடும் கரையும் கடந்திங்கு வந்தேன்காண்”

கோடையிடி : - கல்விக் களஞ்சியமே! கவிச் சிங்கமே! மூச்சுவிடு முன்பே முப்பது கவி பாடும் உங்களுக்கு நாங்களா பட்டமளிக்கும் தரமுடையோம்? நீங்கள் இருப்பது மலையின் முடி, நாங்கள் கிடப்பது மடுவின் அடி. மதுரையின் பெருமை யெல்லாம் பழங்கதையாய்ப் போயிற்று. கவிப்பெருஞ் சிங்கமாய்த் திருப்பதி முதல் கன்னியாகுமரிவரை திக்கு விஜயம் செய்துள்ள தங்கள் பெருமையை அறிய வல்லார் இங்கு எவரும் இல்லை. கவிச்சக்கரவர்த்திப் பட்டம் பெற்ற ஒட்டக்கூத்தர் குலத்திற் பிறந்தவர் ஒருவர் காஞ்சி மாநகரில் இருக்கிறார். 'அடுக்கு மொழி ஆனந்தக் கூத்தர்' என்று அவரை அறிந்தோர் அழைக்கிறார்கள். அவர் கொடுக்கும் பட்டம் இப்பொழுது எல்லோராலும் மதிக்கப்படுகிறது. தாங்களும் அவரைப்பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்களே!

கவிராயர் : இது நல்ல கருத்து. காஞ்சி மாநகரம் கல்விக்குப் பேர்போன இடம். ஆனந்தக் கூத்தர் ஒட்டக்கூத்தருடைய மகள் வழியிலே வந்தவர். ஆயினும் ஒட்டக்கூத்தர் உடம்பில் ஒடிய இரத்தத்திலே ஒரு துளியேனும் அவருடம்பில் ஓடாதிருக்குமா? இன்றே போய் அவரைப் பார்க்கிறேன்' என்று எழுந்து, கோடையிடியிடம் விடை பெற்றுக் காஞ்சி மாநகர்க்குச் சென்றார்.

அப்பொழுது அடுக்குமொழிக் கூத்தர் தம் காலிற் புண்பட்டுப் படுக்கையில் இருந்தார். சரம கவிராயர் அந்நிலையிற் காண வந்தது ஒரு துர்ச்சகுனம்போல் அவருக்குத் தோன்றியது. ஆயினும், கவிராயரை உள்ளே வரவழைத்து, "பங்கமில்லாப் பாட்டிசைக்கும் சிங்கமே வருக! சங்கமா முடியில் வைகும் தங்கமே வருக” என்று அடுக்கு மொழி கூறி அவர் வரவேற்றார்.

கவிராயர்: -

"அடுத்த மொழிவிடுக்கும் ஆனந்தக் கூத்தாகேள்
படுத்த படியறிந்தும் பாடுரைக்க வந்தோம்யாம்
எடுத்தபெருங் கவிபாடி ஏற்றமுற்ற கூத்தருடன்
தொடுத்திலங்கும் பேறெமக்குத் தோன்றால் அருளாயே"

என்று தம் கருத்தைத் தெரிவித்தார்.

உடனே அடுக்குமொழி, 'சகல பந்த சரமே! இந்நிலவுலகில் நும்மொப்பர் பிறர் இன்றி நீரேயானிர்'! கவிச்சக்கரவர்த்தி யென்று புவிச் சக்கரவர்த்திகள் பாராட்டிய ஒட்டக்கூத்தருக்குப் பின் அப்பட்டம் எவரையும் சென்றடைந்ததில்லை. இன்று கவியுலகத்தில் சக்கரவர்த்திப் பட்டம் பெறுவதற்குத் தங்களைத் தவிரத் தகுதியுடையவர் வேறு யார் உள்ளார்? தில்லைவாழ் அந்தணர் சந்நிதியில் தமிழ்ப் பெரும் புலவர்கள் முன்னிலையில் தங்களுக்கு அப்பட்டம் அளிக்கப்படல் வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளைச் சிதம்பரத்தில் செய்வீர்களானால் அடியேன் கால்நோய் தீர்ந்துவந்து அக்காட்சியைக் கண்குளிரக் காண்பேன் என்றார்.

அடுக்குமொழிக் கூத்தர் சொல்லியது கவிராயருக்கு மிக்க பொருத்தமாகவே தோன்றிற்று. 'எல்லையற்ற பெருமையுடையது தில்லையம்பதி. சபைகளிற் சிறந்தது அங்குள்ள கனகசபை: அச்சபாநாதர் நிகரற்ற தலைவர். அப்படிப்பட்ட பொன்னம்பலத்திலே தில்லை வாழ் அந்தணர் சபையிலே, நான் பெறும் பட்டம் உலகம் உள்ளவரையும் அழியாததாகும்' என்று அவர் எண்ணினார்; உடனே சிதம்பரத்தை நோக்கி எழுந்தார்.

அங்கு வேதாந்த வியாகரண தர்க்க நியாய சிரோமணியாய் விளங்கிய சபாரஞ்சித தீட்சிதரிடம் கவிராயர் சென்று தம் ஆசையை வினயமாய்த் தெரிவித்தார். அவரும் கவிச் சக்கரவர்த்திப் பட்டம் கொடுக்கும் பெருமை தமக்குக் கிடைத்ததைக் குறித்து அடங்காத மகிழ்ச்சிகொண்டார். "சிதம்பரத்தில் ஆணித் திருமஞ்சன விழாவிற்கு அடுத்த நாள். ஆயிரக்கால் மண்டபத்தில் தோணிபுரித் தோன்றல் ஶ்ரீ பொன்னப்பக் கவிராயருக்குக் கவிச் சக்கரவர்த்திப் பட்டம் கொடுக்கப்படும்" என்று சபாரஞ்சித தீட்சிதர் ஆயிரம் பேருக்கு அறிக்கையும் அழைப்பும் அனுப்பினார். குறிப்பிட்ட நன்னாளில் மதுரையிலிருந்து கோடையிடிக் கவிராயரும் காஞ்சியிலிருந்து அடுக்குமொழி ஆனந்தக் கூத்தரும் சென்னை வரகவி (வறட்டுக் கவியென்று சொல்லுவார்கள்) வரதராஜ முதலியாரும் வந்திருந்தார்கள். பட்டம் பெற வந்திருந்த கவிராயரைத் தவிர, பன்னிரண்டு பெருமக்கள் ஆயிரக் கால் மண்டபத்தில் சமூகம் அளித்தார்கள். சுபமுகூர்த்தத்தில் மாட்சிமை தங்கிய தீட்சிதப் பெருந்தகை, நீண்ட கரகோஷத்தின் இடையே எழுந்து, பட்டுச் சால்வையைக் கவிராயர் தோளிலே போர்த்து; கட்டிச் சாமந்தி மாலையை அவர் கழுத்திலே அணிந்து, "வித்வ சிரோமணிகளே! சகலபந்த சரபம், சரம கவிச் சிங்கம், தோணிபுரி தழைக்க வந்த தோன்ற்ல் ஶ்ரீ பொன்னப்பக் கவிராஜ மூர்த்திகளுக்கு நடராஜர் சந்நிதியிலே கவிச் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை நாம் சூட்டுகின்றோம். இன்று முதல் என்றென்றும் இவரைக் கவிச் சக்கரவர்த்தியென்று காசினி வழங்கக் கடவது" என்று ரஞ்சிதமாகப் பேசி முடித்தார். அடுக்கு மொழிக் கூத்தர் அதை ஆமோதித்தார். ஏகமனதாக அகத்தியர் மாணாக்கர் போல் சபையில் வீற்றிருந்த பன்னிருவரும் சிரக் கம்பம் செய்தார்கள். கோடையிடிப் புலவர் வந்தனம் முழக்கினார். சந்தனப்பூச்சுடனும் கொட்டு முழக்குடனும் வித்வ சபை கலைந்தது. கவிச் சக்கரவர்த்திப் பட்டம் பெற்ற சரமகவிராயர் பட்டுச் சால்வையோடு நடராஜரைத் தரிசித்துவிட்டுத் தம் இருப்பிடம் சென்றார்.


"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழின்பம்/சரம_கவிராயர்&oldid=1229850" இலிருந்து மீள்விக்கப்பட்டது